சரயு நதிக்கரையின் சண்டிதேவியின் கோவிலில் கௌதம நீலாம்பரன் எனும் வைதிக மாணவ இளைஞன் ஹரிசங்கர் எனும் சாக்கிய முனியின் பௌத்தத்தில் ஈடுபாடு கொண்ட மற்றொரு இளைஞனை சந்திக்கிறான். இறுதி அத்தியாயத்தில் அதே சண்டிதேவியின் ஆலயத்தில் கிழவர்களாக அருகமைந்து அளவளாவுகிறார்கள். கலைதிறனும் நுண்ணுணர்வும் சித்தாத்தங்களும் கொண்ட, தேசிய இயக்கத்தின் பெருக்கில் பயணித்தும் தனிமனித அளவில் வாழ்வு தரும் அனுபவங்கள் பலவற்றை கடந்து பயணித்துவிட்டவர்களாக.
பல நூற்றாண்டுகள் கடந்து தர்ம சக்கரம் தன் ஒரு சுழற்சியை முடித்து விட்டது. இந்து இஸ்லாமிய பண்பாடுகளின் மீது ஒரேவிதமாக அன்பை வெளிப்படுத்தும் சமநிலை கொண்ட இந்த படைப்பு தராசின் இரு தட்டுகளையும் நடுநின்று தாங்கும் மையமாக புத்தரை எடுத்துக் கொண்டதோ என்று தோன்றியது. இரு வேறு பண்பாடுகளின் விமரிசகனாக அல்ல. ஒரு பேரிருப்பாக மௌன சாட்சியாக அப்பால் நின்று நோக்குபவராக அவர் இருக்கிறார்.
பாருங்களேன் இச்சக்கரத்தின் சுழற்சியை. கௌதமனும் ஹரிசங்கரும் அங்கேயே இருக்கிறார்கள். பாக்தாதின் கமாலுதீன் பாகிஸ்தான் போய்விடுகிறான். முதலில் இம்மண்ணை அந்நியனாக நின்று நோக்கிய கண்களுடன் பின்னர் இம்மண் மீது நேசம் கொண்டு தவிக்கும் கண்களுடன். ஆனால் சுவாரஸ்யமான சம்பா, அவள் ராஜகுருவின் மகளாக, சிவபுரியின் புதல்வி சம்பா அஹ்மத்தாக எவ்வாறெனினும் எச்சூழலிலும் அவள் இங்குதான் இருப்பாள். நிர்மலாவும்.
சிரில் ? இந்தியாவில் பெரும் பொருள் கொண்டவன் பாகிஸ்தானில் அதையே தொடர்கிறான். இந்த பைத்தியக்கார உபகண்டம் உச்சபட்சமாக எதைத்தரவல்லதோ அதை மிகக்குறைவாகவே பெற்றுக்கொண்டவன் அவன் என்று எண்ணுகிறேன். ஒப்புநோக்க உண்மையில் கமால் பெற்றுக்கொண்டவை அதிகம்.
நன்கு சமைக்கப்பட்டு பக்குவமடைந்து பரம்பொருளால் உண்ணப்பட்டுவிட்ட சூபிகள், ஞானிகள், யோகிகள் இக்கதையில் வணக்கத்துடன் கடக்கப்படுகிறார்கள். மரம்-செடி கொடிகளிலிருந்து பறிக்கப்படாமல் அவற்றிலேயே பூத்து காய்த்து கனித்து உதிர்ந்துவிடும் விளிம்பு நிலை மனிதர்களும் எளிய மக்களும் அவ்வாறே வணக்கத்துடன் கடந்து செல்லப்படுகிறார்கள். இன்டலெக்சுவல் என்று விளிக்கப்படும் அரைவேக்காடுகள் மட்டுமே இங்கு முதன்மை பாத்திரங்களாக கைக்கொள்ளப்படுகிறார்கள். இங்குமல்லாமல் அங்குமல்லாமல் தத்தளிக்க அவர்களுக்குத்தானே விதிக்கப்பட்டிருக்கிறது. சிந்தாந்தஞ் செய்யவும் கலைகள் வளர்க்கவும் வேதாந்தம் விரித்துப் பேசவும் என்றெல்லாம்.
சூன்யம் வெறுமை என்று பொருள் கொள்ள மனம் ஒப்பவில்லை. அதேதான் ஆனால் வார்தையை மாற்றிக்கொள்கிறேன் – கமால் அதாவது நிறைவு அதாவது பூர்ணம்.
ஜலால், ஜமால், கமால் என்பதிலிருந்து ஒரு இலக்கிய அளவுகோல் ஒற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். சத்தியம், சிவம், சுந்தரம் என்பது அது.
எந்த ஒரு நல்ல இலக்கியப் படைப்பும் சத்தியம் கொண்டதாக இருக்க வேண்டும். நிகழ்வுகள் பாத்திரங்கள் அல்ல. படைப்பாளி படைப்புடன் உளப்பூர்வமாக ஒன்றியதன் சத்தியம் அதில் இருக்க வேண்டும். சுந்தரமாவது அதன் அழகியல். இவ்விரண்டும் வாய்க்கப்பெற்றால் அருவமென எழுவது சிவம் அதன் தரிசனம்.
சதத் ஹஸன் மண்டோவின் எழுத்துக்களுடன் ஒப்ப இது மிக உயரத்தில் இருக்கிறது.
ஒரு ஆசிரியருடன் ஒன்றுவது பல ஆசிரியர்களுடன் ஒன்றுவதாகிறது. ஒரு படைப்புடன் ஒன்றுவது காலத்துக்கு அப்பால் தொலைவுகளுக்கு அப்பால் பல உறவுகளைத் தந்துவிடுகிறது.
‘தமிழ் வளராததற்கு சீரழிந்ததற்குக் காரணம், பண்டைச் சான்றோரும் மானிடரே என்பதை நாம் மறந்ததுதான்’
பழம் பெருமை பேசித்திரிந்த தமிழ் வாழ்க்கையின் மீது கல்லை வீசி எறிந்து பகடி செய்த வரிகள் ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ ‘கடலுக்கு அப்பால் ‘ நாவல்களிலிருக்கிறது,
இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, அமெரிக்க நாடுகள் நேச அணி நாடுகளாகவும்; ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் அச்சு அணி நாடுகளாகவும் போரிட்டனர். அந்தப் போரில் இரண்டு பக்கமும் நின்று சண்டை போட்டவர்கள் இந்தியர்கள். இந்த மாபெரும் வரலாற்று அபத்தத்தின் நடுவே மனித வாழ்வின் அபத்தங்களை பேசிய நாவல்கள் தான், ‘கடலுக்கு அப்பால்’ மற்றும் ‘புயலிலே ஒரு தோணி’
தன்னுடைய 18 வயதில் பினாங்கிற்கு (Penang) வட்டிக்கடையில் வேலைக்கு செல்கிறார் ப.சிங்காரம். அப்போது அங்கிருந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையையும் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளையும் மிக அருகில் இருந்து பார்க்கிறார். பின்னர் இந்தியா வந்த பிறகு 1950ல் ‘கடலுக்கு அப்பால்’ நாவலையும் 1962ல் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலையும் எழுதுகிறார்.
சபரிராஜ் பேச்சிமுத்து
அந்த இரண்டு நாவல்களும் ஒரு பிரச்சினையின் இரண்டு முகங்களை பேசுகிறது. ஒன்றின் கேள்விக்கு இன்னொன்று பதில் சொல்வது போல அமைந்துள்ளது.
‘புயலிலே ஒரு தோணி’கதையின் நாயகன் பாண்டியன். ஜப்பானியர்கள் இந்தோனிஷியாவை கைப்பற்றிய பின்னர் அங்குள்ள டச்சுக்காரர்களை அடிமையாக நடத்தும் போது அதில் அடிமையாக மாட்டிக்கொண்ட ஒரு டச்சு வழக்கறிஞருக்கு உதவி செய்கிறான். நேதாஜியின் கட்டளையை ஏற்று ஒரு ஜப்பானிய தளபதியை கொலை செய்கிறான். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் டில்டன் என்பவன் நன்றிக்கடன் பட்டு பாண்டியனுக்கு தன்னால் ஆனதை கண்டிப்பாக செய்கிறேன் என்கிறான். ஆனால், இறுதியில் அவன் தான் பாண்டியனைக் கொலை செய்கிறான்.
‘கடலுக்கு அப்பால்’ நாவலின் நாயகன் செல்லையா அறிமுகக் காட்சியில், மரகதம் என்ற பெண்ணை மணக்கப் போகிறவன் என்ற அடையாளத்துடன் தான் தோன்றுகிறான். ஆனால் இறுதியில் அந்தக் காதல் நிறைவேறவில்லை. இப்படி வாழ்வின் பல அபத்தங்களை பேசுகிறது. ஏன் வாழ்க்கை இப்படி இருக்கிறது? போன்ற கேள்விகளை எழுப்பி செல்கிறது இந்த நாவல்கள்.
வடிவ அமைப்பில் ‘புயலிலே ஒரு தோணி’ இன்னும் கவனம் ஈர்க்கிறது. ஒரு காம்ப்பஸ் கொண்டு வரையப்படும் வட்டம் போல, ‘க்ரேக் ஸ்ட்ரீட்’ என்ற புள்ளியில் ஆரம்பித்து பல உச்சங்களை தொட்டு, பின் மீண்டும் ‘க்ரேக் ஸ்ட்ரீட்’ என்ற புள்ளியிலேயே முடிகிறது.
இந்த இரண்டு நாவல்களிலும் பிரதானக் கதாப்பாத்திரம் போர். போர் மனிதர்களைக் கொல்வதற்கு முன் மனிதாபிமானத்தைக் கொன்று விடுகிறது. உதாரணமாக ஒரு காட்சியில், ஒரு மேசையில் ஐந்து தலைகள் வெட்டி வைக்கப்படுகின்றன. அப்போது சுற்றி இருக்கக்கூடிய ஜப்பான் வீரன் ஒருவன் ஒரு சீப்பை வைத்து வெட்டப்பட்ட தலைகளுக்கு முடியை சீவி விட்டு சிரித்துக் கொண்டிருக்கிறான்.
இங்கே கொடூரம் என்பது, தலைகளை வெட்டுவது அல்ல. வெட்டிய தலைகளை வைத்து விளையாடுவது. இந்தக் காட்சி வாசிக்கும் அனைவரையும் ஒரு கேள்வி கேட்கும்.
‘நீ இந்தக் கொடூரத்தை ரசிக்கிறாயா? உண்மையை சொல் உனக்கு இது பிடித்திருக்கிறது தானே?’ என்று கேட்கும் போது நமக்குள் இருக்கும் சாத்தானை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதைத்தான் இலக்கியம் செய்ய வேண்டும். அதனை இந்த நாவல் செய்கிறது.
யதார்த்த வாழ்க்கையில் இவன் முழு நல்லவன் நாயகன் என்றோ இவன் முழுக்க கெட்டவன் வில்லன் என்றோ யாரும் இல்லை. அப்போதைக்கு அவரவர்க்கு எது நியாயமோ அதுவே தர்மமாகிறது.
‘கடலுக்கு அப்பால்’ நாவலில் வயிரமுத்துப் பிள்ளை என்ற பாத்திரம் வருகிறது. வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட்டு எழுப்பிய ஒரு தொழிலை தன் மகளுக்கு இணையாக ஒரு தட்டில் வைத்து, அவளுக்கு பிடித்த செல்லையாவை மணமுடித்து தரமாட்டேன் என்கிறார்.
அதே இன்னொரு அத்தியாயத்தில் செல்லையாவிற்கு வேறொரு தொழிலையும், வேறொரு வாழ்க்கையையும் ஏற்பாடு செய்கிறார். அதில் தெரிகிறது அந்த வயிரமுத்துப் பிள்ளைக்கு உண்மையிலேயே செல்லையா மீது அக்கறை இருக்கிறது. ஆனால், அவருடைய தொழிலை எடுத்து நடத்த செல்லையாவால் முடியாது. அதனால் அவனுக்கு அது மறுக்கப்படுகிறது.
அந்தக் கதையில் ஒரு பகுதியை மட்டும் மாற்றி யோசித்துப் பார்த்தால், ஒருவேளை அவரது மகன் போரில் இறக்காமல் போயிருந்தால், கண்டிப்பாக தன் பெண்ணை அதே செல்லையாவிற்கு கொடுப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. என்று தோன்றுகிறது.
இந்த நாவலில் ஜப்பான் வீரர்கள் தான் அவர் மகனைக் கொன்றிருப்பார்கள். ஆனால், ஜப்பானியர்களைக் கொன்ற செல்லையாவை வயிரமுத்துப் பிள்ளை வெறுப்பார். அது ஏன் என்று இந்த நாவல் முழுக்க விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.
மரணத்தை மதிக்காத போர் வீரனை கொலை செய்வதென்பது இன்னொரு வீரனுக்கு மிகப் பெரிய சாகசம் அது போன்ற சாகசங்கள் பல பக்கங்களில் வருகிறது.
ஒரு வரலாற்றுப் புனைவு என்பது வெறும் வரலாற்று சம்பவங்களை வருடங்களை வைத்து அடுக்கி சொல்வதல்ல, அந்த வரலாற்று நிகழ்வு ஒரு மனிதனின் மனதில் வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குவது.
அவ்வகையில், புலம் பெயர் தமிழர்களின் வாழ்வியலை நூறுவருடங்களுக்கு முன்னர் இருந்த தமிழகத்தைப் பேசியதில். மிக முக்கியமான படைப்புகளாக இந்த இரு நாவல்கள் இருக்கிறது.
குவிஸ் செந்தில், விக்ரம், டேவிட்,நவீன்,சபரிராஜ்,ஸ்வேதா,நிகிதா,பாலாஜி ப்ரித்விராஜ்,நரேன், பூபதி மற்றும் புகைப்படக் கலைஞராக ராகவேந்திரன்.
‘சண்டைகள் இரு வேறுபட்ட மதங்களுக்கிடையே
நடைபெறுவதில்லை. அரசியல் சக்திகளுக்குள் தான் நிகழ்கின்றன’
‘குர் அதுல் ஐன் ஹைதர்’ எழுதிய ‘அக்னி நதி’ நாவலிலிருந்து தமிழில் ‘சௌரி’.
ஒரு ஆற்றில் இரண்டு புறக் கரைகளிலும் இரண்டு படித்துறைகள் உள்ளன. அதன் நடுவே காலம் என்கிற ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு படித்துறை யதார்த்த வாழ்க்கை அதன் மறுகரை லட்சிய வாழ்க்கை. யதார்த்த வாழ்க்கையிலிருந்து லட்சிய வாழ்வை நோக்கிப் போகும் மனிதர்களின் கதை.
இதில் காலம் எவ்வாறு அந்த மனிதர்களைஅலைக்கழிக்கிறது, எவ்வாறு தன் போக்கில் இழுத்துச் செல்கிறது, எவ்வாறு அதில் அவர்கள் மூழ்கிப் போகிறார்கள் என்பதனைப் பற்றி பேசும் நாவல்.
சொல்முகம் கூடுகை 3 – கோவை புத்தகத் திருவிழா அரங்கில் – வலமிருந்து இரண்டாவதாக ராகவேந்திரன்
ஒரு தனிமனித வாழ்வை நதிநீரோட்டமாக
உருவகித்தால், அந்த தனி வாழ்வு ஒட்டு மொத்த கால ஓட்டம் என்ற பெருநதிக்குள்ளே
ஓடிக்கொண்டிருப்பதை பல முறை நாம் பார்ப்பதில்லை. தனது
ஆழத்தாலும் அமைதியாலும் வேகமாக ஓடுவதே தெரியாத பல நதிகள் இந்தியத் துணைக்கண்டத்தில்
உண்டு. எல்லாமே மாறிக்கொண்டிருப்பவை என்ற புத்தரின் கூற்றுக்கு
ஒப்புமையும் நதியே. நீர்த்துளி இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறது. நீரோட்டம் ஒரு மாயை. எனினும் அன்றாடச் சொல்லாடலில் நதியென்பது
ஒரு உண்மையான பொருண்மையே.
குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னி
நதி உருது நாவல் (தமிழில் சௌரி –நேஷனல்
புக் டிரஸ்ட்) வாசித்து முடிக்கும்போது
காலமென்ற நதியின் வெப்பம் நம்மீதும் படர்கிறது. உண்மையில்
நதி பெரும்பாலும் அமைதியாகத் தான் ஓடுகிறது. அதனடியிலிருந்து
கொப்பளிக்கும் கந்தகவெடிப்புகள் இடைவெளி விட்டே வருகின்றன. ஆனால்
தொடக்கம்- முடிவு இல்லாத காலநதியின் சுமார் 2400 ஆண்டு கால நீளத்தை 400 பக்கங்களுக்குள்
சொல்வது அதை அக்னிநதியாகக் காட்டுகிறது.
கி மு நான்காம் நூற்றாண்டில்
கோசல நாட்டின் தலைநகரான சிராவஸ்தி (இப்போதும்
இவ்வூரின் பெயர் இதுதான்) நகரத்தில்
சிற்ப- ஓவிய – இலக்கிய மயக்கத்துடன்
அலைந்து கொண்டிருக்கும் கௌதம
நீலாம்பரன் அப்போதைய காலத்தில் பரபரப்பாகிக் கொண்டிருந்த புத்தரின் கொள்கைகளையும் பிரச்சார
இயக்கங்களையும் கேள்விப்படுகிறான்.
சிராவஸ்தி நகரை மகதத்தின் சந்திரகுப்தர்
தாக்கும்போது காரணம் அறியாமலேயே நகரைக் காக்க வாளெடுத்துப் போரிட்டு, விரல்களை
இழக்கிறான். அவன் நண்பன் ஹரிசங்கர் புத்தமதத்தில் ஈடுபடுபவனாக இருக்கிறான். கௌதமன் அரச
குடும்பத்தைச் சேர்ந்த நிர்மலாவையும் சம்பகாவையும் காண்கிறான். ஹரிசங்கரை நண்பனாக்கிக்
கொள்கிறான். சம்பகாவிற்கு தனது ஓவியத்தைக் காட்டுகிறான். அவளுடன் மேடையில் சிவதாண்டவம் செய்கிறான். கௌதமன் தத்துவத்தை விட்டு கலையில் கவனம் செலுத்துகிறான். அழகிய யக்ஷிணி சிலையை உருவாக்கி படிமக்கலையில் ஒரு
புது மரபைத் துவக்கி வைக்கிறான் . அதில் யதார்த்தம் பொலிகிறது.
கௌதமன் கோசல அரச குடும்பத்தைச்
சேர்ந்த நிர்மலாவிற்கு
ஒரு அந்தண அறிஞனாக ஆசி அளிக்கிறான். நிர்மலாவிற்கு கயாவில் சித்தார்த்தர் சொன்ன உபதேசம்
நினைவிற்கு வருகிறது “ எல்லாப் பொருட்களையும் தீப் பற்றிக் கொண்டது. கண்களில் தீ கனல்கிறது. சகலமும்
இந்தத் தீயில் வெந்து போகின்றன. “இந்தத் தீ தான் அக்னி நதியில் கொதித்துக் கொண்டிருக்கிறது.
பெரும் சிற்பியான கௌதமன் மகதர்களின்
படையெடுப்பில் விரல்களை இழந்து, நதியில் பல்வேறு ஊர்களுக்கு பயணித்து காசிக்கு வருகிறான். அரசர் குடும்பம் தப்பித்து ஓடுகிறது. கௌதமன் ஒரு
நடனக்குழுவில் நடிகனாகிறான். ஒரு மேடையில் நடிக்கும்போது , கையில் குழந்தையுடன் பார்வையாளராக இருக்கும் சம்பகாவைப்
பார்க்கிறான். அவள் இப்போது பாடலிபுத்திரத்தில் சாணக்கியரின் உதவியாளரான
அறுபது வயது அந்தணரின் மனைவி. தத்துவம் – தரிசனம் சாஸ்திரம்
பேசிக்கொண்டிருந்த சம்பகா தற்போது பிற பெண்களிடம் ஊர்க்கதைகள் பேசுபவளாக மாறிவிட்டாள். ஹரி சங்கர் அவளால் துறவியாகி விட்டான் என்ற தகவல் இப்போது
சொல்லப் படுகிறது. மிகப் பூடகமாக நாவல் முக்கியத் தகவல்களை சாதாரண தகவல்களிடையே
சொல்லிச் செல்கிறது, அரவமில்லாமல் துறைப் படிகளில் ஏறிவிடும் நதியைப்போல.
தன்னைச் சந்திக்க விரும்பும்
சம்பகாவிற்கு கௌதமன் மறை மொழியில்
ஒரு உண்மையை சேடி மூலம் கொடுத்து விட்டுக் கிளம்பி விடுகிறான். (எப்போதும்
விழித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கச் சொல். நான்
இப்போது விழித்துக் கொண்டிருக்கிறேன். என்வழியில் எதுவும் குறுக்கிடமுடியாது. ) தான் பிறந்த
இடமான அயோத்திக்கு மீள்கிறான். சரயூ நதியில் மூழ்கி மறுகரையில் இருக்கும் பௌத்தர்
குழாமினை நோக்கிச் செல்கிறான். இடையில் நதியின் வெள்ளம். ஒரு
பாறைமுனையில் அடைக்கலமாகிறான். வழுக்கி விடுகிறது. இந்த இடத்தில் நாவல் ஆயிரம் ஆண்டு
நகர்ந்து விடுகிறது. அவ்வரிகள்
முக்கியமானவை:
“கால
வெள்ளம் நதியின் பிரவாகத்தை இழுத்துச் சென்றது. நாலாபக்கமும்
எல்லையற்ற அகண்டவெளி . தான்
பற்றி இருந்தது கடந்த காலத்தின் சின்னம். வருங்காலத்திலும்
இப்படியே இருக்கப்போவது. சரயூ
நதியின் பேரலைகள்
கௌதமநீலாம்பரனின் தலைக்கு மேல் எழும்பி வியாபித்தன. மறுபக்கம்
ஒருவன் குதிரையிலிருந்து இறங்கி, கடிவாளக் கயிற்றை ஆலமரத்தின் வேரில் முடித்தான்..அவன் பெயர் மன்சூர் கமாலுதீன்.”
அவ்வளவுதான், ஆப்கானியர் ஆட்சி வந்து விடுகிறது. அயோத்தி அவத் ஆகிறது. புத்தர்
காலத்திலிருந்து கபீரின்
காலத்திற்கு வருகிறோம்.
இந்த அரிய உத்தியை ஜெயமோகன் “கண்ணீரைப் பின்தொடர்தல்” நூலில்
குறிப்பிடுகிறார்.
காஷ்மிர் சுல்தான் ஜைன் உல்
ஆபுதீன் இந்திய இசை மற்றும் கலைகளில் ஈடுபாடுள்ளவன். பஹராயிச்சில்
உள்ள 1500 ஆண்டு பழைய தாமிரப் பட்டயங்களை ஆராய்வதற்கு நூலகக்
காப்பாளன் கமாலுதீனை அனுப்புகிறான். இந்த ஊர்தான்
முன்பு சொன்ன கௌதம நீலாம்பரனின் சிராவஸ்தி. கமாலுதீன்
ஒரு பண்டிதரின் மகளைச் சந்தித்து நட்பு கொள்கிறான். அவள்
அனாயாசமாக நதியை நீந்துபவள் . அவள்
பெயர் சம்பகா. . மீண்டும்
அறிவு ஜீவிகளிடையே காதல். மீண்டும் பிரிவு.
பெயர்கள் ஒன்றே. உருவங்களும் காலங்களும் மாறுகின்றன. எல்லாம் நாம-ரூபம் தான் என்பது
சொல்லாமல் சொல்லப்படுகிறது. தனது
சுல்தான் தில்லி சுல்தானிடம் தோற்று விட்டதை கமாலுதீன் அறிகிறான். படகில் பல ஊர்களுக்கு சுற்றுகிறான். வருவதாக வாக்களித்து விட்ட சம்பகாவை மறக்கிறான். வங்கம் என்ற இனிமையான புது மொழி உருவாகிக்கொண்டிருந்த
ஊருக்குச் செல்கிறான். சுஜாதாவைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு ஆமினா பீவி
என்று பெயர் வைக்கிறான். விவசாயம் செய்கிறான். ஷேர்கானின்
முரட்டு சிப்பாய்கள் அவன் கிராமத்தை தாக்கி மொகலாயருக்கு அடிவருடி என்று குற்றம் சாட்டி
பாக்தாத்தில் இருந்து வந்த ஒரு காலத்திய சுல்தானின் நண்பனும் நூலகக் காவலனுமான கிழவன்
கமாலுதீனைக் கொன்று போட்டுவிடுகின்றனர்.
இங்கே மேலும் சுமார் ஐநூறு வருடங்கள்
நதியின் வருடலுடன் கடக்கின்றன. பத்மாவதி நதியில் கமாலுதின் திரிந்து கொண்டிருந்த காட்சி
மாறி அதே நதியில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு குமாஸ்தாவாக இங்கிலாந்திலிருந்து வேலை
தேடி வந்த சிரில்
ஹாவர்ட் ஐஷ்லேவை சந்திக்கிறோம். அவன் அவுரி விவசாயத்தில் வேகமாக முன்னேறி பெரும் சொத்துக்களை
குவித்து உயர் பதவியில் ஓய்வு பெற்று இங்கிலாந்து மீள்கிறான். அவன் மகன் பெரும் சொத்துக்கு வாரிசாகிறான். பேரன் ஜெர்மனியுடன் போரில் கொல்லப்படுகிறான். கொள்ளுப்பேரன் சாமானியனான சிரில் கால ஓட்டத்தில் அருங்காட்சியகமாக
மாறிவிட்ட தனது முன்னோர்களின் பார்ன்ஃபீல்டு மாளிகையை ஒரு ஷில்லிங் கொடுத்துப் பார்க்கிறான்.
இந்தியாவிலிருந்து படிப்பிற்கு
கேம்பிரிட்ஜ் செல்லும் நிர்மலா, சுஜாதா, சம்பா, கௌதம நீலாம்பர தத், கமால்
அனைவரும் நண்பர்கள். லக்னோவில் பாரம்பரிய ஜமீன்தார் குடும்பத்தின் உறுப்பினர்கள்
அல்லது அவர்களின் குடும்ப நண்பர்கள் . கலை, இலக்கியம், கம்யூனிசம்
பேசுபவர்கள். இவர்கள் அனைவரும் பிரிட்டனில் சிரில் மற்றும் புதிய
நண்பர்களை சந்தித்து விவாதிக்கிறார்கள். கேம் நதிக்கரையில்
அமர்ந்து இலட்சிய மானிடம் பேசுகிறார்கள். பெரிய இடத்து
மணப்பேச்சுகளை நிராகரிக்கிறார்கள். தங்களுக்குள்
காதல் மலரும் தருணத்தில் பின்வாங்கி விட்டு மாணவர்களுக்கு உபதேசித்துத் திரிகிறார்கள். இருத்தலியத்தினால் வரும் அவநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நிர்மலா காச நோயால் இறக்கிறாள். கௌதமநீலாம்பரன் ஒடிந்து போகிறான். இந்திய அரசின் வெளியுறவுத்துறையில் சேர்ந்து உலகம்
சுற்றுகிறான். இரண்டாயிரம் ஆண்டு முன் கங்கை–சரயுவில் பாடலிபுத்திரம்- அயோத்தி- சிராவஸ்தியில் சுற்றிக்கொண்டிருந்தவன் பெயரும் அதுவே.
(இதே
பெயருடைய நிர்மலா 2000 ஆண்டு முன் புத்த பிக்குணி ஆகிறாள். கௌதம நீலாம்பரன் சரயு நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான்).
. சம்பா
இந்தியா திரும்பி வந்து பிரிவினையால் கிட்டத்தட்ட காலியாகி விட்ட தனது ஊரில் குறுகலான
வீட்டில் தங்குகிறாள். காசிக்குப் போய் வேலை தேடப்போகிறாள் (முந்தைய சம்பா கமால் வருவான் என்று காத்துக் கொண்டே
இருக்கிறாள்). கமாலுதீன் தனது பூர்விக வீடு பிரிவினைக்குப் பின் கைவிட்டுப்
போனதால், தனது பிடிவாதமான இந்திய வாசம் என்னும் கொள்கையை பலிகொடுத்து
பாகிஸ்தான் சென்று அரசுப் பொறுப்பில் அமர்கிறான்.அவன்
ஒரு அணு விஞ்ஞானி. அவனை ஒரு ஆய்வகம் அமைக்கும் வேலையில் அமர்த்துகிறது
அரசு. (வேறென்ன, யுரேனிய ஆய்வாகத்தானிருக்கும்).
கௌதமன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன் சிவப்பு மண்ணால் வடித்த யக்ஷிணி சிலையை ராஷ்டிரபதி பவனில் பார்வையிடும் கமால்
பசித்தவனுக்கு கலையையோ
தத்துவ ஞான போதத்தையோ ரசிக்க –விமர்சிக்க இயலாது என்கிறான்.
கௌதமன் புத்த ஜெயந்திக்கு வந்திருந்த வெளிநாட்டு
அறிஞர்களுக்கு முற்கால
சின்ன்ங்களைக் காட்டுவதற்காக சிராவஸ்தி வரும்போது அருகில் உள்ள தனது கிராமத்திற்கு
செல்கிறான். அங்கே நண்பர் ஹரிசங்கரும் வருகிறான். சண்டி கோயிலில் மீண்டும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து
சந்தித்துக் கொள்கிறார்கள். கமால் தங்களை சந்திக்காமல் பாகிஸ்தான் சென்றுவிட்டது பற்றி வருந்துகிறார்கள். மீண்டும் அதே நதிக்கரையில் அமைதி தேடிக் காத்துக் கொண்டிருக்கிறான். நதி சென்று கொண்டிருக்கிறது.
ஒழுகிச்செல்லும் நதி போன்ற படைப்பை
அடர்த்தியாக்குவது அது கடந்து செல்லும் படித்துறைகள், மனிதர்களின் கனவுகள் மற்றும் வாழ்வியல் நோக்குகள் எனலாம்.
முதல் ஆயிரம் ஆண்டுகளில் திரட்சியாக சொல்லப்படும்
இயற்கை வர்ணனை பின்னர் குறைந்து கொண்டே வருகிறது. தாமரை இலைகளில் ஜலதரங்க வித்தை செய்யும் மழைத்துளி, கண்ணில் விழுந்த மழைத்துளி சுவாதி நட்சத்திரத்தில்
சிப்பிக்குள் விழுந்து முத்தாக ஆக்குவதற்கு ஒப்புமை, ஆனந்தலஹரி
போன்ற பல இசைக்கருவிகளின்
தகவல்கள் அழகிய கவிதையாகின்றன.
சாதகப் பறவி, இலுப்பை, ,பலாச அசோக, நாவல் மரங்கள் மற்றும் கதம்ப மரம், ஜேதவனம் அடர்ந்த சோலைகளின் வழியே நதி நகர்ந்து செல்கிறது. , சண்பக மலரின்
பெயரிலேயே கதை நாயகி அழைக்கப்படுகிறாள். (சம்பகா, சம்பா, சம்பாபாஜி).
உயர் தத்துவம் பேசும் பண்டிதர்களை
விட எளிய கிராம வாசிகளின் இசை கூடிய பக்திப் பண்ணிசை சிலாகித்துப் பேசப்படுகிறது. உழவு செய்பவர்கள், படகு துழாவுபவர்கள், தேயிலை
பறிப்பவர்கள், ஆடுமேய்ப்பவர்கள், ஊர்
சுற்றும் இந்து மற்றும் சூஃபி துறவிகளை தரிசித்துக் கொண்டே நகர்கிறது நதி. கபீர் ஏற்படுத்திய
பக்தி எழுச்சியையும் இந்து-இஸ்லாம் ஒற்றுமையையும் பார்க்கிறது. பின்னர் அதே கபீர் காசியிலிருந்து சுல்தானால் வெளியேற்றப்
படுவதையும் சோகத்துடன் பார்க்கிறது. சூபி ஞானம்
கூறும் நூர் என்னும் ஒளியைக் காண்கிறது. அல்லாஹ் வலிமை , அழகு மற்றும் நிறைவு கொண்ட முக்குணத்தானாக உள்ளான். இசையை பிரம்மமாக வரித்துள்ள பொற்காலத்தைக் கண்டுவிடுகிறது.
அது ஓடும்போது பெரும் நகரங்கள் கைவிடப்பட்டு இடிபாடுகளாக
மாறுவதையும் அங்கே புதைபொருள் ஆய்வு நடப்பதையும் அமைதியாகக் காண்கிறது. அவதி மற்றும் பிஹாரி மொழிகளுடன் தொடர்புடைய வங்க மொழி
பிறப்பதை மௌனசாட்சியாக பார்த்துக் கொண்டே நகர்கிறது. ஒரே
நகரம் இந்திரப் பிரஸ்தம் – தில்லி – துக்லதாபாத் – மற்றும் ஷாஜஹானாபாத் என்று பெயர் மாறுவதைக் காண்கிறது
அக்னி நதி. 1770 இன் கொடும் வங்கப் பஞ்சம் அதன்
கரையைல் நடக்கிறது. பைரவி
என்னும் ராகம் உருவாகிய லக்னௌ என்னும் அவதிநகரை சுற்றிச் செல்கிறது. இடிந்த நகரங்களில்
புகழ்பெற்ற கவிஞர்களைக் காண்கிறது (சாணக்கியன், போஜராஜன் , கங்கவா, காளிதாசன், ராஜசேகரன், பவபூதி, பர்த்ருஹரி) . யோகிகளின் ‘ஸுமிரன்’, பக்கிரிகளின் ‘ஜிக்ர’, வைணவ பக்தர்களின் ‘பஜன்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே ஊர்கிறது.
கவித்துமான தத்துவங்களை அக்னி
நதி பேசிக்கொண்டே செல்கிறது
எண்ணங்களிலிருந்து விடுதலை – எண்ணங்களில் தனியே சத்தியம் –அசத்தியம் வேறுபாடு கிடையாது. இங்கிருந்து வெளியே போகமுடியாது. இவற்றுக்கு மேலான பரமசத்தியம் என்பது சூனியம்
இவர்கள் கதை சொல்லிவிட்டு, கதை கேட்டுவிட்டு, தாமே கதையாகி விட்டவர்கள்.
நான் சொற்களின் கடலைக் கடந்து எண்ணங்களின் பயங்கரமான பாதையில் முன்னேறி நிற்கிறேன்.
மாந்திரிக இலைக்கொத்தில் கனவு கண்டுகொண்டே உறங்கி விட்டால் காணாமல் போய்விடுவீர்கள். கீழே தரைக்கு வந்து சேருங்கள்.
தொன்று தொட்டு துயர் அனுபவிக்கும் இந்திய ஆன்மா வெள்ளையருக்குப் புரியாது.
சூபி: காலமே அழிவில் தான் அமைந்திருக்கிறது.
காலம் சிதறும் கற்களில் உறைகிறது.
கால நட்னத்தில் ஆசைகளை வென்றவரே பூசை செய்யமுடியும்.
(இஸ்லாமிய ஜமீன்தார்)மாளிகை : பல இறுதிப்பயணங்களின் துவங்குமிடம்; பல மணப்பெண்களின் பல்லக்குகள் வந்து சேர்ந்த இடம்; பண்டிகைகளின் குழந்தைகளின் கூடும் இடம். காலத்திற்கும் மாளிகைக்கும் இடையே நடக்கும் போட்டியில் எப்போதும் போல காலமே வெல்கிறது.
நதியே, நீ எங்கே போகிறாய் என்பது உனக்கும் தெரியாது. நீர்க்குடமே, திவலைபோல நீரில் மூழ்கி விடு.
வரலாற்று அதிர்ச்சிகளை அள்ளித்தெளிக்கிறது
அக்னி நதி. முன்பு மாளிகையாக் இருந்த மோதிமஹால் பின்பு இம்பிரியல்
வங்கியாகிறது (இப்போது ஸ்டேட் வங்கி). பாதுஷா
அரண்மனை அரசு இல்லமாகிறது. சதர்ன் மன்ஜில் கிளப் ஹவுஸ் ஆகிறது. பிரிட்டன் அரசு வர்க்கப் போராட்ட்த்தை வகுப்புப் போராட்டமாக
மாற்ற முயல்கிறது. முன்ஷிகள் (கணக்கர்கள்) ஆக முசல்மான்களிடம் இருந்த இந்துக்கள் விரைவாக பிரிட்டிஷ்
ஆட்சியில் பதவிகளைப் பிடிக்கிறார்கள். முஸ்லீம்கள்
நிலப்பண்ணை முறைகளில் சிக்குகின்றனர். காங்கிரஸ் – கம்யுனிஸ்ட் – முஸ்லிம் லீக் – அவாமி
லீக் இயக்கங்களைப் பார்த்துக்கொண்டே அமைதியாக நகர்கிறது. பங்களாதேஷ்
பிரியும் ஆண்டு எழுதப்பட்ட நாவல் அந்தப்
பிரிவினை பற்றி ஒன்றும் சொல்வதில்லை
நகைச்சுவை:
ஒரு பழைய அரசனைக்காட்டும் நாவல், இவர் போன்றவர்களின் தொழிலே உயிர்வாழ்ந்து
வருவது தான் என்கிறது.
இந்த பாதுஷாக்கள் சாகவும் செய்கிறார்கள்.
(பில் கிரெய்க்) சொற்கள், சப்தங்களின் வியாபாரி; மனிதர்களிடம் கூட ப்ரூஃப் திருத்தி விடுபவர்.
பியானோக்களில் எலிகள் குடியிருக்கின்றன. ஒரு ஸ்வரம் எங்கோ ஒடிந்திருக்கிறது.
அக்னி நதி தொட்டுச் செல்லும்
நதிகள் – கங்கை, யமுனை, பத்மா, சரயு, கேம், கோமதி, ஸஜ்ஜர் வாலி, ராமகங்கா (கிழக்கு வங்கம்) , ரஸ்பானா (டேராடூன்) மற்றும்
அவற்றின் கரையோர நகரங்கள்.
நம்பிக்கை வரிகளைப் பிடித்துக்
கொள்கிறோம். “நல்லகாலம் வரும்போது எல்லாருக்குமாக வரும். இது இந்து வீடு, இது
முஸ்லீம் வீடு என்று பார்க்காது- நாங்கள் எல்லாருமே ஒன்றாக மூழ்குவோம் – ஒன்றாக எழுவோம் “ என்று
சம்பா பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து விட்ட கமாலிடம் கூறுகிறாள்.
யார் கண்டது, கால நதியின் ஓட்டத்தை? இந்த நதி சில நூற்றாண்டுகள் கழித்து குளிர்ச்சியாக, அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும். அப்போது அராபிய ஞானிகளும் சூபி கவிஞர்களும் மீண்டும் இந்து பக்தர்களுடன் இணைந்து புனிதமான வாரணாசிக் கரையில் ஆரத்தி செய்யக் கூடும்.