உள்ளத்தால் உள்ளலும் தீதே – செல்வேந்திரன்

கொரானா கால சந்திப்புகள் – 3

ஓரொரு பேரதிர்ஷ்டத்திற்குப் பின்னாலும் நிச்சயம் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது என்கிற மரியோ பூஸோவின் வரிகள் திரைப்பட ரசிகர்களுக்குப் பரிச்சயமானது. பூஸோவின் தி காட்ஃபாதர் நாவல் எழுதப்படுவதற்கு 138 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான ‘தந்தை கோரியோ’ நாவலில் பால்சாக் எழுதிய வரிகள் இவை. ரத்தத்தில் ஈட்டிய செல்வத்தை ஏற்றுக்கொள்வதன் தத்தளிப்பு பால்சாக்கின் பல கதைகளில் இடம்பெறுகிறது. செந்நிற விடுதி அத்தகைய கதைகளுள் ஒன்று.  

1831-ல் ஃப்ரெஞ்சு மொழியில் பால்சாக் எழுதிய சிறுகதை L’Auberge rouge – ஆங்கிலத்தில் ‘The Red Inn’ -தமிழில் ராஜேந்திரன் செந்நிற விடுதி (தமிழினி பதிப்பகம்) எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். கதைசொல்லி ஒரு விருந்தில் இருக்கிறான். உண்டு களித்தபின்னர் விருந்தாளிகளுக்கு ஒரு ஜெர்மானியன் கதை சொல்லத் துவங்குகிறான். மருத்துவ மாணவர்கள் இருவர் கட்டாய ராணுவ சேவையாற்ற ஃப்ரான்ஸிலிருந்து ஜெர்மனியின் ஆண்டர்நாக் நகருக்கு வருகிறார்கள். வழியில் செந்நிற வர்ணம் பூசப்பட்ட விடுதி ஒன்றில் தங்க நேரிடுகிறது. விடுதியில் இடநெருக்கடி. விடுதியடைக்கும் நேரத்தில் வந்த ஒரு ஜெர்மானிய வியாபாரியோடு இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. உணவையும் படுக்கையையும் பகிர்கிறார்கள். வியாபாரியின் பையில் இருக்கும் கணக்குஞ்செல்வம் இளைஞர்களுள் ஒருவனான ஃப்ராஸ்பர் மேக்னனுக்குப் பேராசையை உண்டாக்குகிறது. வணிகனைக் கொலை செய்ய திட்டமிடுகிறான். அறுவை சிகிட்சை கத்தியை எடுத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் வணிகனைக்  கொலை செய்யப்போகையில் திடீர் மனமாற்றம் ஏற்பட்டு தன் மீதே வெறுப்பு உண்டாகிறது. கத்தியை வீசிவிட்டு ரைன் நதிக்கரையோரம் நள்ளிரவில் அங்குமிங்கும் நடக்கிறான். மனம் தெளிவடைந்ததும் மீண்டும் விடுதிக்கு  திரும்பி உறங்கிப் போய்விடுகிறான். விடியல் அவனுக்கானதாய் இல்லை. வணிகன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான். உயிர் நண்பனைக் காணவில்லை. ஃபராஸ்பர் மேக்னன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அவனது தத்தளிப்புகளும், சிறையில் சந்திக்கும் புதிய நண்பனுமாக கதை செல்கிறது. காணாமல் போன நண்பன் யார்? இந்த விருந்திற்கும் செந்நிற விடுதிக்கும் என்ன சம்பந்தம்? கதை சொல்லிக்கும் கொலையாளிக்குமான உறவு எத்தகையது? ஒரு மர்மக்கதையைப் போலத் துவங்கி மானுட மனங்களின் முடிவுறா மர்மங்களை அறிந்துகொள்ள முயல்கிறது செந்நிற விடுதி. குற்றமே தண்டனை எனும் தரிசனத்திலிருந்து முன்னகர்ந்து குற்ற விழைவுமே தண்டனை எனும் புள்ளியை அடைகிறது. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கல்வேம் எனப்பாடிய வள்ளுவனும் பால்சாக்கும் கைகோர்த்துக்கொள்ளும் புள்ளி இது. 

நவீன இலக்கியம் என்பது தொப்புளுக்கு மேல் கஞ்சியினருக்கு எனும் எண்ணமே மேற்குலகில் அன்றிருந்தது. பெருவிருந்துகளிலும் உறவுக் கூடுகையிலும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக, உயர்ந்த கேளிக்கையாக கதைகள் சொல்லப்பட்டன. அக்காலகட்டத்தின் முகமாகத் திகழ்ந்தவர் ஹொனேரே டி பால்ஸாக் (1799-1850). பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஃப்ரெஞ்சு வாழ்வியலைக் கதைகளாக எழுதிக் குவித்தார். படம் பிடிப்பதைப் போன்ற துல்லிய சித்தரிப்புகளால் யதார்த்தவாத அழகியலின் தந்தை என கருதப்பட்டார். அவர் தீவிரமாக இயங்கியது வெறும் 18 ஆண்டுகள்தான். ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். நாளொன்றுக்குப் பதினைந்து மணிநேரங்கள் தொடர்ச்சியாக எழுதினார். தி ஹ்யூமன் காமெடி எனும் அவரது நாவல் வரிசை 90 நாவல்களை உள்ளடக்கியது. ஏங்கெல்ஸ் இவரது படைப்புகளால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸூக்கு இவரைப் பற்றி கடிதம் எழுதினார். மூலதனத்தின் பல இடங்களில் பால்சாக்கின் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியால் பால்சாக்கின் தாக்கத்தை உணரமுடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டை நான் பால்சாக்கின் கண்களின் வழியாகத்தான் பார்க்கிறேன் என்றார் ஆஸ்கார் வைல்டு.  உலகெங்கிலுமுள்ள சிந்தனையாளர்களை படைப்பாளர்களை பால்சாக் பாதித்தார். தமிழில் புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா துவங்கி சுஜாதா வரை பால்சாக் பலரையும் ஈர்த்தார். 

செந்நிற விடுதி சிறுகதைக்கான தூண்டுதலை பால்சாக் ஒரு ஃப்ரெஞ்ச் ராணுவ அதிகாரி சொன்ன நிஜ சம்பவத்திலிருந்து பெற்றுக்கொண்டார். கதை நெப்போலியன் முற்று முழுதாக ஃப்ரான்ஸை கைப்பற்றிக்கொள்வதற்கு முந்தைய மாதத்தில் நிகழ்கிறது. அரசு, நிர்வாகம், பொருளாதாரம், எதிர்காலம், பொதுஒழுங்கு குறித்த நிச்சயமற்ற நெருக்கடியான சூழல். ஒவ்வொருவரும் எதையேனும் செய்து தங்களை வளம்மிக்கவர்களாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் யத்தணிப்பு நிலவிய காலகட்டம். பொருளியல் லாபங்களை உத்தேசித்தே உறவுகள் உருவாகிக்கொண்டிருந்தன. கதையில் வரும் விடுதிக்காரன் தான் நெடுநாள் உத்தேசித்த திராட்சை தோட்டத்தை சமீபத்தில்தான் வாங்கினேன் என்கிறான். மருத்துவ மாணவர்கள் தங்கள் அறுவைச் சிகிட்சை கத்திகள் பெருவணிகனுக்கு நிகரான பொருளை ஈட்டித்தருமா என அங்கலாய்க்கிறார்கள். நீண்டகால ஆசையான முப்பது ஏக்கர் நிலத்தை வாங்க வேண்டும் எனும் திட்டமே ஃப்ராஸ்பர் மனதில் கொலைத்திட்டத்தை உருவாக்குகிறது. வனத்தில் மிருகங்கள் கைக்கொண்டிருந்த சட்டங்களையே நாட்டில் மனிதர்களும் பின்பற்றத் துவங்கியிருந்தார்கள் என்கிறார் பால்சாக். ஊரடங்கு நாட்களில் நம் வணிகர்கள் வெளிக்காட்டிய அறத்தின் அதிர்ச்சியை உணர்ந்தவர்கள் இச்சுழலை மேலும் நெருங்கியறிய முடியும். 

வாழ்விடத்தின் நெருக்கடிகள் குற்ற விழைவைத் தூண்டுவதையும், இயற்கையின் அருகாமை மனதின் கசடுகளை நீக்கிவிடுவதையும் பால்சாக் துல்லியமாகச் சித்தரிக்கிறார். உரிய அறைகள் இல்லாமல் நெருக்கடியில் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு வெக்கையிலும் பூச்சிக்கடியிலும் தூக்கம் வராமல் புரண்ட மனதிற்குள் கொலைச்சிந்தனை உருவாகி விடுகிறது. ஒரு நொடியில் மனம் மாறி ரைன் நதிக்கரையோரம் நடைபோடுகையில் ஆன்மா ஒளிபெறுகிறது. கோர எண்ணங்கள் மறைகின்றன. இயற்கையின் பேருரு  மனிதனின் சிறுமைகளைக் களைகிறது. மனிதர்கள் வீடடங்கிக் கிடக்கும் நாட்களில் உலகெங்கும் ‘குடும்ப வன்முறைகள்’ பீறிட்டுக் கிளம்புவதை இத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது. 

எழுதப்பட்டு இருநூறாண்டுகளான பின்னும் பால்சாக் மேதைமையால் சிருஷ்டிகரத்தால் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். துல்லியமான சித்தரிப்புகள், அபாரமான நகைச்சுவை, ஆன்மீகமான கேள்விகள் இவரது படைப்புலகின் அடிநாதமாக விளங்குகின்றன. பால்சாக்கின் பல கதைகளில் விருந்துகளும் உணவுகளும் விரிவாகப் பேசப்படுகின்றன. உணவின் மீதான ரசனையையும் உண்ணும் முறையையும் கொண்டு கதாபாத்திரங்களின் இயல்பையும் வாழ்க்கைச் சூழலையும் வாசகனுக்கு உணர்த்தி விடுவார். மிகப்பெரிய சாப்பாட்டுப் பிரியரான பால்சாக்கின் உணவு முறையைப் பற்றியே தனிநூல் எழுதப்பட்டுள்ளது. பத்துப் பதினைந்து பேருக்குரிய உணவை அவர் ஒற்றையாளாக வெளுத்துக்கட்டுவார்.  பன்றி போல தின்றால் பன்றிக்குணம் வரும் என்கிறார் ப.சிங்காரம். பால்சாக் தேனீ போல உழைத்தவர். ஒவ்வொரு நாளும் பகல் ஒருமணிக்குத் துவங்கி மறுநாள் காலை 5 மணிவரை எழுதியவர் அவர். நாளொன்றுக்கு 30 முதல் 50 கோப்பைகளுக்குக் குறையாமல் கருப்பு காபி அருந்துவார். எழுதும்போது ஒரு மதகுருவைப் போல உடையணிந்துகொள்வார். இவையெல்லாம் தன் படைப்பின் ஊற்றுக்கண்கள் எனும் நம்பிக்கை அவருக்கு இருந்தது. 

இன்னொருவனின் ரத்தத்தில் ஈட்டிய செல்வத்தை ஏற்றுக்கொள்வதா எனும் அறக்கேள்வியை பலதரப்பட்ட கதைமாந்தர்களின் வழியாக முன்வைக்கும் இச்சிறுகதை இருமுறை திரைப்படங்களாக்கப்பட்டுள்ளது. வணிகனைக் கொன்று தன் வாழ்வை வளமாக்கிக் கொண்டவன் டெட்டனஸ் நோயால் வாழ்நாள் முழுக்க அவதிப்படுகிறான். தடுப்பூசி கண்டு பிடிப்பதற்கு முன் உலகையே அச்சுறுத்திய ஒருவகை நரம்பு நோய். நோய்த்தாக்குதல் அடைந்தவனின் உடல் வில்போல வளைத்துக்கொள்ளும். பார்ப்பதற்கு சக்கராசனம் செய்வது போல இருக்கும். வலியால் கதறுவார்கள். அலறல் சத்தம் கேட்பவர்களை உறையச் செய்யும். கழுத்தில் உயிருள்ள அட்டைகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சுவதே அன்றைக்கு இருந்த தற்காலிக நிவாரணி. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை என வள்ளுவன் பாடுவதைப் போலவே இதுவும் ஒருவகை ஃப்ரெஞ்ச் அறம்பாடல். 

ஒரு கொசுறு செய்தி. கதையில் குறிப்பிடப்படும் விடுதி L’Auberge rouge என்பது நிஜத்தில் இருந்த விடுதி.  ஃப்ரெஞ்சு குற்றப்பின்னணியாளர்கள் அதிகமும் நடமாடிய பகுதி. இந்த விடுதியின் உரிமையாளர்களான கணவனும் மனைவியும் தன் ஊழியர்களின் துணை கொண்டு குறைந்தது ஐம்பது விருந்தினர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்தார்கள். தங்களால் கொல்லப்பட்டவர்களை சமைத்து உண்டார்கள். சில சமயம் விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கும் பரிமாறினார்கள். அங்கு கற்பழிப்புகள் நிகழ்ந்தன. நெடுங்காலத்திற்குப் பின் அவர்களது குற்றங்கள் கண்டறியப்பட்டு விடுதியின் முன் ஊரார் திரண்டு நிற்க கில்லட்டின் இயந்திரத்தில் நால்வரும் தலைவெட்டி கொல்லப்பட்டார்கள். இன்று அந்த விடுதி புகழ்மிக்க சுற்றுலா கவர்ச்சியாக பிரான்ஸ் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என வாதிடும் வரலாற்றாசிரியர்கள் உண்டு. நெப்போலியன் கால சட்ட நடைமுறைகளில் குற்றத்தை கண்ணால் பார்த்த சாட்சியங்கள் வேண்டுமென்பது அவசியம் இல்லை. செவிவழிச் செய்திகள் அல்லது மக்களின் மத்தியில் உலவும் வதந்திகள் போதுமானது. 

கொரானா கால சந்திப்புகள் – 3

மே 10 காலை கொரானா கால மூன்றாவது ஸ்கைப் சந்திப்பில் விவாதிப்பதற்காக செல்வேந்திரன் பால்ஸாக்கின் குறுநாவல் ஒன்றை தேர்ந்தெடுத்து பகிர்ந்திருந்தார். பால்ஸாக்கை அறிந்துக் கொள்வதற்கு இதைவிட சிறப்பான ஒரு கதை இருக்க முடியாது என்று தோன்றும் அளவிற்கு ஒரு அலாதியான வாசிப்பு அனுபவமாக இருந்தது. நற்றினை 31ம் பாடலை பூபதி சங்கப் பாடல் வரிசையில் முன் வைத்தார். அப்பாடலை அறிமுகப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை மிக செறிவான உரை ஒன்றை வழங்கினார். சூல் கொண்ட குருகு தொட்டு தொட்டு செல்லும் அலையோசையை கண்டு அஞ்சுவதைப் போல தலைவியின் பயம் எதனால் என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கும் என்று தோன்றுகிறது. பறவையின் நிறைந்து முட்டை கனம் உள்ளுறை உவமமாக குறிப்பிடுவது தலைவி தன் நெஞ்சில் சுமக்கும் கனமா அல்ல சேய்க் கனமா என்று கற்பனை விரிவு கொள்கிறது. திணை திறை என்ற கரையை உடைத்துப் பார்த்தால் இப்பாடலின் சாத்தியங்கள் குறித்து நண்பர்கள் விவாதித்தது மிக முக்கியமானதாக இருக்கிறது.

நவீன கவிதைகள் பற்றிய உரையில் நான் தேவதேவனின் ‘அமைதி என்பது’ என்ற கவிதையை குறித்து பேசினேன். அனேக கவிதை வாசிப்புக் குழுக்களிலும் இலக்கிய விவாதங்களிலும் பெரும்பாலும் பேசப்பட்ட கவிதையாக இருந்தாலும், இதை தேர்ந்ததிற்கு காரணம் தேவதேவனை மீண்டும் முன்னிருத்துவதும், இதற்கு இணையாக இவரின் பிரிய கவிஞர்களான பிரமிள் மற்றும் எமிலி டிக்கின்ஸனின் கவிதைகள் ஒன்றில் பொதுக் கூறு ஒன்று அமைந்திருப்பதையும் பொதுவில் வைத்து வாசிப்பதுதான். பிரமிளின் ‘நான்’ என்ற கவிதையும் எமிலியின் “I am nobody, who are you?” என்ற புகழ்பெற்ற கவிதையும் இணை கவிதைகளாக வாசிக்கப்பட்டது. இந்த மூன்று கவிதைகளிலும் “அமைதி” “இருள்” என்பது ஒரே பொருள் கொண்டதாக அமைகிறது. தனிமையுணர்வு கொள்ளும் ஒட்டுமொத்த பிரபஞத்தின் எதிராக நின்று அது எழுப்பும் அத்தனை சத்தங்களுக்கும் அர்த்தம் என்ன என்று வினவுகிறான். நான் கொள்ளும் இந்த அமைதி என் வாழ்வு முடிக்கும் தறுவாயைப் போன்றதா, என் வாழ்வியல் ஆட்டங்களையெல்லாம் முடித்த பிறகு எய்திருக்கும் அமைதியா, அல்ல இதுதான் தொடக்கமா? உலகின் பொருளற்ற லட்சணங்களைப் புரிந்து கொண்டதால் இனிதான் என் வாழ்வு தொடங்கப் போகிறதா. ஆனால் எது எப்படியாயினும் இந்த ‘அமைதி’தான் இனி நான் என்கிறார் தேவதேவன்.

‘இருள் முனகும் பாதை’ என் மரணமும் அது ஈன்று தரும் பிறப்பும் பின் அது சென்று கதவடையும் ஒரு மரணமும் கொண்ட இடயறாத பாதை இது. ‘ஆருமற்ற சூனியத்தைப்’ பார்த்து ‘யாரோ நான்?’ என்று உரக்கக் குரல் எழுப்பும் இக்கவி தன் ‘குரல் மண்டிப்’ போவதை அவதானிக்கிறார். எமிலியோ எழும் சத்தமெல்லாம் தவளைகளின் சத்தம் என்கிறார். சத்தங்களால் ஈர்க்கப்பட்டு அதில் புதைந்து போகும் மனிதர்களுக்கே இத்தவளைகளின் சப்தம். தானோ ‘யாருமற்றவளாகவே’ இருக்க விழைகிறார். “யாருமற்ற’ ஒருவரோடுதான் அவரால் கை கோர்க்க முடியும். ஏதோ ஒன்றாகும் எவரும் பிரபஞ்சக் குப்பையில் கொட்டப்படுகிறார். இடையறாத சப்தம் எழும் அந்தப் பக்கத்திற்கு செல்லாமல் பிறைந்திறந்து மீளும் இந்தப் பாதையில் தாங்கள் யாருமாற்ற ஒருவராக தணிமை அமைதியில் சலனமற்ற இருளில் இருந்து அரனின் ஆட்டத்திற்கு சாட்சியாக மாருகிறார்கள் இப்பெருங்கவிகள்.

நரேன்

நயங்கள்- ராகவேந்திரன்

கொரானா கால சந்திப்புகள் – 2

அகநானூறுபாடல் 84- நயங்கள்

இஸ்தான்புல் காட்சியகத்தில் நூற்றுக்கணக்கான சுட்ட களிமண் பலகைகள் உள்ளன. அவற்றில் ஒரு பலகையில் உலகின் முதலில் எழுதியதாகச் சொல்லப்படும் கவிதை  உள்ளது. ஸு ஷின் என்னும் அரசனை அவன் திருமணம் நடைபெறும் நாளில் மணமகள் பாடியது. என்று சுமேரிய மொழி வல்லுனர்கள் தவிர யாருக்குமே அதன் மொழி புரியாது. இதே போல தொன்மை எகிப்து மொழியையும் சொல்லலாம். 

ஆனால் கி மு 150 வாக்கில் எழுதப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களை பெரிய சிரமங்கள் இல்லாமல் நம்மால் படித்துப் புரிந்து கொள்ளப் படுகிறது. தொடர்ச்சியாக அறுபடாமல் வரும் இந்த மரபுக்கு அகம்  – புறம் என வாழ்வை வகுத்துக் கொண்டதையும் அகத்திணை குடும்பம் என்னும் சமுதாயத்தின் அடிப்படை அலகை வலுப்படுத்தியதையும் நாம் காரணமாகக் கொள்ளலாம்.

 ஏகேராமானுஜன் சங்கப் பாடல்கள் மொழிபெயர்ப்பு  நூலுக்கு “The Interior Landscape” என்று பெயரிட்டுள்ளார்.  சங்கப் பாடல்கள் ஆழமான மனித உள்ளத்தின்  அசைவுகளையும் ஆடல்களையும் விரிந்த இயற்கைப் பின்புலத்தில் வைக்கின்றன.  மக்கள் தொகையும் புழங்கு பொருட்களும்  குறைவாக இருந்த காலம். மனிதன்  அன்றாடம் காண்பது பெரும் நிலப்பரப்புகள் தான். அழகிய மலை, காட்டுக் காட்சிகளும் அவை உருவாக்கும் மனநிலைகளும் இந்தப் பரப்பில் நிரம்பி இருக்கின்றன. . எனவே குறிஞ்சியும் முல்லையும் தான் புற அழகில் நம்மைக் கொள்ளை கொள்ளும் திணைகளாக உள்ளன. 

மலையும் மரமும் இல்லாத பாலைத்திணை உடலும், உள்ளமும் வறண்ட துயரைப் பாடுகிறது. நெய்தலில் கடலினுக்குள் செல்லும் வாழ்வு பேசப்படுவதில்லை. (புலவரைக் கலத்திலேற்றி அனுப்புவது யார்?). மருதம், வயல் சார்ந்தது.

வேளாண்மையில் தன்னிறைவு பெற்றவுடன்  பொருளியல் நிலைத்தன்மை கொண்டு விடுகிறது சமூகத்தில் ஒழுக்கக் கேடும் வந்து விடுகிறது. தலைவி , எதையும் தாங்குவாள், ஆனால் தலைவனின் கூடா ஒழுக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.  ; ஊடல் நிமித்தம்  உள்ளே வருகிறது.  ஆனால் சமூகத்தின் ஒரு சிறு பகுதியே இந்தச் சிக்கலில் மாட்டி இருக்கவேண்டும். மருதத் திணைப் பாடல்கள்  மிகவும் குறைவானவை என்பதை வைத்து இந்தக் கருத்துக்கு வருகிறார் பேராசிரியர் அ ச ஞாநசம்பந்தன். ஒப்புநோக்க மலைகள் பொதிந்த குறிஞ்சியும் அடர் காடுகளைக் காட்டும் முல்லையும் அதிகம் இயற்கையுடன் ஒட்டியும் அதிகம் இனிமையான மனநிலையையும் அளிக்கின்றன. 

இயற்கை வளம் நம் முன்னோருக்கு சிந்தனை வளத்தைக் கொடுத்து விட்டிருக்கிறது.  . 2000 ஆண்டுகளுக்கு முன் உலகின்  வரலாற்று வரைபடத்தைப் பார்த்தால் பெரும்பகுதி கற்கால மற்றும் வேட்டைச் சமுதாயமாக இருந்திருக்கிறது. வெகு சில இடங்களிலேயே நெறிகள் கொண்ட வாழ்க்கை நிகழ்கிறது. அதிலும் மிகக் குறைவான மக்கள் தொகை.    விரிந்தெழுந்தாக வேண்டும் மானுடத் தொகை. அதற்கு அறம் சார் இல்வாழ்வு அவசியத் தேவை.

அகம் புறம்  என மனித வாழ்வைப் பிரித்துக் கொண்டு ஆண்- பெண் வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கொண்டதே  தமிழ்ச் சமூகமும் மொழியும் அழியாது தொடர்வதன் ஒரு காரணம் என்று அ ச ஞானசம்பந்தன் கூறுகிறார்.  புறத்திணைகளுக்கு ஒதுக்கியதை விட அதிகப் பாடல்களும் நூல்களும் அகத்திணைக்கு வழங்கப் பட்டுள்ளன. 

குடும்பம்  சமூகத்தின் அடிப்படை அலகு. அதை நடத்துபவர்களின் அன்புதான் வாழ்க்கை இயந்திரத்தின் உயவுப்பொருளாக இருக்கிறது. தமக்குள் நிறைவாழ்வும் இன்பமும் அடைந்த பெற்றோரே நல்மக்கட்பேறும் விருந்தோம்பலும் சமூக நலமும் கொண்டு விளங்க முடிகிறது.

சங்கப் பாடல்கள் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நோக்கக் கூடிய ஒரு தொலை நோக்கி கிடைத்திருக்கிறது. அது அளிக்கும்  காட்சி தெளிவானது. ஆனால் மிகக் குறைவான நேரம் ஓடுவது. வாழ்வின் உணர்ச்சி உச்சங்களை  மட்டும் சாறு பிழிந்து உலர வைத்து , மாறாத மணத்துடன் காலம் கடந்து காட்டும் தைலப்புட்டிகளே இப்பாடல்கள். 

இந்தப் புட்டிகளில் அகநானூறு 84ஆம் பாடலை எழுதி இருப்பவர் மதுரை எழுத்தாளன் என்னும் புலவர். சங்க இலக்கியம் கிறக்கம் தருவதன் முக்கியக் காரணம் அவற்றின் முழுச் சூழலையும் ஆழத்தையும் அறிய முடியாமையும் ஆகும்.  

இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம். மதுரை என்றால் குமரிக்கோடு  ஒட்டி இருந்த கடல் கொண்ட தென் மதுரையா அல்லது தற்போதைய மதுரையா? எழுத்தாளன் என்பது தனிப் புலவரின் பெயரா அல்லது ஒரு குலக்குழுவின் பெயரா? கேரளத்தில் பின்னாளில் துலங்கிய எழுத்தச்சன் போல ஓர் ஆசிரியர் குலம் இங்கே இருந்ததா ? இவை போன்ற வினாக்கள் நம் மனதை விட்டு நீங்காது. அதனால் அவர் பெயரில் இருக்கும் ஒரே ஒரு பாடலும் நிலைத்திருக்கும். 

ஒரு கோட்டை இருக்கிறது.  மண்ணும் சுண்ணமும் சேர்ந்து செய்திருக்கவேண்டும். அதை முற்றுகை இட்டு வென்று விட்டான் பாண்டியமன்னன். அவன் கழுத்தில் வேப்பம்பூ மாலை. தோற்று விட்ட நிலத்தின் தலைவன் கப்பமும் கொடுக்கத் தயார்.  . 

ஆனாலும் மன்னனுக்கு  ஏதோ நிறைவில்லை. வெற்றி பெற்ற பிறகு வரும் வெறுமையா? அல்லது வெற்றி பெற்ற விதம் வேறு வடிவில் இருந்திருக்க வேண்டுமா? எதிர்பார்த்த உச்சம் வருவதற்குள் போர் முடிந்து விட்டதா? ஏனோ தெரியவில்லை. சினத்தில் சிறந்து பாசறையிலேயே தங்கி விட்டான். அவனுடன் வந்த சிறுகுடித் தலைவன் தான் இந்தப் பாடலின் தலைவன். 

மழைக்காலம் தொடங்கும் போது வந்து விடுகிறேன் என்று தன் மனைவியிடம் வாக்குக் கொடுத்து விட்டு வந்துள்ளான். இல்லத்தைக் காத்து, விருந்தினரையும் அருளி காத்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு செய்தி சொல்ல ஒரு தூதனைப் பிடிக்கிறான். தூதனுக்கு செய்தியும் , முகவரியும் , மனநிலையும் சரியாகக் கடத்தவேண்டும்.

அவள் யார்? ஒளிவீசும் நெற்றியை உடையவள் (எவ்வளவு தெளிவான அடையாளம் ! )

முகவரி;

நெருப்பு போன்ற கண்களை உடைய பன்றி ஒன்று. ,நுண்ணிய மணல் செறிந்த புழுதியில் உறங்கிக் கொண்டிருக்கும். அதன் முதுகு மறையும்படி முல்லை மலர்கள் விழுந்து மூடி இருக்கும். அத்தகைய காட்டின் வெளியே இருக்கும் சீரான  ஊர். 

அவள் அங்கே. 

நான் (தலைவன் ) இருக்கும் இடமெது?:  கோட்டைக்கு வெளியே அறுவடை முடிந்து விட்டது. சுமை தூக்கிகள் பெரிய நெல் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள். நெல் கட்டுகளுடன் தாமரை போன்ற  மலர்த்தண்டுகளும் சேர்த்துக் கட்டி இருக்கிறார்கள். நான் இங்கே. 

இங்கே காட்சி எப்படி?: 

மலையின் உச்சியில் வானவில் உட்கார்ந்திருக்கிறது. முரசு போல இடிக்கிறது மேகம். கடல் நீரைக் குடித்துப் பெருத்து தாழ்வாக ஊர்ந்து பூமியை வளைத்துக் கொண்டு  திசைகள் மறையும்படிப் பெய்கிறது மழை.  இப்படியாக அழகிய முல்லை நிலத்தில் மாரிக்காலம் வந்துவிட்டது. 

தூதுவன் போய்ச் சொல்லி இருப்பான். மன்னனும் ஒரு சலிப்பான கணத்தில் முற்றுகையை முடித்திருப்பான். தலைவனும் விரைவான தேரில் பறந்து வீட்டிற்கு வந்திருப்பான். அய்யனும் ஆச்சியும் மகிழ்ந்து, மக்கட்செல்வம் நிறைந்து, விருந்தோம்பி ,இனியவை கூறி  , தீவினை அஞ்சி ஒப்பரவறிந்து , புகழீட்டி, மூத்து, நிலம் நீங்கி இருப்பார்கள். அந்த மன்னனும், தூதனும் இதை எழுதிய எழுத்தாளனும் இன்று இயற்கையுடன் தனிமங்களாகக் கலந்து விட்டிருப்பார்கள். அவர்கள் நடந்த நிலமும் , ஊர்ந்த தேரும் , உருக்கிய பொன்னும் உருமாறி விட்டிருக்கும்.  

இறவாத இந்தப் பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வரும் அழகு எண்ண எண்ணப் பொலிந்து கொண்டிருக்கும். வாசிக்குந்தோறும் காட்சிகள் கோர்த்துத் தெளிந்து கொண்டே போகும். இந்த அனுபவமும் மொழியும் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் எந்த மொழிக்கும் அல்லது சமுதாயத்திற்கும் கிடைக்காதது. 

குறிப்புப் பொருள்

ஒரு செய்தியைச் சொல்வதற்கு கவிதை வேண்டாம். ஒலை நறுக்கு போதும். வரிகளைக் கவிதையாக்குவது அதில் எது நேரடியாகச் சொல்லப்படாததோ அது தான். இப்பாடல் உருவாக்கும் மனநிலையும் குறிப்புப் பொருளும் அழகானவை. குறிப்பால் உணர்த்துவது மொழியின் ஆழத்தையும் பழக்கத்தையும் பொருத்தது. 

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பியர் சூத்திரத்தில் ‘ குறித்தனவே’ என்பதே கவனிக்கவேண்டியது. சொற்கள் பொருளைக் குறிக்கத் தான் முடியும். ஒரு சொல் தான் குறிக்கும் பொருளிற்கான பிரதி மட்டுமே. அதன் சூழல், மன அமைப்பு, நோக்கம் மாறுவதற்கேற்ப, அது தரும் காட்சியும்  மாறிக்கொண்டிருக்கும். 

இறைச்சிப் பொருள், உள்ளுறை உவமம் என்னும் அழகுகள் அகத்துறையின் சிறப்பு. இந்தப் பாடலில் இரண்டு உள்ளுறை உவமங்கள் வருகின்றன. 

முதலில் தலைவியின் ஊரில் உள்ள காட்சி. 

முல்லை மலர்கள் வெண்மையும் நறுமணமும் கொண்டவை. இது தலைவியின் குணம் குன்றா மணவாழ்வைக் குறிக்கிறது. முல்லைப்பூக்கள்  விழுவதால் சேற்றுமணலில் உறங்கிக் கொண்டிருக்கும் பன்றி மறைக்கப் பட்டு விடுகிறது. இங்கே பருப்பொருள் ஒப்பீட்டிலும் மன ஓட்டத்திலும் ஒரு முரண் காண்பிக்கப் படுகிறது. பன்றியும் உறக்கமும்  தமோகுணத்தின் அடையாளம். முல்லையின் வெண்மை, மென்மை, நறுமணம் சத்வ குணத்தைக் குறிக்கின்றன. 

ஆழ்ந்துறங்கும் பன்றி அறியாது தன்மீது விழுந்த மலரின் சிறப்பை. மூர்க்கத்தால் போர் புரியும் மன்னன் அறியமாட்டான் தலைவன் தலைவியிடம் நிலவும் மெல்லியல்பை என்று விரித்தால் ஒரு ‘mindscape’ கிடைக்கிறது. 

இன்னொரு ஒப்பீட்டில், ஒளி பொருந்திய நெற்றியின் புற அமைதி கொந்தளிக்கும் மனத்தை மூடி இருக்கிறது, பன்றியை மூடிய முல்லையைப் போல. 

ஒண்ணுதல் என்ற ஒரு சொல் மட்டுமே அவளைப் பற்றிக் குறிக்கப் படுகிறது. 

நறுவீ முல்லை நாண்மலர் உதிர்வது ஒரு கரிய காட்டில் நடக்கும் கனவை எழுப்புகிறது. மலர்களில் பல நிலைகள் உள்ளன. அரும்பு , முகை, போது, வீ, செம்மல்.  வீ என்பது முதிர்ந்த , உதிரப்போகும் மலர்.  

இன்னுமொரு உள்ளுறை வயலில் காணப்படுகிறது. நெற்கதிர்களை அடுக்கிக் கட்டும்போது , நிறைய செந்தாமரைத் தண்டுகளும் பிற மலர்க்காம்புகளும் சேர்ந்து கட்டப் படுகின்றன. உழவர் நெல் அறுவடையில் இருக்கிறார்கள். இது வயிற்றுப்பாடு சேர்ந்தது. அதனால் உணவாகும் (நெல்) பூக்களே இங்கு முக்கியம். இதயத்தின் உணர்வுகளுக்கான இடமில்லை இது. தானியங்களுடன்  அழகுப் பூக்களும் சேர்ந்து கட்டப் படுகின்றன. 

மலர் பிறழ வாங்கிக் கட்டுவது மலர்தொடுப்பது போல இருக்காது. மாலையில் உட்கார்ந்து சிரிக்க வேண்டிய தாமரை சுமையைக் கட்டித் துன்பமடைகிறது. மலரின் துயர் வாளுக்குத் தெரியாது. முற்றுகையிட்டிருக்கும் மன்னனுக்குத் தெரியாது தன் தளபதியும் அவள் மனையாட்டியும் படும் துயர். 

உலக வாழ்வில் வெளியில் நடக்கும் சம்பவங்கள் மனதினுள் நடக்கும் பெரும் நாடகத்தின் ஒரு துளியே. உள்ளே நடப்பதே அடிப்படை விசைகள். ஆணவமே போரென்றும் காமமென்றும் வெளிப்படுகிறது. மலரின் முனையிலும் வாளின் ஒளியிலும் திகழ்கிறது. காமமும் ஒரு போரின்றி வேறென்ன? போரின் பெரும்பகுதி வெளியிலா நடக்கிறது?

எல்லாக் காலங்களிலும் மாறாத அடிப்படை உணர்வுகளை மென்மையான மணத்தில் நிறைத்துத் தந்துள்ளது இந்த அகநானூற்றுப் பாடல். 

மலைமிசைக் குலைஇய உறுகெழு திருவில்
பணைமுழங் கெழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை         5
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி
அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவடைந் திருந்த அருமுனை இயவில்
சீறூ ரோளே ஒண்ணுதல் யாமே         10
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில்
அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து         15
வினைவயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே.
        —- மதுரை எழுத்தாளன்.

ஒள் நுதல்- ஒள்ளிய நெற்றியினையுடைய நங் காதலியானவள்; மலைமிசை குலைஇய உருகெழு திருவில் பணை முழங்கு எழிலி – மலையின் உச்சியில் வளைந்துள்ள நிறம் பொருந்திய இந்திரவில்லையும் முரசம் போன்ற முழக்கத்தையும் உடைய; முகில்; பௌவம் வாங்கி தாழ்பெயல் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ- கடலின்கண் நீரைப் பருகித் தாழ்ந்து பெய்தற்குரிய மிக்க நீரோடு வானத்தின்கண் வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுச்சியுற்று உலகத்தை வளைத்துக்கொண்டு; மாதிரம் புதைப்பப் பொழிதலின் – திசைகள் மறையும்படி மழையைச் சொரிதலாலே; காண்வர இருநிலம் ஏம் உறு காலை- இனிய காட்சியுண்டாகும்படி கவினிய பெரிய முல்லைநிலத்தில் வாழ்வோர் இன்பம் எய்துதற்குக் காரணமான கார்ப்பருவத்திலே; நெருப் பின் அன்ன சிறுகண் பன்றி அயிர்க்கண் படாஅர் துஞ்சுபுறம் புதைய நறுவீ முல்லை நாள்மலர் உதிரும் – நெருப்புப்போன்ற சிறிய கண்களையுடைய பன்றியானது நுண்ணிய மணலின்கண்ணுள்ள சிறிய தூற்றிலே உறங்குகின்ற பொழுது அதன் முதுகு மறைந்து போகும்படி நறுமணங்கமழும் மலர்களையுடைய முல்லையினது புதிய மலர்கள் உதிருகின்ற; புறவு அடைந்திருந்த அருமுனை இயவில் சீறூரோள் – காடு சார்ந்திருக்கும் அரிய முனை களையுடைய வழியிலுள்ள சிறிய ஊரினிடத்தே பிரிவாற்றாது பெரிதும் வருந்தி இருப்பாளாக; என்க.

(வி-ம்) குலைஇய- வளைந்த. உரு- நிறம். திருவில்- வானவில். (இந்திரவில்) பணை- முரசு -பணைபோல முழங்கும் எழிலி என்க. பெயல்- பெய்தல் தொழில். ஏர்பு- எழுச்சியுற்று. மாதிரம் -திசை. எழிலி வாங்கி ஏர்பு வளைஇப் புதைப்பப் பொழிதலின் என்க. காண்- காட்சி. ஏம்- ஏமம் என்பதன் விகாரம். அயிர்- நுண்மணல். படாஅர்- சிறு தூறு. துஞ்சுபுறம் புதைய- துஞ்சுங்கால் அதன் முதுகு மறைய என்க. புறவு- முல்லைப்பரப்பு. இயவு- வழி.

10-17: யாமே…..பாசறையேமே.

(இ-ள்) யாமே- அவளைக் கைவிட்டு வந்த வன்கண்மையையுடைய யாம் இப்பொழுது; எரிபுரை பல் மலர் பிறழ வாங்கி அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ்சூடு- தீப்பிழம்பையொத்த செந்தாமரை முதலிய பல்வேறு மலர்களும் தலைமாறும்படி அள்ளி நெல் அரிகின்ற உழவர் கட்டிய அசைகின்ற தலையையுடைய பெரிய கதிர்க்கட்டுகளை; கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்-கள்ளைக்குடித்த தொழிலாளர்கள் சுமந்துகொண்டு களந்தோறும் செல்லுதற்கிடனான ; தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அருந்திறை கொடுப்பவும் கொள்ளான்- மருதநிலம் சூழ்ந்த வெற்றிக்கொடி அசைகின்ற மதிலமைந்த இந்த ஊராகிய கொடுத்தற்கரிய திறைப்பொருளைப் பகை மன்னர்கள் வணங்கிக் கொடுப்பவும் ஏற்றுக்கொள்ளானாய்; சினம் சிறந்து வினைவயின் பெயர்க்கும் தானைபுனைதார் வேந்தன்- வெகுளிமிக்குப் பின்னரும் போர்த் தொழிலின்கண் செலுத்தப்படுகின்ற சேனைகளையும் அணிந்த வாகைமாலையினையும் உடைய நம்மரசனது; பாசறையேம்- பாசறை இடத்து அவளை நினைந்து வருந்தி இருக்கின்றேம், அவள் நிலை என்னையோ? என்பதாம்

சூடு- கதிர்க்கட்டு. வினைஞர் என்றது கூலிக்கு வேலைசெய்பவரை. தண்ணடை- மருதநிலம். மருதநிலம் சூழ்ந்த தமது அரண்மனையையே பகைவர் திறையாகக் கொடுப்பவும் கொள்ளான் என்றது, அரசனது மிகையாய மறப்பண்பினைக் குறைகூறி தன்னுள் நொந்துரைத்தவாறு. அவள் நிலை என்னையோ என்பது குறிப்பு.

நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0490_02.html

பாட்டில் நெக்! – செல்வேந்திரன்

கொரானா கால சந்திப்புகள் – 2

திட்டமிட்டபடி ஏப்ரல் 26 அன்று இரண்டாவது ஸ்கைப் சந்திப்பு. விவாதத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சிறுகதை – ஹூலியோஸ் கொத்தசாரின் ‘தெற்கு நெடுஞ்சாலை’. செல்வாவின் தேர்வு இது. இக்கதையை முன்வைத்து செல்வா ஒரு அறிமுக உரை வழங்கினார். அதை தொடர்ந்து மிக விரிவான விவாதம் நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டது. அகநானூற்று பாடலொன்றை ராகவேந்திரன் தேர்வு செய்து மிகச் செறிவான உரை ஒன்றை நிகழ்த்தினார். சுஷீல் நரனின் நவீன கவிதைகள் இரண்டின் மீது தன் வாசிப்பு கோணத்தைப் பகிர்ந்தார்.

செல்வேந்திரனின் உரை:

பாட்டில் நெக்! – செல்வேந்திரன்

ஹூலியோ கொர்த்தசார் எழுதிய The Southern Thruway (1967) எனும் சிறுகதை தமிழில் எம்.எஸ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. All fires the fire தொகுப்பில் இடம்பெற்றிருந்த கதை. தெற்கு பிரான்ஸிலிருந்து பாரிஸூக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் – ஆறு வரிசைகளாக வாகனங்கள் நகருமளவிற்கு அகலமுள்ள சாலை – ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் பல்லாயிரக்கணக்கான கார்கள் சிக்கிக்கொள்கின்றன. 

விதம் விதமான கார்களில் விதம் விதமான மனிதர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காகப் பாரிஸூக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒரு காரில் காத்திருக்கும் எஞ்சீனியரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. காத்திருப்பு நாட்கணக்காக நீடிக்கிறது. பருவ காலங்கள் மாறுகின்றன. நெருக்கடி மானுட அகத்திலும் புறத்திலும் உருவாக்கும் மாற்றங்கள் நுட்பமாகச் சித்தரிக்கப்படுகின்றன. புதிய உறவுகள் தழைக்கின்றன. ஒரு தற்கொலை நிகழ்கிறது. ஒருவர் நோயுற்று மடிகிறார். காதல் உருவாகிறது. கலவி நடக்கிறது. புதிய வாழ்க்கையின் கனவுகள் கொப்பளிக்கின்றன. சிறுவர்கள் வினோதமாக நடந்துகொள்கிறார்கள். புதுப்புது வதந்திகள் காற்றில் அலை போல கிளம்பி வந்துகொண்டே இருக்கிறது. 

ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பொருட்டு குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தலைமை உருவாகிறது. ஒரு தற்காலிக சமுதாயம் உருப்பெற்று எழுதுகிறது. தனக்கென்று எதுவும் தக்கவைத்துக்கொள்ளாத சமதர்ம சமுதாயம். குழந்தைகள், பெரியவர்கள், விவசாயிகள், விற்பனையாளர்கள், மருத்துவர், ராணுவ வீரன், பொறியாளன் என அனைத்து சாம்பிள்களும் கொண்ட ஒரு சமுதாயம். ஆனால், மெல்ல குழுக்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன. அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுகின்றன. அநியாய விலைக்கு விற்கப்படுகின்றன. பதுக்குபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். எங்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அருகிலிருக்கும் கிராமத்து விவசாயிகள் உதவ மறுக்கிறார்கள். காரிலும் சாலையிலும் படுத்துறங்குகிறார்கள். சில நாட்களுக்குப் பின் நிலைமை சீரடைந்ததும் அவரவர் கார்களுக்குப் பாய்ந்தேறி திசைக்கொன்றாய் பறக்கிறார்கள். பந்தயம் போல பாய்கிறார்கள். உறவுகளும் கனவுகளும் சிதறுகின்றன. அதுகாறும் அவர்களைப் பிணைத்த சாலை இப்போது அனைத்தையும் தனித்தனித் துளிகளாக்குகிறது. மானுடம் எப்போதும் தற்காலிகமானப் பாவனைகளை உருவாக்கி பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எத்தனிக்கிறது. மறுகணம் தன் குரூர இயல்புக்குத் திரும்புகிறது. சென்னை பெருவெள்ள நாட்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டவர்களெல்லாம் நிலைமை சீரான சின்னாட்களிலேயே அற்ப அரசியல் நிலைப்பாடுகளுக்காக ஃபேஸ்புக்கில் ரத்தவெறியுடன் அடித்துக்கொண்டதைக் கண்டிருக்கிறேன். 

ஹூலியோ கொர்த்தசார் பெல்ஜியத்தில் அர்ஜென்டினிய தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். உலகப்போருக்குப் பின் அவரது பெற்றோர்கள் அர்ஜென்டினாவிற்குத் திரும்பினார்கள். அங்கு கொர்த்தசார் புனைவிலக்கியம் பயின்று ஆசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்களின் பல படைப்புகளை மொழிபெயர்த்தார். அரசியல் நிலைப்பாட்டினால் அவருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டன. பிரான்ஸூக்குப் பெயர்ந்தார். வாழ்வின் பெரும்பகுதி பாரீஸ் நகரில் கழித்தார். போர்ஹேஸின் புனைவுலகமும், கீட்ஸின் கவிதைகளும் இவரில் ஆதிக்கம் செலுத்தின. நூல்களுக்குக் கிடைத்த பரிசுத்தொகையை அரசியல் புரட்சிப் போராட்டங்களுக்கு அளித்தார். மிகச் சாதாரணமான கதைக்களன்களைக் கொண்டு அசாத்தியமான உணர்வெழுச்சியை உண்டாக்கும் கதைகளைப் படைத்தார். தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் படைப்புகளை எழுதினார். சர்ரிலியஸத்தின் கூறுகள் அதிகம் கொண்ட இவரது படைப்புகள் மாயா யதார்த்தவாதம் எனும் வகைமையை நெருங்கிவருபவை. பல கதைகளின் கட்டுமானத்தில் ஜாஸ் இசையின் வெளிப்பாட்டுத்தன்மையை  கைக்கொண்டுள்ளார். ஜாஸ், குத்துச்சண்டை, புகைப்படக் கலை, பயணங்கள் ஆகியவை இவரது பிறதுறை ஆர்வங்களாக இருந்தன. அசப்பில் சேகுவேராவை நினைவூட்டும் வசீகர அழகுடன் குறிப்பிடத்தக்க லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகத் திகழ்ந்தார். 

நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் உலவும் இந்தக் கதைவெளியில் எவருக்கும் பெயர் கிடையாது. அவரவர் கார் வகைமைகள் மற்றும் தொழிலின் பெயராலேயே இப்பெயரிலிகள் விளிக்கப்படுகிறார்கள். கார்கள் தனித்தனி குகைகளாக உருவகம் கொள்கின்றன. மோட்டார் தொழில்கள் உலகை வென்று கொண்டிருந்த காலகட்டத்தில் அந்தஸ்தின் அடையாளங்களாக கார்கள் வெறிகொண்டு வாங்கப்பட்டன. உரிமையாளரின் வாழ்க்கைப் பின்புலத்தைச் சுட்டுவதாக கார்கள் அமைந்தன. பற்றியிருக்கும் ஸ்டீயரிங்கின் இயல்பே மனிதர்களின் இயல்பாகவும் ஆயிற்று. 

சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த இச்சிறுகதை இந்தக் கொரானா நாட்களில் பல்வேறு அர்த்தங்களை அளித்துக்கொண்டே இருந்தது. அன்றாடம் கிளம்பிவரும் வதந்திகள். அரசு காப்பாற்றும் எனும் நம்பிக்கைகள். உருவாகும் புதிய விழுமியங்கள். ஒத்தாசை கூட்டணிகள். மலரும் உறவுகள். அத்தியாவசியப் பொருட்களுக்கான மோதல்கள். பதுக்கல்கள். எங்கெங்கிலும் அவநம்பிக்கைகள். காருக்குள் அடைபட்டிருப்பதைப் போன்ற காலஎல்லைகளைக் கடந்த காத்திருப்புகள். அங்கலாய்ப்புகள். மரணங்கள். 

உடலிலிருந்து கெட்ட ஆவியை வெளியேற்றுவதுப் போல கதைகளை வெளியேற்றுகிறேன் என்பது கொர்த்தசாரின் புகழ்மிக்க வாக்கியங்களுள் ஒன்று. கெட்டிக்காரத்தனமான அறிவுப்பூர்வமான கதைகளுக்கு எதிரான அங்கலாய்ப்பை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்தவர். எளிமையான கதைக்களத்தின் மீது அசாதாரணத்தன்மை வந்து மோதும் கதைகளில் தன் ஆழ்மனதின் கனவுத்தன்மையை கதைகளுக்குள் சுதந்திரமாக உலவவிட்டவர். கதையோட்டத்தில் எப்போதும் ஒரு லயம் நீடிக்கும். 

விதம் விதமாய் கிளம்பிவரும் வதந்திகள், தனிநபர்களுக்கு விளைபொருட்களை விற்க மறுக்கும் விவசாயிகள், காரணமின்றி கிராமங்களிலிருந்து பறந்து வந்து கார்களின் மீது விழும் கற்கள்,  தற்காலிகமான ஆம்புலன்ஸாக மாறிய வண்டியில் சிறுவர்கள் மாட்டும் செஞ்சிலுவை கொடியும், நாற்புறமும் உணர்ச்சிகள் மறைந்து வெறிகொள்ளும் தருணத்தில் செஞ்சிலுவை கொடி அபத்தமாக அசைவதும், கன்னியாஸ்திரீக்கு ஏற்படும் திடீர் சன்னதம், வாய்ஜால விற்பனைப்பிரதியாளனிடமிருந்து யுவதியை மீட்டு தன் காதலியாக்கிக்கொள்ளும் எஞ்சினீயரின் கனவுகளும், இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் காரில் ஒரு சிறுமி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருப்பதும், பெரியவரின் தற்கொலைக் குறிப்பும் கதையின் மிக நுண்ணிய தருணங்களாக விரிவு கொள்கின்றன. டிராஃபிக் ஜாமில் காத்திருக்கும் ஒரு அமெரிக்கன் எதனுடனும் பட்டுக்கொள்வதில்லை. ஏதாகிலும் நிகழ்ந்து நிலைமை உடனே சீரானால் போதும் அவனுக்கு. 

3 நிமிடத்திற்குள் மிகச்சிறந்ததை நல்ல இசைஞன் தந்து விடவேண்டும். இலக்கியத்திற்கும் இது பொருந்தும் என்கிறார் கொர்த்தசார். கொரானாவிற்கும் இப்படி ஒரு கால எல்லை இருக்குமானால் எத்தனை நன்றாக இருக்கும்?

கொரானா கால சந்திப்புகள் – 1, செல்வேந்திரனின் பதிவு

https://selventhiran.blogspot.com/2020/04/blog-post_12.html

ஒரு புக் க்ளப் ஆரம்பிக்கலாம் எனும் யோசனையை மொழிபெயர்ப்பாளர் நரேன்தான் முதலில் சொன்னார். அமெரிக்காவில் பல காலம் வாழ்ந்தவர். அங்கே புத்தகச் சங்கங்கள் பலவற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டவர். ஜெயமோகனின் வாசக நண்பர்கள் ஏற்கனவே பாண்டிச்சேரி, சென்னை, காரைக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல நகரங்களில் மாதாமாதம் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். கோவையிலும் கூடுகைகள் நிகழலலாம் என்பது நரேனின் எண்ணமாக இருந்தது. 


 ‘கோயம்புத்தூர் புக் க்ளப்’ என்பது இந்தியாவின் புராதன வாசக அமைப்புகளுள் ஒன்று. 1966-ல் துவங்கி இன்றளவும் மாதாமாதம் முதல் ஞாயிறு அன்று சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதிகமும் ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள். இவை தவிர இலக்கியச் சந்திப்பு உள்ளிட்ட சில அமைப்புகளின் கூடுகைகள் மாதம் தவறாமல் நடந்துகொண்டுதானிருந்தன.
எதிலும் உடனடியாக சலித்துவிடுவது என்னுடைய இயல்பு. எம்போன்ற மண்குதிரைகளை நம்பி  ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டு விரைவில் தேய்ந்தழிந்து விடக் கூடாது என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால், நண்பர்கள் தீவிரமாக இருந்தார்கள். நான் சுரா துவங்கி நடத்திய  காகங்கள் கூட்டத்தொடர் பற்றி வாசித்திருந்தேன். ஞாநியின் கேணிக்கும் அவ்வப்போது சென்றதுண்டு. ஆகவே யாரெல்லாம் உறுப்பினராக இருக்கலாம், சந்திப்பின் நோக்கம், எதை வாசிக்கப்போகிறோம், விவாதத்தின் நெறிமுறைகள், நிகழ்முறை ஆகியவற்றைப் பற்றிய நெறிகள் துல்லியமாக வகுத்துக்கொள்ளும்படி நரேனிடம் கேட்டுக்கொண்டேன்.
தமிழிலும், இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் உள்ள செவ்விலக்கிய நாவல்களை வாசிப்பது,  அவரவர் வாசிப்பை தலா பத்து நிமிடங்கள் முன் வைத்து விவாதிப்பது, படைப்பின் அத்தனை நுட்பங்களையும் கூடுமானவரை அள்ளிக்கொள்ள முயற்சிப்பது, பல்கோண வாசிப்பின் வழியாகத் தவறவிட்டவற்றை நிரப்பிக்கொள்வது என்றும் தீர்மானமாகியது. தேர்ந்தெடுக்கப்படும் நூல் முன்னரே அறிவிக்கப்படும். வாசிக்காதவர்கள் கூட்டத்திற்கு வரக்கூடாது. ஜெயமோகன் ஒருங்கிணைக்கும் கூடுகைகளுக்கென்று ஆகிவந்த விதிகளும் விழுமியங்களும் கடைப்பிடிக்கப்படவேண்டும் என முடிவாகிற்று. தத்தம் வாசிப்பை கட்டுரையாக்கி ஒரே இணையதளத்தில் தொகுப்பது பிற்காலத்தில் அந்நூல்களைப் பற்றி தேடுபவர்களுக்குப் பயனளிக்கும் என்றும் முடிவு செய்தோம். 
அதன்படி சொல்முகம் வாசகர் குழுமம் உருவாகியது. டைனமிக் நடராஜனுக்குச் சொந்தமான தோட்டம் தொண்டாமுத்தூரில் இருந்தது. அங்கே ஒரு கெஸ்ட் ஹவுஸூம் உண்டு. அங்கு சந்திப்பை நடத்திக்கொள்ள மனமுவந்தார். ஓரொரு மாதமும் இறுதி ஞாயிறென்று முடிவாகியது. காலையில் பத்து மணிக்குத் துவங்கி மதியம் ஒரு மணி வரை. கொறிக்க கடிக்க இனிய தின்பண்டங்களை ஓரொரு மாதமும் ஒருவர் பொறுப்பேற்றுக்கொள்வது. மேமாதம் நடந்த முதல் கூட்டத்தில் தொழிலதிபரும் இலக்கிய ஆர்வலருமான டி. பாலசுந்தரம் கலந்துகொண்டு உலகளவில் புக் ரீடர்ஸ் க்ளப்புகள் எங்ஙனம் செயல்படுகின்றன என துவக்க உரையாற்றினார். அதன் பிறகு, கொரானா வீடடங்கு வரை மாதம் தவறாமல் சந்திப்புகள் நிகழ்ந்து வருகின்றன. துவக்கம் முதலே 15 முதல் 25 நபர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் இருந்து கூட ஒருவர் மாதாமாதம் வந்து கொண்டிருக்கிறார். 
படைப்பு உருவான சூழல், அதன் வரலாற்றுப் பின்னணி, எழுத்தாளரின் ஆளுமை மற்றும் பிற  படைப்புகள் குறித்த குறிப்புகள், இலக்கிய வகைமை, நுட்பங்கள், நுண்ணிய உள்மடிப்புகள்,  நாடகீயமான தருணங்கள், ஆன்மீகமான கேள்விகள், பாத்திர உருமாற்றம், பாத்திரங்களுக்கிடையேயான ஒப்புமைகள், நூல் முன் வைக்கும் தரிசனங்கள், விவாதிக்கும் நூலையொட்டி வாசிக்க வேண்டிய துணை நூல்கள் என ஒரு வைரக்கல்லின் அத்தனைப் பட்டைகளின் வழியாகவும் ஊடறுத்துச் செல்லும் ஒளியை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சி. 
இதுகாறும் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால், ஓநாய் குலச் சின்னம், மண்ணும் மனிதரும், மதகுரு, மீசான் கற்கள், அக்னி நதி, என் பெயர் சிவப்பு, குழந்தைகள் பெண்கள் ஆண்கள் உள்ளிட்ட நாவல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதத்திற்கு கோரா, ஏப்ரலுக்கு கொற்றவை என முடிவு செய்திருந்தோம். கொரானாவினால் சந்திக்க இயலாமற் போய் விட்டது.  
நண்பர்கள் சந்தித்து நெடுநாட்களாகி விட்டதால் இன்று ஸ்கைப்பில் சந்தித்து உரையாடலாம் என முடிவு செய்தோம். கொரானா தினங்களில் நண்பர்கள் வாசித்த நூல்களைப் பற்றிய விவாதமாக அமைத்தோம். ஜெயமோகனின் புனைவுக்களியாட்டு கதைகள், நாஞ்சில் நாடனின் சங்கிலி பூதத்தான், சுதந்திரத்தின் நிறம், சுமித்ரா, கங்கை கொண்ட சோழ புரம், புன்னகைக்கும் பிரபஞ்சம், பின் தொடரும் நிழலின் குரல், தாய் மண் (குட் எர்த்), சம்ஸ்காரா, கதை கேட்கும் சுவர்கள், ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்டு பை சிக்ஸ் க்ளாஸஸ், ரினாய்சன்ஸ் ஆஃப் இந்தியா, வரப்புகள், நைவேத்யம், வண்ணநிலவன் கதைகள் என அவரவர் வாசித்த நூல்களைப் பற்றிய அபிப்ராயத்தை 12 பேர் விவாதித்தோம்.  ஆச்சர்யகரமாக எவ்வித இடையூறுமின்றி விவாதங்கள் துல்லியமான தொழில்நுட்பத் தரத்துடன் இணைந்திருந்தது. ஒருவர் பேசுகையில் பிறர் தங்களது வீடியோ மற்றும் ஆடியோக்களை அணைத்து வைக்கும் வழக்கம் இருந்தால் இது போல பயனுள்ள விவாதங்களை மேற்கொள்ள முடியும். 
சுராவின் காகங்கள் 77-ல் துவங்கி 83ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. மொத்தம் 88 கூட்டங்கள். ஒருவர் கட்டுரை வாசிக்க அதன் மேல் பிறர் விவாதங்களை முன்வைக்க எனும் வடிவில். பெரும்பாலான கூட்டங்களைப் பற்றி அ.கா. பெருமாள் குறிப்பெடுத்து வைத்துள்ளார். காகங்களின் கதை என அக்குறிப்புகள் நூல்வடிவம் பெற்றுள்ளன. இத்தகையச் சந்திப்புகளின் பயன்மதிப்பு என்ன என்பதை அங்கிருந்து உருவாகி வரும் மதிப்பீடுகளும், படைப்பாளிகளுமே காலத்திற்கு காட்டிச் செல்கிறார்கள். சொல் முகத்தின் முதல் கூட்டத்தில் தன் அபிப்ராயங்களைத் தயங்கித் தயங்கி முன் வைத்தவர்கள், உதிரி உதியாக சொற்களை உதித்தவர்கள் பலரும் இன்று தீவிரமாக எழுதத் துவங்கியுள்ளார்கள் என்பது மகிழ்வளிக்கக் கூடியது. 
சொல்முகம் இணையதளம்: https://solmugam.home.blog/
இலக்கியத்தில் தீவிரம் கொண்ட, கோவையைச் சேர்ந்த எவரும் சொல் முகத்தின் அங்கத்தினராக முடியும். ஆர்வம் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய சுய அறிமுகத்தை இந்த எண்ணிற்கு வாட்ஸாப் செய்து குழுமத்தில் இணைந்து கொள்ளலாம்: 7339055954

கொரானா கால சந்திப்புகள் – 1

மே மாதம் 2019 லிருந்து இடைவிடாது தொடர்ந்து நடந்த சொல்முகம் சந்திப்புகள் கொரானா ஊரடங்கால் மார்ச் மாதம் தடைபட்டது. மார்ச் மாத வாசிப்பாக தாகூரின் ‘கோரா’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கூடுகை நடக்கவிருந்த வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மக்கள் வீடடங்கத் தொடங்கிய பின்னர், இதுவரை அறிந்திராத ஒரு பரபரப்பு வீடுகளுக்குள்ளிருந்து எதிரொலிக்கத் தொடங்கியது. எலெக்ட்ரானிக் மீடியாவின் வசம் மக்கள் முழுமையாய் தஞ்சம் புகுந்துக் கொண்டனர். பக்கத்து தெருவில் இருந்த நண்பனை கண்டு பேசியிராதவன் கூட ‘ஜூம் டவுன்லோடு பண்ணிட்டியா’ என்று அத்தனை பேரையும் அழைத்து தொந்தரவு செய்தான். கலையார்வங்களும் படைப்பூக்கமும் பீறிட்டு பொங்கின. இந்த இருபது நாளை முழு மூச்சாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தவறேதும் இல்லை ஆனால் இது ஒரு வருடத்திற்கு நீடிக்கும் பட்சத்தில் தாக்கு பிடிக்க முடியுமா என்ற கேள்வி பெரும்பாலோனோர் மனதிற்குள் நுழையவில்லை. உள்ளிருந்து உள்ளுக்குள் விரிந்து செல்வதற்கு பதிலாக உரக்க கத்தி வெளியே தம் இருப்பை அறியச் செய்யும் அவசரம்தான் அதிகமானதாக தோன்றியது.

சொல்முகம் என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ நண்பர்கள் அனைவரும் முகம் பார்த்து பேசுவதையே விரும்பினர். ஊரடங்கு முடிவிற்கு வந்தவுடன் வழக்கம் போல சந்தித்து உரையாடலாம் என்பதே நண்பர்களின் எண்ணமாக இருந்தது. அதனால், ஏப்ரல் மாதம் – ஒரு வருடம் நிறைவு – வாசிப்பிற்காக தேர்வு செய்திருந்த ஜெயமோகனின் ‘கொற்றவை’ மற்றும் ‘கோரா’ இரண்டையும் ஒரே நாளில், ஏப்ரல் இறுதியில், கலந்துரையாடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும், கொரானா செய்திகளும் செய்திகளைத் தவிர வேறெதையும் கவனிக்காத மனதும் கொஞ்சம் இறுகிப் போயிருந்தது. நட்பு கூடலாகவோ அல்ல சற்றேனும் இலக்கியம் பேசவோ இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்கைப்பின் மூலம் சந்திக்கலாம் என்று நண்பர்கள் எண்ணினர். முதல் வாரம் – ஏப்ரல் 12 அன்று நண்பர்கள் கூடி அவரவர் வாசித்தவற்றை பகிர்ந்துக் கொண்டோம். இனிய நிகழ்வாக அமைந்தது அது. இதை தொடரவேண்டும் என்று முடிவு செய்தோம். இனிவரும் சந்திப்புகளில் கலந்துரையாடுவதற்கு ஒரு சிறுகதை அல்லது குறுநாவல், ஒரு சங்கப் பாடல், ஒரு நவீன கவிதை தேர்வு செய்யப்படும். தேர்வு செய்தவர் அப்படைப்புகளின் மீது ஒரு சிற்றுரை நிகழ்த்துவார், அதன் பின் விவாதங்கள் தொடரும். இரண்டாவது ஸ்கைப் சந்திப்பு – ஏப்ரல் 26ம் தேதி.

நரேன்