கூடுகை 2 – ப.சிங்காரம் படைப்புகள் – வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

ஆசான் திரு.ஜெயமோகன் அவர்களுடைய “அலை அறிந்தது” எனும் கதையில் வரும் அத்தர்பாய், வாழ்க்கையைப் பற்றி ஒரு வரி சொல்லுவார் “அலை ஏறினா, இறங்கித்தானே ஆகணும்” என்று. இதையே “வாழ்க்கை ஒரு வட்டம்” என எளிமைப்படுத்த முடியும். அந்த வட்டத்தின் மையம் “அபத்தம்”.

*

ப.சிங்காரம் எனும் ஆளுமை ஒரு பெயராக என்னை வந்தடைந்து ஏறத்தாழ 7 வருடங்கள் இருக்கும். தொடர்ந்து, இலக்கிய உரைகளிலும், இலக்கியக் கட்டுரைகளிலும் தவறாமல் உச்சரிக்கப்படும் ஒரு பெயராக அவருடைய “புயலிலே ஒரு தோணி” நாவல் இருக்கிறது. அத்தகைய கட்டுரைகளை வாசிக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெரும் மன எழுச்சியுடன் புயலிலே ஒரு தோணி நாவலை வாசிக்கத் தொடங்குவேன். ஓரிரு அத்தியாயங்கள் கடக்கும் முன்பே, நாவலின் உள்ளே நுழைய முடியாமல் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேறு புத்தகங்களை படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இந்நாவலை இம்முறை ஈடுபாட்டுடன் என்னால் வாசிக்க முடிந்ததற்கு சொல்முகம் வாசகர் கூடுகை மட்டுமே காரணம். அதற்கு என்னுடைய நன்றிகள்

*

தொட்டனைத் தூறும் கேணியாகவே இருந்தாலும் நாம் கொள்ளும் அளவு நம்முடைய கலனை மட்டுமே பொருத்தது. அந்தப் புரிதலுடன்  என்னுடைய வாசிப்பு சார்ந்து புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் இரு நாவல்களைப் பற்றிய என்னுடைய அவதானிப்புகளை இக்கட்டுரையில் முன்வைக்கிறேன்

*

புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் இரண்டும் இரு நாவல்களாகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும், வாசிப்பனுபவத்தில் இரு நாவல்களையும் ஒரே நேர்கோட்டில் நம்மால் வைக்க முடியும். குறிப்பாக ”கடலுக்கு அப்பால்” நாவலை, ”புயலிலே ஒரு தோணி” நாவலின் நீட்சியாக – காலம் மற்றும் கதாப்பாத்திரங்களை முன்வைத்துச் சொல்ல முடியும்.

இந்தோனேஷியாவை கைப்பற்றும் ஜப்பான் துருப்புகள் மெடான் நகரில் நுழையும் சித்திரத்துடன் துவங்கும் ”புயலிலே ஒரு தோணி” நாவல், (பாண்டியன் எனும் கதாபாத்திரத்தின் மூலமாக) பினாங்கு, ஐ.என்.ஏ என சொல்லப்படும் இந்திய தேசிய ராணுவம், அதன் செயல்பாடுகள், நேதாஜி, போர்ச் சித்திரங்கள், ஜப்பானின் பின்னடைவு, அதன் விளைவுகள், பாங்காக் பின்னர் மீண்டும் பினாங்கில் இருந்து மெடான் நகருக்கு வந்து முடிகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பின்னான வாழ்க்கையை, போர் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தழும்புகளை ஒரு காதல் கதையின் ஊடே பதிவு செய்கிறது ”கடலுக்கு அப்பால்”.

*

இவ்விரு நாவல்களின் சிறப்புகளுல் ஒன்று, அவற்றின் கூறுமுறை. நாவலின் பெரும்பாலான கதாப்பாத்திரங்களை மற்றும் விரித்தெழுத சாத்தியம் கொண்ட பல தருணங்களை சின்னச் சின்ன சித்தரிப்புகள் அல்லது ஓரிரு பத்திகளில் சொல்லிச் செல்கிறார் திரு.சிங்காரம். ஒருவகையில், அது வாசகனின் கற்பனைக்கு பெரும் இடம் தருகிறது என்றாலும், சில இடங்களில் இந்தச் சிக்கனமே கஞ்சத்தனமாகிவிடுகிறது. செட்டி வீதி குறித்த சித்திரங்கள், பாண்டியன் மற்றும் ஆவன்னா பாத்திரங்களின் நினைவுகள் மூலமாகவே மதுரை, சின்ன மங்கலம் வாழ்க்கையை மீள்கட்டமைப்பு செய்வது, சில பக்கங்களுக்காவது வர்ணிக்கச் சாத்தியமுள்ள கடற்புயலை ஓரிரு பத்திகளிலேயே கடப்பது உள்ளிட்ட சில உதாரணங்கள் நம்மால் விரித்தெடுக்கப்படும் சாத்தியம் கொண்டவை. அதைப் போலவே,  “ரோல்ஸ்ராய்ஸ்” லாயர் டில்டன், “விடாக்கண்டன்” செட்டி போன்ற பெயர்களும். அதேசமயம், இக்கூறுமுறையின் போதாமையினாலேயே, “பாண்டியன்” எனும் பாத்திரப் படைப்பின் வீரதீரச் செயல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.

*

”புயலிலே ஒரு தோணி” நாவலின் பாண்டியன் கதாப்பாத்திரத்துக்குக்கும், ”கடலுக்கு அப்பால்” செல்லையாவுக்கும் மெல்லிய இணைப்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன். ஒருவகையில் செல்லையா, பாண்டியனின் நீட்சி. போர்ச்சூழலில் இருந்து அன்றாடத்துக்கு திரும்பும் தருணத்தில் இறந்துபோன பாண்டியன் இழந்தது என்ன என்பதை ”செல்லையா”வைக் கொண்டு நம்மால் ஊகிக்கமுடியும். லெளகீக வாழ்க்கைக்குத் திரும்பும் வீரனின் பெருமை, மதிப்பிழந்து போன ஜப்பான் ரூபாய் நோட்டுகளுக்கு இணை சொல்லத்தக்கது.

*

மெடான் நகரில் தங்கையா மற்றும் தில்லைமுத்துவுடனும், பினாங்கு நகரத்தில் அருளானந்த அடிகள், மாணிக்கம் உள்ளிட்டோருடனும் நடக்கும் விவாதங்களில் தமிழரின் பெருமை, வீரம், இலக்கியச் செழுமை ஆகியவை தரவுகளின் அடிப்படையில் கேள்விக்கு உட்படுத்தும் பாண்டியனின் தருக்கம் “கிணற்றுத் தவளை”யாய் இருப்பதன் எல்லைகளைக் காட்டுகிறது. போலவே, ராணுவப் பயிற்சி முகாமில் நடைபெறும் அசைவ உணவு சார்ந்த விவாதமும், அதற்கென பாண்டியன் சுட்டிக்காட்டும் பாடல்களும். மேஜர் டில்டனுடன் தேசியம் பற்றிய விவாதம் எழும்போது, தன்னுடைய பாட்டனார் காலம் தொட்டே இந்தோனேசியாவில் பிறந்து வளர்ந்த போதும், மேஜருக்குள்ளிருக்கும் டச்சுப் பாசத்தை தன்னுடைய கேள்வி மூலம் பாண்டியன் வெளிக்கொணரும் இடம் காட்டுவது, மனித மனதின் புரிந்துகொள்ளமுடியாத ஆழத்தை.

*

போதையிலிருக்கும் பாண்டியன், பட்டினத்தார் உள்ளிட்டோரை பார்ப்பது, அவர்களுடனான உரையாடல், சங்கப்பாடல்களையே சான்றாகக் கொண்டு தமிழர் பெருமையை, தமிழ் மன்னர்கள் பெருமையை உடைத்தெறியும் பாண்டியனின் வாதங்கள், தொலைந்துபோன முக்கியமான கடிதம் குறிந்து பாண்டியன் மற்றும் கலிக்குஸீமான் இடையே நடக்கும் பேச்சில் வரும் “ஜெனரல் சிவநாத்ராய்” குறிந்த சித்தரிப்புகள், மாணிக்கத்துக்கும் செல்லையாவுக்கும் ”கடலுக்கு அப்பால்” நாவலில் வரும் ”சிலப்பதிகாரம்” சார்ந்த உரையாடல் என இவ்விரு நாவல்களிலும் (வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்)மெல்லிய அங்கதம் / பகடி நிறைந்திருந்தாலும், உண்மையில், இந்நாவல்கள் நமக்குக் காட்டுவது அபத்தங்களை.

*

உதாரணமாக இரு சம்பவங்களைச் சொல்லலாம்

கடலுக்கு அப்பால் நாவலில், தன் உயிரைப் பணயம் வைத்து “வானாயீனா” செட்டியாரின் மகன் உடலை மீட்டு வருகிறான் செல்லையா. தன் மகன் வடிவேலுவின் இடத்தில் செல்லையாவைக் கருதுகிறார் செட்டியார். செட்டியாரின் மகள் மரகதம், மனைவி காமாட்சியம்மாள், வேலைக்காரர்கள் என யாவரும் செல்லையாவைப் போற்றுகின்றவர்கள். என்றபோதும், போரும், போரினால் செல்லையா கொள்ளும் ”நிமிர்வு”ம் அவனை “பொம்பளைத்தொழில்” வட்டித்தொழிலில் இருந்து வெளியே தள்ளுகின்றன. தன் முழு வாழ்வின் பலனாக தன் தொழிலைக் கருதும் செட்டியார், அதன் பொருட்டே மரகதத்தை “செல்லையா”வுக்கு மணம்முடிக்க மறுக்கிறார். “புயலிலே ஒரு தோணி”யில் அப்துல் காதர் மூலமாக, மரகதத்தின் மாப்பிள்ளையாகவே அறிமுகமாகும் செல்லையா, ஒரு போதும் அந்த நிலையை அடைய முடியாமல் போவது காலத்தின் குரூரம்.

”புயலிலே ஒரு தோணி”யில், அர்மீனியா ஆற்றில் மணல் அள்ளும் டச்சுக் கைதிகளுக்கிடையே இருக்கும் “ரோல்ஸ்ராய்ஸ்” லாயட் டில்டன், தனக்கு உணவு தந்த பாண்டியனை நீடுவாழ வாழ்த்துகிறார், மட்டுமின்றி அவர் குடும்பத்து பெண்ணுக்கு தீங்கிழைத்த ஜப்பானிய ஜெனரலைக் கொன்றதால், அவர் குடும்பமும் பாண்டியனுக்கு மிகவும் நன்றியுடையது, என்றபோதும், பாண்டியனைக் கொல்லும் தோட்டா, லாயர் டில்டனின் மகன் “மேஜர்” டில்டனின் துப்பாக்கியிலிருந்துதான் வரவேண்டியிருக்கிறது.

*

வாழ்க்கைப் புயலில், பாண்டியனைப் போல, செல்லையாவைப் போல, வானாயீனாவைப்போல, மாணிக்கத்தைப் போல நாமும் தாக்குப் பிடிக்க முயன்று கொண்டேதான் இருக்கிறோம். அப்பாலிருந்து புயலை இயக்கும் விசையாக நம்மை நோக்கி சிரித்துக்கொண்டிருக்கிறது ஊழ்.

*

கூடுகை 2 – கடலுக்கு அப்பால் – வாசிப்பனுபவம் – விக்ரம்

ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்‘ வாசிப்பனுபவம் – விக்ரம்

”கடவுள் நம்பிக்கை இருக்கா?” ஜெயகாந்தனிடம் கேட்கப்படும் கேள்வி.  இசைஞானி இளையராஜா தயாரித்த ஜெயகாந்தன் ஆவணப்படம் ஒன்றில்.

”கடவுள் நம்பிக்கை இருக்கா?”

”எதையாவது நம்பித் தொலை.  எதையுமே நம்பாம இருக்கிறது தப்பு” ஜெயகாந்தனின் பதில். அவர் போன்ற இலக்கியவாதிக்கே உரித்தானது இந்த பதில்,  என்னளவில் இது ஆன்மிகமானது.  எதையாவது நம்பத்தான் வேண்டும்,  மனித மனதிற்கு நம்பிக்கை இன்றியமையாதது, அதன் அடிப்படையிலேயே அது தன் வாழ்கையின் அர்த்தத்தை கற்பித்துக் கொள்கிறது.  அது தண்ணீர் மலையானாக இருக்கலாம், அல்லாவாக, புத்தனாக, ஏசுவாக, அல்லது பகுத்தறிவின் மீதான நம்பிக்கையாக.  தெய்வங்கள் குலஅறத்தை உவக்கின்றன என்பதாக அல்லது என் சொந்த மனசாட்சியின்படி தன்னறம் அல்லது கைக்கொண்ட கொள்கை என, தீர்மானித்துக் கொண்ட திசை என எதுவாகவும்.  மற்ற பிராணிகளைப் போலல்லாமல் மனிதனின் மனம் சிக்கலானதாக எளிதில் வரையறுத்துவிட முடியாததாக, ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரித்தான உலகை, வாழ்வை உருவாக்கித் தருவதாகவும் வாழ்வை துய்ப்பவனாகவும், அதுவே நடிப்பதாகவும் இருக்கிறது.

வயிரமுத்துப்பிள்ளைக்கு வாழ்கை என்பது அவரது தொழில், அவரது அறமும் தெய்வமும் கூட.  அது எல்லாவற்றினும் மேலானது.  அவரை விட அது அவருக்கு மேலானது,  அவரது மகளின் விருப்பதை விட, அவரது மகனை விட.

பர்மாகாரர்களிடம் அடி வாங்கியதும் எத்தனையோ அவமானங்களை தொழிலின் பொருட்டு அவர் பொறுத்துக்கொண்டதும் காட்டப்படுகிறது.

அவரது மகன் ஜப்பானியரின் குண்டுவீச்சில் பலியான போதும் ஜப்பானியரைக் கொன்று பாலம் கடந்த செல்லையாவின் செயலை அவர் ரசிக்கவில்லை.  ஜப்பான்காரன் எவ்ளோ பெரிய ஆள்.  இவன் என்ன நாயக்கரா என்பதே அவரது எண்ணம்.  தொழில்தானே எல்லாவற்றினும் முக்கியமானது எனக்கொள்ள வேண்டியதுதானே இவன் கொண்டிருக்க வேண்டிய அறம்?

மரகதம் செல்லையாவின் மீது காதல் கொண்டவள்தான்.  அவளும் கூட தன் தந்தையின் முடிவு சரியானது என்ற ஏற்பு உடையவள் என்றே எனக்குத் தோன்றுகிறது.  ஆனால் ஒரு கோண வேறுபாட்டுடன்.  இத்தொழிலுக்கும் என் மகளுக்கும் இவன் லாயக்குப்பட மாட்டான் என்ற வயிரமுத்துப்பிள்ளையின் கோணமல்ல அவளுடையது.  தன் நல்வாழ்வு குறித்து அவள் கவலை கொள்ளவில்லை.  தானும் தொழிலும் செல்லையாவின் கால்தூசுக்கும் சமமல்ல என்பது அவள் எண்ணம், அதை அவனிடமே தெரிவிக்கவும் செய்கிறாள்.  உங்களுக்கு நான் தகுந்தவளல்ல, எளியவள் என வணங்கி விலகுகிறாள்.

உண்மையில் நான் செல்லையாவின் தரப்பில்தான் நிற்கிறேன்.  தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் லௌகீக விவேகம். செல்லையாவிற்கு அந்த அளவிற்கு இல்லைதான்.  இந்த வேலையில்லாவிட்டால் இன்னொன்று என்று எண்ணுகிறான்.  வயிரமுத்துப்பிள்ளையின் குலஅறம் என்பது அவனுக்குப் பொருட்டே அல்ல.  தன்னை தெய்வம் என்று நோக்கிய மரகத்தை அவன் தெய்வம் என்று நோக்கினானா என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. ஆனால், அவளது விருப்பம் எதுவாயினும் அதற்கு முழுமையாக மதிப்பளிக்கக்கூடிய உண்மையான காதல்கொண்டவன்.

செல்லையாவிற்கும் கூட அவளை கும்பிட்டு விலகிக்கொள்ள அவள் மீதான ஒரு நோக்கு நண்பன் மாணிக்கத்தின் வாயிலாக தரப்படுகிறது.

அது கண்ணகி வகைப் பெண்.  அப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால்தான் தமிழ்நாட்டில் இன்றுகூட, சங்க காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் மரபுச் சரடைக் காணமுடிகிறது. அவர்கள் மரபு, பண்பாடு பழக்க வழக்கங்களின் அடிமைகள் – காவலர்கள்.”

செல்லையாவும் மரகதமும் வாழ்வில் வெவ்வேறு திசைகளில் பிரிகிறார்கள்.

நாவலின் நிலம் கடலுக்கு அப்பாலானது.  மலாய்க்கார்கள், சீனர், தமிழரை பெரும்பான்மை கொண்ட இந்தியர் வாழும் நிலம்.  வர்த்தகம் சார்ந்து அமைந்த தமிழர்களின் வாழ்க்கையை முதன்மையாக எடுத்துக்கொண்டிருக்கிறது இந்த நாவல் என்றபோதும்.  ஐஎன்ஏவில் இருந்து பிரிந்து செல்லும் தமிழர்கள் சிலருக்கு அன்புடன் உதவவும் அடைக்கலம் அளிக்கவும் முன்வரும் ரப்பர் தோட்டத் தொழிலாளித் தமிழர் பற்றி தொட்டுணர்த்தவும் செய்கிறது.

மலாய் மொழி பேச்சு இனிமையானதாகவும் சீன மொழி இனிமையற்றதாக வயிரமுத்துப்பிள்ளைக்கு எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது.  யோசிக்க வேண்டியது என்று எண்ணுகிறேன்.

செல்லையா அழைத்ததை ஏற்று மரகதம் அவனுடன் சென்றிருந்தால் என்னவாகியிருக்கும்?. கடலுக்கப்பாலான மலேயாவில் வியாபாரம் செய்யச் சென்றவருள் ஒருவன் கதைநாயகன்.  வியாபாரத்திலிருந்து விலகி அவனும் அவன் நண்பர்கள் சிலரும் இந்திய விடுதலைக்காக ஜப்பானுடன் கூட்டமைத்திருக்கும் நேதாஜியின் படையில் சேர்கிறார்கள்.  ஜப்பான் வீழ்ச்சியடைய, நேதாஜியின் நிலைமை இன்னதென்று தெரியாதிருக்க, வென்றுவிட்ட பிரிட்டிஷ்காரர்களிடம் சிக்கிவிடாமல் தங்கள் பழைய தொழில்-வாழ்கைக்கு திரும்பிவிட முற்படுகிறார்கள்.  அதற்கான பயணத்தை இரு அணிகளாகப் பிரிந்து மேற்கொள்கிறார்கள்.  ஒரு அணியுடன் வடதிசை செல்கிறான் செல்லையா.  தடைசெய்யும் ஜப்பானியரைக் கொல்ல நேர்கிறது, சீனக் கொரில்லாக் குழு ஒன்றின் பாராட்டுதலையும் குறுகியகால நட்பையும் பெறுகிறார்கள்.  திரும்பும் செல்லையா தன் காதலி மரகதத்தை திருமணம் செய்ய அவளது தந்தை இடையூறு செய்ய அவன் அவளை ரகசியமாக அழைத்துச் சென்றுவிடுகிறான்.  அவர்கள் திருமணம் செய்துகொண்டு தொலைதூர ஊர் ஒன்றில் வாழ்கிறார்கள் என்று கதை முடிந்து இருந்தால் இந்த நாவல் என்ன இழந்திருக்கும்? முக்கியமான ஒன்றை இழந்திருக்கும்.  முதன்மைப் பாத்திரங்கள் தங்கள் விழுமியங்களில் குறைபட்டிருக்கும், அவ்வழி பின்னடைந்து நாவல் முழுமையை இழந்திருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.

சொல்முகம் கூடுகை 2

கூடுகை 2 – புயலிலே ஒரு தோணி – வாசிப்பனுபவம் – லோகமாதேவி

‘புயலிலே ஒரு தோணி’ வாசிப்பனுபவம் – லோகமாதேவி

இந்த புத்தகத்தை கடந்த 2 நாட்களில் கல்லூரியில் முக்கியமான ஒரு குழுமத்தின் வருகையின் இடையில் குறிப்புகள் எடுத்தவாறு 3 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன். வாசித்த பின்னரே ’கடலுக்கு அப்பாலை’ வாசித்தபின்னர் இதை வாசித்திருக்கனும் என்பதை தெரிந்துகொண்டேன்.

கிண்டில் பதிப்பில் இருக்கும் ப சி அவர்களின் இரண்டு முன்னுரைகளுமே சிறுகதையைப் போல உணர்வுப்பூர்வமாக இருந்தன. ந. முருகேசபாண்டியன் அவர்களின் உரையும் கதையைக்குறித்த , கதாசிரியரைக் குறித்த சுருக்கமான கருத்தை சொல்லியது

கதையை ஆழ்ந்து வாசிக்காது போனால் வெறும் தகவல் திரட்டு என்னும் பிம்பத்தை அளிக்கக்கூடியதும் மனமொன்றி வாசிக்கையில் அற்புதமான வாசிப்பனுபவத்தை தருமொன்றாகவும் இருக்கும் இந்தக் கதை.

யுத்தத்தை பின்னணியாகக் கொண்டு பாண்டியன் என்னும் ஒரு புனைவுக்கதாபாத்திரத்தின் வாழ்க்கையை அவனது பயணத்தை 4 பகுதிகளாக பிரித்துச்சொல்லி அதன்வழியே அக்காலத்தை, அப்போதைய வாழ்க்கை முறை, வாழ்வுத் தரம், குடும்ப வாழ்க்கை, வணிகம், பாலியல் தொழில், கடைவீதிகளின் அமைப்பு, போக்குவரத்து, தனி ஆளுமைகள், கரன்ஸி என்று பலவற்றைச் சொல்லி புலம்பெயர்ந்தவர்களின் வேதனையையும் சொல்லும் இந்தக் கதையின் தலைப்பு கதைமாந்தர்களின் வாழ்வும் புயலில் அகப்பட்ட தோணியைப்போல அல்லாட்டத்தில் தான் இருக்கிறது என்றுசொல்லுவதாக எடுத்துக்கொண்டேன்

நாவலில் பல மரங்கள் செடிகொடிகளின் பேரையும் மனதை மயக்கும் வெள்ளை மக்னோலியா மலர்கள் என்பது போன்ற பல  தாவரவியல் தகவல்களையும் ப சி தந்திருக்கிறார். அவர் சொல்லும் மரங்கள் எல்லாம் இன்றும் இருக்கின்றனவா என்று தேடனும். பல பெயர்கள் கேள்விப்பட்டதே இல்லை.

பழஞ்சொற்கள் பலதும் வார்த்தைகள் பலதும் மிகப்புதிதாக இருந்தன.

‘’நான் வாரேன் வாக்கப்பட என் தங்கச்சி வாரா புள்ளைய தூக்க’’

அடகுக்கு பதில் நம்பிக்கை

இவையெல்லாம் உதாரணங்கள்

தாசிகளை அவர்கள் தொழில்முறைகளை  விஸ்தாரமாக சொல்லுகிறார் ப. சி.

ஜாதிய அமைப்புகளையும் அப்படியேதான்.

பழந்தமிழ்ப்பாடல்களும் நிறைய இடையிடையே வருகின்றன. செருப்படி தண்டனையாக  தரப்பட்டிருப்பது, அதையும் விரும்பி வாங்கிக்கொள்வது, கட்டிச்சோறும் கருவாடும் உணவாக தரப்பட்டது, முதல் முதலாக மேசையில் சாப்பிடும் கிளப்புக்கடைகள் வந்தது போன்ற பல   யுத்த காலத்திலான  வியப்பான தகவல்கள்  இருக்கின்றன இதில்.  

முசோலினியும் ஹிட்லரும் இறந்ததை சாதாரணத்தகவலாக சொல்லுகிறார்.

’’இளங்காதலி’’ இந்த சொல் இனிதாய் இருந்தது. இதைப்படிக்கையில் ப.சி இன்னும் பல கதைகளை ரசமாக எழுதியிருக்கக் கூடியவர் என்று நினைத்துக்கொண்டேன்.

மிக எளிமையான சொல்லாட்சி எனினும் கதை பரந்துபட்ட களத்தில் எழுதப்பட்டிருப்பதும் கதை மாந்தர் பேசும் மலாய் மற்றும் கொச்சையான தமிழ், அப்போதைய வாழ்வு முறை, யுத்தம், பாண்டியன் வாழ்வு வழியே நாம் காணும் INAவின் சித்திரம், தமிழ்பாடல்கள் என்று நாவல் மிக சிறப்பானதாகி விடுகிறது.

வளவிக்காக அப்பனிடம் அடிவாங்கி அப்பன் திரும்பி வருவதற்குள் அம்மையில் உயிர்விட்ட அமிர்தம், கணவனின் பிறழுறவுகளைப் பொருட்படுத்தாமல் வீட்டில் லட்சுமிகரமாய் இருக்கும் ஆச்சி, குடலை உருவி உள்ளங்கையில் வைத்துக்காட்டினாலும் சோறு தராத இன்னொரு ஆச்சி, நாடாரா என்று கேள்வி கேட்கும் தாசி, சொத்தைக்கத்தரிக்காய் செட்டியார் என்று ப சி காட்டும் ஆளுமைகள் என்றென்றைக்கும் மறக்க முடியாதவர்கள்.

தேர்வுக்குப் படிப்பதுபோல் குறிப்பெழுதிக்கொண்டு வாசிக்காமல் மனதொன்றி  மீள் வாசிப்பு செய்யவேண்டிய நூல் இது.

 வாழும் வயதில் மனைவியையும் தலைச்சன் பிள்ளையையும் ஒரு சேர பறிகொடுத்துவிட்டு, மிச்ச காலத்தை தன்னந்தனியே கழித்து, தன் இறப்பை யாருக்கும் தகவல் சொல்லவேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லியபடி ஸ்கேன் எடுக்கச் செல்லுகையில் ஆம்புலன்சிலேயே உயிர்விட்ட ப. சிங்காரம் அவர்களின் வாழ்வும் புயலிலே அகப்பட்ட ஒரு தோணிதான்  இல்லையா?

சொல்முகம் – கூடுகை 2 – புயலிலே ஒரு தோணி – விவாதத்தின் போது

கூடுகை 2 – கடிதம் – லோகமாதேவி

எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் கால.சுப்ரமணியம் அவர்களுடன் சொல்முகம் வாசகர் குழுமம்

சொல்முகம் இரண்டாவது கூடுகையில் இன்று கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. எல்லா மாதங்களிலும் கடைசி ஞாயிறு என் மகன்களை பள்ளி விடுதியிலிருந்து வெளியே கூட்டிச்செல்லும் நாளென்பதால் இதில் கலந்துகொள்ளவே முடியாதென்று நினைத்திருந்தேன். நேற்று மகனை பள்ளியில் ஒரு மாத விடுமுறையின் பின்னர்  கொண்டு விட்டுவிட்டு வந்ததால் இன்று கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வடவள்ளியில் ஒவ்வொருவராக அலைபேசியில் குறுஞ்செய்தியனுப்பி அடையாளம் கண்டுகொண்டு  கைகுலுக்கிக்கொண்டு காஃபி அருந்தியபின்னர்  வழி விசாரித்து அந்த பண்னை வீடு வந்தோம். இலக்கிய கூடுகைகளுக்கெனவே கட்டியதுபோலிருந்தது அந்த ஏகாந்தமான வீடும்   தாராளமான அறையும். நகர சந்தடிகளிலிருந்து முற்றிலும் விலகி பெருமரமொன்றின் கீழிருந்த சிற்றாலயமும் கொஞ்சம் தள்ளியிருந்த வீட்டுத்திண்ணையில் அரட்டையடித்துகொண்டிருந்த  இரண்டு வெள்ளைச்சேலை பாட்டிகளையும் தவிர சஞ்சாரமேயில்லாமல் அமைதியாக இருந்தது தென்னைகள் சூழ இருந்த அந்த வீடு. 20 பேர் வந்திருந்தோம் பலர் எனக்கு இன்றுதான் அறிமுகமானார்கள், 2 கதைகளை 20 பேர் எத்தனை விதமாக இன்று விவாதித்தோம், கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம் என்று நினைக்கையில் மலைப்பாக இருந்தது.

60 களில் எழுதிய கதையை 2019ல் இத்தனை தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.

 எல்லா கதைகளையுமே அகம் புறம் என்றோ, கதை காட்டும் தரிசனங்களையோ, படிமங்களைக் குறித்தோ ஏதும் அறியாமல் வெகு நேரடியாக , வெகு எளிமையாக கதைகளை வாசித்துப்புரிந்துகொள்ளும் எனக்கு கதையைக்குறித்த பல திறப்புகள் கிடைத்தன  இன்று.

 நான் மிகவும் மதிக்கும் சு.வேணுகோபால் அவர்களை இத்தனை எளிமையானவராக எண்ணிப்பார்த்ததே இல்லை. அவரும் கால. சுப்ரமணியமும் பல முக்கிய கருத்துக்களை இடையிடையே பகிர்ந்து கொண்டிருந்தது விவாதத்தை இன்னும் செறிவாக்கியது.

திரு  நடராஜன் அவர்களை இதற்கு  முன்னர் சில சமயங்களில் ஜமீன்தாரும் எங்கள் கல்லூரி தலைவருமாகியவருடனேயேதான் பார்த்திருக்கிறேன் என்பதால் அவரைக்குறித்த  செல்வந்தர் , நிழக்கிழார்,  பண்ணை வீட்டு உரிமையாளர், கல்லுரித்தலைவருக்கு நெருக்கமானவர் என்பது போன்ற ஒரு உளச்சித்திரமே எனக்கிருந்தது. முற்றிலும் மாறாக அவர் மிக எளிமையானவராக மற்றவர்களுக்கு சிற்றுண்டிகளை எடுத்துக்கொடுத்தும் நாற்காலிகளை கொடுத்து உதவியும் கதை விவாதங்களில் ஆர்வமாக சிரித்தமுகமாக கலந்துகொண்டதுமாக இருந்தார். சு வே விடம் இந்த வீட்டை உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இலக்கியக் கூடுகைகளுக்கு உபயோகித்துக்கொள்ளுங்கள் என்று வலிந்து சொல்லிக்கொண்டிருந்த, அவரது பெருந்தன்மைக்கு முன்னால் நான் கொண்டிருந்த  உளச்சித்திரம் கரைந்து காணாமல் போனது.

எங்கள் கிராமத்திலிருந்து கிளம்பும் போதே சாரல்மழை. இன்று கோவையிலும் நல்ல இளங்காற்றிருந்தது. அருமையான கூடுகை. மிக ஆரோக்கியமான விவாதம், பல நண்பர்களின் சந்திப்பு, கதைகளைப்பற்றிய புதிய புரிதல்கள் என வெகுகாலத்திற்குப் பிறகான மிக நிறைவான நாள் எனக்கு.

அனைவருக்கும் அன்பும் நன்றியும்

லோகமாதேவி