Unknown's avatar

About சொல்முகம் வாசகர் குழுமம்

கோவையில் செயல்படும் இலக்கிய வாசகர் குழுமம்

செடல் நாவல் வாசிப்பனுபவம் – விக்ரம்

எழுத்தாளர் இமையத்தின் செடல் நாவலை எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் அணுக்கமானதாக உணர்கிறேன்.  செடல் வாசிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக வாசித்திருந்த பைரப்பாவின் குடும்பம் சிதைகிறது – அதுவும் நஞ்சம்மா என்ற மையப்பாத்திரத்தின் வழியாக – ஒரு குடும்பத்தை சரியான பாதையில் நிலை நிறுத்த விரும்பும் நல்லபெண் –அவளது சகிப்புத்தன்மை, முயற்சிகள், துயரங்கள் – இறுதியாக ஊழால் முறிக்கப்பட்டு இறக்கிறாள்.  குடும்பம் என்ற அமைப்பு பெண்ணால் இருக்கிறது.  ஒரு பெண்ணும் இல்லாமல் ஆண்கள் மட்டுமே இருப்பது குடும்பம் அல்ல.  நஞ்சம்மாவின் மரணத்துடன் அந்த குடும்பம் சிதைந்து விட்டது.  அவளது கணவன் உயிருடன் இருக்கிறான்.  அவளது கடைசி மகன் பிளேக் நோயிலிருந்து தப்பியவனாக, பல இன்னல்களைக் கடந்து எஞ்சுகிறான்.  எனினும் இணைத்து நிலைநிறுத்தும் பெண் அங்கு இல்லை.  அவனுக்கு அதிகபட்ச நல்ல வாய்ப்பாக ஒரு நல்ல மனிதருடன் –அவர் ஒரு துறவி- அவன் செல்ல நேர்கிறது.  அந்த வகையில் –விஸ்வன் என்ற அந்த சிறுவனுக்கு ஆசிரியர் அளித்த வழியைக் கொண்டு – ஒருவகையில் நாவல் பாசிட்டிவாகத் தான் முடிக்கப்பட்டிருக்கிறது எனலாம்.  எனினும் இவ்வாறு நல்ல முடிவு மோசமான முடிவு என்றெல்லாம் எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தமானது, ஒரு இலக்கிய வாசகனுக்கு உரியதல்ல எனினும்….

பெண்ணை மையப்பாத்திரமாக கொண்டது.  பெண்ணின் இன்னல்களை கூறுவது என்னும் அந்த வகையில் மட்டும் செடலை குடும்பம் சிதைகிறதோடு ஒப்பிட்டுக் கொள்கிறேன்.  மற்றபடி நஞ்சம்மாவிற்கும் செடலுக்கும் நற்பண்புகளைக் கொண்ட பெண்கள் என்பதற்கு அப்பால் வேறு ஒற்றுமை இல்லை.  சமூக அடுக்குகளில் மேலே இருக்கும் இடத்தில் நஞ்சம்மா இருக்கிறாள்.  செடல் அந்த அடுக்கின் கீழே இருக்கிறாள்.  அதற்கே உரித்தான சாதக பாதகங்கள் இருவருக்கும் உண்டு.

செடல் வாசித்து வந்தபோது அவளை அழைத்துச் சென்று அவள் கூத்துக் கலைஞராக ஆக காரணமாக இருக்கும் பொன்னன் என்ற பாத்திரம் இறந்தவுடன் நாவலை சற்று நிறுத்தி – ஒரிரு நாட்கள் இடைவெளி விட்டு – தொடர்ந்தேன்.  குடும்பம் சிதைகிறது நஞ்சம்மா போல செடலுக்கும் அடுக்கடுக்காக – அதை விடவும் அதிகமான – தாளமாட்டாத துன்பங்ளை ஆசிரியர் வைத்திருக்கப் போகிறார் என்ற அச்சம் தான் காரணம்.  ஆனால் அப்படி எதுவும் இல்லை.  ஆசிரியர் இமையம் செடலுக்கு அதிகபட்ச சலுகையுடன், அவளுக்கு வழங்கப்பட அதிகபட்ச சாத்தியமுள்ள ஒன்றைத் தந்தே நாவலை முடித்தது மகிழ்ச்சியளித்தது.

ஒரு கூத்து கலைஞராக செடல் எதிர்கொள்ளும் எல்லா இடர்களுக்கும் அப்பால் அவள் கலைத் தெய்வத்தால் அருளப்பட்டவள்.  செல்லியம்மனுக்கு பொட்டுக் கட்டிவிடப்பட்ட பெண்ணான அவள் அப்படி கலையில் ஈடுபடுவதும் புகழடைவதும் –இறுதியாக கலையே தன் வழி என்று பயணத்தைத் தொடர்வதும் செல்லியம்மனின் அருள்தான்.  அவளுக்கான தெளிவை பாஞ்சாலி என்ற மூத்த கலைஞர் – அவளுக்கும் முன்னதாக அக்கலையில் இருப்பவர் – வழங்குகிறார்.  தன் கலைப்பயணத்தில் எதிர்கொண்ட துன்பங்களை கருத்தில் கொண்டிருக்கும் – தன் வாழ்க்கை குறித்து வருத்தம் கொண்டிருக்கும் செடலுக்கு, அக்கலையின் உயரிய தன்மையை கவனப்படுத்துகிறார் பாஞ்சாலி.  எத்தனை இடர்களுக்கும் அப்பால் ஒரு கலைஞராக இருப்பது எவ்வகையிலும் ஒரு நற்பேறு தான்.  செடல் ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் பொன்னனுடன் வந்திருந்தாலும், ஒரு விபத்து போல கூத்துக் கலைக்குள் நுழைந்திருந்தாலும், கலை அவளுடன் இயற்கையாகவே இயைந்திருக்கும் ஒன்று.

பைரப்பாவின் நஞ்சம்மாவும் இமையத்தின் செடலும் சமூக நடைமுறை கட்டுத்திட்டங்களும் ஊழும் அவர்கள் மீது எத்தகைய சூழ்நிலையைத் திணித்திருந்தாலும், தங்களுடைய தனிப்பட்ட மன இயல்புக்கு ஏற்ற  தன்னறத்தை இறுதி வரை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்கிறார்கள்.  தன் உடலின் மீது வேட்கை கொண்டவர்களை சமாளித்து தன்னை தற்காத்துக் கொள்கிறாள் செடல் (வீரமுத்து உடையார் என்னும் பணக்காரர் ஆனாலும் சக கலைஞனான ஆரானாக இருந்தாலும்)

சக கலைஞர்களாக அவளுடன் பயணிக்கும் பாத்திரங்களின் வாழ்வும், அவளது தோழியான விருத்தாம்பாளின் வாழ்வும் சொல்லப்படுகிறது.  செடலை மையம் கொண்டு பயணிக்கும் நாவலில் அப்படி தோன்றும் அத்தனை பாத்திரங்களும் தம்மளவில், சில பக்கங்கள் எனினும், தம் இயல்பின் அல்லது வாழ்வின் முழு தோற்றத்தைக் காட்டிச் செல்பவை ( செடலை வெறுக்கும் பொன்னனின் மனைவி, அவள் மீது அன்பு கொண்ட நல்ல சக கலைஞனான விட்டம் என.

செல்லியம்மனுக்கு பொட்டுக்கட்டி விடப்படும் சிறுமி செடலுடன் வசிக்கும் கிழவி பாத்திரத்தையும் முக்கியமாக குறிப்பிட வேண்டும்.  வயிற்றுப்பாட்டுக்கு ஒரு வழி என்று அதை அவர் ஏற்றிருந்தாலும் தன் இறுதிவரை செடலுக்கு ஒரு பாதுகாவலராக விளங்குகிறார்.

செடல் நாவலின் மொழி வட்டார வழக்கு என்றாலும் வாசிப்பிற்கு அது தடையாக இல்லாமல் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.  மொழியின் மீதான ஆசிரியரின் ஆளுமை –கையாளும் திறன், செடலின் சுற்றுப்புற இயற்கை சூழல் வர்ணனை இவற்றைக் குறிப்பிட வேண்டும்.  குடும்பம் சிதைகிறது அத்தகைய வர்ணனைகளில் சிக்கனமானது.

செடலை மிகச் சிறந்த நடனக் கலைஞராக, நடிகையாக, பாடகராக, கூத்து என்னும் நிகழ்த்துக் கலையின் உச்சத் திறன் பெற்றவராக ஆசிரியர் உறுதியாக நிறுவுகிறார்.  அதன் பொருட்டு அக்கலை குறித்து விரிவான சித்திரத்தை அளிக்கிறார். 

துவக்கத்தில் சொன்ன ”எனக்கு தனிப்பட்ட அணுக்கம்” என்பது என்னவென்றால் செடல் நாவலில் செடல் ஒரு சில பக்கங்கள் தன் மாணவர்களுக்கு நாடகம் கற்பிக்கிறாள்.  நடனம், நடிப்பு, வசன உச்சரிப்பு, என.

எனக்கு நண்பர் நரேன் உள்ளிட்ட மெய்களம் நாடகக்குழு நண்பர்களுடன் திரு. இளங்கோ குமாரவேல் அவர்களுடன் செலவிட்ட நாட்கள் நினைவு வந்தது.  சில நாட்கள் அவருக்கு மாணவனாக இருக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.  பல ஆண்டுகள் நாடகக் கலையில் இருப்பவரான அவர் – கூத்துப்பட்டறையில் இருந்தவர் – தெருகூத்து நிகழ்த்தியவர்.  நல்ல ஆசிரியர்.  செடல் கற்பித்த சில அவர் கற்பித்தது போலவே இருந்தது.  ஒரு நெகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியது.

சென்னை மொழியில்  அவர் ”எப்படி சொல்லுவீங்கோ? சொல்லுங்க” என்பார் வசனத்தை உச்சரிக்கச் செய்து.. .மீண்டும் மீண்டும் கூறச் செய்து திருத்தி…”சத்தமா….இன்னும் சத்தமா…இன்னும் சத்தமா”

அவரது வீட்டில் நாங்கள் வசனங்களை கத்தியபோது பக்கத்து அறையிலிருந்து அவரது மகள் கதவைத் திறந்து கொண்டு வந்து பார்த்துவிட்டு சிரித்துவிட்டு சென்றார்.  குமாரவேல் ”என் மகள்” என்று அறிமுகம் செய்தார்.  ”இந்த மாறி நாடகம் பிராக்டீஸ் பண்ணி ரொம்ப நாளச்சி…முன்னெல்லாம் இப்படித்தான் கத்திகிட்டு இருப்போம்.  அதுதான் ரொம்பநாள் கழிச்சி…சத்தம் கேக்குதேன்னு வந்து பார்த்து சிரிச்சிட்டுப் போறா” என்றார்.  இச்சமயத்தில் அவருக்கு நன்றி உணர்கிறேன்.  அவரை ஆசிரியராக அமைத்துத் தந்த ஆசிரியர் ஜெயமோகனுக்கு என் நன்றி.  வாய்ப்பளித்த இனிய நண்பர் நரேனுக்கு என் நன்றி.

பல காலம் தியானம் செய்பர்களுக்கு எப்போதேனும் ”சட்டோரி” எனக் கூறப்படும் ஒருவித மனதிற்கும் உடலுக்கும் மீறிய ஆனந்த அனுபவம் ஏற்படும்.  அது எப்போது நிகழும் எப்போது நிகழாது என்று சொல்ல முடியாது.  ஆனால் தியானிப்பவர்களுக்கு அது நிகழும்.  ஒரு மின்னல் கீற்றைப்போல.  அது அருள்.  ஒரு சுவை காட்டல் போல.  பாதையில் தொடர்ந்து பயணி என்று இறை தெரிவிப்பதாக அதைக் கொள்ளலாம்.

கலைஞர்களுக்கு அதையொத்த உயர்நிலை – கலையின் வழி நிகழ்கிறது என்று எண்ணுகிறேன்.  எந்த கலைஞனும் கலையை உதறிவிட முடியாமல் செய்வது அதுதான்.  நிகழ்த்து கலை, எழுத்து கலை என கலைகளிலும் அது நிகழ்கிறது.  பொருள், புகழ் எல்லாம் ஒன்றுமே இல்லை.  ஒரு குழந்தையைப் போல எம்பிக் குதித்து ஒரு கணம் தெய்வத்தின் கரத்தால் தூக்கி எடுத்து சுழற்றப்படுவதைப் போல.

செடல் அந்த உயரத்தின் வழியேதான் பயணிக்கிறாள்.  அவளைக் குறித்து வருத்தப்பட ஒன்றுமில்லை.  மற்றபடி சமூகம் உருவாக்கிக் கொண்ட நோய்கள் – அநீதிகள், மனிதர்களின் சிறுமைகள் – அவை வேறு, அதன் சமர் தொடர்ந்து செல்லும்.  ஒருநாள் நீதி உறுதியாக வெற்றி அடையும்.

கிராதத்தில் ஆசிரியர்கள் – விக்ரம் வாசிப்பனுபவம்

தம் வைதிக குரு நிலைகளில் முரண்பட்டு வெளியேறி தமக்குரிய ஆசிரியரைத் தேடி பயணம்
மேற்கொள்கின்றனர் பைலன், ஜைமினி, சுமந்து, வைசம்பாயனன் என்னும் நான்கு மாணவர்கள். பின்னாளில் வியாசரின் மாணவர்களாக பெரும் புகழ் பெறவிருக்கும் அவர்களின் பயணம் சண்டன் என்ற சூத இளைஞடன் இணைந்து செல்லும் அணுக்கப் பயணமாக அமைகிறது. தண்டகாரண்யத்திலிருந்து திருவிட நிலம் வரையில் அமையும் அப்பயணத்தில் சண்டன் கூறும் கதைகளின் வாயிலாக அர்ஜுனனின் திசை வெற்றி பயணம் கூறப்படுகிறது.

இரண்டு பயணங்களும், அதாவது தண்டகாரண்யம் துவங்கி திருவிட நிலம் வரையிலான
அம்மாணவர்களின் பயணமும் சண்டனின் கதைகளின் வாயிலாக நிகழும் அர்ஜுனனின்
பயணமும் ஒரு வகையில் இணையானவை எனலாம். தம்மைத் தாமே அறியும் பயணமாகவும் தம் ஆசிரியரைப் புரிந்து கொள்ளும் பயணமாகவும் அவை அமைகின்றன.

சண்டனிடம் கதை கேட்டுக் கொண்டே பயணிக்கும் நால்வரும், வியாசரை நோக்கியே
செல்கிறார்கள். வியாசரைப் புரிந்து கொள்ள சண்டனின் கதை கூறல் அவர்களுக்கு உதவுகிறது எனக் கொள்ளலாம். துவக்கத்தில் சண்டனிடம் விலக்கத்துடன் இருக்கும் ஜைமினி இறுதியில் உக்ரன் என்னும் சூத குழந்தை ஞானியை தோளில் சுமந்து அலைபவனாகிறான். அவனே ஒரு சூதனைப் போல நயத்துடன் பேசுபவனாகவும் ஆகிறான். ஜைமினியிடம் ஏற்படும் இந்த மாற்றம் சண்டனால் நிகழ்கிறது. தாம் சென்று சேரவிருக்கும் ஆசிரியரை புரிந்து கொள்ளலும் தம்மை அறிதலும் இங்கு படிப்படியாக ஒரு சேர நிகழ்கிறது.

அர்ஜுனன் தன் திசை வெற்றிப் பயணத்தின் வாயிலாக தன் ஆசிரியரான இளைய யாதவரை
அறிந்து கொள்கிறான். இளைய யாதவருடன் அவனுக்கு ஏற்படும் போர் அவனது பயணத்திற்கு
துவக்கமாக அமைகிறது. தான் அறியாத எதுவும் அவரிடம் இருக்க வாய்ப்பில்லை என்னும்
அளவில் அணுக்கம் கொண்டவனாக தன்னை எண்ணியிருக்கும் அவன் தான் அறிந்திராத
வேறொரு முகத்தை அவரில் காண்கிறான். இளைய யாதவருக்கு இணையாக தான் இருந்தால்
மட்டுமே அவர் தனக்கு ஆசிரியராக இருக்க முடியும் என்று கூறுகிறான். அவனும் அவருக்கு
இணையானவனாக இருந்தால் மட்டுமே அவருக்கு உகந்த மாணவனாக இருக்க முடியும்.
அவனுக்கு இது தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் பயணமாக அமைகிறது. தன்னை ஆழ்ந்து அறியும் பயணமாக, அதன் வாயிலாக தன் ஆசிரியரை ஆழமாக அறியும் பயணமாக அமைகிறது.

உண்மையில் இளைய யாதவர் போன்ற ஒரு மெய்ஞானிக்கு முதலும் கடைசியுமான மாணவன்
அர்ஜுனன் மட்டுமே என்று கூட தோன்றுகிறது. அவர் அவ்வாறான ஆசிரியர். புத்தருக்கு பல
சீடர்கள் அமைய முடியும் இளைய யாதவருக்கு அர்ஜுனனுக்கு அப்பால் பிறிதொரு சீடன்
அமைவது அரிதினும் அரிதே. அத்தனை முகங்கள் கொண்டவர் கொண்டவர் அவர். அவருடைய அத்தனை முகங்களையும் எதிர்கொள்ளும் ஒருவன் அவன் மட்டுமே.

அர்ஜுனனுக்கு கடக்க முடியாத ஒருவர் இளைய யாதவர். அவருக்கும் அவன் அவ்வாறே.
அவருடனான போருக்குப் பிறகு தன் திசைப் பயணத்தைத் துவக்கும் முன் தன்னை விமர்சிக்கும் பீமனிடம் அவன் அதைக் குறிப்பிடுகிறான். அதாவது இளைய யாதவரால் என்னைக் கடக்க முடியவில்லை என்கிறான். இளைய யாதவரின் முதன்மை ஆடல்கள் அனைத்தும் அவனை முன் வைத்தே நிகழ வேண்டும். இளைய யாதவர் தரவிருப்பதை அதன் எல்லாத் தளங்களிலும் எதிர் நின்று பெறத் தகுந்தவன் அவன் மட்டுமே. நாராயண வேதம் எவ்வாறு பிரகலாதன் வாயிலாக எழுந்தது என்று கிராதத்தில் கூறப்படுகிறது. ஒரு வகையில் அர்ஜுனன் பிரகலாதனுடன் ஒப்பிடத்தக்கவனாகிறான். எழவிருக்கும் கீதையும் அவனை முன்னிட்டே எழ வேண்டும். இந்திரனுக்காக இளைய யாதவரைப் பிரிய மறுக்கும் அவ்வகையிலும் அவன் பிரகலாதனுடன் ஒப்பிடத்தக்கவன்.

அர்ஜுனன் தன்னை ராதையாகவும் கருதுகிறான். பக்தி மற்றும் பெரும் பிரேமை வழியாக
பிரகலாதனும் ராதையும் அறிந்த முகங்களை அவன் அறிவான். அதே சமயம் அவர்கள்
அறிந்திராத விண்ணோனின் பிற முகங்களையும் அவன் அறிவான்.

அர்ஜுனன் நான்கு திசைகளிலும் சென்று வென்று பெறும் அறிதல்களும் இறுதியாக அவன்
சென்று தொடும் கயிலையின் பாசுபத முழு மெய்மையும் அவர் முன்பே சென்றடைந்தவை அவர் கடந்த பாதைகளேயே அவனும் கடந்து வருகிறான். அச்சம் (யமன்), செல்வ விழைவு (குபேரன்), ஆழம் (வருணன்), காமம் (இந்திரன்) இவை வென்று கடந்து அறுதி மெய்மையான பாசுபதத்தை சிவனிடம் அறிந்து திரும்புகிறான். அல்லது வேறொரு வகையில் சொல்வதென்றால் தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்னும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் அறிதல்களை பெற்று திரும்புகிறான்.

பேரறத்தின் பெருந்திட்டத்தின் முகமாக நின்று செயல்படும் இளைய யாதவருடன் தன்னை ஆழந்து முழுமையான புரிதலுடன் பொருத்திக் கொள்ள அல்லது அவரது லீலையில் எங்கும் உளத்திரிபு அற்று இயைந்திருக்க அவனுக்கு திசை வெற்றிப் பயணம் பயன்படுகிறது. ஒரு வகையில் யமனாக, குபேரனாக, வருணனாக, இந்திரனாக, சிவனாக, ஏன் விருத்திரனாகவும் அவன் அறிவது இளைய யாதவரையே என்று தோன்றுகிறது.

துவக்கத்தில் மூன்று அடிகள் கடப்பதன் வாயிலாக அவன் சென்றமைந்து விட வாய்ப்புள்ள
மெய்மையை நேமிநாதர் காட்டுகிறார். இறுதியில் முழுமுதல் மெய்மையான பாசுபதத்தில் சென்று அமையும் வாய்ப்பும் அவன் பெறுகிறான். இவ்வனைத்தும் அவனது இயல்பான அச்சமின்மையாலும் பற்றின்மையாலும் அவனுக்கு கிடைக்கின்றன. எனினும் இளையாதவருடன் மட்டுமே அமைபவன் அவன் என்பதால் அவ்வறிதல்கள் அனைத்தையும் அமைவாக கொள்ளாமல் கடந்து வருகிறான்.

தமிழ் நிலத்தில் இருந்து வரும் விண்ணோனின் அடியார்களுடன் இணைந்து கொள்ளும்
மாணவர்கள் நால்வரும் காளத்தி செல்லும் சிவநெறியினருடன் இணைந்து கொள்ளும் சண்டனும் என்று முடியும் கிராதத்தின் வாசிப்பு சைவம் வீரருக்கான பாதை என்றும் வைணவம் அன்பருக்கான பாதை என்றும் ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது. எனினும் சிவநெறிகள் எண்ணற்றவை என்று முதற்பகுதியிலேயே பிச்சாண்டவர் கூறுகிறார். கிராதம் எடுத்துக் கொண்டிருப்பது கிராதத்திற்கு தேவையான சைவத்தை மட்டுமே.

சிவமேயாம் என்பது வீரனுக்குரியது. பெருமானின் மீதான பெரும் பித்து பெருங்காதலனுக்குரியது. எல்லாவுமான இளைய யாதவருடன் எல்லா வழிகளிலும் பொருந்தும் அர்ஜூனனின் கதைகளின் வாயிலாக தமக்குரிய வழிகளைக் கண்டடைந்து சென்றடைகிறார்கள் மாணவர் நால்வரும் சண்டனும்.

அந்நியன் வாசிப்பனுபவம் – விக்ரம்

மனிதர்களின் மதிப்பீடுகள், விழுமியங்கள் அன்பு அல்லது மனிதாபிமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்னும் பொதுக்கருத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது ஆல்பர்ட் காம்யுவின் “அந்நியன்.“ அது அப்படித்தான் இருக்கிறாதா, அப்படி ஒன்றும் இல்லை மனிதர்களே என்கிறது.  ஒருபக்கம் கிறிஸ்துவின் அன்பின் மீது கட்டப்பட்ட சமய மதிப்பீடுகளையும் மற்றொரு பக்கம் பிரெஞ்சு பண்பாட்டின அரசின் நீதிமுறையையும் – அபத்தமானவை என்ற விமர்சனத்தை இக்கதையின் மூலம் வைக்கிறது. 

கதை நாயகனின் எதற்கும் அதிகம் அலட்டிக்கொள்ளாத, அதிக உணர்ச்சிவசப்படாத, போகிறபோக்கில் வாழ்கிற, தனக்கென மதிப்பீடுகள் எதுவும் இல்லாத, அன்றாடம் எழும் புலன்சார் விருப்பங்களை மட்டும் நிறைவேற்றி வாழ்கிற ஒருவன் – இத்தன்மைகள் மட்டுமே அவன் கொடியவன்-தீயவன் என்று தீர்மானிக்கப் போதுமானவையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.  உண்மையில் அவன் கெட்டவன் அல்ல.  உள்நோக்கம் ஏதுமில்லாத, சூழலால் அமைந்துவிட்டதான கொலை ஒன்றை செய்து சிறை செல்லும் அவன் தன் தாயை உடன் வைத்திருக்காமல் விடுதியில் விட்டிருந்தான் என்பதையும் அவள் மரணத்திற்கு அங்கு சென்றபோது அவளுக்காக அழவில்லை எனபதையும் அத்துடன் அங்கு அவனது இயல்பான சுபாவத்தை ஒட்டிய சில நடத்தைகள் காரணமாகவும் கொடியவன் என்று தீர்மானிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறான். 

தன் தரப்பு நியாயத்தை வாதிட அவன் விரும்புவதில்லை.  தனக்காக வாதிடும் வழக்கறிஞருக்கு ஒத்துழைப்பும் தருவதில்லை.  நிகழ்வுகளைக் கொண்டும் சூழலைக் கொண்டும் தன்னைப் பற்றி எதிர்தரப்பு உருவாக்கும் ”சித்தரிப்பை” மறுப்பதும் இல்லை.  அந்த சித்தரிப்பு உண்மையில்லை என்னும்போதும் ஆமாம் சரிதானே அப்படியும் சொல்ல முடியும் தானே என்று எண்ணுகிறான்.  எதிர்தரப்பு வழக்கறிஞர் பெற்றோரைக் கொலை செய்துவிட்ட மற்றொருவரி்ன் வழக்குடன் இவ்வழக்கை ஒப்பிட்டு அதைவிட இது மிகக்கொடியது என்கிறார்.  தன்மீது ஒருவித தனிப்பட்ட வன்மத்துடன் அவ்வழக்கறிஞர் நடந்துகொள்வது அவனுக்கு வியப்பளிக்கிறது.

பெரிதும் உணர்ச்சிவசப்படாதவனாகிய கதைநாயகன் இரண்டு இடங்களில் மட்டும் உணர்ச்சிவசப்படுகிறான்.  உணவுவிடுதி நடத்திவரும் அவனது நண்பன் – அவனுக்கு உணவும் மதுவும் அளிப்பவன், தன் பணியிடத்தில் அவன் எப்படிப்பட்டவன் (நன்கு உழைப்பவன்) என்று அறிந்திருப்பவன், அவனை உண்மையில் புரிந்துவைத்திருப்பவன் அவனுக்காக உணர்ச்சிப்பூர்வமாக பரிந்துபேசும் போது நெகிழ்ச்சி அடைகிறான்.  அவனை அணைத்து முத்தமிட விரும்புகிறான்.  இரண்டாவதாக, மரணதண்டனைக்கு முன்னதாக தன்னை சிறையில் வந்து சந்தித்து தனக்காக பிரார்தனை செய்ய வரும் பாதிரியாரிடம் எரிச்சலைடைகிறான்.  அவரை விரட்டுகிறான்.  அவருடைய அறிவுரைகள் அபத்தமானவை என்று கருதுகிறான்.

மொத்தத்தில் – நான் பேசாமல் இருந்தால், உள்ளதற்கு மாறாக உங்கள் மதிப்பீடுகளின் அடிப்படையில் நீங்களாகவே என்னைப்பற்றி ஒரு சித்தரிப்பை (மிகையாக அல்லது பொய்யாக) உண்டாக்கி தண்டித்து விடுவீர்களா என்பது அவனது கேள்வி.  இதை வெளிப்படையாக அவன் கேட்பதில்லை.   இது கேட்காமல் கேட்கப்படும் கேள்வி.  நானாக எதுவும் கேட்க மாட்டேன், என்மீது நீங்கள் சுமத்தும் எதையும் மறுக்கவும் மாட்டேன், தண்டணையை ஏற்றுக்கொள்வேன் என்பது அவனது நிலைப்பாடக உள்ளது.  ”எல்லோரும் என் சாவை ரசியுங்கள்” என்பதுபோல.

ஒருவகையில் இது அவனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை என்பதைவிட அவன் செய்துகொள்ளும் தற்கொலை என்றே தோன்றுகிறது.  தற்கொலை செய்துகொள்ள விருப்பங்கள் நிறைவேறாதது, துன்பங்கள், விரக்தி இவைதான் காரணமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை – எதற்காக வாழ வேண்டும் உயிரோடு இருப்பது அவ்வளவு முக்கியமானதா என்ன என்ற கேள்வியே போதுமானது என்று கூறுவதுபோலும் எண்ணத் தோன்றுகிறது.

சில இருத்தலியல்வாதிகள் இருத்தலியல் சிக்கல்களுக்கு தற்கொலையைத் தீர்வாகக் கண்டதுபோல் தோன்றுகிறது.  இங்கே கிழக்கே நமக்கும் பலநூற்றாண்டுகளாக அதுவேதான் தீர்வாக பல மெய்ஞானிகளால் சொல்லப்பட்டு வருகிறது.  என்ன வித்தியாசம் என்றால் இங்கே உடலின் தற்கொலை அல்லாமல் மனதின் அல்லது நான் என்னும் தன்முனைப்பின் தற்கொலை பரிந்துரைக்கப்படுகிறது.  துறந்தார் இறந்தார் அனையர் என்றும் மனோநாசம் என்றும்.

‘அந்நியன்’ வாசிப்பனுபவம் – பவித்ரா சக்திவேல்

என் அப்பாவின் மரணத்தினால் உண்டான வெறுமைக்குள் சிக்கிக் கொண்டிருந்த தருணத்தில்,  சொல்முகத்தின் மார்ச் மாத கூடுகைக்கான  ” The  Stranger” by Albert Camus புத்தகத்தை எடுத்தேன் .

நாவலின் தொடக்க வரியான  “அம்மா இறந்துவிட்டாள்”,  என்னை மீண்டும் வெறுமையின் ஆழத்திற்கு இட்டுச் சென்றது.  மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தாலும், குழந்தையுடன் சிரித்துக்  கொண்டிருந்தாலும், சுற்றியும் இரைச்சலாக இருந்தாலும்,  நினைவின் பிம்பத்திலான தனித்த ஓர் இடம் வெறுமையின் உலகம் . வாழ்வின் அர்த்தத்திற்கான தேடல் தீவிரமடையும்.

ஆல்பர்ட் காம்யூ, இப்புத்தகத்தின் கதாநாயகனான மெர்சால்ட்டை கதைசொல்லியாகக் காண்பித்துள்ளார். மெர்சால்ட் தனது இருப்பை சூரியனால் வானில் தென்படும் நிற மாற்றங்களுக்கும், தன்னைச்  சுற்றியுள்ள பொருட்களால் உண்டான மணத்திற்கும் ஒவ்வொருமுறையும் தொடர்புபடுத்தி மெய்ப்பித்துக் கொள்கிறான்.  

இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு  முதியோர் இல்லத்தில் இறந்த அம்மாவைக்  காணச்  செல்கிறான் மெர்சால்ட் . மூடிய சவப்பெட்டியில் உள்ள தன்  அம்மாவின் முகத்தைக் காண மறுத்துவிட்டான். எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிகழவே பின்பு அவன் சிக்கிய கொலை வழக்கில் தனக்கு எதிராக அமைந்தது. காரியங்கள் முடிந்த பின் அல்ஜிரியாவின் தலைநகரான அல்ஜெரிசில் உள்ள தனது வீட்டிற்குத்   திரும்புகிறான்.  சனிக்கிழமை என்பதாளும் வெப்பத்தின் காரணமாகவும் நீச்சலடிக்க கடலுக்கு சென்றபோது மேரியை சந்திக்கிறான். அந்நாளை  அவளுடன் கழிக்கிறான். சும்மாவே  உட்கார்ந்தும்  வேடிக்கை பார்த்தும் ஞாயிற்றுக்கிழமை கழிந்தது.  பின்பு அவன்  வேலைக்குத் திரும்பிய சிறுது நாட்களிலேயே வெளிநாடு செல்லும் வாய்ப்பைத் தருகிறார் தனது மேலாளர் .  தனது குறிக்கோளின்மையை நாசூக்காகச் சொல்லிச் சென்றுவிடுகிறான். மேரியும் தனது திருமண விருப்பத்தை கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் திண்டாடுகிறான் மெர்சால்ட். 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது மெர்சால்ட்டின் ஆழ்மனதின் ஓட்டத்தை. பாகம் ஒன்றில் மெர்சால்ட் பற்றிய ஒரு பிம்பத்தை நம்முள் உருவாக்குகிறார் ஆல்பர்ட். எதிலும் தீவிரமின்மையை உடையவன் மெர்சால்ட். ஒன்றையே செய்து, பெரிய லட்சியம் ஏதும் இல்லாமல், வருவதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடுநிலைமையாய் ஓட்டிச்செல்பவன். அம்மாவின் மரணம் துக்கம் தருவது.  தூக்கமும்  ஒரு வகையான தலை பாரமும் மெர்சால்ட்டை நெருக்குகிறது. அவனால்  துக்கத்தை  ஏற்றுக்கொள்ள முடியாததால்  அம்மாவின் முகத்தையே பார்க்க மறுக்கிறான். ஆனால் அவன் அம்மா அவனிடம் பல சந்தர்ப்பங்களில் அவனிடம் கூறிய வரிகளை கடைசிவரை நினைப்படுத்திக் கொள்கிறான். 

மேரி தன் திருமண விருப்பத்தைக் கூறியபோதுதான்  திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். தனது நண்பனான மஸான் குடும்பத்தை சந்தித்த பிறகுதான் திருமணத்தின் தேவையை உணர்கிறான். மெர்சால்ட் பொதுவாக தான் வாழும் அந்தத்  தருணத்தை அப்படியே கடத்திச் செல்பவன் . நேற்றைய சிந்தனையோ நாளைய சிந்தனையோ அதிகம் இல்லாதவன். அனால் அவன் சிறையில் இருந்த போது நேரத்தைக்  கடத்திச்செல்ல அவன் வாழ்ந்த நாட்களையும், வரவிருக்கும் மரணத்தைப் பற்றியுமே சிந்திக்கிறான்.  

மெர்சால்ட் தன் நண்பர்களுடன் நீச்சலடிக்க சென்ற போது தன்னையும் ரேமாண்டையும் காப்பாற்ற நினைத்திக் கொண்டிருந்தபோது கொலை நடந்துவிடுகிறது. பின்பு அவனது இயல்பே அவனுக்கு கடும் எதிராகத் திரும்பி மரண தண்டனையை பெற்றுத்தருகிறது. சிறைச்சாலையில் அவனது எண்ண  ஓட்டங்களை தத்துவரீதியாகவும் தர்கரீதியாகவும் பாகம் இரண்டில் நம்முன் காட்சியாக முன்வைக்கிறார்  அல்பெர்ட் காம்யூ . பாகம் இரண்டின் தத்துவத்தை நீட்டி ஒரு புத்தகமே எழுதலாம். மரணத்தையும் வாழ்வையும் பற்றிய சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது.  மரணம் தேடி வரும் பொழுது, அது முப்பது வயதானாலும் அறுபது வயதானாலும் , இன்னும் சில ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆழ் மன ஏக்கத்தை அப்பட்டமாக கண் முன் காட்டுகிறான் மெர்சால்ட்.

யார் இறந்தாலும் பிறந்தாலும் சூரியன் உதித்துக்கொண்டுதான் இருக்கும், காற்று வீசிக்கொண்டுதான் இருக்கும், உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.  ஒவ்வொரு மணித்துளியையும் கழிக்கும் சுதந்திரம் நம் எல்லோரிடமும் உண்டு. எப்படிக் கழிக்கிறோம் என்பதே வித்யாசத்தை உருவாக்குகிறது.  உலகம், மனிதன், கடவுள் ஆகிவற்றைப் பற்றி நம்மை சிந்திக்க வைக்கும் தைத்திரீய உபநிடதம் என் நினைவுக்கு வருகிறது.

சிறைச்சாலையில் மெர்சல்ட்டை ஏசுவை ஏற்கச் செய்துவிடவேண்டும் என்று போராடுகிறார் பாதிரியார். இறந்த பின் எதுவும் இல்லை என்னும் கிறிஸ்துவத்தின் கொள்கையை போதிக்க முயல்கிறார் .ஆனால் செங்கல்களில் அவன் காண்பது தன் காதலி மேரியின் முகம் மட்டுமே என்றதும் பாதிரியார் உடைந்துவிடுகிறார். கில்லட்டின் இயந்திரம் பற்றிய வர்ணனை மிக அசாத்தியமானது. மரணம் இதோ இங்கே என்று உறுதி செய்கிறது இந்த கில்லட்டின் . 

எப்பொழுது இறந்தாலும் சிறிது நாட்களில் இந்த உலகம் நம்மை மறந்து விடும்  . வாழ்க்கை ஒன்றும் அர்த்தமானது இல்லை . அதனால் மரணத்தை  ஏற்றுக்கொள் என்று கறாராக மெர்சால்ட் கதாபாத்திரத்தின் மூலம் ஆல்பர்ட் முன்வைக்கிறார்.

ஒரு நாள் இவ்வுலகில்  வாழ்ந்தவன் சிறைச்சாலையில் (அல்லது தனிமையில்) நூறு ஆண்டுகளைக் கழிக்கும் நினைவுகளைக் கொண்டவனாகிறான் என்கிறான் மெர்சால்ட். 

 மரணத்திற்கு பின்னால் ஆன்மா எஞ்சுகிறது என்று கூறுகிறது கட உபநிடதம். காண முடியாததால் இல்லை என்றாகிவிடாது. அதுபோல்  இன்றைய நிகழ்வுகள்  நாளைய நினைவுகள். நினைவுகளும் நிஜமானவை ஒரு வகையில். மரணத்திற்கு பின்னல் நினைவுகள் எஞ்சுகிறது.

பவித்ரா சக்திவேல்

உப்புக் கடலை குடிக்கும் பூனை, வாசிப்பனுபவம் – விஜயகுமார் சம்மங்கரை

க.சீ.சிவகுமார் கருத்தரங்கில் விஜயகுமார் சம்மங்கரை ஆற்றிய சிற்றுரை.

//எனது இந்த வாசிப்பனுபவம் “உப்புக்கடலை குடிக்கும் பூனை” யை மட்டும் உள்ளடக்கியது. //

கருத்தரங்கு என்ற சொல்லின் நேரடி ஆங்கில சொல் செமினார். செமினார் என்றவுடன் அதற்கு எப்படியோ அகடமிசியா அர்த்தம் வந்துவிடுகிறது.

கருத்தரங்கில் என்ன நடக்கிறது.. அது அடிப்படையில் வாசிப்பனுபவத்தை முன்வைப்பது என்பதாகும்.  வாசிப்பனுபவம் என்றவுடன் ஒரு படைப்பை அனைத்து கோணத்திலும் பார்ப்பது. அதன் ஒரு பகுதியாக படைப்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது. 

ஆய்வுக்கு அளவைகள் தேவைப் படுகின்றன. அப்படியானால் இலக்கியத்துக்கு அளவைகள் இருக்கின்றனவா?

பொதுவாக இலக்கியத்தின் பயன் மதிப்பு என்ன என்று பார்க்கையில். அது நேர்கோடான மனித வாழ்வில், இலக்கிய கற்பனை மூலம்  நடக்கும் பக்கவாட்டு அனுபவங்களினால் சாத்தியமாகும் அனுபவ அடர்த்தி என்று இலக்கிய ஆசான்கள் சொல்கிறார்கள். ஆகையால் ஒரு வாசகனுக்கு இலக்கியம் தரும் அனுபவ அடர்த்தி மட்டும் தான் அளவையாக இருக்க முடியும். இது அகநிலை அளவை.

ஆனால் ஒரு கருத்தரங்கிற்கு, ஒரு படைப்பு ஆய்படு பொருளாக இருக்கும் போது இம்மாதிரியான அகநிலை அளவை உதவாது. புறவைய அளவைகள் தேவை.

புறவைய அளவைகள் நிறைய உள்ளன என்ற போதிலும், அவைகளை இரு வகையாக பிரித்து பொதுமைப்படுத்தி கொள்ளலாம்.

  1. வடிவம்  (Story structure), அழகியல். 
  2. உட்பொருள் (பாடு பொருள்)

வடிவம் : → அழகியலாளர்களின் கோட்பாடாக இது அமைகிறது.

சிறுகதை என்று நாம் உத்தேசிப்பது அடிப்படையில் ஒரு முரண்பாட்டைத் தான். “உடன்பாடு” பெரும்பாலும் சிறுகதை ஆவதில்லை. 

இலக்கிய வடிவங்கள் பல உள்ள போதிலும், சிறுகதைக்கு 1) எடுப்பு 2) தொடுப்பு 3) முடிப்பு என்ற  ஒரு செவ்வியல் வடிவம் உருவாகி வந்துள்ளது. அவற்றை இன்னும் விரிவு படுத்தினால் 

  1. Exposition 
  2. Inciting Incident 
  3. Progressive complexity through multiple pinch point 
  4. Point of no return
  5. Climax
  6. Resolution/Revelation

க சீ சிவகுமார் அவர்களது சிறுகதை இப்படியான கச்சிதத்தன்மையை எங்கோ நிராகரிக்கிறார் என்றே தோன்றுகிறது. அப்படி நிராகரித்தும் அந்த கதைகள் வெற்றி பெறுகின்றன. அப்படி வெற்றி பெறுவதற்கு காரணம் அவர் தனக்கே உண்டான சில உத்திகளை பயன்படுத்துகிறார்.

  1. நகைச்சுவை 
  2. ஸ்டைலிஸ்ம் 

நகைச்சுவை → எடுத்துக்காட்டாக : 

  1. எனக்கும் ஒரு வாழ்த்து 
  2. ஹலோ 
  3. ஒரு நாள் 
  4. குகை 
  5. புதிர் வீட்டு ஜன்னல் 
  6. கட்டு சேவல் மனிதர்கள் 
  7. மஞ்சம் மகிமை 
  8. ஒரு ஊர்ல ஒரு தேர்தல்.

ஸ்டைலிஸ்ம் → சில வாக்கியங்கள் 

  1. மனதில் மௌனக்குளிர் அப்பியது 
  2. சில தப்படிகளில் சிவப்பை தவறவிட்ட நிறம் 
  3. தெருவெல்லாம் வெளிச்ச காளான்கள் 
  4. வயிறு அலை எழும்பாமல் தலை தரை தொடாமல் விரைத்திருந்தது.

இவரது கதைகள் இலக்கற்று திரிகிறது என்றே முதலில் தோன்றுகிறது. ஆனால் அப்படி வெவ்வேறு திசைகளில் விரிந்து செல்லும் கிளைகள் அனைத்தும் கதையின் கடைசி பத்தியில் வந்து குவிந்து வாசகனுக்கு சிறுகதை அனுபவத்தை நிறைவு செய்கிறது. 

இங்கே சிறுகதை அனுபவம் என்று சொல்வது, கதை முடிந்த பின்னரும் வாசகன் மனதில் கதை வளர்ந்து செல்வதை. அதாவது- இல்லாத பக்கங்களில் கதை தன்னை தானே எழுத்திச் செல்கிறது. 

கதை முடிந்த பின்னரும் வாசகன் மனதில் எண்ணற்ற பல சாத்தியங்களாக விரிந்து செல்லும் வாய்ப்பினையும் ஆசிரியர் மறுக்கிறார். அவரது கதைகளில் கடைசி வரி அந்த சத்தியத்தை முறித்து விடுகிறது. கதைகளுக்கு ஒற்றை முடிவு என்று முடித்து விடுகிறார்.

வீடு : அந்த புள்ளியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பயணம் செல்ல 

தமிழரசி: எனக்கு பிறந்த வீட்டுக்கு வந்து செத்துப் போகிற பெண்கள் நினைவுக்கு வந்தார்கள்.

பலூன்: உள்ளே காற்றுள்ள எதுவும் உறங்குவதில்லை.

தன்வினை: ராத்திரி உணர்ச்சிமயமா தின்னியே 

தி நேம் ஐஸ் மணி : அடிபடாமல் நீண்டநாள் வாழனும் என்றால் கொஞ்சம் கட்டுக்குள் இருக்க வேண்டும் 

கதையின் மொத்தப் பரப்பையும்  ஆசிரியர் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதினால் வாசக இடைவெளி சற்று சுணக்கமாகவே இருக்கின்றன. அதற்கெல்லாம் ஈடுகட்டுவது போல் அவரது ஸ்டாலிசம் கதையெங்கும் விரவிக்கிடக்கிறது. 

கடைசி வரி கச்சிதமாக அமைந்திருக்கும் கதைகளும் இருக்கின்றன.

  1. குகை 
  2. சீற்றம் → revelation 
  3. கடல்கள் காய்வதில்லை 
  4. ஆர்வலரும் இல்லை அடைக்குந்தாழ் 
  5. இயல்பிகந்த கின்னாரம் 
  6. கறி 

கதையின் உடலை மறுக்கும் கடைசி வாக்கியம் என்ற முறைமையை கைவிட்டு. கதையின் உடலை மேலும் விளக்கும் கடைசி வாக்கியம் என்பதாக உள்ளது.

இதை எப்படி புரிந்துகொள்வது என்று யோசிக்கையில். சிறுகதையின் செவ்வியல் வடிவத்தின் சட்டாம்பிள்ளைத் தனத்துக்கு எதிரான செயல்பாடு என்று நான் புரிந்துகொள்கிறேன்.

மேலும் நகைச்சுவை சிந்திக்க வைக்குமா என்ற கலாதித்த கேள்விக்கு தன் பங்கு பதிலையும் நியாயத்தையும் செய்திருக்கிறார். 

உட்பொருள் : → முற்போக்காளர்கள், லட்சியலாளர்களின் கோட்பாடாக இது அமைகிறது.

காக்கா வடை திருடிய கதையை நல்ல சிறுகதை வடிவுக்குள் கொண்டு வந்து விட முடியும். அறம் மழுங்கியிருக்கும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் அழகியல் கோட்பாடுகள் இலக்கிய தகுதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று லட்சியவாதிகளின் கூற்றாக இருக்கும். 

ஆகையால் கதையின் பேசு பொருள் உயர் விழுமியங்களால் ஆனதாக இருக்க  வேண்டும்.அதுவே நல்ல கதையின் அளவையாக இருக்க முடியும்.

What is your crisis என்று ஒரு கதாபாத்திரத்திடம் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

இந்த வரையறையையும் ஆசிரியர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்றே தோன்றுகிறது. அதாவது சிறிய விஷயங்களின் முரண்பாடும் உடன்பாடும் இலக்கியங்கள் பேசியாக வேண்டும் என்கிறார். 

அதாவது காலை காபியில் சீனி போதவில்லை என்ற ரப்ச்சரும் இங்கு முக்கியம். → crisis 

இன்றைய இலக்கியத்தை நடுத்தர வர்க்கத்தின் கலை வெளிப்பாடு என்று சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் நடுத்தர வர்க்கத்தின் ஆன்மீக வெளிப்பாடாகவும் இலக்கியத்தை கொள்ளலாம். சாமானியர்களின் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு மீண்டும் அசாதாரணங்களையும் வீரநாயகர்களையும் உயர் விழுமியங்களையும் எழுதிக்கொண்டு இருக்கிறோம். 

அசாதாரணத்தின் அதிகாரத்துக்கு எதிர் விசையில் ஆசிரியர் செயல் படுகிறார் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

இவரது எழுத்தை //அசாதாரணங்கள் அற்ற கலை // என்றே எனக்கு படுகிறது.

இதுவரையில் இலக்கிய அளவைகளை இரு வகையாக 

1) Story structure 

 2) Content 

என்று பொதுமைப் படுத்தி பார்த்தோம்.

அது போக இன்னொன்று இருக்கிறது. மிக சிறந்த சிறுகதைகள் அனைத்தும் இதை நாம் உணர முடியும்.

→ Emotional/Intellectual Pay off – கதை நம்முள் செலுத்தும் அறிவுசார் உணர்வெழுச்சி. இந்த அளவையை கொண்டு ஆசிரியரின் சிறுகதையை பார்க்க முடியுமா? தெரியவில்லை. 

ஏனோ தெரியவில்லை “இயல்பிகந்த கின்னாரம் “ சிறுகதையின் கடைசி வரி நெஞ்சில் அப்பிக்கொண்டது. அந்த வரி → “ உன் கல்லறை வாக்கியம்தான் என்ன?”

ஆமாம்,  உன் கல்லறை வாக்கியம்தான் என்ன?
 

– விஜயகுமார் சம்மங்கரை

சொல்முகம் 50 – அருணாதேவி

நான் என்னுடைய வாழ்வில் இதுநாள் வரை பள்ளிப்படிப்பு, கல்லூரி, வேலை, திருமணம், குழந்தை பிறப்பு என்று அன்றாடத்தில் அடித்து செல்லப்பட்டுக்கொண்டிருந்தேன். அதில் சிறிய மாற்றமாய் புத்தக வாசிப்பு என்னுடைய கணவரின் மூலமாக நிகழ்ந்தது. தமிழ் வாசிக்கத்தெரியும் என்னும் ஒரே தகுதியுடன் நான் எனது வாசிப்பை தொடங்கினேன். குழந்தைகளுக்கான கதைகளை படித்து இரவு நேரம் தூங்கும் முன்பு என்னுடைய மகளுக்கும் மகனுக்கும் கூறுவேன். அப்பொழுது என் கணவர் வெண்முரசு கதைகளை கூறுவார். நானும் அக்கதைகளை ஆர்வமுடன் கேட்பேன். ஒருநாள் நான் வெண்முரசு வாசிப்பை துவங்கினேன். சவாலுடன் கூடிய மிகப்பெரிய உழைப்பு தேவைப்பட்டது. இந்திரநீலத்தில் தொடங்கி முன்னும் பின்னும் வாசித்து சிலமாதங்களில் ஜெ அவர்களின் தளத்தில் வந்து கொண்டிருக்கும் நிகழ்கால பகுதியுடன் இணைந்துகொண்டேன்.

அச்சமயம் கோவையில் சொல்முகம் என்கின்ற வாசகர் குழுமம் ஒன்றை ஜெயமோகன் அவர்களின் வாசகர்கள் உருவாக்கி உள்ளனர் என்ற தகவல் வந்தது. எனது கணவர் அந்த குழுவில் இணைந்து மாதந்தோறும் நிகழும் கூடுகையில் கலந்துகொண்டிருந்தார். எனக்கோ அதில் கலந்துகொள்வதற்கு சிறு தடங்கல் இருந்தது. வெண்முரசைத் தொடர்ந்து வாசித்து கொண்டிருந்த எனக்கு இதனுடைய தனித்த மொழிநடை மற்றும் கதைக்களம் மட்டுமே  பழகியிருந்தது. அப்போது சொல்முகத்தில் வெண்முரசு வாசிப்பை தொடங்கியபோது நான் அதில் இணைந்து கொண்டேன். முதற்கனலில் தொடங்கி மீண்டும் வாசிக்கத்துவங்கினேன். ஒவ்வொரு கூடுகையிலும் கதைக்களமும், கதை மாந்தர்களும் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு கருத்துக்களாக முன்வைக்கப்பட்டன. எனக்கு இது மிகப்பெரிய அறிவுத் திறப்பாக இருந்தது. மேலும் எனது வாசிப்பை கூர்மைப்படுத்த ஆர்வமூட்டியது. கூடுகையில் முதல் அமர்வில் வெண்முரசு முடிந்தவுடன் இரண்டாவது அமர்வில் குறிப்பிட்ட நாவல்கள் குறித்த கலந்துரையாடல் இருக்கும். ஆரம்பத்தில் இதில் நான் பார்வையாளராகவே இருந்தேன். எனக்கு நாவல்கள் வாசிப்பதில் பெரிய தடை இருந்தது. அதற்கு காரணம் அக்கதைகளில் இருந்த எனக்கு தெரியாத கதைக்களம், நிலம், பண்பாடு போன்றவை. அவை அனைத்தையும் கடந்து எவ்வாறு வாசிக்க வேண்டும், எவ்வாறு தொகுத்துக் கொள்ளவேண்டும் என்பதை தொடர்ந்து வந்த கூடுகையில் தெரிந்து கொண்டேன். அப்பயணம் ஒரு அறிவார்ந்த பாதையாக இருந்தது. அதில் அடுத்த கட்ட நகர்வாக கருத்தரங்கம் ஒன்றில் ஒரு இருபது நிமிட உரையை ஆற்ற வாய்ப்பு கிடைத்தது என் வாசிப்பை இன்னமும் விரிவாக்கியது. அக்கருத்தரங்கிற்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டது பதட்டத்துடன் கூடிய ஒரு இனிய அனுபவமாக இருந்தது.

சொல்முகம் 50ஐ கொண்டாடும் அதே நேரத்தில், இந்த அறிவுப்பாதையில் தொடர்ந்து பயணிக்க மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். இதுநாள் வரை வாசித்த நாவல்களின் மூலமாக வெவ்வேறு நிலப்பரப்பு, கதைமாந்தர்கள், கதைச்சம்பவங்கள், தத்துவங்கள் ஆகியவற்றை காட்டிய மிக நீண்ட ஆசிரியர் நிரையை வணங்குகிறேன்.

இந்த தொடர்வாசிப்பு மற்றும் கலந்துரையாடலை சாத்தியமாக்கிய சொல்முகம் வாசகர் குழுமம், இதை வாசகர் குழுமம் என்பதைவிட நண்பர்கள் குழுமம் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அருணாதேவி,

கோவை.

சொல்முகம் 50 – காளீஸ்வரன்

2019 ஜீன் மாதம் முதல் வாரம் – மூன்றாவது முறையாக, தமிழின் தலைசிறந்த இரண்டு நாவல்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினேன். இதற்கு முன்பாக எடுத்த இரண்டு முறையும், பத்து பக்கங்களைக் கூட படிக்க முடியாமல் மூடிவைத்த அனுபவம் தந்த தயக்கம் ஒருபுறம். மறுபுறம், இம்முறை படித்தே ஆகவேண்டும் என்ற ஒரு உந்துதல். இத்தனைக்கும் தமிழின் ஆகச்சிறந்த செவ்வியல் நாவல்கள் என போடப்படும் பெரும்பான்மையான பட்டியல்களில் இவ்விரு நாவல்களுக்கும் இடமுண்டு. பல வருடங்களுக்கு முன்னரே வாங்கியிருந்த போதும், படிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்த போதும் அப்புத்தகம் கோரிய உழைப்பை / கவனத்தை தரமுடியாமல் இவ்வளவு நாட்களாக படிக்கமுடியாதிருந்த அப்புத்தகத்தை, இம்முறை வாசித்து முடித்தேன். அதற்கு முக்கியமான காரணம் “சொல்முகம் வாசகர் வட்டம்”. அந்தப் புத்தகம், திரு.ப.சிங்காரம் அவர்கள் எழுதிய “புயலிலே ஒரு தோணி” மற்றும் “கடலுக்கு அப்பால்” ஆகிய இரண்டு நாவல்களைக் கொண்டது.

அந்த நாவல்கள் மட்டுமல்லாது, தொடர்ந்து தமிழிலும், இந்திய மொழிகளிலும், உலக அளவிலும் வெளிவந்த பல செவ்வியல் நாவல்களை நான் வாசித்ததற்கு சொல்முகம் வாசகர் வட்டம்தான் காரணம். இதுவரை நடைபெற்ற 50 கூடுகைகைகளில், கலந்துரையாடிய பெரும்பாலான புத்தகங்களை வாசித்தே தீரவேண்டும் என்கின்ற கட்டாயமே, என்னுடைய துவக்க கால தயக்கத்தை, கடினமான புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படக்கூடிய சலிப்பை வெல்லப் போதுமானதாக இருந்தது. சொல்முகம் கூடுகைகளுக்குப் பிறகு, எந்தவொரு கடினமான புத்தகத்தையும் இறுதிவரை வாசிப்பதற்கான உழைப்பை, கவனத்தை தருவதில் என்னிடம் ஒரு மாற்றத்தை நான் உணர்கின்றேன். தனிப்பட்ட முறையில், என்னுடைய வாசிப்பில், இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். 

இரண்டாவதாக, எந்தவொரு புத்தகத்துக்குள்ளும் சாத்தியப்படக்கூடிய நமக்கான தனிப்பிரதி எனும் அம்சம். ஒரு நாவலைப் பற்றி ஒரு வாசகர் அவரின் கருத்துக்களை முன்வைக்குந்தோறும், அந்தக் கருத்தை ஒட்டி, சொல்வதற்க்கும் பகிர்வதற்குமான எண்ணங்கள், ஒவ்வொரு கருத்திலிருந்தும் தொட்டு தொட்டு விரிவடைந்த அனுபவங்கள் என கலந்துரையாடல்களின் அதிகபட்ச சாத்தியக்கூறுகளை கண்ணுற்றோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நேரமாகிவிட்டது என்பதால் மட்டுமே கலந்துரையாடலை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குத் தீவிரமான உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றின் விளைவாக, அடுத்தடுத்த நாவல்கள் வாசிக்கும் போது சென்ற நாவலில் கவனிக்க மறந்த அம்சங்கள், மறைந்திருந்த விசயங்கள், இயல்பாக மேலேழுந்து வந்தன. போலவே, ஒரு செவ்வியல் நாவல், அதன் சில கூறுகள் மற்றொரு செவ்வியல் நாவலை நினைவூட்டும் அம்சம். சில சந்தர்ப்பங்களில் நாவலின் பேசுபொருளில் கூட வலுவான ஒப்புமையைக் காண முடிந்தது. மொழியோ, பிராந்தியமோ இந்தப் பொதுவான பேசுபொருள் எனும் அம்சத்துக்கு தடையாக இருப்பதில்லை என்பதும், செவ்வியல் என்பதன் முக்கியமான அம்சமே காலமோ, தேசமோ எல்லைகளை கடந்தது (எல்லோருக்கும், எப்போதைக்கும்) என்பதும் கலந்துரையாடல்கள் மூலம் மீண்டும் நிரூபணமானது.

மூன்றாவதும் மிகவும் முக்கியமானதுமான விசயம், ஒரு நாவலைப் படித்து அதிலிருந்து நாம் பெற்றுக்கொண்டவற்றை ஒரு கலந்துரையாடலில் முன்வைக்கக்கூடிய திறன். இயல்பாகவே என்னுள் இருக்கக்கூடிய ஒரு தயக்கத்தைக் கடந்து கருத்துக்களை முன்வைப்பதில் சொல்முகம் கூடுகைகள் பெரும் பங்காற்றின. இறுக்கமில்லாத நட்பு சார்ந்த கூடுகைகள் அளிக்கும் ஆசுவாசம்தான் இதற்குக் காரணம். கலந்துரையாடல்களின் எண்ணிக்கை கூடக் கூட, என்னுடைய கருத்துக்களை முன்வைப்பதில் இருக்கும் நம்பிக்கையும் கூடிவந்ததை என்னால் கண்கூடாக உணரமுடிந்தது. 

ஆரம்பகால கூடுகைகளில் விவாதிக்கப்பட்ட பெரும்பாலான நாவல்களைக் குறித்த எண்ணங்களை ஒவ்வொருவரும் கட்டுரையாக எழுதி அனுப்பி அது சொல்முகம் வாசகர் வட்ட வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகள், அந்நாவலை அதன் முக்கியமான கூறுகளை முன்வைத்து எழுதப்பட்டவை மட்டுமல்லாது வாசகர்களின் தனிப்பட்ட அறிதல்களையும் உள்ளடக்கியவை. துவக்க காலத்தில் விவாதிக்கப்பட்ட பெரும்பாலான செவ்வியல் நாவல்கள், பொதுவெளியில் அரிதாக விவாதிக்கப்பட்டவை என்பதால், ஒருவகையில் அந்நாவல்கள் குறித்த சொல்முகம் கட்டுரைகள் பெரும் முக்கியத்துவம் பெருகின்றன.

சொல்முகம் வாசகர் வட்டத்தின் கருத்தரங்கங்கள் வாசிப்பின் மற்றொரு எல்லையை நான் புரிந்துகொள்ள வழிவகுத்தன. ஒரு படைப்பாளியின் அத்தனை படைப்புகளையும் வாசிப்பது. அப்படைப்புகள் குறித்த தன் எண்ணவோட்டங்களை இருபது நிமிட சிற்றுரையாக கருத்தரங்கத்தில் நிகழ்த்துவது. அவ்வாறாக ஒரு படைப்பாளியைப் பற்றி, அவரது படைப்புகளைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் அந்தக் கருத்தரங்கத்தின் முடிவில் நமக்குக் கிடைக்கின்றது. இக்கருத்தரங்கங்களில் அப்படைப்பாளிகளும் இருப்பதும், வாசகர்களின் உரைகள் மீதான மேலதிக தகவல்களை தங்கள் ஏற்புரையில் குறிப்பிடுவதும் முக்கியமான அம்சங்கள். ஒரு சம்பிரதாயமான ஏற்புரையாக இல்லாமல், ஒரு படைப்பு உருவான விதம், அது எழுதப்பட்ட காலகட்டத்திய மனவோட்டம், இன்று எழுதப்பட்டால் அதில் தான் செய்ய விரும்பும் மாற்றங்கள் என படைப்பாளிகளின் ஏற்புரையும் வாசகனுக்கான பெரும் அறிதல்களை உள்ளடக்கியவையாக இருந்தன.

தனிப்பட்ட முறையில் என்னுள் நான் உணர்ந்த மாற்றங்களுக்கிணையாகவே சொல்முகம் குழுமத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் மாதத்துக்கு மாதம் மேம்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. கருத்துக்களை முன்வைப்பதில், மறுப்பதில், மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்வதில் என எல்லாவற்றிலும் ஒரு நேர்மறை அணுகுமுறையே அனைவராலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு உரையாடலிலும் எவருக்கும் தனிப்பட்ட முறையில் கசப்பான ஒரு அனுபவம் கூட ஏற்பட்டதில்லை என்பதே அதற்குச் சான்றாகும். அதுவே, இக்கூடுகைக்கு தொடர்ந்து வரும் வாசகர்கள் மத்தியில் இலக்கியத்தை முன்வைத்தும் அதைத் தாண்டியும் ஒரு நல்ல நட்புறவு நிலவுவதன் சாரமாகும். கருத்தின் மீது வைக்கப்படும் விமர்சனத்தின் சாராம்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அடுத்தடுத்த கூடுகைகளின் உரையாடல்களில் வெளிப்படுகின்றது. 

வாசிப்பின்பம் என்பதைப் போலவே சக வாசகர்களுடன் பகிர்தலில் இருக்கக்கூடிய நிறைவை “கோவை சொல்முகம் வாசகர் வட்டம்” உணரவைத்தது.

சம்ஸ்காரா வாசிப்பு – மீனாம்பிகை

மாத்வ மடத்தின் அதிகாரத்திலிருக்கும் ஒரு அக்ரஹாரம். அதில் தன்னை சார்வாகன் என்று அறிவித்துக்கொண்டு மதுவும் மாமிசமும் உட்கொண்டு சந்திரி என்கிற தாசியையும் அதே அக்ரஹாரத்தில் கொண்டு வைத்திருந்த நாரணப்பாவின் இறப்பிலிருந்து துவங்குகிறது நாவல். 

ஆசாரங்களையும் நெறிகளையும் கடைபிடித்து அதை மற்றவர்களுக்கும் போதிக்கும் இடத்தில் பிராணேஸாச்சாரியார் இருக்கிறார். நாரணப்பா பிராமண நெறிகளின்படி வாழவில்லை எனினும் பிராமணியத்திலிருந்து விலக்கி வைக்கப்படவில்லை. எனவே பிராமணனுக்கான எரியூட்டலே நிகழவேண்டும் என்று அவர் சொல்கிறார். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லாததால் அவனுடைய சடலத்தை எவர் எரியூட்டுவது எனும் சிக்கல் எழுகிறது. சந்திரி தனது நகைகளை  தகனச்செலவிற்கு எடுத்துக்கொள்ளுமாறு அளிக்கும்போது அந்த நகையின் மீது ஆசையும் அதே நேரத்தில் அது வெளிப்படக்கூடாதென்றும் அடுத்தவனுக்கும் அது கிடைக்கக்கூடாதென்ற எண்ணமும் முடிவுகளைக் குழப்புகிறது. 

பல்வேறு தர்க்கங்களில் வென்று பண்டிதன் என்று பெயரெடுத்திருந்த பிராணேஸாச்சாரியார் சாஸ்திரங்களின்படி இதற்கொரு முடிவு சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். சுவடிகளை ஆராய்ந்து அதில் தீர்வு காண இயலாத பிராணேஸாச்சாரியார் மடத்தில் சென்று கேட்பது தன் பெருமைக்கு இழுக்கு என்று நினைக்கிறார். அக்ரஹாரத்தில் பிணம் இருக்கும் வரையில் எவரும் உணவு உண்ண முடியாது.   அவர் வணங்கும் மாருதியிடம் உபவாசமிருந்து பதில் கேட்க செல்கிறார். அங்கு எதுவும் நிகழாததால் மனமுடைந்து வரும் வழியில் அவரை வணங்கும் சந்திரியிடம்  தன்னை மீறி உறவு கொள்கிறார். 

நாரணப்பாவுடன் இருந்த சந்திரிக்கு குழந்தை இல்லை. தன் குல வழக்கப்படி ஞானியான பிராணேஸாச்சாரியாரின் மூலமாக தனக்கு ஒரு வாரிசு அமைய வேண்டும் என்று விரும்புகிறாள். அது நிகழும் சந்தர்ப்பத்தில் அவள் அவரை முழுதேற்கிறாள். சந்திரியை அடைந்த பின் இல்லம் செல்லும் பிராணேஸாச்சாரியர் அதை தன் குலத்துக்கு அறிவித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவர்மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பை இழக்க அவரால் இயலவில்லை. நாரணப்பாவுக்கும் தனக்கும் நிகழ்ந்த உரையாடல்களை மீண்டும் மீண்டும் நினைவு கூர்கிறார். 

சிறுவயதிலேயே நோயாளியான மனைவியை தன் காம ஒறுப்பு நோன்பிற்கு துணையாக இருக்குமென்று எண்ணியே மணக்கிறார். சந்திரியை அடைந்த பின் அவளது இயலாமையும் அவலட்சணத்தையும் அவர் உணர்கிறார்.  காளிதாசனின் வர்ணனைகளை அவர் சொல்லக்கேட்டு உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு அக்ரஹாரத்தில் ஒருவன் புலையப்பெண்ணுடன் கூடுகிறான். சந்திரியை அடையும் வரை பிராணேஸாச்சாரியருக்கு தான் போதித்த அனைத்தும் வெற்று வார்த்தைகளாகவே தெரிகின்றன. 

தன்னுள்ளிருக்கும் நாரணப்பாவை சந்திரியை அடைவதன் மூலமாக பிராணேஸாச்சாரியார் கண்டு கொள்கிறார். நாரணப்பா இறப்பின்போது நாராயணனை விளித்ததை சந்திரி சொல்கிறார்.  நாரணப்பாவின் நண்பர்கள் இருக்கும் பக்கத்து ஊருக்குச் சென்று தகனத்துக்கான உதவி கேட்கிறார்கள். அவர்கள் ஸ்மார்த்தர்கள் என்றும் மாத்வர்களைவிட மதிப்பு குறைந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

பின் அவர்களது உதவியையும் ஏற்க முடியாமல் திரும்புபவர்களிடம் அவர்களையே மடத்திற்குச் சென்று வழி கேட்கும்படி பிராணேஸாச்சாரியார் சொல்கிறார். இதற்கிடையில் பிராணேஸாச்சாரியாரின் மனைவி நோய்வாய்ப்பட்டு இறக்கிறாள். அவளது தகனம் முடிந்தபின் அங்கிருந்தே பிராணேஸாச்சாரியார் ஊரைவிட்டு செல்கிறார். 

நாரணப்பாவின் ஸ்நேகிதன் அவனைச் சந்திக்க வருகிறான். எலிகள் செத்துவிழுந்து நாரணப்பாவும் இறந்துகிடப்பதைக்கண்டு அலறி ஓடுகிறான். அக்ரஹாரத்தில் வசிக்கும் விதவையான லக்ஷ்மியம்மா அவனை பேய் என்று எண்ணி அலறுகிறாள்.

ஊர் முழுவதிலும் புலைச்சேரியிலும் எலிகள் பெருகி இறந்து கிடக்கின்றன.  அவற்றை உண்ண பிணந்தின்னி  கழுகுகள் வந்து சேர்கின்றன.  காகங்களை விரட்டும் கழுகுகள். மணியும் சேகண்டியும் அடித்து கழுகுகளை விரட்டும் அக்ரஹாரம். ஒரு பெருந்தொற்று தங்களை வந்து சேர்ந்ததை அறியாமல் இறந்தவர்களை குடும்பமாக குடிசையோடு எரிக்கிறது புலை சேரி. 

நாரணப்பாவின் நாறும் பிணத்தை அவனது நண்பர்களான சில முஸல்மான்களைக்கொண்டு சந்திரி எரித்துவிடுகிறாள். பின் தன் ஊருக்கு சென்றுவிடுகிறாள். 

ஊர்முழுவதையும் வெளியேற்றியபின் மடத்துக்குச் சென்றவர்கள் இரண்டு இடங்களில் தங்கி மூவரை காய்ச்சல் கொண்டதனால் விட்டு விட்டு தகனத்துக்கான ஒப்புதலுடனும் நாரணப்பாவின் சொத்தை மடத்திற்கு கொடுக்கும்படியான உத்தரவையும் பெற்று சென்றவர்கள் மீள்கிறார்கள். நாரணப்பாவின் சடலத்தை எரிக்கத் தேவையான விறகுடன் அவன் வீட்டு வாசலில் பிராணேஸாச்சாரியாருக்காக காத்திருக்கிறார்கள். 

பக்கத்து ஊரிலுள்ளவர்கள் இவ்வூரின் இறப்புகளையும் சிவமொக்கேயிலிருந்து பரவிய பிளேக்கையும் அறிந்து குணப்படுத்த மருத்துவ உதவி தேடிச்செல்கிறார்கள். 

ஊரை விட்டு சென்ற பிராணேஸாச்சாரியார் வழியில் புட்டா எனும் சம்சாரியுடன் பயணிக்க நேர்கிறது. அன்றாட இன்பங்களின் எல்லைகளில் திளைத்திருக்கும் புட்டாவுடன் அந்த சந்தையில் சென்று சேர்கிறார் பிராணேஸாச்சாரியார். 

சந்திரியை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பிராணேஸாச்சாரியார் அவளுடனான ஒரு வாழ்க்கையை தான் வாழ முடியுமா என்று கேட்டுக்கொள்கிறார். சேவல் சண்டையை காணும்போது அது அவளுடனான வாழ்க்கையின் ஒரு பகுதி என்று எண்ணுகிறார். 

தன் சிறுவயது தோழனான மஹாபலன் அனைத்து கல்விகளையும் புறந்தள்ளி காசியில் ஒரு தாசியுடன் வாழும் வாழ்க்கையை தேர்ந்ததை எண்ணிப்பார்க்கிறார். சந்தையில் நிகழும் சேவல் சண்டையை பார்க்கும்போது சந்திரியுடனான வாழ்க்கை அதைப்போன்ற அசுர வாழ்க்கையாகவே இருக்க முடியும் என்று எண்ணிக்கொள்கிறார். 

புட்டாவை விட்டு விலக இயலாமல் அவன் போக்கில் உடன் செல்லும் பிராணேஸாச்சாரியார் அவனுடன் ஒரு பூக்கட்டிப்பெண் வீட்டுக்கும் செல்கிறார். உணவுக்குப்பின் வருவதாகச் சொல்லி கோயிலில் உணவருந்தச் செல்லும் அவர் மனைவி இறந்த தீட்டு கழியாமல் கோவிலில் உணவருந்த அமரும் தன்னை எவரேனும் அடையாளம் கண்டுவிடுவார்கள் என்று அஞ்சுகிறார். அடையாளம் காணப்படும்போது அங்கிருந்து விலகி வந்து மீண்டும் புட்டாவிடமே வந்து சேர்கிறார். 

முழுவதும் நெறிகளின் படி மட்டுமே வாழ்ந்தவரும் அதற்காக பெருமை கொண்டிருந்தவருமான பிராணேஸாச்சாரியார் கொண்டிருந்தது அனைத்தின் மீதும் ஒரு பக்தி பாவம் மட்டுமே. அறிந்து கடந்தது அல்ல, கற்றதை ஏற்றது மட்டுமே. நாரணப்பா அவருடனான உரையாடல்களில் வெளிப்படுத்தியது அதையே. கலையில் இன்பத்தில் காமத்தில் திளைக்கும் நாரணப்பா அதை எவ்வகையிலும் மறைக்கவில்லை. காண்பதே உண்மை, அடைவதே இன்பம் என்றும் சார்வாகன் என்றும் தன்னை அறிவித்துக்கொள்கிறான். கலை என்பது இறைவனை அடைவதற்கே என்று விருப்புகளை ஒடுக்கி வாழும் ப்ராணேஸாச்சாரியார் தன் பிறழ்தலை ஒப்புக்கொள்ளவே தயங்குகிறார். தான் ஞானவான் என்ற பிம்பத்தின் காவலனாகவே பிராணேஸாச்சாரியார் இருக்கிறார். 

தற்செயலாக அடைய நேர்ந்த ஒரு இன்பம் முற்றாக பிறிதொரு வாழ்க்கைக்கான விழைவென உருவெடுக்கிறது. அதுகாறும் அவர் கைக்கொண்டிருந்த அத்தனை சாத்திரங்களுக்கும் மேலாக ஒரு அனுபவம் எழுந்து வருகிறது. அந்த அனுபவத்திற்குப்பிறகு அப்படி ஒரு வாழ்க்கையை தன்னால் வாழ்ந்துவிட முடியுமா என்ற கேள்விதான் சந்தையில் புட்டப்பாவுடன் அலையும் முழு நேரமும் பிராணேஸாச்சாரியார் கேட்டுக்கொள்வது. இறுதியில் அப்படி ஒரு வாழ்க்கையை முழுதேற்க இயலாதென்றோ அல்லது தன் வாழ்க்கையை மீண்டும் கற்று வாழ்வதற்கென்றோ தன் ஊர் திரும்புகிறார் பிராணேஸாச்சாரியார். அதன் இறுதி முடிவுக்கான குறிப்புகள் எதுவும் ஆசிரியரால் கொடுக்கப்படவில்லை. 

நெறிகளின் படி வாழ்ந்து பரமாத்மாவின் பாதங்களை அடையும்படி போதிக்கிறது மாத்வ தத்துவமான த்வைதம். நெறிகளின் படி வாழும் பிராணேஸாச்சாரியர் நெறிகளை மீறி வாழும் நாரணப்பா, மஹா பலன் இவர்களுக்கிடையேயான மதிப்பீட்டை நாவல் முன்வைப்பதாக நான் காண்கிறேன். அத்வைதத்தை நெறியாகக் கொண்ட மற்ற தெய்வங்களை வணங்கும் ஸ்மார்த்தர்கள் ஒரு படி கீழாகவே பார்க்கப்படுகிறார்கள். இவர்களுடனான தத்துவ உரையாடல் எதுவும் நாவலுக்குள் இல்லை. மேலும் நெறிகளை மட்டும் கடைபிடித்து அதனால் வைராக்கியம் கொண்டு தன்னை மேல்நிலைக்கு ஏற்றிக்கொள்வது அனேகமாக சாத்தியம் இல்லை என்றும் இந்நாவல் வாதிடுவதாக நான் கருதுகிறேன். 

சமூக ஏற்பு மத ஏற்புக்காக ஆசாரங்களை ஒழுகி வாழும் ஒரு வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும் நாவல் என்றே சம்ஸ்காராவை நான் நினைக்கிறேன். இன்று சமூக ஏற்பு  ஆசாரங்களை கைக்கொள்ளுதல் மத ஏற்பு போன்ற  தேவைகள் இரண்டாம் பட்சமாக அமைந்துவிட்ட சமூக சூழ்நிலையில் இந்நாவலின் பேசுபொருள் காலத்தால் புறந்தள்ளப்பட்ட ஒன்று என்றே எண்ணுகிறேன்.