என்றுமுளது…

வெண்முரசு வாசிப்பு குறிப்பு – விக்ரம்

ஜெயமோகன் வெண்முரசில் இதையெல்லாம் திட்டமிட்டுச் செய்தாரா அல்லது இவையெல்லாம் தற்செயலானவைதானா என்றொரு கேள்வி முன்பு எழுவது உண்டு.  ஜெயமோகனின் வெண்முரசு தற்செயல்தான் ஆனால் திட்டமிட்ட தற்செயல் என்று அப்போது விடையளித்துக்கொள்வேன்.  திட்டமிட்டது அவரல்ல.  கடல்கள் எவ்வளவு நாள் கடல்களாக இருக்கவேண்டும் அவை எப்போது பனிமுடி சூடி பெரும் மலைகளாக ஆகவேண்டும், மலைகள் எப்போது பெருங்கடல்களாக ஆகவேண்டும், வனங்கள் எப்போது பாலைவேடம் பூணவேண்டும் பாலை எப்போது அடர்வனம் ஆகவேண்டும் என்றெல்லாம் திட்டமிடும் ஆற்றல் ஒன்றுள்ளது அதுவேதான் வெண்முரசைத் திட்டமிட்டது என்று உணர்கிறேன்.

எம்மொழியினர் ஆயினும் நுண்ணுணர்வுடையோர் அறிந்த ரகசியம் ஒன்றுள்ளது காவியங்கள் மொழிகளுக்கு ஆயுள் நீட்டிப்பு வழங்குகின்றன.  ராமாயணமும் மகாபாரதமும் இந்திய மொழிகளில் மீள நிகழ்த்தப்பட்டதில் வியப்பொன்றுமில்லை.  சமகாலத்தினை மட்டுமே உட்படுத்தி எழும் இலக்கியங்கள் காலத்தால் மதிப்பிழந்துவிடுகின்றன.  தன்காலத்தில் நிலவும் மொழியை அதுகாணும் பொருட்களை அதன் நிகழ்வுகளை எவற்றையும் அதற்குரிய காலத்திற்கு அப்பால் அதிகம் கொண்டுசெல்ல அவற்றால் இயல்வதில்லை.  பேரிலக்கியங்கள் மட்டுமே அந்த வல்லமை கொண்டவை.  அவை மனிதரிலும் இயற்கையிலும் “என்றுமுள்ளவற்றை”க் கொண்டு எழுகின்றன.  அத்துடன் இக்கணம் என்னும் உள்ளியல்பான மெய்மையையும் இணைத்துக்கொண்டு வண்ணங்கள் தொட்டு பெரும்காலத் திரைமீது தீட்டப்படுகின்றன.

நுண்ணறிவுடையோர் காவியங்களை மொழிக்கு ஊட்டம் எனக் கண்டுகொள்வது, அவை தம்மொழியிலும் நிகழவேண்டும் என்று விரும்புவது வியப்பல்ல.  சிற்றெறும்பின் வாழ்கைதான் நம் சொற்களும் வாழ்நாள் குறுகியவை ஆயின் பெரும்கலம் என காவியங்கள் புகுந்து காலத்தின் நீண்ட மறுகரை அவையும் சேர்கின்றன.  இன்றுள்ளது என்றுமுள்ளது அல்ல ஆனால் என்றுமுள்ளதன் சன்னதியில் நிறுத்தப்பெறுவதன் வாயிலாக என்றுமுள்ளதாக ஆவது விந்தை.

கம்பராமாயணம் தன்மொழியை இன்றுவரை பத்துநூற்றாண்டுகளுக்கு கடத்தியது.  ஜெயமோகனின் வெண்முரசு இதுகாறும் பயணித்த தமிழ்மொழியை அதன் அத்தனை வரங்களையும் இப்பெருநிலத்தின் அழியாச் செல்வங்களுடன் இனி பதினைந்து நூற்றாண்டுகளுக்கு கொண்டுசெலுத்த இருக்கிறது.

மானுடம் தழுவும் பேரிலக்கியங்களும் கவிதை என்று நுண்மொழியும் என இவையெல்லாம் இல்லாவிட்டால் மொழி என்பது வெறும் கருத்துப்பறிமாற்றக் கருவி என்பதற்கப்பால் என்ன இருக்கிறது? மொழி இனிது என்று எதனால் சொல்கிறோம்? அதன் உள்ளடக்கத்தைக் கொண்டுதானே? இல்லை அதெதுவும் இல்லாமலேயே ஓசைநயத்தால் மட்டுமே கூட இனிது என்றால் ஓசைநயம் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கத்தானே செய்யும்? அவரவர் மொழி அவரவர் காதுக்கு இனியது பொதுவில் அளவிடும் கருவி எங்குள்ளது? அவரைக்காய் பொறியல் ஈடுஇணையே இல்லாத சுவைமிக்கது என நான்சொல்ல கரப்பான்பூச்சி பொறியல் அதைவிட சுவையானது என்று இந்தோனேசியக்காரன் சொன்னால் எதைக்கொண்டு அதை நான் மறுப்பது? சீனமொழி கேட்க நன்றாக இல்லை மலாய் மொழி கேட்க இனிதாக இருக்கிறது என்று ப.சிங்காரத்தின் புயலிலே ஒருதோணியில் வரும் வயிரமுத்துபிள்ளை கருதுகிறார்.  வயிரமுத்துபிள்ளையின் சொற்கள் சீனனின் காதுகளுக்கு எப்படி இருக்குமோ?

மானுடப்பொதுமை கொண்டவை பெரியன சில அரியன சில பேராற்றலுடன் எழுந்து மொழிகளை உலகில் தூக்கி நிறுத்தவேண்டும்.  அப்படி ஒரு வரம் தமிழுக்கு அவ்வப்போது கிடைத்துக்கொண்டு இருக்கிறது, கம்பராமாயணம் திருக்குறள் என்று.  இன்று வெண்முரசு.  அது தன்னைத்தானே நிறுவிக்கொள்கிறது நூற்றாண்டுகளின் பரப்பில் விரவிக்கொள்கிறது.  கலிபோர்னியாவின் செம்மரங்களைப்போல அதன் காலப்பரப்பு வேறு.

தற்செயல்தான் ஆனால் திட்டமிடப்பட்டது என்று ஏன் கருதினேன் என்றால் இவ்வளவு பெரிய புனைவுத்தொடரில் அமைந்த ஒருங்கமைவுதான்.  இதை திட்டமிடாமல் நிகழ்த்த முடியாது திட்டமிட்டாலோ நிகழ்த்தவே முடியாது.  இங்கு ஒருங்கமைவு என்று நான் கூறுவது அதன் தகவல் பொருத்தங்களை அல்ல அதன் அகத்தை – உணர்வுகளை, இருமைகளை – கீழ்மைகளும் பெரியவையும் – பேருண்மைகளும் எனக் கோர்த்து ஒருமை என செலுத்தும் அந்த ஒருங்கமைவைக் கூறுகிறேன்.

வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கோணங்களில் வாசிப்பு சாத்தியம் வழங்குகிறது வெண்முரசு.  நீ்ங்கள் யாராக இன்று இருக்கிறீர்களோ அதற்கேற்ப உங்களுக்கு இன்று அதில் ஒரு பயண வழி துலங்குகிறது.  அவ்வழியே பயணிக்க பின்னர் நீங்கள் உங்களை வேறு ஒருவராக வேறோர் இடத்தில் கண்டு வியக்க நேர்கிறது.  ஒவ்வொரு நதியாகவும் தனைக்கண்டு பின்னர் ஒரே கடல் நான் என முறுவலித்து – மோனவாரிதி என்கிறார்களே அத்தகைய ஒரு சாத்தியம் இங்குள்ளது.  வெண்முரசு வாசிப்பில் ஒவ்வொருமுறையும் அருளியல் என்றுகருதாமல் என்னால் இருக்க இயல்வதில்லை.

வெண்முரசு மூன்று சொற்களில் – என்றுமுள்ள மனித இயல்புகள், பெரும்புடவி, மெய்மை.  இரண்டு சொற்களில் – உலகியல், மெய்மை.  ஒரே சொல்லில் என்றால் வாழ்க்கை.

எனக்கே இப்படி என்றால் ஒரு மெய்ஞானி வாசிக்க வெண்முரசின் எல்லா பாதைகளினூடாகவும் அவருக்கு அந்த நிலவு தென்படக் கூடும்.  புன்னகைக்கக் கூடும்.

விக்ரம்