நீலகண்டப் பறவையைத் தேடி, வாசிப்பனுபவம் – நவீன் சங்கு

ஒரே ஒரு புத்தகத்தை கூட வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் உயர் ரக வடிவமைப்புடன் செய்து தரும் ஏதேனும் பதிப்பகம் இருக்குமெனில், தகுதிக்கு சற்றும் நியாயமற்ற வடிவில் இருக்கும் “நீலகண்ட பறவையைத் தேடி” நாவலை அவ்வாறு மாற்றி பத்திரமாக வைத்துக் கொள்வேன்.

“நீலகண்ட பறவையைத் தேடி” பிரிந்து போன நினைவிலிருந்து ஒரு உலகத்தை உருவாக்கி அங்கே வாசகர்களை கை பிடித்து கூட்டி செல்வதில்லை மாறாக அந்த உலகத்தில் தள்ளி விட்டு விடுகிறார் அதீன். 

அந்த உலகத்தின் இயற்கை,மொழி, பண்பாடு, வாழ்க்கையை காண்பிக்கிறார்.அவற்றை தரிசிப்பது மட்டுமே நம் வேலை,மாறாக அதன் மேல் நமது அளவீட்டை செலுத்தி பார்த்தோமெனில் நாம் தோற்றுப் போவோம்.ஏனெனில் இந்த ஆசிரியர் புதிய முறையில் ஒன்றை சொல்கிறார், ஆதலால் கனவு முடியும் வரை பொறுமையுடன் இருப்பதே இந்த உலகத்தை தரிசிப்பதற்கான சிறந்த வழி.

உங்களால் நீங்கள் கண்ட கனவை ஆரம்பம் முதல் இறுதி வரை முறையாக சொல்வது கடினம் அல்லவா?, காரணம் அது நினைவிலிருந்து மறைந்து மறைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அழிந்து போன புகைப்படம் போல தெரிகிறது அல்லவா!

இந்த நாவலும் அப்படித்தான் முறையாக சொல்வது கடினம், காரணம் இது கனவு போல மறைந்து போவது அல்ல மாறாக சமுத்திரம் போல பொங்கி எழுகிறது, நினைக்க நினைக்க அந்த உலகத்திலிருந்து ஏதாவது ஒன்று பொங்கி வழிகிறது.

கதை கூறல் முறை :

இந்த நாவலை செல்மா லாகர் வேவ் எழுதிய “மதகுரு” நாவலின் அழகியலுடன் ஒத்து போகிற நாவலாக பார்க்கலாம்.இயற்கை சித்தரிப்பு, கதை மாந்தர்கள், நிகழ்வு, பயணம் என‌ அடிப்படையிலேயே நாவல் செறிவானதாக இருக்கும் போது கதை சொல்லல் முறையில் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்துவதால் நாவல் இன்னும் வலுவாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.Parallel Narration ஆக, எப்போதுமே இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் சொல்கிறார்.அதாவது ஒரு நிகழ்வு ஆரம்பிக்கும்; ஆரம்பித்து குழப்பம்,சுவாரஸ்யம், உச்சம்,தீவிரம் போன்ற ஏதாவது உணர்ச்சிக்கு அருகில் கொண்டு வந்து பிறகு மற்றோரு Narration க்கு செல்வது.இவ்வாறு மாறி மாறி உணர்ச்சி எல்லைக்கு செல்வதால் புதிய அனுபவமாக சுவாரஸ்யமாக உள்ளது.

Magical Realism போன்ற கருத்துருவாக்கம் உருவாவதற்கு முன்பே அது போன்ற உத்திகளைப் பயன்படுத்தி உள்ளார்.ஆனால் அதை வேறுமாதிரி பயன்படுத்தி உள்ளார். உதாரணமாக நாவலின் முதலிலேயே ஈசாம் ஒரு மரம் எரிந்து கொண்டு துரத்துவது போல் காண்கிறான்;மயங்கி விழுகிறான். அதே சமயம் பிற்பாடு நாவலில் பக்கிரி மரங்களுக்கு தீ வைத்தும், வேசம் பூண்டும் மக்களை அச்சுறுத்துகிறார்.மணீந்தரர்‌ வரும் ‌நிகழ்வு தவிர மற்ற இடங்களில் இது போன்ற மாய நிகழ்வை‌ எதார்த்தத்துடன் சேர்த்து ஒரு தர்க்கத்தை உண்டு பண்ணுகிறார்.

எந்தவொரு உணர்ச்சிகரமான நிகழ்வுகளிலும் ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை.சாதாரணமாக கடந்து போகிறார். உதாரணமாக வீடுகள் தீ பற்றி எரிவதை, யானை பேலுவை தாக்குவதை சொல்லலாம்.இதை அவருடைய அழகியல் என சொன்னாலும் கதையோடு பயணிக்கும் வாசகனுக்கு சிறிய ஏமாற்றத்தை தருகிறது.

இயற்கை:

இயற்கை சித்திகரிக்கப்பட்ட விதம்தான் நாவலின் மிகப்பெரிய பலம்.அதுதான் அந்த கனவிற்கு போதையை கூட்டுகிறது. டால்ஸ்டாயின் இயற்கை விவரிப்பிற்கும் , அதீன் இயற்கையை கையாள்வதற்கும்நல்ல வித்யாசம் உள்ளது.டால்ஸ்டாய் தனது மாளிகையிலிருந்து இயற்கையை ரசிக்கிறார் மாறாக அதீன் இயற்கைகுள் உருண்டு திரிகிறார். கவிஞனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு டால்ஸ்டாயுடையது. உழவனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு அதீனுடையது.

டால்ஸ்டாய்  இயற்கையை விரித்து விரித்து எழுதினாலும், அடிப்படையில் அதை சிறு பொழுது; பெரும் பொழுது ஆகவே கதைக்குள் போகும் முன் பயன்படுத்துகிறார்.மாறாக அதீன் கதை முழுவதுமே இயற்கையைப் பயன்படுத்துகிறார்.ஈசாமுக்கு மேலே வானம் அருகில் தர்மூஜ் வயல், அவர் நடக்கும் போது சகதியும், குளிரும், ஏரியும்,நட்சத்திரமும், பறவையும், இரவும் அவர் பிரக்ஞையுடன் சேர்ந்தே நகர்கிறது. கதைகளம்கூட இதற்கு காரணமாக இருக்கலாம். 

காளியின் தேசம்:    

காளி வழிபாடும் எருமை பழியும் முக்கிய தொன்மமாக உள்ளது.இங்கு இறந்து போகும் மக்கள் தொன்ம கதைகளிலும், வழிபாட்டு உருவகங்களிலும் சென்று சேர்கின்றனர்.ஏரி முக்கியமான ஒன்றாக ரகசியம் நிறைந்ததாக உள்ளது. அனைவரையும் விழுங்கி சலனம் இல்லாமல் இருக்கும் ஏரியையே ஒரு பெரிய மீனாக கொள்ளலாம். அனைவரும் ஏதாவது ஒரு வடிவில் அதில் மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை.காளியே மூழ்கடிக்கப் படுகிறாள்.இந்த உண்மையை அறிந்தவன் கரையில் பைத்தியமாக சுற்றுகிறான்.

இந்திய ஆன்மா என்ற ஒரு சொல் உள்ளது அல்லவா!?, அது இந்த நிலத்தில் அரசியல் பிரச்சினை வருவதற்கு முன்னால் உள்ள மக்களின் வாழ்வே. இந்தியா முழுவதும் பல்வேறு அந்நியர்களால் சூரையாடப் பட்ட பிறகும் அது சிதறுண்டு போகாமல் இருக்க செய்தது இந்த ஆன்மாவே. இந்தியாவின் ஆன்மா என்பது உலக வெளிச்சத்தில் தெரியும் அதன் மெய்யியலோ, அரசியல் கொள்கைகளோ,கலாச்சார பண்பாடுகளோ அல்ல; தாமரைக்கு அடியில் இருக்கும் சேற்றின் குளுமை போல  இந்தியா முழுவதும் பரவியுள்ள எளிய மனிதர்களின் வாழ்க்கை அது.

அரசியல்:

“Suspension of disbelief” என்ற பதத்திற்கான அர்த்தத்தை இந்த நாவலில் தான் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.எங்குமே ஒரு நேரடி அரசியல் கருத்து கூட இல்லாத ஆனால் அழுத்தமான அரசியல் பிரதி. இன்னும் சொல்லப் போனால் ஆளுகிற ஆச்சார இந்துக்களின் வாழ்க்கையை விடுத்து முழுக்க முழுக்க எளிய முஸ்லிம்களின் வாழ்க்கையை, இச்சையை, பசியை, ஒழுங்கீனத்தையே அழுத்தி சொல்வது போல் தோன்றும். ஆனால் இறுதியில் வேறு ஒன்று திரண்டு வருகிறது. 

ஒரு கரையான் கூட்டம் பெரிய ஆலமர வேரை கொரித்து கொரித்து தூளாக்கிய பின்னர் ஒரு வானமே வீழ்வது போல்!  நாவல் முடிகிற சமயத்தில், கால் ஊண்ற தரையில்லாமல் சுற்றியும் நீர்பரப்பை கொண்ட நிலத்தில், ஒருவன் கஷ்டப் பட்டு தூக்ககூடிய அளவில் தர்மூஜ் வளரும் நிலத்தில், பறவைகள் கூட்டம் ஆர்ப்பரிக்கும் நிலத்தில், கணம் தாங்காமல் சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்கள் உள்ள நிலத்தில் சில அரை நிர்வாண மனிதர்களின் வயிற்றில் எரியும் நெருப்பு நம்மை சுடுகிறது.

காளியின் கண்ணீர்:

உலக மனிதனின் முன்னால் உள்ள கேள்வி, முக்கியமாக இந்திய மனத்தை அதிகமாக தொல்லை செய்யும் கேள்வி இயற்கை தேர்வா (Natural Choice) அல்லது கலாச்சார தேர்வா (Cultural Choice) என்ற conflict ஆன கேள்வியிலிருந்தே கதை இரண்டாக பிரிந்து ஆராய்கிறது.ஒன்று மணீந்தரநாத்தின் காதல் இன்னொன்று கலாச்சார சடங்குகளால் இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் இந்துக்கள்.

Feudal system த்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஈசாமின் வாழ்க்கையை சொல்லலாம். இந்த சிறிய சிறிய பூசலிலிருந்தே  இரண்டு சமூகத்திற்கு இடையே விரிசல் ஏற்படுகிறது. பின்பு திருவிழா கலவரத்திலும், மாலதிக்கு ஏற்பட்ட கொடுமையாலும் இரண்டு சமூகத்திற்கு இடையே மறக்க முடியாத மோசமான நினைவை உண்டு பண்ணி விரிசல் இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இறுதியில் காளியை ஆற்றில் கலக்கும் திருவிழா கலவரத்தால் நின்று போவதும், காளியின் சிலை கண்ணீருடன் இருப்பதும் நாவலில் மைய படிமமாக மாறி விடுகிறது.

நீலகண்ட  பறவையைத் தேடி:

இந்த வாசிப்பு அனுபவத்தை எழுதும் போதே நாவலின் சில பக்கங்களை புரட்டிப் பார்க்கிறேன் நிச்சயமாக  நான் எழுதுவது நாவலின் செறிவிற்கு மேலோட்டமாகவே இருக்கும். வாழ்நாள் முழுவதும் பலமுறை வாசிக்க வேண்டிய நாவல்.ஏன் நீலகண்ட பறவையைத் தேடி….என்ற கேள்விக்கு, பதில் பக்கம் 253 – 258 (Edition 2017) ல் இருப்பதாக நினைக்கிறேன்!

நீலகண்டப் பறவையைத் தேடி, வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

எதிரிலிருந்த பெரிய வேப்பமரத்தின் இலைகள் அனைத்துமே, ஒரு நொடியில் பறவைகளாக உருமாற்றமடைந்தன. மறுநொடியில் மீண்டும் இலைகளாக. இம்முறை இலைகளின் இடைவெளியில் போர்வீரர்கள் தோன்றலாயினர். தொடர்ந்து சம்பந்தமில்லாத மனிதர்களும் சம்பவங்களும். ஒரு மாபெரும் மந்திரவெளியில் இருப்பதான பயம் பீடித்தது. நல்லவேளையாக அம்மா என் எண்ணவோட்டத்தைக் கலைத்தாள். கடும் காய்ச்சலால் முணங்கிக்கொண்டிருந்த எனக்கு அப்போது 13-14 வயதிருக்கும். காய்ச்சலுக்கு மந்திரிக்க (கொங்கு வட்டார மொழியில் சொல்வதானால் ”செரவடிக்க”), நந்தகுமார் அண்ணன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது கிடைத்த அனுபவம் மேற்சொன்னது. பால்யத்தின் எண்ணற்ற அனுபவங்களுக்கு மத்தியில் இவ்வனுபவம் நிலைத்து நிற்க தன் அமானுஷ்த்தன்மையும் அந்தக் கனவுவெளியும் ஒரு முக்கியமான காரணம் என இப்போது தோன்றுகிறது. 

அவ்வனுபவத்துக்கிணையான கனவுத்தன்மையில் சஞ்சரிக்க வைத்தது “நீலகண்டப் பறவைத் தேடி” நாவல் (வங்க மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய; தமிழாக்கம்:சு.கிருஷ்ணமூர்த்தி; நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு). 1971ல் எழுதப்பட்ட இந்நாவல், சுதந்திரத்துக்கு முந்தைய, தேசப் பிரிவினை எண்ணம் துளிர்விடத் துவங்கிய காலகட்டத்தைச் சித்தரிக்கின்றது. ஒரு குடும்பத்தையோ அல்லது தனி நபரையோ மையப்படுத்தாமல், கிழக்கு வங்காளத்தில் பாயும் “ஸோனாலி பாலி” நதியையும், அதன் கரையிலிருக்கும் கிராம மக்களின் வாழ்க்கையையும் இந்நாவல் பேசு பொருளாகக் கொண்டுள்ளது. நதிக்கரையில் வாழும் வசதி மிக்க இந்துக்கள், அவர்களிடம் பணி செய்யும் ஏழைகளான இஸ்லாமியர்கள். இவ்விரு மக்களிடையே நிலவும் இணக்கமும் பிணைப்பும், மாறிவரும் அரசியல் சூழல், அது அம்மக்களின் வாழ்வில் நிகழ்த்தும் தாக்கம் என ஒரு தளத்தில் கதை கூறப்பட்டாலும், மற்றொரு தளத்தில் இந்நாவல் காட்டும் விவரணைகள் நம்மை அந்நிலப்பரப்புக்குள், அந்த நதியில், வானில் திளைக்கச்செய்கின்றன.

*

இந்நாவலின் முக்கியக் கதாப்பாத்திரம், ஊரின் மிகப் பெரிய டாகூர் குடும்பத்தின் மூத்த பிள்ளை மணீந்தரநாத். உடலளவிலும் மனதளவிலும் பழுதற அமைந்தவர். எவரும் சுட்டிக் காட்டுவதற்கான ஒரு குறை கூட இல்லாதவர். அப்படியொரு முழுமையான மனிதர், நம்மைப் போல சாதாரணமாக உண்டு, களித்து, உறங்கி மடிந்தால் பின்னர் ”விதி” என்ற சொல்லுக்கு என்ன மரியாதை இருக்கமுடியும்? சிறுவயதிலேயே மணீந்தரநாத்தின் கண்ணைப் பார்த்து அவர் பைத்தியமாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது எனக் கூறிகிறார் ஒரு பீர். அவர் வாக்கு பொய்த்துப்போகாமல் காத்த பெருமை வெளிநாட்டுப் பெண் ”பாலின்” உடனான மணீந்தரநாத்தின் காதலுக்குக் கிடைக்கிறது. கூடவே, மகனின் ஆசையை நிறைவேற்றாமல், அவன் மனப்பிறழவுக்கு தானே காரணம் என மகேந்திரநாத் வருந்தவும் அதுவே வழிவகுக்கிறது. இந்நாவல் முழுவதிலும் தான் இழந்தவொன்றை தேடி அலையும் மணீந்தரநாத்தின் சித்தரிப்புகள் அனைத்துமே கனவுத்தன்மை கொண்டவை. மணீந்தரநாத்தின், சாயலுள்ளவன் என நாவலில் சொல்லப்படும் சோனா, அவரது தம்பி மகன். தன் பெரியப்பா உடனான சோனாவின் நெருக்கமும், அவனது அலைக்கழிப்புகளும் அவன் இன்னொரு “பைத்தியகார டாகூராக” மாறுவதற்கான சாத்தியங்களைக் காட்டுகின்றன. இதை மணீந்தரநாத்தே, சோனாவிடம் கூறும் காட்சி, இந்நாவலின் உச்சதருணங்களுல் ஒன்று.   

*

ஊரில் இருக்கும் வயதான முஸ்லீம்கள் பெரும்பாலும் தங்கள் இந்து எஜமானர்கள் மீது எவ்வித வருத்தமுமற்றவர்கள். நிலச்சொந்தக்காரங்கள் பசியின் சுவடே அறியாதிருக்க, விளைச்சலைக் காவல் காத்துக்கொண்டு கொடும் பசியை எதிர்கொள்ள நேரும் போதும் தங்கள் எஜமானர்களின் பெருந்தன்மை மீது எவ்வித சந்தேகமும் அற்றவர்கள். மாறிவரும் அரசியல் களம், பிரிவினையை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் இவை எதுவும், இக்கிராம மக்களை பெரிதும் பாதிப்பதில்லை. இந்நாவல் காட்சிப்படுத்தும் காலகட்டம் பிரிவினை எண்ணம் முளைவிட்ட சமயம் என்பதால், இவ்விரிசல் பொது மக்களிடையே பெரிதாகத் தென்படுவதில்லை என எண்ணுகிறேன். என்னதான் மதத்தின் பெயரிலான வேறுபாடுகளை பரப்பினாலும், தானறிந்த சமூகத்தைக் கொண்டே அதைக் கடக்கும் மனநிலை இருபக்கத்திலும் இருக்கிறது. டாக்கா கலவரத்தில் மாண்டுபோன மனிதர்கள் (குறிப்பாக இஸ்லாமியர்கள்), குறித்து மனம் வருந்தும் ஆபேத் அலி, தன் உள்ளூர் இந்து மக்களின் தாராள மனப்பான்மையை எண்ணி அமைதியடைகிறார். கிட்டத்தட்ட இதைப்போன்ற ஒரு அணுகுமுறையே, அவ்வூரின் முந்தைய தலைமுறை முஸ்லீம் பெரியவர்களிடமும் இருக்கிறது. அதைப்போலவே, தன்னுடைய கணவனை டாக்கா கலவரத்தில் பலிகொடுத்த இந்துப் பெண் மாலதி, தன் பால்ய சிநேகிதர்களான உள்ளூர் இஸ்லாமிய நண்பர்கள் மீது எவ்வித காழ்ப்பும் கொள்வதில்லை. 

பொதுவில் வைக்கப்படும் பிரச்சாரங்களை, தானறிந்த சமூகம் மூலம் எதிர்கொள்ளும் இம்மனநிலைக்கான உச்சகட்ட உதாரணமாக கொள்ளத்தக்கவர் ஆசம். டாகூர் குடும்பம் மீதான அவருடைய விசுவாசத்தை, எஜமான் குடும்ப உறுப்பினர்கள் மீது அவர் கொண்டுள்ள உரிமையை எந்தப் பிரச்சாரமும் சிதைப்பதில்லை. வீட்டில் உள்ளோர் பேச்சையும் மீறி சோனாவை திருவிழாவுக்கு அழைத்துப் போவதில் அவர் காட்டும் உரிமையும், எதிர்பாராத கலவரத்தால் குழந்தைகளைத் தொலைத்துவிடும் சமயத்தில் ஈசத்தின் தவிப்பும் அவரது மனநிலைக்கான சான்றுகள். ஈசத்தின் இந்தப் பதைபதைப்பு, பீரின் தர்க்காவில் சோனாவைத் தவறவிட்டு பின்னர் கண்டுபிடித்த மணீந்தரநாத்தின் பதைபதைப்புக்கு சற்றும் சளைத்தில்லை என எண்ணத் தோன்றுகிறது.

விரிசல் விடத்தொடங்கிவிட்டால், சாதாரண நிகழ்வுகள் கூட அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தமுடியும். உதாரணங்களாக, இந்நாவலில் வரும் இரு சம்பவங்களைக் கூறமுடியும். டாக்காவிலிருந்து ”ஷாஹாபுத்தீன் சாகேப்” வருவதை முன்னிட்டு, லீக் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் யானையில் பவனி வரும் பெரிய டாகுர் ”மணீந்தரநாத்தால்” குளறுபடி உண்டாகிறது. இதை திட்டமிட்ட சதியாக எண்ணும் சாம்சுதீன் சின்ன டாகுர் ஏற்பாடு செய்யும் காங்கிரஸ் கூட்டத்தில், தாங்களும் இதைப்போலவே பிரச்சனை செய்யலாம் என எண்ணுகிறான். இது தற்செயலான ஒரு விபத்தை திட்டமிட்ட சதியாக பார்க்கும் மனநிலையைக் காட்டுகிறது. இத்தனைக்கும் பெரிய டாகூரின் மனநிலைப்பிறழ்வு அந்த ஊருக்கே நன்றாக தெரிந்த ஒன்றுதான். இதைப்போலவே தனி நபர் பிரச்சனைகளால் பெரும் கலவரம் உண்டாகும் நிகழ்வையும் சொல்லலாம். இந்துப் பெண்களை வேற்று சமூக ஆண்கள் கிண்டல் செய்ய, அதைத் தட்டிக்கேட்டதால் திருவிழாவில் கலவரம் வெடிக்கிறது. விளைவாக, பிரச்சனையில் எவ்வித தொடர்பும் அற்ற இருதரப்பினருக்கும் அப்பாவிகளுக்கும் சேதாரம் விளைகிறது.

இந்நாவலின் முக்கியமான இணைகதாப்பாத்திரங்கள் இஸ்லாமியப் பெண்ணான ஜோட்டனும், இந்துப் பெண்ணான மாலதியும். நான்காவது திருமணத்துக்கு காத்திருக்கும் இஸ்லாமியப்பெண் ஜோட்டனும், கணவனை டாக்கா கலவரத்தில் இழந்த இந்துப்பெண் மாலதியும் சந்திப்பது உடல் சார்ந்த தேவையை. ஜோட்டனைப் பொருத்தமட்டில் உடலென்பது நிலம் போல அதில் அல்லாவுக்கு வரி தருவதே தனக்கு விதிக்கப்பட்ட கடன் என எண்ணுகிறாள். அதன் பொருட்டு அவள் செய்துகொள்ளும் மறுமணங்களை மிக இயல்பான ஒன்றாக அவளால் கடக்க முடிகிறது. மறுபுறம் மாலதி, தான் வளர்ந்த கலாச்சாரப் பின்னணியால், தன்னுடைய ஆசைகளை மறுதலிக்க, சமூகத்தால் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறாள். மட்டுமல்ல, அவளது தேவைகள் கூட வெளிப்படையாக பெரிய அளவில் காட்டப்படுவதில்லை. பழைய நினைவுகளாகவோ, கனவாகவோதான் மாலதியின் எண்ணவோட்டத்தை நாம் காணமுடிகிறது. 

இரண்டு எதிரெதிர் கலாச்சாரப் பிண்ணனி கொண்டவர்கள் என்றபோதும், மக்களின் ஆழ்மனதில் இம்மண்ணின் மரபின் ஒரு துளியாவது தங்கிவிடுகிறது. பக்கிரி சாயிபு, ஜோட்டனை அழைத்துக்கொண்டு தன்னுடைய குடிசைக்கு முதன்முறை செல்லும் போது, ”பாபா லோக்நாத் பிரம்மச்சாரி”யின் ஆசிரமத்துக்குச் சென்று அவரை தரிசிக்க எண்ணும் சம்பவம் அத்தகைய ஒன்று. போலவே, மானபங்கப்படுத்தப்பட்ட, மாலதியை ஜோட்டனும் பக்கிரி சாயிபும் காணும்போது, மாலதியின் கால் அவர்களுக்கு துர்க்கையம்மனைத்தான் நினைவுறுத்துகிறது. லீக்கில் சேரவிருக்கும் ஜப்பாரால், மாலதிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து, தன் கையறு நிலையை நொந்துகொண்டு, ஊரை விட்டுக்கிளம்பும் சாம்சுத்தீனுக்கு கூட, கார்த்திக் விழாவுக்கு அம்மனுக்குப் படைப்பதற்கு சிறிய கதிர்கள் போதாது எனும் எண்ணம் எழுகிறது. “லட்சுமி அம்மனுக்கு இத்தணூண்டு கறிதானா” என தன் அதிருப்தியை வெளிப்படுத்தி பெரிய கதிர்களை பறித்துக்கொடுக்கும் மனநிலையே அவனுக்கும் வாய்க்கிறது. 

*

சுதேசி இயக்கத்துக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ரஞ்சித்துக்கும், லீக்குக்கு ஆதரவான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சாம்சுத்தீனுக்கும் ஆற்றங்கரையில் நிலவொளியில் நடக்கும் உரையாடல் மிகச்சிக்கனமான வார்த்தைகளில் சொல்லப்பட்ட ஒன்று. அவர்கள் இருவரும், தங்கள் முரண்களை மறந்து பால்ய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் காட்சி துயர்மிக்கதாக இருந்தது. தன் மகனின் பிறழ்வு தான் எதிர்பாரா ஒன்று எனவும், தெரிந்தே, அவளது வாழ்க்கையை தான் சிதைக்கவில்லை என்றும் மகேந்திரநாத் தன் மருமகளிடம் சொல்லும் இடமும், மிகப்பெரிய உணர்வுகள், மிகக் குறைவான வார்த்தைகளால் காட்சிப்படுத்தப்பட்டதன் இன்னொரு உதாரணம். 

*

நாவலில் ஒரு காட்சியில், யானை மீது ஏறி ஊரைப் பவனி வரும் பெரிய டாகூர் பற்றிய சித்திரம் வருகிறது, சொல்லப்போனால், மானசீகமாக, அந்த யானையை சவாரி போலத்தான் பெரிய டாகூரின் அலைக்கழிப்புகள் இருக்கின்றன. தனக்கு கீழிருப்பவர்கள் எவரையும் அவர் பொருட்படுத்துவதில்லை. அல்லிக்கிழங்கு பறிக்கப்போய் தண்ணீரில் மூழ்கி இறக்கும் ஜாலாலியை அனைவரும் தேடிக்கொண்டிருக்க, ஆற்றில் குதித்து அவள் சடலத்தை மீட்டெடுக்கும் சந்தர்ப்பம் உட்பட மணீந்தரநாத்தின் செயல்களில் பெரும்பாலும் ஒரு நாட்டார்கதைத்தன்மை காணக்கிடைக்கிறது.

*

ஒட்டுமொத்தமாக ”நீலகண்டப் பறவையைத் தேடி” நாவலை, அதன் பரப்பை நான் அதன் கதாப்பாத்திரங்களுடன் இணைத்து பின்வருமாறு தொகுத்துக்கொள்கிறேன்.

பெருகியோடும் ஆற்றின் கரையில் நின்று அதை ஏங்கிப் பார்க்கும் மாலதி. அவளுக்கு தன் வாழ்வும் தேவையும் அந்த ஆறாகவும், அதை அவள் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாகவும் அமைகிறது. மாலதி இறங்கத் தயங்கும், சமூகத்தின் பெயரில் அவளுக்கு மறுக்கப்படும் ஆற்றில் அதே சலுகையால் நீந்தித் திளைக்கும் ஜோட்டன். இன்னொருபுறம் ஆற்றில் மூழ்கி மடியும் ஜாலாலி போன்றவர்களுக்கு மீளமுடியாத சுழலாக அமையும் பசி. இவை அனைத்தையும் கடந்து, கரையோரங்களிலும், நதியின் ஆழத்திலும், வான் நோக்கியும் தனக்காக தேடலை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் “மணீந்தரநாத்”க்கோ அனைத்தும் ஒன்றே ”கேத்சோரத்சாலா” 

அருவங்களின் விசை – பாலாஜி பிருத்விராஜ்

நீலகண்டப் பறவையைத் தேடி…

சென்ற வருடம் ஊட்டி காவிய முகாமில் நாவல் விவாத அரங்கிற்காக “நாவலின் மூன்று அடிப்படைப் பொதுப்பண்புகள்” எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை நிகழ்த்தினேன். அதில் “மொத்த நாவலுக்கும் பொதுவான மையப் படிமம் வாசிப்பின் முடிவில் மேலெழுந்து வரும். அதை ஒரு நுழைவாயிலாகக் கொண்டு அதன் அத்தனை பகுதிகளுக்கும் சென்றுவிடலாம்” என்றேன். அவ்வுரையை ஒட்டிய விவாதத்தில் ஜெ “மையம் என ஒன்று அமையப்பெறாத நாவலுக்கு இதன் பொருத்தப்பாடு என்ன?” எனக் கேட்டார். ஆனால் அக்கேள்வி சரியாக விவாதிக்கப்படாமல் திசைமாறி வேறு பேசுபொருளுக்கு சென்றுவிட்டது.

“நீலகண்டப் பறவையைத் தேடி” நாவலைப் படித்த பின்பு மீண்டும் அக்கேள்வி தொடர்ந்தது. நாவலின் மையம் எனச் சொல்லும் போது எதை உத்தேசிக்கிறோம். உதாரணமாக “கோரா” நாவலை எடுத்துக் கொண்டால் அதன் மையமென்பது முற்போக்கும் பழமைவாதமும் கொள்ளும் பலவகையான உறவுநிலைகள் தான். சமுதாயத்தில் ஆரம்பித்து ஒரு தனிமனித அகம் வரை இவ்விரண்டும் கொள்ளும் உரசல்களின் பல்வேறு சித்திரங்களால் ஆனது அந்த நாவல்.  கதைக்கூறலில் அதன் நேரெதிரான அழகியல் முறைகள் கொண்ட “மீஸான் கற்கள்”-ளின் மையம் என்பது “ஒரு பண்பாட்டுச்சூழல் காலவோட்டத்தில் எப்படி அழிகிறது என்பதும் அவ்வழிவை நிகழ்த்தும் விசைகள் என்னவென்பதும்” எனலாம். சீராக ஓடும் குதிரை வண்டி அதன் இணைப்புகளும் அச்சுகளும் கழன்றவிழ நொறுங்கிச் சிதறும் காட்சிக்கு ஒத்தது.

இவ்வாறு அதீன் பந்தோபத்யாயின் இந்த நாவலுக்கும் ஒன்றை கூறமுடியுமா? மேலே கூறியதைப்போல வெளிப்படையாக ஒரு மையம் இல்லை. ஆனால் அப்படியான ஒரு மையத்தை உருவகிக்க முயன்றால் சில சுவராசியமான அவதானிப்புகளை நிகழ்த்த முடிகிறது. எதைப் பற்றியது இந்த நாவல்? வங்காளப் பிரிவினைப் பற்றியதா? அல்லது ஒரு நிலப்பரப்பில் வாழும் இருவேறு சமூகத்தினரின் உறவு, வாழ்வுச் சிக்கல்களைப் பற்றியதா? அல்லது சோனா என்னும் சிறுவனின் வளர்ச்சிப் பரிணாமம் பற்றியதா? அனைத்தும் தான் என்றாலும் பிரதானமாக இவை அல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் மேலேக் கூறிய அனைத்திற்கும் தேவையானதை விட பலமடங்கு செறிவான கவித்துவமான கூறுமுறையை இந்த நாவல் கொண்டுள்ளது. இதன் கூறுமுறை என்பது நீர்ப்பூச்சி ஏரிப்பரப்பில் தொட்டுத் தாவி எழுப்பும் சலனங்கள் போன்றது. கால்கள் நீர்ப்பரப்பில் எங்கு விழுகிறதென்று உணரமுடியா மர்மம் கொண்டது. நாம் பார்ப்பதெல்லாம் அலைவட்டங்களை மட்டுமே. 

இத்தகைய கனவு மொழி நம்மில் ஏற்படுத்தும் விளைவை வைத்தே இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடிகிறது. நம் போதமனம் தொடர்ந்து கலைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இரண்டு வகையில் இது நிகழ்கிறது. முதலாவது கவிதைக்கு நெருக்கமான அருவத்தன்மையுடன் வரும் நிகழ்வுகள். உதாரணமாக குழந்தையான சோனாவை பீர் சமாதியருகில் கிடத்தி விட்டு தன்னை அழைக்கும் ஒளி வெளிச்சத்தின் பின்னால் மணீந்திரனாத் செல்லும் தருணம். அதேபோல் நாவலின் பல்வேறு இடங்களில் உருவெளித்தோற்றங்களாக பாலின் வரும் இடங்களைச் சொல்லலாம். இடைவெட்டுக்களாக ஒருசில வரிகளில் கடந்து செல்லும் இவை தொடர்ந்து நம் முன் கனவுவெளியை நிகழ்த்துகிறது. 

இரண்டாவதாக காலத்தையும் கறாராக இல்லாமல் ஒருவித மயக்கத்தோற்றத்துடன் கையாள்கிறது. விலாவரியாக ஒரு சம்பவச் சித்தரிப்பு நிகழும் போது சட்டென இரு வரிகள் மூலம் ஒரு சில மாதங்க்கள் தாவப்படுகிறது. முன்னும் பின்னும். உதாரணமாக மாலதியின் அன்றாட சிக்கல்களும் வெறுமையும் சொல்லப்படுகையில் தூரத்தில் தாடியுடன் பலமாதங்கள் கழித்து ஊர்திரும்பும் சாம்சுதீனைப் பார்ப்பதன்மூலம் இக்கால நகர்வு காட்டப்படுகிறது. அதேபோல் மொத்த முஸ்லீம் குடியிருப்பும் தீப்பற்றி எரியும் காட்சி உக்கிரமாக ஆரம்பித்து விரிகிறது. உடனே அடுத்த அத்தியாயம் வேறொன்றிற்குள் புகுந்து பரந்து செல்கிறது. அவ்வளவு பெரிய அழிவிலிருந்து அவர்கள் மீண்டுவருவதைப் பற்றி நாவலில் வேறெங்கும் பேசப்படுவதில்லை. இவ்வகையான கால இடத்தைத் தொடர்ந்து நீட்டியும் சுருக்கியும், முன்பின் நகர்ந்து செல்லும் இக்கூறுமுறை மெல்ல நம் தர்க்க மனத்தை திகைக்கச் செய்து அது பின்தங்கி நிற்கையில் நம் கனவு மனம் மட்டும் நாவலுடன் செல்கிறது. ஆம். ஒரு வகையில் நாமும் மணீந்திரனாத்தாக, சோனாவாக மாறுகிறோம். மொத்த நாவலையும் அவர்கள் கண் கொண்டு பார்க்க ஆரம்பிக்கிறோம். 

அதன் மூலம் நாம் காண்பது பிரத்யேகமான ஒரு உலகத்தை. வரலாற்று நூல்கள் சொல்லும் வங்காள கிராமத்தை அல்ல. ஒரு தேர்ந்த கட்டுரையாளன் சொல்வதைக் கூட அல்ல. நேரடியாக ஒரு கலைஞனின் ஆழ்மனம் காட்டும் ஒரு பண்பாட்டுவெளியை. அதனாலேயே அதில் இயல்பாக வெளிப்படும் சூழல் விவரணைகள் அனைத்தும் உருவகங்களாகவும் குறியீடுகளாகவும் மாறுகிறது. அந்த ஆழத்திலிருந்து ஒவ்வொன்றையும் நோக்கும் போது ஒவ்வொரு செயலும் அதைவிடப் பெரிய ஒன்றால் இயக்கப்படுவதைக் காண்கிறோம். முதிர்ந்த கிழங்கின் முழை மட்டும் வெளித்தெரிவதைப் போல. மண்ணிற்குள் அமிழ்ந்திருப்பதின் நுனி மட்டுமே அது. உதாரணமாக நாவலின் ஆரம்பத்தில் மணீந்திரனாத் தன் புது மனைவிக்கு படகில் செல்லுகையில் அந்த ஏரியைப் பற்றிய தொன்மக் கதையைச் சொல்கிறார். வெள்ளித் துடுப்புடன் பயணம் செய்து அதில் மூழ்கிய ராஜகுமாரி இன்னும் அடியில் இருந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அப்படி பல நூறு கதைகளைக் கொண்ட கிடங்கு அந்த ஏரி. இன்னொரு இடத்தில் ஜலாலி இறக்கையில் “ஒருவர் மறைகையில் அவரின் சாட்சியாக ஒரு கூடை அதில் மிதக்கும்” என்கிறார் ஒருவர். உள்ளே உறைந்திருந்திருக்கும் அனைவருடனும் அவள் இணைந்து விடுகிறாள். இறுதியில் விதவையான மாலதி உடல் நிறைய நகைகளுடன் கல்யாணாக் கோலத்தில் அதில் மூழ்கி தற்கொலை செய்ய முயல்கிறாள். அந்த நாட்டார்கதைத் தொகுதியில் தானும் ஒரு ராஜகுமாரியாக மாறிவிடக் கொள்ளும் விழைவை அவளது நுட்பமான மனவோட்டத்தை வாசகன் உணரமுடிகிறது. இயல்பாக அவள் எடுக்கும் முடிவுக்குப் பின்னால் ஒரு பெரிய பண்பாட்டு ரீதியான ஒரு உந்துதல் இருக்கிறது. 

இன்னொரு முக்கியமான உருவகமாக பலியாகும் எருமைகள் வருகின்றன. இரண்டு எல்லைகளில் மகிஷன் பயன்படுத்தப்படுகிறான். கிராமத் திருவிழாவில் ஒருபக்கம் ஜலாலி தண்ணீரியில் மூழ்கி இறக்க இன்னொரு பக்கம் பலிகொடுத்த  ‘அபலைப் பிராணி’யான எருமையைத் தூக்கிக் கொண்டு மக்கள் நடப்பதை டாகூர் பார்க்கிறார். அங்கு எருமை வழிவழியாக வரும் அரக்கன் வடிவத்திலிருந்து இரையாகும் அப்பாவி மக்களின் முகமாக மாறுகிறது. இரக்கமற்று காலத்தால் தொடர்ந்து அழியும் மக்கள் நிரையின் தொகுப்புவடிவமாக உருக்கொள்கிறது. மற்றொரு எல்லையில் சோனா துர்க்கா பூஜையில் காளிக்கு பலிகொடுக்கப்படும் எருமைகளைப் பார்க்கிறான். அங்கு அவனுக்கு காட்சியளிப்பது உக்கிரரூபிணி. அதை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. எந்த நுண்ணுவர்வாளனைப் போல இயற்கையின் விதியேயாயினும் அதிலுள்ள அவலம் அவனை வெளித்தள்ளுகிறது. அமலா, கமலா இருவருக்கிடையே கொள்ளும் அலைக்களிப்புகளையும் இந்த வெளிச்சத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.

இவ்வாறாக இப்படைப்பில் அருவத்தளத்தில் இயங்கிவரும் அத்தனையுடனும் கதாப்பாத்திரங்கள் கொள்ளும் உறவை மட்டும் எடுத்து ஒரு வாசிப்புக் கோணத்தை உருவாக்க முடியும். அப்படிப் பார்க்கையில் இவை அனைத்துக்கும் பின்னுள்ள பொதுமை என்பது ஆதிமனிதன் தொடங்கி  இன்று வரை அறுபடாமல் வரும் ஒரு வாழ்க்கைநோக்கு. ஆற்றலும் அழிவும் கொண்ட அந்த அறியமுடியாமையின் விசையை உணரும் கணங்கள் இவை. நம் பண்பாட்டில் அது ஏரியைப் போல அதை அறியா ஆழங்கள் கொண்டக் கதைத்தொகையாக அமைந்திருக்கும். அல்லது நம் கோவில் கருவறைகளில் தெய்வங்களை ஒத்து அதனருகில் உறைந்திருக்கும். ஒன்றின் இருமுகங்கள் இவை.

மனித வாழ்வில் என்றுமிருக்கும் இவ்விசைகளின் பிண்ணனியில் இருந்து பார்க்கும் போது இதில் வரும் கதைமாந்தர்களின் செயல்களும் வாழ் நிலைகளும் இன்னும் விரிந்த பொருள் கொள்கிறது. அந்தபெருவிசையின் துளிச்சிதறல்களாகவே இவர்கள் கொள்ளும் உணவுப்பசியும், காம இச்சைகளும் வெளிப்படுகின்றன. அனைவரும் தங்களை விடப் பெரிய ஒன்றால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். அனைவரின் அடியாழத்திலும் ரணப்பட்ட ஒரு மீன் சுற்றிஅலைகிறது. அது பலிகொள்ளும் ஒவ்வொருமுறையும் ஒரு கூடை அலைப்பரப்பில் மிதந்தாடுகிறது.

அந்த ஆழத்தைப் பிரதானப்படுத்தவே இவ்வகையான கதைக்கூறலும் மொழி நடையும் தேவையாகிறது. இதன் மூலம் ஒரு முழுவாழ்கை பிறந்து வாழ்ந்தவரை விட நாம் இன்னும் நெருக்கமாக அந்த நிலத்தை அறிகிறோம். ஏனெனில் நமக்கு அதைச் சொல்பவர் இன்னும் பெரிய கூட்டுப் பண்பாட்டின் குரல் கொண்டவர்.

 மீண்டும் முதல் கேள்விக்கு வந்தால் நம்முன் இருக்கும் விடையென்ன? “நிலமென்றும் வாழ்வென்றும் விரிந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டதன் மடியில் கிடந்து அலைவுறும் மக்களின் அல்லற்களைச் சித்தரிக்கும் படைப்பு” எனலாம். எப்போதும் போல சிறந்த படைப்புகள் எத்தனை வறையரைத்தாலும்  அதன் ஒரு பகுதி வெளியே இருக்கும் என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது. அனைத்து பிடிகளுக்கும் நழுவும் உடல் கொண்டது அப்பறவை. “கேத்சோரத்சாலா!” 

கனன்றெரியும் நீர்வெளி – நரேன்

நீலகண்டப் பறவையைத் தேடி….

கொப்புளிக்கும் கனவுத் தொகைகளின் ஆழத்தில் விழுந்து விடாமலிருக்க நுனிக் காலில் தத்தித்தத்தித் தாவி நாவலைக் கடந்து கண் மூடினால் உணர்வுகளின் பிடியில் சிக்கி பாதாளத்திற்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பிரமை. பொங்கிப் பொங்கி அடங்காத கொந்தளிப்பை ஒரு இலக்கியப் பிரதி கொடுக்குமென்றால் அது வெறும் ‘நிகர் வாழ்வு’ மட்டுமல்லவே. கிழக்கு வங்காள கிராமத்தின் 1920களின் வாழ்வு, ஒரு துளி மாயம் தடவி மிகு கற்பனையால் கட்டி வீசப்பட்டிருக்கிறது இந்நாவலில். ஒரு மிக நீண்ட கவிதையைப் போல பல்வேறு படிமங்களால் நிறைந்தபடி இக்கிராம மக்களின் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் அசாத்தியமான காட்சிகளாக எழுந்து எண்ணங்களை நிறைக்கிறது. அக்காட்சிகளின் ஊடாகவே பல்வேறு மரங்களும் கனிகளும் பறவைகளும் விலங்குகளும் பாத்திரங்களின் உணர்வுகளுக்கு உருவகமாகவும் நாவல் நெடுக கைக்கட்டி நிற்கும் குறியீடுகளாகவும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கதாபாத்திரங்களின் தகிக்கும் உணர்வெழுச்சிகளுக்கு இணையாகவே அவர்கள் வாழ் நிலத்தைப் பிரவாகித்திருக்கும் இயற்கைச் சூழலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வகை கதை சொல்லல் இயற்கையோடு இயைந்த அன்றைய இந்திய நிலத்தின் வாழ்க்கையை உணர்த்தும் அதேவேளையில் வாசகனைப் பனி பூண்ட வானத்திலும் கரையேறும் ஆற்று நீரிலும் சகதி செறிந்த ஏரியிலும் முட்கள் அடர்ந்த காட்டிலும் அமிழ்த்தி வைத்திருக்கிறது. விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள் காதில் விழாத ஒரு பக்கத்தைக் கூட புரட்டி விட முடியாது, ஹட்கிலா பறவைகளும் கிரெளஞ்ச பட்சிகளும் இன்னமும் பால்கனியில் சிவந்த விழிகளால் வெறித்துக் கொண்டிருக்கின்றன. கற்பனையின் பலம் யதார்த்த வாழ்க்கையைச் சற்று நீண்ட நேரத்திற்கு நம் தோளில் ஏற்றிவைத்துவிட்டுப் போய்விடுவதுதான். இடது கையால் தட்டிவிட்டுக் கடந்துவிடமுடியாது.

இந்திய இலக்கியத்தின் முதன்மை வரிசையில் வைக்கத்தகுந்த படைப்பாக அதீன் பந்தோபாத்யாய இந்நாவலை கொடையளித்திருக்கிறார். பாத்திரங்களின் மீதேறி தாவித் தாவிச் சென்று கதை சொல்லும் முறைமையை கையாண்டிருக்கிறார். ஒரு நிகழ்வின் உச்சத்தில் வாசகனை நிறுத்தி அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நடக்கும்  ஒரு காட்சிக்குத் தாவிவிடுகிறார். முந்தைய உணர்வுச்சத்தை தக்க வைத்துக் கொண்டே ஒரு வாசகனைக் கதைகளுக்குள்ளாக நுழையவிடுகிறார். உண்மையில் இது கதைகளின் ஒரு தொகை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஆழமான கதைகள் உண்டு. பாத்திரங்களின் செயல்களின் மூலமாகவே அவர்களை வடிவமைப்பதைப் போலவே அவர்களின் கதைகளையும் உருவாக்கி விடுகிறார். இதனால் இந்நாவலின் மைய பாத்திரம் என்று ஒருவரைக் குறிப்பிடுவது எளிதல்ல. முக்கிய பாத்திரங்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு இணையான ஒரு உச்சத்தை ஒன்றிரண்டு பக்கங்களின் வந்து செல்லும் மன்சூர் போன்ற மனிதர்களும் உண்டு.

வங்காள பிரிவினையின் தொடங்கு முகமான காலகட்டம். நிலவுரிமையும், ஊதிய பணிகளும் கொண்ட இந்துக் குடும்பங்களும் ஏதேனும் ஒருவகையில் அவர்களைச் சார்ந்து வாழவேண்டியிருக்கும் எளிய முஸ்லீம்களும் வாழும் கிராமங்கள். நீரால் சூழப்பட்டுக் காட்டு மேடுகளால் அரண் கொண்டிருப்பவை அவை. டாகூர் குடும்பத்தின் பெரிய பாபு இக்கதையின் முதன்மை பாத்திரமாகக் கொள்ளலாம். ‘பாலின்’ என்ற வெளிநாட்டு பெண்ணினுடான தன் நிறைவேறாத காதலால் பித்துப் பிடித்து கவிதையும் கற்பனையுமாக இயற்கையோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒரு வாழ்வு. எங்கு காணினும் ‘பாலினின்’ முகங்களாகவும் அவளைச் சென்று அடையும் பாதைகளாகவும் தெரிகிறது அவருக்கு. இம்முழு நாவலிலும் அவர் நீண்ட நேரம் ஓரிடத்தில் அமைந்திருப்பது அரிது. அலைந்து கொண்டேயிருக்கிறார்… தன் நீலகண்டப் பறவையைத் தேடிக் கொண்டேயிருக்கிறார். தன் எதிர்ப்புதான் பெரிய பாபுவை இந்நிலைக்குத் தள்ளிவிட்டதென்றும் பைத்தியமாகிவிட்ட தன் மகனை ஏமாற்றி ஒரு பெண்ணுக்குக் கட்டி வைத்ததாய் ஊர் நினைக்கிறதென்றும் குற்ற உணர்ச்சிகளில் புழுங்கித் தவிக்கும் கண் பார்வையற்ற அவரின் தந்தை. பெரிய பாபுவின் முதல் தம்பிக்கு குழந்தை பிறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. ‘சோனா’ என்ற அச்சிறுவனின் பார்வையில் பெரும்பான்மையான கதைப் பகுதி நகர்கிறது. பெரிய பாபுவின் சிறுவயதுப் பிரதி இச்சிறுவன். பின்னாளில் பெரிய பாபுவைப் போலவே பித்துப் பிடித்து அலையும் அத்தனை சாத்தியங்களும் கொண்ட ஒரு சிறுவனாக வெளிப்படுகிறான். கற்பனையும் அலைக்கழிப்புமாக அவனின் சிறுவயது தொடங்குகிறது. ‘கோட்சோரத்சாலா’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறெதுவும் சொல்லாத பெரிய பாபுவின் மனதையும் கண் அசைவையும் புரிந்து கொள்ளக் கூடியவன் அவன் ஒருவந்தான். அது தன்னையறிந்து கொள்வதுதான். 

இந்நாவலில் வெளிப்படையான ஒரு குறியீடு பறவை என்று கொண்டால், கையில் சிக்காத, கண்களில் அதுவரை கண்டிராத பறவையென சிறகு முளைத்து மறைந்துவிடும் ஒரு வாழ்வை இக்கதை மாந்தர்கள் அத்தனை பேரும் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். பெரிய பாபுவின் மனைவி பட்டிணத்திலிருந்து வந்தவள். சித்தம் கலங்கிய ஒருவனுக்கு தன் வாழ்க்கையைக் கொடுத்து விட்டவள். கண்களை மூடி பிரார்த்தனையிலும் ஜன்னலோரத்தில் பெருவெளிகளிலும் தன் கணவனின் உருவத்தை சதா தேடிக் கொண்டேயிருப்பவள். அவளின் தம்பி ரஞ்சித் சுதேசியாக மாறி போராட்டங்களில் ஈடுபட்டு தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தவன். அவன் கனவு கொண்டிருக்கும் இந்திய நிலம் ஒருநாள் கைவசப்படும் என்று நம்பிக்கையில் அலைபவன். அருகாமையில் வசிக்கும் நரேந்திரதாஸின் தங்கை மாலதி விதவையாகி வீடு திரும்பியவள். டாக்காவில் ஏற்பட்ட முதல் கலவரத்தில் தன் கணவனை இழந்தவள். இவளின் சிறு வயது தோழர்களான ரஞ்சித்தும் சாம்ஸுதீனும் இரு வேறு துருவங்களாக எழுந்து நிற்பவர்கள். மாலதி தன் வாழ்க்கையைத் தொலைத்த அக்கலவரத்தைப் போன்ற மற்றொன்றை நிகழ்த்தும் காரணிகளாகும் சாத்தியம் கொண்டவர்கள். சாமு கிராமத்திற்குள் முஸ்லீம் லீக் நுழையச் செய்கிறான், ரஞ்சித் சிலம்பம் கற்றுக் கொடுத்து இந்து சுதேசி வீரர்களை தயார் செய்கிறான். ஆனால் இவ்விரு ஆண்களின் நிழல் பட்டே உணர்ச்சி பெருக்கெடுக்கும் தன்மையானவள் மாலதி என்பது காவிய முரண். சாமுவின் நடவடிக்கைகளால் அவனிலிருந்து விலகி ரஞ்சித்திடம் மனம் சாய்கிறாள். 

மாலதியின் மறு முனையில் நிற்பவள் ஜோடன். ஆபேத் அலியின் சகோதரி. மூன்று மண முறிவுகளும் பதிமூன்று குழைந்தைகளுக்கு பிறகும் ஒற்றையாளாக மறு துணை தேடி வாழ்பவள். உயிர் பெருக்குவதுதான் இவ்வுடலுக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட ஆணை என்று உளமார நம்புபவள். ஆபேத் அலியின் மனைவி ஜலாலி வயிற்றுப் பசியைத் தீர்ப்பது ஒன்றே தன் வாழ்வென்றாகிப் போனவள். இவர்களுக்கிடையில் முடமாகி தன் எதிரிகளை என்றேனும் பழிவாங்கும் வெறியினாலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கும் பேலு, நிலையான ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளும் ஆசையில் பணத்திற்கு ஆசைப்பட்டு பாவச் செயலில் ஈடுபடும் ஜாபர், தர்பூஜ் நிலத்தின் மீதும் டாகூர் குடும்பத்தின் மீதும்  விசுவாசம் என்ற பற்றுகோளை மட்டுமே பிடித்து வாழும் ஈசம் கான் என்று பல்வேறு கதை மாந்தர்கள் இந்தக் கனவெளியில் சஞ்சரிக்கிறார்கள். அர்த்தமோ அபத்தமோ வாழ்ந்து தீர்த்துவிடும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். அடிமைபட்டுக் கிடக்கும் நாடோ, பிளவு கொள்ளப் போகும் நிலமோ ஒரு பொருட்டல்ல. கண்ணுக்குத் தெரியாத ஒரு பறக்கும் சிறகை நோக்கி கைகளை நீட்டி நிலவெளியெங்கும் அலைந்து கொண்டிருக்கும் எளிய வாழ்வுருவங்கள்.

 விரிசலில் ஊடுறுவும் அரசியல் வெளி:

இந்நாவலின் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் புலம் உண்டு. நாடெங்கும் கலகங்கள் எழும் காலம். சுதேசி இயக்கங்கள் தீவிரமாக ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருக்க, டாக்கா கலவரம் முஸ்லீம் லீக் எழுச்சிக்கு வித்திட்டிருந்தது. இந்திய விடுதலையைவிடவும் வங்காளம் தனியே பிரிந்து முஸ்லீம் நாடாகிவிட வேண்டுமென்ற கலகங்கள் பரவத் தொடங்கியிருந்த காலம். இந்தச் சூழலில் இந்துக்களும் முஸ்லீம்களும் இயைந்து வாழ்ந்து கொண்டிருந்த கிழக்கு வங்காள கிராமங்கள் எத்தகைய பதற்றத்தை உணர்ந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். அப்படியொரு பதற்றம் சிறிது சிறிதாக இக்கதை சோனாலி பாலி ஆற்றோரக் கிராமங்களில் நுழைந்த பின்புலத்தில் நிகழ்கிறது. ஆனால் பெரிதாக அரசியல் பிரக்ஞை மக்களிடையே தோன்றிவிடவில்லை. டாகூர் குடும்பத்தின் மீது மரபார்ந்த விசுவாசமும் மரியாதையுமே முஸ்லீம் மக்கள் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ஏற்படும் சச்சரவுகளின் பஞ்சாயத்துகள் கூட நிமிடங்களில் தீர்த்து வைக்கப்படும் வகையிலானதாகத்தான் இருக்கிறது. ஆனால் முஸ்லீம் லீக் நோட்டிஸ்கள் மரங்களில் ஒட்டப்படுகிறது. ஒன்றிரண்டு கூட்டங்கள் ஏற்பாடாகிறது. சாமு இக்காரியங்களில் முன்னின்று தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். வரும் பிராந்தியத் தேர்தலில் டாகூர் கிராமத்தை எதிர்த்து நிற்கத் துணிகிறான். இதன் அவசியம் கதையெங்கும் முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை முன் வைத்தே உணர்த்தப்படுகிறது.

நீர் சூழ்ந்த இம்மண்ணில், விளைச்சல் மிகும் நிலங்கள் இருந்தும், மீன் வளம் மிகுந்திருந்தும் இந்து குடும்பங்களை ஒப்பு நோக்குகையில் முஸ்லீம்கள் பெருத்த வருமையில் உழல்கிறார்கள். இந்துக்களை அண்டியிருந்தும் அவர்களால் தன் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள முடிவதில்லை. ஈசாம் கான் தன் உடலையும் உயிரையும் தர்பூஜ் வயலுக்கென நேர்ந்துவிட்டவன். தர்பூஜ் அடுத்ததாக சோனா. இவ்விரண்டையும் காப்பதுதான் அவன் கடன் என்று விசுவாச வாழ்க்கை வாழ்பவன். ஆனாலும் அவன் ஒரு பருக்கையை கூட வீண் செய்ய இயலாத வறுமையை கொண்டவன். கிராமத்திற்கு வரும் பக்கிரி சாயுபு தரையில் விழுந்த ஒரு பருக்கையைத் தடவி எடுத்து உண்டு விடுகிறார். நீருக்குள் மூழ்கி அள்ளிக் கிழங்குகளைப் பறித்து உண்ணும் ஜலாலி வயிற்றுப் பசிக்கு தன் உடலை இரையாக்கியவள். மாலதியின் ஆண் வாத்தை அவள் கவர்ந்து வந்து தன் வீட்டில் வறுக்க வழியில்லாமல் தீயில் சுட்டு உண்ணுகிறாள். இந்தத் திருட்டைக் கண்டுகொண்ட சாம்சுதீன் தட்டிக் கேட்கும் எண்ணத்தில் ஜலாலி வீட்டை நெருங்கி ஜன்னல் வழியே அவள் உண்பதைப் பார்க்கிறான். அவள் உண்டு முடித்ததும் மண்டியிட்டு இன்று உணவை அளித்ததற்கு அல்லாவிடம் நன்றி கூறுகிறாள். இதைப் பார்க்கும் சாமு, அல்லாவின் கருணையைத் தடுப்பதற்குத் தான் யார் என்று எண்ணுகிறான். பட்டினியுடன் இருப்பது திருட்டை மீறிய பாவம் என்று தோன்றுகிறது அவனுக்கு.

நீர் வளம் சூழ்ந்த ஒரு மண்ணில் வாழும் இரு சமுதாயங்களில் ஒன்று பூஜையும் நைவேத்தியங்களும், அவலும் அரிசியும், மீனும் மணமுமாக வாழ்ந்துக் கொண்டிருக்கையில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இரவில் யாருமறியாமல் நீரில் மூழ்கி அல்லி கிழங்கு பறித்தும், நெற்மணிகளைத் திருடியும், வாத்தையும் கோழியையும் களவாடியும், அரையாடை உடுத்தி தன் வயிற்றைத் தரையில் இருத்தி பசியை குளிர்வித்தும் வாழ்கிறார்கள். இந்தப் பொருளாதார விரிசலில்தான் இந்திய நிலத்தின் அரசியல் உள் நுழைகிறது. டாகூர் வீட்டு குழந்தைகளை பயிற்றுவிக்க ஆசிரியர் ஒருவர் உடன் வந்து தங்குகிறார். பல் தேய்ப்பதிலிருந்து ஆங்கில கவிதைகள் வரை அனைத்தையும் சொல்லித் தருகிறார். அக்குழந்தைகள் உரக்கப் பாடம் படிப்பது அப்பிராந்தியத்திற்கே கேட்கிறது. ஆனால் பாத்திமாவோ, ஜாபரோ கல்வி முகம் அறியாதவர்கள். தன் உயிரை நிலை நிறுத்தும் பொருட்டு எந்தக் குற்றத்திற்கும் துணியத் தயங்காதவர்களாகவும் மாறுகிறார்கள். ஆனால் அவ்வறுமையிலும் ஈசாம் கான் தான் ஏற்றுக் கொண்ட மரபுப் பிடிப்பிலிருந்து வழுவாதவனாக இருக்கிறான். பக்கிரி சாயுபு தன் உயிர் நீங்கும் தறுவாயிலும் மாலதிக்கு மறுவாழ்வு அளித்து மறைகிறார். இறுதியில் டாக்காவுக்கு சாமு கிளம்பிச் செல்லும்போது கூட டாகூர் வீட்டுக் குழந்தைகள் வழி தவறிடாமலிருக்க அவர்களின் துணையாக வீடு வரை செல்கிறான். எடை மிகுந்த நெற்கதிர்களை அவர்கள் வீட்டு துர்க்கைக்கு தன் கையால் பறித்து அவர்களின் மூலம் காணிக்கை செலுத்துகிறான். சுதேசி இயக்கத்தின் தீவிர அங்கத்தினனான ரஞ்சித் விடுதலைப் போராட்டத்தைத் தொடர தன் நிலம் விட்டு விலகுகையில் எண்ணிக் கொள்கிறான் – “ ‘உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டு நிலம் கிடைக்க வேண்டும்; சாப்பாட்டுக்கு இல்லாத மனிதன், தன் கால்களுக்குக் கீழே தனக்கென்று கொஞ்சம் சொந்த நிலம் இல்லாத மனிதன். சாப்பிட வழியில்லாத மனிதனுக்குச் சுதந்திரம் கிடைத்து என்ன பிரயோசனம்’”. 

சாமுவுக்கும் அதுதான் விருப்பம் ஆனால் வேறொரு திசையில். இந்த அரசியல் மிகப் பூடகமாகக் கதை மாந்தர்களின் வாழ்வின் மூலமாகத்தான் உணர்த்தப்படுகிறது. இந்நாவல் வரிசையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாவல்களில் அரசியல் பிரதானமாக இருப்பதாக அறியப்படுகிறது.

நீர்நிழற் பிம்பங்கள்:

பறவையைப் போலவே இக்கதையின் நீர்வெளி ஒரு பிரதான குறியீடாகத் தோன்றுகிறது. நிலமென்றும் நீரென்றும் பிரித்தறியமுடியாத ஒரு தளத்தில் அவர்களின் வாழ்வு குமிழிகளாக ஊதி வெடித்து மறைகிறது. அந்நீரில் தோன்றி மறையும் பிம்பங்களைப் போலக் கதை மாந்தர்கள் அலைந்து அலைந்து கூடுகிறார்கள். ஒருவரையொருவர் ஏதோவொருவகையில் தன் எதிர் பிம்பங்களாகவே பார்க்கிறார்கள். பெரிய பாபுவின் குழந்தைப் பருவமே தன் கை பிடித்திருக்கும் சோனா. தான் சென்று சேரக் கூடாத பிம்பமாகத்தான், தோய்ந்த வருத்தத்துடன், மாலதியைக் கண்ணுறுகிறாள் ஜோடன். ரஞ்சித்தும் சாமுவும்  உருவும் அதன் நிழலும் போல. அவர்கள் கதைக்குள்ளும் கிராமத்திற்குள்ளும் வருவதும் போவதும் எப்போதென்று எவருக்கும் தெரியாது. ஒரே இலக்கை நோக்கி இருவேறு திசையில் பயணிக்கும் பிம்பங்கள். இருவருக்கும் பொதுவான அக்கறை மாலதியின் மீது. 

பெரியபாபு – சோனா

மணீந்திரநாத் பாபு எனும் பெரிய பாபு தன் கையிலிருந்து நழுவிச் சென்ற பாலினின் நினைவில் வாழ்பவர். ஆனால் அவரைப் பற்றிய சித்திரம் மிக அலாதியானது. அவர் கண் கொள்ளா அழகு நிறைந்தவர், ஆஜானுபாகுவான தோற்றமுடையவர். அவர் நீரில் தொப்பலாக நனைந்து வாசலில் வந்து நிற்கும்போது அவர் மனைவிக்குத் தீர்த்தயாத்திரை முடித்து வீடு திரும்பிய ஒரு துறவியெனத் தோன்றும். ஆனால் அடுத்த கணமே கைப்பிடித்து காற்றில் ஆட்டம் போட ஏதுவான ஒரு இளைஞனெனத் தெரிவார். ஒரு கிரேக்க துன்பியல் நாடகத்திலிருந்து வழி தவறிய ஒரு வீரனைப் போன்றவன். ஜமீன்தாரின் வீட்டிற்குப் போகும்போது ட்ராயின் ட்ரோஜன் குதிரையைப் போன்று இருப்பதாக விவரிக்கப்படுவார். ஜலாலி நீரில் மூழ்கி இறந்தபோது, அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் மற்றவர்கள் திணறும்போது இவர் சடாரென நீரில் குதித்து அவளின் உடலை தன் தோள் மீது தூக்கி கரையேறுவார். இவரை தன் குலப் ‘பீர்’ என்று நினைத்து பிரமித்துப் போவார்கள் முஸ்லீம் மக்கள். இந்தத் தோற்றத்திற்கு நேர்மாறான மனம் கொண்டவர். கவிதைகளில் தன்னை தொலைத்து தூர தேசத்தில் பாலினுடன் கவிதை மீதேறியே சென்று விட முடியுமென கனவுகளில் வாழ்பவர். நிலத்தையும் நீரையும் மரங்களையும் காட்டி இதுதான் நாம் பற்றிக் கொண்டு வாழவேண்டியவை என்று சொல்ல நினைப்பவர். 

ஆனால் அவர் வாயிலிருந்து வருவதெல்லாம் “கோத்சோரத்சாலா” மட்டும்தான் – இதற்கென அறுதியான அர்த்தம் எதுவும் இல்லை. ஒரு வசவுச் சொல் எனக் கொள்ளலாம். ‘என் புண்களின் மீது உப்பைத் தோய்க்காதே’ என ஒரு அர்த்தம் உண்டு. எப்படியாயினும் ஒரு மொழி ஒரு சொல் மட்டுமே கொண்டு இயங்குமானால் அது எவ்வாறு இருக்கும் என்ற கற்பனை எழுகிறது. அத்தனை உணர்ச்சிக்கும் ஒரு சொல் மட்டுமே. விவாதங்களுக்கும் அரவணைப்புக்கும் என ஒரு சொல் மட்டுமே பயன்படுமென்றால் அது ஒரு மட்டற்ற சுதந்திரமாகத்தான் இருக்கும். ஜென் எண்ணங்களைப் போல சொல் ஒரு வீண் செலவு. ஐரோப்பிய/மேற்கத்திய மிகு புனைவுகளில் இப்படியான பாத்திரங்கள் வருவதுண்டு. மிகச் சமீபமாக ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைத் தொடரில் ‘ஹோடோர்’ என்ற ஒரு சொல்லை மட்டும் சொல்லும் ஒரு பாத்திரம் வரும். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தடையொன்றுமில்லை!

சோனாவிடம் பெரிய பாபு சொல்லும் மிக முக்கியமான வசனம் ஒன்றுண்டு, சொற்களற்ற மொழியில்தான். அது இந்த நாவலின் மையத்தைத் தொட்டுவிடக் கூடியது – “‘உன்னுள் விதை முளைக்கிறது சோனா! இன்னுங் கொஞ்சம் காலத்தில் நீ வாலிபனாகிவிடுவாய். இப்போது உனக்குப் புரியாத ரகசியம் அப்போது புரிந்துவிடும். இன்னும் பெரியவனானதும் இருபக்கமும் கரையில்லாத ஆற்றுக்குள் மூழ்கி விடுவாய் நீ. அப்படி முழுக முடியாவிட்டால் கரையில் அந்த ரகசியத்தைத் தேடுவாய். தேடிக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என் மாதிரியே பைத்தியமாகிவிடுவாய்’. இது தான் உணர்ந்ததை தன்னைப் பார்த்தே பெரிய பாபு சொல்லிக் கொள்வதைப் போன்றது. சோனாவும் தன் பெரியப்பாவைப் போல கற்பனைகளிலும் கனவுகளிலும் பறந்தலைபவன். “இந்த மண்ணும் பூவும் புல்லும் சாமியைவிட உண்மையானவை” – இது சோனாவிடம் பெரிய பாபு உணர்த்த விழைபவை. உண்மை அறிந்த மனமது. 

 சோனாவின் முகம் பெரிய பாபுவைப் போலவே இருப்பதாக அவன் பிறந்தபோதே சொல்லிக் கொண்டார்கள். சின்ன பாலின் என்று கூறும்படியான பாலினைப் போன்ற முகத் தோற்றமுடைய அமலாவின் மீது பதற்றமான ஈர்ப்பு கொண்டவன். உடல் மீறும் குழந்தை விளையாட்டொன்றில் தன்னையும் அமலாவையும் கண்டு கொண்டவன். ஆனால் பாத்திமா கமலா அமலாவின் இடையில் சிக்கி அலைகழிபவன். இருகரையும் தெரியாத ஆற்றில் தான் படகோட்டியாகிவிட்டதாகத் தோன்றும் சோனாவிற்கு. இம்மூவரையும் வைத்துக் கொண்டு நட்டாற்றில் படகோட்டினான் அவன். இம்மூவருமே அவனை விட்டு விலகிச் செல்லப் போகிறவர்கள். பின்பு இவன் கரையேறி அதன் ரகசியத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் பைத்தியாமாகிவிடுவானோ என்ற பதற்றம் அவனை நெருங்கி உணரச் செய்கிறது. பெரிய பாபுவையும் சோனாவையும் இரு கரங்களில் பற்றிக் கொள்ள வைக்கிறது. 

ஜோடன் – மாலதி – ஜலாலி

ஒருநாளும் தான் மாலதியாகிவிடக் கூடாது என்ற பதற்றத்தில் வாழ்பவள் ஜோடன். மாலதியைப் பார்க்கும் தோறும் குற்றவுணர்ச்சியில் உழல்பவள். ஜோடன் தன் பசியைப் போக்க பெரும் தீச்சுவாலையென பொங்கித் திரிபவள் – ““இந்தச் சனியன் பிடித்த உடம்புக்கு எப்போதும் பசி”. பதிமூன்று குழந்தைகளுக்குப் பிறகும் அல்லாவிற்கு தான் செலுத்த வேண்டிய வரி பாக்கி உண்டு என்று நம்புபவள். “இந்த மனித உடல் மண்ணைப் போல. அதை தரிசாக விட்டுவைப்பது குற்றம்.” பக்கிரி சாயுபுவால் கவரப்பட்டு, ஐந்தாண்டுகள் காத்திருந்து அவருடனே சென்றுவிடுபவள். அவள் உடற் பசி காட்டைக் கொள்ளாமல் அடங்கிவிடாதது. பிணங்கள் அடங்கும் காட்டுக்குள் சென்று பக்கிரியோடு மிச்ச காலத்தைக் கழிக்கிறாள். 

மாலதி – ஏரியில் முதன் முதலில் முதலை அகப்பட்டுக்கொண்ட நாளில் திருமணமானவள், ஏரிக்கும் அவளுக்குமான பந்தம் அங்கிருந்து தொடங்குகிறது. கணவனை இழந்து தன் சகோதரனின் வீட்டில் வாழும் இவள் மெல்லுணர்வுகளால் ஆளப்படுபவள். இவள் காற்றில் அலைந்தெறியும் விளக்குத் தீயைப் போன்றவள். சாமுவோ ரஞ்சித்தோ தன் பால்ய தோழர்களின் கருணைப் பார்வைக்கு ஏங்குபவள். இவளால் ஜோடனைப் போல காணுமிடத்திலெல்லாம் தீப்பற்றிக் கொள்ள முடியாது. தன் ஆண் வாத்தை தொலைத்துப் பரிதவித்திருக்கும் நேரத்தில் அமூல்யன் இவளை நெருங்க வேறொரு ஆண் வாத்தை கண்டெடுத்து இவளிடம் வருகிறான். இவள் “என் பிரியம் மாமிச வெறியை அணுகவிடாது!” என்கிறாள். மூன்று கொடியவர்களால் இவள் வன்புணரப்பட்டதும் நிலையழிந்து போகிறாள். ரஞ்சித்துடன் தொடர்ந்து செல்ல முடியாமல் ஜோடனுடன் தஞ்சம் புகுகிறாள். ஜோடனும் மாலதியும் வெவ்வேறு கலத்திலெறியும் ஒற்றை தீயைச் சுமந்து அலைபவர்கள். 

ஜலாலியின் தீ வயிற்றுத் தீ. அடுப்பெரிந்து கொண்டிருக்கும்போது தன் கணவனுடனான எதிர்பாரா கலவியால் அத் தீ ஊரெங்கும் பரவுகிறது. அவள் பசி ஊரை எறிக்கும் வல்லது. அவள் சோற்றுத் தீ படர்ந்து பற்றக் கூடியது. பசிக்காக அவள் வாத்தை திருடியும், நீரில் மூழ்கி கிழங்கு பறித்தும் வயிற்றை நிரப்புவதற்காக வாழ்ந்து மடிகிறாள்.

ரஞ்சித் – சாமு

மாலதியின் மீது அன்பு பொழியும் இரு துருவங்கள். இவர்களின் வருத்தமும் குற்றவுணர்வும் சமமானது. தன் லீக் கில் இணையும் ஜாப்பார்தான் மாலதியின் இந்நிலைக்குக் காரணம் என்று தெரிய வந்ததும் அவனால் அவ்வூரில் இருக்க முடியவில்லை. மாலதியைப் பார்த்துக் கொண்டு தன்னால் இயல்பாக இனி வாழ முடியாது என்ற முடிவிற்கு வருகிறான். தன் லீக் அங்கத்தினன் செய்த காரியத்திற்கான காரணம் தெரியுமென்றாலும் இது பாவச் செயல் என்பது அவன் அறியாததல்ல. ஊரை விட்டு விலகிச் செல்கிறான். ரஞ்சித் சுயநலமாய் தன் குறிக்கோளை நோக்கிப் புறப்படுகிறான். ஆனால் தன்னால் ஈர்க்கப்பட்டவள் மாலதி என்று அவன் அறிவான். “நாட்டிற்காக” என்ற காரணத்தைக் கொண்டிருந்தாலும் மாலதியை இங்கே விட்டுச் செல்வது தன்னுடைய சுயநலம் என்று உணர்கிறான். அவளை அழைத்துச் செல்கிறான். ஜோடனிம் சேர்ப்பித்துவிடுவான். நாட்டின் விடுதலைக்காக அவன் திரும்பி வர இயலா இடத்திற்குச் சென்றுவிடுவான். என்ன இருந்தாலும் அவன் ஒரு – “செல்ஃபிஷ் ஜெயண்ட்”.

பக்கிரி சாயுபு தானாக முளைத்தெழுந்த ஒரு “பீர்”. யாருக்கும் தீங்கு நினையாதவன். ஆனால் மாயங்களை உண்டு பண்ணி தன்னை ஒரு “பீர்” ஆக நிலை நிறுத்திக் கொண்டவன். அவன் செய்த மிகப் பெரும் மாயம், கந்தலாகக் கிடந்த மாலதியை அவள் அண்ணனிடம் சேர்த்ததுதான். அவன் அப்போது உண்மையான “பீர்” ஆகிவிட்டான். உடலிலிருந்து உயிர் வழிய வழிய அவன் இந்த நற்காரியத்தைச் செய்தான். இனி அவன் காலாகாலத்திற்கும் மாயங்கள் செய்து வாழ்வான் தொன்மக் கதைகளில்.

நுனிப் புல்லின் கனம்:

மிகப் பெரிய வாழ்க்கைப் புலத்தில் அரசியல் பின்னணியில் மனிதர்களின் உயிர்ப்பும் இறப்பும் பேசும் இந்நாவலின் மற்றொரு சிறப்பு அது கதை மாந்தர்களின் நுண்ணுணர்வுகளைச் சித்தரிக்கும் இடங்கள். ஒரு நுனிப் புல்லின் மீதிருக்கும் பனித்துளியின் எடையைப் போல மிக மெல்லியதாக ஆனால் மிகக் கூர்மையாக வெடித்து ஒளிரும் இடங்கள் இவை. 

அமலாவுடனான எல்லை மீறிய விளையாட்டை தன் மனதிலிருந்து எடுக்க முடியாமல் தவிக்கிறான் சோனா. ஆற்றங்கரையில் நின்று சத்தம் போட்டு தன் பாவச் செயலை சொன்னால் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறான். அம்மாவைப் பார்த்து வெகுநாளாகிவிட்டது. திரும்பிச் சென்றால் அம்மாவைப் பார்க்க முடியாமலே போகலாம் என்ற பதற்றம் கொள்கிறான். காரணம், பாவங்கள் செய்தால் அம்மாவின் உயிர் பறிக்கப்படும் என்ற பயம். ஒருவரியில் மின்னும் இந்தப் பயம் மிக ஆழமான சங்கிலிகளால் பின்னப்பட்டது. ஒரு குழந்தையின் பயம் எப்போதும் அம்மாவின் நலத்தின் மீதுதான். அதுவும் அப்பருவத்தில் தனக்கான தண்டனை என்பது அம்மாவை தன்னிடமிருந்து பறித்துக் கொள்வதுதான். இவ்வுணர்வு மிக மெலிதாக சோனாவின் பயத்தின் மூலம் வெளிப்படுகிறது.

வெகுநாட்களாக ரஞ்சித் கண்ணில் படாமல் போனதால் துயருறுகிறாள் மாலதி. அவளால் நிலை கொள்ள  முடியவில்லை. டாகூரின் வீட்டிற்குள் நுழைந்து பார்க்கிறாள். எதிர் வரும் பெரிய மாமியிடம் அவள் கேட்க எத்தனிக்கும்போது அவரே ரஞ்சித்தின் பெயர் சொல்லி வேறெதுவோ பேசுகிறார். தனக்கு முன்னால் ரஞ்சித்தைக் குறித்து பெரிய மாமி பேசிவிட்டதாலேயே தன்னால் அப்பெயரை மீண்டும் உச்சரித்து அவன் எங்கே எனக் கேட்க முடியாது என்று துணுக்குறுகிறாள் மாலதி. மன சஞ்சலங்கள் நீரில் அலையும் கோடுகள் போலத்தான். எவர் தொட்டும் கலைந்து போகக்கூடும்.

பெரிய பாபு பைத்தியமாகி அலைவதற்கு தான்தான் காரணம் என்று மணீந்திரநாத்தின் அப்பா குற்றவுணர்வில் தவிக்கிறார். ஒருவேளை பாலினுடன் பெரிய பாபுவை மணமுடித்து வைத்திருந்தால் இவன் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கிறார். ஆனால் அதற்கு நேரெதிரான சித்திரம் ஒன்று ஜமீந்தாரின் வீட்டிலிருந்து மேலெழுகிறது. அமலா/கமலாவின் அப்பா தன் வீட்டாரை எதிர்த்து வெள்ளைகார பெண்ணை மணமுடித்து வாழ்ந்து வருகிறார் கல்கத்தாவில். ஆனால் சமீபகாலமாக அவர்களின் இல்லற வாழ்வு சுகமிழந்து வருகிறது. துர்கா பூஜைக்கு தன் ஊருக்குச் செல்லும் சில காலம் முன்னரே தனித்திருக்கத் தொடங்குகிறார். பூஜைகளில் மூழ்குகிறார். அது அமலாவின் அம்மாவிற்கு ஒரு விலக்கத்தை உண்டு பண்ணுகிறது. தன் மனைவியிடம் பேசுவதைக் கூட தவிர்கிறார். வருடா வருடம் இதன் வீரியம் பெரிதாகி இல்லறம் உடையத் தொடங்குகிறது. தன் சொந்த ஊர் வந்திறங்கியதும், அமலா கமலாவிடம் அவர்கள் அப்பா தன் மண்ணை நேசிக்க வேண்டியதின் அவசியத்தைச் சொல்கிறார். அவர் முகம் களையிழந்திருக்கிறது. கல்கத்தாவிற்கும் அவருக்குமான தூரம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒருவேளை இப்படியான ஒரு சூழலை பெரிய பாபு அடைய நேர்ந்திருக்கலாம். இப்படி அவர் பைத்தியமாகி அலைவதற்கும் அவரின் அப்பா குற்றவுணர்ச்சியில் தன் உயிரை தேய்த்தழிப்பதற்கும் ஏதேனும் நியாயம் உண்டா என்ற கேள்வி எழுகிறது. எதைத் தேர்ந்தாலும் அதில் வருந்தி உழல்வதான வாழ்க்கையா இது?

பெரியப்பாவின் பைத்தியத்தை எப்படியாவது தன்னால் குணமாக்கிட முடியுமென்று நம்புகிறான் சோனா. அதற்கான அத்தனை செயல்களையும் செய்கிறான். அவருக்கு எண்களைச் சொல்லிக் கொடுக்கிறான். வாய்ப்பாடுகளை கற்றுத் தருகிறான். அவர் மாற்றம் கொள்கிறார் என்று நம்புகிறான். முதன்முறையாக பெரியப்பா தும்முவதைக் காண்கிறான். மனம் பிறழ்ந்த அவர் தும்முவது அவர் சொஸ்தமாவதின் அறிகுறி என்று நினைத்து ஆனந்தத்தில் துள்ளி குதிக்கிறான். உடலுக்கும் மனதிற்குமான வேறுபாடு அறியாத மழலையின் குதூகலம் அது. 

சோனா தெரியாத்தனமாக பாத்திமாவை தொட்டுவிட்டான். அதை தன் அம்மாவிடம் மறைக்கவும் முடியாமல் தவிக்கிறான். நல்ல பசியில் உணவின் முன் அமர்ந்த பிறகு உண்மை தெரிந்தால் அவன் அம்மா அவனை குளிக்கச் சொல்வாள். இருந்தும் உண்மை வெளி வருகிறது. அவனின் அம்மா கொதித்தெழுந்து அவனை அடித்து நீரடிக்கு அழைத்துச் செல்கிறாள். ஆனால் அவளின் அக்கோபம் அவன் பாத்திமாவை தொட்டுவிட்டதால் மட்டும் வருவதல்ல, தன் மாமியரின் சுடுசொல்லை எதிர்பார்த்து எழுவது. கூட்டுக் குடும்பத்தின் எரிச்சலும் சேர்த்து வெளிப்படுவதாக ஆசிரியர் ஒரு சிறு குறிப்பை உதிர்த்துவிட்டுச் செல்கிறார். இப்படியான மிக நுண்மையான உணர்வுகள் இக்கதைக்குள்ளிருந்து வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இவை இந்நிலமெனும் மாயச்சுழலில் நம்மை சிக்க வைக்கும் யதார்த்த சரடுகளாக உருக்கொள்கின்றன.

பிடி நழுவும் இறகு:

இந்நாவலின் தனித்தன்மை இது கற்பனாவாதத்தின் பலத்தில் நின்று யதார்த்த வாழ்வைப் பேசுகிறது. ஒரு அரூபத் தன்மை கொண்டு கவிதை சாயலில் மொத்த கதையும் விரித்து வைக்கிறது. இது கணக்கிலா உருவகங்களும் படிமங்களும் மேலெழுந்து வர அத்தனை சாத்தியங்களையும் உருவாக்கி விடுகிறது. வாசகனின் கற்பனைக்கு அவன் விரித்தெடுப்பதற்கு போதிய இடங்களை விட்டுச் செல்கிறது. இது உண்மையில் வாசகனைக் கொஞ்சம் திக்குமுக்காடவே செய்யும். சற்று சுதாரித்து கனவுக்குள் நுழைந்தால், ஆசிரியனுக்கு இணையான கற்பனை உலகை உருவாக்கிக் கலைத்து மீண்டும் அடுக்கி உருமாற்றி அதில் திளைக்க முடியும்.

பறவை என்பது இந்நாவலின் பிரதான குறியீடு. கை நழுவிச் செல்லும் அத்தனையும் ஒட்டு மொத்த வாழ்வு உட்படவும் அது குறித்து விடுகிறது. பெரிய பாபுவின் பைத்தியக்காரத்தனம் ஒரு அபாயமற்ற பிறழ்வு என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவரின் கற்பனை வீரியம் கொண்டு அவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறார். “கனவு மாளிகையில் வாழ்ந்த பறவை அவருடைய பிடியிலிருந்து நழுவி பறந்து போய்விடுகிறது. வியாபாரிகளின் நாட்டை கடந்து ஜலதேவதைகளின் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்து அங்கே சோகித்திருக்கும் ராஜகுமாரனின் தலையில் உட்கார்ந்துகொண்டு அழுகிறது. அப்போது பெரிய பாபுவின் மனசில் ஏதோ ஒரு பெரும் வேதனை ஏற்படுகிறது. அவர் தன் கையை தானே கடித்துக் கொள்கிறார்.” இங்கே அப்பறவை சென்று சேர்வதும் ஒரு சோகித்திருக்கும் ராஜகுமாரனிடம்தான். தான் எதுவும் செய்யவியலா நிலையின் அழுத்தம். கை நழுவும் ஒன்றைப் பிடிக்க முடியாத தவிப்பு. தன் கையை கடித்துக் கொள்கிறார். 

ஜமீன்தார் வீட்டு யானைக்கு அடிக்கடி மதம் பிடிக்கிறது. அது கட்டற்று திரிகிறது. ஆனால் அதன் மீது பெரிய பாபு ஏறி நாட்கணக்கில் ஊர்வலம் வர முடியும். எங்கும் சுற்றித் திரிய முடியும். அவர் முன்னால் அந்த யானை மண்டியிட்டு நிற்கிறது. பெரிய பாபுவும் கட்டுக்கடங்காத ஒரு வேழம்தான். அவர் நீரிலும் காட்டிலும் சுற்றித் திரியும் சித்திரம் ஒரு யானைக்கு ஒப்பானது. பாறை, சேறு, முட்காடு, முதலை மிதக்கும் ஆறு என்று எதையும் பார்க்காது இறங்கி ஏறும். உணவின்றி நாட்கணக்கில் சுற்றித் திரியும். யானை பெரிய பாபுவின் குறியீடாக இக்கதையில் சுற்றித் திரியும் ஒரு விலங்கு.

ஜலாலி நீரில் மூழ்கி இறக்கும் காட்சி ஆசச்சிறந்த ஒரு படிமமாக உருக்கொள்கிறது. அவள் நீர்க் கொடிகளில் சிக்கி தன் மூச்சை காற்றுப் பந்துகளாக நீருக்கு மேலே அனுப்பி சொட்டு சொட்டாக உயிரை உதிர்க்கும் தருணம் ஒரு பெரிய கஜாரா மீன் அவளை நெருங்கி வருகிறது.  அவளை உண்டுவிடுமோ என்று பயப்படும் அளவிற்கு பெரியதாக இருக்கிறது. அதன் உடல் முழுதும் மனிதர்கள் எறிந்த ஈட்டியினால் ஏற்பட்ட வடுக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த மீனை ஒரு எளிய சமூகம் என கொண்டால் அது ஆதிக்க மனிதர்களால் ஆண்டாண்டு காலமாய் நிகழ்த்தப்பட்ட வன்முறையின் எச்சமாக இன்று நின்று கொண்டிருக்கிறது.  இவளைக் கண்டதும் தன்னிடத்தில் ஒரு மனித பெண் சிக்கிவிட்டாள் என்று குதூகலிக்கிறது. திரும்பிச் சென்று தன் உலகத்தாரிடம் சொல்லி அவர்களை அழைத்து வரப்போகிறது. இவ்விடத்தில் இந்நாவல் ஒரு மீனைப் போல சற்றே துள்ளி யதார்த்தம் கற்பனாவதம் எனும் தன் நீர்ப் பரப்பை மீறி மாய யதார்த்தவாதத்தை சுவாசித்து பின் நீருக்குள் திரும்புகிறது. மீனின் மனவோட்டங்கள் இங்கே துள்ளியெழுந்து அமிழ்கிறது.

இம்மனிதர்களின் வருங்காலமும் அவர்களின் தன்னிலையும் படிமங்களாக நாவல் முழுதும் மின்னிச் செல்கிறது. ஜாப்பரின் நடவடிக்கைகளால் கலங்கி நிற்கும் மாலதியின் அருகில் ஹாட்கிலாப் பறவையை ஒரு பாம்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது. சாமுவை நோக்கி அப்போது அவள் நின்றிருக்கிறாள். ஆனால் அவனால் அப்பறவையை மீட்க முடியவில்லை. இது பிற்பாடு ஜாப்பரால் மாலதி தன் மானமிழக்கும் நிலை காட்சியாக அமைகிறது. சாமுவால் அப்போதும் ஒன்றும் செய்ய முடியாது. குற்றவுணர்வு பொங்க அவன் அவளிடமிருந்து விலகிப் போவான்.  

பாத்திமாவிற்கு ஒரு வண்ணத்துப் பூச்சியை முடிச்சிட்டு தருவான் சோனா. அது அவர்கள் இருவருக்கும் ஒரு அன்புப் பாலமாக இருக்கும் என்று அவன் நம்பினான். ஆனால் சாமு அதைப் பிரித்து பார்க்கும்போது அவ்வண்ணத்துப் பூச்சி இறந்து போயிருக்கும். இறுதியில் சோனாவைப் பிரிந்து பாத்திமா செல்லும் காட்சிக்கு ஒப்பான துயரத்தை ஏந்தியிருக்கும் அப்பூச்சியின் மரணம். 

மாலதியை கசங்கிய கோலத்தில் கண்டெடுக்கும் ஜோடன், பக்கிரியின் உதவியோடு அவளை தூக்கிச் செல்வாள். அப்போது அவளின் கால்களைப் பார்க்கும் பக்கிரி அது துர்கையின் பாதங்களை ஒத்திருப்பதாகத் தோன்றும். இரத்தம் அவள் முகமெங்கும் தெரித்து குங்குமத்தால் பூசப்பட்டவளைப் போல காட்சியளிப்பாள். தங்கத்தில் ஏது அசுத்தம், தண்ணீரில் ஏது எச்சில் என்று கூறுவான் பக்கிரி. அவனுக்கு மாலதி துர்கையேதான். 

ஜமீன்தாரின் ஊரில் விசர்ஜனத்திற்கு தயாராக இருக்கும் துர்கையின் சிலையொன்று. அதனிடத்தில் சென்று விளையாடிக் கொண்டிருப்பான் சோனா. சிங்கத்தின் வாயில் கைகளை விட்டும் குதிரையின் மூக்கில் குச்சி நுழைத்தும் சிரிப்பான். அப்போது துர்கையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிவதாகத் தோன்றும் அவனுக்கு. கரைந்து போகப் போகிறோம் என்ற வருத்தம் துர்க்கைக்கு என்று நினைப்பான். ஆனால் வங்காள நிலமெங்கும் உதிர்க்கும் பெண்களின் கண்ணீர் அது. அதை உணர்ந்து கொள்ளும் மனம் சோனாவிற்கும் பெரிய பாபுவிற்கும் மட்டுமே உண்டு. 

துர்கா பூஜைக்கு எருமையின் தலையை துண்டாக்குவதும் அதை சுமந்துச் செல்வதும் இருவேறு நிலங்களிலும் அக்கொண்டாட்டங்கள் ஒன்று போல இருப்பதும் அவர்களின் புராதன மனதை குறிக்கிறது. அத்தனை பூஜைகளும் ஒரு பெரும் வன்முறையின் துண்டாட்டோடு இணைந்திருக்கிறது. தூக்கிச் செல்லும் எருமையின் உடல் மீது வைக்கப்பட்ட அதன் தலை உருண்டு தரையில் விழுவதும் அது உதாசீனப்பட்டு கிடப்பதும் மனம் குலைக்கும் சித்திரத்தை உருவாக்குகிறது. 

வெட்டி வெட்டிச் செல்லும் இந்நாவலில் காட்சிகளின் சித்தரிப்பு பெரும் பலம். அது சில இடங்களில் முழுமை கொள்ளாமல் நகர்ந்து செல்வது அக்காட்சிகள் படிமமாக உருக்கொள்வதற்கு வழி வகுப்பதாகத் தோன்றுகிறது. மேலும் மேலும் யோசிக்கையில் அவை வெவ்வேறு அர்த்தங்களைத் தெளித்தபடியே இருக்கின்றன.

தொன்மமேறுதல்

இந்நாவலின் வெளியெங்கும் நாடோடிக் கதைகளும் புராணக்கதைகளுமாக விரவிக் கிடக்கிறது. சிவபுராணத்தில் ஒரு வங்காள நாடோடிக் கதையின் குறிப்பு இக்கதையில் வருகிறது. பெரிய மாமியிடம் கிழவர் தன் மனக் கிலேசத்தை வெளிப்படுத்துகிறார். தன் மகன் பைத்தியம் என்று தெரிந்தே நான் உனக்குக் கட்டி வைக்கவில்லை என்று வருந்துகிறார். அப்போது கிழவரின் மனைவி பத்மபுராணம் கேட்கச் சென்றிருந்தார். நீங்கள் செல்லவில்லையா என்று பெரிய மாமி கேட்க “நானே பத்மபுராணம்தானே” என்கிறார். அவர் தான் சந்தா சாகர் என்றும் பெரிய மாமி பேஹூலாவின் பாத்திரத்தை ஏற்றிருக்கிறாறென்றும் சொல்கிறார். அந்நாடோடிக் கதையில் சந்தா சாகர் செய்யும் தவறுக்காக அவரின் மகன் மீது பாம்பு ஒன்று ஏவப்படுகிறது. அதில் உயிர் பிரியும் தன் கணவனுக்காக பேஹூலா செய்யும் பிரயத்தனங்களே அக்கதை.

ஜோட்டனை மீட்டு அவள் அண்ணனிடம் சேர்க்க பக்கிரி கிளம்புகிறார். கழுத்திலும் கையிலும் அவர் அணிந்திருந்த கண்ணாடிக்கல் மாலைகளும் தாயத்துகளும் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து ஒலியெழுப்பின. அப்போது அவரைப் பார்த்தால் மாலதிக்கு கண்வ மகரிஷி சகுந்தலையை அரசனிடம் அழைத்துச் செல்வதைப் போல தெரிகிறது. அவர் தான் உள்ளூர படும் உபாதையைக் காட்டிக்கொள்ளாமல் துடுப்பு வலித்து முன்னேறிச் சென்றார். அவர் அக்காரியத்தைச் செய்து முடித்ததும் தான் ஒரு தொன்மமாக உருமாறும் வழியைச் செய்கிறார். நரேந்தாஸிடம் மாலதியை சேர்ப்பித்த அதே நேரத்தில் இடுகாட்டில் தான் உயிர் விட்டதாக ஜோடன் மூலம் ஊர் அறியச் செய்கிறார். அவர் தொன்மக் கதைகளின் மாயப் ‘பக்கிரி’யாக உருவெழுகிறார்.

அமலா சோனாவுடன் சேர்ந்து கர்ண ஜாத்ரா காண்கிறாள். அதில் கர்ணனின் கடைசி புதல்வனாக போரில் மரிக்காத ஒரே மகனான விருஷகேதுவாக நடிக்கும் ஒருவனின் முகம் சோனாவை நினைவூட்டியது அமலாவிற்கு. பைத்தியக்கார பெரியப்பாவின் அருகில் அமர்ந்திருக்கும் சோனாவை பார்க்கிறாள் அவள். மேடையில் ஒளிரும் பாத்திரங்கள் இவர்களாகத் தோன்றுகிறது. கர்ணனிற்கு ஒப்பான பித்து குணம் கொண்ட ஒருவரின் அசாதாரணமான பித்ரு பக்தி. அப்பைத்தியக்கார மனிதர் காலை அசைத்தால் சோனாவின் தூக்கம் கலைந்துவிடுமென்று நேராக அமர்ந்திருக்கிறார்.

சோனாவிடம் அமலா கல்கத்தாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததும், அவனின் கற்பனையில் பெரிய வீடுகளும் அரண்மனைகளும் கோட்டைகளும் எழுகிறது. கற்பனையில் ஒரு ராஜகுமாரனைப் போல வலம் வருகிறான். பிரிதிவிராஜ், ஜயசந்திரன் சம்யுக்தையின் சுயம்வரம் எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன. அவன் ஒரு பூங்காவில் தன் குதிரையுடன் ஒளிந்திருக்கிறான். அவன் ராஜகுமாரியை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடுகிறான். அவன் மனக் கண்ணில் வெள்ளைக் குதிரை தோன்றியது. அதன் மேல் அமர்ந்திருக்கிறான் சோனா. அவனுக்கு முன்னால் அமலா. அவளைக் கூட்டிக்கொண்டு ஆறு, வயல், காடுகளைக் கடந்து பெரியப்பாவின் நீலகண்ட பறவையைத் தேடிப் போவான் அவன்.

*****

இந்நாவலை தமிழுக்கு தந்ததிற்காக எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தமிழுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கூட கிடைக்கப்பெறாத இப்பெரும் இலக்கிய ஆக்கத்தை தமிழுக்கு தருவித்திருக்கிறார். தன்னலமற்ற செயல்களால்தான் ஒரு சமூகம் உய்விக்கப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சுயசரிதை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுகிறது. இவர் மொழிபெயர்த்த ஆக்கங்கள் அத்தனையையும் தேடிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது.

நீராலான ஒரு நிலத்தின் மனிதர்கள் வாழ்வு சதா கனன்று கொண்டேயிருக்கிறது. மனிதர்கள் நடமாடும் கங்குகளாகத் திரிகிறார்கள். எதையாவது பற்றி எரிந்து அழிந்து விடவேண்டுமென்ற வேட்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த ஏரியின், ஆற்றின் ஆழம் இன்னதென்று அறியாதவர்கள். சில நேரம் மண் தென்படுகிறது, சில நேரம் கொடிகள் சூழ்கிறது. ஆழம் என்ற ஒன்று அந்நீருக்குப் பொருந்தா. அந்நீரில்தான் மனிதர்களின் பசியடங்குகிறது. நனைந்து உதறி மேலெழுந்ததும் அவர்கள் கனன்று பற்றியெரிகிறார்கள். ஜலாலியின் பசித் தீ அவர்களின் கிராமத்தை எரிக்கிறது. கலவரத்தின் நெருப்பு உயிர்களை கொளுத்திச் செல்கிறது. நீர் சூழ்ந்த நிலத்தை நெருப்பு, உடலால் மனதால் பசியால் மானத்தால், துளிர்விட்டு ஆள்கிறது.

நீரைப் பார்க்கும் போதெல்லாம் அதில் குதித்து உயிர்விட வேண்டுமென்று எண்ணுவதாக இந்நாவலில் ஒரு வரி வரும். பெரும் நீர்ப்பரப்பைக் காணும்போதெல்லாம் அப்படியான ஒரு பித்து எழாமல் இருக்காது. சதா கைகளை நீட்டி விலகிச் செல்லும் ஒரு பறவையின் பின்னால் அலைவது முடிவுறும்போது கரையற்ற நீரில் மூழ்கி ஒரு பறவையாக மேலெழவே உள்ளம் இரங்கும். வாழ்வென்பதே ஒருமுறையாவது கற்பனையில் மரணித்து பின் முளைத்தெழுந்து சலிக்கச் சலிக்க உயிர்த்திருப்பதுதானே..!!!!

நீலகண்டப் பறவையைத் தேடி வாசிப்பு – ராகவேந்திரன்

“அகன்ற பிரம்மபுத்திரா நதி மலைகளிலும் குன்றுகளிலும் வளைந்து ஒடுகிறது; தீவுகளை உருவாக்குகிறது. காணவேண்டிய காட்சிகள்.  என்னுடையது நீரின் பிரதேசம். ஆனால் இதை இப்போது தான் உணர முடிந்த்து. கிழக்கு வங்காளத்தின் நதிகள்  பாய்ந்தோடும் நீரின் கடல்கள் என்று தான் சொல்லவேண்டும்”

(சுவாமி விவேகானந்தர் , மிஸ் மேரி ஹேலுக்கு எழுதிய கடிதம்,5.7.1901)

வீட்டிற்கு வெளியே செல்வதற்கு, படியை விட்டு இறங்கியதும் காத்து நிற்கும் படகில் ஏறிப் போகும் அமைப்பு இந்தியாவில் சில  பகுதிகளில் தான் அமைந்துள்ளது.  அது போன்ற ஒரு கிழக்கு வங்காள கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது நீலகண்டப் பறவையைத் தேடி. கொற்றவையில் வரும் வஞ்சி நகரை நினைவு படுத்தும் ஊர்களால் ஆனது இப்படைப்பு.

இந்திய மொழிகளில் எழுதப் பட்ட பல பேரிலக்கியங்களும் ஏறத்தாழ  ஒன்று போலவே கிராமங்களையும் மானுட வாழ்வையும் சித்தரிப்பதாகத் தோன்றுகிறது. மண்ணும் மனிதரும் (சிவராம காரந்த்), , ஒரு கிராமத்தின் கதை (பொற்றேகாட்),  அக்னி நதி (குர் அதுல் ஜன் ஹைதர்) போன்ற படைப்புகளின் பேசு பொருட்கள் வேறாயினும் அடிப்படை இழையில் ஒற்றுமை உள்ளது.  ஒரு வேளை சுதந்திரம் அடையப் போகும் அல்லது அடைந்து விட்ட காலத்துப் பிரச்னைகளையும் கனவுகளையும் முன்வைக்கும் காரணத்தால் இருக்கலாம். எனினும் கச்சாப் பொருட்களும் பாத்திரங்களின் மனநிலையும் இந்தியப் பெருநிலத்தின் ஒருமித்த பண்பாட்டை நிரூபணம் செய்கின்றன. 

“ நீலகண்டப் பறவையைத் தேடி “ காட்டும் நிலம் சோனாலி பாலி ஆற்றின் கரையில் ஒரு பழைமை நிறைந்த கிராமம்.  வறுமையும் சமயமும் மூட நம்பிக்கைகளும் முயங்கி நிற்கின்றன. இயற்கை அழகைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது. மழை இல்லாத காலங்களில்  ஏழைகளுக்கு பசித் துயர், அன்போடு பழகிய இரு மதத்தவரிடையே சிறிது சிறிதாக வேறுபாடு  இறங்குகிறது .  பசியில் மாண்டுபோகிறார்கள். அன்பைத் தேடுகிறார்கள். அன்புக்கு துரோகம் செய்கிறார்கள்.  அது குறித்து குற்ற உணர்வு கொள்கிறார்கள்.

உறுதியான உடல் படைத்த மணிந்திரநாத் டாகூருக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது. அவர் மிகச் சிறந்த அறிவாளியாக இருந்தவர். கந்தர்வன் போன்ற உடல்வாகு கொண்டவர் . கொல்கத்தாவில் படிக்கும்போது பாலின்  என்ற ஆங்கில இந்தியப் பெண்ணைக் காதலிக்கிறார்.  மத நம்பிக்கை கொண்ட மூத்த டாகூர்  காதலை மறுத்து விடுகிறார். தந்தை சொல்லை மீற முடியவில்லை.  சித்தம் கலங்கி விடுகிறது. பாலினை வானில், வயலில், நீரில் தேடுகிறார். பேச்சு நின்று விடுகிறது. புதருக்குள், காட்டுக்குள் சுற்றுகிறார். துயர் அதிகமாகும்போது தன்னையே கடித்துக் கொள்கிறார். குழந்தைகளை யாரேனும் அடிக்கும்போது தன்னையே தண்டித்துக் கொள்கிறார். ஆனால் ஏரிக்குள் மூழ்கி இறந்த ஜாலாலியின் பிணத்தை தனியே  மூழ்கித் தூக்கி வருகிறார்.  தனியே காட்டில் அலைந்து கொண்டு வரும்போது ஒரு யானை மீதேறி வருகிறார். 

மொத்த கதையையும் சோனா என்ற சிறுவனின் பார்வையில் சொல்லப் பட்டது போல வாசிக்கலாம். ஆசிரியரின் ஆளுமையின் பிம்பமாக சோனா இருக்கிறான்.  மிகவும் எளிமையான  வாக்கியங்கள். ஒரு குழந்தை கதை சொல்வது போல முன்னும் பின்னுமாக சம்பவங்களைச் சொல்லிக் கொண்டு செல்கிறது. சிறிது சிறிதாக பிரம்மாண்டம் விரிகிறது. குழந்தையின் வியப்பும் திகைப்பும் ஆர்வமும் கலந்து கதை வளர்கிறது. கம்பளிப்பூச்சி ஊர்வது போல சம்பவங்கள் கோர்த்துக் கொண்டு செல்கின்றன.

ஆசிரியர் அதீன் பந்தோபாத்யாய இயற்கை அருள் செய்துள்ள கிராமங்களின் உலகைச் சித்தரித்திருக்கிறார்.  ஏராளமான பூக்கள், மரங்கள் பறவைகள், மீன்களின் பெயர்கள். இவ்வளவு வளம் நிறைந்த கிராமத்தில்  சில குடும்பங்கள் கொடும் வறுமையில் உழல்கின்றன. வாத்து திருடுகிற ஜாலாலி வாத்தை ஒரு கையில் நீருக்கு அடியில் பிடித்துக் கொண்டு நீந்துகிறாள். மாலதியின் செல்ல வாத்துக்களில் ஒன்றை அவள் கொன்று ரகசியமாகத் தின்று விடுகிறாள். அதன் பின் அல்லாவிற்கு நன்றி செலுத்தி பிரார்த்தனை செய்கிறாள். அவளது திருட்டைக் கண்டு பிடித்துவிட்ட சம்சுதின் பசியின் கொடுமையையும் இறைவனின் கருணையையும் கண்டு அவளை மன்னித்து விடுகிறான்.

ஜாலாலியின் கணவனின் சகோதரியான  ஜாட்டன் நான்காவது முறை திருமணம் செய்து கொள்கிறாள், இறைவனுக்கு வரி கொடுப்பதற்காக . கணவருடன் புறப்படும் அவளுக்கு அவளது அண்ணி ஒரு கிழிந்த முகத்திரையைப் பரிசளிக்கிறாள். தன் புதிய கணவருடன் அவருடைய இருப்பிடமான சூபித் துறவியின் சமாதிக்கு வந்த இரவில் அதே  இடுகாட்டில் தனது முதல்  மகன் இறந்து புதைக்கப்படும் சம்பவம் நடைபெறுகிறது. பசியும் தன்னிரக்கமும் வறுமையும் அடிப்படை மானுட இயல்புடன் விளையாடிக்கொண்டிருக்கின்றன. 

மாலதியுடன் சிறுவயதில் விளையாடிக்கொண்டிருந்த நண்பர்களே மதத்தின் பெயரால் எதிரிகள் ஆகி விடுகிறார்கள். அவளுக்கு ஜப்பர் பெரும் தீங்கு இழைத்து விடுகிறான். ஆனால் ஜாட்டனும்   பக்கிரியான அவள் கணவனும் அவளை மீட்கிறார்கள்.  . புதருக்கு வெளியே தெரியும் மாலதியின் கால்களை துர்கையின் கால்களாகவே காண்கிறார்கள். துர்கையும் வங்காளமும் என்றுமே பிரிக்க முடியாதவர்கள்.

கொள்ளை நோய் பலரை பலி கொள்கிறது. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கடவுள் இருக்கிறார். “ வாந்தி பேதி “ சாமியை ஊர்வலமாக எடுத்துப் போய் வணங்குகிறார்கள். கழுதை மேலேறி, விசிறி,துடைப்பம், மருத்துவ நீர் இவற்றைக் கொண்டு நோய் தீர்க்கும் சீதலா தேவியாக இருக்கக் கூடும்.

சோனா அழகிய சிறு பையன். அவனது வளர்ச்சியை ஒட்டியே கதை நகர்ந்து செல்கிறது.  முதல் முறையாக கனவு கண்டது நினைவில் நிற்கின்ற போது  “கனவு காணக் கற்றுக் கொண்டு விட்டேன் “ என்கிறான். பைத்தியக்கார டாகூரை மிகவும் புரிந்து கொண்டது  அவரது  மனைவியும் சோனாவும்  தான். 

சோனாவுக்கு வழியில் சந்திக்கும் பீபி  துர்கையைப் போலவே தெரிகிறாள். அவன் அடிக்கடி காட்டுக்குள் ஓடிச்சென்று விட விரும்புகிறான், தன் தோழி பாதிமாவுடன் அல்லது பெரியப்பா டாகூருடன். 

காட்டுக்குள் தொலைந்து போய்த் திரும்பி வருகிறார்கள். பாரதி சொல்லும் பிள்ளைக் காதலை இரு முறை இழந்து விடுகிறான் சோனா , ஒன்று தன் இணைபிரியாத் தோழியான பாதிமா ஊரை விட்டுக் கிளம்புகிறாள். இரண்டு அமலாவுடன் அவன் கொண்ட நட்பும் திடீரென முடிந்து விடுகிறது. அடுத்த  பைத்தியக்கார டாகூராக வரும் காரணிகளான பேரழகும்  அனைவரின் அன்பும் உணர்ச்சி வயப்பட்ட தன்மையும் கொண்டிருக்கிறான் சோனா. 

மழைக்காலத்தில் வயல்களில் நீர் நிறைந்திருக்கும். அதன் வழியாகவே படகுகள் செல்லும். நாணல் பூக்கள் , பிரப்பம் பழம் பறிக்க குழந்தைகள் விரைகிறார்கள். அச்சம் தரும் காட்டுக்குள் வந்து விடும்போது ஒரு மரம் கிழட்டு மாடு போல நின்று கொண்டிருக்கிறது. தொலைந்து போதலும் வழி கண்டு பிடித்து மீளுதலும் ஒரு உருவகமாக அமைகின்றன. 

ஜாலாலி மூழ்கி மாயும் அந்த ஏரி பற்றிய விவரணை விரிவாக வருகிறது. மிகப் பெரியது, அறிய முடியாத மர்மங்கள் கொண்ட்து, உணவு தருவது, இறப்பையும் தருவது. பல அதிசய தேவதைக் கதைகளைக் கொண்டது. அந்த ஏரி இந்தியா அல்லது இந்து மதத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். 

திருவிழாக்களும் மிருக பலிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. மனிதர்களும் ஊழின் முன் வைக்கப் பட்ட பலிகளே. நீர் அவர்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத படி இருக்கிறது. நீர் நிறைந்த ஊர் மக்கள் இறக்கவும் நீரையே சரணடைவர் என்பது போன்ற பல வரிகள் நினைவில் நிற்கின்றன. . 

ஜாலாலியின் சமாதி மீது நாணல் புற்கள் பூத்துச் சிரிக்கின்றன. அது தனக்கு கடைசியாக ஒரு நிலம் கிடைத்து விட்ட்தற்காக அவள் சிரிப்பது தான் என்று ரஞ்சித் நினைக்கிறான். எல்லோருக்கும் ஒரு பிடி மண் தேவை என்ற தரிசனத்தை அடைகிறான். 

முடிவு பெறாத பல முனைகள் கதையில் இருப்பதாக ஒரு விமர்சனம் இருக்கிறது. அதையே ஒரு அழகியலாகப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வரம்பற்ற நடையும் கதையொழுக்கும் ஒரு பித்து நிலையை வாசகனுக்கும் உருவாக்குகின்றன. 

 மாலதியை மீட்டுக் கொண்டு அவள் வீட்டில் விடுகிற பக்கிரி தன் மீது சந்தேகம் வரும் என்று அஞ்சுகிறார்.  அதனால் ஒரு மாயவித்தை செய்வது போல நடித்து மாலதியை விட்டு விட்டு உடனே படகில் திரும்பி விடுகிறார்.   திரும்பிச் செல்கையிலேயே இறந்து விடுகிறார். உடனே ஒரு பீர் (மகான்) ஆகி விடுகிறார்.  பிற   மதங்களின் தெய்வங்களையும் புனிதங்களையும் மதிக்கும் மக்களே பெரும்பாலும்.  என்றாலும் சூழலாலும் தூண்டுதலாலும் கலவரங்கள் வெடித்து விடுகின்றன. நதியில் மிதக்கும் தர்புஜ் பழங்கள் மனிதத் தலைகள் போலத் தோன்றுகின்றன. 

எல்லாக் கலவரங்களையும் தாண்டி எதையோ தேடிக் கொண்டிருக்கிறார் டாகூர்.  நீலக் கண்களைக் கொண்ட பாலினை அவர் தேடுகிறார். ஆனால் அதையும் தாண்டி, பிரபஞ்ச ரகசியத்தையும் இயற்கையின் பேரழகையும் தேடுவதாகவே தெரிகிறது.

அவரத் தந்தை மதக் கட்டுப்பாட்டில் மகனுடைய வாழ்வைக் குலைத்து விட்டு மாளாத குற்ற உணர்ச்சியில் தனது விடியலைத் தேடிக் கொண்டிருக்கிறார்.   டாகூரின் மனைவி நகரத்திலிருந்து வந்தவள். வாழ்வு சிதறிவிட்டதற்கு முதலில் கலங்கினாலும் கணவனின் சேவையிலேயே தனது மீட்பைத் தேடிக் கொண்டிருக்கிறாள். சம்சுதினும் ரஞ்சித்தும் தங்கள் மதங்களைக் காக்க போராட்ட முறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  மாலதி தொலைந்து போன வாத்தையும் சிறுவயது மகிழ்ச்சிகளையும். 

ஜாலாலி போன்ற ஏழை பாழைகள் அல்லிக் கிழங்கிற்காக நீருக்கு அடியில் தேடுகிறார்கள்.  சோனாலி பாலி, மேக்னா, பத்மா போன்ற நதிகள் வங்கக் கடலைத் தேடுகின்றன. ஈசம் தர்பூஜ் வயல்களில் காவல் செய்து  கொண்டே வாழ்வின் மையத்தைத் தேடுகிறான். பாத்திமா அன்பு நண்பனான சோனாவின் நட்பை. அமலாவும் கமலாவும் தங்கள் பெற்றோரின் பூசலுக்கான காரணத்தை. சோனா எப்போதும் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தேடிக் கொண்டிருக்கிறான். அவனது தெரு நாய் அன்பை;   மொத்தப் படைப்பும் இயற்கையின் அழகின் உட்பொருளைத் தேடிக் கொண்டிருக்கிறது. அழிந்து விடும் உடலுக்குப் பின் உள்ள அழியாத நீரையும் சூரியனையும் வியந்து போற்றிக் கொண்டிருக்கிறது. 

ஆர் ராகவேந்திரன் 

கோவை

மனிதனின் இரண்டு பயணம் – நவீன் சங்கு

இந்த முறை சொல்முகத்தில் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பை தேர்ந்தெடுத்தோம். அனேகமாக தமிழ்நாட்டிலேயே மொரட்டு புத்தகங்களை வாசிக்கும் மொரட்டு இலக்கிய குரூப் நாங்கள் மட்டுமே. 

டால்ஸ்டாய் உருவாக்கும் உலகம் நாம் வாழும் ஆனால் நாம் ரசித்திடாத,கவனித்திடாத அதே யதார்த்த உலகம்.அங்கு வரும் மனிதர்களை நாம் தலை தூக்கி ஆச்சர்யமாக பார்க்கவேண்டியதில்லை,மாறாகா நேருக்கு நேராக ஒரு கண்ணாடியில் பார்ப்பது போல் நம்மையே காண்கிறோம்.இவ்வளவு செரிவுள்ள நாவலை சில பகுதிகளாக பிரித்து பார்த்தால் அதை முழுமையாக உள்வாங்க முயற்சிக்கலாம்.

  1. அழகியல்:

டால்ஸ்டாயினுடைய பலமே அவருக்கு இயற்கையின் மீதுள்ள காதல்தான்.நாவல் ஆரம்பிக்கும் போதே வசந்த காலத்தில்தான் ஆரம்பிக்கிறது.” எவ்வளவு தான் நிலத்தை உருகுலைத்தாலும், எவ்வளவு தான் கற்களை பரப்பி புற்களை அழித்தாலும், எவ்வளவு தான் மரங்களை அழித்தாலும் ,விலங்குகளை பறவைகளை விரட்டினாலும் வசந்தம் வசந்தமாகவே இருந்தது நகரத்திலும்”. அன்பையும் அமைதியையும் ஊற்றெடுக்க வைக்கும் இந்த வசந்தத்தை புனிதமாகக் கருதாமல், ஒருவரையொருவர்‌ அடக்கி எவ்வாறு அதிகாரம் புரியலாம் என்பதையே மக்கள் முக்கியமாக கருதுகிறார்கள் என முதல் பக்கத்திலேயே வருத்தப்படுகிறார்.

இந்த இயற்கையின் காலநிலையை ,நிலகாட்சியை ,மற்ற பொருட்களை விரித்து விரித்து அழகாகவும் நுட்பமாகவும் எழுதுவதுதான் அவருடைய சிறப்பு.அது வெறும் விவரனையோடு மட்டும் இல்லாமல் இறுதியில் ஒரு படிமமாக (Metaphor) மாற்றவதுதான்/மாறுவதுதான் அவர் மற்றவர்களிலிருந்து ஒரு படி மேலே செல்கிறார் என நினைக்கிறேன்.இந்த விவரிப்பு சுவைதான் அவருடைய Signature,அதை சுவைப்பவர்களே அவரை திளைத்து வாசிக்க முடியும்.

இன்னும் எளிதாக புரிந்து கொள்வதற்கு துருக்கி இயக்குனர் Nuri Bilge Ceylan படங்களில் (OT Anatolia,Winter Sleep) வரும் நிலக்காட்சியை,காலநிலையை,இரவை இந்த சுவைக்கு இணையாக சொல்லலாம்.

  1. கதை மாந்தர்கள்:

எவ்வளவு கதாப்பாத்திரங்கள்! இந்த நாவலை நினைக்கும் போது ஒரு மக்கள் நெருக்கடியான சித்திரம் ஒன்று வந்து செல்கிறது.
வெறும் மக்கள்!
பொதுவாக நாவலுக்கு இன்றியமையாததாக கருதப்படும் தொன்மமோ,மரபோ இல்லாமல் வெறும் இரத்தமும் சதையுமான மக்களை வைத்து நிகழ்கால அமைப்பைப் பற்றி எழுதப்பட்ட பேரிலக்கியமே புத்தியிர்ப்பு.இந்த தன்மையே அவரை மாஸ்டராக்குகிறது என சொல்லலாம்.

இதில் வரும் எந்த கதாப்பாத்திரமும் தேவையற்றதாக கருதுவதற்கு வாய்ப்பில்லை.எல்லா கதாப்பாத்திரத்திற்கும் ஒரு பயணம் உள்ளது.பெரும்பாலான முக்கிய கதாபாத்திரத்திற்கு அதன் தற்போதைய நிலை ,அது புள்ளியிலிருந்து தற்போதைய நிலைக்கு மாறியது என்ற Arc ஐ நாம் காணலாம்.

உதாரணமாக, கல்லூரியில் துடிப்பாகவும், புரட்சிகர சிந்தனையோடு இருக்கும் நெஹ்லூதவ் எந்த புள்ளியில் தடம் மாறுகிறான் என்பது.அவனது நேர்மையே அவனுக்கு சுமையாக உள்ளது, மற்றவரிடமிருந்து அன்னியமான உணர்வை ஏற்படுத்துகிறது.அவன் இராணுவத்தில் சேரும் போது அந்த சூழ்நிலையே அவனை மாற்றுகிறது.

மாஸ்லாவா குற்றவுணர்வின்றி விபச்சாரியாக மாறியதற்கு, அவள் கடந்து வந்த பயணத்தை பார்க்கலாம்.
குழந்தை பிறந்த பிறகு அவளது அத்தை தன்னை அடிமைபோல் நடத்துகிறாள், அங்கிருந்து புதிதாக வேலைக்கு செல்லும் இடத்திலும் ஆண் முதலாளிக்கு இரை ஆகிறாள்,பிற்பாடு வயதான எழுத்தாளரிடம் (இவர் டால்ஸ்டாய் ) ஏமாருகிறாள்.இறுதியில் இந்த ஆண்களே மிருகங்கள் தான், இவர்களுக்கு இரையாவதைவிட தேவையானதை விட்டெரிந்து விட்டு தன் பின்னால் திரியும் நாயாக ஆக்கி விடுவதே சிறந்த வழி என ‌விபச்சாரியாகிறாள்.

நெஹ்லுதாவின் கல்லூரி தோழன் நேர்மையான செலேனின் ,தனது வாழ்வில் சிறிய சிறிய தவறுக்கு இடம் கொடுத்து இறுதியில் அறமற்ற புதைகுழியில் மாட்டிக் கொண்டதை காணலாம்.

இது போலவே அரிசியல் கைதியில் ஒரு நபர்,புரட்சிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாமல் கைது செய்யப்பட்டு பிற்பாடு சிறையில் இரு வாலிபர்கள் தூக்கிலிடப்பட்டதை கண்டு புரட்சியில் இறங்கியவர்.

என எல்லா கதைமாந்தர்களுக்கும் ஒரு பயண தீற்றை காண்பிக்கிறார்.அந்த வகையில் இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திலிருந்தும் ஒரு நாவலை விரித்தெடுக்க முடியும்.

  1. உருவகம் (Metaphors):

இதில் வரும் இயற்கை காட்சிகள்,மற்ற விவரணைகள் வெறும் விவரிப்போடு இல்லாமல் அதன் தன்மைகள் கதையோடு ஒத்திசைந்து கதைக்கு பலமாகவும்,சில நேரங்களில் உருவகமாகவும் மாறுவது பரவசம் அடைய வைக்கிறது.உதாரணமாக இதில் வரும் காலநிலையை நெஹ்லுதாவின் வாழ்க்கையோடு,மனநிலையோடு சேர்த்தே பார்க்கலாம்.அவரது பிரபு குல வாழ்கையில் வசந்தமாகவும் மெதுவாக காலநிலை மாறி அவர் சைபீரிய கொடுங்காவல் தண்டனை நோக்கி செல்லும் போது கோடை உச்சத்தில் இருப்பதை காணலாம்.

கோர்ட்டை விவரிக்கும் போது ஜார்ஜ் மன்னர் புகைப்படமும்,கிருஸ்துவின் புகைபடமும் ஒரே நிலையில் இருப்பதை, புனிதமான கோர்ட் என்பதே அதிகாரத்திற்கு உட்பட்டது என எடுத்துக் கொள்ளலாம்.

நெஹ்லுதாவ் அதிகாரிகளின் அறமின்னையை யோசித்த படி ரயிலில் வரும் போது,மழை நீர் பெய்து மலை ஓரங்களில் அடுக்கி வைக்கப்பட்ட காங்ரீட் கற்கலில் உள்ளே நுழையாமல் கீழே வழிந்து ஓடுவதை காண்கிறார்.அதிகார அமைப்பு மனிதத்திற்கு சிறிது கூட இரக்கம் காட்டாமல் இயந்திரமாக அதிகாரத்தை மட்டுமே பாதுகாக்கும் கெட்டி தட்டிப் போன பாறையாக பார்க்கிறார்.

நெஹ்லுதாவ் குற்றம் புரியும் சமயத்தில் பின்னால் ஆறு பனிப்பாறையை உடைத்து குமுறி ஓடுகிறது.குற்றம் முடிந்து விடியும் சமயத்தில் மூடிபனி விலகி தேய்ப்பிறையில் இருள் போன்ற உருவத்தை காண்கிறார், அவருள் இருள் ஆக்கிரமித்து விட்டிருந்தது.

இறுதியில் சைபீரீயாவில் ஆற்றைக் கடக்கும் போது ஒரு கிறுக்கு கிழவனை படகில் காண்கிறார்.நெஹ்லுதாவ் அடைய வேண்டிய இடத்தை ஏற்கனவே அடைந்தவர். அந்த கிறுக்கு கிழவனின் வார்த்தையைக் கொண்டுதான் நெஹ்லுதாவின் நாவலுக்கு பிறகான ஆற்றைக் கடக்க வேண்டிய பயணம் இருக்கும்!
“உனக்கான கிருஸ்துவை நீயே கண்டடை”!

4. புத்தகங்கள்/அறிஞர்கள் மேற்கோள்கள்:

இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டம் முக்கியமானது (1899). பெரும்பாலான ஐரோப்பிய தத்துவாதிகள், அறிஞர்கள் உருவாகி முடிந்த காலகட்டம்.ஷோபனர், வால்டர்,மார்க்ஸ,நீட்ஷே, பெஞ்சமின் போன்றவர்களின் கருத்துகளில் தேவையானவற்றை ஏற்றும், மறுத்தும் நாவல் செல்கிறது.இது போன்று நாவலில் வரும் புத்தகங்கள், அறிஞர்கள், கலைஞர்கள் பற்றிய குறுப்புகளே பெரிய பட்டியல் வரும்.

  1. புத்துயிர்ப்பு:

உண்மையில் இந்த நாவலை வாசிக்கும் போது மற்ற நாவல்களில் உணர்ந்திராத, ஒரு புனித தன்மையை இந்த நாவலில் உணர்ந்தேன். ஏனென்றால் அங்கே என்னையே காண்கிறேன். நெஹ்லுதாவுடைய தூய காதல் நான் கண்ட தூய காதல்,அவருடைய பாவம் என்னுடைய பாவம்,அவருடைய புத்தியிர்ப்பு நான் அடைய வேண்டிய புத்தியர்ப்பு.நெஹ்லுதாவின் வாழ்வு ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வு.

கோர்ட்டில் மாஸ்லாவை கண்ட பொழுதிலிருந்தே நாவல் முழுக்க கொந்தளிப்புடன், அலைகழிக்கப் பட்டு குழப்பத்துடனே அழைக்கிறார்.வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தருணம் வருகிறது, அந்த தருணம் அவன் வாழுகின்ற வாழ்கையின் அறமின்மையை கீழ்மையை அவனுக்கு காட்டுகிறது.அந்த தருணத்தில் அவன் எடுக்கும் முடிவுதான் அவனை ஆன்ம விடுதலையை நோக்கி அல்லது கீழ்மையான வாழ்க்கையிலேயே ஆன்ம செத்த மனிதனாக வாழ செய்கிறது.

அப்படி ஒரு தருணம் தான் நெஹ்லுதாவின் வாழ்க்கையிலும்,மாஸ்லாவின் வாழ்க்கையிலும் வருகிறது.அங்குதான் நெஹ்லுதா தான் பாவம் மேல் நிற்பதும்,மாஸ்லாவா இருளான பாவ வாழ்க்கை வாழ்வதையும் உணர்கிறார்கள்.

அதற்கு மறுநாளே தான் வாழ வேண்டிய வாழ்க்கையை முடிவு‌ செய்து ,தனது பிரபு குல வாழ்க்கையை தவிர்த்து நிலங்களை விவசாயிகளுக்கு தர கிராமங்களுக்கு செல்கிறார்.அங்கு விவசாயிகளுக்கு நடக்கும் அநீதியை காண்கிறார்,பிற்பாடு மஸ்லாவை விடுவிக்க நீதி அமைப்பை நாடும்போது அங்கே உள்ள அலட்சியம்,இயந்திர தன்மையுள்ள அரசதிகாரிகள், சிறையில் சந்திக்க நேரும் நிரபராதிகள் என இந்த ஒட்டு மொத்த நெஹ்லுதாவின் பயணத்தையும் புத்தருடைய பயணத்துடன் சேர்த்து பார்க்கலாம்.

இவ்வாறு தன்னுடைய ஆன்ம விடுதலைக்காக ஆரம்பித்த பயணத்தில் சமூகத்தில் முரண்களை, பிரச்சினைகளை கண்டு அதற்கான காரணத்தையும், தீர்வையும் ஆழ்ந்து யோசிக்கிறார்.

முதலில் விவசாயிகளுக்கு நிலத்தை கொடுத்து அதில் உள்ள சிக்கல்களை சரி செய்கிறார்.பிற்பாடு அரசாங்க அமைப்பின் மேயர்கள், போலிஸ் கார்கள், அதிகாரிகள் போன்றோரின் அலட்சியம்,மனிதமற்ற தன்மையைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.பிற்பாடு இவர்கள் யாவரும் இவர்களின் கடைமையே செய்கிறார்கள்.அதனாலயே எந்த குற்ற உணர்ச்சி மின்றியே தங்களது அதிகாரத்தை செலுத்துகின்றனர் என அறிகிறார்.எந்தவொரு மனிதன் எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இன்றி ஒரு தவறை செய்கிறான் எனில் அவனால் மனித குலத்திற்கு எவ்வளவு பெரிய தீங்கையும் செய்துவிட முடியும்.

இறுதியாக சிறையில் மனித ஊன் உண்ணும் குற்றவாளிகளை காண்கிறார்.கிராமத்தில் சாதாரணமாக உழைத்து வாழும் விவாசிகளை கூட இந்த சிறை கொடியவர்களாக,கீழ்மையானவர்களாக மாற்றிவிட்டதை காண்கிறார்.
இந்த நீதி அமைப்பும்,சிறையும் குற்றத்தை குறைக்கவில்லை மாறாக சாதாரண மக்களை அழுக்கு படிந்த நெருக்கமான சிறைகளில் அடைத்து,அவர்களை உழைக்காமல் சோம்பேறியாக மாற்றி,சமூக பண்புகளை மழுங்கடித்து ஒழுக்கமற்ற விலங்குகளாக விடுதலை செய்கிறது என்பதை அறிகிறார்.

சிறையில் கண்ட அவ்வளவு கொடுமைக்கும், கைதிகளின் தொற்று மரணத்திற்கும் பிறகு வெறுத்து போய் தனது அறையில் சாயும் போது பைபிளை காண்கிறார்.அதில் வரும் பேருதுவின் கேள்விக்கான பதிலைக் கண்டு திடுமென கிளர்ச்சி அடைகிறார்.அவ்வளவுதானா?இவ்வளவு எளிமையா?…

சமுதாயம் அழியாமல் ஒற்றுமையுடன் வாழ்வது நீதி அமைப்பால் அல்ல மாறாக பரஸ்பரம் பகிரும் அன்பால் தான்.

இங்கு யாரையும் தண்டிக்க யாருக்கும் உரிமை இல்லை, சீர்திருத்தம் என்பது இயலாத காரியம்.

மன்னிப்பு மட்டுமே மனித குலத்தின் மீட்சி என்பதை கண்டடைகிறார்.இதை மனித குலத்திற்கே பரப்ப வேண்டும்.எப்பொழுது அனைத்து மக்களும் இதை உணர்கிறார்களோ அன்றுதான் பூமியில் தேவராஜ்யம் நிகழும் என தனது அடுத்த பயணத்தை தொடர்கிறார் நெஹ்லுதவ்!

இந்த நாவலை 23 வயதிற்குள் படிக்கும் எவரும் ஆசிர்வதிக்கப் பட்டவர் என்றே கருதுகிறேன்.

ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற கிளாசிக் நாவல்களை orchestra-வாக அரங்கேற்றம் செய்வது போல், இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த நாவலை ஒரு இசை நாடகமாக கேட்க வேண்டும் என மனம் ஆசை கொள்கிறது!

புத்துயிர்ப்பு வாசிப்பு – ராகவேந்திரன்

1908 இல் டால்ஸ்டாய் “ஒரு இந்துவிற்கு ஒரு கடிதம்’ என்ற கட்டுரையை எழுதுகிறார்.  அதை காந்தி அவருடைய அனுமதியுடன் மொழிபெயர்த்து அகிம்சையின் மூலம் விழிப்படையும் வழியை தென் அமெரிக்காவில்  பரப்புகிறார். காந்தியுடன் ஒரே ஆண்டு கடிதத் தொடர்பு கொண்ட டால்ஸ்டாய் 1910 இல் காலமாகி விடுகிறார். அன்பின் மூலம் விடுதலை என்னும் செய்தியை அனைத்து சமயங்களிலிருந்தும் சாரமாக்கித்  தந்த டால்ஸ்டாய் மிகச் சரியான பக்குவ நிலையிலிருந்த காந்தியிடம் பெரிய மாயத்தைச் செய்து விடுகிறார். சில நாடுகள் விடுதலை அடைகின்றன.   வரலாறு மென்மையான உக்கிரத்துடன் திரும்பி  நகர்கிறது.

இந்த உலகத்தின் முட்டாள் தனங்களை வைத்துக் கொண்டு  என்ன பண்ணுவது என்ற அறக் கேள்வியால் தனது செல்வத்தை ஈகைக்குத் தந்த செயல்பாட்டாளராக இருந்த டால்ஸ்டாய் லட்சியவாதத்தாலும் இதயத்தின் தூய சோகத்தாலும் தனது இலக்கியங்களை நிரப்பி வைக்கிறார். காந்திக்கு அவரது ஆன்மிகம்  உலகளாவிய அன்பு குறித்த நூல்களில்  தான் ஈடுபாடு இருந்தது. 

நாவலின் பயணமும் நாவலாசிரியரின் பயணம் போலவே உள்ளது. நாவல் எழுதிய 11 ஆண்டுகள் கழித்து டால்ஸ்டய் உயிர் துறக்கிறார். ப தீர்க்கதரிசிகள் , சிந்தனையாளர்கள் போலவே குடும்பத்தால் புரிந்து கொள்ளப் படாதவர்- இறுதி நாளில் வீட்டை விட்டு வெளியேறும் டால்ஸ்டாய் அஸ்டாபாவ் ரயில் நிலையத்தில் படுத்துக் கொள்கிறார். ரயிலில் பயணிகளிடம் தான் மிகவும் நம்பிய ஜார்ஜிய பொருளியல் கொள்கைகளை எடுத்துச் சொல்லி வருகிறார். சிறுமை கண்டு பொங்கிய அந்த ரஷ்ய பிதாமகனின் உள்ளக் குமுறல் புத்துயிர்ப்பு.

புத்துயிர்ப்பை வாசிக்கும்போது ஒரு அழகியல் பார்வையுடனோ இலக்கியக் கோட்பாட்டு விமர்சனமாகவோ அணுக  முடியவில்லை. ஒரு குருநிலையில் வாய்பொத்தி அமர்ந்திருக்கும் சீடனின் மனநிலையையே கொள்ள முடிகிறது.

சக மனிதருக்கு அநீதி, கொடுமை இழைத்தல் அவற்றை நியாயப்படுத்த சமயம் மற்றும் அறிவியலைத் துணைக்கொள்ளும் அரசு இயந்திர முறைமைகளும் ஆன்மின் குரலைச் செவி மடுக்கும் ஒரு பிரபு குலத்தவர் அடையும் உள்ளக் கொந்தளிப்புகளும் ருஷ்ய நிலத்தின் மீது உயிர்ப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மனிதன் புரியும் பாவம் – அதன் பின் வரும் மன அழுத்தம் – ,செய்ய வேண்டிய பிழை நிகர் இவையே புத்தியிர்ப்பின் மைய அச்சு

நெஹ்லூதவ்  என்னும் கோமகன் இதன் நாயகன். கத்யுஷா என்னும் பணிப்பெண்ணுக்கு தான் இழைத்த கொடுமைக்கு மனம் குமைபவன். தனக்கு நேர்ந்த அவலத்துக்குப் பின் பிறழ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் கத்யுஷா செய்யாத கொலைக்கு விசாரிக்கப் படுகிறாள். ஜூரிகளில் ஒருவராக பல ஆண்டுகளுக்குப் பின்  நெஹ்லூதவ் வருகிறார். குற்ற உணர்ச்சியால் தூண்டப்படுகிறார். அவளுக்கு உதவ விரும்புகிறார். நீதிபதிகள் மற்றும் ஜூரிகளின் கவனமற்ற தன்மையால் அவளுக்கு சைபீரிய கடின உழைப்புத் தண்டனை கிடைத்து விடுகிறது.  அவளை சந்திக்க அடிக்கடி சிறைக்குச் செல்கிறார். சிறையில் அற்புதமான மனிதர்களையும் அனுபவங்களையும் சந்திக்கிறார். சைபிரியா செல்லும் ரயிலில்  உடன் செல்கிறார். கத்யுஷாவிற்கு வாழ்க்கை தரப் பார்க்கிறார். அவள் வேற ஒரு புரட்சியாளரை  விரும்பும்போது, வாழ்த்தி விலகிவிடுகிறார்.

ஒரு ஈஸ்டர் திருநாளின் உயிர்த்தெழும் கொண்டாட்டம் முடிந்த 2நாளில் கத்யுஷாவிற்கு தீங்கிழைத்து விடும் நெஹ்லூதவ், அவளுக்கு ஒரு புதிய 100 ரூபிள் நோட்டைக் கசக்கித் தரும்போது கத்யுஷா அறத்தின் வீழ்ச்சியை உணர்கிறாள்.

குற்றவியல், தத்துவத் தேடல், இறையியல் குறித்த அறிஞர்களின் அடிப்படை நூல்கள் நூலில் அலசப்படுகின்றன.

சிமன்சன் என்ற புரட்சிக் கைதி மூலம் தனக்குப் பிடித்த, காந்தியைக் கவர்ந்த புல்லுணவு வாதத்தை முன்வைக்கிறார். 

தனி நபர்22நில உடைமையை  ஆதரிக்கும் ஹெர்பர்ட் ஸ்பென்சருக்கும் நிலத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்த அமெரிக்க  பொருளியலறிஞர் ஹென்றி ஜார்ஜ்க்குமான கருத்தியல் பரிணாம வளர்ச்சியை நாவலில் விவரிக்கிறார். 

சோஷலிசம் –ஜார் மன்னரைக் கொன்ற நரோத்னிக்குகள் – விவசாயிகள் மூலம் புரட்சி – கம்யூனிசபுரட்சி வாதம் – மக்களுக்கு வழி காட்டி எப்படி வாழவேண்டும் என்று ஆதிக்கம் செலுத்த வரும் புரட்சியின் தலைவர்கள் – என்று பல  கிளைப்பட்ட – அடுத்த பத்து ஆண்டுகளில் வரவிருக்கும் நவம்பர் புரட்சி     கால கட்ட அரசியல் வரலாற்று விவாதம் ஆழமாக இருக்கிறது. 

நீதிமன்ற முறைமைகள் மிக அப்பட்டமாகச் சொல்லப் ப்டுகின்றன. ஒவ்வொரு நீதிபதியின் நோக்கங்கள், மன அமைப்புகள் அன்றாட அலுவலாக வழக்கை அணுகும் விதம்,  நவீன சமூக அமைப்பின் மீதான விமர்சனமாக அமைகிறது.

நீதிபதிகளில்  மனைவிற்கு பயந்தவர் ஒருவர், அயல் பெண் தொடர்பு கொண்டவர்  ஒருவர், நிரந்தர வயிற்றுக் கடுப்பும் அதைப் போக்கும் புதிய புதிய சிகிச்சைகளும் முட்டாள் தனமான விளையாட்டு நம்பிக்கைகளும் கொண்ட நீதிபதி ஒருவர்.  

முந்திய 2நாள் அதிக போதை அருந்தி விட்டு வழக்கைப் படிக்காமலேயே தனது ‘குற்றம் நிரூபிக்கும்’ வேலையை பெருமையுடன் செய்யும் அரசு வழக்கறிஞர்;  தனது அரிய சேவையை எண்ணி வியந்து கொள்ளும் உறுதிமொழி ஏற்கவைக்கும் பாதிரியார். இவர்களால் ஆனது நீதிமன்றம்.  

மிக நுட்பமான நையாண்டியை நீதிமன்றக் காட்சியில் சமுதாயத்தின் மீது தெளித்துள்ளார் டால்ஸ்டாய் (உதாரணம் : பாதிரியார் மிகத் தீவிரமாக சபதம் செய்ய அறிவுறுத்தும்போது விரலை ஒரு சிட்டிகையைப் பிடித்துக் கொள்வது போலவும் அது விழுந்து விடக்கூடாது என்று கவனம் செலுத்துவது போலவும் சாட்சியாளர்கள் வைத்துக் கொள்கிறார்கள். விரல்களுக்குள் பத்திரமாக எல்லோரும் பாவனை செய்யும் பொருள் எளிமை, நீதி அல்லது குழந்தைமை என்று எடுத்துக் கொள்ளலாம்.  இல்லாத ஒன்றைப் பொத்தி வைத்துக் கொள்ளும் கூட்டம்.     துயரப் பகடியாக விரிகிறது நாவல் 

நீதி மன்றச் செயல்பாடுகள்  எண்பது பக்கங்களுக்கு மேலாக விவரிக்கப் பட்டுள்ளன. முழுக் குற்றப் பத்திரிகையும் எழுதப் பட்டுள்ளது. மரண ஆய்வு மருத்துவ  அறிக்கையும் முழுவதுமாக தரப்பட்டுள்ளது. 

பெண்கள் சிறையின் காட்சிகள் அனுதாபமும் நகைச்சுவையும் கொள்ள வைப்பவை. அங்கே நோயாளிகள், ரகசியமாகக் குடிப்பவர்கள், பித்திகள், குழந்தைகள் உண்டு. சண்டை போட்டுக் கொள்பவர்கள் உண்டு. சிறைச்சாலைக்குள்ளே இருக்கும்  தேவாலயத்தில் ஒரு கைதிச் சிறுவனை சிறைக் கண்காணிப்பாளர் நெகிழ்வதாக நினைத்துக் கொண்டு தூக்கிப் பிடித்துக் கொள்வதும்    சங்கிலியால் பிணைக்கப் பட்ட கைதிகள் ஆண்டவர் முன் வணங்குவதும் நாவலின் உச்சமான கட்டங்கள். 

வறுமையை எழுதும்போது தரையில் பணிந்த உணர்வும் நுண்மையும் கொள்கிறார் ஆசிரியர். .  நெஹ்லுதவின் குழந்தையின் இறப்பை டால்ஸ்டாய்   மிக எதார்த்தமாக ஒரு கிழவியின் குரலில்  எழுதுகிறார். வாசிப்பவர் இதயத்தில் ஈரம் கசிகிறது.  அதை மொழிபெயர்ப்பாளர் தமிழ்ச்சூழலுக்கு அற்புதமாக மாற்றியுள்ளார். 

மத்ரியானாவின் குடிசைக்கு நெஹ்லூதவ் செல்கிறார் அவருக்கு கத்யுஷாவிடம் பிறந்த குழந்தை அங்கேதான் இருந்தது. குழந்தைகளை எடுத்துக் கொண்டு இல்லத்தில் விடும் ஒரு பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்து விட்டிருக்கிறாள் கிழவி.  குழந்தை செத்துப் போச்சு. ஒரே தொட்டிலில் தலை இடித்துக் கொள்ளாமல் நான்கு குழந்தைகளைப் படுக்க வைத்திருப்பாள் அந்த ஏஜன்ட்.  துணியில் சப்புக் காம்பு செஞ்சு தருவாள். அமைதியாய் அவை சப்பிக்கிட்டு இருக்கும்  .  தங்கக் குட்டிகள். .

பயணங்களில் பலவகைகள். விடுதலையைத் தேடிச் சுற்றும் மென்டிகன்ட்களில் டால்ஸ்டாய் பக்தி கொண்டவர். சிறைப் பிடிக்கப்பட்டவர்களின் சைபீரியப் பயணம் அவரை உலுக்குகிறது. அவரது ஆன்மாவின் தேடல் பயணத்திற்கு அதுவே ஒரு உந்துதலாக இருக்கும் 

படைப்பாளனின் சமகால சமூக நிகழ்வுப் பதிவு அவரது உண்மைத்தன்மையைக் காட்டுகிறது . 1880களில் மாஸ்கோ புத்தீர்ஸ்கயா சிறையிலிருந்து நீழ்னி நோவ்கரத் ரயில் நிலையத்திற்கு சிறைக் கைதிகளை சங்கிலி பிணைத்து வெயிலில் ஊர்வலமாக்க் கொண்டு செல்லும் நிகழ்வும் அதில் கைதிகள் இறந்து போவதும் காவியத்துயருடன் சொல்லப் படுகிறது.

கடத்தல் பயணம் என்ற நூலில் (உண்மை நிகழ்வு) ஒரு கைதியின் சிறுமி அழுவதையும் அதன் தந்தையை காவலர் அடிப்பதையும் நாவலில் கொண்டு வருகிறார் ஆசிரியர். அந்தக் குழந்தையை அரசியல் கைதி மரியா பாவ்லன்னா வாங்கிக் கொள்கிறாள். அவளுடன் செய்யும் சைபிரியப் பயணம் கத்யுஷாவிற்கு ஒரு புத்துயிர்ப்பு

நெஹ்லூதவும் சைபீரியப் பயணத்தில் மன மாற்றம் அடைந்து கொண்டே வருகிறார். எந்நேரமும் அவருள் இரக்கமும் கருணையும் நிறைந்திருந்தன. அவளுக்காக மட்டுமில்லாமல் எல்லோருக்காகவும் அவர் நெஞ்சினுள் இந்த இரக்கமும் கருணையும் பெருகிய வண்ணமிருந்தன.  

மதமின்மை வாதத்தின் பிரதிநிதியாகிய கிழவர் “கிறிஸ்துவைக் கொடுமை செய்தது மாதிரி என்னையும் கொடுமை செய்கிறார்கள் “ என்கிறார். நாடு , இடம் , கடவுள் என்று எதுவும் இல்லாத சர்வதேச பிரஜையின் குரலில் கிழவர் கூறுகிறாட்  “ஜார் வேந்தனை ஏன் அங்கீகரிக்கவில்லை? அவர் அவரது ஜார் வேந்தன். நான் எனது ஜார் வேந்தன்” 

கிடைக்கிற போது வேலை செய்கிறேன், கிடைக்காத போது கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறேன்.  என்கிற கிழவர், மன்னிக்க ஒன்றும் இல்லை; மனம் புண்படும்படி ஒன்றும் செய்யப்பட்டு விடவில்லை;  என் மனத்தைப் புண்படச் செய்வது முடியாத காரியம் என்கிறார். 

இறைவனின் பெயரால் இறைவடிவங்களை வதைப்பதும் அறிவியலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு அறிவுத் தேடலைச் சிதைப்பதும் “ மக்கள் இயக்கம் “ என்ற அடைமொழியுடன் மக்களைக் கொல்வதும் மானுட வரலாறு முழுவதும் உள்ளது. கிழவர் மிகக் குறுகிய பகுதியில் வருகிறார். மனசாட்சியின் குரலாக  வருகிறார் . “அஞ்சுதல் யார்க்கும் இல்ல;  அஞ்சவருவதும் இல்லை” என்ற ஒலியாக; “நாமார்க்கும் குடியல்லோம் “ என்பதன் பொருளாக. 

கிரிலித்சோவ் என்ற சைபிரிய தண்டனைக்  கைதி காசநோயால் சிறிது சிறிதாக மரணம் அடைவது பயணத்தின் முக்கிய இழை . அவரது இறப்பைப் பார்த்துக் கொண்டே வரும் நெஹ்லூதவிற்கும் உள்ளே ஏதோ ஒன்று செத்து விடுகிறது.     கத்யுஷா – பெரும் போராட்டத்திற்குப் பின் தன் மரியாதையையும் செல்வத்தையும் விட்டு அவரால் தண்டனைக் குறைப்பு பெற்றவள் – தியாகம் செய்வதற்காக சிமன்சனுடன் வாழ முடிவு செய்கிறாள். நெஹ்லூதவின் காதல் செத்து விடுகிறது ஆனால் மானுட அறம் என்னும் பரலோகத்தில் விழித்தெழுகிறார். 

பைபிளை கைதிகளுக்கு வினியோகம் செய்யவரும் ஆங்கிலேயர் கந்தலுக்காக அடித்துக் கொள்ளும் கைதிகளிடம் ஆண்டவர் பற்றிச் சொல்வதும் அதற்கு கைதிகளின் பதிலுரையும் துன்பச் சிரிப்பை உண்டாக்குபவை. 

கைதிகளை ‘சீர்திருத்த’ வந்த பாதிரியார் சிறைக் கொடூரங்களைக் கண்டு கடும் சோர்வடைகிறார். அவர் அரசின் – மத அதிகாரத்தின் பிரதிநிதி. ஆனால் அவருடன் பார்வையாளாராக வந்த நெஹ்லூதவ், தன் குற்றம் களையும் செயல்களின் பயனாக விவிலியத்தின் உண்மையை உணர்ந்து விடுகிறார். டால்ஸ்டாய்க்குப் பிடித்த மலைப் பிரசங்கம் நெஹ்லூதவின் உள்ளத்திலிருந்து புத்துணர்ச்சியை வெளிக்கொண்டு வருகிறது. 

எளிமையான உள்ளம் படைத்தவர்கள் ,  பாலகனைப் போன்றர்கள் –இவர்களுக்கான இடத்தை அடைகிறார் நெஹ்லூதவ். மதத்திலிருந்து இறைத்தன்மையை வடிகட்டும் வழியைக் கண்டடைகிறார். அவருக்கான கிறிஸ்து புத்துயிர்க்கிறார். 

நாவலில் டால்ஸ்டாயின் கையில் ஏசு வந்து எழுதிய இடம் : 

சாராயம் விற்றுச் சிறையில் இருக்கும் பெண்ணிடம் “ஏன் சாராயம் விற்றாய் நீ? என்று விசாரிக்கிறார்கள். அவள் பதில் – நல்லாயிருக்கே கேள்வி !- பிறகு நான் எப்படி என் பிள்ளைகளுக்குச் சோறு போடுவேனாம்? என்று அவள் தனது சிறுமியின் தலையில் பேன் எடுத்துச் சென்றாள்.

சிறைச்சாலையில் நடைபெறும்  மத வழிபாடு குறித்த டால்ஸ்டாயின் விமர்சனம் ஏசுவின் வழியிலிருந்து விலகி அவரை வழிபடும் குருமார் – சடங்குகள் – அர்த்தமற்ற பேச்சு முறைகளைக் கண்டிக்கிறது. இந்த இடத்தில் ஆசிரியர் தனது அங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு  அனார்க்கியவாதத்தை முழங்குகிறார். 

சிறையில் பெருங்கூச்சலுக்கு இடையில் நெஹ்லூதவ் – கத்யுஷா இருவரும் பேசிக்கொள்வது அழகிய பகடி ஒரே நேரத்தில் பல உரையாடல்கள் முயங்கி குழப்பமாகும் இடம்.  . இது சொந்த அனுபவத்தில் ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. தவறுதலாக கைது செய்யப்பட்ட ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றபோது. முதன் முதலில் பார்வையாளரைக் காணும் ‘கைதி’யின் மன ஓட்டத்தை நினைத்தால் பதறுகிறது. 

வேரா போகதூஹவ்ஸ்கயாவின் புரட்சிக் கட்சிச் செயல்பாடுகள், ஷூஸ்தவாவின் தியாகம், இவர்களுடன் தொடர்பு கொள்ளும் கத்யுஷாவிற்கு புதிய மறுமலர்ச்சி ஏற்படுகிறது. நெஹ்லூதவிடம் கொண்ட உயரிய அன்பினால் அவரது கரத்தைத் தட்டி விடும் அவள்    சிமன்சனின் அன்பை ஏற்றுக்கொள்கிறாள். எந்த நிலையிலிருந்தாலும் அவள் உலகத்தின் கள்ளமற்ற குழந்தைதான். 

ஆசிரியரின் ஆளுமையை நெஹ்லூதவில் விரவி விட்டிருக்கிறார்.  தனது நிலத்தை பண்ணைத் தொழிலாளர்களின் கவனிப்பில் விட்டு லாபம் பகிர்ந்து கொள்ளும் கொள்கையை முன்வைக்கும்  முடிவை மிகுந்த ஊசலாட்டங்களுப்பின் எடுக்கிறார் நெஹ்லூதவ். கத்யுஷாவிற்கு உதவுவது அவள் புறக்கணிக்கும்போது சினம் கொள்வது, அவள் பற்றி தவறான தகவல்கள் வரும்போது வெறுப்பது, அதையும் மீறி அவளுக்கு உதவி செய்வதை தனது பெரும் கடமை என்று மனதிற்குப் பதிய வைப்பது என்று நெஹ்லுதவின் மனப் பாய்ச்சல்களைக் காட்சிப் படுத்தி உள்ளது அழகு

கத்யுஷாவை இறைவனின் தூய காதலியாகவே நிறுத்திவைத்துள்ளார் டால்ஸ்டாய் (அவளது ஜீவன் அனைத்துமே தூய்மை, கன்னித்தன்மையதான காதல் ஆகிய தலையாய இரு பண்புகளைக் கொண்டிருந்தன –அந்தக் காதல் அவரிடம் (நெஹ்லூதவ்) அவளுக்கு இருந்த காதல் மட்டுமல்ல – அவருக்கு இது தெரிந்தது – யாவரிடமும் யாவற்றிடமும் அவளுக்கிருந்த காதலுமாகும். )

டால்ஸ்டாயின் ‘ஒரு ஹிந்துவுக்கான ஒரு கடிதம்’ புத்தர், விவேகானந்தர்  கிருஷ்ணரின் மேற்கோள்களை முன்வைக்கிறது. குறளையும் எடுத்தாள்கிறார். ஆறு குறள்களைக் குறிப்பிடுகிறார். 

இன்னா செய்தாரை ஒறுத்தல், பிறர்க்கின்னா முற்பகல், இன்னா செய்தார்க்கும் இனியவை ,  அறிவினால் ஆகுவதுண்டோ முதலிய குறட்பாக்கள். மன்னிப்பை – மானுட அன்பை வலியுறுத்தும் பாக்கள் – விவிலியம் சொல்லும் அன்பு – கீதை தரும் அன்பு – 

 ஏழு முறை அல்ல, எழுபது முறையும் உன் சகோதரனை மன்னிப்பாய் என்னும் விவிலியச் சொற்றொடர் நெஹ்லூதவிற்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. 

கத்யுஷாவின் மன்னிப்பு, நெஹ்லூதவின் மன்னிப்பு, சிறையில் பாலுக்காக அழும் குழந்தைகளின் மன்னிப்பு. பெரும் மாளிகையை விட்டு மனித அன்பின் ஊற்றைத் தேடி இரவில் ரயில் நீத்த மாமனிதன் இந்த உலகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே அளிக்கும் மன்னிப்பு.

புத்துயிர்ப்பு தரும்   செய்தி – மன்னித்து விடு தேவன் உன்னை மன்னித்தது  போலவே.

ஆர் ராகவேந்திரன்

கோவை

புத்துயிர்ப்பு வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

அன்னா கரீனினா, போரும் அமைதியும் என மாபெரும் இரண்டு செவ்வியல் படைப்புகளுக்குப்
பிறகு, ஏறத்தாழ பத்தாண்டுகள் இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய 78 ஆவது வயதில்
“புத்துயிர்ப்பு” நாவலை தல்ஸ்தோய் எழுத நேர்ந்த சந்தர்ப்பமே ஒரு புனைவாக
எழுதப்படக்கூடிய சாத்தியம் கொண்டது. ரஷ்யாவில், மதத்தின் வெற்றுச் சடங்குகள், மூட
நம்பிக்கை, பழமைவாதங்களைக் கடந்து, அறத்தின் பால் நிற்கும் பிரிவினர் ”டுகோபார்ஸ்”.
அரசாங்கமும், ருஷ்ய சமூகமும் தந்த அழுத்தத்தால், 1898ல் 12000 ”டுகோபார்ஸ்” குடும்பங்கள்,
ரஷ்யாவிலிருந்து கனடாவுக்கு அகதிகளாக பயணப்படுகின்றனர். கிட்டத்தட்ட 6000 மைல்
தொலைவு கொண்ட அப்பயணத்துக்கு உதவும் பொருட்டு தல்ஸ்தோய் அவர்களால், 1899 இல்
எழுதப்பட்டது “புத்துயிர்ப்பு”. தல்ஸ்தோயின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவமும்,
வழக்கறிஞராய் இருக்கும் அவருடைய நண்பர் சொன்ன ஒரு உண்மைச் சம்பவமும்,
இந்நாவலுக்கான தூண்டுதல்கள். இந்நாவலின் பேசுபொருளினாலும், “டுகோபார்ஸ்” மீதான
தல்ஸ்தோயின் பரிவினாலும் சமூகத்தின் அழுத்தங்கள், வழக்குகள் இவற்றுக்கிடையேதான்
இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
*
ஒரு குற்றவழக்கு விசாரணைக்காக, சான்றாயர்களுள் ஒருவராக வரும் கோமகன்
நெஹ்லூதவ், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வேசை மாஸ்லவாவின் வாழ்க்கை தடம்
மாறிப்போக தன்னுடைய இளவயதில் தான் செய்த காரியமே காரணம் என எண்ணுகிறார்.
அவரது குற்றத்துக்கான விசாரணையையும், அதற்கான பரிகாரத்தையும் அவரது மனமே
தேடுகிறது. அத்தேடலின் நீட்சியாக, கொலைக் குற்றத்துக்காக சைபீரிய குற்றத்தண்டனை
விதிக்கப்படும் மாஸ்லவாவுக்காகப் பரிந்து, மேல்முறையீடு உள்ளிட்ட வாய்ப்புகளை
பயன்படுத்தும் நெஹ்லூதவ், ஒரு கட்டத்தில், அவளைத் தொடர்ந்து சைபீரியாவுக்குச்
செல்கிறார். இதற்கிடையே, தன்னுடைய நிலங்களை விவசாயிகளுக்கே குத்தகைக்கு
விடுகிறார், அவற்றின் மீதான தன் உரிமையையும் துறக்கிறார், வாய்ப்புக் கிடைப்பின்
மாஸ்லவாவை மணந்து கொள்ளவும் எண்ணுகிறார். இவற்றின் மூலமாக, இளவயதில் லட்சிய
வேட்கை கொண்டிருந்து, பின்னர் ராணுவ வேலையால் அதிகார நிழலின் கருமை படிந்து
போன தன்னுடைய ஆளுமையை சீர்படுத்திக்கொள்ள முயல்கிறார் நெஹ்லூதாவ். தொடர்ந்து
நாவல் முழுவதிலும் நெஹ்லூதாவின் எண்ணங்களும் மனமாற்றங்களும் சொல்லப்பட்டுக்
கொண்டே வர, உயிர்த்தெழுதலை நோக்கிய நெஹ்லூதாவின் பயணம் என்பதாகவும்
இந்நாவல் எனக்குப் பொருள்படுகிறது.


இப்பெரும் படைப்பு, ஒட்டுமொத்த சமூகத்தின், நீதி/அதிகார அமைப்புகளின் பார்வைகள்,
செயல்பாடுகளை ஒருபுறமாகவும், அதற்கிணையான மறுபுறமாக தனிமனிதனின்
மனசாட்சியை, அவனது அந்தரங்க தன்விசாரணையையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
சந்தர்ப்ப சூழ்நிலைகள், புற அழுத்தங்கள், அலட்சியங்கள் என பற்பல காரணிகளால்தான்
விடுதலையோ தண்டனையோ விதிக்கப்படுகின்றது. ஒரு கொலைக் குற்றம், அதன்மீதான விசாரணை, முறையற்ற தீர்ப்பு, சிறை, கைதிகள், அவர்களது வாழ்க்கை,
குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்களை அதிகார வர்க்கம் நடத்தும் விதம் என சமூகத்தின், நீதி மற்றும்
அதிகார மையங்களின் இருண்ட பக்கம் மிக வலுவாகக் காட்டப்படுகிறது. அதே சமயம்,
மாஸ்லவாவின் வாழ்வு பிறழ்ந்துபோக தான் ஒரு முதன்மைக் காரணம் என எண்ணும்
நெஹ்லூதவ் தன் ஆன்மவிசாரணையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்பிவிட முடிவதில்லை.
தன் மனசாட்சியின் உந்துதலால், தன்னுள் புதைந்துபோன இளவயது, லட்சியவாத
நெஹ்லூதவை மீட்டெடுக்க, சாமனிய மனிதனுக்கே உரிய அலைக்கழிப்புகளுடனே தனக்கான
உயிர்த்தெழுதலை நோக்கி அவர் பயணப்படுகிறார். வெளிப்புற விசாரணைகள் அனைத்துமே
தர்க்கம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைய, ஆத்மவிசாரணை முழுவதும் அறத்தை
அச்சாகக் கொண்டு அமைகின்றது.
*
நாவலின் துவக்க அத்தியாயங்களில் காட்சிப்படுத்தப்படும் நீதிமன்றமும் அதன்
செயல்பாடுகளும் விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.
தலைமை நீதிபதி முதற்கொண்டு அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான சொந்த
அலுவல்களும் அதற்பொருட்டு விரைவிலேயே வழக்கை முடிக்க வேண்டிய எண்ணமும்
விசாரணையில் செலுத்தும் ஆதிக்கம் மாஸ்லவாவுக்கு எதிராகவே முடிகிறது. பிராசிக்யூட்டர்
அசுவாரஸ்யத்துடன் இவ்வழக்கு விசாரணைக்கு தயாராதல், தன்னுடைய தரப்பை மாஸ்லவா
சொல்லிக் கொண்டிருக்கும்போது தலைமை நீதிபதி தன்னருகே இருக்கும் இரண்டாம்
நீதிபதியுடன் பேசிக்கொண்டிருப்பது, விசாரணையின் வாதங்களை அலட்சியத்துடன் கேட்கும்
நீதிபதிகள் என விசாரணையில் நிலவும் முறையின்மை காட்டப்படுகின்றது. சான்றாயர்களின்
கவனக்குறைவால் விடுபட்டுப்போகும் ஓரிரு சொற்களால் மாஸ்லவாவுக்கு எதிராக
தீர்ப்பளிக்கப்படுவது வரை இத்தவறுகள் நீள்கின்றன. முடிவில், விசாரணையால் அல்ல,
சந்தர்ப்பத்தினாலேயே ஒரு வழக்கின்/தீர்ப்பின் போக்கே மாறுவதைக் காண்கிறோம்.
நெஹ்லூதாவின் இளமைக்காலத்தில் இருக்கும் லட்சிய வேட்கை தன்னுடைய சொத்துக்களை
விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அளவுக்கு ஆழமானது. அவனுடைய தனிப்பட்ட
ஆளுமையில் பெரும்பகுதி அவரது வாசிப்பினால் விளைந்தது. ஆரம்ப காலத்தில்
மாஸ்லவாவுடனான அவனது நெருக்கம் அவன் சுற்றத்துக்கு கவலை அளிப்பதும் அந்த
லட்சிய வேட்கையின் நீட்சியே. மூன்றாண்டு கால ராணுவ சேவையும் அதிகார தோரணையும்
தன்னை நம்பும் நெஹ்லோதவ்வை பிறரை நம்பும் நிலைக்கு “உயர்த்துகின்றன”. நாவலின்
பிற்பாதியில் சைபீரிய சிறைக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் வழியில், ஒரு கர்ப்பிணிக்
கைதி நடத்தப்படும் விதமும், தகப்பனிடமிருந்து ஒரு பெண் குழந்தை பிரிக்கப்படும் விதமும்,
சாமானிய மக்களிடையே பெரும் சஞ்சலத்தை உண்டாக்குகின்றன. அதே விசயங்களைக்
கண்ணுறும் அதிகாரிகள் அதை எளிதாகக் கடந்து போவதும் இதே வகையான தரம்
உயர்த்தப்பட்டதன் விளைவுகளே.

இப்படி நீதிபதிகள் முதற்கொண்டு, அதிகாரிகள் வரை தத்தம் எல்லைக்களுக்குற்பட்ட
நெறிமீறல்களைக் கைக்கொள்ளும்போது, தன்னில் ஒருவனை குற்றவாளி என தண்டிக்கும்
உரிமையை ஒரு சமூகம் தானாகவே இழக்கிறது. இதே கருத்தை சான்றாயர்களில் ஒருவராக
வருபவரும், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுதலைத்
தீர்ப்பை நாடுபவருமான “அர்த்தேல்ஷிக்” முன்வைக்கிறார். நாவலில் பலதரப்பட்ட
சந்தர்ப்பங்களில் நாம் காண நேரிடும் பலதரப்பட்ட மக்களும் அவர்தம் செயல்பாடுகளும்,
அவர்களை வெளியிலிருக்கும் குற்றவாளிகள் என எண்ணவைக்கின்றன. அதேபோல ஒரு
வலுவான சிபாரிசுக் கடிதம் பல நாட்களாக சிறையில் வாடிய கைதியை
விடுவிக்கப்போதுமானதாக இருக்கும்போது, கைதிகள் அனுபவிக்கும் தண்டனை என்பது
அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்காகவா அல்லது அவர்களுக்கு சரியான சிபாரிசு
கிடைக்காத குற்றத்துக்காகவா எனும் எண்ணம் எழுகிறது.


மனிதரில் நிலவும் கீழ்மை, அதிகார வர்க்கத்தில் மட்டுமல்ல எல்லாவிடங்களிலும் நீக்கமற
நிறைந்திருக்கின்றது. சாதாரண குற்றத்தண்டனைக் கைதிகளைப் போலன்றி, வஞ்சிக்கப்படும்
மக்கள் பக்கம் நின்று அதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் கைதிகளுக்குள்ளும் தன்னையும் தன்
நலத்தையும் மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கும் ”நவதுவோரவ்” வகையினரும் இருப்பது
அதற்கொரு நல்ல உதாரணம்.


நெஹ்லூதவ்வைக் காட்டிலும் மிக வலுவான பாத்திரமாக மாஸ்லவா விளங்குகிறாள்.
இத்தனைக்கும், நாவல் முழுவதிலும் தன் தரப்பை சரி தவறுகளுடன் நெஹ்லூதவ்
முன்வைத்துக் கொண்டே இருக்க, மாஸ்லவாவின் மனக்குரல் எங்கும் பெரிய அளவில்
ஒலிப்பதில்லை. தன்னை தேடிவந்த கோமகன் யாரென தெரிந்து கொள்ளும் ஆரம்ப
சிறைச்சாலை சந்திப்புகளும், மருத்துவமனையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தன்னை
நெஹ்லூதவ் சந்திக்கும் தருணமும் என மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே சற்றே
தன்னிலையை இழக்கிறாள் மாஸ்லவா. தனக்கு உதவக்காத்திருக்கும் நெஹ்லூதவ்விடம் பிற
சிறைக்கைதிகளின் சிக்கல்களைச் சொல்லி அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சிப்பதும், தனக்கு
விடுதலை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் நெஹ்லூதவ்வை மணக்கும் ஆசையை கைவிட்டு
அரசியல் கைதி “சிமன்சனுடன்” செல்ல எண்ணுவதும், மாஸ்லவாவை ஒரு வலுவான
பாத்திரப் படைப்பாக மாற்றுகின்றது.


நாவலில் வரும் இடங்களைக் குறித்த சித்தரிப்புகளும், துணைக் கதாப்பாத்திரங்களைப் பற்றிய
விவரணைகள், அவற்றை ஒரு புனைவாகக் கூட விரித்தெழுதக்கூடிய சாத்தியங்களைக்
கொண்டிருப்பதும், இந்நாவலுடன் நம்மைப் பிணைத்துக்கொள்ள, நம்முள் விரித்தெடுக்க
உதவியாய் இருக்கின்றன.


ஒட்டுமொத்தமாக இந்நாவல் நமக்குச் சித்தரித்துக்காட்டும் உலகம் வேறொரு நாட்டிலோ,
பழைய காலகட்டத்திலோ இருப்பதாகவோ என்னால் எண்ண முடியவில்லை. இந்நாவல்
கேள்விக்குட்படுத்தும் தண்டனை vs ஆத்ம விசாரணை என்னும் கருத்து எங்கும் என்றும்இ ருப்பதுவே. அவ்வெண்ணமே, காலத்தைக் கடந்து எப்போதைக்குமான ஒரு செவ்வியல்
படைப்பாக “புத்துயிர்ப்பு” நாவலைக் கருத வைக்கின்றது.

பின்குறிப்பு:
இந்நாவல் உருவான பின்புலத்தைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை,
அவருடைய “எனதருமை டால்ஸ்டாய்” புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அக்கட்டுரை, அவரது
வலைத்தளத்திலும் வாசிக்கக்கிடைக்கின்றது. சுட்டி : https://www.sramakrishnan.com/?p=2135