கொரானா கால சந்திப்புகள் – 2

அகநானூறு – பாடல் 84- நயங்கள்
இஸ்தான்புல் காட்சியகத்தில் நூற்றுக்கணக்கான சுட்ட களிமண் பலகைகள் உள்ளன. அவற்றில் ஒரு பலகையில் உலகின் முதலில் எழுதியதாகச் சொல்லப்படும் கவிதை உள்ளது. ஸு ஷின் என்னும் அரசனை அவன் திருமணம் நடைபெறும் நாளில் மணமகள் பாடியது. என்று சுமேரிய மொழி வல்லுனர்கள் தவிர யாருக்குமே அதன் மொழி புரியாது. இதே போல தொன்மை எகிப்து மொழியையும் சொல்லலாம்.
ஆனால் கி மு 150 வாக்கில் எழுதப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களை பெரிய சிரமங்கள் இல்லாமல் நம்மால் படித்துப் புரிந்து கொள்ளப் படுகிறது. தொடர்ச்சியாக அறுபடாமல் வரும் இந்த மரபுக்கு அகம் – புறம் என வாழ்வை வகுத்துக் கொண்டதையும் அகத்திணை குடும்பம் என்னும் சமுதாயத்தின் அடிப்படை அலகை வலுப்படுத்தியதையும் நாம் காரணமாகக் கொள்ளலாம்.
ஏகேராமானுஜன் சங்கப் பாடல்கள் மொழிபெயர்ப்பு நூலுக்கு “The Interior Landscape” என்று பெயரிட்டுள்ளார். சங்கப் பாடல்கள் ஆழமான மனித உள்ளத்தின் அசைவுகளையும் ஆடல்களையும் விரிந்த இயற்கைப் பின்புலத்தில் வைக்கின்றன. மக்கள் தொகையும் புழங்கு பொருட்களும் குறைவாக இருந்த காலம். மனிதன் அன்றாடம் காண்பது பெரும் நிலப்பரப்புகள் தான். அழகிய மலை, காட்டுக் காட்சிகளும் அவை உருவாக்கும் மனநிலைகளும் இந்தப் பரப்பில் நிரம்பி இருக்கின்றன. . எனவே குறிஞ்சியும் முல்லையும் தான் புற அழகில் நம்மைக் கொள்ளை கொள்ளும் திணைகளாக உள்ளன.
மலையும் மரமும் இல்லாத பாலைத்திணை உடலும், உள்ளமும் வறண்ட துயரைப் பாடுகிறது. நெய்தலில் கடலினுக்குள் செல்லும் வாழ்வு பேசப்படுவதில்லை. (புலவரைக் கலத்திலேற்றி அனுப்புவது யார்?). மருதம், வயல் சார்ந்தது.
வேளாண்மையில் தன்னிறைவு பெற்றவுடன் பொருளியல் நிலைத்தன்மை கொண்டு விடுகிறது சமூகத்தில் ஒழுக்கக் கேடும் வந்து விடுகிறது. தலைவி , எதையும் தாங்குவாள், ஆனால் தலைவனின் கூடா ஒழுக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். ; ஊடல் நிமித்தம் உள்ளே வருகிறது. ஆனால் சமூகத்தின் ஒரு சிறு பகுதியே இந்தச் சிக்கலில் மாட்டி இருக்கவேண்டும். மருதத் திணைப் பாடல்கள் மிகவும் குறைவானவை என்பதை வைத்து இந்தக் கருத்துக்கு வருகிறார் பேராசிரியர் அ ச ஞாநசம்பந்தன். ஒப்புநோக்க மலைகள் பொதிந்த குறிஞ்சியும் அடர் காடுகளைக் காட்டும் முல்லையும் அதிகம் இயற்கையுடன் ஒட்டியும் அதிகம் இனிமையான மனநிலையையும் அளிக்கின்றன.
இயற்கை வளம் நம் முன்னோருக்கு சிந்தனை வளத்தைக் கொடுத்து விட்டிருக்கிறது. . 2000 ஆண்டுகளுக்கு முன் உலகின் வரலாற்று வரைபடத்தைப் பார்த்தால் பெரும்பகுதி கற்கால மற்றும் வேட்டைச் சமுதாயமாக இருந்திருக்கிறது. வெகு சில இடங்களிலேயே நெறிகள் கொண்ட வாழ்க்கை நிகழ்கிறது. அதிலும் மிகக் குறைவான மக்கள் தொகை. விரிந்தெழுந்தாக வேண்டும் மானுடத் தொகை. அதற்கு அறம் சார் இல்வாழ்வு அவசியத் தேவை.
அகம் புறம் என மனித வாழ்வைப் பிரித்துக் கொண்டு ஆண்- பெண் வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கொண்டதே தமிழ்ச் சமூகமும் மொழியும் அழியாது தொடர்வதன் ஒரு காரணம் என்று அ ச ஞானசம்பந்தன் கூறுகிறார். புறத்திணைகளுக்கு ஒதுக்கியதை விட அதிகப் பாடல்களும் நூல்களும் அகத்திணைக்கு வழங்கப் பட்டுள்ளன.
குடும்பம் சமூகத்தின் அடிப்படை அலகு. அதை நடத்துபவர்களின் அன்புதான் வாழ்க்கை இயந்திரத்தின் உயவுப்பொருளாக இருக்கிறது. தமக்குள் நிறைவாழ்வும் இன்பமும் அடைந்த பெற்றோரே நல்மக்கட்பேறும் விருந்தோம்பலும் சமூக நலமும் கொண்டு விளங்க முடிகிறது.
சங்கப் பாடல்கள் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நோக்கக் கூடிய ஒரு தொலை நோக்கி கிடைத்திருக்கிறது. அது அளிக்கும் காட்சி தெளிவானது. ஆனால் மிகக் குறைவான நேரம் ஓடுவது. வாழ்வின் உணர்ச்சி உச்சங்களை மட்டும் சாறு பிழிந்து உலர வைத்து , மாறாத மணத்துடன் காலம் கடந்து காட்டும் தைலப்புட்டிகளே இப்பாடல்கள்.
இந்தப் புட்டிகளில் அகநானூறு 84ஆம் பாடலை எழுதி இருப்பவர் மதுரை எழுத்தாளன் என்னும் புலவர். சங்க இலக்கியம் கிறக்கம் தருவதன் முக்கியக் காரணம் அவற்றின் முழுச் சூழலையும் ஆழத்தையும் அறிய முடியாமையும் ஆகும்.

இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம். மதுரை என்றால் குமரிக்கோடு ஒட்டி இருந்த கடல் கொண்ட தென் மதுரையா அல்லது தற்போதைய மதுரையா? எழுத்தாளன் என்பது தனிப் புலவரின் பெயரா அல்லது ஒரு குலக்குழுவின் பெயரா? கேரளத்தில் பின்னாளில் துலங்கிய எழுத்தச்சன் போல ஓர் ஆசிரியர் குலம் இங்கே இருந்ததா ? இவை போன்ற வினாக்கள் நம் மனதை விட்டு நீங்காது. அதனால் அவர் பெயரில் இருக்கும் ஒரே ஒரு பாடலும் நிலைத்திருக்கும்.
ஒரு கோட்டை இருக்கிறது. மண்ணும் சுண்ணமும் சேர்ந்து செய்திருக்கவேண்டும். அதை முற்றுகை இட்டு வென்று விட்டான் பாண்டியமன்னன். அவன் கழுத்தில் வேப்பம்பூ மாலை. தோற்று விட்ட நிலத்தின் தலைவன் கப்பமும் கொடுக்கத் தயார். .
ஆனாலும் மன்னனுக்கு ஏதோ நிறைவில்லை. வெற்றி பெற்ற பிறகு வரும் வெறுமையா? அல்லது வெற்றி பெற்ற விதம் வேறு வடிவில் இருந்திருக்க வேண்டுமா? எதிர்பார்த்த உச்சம் வருவதற்குள் போர் முடிந்து விட்டதா? ஏனோ தெரியவில்லை. சினத்தில் சிறந்து பாசறையிலேயே தங்கி விட்டான். அவனுடன் வந்த சிறுகுடித் தலைவன் தான் இந்தப் பாடலின் தலைவன்.
மழைக்காலம் தொடங்கும் போது வந்து விடுகிறேன் என்று தன் மனைவியிடம் வாக்குக் கொடுத்து விட்டு வந்துள்ளான். இல்லத்தைக் காத்து, விருந்தினரையும் அருளி காத்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு செய்தி சொல்ல ஒரு தூதனைப் பிடிக்கிறான். தூதனுக்கு செய்தியும் , முகவரியும் , மனநிலையும் சரியாகக் கடத்தவேண்டும்.
அவள் யார்? ஒளிவீசும் நெற்றியை உடையவள் (எவ்வளவு தெளிவான அடையாளம் ! )
முகவரி;
நெருப்பு போன்ற கண்களை உடைய பன்றி ஒன்று. ,நுண்ணிய மணல் செறிந்த புழுதியில் உறங்கிக் கொண்டிருக்கும். அதன் முதுகு மறையும்படி முல்லை மலர்கள் விழுந்து மூடி இருக்கும். அத்தகைய காட்டின் வெளியே இருக்கும் சீரான ஊர்.
அவள் அங்கே.
நான் (தலைவன் ) இருக்கும் இடமெது?: கோட்டைக்கு வெளியே அறுவடை முடிந்து விட்டது. சுமை தூக்கிகள் பெரிய நெல் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள். நெல் கட்டுகளுடன் தாமரை போன்ற மலர்த்தண்டுகளும் சேர்த்துக் கட்டி இருக்கிறார்கள். நான் இங்கே.
இங்கே காட்சி எப்படி?:
மலையின் உச்சியில் வானவில் உட்கார்ந்திருக்கிறது. முரசு போல இடிக்கிறது மேகம். கடல் நீரைக் குடித்துப் பெருத்து தாழ்வாக ஊர்ந்து பூமியை வளைத்துக் கொண்டு திசைகள் மறையும்படிப் பெய்கிறது மழை. இப்படியாக அழகிய முல்லை நிலத்தில் மாரிக்காலம் வந்துவிட்டது.
தூதுவன் போய்ச் சொல்லி இருப்பான். மன்னனும் ஒரு சலிப்பான கணத்தில் முற்றுகையை முடித்திருப்பான். தலைவனும் விரைவான தேரில் பறந்து வீட்டிற்கு வந்திருப்பான். அய்யனும் ஆச்சியும் மகிழ்ந்து, மக்கட்செல்வம் நிறைந்து, விருந்தோம்பி ,இனியவை கூறி , தீவினை அஞ்சி ஒப்பரவறிந்து , புகழீட்டி, மூத்து, நிலம் நீங்கி இருப்பார்கள். அந்த மன்னனும், தூதனும் இதை எழுதிய எழுத்தாளனும் இன்று இயற்கையுடன் தனிமங்களாகக் கலந்து விட்டிருப்பார்கள். அவர்கள் நடந்த நிலமும் , ஊர்ந்த தேரும் , உருக்கிய பொன்னும் உருமாறி விட்டிருக்கும்.
இறவாத இந்தப் பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வரும் அழகு எண்ண எண்ணப் பொலிந்து கொண்டிருக்கும். வாசிக்குந்தோறும் காட்சிகள் கோர்த்துத் தெளிந்து கொண்டே போகும். இந்த அனுபவமும் மொழியும் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் எந்த மொழிக்கும் அல்லது சமுதாயத்திற்கும் கிடைக்காதது.
குறிப்புப் பொருள்
ஒரு செய்தியைச் சொல்வதற்கு கவிதை வேண்டாம். ஒலை நறுக்கு போதும். வரிகளைக் கவிதையாக்குவது அதில் எது நேரடியாகச் சொல்லப்படாததோ அது தான். இப்பாடல் உருவாக்கும் மனநிலையும் குறிப்புப் பொருளும் அழகானவை. குறிப்பால் உணர்த்துவது மொழியின் ஆழத்தையும் பழக்கத்தையும் பொருத்தது.
‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பியர் சூத்திரத்தில் ‘ குறித்தனவே’ என்பதே கவனிக்கவேண்டியது. சொற்கள் பொருளைக் குறிக்கத் தான் முடியும். ஒரு சொல் தான் குறிக்கும் பொருளிற்கான பிரதி மட்டுமே. அதன் சூழல், மன அமைப்பு, நோக்கம் மாறுவதற்கேற்ப, அது தரும் காட்சியும் மாறிக்கொண்டிருக்கும்.
இறைச்சிப் பொருள், உள்ளுறை உவமம் என்னும் அழகுகள் அகத்துறையின் சிறப்பு. இந்தப் பாடலில் இரண்டு உள்ளுறை உவமங்கள் வருகின்றன.
முதலில் தலைவியின் ஊரில் உள்ள காட்சி.
முல்லை மலர்கள் வெண்மையும் நறுமணமும் கொண்டவை. இது தலைவியின் குணம் குன்றா மணவாழ்வைக் குறிக்கிறது. முல்லைப்பூக்கள் விழுவதால் சேற்றுமணலில் உறங்கிக் கொண்டிருக்கும் பன்றி மறைக்கப் பட்டு விடுகிறது. இங்கே பருப்பொருள் ஒப்பீட்டிலும் மன ஓட்டத்திலும் ஒரு முரண் காண்பிக்கப் படுகிறது. பன்றியும் உறக்கமும் தமோகுணத்தின் அடையாளம். முல்லையின் வெண்மை, மென்மை, நறுமணம் சத்வ குணத்தைக் குறிக்கின்றன.
ஆழ்ந்துறங்கும் பன்றி அறியாது தன்மீது விழுந்த மலரின் சிறப்பை. மூர்க்கத்தால் போர் புரியும் மன்னன் அறியமாட்டான் தலைவன் தலைவியிடம் நிலவும் மெல்லியல்பை என்று விரித்தால் ஒரு ‘mindscape’ கிடைக்கிறது.
இன்னொரு ஒப்பீட்டில், ஒளி பொருந்திய நெற்றியின் புற அமைதி கொந்தளிக்கும் மனத்தை மூடி இருக்கிறது, பன்றியை மூடிய முல்லையைப் போல.
ஒண்ணுதல் என்ற ஒரு சொல் மட்டுமே அவளைப் பற்றிக் குறிக்கப் படுகிறது.
நறுவீ முல்லை நாண்மலர் உதிர்வது ஒரு கரிய காட்டில் நடக்கும் கனவை எழுப்புகிறது. மலர்களில் பல நிலைகள் உள்ளன. அரும்பு , முகை, போது, வீ, செம்மல். வீ என்பது முதிர்ந்த , உதிரப்போகும் மலர்.
இன்னுமொரு உள்ளுறை வயலில் காணப்படுகிறது. நெற்கதிர்களை அடுக்கிக் கட்டும்போது , நிறைய செந்தாமரைத் தண்டுகளும் பிற மலர்க்காம்புகளும் சேர்ந்து கட்டப் படுகின்றன. உழவர் நெல் அறுவடையில் இருக்கிறார்கள். இது வயிற்றுப்பாடு சேர்ந்தது. அதனால் உணவாகும் (நெல்) பூக்களே இங்கு முக்கியம். இதயத்தின் உணர்வுகளுக்கான இடமில்லை இது. தானியங்களுடன் அழகுப் பூக்களும் சேர்ந்து கட்டப் படுகின்றன.
மலர் பிறழ வாங்கிக் கட்டுவது மலர்தொடுப்பது போல இருக்காது. மாலையில் உட்கார்ந்து சிரிக்க வேண்டிய தாமரை சுமையைக் கட்டித் துன்பமடைகிறது. மலரின் துயர் வாளுக்குத் தெரியாது. முற்றுகையிட்டிருக்கும் மன்னனுக்குத் தெரியாது தன் தளபதியும் அவள் மனையாட்டியும் படும் துயர்.
உலக வாழ்வில் வெளியில் நடக்கும் சம்பவங்கள் மனதினுள் நடக்கும் பெரும் நாடகத்தின் ஒரு துளியே. உள்ளே நடப்பதே அடிப்படை விசைகள். ஆணவமே போரென்றும் காமமென்றும் வெளிப்படுகிறது. மலரின் முனையிலும் வாளின் ஒளியிலும் திகழ்கிறது. காமமும் ஒரு போரின்றி வேறென்ன? போரின் பெரும்பகுதி வெளியிலா நடக்கிறது?
எல்லாக் காலங்களிலும் மாறாத அடிப்படை உணர்வுகளை மென்மையான மணத்தில் நிறைத்துத் தந்துள்ளது இந்த அகநானூற்றுப் பாடல்.
மலைமிசைக் குலைஇய உறுகெழு திருவில்
பணைமுழங் கெழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை 5
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி
அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவடைந் திருந்த அருமுனை இயவில்
சீறூ ரோளே ஒண்ணுதல் யாமே 10
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில்
அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து 15
வினைவயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே.
—- மதுரை எழுத்தாளன்.
ஒள் நுதல்- ஒள்ளிய நெற்றியினையுடைய நங் காதலியானவள்; மலைமிசை குலைஇய உருகெழு திருவில் பணை முழங்கு எழிலி – மலையின் உச்சியில் வளைந்துள்ள நிறம் பொருந்திய இந்திரவில்லையும் முரசம் போன்ற முழக்கத்தையும் உடைய; முகில்; பௌவம் வாங்கி தாழ்பெயல் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ- கடலின்கண் நீரைப் பருகித் தாழ்ந்து பெய்தற்குரிய மிக்க நீரோடு வானத்தின்கண் வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுச்சியுற்று உலகத்தை வளைத்துக்கொண்டு; மாதிரம் புதைப்பப் பொழிதலின் – திசைகள் மறையும்படி மழையைச் சொரிதலாலே; காண்வர இருநிலம் ஏம் உறு காலை- இனிய காட்சியுண்டாகும்படி கவினிய பெரிய முல்லைநிலத்தில் வாழ்வோர் இன்பம் எய்துதற்குக் காரணமான கார்ப்பருவத்திலே; நெருப் பின் அன்ன சிறுகண் பன்றி அயிர்க்கண் படாஅர் துஞ்சுபுறம் புதைய நறுவீ முல்லை நாள்மலர் உதிரும் – நெருப்புப்போன்ற சிறிய கண்களையுடைய பன்றியானது நுண்ணிய மணலின்கண்ணுள்ள சிறிய தூற்றிலே உறங்குகின்ற பொழுது அதன் முதுகு மறைந்து போகும்படி நறுமணங்கமழும் மலர்களையுடைய முல்லையினது புதிய மலர்கள் உதிருகின்ற; புறவு அடைந்திருந்த அருமுனை இயவில் சீறூரோள் – காடு சார்ந்திருக்கும் அரிய முனை களையுடைய வழியிலுள்ள சிறிய ஊரினிடத்தே பிரிவாற்றாது பெரிதும் வருந்தி இருப்பாளாக; என்க.
(வி-ம்) குலைஇய- வளைந்த. உரு- நிறம். திருவில்- வானவில். (இந்திரவில்) பணை- முரசு -பணைபோல முழங்கும் எழிலி என்க. பெயல்- பெய்தல் தொழில். ஏர்பு- எழுச்சியுற்று. மாதிரம் -திசை. எழிலி வாங்கி ஏர்பு வளைஇப் புதைப்பப் பொழிதலின் என்க. காண்- காட்சி. ஏம்- ஏமம் என்பதன் விகாரம். அயிர்- நுண்மணல். படாஅர்- சிறு தூறு. துஞ்சுபுறம் புதைய- துஞ்சுங்கால் அதன் முதுகு மறைய என்க. புறவு- முல்லைப்பரப்பு. இயவு- வழி.
10-17: யாமே…..பாசறையேமே.
(இ-ள்) யாமே- அவளைக் கைவிட்டு வந்த வன்கண்மையையுடைய யாம் இப்பொழுது; எரிபுரை பல் மலர் பிறழ வாங்கி அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ்சூடு- தீப்பிழம்பையொத்த செந்தாமரை முதலிய பல்வேறு மலர்களும் தலைமாறும்படி அள்ளி நெல் அரிகின்ற உழவர் கட்டிய அசைகின்ற தலையையுடைய பெரிய கதிர்க்கட்டுகளை; கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்-கள்ளைக்குடித்த தொழிலாளர்கள் சுமந்துகொண்டு களந்தோறும் செல்லுதற்கிடனான ; தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அருந்திறை கொடுப்பவும் கொள்ளான்- மருதநிலம் சூழ்ந்த வெற்றிக்கொடி அசைகின்ற மதிலமைந்த இந்த ஊராகிய கொடுத்தற்கரிய திறைப்பொருளைப் பகை மன்னர்கள் வணங்கிக் கொடுப்பவும் ஏற்றுக்கொள்ளானாய்; சினம் சிறந்து வினைவயின் பெயர்க்கும் தானைபுனைதார் வேந்தன்- வெகுளிமிக்குப் பின்னரும் போர்த் தொழிலின்கண் செலுத்தப்படுகின்ற சேனைகளையும் அணிந்த வாகைமாலையினையும் உடைய நம்மரசனது; பாசறையேம்- பாசறை இடத்து அவளை நினைந்து வருந்தி இருக்கின்றேம், அவள் நிலை என்னையோ? என்பதாம்
சூடு- கதிர்க்கட்டு. வினைஞர் என்றது கூலிக்கு வேலைசெய்பவரை. தண்ணடை- மருதநிலம். மருதநிலம் சூழ்ந்த தமது அரண்மனையையே பகைவர் திறையாகக் கொடுப்பவும் கொள்ளான் என்றது, அரசனது மிகையாய மறப்பண்பினைக் குறைகூறி தன்னுள் நொந்துரைத்தவாறு. அவள் நிலை என்னையோ என்பது குறிப்பு.
நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0490_02.html
















