செடல் நாவல் வாசிப்பனுபவம் – விக்ரம்

எழுத்தாளர் இமையத்தின் செடல் நாவலை எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் அணுக்கமானதாக உணர்கிறேன்.  செடல் வாசிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக வாசித்திருந்த பைரப்பாவின் குடும்பம் சிதைகிறது – அதுவும் நஞ்சம்மா என்ற மையப்பாத்திரத்தின் வழியாக – ஒரு குடும்பத்தை சரியான பாதையில் நிலை நிறுத்த விரும்பும் நல்லபெண் –அவளது சகிப்புத்தன்மை, முயற்சிகள், துயரங்கள் – இறுதியாக ஊழால் முறிக்கப்பட்டு இறக்கிறாள்.  குடும்பம் என்ற அமைப்பு பெண்ணால் இருக்கிறது.  ஒரு பெண்ணும் இல்லாமல் ஆண்கள் மட்டுமே இருப்பது குடும்பம் அல்ல.  நஞ்சம்மாவின் மரணத்துடன் அந்த குடும்பம் சிதைந்து விட்டது.  அவளது கணவன் உயிருடன் இருக்கிறான்.  அவளது கடைசி மகன் பிளேக் நோயிலிருந்து தப்பியவனாக, பல இன்னல்களைக் கடந்து எஞ்சுகிறான்.  எனினும் இணைத்து நிலைநிறுத்தும் பெண் அங்கு இல்லை.  அவனுக்கு அதிகபட்ச நல்ல வாய்ப்பாக ஒரு நல்ல மனிதருடன் –அவர் ஒரு துறவி- அவன் செல்ல நேர்கிறது.  அந்த வகையில் –விஸ்வன் என்ற அந்த சிறுவனுக்கு ஆசிரியர் அளித்த வழியைக் கொண்டு – ஒருவகையில் நாவல் பாசிட்டிவாகத் தான் முடிக்கப்பட்டிருக்கிறது எனலாம்.  எனினும் இவ்வாறு நல்ல முடிவு மோசமான முடிவு என்றெல்லாம் எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தமானது, ஒரு இலக்கிய வாசகனுக்கு உரியதல்ல எனினும்….

பெண்ணை மையப்பாத்திரமாக கொண்டது.  பெண்ணின் இன்னல்களை கூறுவது என்னும் அந்த வகையில் மட்டும் செடலை குடும்பம் சிதைகிறதோடு ஒப்பிட்டுக் கொள்கிறேன்.  மற்றபடி நஞ்சம்மாவிற்கும் செடலுக்கும் நற்பண்புகளைக் கொண்ட பெண்கள் என்பதற்கு அப்பால் வேறு ஒற்றுமை இல்லை.  சமூக அடுக்குகளில் மேலே இருக்கும் இடத்தில் நஞ்சம்மா இருக்கிறாள்.  செடல் அந்த அடுக்கின் கீழே இருக்கிறாள்.  அதற்கே உரித்தான சாதக பாதகங்கள் இருவருக்கும் உண்டு.

செடல் வாசித்து வந்தபோது அவளை அழைத்துச் சென்று அவள் கூத்துக் கலைஞராக ஆக காரணமாக இருக்கும் பொன்னன் என்ற பாத்திரம் இறந்தவுடன் நாவலை சற்று நிறுத்தி – ஒரிரு நாட்கள் இடைவெளி விட்டு – தொடர்ந்தேன்.  குடும்பம் சிதைகிறது நஞ்சம்மா போல செடலுக்கும் அடுக்கடுக்காக – அதை விடவும் அதிகமான – தாளமாட்டாத துன்பங்ளை ஆசிரியர் வைத்திருக்கப் போகிறார் என்ற அச்சம் தான் காரணம்.  ஆனால் அப்படி எதுவும் இல்லை.  ஆசிரியர் இமையம் செடலுக்கு அதிகபட்ச சலுகையுடன், அவளுக்கு வழங்கப்பட அதிகபட்ச சாத்தியமுள்ள ஒன்றைத் தந்தே நாவலை முடித்தது மகிழ்ச்சியளித்தது.

ஒரு கூத்து கலைஞராக செடல் எதிர்கொள்ளும் எல்லா இடர்களுக்கும் அப்பால் அவள் கலைத் தெய்வத்தால் அருளப்பட்டவள்.  செல்லியம்மனுக்கு பொட்டுக் கட்டிவிடப்பட்ட பெண்ணான அவள் அப்படி கலையில் ஈடுபடுவதும் புகழடைவதும் –இறுதியாக கலையே தன் வழி என்று பயணத்தைத் தொடர்வதும் செல்லியம்மனின் அருள்தான்.  அவளுக்கான தெளிவை பாஞ்சாலி என்ற மூத்த கலைஞர் – அவளுக்கும் முன்னதாக அக்கலையில் இருப்பவர் – வழங்குகிறார்.  தன் கலைப்பயணத்தில் எதிர்கொண்ட துன்பங்களை கருத்தில் கொண்டிருக்கும் – தன் வாழ்க்கை குறித்து வருத்தம் கொண்டிருக்கும் செடலுக்கு, அக்கலையின் உயரிய தன்மையை கவனப்படுத்துகிறார் பாஞ்சாலி.  எத்தனை இடர்களுக்கும் அப்பால் ஒரு கலைஞராக இருப்பது எவ்வகையிலும் ஒரு நற்பேறு தான்.  செடல் ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் பொன்னனுடன் வந்திருந்தாலும், ஒரு விபத்து போல கூத்துக் கலைக்குள் நுழைந்திருந்தாலும், கலை அவளுடன் இயற்கையாகவே இயைந்திருக்கும் ஒன்று.

பைரப்பாவின் நஞ்சம்மாவும் இமையத்தின் செடலும் சமூக நடைமுறை கட்டுத்திட்டங்களும் ஊழும் அவர்கள் மீது எத்தகைய சூழ்நிலையைத் திணித்திருந்தாலும், தங்களுடைய தனிப்பட்ட மன இயல்புக்கு ஏற்ற  தன்னறத்தை இறுதி வரை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்கிறார்கள்.  தன் உடலின் மீது வேட்கை கொண்டவர்களை சமாளித்து தன்னை தற்காத்துக் கொள்கிறாள் செடல் (வீரமுத்து உடையார் என்னும் பணக்காரர் ஆனாலும் சக கலைஞனான ஆரானாக இருந்தாலும்)

சக கலைஞர்களாக அவளுடன் பயணிக்கும் பாத்திரங்களின் வாழ்வும், அவளது தோழியான விருத்தாம்பாளின் வாழ்வும் சொல்லப்படுகிறது.  செடலை மையம் கொண்டு பயணிக்கும் நாவலில் அப்படி தோன்றும் அத்தனை பாத்திரங்களும் தம்மளவில், சில பக்கங்கள் எனினும், தம் இயல்பின் அல்லது வாழ்வின் முழு தோற்றத்தைக் காட்டிச் செல்பவை ( செடலை வெறுக்கும் பொன்னனின் மனைவி, அவள் மீது அன்பு கொண்ட நல்ல சக கலைஞனான விட்டம் என.

செல்லியம்மனுக்கு பொட்டுக்கட்டி விடப்படும் சிறுமி செடலுடன் வசிக்கும் கிழவி பாத்திரத்தையும் முக்கியமாக குறிப்பிட வேண்டும்.  வயிற்றுப்பாட்டுக்கு ஒரு வழி என்று அதை அவர் ஏற்றிருந்தாலும் தன் இறுதிவரை செடலுக்கு ஒரு பாதுகாவலராக விளங்குகிறார்.

செடல் நாவலின் மொழி வட்டார வழக்கு என்றாலும் வாசிப்பிற்கு அது தடையாக இல்லாமல் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.  மொழியின் மீதான ஆசிரியரின் ஆளுமை –கையாளும் திறன், செடலின் சுற்றுப்புற இயற்கை சூழல் வர்ணனை இவற்றைக் குறிப்பிட வேண்டும்.  குடும்பம் சிதைகிறது அத்தகைய வர்ணனைகளில் சிக்கனமானது.

செடலை மிகச் சிறந்த நடனக் கலைஞராக, நடிகையாக, பாடகராக, கூத்து என்னும் நிகழ்த்துக் கலையின் உச்சத் திறன் பெற்றவராக ஆசிரியர் உறுதியாக நிறுவுகிறார்.  அதன் பொருட்டு அக்கலை குறித்து விரிவான சித்திரத்தை அளிக்கிறார். 

துவக்கத்தில் சொன்ன ”எனக்கு தனிப்பட்ட அணுக்கம்” என்பது என்னவென்றால் செடல் நாவலில் செடல் ஒரு சில பக்கங்கள் தன் மாணவர்களுக்கு நாடகம் கற்பிக்கிறாள்.  நடனம், நடிப்பு, வசன உச்சரிப்பு, என.

எனக்கு நண்பர் நரேன் உள்ளிட்ட மெய்களம் நாடகக்குழு நண்பர்களுடன் திரு. இளங்கோ குமாரவேல் அவர்களுடன் செலவிட்ட நாட்கள் நினைவு வந்தது.  சில நாட்கள் அவருக்கு மாணவனாக இருக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.  பல ஆண்டுகள் நாடகக் கலையில் இருப்பவரான அவர் – கூத்துப்பட்டறையில் இருந்தவர் – தெருகூத்து நிகழ்த்தியவர்.  நல்ல ஆசிரியர்.  செடல் கற்பித்த சில அவர் கற்பித்தது போலவே இருந்தது.  ஒரு நெகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியது.

சென்னை மொழியில்  அவர் ”எப்படி சொல்லுவீங்கோ? சொல்லுங்க” என்பார் வசனத்தை உச்சரிக்கச் செய்து.. .மீண்டும் மீண்டும் கூறச் செய்து திருத்தி…”சத்தமா….இன்னும் சத்தமா…இன்னும் சத்தமா”

அவரது வீட்டில் நாங்கள் வசனங்களை கத்தியபோது பக்கத்து அறையிலிருந்து அவரது மகள் கதவைத் திறந்து கொண்டு வந்து பார்த்துவிட்டு சிரித்துவிட்டு சென்றார்.  குமாரவேல் ”என் மகள்” என்று அறிமுகம் செய்தார்.  ”இந்த மாறி நாடகம் பிராக்டீஸ் பண்ணி ரொம்ப நாளச்சி…முன்னெல்லாம் இப்படித்தான் கத்திகிட்டு இருப்போம்.  அதுதான் ரொம்பநாள் கழிச்சி…சத்தம் கேக்குதேன்னு வந்து பார்த்து சிரிச்சிட்டுப் போறா” என்றார்.  இச்சமயத்தில் அவருக்கு நன்றி உணர்கிறேன்.  அவரை ஆசிரியராக அமைத்துத் தந்த ஆசிரியர் ஜெயமோகனுக்கு என் நன்றி.  வாய்ப்பளித்த இனிய நண்பர் நரேனுக்கு என் நன்றி.

பல காலம் தியானம் செய்பர்களுக்கு எப்போதேனும் ”சட்டோரி” எனக் கூறப்படும் ஒருவித மனதிற்கும் உடலுக்கும் மீறிய ஆனந்த அனுபவம் ஏற்படும்.  அது எப்போது நிகழும் எப்போது நிகழாது என்று சொல்ல முடியாது.  ஆனால் தியானிப்பவர்களுக்கு அது நிகழும்.  ஒரு மின்னல் கீற்றைப்போல.  அது அருள்.  ஒரு சுவை காட்டல் போல.  பாதையில் தொடர்ந்து பயணி என்று இறை தெரிவிப்பதாக அதைக் கொள்ளலாம்.

கலைஞர்களுக்கு அதையொத்த உயர்நிலை – கலையின் வழி நிகழ்கிறது என்று எண்ணுகிறேன்.  எந்த கலைஞனும் கலையை உதறிவிட முடியாமல் செய்வது அதுதான்.  நிகழ்த்து கலை, எழுத்து கலை என கலைகளிலும் அது நிகழ்கிறது.  பொருள், புகழ் எல்லாம் ஒன்றுமே இல்லை.  ஒரு குழந்தையைப் போல எம்பிக் குதித்து ஒரு கணம் தெய்வத்தின் கரத்தால் தூக்கி எடுத்து சுழற்றப்படுவதைப் போல.

செடல் அந்த உயரத்தின் வழியேதான் பயணிக்கிறாள்.  அவளைக் குறித்து வருத்தப்பட ஒன்றுமில்லை.  மற்றபடி சமூகம் உருவாக்கிக் கொண்ட நோய்கள் – அநீதிகள், மனிதர்களின் சிறுமைகள் – அவை வேறு, அதன் சமர் தொடர்ந்து செல்லும்.  ஒருநாள் நீதி உறுதியாக வெற்றி அடையும்.