மீஸான் கற்கள் – வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

மாற்று மதத்தினரால் கொல்லப்பட்ட, தன் குழந்தையின் நினைவால் வாடும் தகப்பனுக்கு, “எந்த மதத்தினரால் உன் குழந்தை கொல்லப்பட்டதோ அதே மதத்தைச் சேர்ந்த குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் மட்டுமே நீ உன் துயரைக் கடக்கமுடியும்” என காந்தி மகான் போதித்த கதை ஒன்றுண்டு. சமூகம் தனக்கு தந்த வலியை, தன் மீது காட்டப்பட்ட வெறுப்பை, கருணையின் மூலமாக மட்டுமே கடக்கவியலும் என்பதை உணர்த்தியதால்தான் அவர் மகாத்மா.

*

பட்டாளம் இபுறாகிக்கு காலம் அப்படியொரு நல்வாய்ப்பை வழங்கியது. “எப்படியோ வளர்ந்து, எப்படியோ படித்தான்” என ஓரிரு வார்த்தைகளுக்குள் சொல்லப்பட்டாலும் இபுறாகி தாண்டி வந்திருக்கும் வலிகள் சாதாரணமானவையல்ல. அந்த வலியை “குஞ்ஞாலி” மீதான தன் கருணையின் மூலம் அவனால் கடந்திருக்க முடியும். ஆனால், வலிக்கு ஈடு செய்ய இபுறாகி வெறுப்பின் பாதையைத் தேர்கிறான். தன் அன்னைக்கு தங்ஙள் குடும்பத்தால் நேர்ந்த அவலத்தை, பூக்குஞ்ஞி பீவியின் வாழ்க்கையை அழிப்பதன் மூலம் இபுறாகி கடக்க முயல்கிறான்.

காலையில் குதிரையேற்றம், கண்பட்ட குடிசைக்குள் நுழைவது என கட்டற்ற விழைவால் திளைக்கும் தங்ஙள், வேறெந்த குற்றமும் சொல்லமுடியாதவர். தகப்பன் யாரென்று தெரியாத, அன்னையும் இறந்துபோன குஞ்ஞாலியை தன் சொந்த மகன் போல வளர்த்தவர் அவர். பொதுக்காரியங்கள், ரமலான் விருந்து, சக்காத்து கொடுப்பது என மரபின் தொடர்ச்சியும், அதே சமயம் அனைத்துப் பெண்களுக்கும் மார்பை மூடிக்கொள்ளும் உரிமையை (கட்டாயப்படுத்தியாவது) தந்த நவீன “சிங்கப்பூர்” மனதும் கலந்தவர்.

எரமுள்ளான், அடிப்படையிலேயே அழுத்தமான ஆள். தன்னுடைய சகல ரோக நிவாரணியாக அவனே கண்டடைந்த மருந்து மசூதி தொட்டியில் நீர் நிரப்புவது. தன் காதல் மனைவி “பாத்து”வின் இரண்டாம் திருமணத்தையும் அந்த மருந்தின் மூலமாகவே கடக்கிறார். பாங்கு எழுப்புவதையே தன் பிறவிக்கடனாக எண்ணிய எரமுள்ளான், “பாங்கு” ஓதும்போது மறையவேண்டும் என்னும் ஆசை உள்ளவர். ஆனால், நோயுற்று நலிந்தபின்னர், தன்னுடைய மசூதியில் இன்னொருவரது  பாங்கு ஓசை கேட்டு எழுந்துவந்து மரணிப்பது மட்டுமே அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நாவலில் வரும் இரண்டு குதிரைக்காரர்களுக்கும் உலகமே அவர்களது குதிரைதான். தன் வாழ்வில் பெருந்துன்பம் எதற்க்குமே கலங்காத அத்துராமன், அவனது குதிரையின் வலியில் கலங்கி அழுகிறான். திருமணத்திற்க்கு பின்னரும் தன்னுடைய குதிரை வாசம் இல்லாமல் அவனால் தூங்கமுடிவதில்லை. சூழலின் பொருட்டு தன் குதிரையை துரத்திவிட்டு பின்னர் அதனாலேயே பிறழ்வடைகிறான். இரண்டாவது குதிரைக்காரனின் பணி, தங்ஙளின் காலை நேர குதிரைப் பயணத்துக்கு குதிரையை தயார் செய்வது மட்டுமே. தங்ஙளின் மறைவுக்குப் பின், அவனது குதிரையின் தேவை ஒருவகையில் முடியும்போது அவனும் தன் குதிரை மீதேறிப்போய் மறைகிறான்.

வளையல் விற்பனைக்கு வரும் குழந்தையில்லாத மாதவி, தங்ஙள் மூலமாக கருவுறுகிறாள். அடுத்த வருடம் அவள் கணவன் குழந்தைக்கான தன் வேண்டுதல் நிறைவேறியதற்காக பெரிய தங்ஙள் கல்லறையில் பத்தி கொளுத்துவதும் ஒருவகையில் சரியானதே.

பாங்கு சத்தம், மசூதி என தன் வாழ்வை வகுத்துக்கொண்ட எரமுள்ளான் மோதினாருக்கு மரணம் பாங்கு ஓசை மூலமாகவே வருவது, வாழ்வு முழுவதும் குதிரையை மட்டுமே முதன்மையாக் கருதிய அத்துராமன், தன் வாழ்வை தான் துரத்திவிட்ட குதிரைக்கென பணயம் வைத்து பிறழ்வது, தங்ஙளுக்கோ அத்துமீறிய காமத்தின் பொருட்டே மரணம் நேர்வது, சிறுவயது முதலே ஆர்வமாய் கேட்ட ஜின் கதைகளின் நீட்சியாகவே பூக்குஞ்ஞி பீவியின் மரணம் சம்பவிப்பது என மானுடர்களின் செயல்களும், அவற்றின் மறுபக்கமான முடிவுகளும் காட்டப்படுகின்றன.  

கல்லறையின் ஒவ்வொரு மீஸான் கற்களுக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கக்கூடும். பெரிய தங்ஙள் போன்று எல்லாவகையிலும் பொருட்படுத்தத்தக்க வாழ்வாங்கு வாழ்ந்தவர்களுக்கும், தன் ”மனைவி”யாலேயே மறக்கப்பட்ட எரமுள்ளானுக்கும் ஒரே இடத்திலேயே மீஸான் கற்கள் அமையவும்கூடும். ஆனால், மரணத்துக்குப் பின் கிடைக்கும் மரியாதை அனைத்தும் இருக்கையில் வாழ்ந்த வாழ்வின் பொருட்டே அமையும்.

காளீஸ்வரன், கோவை

என் பெயர் சிவப்பு – வாசிப்பனுபவம் – சபரிராஜ்

‘ஒரு மகத்தான குதிரையை வரையும் போது நானே அந்த குதிரையாக இருக்கிறேன்’ – ஆலிவ்.

‘ஒரு மகத்தான குதிரையை வரையும் போது, நான் பழங்கால மேதையாக இருக்கிறேன்’ – வண்ணத்துப்பூச்சி.

‘ஒரு மகத்தான குதிரையை வரையும் போது, நான் நானாகவே தான் இருக்கிறேன். வேறெதுவுமில்லை’- நாரை.

‘ஓரான் பாமுக்’ எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ நாவலிலிருந்து தமிழில் ‘ஜி. குப்புசாமி’.

மூன்று விதமான கலைஞர்களின் மனநிலையை கலையை அவர்கள் அணுகும் விதத்தை, கலை என்றால் என்ன?, கலையின் மீதிருக்கும் மதங்களின் தாக்கம் என பல தளங்களை விவாதிப்பதற்காக ஒரு கொலை மர்மத்தை பின்னணியாக வைத்து மிகுந்த சுவாரசியத்துடன் எழுதப்பட்ட நாவல் ‘என் பெயர் சிவப்பு’.

கதை நடக்கும் களம் இஸ்தான்புல். மேற்கு கலாச்சாரங்களும் கிழக்கு கலாச்சாரங்களும் கலந்து நிற்கும் இடம். இஸ்லாமியர்கள், யூதர்கள், கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள் என அனைத்து மக்களும் கலாச்சாரங்களும் கலந்து கட்டி இருக்கும் இடம்.

யாரும் பார்க்காத ஒரு உலகத்தை, எந்தவொரு மனித உருவத்தையும் தூக்கிப் பிடிக்காமல், எவ்வித தனிப்பாணிக்கும் இடம் தராமல், வரைந்தவரின் கையெழுத்து கூட இல்லாமல் வரையப்படுகிற துருக்கிய நுண்ணோவியங்கள் ஒருபுறம்.

யதார்த்த உலகத்தை அதே கோணத்தில் பார்த்து, உருவங்களை அப்படியே வரைந்து, தனிப்பாணியை தூக்கிப்பிடிக்கும் மேற்கு ஓவியங்கள் இன்னொருபுறம்.

இந்த துருக்கிய நுண்ணோவியங்களின் மீது மேற்கு ஓவியங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள். பாரசீக மரபில் வந்த துருக்கிய நுண்ணோவியத்தின் இறுதி காலம் இந்நாவலில் விவாதிக்கப்படுகிறது.

கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்கே உரியது

இந்த இரண்டு வகை ஓவியங்களையும் கிழக்கு மேற்கு என பிரித்துக் கொண்டாலும் அந்த இரண்டு கலைகளும் ஒன்றாய் கலக்கின்ற இடமாக இஸ்தான்புல் இருக்கிறது. அந்த கலப்பு ஒரு கலைஞனின் வாழ்க்கையில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது போன்றவை இந்த நாவலில் விவாதிக்கப்படுகிறது. என் பார்வையில் ஒரு நல்ல கதை என்பது சமூகத்தில் உண்டாகும் ஒரு மாற்றம் தனி மனித வாழ்வில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை பேச வேண்டும் இந்த நாவல் அதை பேசுகிறது.

கிழக்கோ மேற்கோ இரண்டுமே அல்லாஹ்வின் பார்வையிலோ அல்லது இயற்கையின் பார்வையிலோ ஒன்று தான். ஆனால், அதனை படைத்த மனிதர்கள் தான் ஒன்றை விட இன்னொன்று சிறந்தது என சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பார்வையில் நாம் அனைவருமே கிழக்கில் இருக்கும் போது மேற்கைப் பற்றியும் மேற்கில் இருக்கும் போது கிழக்கைப் பற்றியுமே யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், எந்தப் பக்கம் போனாலும் வாழ்க்கை ஒரே மாதிரி தான் இருக்கிறது.

இதன் வெளிப்பாடாக இந்த நாவலில் ஷெகுரே வருகிறாள். அவளுக்கு கருப்புடன் இருக்கையில் ஹசன் மீதும், ஹசனுடன் இருக்கையில் கருப்பின் மீதும் ஈர்ப்பு வருகிறது. ஆனால், அவள் யாரை தேர்ந்தெடுத்திருந்தாலும் அவளது வாழ்க்கை ஒரே மாதிரி தான் இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால், கடைசி வரிகளில் கடைசி காலத்தில் கருப்புக்கு ஷெகுரே மீதிருந்த காதல் போய்விட்டது போல தோன்றுகிறது.

கொஞ்சம் கதைக்கு வெளியே வந்துப் பார்க்கும் போது, இந்தக் கிழக்கு மேற்கு தடுமாற்றம் ஒரானுக்கும் இருந்தது போல தோன்றுகிறது. வெகுஜன எழுத்தின் ஆகச் சிறந்த கருவான கொலை மர்ம பின்னணியை வைத்துக் கொண்டுஒரு கலையை பற்றி பேச முயன்றிருக்கிறார். ஆனால், ஒன்றை எழுதிக் கொண்டிருக்கையில் இன்னொன்றுக்கு தாவிக்கொண்டே இருக்கிறார்.

ஒருவனைக் கீழே வீழ்த்தி அவன் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு மூன்று பத்திக்கு பழங்கால ஓவியங்களைப் பற்றி பேசுவதெல்லாம் அந்த அலைபாய்தல்கள் தான்.

கலைஞனின் மனம்

கலைஞர்களில் இரண்டு வகை உண்டு. ஒரு வகை எல்லோரும் தன் கலையை பாராட்ட வேண்டும், தன்னைப் பாராட்ட வேண்டும் என நினைப்பவர்கள். இன்னொரு வகை வெளியிலிருந்து வரும் எவ்வித பாராட்டைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னுடைய கலையை உயர்த்திக் கொண்டே செல்பவர்கள். தனக்கென புதிய இலக்குகளை உருவாக்கி அதை நோக்கி சென்று கொண்டிருப்பவர்கள்.

இந்த இரண்டு வேறுபட்ட கலைஞர்களின் மனதைப் பற்றி பேசிய படம், கிறிஸ்ட்டோஃபர் நோலன் இயக்கிய பிரஸ்டீஜ் (prestige). இந்தப் படத்தில் வருகிற கிறிஸ்டீன் பேல்-ன் கதாப்பாத்திரத்தைப் போல தான் இந்தக் கதையில் வருகிற கொலைகாரன் இருக்கிறான்.

அவன் தன்னுடைய கலையை தன்னை விட அதிகமாய் நேசிக்கிறான். அதனால் சுற்றி இருப்பவர்கள் தனக்கென தனிப்பாணியை உருவாக்குதல், கலையை வைத்து பணம் சம்பாதித்தல் என்று இருக்கும் போது, அவன் மட்டுமே அவனுடைய கலையை மட்டும் உயர்த்திக் கொண்டே இருக்கிறான்.

என்னுடைய பார்வையில், இந்தக் கதையின் நாயகன் அந்தக் கொலைகாரன் தான். எனிஸ்ட்டேவிடம் அவன் பேசும் ஒரு காட்சி வருகிறது. இந்த நாவலின் உச்சமென நான் நினைப்பது அந்த இடத்தைத் தான்.

எனிஸ்டே சொல்கிறார், “ நீ ஓவியம் வரைவதற்காக தான் கொன்றாய்”. ஆம், அவன் தன்னுடைய கலைக்காக, கலையை காப்பதற்காக கொலை செய்யுமளவிற்கு செல்கிறான்.

ஒரு கலைஞனின்  வீழ்ச்சி

ஆனால், ஒரு கொலை செய்த பிறகு அவனுடைய கலையும் அவனை விட்டுப்போகிறது. தன்னுடையதை விட கீழான கலை என அவன் நினைத்த பிராங்கிய முறையில், அல்லாஹ் பார்க்கும் உலகை தான் வரைகிறேன் என நினைத்துக் கொண்டிருந்தவன், தன்னுடைய சொந்த உருவத்தைக் கூட வரைந்து கொள்ள முடியாமல் வீழ்கிறான்.

பின்னால், வரப் போகிற இந்தப் பெரும் வீழ்ச்சியைப் பற்றி, நாவலின் தொடக்கத்திலேயே ஒரு கதை சொல்லப்படுகிறது. ஒரு நுண்ணோவிய மாமேதை புகழ், பணம், புதிதாக ஒன்றை செய்வது, தனக்கென ஒரு பாணியை உருவாக்குவது என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கலைக்காக ஏற்கனவே வரையப்பட்ட ஓவியங்களை அப்படியே நகலெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காரணத்தினாலேயே அனைவரும் அவரை ஒரு மாமேதை என்று போற்றுகின்றனர்.

115 வயதிலும் பிற நுண்ணோவியர்களுக்கு வரும் பார்வைக்குருடு வராமல் வரைந்து கொண்டே இருக்கிறார். ஆனால், அங்கு பயிற்சிக்கு வருகின்ற ஒரு இளைஞன் மீது காதல் கொண்டு, அவனைக் கவர்வதற்கு வரைகிறார். அடுத்த சில நாட்களில் அவருடைய பார்வை போகிறது. அடுத்த நாட்களில் படிக்கட்டில் வழுக்கி விழுந்து ஒரு சாதாரண முதியவரைப் போல இறக்கிறார்.

நாற்பது வருட வாழ்க்கையின் சோகங்கள், சலிப்புகள், பிடுங்கல்கள் எல்லாம் ஒரு பாஸ்போட் சைஸ் போட்டாவில் தெரிவதாக அசோகமித்திரன் எழுதியதாக ஜெயமோகனின் நேர்க்காணலில் பார்த்த ஞாயபகம். அதே தான் கலைஞனும். ஒரு கலையை செய்து கொண்டே இருப்பவனின் உடல்மொழி, உருவம், பேச்சு என அனைத்தும் அவனது கலையின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. பின்னர் அவனிடமிருந்து அந்தக் கலை நீங்கிய பிறகு அவன் வெறும் உடல் மட்டுமே. அந்த உடலின் இயக்கத்தை நிறுத்துவதற்கு ஒரு முரடனின் கத்தியோ அல்லது வழுக்கிவிடும் படிக்கட்டோ கூட போதுமானது.

மேலே சொன்னதை ஒரு சமன்பாடாக எழுதவேண்டுமென்றால், ஒருவனிடமிருந்து மனிதம் சாகும் போது அவனது கலையும் சாகிறது. ஒரு கலைஞனின் கலை செத்த பிறகு அந்தக் கலைஞனே செத்து விடுகிறான்.

காலமும் கலையும்

வாழ்க்கையும் இலக்கியமும் சொல்லிக் கொடுத்தது ஒன்று தான். அனைத்துக் கலைகளும் அழிந்து விடக் கூடியது தான். இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் அது உருவானதிலிருந்த காலத்தையும் எடுத்துகொண்டால், நாம் பேசிக்கொண்டிருக்கிற ‘காலத்தை தாண்டி நிற்கிற படைப்பு என்பதெல்லாம்’ புறந்தள்ளக் கூடிய அளவு தான் (neglegible values). ஆனாலும் இந்த சிறிய நீளத்திற்குள், கலையின் மீது காலம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் மிக முக்கியமானவை.

ஒரு பெரும் அடக்கு முறையிலிருந்தும், பேரழிவிலிருந்தும் தான் ஏற்கனவே இருக்கின்ற ஒரு கலையின் மீது ஒரு புதுப் பார்வை வருகிறது. அந்தப் புதுப்பார்வை தான் புதிய கலை வடிவத்தை தோற்றுவிக்கிறது.

ஒரு போர் நடந்து நாடே ரத்த வெள்ளத்தில் இருக்கின்ற போது தான், பாரசீக நுண்ணோவியத்தின் புதிய பார்வைக்கோணம் உருவாகிறது.

இந்த வரலாறு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நிகழ்த்துபவர்களும் காலமும் தான் மாறிக்கொண்டே வருகிறது. முதலாளி வர்க்க அடக்குமுறை ஓங்கிய போது சிவப்பு சிந்தனை இலக்கியமாக, கலையாக மாறுகிறது. இந்தியாவில், சாதிய அடக்குமுறைகள் ஓங்கும் போது இங்கே சாதிஒழிப்பு அல்லது தலித் சிந்தனைகள் படைப்புகளாக மாறுகிறது.

இந்த இடத்தில் இருந்து தான், ‘கலை மக்களுக்கானது’ என்கிற முழக்கம் வருகிறது. இதனை கவனிக்கும் போது தெரிவது என்னவென்றால், கலை யாருக்கானது என்பதும், எது கலை என்பதையும் காலமே தீர்மானிக்கிறது.

அப்படி நாம் எதனைக் கலை என்று தீர்மானித்துக் கொண்டாலும், மேதகு. சுல்தான் கருவூலத்தில் உஸ்மான் பார்த்த சில செல்லரித்த ஓவியங்கள் போல அவை அழிந்தே போகும்.

காவிய காதல்

ஒரு மூன்று பக்கத்திற்குள் எதற்கு முப்பத்தொன்பது முறை ‘கலையோ கலை’ என்று கலைத்தேன் என தெரியவில்லை. அந்தக் கேள்வியை ஒரு ஓரம் வைத்துவிட்டு இந்த நாவலில் நான் ரசித்த மேற்கு பகுதியான வெகுஜன எழுத்தை குறிப்பிட்டாக  வேண்டும். கருப்புக்கும் ஷெகுரேவிற்கும் இடையேயான காதல் அத்தியாயங்கள்.

இந்தக் காவியக் காதல், நாடகக் காதல், short film காதல் போன்ற அனைத்துக் காதல்களின் புனித பிம்பங்களையும் போட்டுடைத்திருக்கிறது.

ஒரு இடத்தில் ஷெகுரே சொல்கிறாள், “அவனுக்கு இப்போது ஒரு பெண் வேண்டும் அதனால் தான் என்னைக் காதலிக்கிறான்.” அது எந்தளவிற்கு உண்மை என்பதை அவர்கள் தனிமையில் சந்திக்கும் போது கருப்பு செய்கிற ஒரு காரியத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்.

அதே போன்று கருப்பு ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டு கொல்லப்படுவதைப் போல காட்சி வரும், அப்போது கருப்பு நினைத்துக் கொள்வான், “நான் இறக்கப் போவது கூட கவலையாய் இல்லை. ஆனால், ஒருமுறை கூட  ஷெகுரேவுடன் சம்போகிக்காமல் இறப்பது தான் கவலையாக இருக்கிறது.”

ஓரானின் வண்ணம்

இந்நாவலின் கடைசி வரிகள் இப்படி முடிகின்றன. “கதை இனிமையாகவும், சுவாரசியமாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக இல்லாத பொய்களையெல்லாம் சேர்த்து சொல்லவும் ஓரான் தயங்கவே மாட்டான்.”

இந்தக் குறும்புத்தனம் தான் இவ்வளவு பெரிய ஒரு நாவலை வாசிக்க வைக்கிறது.

எஸ்தர், பிரேதம், நாய், குதிரை, சாத்தான், மரணம், தங்ககாசு போன்றவை இந்தக் கதையில் பேசாமல் போயிருந்தால், ஒரு கொலை மர்மம் என்கிற பின்னணியில் இந்தக் கதை சொல்லப்படாமல் போயிருந்தால், இந்தக் கட்டுரையைப் போல ஒரு சுவாரசியமற்ற பெரும் அபுனைவாக மாறியிருக்க கூடிய சாத்தியம் இருக்கிறது.

சபரி ராஜ், கோவை