குழந்தைகள், பெண்கள், ஆண்கள் வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்

காலை நடையில் சாலையில் ஒரு திருகாணியைப் பார்த்தேன். ஏதோ வாகனத்திலிருந்து நழுவி இருக்கக் கூடும். ஒருவேளை ஒவ்வொரு மறையாகக் கழன்று கொண்டே வந்தால் என்ன ஆகும் என்று விபரீதமாக கற்பனை வந்தது. எண்ணிலாத மறைகள் , திருகுகள், சுருள்களால் இணைக்கப்பட்டிருக்கும் சமூகவாழ்வில்,  நெகிழ்வடைந்த திருகுகளும் முறுக்கேறிய புரிகளும் உருவாக்கும்   பாடுகள் துயரம் தருபவை. அன்றாட நாகரிக வாழ்வின் மனச்சிதைவுகள்,  முடிச்சுகள் உறவு வதைகள்    குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதையும் அலைக்கழிப்பதையும் அவர்கள் வளர்ச்சி நிலைகளில் தாக்கம் தருவதையும் பல அடுக்குகளில் கச்சிதமாக செதுக்கித் தரும் ஆக்கம் குழந்தைகள்- பெண்கள் – ஆண்கள்.  ஃப்ராய்டியமும் இருத்தலியலும் யூங்கியின் சமூக உளவியல் கொள்கையும் பேசுகிறது . Transactional Analysis குறிக்கும் பெற்றோர் – முதிர்ந்தோர் – குழந்தை ஆகிய மூன்று நிலைகளைச் சுட்டிப் பேசுகிறது.

உழைத்து முன்னேறியவர் எஸ் ஆர் எஸ். வாசிப்பும் தனது அறிவில் பெருமிதமும் கொண்டவர். தன் மகனை ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வளர்க்க அவா கொண்டவர். அவரது நோயுற்ற மனைவி லட்சும் அன்பும் கருணையும் கொண்டவள். இவர்கள் மகள் ரமணி: பெரியவர் பேச்சைப் புரிந்து கொள்பவள்; தனது தம்பி பாலுவுக்கு தண்டனையாக தோப்புக்கரணம் போடவைத்து கணக்கில்  குழப்பி ஒரு எண்ணிக்கை அதிகமாகப் போடவைப்பவள்.;  ஏணியில் இரண்டு படி ஏறுவதற்கு முன் கவுனை  முட்டிற்குள் அடக்கி வைத்துக் கொள்பவள். நளினத்தின் சொட்டு;

பாலு பொருள் மறைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளாது அசட்டுக் கேள்வி கேட்பவன்; அல்லது அவனது நேர்க்கேள்வி அசட்டுத்தனம் எனப் புரிந்துகொள்ளப்பட்டது. அப்பா இல்லாத போது பாயை உருட்டி உதைப்பவன்; (அப்போது பாய் இருக்குமிடத்தில் அப்பாவை மனதில் உட்காரவைத்துக் கொள்வது சொல்லப்படவில்லை).வீட்டிற்கு வெளியே தனியாக ரோட்டிற்கு வருவதையும் கிணற்றில் எட்டிப்பார்த்து உள்ளேகிடக்கும் பாம்புகளுக்கு தின்பண்டங்கள் வீசுவதையும் பெருமையாக நினைப்பவன்.

பாலு – ரமணி குழந்தைச்சண்டைகளுக்கிடையே குழந்தைகள் ஆண் மற்றும் பெண் என்னும் sterotype இல் உருவாகி வருகிறார்கள்.

 இப் புதினத்தை  ப்ராய்டிய நோக்கில் புரிந்து கொள்ள முயற்சி செய்வது பயன்தரலாம். (அதன் உளவியல்- பாலியல் அடிப்படைகள் ஆட்டம் கண்டுவிட்டபோதும்). அல்லது  புதிய ஃப்ராய்டியத்தின் அடிப்படைகளான உளவியல்- சமூகவியல் வளர்ச்சிக் கோட்பாடு இதில் அதிக வெளிச்சம் தரலாம்.

  எஸ் ஆர் எஸ் ஒரு கண்டிப்பான தகப்பன் ; கறாரான முதலாளி. அலுவலகத்தில் இருப்பதைப் போன்றே வீட்டிலும் கண்டிப்பு காட்டுபவர். சுதந்திர எண்ணமும் அறிவுத்தேடலும் நாத்திக ஈடுபாடும் கொண்டவர் . அவருடைய விமர்சனத்திலிருந்து தப்பிப்பதே பாலுவின்  முழுநேக் கவலையாகிறது. உடல் நலமில்லாத தாயின் அருகாமைக்கு ஏங்கிக் கொண்டே இருக்கிறான். இடிப்பஸ் சிக்கல் விளையாடுவதால்  தாயன்பிற்காக கவலைப்படுகிறான்.  சிக்கலில்  அடுத்த சிடுக்கு  தமக்கை ரமணியிடமிருந்து.  எல்லோரிடமும் அவள் நல்ல பெயர் வாங்குகிறாள். போகட்டும். அதற்காக தனது குறைகளை ஒப்பிட்டுத் தாழ்த்திக்கொண்டே இருப்பவர்களால் துவளும் பாலுவின் தளிர் மனம் பதைத்துக் கொண்டே இருக்கிறது. 

பெயரின் முதல் எழுத்துக்களாலேயே குறிப்பிடப்படுவது அரசு அலுவலகத்தில், குறிப்பாக பள்ளியில் காணப்படும் முறைமை. இது ஒரு உடனடி அலுவல் தன்மையை உறவில் நுழைத்து விடுகிறது. அலுவலகத்தில் நாற்காலியின் அகலம் அதிகமாகும் தோறும் கண்டிப்பும் அதிகாரமும் அதிகமாகிக் கொண்டிருக்கும். பாலுவின் தந்தை ஒரு தலைமை ஆசிரியரைப்போலவே வீட்டிலும் நடந்து கொள்கிறார். அவர் பாலுவை ஒரு மேசைக்கு அப்பால் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறார்.  (இவனெல்லாம் எங்கே உருப்படப் போகிறான் என்ற கவலை உருப்படவேண்டும் என்ற கவலையிலிருந்து பிறக்கிறது.)  நாவலின் சமநிலை அனைத்துக் கதைமாந்தரின் முழுமையான ஆளுமைச்சித்திரத்தில் வெளியாகிறது. அலுவலகத்தில் நேர்மையும் ஊழியர்களிடம் பரிவும் கொண்டவர் எஸ் ஆர் எஸ். தன்னை அந்த எழுத்துக்களால் அழைக்கவேண்டும் என்ற அலுவலக ஜனநாயகத்தை வலியுறுத்துபவர்

பாலுவின் குழந்தைமை அழகிய கற்பனைகளைத் தன்னைச் சுற்றிப் பின்னிக் கொள்கிறது. குறிப்பாக வீட்டுத் தோட்டத்தில் வாழைக்கன்றுகள் ஒவ்வொன்றுக்கும் தன் உறவுகள் போலவே  பெயரிடுகிறான்.  . அப்பாவாழை , அம்மாவாழை, ரமணி வாழை என்று மரங்களின் அமைப்பின் மூலம் அவற்றின் குணச்சிறப்புகளை உருவாக்கிக் கொள்கிறான்.   ஜெயமோகனின் யானை டாக்டரில் வரும் புழுக்குழந்தையை இந்த வாழைக்குழந்தைகள் நினைவுறுத்துகின்றன. புதிதாய்ப் பிறந்த இரட்டைக் குழ  ந்தைகளை குரங்குக் குட்டிகளாக அவன் மனம் கற்பனை செய்கிறது.  குரங்கின் குழந்தையை மிக ஆசையாகக் கண்டிருக்கக் கூடும். கற்பனை மனம் மிகவும் நொடிசலானது. அப்பாவின் கண்டிப்பில் இருந்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள உருவாக்கிக் கொள்ளும் கற்பனைகள் அவனது மனச்சிக்கலை அதிகரித்து சுயவதைவரை கொண்டுவிட்டுவிடுகின்றன.  அவன் விஷமங்கள் செய்வது புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கத்தான் என்பது உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்தும்

 ரமணி பொதுவாக பெண்குழந்தைகளின் ‘சமர்த்து’ அச்சில் பொருந்துகிறாள். பாயில் சங்கு படத்தின் மீது முதுகு அமையும்படி கச்சிதமாக படுத்துக் கொள்வது, பெரியவர்கள் போல அழகாக உடையை மடித்துவைப்பது,  என்று மிகத்துல்லியமாக பெரியவர்களிடம் நல்லபெயர்வாங்கி பாலுவிற்கு வீழ்ச்சியைத் தந்துகொண்டே இருக்கிறாள்.

லட்சுமியின் தங்கை வள்ளி ஆங்கிலப் பள்ளியில் சேருவதற்காக எஸ் ஆர் எஸ் வீட்டில் தங்கி பயிற்சி எடுத்துக் கொள்கிறாள். இங்கே இன்னுமொரு உளவியல் சிக்கல் தரப்படுகிறது வயதிற்கு மீறிய உடலமைப்பு,  தன் உருவை அமைத்துக் கொள்வதில், தொடர்புறுத்துவதில் சிக்கல், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு என்று படிந்து விட்ட கீழ்நடுத்தர வர்க்கத்தின் பதின் பருவப் பெண்ணின் உளவியல் கவலைகள் அவளைப்பிடித்துள்ளன.

குறுகிய காலமே வந்தாலும் ஒவ்வொரு கதைமாந்தரின் தோற்றமும் அவர்கள் பின்னாலுள்ள வாழ்க்கையைப் படமாக்கி விடுகிறது..  டாக்டர் பிஷாரடியை பைத்தாரன் என்று தனக்குள் திட்டும் ஃபிடில் ராமைய்யர் சக்க வரட்டி என்னும் பலாச்சுளை வறுவலை வர்ணிக்கும் இடம் சிறப்பு. எஸ் ஆர் எஸ் இன் ஆல்டர் ஈகோவாகிய சம்பத் பிரச்னைகளை துல்லியமாக அலசி தீர்வுகளை அளிப்பவர்.

நகரமயமாதலின் பல படிக்கட்டுகளைப் புரிந்து கொள்ளமுடிகிறது. கோட்டயம் நகரமாகி வருகிறது. ஒருவேளை தளியல் கிராமம் என்றால் கைம்பெண்கள் நார்மடிப்புடவையுடன் தான் நடமாடவேண்டி இருக்கும்.

சாமு  ; எஸ் ஆர் எஸ் இன் ஒன்று விட்ட தம்பி; ஒன்றுக்கும் உதவாத தந்தை . வீட்டில் வறுமை பிடுங்கி அழிக்கிறது. தனது இயலாமையை மகன் லச்சன் மீது காட்டும் அயோக்கியன். இப்படிப்பட்ட தந்தைகளைக் கொலை செய்யாத மகன்கள் நாட்டில் இருப்பது ஒரு இயற்கை அற்புதம்.

எஸ் ஆர் எஸ் தன்னைப்பெயர் சொல்லி அழைக்க்க்கூடாதா என்று லட்சும் ஏக்கம்கொள்கிறாள். ஆனால் தளியல்கிராமத்தில் பாட்டி சொல்வாள் “கலிமுத்திப் போச்சு” என்று. மனைவியுடன் பொது விஷயங்களை விவாதிக்கும்.  கணவன் பெரும் புரட்சி செய்தவனாகிறான்.

எஸ் ஆர் எஸ் நாத்திகனான ஷெல்லியைப் படிக்கிறானே என்று அவர் மாமனார் சேது ஐயருக்கு வேதனை. அவர் உருகுவது மில்டனுக்காக. மரபு உருவாக்கும் தரிசன்ங்களுடன் மோதும் எஸ் ஆர் எஸ் அதன் முரணியக்கத்தில் அலைபாய்கிறார் புதிய அவுட் ஹவுஸ் கட்டும்போது டாய்லெட் வீட்டிற்குள் வைக்கவிரும்பவில்லை. ஆனால் அதை  ஆலோசனை கூறிய சம்பத்திடம் சொல்லப்போவதில்லை.

எஸ் ஆர் எஸ் வீட்டு வேனல் பந்தலில் பொதுவிவாதம் நடத்தும் நண்பர்களின் கூட்டம் பாரதி கூறும் இடிப்பள்ளிக்கூடம் போலவே உள்ளது. உச்சகட்ட விவாதத்தின் நடுவே  பிடில் ராமய்யர் தூங்கி விழுந்து கொண்டிருப்பார். மதியம் மகாதேவர் கோயிலில் சாப்பாடு என்று சில வரிகளுக்கு முன்னால் சொல்லி இருப்பார் சு ரா. (நான் கவிதைக்கடிமை; நண்பர்கள் புளியஞ்சோற்றுக்கு அடிமைகள்  என்ற பாரதியாரின் குறும்பு நினைவுபடுத்தப்படுகிறது)

ஐதிகத்தின் படி திருவக்கரை  தேவ சுவாமியிடம் இடம் கருவறையில் இடம் கேட்ட கிணறு  கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்கிறது. அது அம்மாவின் படுக்கை அறை அருகே வந்துவிடும் என்று அஞ்சுகிறான் பாலு. நகரும் கிணறு  நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், காலம் , உறவுகளின் நீண்டகால மாற்றத்தைக் காட்டுகிறதா?

மரபின் மீது மோதலைச் செலுத்திக் கொண்டே இருப்பது நாவலின் இயல்புகளில் ஒன்று  என்கிறார் ஜெயமோகன். ஆனால் மரபின் மீதான விமர்சனத்தை கொந்தளிப்புடன் காட்டியிருக்கும் சு ரா மறுபக்க விவாதத்தை (காந்தியம் அல்லது மெய்யியல்)  வலு குறைந்த மாந்தர் மூலம் முன்வைக்கிறார். தந்தையின் திவசத்திற்குப் போகாமலிருப்பதன் மூலம் எஸ் ஆர் எஸ் தனது சுதந்திரப் போக்கையும் தர்க்கமில்லாத மரபு மீதான எதிர்ப்பையும் வலியுறுத்திக் கொள்கிறார். கூடவே அதனால் பெரும் அலைக்கழிப்பும் அடைகிறார். அவர் மனைவி இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என அஞ்சுகிறார்.

எஸ் ஆர் எஸ் காணும் கொடூரக் கனவு ஃப்ராய்டியத்தின் படி அடக்கப்பட்ட ஆசைகளைக்குறிக்கிறது.  குழந்தைப் பருவ அனுபவங்கள்  ஒரு ஆளுமையை அதிகம் பாதிக்கின்றன என்பது தெளிவாகவே வெளிப்படுகிறது.  எஸ் ஆர் எஸ்க்கு சிறுவயதில் மரமேறத்தெரியாது. அதே போன்ற ‘worldly wise” இன்மையால் பாலுவும் தாழ்வு மனப்பான்மைக்குள் சிறிது சிறிதாக வழுக்கிக் கொண்டு செல்கிறான். தன்னைப்போல இல்லாமல் திறமையுடன் வாழ்வேண்டும் என்ற ஆதங்கத்தினாலேயே எஸ் ஆர் எஸ் பிள்ளை வளர்ப்பில் தவறுகள் செய்கிறார்.

குழந்தைப் பருவத்தின் கழிவுநீக்கப் பயிற்சி சரியாகத் தரப்படாவிட்டால் குழந்தை பதட்டத்தில் சிறைப்பட்டு விடும் என்பது ஃப்ராய்டின் மற்றொரு கூற்று.  பாலு வெவ்வேறு இடங்களில் சிறுநீர் கழிப்பதைப் பற்றிக் கவலையும் கேள்வியும் அடைகிறான். ஃப்ராய்டின் நான்கு நிலைகளில் திகழும் பாலியல் உளவியல் வளர்ச்சி நிலைப்படிகளின்  செலாவணி கேள்விக்குள்ளாக்கப் பட்டுவிட்ட்து. எனினும்  அதிகமாகவோ அளவுக் குறைவாகவோ பெற்றோர்களால் பயிற்றுவிக்கப் பட்ட குழந்தைகள் உளவியல் சலனங்கள் கொண்டவர்களாக வளர்கிறார்கள் என்பதற்கு வாய்ப்புள்ளது. 

எஸ் ஆர் எஸ்இன் தம்பி பாலகிருஷ்ணன் ருத்ரம் சொல்லும் திறமையால் ஒரு வேலையைப் பிடித்துக் கொண்டவன் (வேதம் வேலை வாங்கித் தருகிறது).  அவன் பழமையை மறக்கவில்லை என்று காட்டிக்கொள்வதற்காக பழைய ட்ரங்க் பெட்டியுடனேயே வலம் வருகிறான்.  மாறாக, தனது பின்னணியைப்பற்றி தாழ்வுணர்ச்சி  கொண்ட வள்ளி, தனது அக்கா வீட்டில் ட்ரங்க் பெட்டியை மறைத்து வைக்கிறாள்  மரபிற்கு உருவமாக பெட்டியைக் கொண்டால், மரமைக் காட்சிப்பொருளாக்கி ஒருவன் பிழைக்க முனைகிறான். மரபை மறைத்துக் கொண்டு ஒருத்தி கடந்து செல்லவிரும்புகிறாள்.

மரபின் மீதான எள்ளல் தூவி விடப்பட்டுள்ளது.  வறுமையில்  உழலும் சமுவின் வீட்டில் மஹாலட்சுமி தாமரையில் அமர்ந்த கேலண்டரைக் காட்டிவிட்டு, தாமரை அதிக வலுவுள்ளது என்கிறார் சு ரா.  சாமுவின் வாழ்க்கையைப் பார்க்கும் போது பொருளில்லாத நிலை வறுமை இல்லை ; அதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை வற்றச்செய்து தாமசத்தில் உழல்வது தான் வறுமை என்பது தெளிகிறது.

பெண்ணியல் சரடு தொடர்ந்து இழையோடி வருகிறது. எஸ் ஆர் எஸ் பாட்டி காலத்தில் தாத்தா இறந்தபிறகு தான் அவர் அருகில் அமர்ந்தாள் பாட்டி; அடுத்த தலைமுறையில் அமர்ந்திருந்த அப்பாவின் பின்னால் தொலைவில் நின்று அம்மா போட்டோ எடுத்ததே புரட்சி; அடுத்த காலத்தில் கணவன் மனைவையைப் பெயர்சொல்லி அழைத்த்தே கலி முற்றியதன் அடையாளம்.  எஸ் ஆர் எஸ் இன் குறைகளுள் ஒன்று மனைவியிடம் மனம் விட்டுப் பேசமுடியாததே. இதுவே அவரது ஆளுமையை மொத்தமாக பாதித்துள்ளது எனலாம். அவர் தனது ஆணவத்தைக் காரணமாகக் கொள்கிறார். ஆனால் அவரிடம் வலுவாக ஊன்றியுள்ள மரபுப் பிடிப்பும் அதில் மீற முயலும் தோறும் அவர் தோற்பதும்  அவரை உளச்சிக்கலுக்குள் கொண்டுவிடுகிறது. உண்மையில் பிரச்னை குழந்தை பாலுவுக்குஅல்ல; அவருக்குத்தான்

முதிர்ச்சி அடைந்த மனைவியாக லட்சுமி மனோதத்துவ நூல்கள் இவருக்கும் (எஸ் ஆர் எஸ்) தானே பொருந்தும் என்று கேட்டுக்கொள்கிறாள்.  ‘தவிப்பும் அவருக்குத் தேவை’ என்று கணவனின் ஊசலாட்ட்த்தை அவதானிக்கிறாள் இதை “‘ தவிப்பும் மனிதனுக்குத் தேவை’ என்று சொற்றொடராக  விரித்துக் கொண்டால் நாவல் காலம் கடந்த பேசுபொருளின் களமாகிவிடுகிறது

கையெழுத்துகளைப் பற்றிய உதாரணங்கள் அழகாக உள்ளன. பைலி மாப்லேயின் கையெழுத்து சிட்டுக்குருவிகளின் நடனம் போன்றது; சாமுவின் கையெழுத்து சிறிய பூசணிக்காய்கள் மீது தண்ணீர் லாரி ஏறியதுபோல இருக்கும்.

எஸ் ஆர் எஸ் பெர்ட்ரண்ட் ரஸல் வாசிப்பவர்; “அறியாமை வாதம்” சார்ந்த கருத்துக்களைக் கொள்கிறார். (agnosticism) . ஃப்ராய்டும் கூட ஆத்திகவாதிகளும் நாத்திகவாதிகளும் உண்மையை அறிந்தவர்களில்லை; இருக்கிறாரா அல்லது இல்லையா என்று அறியமுடியவில்லை என்ற கருதுகோள் கொண்டவரே உண்மையை அறிந்தவர்கள் என்கிறார்.   சுந்தர ராமசாமியை இலக்கியத்தில் பண்டித நேருவின் மனநிலைக்கு ஒப்பிடத்தோன்றுகிறது. மானுடத்தின் மீது நம்பிக்கை, மரபை முற்றிலுமாக மறுதலித்தல்  , தீர்வுகளுக்கான மேற்கு நோக்கிய பார்வை.  அச்சூழலில் நம்பிக்கை தந்த தத்துவங்கள் இவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிரச்னை என்னவென்றால் மேலை நாட்டு உளவியலை மட்டும் பிடித்துக் கொள்வதால் கீழை உளவியலை நம்பவில்லை. மனம் தூங்கும் போது தூங்காத ஒன்று உண்டு ஒன்று நம்பவில்லை. மெய்த்தேடலும் மதமும்  சில ஆயிரம் ஆண்டுகளாக வலைபின்னி உருவாகிவிட்ட  மரபில் சிக்கெடுக்க விரும்பாமல் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது அண்டாவுடன் குழந்தையையும் சேர்த்து வீசிவிடும் பிரச்னை உள்ளது.

நாவல் முழுவதும் வாசக இடைவெளிகள் கிடக்கின்றன. எஸ் ஆர் எஸ் தான் மனைவியிடம் சொல்ல நினைத்த தனது சுய விமர்சனத்தைச் சொல்லி விட்டாரா?   முண்டன் மாதவன் சீதைக்கிடையே மண்ணெண்ணெய் கருப்பில் விற்கும் தொடர்பு மட்டும் தானா? சுகன்யா- வள்ளி நட்பு உருவாவதன் காரணம் என்ன?; ஆச்சரியமூட்டும் விதத்தில் ஸ்ரீதரன் – வள்ளி திருமண ஏற்பாட்டை அவன் அம்மா ஒத்துக் கொள்வது ஏன்? இப்படி

டாக்டர் பிஷாரடியின் மனைவியின் மூலமாக மற்றுமொரு மனநோய்க் கோணம் காட்டப்படுகிறது.  அறிகுறிகளைப் பார்த்த்தும் ஹிஸ்டீரியா எனத் தோன்றுகிறது. ஆனால் அது அமெரிக்க நோய்ப்பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுவிட்ட்து. மனச்சிதைவு (schizophrenia), எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு (borderline personality disorder),  மாற்றுக் கோளாறு (conversion disorder), பதட்டத் தாக்குதல் (anxiety attack)  என்று வரையறை செய்யப்பட்ட மனநோய்ப்பிரிவுகளில் ஹிஸ்டிரியாவின் அறிகுறிகள் அடக்கப்பட்டுவிட்டன் . குழந்தைப் பிரசவத்தின் முன்னர் அவளுக்கு நோய் அதிகமாவது நோய்க்கூற்றியலில் விளங்கிக் கொள்ளக் கூடியது. முதல் குழந்தை 19 வயதான பின்னும் குழந்தைகள் பெற்றுக் கொண்டிருப்பது இருவருக்கிடையேயான சிக்கலான உறவுமுறை பற்றி வாசக ஊகத்திற்கு விடப்பட்டுள்ளது

தனது கருத்துக்கள் புண்படுத்தி விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு சொல்லையும் அல்லது மொத்தப் பேச்சையுமே விழுங்கி விடும் லட்சுமி மாதிரியான  இந்திய மனைவிகளைக் குறிக்கிறார். தற்காத்தலுக்காக யோசித்துச் சொல்லுதல் என்னும்  defence mechanism நனவிலா மனத்தில் கையாளப்படுகிறது.

அப்பா- மகன் உறவுச் சிக்கலின் மூன்று உதாரணங்கள். எஸ் ஆர் எஸ் – பாலு , டாக்டர் பிஷாரடி – ஸ்ரீதரன்,  சாமு-லச்சம் ; வாசகனை அதிகம் பாதிப்பது  குழந்தை பாலுதான். ஒன்பது வயதுக்குள் அவனுக்குள் பரிபூரணத்தை நிறைக்க விரும்பி  கொந்தளிக்க வைக்கும் அப்பாவின் மீது அவனுக்கு மரியாதை கல்நத அச்சமும் வெறுப்பும் சுயவதையும் வளர்கின்றன. தன் தாயின் மன்நோய்க்குக் காரணமானவர் என்று எண்ணும் தந்தை பிஷாரடி மீது ஸ்ரீதரன் நிகழ்த்தும் பழி வாங்கல் அவர் தன் மீது வைத்துள்ள கனவைக் குலைப்பது தான். கம்யூனிசம், வெள்ளைய எதிர்ப்பு இவையெல்லாம் மேல்மனம் பூசிக்கொண்ட சாயம் போலத்தான் தோன்றுகிறது. ஒன்றுக்கும் உதவாத பெற்றோரை அடைந்த லச்சம் தன் கடும் உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கை அளிக்கும் இலேசான நூல்களைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறுகிறான். ஆனால் வஞ்சமும் வன்மமும்  கூடவே வளர்கின்றன. மூன்று இணைகளில் தந்தையை உண்மையில் பழிவாங்குபவன் லச்சம் தான், தன் மரணத்தின் மூலம்.

டாக்டர் பிஷாரடி தனது ஆயுர்வேதம் படித்த மகன் அப்புவின் மூலம் வாழ்க்கையை மீட்டெடுத்துவிடுவார். ஊரை விட்டுச் செல்லும் எஸ ஆர் எஸ் குடும்பம்  மீண்டுவிடும் போலத்தான் தோன்றுகிறது. (கஷ்டம் வந்தால் தான் குடும்பத்தில் ஒற்றுமை வருகிறது) . எஸ் ஆர் எஸ் சமையலறையில் முதல்முதலாக நுழைவதும் பாலு காரின் முன்சீட்டில் அமர்வதும்  பாலு ஒரு மனிதனாக பரிணமித்தை அவன் தந்தை ஏற்றுக் கொள்வதைக் காட்டுகிறது.   சுகந்தி, வள்ளி இவர்களின் நிலை காலத்தின் முன் விடப்பட்டுள்ள கேள்விகளாக உள்ளன.

பாலுவின் அக்கா ரமணியின் உளவியல் முடிச்சுகளும் நன்றாக செதுக்கப்பட்டுள்ளன. அவளுக்கும் கோபித்துக் கொண்டு உட்கார  அம்மாவின் அறையில் ஒரு மூலை உண்டு (பாலுவுக்கு கோயில் திண்ணை போல ). ஸ்ரீதரனின் நட்பு வள்ளியை நோக்கித் திரும்பி காதலாக மலர,  மிக சராசரிப்பெண்ணாகி விடும் ரமணியின் உள மாற்றம், தொடக்கத்தில் காட்டிய அரிய மனமுதிர்ச்சிக்கு மாறாகவே  உள்ளது. மனதின் அடித்தள முடிச்சுகளை அவளே கண்டுகொள்ளும் இடம்போலும். ஆனந்தம் ஒரு நல்ல இரவில் வீட்டை விட்டுப் போய்விடவே, அம்மாவின் துணையுடன் சமையலைக் கற்கத்துவங்கும் போது மீண்டும் ரமணி என்ற குழந்தையின் பெற்றோர் மனநிலை வெளிப்படுகிறது.  தொடக்கத்தில் நடக்கும்போதும் ஏணியில் ஏறும்போதும் அழகாக உடையை உயர்த்திக்கொண்டும் இடுக்கிக்கொண்டும் பயின்ற ரமணிக்கு சமையலின் போதும் அதே  பழக்கம் பாதுகாப்புக்கு அவசியமாக மாறுகிறது. அழகியலும் கலையும் தேவை மற்றும் வாழ்க்கைப்பாட்டிற்கு வழிவிட்டே ஆகவேண்டும் போல.

இதே நிலை எஸ் ஆர் எஸ் க்கும் வருகிறது. தொழிலில் தோல்வி, வாழ்வில் தான் கொண்ட நம்பிக்கைகளை செயலாக்க முடியாத தன்னிரக்கம் எல்லாம்  படிப்பறிவை விட அனுபவம் தரும் பாடங்கள் மூலம்  விலகிவிடுகின்றன. கோட்டயத்தின் கடைசி இரவில் அவர் நெருங்கிய நண்பரான டாக்டரைப் பார்த்தாரா என்று தெரியவில்லை . ஆனால் கனவுபோல உறக்கம் நழுவும் முன் அவர் கண்ட காட்சிகளில் ‘சம்மட்டியால் அடி’ என்று கற்பனையாக உலையில் வேலை செய்யும் பைத்தியத்தின் உருவம் அவருக்குத் தோன்றுகிறது. அவரை சம்மட்டியால் அடிப்பது யார்? உறவுகளா, அனுபவங்களா, காலமா, வாழ்க்கையா/ இவை எல்லாமா?

ஊர் மாற்றிச் செல்வது எளிதல்ல;  அதுவும் குழந்தைகளுக்கு புரட்டிப்போடும் அனுபவம் ;   போட் ஜெட்டியை , மீனச்சல் ஆற்றை, தான் வெற்றிபெற்ற ஊரை விட்டு  கவலையுடன்  பிரியும் எஸ் ஆர் எஸ் இன் துயரை விட படிக்கட்டையும் கிணற்றையும் பிரியும் பாலுவின் துயர் ஆழமாகப் பதிந்துவிடுகிறது

காரணம் அறியா மனச்சோர்வு, காரணம் தெரிந்த மனச்சோர்வு இரண்டும்  கதாமாந்தர்களை மாறி மாறித்தாக்குகின்றன. டாக்டர் பிஷாரடி நல்ல டாக்டரோ இல்லையோ நல்ல மனிதர்; காந்தியிடம் பக்தியும் மகன் அதிகாரியாக வேண்டும் என்ற முரணான ஆசையும் ஒருங்கே கொண்டவர்;  உதவும் ஜீவன். மருத்துவத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர்; படிப்புத்திறனுக்கும் வாழ்வியல் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை என்ற உண்மையின் லட்சக்கணக்கான ருசுக்களில் ஒன்று; நோயாளியிடம் வேதாந்தம் பேசுபவர்;

கனவுகள் ஆழ்மனதின் வெளியே வெடிக்கும் குமிழ்கள் என்கிறது ஃப்ராய்டியம்.  கனவிலும் மனது ஒன்றை மறைத்து வேறு ஒன்றை குறியீடாகப் பூசிக்கொள்கிறது ; கனவில் வரும் புற உண்மைகள் அல்ல; அது உருவாக்கும் உணர்வு நிலையே ஆராயவேண்டியது என்கிறது கனவியல். சுகன்யா காணும் கனவில் தந்தை பிஷாரடி வலது கையும் வலது காலும் இல்லாமல் பெரும் காற்றில் அலைபாய்கிறார். மனைவியும் மூத்தமகனும் கைவிட்டதன் குறிப்பா இது?

இந்நூலை தந்தை வெறுப்பாற்றியல்  என வகைப்படுத்தலாம். சுகன்யாவின் ஆண் வெறுப்பு தந்தைவெறுப்பிலிருந்து வந்திருக்கக் கூடும். ஆண்களெல்லாம் முரடர்கள் – சாது முரடர், தந்திர முரடர், சுயநல முரடர் மற்றும் முரட்டு முரடர் என்ற அவளது வகைப்பாடு ரசிக்கத் தக்கது.

மரபு  – மரபை மறுத்தல் இரண்டுக்குமான  பூசல் மனித மனங்களை வாட்டிக்கொண்டே இருக்கிறது; தளியல் முகங்கள் என்ற சொற்றொடர் முகமறியா சமூகம்,நட்பு, உறவுகள் ஊர் அலர்/ சமூக புறக்கணிப்பு / ஊர் வாய் இவற்றின் திரண்ட உருவகமாகின்றன

வாழ்வு தரும் உச்ச கட்ட வஞ்சங்களை வென்று யானை மீது ஏறி நின்றுவிடும் லச்சம் ஓர் அரிய வகைமாதிரி; லச்சம் அவனது அப்பாவை மிரட்டும் இடத்தில் சாமு முக்கால் பங்கு இறந்துவிடுகிறார். அதன் பின் அவன் தன் இறப்பினால் அவரைத் தோற்கடித்துவிடுகிறான்.

வேனில் பந்தல் கீழ் எஸ் ஆர் எஸ் வீட்டில் நடக்கும் நண்பர்கள் சந்திப்பு சிந்தனைகளின் பலவேறு தரப்புகளைக் காட்டுகிறது. சிறுகச் சிறுகத்தான் சீர்திருத்தம் வரமுடியும் (சம்பத்), புரட்சி வெடித்து இல்லாமையை விரட்டவேண்டும் (கருநாகப்பள்ளி ஜோசப்) , ஆன்மத்தேடலே வழி (குமாரசாமி) , அதிகாரவர்க்கத்தின் மீதான அவநம்பிக்கை எதிர்மனநிலையை அளிக்கிறது (கோவிந்தன் குட்டி), தனிமனித சிக்கல்களுக்கு நூல்கள் மூலமான் தீர்வு காணல் (எஸ் ஆர் எஸ்) இப்படி பல கருத்துக்கள் புழங்கிய பந்தல் வீட்டைக் காலி செய்யும் நாளன்று சணல்களும் குப்பைகளும் பரவிக் காட்சியளிப்பது என்னவோ செய்கிறது.

கடைசி வரை எஸ் ஆர் எஸ் ஒரு அவுட் ஹவுஸ் கட்டவே முடியவில்லை ஆனால் அதற்கு வைத்திருந்த செங்கல் மீது கட்டிய குடிசை குழந்தைகளை குதூகலப்படுத்தியது. அதைக் கட்டியவன் லச்சம். வாழ்வில் நிலையான கற்பனைகளை வளர்த்துக் கொள்வது வாடகை வீட்டில் நிரந்தரக் கட்டுமானம் அமைப்பது போன்ற முட்டாள்தனமோ? இங்கே அழகிய குடிசையை உயரத்தில் கட்டி விளையாடுவது தான் மகிழ்ச்சிக்கு வழியோ? அதிலும் பிறர் மகிழக் குடிசை அமைக்கும் லச்சம்   ஒரு மகத்தான ஒளியின் சாத்தியக்கூறாகத்தெரிகிறான்.

எஸ் ஆர் எஸ் உறங்கும் முன் காணும் அரை நினைவுக் காட்சியில் பெரும் கூக்குரல்  தரும் கைப்பந்து விளையாட்டைக்காண அந்த ஒலி வரும் சந்துகளில்  ஓடுகிறார். விளையாட்டு முடிந்து விடுகிறது. பலருக்கு இவ்வாழ்வில்விளையாட்டைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அந்த ஆரவாரம் காதில் விழுகிறது. அது விளையாட்டைக் காண விட்டுவிட்டதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளச்செய்கிறது. பாலுவின் மனநிலையை தந்தைகள் பெற்றுக் கொண்டுவிட்டால் அடைவதும் இல்லை விடுவதும் இல்லை; கற்பனையின் குறுகுறுப்பே போதுமானது.

காலம் கடந்து நிற்கும்  உளவியல் சிக்கல்கள் அவற்றின் தீர்வு அல்லது தீர்வின்மையை குடும்ப- சமூக – உறவுகளின் ஊடாட்டத்தில் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் காட்சிப்படுத்தும் படைப்பு.

சுடர்வுகள்

* குழந்தைகள் வயிறு காய்ந்தால் பூமி வெடித்துவிடும்

* பெண்களும் யோசிக்கலாம் என்பதே புதுமை

* திணிக்கப் பட்ட தியாகத்தின் பலிகளே இந்தியர்கள்

*  குழந்தையின் மனதும் அடர்த்தியானது தான். அதன் எளிய மொழிவழியாக உள்ளே நுழையமுடியாது

* குழந்தை என்பது பெரியவர்களின் சிறிய உருவம் இல்லை

*நாகரிகப்படுத்தும் முயற்சி மனச்சிதைவை ஏற்படுத்தக் கூடும்

* பகுத்தறிவை உறவுகளுக்கிடையே கொண்டுவந்தால் உறவுகள் முறிந்துவிடும்

* மனிதன் ஒரு கலாச்சார ஜீவன். மரபும் மரபின் தொடர்ச்சியும் அவனுக்கு முக்கியம்

* நம் இருப்பை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது தான் துன்பம்

.*  காலத்தோடு பிணைந்திருப்பதே துன்பம்

ஆர் ராகவேந்திரன், கோவை