தம் வைதிக குரு நிலைகளில் முரண்பட்டு வெளியேறி தமக்குரிய ஆசிரியரைத் தேடி பயணம்
மேற்கொள்கின்றனர் பைலன், ஜைமினி, சுமந்து, வைசம்பாயனன் என்னும் நான்கு மாணவர்கள். பின்னாளில் வியாசரின் மாணவர்களாக பெரும் புகழ் பெறவிருக்கும் அவர்களின் பயணம் சண்டன் என்ற சூத இளைஞடன் இணைந்து செல்லும் அணுக்கப் பயணமாக அமைகிறது. தண்டகாரண்யத்திலிருந்து திருவிட நிலம் வரையில் அமையும் அப்பயணத்தில் சண்டன் கூறும் கதைகளின் வாயிலாக அர்ஜுனனின் திசை வெற்றி பயணம் கூறப்படுகிறது.
இரண்டு பயணங்களும், அதாவது தண்டகாரண்யம் துவங்கி திருவிட நிலம் வரையிலான
அம்மாணவர்களின் பயணமும் சண்டனின் கதைகளின் வாயிலாக நிகழும் அர்ஜுனனின்
பயணமும் ஒரு வகையில் இணையானவை எனலாம். தம்மைத் தாமே அறியும் பயணமாகவும் தம் ஆசிரியரைப் புரிந்து கொள்ளும் பயணமாகவும் அவை அமைகின்றன.

சண்டனிடம் கதை கேட்டுக் கொண்டே பயணிக்கும் நால்வரும், வியாசரை நோக்கியே
செல்கிறார்கள். வியாசரைப் புரிந்து கொள்ள சண்டனின் கதை கூறல் அவர்களுக்கு உதவுகிறது எனக் கொள்ளலாம். துவக்கத்தில் சண்டனிடம் விலக்கத்துடன் இருக்கும் ஜைமினி இறுதியில் உக்ரன் என்னும் சூத குழந்தை ஞானியை தோளில் சுமந்து அலைபவனாகிறான். அவனே ஒரு சூதனைப் போல நயத்துடன் பேசுபவனாகவும் ஆகிறான். ஜைமினியிடம் ஏற்படும் இந்த மாற்றம் சண்டனால் நிகழ்கிறது. தாம் சென்று சேரவிருக்கும் ஆசிரியரை புரிந்து கொள்ளலும் தம்மை அறிதலும் இங்கு படிப்படியாக ஒரு சேர நிகழ்கிறது.
அர்ஜுனன் தன் திசை வெற்றிப் பயணத்தின் வாயிலாக தன் ஆசிரியரான இளைய யாதவரை
அறிந்து கொள்கிறான். இளைய யாதவருடன் அவனுக்கு ஏற்படும் போர் அவனது பயணத்திற்கு
துவக்கமாக அமைகிறது. தான் அறியாத எதுவும் அவரிடம் இருக்க வாய்ப்பில்லை என்னும்
அளவில் அணுக்கம் கொண்டவனாக தன்னை எண்ணியிருக்கும் அவன் தான் அறிந்திராத
வேறொரு முகத்தை அவரில் காண்கிறான். இளைய யாதவருக்கு இணையாக தான் இருந்தால்
மட்டுமே அவர் தனக்கு ஆசிரியராக இருக்க முடியும் என்று கூறுகிறான். அவனும் அவருக்கு
இணையானவனாக இருந்தால் மட்டுமே அவருக்கு உகந்த மாணவனாக இருக்க முடியும்.
அவனுக்கு இது தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் பயணமாக அமைகிறது. தன்னை ஆழ்ந்து அறியும் பயணமாக, அதன் வாயிலாக தன் ஆசிரியரை ஆழமாக அறியும் பயணமாக அமைகிறது.
உண்மையில் இளைய யாதவர் போன்ற ஒரு மெய்ஞானிக்கு முதலும் கடைசியுமான மாணவன்
அர்ஜுனன் மட்டுமே என்று கூட தோன்றுகிறது. அவர் அவ்வாறான ஆசிரியர். புத்தருக்கு பல
சீடர்கள் அமைய முடியும் இளைய யாதவருக்கு அர்ஜுனனுக்கு அப்பால் பிறிதொரு சீடன்
அமைவது அரிதினும் அரிதே. அத்தனை முகங்கள் கொண்டவர் கொண்டவர் அவர். அவருடைய அத்தனை முகங்களையும் எதிர்கொள்ளும் ஒருவன் அவன் மட்டுமே.
அர்ஜுனனுக்கு கடக்க முடியாத ஒருவர் இளைய யாதவர். அவருக்கும் அவன் அவ்வாறே.
அவருடனான போருக்குப் பிறகு தன் திசைப் பயணத்தைத் துவக்கும் முன் தன்னை விமர்சிக்கும் பீமனிடம் அவன் அதைக் குறிப்பிடுகிறான். அதாவது இளைய யாதவரால் என்னைக் கடக்க முடியவில்லை என்கிறான். இளைய யாதவரின் முதன்மை ஆடல்கள் அனைத்தும் அவனை முன் வைத்தே நிகழ வேண்டும். இளைய யாதவர் தரவிருப்பதை அதன் எல்லாத் தளங்களிலும் எதிர் நின்று பெறத் தகுந்தவன் அவன் மட்டுமே. நாராயண வேதம் எவ்வாறு பிரகலாதன் வாயிலாக எழுந்தது என்று கிராதத்தில் கூறப்படுகிறது. ஒரு வகையில் அர்ஜுனன் பிரகலாதனுடன் ஒப்பிடத்தக்கவனாகிறான். எழவிருக்கும் கீதையும் அவனை முன்னிட்டே எழ வேண்டும். இந்திரனுக்காக இளைய யாதவரைப் பிரிய மறுக்கும் அவ்வகையிலும் அவன் பிரகலாதனுடன் ஒப்பிடத்தக்கவன்.
அர்ஜுனன் தன்னை ராதையாகவும் கருதுகிறான். பக்தி மற்றும் பெரும் பிரேமை வழியாக
பிரகலாதனும் ராதையும் அறிந்த முகங்களை அவன் அறிவான். அதே சமயம் அவர்கள்
அறிந்திராத விண்ணோனின் பிற முகங்களையும் அவன் அறிவான்.
அர்ஜுனன் நான்கு திசைகளிலும் சென்று வென்று பெறும் அறிதல்களும் இறுதியாக அவன்
சென்று தொடும் கயிலையின் பாசுபத முழு மெய்மையும் அவர் முன்பே சென்றடைந்தவை அவர் கடந்த பாதைகளேயே அவனும் கடந்து வருகிறான். அச்சம் (யமன்), செல்வ விழைவு (குபேரன்), ஆழம் (வருணன்), காமம் (இந்திரன்) இவை வென்று கடந்து அறுதி மெய்மையான பாசுபதத்தை சிவனிடம் அறிந்து திரும்புகிறான். அல்லது வேறொரு வகையில் சொல்வதென்றால் தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்னும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் அறிதல்களை பெற்று திரும்புகிறான்.
பேரறத்தின் பெருந்திட்டத்தின் முகமாக நின்று செயல்படும் இளைய யாதவருடன் தன்னை ஆழந்து முழுமையான புரிதலுடன் பொருத்திக் கொள்ள அல்லது அவரது லீலையில் எங்கும் உளத்திரிபு அற்று இயைந்திருக்க அவனுக்கு திசை வெற்றிப் பயணம் பயன்படுகிறது. ஒரு வகையில் யமனாக, குபேரனாக, வருணனாக, இந்திரனாக, சிவனாக, ஏன் விருத்திரனாகவும் அவன் அறிவது இளைய யாதவரையே என்று தோன்றுகிறது.

துவக்கத்தில் மூன்று அடிகள் கடப்பதன் வாயிலாக அவன் சென்றமைந்து விட வாய்ப்புள்ள
மெய்மையை நேமிநாதர் காட்டுகிறார். இறுதியில் முழுமுதல் மெய்மையான பாசுபதத்தில் சென்று அமையும் வாய்ப்பும் அவன் பெறுகிறான். இவ்வனைத்தும் அவனது இயல்பான அச்சமின்மையாலும் பற்றின்மையாலும் அவனுக்கு கிடைக்கின்றன. எனினும் இளையாதவருடன் மட்டுமே அமைபவன் அவன் என்பதால் அவ்வறிதல்கள் அனைத்தையும் அமைவாக கொள்ளாமல் கடந்து வருகிறான்.
தமிழ் நிலத்தில் இருந்து வரும் விண்ணோனின் அடியார்களுடன் இணைந்து கொள்ளும்
மாணவர்கள் நால்வரும் காளத்தி செல்லும் சிவநெறியினருடன் இணைந்து கொள்ளும் சண்டனும் என்று முடியும் கிராதத்தின் வாசிப்பு சைவம் வீரருக்கான பாதை என்றும் வைணவம் அன்பருக்கான பாதை என்றும் ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது. எனினும் சிவநெறிகள் எண்ணற்றவை என்று முதற்பகுதியிலேயே பிச்சாண்டவர் கூறுகிறார். கிராதம் எடுத்துக் கொண்டிருப்பது கிராதத்திற்கு தேவையான சைவத்தை மட்டுமே.
சிவமேயாம் என்பது வீரனுக்குரியது. பெருமானின் மீதான பெரும் பித்து பெருங்காதலனுக்குரியது. எல்லாவுமான இளைய யாதவருடன் எல்லா வழிகளிலும் பொருந்தும் அர்ஜூனனின் கதைகளின் வாயிலாக தமக்குரிய வழிகளைக் கண்டடைந்து சென்றடைகிறார்கள் மாணவர் நால்வரும் சண்டனும்.















