மழைப்பாடல் வாசிப்பு-3 – விக்ரம்
தங்கள் புறம் எவ்வாறு இருப்பினும் தங்கள் விருப்பங்கள் அல்லது விருப்பமின்மைகள், நிறைவேற்றங்கள் அல்லது ஏமாற்றங்கள் இவற்றிற்கப்பால் தங்கள் அகம் என தங்களுக்கான ஒர் நிகர்வாழ்க்கை கொண்டவர்களாக உள்ளனர் திருதிராஷ்டிரரும், பாண்டுவும், விதுரரும்.
இசையால் அமைந்தது திருதிராஷ்டிரரின் உலகு. அவர் இசையால் அறியவொண்ணாதது என்று ஒன்றில்லை. தன் திருமணத்தின் பொருட்டான காந்தாரப் பயணத்தில் தான் அறிந்திரா நிலத்தை அதன் விரிவை, அமைதியை தன் செவிகளாலேயே அறிந்துகொள்கிறார் திருதிராஷ்டிரர். ஆழமற்ற பாலைவன நதியில் பிரதிபலிக்கும் விண்மீன்களைக் கூட அவர் அந்நிலத்திற்கு வரும் முன்னரே இசையால் கண்டுவிட்டவராக இருக்கிறார்.

”விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனத்தில் நதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்” என்று விதுரரிடம் சொல்கிறார் அவர். திருதிராஷ்டிரரின் நிகர் வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள முடிந்த காந்தாரியின் அன்பை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். விழியற்றவரை மணம்முடிப்பது குறித்து மற்றவர் கருத்துகளுக்கு காந்தாரியின் பதில்களை கவனிக்க வேண்டும். எல்லா ஷத்திரியர்களும் விழியற்றவர்களே என்கிறார் அவர்.
”அவளிடம் சொல், மலைக்கழுகுகள் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று”
பின்னாளில் புத்திரசோகத்தில் தவிக்கும் திருதிராஷ்டிரரை அமைதிப்படுத்த காந்தாரியால் இயல்வது அவரது தனித்த உலகிலும் ஒர் அங்கமாக காந்தாரியால் ஆகிவிட முடிவதால்தான்.
பாண்டுவின் நிகர்வாழ்வு வேறொரு விதமானது. குழந்தைகளைக் கொண்டு, குறிப்பாக தருமனைக் கொண்டு தன் உலகை அவர் உருவாக்கிக் கொள்கிறார்.
“என் மைந்தனை தோளில் சுமந்துகொண்டிருக்கையில் நானடையும் மனமயக்குகள்தான் எத்தனை அழகியவை” என்றான் பாண்டு. “என் மூதாதையரை சுமந்துகொண்டிருக்கிறேன் என்று உணர்வேன். என் மூதாதையரின்ஊர்தியே நான். அவர்களுக்கு மண்ணைத்தொட்டு நடக்க ஊன்பொதிந்து உருவான கால்கள். அவர்களைதொட்டறிய தசைஎழுந்த கைகள். பின்பு நினைப்பேன். மண்ணாக விரிந்து கிடப்பவர்கள் என்மூதாதையரல்லவா என. அவர்களில் ஒரு துளியை அல்லவா என் தோளில் சுமந்துசெல்கிறேன் என…
பாண்டுவின் உலகினுள் குந்தி நுழைவதில்லை.
விதுரரின் நிகர்வாழ்வு வேறொரு வகையில். அதைப்பற்றி திருதிராஷ்டிரருடன் கருத்துப்பகிர்ந்து கொள்கிறார் அவர். புறத்தில் சூத அமைச்சர் எனப்படுவது, தன் எல்லைகள் அவருக்கு பொருட்டல்ல, எவ்விதமான தீவிர விழைவும் அவருக்கு அங்கில்லை. மானுட உணர்வுகள் எதையும் நேரடியாகச் சுவைக்க முடியாத, அவற்றை அறிவாக உருமாற்றி அறிதலின் இன்பமாக மட்டுமே அனுபவிக்கும் தன் இயல்பை அவர் திருதிராஷ்டிரரிடம் கூறுகிறார். ஆனால் அவருக்கு பெரிதான நிகர்வாழ்வு காவியங்களின் வாசிப்பில் உள்ளது.
“ஆனால் அரசே, நான் அறியும் இன்னொன்று உள்ளது. ஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன். அங்கேஇருப்பது அறிவு. ஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறது. காவியங்களில்தான் நான்மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசே. வெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவை. காவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவை. பிற எவரும் அறியாதஉணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன். பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன். காதலைவென்று களித்திருக்கிறேன், இழந்து கலுழ்ந்திருக்கிறேன். இறந்திருக்கிறேன். இறப்பின் இழப்பில்உடைந்திருக்கிறேன். கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும்முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.”
புறத்தில் விழியற்ற திருதிராஷ்டிரர் நிகர்வாழ்வில் விழியுள்ளவர், புறத்தில் பெரிதும் துய்ப்பற்ற விதுரர் நிகர்வாழ்வில் பெருந்துய்ப்பாளர், புறத்தில் அதிகம் வாழ்நாள் பெறாத பாண்டு நிகர்வாழ்வில் நீடுவாழ்ந்தவர்.
அன்னையரின் ஆடல்களே பின்னாளில் கௌரவரிடமும் பாண்டவரிடமும் பேருருக்கொண்டன என்றாலும் அவற்றில் இம்மூவரது அகவாழ்வும் தமக்குரிய தாக்கத்தையும் செலுத்தின என்று எண்ணுகிறேன்.
திருதிராஷ்டிரர் – மழைப்பாடலின் சலுகைகள்
மந்தாரம் உந்து மகரந்தம்
மணந்தவாடை
செந்தாமரை வாள்முகத்திற் செறி
வேர்சிதைப்ப
தந்தாம்உலகத்திடை விஞ்சையர்
பாணிதள்ளும்
கந்தார வீணைக்களி செஞ்செவிக்
காது நுங்க
அனுமனின் இலங்கை நோக்கிய வான் பயணத்தில் வான்மீகி அவருக்கு வழங்கியதைக் காட்டிலும் அதிக சலுகைகள் வழங்குகிறார் கம்பர். அனுமனின் முகத்தின் வியர்வையை வாசம்வீசும் மந்தார மலர்களின் காற்று போக்குகிறது வானின் இசைவலரின் பிறழாத காந்தாரப் பண்ணின் வீணை இசை கேட்டு அவரது செவிகள் களிக்கின்றன.

மொத்த வெண்முரசும் அதன் முதன்மைப் பாத்திரங்களுக்கு, துணைப்பாத்திரங்களுக்கு வழங்கும் இடமும் சலுகைகளும் மிகப்பெரியவை. அவற்றை மகாபாரதத்துடன் அல்லது பிற காவியங்களுடன் ஒப்புநோக்குவது அவசியமற்றது எனினும் ஒரு சுவாரஸ்யத்திற்காக மழைப்பாடலின் திருதிராஷ்டிரரை எடுத்துக்கொள்கிறேன். திருதிராஷ்டிரருக்கு ஜெயமோகன் அளிக்கும் இசை உலகு மிகப்பெரியது. அத்துடன் பேரழகியான காந்தாரியுடன் திருதிராஷ்டிரரின் திருமணம் நிறைவேற பீஷ்மர் மீதான மதிப்பு, காந்தாரியின் கனிவு, சகுனியின் அரசியல் கணக்குகளுக்கு ஒத்து அமைவது எனப்பல காரணங்கள் இருப்பினும் திருதிராஷ்டிரரை பலரது பரிவுக்கு உரியவர் என்பதல்லாமல் ஒரு தகுதிமிக்க மாவீரராகவே நிறுத்துகிறது மழைப்பாடல். காந்தாரியைக் கைப்பற்றும் பொருட்டு லாஷ்கர்களுடன் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி அவருக்கு வழங்கப்படுகிறது. பொதுவாக வெண்முரசின் போர்காட்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சுபவை, ஒவ்வொரு நாயகருக்கும் எனப் பல அமைந்திருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தன்மையும் கொண்டவை. திருதிராஷ்டிரரின் இவ்வெளிப்பாட்டில் திறனில் ஒரு சில நிமிடங்களுக்கு அவரை கம்பனின் சுந்தரகாண்டத்தின் அனுமனுக்கே நிகர்த்துகிறார் ஜெயமோகன்.
ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த;
இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த;
மடிந்தன மறிந்தன முறிந்தன மலைபோல்
படிந்தன முடிந்தன கிடந்தன பரிமா.
வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார்
மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்;
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார்
சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர் மலைந்தார்.
(அனுமன் நாற்படைகளையும் அழித்தல் – சம்புமாலி வதைப்படலம்)
விழிப்புலனுக்கு நல்அனுபவம் அளிப்பது பெருமழையை பெய்யக் காண்பது, பெய்யலினூடே விசைந்தாடும் மரங்கள், அதன் தழுவிப்படர்ந்து சிலிர்க்கும் கொடிகள், நனைந்த புற்கள். ஒரு பெருமழையின் அழகைக் காண்கையிலும் கொள்வன பல எனில் விழிகள் கொள்ளாமல் தவறவிடுவனவும் பல. எனவேதான் ஒவ்வொரு மழையும் புதுமழை, காணதன காணப் பெறல் கண்டன புதுமை பெறல் என. கொள்திறனுக்கு ஏற்ப முடிவிலி என தன்னை விரித்துக்கொண்டே செல்கிறது இயற்கை. வெண்முரசின் வாசிப்பு –மழைப்பாடல் வாசிப்பும் அது போன்றதுதான்.