மீறலின் பெருவிளையாடல் – ராகவேந்திரன்

காப்ரியாலா கார்சியா மார்க்வெஸின் “நூறாண்டுத் தனிமை” வாசிப்பு

நிறுவனமாக்கப் பட்ட மதம், குடும்ப நெறிகள், அறிவியலின் அரசியல், அரசின் அதிகாரம் இவற்றின் அடிப்படை அலகாக மனிதன் பிறன் மீது செலுத்த விரும்பும் ஆதிக்க உணர்வு என்றும் இருக்கிறது. அவற்றை மீறும் ஆதார எழுச்சியும் மனிதர்களை சிறிய, பெரிய கலகங்கள், புரட்சிகளை நோக்கி செலுத்தி இருக்கிறது.  இந்த ஊடாட்டத்தின் இடையே கல்லை இணைக்கும் சிமெட்டிப்பால் போல மானுட அன்பு  ஒழுகி இருப்பதை வரலாறு கண்டு கொண்டிருக்கிறது.  புதியவற்றைத் தேடிப் படைக்க வேண்டும் என்ற உந்துதலும் மனித ஜீன்களை மாற்றம் என்னும் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறது.

ஆதிக்கம், அன்பு, மீறல், தேடல் இவற்றின் அடிப்படை  மானுட விசைகளை மிகைக் கனவு கொண்டு நெய்தெடுத்த நீலத்துணியாக நூறாண்டுத் தனிமை விரிகிறது.

மார்க்வெஸ் பதினெட்டு மாதங்கள் தினமும் தொடர்ந்து எழுதியுள்ள மாய நடப்பு வாதப் புதினம்.  மகோண்டா என்ற கற்பனை ஊரின் ஏழு தலைமுறைகளின் வாழ்வையும் வீழ்வையும் நகை முரண்களுடனும் அதிர்ச்சியூட்டும் விலகலுடனும் கேளிக்கையுடன் சித்தரிக்கிறது.

புரட்டிப் போடல்

மரணம் ஏன் சிரிப்பைத் தருவிக்கக் கூடாது? அழிவை ஏன் எப்போதும் துயரத்துடனே எதிர்கொள்ள வேண்டும்? இவை போன்ற அடிப்படையை அசைக்கும் வினாக்களை எழுப்பினால் அவரை ஒரு ‘மாதிரியாக’ப் பார்ப்பார்கள் அல்லவா? அந்த ஒரு மாதிரியான  மனநிலையை சரியானது என்று வைத்து கொண்டு படைப்பிற்குள் இறங்க வேண்டும்.

ஒவ்வொரு சொல்லும் பழக்கத்தாலும் காரணத்தாலும் ஒரு குறிப்பிட்ட உணர்வு நிலையை எழுப்பும். அந்தச் சொல்லுடன் முற்றிலும் முரண்படும் வேறு ஒரு சொல்லைச் சேர்த்தால் ஒரு திகிலைத் தரும். நாவல் முழுவதும் இது போன்ற ‘குண்டக்க மண்டக்க’ உணர்வுச் சேர்க்கைகளால் கட்டப் பட்டுள்ளது. அதை ஒரு அறிவரின் கலை அழகுடன் கொடுத்துள்ளார் மார்க்வெஸ்.

மிகவும் துயரமான ஒரு நிகழ்வை விவரித்துக் கொண்டே செல்கையில், ஒரு வெடிக்கும் நகைச்சுவையைத் தூக்கிப் போட்டு விடுகிறார். அழுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் வாசகன் திடீரென சிரித்துக் கொண்டிருக்கிறான். அப்படியே ஒரு இரண்டு வயதுக் குழந்தையாக வாசகனை மாற்றி விடுகிறார். அது எதன் பிடியிலும் இல்லை. எப்போதும் கேளிக்கை.

உதாரணமாக, அழகியான ரெமெடியோஸ்  ஒரு விரிப்பை உலர்த்திக் கொண்டிருக்கும்போதே காற்று அவளை விரிப்புடன் தூக்கி விண்ணிற்கு எடுத்துச் சென்று விடுகிறது. மதச் சடங்கும் கட்டுப் பாட்டு வெறியும் கொண்ட பெர்னாண்டோவின் ஒரே கவலை , தனது கம்பளம் பறந்து போய்விட்டது தான். அதைத் திருப்பும்படி கடவுளை வேண்டிக் கொள்கிறாள்.

பாத்திரப்படைப்பும் காலமும்

ஜோஸ் அர்கேடியோ புயின்டியா:

 புதியவற்றைத் தேடுபவன். ஆற்று வழியே பயணித்துக் கடலைக் காணத் துடிப்பவன். நாடோடிகளின் தொடர்பால் புதிய கருவிகளைக் கொண்டு வந்து ஊரை மாற்றுபவன். தான் செய்த கொலையின் குற்ற உணர்ச்சி ஆவியாக வந்து பேசியதால் பித்துப் பிடித்தவன். ஒரு செஸ்ட்நட் மரத்தினடியில் கட்டிப் போடப்படுகிறான். எப்போதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பித்துப் பிடித்தவன் அறிவியலும் ஒரு வகை மூட நம்பிக்கைதான் என்று காட்டுகிறான். அவனது சிறையை விடுவித்த போதும் மரத்தை விட்டு எங்கும் போகாமல் அமர்ந்திருக்கிறான்

உர்சுலா

கதையின் ஆதாரப் புள்ளி. ஏழு தலைமுறைகளின் வீழ்ச்சிக்கு சாட்சியாக இருப்பவள். சராசரிக்கும் சற்று அதிகமான ஆற்றலுடனும் அன்புடனும் ஒரு வீட்டுத்தலைவி அன்னையாக, மூதாட்டியாக மாறி மூதாதையாக, படிமமாகச் சமைகிறாள். 115 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து அனைத்துத் துயரங்களும் தந்த வடுக்களைத் தாங்கி நிற்கும் பெருமரம். சகுனங்களை குறிப்பாக அப சகுனங்களை நம்புகிறவள். கண் பார்வை போய்விட்டபோதும் பிற புலன்களை வைத்து முழு விழிப்புடன் வாழ்கிறாள். வீடு வறுமையும் கரையானும் பிடுங்க இடிந்து கொண்டிருக்கும் நிலையில் மரணப் படுக்கையிலிருந்து எழுந்து மீண்டும் வீட்டை மறு சீரமைப்பு செய்கிறாள். தன் மகன் செய்யும் புரட்சிக் கொலைகளைத் தட்டிக் கேட்பவள். மகனால் ராணுவ விசாரணை செய்து கொல்லப் படும் கன்சர்வேடிவ் கட்சியின் மேயரை மீட்கக் கடைசி வரை போரிடுபவள். வீடு முழுவதும் விருந்தினரால் நிறையவேண்டும் என்று நினைப்பவள். தன் வம்சத்தின் மீதும் மகோண்டா கிராமத்தின்  மீதும் பற்று கொண்டவள். ஒவ்வொரு குடும்பத்தையும் உளுத்துப் போகாமல் காக்கும் சூரிய ஒளியாக ஒரு உர்சுலா இருக்கிறாள் என்று தோன்றுகிறது.

கர்னல் அவ்ரெலியானோ புயின்டியா

ஜோஸ் – உர்சுலாவின் மூத்த மகன். சாதாரண மனிதன் திடீரென புரட்சியாளனாக மாறும் போது அந்த மாற்றத்தின் உண்மையான காரணங்களைக் கண்டறிவது கடினம். மகோண்டாவில் அரசாங்கம் வருவதற்கு முன் எல்லாம் ஒழுங்காகச் சென்று கொண்டிருந்தது. திடீரென அரசாங்கம் வீடுகளை நீல வண்ணத்தில் பூசவேண்டும் என அறிவிக்கிறது. வெண்மைப் பூச்சு தான் செய்வோம் என்றான் ஜோ.

அரசின் மென்மையான இரும்புக் கரங்களை உணர்ந்த அவ்ரெலியானோ திடீரென்று விடுதலைப் படையில் சேர்கிறான். பல கொலைகள், தோல்விகள், வெற்றிகள், காயங்கள்  பட்டு, இறுதியில் சுடப்படும் தருவாயில் பலமுறை தப்புகிறான். ஒரு கட்டத்தில் தான் போர் செய்ததன் காரணம் சுய ஆணவத்தின் நிறைவுக்காகத்தான் என்று உணர்ந்து அமைதி உடன்படிக்கை செய்துகொள்கிறான். அதனால் அவன் சகாக்களுக்கு அதிகத் துன்பம் வருகிறது. துரோகி பட்டம் பெறுகிறான். வீட்டில் தன் பட்டறையில் மீண்டும் சிறிய தங்க மீன்களை உருவாக்கி, உருவாக்கி அழித்து, முடங்கி விடுகிறான். தனக்குத்தானே விளைவித்துக் கொண்ட தனிமையால் பட்டுப் போன மரம் அவ்ரெலியானோ.

ஜோஸ் அர்கேடியோ

உர்சுலாவின் போக்கிரிப்பிள்ளை. மகோண்டாவில் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பல கொடுமைகளை நிகழ்த்துபவன். ரெபாக்கா இவன் மனைவி. சந்தேகத்திற்கு இடமாக மரிக்கிறான். இவனது சாவின் போது ரத்தத்துளி நகர்ந்து வந்துவீட்டை விட்டு வெளிவந்து சாலையில் ஓடி, அன்னை உர்சுலாவிடம் வந்து நிற்கும் இடம் முக்கியமானது. இவனது குழந்தைப் பருவத் ‘தனிமை’ இவனது திருகிய ஆளுமைக்கு வித்தாக உள்ளது. 

அமரந்தா

ஜோஸ் –உர்சுலாவின் மகள். அன்பிற்கும் கோழைத்தனத்திற்கும் இடையே ஊசலாடி உண்மைக் காதல்களை மறுத்து சிலரின் மரணத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாகி, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்பவள். இவளது மரணத் தேதியை முன்பே அறிவித்து விடுகிறாள். அதன் பின் நடப்பது அழகிய இருண்மை நகைச்சுவை. ஊர் மக்கள் இறந்து போன தங்கள் உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கடிதங்களைக் கொண்டு வந்து அமரந்தாவிடம் கொடுக்கிறார்கள். எப்போது இறப்பாள் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். பெட்டி நிறைய கடிதங்கள் சேர்ந்து விடுகின்றன. தானே தயாரித்த அழகிய மரண ஆடையை அணிந்து கொள்கிறாள். உர்சுலாவிற்கு தன் மகளை உயிருடனேயே புதைத்து விடுவார்களோ என்று கவலை. பாதிரியாரும் காலம் வருவதற்கு முன்பே ஒருமுறை வந்து பார்த்து விடுகிறார். ஒரு வேளை பொய்சொல்கிறாளோ என்ற ஐயமும் அவருக்கு வருகிறது. கடைசியில் அமரந்தா குறித்த முகூர்த்த்திலேயே மரணிக்கிறாள். 

பெர்னான்டோ

இறுகிப் போன நிறுவன மதத்தின் பிரதிநிதி. தன்னை அரசி என்று நினைத்துக் கொள்பவள். பிணங்களுக்கு வைக்கும் மலர் வளையங்களைச் செய்து கொண்டிருப்பவள். குழந்தைகளை இரக்கமின்றி நடத்தும் ‘நற்குணம்’ கொண்டவள். சாவைக் கொண்டாடுதல், துக்கம் அனுசரிப்பு, இறுதிச் சடங்குகளில் நிபுணத்துவம் இவையே இவளது வாழ்வியல் நோக்கம். பாவத்தின் உருவமாகத் தான் கருதும்  மானுடத்தின் மீது வெறுப்பை அபிடேகம் செய்பவள்.

 படைப்பில் பொதுவான ஒரு போக்கு ஆர்வமூட்டுவது. பாவிகள் என்று  வரையறுக்கப் படுபவர்கள் முதிர்ந்து கனிந்து கருணை கொள்கிறார்கள். வழி தவறியவர்கள் எல்லாம்  முடிவில்  நிறைவடைகிறார்கள். உதாரணம் , சோதிடம் சொல்லும் பிலர் டெர்னாரா. கடைசி வரை வெடிச் சிரிப்புடன் இருப்பவள். செகுண்டாவின் கள்ளக் காதலி பெட்ரா கோட்ஸ்  இன்னொரு சிறந்த உதாரணம்

ரெனடா ரெமெடியோஸ் (மீமி)

அழகின் உருவான மூத்த ரெமெடியோஸ் பெயர் இவளுக்கும் வைக்கப் படுகிறது. பெர்னான்டோ – அவ்ரிலியானோ செகுன்டோவின் மகள். தனது சடங்கு வெறி பிடித்த அன்னைக்கு ஏற்ற வகையில் தனது தனிமையை சமாளித்து வளர்கிறாள். இசைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறாள். யாரையும் கேட்காமல்  ஒரு வார விடுமுறைக்கு மூன்று கன்யாஸ்திரிகளையும்     மாணவிகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறாள். அதன் பின் வீடு கலவர பூமியாகிறது. கடைசிப் பெண் சாப்பிட்டு முடிந்ததும் அடுத்த வேளை உணவு தொடங்குகிறது கழிவறை போதாத காரணத்தால் சேம்பர் குப்பிகளை வாங்குகிறார்கள். பிறகு அவற்றைக் கழுவுவதற்காக வரிசையில் நிற்கிறார்கள் மாணவிகள். 

மீமி ஒரு கார் மெகானிக்குடன் காதலில் விழுகிறாள். தாய் பெர்னாண்டோ தொலைதூர தேசத்தின் கன்னிமாடத்தில் மகளை அடைத்து வைக்கிறாள். ஒரு குழந்தை பார்சலில் வருகிறது. அதில் வரும் குடும்பத்தின்  ஆறாவது வாரிசான அவ்ரிலியானோவை பாட்டி பெர்னாண்டோ அறையில் அடைத்து ரகசியமாக வளர்க்கிறாள். அவன் புயின்டியா குடும்பத்தின் கல்யாண குணங்களுடனும் துடுக்குடனும் வளர்கிறான். 

பிய்ட்ரோ க்ரெஸ்டா : 

இத்தாலியிருந்து வந்து புயின்டியா குடும்ப்ப் பெண்களுக்கு இசையும் நடனமும்  கற்றுத் தந்து ரெபக்காவிடம் காதலில் விழுந்து அவள் அர்காடியோவை நாடிவிட, அமர்ந்தாவைக் காதலித்து , அவளாலும் புறக்கணிக்கப் பட்டு, ஒரு நல்ல நாளில் தனது இசைக்கூடத்தில் அனைத்து விளக்குகளும் எரிய, அனைத்துக் கருவிகளும் இசைக்க, இயந்திர பொம்மைகள் ஒலிக்க, விரலை அறுத்துக் கொண்டு உயிர் விடுபவன்

காலம்: 

காலமும் மகோண்டா என்ற ஊரும் படைப்பில் முக்கிய உருவகங்கள். காலம் நேர் கோட்டில் நகர்வதில்லை என்று உணர்கிறாள் உர்சுலா. மீண்டும் மீண்டும் ஒரே சம்பவங்கள் சில தலைமுறைகளின் இடைவெளியில் நடக்கின்றன. இதைக் காணும் துயரம் உர்சுலாவிற்கு நடக்கிறது. பேரக் குழந்தைகளுக்கு தாத்தா/ பாட்டி பெயர் வைப்பதில் ஒரு தர்க்கபூர்வ நம்பிக்கை இருக்கிறது. ஒருவரே மீண்டும் வந்து வாழ்வது போல உள்ளது.

வாழைப்பழப் படுகொலை

லத்தின் அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ வல்லரசுகள் நடத்திய படுகொலைகளின் வடு இந்த இலக்கியங்களில் வெளிப்படுகிறது யுனைடட் ஃப்ரூட் கம்பெனி தொழிலாளர்களின் போராட்டங்களை பொம்மை அரசின் ராணுவத்தை  வைத்து முறியடிக்க 3000 ஆயுதமற்ற தொழிலாளிகளையும் சுட்டுத் தள்ளிவிட்டு ரயிலில் எடுத்து அழுகிய பழங்கள் போல கடலில் வீசி விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை என்று அரசும், ஊடகமும் சாதித்து விடுகின்றன. வாழைப்பழக் குடியரசு என்று ஓ ஹென்றி ஹோன்டுராஸ், குவாடிமாலா நாடுகளை அழைக்கிறார். அந்த்த் துயரை லத்தின் அமெரிக்கப் பிரதிநிதியாக மார்க்வெஸ் வெளிப்படுத்துகிறார்.

பகடிப் பரப்பு

மகோண்டாவில் முதன் முதலில் ஊருக்குள் ரயில் வரும்போது பயந்து ஓடி வந்த பெண் சொல்கிறாள் “ அதோ வருகிறது, அச்சமூட்டும் ஒன்று; ஒரு சமையலறை ஒரு கிராமத்தையே இழுத்து வருவது போல” ( க சீ சிவக்குமாரின் ஆதி மங்கலத்து விசேஷங்கள் நினைவுக்கு வருகிறது)

அவ்ரலியானோ முன்னாள் புரட்சி தளபதி. அவனைப் பார்க்க வருபவர்கள் மரியாதைக்காக வருவதில்லை. ஒரு வரலாற்றுச் சின்னத்தை ஒரு அருங்காட்சியகப் புதைபடிவத்தைக் காணத்தான் வருகிறார்கள் என்பதை அவனே உணர்ந்து கொள்கிறான்.

 1. வீட்டில் இறந்தவர்களின் ஆவிகளும் உயிர் வாழ்பவர்களின் ஆவிகளும் வளைய வந்து கொண்டிருக்கின்றன
 2. அமரந்தா ஆடை நெய்வது தனிமையை வெல்வதற்காக அல்ல; வளர்த்தெடுப்பதற்காக
 3. அறிவியல் பூர்வமான மூட நம்பிக்கை
 4. புனித ஜோசப்பின் சிலைக்குள் பொற்காசுகளைப் புதைத்து விட்டு புரட்சி காலத்தில் யாரோ உர்சுலாவிடம் கொடுத்துச் செல்கிறார்கள். பொற்காச்களைக் கண்டறிந்த்தும் அதைப் புதைத்து விட்டு , வீட்டுக்கு வரும் எல்லா விருந்தினர்களிடமும் ‘நீங்கள் ஒரு சிலையைக் கொடுத்து வைத்துச் சென்றீர்களா” என்று காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். கிழவியிடம் எப்படியாவது புதையலின் இடத்தைக் கறந்து விடவேண்டும் என்று பலவகையில் செகுன்டா நோண்டிக் கொண்டிருக்கிறான். போதம் கெட்டு கால உணர்வை இழந்து விட்ட போதும் கடைசி வரை கிழவி சொல்லவில்லை
 5. “துல்லியமான குழப்பம் “ ;” புதிதாய்ப் பிறந்த கிழவி”
 6. காலத்திற்கும் விபத்து ஏற்படலாம். அது கால் தடுக்கி நிரந்தரமான ஒரு துண்டை ஒரு அறையில் விட்டுச் செல்லலாம்
 7. செகுன்டோ இரட்டையர்கள் சிறு வயதில் தங்கள் அடையாளங்களை மாற்றிக் குழப்பி விளையாடுவார்கள். அவர்கள் ஒரே நாளில் இறக்கிறார்கள். குடிபோதையில் இருந்த நண்பர்கள் சரியாக அவர்களை மாற்றிப் புதைத்து விடுகிறார்கள்
 8. அழகிய முரண்  – Hallucinational Lucidity
 9. சுவரில் எழுதப்பட்ட புனிதமான மடமை
 10. கடைசியாக, ஜோஸ் தவறுதலாக ஒரு கருவியை நகர்த்த, அது பொருத்திக் கொண்டு இசை வெளிவந்த்து
 11. சைவ உணவுக்காரர்களிடம் மட்டும் காணப்படும் அந்த விரக்திப் பார்வை
 12. தனது திருமண நாளில் படபடத்து தனது  மோதிரத்தை கீழே போட்டு உருட்டி, காலால் அமுக்கி எடுத்து அசடு வழியும் அவ்ரலியானோ
 13. பெருமிதம் என்னும் படுகுழியில் இருக்கும் மக்கள்
 14. புகழ் என்னும் சாணக்குவியலில் பன்றி போலப் புரளுதல்
 15. கடும் போர்ச்சூழலின் இடையே தந்தியில் விவாதிக்கும் தளபதி “மகோண்டாவில் மழை பெய்கிறது” என்பான்
 16. வாழ்க்கை சேகரித்து வைத்த ஏக்கக் குப்பைகளின் ஒளி இழக்கும் அடுக்குகள்
 17. போலியான, ஈர்க்கும் நற்குணம்

பெண் சண்டைகள்

குடும்பத் தலைவிகள் அக்கம் பக்கத்தில் , வீட்டுக்குள் பூசலிடுவதை ராஜ் கௌதமன் (சிலுவை ராஜ் சரித்திரம்), S K பொற்றேகாட் (ஒரு கிராமத்தின் கதை) ரசித்து வர்ணித்திருப்பார்கள். மார்க்வெஸின் பெர்னாண்டோ தன் கணவனைத் திட்டுவதை மூன்று பக்கங்களுக்கு கவிதை போலப் படைத்திருக்கிறார். 

மீறல் 

புதினமெங்கும்  தடை மீறலின், ஒழுக்க வீழ்ச்சியின் துடிப்பு காணக் கிடைக்கிறது. அறிவின் வளர்ச்சியும் தடைகளை மீறித்தான் வந்திருக்கிறது. உறவுகளின் பொய் ஒழுக்கங்கள் சில நேரங்களில் அதிர்ச்சியை ஊட்டுகின்றன. அரசு – மதம் – கட்டுப் பாட்டிற்கு எதிரான எளிமையான மாற்றாக ஆசிரியர் மீறலை முன்வைக்கிறார்.  லத்தின் அமெரிக்காவின் சுரண்டப்பட்ட இனத்தின் குரலாக மேற்கத்திய உலகைப்  பார்த்து, விக்டோரியன் அறத்தின் பசப்பைப் பார்த்து “போடா” என்று சொல்லும் குரல். இந்த உடைக்கும் விசையை உருண்டை பிடித்து ஒட்டி வைக்கும் பசையாக உர்சுலா தனித்து நிற்கிறாள்>

உருவகங்கள், படிமங்கள்

 மயக்குடன் காட்டப் படும் உருவகங்களாக மஞ்சள் பட்டாம் பூச்சிகள், மஞ்சள் மலர்கள், மரிக்கும் பறவைகள், சதுப்பு நிலங்கள், பழைய எலும்புக்கூடான கப்பல், அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்ட சாம்பர் குடுவைகள்,  உருக்கி உருக்கி மீண்டும் உருவாக்கும் தங்க மீன்கள், பழைய சுவடிப் பட்டைகள், வீட்டின் அறைகள், கரையான்கள், எறும்பு இழுத்துச் செல்லும்  குழந்தை , கரப்பான்கள், தேள்கள் என்ற மாய உருவக வெளியைக் காண்கிறோம்

மகோன்டா கிராமம் உலகிற்கும் ஜோசின் குடும்பம் மனித இனத்திற்கும் நூறு ஆண்டு வரலாறு காலத்திற்கும் படிமங்களாக உள்ளன.

நூறாண்டுத்தனிமையை ஒரு நீர்த்துப் போன கவிதை என்று ஒரு மேலை விமர்சகர் சொல்கிறார். அதுவே ஒரு சிறந்த பாராட்டுதான். ஒரு கவிதையை நாவலாக இழுப்பதற்கு அதன் காதுகளை இழுக்க வேண்டும். அதற்கு மாய யதார்த்தம் நல்ல வடிவம்.

இத்தாலியிலிருந்து வந்த இசைக்கருவையை ஜோஸ் பிரித்து மேய்ந்து கெடுத்து விடுகிறான். வாழ்வெனும் இசைக்கருவியை ரசிக்காமல் அழித்து விடும் முட்டாள் தனம் தான் தனிமைப் படுதல். தனிமையின் இசையை மீறலின் துடுக்குடன் உரக்க ஒலிக்கும் பழங்குடியின் குரல் நூறாண்டுத் தனிமை.  

***

ஆர் ராகவேந்திரன்

பள்ளிகொண்டபுரம் வாசிப்பு – காளீஸ்வரன்

உடலிலும் மனதிலும் பலமில்லாத, சாமானியத்தனத்தின் பிரதிநிதியாக விளங்கும் அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்ததினத்தில் துவங்குகிறது ”பள்ளிகொண்டபுரம்” நாவல். அவரது வாழ்கையின் இறுதி நாற்பத்தி எட்டு மணி நேரங்களில் அனந்தன் நாயரின் மனவோட்டம் மூலமாக, அவரது வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, அதனூடாக அக்காலகட்டத்தை, சாமானியர்கள் மீது எவ்வித கருணையும் காட்டாத வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார் திரு.நீல.பத்மநாபன்.

பேரழகியான கார்த்தியாயினியை, விருப்பமின்றி மணக்கும் அனந்தன் நாயரின் தாழ்வுணர்ச்சி அதிகரிக்க, அவளது அழகே போதுமானதாக இருக்கிறது. அவர் அஞ்சும், சமயங்களில் ஆராதிக்கும் கார்த்தியாயினியின் அழகே அவர்கள் வாழ்வில் புயல் வீசுவதற்கான களம் அமைக்கிறது. கார்த்தியாயினியின் அழகால் கவரப்படும் “தகஸில்தார்” விக்ரமன் தம்பியால், அனந்தன் நாயருக்கு பதவி உயர்வுகள் கிடைக்க, அதற்கான காரணத்தை அனந்தன் நாயர் எளிதில் யூகிக்கிறார். அலுவலகத்திலோ, அதிகாரத்திடமோ அவர் காட்ட முடியாத கோபம், மனைவி மீது திரும்ப, ஒரு கட்டத்தில் அவர் பயந்தது அல்லது ஆழ்மனதில் விரும்பியது நடந்தே விடுகிறது. 41 நாட்கள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வரும் அனந்தன் நாயர் நுழைவது கார்த்தியாயினி நீங்கிச்சென்ற வீட்டில். மகன் பிரபாகரன் நாயர் மற்றும் மகள் மாதவிக்குட்டியுடன் தனித்து விடப்படும் அனந்தன் நாயர், தன் முழுவாழ்வையும் அவர்களுக்கெனவே செலவிடுகிறார். வயது வந்த மகள் மற்றும் மகனின் சமீபத்திய நட்புவட்டாரம் குறித்து அவர் கேள்விப்படும், காணும் விசயங்கள் அவருக்கு உவப்பாய் இருப்பதில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்வைப் பற்றியும், அவர்களுடைய எதிர்காலம் குறித்தும் தன் பிள்ளைகளிடம் அன்ந்தன் நாயர் பேசும் இரவே, அவருடைய இறுதி இரவாய் மாறுவதில் முடிகிறது இந்நாவல்.

*

நாவலின் மையக்கதாப்பாத்திரமாக வரும் அனந்தன் நாயரின் பார்வையிலேயே பெரும்பாலான சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. இந்நாவலின் மிகப்பெரிய பலம் இதன் கூறுமுறை. திருவனந்தபுர வீதிகளையும், அதனூடே பிணைக்கப்பட்ட அனந்தன் நாயரின் நினைவுகளையும் மிகக் கச்சிதமான சொற்களால் சொல்லப்பட்டிருக்கும் விதம், திருவனந்தபுரத்தில் நாமும் அலைந்து திரிந்த உணர்வைத்தருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் இந்நாவலில் வெறுமனே நிலப்பரப்பாக காட்டப்படாமல், அவ்வூரின் தெருக்களும், கோவிலும், சிலைகளும் அனந்தன் நாயரின் வாழ்க்கைச் சம்பவங்களை அவர் நினைவிலிருந்து மீட்டெடுக்கும் கண்ணியாக அமைந்திருப்பது, அவருக்கிணையான பாத்திரமாக திருவனந்தபுரத்தையும் கருத வைக்கிறது. 

இயல்பிலேயே நோய் வாய்ப்பட்டு அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அனந்தன் நாயர், மனதளவிலும் வலுவற்றவர். அவரின் தாழ்வுணர்ச்சியும் தன் மனைவிக்கு தான் எவ்விதத்திலும் தகுதியற்றவன் எனும் அவரது ஆழ்மனவோட்டமுமே, விக்கிரமன் தம்பியின் நோக்கத்தை, ஆரம்பத்திலேயே தெளிவாகப் புரிந்து கொள்ள வைக்கிறது. தொடரும் நாட்களில் இயல்பான அல்லது எப்போதுமிருக்கும் விசயங்களில் கூட குற்றம் கண்டு கார்த்தியாயினியை நோகடிக்கும் அனந்தன் நாயர், அவரைப் பிரிந்து செல்லும் முடிவை நோக்கி அவளைத் தள்ளுகிறார். அவ்வகையில், தன்னுடைய தாழ்வுணர்ச்சி எனும் பள்ளத்தை, தியாகத்தைக் கொண்டு நிரப்ப அவர் முயல்வாதக் கருதுகிறேன். 41 நாள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வருகையில், மனைவி இல்லாததை உணரும் போது, முதலில் அவருக்கும் வருத்தம் மேலிட்டாலும், நேரம் செல்லச் செல்ல அதை ஒருவகை விடுதலையாகவே உணர்கிறார். இந்நாவல் முழுவதிலும், அனைவரிடத்தும் அடங்கிய குரலில் பேசிப் பணிந்து செல்லும் அனந்தன் நாயர் தன்னுடைய குரூரத்தை வெளிப்படுத்துவது கார்த்தியாயினியிடம் மட்டுமே. நாவலின் இறுதிப்பகுதியில் அனந்தன் நாயரின் இருவித குணங்களும் அவரது பிள்ளைகளிடம் வெளிப்படுவதைக் காணாலாம்.

நினைவு தெரியுமுன்னே தன்னை நீங்கிப்போன அம்மாவிடம் மாதவிக்குட்டி கேட்ட கேள்விகள், தன் அம்மா மீதான அவளது கோபம், விலக்கம் அனைத்துமே அனந்தன் நாயருக்கு ஒருவித நிம்மதியைத் தருகின்றன. தான் கேட்க முடியாத கேள்விகளை, தன் ஆதங்கத்தை மகளாவது வெளிக்காட்டினாளே என்கிற குறைந்தபட்ச ஆசுவாசம்தான் அது. ஆனால், சற்றே நினைவு தெரியும்வரை அன்னையிடம் இருந்தவனும், நடைமுறைவாதி என தன்னைக் கருதுபவனுமான பிரபாகரன் நாயரின் பார்வை முற்றிலும் மாறானது. தன் அம்மாவின் தவறுக்கு முழுக்காரணம் அவளை அந்நிலையை நோக்கித்தள்ளிய தன் அப்பாதான் என அவனிடமிருந்து ஒலிக்கும் சொற்கள் ஒரு கோணத்தில் அனந்தன் நாயரின் மனசாட்சியின் சொற்களும் கூடத்தான். மகள் மூலம் தன் மனதுக்குக் கிடைத்த நிம்மதியை கொஞ்ச நேரம் கூட தங்கவிடாமல் குலைத்துவிட்ட மகனின் செயல் அவரை மேலும் விசனப்படுத்துகிறது. அவ்விசனத்துடனே அனந்தன் நாயரின் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது.

அனந்தன் நாயரின் அத்தை குஞ்ஞுல‌ஷ்மி, தன் கணவனான சங்குண்ணி நாயரை நீங்கிச்செல்லும் நிகழ்வு, அனந்தன் நாயரின் சிக்கலுக்கு இன்னுமொரு பரிணாமத்தைத் தருகின்றது. அனந்தன் நாயரைப் போல தாழ்வுணர்ச்சி இல்லாத சங்குண்ணி நாயர், தன் மனைவி தன்னை நீங்கி இன்னொருவனிடம் போவதைத் தடுக்க காலில் கூட விழுகிறார். தான் குஞ்ஞுலஷ்மிக்கான சரியான துணை எனும் நம்பிக்கையில் விழுந்த அடியின் விளைவு அது. அதையும் மீறி கொச்சு கிருஷ்ண கர்த்தாவுடன் செல்லும் குஞ்ஞுலஷ்மிக்கோ தன் கணவன் மீது எவ்வித புகார்களும் இல்லை என்பது இன்னும் துயரமளிப்பது.

அனந்தன் நாயரின் அக்காவாக வரும் கல்யாணி அம்மாவின் பாத்திரப்படைப்பு முற்றிலும் மாறுபட்டது. மணம் முடித்து சில காலம் மட்டுமே வாழ்ந்தபோதும், அரவிந்தாக்‌ஷ குறுப்பு அவள் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிப்போகிறார். வேதாந்தியான அவரின் மறைவுக்குப் பின், அவரின் மகன் பாஸ்கரன் நாயரும் அவன் தகப்பன் வழியிலேயே பயணிக்கிறான். ஆனால், ”குருவை சோதித்துப் பார்த்து” தன் தகப்பன் செய்த தவறைத் தவிர்த்து, அவன் தன் குருவின் சொல்லுக்கிணங்கி திருமணத்துக்குத் தயாராவதில், அர்த்தப்படுகிறது கல்யாணி அம்மாவின் வாழ்க்கை.

*

இந்நாவலில் ”அணைக்க முடியுமுண்ணா தீய பத்தவைக்கணும்” என அனந்தன் நாயரிடம் கார்த்தியாயினி சொல்லும் இடம் ஒன்றுவரும். அது உண்மைதான். தன் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் தன்னால் அணைக்க முடியாத தீயைப் பற்றவைப்பவராகவே எனக்கு அனந்தன் நாயர் தெரிகிறார். 

நாவலின் இறுதிப்பகுதியில் வானம் பின்வருமாறு வர்ணிக்கப்பட்டிருக்கும், “பெயருக்குக் கூட ஒரு நட்சத்திரம் கூட இல்லாத இருண்ட சூனியமான ஆனால் பரந்த வானம்”. நாவலைப் படித்து முடித்தபின் அவ்வர்ணனை அப்படியே அனந்தன் நாயரின் வாழ்க்கைக்கும் பொருந்துவதாகவே எனக்குத் தோன்றியது. 

*

பள்ளிகொண்டபுரம்  (நாவல்) – நீல.பத்மநாபன் – காலச்சுவடு பதிப்பகம்.