பர்வா வாசிப்பனுபவம் – எஸ் எல் பைரப்பாவின் பர்வா, பாவண்ணன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது (பருவம்)

தரவு அறிவிலயலின் ஒரு பிரிவான கொத்து ஆய்வு (CLUSTER ANALYSIS) தகவல் புள்ளிகள் எப்படி குழுக்களாக அமைகின்றன என்று புரிந்து கொள்ள முயல்கிறது. ஒவ்வொரு புள்ளியையும் சில பரிமாணங்களில் சில குணங்கள் தன்மைகளின் சேர்க்கைகள் என்று அனுமானிக்கிறது. புள்ளிகளாக மனிதர்களை வைத்துக் கொண்டால் மகாபாரதத்தை ஒரு ஆதிநிலை க்ளஸ்டர் பகுப்பாய்வு என்று விரித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வரலாற்றின் போக்கையும் சமுதாயத்தின் தற்கால நிலையையும் குறித்த புரிதல் முயற்சிகளை மேற்கொள்ள முடிகிறது.
பல பரிமாண பெட்டியாக சமுதாயத்தை உருவகித்துக் கொள்ளலாம். புள்ளிகள் இந்த பெட்டிக்குள் நகர்கின்றன. ஒன்றுடன் ஒன்று ஈர்த்துக் கொள்கின்றன. விலக்குகின்றன .பெரிய புள்ளிகள் கருத்தை உருவாக்கி சிறு வடடங்களை கொத்துக்களை உருவாக்குகின்றன. கொத்துக்களை உருவாக்குவதற்கு விழுமியங்கள் தேவைப்படுகின்றன.அதை விட முக்கியமாக அடுத்த வட்டத்தில் உள்ள புள்ளிகள் தம்மை விட வேறுபட்ட விழுமியங்களை நம்புவதாகப் பிரச்சாரம் செய்கின்றன. புள்ளிகளுக்கு அடையாளம் முத்திரை இடப்படுகிறது. வாரிசுகள் உருவாகின்றன. சில தலைமுறைகள் கழிந்தவுடன் பழைய புள்ளிகள் விழுமிய அடித்தளமாக வளர்த்தெடுக்கப் படுகின்றன.
புள்ளிகள் வடடத்தை விட்டு வெளியேறி விடாமல் இருக்க கேள்விகள் பயன்படுகின்றன.
“நீ ஒரு வீர …. .அவனா ? ”
” இந்தப் பரம்பரையில் வந்தவனா?” என்பது போன்று.
இதனால் புள்ளிகள் தம் இடத்தில் ஆணி அடித்து நிறுத்தப் படுகின்றன.
“நியோக முறையில் பிறந்த பாண்டவர்கள் குரு வமிசத்தின் வாரிசுரிமை பெற்றவர்களா ?”,
“கர்ணன் தன பிறப்பை மறைத்து வில்வித்தை கற்றுக் கொண்டது சரியா?”
“நீங்கள் மட்டும் அறத்தை மீறி எங்கள் ஆட்களைக் கொல்ல வில்லையா?”
” பல்லாண்டுகளாக அரசு உங்களை ஆதரித்ததே , செஞ்சோற்று க்கடன் தீர்க்கவேண்டாமா ?” இவை போன்ற கேள்விகள் புள்ளிகளிடம் எழுப்பப் படுகின்றன.
பல புள்ளிகள் ஏன் இருக்கிறோம் என்ற காரணம் தெரியாமலேயே தமது வட்டத்திற்குள் இருக்கின்றன. சில புள்ளிகள் தம் அடிப்படை இயல்பினால் வடடம் மாறி விடுகின்றன. யுயுத்சு, சல்லியன் போன்றவர்கள் இந்த வகையில் வருகிறார்கள் (OUTLIER DATA POINTS).
ஆழமான, அலையற்ற ஆற்று நீரோட்டம் போல செல்லும் பர்வா , பாரத வர்ஷத்தின் வரலாற்றில் நிகழ்ந்த பெரும் போரின் சமூக, பொருளியல், உளவியல் கோணங்களை தொலை தூரப்பார்வையில் ஆராய்கிறது. போர்க்களத்தைக் காட்டாமல் , கண்டவர்கள் , கேட்டவர்கள் கூற்றுகளை விலகி நின்றும் விரைவாகவும் தருகிறது. பல திறந்த திரிகளை விட்டுச் செல்கிறது. துரியோதனன் கடைசியில் என்ன ஆனான் என்பது வேறுபட்ட பார்வைகளில் யூகமாக ச் சொல்லப் படுகிறது. இறுதிச் சடங்கு செய்ய முடியாமலேயே கர்ணன் உடல் பிற வீரர் பிணங்களுடன் அடையாளமற்றுக் கிடக்கிறது. நிகழ்வுகள் பணிப்பெண்கள் , கொல்லர்கள், சாமானிய சிறு மன்னர்கள் மூலம் சொல்லப் படுகின்றன.
அரசர், அறிஞர் போன்ற பெரிய புள்ளிகளுக்கும் , வீரர், சூதர் போன்ற சிறிய புள்ளிகளுக்கும் இடையேயான பரிமாற்றங்களை , நகர்வுகளை, திரண்டெழுந்த இரு படைகளின் உருவாக்கத்தை, அணியைத் தெரிவு செய்ய உருவாக்கிக் கொண்ட தர்க்கங்ககளின் அபத்தத்தை , இரு பெரும் புள்ளிக் கூட்டங்களின் மோதலை, பேரழிவை யதார்த்தமான மீள் சிந்தனையாகக் காட்டுகிறது.
யாருக்காக , எந்தக் கொள்கைக்காகப் போர் செய்கிறோம் என்று அறியாத வீரர்களே அதிகம். இன்றைய வாக்காளர்களும் பெரிதாக முன்னேறி விட்டதாகத் தெரியவில்லை. ஜனநாயகத்தின் அணையா நெருப்பாகக் கருதப் படும் அமெரிக்கா உட்பட.
மாயத்திற்கும் இறைத்தன்மைக்கும் சிரமம் கொடுக்காமலே சாமானிய மனிதர்களின் முயற்சிகளாகக் கதையை நகர்த்துகிறார் ஆசிரியர்.

அடிமை இனங்கள் (பணிப்பெண்களுக்கு அரசனிடம் பிறந்த குழந்தைகள் மூலம்) உருவாகும் முறை, அரசர்களின் பலவீனங்கள், தொல் குழுக்களின் இயல்புகள், பேரறிஞர்கள் தம் வாழ்வின் இறுதியில் முட்டி நிற்கும் குழப்பங்கள் (கிருஷ்ண துவைபாயனர்), வஞ்சம் ஒரு பெரும் வலிமையாக உருக்கொள்வது (துரோணர்), போர்களுக்கான பொருளியல் தேவைகள் (ஆயுதம் செய்ப்பவர்களின் வேலை வாய்ப்புகள்) இவற்றின் ஊடாக பெருங்காவியத்தின் மாற்றுக் கோணத்தை முன்வைக்கிறது.
தனி நபர் பகடிக்கும் சமூகப் பகடிக்கும் குறைவில்லை. கிருஷ்ணனின் புகழ் பெற்ற சமாதான தூதின் பேருரையில் கர்ணன் இருக்கையிலே உறங்கி விடுகிறான். அதைக் கண்ட துரியன் மர்மப் புன்னகை புரிகிறான். அர்ஜுனனுடன் துவாரகைக்கு செல்லும் பயணத்தில் பருமனான சுபத்திரை தேரில் படுத்துத் தூங்கி விழுந்து கொண்டேஇருக்கிறாள். போரின் பொது கௌரவர் படையின் குடில்கள் பின்புறம் தண்ணீர் இல்லாமல் பெரும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. போர் முடியும்போது திருதராஷ்ட்டிரனின் அரண்மனையில் உணவிற்குப் பஞ்சம்.
பீமன் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளாத முரட்டு வீரனாகவும் தர்மன் ஆசையை அறச் சொற்களால் அரைகுறையாக மூடி மறைத்துக் கொள்பவனாகவும் காட்டப் படுகிறார்கள்.
உதிர உறவு மற்றும் உரிமைகளின் அடிப்படைகள் கேள்விக்கு உள்ளாக்கப் படுகின்றன. நியோக முறையில் பிறந்த குழந்தை மீது பெற்றோருக்கு எவ்வகை உரிமை உள்ளது, என்று தொடங்கும் சிக்கல்களின் உச்சமாக பாஞ்சாலி தன் ஐந்து மகன்கள் கொல்லப் பட்ட போது எழுப்பும் வினா நிற்கிறது. பீமன் மகன் கடோத்கஜன் இறந்த போதும் அர்ஜுனன் மகன் அபிமன்யு இறந்த போதும் தந்தையர்கள் அடைந்த துயரின் ஆழம் ஐவர் மாண்டபோது வெளிப்படவில்லையே என்று கதறும் திரௌபதி இறந்த இவர்களுக்கு தான் மட்டுமே உறவு என்று அழுகிறாள். துக்கம் கொண்டாடும் முறைகள் குறித்த அடிப்படை வினாக்களைத் தூண்டுகிறது. பெற்றோர் எனும் இரு புள்ளிகளிடையே குழந்தைகள் மீதான அன்பு பங்கிடப் பெறும் முறைமைகள் , பல கணவர் முறையில் இருந்து விலகும் பரிணாமத்தின் வேர்கள் துலங்குகின்றன.
பீமன் தோளில் ஓங்கி அடிப்பதன் மூலம் தன் அன்பை வெளிப்படுத்தும் சால கடங்கடியம் அவள் கட்டளையை ஏற்று தன்னை விட்டு நினைவிலாப் பருவத்திலேயே விலகிய தந்தைக்காக ரத்தம் சிந்தும் கடோத்கஜனும் , வேளாண்மை செய்வதற்காக காட்டில் நெருப்பு வைக்கப் பட்டதால் மரங்களுடன் கருகி விடும் அசுரர் இனத்தவரும் , அரசுகளின் அடித்தளத்துக்குள் புதைக்கப் பட்ட அழிவுகளுக்கு மௌன ஆவணங்கள் ஆகின்றனர்.
இமயத்தின் உயரத்தில் வாழும் வலிமையும் ஒளியும் கொண்ட தேவர்கள் , காடுகளின் நாக,அசுர, ராட்சச குலங்கள் , இவற்றில் மேலுள்ளவரை வணங்கியும் கீழுள்ளவரை ஒழித்தும் நிலை நிறுத்திக் கொண்ட அரச இனங்கள் வியாசரின் ஆதி கதையை நாம் நிற்கும் தரைக்கு இறக்கி அணுக்கமாக செய்கின்றன. பீமன், அர்ஜுனன், கிருஷ்ணனின் பயணங்கள் , காடுகளின், கடலின் வர்ணனை மூலமாகவும் நீண்டு கொண்டே செல்லும் நினைவோட்டங்கள் மூலமாகவும் பேருருக் கொள்கிறது பர்வா.

கீதை உபதேசம் எல்லோருக்குமாக நிகழ்கிறது. எளிமையான கவுன்சிலிங் ஆக நிற்கிறது. நீதிக்காகவும் வஞ்சிக்கப் பட்டவர்களுக்காகவும் எழும் குரலாக உள்ளது கண்ணன் குரல்
ஊழின் பாதை மாந்தர் அறியாமலேயே தன் திசையை தீர்மானித்து விடுகிறது. பீஷ்மர் மணம் புரியாவிரதம் எடுத்துக் கொண்டபோதும் நகருக்கு அருகிலேயே கங்கைக் கரையில் தங்கிக் கொண்டது ஏன் என்னும் வினா விடையற்றது.
மகன் உண்ணா நோன்பில் இறந்த பிறகு கிருஷ்ண துவைபாயனர் அடையும் சலனங்கள், தாம் வேதத்தை இயற்றியவரா அல்லது தொகுத்தவர் தானா என்பது போன்ற இறுக்கமான சிக்கல்கள் ஒரு புறம் ; மறுபுறம் விழியிலா அரசன் எப்படி சிறுநீர் கழிக்கச் செல்வான், போர்க்களத்தில் உடைந்த ஆயுதத்தை சேகரித்து உருக்கி தாழ்ப்பாள் நாதாங்கி செய்து விற்கும் கொல்லன் என, மண்ணோடு தவழும் பிரச்சனைகள் பைரப்பாவின் கவனத்தில் இருக்கின்றன. . சமுதாயத்தின் புழக்கடையை கவனம் செய்வதால் மக்கள் இலக்கியமாக மிளிர்கிறது.
நகர வழி இன்றி தன் மேல் அடிக்கப் பட்ட ஆணியின் அடியில் தவிக்கும் சிறிய புள்ளிகளின் சிக்கலை இக்கதை பேசுகிறது, இறைத்தன்மைக்கு வேலை கொடுக்காமல்.
இன்று இந்தியாவில் மக்கள் வாழ்வோடு ஒன்றி விட்ட பாரதக் கதை மாந்தர் பலருக்கு ஆலயங்கள் உள்ளன. நம் கிராமங்களின் கதைகளுடனும் இயற்கையுடனும் அவர்கள் பெயர்கள் ஒன்றி விட்டன மேற்குத் தொடர்ச்சி மலையின் குந்திப் புழை , வெள்ளிங்கிரி மலையில் நிற்கும் பீமன் களி உருண்டை என்று சொல்லப் படும் பெரிய பாறை உருண்டை, கேரளத்தில் நீத்தார் சடங்கிற்கு உகந்த இடமாக நம்பப் படும் ஐவர் மடம், பல இடங்களில் திரௌபதி அம்மன் கோயில், சில இடங்களில் காந்தாரி அம்மன் கோயில்களில் தொடர்ந்து இடறி விழுந்து கொண்டிருக்கிறோம். பலவற்றைச் சொல்ல விரும்பி சிலவற்றை மட்டும் அவசரமாக முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளதாக தோன்றுகிறது. 975 பக்கங்களில் படித்து முடித்ததும் சுமையற்ற பெருமிதம் உருவாகிறது.

போர் முடிந்ததும் பெருமழை பொழிகிறது. விஷ்ணுபுரத்தை அழிக்க வரும் ஊழி வெள்ளம் நினைவுக்கு வருகிறது. வரலாற்றின் வயதான பக்கங்களை துடைத்தழித்து புதியவை முளைத்தெழ நீரும் நெருப்பும் விடடால் சிறந்த தூய்மைப் பணியாளர் யார் இருக்கிறார்கள்?
காலம் தவறிப் பொழியும் மழையில் காட்டப் படும் இறுதிக் காட்சி புதிய முளைத்தலுக்கு அழகிய சித்திரம். அர்ஜுனனால் எழுந்து சென்று வாளைக் கூட எடுத்து வைக்க முடியவில்லை. திரௌபதிக்கும் குந்திக்கும் முரண்பாடு ஏற்படுகிறது. கொட்டும் மழையில் கூ ண்டு வண்டிக்குள் கொல்லனின் மனைவிக்கு குழந்தை பிறக்கிறது. ஆனால் உத்தரைக்கு குழந்தை இறந்து பிறப்பதாகக் காட்டுகிறார் பைரப்பா.
இந்தப் பகுதியை 2021 ஜனவரி ஆறாம் தேதி இரவு வாசித்துக் கொண்டிருக்கையில் காலம் தவறிப் பெய்து கொண்டிருக்கும் மார்கழி மாத மழை புவியை ஆவேசத்துடன் அறைந்து கொண்டிருந்தது. சால கடங்கடி நினைவில் துலங்கி எழுகிறாள், தனது பேரனுக்கு மரக்குடிலில் ஊன் உணவை ஊட்டியபடி .
வியாசர் முதல் பைரப்பா வரை சொல்லித் தீராத , முளைத்துக் கொண்டே இருக்கும் பாரதத்தின் பக்கங்கள் போல பெருமழை விழுந்தது.