கசாக்கின் இதிகாசம் வாசிப்பு – ராகவேந்திரன்

பெரும்  படைப்பாளிகளில் தாயன்பை சிறுவயதில்  முழுமையாகப் பெறாதவர்கள் அடைந்த கொந்தளிப்புகள்   படைப்பின்  துயரச்சுவைக்கு ஒரு அசல் தன்மையை  அளிக்கின்றன. 

ஓ வி விஜயனின்  “கசாக்கின்  இதிகாசம்  வாழ்வின்  அபத்தங்களையும்  குற்ற  உணர்வு மற்றும் மனிதனை நடத்தும் விசைகளை  இருண்ட   நகைச்சுவையுடன் முன்வைக்கிறது.  

கசாக்கின் இதிகாசம், அறியாப்பருவத்தில்  தாயை இழந்தவனின் திசையற்ற  துன்பியலையும் குற்ற உணர்வையும் இயற்கையுடனும்  மனிதர்களுடனும்   கொண்ட தேடலையும்  அழகிய  ஓவியமாக  வரைகிறது.  கற்பனை  ஊரில் நம்மைக் கவிதையாகக் கனவுகள் காண  அழைக்கிறது. இனியவற்றில் மட்டுமல்ல,  மரணம்,நோய், அழுகல்  ,இவற்றிலும் கருணை, அன்பைக் காணலாம்  என்கிறது.  

ஆசிரியர் பார்கின்சன்  நோயில்  இருபது ஆண்டுகள் துயருற்றார். சாந்திகிரி  மடத்தின் கருணாகர  குருவின் தொடர்பில் இருந்தார் ( நாராயண குருவின்  வழி வந்தவர்).  நாவலில் வேதாந்தத்தின் இழை  ஓடுகிறது.  கம்யூனிசத்தின் மீது நம்பிக்கை இழந்திருந்தார். சரிகைத்தாள்  ஒட்டிய நரகத்தின் படத்தை முதல் அத்தியாயத்தில் ஒரு பெட்டிக்கடையில் காட்டும் ஆசிரியர் வேறு ஒரு இடத்தில் சரிகைத் தாள்  ஒட்டிய ஸ்டாலின்  படத்தைக் காட்டுகிறார்.

கட்டமைப்பு

நூறாண்டுத் தனிமைக்கு முன்னர்  எழுதப்பட்ட மாயயதார்த்தவாதப்படைப்பு. மோகமுள் பாபுவின் தந்தைக்கும் கசாக்கில்  ரவியின்  தந்தைக்கும் ஆர்வமூட்டும்   உளவியல் ஒப்பிட்டு ஆய்வு நடத்தலாம்.

மலம்புழா அணை கட்டுவதற்கு ஏற்பாடுகள்  செய்த  கால  கட்டத்தில் செய்திகள் சென்றடையத் தாமதம் ஆகும் ஒரு கிராமம், அதன் மனிதர்களின் காரணமுள்ள  ,  காரணமற்ற துயரங்கள் ஊடே எளிமையான வாத்சலயம் தெரிகிறது.  சண்டை செய்தல், அற  வீழ்ச்சி , அன்பு செய்தல் எல்லாவற்றிலும் ஒரு மழலை மிளிர்கிறது.

குழந்தைமை, அன்பு மூலம் விடுபடலுக்கான வாய்ப்பை முன்வைக்கிறது . 

கவிதை

சிறு வயதில் எல்லாரும்  கண்களைப் பிதுக்கிக் கொண்டு வானத்தைப் பார்த்து சிறு புள்ளிகள் விழுவதைப் பார்த்திருப்போம்.  அந்தப் புள்ளிகள் கற்பக விருட்சத்தின் கனிகளைக் குடித்து விட்டு தேவர்கள் குடுக்கையை வீசுவது தான் என்று நட்சத்திரக் குட்டனிடம் தாய் சொல்வது உச்சக் கவிதை

விளக்கிலிருந்து வரும் ஒளி தாமரை இலையின் வட்டம் போல விழுகிறது. மின்மினிகள் ஒரு துயரம் போல, ஆறுதல் போல ஆங்காங்கே பறக்கின்றன. நாட்டார் கதைகளின் கவித்துவம் வெளிப்படும் இடங்கள் அருமை.

 மலை மூங்கில்களில் சிக்கித் தவிக்கும் மனித ஆத்மாக்களின் கதை, இறந்த மூத்தோரின் அலையும் நினைவுகள் பறந்தலையும் தும்பிகளாகத் திரிவது, அந்தத் தும்பிகளைப் பிடித்தலையும் உறவுகளை இழந்த ஆட்டிசச் சிறுவன் அப்புக்கிளி, அவனுக்கு உறவாக  வருகிற ஊர்க்காரர்கள்   ,   தேக்குத் துளிரெடுத்துக் கசக்கி   மணம் பிடிக்கும் குரங்குகள்,   பனை உச்சியில் மாணிக்கத்தை  வைத்து விட்டு இளைப்பாறும் பறக்கும் நாகங்கள் இவை போன்ற அழகுக் கவிதைகளும் உண்டு.  

உடைந்து வழியும் சீழ் போன்ற சாமந்திப் பூ மணம் போன்ற அம்மை நோய், ஆனந்த மயமான நல்லம்மையின் பிரசாதம் போன்ற ஜன்னியில் அம்மையைக் கண்டு கொண்டே இறந்து போகும் மனிதர்கள், நோயில் கண் இழந்த குட்டி அச்சனின் விழி உருண்டைகள் கண்ணாடிக் கிண்ணங்கள் உடைந்து தகர்ந்த சிவப்புக் குழிகள் போன்று இருந்தமை,  இறந்த மொல்லாக்கா உடலில் இருந்து   பேன்கள் உதிர்ந்து போய் எல்லை இல்லாத ஆழத்தில் விழுவது – இவை போன்ற அருவருப்புச் சுவைத் தருணங்கள், ஒரு மாற்று அழகைத் தருகின்றன. 

சமய ஒருமை

ஆசிரியரின் மத ஒற்றுமைக் கனவு, ஒரு பழங்காலத்தை மீட்டெடுக்கும் ஏக்க முயற்சி.  மாப்பிள்ளைக் கலவரம் முடிந்து சில பத்தாண்டுகள் கழித்து எழுதப் பட்டது இந்நூல் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.  மசூதி கட்டிக் கொடு என்று புளியங்கொம்பத்து போதி – பகவதி – சொல்வது, ஓணப் பூ பறிக்கும் ராவுத்தர் பிள்ளைகள்,  ஷெய்க் எஜமான், நாகர்கள், குலசாமிகளுக்கு நேர்ந்து விட்டுப் பனை ஏறும் வழக்கம்,  ஈழவரும் ராவுத்தரும் இணைந்து திவசம் கொடுப்பது  என்று ஒரு பொற்காலத்தைக் குழந்தைகளும் பழங்குடித் தன்மை நிறைந்த எளிய கிராம வாசிகளும் இணைந்து முன்னெடுக்கிறார்கள்.

 ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ யிலும் இதே போலக் கையைப் பிசைத்துக் கொண்டு மனம் நோகும் அதினைப் பார்க்கிறோம். ஒருவேளை காந்தி புதினம் எழுதினால் இப்படித்தான் இருக்கும் போலும். 

பாம்பு ஒரு முக்கியப்  பாத்திரமாக வந்து கொண்டே இருக்கிறது. இறப்பின் வடிவமாக, இறுதியான இளைப்பாறுதல் தரும் கண்டிப்பான அன்னையாக. 

கரும் நகைச்சுவை – சில ரசனைகள்

  1. அத்தர் ஒரு தொண்டரை அடித்தான் – நீதிக்காகவும் சட்டத்திற்காகவும் தான்
  2. பள்ளிக்கு வந்த  ஏழைக்குழந்தைகள் எல்லாம் கலிபாக்கள், ராணிகளின் பெயர்கள் வைத்திருந்தார்கள்
  3. அப்புக்கிளியின் சட்டை பல துண்டுத் துணிகள் சேர்த்துத் தைத்தது முன்புறம் சுத்தி, அறிவாள், திரிசூலம் , பின்புறம் காந்தி, மயில் இருந்தது.
  4. அடுத்த பிறவியில் யார் எப்படிப் பிறப்பார்கள் என்ற விவாதத்தில் குஞ்சமினா  சொல்கிறாள் –‘ மொல்லாக்கா ஊறாம்புலி ஆவார் சார்’  , குழந்தை குஞ்சமினாவும்  மனநிலை பிறழ்ந்த அப்புக்ககிளியும் ஆசிரியர் சிரத்தை எடுத்து வடித்த பாத்திரங்கள்.
  5. சுமைதூக்கி, குழந்தைகள் அனைவரும் வேதாந்தம் பேசுகிறார்கள். – “எல்லாம் மாய சார், அதுதானே தம்பி கர்மா.
  6. திருவிழாவில் தன் தவ வலிமையை நிருபிக்க விரும்பிய குட்டன் பூசாரியும் கூத்து நடிக்கும் நடிகர்களும் , உட்பகை காரணமாக ரசாயனம் கலந்த மது குடித்துவிட்டதால் வயிறு கலங்கி,  புதர்களில் ஒளிகிறார்கள். தாழம்பூப் புதர்களின் மேலே கதகளிக் கிரிடங்கள் தெரிகின்றன. “கவுத்துட்டியே தேவி என்கிறான் பக்தன்.
  7. குட்டன் பூசாரி துள்ளி ஆடும்போது சேவல் பயந்து போய் கூரை மேல் ஏறி விடுகிறது. இதே போல மார்க்வெஸின் “நூறாண்டுத் தனிமையிலும் வருகிறது.

உருவகங்கள், படிமங்கள்

மாயமும் இயற்கையும் நாட்டார் நம்பிக்கைகளும் கலந்த படிமங்கள் கசாக் கிராமத்தின் அந்தி,  தும்பிகள், செதலிமலை, கிழக்கு (கோவையிலிருந்து வரும்) காற்று, சிலந்தி, கரப்பான்கள், பனை, பேன்கள் , வயசாகும்போது படச்சவன் பெடரில உக்காருவான், சாகும் குதிரை அருகில் இருக்கும்  இறைத்தூதன் எஜமான்,  இவை தீட்டிய அழகிய ஓவியம்

மரணச் செய்திகள்  குறிப்பாக குழந்தைகளின் மரணங்கள் சாதாரணமாக எதிர்கொள்ளப் படுகின்றன. வாசகன் ஒரு அதிர்வை அடைகிறான். 

பேருந்து நிலையத்தில் தொடங்கும் இதிகாசம் அதிலேயே முடிகிறது. இரண்டு முடிவுகளைத் தருகிறார் ஆசிரியர். ஒன்றில் ரவி புது வாழ்வை ஆரம்பிக்கிறான். இன்னொன்றில் பாம்பு தீண்டி, சாலையில் எதிர்பார்ப்புடன் கிடக்கிறான். குரும்பு செய்யும் குழந்தையின் அழகிய பற்களுடன் நாகம் அவனைத் தீண்டுகிறது. வாசகன் மேலதிக முடிவுகளையும் எடுத்துக் கற்பனை செய்து கொள்ளலாம். அவனை அழகிய மரணமே அமைதி தருவது என்ற முடிவுக்கு வரச் செய்வதில் புதினம் வெற்றி பெருகிறது.

யூமா வாசுகியின் மொழி பெயர்ப்பில் ஒரு மாயத்தன்மை உள்ளது.  ஒரு புதிய நாட்டார் பேச்சுமுறையையே உருவாக்கி உள்ளதாகத் தோன்றுகிறது. மூலத்தையும் வாசித்தால் தான் மொழிபெயர்ப்பின் உயர்வைக் கொண்டாட முடியும் போல உள்ளது. 

பெயரில்லாத் துயரங்களின், உருவமில்லா ஏக்கங்களின் முடிவிலாப் பெருங்கதை கசாக்கின் இதிகாசம்.

ஆர் ராகவேந்திரன்