எல்லா நாவல்களுக்கும் ஒரு காட்சித் தோற்றம் கற்பனையில் விரிவதுண்டு. இந்நாவலிலோ எனக்கு சாயங்கால மங்கிய நீல வண்ணமும், இளஞ்சிவப்பு விடியலுமாக ஒரு மங்கிய இளகிய இருள் முளைக்கும் அந்தி வண்ணம் தோன்றியது. அந்திக்கே உரிய ஏக்கம், கனவு, களிவிரக்கம் என அதற்கான உணர்வுkazhum கூட. லாங்பென் ஏரியின் அழகான, மிக நுண்ணிய விவரிப்புகளுடன் அதை சுற்றிய பண்ணைகள் என கதைக்களம் விரிகிறது. கதை மாந்தவர்கள் நிரம்பி வழிகின்றனர். வாழ்வின் meimaiyai எதன் மூலம் அறிய முடியும். இசையால், வீரத்தால், மதத்தால், காதலால், அழகிய குடும்பத்தால், அறிவால், இவற்றின் உச்சம் தொட்டும், verumaiyal துரத்தப்படும் உல்லாசப் புருஷர்களும், காதலை தவறவிட்ட, விட்டுக் காடுத்து ஏற்க முடியாது தவிக்கும் பெண்களின் கோபம், தியாகம், கழிவிரக்கம், என தொடரும் மார்கரீட்டா, அன்னா, எலிசபெத் என முக்கிய பெண் கதை மாந்தவர்களுடன், இந்நாவல் தொடர்கிறது.
கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தின் அஸ்திவாரமாக இருக்கக் கூடிய மத உணர்வுகள், கலாச்சாரம் போன்றவற்றால் நசுக்கப்பட்ட உணர்வுகளுக்காக மனிதனின் முக்கியமாக பெண்களின் தரப்பில் நின்று மதக்கோட்பாடுகளையும், ஞானம், அறிவின் தேடல்கள் மூலம் கிடைக்காத வாழ்வின் மெய்மையை மனித குலத்தின் அறியாமையின், கள்ளங்கபடமற்ற அன்பின் மூலம் உல்லாச புருஷர்களான ஞானிகளிடமும் கேள்வி கேட்கிறது இந்நாவல். உண்மையில் வாழ்வின் சாரம் என்ன என்ற கேள்விகளுடன் முன்னகர்கிறது நாவல். எல்லா தேனீக்களும் திரும்பி வரவில்லை என்றாலும், இறுதி அழைப்பை எதிர்நோக்கும் ராணி தேனீக்கும் அதன் வாயிலின் உண்மைக்கும் இடையே ஆன பாதை என நீள்கிறது வாழ்வு. அதில் கலை, அறிவு, காதல், உழைப்பு, இறை என எதை வேண்டுமானாலும் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்….
உதகைக்குச் சென்று திரும்பும்போதெல்லாம் தோன்றுவது ஒன்று உண்டு. ‘இங்கேயே நிரந்தரமாகத் தங்கி இயற்கையில் குளித்துக் கொண்டே இருந்தால் நன்று ‘ என்று; நண்பர் ஒருவர் சொன்னார் ‘எல்லோருக்கும் அங்கே தங்கி இருத்தல் இயலாது ‘ என்று. மனிதன் சமதளத்தின் சொகுசுகளுக்கு அடிமையாகி விட்டவன். குளிரை நேசிக்கும் குணச்சிறப்பு கொண்டவர்களுக்கானது உதகை ; உதகை போன்ற ஊர்கள்.
ஸெல்மா லாகர்லெவ்- வின் “கெஸ்டா பெர்லிங்” உதகையை விட பல பாகைகள் கீழே குளிரெடுக்கும் ஸ்வீடன் நாட்டின் கிராமிய வாழ்வையும் மனிதர்க்கிடையே நிலவும் குளிர்த் தருணங்களையும் பேசுகிறது.
குளிர் தேசத்திற்கென்று சில பழக்கங்களும் சில மனநிலைகளும் உண்டு. புதினம் படிக்கும் போது நமது உள்மன வெப்பமானி கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது .
கிடைக்கும் தரிசனங்கள்
மது போதை தருவது; இசையும் கவிதையும் போதையின் எல்லை.
உழைப்பின்மை வீழ்ச்சி தருவது; அதனுடன் குளிரும் சேர்ந்தால் மாறாச் சோம்பலும் உறுதியான தோல்வியும். மேலும் உட்கார்ந்திருக்கும் உடலில் காளான் வளர்ந்துவிடும்.
சூதாட்டம் நிகழும் இடத்தில் சாத்தன் களி கொள்கிறான்.
முன்னாள் போர் வீரர்களும் சாகசக் காரர்களும் ஏக்பி என்னும் தோட்ட மாளிகையில் ஓய்வுதியம் பெற்றுத் தங்குகிறார்கள். இசையும் மதுவும் ஊறி, கொண்டாட்டமே நாட்களாக கடத்துகிறார்கள். அவர்களை ஆதரிக்கும் ஏக்பி சீமாட்டி ஆற்றலின் வடிவமாக வருகிறாள். கதையின் அனைத்துப் பெண்களுமே ஆற்றல் நிறைந்தவர்கள் (உலகில் பெண் சுதந்திரத்தில் முதலிடம் பெறுவது ஸ்வீடன்)
சும்மா இருத்தலில் சுகம் கண்டு வாழ்ந்ததால், அவர்களிடையே ஒருவனில் சாத்தான் புகுந்து விடுகிறான், சின்ட்ரம் என்ற பெயரில்.
அடைக்கலம் கொடுப்பவளை விரட்டி மாளிகையின் உரிமையைப் பெற்று விடுகிறார்கள் உல்லாச புருஷர்கள். சீமாட்டி துரத்தப்படுவது ஒரு பெரும் நாடகீயக் காட்சியாக , ஒரு குளிரும் கிறிஸ்துமஸ் இரவு விருந்தின் பின் புலத்தில் நிகழ்கிறது. காவிய , புராண நாயகிகள் வீழ்த்தப் பட்ட அதே பழைய காரணம் – அலர்.
இன்றும் ஆட்சிகள் அஞ்சுவது செய்திகளுக்கு அல்ல, வதந்திகளுக்குத் தான் என்பது சமூக மனத்தின் ரகசிய செய்தித் தொடர்பின் வலிமையைக் காட்டுகிறது
‘Revellers’, ‘Bachelors’, ‘ Pensioners’ என்று மூலத்தில் அழைக்கப் படுபவர்களை
க நா சு “உல்லாச புருஷர்கள்” என்று விளிக்கிறார். அழகிய மணிப்பிரவாளம். புதினத்தின் மிக முக்கிய குறிப்புச் சொல் . தற்போது தூய தமிழில் ஒருவர் முயற்சி செய்தால் ஒருவேளை ‘கொண்டாடிகள்’, ‘மகிழ்நர்கள்’, ‘இன்பம் துய்ப்போர்’ என்று பெயர்க்கலாம்.
உல்லாசிகளின் தலைவன் கெஸ்டா பெர்லிங். உலகிலேயே மிகப் பலமானவன் ஆனால் (அதனாலேயே ?) மிகப் பலவீனமானவனும். தொடர்ந்து காதலிக்கிறான். தனது கேளிக்கைச் செயல்களால் பிறரைத் துன்புறுத்துகிறான். தொடர்ந்து தியாகம் செய்கிறான். தனது மன மாற்றத்தால் பிறர்க்காக மானத்தையும் உயிரையும் பிணை வைக்கிறான்.
ஒவ்வொரு உல்லாசிக்கும் பின்னால் ஒரு கதை உண்டு.
வில்லியக்ரோனாவின் கதை தனித்து நிற்கிறது. தனது அழகிய வீட்டையும் மனைவி, குழந்தைகளையும் நினைத்துக் கொண்டு ஏக்பி மாளிகையை விட்டுக் கிளம்புகிறான். இசை மீட்டிக் கொண்டே வருகிறான். வீட்டைச் சுற்றிலுமுள்ள அழகிய மரங்களையும் பாத்திகளையும் (குழந்தைகள் வெட்டிய கோணலான அழகிய பாத்திகளை அடையாளம் கண்டு கொள்கிறான்) பார்க்கிறான். இசை கேட்டு சிரித்துக் கொண்டே எழும் மனைவி தனித்துயர்ந்து நிற்கிறாள். கணவனை வரவேற்கிறாள்.
சில நாட்கள் மகிழ்ந்துவிட்டு அமைதியான ஆனந்தம் சலித்துவிடுவதால் மீண்டும் ஏக்பி மாளிகைக்குப் போய்விடுகிறான் அவன் மனைவி மீண்டும் தன் அழகிய வீட்டையும் குழந்தைகளையும் பேணத்துவங்கி விடுகிறாள்.
கதை வளர்கையில் , கற்பனாவாதம் இலட்சியவாதமாக பரிமாணம் அடைந்து வருகிறது. முடிவு ஒரு தேவதைக் கதை போல உள்ளது. ஏக்பி சீமாட்டி மாளிகை திரும்புகிறாள், நோயுடன் மரணத்தையும் எதிர்நோக்கி.
உல்லாசிகள் உழைக்கத் துவங்கி விட்டிருக்கிறார்கள். மாளிகையை விட்டுக் கிளம்பவும் தயாராகி விட்டார்கள். சம்மட்டியின் ஓசை கேட்டு சீமாட்டியின் உயிர் பிரிகிறது. ஆண்டவருக்கும் சாத்தானுக்கும் இடையே மனித மனத்தில் நடக்கும் ஓயாத மற்றுமொரு போர் நிறைவுக்கு வருகிறது
எந்தத் தத்துவமும் கரைத்துவிட முடியாத தூய இயற்கையின் விரிவுக்காக, பனி நிலப் பரப்புக்காக, மதகுரு மறக்கமுடியாமல் நிற்கிறது.
பனி, நாவலில் ஒரு தொடர் படிம்ம் எனத் தோன்றுகிறது
நீரை உள்ளே வைத்து வெளியே உறுதியாக நிற்றல், எதிர்பாராத தருணங்களில் உடைந்து, நடப்போரை விழ வைத்தல், நெடுங்காலம் காத்திருந்து கதிரின் ஒரு முதல் தொடுகையின் உடைவுக்காக தவமிருத்தல், உருகாமலேயே நேரடியாக ஆவியாகிப் போதல், அனைத்தையும் ஊடுருவி உறங்க வைத்தல் – என மனித மனத்தின் தன்மைகளுக்கு பனியின் காட்சி ஒத்து வருகிறது
ஆண்டு முழுவதும் உறங்கி முதற்கதிரில் எழும் கரடி, வில்லோப் புதர்கள், ஆஷ், செர்ரி , பர்ச், எலுமிச்சை மரங்கள், லிங்க்ஸ் புலி, ஆந்தை மற்றும், காடுகளில் இருட்டில் பூத்திருக்கும் பீதி என்ற சூனியக்காரி – இவர்களைக் காட்சிப் படுத்தியுள்ள அழகு, நம்மை வெள்ளிப் பனிமலையில் உட்காரவைத்து விடுகிறது
கனவு காணும் வயதான (முன்னாள் போர்க்) குதிரைகள், அவற்றின் வண்டிகள், வழுக்கும் ஈல் மீன்கள் , பனிக்கட்டி உடைய வரும் வசந்தம் மூலம் ஒரு திரைப்படத்தைக் காண்கிறோம். ஒவ்வொரு வாசகனுக்குமான தனியான ஒளி – வண்ணக் கலவைகளில்
மனத்தின் அழகுவேறுபாடுகளை தோல்வியில் கம்பீரம், சாத்தானின் சூதை வெல்லும் தியாகம், தொடர்ந்து மன்னித்தல் வழியே வழியவிட்டுள்ளார்.
கஞ்சன் என்ற பெயர் வாங்கி எல்லோராலும் வெறுக்கப் படும் போர்பி மதகுருவுக்கு கெஸ்டா பெர்லிங் வழிகாட்டுகிறான். பஞ்சம் தீர பிரார்த்தித்து கடவுளின் ஏற்பினால் மழை வந்துவிடவே, அந்த மகிழ்ச்சியாலேயே இறந்து விடுகிறான் போர்பி மதகுரு (கெஸ்டாவும் மதகுருதான்; குடிப் பழக்கத்தால் அடித்து விரட்டப் பட்ட மதகுரு)
லோவன் போர்க் என்னும் உல்லாசி மனதிற்குள் பாடிக்கொண்டே பீதோவன் இசையை காற்றில் கைகளால் போலிப் பியானோவில் இசைக்கிறான். அது கெஸ்டாவை துயரிலிருந்து மீட்கிறது. இசை என்பது ஒலியில்லாத போது வலிமை வாய்ந்ததாக உள்ளது இசை கருவிகளிலும் குரலிலும் இல்லை, காற்றிலும் உள்ளத்திலும் இருப்பது
தவறு செய்பவர்கள், துரத்தப் பட்டவர்கள் தரப்பு நியாயத்தைப் பேசுவதால் புதினம் சமநிலை கொள்கிறது
கனவான் ஜூலியஸ் பதினேழு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஏக்பியை விட்டுக் கிளம்புகிறான், தன் கிழத் தாயைப் பார்ப்பதற்கு . வழியில் இசையும் பூக்களும் கொண்டாடும் பெண்களை சந்திக்கிறான். அவர்களுடன் பூப்பந்து விளையாடி, மாலைகள் சூடிக்கொண்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு மாளிகைக்கு வந்து விடுகிறான். அவனை வழியனுப்ப பிற உல்லாசிகள் செய்யும் ஏற்பாடுகள் ஒரு நகைச்சுவை நாடகம்.
உலகமும் குடும்பமும் தன் மீது சுமத்தும் கடமைகளை எதிர்த்துப் போராடும் குழந்தைகள் ‘சமூகமயம்’ ஆக்கப் படாமலேயே வளர்ந்து விட்டால் அவர்கள் இந்த உல்லாசிகளைப் போல ஆவார்கள் என்று தோன்றுகிறது. நம்முன் ஒரு குழந்தை தெரிகிறது. வாசற்படியில் அமர்ந்து கால்களுக்கிடையில் முகத்தைப் பொத்தி வைத்துள்ளது. கையில் திணிக்கப் பட்ட பற்பசை பிரஷ். முந்திய இரவு கேட்ட கதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கனவை எரித்து விடும் உலகியல் கடமைகள் – பள்ளி, புத்தகம், குளித்தல் என குழந்தையின் கூம்புதல் ஒவ்வொரு நாளாக அதை மெலியச் செய்கின்றன. அப்படி மெலிந்த பல கோடிக் குழந்தைகளின் மொத்தக் கனவாக விரியுமிடம் கனவான் ஜூலியசின் கதை. வில்லியக்ரோனாவையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். அவன் தன் குழந்தைகளையும் விட்டுக் கிளம்பிவிடுவது அவர்கள் மீது அன்பில்லாததால் அல்ல – அவனும் ஒரு குழந்தை அவ்வளவுதான்
கடவுளின் பிரயாணி லென்னர்ட் , தான் செய்யாத தவறுக்கு தண்டனை பெறுகிறான். நண்பர்களான உல்லாசிகளின் விளையாட்டால் மனைவியால் அடையாளம் காணப்படாமல் வீட்டை விட்டுத் துரத்தப் படுகிறான். ஆனால் அந்த நிகழ்வை தெய்வ அழைப்பாக ஏற்று அன்பு, அமைதியின் தூதனாக ஆகிறான். நடமாடும் ஆண்டிகள் – பக்கிரிகளின் வாழ்வே அழகு; ஒரு சந்தையில் முரடனிடமிருந்து அப்பாவிகளைக் காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்கிறான்
மாமா பெர்னார்டு இறை மறுப்புப் புத்தகம் எழுதியவன். அதன் கருத்துக்கள் தன் மகள் போன்ற பெண்ணுக்கு துன்பம் தரும் என்று தெரிந்தவுடன் அதை வெளியிடாமல் பூட்டி வைத்து விடுகிறான். அறிவை அன்பு வெல்லும் இடம். உலகின் மொத்த சராசரி அறிவு குழந்தைப் பருவத்தைத் தாண்டும் போது தான் அடுத்த கட்ட , இரக்கமற்ற உண்மைக்குத் தயாராகும் போல
கெவன் ஹெல்லரின் கதை, மக்களுக்கு உதவாத அறிவு பயனற்றது என்கிறது; மேதை புதியதை பரிசோதனை செய்து கொண்டே இருக்கவேண்டியவன் என்கிறது. அவன் ஏக்பி மாளிகையைத் தீமூட்டி விடுகிறான் . ஒரு லங்கா தகன நிகழ்வு – ஏக்பி மாளிகை தமோகுணத்தின் குறியீடாக உள்ளது.
அத்தான் கிறிஸ்டோபர் பெரும் வீரன் . பல காலமாக மாளிகையின் கணப்பருகே அடைக்கலம் புகுந்து சும்மா இருப்பவன். அவனுக்குத் திடீரென காதல் முளைக்கிறது. தன் பழைய அங்கீகாரக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஆவலுடன் வெளியேறுகிறான். சிறிது நேரத்தில் திரும்பி வந்து கடிதத்தை எரியும் ஈஸ்டர் சூனியக்காரி கொடும்பாவியில் வீசி விடுகிறான் மீண்டும் கணப்பின் அருகில் சும்மா உட்கார்ந்து விடுகிறான். துன்பியலும் நகையும் கலந்த தருணங்கள்.
பெண்ணை வைத்துச் சூதாடுவது, தீமையைக் கொளுத்தி போகி/ சொக்கப் பனை கொண்டாடுவது, மது ஊற்றி இசையைக் கிளப்புவது இவை மானுடம் முழுமைக்கும் பயின்றுவரும் சமூக – வாழ்வியல் பழக்கங்கள் – ஆதி முன்னோர்களின் ‘நாகரிகப் படுத்தப் பட்ட’ மிச்சங்கள்
சாத்தான் – கடவுள் இருமையை இந்தியத் தத்துவம் , வெகுகாலம் முன்னே ஒருங்கிணைத்து , சமன்வயப் படுத்தி, விளங்கிக் கொண்டு விட்டது.
போக நாட்டம் துயர்தருவது – அதுவே சாத்தானை விலக்கி வைக்கிறது ; சாத்தானுடைய வில்லிலும் கோடிக்கணக்கான நாண்கள்; எனவே இருமைகளை அறிந்து கடக்கும் வழியை – பொன்மயமான நடுவழியை கண்டடைந்தது.
இரண்டின்மைத் தத்துவம் இங்கே சமரசத்தை ஏற்படுத்த முயன்றது. . நஞ்சு உண்ட பேரழகன் இங்கே நிலை கொண்டு விட்டான். வறுமையும் வளமையும் , துய்த்தலும் துறத்தலும் ஒரே நிறையில் நிகழ்ந்து விட்டன. குறிஞ்சித்திணையும் காஞ்சித்திணையும் ஒருங்கே பாடப் பெற்றன.
‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண் தொடி கண்ணே உள “ என்ற காமத்துப்பால் குறளும் (1101)
“அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு” என்ற துறவறவியல் குறளும் (343) ஒரே நூலில் உள்ளன
உள்ளுக்குள்ளே ஊறும் மது ஒன்று உண்டு. அது குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்குக் கிடைப்பது. புற இயற்கையின் வண்ண வேறுபாடுகளும் அகத்தின் காரணமற்ற ஆனந்த ஊற்றும் ஒன்று என்று காண்பவர்களுக்குரியது.
“கற்பனையூரென்ற நகருண்டாம் ; அங்கே
கந்தர்வர் விளையாடுவராம்” என்ற பாரதியின் ஊரில் அந்த மது வழிந்தோடுகிறது.
“மது “ என்ற பாரதியின் மற்றொரு தனிப்பாடலில் யோகியும் போகியும் சொற்போர் புரிகிறார்கள் – பிரவிருத்தி நிவ்ருத்தி மார்க்கங்களுக்கிடையே; சமன்வயும் செய்கிறான் ஞானி . “மதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு விண்ணெலாம்” என்று முடித்து வைக்கிறான்.
‘மதுவாதா ருதாயதே’ என்று தொடங்கும் ரிக்வேத கீதம் தென்றலும், கடலும் மழையும் கால்நடைகளும் புவியின் தூய புழுதியும் வயலின் கதிர்களும், காலையும் இரவும் விண்ணும் இனியதாகட்டும்; வானத்திலிருக்கும் எம் தந்தையர் எமக்கு இனியவராகட்டும்” என்று பிரார்த்திக்கிறது. இது நீத்தோருக்கான நினைவேந்தல் நிகழ்வாக வருகிறது. மரணித்தோரிடம் அன்புடன் மகிழ்ச்சியைக் கையேந்தும் நிலை குற்ற உணர்வற்ற குழந்தைகளுக்கானது. மதகுரு காட்டும் மாந்தர் அந்தக் குழந்தைச் சமுதாயத்தை நினைவூட்டுகிறார்கள். ஏனென்றால், தூய இயற்கையின் அழகு, குற்ற உணர்வுகள் அற்றது.
நன்மை-தீமை, உண்மை-பொய், இருள்-ஒளி என அனைத்தையும் இருவேறு துருவங்களாக வகைப்படுத்தி புரிந்துகொள்வது வெகு சுலபம். ஆனால், மனிதர்களை முழு முற்றாக நல்லவன் என்றோ, ஆதியோடந்தம் தீயவன் என்றோ வகைப்படுத்துவது சரியானதல்ல. இருளுக்கு முழுவதும் பழகிப்போன விழிகள், அதனுள் ஒளிந்திருக்கும் வெளிச்சத்தை, அது எவ்வளவு சிறியதேயானாலும் கண்டடைந்தே தீரும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஒரு கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில் துவங்கி, அடுத்த வருட கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவுக்கு இடைப்பட்ட ஒரு வருடத்தில், ஒரு நிலப்பரப்பு, அதன் மக்களில் சிலரின் மாற்றங்களை விவரிக்கும் ஸ்காண்டினேவிய நாவல் மதகுரு (தமிழில்:க.நா.சு). வார்ம்லாந்தில் உள்ள ஏக்பி பண்ணை, அதன் உரிமையாளரான மேஜர், அவரது மனைவி, அதன் உல்லாச புருஷர்கள், அவர்களுடன் சம்பந்தப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் இவர்களின் ஒரு வருட வாழ்கையையும் அதனூடே முன்னாள் மதகுருவான கெஸ்டா பெர்லிங்கின் மனமாற்றத்தையும் பேசுகிறது ”மதகுரு”.
*
தீம்புனல் நாவல் வெளியீட்டு விழாவில் ஆசான். திரு.ஜெயமோகன் அவர்களுடைய உரையைக் கேட்டேன். அந்நாவலில், பழமைவாதம் vs நவீன மனதுக்கு இடைப்பட்ட போட்டியாகத் துலங்கி வரக்கூடிய ஒரு சித்திரமாக நாய்கள் vs ஓநாய்க்கு இடைப்பட்ட ஒரு சண்டையைப் பற்றி பேசியிருப்பார். அந்தச் சண்டையில், நவீன நாய்களிடம், பழமை மிளிரும் ஓநாய் தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்றுப்போகிறது. மதகுரு நாவலிலும் என்னால் அப்படி ஒரு ஒப்புமையைக் கண்டறிய முடிந்தது. கெஸ்டா பெர்லிங், பெர்டிணாண்டின் காதலியான அன்னாவை அவன் பொருட்டு கவர்ந்து வருகையில், வரும் வழியிலேயே அன்னாவுக்கும், கெஸ்டாவுக்கும் காதல் மலர்கிறது. அவர்கள் இருவரும் பெர்டிணாண்டை மறந்து ஏக்பிக்கு செல்வதை ஒரு ஓநாய்க்கூட்டம்தான் தடுக்கிறது. முடிவில் “இதுதான் கடவுளின் விருப்பம் போலும்” என்ற சமாதானத்துடன் அக்காதல் கைவிடப்படுகிறது. அப்பயணத்தில் அவர்களுடன் (துணையாக?) ”பின்கிரட்” என்ற வேட்டை நாயும் இருக்கிறது. இதையே, இன்னுமொரு கோணத்தில், பழங்காலத்துக் கதையான மதகுருவில் ஜெயித்துவிட்ட ஓநாய்கள், தற்காலத்தில் நவீனத்திடம் தோற்று ஓடுகின்றன என்பதாகப் புரிந்துகொள்கிறேன்.
இந்நாவல் முழுவதிலும், எப்பா, அன்னா, மரியாள், எலிஸபெத் (சின்னச் சீமாட்டி) என பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றிலும் தனித்துத் தெரியக்கூடிய ஒரு கதாப்பாத்திரம் “ஏக்பி சீமாட்டியாக” வரும் மார்கரீடா. அல்டிரிங்கருடான காதல், கால சூல்நிலையால், ஏக்பி உரிமையாளரை மணந்துகொள்ள நேர்தல், அதன் பின்னும் தொடரும் அல்டிரிங்கருடனான உறவு, உல்லாஸ புருஷர்களுடனான களிப்பு, கிறிஸ்துமஸ் விருந்தில் அந்த உறவு (கிறிஸ்டியன் பெர்க்கால்) வெளிப்படும் சந்தர்ப்பம் என பல இடங்களில் மார்கரீடாவின் கதாப்பாத்திரம் நம்மை வசீகரிக்கிறது. குறிப்பாக, தன்னுடனான உறவின் பொருட்டு, அவளுக்கென அல்டிரிங்கரால் வழங்கப்பட்ட சொத்துக்களை விட்டு மார்கரீடா வெளியேற நேர்கையிலும் “தன் சுயம்” பாதிக்கவிடாமலே அவள் வெளியேற்றம் நிகழ்கிறது. அவளால் ஏக்பியின் உல்லாச புருஷர்களாக தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவருமே அவரவர் துறைகளில் உச்சம் தொட்டவர்கள் என்பதும் மார்கரீடாவின் ஆளுமைக்கான சான்றாக அமைகிறது.
*
நாவலில் பொது மக்களின் “திரள்” மனப்பான்மையை மிகச்சரியாக காட்சிப்படுத்திய சில இடங்கள் உள்ளன. குறிப்பாகப் பிராத்தனைகள். கதையின் துவக்க அத்தியாயத்தில், கடவுளை நோக்கி கெஸ்டா பெரிலிங்கால் செய்யப்படும் ஒரே உண்மையான பிராத்தனை அவன் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் மக்கள் மன்னிப்பதற்குக் காரணமாக அமைகிறது. அதைப்போலவே வாழ்நாளெல்லாம், பேர் பெற்ற கருமியாக வாழ்ந்து வெறுப்புக்கு உள்ளான ப்ரோபி மதகுரு, தன் மனம் வருந்தி செய்யும் பிராத்தனையும், அதன் விளைவாகப் பெய்யும் மழையும், அவன் மீதான, மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் கரையச் செய்கின்றன. றீகார்டு குடியானவப் பெண்ணுக்கு நியாயம் வேண்டி ஏக்பி மாளிகையை அழிக்கும் ஆவேசத்துடன் வரும் மக்கள் கூட்டத்தின் கோபம், மாளிகையில் நடக்கும் விருந்தால் நீர்த்துப்போவதும்; பின்னர், ஒரு சின்ன உரசலிலேயே கோபம் மீண்டும் மூள்வதும் மக்களின் ”திரள்” மனப்பான்மையை சரியாகக் காட்சிப்படுத்திய தருணங்கள்.
மாமா பெல்ஹார்டுக்கும், சின்னச் சீமாட்டிக்குமான உரையாடல், இந்நாவலின் முக்கியமான உரையாடல்களுல் ஒன்று. கடவுள் நம்பிக்கைக்குப் பதில் தான் கண்டறிந்த உண்மையாக, பல்லாயிரம் பக்களில் நிறுவப்பட்ட உண்மையாக பெல்ஹார்டு முன்வைப்பது உழைப்பை. ஆனால், சின்னச் சீமாட்டிக்கோ அதை ”அன்பு / காதல்” என்பதன்றி பிற எதையும் நம்புவதில் தயக்கம் உள்ளது. அவளது வார்த்தைகளிலேயே சொல்வதானால் “ நீ நம்புகிறமாதிரி நம்பினால் எனக்கு வாழ்வே சாத்தியமில்லாது போய்விடும்”. முடிவில் தன்னுடைய அற்புத நூலை, அதன் மூலம்தான் கண்டறிந்த உண்மையை பூட்டி வைத்து புகழைத் துறக்கிறான் “மாமா பெல்ஹார்டு”. அவனது இந்த மனமாற்றத்துக்கு முக்கியமான காரணம், தன் பெண் போல நேசித்த சின்னச் சீமாட்டி அதனால் துன்பப்படக் கூடாது என்பதே. அவ்வகையில் காதலே (அன்பே) முடிவில் வெல்லும் என்பதற்கு தானே ஒரு உதாரணமாக நிற்கிறான் ”மாமா பெல்ஹார்டு”.
*
இந்நாவலின் முக்கியமான அம்சம், இதில் தொடர்ந்து வரக்கூடிய ”நாட்டாரியல்” கூறுகள். கருமி ப்ரோபி மதகுருவின் பிராத்தனைக்குப் பின் மழை வருதல், பெருகிவரும் வெள்ளத்தினூடே மக்கள் திரளை ஒன்றிணைத்து பழுதான பாலத்தை சரி செய்யும் முயற்சி, மரணித்துப்போன ஜோஹனின் கல்ல்றையுடன் அவன் நண்பர்கள் ஆடும் சீட்டாட்டம், அதில் ஒவ்வொரு முறையும் ஜோஹனே வெல்லுதல், சாத்தான் ஸிண்ட்ரோமின் விவரிப்புகள், சொல்லிவைத்தாற் போல் உல்லாசத்திலிருந்து உழைப்பை நோக்கித் திரும்பும் மக்கள் – உள்ளிட்ட சம்பவங்கள் என கதை நெடுகிலும் இந்த “நாட்டார்”கதைத் தன்மை வருகிறது. ஆனால், இந்த அம்சம், கதை என்பது கூறுமுறையின் வெற்றிதான்.
*
பெர்டினாண்டின் மரணச்சடங்குகளில் அவன் மீதான தன் காதலை அன்னா வெளிக்காட்டி, அதன் மூலம் பெர்டினாண்டின் அன்னைக்கு மீட்பளிப்பது, மனைவி குஸ்தாவாவை கொடுமைப்படுத்தும் மெல்கியாரில் ஏற்படும் மனமாற்றம், தன்னை நேசித்த பெண்கள் மீதெல்லாம் பெருங்காதல் கொண்ட கெஸ்டா, எலிஸபெத்தை அவள் குழந்தையின் பொருட்டு திருமணம் செய்து கொள்வது, ஏக்பியின் ஆலைகள், அதன் வளம் உல்லாஸ புருஷர்களால் நாசமடைவது, பின்னர் அவர்களின் மனமாற்றத்தால் ஏக்பி மீள்கட்டமைப்பு செய்யப்படுவது என நாவல் நெடுகிலும் மனித மனதின் சாத்தியமான சாத்தான் அம்சங்களும், அதற்கிணையாகவே, அதை ஈடுசெய்யும் வண்ணம் அவர்களில் தேவதை எழும் தருணங்களும் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. நம்முடைய நல்லவன் – கெட்டவன் வகைப்படுத்தலை இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. அதைப்போலவே ஒருவனுக்கு நல்லவனாகத் தோன்றும் மனிதன் எல்லோருக்கும் அப்படித் தோன்ற வேண்டிய அவசியம் இல்லைதானே. ஊரே வெறுக்கும் கருமியான ப்ரோபி ”மதகுரு” வுக்குள் இருந்து பெருங்காதலன் எழுந்துவரும் தருணம் அத்தகையது.
*
இது வெறுமனே ஏக்பியின் கதை மட்டுமல்ல. கெஸ்டா பெர்லிங்கோ, உல்லாஸ புருஷர்களோ ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையோ காலகட்டத்தையோ சார்ந்தவர்கள் மட்டுமல்ல என்பதை உறுதியாகக் கூறமுடியும். அவ்வெண்ணமே, இந்நாவலை மிகவும் முக்கியமான ஒன்றாக்குகிறது.
*
ஆடும் ஊஞ்சல், எவ்வளவு தூரம் பின்புறமாக பயணிக்கிறதோ, அதே அளவு தூரத்தை முன் நோக்கியும் பயணித்தே ஆகவேண்டிய கட்டாயம் கொண்டது. ஊசலாட்டங்களுக்குப் பெயர் போன மனித மனமும் அவ்வியல்பினதே. நன்மை தீமை என்ற இரு எல்லைகளுக்கு மத்தியிலான பயணமாய் அமைகிறது பெரும்பாலானோர் வாழ்க்கை.
இந்தியர்கள் வரலாற்று உணர்வுகுறைந்தவர்கள். பழங்காலம் என்ற ஒன்று உண்டு என்ற எண்ணம் பெரிதாக இல்லாமலேயே பலநூற்றாண்டுகள் கழித்து விடடவர்கள். வரலாற்றின் பதிவுகள் மிகவும் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அதனாலேயே கிடைக்கும் பதிவுகள் அரியவை ஆகின்றன
ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு நமது எல்லாச் சுவடிகளையும்போல தலைமுறைகளால் உதாசீனப் படுத்தப் பட்டு, புதுச்சேரியின் மேயராகவும் கிழக்கத்திய மொழிகளின் நிபுணராகவும் இருந்த ஒரு பிரெஞ்சு அதிகாரியின் முயற்சியால் கண்டெடுக்கப் பட்டது .
பிரபஞ்சன் அவர்கள் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து அழகிய மெய் – புனைவை அமைத்திருக்கிறார். முன்னுரையில் சொல்வது போல இது அரசர்கள் அதிகாரிகளின் கோணத்தில் வரலாற்றை எழுதுவதை மாற்றி சாமானியர்கள், ஏழைகள், தொண்டுசெய்யும் அடிமைகளின் வாழ்க்கையை வரலாற்றாகப் புனைந்துள்ளது.
புதுச்சேரியின் பிரெஞ்ச் கவர்னர் துமாயின் பல நிறபேதங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக மக்களுக்கு அதிக துன்பத்தைத் தராதவர். பிற அதிகாரிகள் போலவே தன் நாட்டுக்காக வணிகத்தை கவனித்துக் கொள்பவர். கூடவே தனக்கென ஒரு தனியான வியாபாரத்தையும் செய்து கொள்பவர் (இன்றும் பல அரசு/ தனியார் அதிகாரிகள் வேறு பெயரில் வர்த்தகம் செய்வதற்கு முன்னோடி?) அரசியல் காரணங்களுக்காக நண்பராக ஆகிவிட்ட சந்தா சாகிப்பின் மனைவி அத்தர் பேகத்திற்கு அடைக்கலம் தருகிறார். மராத்தியர்கள் அவளது செல்வத்திற்காக மிரட்டும் போதும் அடைக்கலம் வந்தவரைக்காப்பதற்கு உயிரையும் விடுவான் பிரெஞ்சி என்று சொல்லும் இடத்தில் மானுடம் வெல்லும் என்னும் நம்பிக்கை பிறக்கிறது
ஆர்காட்டு தளபதி கர்னாடகப் போர்களில் முக்கியப் புள்ளி. சந்தாசாகிப் தான் திருச்சியை ஆண்டு வந்த மதுரை அரசி ராணி மீனாட்சியை ஏமாற்றி அவள் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறான். தன் கணவர் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்குப்பின் ஆள்பவள் மீனாட்சி. அவள் பாட்டிதான் ராணி மங்கம்மாளின். ராணி மீனாட்சியின் மரணம் புனைவில் தொடர்ந்து துயரத்தை எழுப்பியபடியே நம்மைத் தொடர்கிறது. அடுத்த முறை மதுரை மீனாட்சியை தரிசிக்கும் போது பக்தியுடன் பெரும் துயரும் எழும். (அந்த மீனாட்சி வேறு, இவள் வேறு என்று சொல்பவர்கள் மூதன்னையின், பாட்டியின் அணுக்கத்தை உணராதவர்கள்)
ஆனந்தரங்கம் பிள்ளை எல்லா மானுடரையும் போல கலவை ஆளுமை ஆனால் புத்திசாலி. மராத்தா வீரர்களால் துரத்தப்பட்டு புதுச்சேரியில் அடைக்கலமாயினர் சுற்றியுள்ள ஊர்மக்கள்.
அவர்களில் ஒரு குடும்பம் பிள்ளையின் வீட்டெதிரே மரத்தடியில் தஞ்சம் அடைந்தது. பிள்ளை அவர்களுக்கு அன்புடன் உதவிசெய்கிறார். ஆனால் தனக்கு கிடைக்க வேண்டிய துபாஷ் பதவியை அடைந்துவிட்ட கனகராய முதலி (கிறித்துவராக மாறி பதவியைப் பிடித்தவர்) மீது கடும் வெறுப்பும் கொள்கிறார். அவரது மரணப் படுக்கை பிள்ளைக்கு ஆனந்தம் தருகிறது
பெண்கள் நிலையும் ஒடுக்கப் பட்ட ஏழைகள் நிலையும் வரலாற்றில் நம்மைத் தலைகுனியச் செய்பவை. அவை நீங்காமல் நினைவில் இருப்பது மானுடம் வெல்வதற்கு அவசியம். ஒருவேளை கீழ்மையான விலங்கு நிலை வாழ்வைப் பதிவு செய்யவேண்டா என்று தான் இந்தியர்கள் எவரும் பதியவில்லையோ?
நமது வரலாறு நேர்கோடாக இருக்கவில்லை. மராத்திய வீர்ர்களில் பலர் இசுலாமியர்கள். மதமும் சாதியும் இரண்டு சக்திகளாக ஊடாடியும் முரண்பட்டும் வாழ்வின் வெவ்வேறு முடிவுகளை எடுத்திருக்கின்றன. அரசுத் தெருவில் பல்லக்கில் வந்துவிட்டார் என்பதற்காக இடங்கை- வலங்கை எனப் பிரிந்து சாதிகளால் பிணக்கு கொண்டு கவர்னர் வரை செல்கிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே மதத்திற்கு பிரச்னை வரும்போது ஒன்று சேர்ந்து நிற்கின்றனர். இதை பிரெஞ்ச் கவர்னரால் புரிந்துகொள்ள முடியவில்லை
பண்ணை அடிமைகள் விற்கப்படுவதும் கூடவே அவர்களை அடிப்பதற்கான சாட்டையும் தரப்படுவதும் வெறும் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நம் சமூக வாழ்க்கையின் அறவீழ்ச்சியைக் காட்டுகிறது.
மோகனாம்பாள் என்னும் தஞ்சை மராத்திய தளபதியின் மனைவி பிரெஞ்சு மதுவிற்கு அடிமை ஆகிறாள். அவள் தன் கணவனைத்தூண்டி மேலும் மது கேட்டு தூது அனுப்பச் செய்கிறாள். போரைத் தவிர்க்கும் உத்தியாக இந்த விண்ணப்பம் உதவும் என்கிறாள். தளபதி அவமானம் பிடுங்க பண்டிதரை தூது அனுப்புகிறான். உண்மையிலேயே மோகனா போரைத் தடுக்க மதுவைப் பயன்படுத்தினாளா அல்லது மதுகிடைக்கவேண்டி அரசியல் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தினாளா என்பதில் வாசகர் சுதந்திரம் உள்ளது.
வடநூலும் தமிழும் பயிலும் பிராமணர்கள் அமைச்சர் பதவிக்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். குருவின் வீட்டில் ராம சப்தம் பயிலும் மாணவனுக்கு குருவின் மகளை சகோதரியாக ஆக்குகிறார் குரு (சமஸ்கிருத்த்தில் ஏழு வேற்றுமைகள் – மூன்று எண்ணிக்கைகளில் – ஒருமை, இருமை பன்மை பெயர்ச்சொற்களின் பட்டியலின் முதல் சொல்). வீட்டில் தங்கிப் படிக்கையில் கல்விமட்டுமே கவனத்தில் இருக்க ஒரு சமூகவிதி பரிணாமம் அடைந்து வந்திருக்கிறது போலும்.
கழிவறை எப்போதும் பிரச்னையாகவே இருந்திருக்கிறது. இன்றும் திறந்தவெளிக் கழிவறைகள் இல்லாத மாவட்டங்களாக பெருமையுடன் அறிவித்துக் கொண்டிருக்கிறோம். கடற்கரையில் அசுத்தம் செய்யக்கூடாது என்று கவர்னர் அறிவிக்கிறார். ஆடிப் போய் விடுகிறார்கள் பொதுமக்கள். வீட்டில் கழிவறை கட்டிக் கொள்வது பிராமணர்களுக்கு பெரும் ஆசார வீழ்ச்சியாகத் தெரிகிறது. கூட்டம் கொந்தளிக்கிறது. எங்கே புரட்சி செய்துவிடுவார்களோ என்ற நிலை வரும்போது ஆதார விதியாகிய உயிர் மற்றும் உணவு பயம் வருகிறது. வீட்டிலெயே குழி எடுத்து குச்சிகளைப் போட்டு கழிவறை தயாரித்து விடுகிறார்கள். மொத்த வீடே ஒரு அறை என்றிருக்கும் ஏழைகளின் நிலை மிகவும் பரிதாபம் ஆகி விடுகிறது
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அமுதமொழிகள் மூன்று தொகுதிகளாக தமிழில் வந்துள்ளன. மகேந்திர நாத் குப்தர் வங்கத்தில் எழுதியது மூலம். அவர் தனது நாட்குறிப்பில் குருதேவர் உரையாடியதை பல ஆண்டுகளாக எழுதி வைத்தது. ஆன்மிகத்தை இலக்கியமாக ஆக்குவது. ஓர் இடத்தில் குருதேவர் கழிவு மூலம் பொதுமக்கள் குளத்தை அசுத்தம் செய்வதைப் பற்றிச் சொல்கிறார். யார் சொல்லியும் கேட்காத பொதுமக்கள் கம்பெனி (பிரிட்டிஷ் கிழக்கிந்திய) உத்தரவுப் பலகை வைத்ததும் அடங்கி விடுகின்றனர்) .
கூட்டு வர்த்தகக் கம்பெனிகள் அரசாங்கத்தை அமைத்தபோது பல புதிய விழுமியங்கள் உள்ளே நுழைந்திருக்கின்றன. அரசர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு அதிகாரக் கோணம் இவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. அது வெடிமருந்தாக இருக்கக் கூடுமா? அல்லது ஜனநாயகம் பரிணமித்து வந்த பாதை அதுவா? ஒருவேளை இந்த முன்னூறாண்டு ஐரோப்பிய ஆட்சி நம்மைத் தயார்செய்யவும் இந்தியா திரண்டு வரவும் இயற்கை ஆடிய கொடிய விளையாட்டா?
எல்லா அடிமைத்தனங்களுக்கிடையிலும் துமாயும், பிள்ளையும் , வீர வன்னியன் காளியும், ‘ பூமி இருக்கு சாமி ; உசுரு போறவரைக்கும் கொத்திட்டு இருக்கவேண்டும்’ என்று சூளுரைக்கும் மண்ணோடு வாழும் எளிய விவசாயியும், தனது கலையும் அறிவும் அரசனின் மங்களவிலாசத்தில் அழிந்து கொண்டிருக்கும்போதும் நம்பிக்கையை விடாமல் பிடித்திருக்கும் கோகிலா போன்ற தேவதாசிகளும் , அடிமையாக விற்கப்பட்டும் விலங்கைவிட இழிவாக நடத்தப்பட்டபோதும் தலைமுறைத் தொடர்ச்சிகளுக்கு மானுடத்தை வெறுக்காமல் அறத்தினைக் கடத்தும் ஒடுக்கப்பட்ட புனிதர்களும் வாசித்து முடிக்கையில் உரக்க ஒலிக்கிறார்கள் – மானுடம் வெல்லும்.
ஏதாயினும் மானுடம் வெல்லும் கம்பனின் உச்சக் கனவாகிய ‘மானுடம் வென்றதம்மா’ என்ற அறைகூவலில் இருந்து கீழே இறங்கி யதார்த்த நிலையை சொல்கிறது. ஆனால் அதில் வெல்லும் என்னும் நம்பிக்கையும் அதற்கான குறிப்புகளும் உள்ளன.
பெரும்பாலான முதலாளித்துவ நாடுகள், தங்கள் காலனி நாடுகளில் நிகழ்த்திய ஆட்சி என்பது கிட்டத்தட்ட ஒரு Outsourcing போன்றதுதான். தங்களுடைய காலனி நாட்டு மக்களின் மூடப்பழக்கங்கள் போன்றவற்றையோ, சாதி, இன, மத பேதங்களையோ, நியாயமற்ற போக்குகளையோ பெரும்பாலும் “காணாத” கண்களையே கொண்டிருந்தனர். தங்கள் நோக்கம் வியாபாரமோ, சுரண்டலோ, எப்பெயர் கொண்டு அழைப்பினும் பணம் சேர்ப்பது மட்டுமே.
ஆனால், குவர்னர் துய்மா, தனக்கு முந்தய ஆட்சியாளர்களிடமிருந்து இவ்விசயங்களில் கொஞ்சம் மாறுபட்டுத் தெரிகிறார். கோகிலாம்பாளிடம் தகாது நடக்க முயலும் ஒரு ஸோல்ஜருக்குத் தண்டனை தருவதிலும், வலங்கை இடங்கை சாதிப் பிரிவினரிடையே நிகழும் ராஜ வீதி நுழைவு சம்பந்தமான பிரச்சனையில் அனைவரும் அத்தெருவைப் பயன்படுத்த ஆணை பிறப்பிப்பதிலும் ஒரு குறைந்தபட்ச நீதியை அவர் உறுதிசெய்கிறார். ஆனால், வருமானம் வருவதற்கான வழிமுறைகள் ஏதேனும் இருப்பின் அதன்பொருட்டு எந்த எல்லைக்கும் செல்வதற்கும் அவர் தயங்குவதில்லை. குறிப்பாக போர்க்காலத்தில் விதிக்கப்படும் புதிய / அதிக வரிகளை சொல்லாம். இக்குணமே துய்மாவை ஒரு முழு மனிதாபிமானியாக எண்ணுவதற்குத் தடையாக அமைகிறது.
நாவலின் பிற பாத்திரப்படைப்புகளில் இருந்து தனித்துத் தெரியும் ஒரு முகமாக கோகிலாம்பாளைச் சொல்லலாம். கோவில் தாசி என்றபோதும் தன்னுடைய சுயத்தை இழக்காதிருக்க அவள் நிகழ்த்தும் போராட்டங்கள், அதனால் ஏற்படும் சிக்கல்களை அவள் சமாளிப்பது, ஒரு போரைத் தவிர்ப்பதற்கான யோசனையை “மோஹனா”வுக்கு சொல்வது, மதமாற்ற பிரச்சாரம் மேற்கொள்ளும் பாதிரியுடனான விவாதம் என தனித்து ஒலிக்கும் ஒரு கலகக் குரல் கோகிலாம்பாளுடையது.
இந்த நாவலுக்குள் வரும் பல சந்தர்ப்பங்கள் தாமே தனித்த கதையாக கூறப்படுவதற்குறிய சாத்தியக் கூறுகள் கொண்டவை. உதாரணமாக, விளைந்து நிற்கும் “வெள்ளைப் பூண்டின்” நிலம் மராட்டிய படை கடந்து போனதால் சீரழிந்து போனதையும், அதனால், விளைச்சலைக் கொண்டு தன் மகள் செம்பருத்தியின் திருமணத்தை நடத்த எண்ணியிருக்கும் வெள்ளைப் பூண்டின் ஆசை நிராசையான சம்பவத்தை சொல்லலாம்.
இந்நாவலில் காட்டப்படும் சாமானியரின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. குறிப்பாக சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைக்கு வைக்கப்பட்ட முருகன் பெயரை மாற்றுதல், தியாகராஜ முதலியார் தன் சம்பந்தி முதலியார் மூலம் அடிமைகள் வாங்குவது, அதற்கான கிரயசாசனப்பத்திரம், உயர் ஜாதி மாடுகளை கவனித்துக்கொள்ள வழங்கப்படுவது குறிப்புகள், அதே சமயம் அடிமைகளாக கருதப்பட்டவர்களை “கவனித்துக்கொள்ள” வழங்கப்படுவதோ சவுக்கு என பல சம்பவங்கள் நம் வரலாற்றின் கொடுமைகளைப் பேசுபவை.
ஒரு பெரும் போர் சில மதுக்குப்பிகளால் தவிர்க்கப்படுதல், சித்துஜியை வீழ்த்தி, அரியணை அமரும் சாயாஜிக்கும் பிரதாப சிம்மரால் அதே முடிவு நேர்தல், அரசனுக்கு மிகவும் நெருங்கியிருக்கும் பலரும், உண்மையில் அந்தப் பதவிக்கே விசுவாசமாக இருக்கும் நிலை, கவிராயைத் தவிக்க விடும் அனவரதம் பிள்ளை, அவரிடம் பேரம் பேசி காரியம் சாதிக்கும் நிலையில் இருக்கும் அரசு என பல சம்பவங்கள் மூலமாக அக்காலகட்ட அரசாங்க நிலை தெளிவாகிறது.
இந்நாவலின் முக்கிய அம்சமாக நான் கருதுவது பகடி. சின்னச் சின்ன விவரணைகள், குறிப்புகள் பலவும் நம்மை பெரும் சிரிப்பில் ஆழ்த்துபவை. மோஹனாவுக்கு கொய்யாப்பழம் தின்ன ஏற்பட்ட ஆசையை நிறைவேற்ற படாதபட்டு கொண்டு வரப்படும் கொய்யாப்பழங்களுக்கு நேர்ந்த கதி, “சீந்துவார் அற்று மெலிந்த இறைவர், அவரை நம்பி மேலும் இளைத்துப்போன இறைவி” போன்ற விவரணைகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
தமிழில் காணக்கிடைக்கும் பெரும்பாலான வரலாற்று நாவல்கள், இருந்திராத பொற்காலத்தை பேசுபவை. மேலும், ”இந்திர”, “சந்திர” அம்சம் கொண்ட மன்னர்களின் பெருமையை கூறுபவை. ஆனால், “மானுடம் வெல்லும்” நாவல் ஒரு காலகட்டத்திய வரலாற்று ஆவணமாக கருதப்படக்கூடியது. அதிகாரத்தில் இருப்பவர்களும், அவரை அண்டிப் பிழைப்பவர்களும் ஒரு “பெருவாழ்வு” வாழ்ந்த அதே காலகட்டத்தில், சாதியின் பெயரால், பழமையின் பெயரால் எவ்வித அடிப்படை அறமும் இன்றி ஒடுக்கப்பட்ட மக்களும் இருந்தார்கள் என்பதை இந்நாவல் சிறப்பாகக் கூறுகிறது.
இந்நாவலின் பெரும்பாலான கதை மாந்தர்கள் (துய்மா, ஆனந்தரங்கப்பிள்ளை, கனகராய முதலி, சந்தா சாயிப் etc), வரலாற்றில் தடம் பதித்த உண்மை மனிதர்கள் என்பதும், நாவலின் பிரதான சம்பங்களுக்கான ஆதாரமாக ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள் இருப்பதும், மற்ற வரலாற்று புனைவு நாவல்களில் இருந்து “மானுடம் வெல்லும்” ஐ தனித்துக் காட்டுகிறது.
பலவகைகளில் வரலாற்றின் நாம் அறியாத பக்கங்களைப் பேசும் “மானுடம் வெல்லும்” ஒரு முக்கியமான நாவல்.
“மானுடம் வெல்லும்” பாண்டிச்சேரியை மையமாக வைத்து, பிரெஞ்சு ஆளுநர் டூமாஸின் ஆட்சி காலத்தை பற்றி பேசும் நாவல்.ஆனந்த ரங்கம் பிள்ளை என்ற அரசு அலுவலரின் நாட்குறிப்பைக் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதால் மற்ற வரலாற்று நாவல்களிருந்து இது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நாவலை மூன்று பிரிவுகளில் அணுகலாம்.
*1. அழகியல் பார்வை 2.வரலாற்றுப் பார்வை 3.போதாமைகள் அல்லது குறைகள்.*
_அழகியல் பார்வை_ , _ஒரு தாசி மேலே நோக்கியவாறு, தனது கையால் வானத்தைபிடிக்க பார்க்கிறாள்!_ என நாவல் தொடங்குகிறது.வாழும் காலத்திலே பதிவு செய்யப்பட்ட நாட்குறிப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதே, இந்த நாவலின் பலம் மற்றும் பலவீனம் என கொள்ளலாம்.அதாவது இந்த நாட்குறிப்பே நம்மை வரலாற்றுக்கு நெருக்கமாக கொண்டு செல்கிறது அதுவே அதன் இலக்கிய தன்மைக்கு(கவித்துவம், படிமம், தரிசனம்) தடையாக இருந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.அதனால்தான் என்னவோ “தாசி வானத்தை பிடிக்க பார்கிறாள்” போன்ற படிமங்களை, பிற்பாடு நாவலில் அதிகமாக காணமுடியவில்லை. இந்த எழுத்து முறையை எதார்த்த வாதம்(சில இடங்களில் இயல்புவாதம் போல் வெளிப்பட்டது) என கொள்ளலாம்.நாவலின் Authenticity மட்டும் இல்லாமல், அதன் உள்ளடக்கத்தின் செறிவும் தானாகவே அதன் அழகியலின் போதாமைகளை காண்பிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
_வரலாற்று நோக்கு_ – _இரண்டு பண்பாடுகளின் மோதலால் ஏற்படும் சிக்கல்கள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள்; அரசு அமைப்புகள் அதில் உள்ள உயர் சாதிகளின் வலிமைகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் (விவசாயிகள், தாசிகள், வாயிற் காவலன், விசிறி வீசுபவன்) என தொகுத்து கொள்ளலாம்_.
விளிம்பு நிலை மக்கள் என சொல்லும் போதே அவை பெரும்பாலும் அரசியல் கேள்வியாகவே பார்க்க படுகிறது.ஒரு வரலாற்று நாவல் ஏதாவதொரு தத்துவத்தைப் பற்றியோ அல்லது தனிப்பட்ட மனிதனைப் பற்றியோஅல்லது ஒரு குறிப்பிட்ட விசயத்தை பற்றியோ மையமாக வைத்து எழுதப்படாமல்,வரலாற்றையே நாவலின் மையமாக வைத்து எழுதும்போது, இப்படிப்பட்ட கேள்விகள் நியாயமாகவே படுகிறது.காலத்தால் அழிந்து போன முகமில்லாத ஒரு விளிம்பு நிலை மனிதனை உருவாக்குவது , புனைவுலகில் எழுத்தாளனுக்கு ஒரு சவால் என்றே கருதுகிறேன்.
முதன்முதலாக கழிப்பறையை அறிமுகம் செய்யும் போது மக்களின் மனநிலையில் ஏற்படும் ஒவ்வாமை,ஒரு வாயில் காவலன் ஃப்ரெஞ்ச் அதிகாரி போல் பாவனை செய்வது ,தாசிகளை சீண்டும் ஃப்ரெஞ்ச் காவலாளியின் காதை அறுத்து சிறையில் அடைக்கும் ஃப்ரெஞ்ச் அரசு;அதே தாசிகளிடம் அத்து மீறி நடக்கும் உயர் சாதிகள் (தாசி இல்லாத ஊரில் மழைஎப்படி பெய்யும் என சொல்லும் ஒரு கும்பல்),சாதி என்று வரும் போது பிரிந்து சண்டைபோடுவதும் மதப் பிரச்சினை என்றால் ஒன்றாக சேர்வதும் இதை கண்டு ஃப்ரெஞ்ச் அரசு குழப்பம் அடைவதும் போன்ற முரண்பட்ட சமூக பண்பாட்டு சிக்கல்களை காணலாம்.
அரியணையை சுற்றி நிகழும் அரசியல் நிகழ்வுகள் சமகால அரசியலுடன் பொருந்திப் போகின்றது.சூழ்ச்சி செய்து அரசை கவிழ்த்து அரியணை ஏறும் மன்னர்கள் பின்பு போகத்தில் திளைக்கின்றனர்.பல மன்னர்கள் சூழ்ச்சியால் மாற்றப்பட்டாலும் உயர் சாதி அதிகாரிகள் தொடர்ந்து நீடித்தனர். அவர்களை பகைத்துக் கொள்ள எந்த அரசும் விரும்பவில்லை.அரசுகளுக்கிடையேயான முக்கிய தகவல்கள், பேரங்கள் இவர்கள் வழியாகவே நடை பெற்றது.
*ஃப்ரெஞ்ச் அரசு மராட்டிய அரசுக்கு ஒயின் பாட்டில்கள் அனுப்பி போரை நிறுத்தி சமரசம் செய்வதை முக்கிய குறியீடாக காணலாம்.*
இந்த நாவல் ஃப்ரெஞ்ச் அரசு செய்த கொடுமையான கால கட்டங்களையெல்லாம் தவிர்த்து,டூமாஸ் என்ற கனிந்த மனிதனின் ஆட்சி காலத்தை மட்டுமே பேசுவதால்,ஃப்ரெஞ்ச் அரசின் மேல் நமக்கு அபிப்பிராயமான பார்வையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.இவருக்கு பின்பு வந்த டூப்லெக்ஸின் ஆட்சி காலம் மிக மோசமானது.
_ஒரு பெரிய இராணுவ படை சாதாரணமாக ஒரு வயலில் நடந்து செல்வதும்,அது ஒரு விவசாயியின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவு முக்கியமான படிமம்_.
_குருசு என்ற கதாபாத்திரத்தின் ஆரம்பம் , இறுதியில் அது மேற்கொள்ளும் வாழ்வும் கவனிக்க வேண்டியது_.
சில இடங்களில் வரும் முற்போக்கு கருத்துக்கள் கதை ஓட்டத்தை தடை செய்வது, தனியே தெரிகிறது.
கிட்டத்தட்ட ஆவணமே இல்லாமல், வரலாறு என்பதே காணல் நீர் போன்று இருக்கும் நமது நாட்டில், வாழும் காலத்திலே ஆவணம் செய்யப்பட்ட நிகழ்வுகளை கொண்டு இந்த நாவல் எழுதப்பட்ட தால், அதன் Authenticityகாகவும் அதன் செறிவுக்காவும் இது ஒரு முக்கியமான நாவல் ஆகும்!
ஒரு இலக்கியவாதி என்பவர் நூற்றாண்டுகளை ஆண்டுகளாக, பதிற்றாண்டுகளை மாதங்களாக, ஆண்டுகளை நாட்களாக சுருக்கிக்கொண்டு வாழ்பவர். அப்படி சுருக்கிக்கொள்வதன் வாயிலாக தன் ஆயுளை மூவாயிரம் ஆண்டுகளாக விரித்துக்கொள்ளவும் செய்கிறார். ஒரு நல்ல வாசகன் என தன்னைக் கருதுபவனும் அப்படியே செய்துகொள்ள வேண்டும் வேறுவழியில்லை. இங்கு சமகாலம் என்பதும் அன்றாடம் என்பதும் வரலாற்றின் பேரொளியில் வைத்தே நோக்கப்படுகிறது. மாறாக மற்றவர்கள் சமகாலத்தின் அன்றாடத்தின் நோக்கில் வரலாற்றை காண்கின்றனர். அவர்கள் வரலாற்றை உண்மையாகவே காண்பதில்லை என்று சொல்லலாம். அவ்வாறே ஒரு பெரும் கலைஞனும் அன்றாடத்தைக் காண்பதில்லை என்று சொல்ல முடியும். சமகாலத்தவை என்று ஏராளமானவை கொட்டப்பட சற்று கடந்தகாலம் ஆகவிட்டு, பின் அவற்றுள் துழாவி அதிகபட்ச உண்மையின் அணுக்கத்தைச் சென்றடைவது வரலாற்றின் பணி எனக் கருதுகிறேன். இது எல்லாத் தரப்பையும் விசாரித்து எல்லா ஆதாரங்களையும் பரிசீலித்து தீர்ப்பளிக்கும் நீதிபதியின் பணியினை சற்று ஒத்தது. ”சற்று ஒத்தது” தானே ஒழிய முற்றும் ஒத்தது அல்ல. வரலாற்றின் மீது முற்றாக தீர்ப்பு எழுதும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்று கருதுகிறேன். சமகாலம் என்பது கடந்தகாலம் ஆகியபின் நோக்க அதில் நாம் ஏதேனும் ஒரு தரப்பின் சார்பு கொண்டு இருப்பது என்பது குறைகிறது. கடந்த காலம் எவ்வளவுக்கெவ்வளவு மிகவும் கடந்த காலமாகிறதோ அவ்வளவுக்கெவ்வளவு அது நம் தரப்பை விலக்குவது மட்டுமல்லாமல் அதை மானுடப்பொதுமை செய்கிறது. இந்த “மானுடப்பொதுமை“ என்பதில்தான் எழுத்துக் கலைஞனின் பணி இருக்கிறது. ஒரு வரலாற்று ஆசிரியனைப் போலல்லாமல் ஒரு எழுத்துக் கலைஞன் வரலாற்றின் மீது கொள்ளும் காதல் முற்றிலும் வேறானது (இலக்கிவாசகனுக்கும் அது அவ்வாறானேதே). அவன் ஒரு புதையல் வேட்டைக்காரனைப்போல, ஒரு தங்கச் சுரங்கத்தைத் தேடிச்செல்லும் ஒருவனைப்போல. அவன் கொண்டுவரும் செல்வம் விலைமதிபற்றது. ஒரு பண்பாட்டைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது, ஒரு பண்பாட்டை கட்டியெழுப்பும் வல்லமை கொண்டது. விழுமியங்களை உருவாக்கி நிலைநிறுத்துக் கூடியது. இனிவரும் நூற்றாண்டுகளின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியது (ஒரு வெண்முரசு வாசகனாக இதை நான் நன்குணர்ந்தே இருக்கிறேன்). வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், எல்லை முடியும் இடத்தில் இருந்து எழுத்தாளன் என்னும் கலைஞனின் பணி துவங்குகிறது. ஒரு வரலாற்று ஆய்வாளன் செல்லமுடியாத இடம் அவன் மட்டுமே சென்றடையக்கூடியதாக இருக்கிறது. ஒரு நிலப்பரப்பு சாரம்சமாக மானுடத்திற்கு தருவதென்ன என்பதை அவன் வரலாற்றில் இருந்து எடுத்துத்தருகிறான். வரலாறு தரும் புறச்சான்றுகளை அங்கமைந்த மனங்களின் எதிரொளிப்பாக கண்டு அம்மனங்களைச் சென்றடைய முடிகிறது. உணர்வுகளை – வாழ்கையைப் பெற்றுக்கொள்ளும் ஊடகமாகவும் ஆகிவிடமுடிகிறது. சமயத்தில் அவற்றின் ஆழ்மனங்களை தனதாக கண்டுணரவும் நேர்கிறது. மிகப்பெரியதாக தரப்படும் அல்லது மிகச்சிறியதாகத் தரப்படும் நிழல்களைக்கொண்டு பிம்பங்களின் நிஜங்களை சென்றடைய முடிகிறது. தரப்படும் நிஜங்களின் வாயிலாக நிழல்களை விரித்து கனவின் ஓவியங்களாக தீட்டமுடிகிறது. வெறும் ஒற்றை உடலின் இருப்பாக இருந்து மறைபவன் அல்ல அவன் மொத்தமானுடத்தையும் ஒற்றை இருப்பாக உணர்ந்து அதுதான் தான் என்று என்றும் இருப்பவன் அவன். எது இவ்வுலகில் நதிகளும் மலைகளும் உள்ளவரை என் கதையும் இருக்கும் என்று வான்மீகியைக் கூறவைத்ததோ எது வியாசரென்னும் பெரும் கலைஞரை இயக்கியதோ எது திருவள்ளுவர் என கம்பர் என இளங்கோ என விசைகொண்டதோ அதுவேதான் பாரதியாகவும் ஜெயகாந்தனாகவும் ஜெயமோகனாகவும் தனக்கானதை வாழ்விலிருந்தும் வரலாற்றிலிருந்தும் எடுத்துக்கொண்டு அழிவற்ற கலையென மானுடத்தின் மீது அருள் நோக்கு கொள்கிறது.
மானுடம் வெல்லும் வாசிப்பின் பின் தோன்றிய எண்ணம் இது இன்னும் மிக ஆழம் சென்றிருக்காலம் என்பது. அது நிகழக்கூடும். இது ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம். சங்கராபரணி ஆற்றிடமும் புதுவையின் கடலிடமும் தோப்புகளை, மரச்செறிவை தொலைத்துவிட்ட நிலத்திடமு்ம் ஏராளமான சொல்லவேண்டியவை பொதிந்திருக்கலாம். “காணி நிலம் வேண்டும்“ என்று பராசக்தியிடம் கோரிக்கை வைக்க பாரதியைத் தூண்டிவிடவில்லையா அந்நிலம்?. அவரது மொத்த ஆயுளில் நான்கில் ஒரு பங்கு, அவரது படைப்பு செயல்பாட்டின் கணிசமான பகுதி புதுவையில் நிகழ்ந்தது தானே?. தனக்கானதை அம்மண் நிகழ்த்திக்கொள்ளும் அதற்கான கலைஞர்களை உருவாக்கி வளர்த்துக்கொள்ளும். பிரபஞ்சன் அதற்கான தொடக்கம், அழகிய தோரணவாயில்.
கோகிலாம்பாளைச் சொல்லிச் தொடங்குகிறது நாவல். அவள்தான் இங்குள்ள அணுகுமுறையின் குறியீடு. அவள் தேவதாசி. அக்காலம்முதல் இருக்கிறது என ஆணவமிக்க ஊர் பெரியமனிதர்களின் பிரதிநிதி என நின்று எல்லப்பிள்ளை வலியுறுத்தும் வழக்கத்தை மறுக்கிறாள். ஏற்கத்தகாது எனக்கருதுவதை மறுக்கும் அதேசமயம் இப்பண்பாட்டின் நல்லனவற்றை, உயர்விழுமியங்களின் மீது மதிப்பும் பக்தியும் கொண்டவள். அவள் புரட்சிப்பெண்னொன்றும் அல்ல. பெரியமனிதர்களின் பகையுணர்வை சகித்துவாழ முடியாது என்று எளிய பெண்ணாக ஊர்விட்டு வெளியேறுகிறாள் அதேசமயம் மோகனாபாயிக்கு யோசனை சொல்லி அதன்மூலமாக மராத்தியர் பிரெஞ்சியரிடையே மூளவிருந்த போரைத்தடுத்து புதுவையை அழிவிலிருந்து காத்தவளாகவும் ஆகிறாள். மதவெறி கொண்ட வில்லியம்ஸ் பாதிரியாரின் மதவெறிக்கு மறுப்புரைக்கிறாள் அதேசமயம் அவரது மதமும் இங்கு மதிப்பிற்குரியதாகவே நோக்கப்படுகிறது என்று சுட்டவும் செய்கிறாள். குருசு என்னும் உடன்பிறவா தம்பியின் மீது அவள் மிகுந்த அன்புகொண்டவள். தான் ஒரு பாதுகாப்பான நல்ல இடம் சேர்ந்தபின் அவனைத் தேடித்தருவித்து அருகமைத்துக் கொள்கிறாள். நல்லதொரு தோப்பை அவன் உருவாக்குகிறான். தன்னியல்பான அன்பினால் மானுடம் வெல்வதற்கான வழிகளை கண்டடைந்து தன்பால் அன்புகொண்ட மனிதர்களைச் அவ்வழிகளில் செலுத்துபவளாக அமைகிறாள். குவர்னர் துய்மா ஒருமுறை அவளிடம் பேசுகிறார் (அவள் வில்லியம்ஸ் பாதிரியாரிடம் பேசிய பிறகு) அவள் கருத்தைப் புரிந்துகொண்டதாகவும் ஆமோதிப்பதாகவும் சொல்கிறார். உண்மையில் இம்மண்ணில் அவரது நோக்கில் அவர் மதிப்புடன் நோக்கிய ஒருவர் கோகிலாம்பாளாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். சந்தாசாயபுவின் நட்பு அவரது மனைவி அத்தர் பேகத்திற்கு அடைக்கலம் வழங்கி அன்புபாராட்டியது என்பதில் அரசியல் இருக்கிறது. மக்கள் கண்ட இடத்தில் மலம் கழிப்பவர்கள். தம்மவரிடையேயே வீதிகளில் செல்லவும் சாதிய நோக்கில் காழ்ப்புகொள்பவர்கள். ஒருவருக்கொருவர் குழிபறிப்பவர்கள். துபாஷிகளோ அதிகாரிகளோ பணம், பதவி சுயநலங்களை முன்னிட்டு செயல்படுபவர்கள் (சொந்த மண் என்னும் பிரக்ஞையற்று காரைக்கால் பொன்விளையும் பூமி என கைப்பற்ற துய்மாவின் ஆசையைத் தூண்டுகிறார் கனகராயர்). அரசர்களோ அறம் அற்ற சுகபோகிகள் அல்லது வெறும் கொள்ளையர்கள். துய்மா ஒன்றும் முற்றிலும் தூயவரல்ல என்றபோதும் அவர் இங்கு அற விழுமியச்சார்பு கொண்ட ஒருவர் எனக்கண்ட ஓரே நபர் கோகிலாம்பாள்தான் எனத்தோன்றுவதைச் சொல்கிறேன்.
அனேகமாக சந்தாசாயபுவின் அத்தரிலிருந்துதான் புதுவையின் அடைக்கல காதை தொடங்குகிறது என்று எண்ணுகிறேன். பின்னர் பாதுகாப்புத் தேடிவந்தவர் பலர் – பாரதி வரை. மானுடம் வெல்லும் வாசிப்பின் தொடர்ச்சியாக பாரதி நினைவுக்கு வர மற்றொரு காரணமும் உண்டு் பாரதி கவிஞர் என்பதால் புதுவையின் தென்னந்தோப்புகளும் குயில்களும் வெண்மணல் வீற்றிருந்து நோக்க விரிந்திலங்கும் நீலக்கடலும் அவர் கவிதைகளில் தமக்குரிய இடத்தை பெற்றுக்கொண்டன. ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் நாட்குறிப்பினை சரித்திர சான்றாக கொண்டு எழுந்த மானுடம் வெல்லும் அன்றைய மனித மனங்களை நோக்க எடுத்துக்கொண்ட கவனத்தில் குறைந்த பகுதியேனும் அன்றைய இயற்கையை நோக்க எடுத்துக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனந்த ரங்கப்பிள்ளையிடம் அதற்கு வழியில்லை என்றாலும் பிரபஞ்சனிடம் அவை தம் இடத்தைக் கோரியிருக்க வேண்டும். மொத்த 78.5 கி.மீ. நீளத்தில் 34 கி.மீ புதுவையில் ஒடும் சங்கராபரணி ஆறு என்னும் வராக நதி அப்போது இன்னும் அழகாக இருந்திருக்கக் கூடும். அதிகம் நீரோடியிருக்கக் கூடும்.
பவழக்காரத் தெரு, தங்கசாலை, ராஜவீதிகளின் பெயர் காரணங்களை இவ்வரலாற்று நாவல் வாசிப்பின் பின்தான் அவதானிக்கிறேன். வெளியே மலத்திற்கு போட்ட தடைபோலவே இடங்கை வலங்கை என்று சாதிய நோக்கிற்கு பிரதான வீதியில் இடமில்லை என்று தடைசெய்கிறார் துய்மா. அக்கறையில் செய்தாரா என்பதல்ல செய்தது நல்லது என்பது கொள்ளப்பட வேண்டும். தஞ்சை சாயஜியும், ஆற்காட்டு நாவாபும், திருச்சியில் நாவாபின் பிரதிநிதியாக அப்போதைக்கு இருக்கும் சந்தாசாயுபும் அப்படியொன்றும் மக்களின் மீது அக்கறை கொண்டவர்களல்லவே?. ஒப்புநோக்க துய்மா எவ்வளவோ மேலானவராகத் தெரிகிறார். அவர் உள்ளூர்காரர் அல்ல அத்துடன் அவர் அரசருமல்ல அவர் வியாபாரி (லெமோர் என்றொரு சொந்த கப்பலொன்றும் வைத்திருகிறார் துய்மா). அந்த வியாபாரியைத் தூண்டி அவருக்கு காசுபார்க்கும் வழியைக் காண்பித்து தனக்கும் சாதித்துக்கொள்ளும் சாமார்த்தியம் கொண்டவர் கனகராயர். அகதிகளாக வரும் மக்களை அனுமதித்து நல்லபெயரும் அதேசமயம் பணம் பார்க்கும் வழியையும் காட்டுகிறார். காரைக்காலின் பூமியைக் கூறி “தஞ்சை அரிசி“ சுமந்து பாரீஸ் செல்லும் நாவாய்களின் காட்சியை துய்மா கற்பனை செய்யக் காரணமாகிறார். உள்ளூர் அரசர்கள் கொள்ளைக்காரர்களாக இருக்க “பொதுநலமும் சுயநலமும்” கலந்தவராக வெளிநாட்டு வியாபாரியை முன்நிறுத்தி தங்கள் பொருளாதாரம் சொத்து சுகங்களைப் பாதுகாத்து சமுதாயத்தில் தங்கள் இடத்தையும் பாதுகாத்துக்கொண்ட நிலப்பிரபுக்களின் சாமார்த்தியம் வியக்கத்தக்கது.
முதலாளித்துவதை நோக்கிய நகர்வின் படியில் நிற்கும் நிலப்பிரபுத்துவத்தின் ஒருகால கட்டத்தின் வாழ்வை தெரிந்துகொள்ள உதவுகிறது மானுடம் வெல்லும். அன்றாடம் கடும் சூழலை எதிர்கொண்டு துன்பத்தில் உழலும் மக்களும் சரி போகத்தில் சிற்றின்பத்தில் திளைத்திருக்கும் சாயாஜி போன்ற அரசர்களும் சரி எந்நேரமும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருப்பவர்கள். ஒப்புநோக்க நிலபிரபுகள் எதிர்கொண்ட அபாயங்கள் குறைவே என்ற எண்ணம் ஏற்படுகிறது. உழவன் ஒருவனின் நிலம் எந்நேரமும் ஏதேனும் ஒரு படைநகர்வினால் பாழாக்கப்படலாம். பெண்கள் எப்போதும் ஆபத்துக்குள்ளாகக் கூடும். படைவீரர்களால் தூக்கிச் செல்லப்படலாம், வீதி உலாவரும் அல்லது ஆலயம் வரும் அரசனின் கண்ணி்ல் பட்டு் “தகுந்த“ முறையில் அந்தப்புரத்தில் சேர்க்கப்படலாம். தாழ்ந்தவர் எனக் கருதப்படும் மனிதர்கள் விற்கப்படவும் அடித்துத் துன்புறுத்தப்படவும் கொடுமைப்படுத்தவும் செய்யப்படலாம். அரசன் போட்டியாளனால் எந்நேரமும் கழுத்தறுத்துக் கொல்லப்படலாம், பகைவரால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்படலாம். எது எப்படியானாலும் அதிகபட்ச பாதுகாப்புடையவர்களாக அந்த காலகட்டத்தில் இருந்தவர்கள் நிலப்பிரபுக்கள்தான் என்று தோன்றுகிறது. அரசன் மாற அவனோடு மாறிக்கொள்ள, தங்கள் இடத்தை அதிகபட்சம் பாதுகாத்துக்கொள்ள அவர்களால்தான் முடிந்தது. அவர்களுடன் கூடவே பூசாரிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
“மானுடம் வெல்லும்“ என்னும் வாகனத்தில் இருநூற்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பயணத்தில் சென்றுவருபவர்கள் ஒன்றை உறுதிசெய்துகொள்வார்கள் ”நிச்சயம் மானுடம் வெல்லும்.” அந்த உறுதி நாவலின் பெரியமனிதர்களின் வாயிலாக அல்லாமல் நாவலின் எளிய மக்களாலும் பெண்களாலும் வழங்கப்படுகிறது.