ஓநாய் குலச்சின்னம் – வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

சொல்முகம் – ஆகஸ்டு மாத கூடுகை – ஓநாய் குலச்சின்னம் நாவல் குறித்து – வலமிருந்து மூன்றாவதாக நிற்பவர் காளீஸ்வரன்

மனிதர்களின் தேவையை செயற்கையாக வளர்த்து, அதை மையப்படுத்தப்பட்ட பெரிய உற்பத்தி முறைகளால் ஈடு செய்யப் பார்க்கிறோம். இதனால் பேராசையும், பொறாமையும் பகையும் தான் வளர்கின்றன. இதுவே தேசங்கள் இடையேயான பகையாக, போராக வளர்கிறது. நிலையான சமாதானமே காந்திய முயற்சி. இது நமது பொருளாதார சிந்தனையில் மாற்றத்தை வலியுறுத்துகிறது

-ஜே.சி.குமரப்பா (’சீனாவில் ஜே.சி.குமரப்பா’ நூலிலிருந்து)

**

சில வருடங்களுக்கு முன்பாக, ஈமு கோழி வளர்ப்பில் பணத்தை முதலீடு செய்து “சிரிக்கும்” அளவுக்கு மட்டுமே நட்டத்தை சந்தித்திருந்த நண்பன் சொன்னான் “அது மாப்ள, நம்மாளுகளுக்கு இந்த ஈமூ கறி ருசி புடிபடல. அப்புடி மட்டும் கறி ருசி புடுச்சிருந்தா அம்புட்டையும் தின்னே தீத்திருப்பாங்க” அப்போது அனைவரும் வெடித்துச்சிரித்தோம். பின்னர் யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். நம்முடைய நுகர்வு வெறியின் எல்லை கற்பனைக்கு அப்பாற்பட்டது.

.   

மனிதனின் நுகர்வு, எல்லை தாண்டும்போது நேரக்கூடிய தீங்கை, அது ஏற்படுத்தக்கூடிய சமநிலைக் குலைவை நாவல் முழுவதும் சொல்லிக்கொண்டே வருகிறது பில்ஜியின் குரல். குறிப்பாக, மேய்ச்சல் நிலத்தில் வேளாண்மையை அறிமுகப்படுத்த எண்ணும் பாவோ, அதற்குக் காரணமாக தன் சொந்த ஊர் மக்களின் தானிய பற்றாக்குறையைக் கூறுகிறார். கூடவே, சின்ன இடத்தில் மட்டுமே கட்டுப்பாடாய் வேளாண்மை செய்யப்போவதாய் சமாதானப்படுத்துகிறார். அதற்கு பதில் சொல்லும் வகையில், ”பின்னால் வரும் தலைமுறைகளிடம் இந்தக்கட்டுப்பாடு இருக்காது” எனக் கவலை கொள்ளும் பில்ஜியின் குரலுக்கு நம் சமகாலமே சாட்சி. ஓநாய்களால் கொல்லப்பட்ட மான்களை சேகரிக்கும் போது, ஆடு மேய்ப்பவனான சஞ்சாய், இன்னும் நிறைய மான்கள் கொல்லப்பட்டிருந்தால் தன்னுடைய திருமணத்துக்கு அது மிகவும் உதவிகரமானதாக இருந்திருக்கும் என சொல்கிறான். இந்தப் பேராசை, அவனுடைய மகன்கள், பேரன்களின் திருமணத்தின் போது மான்கள் இருப்பை ஒளித்துவிடும் எனக் கண்டிக்கிறார் பில்ஜி. இப்படியாக, நாவல் முழுவதிலும் இயற்கையின் சமநிலையைப் பேண வேண்டிய அவசியத்தை பில்ஜி நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

*

மங்கோலியர்களைப் பொறுத்தவரை ஓநாய்தான் அவர்களுக்கு குலச்சின்னம் போன்றது. அதனிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நற்பண்புகள் இருக்கின்றன. அவர்களது பெருமையின் அடையாளமாக நாவலில் சுட்டிக்காட்டப்படும் “செங்கிஸ்கான்” கூட ஓநாயின் தந்திரங்களை பயன்படுத்தியவர்தான். இவற்றையெல்லாம் விட, மரித்துப்போன மங்கோலியனின் ஆன்மாவை டெஞ்ஞருக்கு (சொர்க்கத்துக்கு / கடவுளுக்கு) அனுப்பும் தூதுவனும் ஓநாய்தான். ஆனால், ஒரு நவீன சீனனுக்கோ ஓநாய்கள் மேய்ச்சல் நிலத்தின் உற்பத்தித்திறனுக்கு, அங்கு வளரும் அற்புதமான குதிரைகளுக்கு எதிரானவை. அவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியவை. மங்கோலியனாக இருந்தபோதும், ஒட்டுமொத்த ஓநாய்களையும் கொன்றொழிக்கும் வெறியுடன் இருக்கும் பாவோ, ஒரு ராணுவப் பிரதிநிதியின் பணியை செவ்வனே முழுமனதுடன் நிறைவேற்ற முடிகிறது. மங்கோலியர்களின் அறியாமையைப் போக்க வரும் ஹேன் சீனனான “ஜென் சென்”, அலைக்கழிப்புகளுடன் படிப்படியாக பாதி மங்கோலியனாகிறான். இந்த ஒப்புமையை ஓநாயிலிருந்து நாய் எனப் பரிணாம வளர்ச்சி பெற்ற பாவோ எனவும், நாய்க்குள் (பல போதாமைகளுடன்) இருக்கும் ஓநாய் எச்சங்கள் ஜென் எனவும் சொல்லமுடியும்.

*

தாங்கள் இருக்கும் இடத்தை தங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் வேளாண் மக்கள், நிலப்பரப்புக்கு கூடுமானவரை எந்தச் சேதமும் எழாமல், தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் மேய்ச்சல் நிலமக்கள் என இருவரின் பார்வைகளும் எதிரெதிர் முனைகள். மனித நலன் மட்டுமே பிரதானம் என எண்ணும் நவீன மனம். மனிதனும் இயற்கையின் ஒரு எளிய அங்கமே எனக்கருதும் பழங்குடி மனம். அந்த மனதால் மட்டுமே இயற்கையின் ஆகப்பெரிய உயிர் மனிதனல்ல, பெரும் விலங்குகள் அல்ல, ஒரு புல்தான் என எண்ணமுடியும்.

*

நாவலின் மிக முக்கியமான அம்சம், ஒரு ஓநாய்க்குட்டியை கைப்பற்றி வந்து ஜென் வளர்ப்பது. நாய்களுடன் வளர்க்கப்படும் ஓநாய், அன்னை நாயிடம் பாலருந்தும் தருணங்களிலும், பிற நாய்களுடன் இணைந்து விளையாடும் தருணங்களிலும் ”சமத்தாக” இருந்தபோதும், தான் ஒரு ஓநாய் என்பதை ஒருபோதும் கைவிடவில்லை. உதாரணமாக, தன் குழிக்குள் வைக்கப்பட்ட இறைச்சித் துண்டங்களை “வேட்டையாடும்” தருணம், படிப்படியாக ஒரு ஓநாயைப் போல ஊளையிடும் தருணம் இவற்றைச் சொல்லலாம்.

அடிபட்ட தன் ஒரு காலை துண்டாக்கிவிட்டு தப்பித்து ஓடும் ஓநாயின் செய்கை, அடிமைத்தனம் அல்லது மரணம் என்றால் ஒரு ஓநாய் இரண்டாவதையே தேர்வு செய்யும் ஆன்ம பலம் இவற்றை ஒரே நேர்கோட்டில் வைத்து புரிந்துகொள்ளலாம். அடிமைத்தனத்துக்கு பதிலாக மரணத்தை தேர்வு செய்யும்போது அந்த ஓநாய் மட்டுமே மடிகிறது. அதன்மூலம், அது அடிமைத்தனத்தை தன் சந்ததிகளுக்குக் கடத்தும் பேராபத்தில் இருந்து தன் குலத்தைக் காக்கிறது.

நுகர்வுக்கு ஏற்ப வேட்டை, வயதான / நோய்வாய்ப்பட்ட ஓநாய்களுக்கு என மாமிசங்களை விட்டுப்போதல், முதல் வேட்டையை வயதான ஓநாய்க்குத் தருதல், வேட்டைத் தந்திரங்கள் என பல குணாதிசயங்களை ஓநாய்களின் செய்கைகள் கற்றுத்தருகின்றன.

இயற்கையின் ஆகப்பெரிய உயிர் மனிதன் எனக் கருதும் நவீன வேளாண் மனது, உலகின் மிகப்பெரிய உயிர் புல்தான் என எண்ணும் மேய்ச்சல் மனதை பக்குவப்படுத்துவதில் வெற்றியை அடைகிறது. எல்லா ஓநாய்க்குட்டிகளுக்கும் ஓநாயாகவே மரணிக்கும் வாழ்வு வாய்ப்பதில்லை.

– காளீஸ்வரன், கோவை