அடியற்ற ஆழம் நிரப்பும் ஒளி – உமா

மாடி வீட்டு கனவு நிறைவேறிய அந்த நாளில் பிடி சுவர் ஏரி அடிவானம் பார்த்திருப்பேன். அங்கே அப்பால் ஏதோ ஒரு உலகம் இருக்கலாம் அதற்கான கதைகளும். அங்கிருந்து எழுந்து வரும் ஏதோ ஒரு மாய கதைச் சொல்லிக்காக எப்போதும் தனித்திருந்திருக்கிறேன். அவனை கண்டுவிட்ட சிறுமியின் துள்ளல் கொண்டு, இப்போதுதான் உலகம் பார்க்கும் மழலையின் மாறா வியப்புடன் நான் ஒவ்வொரு பக்கத்தையும் கடக்கிறேன்.

தென் கடற்கரை நுனியில் தன்னந்தனிமையில் காத்திருப்பது அதற்காகவே. ஆம் கன்னி காத்திருப்பது அதற்காகவே.. காத்திருப்பது அதற்காகவே… என கண்ணகை கதைக்குள் நுழைகிறாள்.

கண்ணகி என சீதை என கற்பென பத்தினியென எத்தனை எத்தனை கதைகள். உண்மையில் பெண்களுக்கு பட்டாம்பூச்சி பருவத்திற்கு அடுத்துதான் கூட்டுப்புழு பருவம்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர் என கண்ணகியை படித்து பழக்கப்பட்ட நமக்கோ இங்கே உறைபவளின் கேள்வி பலரை திடுக்கிடச் செய்திருக்கும்.

கணவனை பிரிந்த பெண் உண்மையில் இழப்பது எதை? கணவன் என அவள் அடைவது எதை? சிறுமி என கன்னி என அன்னை என ஆனபின்பும் அவள் தேடும் அடையா ஆழம் எது?

பார்க்கும் பார்வைக்கு கொப்பளிக்கும் நீலவண்ண பரப்பையும், அடியில் விடியா கருமையையும் ஆன கடலைவிட மிகச் சிறந்த படிமம் பெண்களுக்கு இல்லை.

” நீலம் கருமைக்குள் ஒளி பரவும் வண்ணம்”. “புன்னகைக்கும் கருமை நீலம்” “அறியமுடியாமைகளின் நிறம் நீலம்” – கடக்க முடியா வரிகள்

கண்ணகி சொன்னாள் மண்புழு போல் மாந்தருக்கும் உண்டதெல்லாம் உடல் மீறி தெரியும் என்றால் அறிவர்கள் உண்டா? கற்பரசி உண்டா? சான்றோர் தான் உண்டா? என்ற கேள்வியுடன் தான் கண்ணகி பயணத்தை தொடங்குகிறாள்.

தேவந்தியின் வெறி குரலில் எழுந்து வரும் பெண்களின் பெரு விழைவு
“நான் தேடியது அவனை அல்ல ஆட்டனை அல்ல வாள் ஏந்திய வீரனை தேடினேன். தோல் திரண்ட மறவனை தேடினேன். ஆனால் நான் தேடுவது எல்லாம் அவ்வகையிலேயே அடைய வேண்டும் என்றனர் அறவோர் விழவிலும் புனலிலும் அவனை சுமந்தேன்” – ஆதிமந்தி

“நான் கற்பென்னும் பெருந்துயரில் கண்ணீருடன் வாழ்ந்தவள்”- நக்கண்ணை
ஐவகை நிலமும் எங்கள் பெருந்துயர் வெளியே மூவகை தமிழும் எங்கள் கடுந்துயர் மொழியை என தேவந்தியின் வரிகள் உள் ஒலிக்காத பெண் உண்டா.

அகச்சிறை என்ற சொல்லை மிக எளிதாக கடந்து விட முடியாது. அதன் ரகசியம் தேடி உள் செல்பவலாக கண்ணகி என்றால் அதன் கதவை முட்டி முட்டி நிலையழிபவலாக கோப்பெருந்தேவி.

நீரரமகளிர் உண்மையில் பெண்களின் கட்டற்ற விளைவுகளின் குறியீடு. உண்மையில் வெண்ணிக்கு கிடைத்த முத்துதான் அவளின் முடிவான கண்டடைதலா?
இரவின் கனவுகளில் தனித்திருப்பது எதற்காக? நீரில் மூழ்கி தன் உடல் மறந்து போகத்தானா? உலகியலின் நெறியெல்லாம் அவள் உடலில் இருந்து தொடங்குகிறது. அவள் உடலின் ரகசியம் தேடிய பயணத்தின் முடிவில் திறக்கிறது மெய்ம்மையின் பாதை. உடலை சிறை என உணர்பவர்கள் அலை என கொந்தளிக்கிறார்கள். அகம் நோக்கிய கேள்வியால் அதை கடந்து சென்றவர்கள் மெய்ம்மையை அடைகிறார்கள்.

உண்மையில் தொடுகை மண் சார்ந்தது என்றால் பார்வை விண் சார்ந்தது அல்லவா. மனதிற்கு முன் முழு முற்றாக தன்னை முன்வைக்கும் பெண்கள் தெய்வங்களுக்கு நிகரென அமைகிறார்கள். அவள் பேய் முகம் கொள் மெய்ம்மையையும் பெண் முகம் கொள்ளும் விழைவையும் ஒருசேர அருள்பவள். இங்கு அவள் நீலி.

அன்பு ஒவ்வொரு நாளும் புத்தளிரும் பூவும் விட்டு என்றும் இருக்க முடியும். அன்பு மட்டுமே, கற்போ பொறையோ இல்லை. மீண்டும் மீண்டும் பெண் அகம் மீற விரும்புவது எதனால்? எதை கடக்க இயலாது மீண்டும் சிறுமி என மீள முயல்கிறாள்?

மகதியின் ஒற்றை பதில் துறப்பதற்கு வீடு விட்டு இறங்க வேண்டியதில்லை. உண்மையில் பெண்மையை விட்டு பெரும் பாதை ஏது மெய்மைக்கு. அடியற்ற ஆழத்தை அவனால் வெறுமையால் மட்டுமே நிரப்ப முடியும், “ஒளி” என்று அவள் சொல்லும்வரை.

மெய்யென இங்கு நீண்டு கிடக்கும் வரிகள் முழுவதும் மீள மீள நான் அடைவது ஒன்றே. அவள் மனம் கடலின் ஆழம். நீலம் அவள் அரிதாரம். விண்ணால் அலைக்கழிக்கப்படுபவள், மண்மீது மாறா நெறியில் நிற்பவள். கன்னியென அன்னையென,பேராச்சி எனஅவள் பயணங்களில் பல ஒப்பனைகள். உண்மையில் மாறா கல்லென அவள் உறையும் ஆழம் இருள். இருளின் புன்னகையே நீலம்.

உமா

கொற்றவை – காளீஸ்வரன்

சொல்லில் உறையும் தீ தன் சிறை மீறுதலே காப்பியம் என்றனர் கற்றோர்.

*

சிலப்பதிகாரம் என்றவுடனே நமக்கு பொதுவாக நினைவுக்கு வரும் விசயங்கள் என்னென்ன ? கண்ணகி, கோவலன், மாதவி, நெறி பிறழ்ந்த பாண்டிய மன்னன், எரிக்கிரையான மதுரை, இளங்கோ, சேரமான். பின்பு, இவர்களின் வாழ்வினூடே தமிழர் பெருமையை, கற்பை, மாண்பை கூடவே அறம் கூற்றாகும் உண்மையை சொல்லிச்செல்லும் கதை. உண்மையில் கொற்றவை நாவலை துவங்கும் போது எனக்கும் அப்படியொரு எண்ணம்தான். கூடவே, மேற்சொன்ன களத்தை ஆசான் திரு.ஜெயமோகன் எப்படி எழுதியிருப்பார் எனும் ஆவலும். ஒரு வாசகனாக என்னுடைய எதிர்பார்ப்பை நாவல் கடந்து சென்றுவிட்டது. நாவல் அல்ல. இது புதுக்காப்பியம். வெறுமனே பெயரளவில் காப்பியம் என்றல்ல. உண்மையில் கையாண்ட மொழியில் கூடி வந்திருக்கிறது அக்காப்பியத்தன்மை. 

காப்பியம் பஞ்சபூதங்களான நீர், காற்று, நிலம், எரி, வான் என ஐம்பகுதிகளாகப் பஞ்சபூதங்களை நினைவுறுத்தும்படி பகுக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பு வெறுமனே பாகம் பிரிப்பதாயன்றி, காப்பியத்தின் நடைக்கு வலுசேக்கும் படி அமைந்திருக்கிறது. 

  1. நீர்

”புன்னகைக்கும் கருமையே நீலம்” முதல் பத்தியில் வரும் இவ்வரிகளில் துவங்கிய மொழியில் வசீகரத்தில் ஆழ்ந்த என்னுடைய திளைப்பு நாவல் முழுவதுமே தொடந்து வந்தது. ஆதியில் புழங்கி வந்த பல மனிதர்கள், அவர்தம் நகரங்கள், காவல் தெய்வமாயமைந்த முக்கண்ணன் மற்றும் அன்னையர். கடல்கோள் நிகழ்ந்து ஆழத்தில் அவர்கள் உறைதல் என இப்பகுதி பேசுவது பண்டைய காலம். கூடவே ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவர்தம் பெயர் துலங்கி வந்த காரணம். இவை பேசும் பொருளைத் தாண்டி குறிப்பிடத்தக்க அம்சம் அது சொல்லப்பட்ட விதம். உதாரணமாக சொல்வதென்றால், சீவங்களின் தலைவன் சிவனென்றாதல், மதுரை என்றான மதில் நிரை, எல்லை மீது கடல் அலை பரவும் அலைவாய், பழையோனும் பண்டையோனும் மருவி பாண்டியனாதல், அகத்திலிருந்து வந்த அகத்தவன், அதுவும் மருவி அகத்தியனாதல் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த விவரணைகளின் உட்சமாக எனக்குத் தோன்றியது “தன்னை இமிழும் மொழியானாதால் அது தமிழானது”. தமிழில் புழங்கிவரும் சொற்கள்/பெயர்கள் உருவான விதம் அழகு என்றால், மொழிக்கு தமிழ் எனப்பெயர் வந்த இடம் பேரழகு. 

  1. காற்று

கண்ணகி பிறப்பு, கோவலனுடனான திருமணம், கோவலனுக்கு மாதவியுடன் காதல், பின் ஊடல், கண்ணகியுடன் மதுரை செல்லுதல். போலவே, மோகூர்ப் பழையன் குட்டுவன் மகள், தென்னவன் பாண்டியனின் கோப்பெருந்தேவியாதல் என நானறிந்த சிலப்பதிகாரத்தின் துவக்கப்பகுதிகள் அனைத்தும் நிகழ்வது “காற்று” எனும் இப்பிரிவில். கண்ணை அன்னையில் வடிவமென கண்ணகியும், கொற்றவையின் வடிவமென கோப்பெருந்தேவியும் அவரவர் குலங்களால் சீராட்டப்படுகின்றன. அவ்வன்னைகளின் காற்சிலம்புகளின் ஒரு நகலே இவர்களிடமும் இருக்கிறது. வணிகக்குடியில் பிறந்த கோவலனின் யாழ் இசை ஆர்வம் வரும் பகுதிகள் அவன் தடம் மாறியதற்கான காரணத்தை சுட்டுகின்றன. இப்பகுதிகளும், போலவே ஒரு நள்ளிரவில் வணிகம் மறந்து மூடப்பட்ட தன் கடைமுன் நின்று கோவலன் வருந்துமிடமும், உணர்வுப்பூர்வமானவை. இத்தகைய விவரிப்புகள் எப்பாத்திரத்தையும் ஒற்றைத்தன்மையுடன் அணுகாமல் அவர்தம் நிலையையும் உணர வழிவகுக்கின்றன.

  1. நிலம்

மாதவியுடனான ஊடலுக்குப் பின்னர், கண்ணகியும் கோவலனும் மதுரை செல்கிறார்கள். ஐவகை நிலங்களைக் கடந்து மதுரையை அவர்கள் அடைவது வரை நிலம் என பகுக்கப்பட்டுள்ளது. கவுந்தி அடிகளாக மதுரை வரை துணைவரும் நீலிக்கும் கண்ணகிக்குமான உரையாடல்கள் இப்பகுதியின் அற்புதங்கள். கட்டற்ற நீலியை அஞ்சும் கண்ணகி, ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு விதமாக அன்னை வெளிப்படும் தருணங்கள், நீலியுடனான கண்ணகியின் உரையாடல்கள், அவ்வுரையாடல்களினூடே, பயணம் நீள நீள அதற்கேற்ப கண்ணகி அடையும் மாற்றங்கள், ஒவ்வொரு வகை நிலத்தின் சிறப்பியல்புகளையும் அந்நிலத்துக்குரிய கண்களைக் கொண்டு கண்ணகியை (நம்மையும்) காணவைக்கும் நீலி என இப்பகுதியில் என்னைக் கவர்ந்த அம்சங்கள் பல. ”வருபவர்களுக்கும் நீங்குபவர்களுக்கும் நடுவே துலாக்கோலென அசைகிறது இந்நகர்” என சுட்டப்படும் மதுரையின் துணைவாயிலில் வழியே கண்ணகியும் கோவனும் நுழைகிறார்கள். 

  1. எரி

மதுரையில் கண்ணகி-கோவலன் வாழ்வும், சிலம்பு விற்கச்சென்ற கோவலன் அநீதியால் கொல்லப்படுவதும், சினந்தெழுந்த கண்ணகியால் மதுரை எரிக்கப்படுவது என எரி பகுதி பகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி சுருக்கிச் சொல்லி விட முடியாத வண்ணம் இருக்கிறது கதை நகர்வு. மனைவிக்கு அஞ்சியோ அல்லது அவள் மீதான காதலாலோ மதுரையை அவள் பிறந்த மறவர் குலம் மறைமுகமாக ஆள, கண்டும் காணாமலும் இருக்கிறான் மன்னன், அதனாலேயே அறம் பிழைத்தது பலமுறை நிகழ்ந்திருக்கிறது. அத்தனை பிழைக்குமான மொத்தப் பிழையீடாக தன் உயிரை நிகர் செய்கிறான் பாண்டியன். மன்னவன் கொஞ்சம் சிந்திக்கும் தருணத்திலும் “மறவர் இட்டதே மண்ணில் அறம்” என அல்லவை சொன்ன கோப்பெருந்தேவிக்கும் மெய்யறமே கூற்றாகிறது. ஒவ்வொரு முறையும் மறவர் குடித் தலைவன் பழையன் குட்டுவனின் அடாத பேச்சுக்களால் சினம் கொள்ளும் எண் குடித்தலைவர்களின், அம்மக்களின் உள நெருப்பும் மதுரையை எரித்த பெரு நெருப்பினுள் சிறு துகள்களாகவேனும் அமைந்திருக்கக்கூடும்.    

  1. வான்

விண்ணேகிய கண்ணகியின் தடங்கள், மலைமக்கள் மூலம் அதை அறியவரும் சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகளான ஐய்யப்பனின் கதை, மலையேறிச்சென்று அன்னையில் அடிகளை பார்க்கும் தருணம், சேரமான் செல்லும் வழியில் சந்திக்கும் பல்வேறு மக்கள், அவர்தம் சடங்குகள், எங்கும் மாறாத ஒன்றாய் தொடர்ந்து வரும் பேரன்னை, கண்ணகி சென்ற வழியில் தானும் செல்லும் பெருந்தோழி, இளங்கோ என இப்பகுதி பகுக்கப்பட்டுள்ளபடியே உச்சம். பல இடங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. மாந்தர் தம் மெய்மையின் மூன்று நிலைகளை அரசவையில், படிவர் தாமரையைக் கொண்டு விளக்கும் (முகிழ்த்தாமரை, ஓரிதழ் விரிந்தது, முற்றிலும் விரிந்தது) இடமும், கொடுங்கோளூர் (கோள் ஓயா ஊர் ) பெயர் வந்திருக்கக்கூடிய விதமும், அறிவுக்கும் அறியாமைக்குமான ஒப்பீடும் (உதாரணம் : அறிவு என்பது அறியவொண்ணாமையின் வான் முன் எழுந்த குன்று) மிகவும் அற்புதமான விவரிப்புகள்.  

அன்னையர் மறைய, அன்னையர் பிறக்க, தாய்மை மட்டும் அழியாமல் இம்மண்ணில் வாழ்கிறதென்று கொள்க – என இக்காப்பியத்தில் ஒரு வரி வருகிறது. நான் எண்ணியிருந்தது போல, இக்காப்பியம் கண்ணகியின் கதையல்ல, மண்ணில் யுக யுகமாய் வாழ்ந்து வரும் அன்னைகளின் கதை, அன்னைகளுக்கெல்லாம் அன்னையாய் அமைந்த பேரன்னையின் கதை.

”உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டு செல்லும் ஓயாப்பெருநடனமே காப்பியம் என்க” இது காப்பியம் குறிந்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது; இவ்வரிக்கு மிகச்சிறந்த உதாரணமாக “கொற்றவை” எனும் புதுக்காப்பியம் அமைகிறது. 

பின்குறிப்பு :

நாவலின் இறுதிப்பகுதியில் வருகின்றன ஆசிரியரின் கன்னியாகுமரி பயண நினைவுகள். அதுவரை பஞ்சபூதங்கள், ஐவகை நிலங்கள் ஊடே வரலாற்றில் முன்னும் பின்னுமாக இந்நாவலில் திளைத்த நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தரும் பகுதி அது. எப்போதுமே அபுனைவுகள் என்றாலும் கூட, ஆசிரியர் திரு. ஜெயமோகனுக்குள்ளிருந்து ஒரு வசீகர கதைசொல்லி வெளிப்பட்டுக்கொண்டே இருப்பார். இப்பகுதி அதற்கான சரியான உதாரணம். இப்பகுதியை வாசிக்கும்போதே என்னுள் தோன்றிய இன்னொரு புத்தகம் “ஜெ சைதன்யாவின் சிந்தனைமரபுகள்”. அதன் ஒரு (அல்லது முதல் ?) கட்டுரையில் இதே அனுபவம் வேறொரு கோணத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

இறுதிப்பகுதியில் வரும் இன்னொரு சம்பவம் – வெறியாட்டு கொண்டெழுந்து ஆடும் பெண்ணின் கணவனை (மாணிக்கம்) அவளின் பார்வையிலிருந்து வெளியேறும்படி அனைவரும் சொல்லுமிடம். கிட்டத்தட்ட இதே சம்பவத்தை பின்புலமாகக் கொண்டு, திரு.ஜெயமோகனால் எழுதப்பட்ட ஒரு அற்புதமான சிறுகதை நினைவுக்கு வருகிறது. (சிறுகதையின் தலைப்போ, சுட்டியோ கிடைத்தால் பகிர்கிறேன்).

கொற்றவை வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்.

எழுத்தாளார் பி ஏ கிருஷ்ணன் அவர்கள் ஒரு முறை கோவை தியாகு நூலகத்தில் கீழடி ஆய்வு பற்றிப் பேச வந்திருந்தார். தனது கருத்தை முன் வைக்கும் முன் ஒரு வினாவை எழுப்பினார் “ உங்களில் யாருக்காவது  குமரிக்கண்டம் இருந்திருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளதா?” என்று கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை. ஒரு நண்பர் “அப்படி ஒரு கண்டம் இருந்ததாக  உறுதிசெய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” என்று சொன்னார். எழுத்தாளர் சிரித்துக் கொண்டே  தனது படக்காட்சியைத் துவக்கிவிட்டார்.

மடகாஸ்கர் தொட்டு தென் துருவம் வரை பரவிய தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு வேளை கற்பனையா?   ஆனாலும் குமரி அன்னை எதையோ பார்த்துக் கொண்டு தான் நின்றிருக்கிறாள். சில வேலி நிலமாகவே அது இருக்கட்டுமே. 

பரளியாறு என்ற பெயரைப் பலமுறை  கேட்டிருந்தும் திடீரென ஆழத்து இழையொன்றைச் சுண்டுகிறதே. நீலகிரி மலையேற்றப் பாதையில்  முதல் சோதனைச் சாவடி வருமிடத்தில் பாலத்துக்கு அடியில் பொங்கி ஒடும் பரளியாற்றுக்குப் பெயர் வைத்த முன்னோர் எவர்? அவர் கன்னியாகுமரிக்குத் தெற்கே ஓடி, கடலுக்குள் புகுந்து விட்ட பல் துளி ஆற்றின் நினைவாக வைத்த பெயர்தானோ இது?

கிழக்குக் கடலில் காவிரிப்பூம்பட்டினக் கரையில்  கண்ணகி வங்கக் கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இடுக்கி மாவட்டம் வண்ணாத்திப் பாறையிலும் கொடுங்கல்லூரிலும் பழங்குடியினரால் வழிபடப்படும் கண்ணகியும் அவள் சிலம்பும் சொல்லாமல் விட்டுச் சென்றதென்ன என்று கனவின் ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுக்கிறது கொற்றவை – புதுக் காப்பியம்

வெறும் வரலாறு சலிப்பூட்டும். ஆனால் ஆழ்கடலை விட ஆழமான  மனதின் கனவு நம் முன்னோர்களின் மொழியையும் கடல் கொண்டு விட்ட நகரங்களையும் ஒளி மிக்க படைப்பூக்கத்துடன் நிகழ்த்திக் காட்டும். அந்த ஒளியில் துலங்கும் உண்மையும் நிறைவும் வாசகனுக்கு அகவயமானது. ஆய்வுகள் நுழைய முடியாத இருண்மை அது.

பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்ட நிகழ்வை சிலப்பதிகாரத்திலும் பல்துளி ஆற்றினைப் பற்றிய குறிப்பை புறநானூறு (9) பாடலிலும் காண்கிறோம். கடல் கொண்ட நாடு. இளங்கோ அடிகளுக்கு துயரை அளித்திருக்கும். கபாடபுரம் எழுதிய புதுமைப் பித்தனுக்கு கனவுக்குள் குமுறலைக் கொடுத்திருக்கும். 

பெருந்துயரிலிரிந்து  பிறக்கின்றன பெருங்காப்பியங்கள். ஜெயமோகன்  கடல் போல அலைபாயும் வினாக்களுடன்   தான் கற்ற பேரிலக்கியங்களும் ஆய்ந்த சங்கத் தமிழும் விடுத்த அறைகூவலுக்கு நீலக்கடல் போன்ற தன் ஆழ்ந்த   மனதுக்குள்ளிருந்து எடுத்து வந்த காலங்கள் அடைகாத்த  முத்து தான் கொற்றவை.

தரிசனங்களும் தத்துவங்களும் அந்த முத்தில் ஒளி பாய்ச்சுகின்றன.  குடித் தெய்வங்கள், முன்னோர் கதைகள்,  பேரழிவுகள் இவற்றின் கண்ணீரே அதன் முதல் துளி. தனது அழகிய தமிழால் அந்த நெருப்புப் பருவை சிப்பிபோட்டு   மூடி வைத்துள்ளார்.

கொடுங்கோளூர்  பகவதி ஏன் தன் கையில் சிலம்பை வைத்துள்ளாள்? உலகெங்கும் கோயில் கொண்ட அன்னை உருவங்களின்   கண்களில் ஏன் ஒரு கலக்கம் கனிவுடன் கலந்து இலங்குகிறது? அவளுடைய துயரம் அனைத்து மானுடம் மீதான கருணையா? அது கடலுக்கு அடியில் கிடக்கும் மீனுக்குமானதா? அவளுக்கு நேர்ந்த இழப்புக்கு மாறு செய்ய குறும்பரும்,குறிச்சியரும், பணியரும் முள்ளுவரும் துள்ளி விழுந்து கழுத்தை வெட்டிக் கொண்டதேன்? தற்பலி , மிருகப் பலியாக மாறி, பின் கும்பளங்காயில் குங்குமம் பூசி வெட்டும் சடங்காக மாறி வந்த சில ஆயிரம் வருடங்களில் அன்னை வழிபாடும்  சமயமும் நூல்களும் வழிபாடுகளும் வளர்ந்து வந்த பாதை எது?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி, விளக்கங்கள் தந்து மேலும் தீராத ஏக்கத்தையும் துயரையும் அளிக்கிறது கொற்றவை. பெருந்துயரையும் அதனால் வரும் ஓய்வையும் தருபவை பெருங்காப்பியங்கள். 

பரதவர் –  – பண்டையன் என்பதால் பாண்டியனானது; கோழிச் சின்னம் கொண்ட சோழனின் ஆட்சி, அன்னை முழுமை அடைந்த சேரனின் நாடும் அவன் தம்பி இசைத்த சிலம்பும்,  சிலம்பை அணிந்த புகார் நகரக் கண்ணையன்னை, மதுரையை அருளும் மதுராபதி அன்னை, கடலோரம் காக்கும் சம்பாபதி அன்னை, கடலடி உறங்கி ஊழிகளின் போது சிரிக்கும் பேராச்சி, பாலையை ஆளும் கொற்றவை, அருகர் அடி பணிந்த அன்னையின் தவம், இளங்கோ அடிகள் ஐயப்பனாக சபரி மலை அமர்ந்து யோகத்தில் உடல் உகுத்தது என்று வழிபாடுகளையும் வரலாறூகளையும்  தொன்மங்களையும் குலநம்பிக்கைகளையும் நில நீர் மலை விரிவுகளையும் தமிழென்னும்  தேன்குடத்தில் முக்கி எடுத்து உருட்டித் தருகிறது கொற்றவை.

கொற்றவை கடலின் ஆழத்தையும் அதை விட ஆழமான வரலாற்றின் இருட்டையும் காட்டுகிறது. பெண்ணைத் துன்புறுத்தி துன்புறுத்தி அவள் பொறுமை வெடித்தெழும் எல்லை வரை செலுத்தி ஊழியின் ஆழி போல அவள் சினம் பெய்து ஊர் அழிந்தபின் அவளை அன்னையென அமர்த்தி அடங்கி வாழும் சமூகத்தைக் காட்டுகிறது.  மானுடன் உருவாக்கிக் கொண்ட சமூக அடுக்களில் கீழுள்ள அடுக்கு காலத்தின் ஒரு புள்ளியில் மேலே இருந்ததையும் எளிய மரத்தடியில் குடி கொண்டிருக்கும் அதன் தெய்வங்கள் முன்பு கோட்டத்தின் மையப் புள்ளியில் கோலோச்சிக் கொண்டிருந்ததையும் பேசுகிறது.

மணலில் தண்துளி பெய்து நிலத்துடன் தான் எழுதிவைத்துக் கொண்ட நெறியைக் கடல் மீறுவதில்லை. பொங்கிப் பொங்கி வரும் தனது அனந்த கோடி அலைக் கரங்களையும் நரம்பு முறுக்கிப் பொறுத்துக் கொண்டே இருக்கிறது . நிலவு முழுதொளிர்ந்து ஒவ்வொரு துளி நீரையும் மேலெடுத்து வீசும் இரவிலும் இருள்நீல  ஆழத்தில் இருக்கும் பேராச்சி வரம்பு மீறும் வருணனின் கைகளைப்பிடித்து இழுத்துக் கொள்கிறாள். நிலமாளும் மாந்தரின் ஆணவத்தால் நெறி பிறழ்வு நீண்டு போய் எளியோரின் இதய ஓலம் எல்லை தாண்டும் போது ஆழ்கடல் அன்னை விழி நெறிக்கிறாள். ஆகா என்று எழுகிறது ஆழிப் பேரலை.

பின் தொடரும் நிழலின் குரலிலும் விஷ்ணு புரத்திலும் வெளிப்படும் ஆசிரியரின்  நீதியுணர்வு, பெண்களும் ஒடுக்கப் பட்டோரும் தலைமை தாங்கும்போது போரிலா உலகு புலப்படும் என்ற முடிவை வைக்கிறது. ஊழிதோறும் உள்ளகத்தில் ஒதுங்கி, அறிவின் அற்புத வாய்ப்புகளை இழந்து கொண்டே நிற்கும் பெண்மையும் காலாதீதமாக நாலந்தரமாக நடத்தப்பட்டு வந்த மனிதர்களின் அறமும் ஜெயமோகன் எழுதி எழுதித் தீராத ஏக்கப் பொருண்மைகள். பெண்ணின் பெருந்தாய்மையும் ஏழைகளாக வைக்கப்பட்டோரின் பேரெளிமையும் ஒருங்கு கொண்டு உதித்தவர்கள் சாக்கிய முனியும்  மகாவீரரும். இந்திய சமயத்தில் வாழ்முறையில் ஞான மார்க்கத்தில் அவசியமாகத் தேவைப்பட்ட  மடை மாற்றத்தை அளித்த அரியோர்கள் இவர்கள்.    சிலம்பை இசைத்த செம்மல் அனைத்து சமயங்களையும் சமமாக வைத்து தீந்தமிழ் தந்தார். கொற்றவையும் மரபுகளையும் மாந்தர் நெறிகளையும் முயங்கித் தருகிறது.

கொற்றவையின் தமிழ் இனிமையான கிறக்கத்தைத் தருகிறது. கற்பனையின் அழகிய தீவுகளுக்குக் கொண்டு செல்கிறது. சொற்களின் மீது காலம் படித்த மண்ணை அகற்றி வேருக்குச் சென்று  காட்டுகிறது. மனிதனின் ஆதி அச்சத்தையும் ஆதித் துயரத்தையும் அறிதலாக மாற்றிக் கொண்ட இந்தியப் பெருநிலத்தின் பெரும்பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும் கவுந்தியாக ஆகிறது. அன்னையின் அணைக்கும் கரங்களையும் அறுக்கும் கொலைவாளையும் ஒரே மின்னல் வெளிச்சமான புன்னகையில் தெரியச் செய்கிறது. மதுரையை ஒரு மாறாத தொன்மமாக மாற்றி , பல மதுரைகளையும் அவற்றின் பூதங்களையும் மீன் கண்ணியையும் நாட்டுகிறது.  

இளங்கன்னி கடற்கூடலில் எதையோ வேண்டி ஒற்றைக் காலில் நின்று தவம் செய்கிறாள். அவளது மணிமாலை  சுழலாமல் நிற்கிறது. இல்லை . ஊழி முடியும்போது ஒரு மணி நகர்கிறது. அவளது கண்கள் முடியா எல்லையில் தென் துருவமும் அது கடந்து நீளும் அண்டத்தின் அறியா இருளையும் பால்வெளிக் கடலையும் நோக்குகின்றன. அவளது நாசியணியின் ஒளி தென்திசை உடுவிடம் மந்தண மொழி பேசுகிறது. அவளது  புன்னைகையின் மர்மங்கள் எளிய மானுடர் அறியாதவை. உலகின் அனைத்து மொழிகளிலும் அனைத்துக் காலங்களிலும் பேசிய எல்லாச் சொற்களையும் ஒரு எழுத்துக்குள் அடைத்து அவ்வெழுத்தை மௌனத்தில் பொதிந்து உதடசையாமல் உச்சரித்து வருகிறாள். அவளது பாதத் தடம் பதிந்த இடங்களில் மெய் விதிர்த்து மக்கள் கண் சோருகிறார்கள். பெரு நிலத்தின் தென் எல்லையில் மூழ்கிக் கிடக்கும் நாற்பத்தொன்பது நாடுகளையும் அவற்றின் ஓலங்களைக் கொண்டு வரும் அலைகளையும் பார்த்துக் கொண்டே நிற்கிறாள். ஆதி கேசவன் புரண்டு படுக்கும் போது அன்னை ஒரு வேளை காலூன்றலாம்.   உலகு புரப்பதற்காக ஊழ்கம் செய்யும் அன்னையின் உருக்களே அனைத்து அன்னையரும். அவர்களில் ஒருவர் ஆசிரியரின் அனைத்துமாக விளங்கித்  தூண்டும்  அன்னை விசாலாட்சியம்மா. அவருக்கு வணக்கம். 

குமரிக் கண்டம் இருக்கிறது. தமிழ் மாணவர்களின் ஆழத்தில் , எந்த ஆய்வாலும் எள்ளி ஒதுக்கி விட முடியாமல்.

ஆர் ராகவேந்திரன்

கோவை

தாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன்

https://www.narenin.com

1905 பெங்கால் பிரிவினை இந்திய வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் நிகழ்வு. அது இந்தியாவெனும் தன்னுணர்வை அசைத்துப் பார்த்தது. பெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்தியாவெங்கும் சிந்தனையாளர்களும் விடுதலை போர்களும் துளிர்த்தெழ பெரிதும் வழிகோலியது. இந்தியாவெனும் அரசியல் உடமையையும் அதன் உள்ளுணர்வாகிய கலாச்சார பண்பாட்டையும் சேர்த்து காக்கும் பெரும் பொறுப்பு இந்திய விடுதலை சிந்தனையாளர்கள் மத்தியில் பெருகத் தொடங்கியது. மரபார்ந்த இந்துமத சடங்குகளையும் அது முன் வைக்கும் பிரிவினைகளையும் வகுப்பு நிலைகளையும் ஒதுக்கி வைக்கும் புதிய மரபுகளும் முறைமைகளும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது. இந்தக் கிளர்ச்சிகளுக்கு நடுவே, பெங்காலின் மறுமலர்ச்சி காலகட்டத்தின் பின்புலத்திலிருந்து எழுந்து வந்த தாகூர், ஒரு முக்கிய பண்பாட்டு விவாதமாக ‘கோரா’ நாவலை எழுதுகிறார்.

இந்து மதத்தின் அத்தனை மூடவழக்கங்களையும் பிரிவினைகளையும் உதறி 1828ல் ராஜா ராம் மோகன் ராய் ‘பிரம்மோ சமாஜை’ துவங்குகிறார். இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் இவ்வியக்கத்தினர் தங்களை இந்துகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. பெங்கால் மறுமலர்ச்சி இயக்கத்தின் ஊற்றுக் கண்ணென விளங்கிய இவ்வமைப்பு இந்திய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மரபார்ந்த தளைகளிலிந்து பெரு விடுப்பு அளித்தது. இவ்வமைப்பின் எழுச்சியால் அதிர்ச்சிக்குள்ளான மரபார்ந்த இந்துக்கள் பிரம்ம சமாஜத்திலிருந்தும் கிறித்துவ அமைப்புகளின் தாக்குதல்களிலிருந்தும் இந்து மதத்தை காக்கும் பொருட்டு சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது. இந்தியச் சுதந்திர போரட்டங்களில் ஒரு பகுதியாக சீர்திருத்தப்பட்ட இந்து அமைப்புகள் இந்துமத பண்பாட்டையும் கையிலெடுக்க, பிரம்ம சமாஜம் இந்து மதத்திலிருந்து இந்தியர்களை விடுவிக்கும் முனைப்புடன் வளர்ந்து வந்தது. இந்த இரண்டு பக்கங்களின் அதீத நோக்கிலிருக்கும் முரண்பாட்டை மையமாக வைத்து ‘கோரா’ வெகுசில கதாப்பாத்திரங்களைக் கொண்டு ஒரு முக்கிய விவாதத்தை நிகழ்த்துகிறது.

இப்புவியின் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு தாக்குதல்களால், இயற்கையாலும் மனிதனின் ஏதேச்சதிகாரத்தினாலும், மானுடம் தன்னை அசைத்துக் கொடுத்து தன் இருப்பை எப்படியாவது நிறுவிக்கொள்கிறது. ஒவ்வொருமுறையும் அவ்வசைவுகள் ஏற்படும்போது சிந்தனை தரப்பிலிருந்து வெளிப்படும் அறிஞர்களே முன்வடம் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு யுகசந்தியின் முனையிலிருக்கும் இளைஞர் குழாமின் சிந்தனை என்னவாக இருக்கும் அதன் விளைவாக எழும் செயல்பாடுகள் எம்மாற்றத்தை கொண்டு வரும் என்பதை இன்றைய சூழலில் புரிந்து கொள்வது இயலாததாகவே இருக்கும். 

அரசியல் காலாச்சார மாற்றங்களை மையப் பொருளாக்கிய ‘ஆரோக்கிய நிகேதனுமும்’ ‘அக்னி நதியும்’ இந்நாவலை வாசிக்கையில் நினைவில் எழுந்துக் கொண்டே இருந்தன.  ‘அக்னி நதி’ இது போன்ற வெவ்வேறு காலச் சுழலில் நிகழும் சரித்திர திருப்புமுனைகளில் நிற்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை சொல்கிறது. கோராவிலும் முக்கிய பாத்திரங்களாக நான்கு இளைஞர்கள். அவர்களின் அரசியல் பிடிமானங்களையும் அதனூடாக அலைக்கழியும் காதல் வாழ்வையும் இருசேர பிணைப்பதாலேயே கோரா ஒரு முக்கிய இலக்கிய படைப்பாகவும் ஆகிவிடுகிறது. தாகூர் நீண்ட வசனங்கள் மூலமாக கதாபாத்திரங்களின் ஆழ் மனம் வரை ஒரு கூர் சுழலாக இறங்கி தொட்டு பின் விலகுகிறார். உரையாடல்களின் நீளத்திற்கே கதாபாத்திரங்களின் அவ்வுரையாடலுக்கு முன்னும் பின்னுமான சிந்தனையோட்டத்தை விவரிக்கிறார். இதன் மூலம் அப்பாத்திரங்களுக்குள் நிகழும் அலைக்கழிப்புகளையும் உணர்வுச் சிதைவுகளையும் மிகத் துல்லியமாக அவரால் மீட்டெடுக்க முடிகிறது. பெரும்பாண்மையான தமிழ் நவீன நாவல்களிலிருந்து பெரிதும் விலகி நிற்கும் ஒரு வடிவம் இது. தொடக்கத்தில் வாசிப்பிற்குத் தடையாக இருக்கும் மொழிபெயர்ப்பு சிக்கலிலிருந்தும் கூட பெரிதும் தப்பி நாவலுக்குள் புக இந்நாவலின் உரையாடல்களே துணையாக அமைகிறது.

கோரா எனும் கோர்மோஹன் இந்து மத விழுமியங்களின் மீது பெரும் பிடிப்பு கொண்டவன். அதன் பிற்போக்குத்தனங்களையும் பிரிவினைவாதங்களையும் கூட இம்மதத்தை காக்கும் பொருட்டு பொருத்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் கொண்டவன். இந்திய விடுதலைக்குப் பிறகு இதெல்லாம் சீர் செய்து கொள்ளலாம். முதலில் ஆங்கிலேயர்களை வெளியே விரட்டுவதும் இந்து மதத்தினரை மாறிவிடாமல் தடுப்பதும்தான் தற்போது தலையாயது என்று எண்ணுபவன். சடங்குகளை தான் பின்பற்றாவிடினும் மதத்தின் ஒருமையை காக்கும் பொருட்டு அவை புழங்குவதில் தவறில்லை என்பவன். பிரம்மோ சமாஜத்தின் ஈர்ப்பிலிருந்து விலகி வந்து அதற்கு எதிராக நின்று வாதிடுபவன். சுற்றத்தினரின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவன். தான் பிறப்பால் ஒரு இந்தியன் அல்ல என்று தெரியவரும்போது ஏற்படும் அவனின் மனமாற்றத்திற்கு முற்றிலும் வேறு திசையில் நாவல் முழுதும் பயணிப்பவன். நேர்மறை எண்ணம் கொண்டிருந்தவன்தான் என்ற போதிலும் இந்திய மண்ணிற்கு தான் யார் என்பதும் இந்த மண் எந்த மனிதர்களின் மீதும் எல்லைக் கோடுகளை வரிப்பதில்லை என்பதும் புரியவரும்போது ஒரு பெரும் திறப்பை அடைகிறான். தன் வாழ்நாள் முழுதும் அவன் நிகழ்த்திய விவாதங்கள், தன் காதல் வாழ்வின் ஊசலாட்டங்கள் என அனைத்தும் ஒற்றைப் புள்ளியில் வந்து இணைவதை உணர்கிறான். அது ஒரு பெரும் விடுதலையுணர்வை அவனுக்கு அளித்திருக்கும் என்பதை ஒரு வாசகனும் உணர்ந்தறிவான்.

பினய் பாபு வாசகனின் மனநிலைக்கு மிக நெருக்கமானவன். கோராவின் எல்லையற்ற நட்பினாலும் – ஒருவகையில் பக்தி நிலையும்கூட, அனந்தமயியின் தாயன்பினாலும், முற்போக்கு சிந்தனைகளாலும், லொலிதா மீதான காதலினாலும், சுசாரிதாவின் அறிவார்ந்த நட்பினாலும் அலைகழியும் ஒருவன். தான் சுயமாக எடுக்கும் எந்த முடிவுகளும் யாரோ ஒருவரை பாதிக்கும் என அறிகையில் ஒரு அடி பின்னே செல்பவன். கோராவின் கோபத்திற்கு ஆட்படாமலிருக்க லொலிதாவின் காதலைக் கூட மறுதலிக்க தயாராக இருக்க கூடியவன். இதனாலேயே எவரின் பகைக்கும் ஆட்படாதவனாகயிருக்கிறான். பிரம்மோஸின் நியாயங்களும் முற்போக்கு சிந்தனைகள் அவர்களின் பெண்களுக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தையும் கண்டு அதன் அவசியத்தை உணர்கிறான். ஆங்கிலேயருடன் அவர்கள் காட்டும் இணக்கம் கூட அவனுக்கு தொந்தரவுதருவதாயில்லை கோரா சிறையிலடைக்கப்பட்ட செய்தி வரும் வரை. ஒவ்வொரு கட்டத்திலும் ஏதேனும் இரண்டு முனைகளை சீர் நிறுத்தி பார்க்க வேண்டிய இக்கட்டில்தான் வாழ்கிறான். அவனின் பிடிப்பை சிறுவன் சதீஷால் கூட அசைத்துப் பார்த்துவிட முடியும். 

கோராதான் இந்நாவலின் மையம் என்றாலும் முதல் பக்கத்தில் தொடங்கி கடைசி வரை வியாபித்திருக்கும் பாத்திரங்கள் பினய்யும் சுசாரிதாவும்தான். கோராவினால் பெரும் ஈர்ப்புக்குள்ளாவதும் இவர்கள் இருவர்தான் என்பதுவும் காரணமாக இருக்கலாம். பிரம்மோ தனக்களித்த சுதந்திர சிந்தனையை பொரேஷ் பாபுவின் வளர்ப்பினால் தீவிரமாக பற்றி வரும் சுசாரிதாவின் எண்ணங்களை வெவ்வேறு முனையில் நின்று கோராவும் ஹரிமோகினியும் குலைக்கிறார்கள். கோராவின் மீது இவள் ஈர்ப்பு கொள்வதும் ஹரன் பாபுவுடனான திருமண தயாரிப்புகளை ரத்து செய்வதும் கருத்தியல்களின் அடிப்படையிலேயே என்பது இவளை யுவதிகளுக்கான ஒரு லட்சிய உருவமாக ஆக்குகிறது. அனைத்தையும் விவாதத்தின் மூலமாக கடக்க விழைப்பவள். ஆனால் அன்பும் உறவும் அவளை எப்போதும் நெகிழ்த்தும் கண்ணிகளாக இருப்பதால் பினய் பாபுவைப் போல அலைகழிப்புகளுக்கு உள்ளாகுபவளாக ஆகிறாள்.

துணிச்சல்மிக்க பெண்ணாக லொலிதா உருவெழுந்து வருவது நாவலின் நடுப்பகுதியிலிருந்துதான். எவரும் எதிர்பாராவண்ணம் ஒரு திருப்புமுனையில் அவள் ஒரு அலையென எழுந்து பினய் பாபுவை தன்னுடன் இழுத்துக் கொண்டுவிடுகிறாள். பின்ய பாபுவிற்கு ஒரு வகையில் நேர் எதிரான பாத்திரம். தன்னைப் போலவே பினய் பாபுவும் சுயமாக சிந்திக்கவும் தான் நினைத்ததை செயல்படுத்தவும் வேண்டும் என்று விரும்புகிறாள். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பினய்யிடம் இதை சுட்டிக் காட்டவும் தவறுவதில்லை. இதுவே கோராவையும் மீறி லொலிதாவுடனான திருமணத்திற்கு சம்மதம் தருமளவிற்கு அவனுக்கு உத்வேகம் கொடுக்கிறது. பிரம்மோஸாக மாறுவதற்கு கூட அவன் தயாராகிவிடுகிறான். 

இந்நான்கு பாத்திரங்களையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்த முடியும். இவர்கள் பிராதான கதைமாந்தர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வில் எதிர்படும் சந்தர்பங்களினாலும் எதிராளியுடனான விவாதங்களினூடாகவும் ஊசலாடும் தன்மை கொண்டவர்கள். சுசாரிதாவை முதன்முறையாக சந்தித்து உரையாடும்போதுதான் இந்திய கலாச்சாரத்தில் இந்திய சுதந்திர வேட்டையில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்கிறான். சார்-கோஸ்பரா கிராமத்திற்கு இரண்டாவது முறையாக செல்லும்போதுதான் அக்கிராமத்தின் எளிய மனிதர்களிடமிருந்து தன்னைப் பிரித்த இடைவெளிகளை உணர்கிறான். அவன் கற்பனையிலிருக்கும் பாரதவர்ஷம் அசலில் இல்லை என்பதை உணர்கிறான். சடங்குகளாலும் சாதிப் பிரிவினைகளாலும் தான் கனவு காணும் பாரதம் வெறுமையானது என்பதையும் கண்கூடாக காண்கிறான். அம்மக்களின் சார்பாக நின்று சிறை செல்வதற்கு தயாராகிறான். இறுதியாக அவனுடைய பிறப்பு பற்றிய உண்மை தெரிய வரும்போது ஏற்கனெவே நொறுங்கத் தொடங்கியிருந்த பாரதம் என்ற அவனது கனவுப் பிம்பம் முற்றிலுமாக உடைந்து போகிறது. சடுதியில் அவன் தன்னையும் பாரதத்தையும் வெளியாளின் கண்கொண்டு பார்க்கிறான். அனைத்தையும் ஏற்று அனைத்தின் மீதும் ஊறும் தேசமிது என்பதை புரிந்துகொள்கிறான். இந்நாவல் அவனுக்கு கிடைக்கும் இந்த அதிர்ச்சியுடன் முடிவுற்கிறது. இனி இத்தேசத்தின் விடுதலைக்கு சமூக விடியலுக்கு அவன் எடுக்கப் போகும் ஆயுதம் என்ன என்பதோ அவன் கனவுகளை எவ்வாறு மாற்றியமைத்துக் கொள்ளப்போகிறான் என்பதோ கற்பனைக்கு விடப்படுகிறது. இந்த திருப்பம் வாசகனுக்கு ஏற்கனெவே தெரிந்திந்திருக்கும் என்பதால் கோராவின் அதீத ஆசார விவாதங்கள் பெரும் முரணாக நாவல் முழுதும் அமைகிறது.

ஆனந்தமாயி பாரதமாதாவின் உருவகம். அன்பின் வழியாக ஆனந்த வாழ்வை தனதாக்கிக் கொண்டவர். பாகுபாடுகள் அவரிடம் இல்லை. அவரின் சுதந்திர சிந்தனைகளால் ஒரு கிறித்துவர் என்று கிண்டலடிக்கப்பட்டாலும் அதை கண்டுக் கொள்பவரில்லை. பெரும் ஆசாரவாதியான கணவர் கிருஷ்ணதாயாளுக்கும் இது மத கட்டமைப்பின் மீது புதிய பாரதத்தை உருவாக்க துடிக்கும் கோரவுக்கும் பாசத்தில் உருகும் பினய்ய்க்கும் பொரேஷ் குடும்பாதாருக்கும் ஒரு மைய ஊக்கியாக, அத்தனையையும் இணைக்கும் சரடாக இருப்பவர். இவரின் எதிர் முனையில் பொரேஷ் பாபு. தன் குடும்பத்தினருடன் பினய் கோரா இருவரையும் கொண்டு வந்து சேர்ப்பவர். எதிர் நிலையில் நின்று மற்றுமொரு மையப் புள்ளியாக இருப்பவர். ஆனந்தமயியும் பொரேஷ் பாபுவும் எதிர் நிலையில் இருக்கும் பெருமனம் படைத்த இருவர். அனைவரும் வந்தடையும் நீள் நிழலாக இருப்பவர்கள்.

இந்நாவல் அனைத்து மார்க்கங்களையும் விமர்சனப் பார்வையோடும் அனுகுவதே இதை முக்கிய சமூக விவாதமாக ஆக்குகிறது. நாவல் முழுதும் இந்து மதத்தின் சாதிய அடுக்குமுறைகள் கொணரும் பிரிவினைகளும் எளிய மனிதர்களின் வாழ்வு இதன் பின்னால் நசுக்கப்படுவதும் உரையாடல்களினூடே எடுத்துரைக்கப்படுகிறது. தீண்டாமைகள் மலிந்து தன் வீட்டிற்குள்ளேயே அவை கடைப்பிடிக்கப்படும்போது கூட தான் ஒரு சமூக போரளி என்றபோதும் கூட அதை கேள்விக்குள்ளாக்க் முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. “பெரிய விஷயங்களை சிறிய கண்ணோட்டத்தில் பார்ப்பதால்தான் நமக்குச் சந்தேகம் வருகிறது” என்று கோரா இதை கடந்து செல்ல முயல்கிறான். இவை எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியாமல் அதை வெட்டி எறிவது முட்டாள்தனம் என்கிறான். இன்றளவும் இவ்விவாதங்களை நம்மால் கேட்க முடிகிறது. “ஹிந்துத்துவம் குறித்து சில விஷயங்களில் சமரசம் செய்து விட்டால் முட்டாள்கள் பெரிய விஷயங்களில் ஒரு மரியாதையற்ற நிலையை உருவாக்கி அதனையே தமது வெற்றியாகவும் கொண்டாடுவர்” என்பான் கோரா. இந்நிலையிலிருந்துதான் “நான் பாரதீயன். இன்று பாரதத்தின் எல்லா ஜாதிகளும் என் ஜாதியே. எல்லோரும் எதைச் சாப்பிட்டாலும், அதுவே என் உணவு” என்ற நிலையை வந்தடைகிறான். இதைப் போலவே புது ஞான சபையான பிரம்ம சமாஜமும் அதன் முரண்பாடுகளை முன்வைத்து விமர்சிக்கப்படுகிறது. ஹரன் பாபுவின் கையில் ஒரு அமைப்பு நிறுவனமாக மாறிவருகிறது. தலைவர்கள் தொண்டர்கள் என்ற நின்றுவனமயமாதல் பொரேஷ் பாபு போன்ற உயர் சிந்தைனையுடையவர்களை வெளியேற்றவும் தயங்குவதில்லை. மற்றொருபுறம் கோராவை ஆன்மிகத் தியாகத் தலைவனாக்கும் சடங்குகளும் தொடங்குகிறது. எஞ்ஞானித்திற்கு தலைப்படினும் நிறுவனப்படுதலிலிருந்து தப்ப முடியாது. 

மிகக்குறைந்த கதாப்பாத்திரங்கள், அனேகமாக பெரும் நிகழ்வுகள் ஏதுமில்லை, நீண்ட சமூக விவாதங்களாக உரையாடல்கள் என இவை அனைத்தையும் மீறி இதுவொரு இலக்கிய படைப்பாக மாறுவது பாத்திரங்களின் மனநிலைகளுக்கு ஊடுறுவிச் செல்லும் தன்மையினால்தான். பாத்திரங்களின் மனவோட்டங்கள் முழுவதும் எழுதிச் செல்லப்படுகிறது. அவர்களின் அகவயமான எண்ணங்களும் புறவயமான செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் இதனால் ஒரு வாசகன் உள்வாங்க முடிகிறது. இது முக்கிய பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, சிறிய பாத்திரங்களுக்கும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதுபோலவே காதலர்களின் மன ஆட்டங்களும் அவர்களின் கனத்த மெளனம் உருவாக்கும் சஞ்சலங்களும் கீதாஞ்சலி ஆசிரியனால் மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அற்புதமான பிம்பங்களை அவரால் உருவாக்க முடிகிறது. உதாரணமாக, பினய் பாபுவும் லொலிதாவும் தங்களுக்குள் சூசகமாக காதல் கொண்டிருப்பதை உணர்த்தியபின் ஒரு மெளனம் நிலவுகிறது. “ஒவ்வொரு ஜீவனையும் வானம் தொடர்ந்து அதிசயமாகவும் அமைதியாகவும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அது வெறும் ஒரு வெட்ட வெளியல்ல” என்பதையும் உணர்கிறார்கள். அவர்களின் அகவிழிப்புணர்வு அண்டம் முழுவதும் பரவியிருக்கும் தெய்வீக விழிப்புணர்வோடு அவர்கள் உடலால் இணைந்திருப்பது போன்றிருந்தது. இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.”

இத்தேசத்தின் மீது அதீத காதலும் கனிவும் அதன் வளர்ச்சியில் கவனமும் கொண்ட தாகூரின் எக்காலத்திற்குமான படைப்பு இது. பாரதவர்ஷத்தை சொந்த கண் கொண்டு காணுங்கள் என்னும் அவரின் அறைகூவல் இன்றளவும் முக்கியமாக இருக்கிறது. இதேசத்திற்கு ஒரு தனிப்பட்ட பண்பு உண்டு, ஒரு தனிப்பட்ட ஆற்றல், ஒரு தனிப்பட்ட உணமை உண்டு. அதன் நிறை குறைகளை மனதில் வைத்தே ஒவ்வொருவருடைய நிலையை முடிவு செய்ய வேண்டும் ஆனால் அது எந்நிலையாகயிருந்தாலும் தீவிரமான போக்கில் அதை கடைபிடிப்பது அத்தனையையும் சூன்யமாக்கவே செய்யும். தேசத்தின் மீது பித்து கொண்ட ஒரு பெருங்கவிஞனின் கூக்குரலுக்கு காது கொடுக்க வேண்டிய நேரமிது.

கோரா – ஒரு இந்திய கனவு – நவீன் சங்கு

https://navnsangu.wordpress.com/2020/07/22/கோரா-ஒரு-இந்திய-கனவு/

நவீன இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நான்கு

நபர்களை முக்கியமாக படிக்க வேண்டும் என்கிறார் ராமசந்திர குகா.

  1. அம்பேத்கர் 2.காந்தி 3.நேரு 4.தாகூர்.

இந்த வார “சொல் முகம்” இணைய உரையாடலில் கோரா குறித்து பேசினோம்.உண்மையில் ஒரு நாவலை படிப்பது மட்டுமல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து உரையாடும் போதே அது முழுமை* பெறுகிறது.

வெறுப்பின்றி,வன்முறையின்றி, சகிப்புத்தன்மையுடன் எந்த புள்ளியில் நின்று ஒரு இளைஞன் நவீன இந்தியாவை கட்டமைக்கலாம் என தாகூர் காணும் கனவே கோரா.

தனது ‌ Nationalism நூலில் இவ்வாறு கூறுகிறார்,

“Neither the colourless vagueness of cosmopolitanism, nor the fierce self-idolatry of nation-worship,is the goal of human history.
And India has been trying to accomplish her task through social regulation of differences,
on the one hand, and the spiritual recognition of unity on the other”

சுருக்கமாக சொன்னால், தன்னை ஒரு முற்போக்காகவோ அல்லது மரபுவாதியாகவோ கருதும் ஒரு இளைஞன் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது.

தாகூர் டால்ஸ்டாய் போலவே பெரிய நிலப்பிரபு குடும்பத்தை சேர்ந்தவர்.இருவருக்குமே ஒரு ஆன்மிக தன்மை இருக்கிறது.உருவத்தில் கூட இருவருக்கும் ஒற்றுமை உள்ளது.

ஆனால் டால்ஸ்டாய் போல மனித உணர்வுகளின் அடி(புத்துயிர்ப்பு நெஹ்லுதாவின் மனநிலை) ஆழத்திற்கு சென்று வாசகர்களுக்கு அதிர்வை ஏற்படுத்தக் கூடிய எழுத்து அல்ல இவருடையது. மாறாக அவருடைய கவிதை போலவே மனித உறவுகளின் மெல்லியதான நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டு இறுதியில் ஒரு தரிசனத்தை கண்டடைகிறது.

இந்த கதையில் வரும் பாத்திரங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.ஒன்று ப்ரம்மோஸ் என்று அழைக்கப்பட்ட மேற்கத்திய பாவனையோடு தங்களை முற்போக்குவாதியாக கூறிக் கொள்பவர்கள்.மன்றொன்று பாரதவர்ஷாவை கட்டமைப்போம் என சொல்லிக் கொள்ளும் இந்து மரபானவர்கள்.

இவர்களுக்கு இடையில் வரும் பினாய் தன்னை எங்கு ஒட்டிக் கொள்வது என தெரியாமல் தடுமாறும் கதாப்பாத்திரம்.பினாய் கதாப்பாத்திரம் இந்த கதையில் முக்கியமான ஒன்று.

ஏனெனில் நாம் ஒவ்வொருவரையும் பினாயுடன் இணைத்து பார்த்துக் கொள்ளலாம்.

இந்த இரு தரப்பினரிடையே நடைபெறும் விவாதம், இவர்களின் வாழ்க்கை முறை, அதனால் ஏற்படும் சமூக முரண்பாடு,காதல் உறவு இறுதியில் இரண்டு பக்கங்களிலிருந்தும் எழுந்து வரும் லட்சிய நபர்கள் கண்டடையும் தரிசனமே இந்நாவல்.

இந்த கதையில் வரும் எல்லா பாத்திரமும் ஒரு குறியீடாக உள்ளதை காணலாம்.கோரா விவாதம் செய்து தனது கருத்தை நிறுவும் மரபு வாதியாகவும,அவனுடைய உதவியாளன் அவனை வழிபடும் அடிப்படை வாதியாகமும்,சாதி போன்ற பிற்போக்கு கருத்துகளால் இந்து மதத்தை வெறுப்பவளாகவும் அதே சமயம் விவாதங்களில் தனது கருத்தை பரிசீலனை செய்து கொள்ளும் நவீன பெண்ணாக சுசாரிதாவும், தடித்தனமாக‌ ஐரோப்பிய பாவனையுடன் திரியும் ஹரண், எந்த கொள்கை சார்பும் இல்லாமல் தனது மனதில் தோன்றும் உணர்வுக்கேற்ப நடந்து கொள்ளும் பினாய்.

கோரா தீவிரமாக ப்ரமோஸ் குழுவினரை எதிர்க்கிறான், வாதம் செய்கிறான்.தனது பண்பாடு , கலாச்சாரத்தை இழந்து நாடு சுதந்திரம் பெறுவது என்பது ஆன்ம அற்ற உடல் போன்றது என்கிறான்.எங்களிடம் பிரச்சினை உள்ளது, ஆனால் அதை ஆங்கிலேயரை விரட்டிய பிறகு சரி செய்து கொள்ளலாம் என்கிறான்.பயணத்தில் பட்டினி கிடக்கும் போது கூட, தாழ்ந்த சாதி வீட்டில் உணவு உண்ணாமல் இருக்கிறான்.

சுசாரிதா ப்ரமோஸ் பக்கம் உள்ளவள், அதிகம் வாசிப்பவள், ஆண்களுடன் விவாதம் செய்பவள்.சாதி முதலிய பிற்போக்குதனத்தை வெறுப்பவள்.

நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும்,நான்கு நபரை மட்டுமே முக்கியமாக கருதுகிறேன்.அதில் இருவர் முந்தைய தலைமுறையை சேர்ந்த பெரேஷ்பாபு மற்றும் கோராவின் தாய். மற்ற இருவர் இளைய தலைமுறையைச் சேர்ந்த கோரா மற்றும் சுசாரிதா.

கோரா தான் இந்து அல்ல சிப்பாய் கலகத்தில் இறந்து போன ஒரு ஐரிஷ் காரனுக்கு பிறந்தவன் என தெரிந்ததும்,அவனுடைய பிம்பம் உடைகிறது. ஆனால் தன்னை சுதந்திரமாக உணர்கிறான். தான் இவ்வளவு நாள் கடைப் பிடித்து வந்த கொள்கைகள், ஆச்சாரங்கள்

அர்த்தம் இழப்பதை காண்கிறான்.ப்ரம்மோவான பெரேஷ் பாபுவின் காலில் விழுகிறான்,அவரை குருவாக ஏற்றுக்கொள்கிறேன்

என சிரம் தாழ்த்துகிறான். இறுதியில் சடங்கு, ஐதிகம் என எதுவும் பாராமல் வேலைக் காரியுடன் இணக்கமாக வாழும்

தனது தாயிடமே பாரதவர்ஷாவை காண்கிறான்.அவளது மடியில் படுத்து கண்ணீர் விடுகிறான்.

இதற்கு இணையான தரிசனமாக Herman Hesse வின் சித்தார்த்தாவில் வரும் படுகு ஓட்டியை சித்தார்த்தா கண்டடைவதை சொல்லலாம்.

இந்த Transition அடைந்த தன்மையால் தான் கோரா மற்றும் சுசாரிதா பாத்திரம் முக்கியமடைகிறது. ஏனெனில் எல்லோருக்குமான நவீன இந்தியாவை கட்டமைக்கும் லட்சிய கனவை நிறைவேற்ற நினைக்கும் ஒவ்வொரு இந்தியரும் சென்று சேரும்,சேர வேண்டிய இடம் அது!!

கோரா வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வங்கத்தைக் களமாக்கி நிகழ்ந்த தேசிய – பண்பாட்டுக் கொந்தளிப்பில் மறுமலர்ச்சிக்கும் புதிய எழுச்சிக்கும் சாத்தியங்கள் சூல்கொண்டு வளர்ந்த சூழலில் தாகூரின் கோரா அமைக்கப் பட்டுள்ளது.  

மரபை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பண்பாட்டைக் காத்துக்கொள்ளும் விசை ஒரு புறம்; அது  மரபிலிருந்து உயிர்ச்சாற்றை எடுத்துக் கொண்டதால் வலிமை உடையதாக இருந்தது;  ஆனால் தேக்கம் கொண்டதாகவும் இருந்தது; மறுபுறம் புதிய காற்று வருவதற்காக உருவான சீர்திருத்த இயக்கங்கள்.. கிறித்துவத்திலிருந்தும் மேலை பண்பாட்டிலிருந்தும் சடங்குகளைப் பெற்றுக் கொண்டு  உருவ வழிபாடுகளை எதிர்க்கும் பிரம்ம சமாஜம் போன்றவை;  இந்த இருதரப்புகளிடையே ஏற்படும் மோதல்களில் அவற்றின் பிரதிநிதிகளான இளைஞர்களும் மூத்தோர்களும் எடுக்கும் நிலைப்பாடுகள், வாழ்வியல் மாற்றங்களை தாகூர் ஒரு பாரதப் பண்பாட்டு தரிசனமாகத் தந்துள்ளார்.

கதை மாந்தர்கள் யதார்த்தமான முரண்பாடுகளும் கொந்தளிப்புகளும்  கொண்டவர்களாக  இருக்கிறார்கள். நாயகனான கோரா இந்தியர்களை நேசிக்கும் அளவிற்கு பிரம்ம சமாஜத்தினரை எதிர்க்கிறான். ஏழை மக்களிடம் பேரன்பு கொண்டிருந்தும் சாதி வேறுபாடுகளையும் எதிர்க்க முடியாதவனாக இருக்கிறான். உருவ வழிபாட்டை ஆதரித்து எழுதியும் பேசியும் வருபவன் தனிப்பட்ட முறையில் உருவ வழிபாட்டில் ஈடுபாடு இல்லாதவனாக இருக்கிறான். 

போரேஷ் பாபுவின் மனைவி பரத சுந்தரி தேவி, மேல் மட்ட சமூகப் பகட்டும் போலித்தனமும் கொண்டவளாக வருகிறாள்.  இந்து மதத்தின் குறைபாடுகளை  விலக்கி உருவாகிய பிரம்ம சமாஜம் என்னும் புதிய மதத்தில் தீவிர மதப் பற்று கொண்டவளாக இருக்கிறாள். ஆங்கிலேய அதிகாரிகளின் குடும்பங்களில் நட்பு கொள்வதை பெருமையாக நினைக்கிறாள். தனது மகள்களை சுதந்திரமாக வளர்த்தவள் அவர்களின் சுயேட்சையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறாள்.

சுசாரிதாவின் தந்தையான போரேஷ் பாபுவும்  கோராவின் தாயான ஆனந்தமாயியும் மனித நேயமும் பரம்பொருளிடம் பக்தியும் கொண்டவர்கள். ஆனால்  தங்கள் சுற்றத்தாராலும் மத இறுக்கத்தாலும் தொடர்ந்து ஒதுக்கப் பட்டவர்கள். 

மீனாக்ஷி முகர்ஜியி தனது முன்னுரையில் கோரா என்னும் ‘இந்த அசாதாரணக் கற்பனைக் கதாபாத்திரத்திற்குரிய உண்மை வாழ்க்கை மூலங்களில் , பலரில் ஒருவராகக் கருதப் படக்கூடியவ’ராக சுவாமி விவேகானந்தரைக் குறிப்பிடுகிறார்.  

நரேனை விட சில ஆண்டுகள் மூத்தவர் தாகூர். 

தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர்;  “ இறைவனைக் கண்டுள்ளீர்களா” என்று கேட்ட நரேந்திரனின் கேள்விக்கு ‘உனக்கு ஒரு யோகியின் கண்கள் இருக்கின்றன’ என்றவர். பிற்பாடு கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தைப் பிரித்து வலுவான இயக்கமாக உருவாக்கிய போதும் அதிலிருந்து மூன்றாவது பிரிவு ஒன்று உருவாகிய போதும் அப்போதைய வங்காளத்தின் சிந்தனைப்போக்கை நிர்ணயித்த இந்த அறிஞர்கள் நரேனின் குருவாகிய ராமகிருஷ்ணருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். வேறுபாடுகள் கொண்ட அனைத்து வித வழிபாட்டுக் குழுக்களிலும் ஒரு குழந்தையைப் போல உள்ளே சென்று வந்திருக்கிறார் ராமகிருஷ்ணர். 

கோரா வறட்டுப் பிடிவாதமாக இந்து மதம் சார்ந்த அனைத்தையும் ஆதரிக்கிறான். பெண்களைக் கண்டு கொள்ளாதவனாக , வெறுப்பவனாக இருக்கிறான். இந்த இரு பண்புகளும் விவேகானந்தரின் ஆளுமையிலிருந்து வேறுபட்டவை. புதினமாக்கலுக்காகவும் துருவப் படுத்துவதற்காகவும் கோராவின் ஆளுமை வேறுபாதையில் வளர்கிறது.  ஆனால் கோராவின் வாதத்திறம், அறிவு, அற ஆவேசம்  விவேகானந்தருக்குரியது.

விவேகானந்தர் – தாகூர்  தொடர்பு ஆய்வுக்குரியது. சகோதரி நிவேதிதாவிடம் விவேகானந்தர் “தாகூர் வங்கத்தை சிருங்கார ரசத்தில் மூழ்கடித்து விட்டார்” என்று குற்றம் சாட்டுகிறார். எனினும் சுவாமிஜியின் மறைவின்போது தாகூர் புகழாரம் சூட்டுகிறார். “இந்தியாவைப் புரிந்து கொள்ள விவேகானந்தரைப் படிக்கவேண்டும் “ என்கிறார்.

பங்கிம் சந்திரரின் ஆனந்த மடத்தில் வரும் தீவிர தேசியவாதப் போக்கு கோராவிடம் இருக்கிறது.  ஆனால் இங்கே மாற்றுத் தரப்புச் சொல்லாடல்களும் வன்முறையற்ற தன்மையும் ஆனந்த மடத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. (பங்கிமும் ராமகிருஷ்ணரைச் சந்திக்கிறார் – வாழ்வின் நோக்கம் என்ன என்று ராமகிருஷ்ணர் கேட்டதற்கு, பணம்,, புகழ் , உடலின்பம் என்று பதில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்கிறார்)

பல நூற்றாண்டுகளாக பல்வேறு முரண்பாடுகளுடன்  ஆனால் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பண்பாடு – அதை ‘சீர்திருத்துவதற்காக’      பிற ‘வெற்றி பெற்ற ‘ பண்பாடுகளை சுவீகரித்துக் கொண்டு மேலெழும்பி வரும் புதிய இயக்கம்  – இவற்றிடையே நிகழும் முரணியக்கம் – ஊடுருவுதல் அல்லது உட்செரித்துக் கொள்வதன் மூலம், நூறாண்டுகள் கழித்துப் பார்க்கும் போது மங்கலான கனவாக இருக்கிறது. 

 கோரா, தான் ஒரு ஐரிஷ் பெற்றொரின் குழந்தை என அறிந்ததும் விடுதலை அடைகிறான். அவன் சுசாரிதாவை அடைய கடைசியாக இருந்த தடை நீங்கி விடுகிறது. தேசியவாதத்தை எதிர்த்து உலகமய வாதத்தை முன்வைத்த தாகூரின் இலட்சியம் அதற்கான காலம் வரும் முன்பே வெளிப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

கா செல்லப்பன் அவர்கள் சாகித்ய அகதமிக்காக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தாகூரின் ஆங்கில மொழிபெயர்ப்பு அதன் மூலத்தின் சுவையை முழுமையாகத் தரவில்லை என்கிறார் அமர்த்யா சென். தமிழிலும்  மிக நீண்ட வாக்கியங்களாலும் பொருத்தமற்ற சொல்லாடல்களாலும் சோர்வு தருகிறது (பிரம்மம் – பிரம்மா குழ்ப்பம்; சின்னத்தாயி என்றும் சின்ன அம்மா என்றும் தன் மகளை போரேஷ் அழைப்பதில் உள்ள செயற்கைத்தன்மை போன்றவை)

தீவிரமான விவாதங்களாலும் மென்மையான உறவு முடிச்சுகளாலும் மனத்தின் உணர்ச்சிச் சித்தரிப்புகளாலும் தனித்து நிற்கிறது கோரா

ஆர் ராகவேந்திரன்

கோவை