அக்னி நதி – வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்

சொல்முகம் கூடுகை 3 – கோவை புத்தகத் திருவிழா அரங்கில் – வலமிருந்து இரண்டாவதாக ராகவேந்திரன்

ஒரு தனிமனித வாழ்வை நதிநீரோட்டமாக உருவகித்தால், அந்த தனி வாழ்வு ஒட்டு மொத்த கால ஓட்டம் என்ற பெருநதிக்குள்ளே ஓடிக்கொண்டிருப்பதை பல முறை நாம் பார்ப்பதில்லை. தனது ஆழத்தாலும் அமைதியாலும் வேகமாக ஓடுவதே தெரியாத பல நதிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் உண்டு. எல்லாமே மாறிக்கொண்டிருப்பவை என்ற புத்தரின் கூற்றுக்கு ஒப்புமையும் நதியே. நீர்த்துளி இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறது. நீரோட்டம் ஒரு மாயை.  எனினும் அன்றாடச் சொல்லாடலில்  நதியென்பது ஒரு உண்மையான பொருண்மையே.

குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னி நதி உருது நாவல் (தமிழில் சௌரி –நேஷனல் புக் டிரஸ்ட்)  வாசித்து  முடிக்கும்போது காலமென்ற நதியின் வெப்பம் நம்மீதும் படர்கிறது. உண்மையில் நதி பெரும்பாலும் அமைதியாகத் தான் ஓடுகிறது. அதனடியிலிருந்து கொப்பளிக்கும் கந்தகவெடிப்புகள் இடைவெளி விட்டே வருகின்றன. ஆனால் தொடக்கம்- முடிவு இல்லாத காலநதியின் சுமார் 2400 ஆண்டு கால நீளத்தை 400 பக்கங்களுக்குள் சொல்வது அதை அக்னிநதியாகக் காட்டுகிறது.

கி மு நான்காம் நூற்றாண்டில் கோசல நாட்டின் தலைநகரான சிராவஸ்தி (இப்போதும் இவ்வூரின் பெயர் இதுதான்)  நகரத்தில் சிற்ப- ஓவிய – இலக்கிய மயக்கத்துடன் அலைந்து கொண்டிருக்கும்  கௌதம நீலாம்பரன் அப்போதைய காலத்தில் பரபரப்பாகிக் கொண்டிருந்த புத்தரின் கொள்கைகளையும் பிரச்சார இயக்கங்களையும் கேள்விப்படுகிறான்.

சிராவஸ்தி நகரை மகதத்தின் சந்திரகுப்தர் தாக்கும்போது காரணம் அறியாமலேயே நகரைக் காக்க வாளெடுத்துப் போரிட்டு,  விரல்களை இழக்கிறான். அவன் நண்பன் ஹரிசங்கர் புத்தமதத்தில் ஈடுபடுபவனாக  இருக்கிறான்.  கௌதமன் அரச குடும்பத்தைச் சேர்ந்த நிர்மலாவையும் சம்பகாவையும் காண்கிறான்.  ஹரிசங்கரை   நண்பனாக்கிக் கொள்கிறான். சம்பகாவிற்கு தனது ஓவியத்தைக் காட்டுகிறான். அவளுடன் மேடையில் சிவதாண்டவம் செய்கிறான். கௌதமன் தத்துவத்தை விட்டு கலையில் கவனம் செலுத்துகிறான். அழகிய யக்ஷிணி சிலையை உருவாக்கி படிமக்கலையில் ஒரு புது மரபைத் துவக்கி வைக்கிறான் . அதில் யதார்த்தம் பொலிகிறது.

கௌதமன் கோசல அரச குடும்பத்தைச் சேர்ந்த  நிர்மலாவிற்கு ஒரு அந்தண அறிஞனாக ஆசி அளிக்கிறான்.  நிர்மலாவிற்கு கயாவில் சித்தார்த்தர் சொன்ன உபதேசம் நினைவிற்கு வருகிறது “ எல்லாப் பொருட்களையும் தீப் பற்றிக் கொண்டது. கண்களில் தீ கனல்கிறது. சகலமும் இந்தத் தீயில் வெந்து போகின்றன. “இந்தத் தீ தான் அக்னி நதியில் கொதித்துக் கொண்டிருக்கிறது.

பெரும் சிற்பியான கௌதமன் மகதர்களின் படையெடுப்பில் விரல்களை இழந்து, நதியில் பல்வேறு ஊர்களுக்கு பயணித்து காசிக்கு வருகிறான். அரசர் குடும்பம் தப்பித்து ஓடுகிறது.  கௌதமன் ஒரு நடனக்குழுவில் நடிகனாகிறான். ஒரு மேடையில் நடிக்கும்போது , கையில் குழந்தையுடன் பார்வையாளராக இருக்கும் சம்பகாவைப் பார்க்கிறான். அவள் இப்போது பாடலிபுத்திரத்தில் சாணக்கியரின் உதவியாளரான அறுபது வயது அந்தணரின் மனைவி. தத்துவம் – தரிசனம்  சாஸ்திரம் பேசிக்கொண்டிருந்த சம்பகா தற்போது பிற பெண்களிடம் ஊர்க்கதைகள் பேசுபவளாக மாறிவிட்டாள். ஹரி சங்கர் அவளால் துறவியாகி விட்டான் என்ற தகவல் இப்போது சொல்லப் படுகிறது. மிகப் பூடகமாக நாவல் முக்கியத் தகவல்களை சாதாரண தகவல்களிடையே சொல்லிச் செல்கிறது, அரவமில்லாமல் துறைப் படிகளில் ஏறிவிடும் நதியைப்போல. 

தன்னைச் சந்திக்க விரும்பும் சம்பகாவிற்கு  கௌதமன்  மறை மொழியில் ஒரு உண்மையை சேடி மூலம் கொடுத்து விட்டுக் கிளம்பி விடுகிறான்.  (எப்போதும் விழித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கச் சொல். நான் இப்போது விழித்துக் கொண்டிருக்கிறேன்.  என்வழியில் எதுவும் குறுக்கிடமுடியாது. )  தான் பிறந்த இடமான அயோத்திக்கு மீள்கிறான். சரயூ நதியில் மூழ்கி மறுகரையில் இருக்கும் பௌத்தர் குழாமினை நோக்கிச் செல்கிறான். இடையில் நதியின் வெள்ளம். ஒரு பாறைமுனையில் அடைக்கலமாகிறான். வழுக்கி விடுகிறது.   இந்த இடத்தில் நாவல் ஆயிரம் ஆண்டு நகர்ந்து விடுகிறது.  அவ்வரிகள் முக்கியமானவை:

“கால வெள்ளம் நதியின் பிரவாகத்தை இழுத்துச் சென்றது. நாலாபக்கமும் எல்லையற்ற அகண்டவெளி .  தான் பற்றி இருந்தது கடந்த காலத்தின் சின்னம். வருங்காலத்திலும் இப்படியே இருக்கப்போவது.  சரயூ நதியின்  பேரலைகள் கௌதமநீலாம்பரனின் தலைக்கு மேல் எழும்பி வியாபித்தன. மறுபக்கம் ஒருவன் குதிரையிலிருந்து இறங்கி, கடிவாளக் கயிற்றை ஆலமரத்தின் வேரில் முடித்தான்..அவன் பெயர் மன்சூர் கமாலுதீன்.”

அவ்வளவுதான், ஆப்கானியர் ஆட்சி வந்து விடுகிறது. அயோத்தி அவத் ஆகிறது. புத்தர் காலத்திலிருந்து  கபீரின் காலத்திற்கு வருகிறோம்.

இந்த அரிய உத்தியை ஜெயமோகன் “கண்ணீரைப் பின்தொடர்தல்” நூலில் குறிப்பிடுகிறார்.

காஷ்மிர் சுல்தான்     ஜைன் உல் ஆபுதீன் இந்திய இசை மற்றும் கலைகளில் ஈடுபாடுள்ளவன். பஹராயிச்சில் உள்ள 1500 ஆண்டு பழைய தாமிரப் பட்டயங்களை ஆராய்வதற்கு நூலகக் காப்பாளன் கமாலுதீனை அனுப்புகிறான். இந்த ஊர்தான் முன்பு சொன்ன கௌதம நீலாம்பரனின் சிராவஸ்தி. கமாலுதீன் ஒரு பண்டிதரின் மகளைச் சந்தித்து நட்பு கொள்கிறான். அவள் அனாயாசமாக நதியை நீந்துபவள்  . அவள் பெயர் சம்பகா.  . மீண்டும் அறிவு ஜீவிகளிடையே காதல். மீண்டும் பிரிவு.

பெயர்கள் ஒன்றே. உருவங்களும் காலங்களும் மாறுகின்றன. எல்லாம் நாம-ரூபம்  தான் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது.  தனது சுல்தான் தில்லி சுல்தானிடம் தோற்று விட்டதை கமாலுதீன் அறிகிறான். படகில் பல ஊர்களுக்கு சுற்றுகிறான். வருவதாக வாக்களித்து விட்ட சம்பகாவை மறக்கிறான். வங்கம் என்ற இனிமையான புது மொழி உருவாகிக்கொண்டிருந்த ஊருக்குச் செல்கிறான். சுஜாதாவைத் திருமணம் செய்து  கொண்டு அவளுக்கு    ஆமினா பீவி என்று பெயர் வைக்கிறான். விவசாயம் செய்கிறான். ஷேர்கானின் முரட்டு சிப்பாய்கள் அவன் கிராமத்தை தாக்கி மொகலாயருக்கு அடிவருடி என்று குற்றம் சாட்டி பாக்தாத்தில் இருந்து வந்த ஒரு காலத்திய சுல்தானின் நண்பனும் நூலகக் காவலனுமான கிழவன் கமாலுதீனைக் கொன்று போட்டுவிடுகின்றனர்.

இங்கே மேலும் சுமார் ஐநூறு வருடங்கள் நதியின் வருடலுடன் கடக்கின்றன. பத்மாவதி நதியில் கமாலுதின் திரிந்து கொண்டிருந்த காட்சி மாறி அதே நதியில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு குமாஸ்தாவாக இங்கிலாந்திலிருந்து வேலை தேடி வந்த  சிரில் ஹாவர்ட் ஐஷ்லேவை சந்திக்கிறோம். அவன் அவுரி விவசாயத்தில் வேகமாக முன்னேறி பெரும் சொத்துக்களை குவித்து உயர் பதவியில் ஓய்வு பெற்று இங்கிலாந்து மீள்கிறான். அவன் மகன் பெரும் சொத்துக்கு வாரிசாகிறான். பேரன் ஜெர்மனியுடன் போரில் கொல்லப்படுகிறான். கொள்ளுப்பேரன்  சாமானியனான சிரில் கால ஓட்டத்தில்  அருங்காட்சியகமாக மாறிவிட்ட தனது முன்னோர்களின் பார்ன்ஃபீல்டு மாளிகையை ஒரு ஷில்லிங் கொடுத்துப் பார்க்கிறான்.

இந்தியாவிலிருந்து படிப்பிற்கு கேம்பிரிட்ஜ் செல்லும் நிர்மலா, சுஜாதா, சம்பா, கௌதம நீலாம்பர தத், கமால் அனைவரும் நண்பர்கள். லக்னோவில் பாரம்பரிய ஜமீன்தார் குடும்பத்தின் உறுப்பினர்கள் அல்லது அவர்களின் குடும்ப நண்பர்கள் . கலை, இலக்கியம், கம்யூனிசம் பேசுபவர்கள். இவர்கள் அனைவரும் பிரிட்டனில் சிரில் மற்றும் புதிய நண்பர்களை சந்தித்து விவாதிக்கிறார்கள். கேம் நதிக்கரையில் அமர்ந்து இலட்சிய மானிடம் பேசுகிறார்கள். பெரிய இடத்து மணப்பேச்சுகளை நிராகரிக்கிறார்கள். தங்களுக்குள் காதல் மலரும் தருணத்தில் பின்வாங்கி விட்டு மாணவர்களுக்கு உபதேசித்துத் திரிகிறார்கள். இருத்தலியத்தினால் வரும் அவநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நிர்மலா காச நோயால் இறக்கிறாள். கௌதமநீலாம்பரன் ஒடிந்து போகிறான். இந்திய அரசின் வெளியுறவுத்துறையில் சேர்ந்து உலகம் சுற்றுகிறான். இரண்டாயிரம் ஆண்டு முன் கங்கை–சரயுவில் பாடலிபுத்திரம்- அயோத்தி- சிராவஸ்தியில் சுற்றிக்கொண்டிருந்தவன் பெயரும் அதுவே.

(இதே பெயருடைய நிர்மலா 2000 ஆண்டு முன் புத்த பிக்குணி ஆகிறாள். கௌதம நீலாம்பரன் சரயு நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான்).

. சம்பா இந்தியா திரும்பி வந்து பிரிவினையால் கிட்டத்தட்ட காலியாகி விட்ட தனது ஊரில் குறுகலான வீட்டில் தங்குகிறாள். காசிக்குப் போய் வேலை தேடப்போகிறாள் (முந்தைய சம்பா கமால் வருவான் என்று காத்துக் கொண்டே இருக்கிறாள்). கமாலுதீன் தனது பூர்விக வீடு பிரிவினைக்குப் பின் கைவிட்டுப் போனதால், தனது பிடிவாதமான இந்திய வாசம் என்னும் கொள்கையை பலிகொடுத்து பாகிஸ்தான் சென்று அரசுப் பொறுப்பில் அமர்கிறான்.அவன் ஒரு அணு விஞ்ஞானி. அவனை ஒரு ஆய்வகம் அமைக்கும் வேலையில் அமர்த்துகிறது அரசு. (வேறென்ன, யுரேனிய ஆய்வாகத்தானிருக்கும்).

கௌதமன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிவப்பு மண்ணால் வடித்த யக்ஷிணி சிலையை ராஷ்டிரபதி பவனில் பார்வையிடும் கமால் பசித்தவனுக்கு      கலையையோ தத்துவ ஞான போதத்தையோ  ரசிக்க –விமர்சிக்க இயலாது என்கிறான்.

கௌதமன் புத்த ஜெயந்திக்கு வந்திருந்த  வெளிநாட்டு அறிஞர்களுக்கு  முற்கால சின்ன்ங்களைக் காட்டுவதற்காக சிராவஸ்தி வரும்போது அருகில் உள்ள தனது கிராமத்திற்கு செல்கிறான். அங்கே நண்பர் ஹரிசங்கரும் வருகிறான். சண்டி கோயிலில் மீண்டும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொள்கிறார்கள். கமால் தங்களை சந்திக்காமல் பாகிஸ்தான் சென்றுவிட்டது  பற்றி வருந்துகிறார்கள். மீண்டும் அதே நதிக்கரையில் அமைதி தேடிக் காத்துக் கொண்டிருக்கிறான். நதி சென்று கொண்டிருக்கிறது.

ஒழுகிச்செல்லும் நதி போன்ற படைப்பை அடர்த்தியாக்குவது அது கடந்து செல்லும் படித்துறைகள்,  மனிதர்களின் கனவுகள் மற்றும் வாழ்வியல் நோக்குகள் எனலாம்.

முதல் ஆயிரம் ஆண்டுகளில் திரட்சியாக  சொல்லப்படும் இயற்கை வர்ணனை பின்னர் குறைந்து கொண்டே வருகிறது.  தாமரை இலைகளில் ஜலதரங்க வித்தை செய்யும் மழைத்துளி, கண்ணில் விழுந்த மழைத்துளி சுவாதி நட்சத்திரத்தில் சிப்பிக்குள் விழுந்து முத்தாக ஆக்குவதற்கு ஒப்புமை, ஆனந்தலஹரி போன்ற பல  இசைக்கருவிகளின் தகவல்கள் அழகிய கவிதையாகின்றன.

சாதகப் பறவி, இலுப்பை, ,பலாச அசோக, நாவல் மரங்கள்  மற்றும் கதம்ப மரம்,  ஜேதவனம் அடர்ந்த சோலைகளின் வழியே நதி நகர்ந்து செல்கிறது.  , சண்பக மலரின் பெயரிலேயே கதை நாயகி அழைக்கப்படுகிறாள். (சம்பகா, சம்பா, சம்பாபாஜி).

உயர் தத்துவம் பேசும் பண்டிதர்களை விட எளிய கிராம வாசிகளின் இசை கூடிய பக்திப் பண்ணிசை சிலாகித்துப் பேசப்படுகிறது. உழவு செய்பவர்கள்,  படகு துழாவுபவர்கள், தேயிலை பறிப்பவர்கள், ஆடுமேய்ப்பவர்கள், ஊர் சுற்றும் இந்து மற்றும் சூஃபி துறவிகளை தரிசித்துக் கொண்டே நகர்கிறது நதி. கபீர் ஏற்படுத்திய பக்தி எழுச்சியையும் இந்து-இஸ்லாம் ஒற்றுமையையும் பார்க்கிறது. பின்னர் அதே கபீர் காசியிலிருந்து சுல்தானால் வெளியேற்றப் படுவதையும் சோகத்துடன் பார்க்கிறது. சூபி ஞானம் கூறும் நூர் என்னும் ஒளியைக் காண்கிறது. அல்லாஹ் வலிமை , அழகு மற்றும் நிறைவு கொண்ட முக்குணத்தானாக உள்ளான். இசையை பிரம்மமாக வரித்துள்ள பொற்காலத்தைக் கண்டுவிடுகிறது.

  அது ஓடும்போது பெரும் நகரங்கள் கைவிடப்பட்டு இடிபாடுகளாக மாறுவதையும் அங்கே புதைபொருள் ஆய்வு நடப்பதையும் அமைதியாகக் காண்கிறது. அவதி மற்றும் பிஹாரி மொழிகளுடன் தொடர்புடைய வங்க மொழி பிறப்பதை மௌனசாட்சியாக பார்த்துக் கொண்டே நகர்கிறது. ஒரே நகரம் இந்திரப் பிரஸ்தம் – தில்லி – துக்லதாபாத் – மற்றும் ஷாஜஹானாபாத் என்று பெயர் மாறுவதைக் காண்கிறது அக்னி நதி. 1770 இன் கொடும் வங்கப் பஞ்சம் அதன் கரையைல் நடக்கிறது.  பைரவி என்னும் ராகம் உருவாகிய லக்னௌ என்னும் அவதிநகரை சுற்றிச் செல்கிறது.  இடிந்த நகரங்களில் புகழ்பெற்ற கவிஞர்களைக் காண்கிறது (சாணக்கியன், போஜராஜன் , கங்கவா, காளிதாசன், ராஜசேகரன், பவபூதி, பர்த்ருஹரி) . யோகிகளின் ‘ஸுமிரன்’, பக்கிரிகளின் ‘ஜிக்ர’, வைணவ பக்தர்களின் ‘பஜன்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே ஊர்கிறது.

கவித்துமான தத்துவங்களை அக்னி நதி பேசிக்கொண்டே செல்கிறது

  • எண்ணங்களிலிருந்து விடுதலை – எண்ணங்களில் தனியே சத்தியம் –அசத்தியம் வேறுபாடு கிடையாது. இங்கிருந்து வெளியே போகமுடியாது. இவற்றுக்கு மேலான பரமசத்தியம் என்பது சூனியம்
  • இவர்கள் கதை சொல்லிவிட்டு, கதை கேட்டுவிட்டு, தாமே கதையாகி விட்டவர்கள்.
  • சாக்கியமுனி சொல்கிறார் – எல்லாமே அழியக்கூடியவை. அழிவிலிருந்து தப்பித்துக் கொள். துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்; நிழலில் இருந்து தப்பித்துக் கொள்.
  • நான் சொற்களின் கடலைக் கடந்து எண்ணங்களின் பயங்கரமான பாதையில் முன்னேறி நிற்கிறேன்.
  • மாந்திரிக இலைக்கொத்தில் கனவு கண்டுகொண்டே உறங்கி விட்டால் காணாமல் போய்விடுவீர்கள். கீழே தரைக்கு வந்து சேருங்கள்.
  • தொன்று தொட்டு துயர் அனுபவிக்கும் இந்திய ஆன்மா வெள்ளையருக்குப் புரியாது.
  • சூபி: காலமே அழிவில் தான் அமைந்திருக்கிறது.
  • காலம் சிதறும் கற்களில் உறைகிறது.
  • கால நட்னத்தில் ஆசைகளை வென்றவரே பூசை செய்யமுடியும்.
  • (இஸ்லாமிய ஜமீன்தார்)மாளிகை : பல இறுதிப்பயணங்களின் துவங்குமிடம்; பல மணப்பெண்களின் பல்லக்குகள் வந்து சேர்ந்த இடம்; பண்டிகைகளின் குழந்தைகளின் கூடும் இடம். காலத்திற்கும் மாளிகைக்கும் இடையே நடக்கும் போட்டியில் எப்போதும் போல காலமே வெல்கிறது.
  • நதியே, நீ எங்கே போகிறாய் என்பது உனக்கும் தெரியாது. நீர்க்குடமே, திவலைபோல நீரில் மூழ்கி விடு.

வரலாற்று அதிர்ச்சிகளை அள்ளித்தெளிக்கிறது அக்னி நதி. முன்பு மாளிகையாக் இருந்த மோதிமஹால் பின்பு இம்பிரியல் வங்கியாகிறது (இப்போது ஸ்டேட் வங்கி). பாதுஷா அரண்மனை அரசு இல்லமாகிறது. சதர்ன் மன்ஜில் கிளப் ஹவுஸ் ஆகிறது. பிரிட்டன் அரசு வர்க்கப் போராட்ட்த்தை வகுப்புப் போராட்டமாக மாற்ற முயல்கிறது. முன்ஷிகள் (கணக்கர்கள்) ஆக  முசல்மான்களிடம் இருந்த இந்துக்கள் விரைவாக பிரிட்டிஷ் ஆட்சியில் பதவிகளைப் பிடிக்கிறார்கள். முஸ்லீம்கள் நிலப்பண்ணை முறைகளில் சிக்குகின்றனர்.  காங்கிரஸ் – கம்யுனிஸ்ட் – முஸ்லிம் லீக் – அவாமி லீக் இயக்கங்களைப் பார்த்துக்கொண்டே அமைதியாக நகர்கிறது. பங்களாதேஷ் பிரியும் ஆண்டு எழுதப்பட்ட நாவல்  அந்தப் பிரிவினை பற்றி ஒன்றும் சொல்வதில்லை

நகைச்சுவை:

  • ஒரு பழைய அரசனைக்காட்டும் நாவல், இவர் போன்றவர்களின் தொழிலே உயிர்வாழ்ந்து வருவது தான் என்கிறது. 
  • இந்த பாதுஷாக்கள் சாகவும் செய்கிறார்கள்.
  • (பில் கிரெய்க்) சொற்கள், சப்தங்களின் வியாபாரி; மனிதர்களிடம் கூட ப்ரூஃப் திருத்தி விடுபவர்.
  • கம்யுனிஸ்டுகள் மார்க்சியத்தை ஒழித்துக் கட்டிவிட்டார்கள்.
  • பியானோக்களில் எலிகள் குடியிருக்கின்றன. ஒரு ஸ்வரம் எங்கோ ஒடிந்திருக்கிறது.

அக்னி நதி தொட்டுச் செல்லும் நதிகள் – கங்கை, யமுனை, பத்மா, சரயு, கேம், கோமதி, ஸஜ்ஜர் வாலி, ராமகங்கா (கிழக்கு வங்கம்) , ரஸ்பானா (டேராடூன்) மற்றும் அவற்றின் கரையோர நகரங்கள்.

நம்பிக்கை வரிகளைப் பிடித்துக் கொள்கிறோம். “நல்லகாலம் வரும்போது எல்லாருக்குமாக வரும். இது இந்து வீடு, இது முஸ்லீம் வீடு என்று பார்க்காது- நாங்கள் எல்லாருமே ஒன்றாக மூழ்குவோம் – ஒன்றாக எழுவோம் “ என்று சம்பா பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து விட்ட கமாலிடம் கூறுகிறாள்.

யார் கண்டது,  கால நதியின் ஓட்டத்தை? இந்த  நதி சில நூற்றாண்டுகள் கழித்து  குளிர்ச்சியாக, அமைதியாக  ஓடிக்கொண்டிருக்கும். அப்போது அராபிய ஞானிகளும்  சூபி கவிஞர்களும் மீண்டும் இந்து பக்தர்களுடன் இணைந்து  புனிதமான வாரணாசிக் கரையில் ஆரத்தி செய்யக் கூடும். 

-ராகவேந்திரன், கோவை

கூடுகை 2 – ப.சிங்காரம் படைப்புகள் – வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

ஆசான் திரு.ஜெயமோகன் அவர்களுடைய “அலை அறிந்தது” எனும் கதையில் வரும் அத்தர்பாய், வாழ்க்கையைப் பற்றி ஒரு வரி சொல்லுவார் “அலை ஏறினா, இறங்கித்தானே ஆகணும்” என்று. இதையே “வாழ்க்கை ஒரு வட்டம்” என எளிமைப்படுத்த முடியும். அந்த வட்டத்தின் மையம் “அபத்தம்”.

*

ப.சிங்காரம் எனும் ஆளுமை ஒரு பெயராக என்னை வந்தடைந்து ஏறத்தாழ 7 வருடங்கள் இருக்கும். தொடர்ந்து, இலக்கிய உரைகளிலும், இலக்கியக் கட்டுரைகளிலும் தவறாமல் உச்சரிக்கப்படும் ஒரு பெயராக அவருடைய “புயலிலே ஒரு தோணி” நாவல் இருக்கிறது. அத்தகைய கட்டுரைகளை வாசிக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெரும் மன எழுச்சியுடன் புயலிலே ஒரு தோணி நாவலை வாசிக்கத் தொடங்குவேன். ஓரிரு அத்தியாயங்கள் கடக்கும் முன்பே, நாவலின் உள்ளே நுழைய முடியாமல் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேறு புத்தகங்களை படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இந்நாவலை இம்முறை ஈடுபாட்டுடன் என்னால் வாசிக்க முடிந்ததற்கு சொல்முகம் வாசகர் கூடுகை மட்டுமே காரணம். அதற்கு என்னுடைய நன்றிகள்

*

தொட்டனைத் தூறும் கேணியாகவே இருந்தாலும் நாம் கொள்ளும் அளவு நம்முடைய கலனை மட்டுமே பொருத்தது. அந்தப் புரிதலுடன்  என்னுடைய வாசிப்பு சார்ந்து புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் இரு நாவல்களைப் பற்றிய என்னுடைய அவதானிப்புகளை இக்கட்டுரையில் முன்வைக்கிறேன்

*

புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் இரண்டும் இரு நாவல்களாகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும், வாசிப்பனுபவத்தில் இரு நாவல்களையும் ஒரே நேர்கோட்டில் நம்மால் வைக்க முடியும். குறிப்பாக ”கடலுக்கு அப்பால்” நாவலை, ”புயலிலே ஒரு தோணி” நாவலின் நீட்சியாக – காலம் மற்றும் கதாப்பாத்திரங்களை முன்வைத்துச் சொல்ல முடியும்.

இந்தோனேஷியாவை கைப்பற்றும் ஜப்பான் துருப்புகள் மெடான் நகரில் நுழையும் சித்திரத்துடன் துவங்கும் ”புயலிலே ஒரு தோணி” நாவல், (பாண்டியன் எனும் கதாபாத்திரத்தின் மூலமாக) பினாங்கு, ஐ.என்.ஏ என சொல்லப்படும் இந்திய தேசிய ராணுவம், அதன் செயல்பாடுகள், நேதாஜி, போர்ச் சித்திரங்கள், ஜப்பானின் பின்னடைவு, அதன் விளைவுகள், பாங்காக் பின்னர் மீண்டும் பினாங்கில் இருந்து மெடான் நகருக்கு வந்து முடிகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பின்னான வாழ்க்கையை, போர் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தழும்புகளை ஒரு காதல் கதையின் ஊடே பதிவு செய்கிறது ”கடலுக்கு அப்பால்”.

*

இவ்விரு நாவல்களின் சிறப்புகளுல் ஒன்று, அவற்றின் கூறுமுறை. நாவலின் பெரும்பாலான கதாப்பாத்திரங்களை மற்றும் விரித்தெழுத சாத்தியம் கொண்ட பல தருணங்களை சின்னச் சின்ன சித்தரிப்புகள் அல்லது ஓரிரு பத்திகளில் சொல்லிச் செல்கிறார் திரு.சிங்காரம். ஒருவகையில், அது வாசகனின் கற்பனைக்கு பெரும் இடம் தருகிறது என்றாலும், சில இடங்களில் இந்தச் சிக்கனமே கஞ்சத்தனமாகிவிடுகிறது. செட்டி வீதி குறித்த சித்திரங்கள், பாண்டியன் மற்றும் ஆவன்னா பாத்திரங்களின் நினைவுகள் மூலமாகவே மதுரை, சின்ன மங்கலம் வாழ்க்கையை மீள்கட்டமைப்பு செய்வது, சில பக்கங்களுக்காவது வர்ணிக்கச் சாத்தியமுள்ள கடற்புயலை ஓரிரு பத்திகளிலேயே கடப்பது உள்ளிட்ட சில உதாரணங்கள் நம்மால் விரித்தெடுக்கப்படும் சாத்தியம் கொண்டவை. அதைப் போலவே,  “ரோல்ஸ்ராய்ஸ்” லாயர் டில்டன், “விடாக்கண்டன்” செட்டி போன்ற பெயர்களும். அதேசமயம், இக்கூறுமுறையின் போதாமையினாலேயே, “பாண்டியன்” எனும் பாத்திரப் படைப்பின் வீரதீரச் செயல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.

*

”புயலிலே ஒரு தோணி” நாவலின் பாண்டியன் கதாப்பாத்திரத்துக்குக்கும், ”கடலுக்கு அப்பால்” செல்லையாவுக்கும் மெல்லிய இணைப்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன். ஒருவகையில் செல்லையா, பாண்டியனின் நீட்சி. போர்ச்சூழலில் இருந்து அன்றாடத்துக்கு திரும்பும் தருணத்தில் இறந்துபோன பாண்டியன் இழந்தது என்ன என்பதை ”செல்லையா”வைக் கொண்டு நம்மால் ஊகிக்கமுடியும். லெளகீக வாழ்க்கைக்குத் திரும்பும் வீரனின் பெருமை, மதிப்பிழந்து போன ஜப்பான் ரூபாய் நோட்டுகளுக்கு இணை சொல்லத்தக்கது.

*

மெடான் நகரில் தங்கையா மற்றும் தில்லைமுத்துவுடனும், பினாங்கு நகரத்தில் அருளானந்த அடிகள், மாணிக்கம் உள்ளிட்டோருடனும் நடக்கும் விவாதங்களில் தமிழரின் பெருமை, வீரம், இலக்கியச் செழுமை ஆகியவை தரவுகளின் அடிப்படையில் கேள்விக்கு உட்படுத்தும் பாண்டியனின் தருக்கம் “கிணற்றுத் தவளை”யாய் இருப்பதன் எல்லைகளைக் காட்டுகிறது. போலவே, ராணுவப் பயிற்சி முகாமில் நடைபெறும் அசைவ உணவு சார்ந்த விவாதமும், அதற்கென பாண்டியன் சுட்டிக்காட்டும் பாடல்களும். மேஜர் டில்டனுடன் தேசியம் பற்றிய விவாதம் எழும்போது, தன்னுடைய பாட்டனார் காலம் தொட்டே இந்தோனேசியாவில் பிறந்து வளர்ந்த போதும், மேஜருக்குள்ளிருக்கும் டச்சுப் பாசத்தை தன்னுடைய கேள்வி மூலம் பாண்டியன் வெளிக்கொணரும் இடம் காட்டுவது, மனித மனதின் புரிந்துகொள்ளமுடியாத ஆழத்தை.

*

போதையிலிருக்கும் பாண்டியன், பட்டினத்தார் உள்ளிட்டோரை பார்ப்பது, அவர்களுடனான உரையாடல், சங்கப்பாடல்களையே சான்றாகக் கொண்டு தமிழர் பெருமையை, தமிழ் மன்னர்கள் பெருமையை உடைத்தெறியும் பாண்டியனின் வாதங்கள், தொலைந்துபோன முக்கியமான கடிதம் குறிந்து பாண்டியன் மற்றும் கலிக்குஸீமான் இடையே நடக்கும் பேச்சில் வரும் “ஜெனரல் சிவநாத்ராய்” குறிந்த சித்தரிப்புகள், மாணிக்கத்துக்கும் செல்லையாவுக்கும் ”கடலுக்கு அப்பால்” நாவலில் வரும் ”சிலப்பதிகாரம்” சார்ந்த உரையாடல் என இவ்விரு நாவல்களிலும் (வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்)மெல்லிய அங்கதம் / பகடி நிறைந்திருந்தாலும், உண்மையில், இந்நாவல்கள் நமக்குக் காட்டுவது அபத்தங்களை.

*

உதாரணமாக இரு சம்பவங்களைச் சொல்லலாம்

கடலுக்கு அப்பால் நாவலில், தன் உயிரைப் பணயம் வைத்து “வானாயீனா” செட்டியாரின் மகன் உடலை மீட்டு வருகிறான் செல்லையா. தன் மகன் வடிவேலுவின் இடத்தில் செல்லையாவைக் கருதுகிறார் செட்டியார். செட்டியாரின் மகள் மரகதம், மனைவி காமாட்சியம்மாள், வேலைக்காரர்கள் என யாவரும் செல்லையாவைப் போற்றுகின்றவர்கள். என்றபோதும், போரும், போரினால் செல்லையா கொள்ளும் ”நிமிர்வு”ம் அவனை “பொம்பளைத்தொழில்” வட்டித்தொழிலில் இருந்து வெளியே தள்ளுகின்றன. தன் முழு வாழ்வின் பலனாக தன் தொழிலைக் கருதும் செட்டியார், அதன் பொருட்டே மரகதத்தை “செல்லையா”வுக்கு மணம்முடிக்க மறுக்கிறார். “புயலிலே ஒரு தோணி”யில் அப்துல் காதர் மூலமாக, மரகதத்தின் மாப்பிள்ளையாகவே அறிமுகமாகும் செல்லையா, ஒரு போதும் அந்த நிலையை அடைய முடியாமல் போவது காலத்தின் குரூரம்.

”புயலிலே ஒரு தோணி”யில், அர்மீனியா ஆற்றில் மணல் அள்ளும் டச்சுக் கைதிகளுக்கிடையே இருக்கும் “ரோல்ஸ்ராய்ஸ்” லாயட் டில்டன், தனக்கு உணவு தந்த பாண்டியனை நீடுவாழ வாழ்த்துகிறார், மட்டுமின்றி அவர் குடும்பத்து பெண்ணுக்கு தீங்கிழைத்த ஜப்பானிய ஜெனரலைக் கொன்றதால், அவர் குடும்பமும் பாண்டியனுக்கு மிகவும் நன்றியுடையது, என்றபோதும், பாண்டியனைக் கொல்லும் தோட்டா, லாயர் டில்டனின் மகன் “மேஜர்” டில்டனின் துப்பாக்கியிலிருந்துதான் வரவேண்டியிருக்கிறது.

*

வாழ்க்கைப் புயலில், பாண்டியனைப் போல, செல்லையாவைப் போல, வானாயீனாவைப்போல, மாணிக்கத்தைப் போல நாமும் தாக்குப் பிடிக்க முயன்று கொண்டேதான் இருக்கிறோம். அப்பாலிருந்து புயலை இயக்கும் விசையாக நம்மை நோக்கி சிரித்துக்கொண்டிருக்கிறது ஊழ்.

*

கூடுகை 2 – கடலுக்கு அப்பால் – வாசிப்பனுபவம் – விக்ரம்

ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்‘ வாசிப்பனுபவம் – விக்ரம்

”கடவுள் நம்பிக்கை இருக்கா?” ஜெயகாந்தனிடம் கேட்கப்படும் கேள்வி.  இசைஞானி இளையராஜா தயாரித்த ஜெயகாந்தன் ஆவணப்படம் ஒன்றில்.

”கடவுள் நம்பிக்கை இருக்கா?”

”எதையாவது நம்பித் தொலை.  எதையுமே நம்பாம இருக்கிறது தப்பு” ஜெயகாந்தனின் பதில். அவர் போன்ற இலக்கியவாதிக்கே உரித்தானது இந்த பதில்,  என்னளவில் இது ஆன்மிகமானது.  எதையாவது நம்பத்தான் வேண்டும்,  மனித மனதிற்கு நம்பிக்கை இன்றியமையாதது, அதன் அடிப்படையிலேயே அது தன் வாழ்கையின் அர்த்தத்தை கற்பித்துக் கொள்கிறது.  அது தண்ணீர் மலையானாக இருக்கலாம், அல்லாவாக, புத்தனாக, ஏசுவாக, அல்லது பகுத்தறிவின் மீதான நம்பிக்கையாக.  தெய்வங்கள் குலஅறத்தை உவக்கின்றன என்பதாக அல்லது என் சொந்த மனசாட்சியின்படி தன்னறம் அல்லது கைக்கொண்ட கொள்கை என, தீர்மானித்துக் கொண்ட திசை என எதுவாகவும்.  மற்ற பிராணிகளைப் போலல்லாமல் மனிதனின் மனம் சிக்கலானதாக எளிதில் வரையறுத்துவிட முடியாததாக, ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரித்தான உலகை, வாழ்வை உருவாக்கித் தருவதாகவும் வாழ்வை துய்ப்பவனாகவும், அதுவே நடிப்பதாகவும் இருக்கிறது.

வயிரமுத்துப்பிள்ளைக்கு வாழ்கை என்பது அவரது தொழில், அவரது அறமும் தெய்வமும் கூட.  அது எல்லாவற்றினும் மேலானது.  அவரை விட அது அவருக்கு மேலானது,  அவரது மகளின் விருப்பதை விட, அவரது மகனை விட.

பர்மாகாரர்களிடம் அடி வாங்கியதும் எத்தனையோ அவமானங்களை தொழிலின் பொருட்டு அவர் பொறுத்துக்கொண்டதும் காட்டப்படுகிறது.

அவரது மகன் ஜப்பானியரின் குண்டுவீச்சில் பலியான போதும் ஜப்பானியரைக் கொன்று பாலம் கடந்த செல்லையாவின் செயலை அவர் ரசிக்கவில்லை.  ஜப்பான்காரன் எவ்ளோ பெரிய ஆள்.  இவன் என்ன நாயக்கரா என்பதே அவரது எண்ணம்.  தொழில்தானே எல்லாவற்றினும் முக்கியமானது எனக்கொள்ள வேண்டியதுதானே இவன் கொண்டிருக்க வேண்டிய அறம்?

மரகதம் செல்லையாவின் மீது காதல் கொண்டவள்தான்.  அவளும் கூட தன் தந்தையின் முடிவு சரியானது என்ற ஏற்பு உடையவள் என்றே எனக்குத் தோன்றுகிறது.  ஆனால் ஒரு கோண வேறுபாட்டுடன்.  இத்தொழிலுக்கும் என் மகளுக்கும் இவன் லாயக்குப்பட மாட்டான் என்ற வயிரமுத்துப்பிள்ளையின் கோணமல்ல அவளுடையது.  தன் நல்வாழ்வு குறித்து அவள் கவலை கொள்ளவில்லை.  தானும் தொழிலும் செல்லையாவின் கால்தூசுக்கும் சமமல்ல என்பது அவள் எண்ணம், அதை அவனிடமே தெரிவிக்கவும் செய்கிறாள்.  உங்களுக்கு நான் தகுந்தவளல்ல, எளியவள் என வணங்கி விலகுகிறாள்.

உண்மையில் நான் செல்லையாவின் தரப்பில்தான் நிற்கிறேன்.  தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் லௌகீக விவேகம். செல்லையாவிற்கு அந்த அளவிற்கு இல்லைதான்.  இந்த வேலையில்லாவிட்டால் இன்னொன்று என்று எண்ணுகிறான்.  வயிரமுத்துப்பிள்ளையின் குலஅறம் என்பது அவனுக்குப் பொருட்டே அல்ல.  தன்னை தெய்வம் என்று நோக்கிய மரகத்தை அவன் தெய்வம் என்று நோக்கினானா என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. ஆனால், அவளது விருப்பம் எதுவாயினும் அதற்கு முழுமையாக மதிப்பளிக்கக்கூடிய உண்மையான காதல்கொண்டவன்.

செல்லையாவிற்கும் கூட அவளை கும்பிட்டு விலகிக்கொள்ள அவள் மீதான ஒரு நோக்கு நண்பன் மாணிக்கத்தின் வாயிலாக தரப்படுகிறது.

அது கண்ணகி வகைப் பெண்.  அப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால்தான் தமிழ்நாட்டில் இன்றுகூட, சங்க காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் மரபுச் சரடைக் காணமுடிகிறது. அவர்கள் மரபு, பண்பாடு பழக்க வழக்கங்களின் அடிமைகள் – காவலர்கள்.”

செல்லையாவும் மரகதமும் வாழ்வில் வெவ்வேறு திசைகளில் பிரிகிறார்கள்.

நாவலின் நிலம் கடலுக்கு அப்பாலானது.  மலாய்க்கார்கள், சீனர், தமிழரை பெரும்பான்மை கொண்ட இந்தியர் வாழும் நிலம்.  வர்த்தகம் சார்ந்து அமைந்த தமிழர்களின் வாழ்க்கையை முதன்மையாக எடுத்துக்கொண்டிருக்கிறது இந்த நாவல் என்றபோதும்.  ஐஎன்ஏவில் இருந்து பிரிந்து செல்லும் தமிழர்கள் சிலருக்கு அன்புடன் உதவவும் அடைக்கலம் அளிக்கவும் முன்வரும் ரப்பர் தோட்டத் தொழிலாளித் தமிழர் பற்றி தொட்டுணர்த்தவும் செய்கிறது.

மலாய் மொழி பேச்சு இனிமையானதாகவும் சீன மொழி இனிமையற்றதாக வயிரமுத்துப்பிள்ளைக்கு எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது.  யோசிக்க வேண்டியது என்று எண்ணுகிறேன்.

செல்லையா அழைத்ததை ஏற்று மரகதம் அவனுடன் சென்றிருந்தால் என்னவாகியிருக்கும்?. கடலுக்கப்பாலான மலேயாவில் வியாபாரம் செய்யச் சென்றவருள் ஒருவன் கதைநாயகன்.  வியாபாரத்திலிருந்து விலகி அவனும் அவன் நண்பர்கள் சிலரும் இந்திய விடுதலைக்காக ஜப்பானுடன் கூட்டமைத்திருக்கும் நேதாஜியின் படையில் சேர்கிறார்கள்.  ஜப்பான் வீழ்ச்சியடைய, நேதாஜியின் நிலைமை இன்னதென்று தெரியாதிருக்க, வென்றுவிட்ட பிரிட்டிஷ்காரர்களிடம் சிக்கிவிடாமல் தங்கள் பழைய தொழில்-வாழ்கைக்கு திரும்பிவிட முற்படுகிறார்கள்.  அதற்கான பயணத்தை இரு அணிகளாகப் பிரிந்து மேற்கொள்கிறார்கள்.  ஒரு அணியுடன் வடதிசை செல்கிறான் செல்லையா.  தடைசெய்யும் ஜப்பானியரைக் கொல்ல நேர்கிறது, சீனக் கொரில்லாக் குழு ஒன்றின் பாராட்டுதலையும் குறுகியகால நட்பையும் பெறுகிறார்கள்.  திரும்பும் செல்லையா தன் காதலி மரகதத்தை திருமணம் செய்ய அவளது தந்தை இடையூறு செய்ய அவன் அவளை ரகசியமாக அழைத்துச் சென்றுவிடுகிறான்.  அவர்கள் திருமணம் செய்துகொண்டு தொலைதூர ஊர் ஒன்றில் வாழ்கிறார்கள் என்று கதை முடிந்து இருந்தால் இந்த நாவல் என்ன இழந்திருக்கும்? முக்கியமான ஒன்றை இழந்திருக்கும்.  முதன்மைப் பாத்திரங்கள் தங்கள் விழுமியங்களில் குறைபட்டிருக்கும், அவ்வழி பின்னடைந்து நாவல் முழுமையை இழந்திருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.

சொல்முகம் கூடுகை 2

கூடுகை 2 – புயலிலே ஒரு தோணி – வாசிப்பனுபவம் – லோகமாதேவி

‘புயலிலே ஒரு தோணி’ வாசிப்பனுபவம் – லோகமாதேவி

இந்த புத்தகத்தை கடந்த 2 நாட்களில் கல்லூரியில் முக்கியமான ஒரு குழுமத்தின் வருகையின் இடையில் குறிப்புகள் எடுத்தவாறு 3 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன். வாசித்த பின்னரே ’கடலுக்கு அப்பாலை’ வாசித்தபின்னர் இதை வாசித்திருக்கனும் என்பதை தெரிந்துகொண்டேன்.

கிண்டில் பதிப்பில் இருக்கும் ப சி அவர்களின் இரண்டு முன்னுரைகளுமே சிறுகதையைப் போல உணர்வுப்பூர்வமாக இருந்தன. ந. முருகேசபாண்டியன் அவர்களின் உரையும் கதையைக்குறித்த , கதாசிரியரைக் குறித்த சுருக்கமான கருத்தை சொல்லியது

கதையை ஆழ்ந்து வாசிக்காது போனால் வெறும் தகவல் திரட்டு என்னும் பிம்பத்தை அளிக்கக்கூடியதும் மனமொன்றி வாசிக்கையில் அற்புதமான வாசிப்பனுபவத்தை தருமொன்றாகவும் இருக்கும் இந்தக் கதை.

யுத்தத்தை பின்னணியாகக் கொண்டு பாண்டியன் என்னும் ஒரு புனைவுக்கதாபாத்திரத்தின் வாழ்க்கையை அவனது பயணத்தை 4 பகுதிகளாக பிரித்துச்சொல்லி அதன்வழியே அக்காலத்தை, அப்போதைய வாழ்க்கை முறை, வாழ்வுத் தரம், குடும்ப வாழ்க்கை, வணிகம், பாலியல் தொழில், கடைவீதிகளின் அமைப்பு, போக்குவரத்து, தனி ஆளுமைகள், கரன்ஸி என்று பலவற்றைச் சொல்லி புலம்பெயர்ந்தவர்களின் வேதனையையும் சொல்லும் இந்தக் கதையின் தலைப்பு கதைமாந்தர்களின் வாழ்வும் புயலில் அகப்பட்ட தோணியைப்போல அல்லாட்டத்தில் தான் இருக்கிறது என்றுசொல்லுவதாக எடுத்துக்கொண்டேன்

நாவலில் பல மரங்கள் செடிகொடிகளின் பேரையும் மனதை மயக்கும் வெள்ளை மக்னோலியா மலர்கள் என்பது போன்ற பல  தாவரவியல் தகவல்களையும் ப சி தந்திருக்கிறார். அவர் சொல்லும் மரங்கள் எல்லாம் இன்றும் இருக்கின்றனவா என்று தேடனும். பல பெயர்கள் கேள்விப்பட்டதே இல்லை.

பழஞ்சொற்கள் பலதும் வார்த்தைகள் பலதும் மிகப்புதிதாக இருந்தன.

‘’நான் வாரேன் வாக்கப்பட என் தங்கச்சி வாரா புள்ளைய தூக்க’’

அடகுக்கு பதில் நம்பிக்கை

இவையெல்லாம் உதாரணங்கள்

தாசிகளை அவர்கள் தொழில்முறைகளை  விஸ்தாரமாக சொல்லுகிறார் ப. சி.

ஜாதிய அமைப்புகளையும் அப்படியேதான்.

பழந்தமிழ்ப்பாடல்களும் நிறைய இடையிடையே வருகின்றன. செருப்படி தண்டனையாக  தரப்பட்டிருப்பது, அதையும் விரும்பி வாங்கிக்கொள்வது, கட்டிச்சோறும் கருவாடும் உணவாக தரப்பட்டது, முதல் முதலாக மேசையில் சாப்பிடும் கிளப்புக்கடைகள் வந்தது போன்ற பல   யுத்த காலத்திலான  வியப்பான தகவல்கள்  இருக்கின்றன இதில்.  

முசோலினியும் ஹிட்லரும் இறந்ததை சாதாரணத்தகவலாக சொல்லுகிறார்.

’’இளங்காதலி’’ இந்த சொல் இனிதாய் இருந்தது. இதைப்படிக்கையில் ப.சி இன்னும் பல கதைகளை ரசமாக எழுதியிருக்கக் கூடியவர் என்று நினைத்துக்கொண்டேன்.

மிக எளிமையான சொல்லாட்சி எனினும் கதை பரந்துபட்ட களத்தில் எழுதப்பட்டிருப்பதும் கதை மாந்தர் பேசும் மலாய் மற்றும் கொச்சையான தமிழ், அப்போதைய வாழ்வு முறை, யுத்தம், பாண்டியன் வாழ்வு வழியே நாம் காணும் INAவின் சித்திரம், தமிழ்பாடல்கள் என்று நாவல் மிக சிறப்பானதாகி விடுகிறது.

வளவிக்காக அப்பனிடம் அடிவாங்கி அப்பன் திரும்பி வருவதற்குள் அம்மையில் உயிர்விட்ட அமிர்தம், கணவனின் பிறழுறவுகளைப் பொருட்படுத்தாமல் வீட்டில் லட்சுமிகரமாய் இருக்கும் ஆச்சி, குடலை உருவி உள்ளங்கையில் வைத்துக்காட்டினாலும் சோறு தராத இன்னொரு ஆச்சி, நாடாரா என்று கேள்வி கேட்கும் தாசி, சொத்தைக்கத்தரிக்காய் செட்டியார் என்று ப சி காட்டும் ஆளுமைகள் என்றென்றைக்கும் மறக்க முடியாதவர்கள்.

தேர்வுக்குப் படிப்பதுபோல் குறிப்பெழுதிக்கொண்டு வாசிக்காமல் மனதொன்றி  மீள் வாசிப்பு செய்யவேண்டிய நூல் இது.

 வாழும் வயதில் மனைவியையும் தலைச்சன் பிள்ளையையும் ஒரு சேர பறிகொடுத்துவிட்டு, மிச்ச காலத்தை தன்னந்தனியே கழித்து, தன் இறப்பை யாருக்கும் தகவல் சொல்லவேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லியபடி ஸ்கேன் எடுக்கச் செல்லுகையில் ஆம்புலன்சிலேயே உயிர்விட்ட ப. சிங்காரம் அவர்களின் வாழ்வும் புயலிலே அகப்பட்ட ஒரு தோணிதான்  இல்லையா?

சொல்முகம் – கூடுகை 2 – புயலிலே ஒரு தோணி – விவாதத்தின் போது

கூடுகை 2 – கடிதம் – லோகமாதேவி

எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் கால.சுப்ரமணியம் அவர்களுடன் சொல்முகம் வாசகர் குழுமம்

சொல்முகம் இரண்டாவது கூடுகையில் இன்று கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. எல்லா மாதங்களிலும் கடைசி ஞாயிறு என் மகன்களை பள்ளி விடுதியிலிருந்து வெளியே கூட்டிச்செல்லும் நாளென்பதால் இதில் கலந்துகொள்ளவே முடியாதென்று நினைத்திருந்தேன். நேற்று மகனை பள்ளியில் ஒரு மாத விடுமுறையின் பின்னர்  கொண்டு விட்டுவிட்டு வந்ததால் இன்று கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வடவள்ளியில் ஒவ்வொருவராக அலைபேசியில் குறுஞ்செய்தியனுப்பி அடையாளம் கண்டுகொண்டு  கைகுலுக்கிக்கொண்டு காஃபி அருந்தியபின்னர்  வழி விசாரித்து அந்த பண்னை வீடு வந்தோம். இலக்கிய கூடுகைகளுக்கெனவே கட்டியதுபோலிருந்தது அந்த ஏகாந்தமான வீடும்   தாராளமான அறையும். நகர சந்தடிகளிலிருந்து முற்றிலும் விலகி பெருமரமொன்றின் கீழிருந்த சிற்றாலயமும் கொஞ்சம் தள்ளியிருந்த வீட்டுத்திண்ணையில் அரட்டையடித்துகொண்டிருந்த  இரண்டு வெள்ளைச்சேலை பாட்டிகளையும் தவிர சஞ்சாரமேயில்லாமல் அமைதியாக இருந்தது தென்னைகள் சூழ இருந்த அந்த வீடு. 20 பேர் வந்திருந்தோம் பலர் எனக்கு இன்றுதான் அறிமுகமானார்கள், 2 கதைகளை 20 பேர் எத்தனை விதமாக இன்று விவாதித்தோம், கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம் என்று நினைக்கையில் மலைப்பாக இருந்தது.

60 களில் எழுதிய கதையை 2019ல் இத்தனை தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.

 எல்லா கதைகளையுமே அகம் புறம் என்றோ, கதை காட்டும் தரிசனங்களையோ, படிமங்களைக் குறித்தோ ஏதும் அறியாமல் வெகு நேரடியாக , வெகு எளிமையாக கதைகளை வாசித்துப்புரிந்துகொள்ளும் எனக்கு கதையைக்குறித்த பல திறப்புகள் கிடைத்தன  இன்று.

 நான் மிகவும் மதிக்கும் சு.வேணுகோபால் அவர்களை இத்தனை எளிமையானவராக எண்ணிப்பார்த்ததே இல்லை. அவரும் கால. சுப்ரமணியமும் பல முக்கிய கருத்துக்களை இடையிடையே பகிர்ந்து கொண்டிருந்தது விவாதத்தை இன்னும் செறிவாக்கியது.

திரு  நடராஜன் அவர்களை இதற்கு  முன்னர் சில சமயங்களில் ஜமீன்தாரும் எங்கள் கல்லூரி தலைவருமாகியவருடனேயேதான் பார்த்திருக்கிறேன் என்பதால் அவரைக்குறித்த  செல்வந்தர் , நிழக்கிழார்,  பண்ணை வீட்டு உரிமையாளர், கல்லுரித்தலைவருக்கு நெருக்கமானவர் என்பது போன்ற ஒரு உளச்சித்திரமே எனக்கிருந்தது. முற்றிலும் மாறாக அவர் மிக எளிமையானவராக மற்றவர்களுக்கு சிற்றுண்டிகளை எடுத்துக்கொடுத்தும் நாற்காலிகளை கொடுத்து உதவியும் கதை விவாதங்களில் ஆர்வமாக சிரித்தமுகமாக கலந்துகொண்டதுமாக இருந்தார். சு வே விடம் இந்த வீட்டை உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இலக்கியக் கூடுகைகளுக்கு உபயோகித்துக்கொள்ளுங்கள் என்று வலிந்து சொல்லிக்கொண்டிருந்த, அவரது பெருந்தன்மைக்கு முன்னால் நான் கொண்டிருந்த  உளச்சித்திரம் கரைந்து காணாமல் போனது.

எங்கள் கிராமத்திலிருந்து கிளம்பும் போதே சாரல்மழை. இன்று கோவையிலும் நல்ல இளங்காற்றிருந்தது. அருமையான கூடுகை. மிக ஆரோக்கியமான விவாதம், பல நண்பர்களின் சந்திப்பு, கதைகளைப்பற்றிய புதிய புரிதல்கள் என வெகுகாலத்திற்குப் பிறகான மிக நிறைவான நாள் எனக்கு.

அனைவருக்கும் அன்பும் நன்றியும்

லோகமாதேவி

சொல்முகம் இலக்கிய குழுமம் – இனிய உதயம்

கோவையில் ஒரு “புக் ரீடர்ஸ் கிளப்” தொடங்குவதென்பது நீண்ட நாட்களாக மனதில் உருட்டிக் கொண்டிருந்த ஒரு எண்ணம். பல முறை இதைப் பற்றி பேசியும் செயல்படுத்த முடியாமல் போனது. நமது நண்பர்கள் சென்னையிலும் பாண்டியிலும் வெண்முரசு கூட்டங்களை மாதம்தோறும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கிறார்கள். ஆனால் விஷ்ணுபுர வாசக வட்டம் மையம் கொண்டிருக்கும் கோவையில் வாசிப்பை முன்வைத்து தொடர்ச்சியான கூட்டங்களை நடத்த முடியாமலாகிக் கொண்டிருந்தது.

இந்த முறை ஊட்டியிலிருந்து மலையிறங்கும்போதே வாசிப்பு கூட்டங்களை கோவையில் கட்டாயம் ஒருங்கமைக்க வேண்டும் என்று மீண்டும் முன்வைத்தபோது, க்விஸ் செந்தில், செல்வேந்திரன், விஜய சூரியனும் இதை தீவிரமாகக் கையிலெடுத்துக் கொண்டார்கள். கோவையில் இருக்கும் நமது நண்பர்களை முதலில் தொடர்பு கொண்டு ஒன்றாக திரட்டினோம். அனைவருமே தங்களை இதில் இணைத்துக் கொண்டார்கள். தாமதிக்காமல் முதல் கூட்டத்தை 26ம் தேதி ஞாயிறன்றே கூட்டுவதாக முடிவெடுத்தோம். டைனமிக் நடராஜன் தனது தொண்டாமுத்தூர் பண்ணை இல்லத்தில் இடமளித்து தேநீருக்கும் இடைஉணவுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். குறுகிய கால அறிவிப்பென்பதால் முடிந்தவர்கள் மட்டும் வந்தாலும் பரவாயில்லை, பிரத்தியேக தயாரிப்பு இம்முறை தேவையில்லை என்று முடிவெடுத்தோம். அடுத்தடுத்த கூட்டங்கள் ஒரு மாதம் முன்னதாகவே திட்டமிடப்படும்.

திரு.டி. பாலசுந்தரம் அவர்கள் டைனமிக் நடராஜனின் அழைப்பின் பேரில் ஆர்வத்துடன் எங்களோடு முதல் கூடுகையில் கலந்துக் கொண்டார். கோவை நண்பர்கள் சுஷீல், வெங்கட், விக்ரம், ஜியார்ஜியா சுரேஷ், நவீன் சங்கு, பூபதி, சபரி, எல்வின், க்விஸ் செந்தில், செல்வேந்திரன் ஆகியோருடன் இன்று காலை கூடினோம். டி. பாலசுந்தரம் அவர்கள் உலகெங்கிலும் “புக் கிளப்” செயல்படும் முறைகள் பற்றியும் அவற்றின் அவசியத்தையும் முன் வைத்து ஒரு துவக்க உரை நிகழ்த்தினார். கோவையில் ஒரு சில வாசிப்பு கூட்டங்கள் உண்டென்றாலும் நாங்கள் அனைவரும் ஜெயமோகனின் கட்டுப்பாட்டிற்கு பழக்கப்பட்டு அதில் தேர்ச்சியும் கொண்டவர்கள் என்பதால் இக்கூட்டங்கள் சீராக அமையும் என்று கருதுவதாக கூறினார். உண்மையில் அதை நாங்களுமே உணர்ந்தோம். எந்த விதிகளையும் எடுத்துக் கூறாமலேயே நாங்கள் அனைவரும் ஒரு ஒழுங்கில் வந்து அமைந்தோம். அதாவது நமது கூட்டங்களின் வடிவங்களுக்கு ஒரு பெயரிட்டு சொன்னால் போதும் அதன் விதிகள் வார்த்தெடுத்து புரிந்து கொள்ளப்படுமென்பதைப் போல. விஷ்ணுபுர விருது விவாத அரங்க விதிகள் அல்லது ஊட்டி முகாம் அமர்வின் விதிகள் என்று மட்டுமே இனி அறிவித்துவிடலாம். இதன் பயனாக ஒரு நொடி கூட வீணடிக்கப்படாததை நாங்கள் இன்று மீண்டும் கண்டோம். நமது அமர்வுகளினாலும், விவாதப் பட்டறை போன்ற முன்னெடுப்புகளாலும் ஒரு புத்தகத்தின் மீதான தன் கருத்துகளை முன் வைக்கும் முறைமையும் எதிர் விவாதங்கள் அமைய வேண்டிய தன்மையும் ஒருவாறு பழக்கப்பட்டு வந்திருக்கிறது.

“சொல்முகம் வாசகர் குழுமம்” என்று பெயர் சூட்டிக் கொண்டு இக்கூட்டங்களுக்கான சில வழிமுறைகைளை இறுதி செய்தோம். மாதம் ஒரு செவ்விலக்கிய நாவல் தேர்வு செய்யப்படும். அதை வாசித்து அடுத்த கூடுகையில் பத்து நிமிடங்களுக்கு ஒவ்வொருவரும் தன் பார்வையினை சீராக முன் வைக்க வேண்டும். சுருக்காமாக ஊட்டி முகாமின் ஆய்வுரை விதிகள். கேள்விகளையோ கருத்துகளையோ கோர்வையாக முன்வைக்கும் பயிற்சியாகவும் இதை கொள்ளலாம். இவ்வுரைகளை சிறு கட்டுரை வடிவில் எழுதி பார்த்திருக்க வேண்டும். அக்கட்டுரைகள் ஒரு வலைப்பூவில் பதிவேற்றப்படும். இவ்வுரைகளின் மீதான விவாதங்கள் உரைகளுக்குப் பின் தொடரும். ஒரு நாவல் மீதான கவனத்தை குவித்து அதன் கட்டமைப்பு, அழகியல், வரலாற்றுப் பின்னணி என அத்தனை கோணங்களிலும் வாசிக்க இது வழி செய்யும். சில முக்கிய வசனங்களையோ, வர்ணனைகளையோ குறிப்பெடுத்து இங்கு கூட்டாக வாசிக்கும்போது அது மனதில் நிலைகொள்ளும். நட்பார்ந்த முறையிலேயே விவாதங்கள் நடக்க வேண்டுமென்பதும் அரட்டைகளுக்கோ புரட்டுகளுக்கோ இடமில்லையென்பதும் அடிப்படை விதிகள்.

முதல் கூட்டமென்பதால் கடந்த மாதத்தில் வாசித்தவற்றை பகிர்ந்துகொண்டோம். டி.பாலசுந்தரம் அவர்கள் பனைமரச் சாலை புத்தக வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்தார். புத்தகத்தை கையோடு கொண்டுவந்து அதிலிருந்து சில வரிகளை வாசித்து காட்டி அவற்றை தன் பார்வையில் விளக்கினார். உம்மாச்சி, ஓநாய் குலச் சின்னம், இடைவெளி, டால்ஸ்டாயின் குறுநாவல்கள், இ.ரா. முருகனின் 1975, சுரேஷ் ப்ரதிப்பின் சிறுகதைகள், பிரதமன் சிறுகதைத் தொகுப்பு என பலவாரியான புத்தகங்கள் மீதான வாசிப்பை விவாதித்தோம். அவற்றை கட்டுரை வடிவிலும் வலையேற்றும் வேலையை சுஷீல் எடுத்துக் கொண்டுள்ளார். அடுத்த மாதம் முதல் மேலும் சில இளம் வாசக நண்பர்கள் இணைந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்கள்.

கோவையில் ஏதேனும் ஒரு இலக்கிய நிகழ்வுகளின்போதோ அல்ல எழுத்தாளர்களின் வருகையின்போது மட்டுமோ சந்தித்துக் கொள்ளும் இலக்கிய நண்பர்கள் இனி மாதந்தோறும் ஒன்று கூடப்போகிறோம் என்பதும் தீவிர இலக்கிய விவாதங்களாக அவை அமையப்போகிறதென்பதும் உவகையளித்தது. ஆனால் அதற்கான முறையான முதல் உந்துதலை இந்தக் காலை சந்திப்பு அளித்திருக்குமா என்று சந்தேகம் எழுந்தது. அடுத்த கூட்டம் ஜூன் 30 அன்று வைத்துக் கொள்வோம் என்றும் ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களையும் வாசித்து வரவேண்டுமென்றும் முடிவெடுத்து அறிவித்த உடனேயே “எனக்கு ஓக்கே, நான் வருகிறேன்” என்று தன் மொபைலில் அட்டவணையை சோதித்தபடியே முதல் குரல் டி.பாலசுந்தரம் அவர்களிடமிருந்து எழுந்தது. இது ஒரு நல்தொடக்கம் என்ற நம்பிக்கைப் புன்னகையோடு கலைந்து சென்றோம்.

நரேந்திரன்

கோவை