‘பொட்டக்காடா இருந்தாலும் அதுதாண்டா
உனக்கு அடையாளம். நீ செத்தா விளப்போற எடம்டா அது. நாளைக்கு உம்பிள்ளையும் அங்கதான்
அடங்குவான்…டேய் மண்ணில்லாதவன் மனுசனில்ல.
மிருகம்…தெரிஞ்சுக்க’
சுடலையிடம்
சேத்துக்காட்டார்
(ஆசான் திரு.ஜெயமோகனின் குருதி சிறுகதையில்)
****
மண்ணும்
மனிதரும் நாவலைப் படித்துக்கொண்டிருக்கும்
போது அடிக்கடி மனதில் தோன்றிக்கொண்டிருந்த பெயர் சேத்துக்காட்டார். ஆசானின் குருதி சிறுகதையில் வரும் கதாப்பாத்திரம். ஆனால், அந்தச் சிறுகதையின் களமும், மையமும் முற்றிலும் வேறானது. எனக்கு ஏன் அந்தப் பெயர் தோன்றிக் கொண்டேயிருந்தது என்பது புதிர்தான்.
நாவலில்
வரும் லச்சன் பாத்திரம் துவக்கம் முதலே தன் வீட்டை, நிலத்தை, ஊரை விட்டு விலகியே இருப்பது அவனது தான்தோன்றித்தனமான வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கலாம். அதே சமயம், அம்மண்ணின் மீதான பிடிப்பே லச்சனின் அத்தை சரஸ்வதி மற்றும் மனைவி நாகவேணி இருவரையும் மீண்டும் மீண்டும் “கோடி” கிராமத்திலேயே இருக்க வைக்கிறது.
கணவனை
இழந்த சரஸ்வதி தன் புகுந்த வீட்டில் (மந்தர்த்தி) சிக்கலில்லாமல் வாழ்ந்திருக்கக்கூடும், என்றாலும் தன் பிறந்த வீட்டுக்காக இறுதிவரை உழைக்கிறாள். மறுபக்கம் தன் பிறந்த வீட்டில் நிம்மதியான வாழ்க்கை வாழ இயலும் என்றபோதும் நாகவேணியோ மீண்டும் மீண்டும் ”கோடி” கிராம வாழ்க்கையையே தேர்ந்தெடுக்கிறாள். தன் மாமனாரான இராம ஐதாளர் தன் பெயரில் எழுதிவைத்த சொத்தை, சின்ன சஞ்சலத்தால் இழந்ததன் குற்றவுணர்ச்சி, கூடவே தன் மகன் ராமன் மூலமாக, ஐதாளர் குடும்பத்தின் சொத்தை, கெளரவத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமை தனக்கிருப்பதாக நாகவேணி கருதுவதும் அவளை கோடி கிராமத்திலேயே வைத்திருக்கிறது. மாறாக, சரஸ்வதியை மந்தர்த்தியுடன் கட்டி வைக்கும் எவ்வித பிணைப்பும் இருப்பதில்லை.
லச்சனின்
பொறுப்பின்மையால்
பெரும் மனச்சுமை கொள்ளும் நாகவேணி, ராமனின் வாழ்க்கைக்காக பிறந்த வீட்டுக்கு சென்று தங்குகிறாள் (பின்னர், சூழ்நிலையினாலும் புகுந்தவீட்டில் தனக்கிருக்கும் கடமையினாலும் கோடிக்கே திருப்புகிறாள்). ”கோடி” கிராமத்தில் ஓயாது வேலை செய்து பழகிவிட்டதால், பிறந்த வீட்டில் அவளுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. ஆர்வத்துடன் அவள் கற்றுக்கொள்ளும் வயலின் இசை அவளது மனவருத்தங்களுக்கான தற்காலிக மருந்தாக அமைகிறது.
இராம ஐதாளர் தன் சகோதரி சரஸ்வதியையோ அல்லது முதல் மனைவி பார்வதியையோ
குடும்ப விசயங்களில் கலந்து ஆலோசிக்கும் அளவுக்கு பொருட்படுத்துவதில்லை. நாவலின் துவக்க
அத்தியாயங்களில், சரஸ்வதி இக்குறையை நேரடியாக வெளிப்படுத்தவும் செய்கிறார். ஆனாலும், பெண்களை பெரிதும் பொருட்படுத்தாத ராம ஐதாளர் தன்னுடைய வீட்டில் ஒருவருடைய குரலுக்கு விஷேச மரியாதை தந்தாரென்றால் அது சரஸ்வதியின் குரலுக்கு மட்டுமே. தன்னுடைய இரண்டாம் திருமணத்தின் போது கோபித்துக்கொள்ளும் சகோதரியை சமாதானப்படுத்துவது, சீனப்பன் வீட்டைப் பார்த்து தன் வீட்டை மாற்றி அமைக்க எண்ணும்போது சரஸ்வதியின் அறிவுரையைக் கேட்பது என பல இடங்களில் சரஸ்வதிக்கான முக்கியத்துவம் வெளிப்படுகிறது.
இந்நாவலில், ஐதாளர்
முக்கியமான ஒரு விசயத்தில் சரஸ்வதியின் பேச்சை மதிப்பதில்லை. அது லச்சனின் படிப்பு. பார்வதியுடனான லச்சனின் பாசத்தை கட்டுப்படுத்த வேண்டிய தேவை சத்தியபாமைக்கு இருக்கிறது. சீனப்பனின் வளர்ச்சி, அதனால் ஊரில் உயரும் அவனது செல்வாக்கு, கூடவே புரோகிதத்துக்கான மரியாதை குறைதல், இவற்றை எதிர்கொள்ள லச்சனை ஆங்கிலம் கற்கவைக்க எண்ணுகிறார் ஐதாளர். இவற்றால், லச்சன் அவனது பாட்டனார் படுமுன்னூர் மாதப்பையர் வீட்டில் தங்கிப் படிக்க நேர்கிறது. லச்சன் கோடியிலேயே வளர வேண்டியதன் அவசியம் குறித்த சரஸ்வதியின் வாதம் ஐதாளரிடம் பலனளிக்கவில்லை. அவ்வகையில் தன் வீட்டார் மீதான லச்சனின் விலக்கம் சரஸ்வதியால் முன்கூட்டியே யூகிக்கப்படுகிறது. அந்த விலக்கமே மெல்ல மெல்ல லச்சனை இருளை நோக்கி நகர்த்துகிறது.
லச்சனின்
மகன் ராமன், தன் தாய்வீட்டார் உதவியுடன் படிக்கிறான். சிறுவயதில் கிறுக்கல்களாக ஓவியங்கள் வரைபவனாகவும், வயலின் கலையில் கொஞ்சம் ஞானமுள்ளனவனாகவும் வளர்கிறான். கோடி கிராமத்துடனான அவனது உறவு இரண்டு விசயங்களால் வலுப்பெறுகிறது. ஒன்று கோடி கிராமத்துடனான நாகவேணியின் பிணைப்பு, இரண்டாவது ராமனின் “கடல்” பித்து. படிக்கும் காலத்திலும், பின்னர் வேலை தேடும் தருணங்களிலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் கோடி கடற்கரையில் அமர்ந்து தன் அன்னையுடன் பேசி மகிழ்கிறான் ராமன். வேலை தேடி சென்னை, பம்பாய் என பெரு நகரங்களில் வாழும் போதும், அவ்வூர்களின் கடற்கரைகள் “கோடி” கடற்கரை அளவுக்கு அவன் மனதுக்கு நெருக்கமாயிருப்பதில்லை. ஓவியக்கலை வித்தகர் நோவாவுக்கு அனுப்பவேண்டிய படமாக ராமன் வரைவது அவனது ஊரின் கடலைத்தான்.
சுதந்திரப்
போராட்டம்,
கம்யூனிசம் என அக்காலகட்டத்தின் இளைஞர்களின் ஆர்வம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தன்னை வேலையை விட்டு தூக்கிய பின்னர், அதுவரை வேலை பார்த்துவந்த ”ஸ்நோ” கம்பெனிக்கு முதலாளித்துவ பட்டம் கட்டும் கங்காதரன் பாத்திரம் வாயிலாக, அக்கால இளைஞர்களின் அரசியல், சமூகம் பற்றிய மேம்போக்கான புரிதலும் காட்டப்படுகிறது.
நாகவேணிக்கு
சொத்தை எழுதிவைத்ததன் மூலமாக, கோடி கிராமத்துடன் அவளைப் பிணைத்து வைத்த ஐதாளர், தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 30 பொன் காசுகள் மூலமாக பேரன் ராமனை மீண்டும் கோடி கிராமத்துக்கே வர வைக்கிறார். அவ்வகையில் லச்சன் விசயத்தில் நேர்ந்த பிழை, ராம ஐதாளராலேயே நிகர் செய்யப்படுகிறது.
நாவலைப்
படித்துமுடித்த
பின்னர் தோன்றியது “மண்ணின் மீதான பிடிப்பே ராமனை மீண்டும் அவனது கிராமத்து வாழ்க்கைக்குத் திரும்பவைத்தது. அந்தப் பிடிப்பில்லாத லச்சனின் வாழ்வு அலைக்கழிக்கப்படுகிறது”.
வாசிப்பில் நம்மை அணுக்கமாக உணரச்
செய்வதும் வாழ்வின் இடர்களுக்கு வேறொரு காலத்திலிருந்து தீர்வும் ஆறுதலும் அளிப்பதே
பேரிலக்கியத்தின் பயன்மதிப்பு என்றால், மண்ணும் மனிதரும்
நம் கண்ணீரைப் புரிந்து கொள்வதுடன் ஆறுதலாகத் தோள் தொடுகிறது.
சிவராம காரந்தின் ‘ மரளி மண்ணிகே ’ என்ற தலைப்பு மீண்டும் மண்ணுக்கே என்றே பொருள் தருகிறது. இருமொழி வல்லவரான
தி ப சித்தலிங்கப்பா அவர்கள் மண்ணும்
மனிதரும் என்று தன் மொழி பெயர்ப்புக்குப் பெயரிட்டுள்ளார். நாவலுக்குரிய விரிவு, கூர்மை ஆழம், சமநிலை
துலங்கிநிற்கிறது.
கதை அளிக்கும் மூன்றுதலைமுறைகளின்
சித்திரத்தில் மூத்தவர் ராமச்சந்திர ஐதாளர். ஐதாளர்
என்ற பெயர் மங்களூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக்கடலுக்கும் இடையில்
வாழும் கோடா பிராமணர்களின்
பிரிவைக்குறிக்கிறது. இவர்கள்
உடுப்பி, தென் கர்னாடக மாவட்டங்களில் வாழ்ந்து வருபவர்கள். கன்னடம் – துளு இணைந்த
ஒரு கிளை மொழி பேசுபவர்கள். அக்னியை முப்பொழுதும் வளர்த்து,ஓதிக் காப்பவர்கள் அல்லது காக்கவேண்டியவர்கள் (அஹிதா- காப்பவர்கள் ; அலை – நெருப்பு) என்ற பொருளில்
காரணப்பெயராக ஐதாளர் என்று வந்தது.
வேளாண்மை செய்யும் அந்தணப் பிரிவுப் பெண்கள், நிலத்தில் நட்டும், உழுதும்
அறுவடை செய்தும் கபிலை இறைத்தும் கடலில் நதி கலக்கும் கழிமுகத்தில் வரும் பெரிய கட்டைகளை விறகுக்காக உயிரைப்
பயணம் வைத்து நீந்திப் பறித்தும் வாழ்கிறார்கள். ஜெ
ஒரு சந்திப்பில் மங்களுரில் அந்தணப் பெண்கள் மரமேறும் தொழில் செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ராமானுஜர்
போன்ற சமூக மதிப்பு பெற்ற மகான்கள் பாரதப் பயணத்தின் போது சமய மறுஎழுச்சிக்காகப் பல
இனக்குழுக்களை அந்தணர் கடமை செய்பவர்களாக மாற்றியிருப்பதைப் படிக்கிறோம்.
ராம ஐதாளரின் நிலம் , கழிமுகப் பகுதியில் உள்ளது. காற்றும் மழையும் ஓயாது வேளாண்மையில் தலையிடுகின்றன. படுகஞ்சனான ஐதாளர் தனது இரண்டாம் திருமணத்தை (குறைவான கூட்டம் வருமென்பதால்) மழைக்காலத்தில் வைத்துக்கொள்கிறார். நான்கு நாட்கள்
திருமணச்சடங்கு நடக்கிறது. நான்காம் நாள் நாகவள்ளி.
நூலைப் படித்த்தும் ஒரு பெரிய
இயலாமையும் வியப்பும் எழுகின்றன. குந்தாப்பூர், உடுப்பி, மல்பி, , மங்களூர் போன்ற ஊர்கள் தென் கன்னடப்
பயணத்தில் இன்று நாம் பார்க்க்க் கூடியவை.. ஒவ்வொரு பேருந்து
நிலையத்திலிருந்தும் ஒரு சிறு வீதி ஒரு ஊருக்கு இட்டுச் செல்லும். அங்கே சதையும் உயிரும் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக; அவர்களின் பெருமூச்சுகளும் இன்பங்களும் மண்ணிலும் கடலிலும்
கலந்திருக்கின்றன. இந்த இந்தியப் பெருநிலத்தில் எங்கு சென்றாலும்
வியப்பூட்டும் ஒற்றுமையுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நீண்டகால சமூக வாழ்வைச் சமைத்தது
யார் என்ற வினா நம்மைத் துளைத்துக்கொண்டே இருக்கிறது.
தீண்டாமையை சரளமாகவும் கடமையாகவும்
கடைப்பிடிக்கும் காலம். மூன்று
தலைமுறைகளுக்குப் பின் பேரனான ராமன் காந்தியமும் கம்யுனிசமும் கற்று சுதந்திரப் போரில்
சிறை செல்லும்போது மாற்றம் நிகழ்கிறது.
ராம ஐதாளர் , அவரது இரண்டு மனைவிகள், கைம்பெண்ணான
தமக்கை, செல்லம் கொடுத்து, ஆங்கிலம்
பயிற்றுவித்து , கெட்டுப்போன மகனான லச்சன், அவனது
மனைவி நாகவேணி இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் ஊர்ப்பெரியவர்கள் , விவசாயிகள், நிலப்பண்ணையாட்கள்
என அதிகமான பாத்திரங்கள்
இருந்தபோதும் முற்பகுதியில் மிகச் சாம்பலான வண்ணத்தில் சோம்பலான கதியில் நகர்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த கிராம வாழ்வு ஒரு
புறம் வாழ்க்கைப் போராட்டங்களுக்கான கடின உழைப்பும் அந்த உழைப்பால் விளைந்த சலிப்பும்
எரிச்சலும் மறுபுறம் என– ஊர்கிறது கதை. எப்போதோ நிகழ்த்தப் படும் பாகவதக் கதையும் பக்கத்து
ஊர்த் திருவிழாவும் தான் கேளிக்கைகள். கடலும் கதிரவனும்
முகில்களும் மழையுமே பொழுதுபோக்குகள். மற்றபடி, வெயில் அடித்தால் வடகம், விறகு காயவைப்பது
மழை வந்தால் மாட்டை இழுத்துக் கட்டுவதும் உருளைக் கிழங்கு விதைப்பதும் என்று உயிரை
வாட்டும் அன்றாடத் தன்மையில் கதைமாந்தர் இயங்குகிறார்கள்.
கதையின் பெண்கள் அனைவருமே பொறுமையும்
சகிப்பும் கொண்டவர்கள். குழந்தையற்ற பார்வதி இரண்டாம் மனைவியான சத்தியபாமாவை
அன்புடன் ஏற்றுக் கொள்கிறாள். அவளும் புரிதலுடன் வாழ்கிறாள். ஐதாளரின் தங்கை சரசுவதி இவர்களுக்கு நீங்காத துணையாக
இருக்கிறாள். மகன் லச்சன் பெரியம்மாவிடம் ஒட்டிக் கொள்வதால் சற்று
தாயின் பொறாமை தலை தூக்கிவிடுகிறது. அதனாலேயே
தனது தந்தையின் ஊருக்கு படிக்க அனுப்புகிறாள். கட்டுப்பாடு
மீறி கூடாநட்பில் மகன்
லச்சன் வாழ்வைத்
தொலைக்கிறான். பணப்பேய் பிடித்தாடும் தந்தையான ஐதாளரை முழுமனதாக வெறுக்கிறான். சிறிது சிறிதாக அவரது அனைத்துச் சொத்துகளையும் அழிக்கிறான், அவர் கனவையும் உயிரையும் கூட.
வீட்டுப் பெண்கள் கடினமாக உழைப்பவர்கள்; வேலையைத் தொடங்கி விட்டு பாதியில் படுத்துக்
குறட்டை விடும் ஐதாளரின் முன்கோபத்திற்கு இடங்கொடுத்து குடும்பவிளக்காய் இருப்பவர்கள். சீதையின்
அச்சில் வார்க்கப் பட்டவர்கள்
ஐதாளர் கிராமத்தின் புரோகிதர். சோதிடமும் சில அஷ்டோத்தரங்களும் தெரிந்துகொண்டு தன்
ஜீவனத்தை ஓட்டுபவர். பணத்தாசை உள்ளவர். வில்வக்காயை பொடிடப்பாவாக பயன்படுத்துபவர், முக்கியமான நேரங்களில் வெள்ளிப் பொடிடப்பாவை வெளியே எடுப்பவர். வீட்டுப் பெண்களை மோசமாக நடத்துவதில்லை; ஆனால் ஒரு உயிருள்ள பிராணியாக மதிக்காதவர். ; பெரும் சிக்கனத்துடன்
பணத்தை சேர்த்து யாருமறியாமல் சுவரில் உள்ள பொந்தில் போட்டுவைத்திருப்பவர். அந்த பணம் அவருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் கொடுக்கிறது.
.
இங்கே சுவரிலுள்ள ஒரு பொந்து
ஒரு குறிப்பாக அமைகிறது. மெய்யறிவு நாட்டமும் ஆன்மத் தேடலும் மறைச்சொற்களின்
உண்மைப்பொருளும் அறியாமல் கிளிப்பிள்ளைகள் போல சடங்குகள் செய்யும் புரோகிதத் தொழிலின்
பிரதிநிதியாக நிற்கிறார் ஐதாளர். அவருக்கு செவிப்பரம்பரையாக வந்திருக்கக் கூடிய சில
ஞானச் செல்வங்களையும் புரோகிதம் என்னும் பொந்தில் போட்டுவிட்டு அலைகிறார். பணம், புரோகித ஞானம்
இரண்டுமே சுவரில் தேங்கி அவர் வாழ்வில் பயனற்றுப் போகின்றன. நெடுங்காலம் கழித்து வறுமையில் வாழ்வின் பெரும்பகுதியைக்
கழித்துவிட்ட ஐதாளரின் மருமகள் நாகவேணிக்கு ஐதாளர் ஒளித்து வைத்த ஒரு புதையல் பெட்டி
கிடைக்கிறது. அங்கிருந்தே அவளுக்கும் மகன் ராமனுக்கும் மீட்பு துவங்குகிறது. தாத்தாவின் ஆசிகளும் மரபின் பிடிப்பும் பேரனுக்கு கிடைக்கிறது.
புரோகிதத்தொழில் சமூக முன்னேற்றத்திற்கு
எதிராக இருப்பதை சுவாமி விவேகானந்தர் அளசிங்கருக்கு எழுதிய கடித்த்தில் குறிப்பிட்டுக்
கடுமையாகச் சாடுகிறார். சமயத்தின் சாறுகள் இறக்கிய பின் தேங்கிய இறுகிய சடங்குகளைப்
பிடித்துக் கொண்டிருப்பது இவர்களுக்குக் கடமையாகி விடுகிறது. இந்த மரபில் பொருளும் அறியாது மெய்மையும் எட்டாது எலும்புக்
கூடாகப் படிந்து விட்ட தொழிலின் பிரதிநிதியாக
இருப்பவர் மூத்த ஐதாளர்.
அவரது பேரன் வெளிக்காற்றையும்
நவீனக் கல்வியையும் சுதந்திரவேட்கையையும் பெற்றபோதும் தனது மண்ணையே பெரிதாக நினைக்கிறான். தனது மாமனார் கனவுகளுடன் கட்டிய வீட்டை கணவன் அடகு
வைத்த போதும் குத்தகைக்காரராக் அதே வீட்டில் வாழும் நாகவேணியின் அறம் சார் பிடிவாதமும்
அதே மண்ணில் விளைந்தவைதான். அவள் மகன் ராமன் சென்னை, மங்களூர், மும்பை எனப் பல கடல்களைப் பார்த்துவிட்டபோதும் அலைகொண்டு
ஆர்ப்பரிக்கும் தனது கிராமக் கழிமுகக் கடலைப்போல அவனை ஆற்றுவது ஏதுமில்லை. அந்தக் கடல் பல நேரங்களில் மண்ணையோ மழையையோ பேய் போலப்
பெய்து விடும் போதும்.
ஐதாளருக்கு பக்கத்து தோட்டத்தைச்
சேர்ந்த சீனப்பயரிடம் பகை வருகிறது, சீனன் ஓட்டு
வீடும் வீட்டிற்கு கதவும் அமைத்துக் கொண்டு விட்டதால் இவருக்கு மனது பொறுக்கவில்லை. இருவருக்கும் நிலம் வாங்குவதில் (அபகரித்துக் கொள்வதில்) போட்டி. நகர நாகரிகமும் வாய்ப்புகளும் கிராமத்தினரை ஈர்க்கின்றன. சீனனின் எட்டு மகன்களில்
ஒவ்வொருவராக பெங்களுர் சென்று ஹோட்டல்
தொழிலில் சம்பாதிக்கிறார்கள். எண்ணிக்கையில் அதிக உழைக்கும் நபர்கள் இருக்கும் குடும்பம்
மேலே செல்கிறது. கி ராஜநாராயணன் காட்டும் “கோபல்ல
கிராம மக்கள் “ சித்திரம்
போல. ( நிலம் நிறையக்
கிடைக்கும் போது எந்தக் குடும்பத்தில் நிலத்தில் உழைக்கும் ஆட்கள் அதிகமோ அந்தக் குடும்பம்
அதிக நிலத்தை எடுத்துக் கொண்டு அடுக்குகளில் மேலே செல்வது)
ஒரே சாதிக்குள் உட்பிரிவுகள் , அவற்றுள் விலக்கங்கள் , உயர்வு
தாழ்வு மனப்பான்மை என பல சமூகவியல் அடுக்குகள் சுட்டப் படுகின்றன. கோடா, சிவல்லி, கொங்கணி, கோடிஸ்வரா
எனப் பல உட்பிரிவுகள் பிராமணர்களில்; அவர்களுக்குள்
மண உறவு ஏளனமாகப் பார்க்கப் படுகிறது. உணவு கலத்தலும்
பெரும்பாலும் இல்லை.
வேளாண் சமுகத்திற்கும் நவீன ஆங்கிலம் சார்ந்த நகர வாழ்வுக்குமான
தவிர்க்கமுடியாத முரண் மனிதர்களை ஆட்டி வைக்கிறது . அலைபாயும் மனிதர்கள் மண்ணுக்கு
மண் இடம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் மண் பலவழிகளில் நிலைமாறுகிறது. ஆறு சேர்க்கும் வண்டல் விரும்பிச் சுரண்டி வயலில் சேர்க்கப்படுகிறது. சில நேரங்களில் பக்கத்து வயலை ஒழித்துக் கட்டவும் தன்
வயலில் மணல் மேடு உருவாக்கப் படுகிறது. மண் உரிமை
கைமாறிக் கொண்டே இருக்கிறது. எளியவர்களின் பலவீனத்தை தொடர்ந்து வலியவர்கள் சுரண்டி
வளைத்துப் போட்டுக் கொள்கிறார்கள். முக்கிய (எதிர்மறை) கதாபாத்திரமான
லச்சனின் மனது மண்ணைப்போலவே ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு உறவுகளில், நட்புகளில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு நிறம் மாறிக் கொண்டே இருக்கிறது லச்சன் அனைவராலும்
கையாளப்படுகிறான், ; தந்தையிடம் கொள்ளும் மிகுவெறுப்பும்
அவரது மரண காலத்திலும் கரையாத அவனது மனதும் தனித்தன்மை கொண்டவை. தீவிரவாதிகளின்
வெறுப்பு உளவியல் கொண்டவன்.
நாகவேணி ராகவேந்திர ராவின் இசையைக்கேட்பதால்
ஆர்வம் கொண்டு ஒரு முதிய குருவிடம் கற்றுக் கொண்டு இவர்கள் இருவரும் மெச்சும் அளவிற்கு
பயிற்சியை அடைகிறாள். அவளால் குருவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அவரது கண்ணீர் குற்ற உணர்விலிருந்து வந்தது. அந்தக் குற்ற உணர்வு வயிற்றுப் பாட்டுக்கு கலையை விற்றவர்
என்பதால் வந்த்து. இந்தக் கலை எழுச்சியின் வடிவை காடு நாவலில் கம்ப ராமாயணத்தை திண்ணையில் அமர்ந்து
படித்து தனக்குத் தானே பேசிக்கொண்டு இடைஇடையே மருமகளிடம் வசவு வாங்கும் முதிய நாடாரில்
காண்கிறோம். நவீன யுகத்தின் நீங்காத கரைகளில் ஒன்று கலைஉணர்ச்சியைத்
தட்டையாக்கியது தான் போலும்.
தாயைப்போலவே ராமனும் கேள்வி ஞானத்திலேயே
வாசித்து வயலினில் தன்னையும் பிறரையும் மயங்கச் செய்கிறான். மும்பையில் வேலை தேடி அலைந்து ஏமாறும் போதும் புதிய
ஆர்வத்தைக் கண்டு கொள்கிறான். ஓவியம் கற்க விழைகிறான். ஓவியக்கலையைக்
கற்றும் தரும் யூதப்
பெண்மணி நோவாவைத் தாயாக மதிக்கிறான். அவளுடன் தனது
ஊர்க் கடல் பற்றிப் பேசுகிறான். யூதர்களின் துயரைப் புரிந்து கொள்கிறான். அவளுக்கு வயலின் வாசிக்காட்டுகிறான். மும்பையில்
காணும் அரபிக்கடல் அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும்
கிராமத்திற்கு வந்து, ஆர்ப்பரிக்கும் கோடி கிராமக் கடல் காட்சியை அவளுக்கு
வரைந்து அனுப்புகிறான். இக்காலப்
புதினங்களில் ஒரு லட்சியத்தன்மையும் சுதந்திர வேட்கையும் ஆன்மிகத் தளமும் தொடர்ந்து
வந்துள்ளன. இந்தியாவின் புதிய எழுச்சியும் ராமகிருஷ்ணரின் மெய்த்தேடல்
அருளுரைகளும் கதையோட்டத்தில்
தொட்டுச் செல்கின்றன.
சூரன் நிலஉடைமைச் சமூகத்தின் அடித்தள மாந்தரின் தொடரும் அறத்தையும் உழைப்பையும் பிரதிபலிப்பவன். குத்தகைக்காக உரிமையாளருக்குக் கொடுத்த்து போக அவனுக்கு மிஞ்சுவது சொற்பமே. நில உடைமைக் குடும்பம் தாழ்வடையும்போது இலவச உழைப்பை நல்குகிறான். அவன் மண்போன்றவன். அகழ்வாரைத் தாங்குபவன். உழைத்தலைத் தவிர வேறு அறியாதவன். அவனால் ஏமாற்றவோ சுரண்டவோ முடியாது. ஏனென்றால் அவன் மண்ணோடு கலந்தவன். அவர்களின் மகன்களும் அதே உழைப்பை அளிக்கிறார்கள். தாங்கும் தட்டில் வாழ்பவர்கள் மெய்யாக ஏமாற்றத் தெரியாதவர்கள் அல்ல; ஏமாற்ற விரும்பாதவர்கள்.
கடல் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்
ஓட்டத்தில், ராமன் தாய்க்குக் கிடைத்த தாத்தாவின் புதையலால் நிலத்தையும்
வீட்டையும் மீட்டு, தனது 10 ரூபாய் ஊதியம்
தரும் பள்ளிக் கூட ஆசிரியர் வேலையுடன் கடும் உழைப்புடன் விவசாயத்தில் இறங்கி விட்டான்.
தனது திருமணத்தை ஒரே நாளில் சிக்கனமாக
வைத்துக் கொள்ளவும் அதற்காக அப்பளம் தயாரிக்கவும் சொல்லிவிட்டான்.
தாத்தா விரும்பியது போல (ஒரு வகையில்) ஆசிரியர்
தொழில் அவனுக்கு நிலைத்துவிட்டது. அவன் அன்னை கனவு கண்டது போல வீடும் நிலமும் நிலைத்து
விட்டன. ராமனின் கடல் அவனை விட்டுப் போகவில்லை. போகவும் இயலாது, இந்தியப்
பெண்களின் கண்ணீர் உப்பாக வற்றி இந்த மண்ணில் உரமாக ஊறி இருக்கும்வரை.
குறிப்புப் பொருட்கள்
ஐதாளர் திருமணத்தின் போது ஓயாமல்
காற்று வீசி பனையோலை ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. ஐதாளரின்
வாழ்வின் / கனவுகளின்/ வெற்று
அகந்தையின் வறட்டுத்தன்மையைக்
குறிப்பது போல ; வற்றிய
ஓலை சலசலக்கும் (நாலடியார்). அவர் பார்க்காமலே இறந்து விட்ட பேரன் ராமன்
பின்னர் இதே ஓலைக்கீற்றுகளின் ஒலியிலும் காயும் நிலவிலும் அலைகடலிலும் லயித்துப் போகிறான். ஐதாளர் வாழமுடியாத , அவர்
தேடலில் ஒளிந்து கொண்ட அவரது நேர்மறைக் கனவுகளை வாழ்கிறான் தலைமுறைகளாகத் தந்து கொண்டே
இருக்கும் மண்ணைப் போலவே சொல்லாத விருப்பங்கள் பெயரன்களுக்குக் கடத்தப் படுகின்றன போலும். அவரது மனப்பொந்தில் சேர்த்து வைத்த செல்வமே ராமன்.
மகன் வக்கீல் அல்லது தாசில்தார் ஆவதாக ஐதாளர் ஆசைப்படும்
இடத்தில் வண்ணத்துடன் வெடிக்கும் நீர்க்குமிழிகளும் அலைகளும் விவரிக்கப் படுகின்றன. லச்சன் நீர்க்குமிழி
வானவில்லில் இருந்து வெளிவரவே இல்லை.
பரண் மேல் வைத்து விட்ட பழைய இசைக்கருவியைப் போல தான்
எப்போதோ மறந்து விட்ட இசைப் பயிற்சியை ஐதாளரின் மருமகள் – லச்சனின்
புறக்கணிக்கப்பட்ட மனைவி- ராமனின் தாய் நாகவேணி கண்டுகொள்ளும் இடம் படைப்பைக்
காவியமாக்குகிறது. துயரும்
வாழ்வின் அனுபவமும் இணைவதால் அவளது மனது இசைக்கருவி மூலம் பேச முடிகிறது. ஒரு விதத்தில் வயலின் அவளது சக்தியின் புற அடையாளம். எப்போதெல்லாம்
வயலினை எடுக்கிறாளோ அப்போது ஆற்றலைப் பெருக்கிக் கொள்கிறாள்
. சுதந்திர வரலாற்று நோக்கில், சொந்த வீட்டில் கொள்ளை அடிக்கும் லச்சனை நடிப்பு சுதேசிகளுக்கும்
உழைப்புச் சுரண்டல் காரர்களுக்கும் ஒப்பிடலாம். வீட்டுடன்
பிரிக்க முடியாத வாழ்வுடைய நாகவேணி
போன்றோர் சொந்த
வீட்டில் குத்தகைக்கார்ர்களாக ஆவது நாடு அடிமைப்பட்டதற்கு நேர்.
*****
பழக்கங்கள். சடங்குகள், நம்பிக்கைகள்
மரண காலத்தில் நெருங்கிய உறவினரின் மடியில்
தலைவைத்துக் கொண்டு இறப்பது ( இதன் சமூக உளவியல் சமய பின்புலம் ஆராயத்தக்கது)