முதற்கனல் 2 – ஆர். ராகவேந்திரன்

தீச்  சாரல் , தழல் நீலம் ,வேங்கையின் தனிமை, அடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து ஆர். ராகவேந்திரன் ஆற்றிய சிறப்புரை:

“எதனையும் விட வேகம் கொண்டவன் என்று தன்னை ஒளி நினைத்துக் கொள்கிறது.  ஆனால்  அது தவறு. எவ்வளவு விரைவாக ஒளி சென்றாலும் தனக்கு முன்னே அங்கே சென்றடைந்து தனக்காகக் காத்துக்  கொண்டிருக்கும் இருளைக் காண்கிறது.”

டெர்ரி பிரச்சட்டின்  ரிப்பர் மேன் நாவலில்  வரும் இந்த பிரமிப்பூட்டும் வரிகளை முதற்கனலுக்கு முத்தாய்ப்பாகச் சொல்லலாம் 

 முதற்கனலின் அத்தியாயம் 27 முதல் 50 வரையிலான பகுதிகள் அம்பையின் தீப் புகுதலையும்,  பீஷ்மர், வியாசர், சிகண்டியின் நெடும் பயணங்களையும்  திருதராஷ்டிரன், பாண்டு, விதுரரின் பிறப்புகளையும் பேசுகின்றன.

சுருதி, ஸ்மிருதி, புராணங்களின் கலவையாகத் தோன்றுகிறது முதற்கனல் . சாந்தோக்கிய உபநிடத்தின் ஆப்த வாக்கியமாகிய “நீயே அது’ அக்னிவேசரால் சிகண்டிக்கு அளிக்கப் படுகிறது.  காலத்திற்கேற்ப மாறிவரும் அறங்களை எம ஸ்மிருதி , சுக்ர ஸ்ருதி  முதலாய நீதி  நூல்களை வைத்து அரசியல் – உளவியல் சிக்கல்களை   உசாவுகிறது. யயாதி  போன்ற புராணக் கதைகள் மூலம் பீஷ்மரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்கிறது. 

  குஹ்ய சிரேயஸ் ( மறைக் காப்புத் திறலோன் என்று பொருள் கொள்கிறேன்)  என்னும் கழுதைப்புலி க்ஷத்ரியர்கள்  ஒவ்வொரு குலத்திலும் உருவாகும் விதத்தைச் சொல்கிறது. வைச்வானரன் என்னும் நெருப்பு படைப்பின் உயிரின் ஆற்றலாக பிறவி தோறும் தலைமுறை தோறும் கடந்து வரும் சத்து என்பதை உணர்ந்து கொண்ட சித்ரகர்ணி- கழுதைப்புலிகள் மற்றும் வியாசர் உரையாடல் அழகிய பஞ்ச தந்திரக் கதையாக அமைகிறது.  

சாந்தோக்ய உபநிடததத்தில்  வைச்வானர வித்யை என்னும் தியான முறையை  அஸ்வபதி கைகேயன் என்னும் அரசன்   உத்தாலக  ஆருணி  முதலிய கற்றறிந்த பண்டிதர்களுக்கு உபதேசிக்கிறான். அவர்கள் தியானம் செய்யும் முறையானது பிரபஞ்சத்தின் தனித்தனியான பகுதிகளாக  கவனம் செலுத்தி வந்தது.  அனைத்தும் ஒன்றே என்னும் அறிவை அவர்களுக்கு வழங்குகிறான். வயிற்றில் உறையும் வைச்வானரன் என்னும் செரிக்கும் நெருப்பு எப்படி உணவை உடல் முழுவதும் ஆற்றலாக மாற்றித்  தருகிறதோ  அது போல இந்த அறிவும்  முழு நிறைவை வழக்கும் என்று சொல்லப்படுகிறது. 

அந்த வித்தை யின் பருவடிவமாக இந்த நெருப்பு எப்படி உண்டும் வழங்கியும் உயிர்க்குலங்களின் வழியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை இறந்து கொண்டே தத்துவம் பேசும் சித்ரகர்ணி என்னும் சிம்மம் சொல்கிறது. பெயர் வைத்தலில் அழகிய பொருத்தம் உள்ளது. க்ஷத்திரியனின் பிரதிநிதியாக குஹ்ய சிரேயஸ் ரகசியத்தின் உருவமாக இருக்கிறது. குலம் காக்கும் – குருதி கொள்ளும் ரகசியம். விநோதச் செவியன் என்று சித்ரகர்ணியை எடுத்துக் கொண்டால் ‘கேட்டலின்’ மூலம் ஞானம் பெற்றவன் அவன். வியாசரின் குடிலை வேவு பார்க்கும் போது எத்தனையோ கேட்டிருப்பான்.

அத்வைதம் தரும் அமைதி நிலையை பல்வேறு பாதைகளின் மூலமாக வியாசருக்கும் பீஷ்மருக்கும் இயற்கையும் சூதர்களும்  வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

காலத்திற்கேற்ப ஸ்மிருதிகள் மாறுவதை ஸ்வேதகேது தனது தந்தையை எதிர்த்து தாய்க்கு உதவி செய்யும் பகுதி விளக்குகிறது . சட்டம் நெகிழக்கூடிய பகுதிகளையும் அது நிகழக்கூடிய வகைகளையும் சொல்லி வைத்திருக்கிறது. 

புராணத்தின்   அலகுகளான  காவியம், கண்ணீர், வம்ச  கதை  திரண்டுள்ளன முதற்கனலில். 

பாத்திரங்களின் குண மாற்றம் இதை ஒரு தனிப் புதினமாக ஆக்குகின்றன 

ராஜோ குணத்தின் செயலூக்கத்தில் துவங்கி, பின் தமோ குணத்தில் பித்தியாக அலையும் அம்பை இறுதியில் சத்துவ குணத்தில்  நிறைகிறாள். அன்னையின் நிழலில், உண்பதே வாழ்க்கையாக துவங்கும் சிகண்டினி, பின்னர் பழி என்னும் ஒற்றை இலக்கிற்காக ரஜோ குணத்தில் நிற்கிறாள் . அம்பைக்குப் படகோட்டிய நிருதன் தூய காத்திருத்தலில் அசையாமல் படகில் இருப்பது தமோகுணமாக மயக்கும் சத்வம் தான் பின் அம்பையை விண்ணேற்றவும் ஏற்றியபின் முதல் பூசகனாகவும் உருமாறி ராஜசத்தில் சேருகிறான், பீஷ்மர் வெளித்தோற்றத்தில் ராஜசமும் உள்ளே மாறாத் தேடலில் சத்வத்திலும் உறைகிறார். சத்யவதி மட்டும் குணமாற்றமின்றி இருப்பதாகத் தோன்றுகிறது. 

சுக முனிவரும் பீஷ்மரும் தந்தைக்கு முறையே சொல்லாலும் செயலாலும் மீட்பளிக்கிறார்கள். வியாசர் அறத்தையும் சந்தனு இன்பத்தையும் மகன்களிடம் கொடையாகப் பெறுகிறார்கள். 

யயாதி கதை பீஷ்மருக்கு சொல்லப் படுகிறது. ராஜாஜியின் யயாதியிலிருந்து வெண்முரசின் யயாதி வேறுபாடும் இடம் சிறப்பானது. கால மாற்றத்திற்கேற்ப யதார்த்தமானது. “வியாசர் விருந்தில் ” இச்சையை அடைந்து தணிப்பது என்பது நெருப்பை நெய் விட்டு அணைக்க முயல்வது போன்றது ” என்ற அறிவைப் பெற்று விடுகிறான். முதற்கனலில் வரும் யயாதி மகனுக்கு இளமையை அளித்து விண்ணேகிய பின்னும் அகந்தையால் வீழ்த்தப்படும் யயாதியாக நெருப்பிலும் பயன் பெற உரிமை இன்றி, தனது மகளைக் கண்ட கனிவில் முழுமை அடைகிறான் 

பீஷ்மர் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய ஒரு வாய்ப்பை யயாதி கதை மூலம் அவருக்கு சொல்கிறார் சூதர் . 

முதற்கனல் பெண்டிரையும் ஒடுக்கப்பட்டவர்களையும்  பீடத்தில் ஏற்றுகிறது. பீஷ்மரை இழிவு செய்து பாடும் சூதர், சால்வனை தீச்சொல்லிட்டுவிட்டு, நகர் நீங்கும் சூதர், மந்திரங்கள் மூலம் அரசியரின் மனங்களை கட்டுப்படுத்தும் நாகினி, காவியமும் சீர் மொழியும் கற்றுத்தேர்ந்த சிவை போன்ற அடிமைப் பெண்கள் வரவிருக்கும் கால மாற்றத்தைக் குறிக்கிறார்கள். 

குல அறங்கள், கால அறங்கள், தேச அறங்கள் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி நிற்கும் சரடுகளின் இறுக்கத்தின் மேல்  மைய அரசின் அரியணை நிற்கிறது. க்ஷத்திரியர் ஆவதற்கு வாள்முனையும் மறைச்சொல்லும் குலங்களுக்குத் தேவைப்படுகின்றன. பிறகு புதிய போட்டியாளர் உருவாகாமல் தடுக்க வேண்டி உள்ளது 

சிறிய நிகழ்வுகளை பெரிய இயக்கங்களுடன் தொடர்புறுத்துவதே வெண்முரசின் பிரம்மாண்டம்.    

நியோக முறையில் குழந்தைகள் பிறக்கும் முன் சொல்லப் படும் கதைகள்  இதற்கு நல்ல உதாரணம். 

நூறு   பறவைகளின் நிழல்களை வீழ்த்திய திருதராஷ்ட்டிரன் என்னும் கந்தர்வன் அதே பெயரில் கண்ணில்லாதவனாக  பிறக்கிறான். அவன் பார்ப்பதெல்லாம் இருளே. அவன் தேடுவதெல்லாம் நிழலாகவே அமையப் போகின்றன . தனது குஞ்சுகளைப்  பிரிந்த ஏக்கத்தில் இறந்த சாதகப் பறவை மீண்டும் பாண்டுவாய்ப் பிறந்து மைந்தரைப் பிரியும் துயரை அடைகிறது. அறத்தின் தலைவனே விதுரனாக வருகிறான். 

வில்வித்தை பிரம்மவித்தையின் ஒரு சிறு பகுதியே என்கிறார் அக்நிவேசர். ஒவ்வொரு சிறு  அறிவும் சொல்லும் ஊழ் வரை, புடவி அளவு காலம் அளவிற்கு விரிந்த ஒன்றின் துளி என்னும் ஞானம் கதை வழியே பயணிக்கிறது. 

பிஷ்மரின் சப்த -சிந்து  சிபி நோக்கிய பயணங்கள் அவருக்கு மனவிரிவை  அளிக்கின்றன. பாலையில் காணும் விதைகளைக் கண்டு  வியக்கிறார். வானும் மண்ணும் கருணை செய்தால் வேறு ஒரு வகை காடு உருவாகி இருக்கும் என்று எண்ணுகிறார். கோடிக்கணக்கான நிகழ்தகவுகளின்  ஒரு தேர்வு தான் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்றுணரும் இடம் அதிர்ச்சி அளிப்பது      .  ஒரு வேளை  கால – நிகழ்வுகளின்  வேறு வகையான  வாய்ப்பில் அவரும் விதை முளைக்கும் சாதாரண தந்தையாகி இருந்தால், பெண்ணின் கருணை அவருக்கு கிட்டி இருந்தால் தனித்த வேங்கையின் பொறுப்புகள்  அவரிடமிருந்திருக்காது. 

தென் மதுரைச் சாத்தன் வியாசருக்கே வழி காட்டுகிறார். கருமையும் வெண்மையும் இணைந்ததே ஒளி என்கிறார் . 

 மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு ஒரு கடமையை அளித்ததில் துவங்கும் முதற்கனல் அவன் தனது வேசர நாட்டிற்கு திரும்பி வருவதுடன் நிறைகிறது, இருள் என்பது இகழப்  படவேண்டியதில்லை , தமோ குணம் முற்றும் ஒழிக்கப் படவேண்டிதில்லை என்ற அறிவை ஜனமேஜனுக்கு அளித்து பாம்பு வேள்வியை தடுத்த வெற்றியாளன் ஒரு வருடம் கழித்து நாக பஞ்சமி  அன்று தனது குலத்திற்கு வந்து தான் இன்னும் நாகன் தான் என்று அறிவிக்கிறான். 

ஆஸ்திகனால் காக்கப்பட்ட தட்சன் தட்சகியுடன் காரிருள் நீண்ட பெரு வானம் நிறைத்து இணைந்து படைப்பை நிகழ்த்துகிறான். இருள் இணைந்து ஒளியைக் குழவியாகப் பெற்றுத்  தாலாட்டுகிறது. சத்வகுணம் என்னும் முத்து ராஜசம் என்னும் சிப்பிக்குள் தாமசம் என்னும்  ஆழிருள் கடலில் பாதுகாப்பாக இருக்கிறது.  இருளற்ற ஒளியில்லை. இதுவே இந்தியாவின் அனுபவ ஞானம் . 

இருள் ஒளி இரண்டிற்கும் ஒன்றிடம் என்று அருள் தரும் ஆனந்தத்தை அடைய அனைத்திலும் ஒன்றைக் காண்பதே வழி என்கிறது முதற்கனல். பல ஆயிரம் ஆண்டுகளாக  பாரத வர்ஷம் கண்ட வாழ்வனுபவம் புல்லும் புழுவும் நம்பி வாழும் அறத்தை நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியாக முதற்கனல் எரிகிறது.

உவமைகள் / உருவகங்கள் 

1 செம்புல்  பரவிய குன்று போன்ற சிம்மம் 

2 நெல்மணி பொறுக்கும் சிறு குருவி போல அம்பாலிகையிடம் பதற்றம் இருந்தது 

3 வாய்திறந்த அரக்கக் குழந்தைகள் போல வட்ட   வடிவ இருளுடன் நின்ற செம்புப் பாத்திரங்கள் 

4  வலசைப்  பறவைகளுக்கு வானம் வழி சொல்லும் 

5  பாரத வர்ஷம் ஞானியர் கையில் கிடைத்திருக்கும் விளையாட்டுப் பாவை 

6 வந்தமரும் நாரைகள் சிறகு மடக்குவது போல பாய்  மடக்கும் நாவாய்கள் 

7 சிகண்டி கழுத்தில் குருதி வழியும் குடல் போல காந்தள் மாலை கிடந்தது 

தத்துவங்கள்  

 கருணை கொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே (சுகர் வியாசரிடம் சொல்வது) 

இசை  நுணுக்கங்கள் 

புரவிப்படை மலையிறங்கும் தாளம்.

ஆர்  ராகவேந்திரன் 

கோவை

முதற்கனல் வாசிப்பனுபவம் – விக்ரம்

வேள்விமுகம் முதல் மணிச்சங்கம் வரை

சொல்முகத்தின் வெண்முரசு கூடுகையை முன்னிட்டு முதற்கனலை மறுவாசிப்பு செய்தது உள்ளம் நிறைத்த அனுபவமாக இருந்தது.  நாகர்குலத் தலைவி மானஸாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு புடவியின் தொடக்கம் முதல் தனக்கு அவன் பிறந்தது வரை நாகர்குல வழக்கில் கூறுவதில் தொடங்கி அஸ்தினபுரியில் பேரரசன் ஜனமேஜயன் நடத்தும் சர்ப்பசத்ரமென்னும் உலகின் மொத்த நாகங்களையும் அழித்துவிடும் பெருவேள்வியினை ஆஸ்திகன் நிறுத்துவதும் அதன் தொடர்ச்சியாக அவனுக்கும் ஜனமேஜயனுக்குமான கருத்து முரண்பாட்டை வியாசர் ஆஸ்திகன் தரப்பில் சரியே என்று தீர்ப்பளித்து தொடர்ச்சியாக மாபாரதமென்னும் அவரது ஸ்ரீஜய காவியம் வைசம்பாயனரால் பாடத்தொடங்கப்படுவது வரை சென்று அமைகிறது முதற்பகுதியான வேள்விமுகம்.  நாகங்களை இச்சை மற்றும் அகங்காரத்தின் குறீயீடாக கொண்டு அந்த அடிப்படை விசைகளே புடவின் உயிர் இயக்கத்திற்கு காரணமாக அமைவதும் அவையில்லாமல் உயிரோட்டமற்றதாக புவி வாழ்க்கை ஆகிவிடும் என்பதைக் கூறுகிறது.

அஸ்தினாபுரியென்னும் பிரமாண்ட நகரை அறிமுகம் செய்து அதன் பெருமைமிகு அரசர் நிரை கூறி இன்று அது எதிர்கொண்டிருக்கும் சிக்கலை அறிமுகம் செய்கிறது பொற்கதவம்.  பீஷ்மர் சத்தியவதியின் ஆணைப்படி விசித்திரவீரியனுக்காக காசி மன்னனின் புதல்விகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை கவர்ந்துவர அவர் உள்ளம் கொள்ளும் அறச்சிக்கலைக் கடக்க வியாசரின் விடையைத் தெரிவி்த்து அமைகிறது இப்பகுதி.  தீர்கசியாமர் என்னும் பெரும் சூதர் பீஷ்மருக்கு கூறுமுறைமையில் வியாசரின் துவக்கம் கூறப்படுகிறது.

காசியில் நடைபெறும் சுயம்வரமும் அங்கு சென்று பீஷ்மர் அக்கன்னியரைக் சிறையெடுப்பதில் தொடங்கி சால்வ மன்னனாலும் தந்தை பீமதேவனாலும் பீஷ்மராலும் புறக்கணிக்கப்பட்டு அம்பையென்னும் வடிவில் மாபெரும் எதிர்காலப் போர் ஒன்றிற்கான முதற்கனல் விழிகாணும் விதமாக எழுந்து துலங்குவதை கூறி மிகப்பொருத்தமாக எரியிதழ் என்று தலைப்பு கொள்கிறது அடுத்த பகுதி.  எரியின் இவ்விதழ் அதன் முதற்தொடக்கமாக தாட்சாயணியென்னும் சதிதேவியைத் காட்டுகிறது.  தட்சனென்னும் நாகத்தின் மகளாகப் பிறக்கும் அவள் இறைவனின் விண்ணின்பால் மீண்டுற தனக்கான சர்ப்பசத்திர வேள்விபோல் முன்னம் எரிபாய்ந்த இறைவியாவாள்.  அவ்விறைவியின் எரிதல் அணையாமை கூறி அம்பையின் அன்னை அம்பையையே கருதி நெருப்பின் காயமுற்று உயிர்துறப்பது வரை செல்கிறது அணையாச்சிதை.  சூதர்கள் அம்பையைக் குறித்து பாடுவதை அவள் சீற்றம் கொண்ட தெய்வ உருக்கொண்டதை அவளது கனலைப் பெற்றுக்கொள்ள, பெண்பழியின் கணக்கைத் தீர்க்க, உத்திர பாஞ்சாலத்தின் மன்னன் தவிர பிறர் பீஷ்மரை அஞ்சி தவிர்ப்பதை விசித்திரவீரயன் தன்னை முன்னிட்டு அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் தவிப்புற்று அவளைத் தேடிச்சென்று பணிவதை அவள் அவன்பால் அருள் கொள்வதை கூறுகிறது.

புதிய பெருநகர் நுழையும் அம்பிகையும் அம்பாலிகையும் கொள்ளும் எண்ணங்களும் அச்சிறுமிகளின் நடத்தையும் சுவாரஸ்யமானவை, அவர்கள் விசி்த்திரவீரியனை மணமுடிப்பது முதலில் வெறுத்து பின் அவனை கனிந்து அம்பிகை ஏற்று காதல் கொள்வது அவன் மறைவது வரையிலான பகுதி மணிச்சங்கம்.  அம்பிகையும் அம்பாலிகையும் உண்மையில் அம்பையைவிட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பரிவு தோன்றுகிறது.  இப்பகுதியில் விசித்திரவீரியன் அவனது தந்தை சந்தனுவையும் தன் உடன்பிறந்த பீஷ்மரென்னும் மாமனிதனையும் தீர்க்கசியாமரின வாயிலாக உணர்ந்துகொள்கிறான்.  அம்பையின் கனல் எத்தகையது என்றபோதும் அதன் பழி தன்னைத் தொடாத உயரத்தில் இருப்பவர் பீஷ்மர் என்ற எண்ணம் ஏற்பட்டது.  அறத்திற்கும் அறமின்மைக்குமான இடத்தில் அல்ல அவர் முன்னம் பழம்பிறப்பில் சிபியென கூட அவர் அறத்திற்கும் அறத்திற்குமான எல்லையில் அல்லது அறத்திற்கும் பேரறத்திற்குமான சந்தியில் நிற்பவராகவே காண்கிறார்.
வியக்கத்தக்க வகையில் அல்லாமல் இங்கு பீஷ்மருக்கு பேரறத்தின் முன்னம் மனித அறத்தின் எல்லை உணர்த்தும் வியாசரே பின்னாளில் அதையே ஜனமேஜயனுக்கு உணர்த்துபவராகவும் இருக்கிறார்.  ஜனமேஜயனுக்கு மட்டுமல்ல ஜெயமோகனாக நமக்கும் அவரே இன்று வெண்முரசறைந்து உணர்த்துகிறார்.

எரியிதழ், அணையாச்சிதை, மணிச்சங்கம் என்ற இம்மூன்று பகுதிகளில் மைய ஓட்டத்திற்கு இணையாகச் செல்லும் புராணக்கதைகள் ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொள்ளும் ஆடிகள் போல.  பெண்ணின் துயரும் சீற்றமும் விதியும் என தாட்சாயணி, பெண்ணின் வெற்றி என மகிஷனை வென்ற இறைவி, ஆண்பால் கொள்ளும் கனிவு என சத்தியவானைத் தொடரும் சாவித்ரியின் கதை.  இதில் ஒரு படிநிலைபோன்ற அமைவு இருக்கிறது.
அம்பிகை விசித்திரவீரியன்பால் கொள்ளும் காதல், அவர்களது உரையாடலின் தருணங்கள் இனியவை.  அவன் தன் பேரன்னை சுனந்தையின் துயரமிக்க வாழ்வை அவளுக்குக் கூறுகிறான்.  அதேவிதமான மக்கட்பேறு என்ற ஒரு காரணத்தின் பொருட்டு துயர் திணிக்கப்பட்டவர்கள் தானே அவளும் அம்பாலிகையும்.

சித்திராங்கதன் இங்கு திகழாதவனாகவே செல்கிறான்.  விசித்திரவீரியன் குறுகிய ஆயுள்கொண்ட போதும் தன் இயல்பால் அனைவரையும் வெல்கிறான்.  அன்னை சத்தியவதியை மட்டும் அவன் வென்றானா என்பது என் அய்யமே.  அவனுக்கும் அமைச்சர் ஸ்தானகருக்குமான நட்பு சுவையானது.  அவனை இறைவன் என்றுகொள்ளும் நேசம் உடையவர் அவர்.  வேறு ஏதும் கடமை தந்துவிட வேண்டாம் இதுவே என் வாழ்வின் நிறைவு என்று அவன் மறைவில் துறவைத் தேர்ந்துகொள்கிறார் அவர்.

இங்கு பெண் உறும் துயர் என்றாலும் கூட அவை ஷத்திரியப் பெண்களுக்குரியவையாகவே இருக்கின்றன.  மீனவக் குலத்தவரான பேரரசி சத்தியவதியும் கங்கையும் எவ்வகையிலும் தங்கள் சுதந்திரத்தை இழந்தவர்கள் அல்ல.  தாட்சாயணி, சுனந்தை, அம்பை ஒரு நிரை என்றால் சீதையும் அதன் பிறிதொருவகை என்ற எண்ணம் தோன்றுகிறது.

எண்ணற்ற நுண்மைகள் கொண்டதாக இருக்கிறது முதற்கனல்.  பாலாழி கடையும் தேவர்கள்-அசுரரின் புராணக்கதை கூறப்படுகிறது.  நஞ்சு இல்லாமல் வாழ்க்கை இல்லை நஞ்சைக் கடக்காமல் மெய்மை இல்லை.  கடத்தற்கரிய நஞ்சை கடக்கத் தேடி நுழைபவர்களுக்கு அவர்களுக்கான நீலகண்டனை கண்டடைய பெரும் இணை வாழ்வைத்தரச் சித்தமாக இருக்கும் வெண்முரசின் திருஆல வாயிலாக இருக்கிறது மெய்மை நோக்கின் இந்த முதற்கனல்.

முதற்கனலின் முதல் உரசல் – ஆர். ராகவேந்திரன்

வெண்முரசு முதற்கனல் வாசிப்பு -வேள்விமுகம் முதல் மணிச்சங்கம் வரை

வெண்முரசு நூற் தொகையின் முதல் புத்தகமான முதற்கனல் வேசர  நாட்டில்  தொடங்குகிறது. நாக அன்னையான  மானசா தேவி தனது மகன் ஆஸ்திகனுக்கு  படைப்பின் துவக்கத்தை சொல்லி  அவனுக்கு ஒரு கடமையை சொல்லாமல் சொல்கிறாள். குழந்தைப் பருவத்தை  இன்னும் கடந்திராத நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஸ்திகன்  வடக்கை நோக்கி நடக்கத் துவங்குகிறான். 

நாகங்கள் 

இந்தியா முழுவதும் நாகங்களுக்கு கோயில்கள் இருக்கின்றன. ஹரித்வாரில்  மலை மேல் மானசா அன்னைக்கு அமைந்துள்ள கோயில் புதருக்குள் புற்று போல வான் நோக்கி நிற்கிறது.   இவ்வன்னையின் வழிபாடு இந்தியாவில் எங்கும் பரவி உள்ளது. குறிப்பாக வங்கத்திலும் இன்றைய ஆந்திரத்திலும் . ஏன் பிற விலங்குகளை விட  நாகத்திற்கு அதிக வழிபாடு ? ஆதியில் தந்த அச்சம் மட்டும்தானா காரணம்  ?

 பொழுதிணைவு  வணக்கம் என்று ஜெயமோகன் குறிக்கும் சந்தியா வந்தனத்தின் ஒரு பிரார்த்தனை  நர்மதை நதியிடம் வேண்டுகிறது.  நாகங்களை ஜனமேஜய வேள்வியிலிருந்து காத்த ஆஸ்திகன் என்னை நச்சரவங்களில் இருந்து காக்கட்டும் என்கிறது.  நாகங்கள் இந்திய  மனத்தில் ஏற்படுத்திய தாக்கம் வரலாற்றின் அறியாத பக்கங்களில் இருக்கிறது.  அதை எளிய  மானுட ,உளவியல்  கொள்கைகளால் முழுதறிய முடியவில்லை.

குகையில் சொட்டும் தென் 

ஜரத்காரு முனிவர் குகையின் மேலிருந்து சொட்டும் தேனை மட்டும் பருகி தவம் புரிந்தார் என்பது மிக அழகிய உவமை . யோகத்தில் கேசரி முத்திரை செய்து நாவை உள்மடித்து கபாலத்தை தொடும்போது உள்ளே சொட்டும் தேனை குதம்பை  சித்தர்  

“ மாங்காய் ப் பாலுண்டு மலை மேல் இருப்பார்க்கு தேங்காய்ப் பால் ஏதுக்கடி” என்கிறார் 

நாகம்  – அகந்தை, காமத்தின் பரு உரு 

சர்ப்ப சத்ர யாகத்தில் ஜனமேஜயன்  ,போருக்கு அடிப்படையாக இருக்கும்  அகந்தை மற்றும் காமத்தை மொத்தமாக அழிக்கும் நோக்கம்  சொல்லப் பட்டிருக்கிறது .  வேள்விக்கு ஒரு காவலன், ஒரு ஹோதா, ஒரு எஜமான் , கார்மிகர்  தேவை.  பிற்காலத்த்தில் வேதாந்தம் உருவாகி வந்தபோது வேள்வி என்பதே மனிதன் புரியும் செயல்கள் என்று பரிணாமம் அடைகிறது. ஜனமேஜய னின்  யாகத்தில்  வேதம் புரிபவர்கள் தங்கள்  இச்சைகளையும்  அவியாக்க  கையால் சைகை செய்யும்போது அவை பாம்பின் அசைவுகளை   ஒத்திருப்பதாக  கற்பனை செய்கிறார். வெண்முரசின் சடங்கியல்   பற்றி அறிய ஒரு தனி வாசிப்பு வேண்டும்.  வாழ்நாள் பணியாகும் அது

அதர்வ வேதம் 

இந்து மதம் தன்னை ‘தூய்மை’ செய்து  கொண்டே வளர்ந்த போது  , நூற்றாண்டுகளில்  வழக்கு  ஒழிந்து போய்விட் ட  முறைமைகளை அவற்றின் அக்காலத்  தேவையைப் புரிந்து  கொள்ள முயற்சிப்பது  வெண்முரசின் ஒரு முக்கிய இழையாக  இருந்து வருகிறது. அதர்வ வேதத்தின் மந்திரங்களைக் கொண்டு யாகம் இயற்றப் படுகிறது.  ஒன்பது துளைகளையும் முறைப்படி அடைத்துக் கொல்லப் பட விலங்குகள் பலி  கொடுக்கப் படுகின்றன. வெண்முரசின் சடங்கியல் பற்றி தனியே ஒரு வாசிப்பு தேவைப்படுகிறது

  காசி இளவரசிகள் –   முக்குணங்கள்  

அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரும் சத்வ , ரஜஸ் , தமோ குணங்களின்  வெளிப்பாடாக  காட்டப்   படுகிறார்கள். அம்பை ரஜோ  குணத்தின் வடிவம். அவள் செந்நிறமாக உடையணிந்து பின்னர்  வாராஹி வாகனத்தில் பிடாரியாக உருவெடுப்பதன் அனைத்து உளவியல் விசை களையும்  துவக்கத்தில் கொண்டிருக்கிறாள். ஆயினும் பிற இளவரசிகளுக்கு சத்வ , தாமஸ குணங்கள் பொருந்துவது புரியவில்லை. தாமச குணத்தை புரிந்து கொள்வது கடினம் தான் . தமோ குண வடிவு கொண்ட அம்பிகை இசையிலும்  சத்வ குணம் மீதுற்ற  அம்பாலிகை  ஓவியத்திலும் திறன் கொண்டவர்கள் 

வேள்வியில் தடைகள் 

தொழில் பிரிவுகள் அவற்றுக்குரிய முழு அறிவில் செறிந்திருந்தன. பந்தல் சமைக்கும் வினைஞர்  தனது துறைசார் அறிவை காலம் கடந்த தேடலுடன் இணைத்துக் கொள்கிறார். வெண்முரசின் சூதர்கள் பணிப்பெண்கள் சமையல் புரிவோர், முடி திருத்துவோர் , கொல்லர், மருத்துவர்   காட்டும் அனுபவ அறமும் அதன் வழி வந்த  ஞானமும்  பாரத தேசத்தின் செயல்முறை வேதாந்தத்தின்  தரிசனத்தில் விளைந்தவை. காசி அரசனின் வினவிற்கு வேள்விப் பந்தல் அமைத்த முது கலைஞர்  சொல்லும் மறுமொழி தனது தன்னறத்தில்  தோய்ந்த எளிய பாரதியனி ன் அறிவுச்சுடர்.

பெயர்ச் சூடுதல் 

ஜெயமோகன் கோடடை மணிக்கு, கோடடைச் சுவருக்கு , விலங்குகளுக்கு உச்சமாக கங்கையின் சுழிக்கே பெயர் சூட்டுகிறார்.  வெண்முரசின் இசைக்கருவிகளுக்கே தனி ஆய்வு தேவை. படங்களுடன்  செவ்வியல்,  பண்ணியல் இசை  அறி வாண ர்கள்  இதை  முயல வேண்டும். 

தரிசனம்

நாகக்  கொலை வேள்வியைத் தடுத்து தட்சனைக் காக்கும்   ஆஸ்திகன் மூன்று குணங்களும் வாழ்விற்குத் தேவை  என்று நிறுவுகிறான் . அதை வியாசமுனி அனுமதித்து    அருள்கிறார். தந்தை வாக் கினாலும்  தேசியக் கடமையாலும்  மணத்துறவு கொண்ட பீஷ்மர் பாரதக் கதையின் சிக்கலின்  மைய முடிச்சாக அமைகிறார்.   முழுவதும் இச்சையை விட்டிருந்தால்  பிற முனிவர்களைப் போல   வனமே கி இருப்பார்.   ஆனால் அஸ்தினபுரியைக் காக்கவேண்டும் என்ற மெல்லிய சரடு அவரைக் கட்டி இருக்கிறது.

அடி மனத்தில் அவருக்கு ஆசை இருக்கிறதோ   என்ற அச்சம் அவருக்கும் உள்ளது. அம்பையுடன் அவர் புரியும் உரையாடல் இந்திய மனத்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது. 

ஆப்பிரிக்காவில் கிளம்பி அலை அலையாகப் புவியை நிறைத்துக் கொண்டு விரிந்த ஹோமோ  பேரினத்தின்   மத்திய ஆசியாவின் கங்கைச் சமவெளியில்  வந்து சேர்ந்த இந்தப் பிரிவினரில் , வேட் டையாடி வேளாண்மை ஆற்றி  துவக்க நிலை சமூகமாக பரிணாமம் அடைந்த  இந்தக் கூட்டம் காலத்தின் எந்தத் துளியில் “உள்ளது ஒன்றே” ‘நீயே அது” என்ற தாவலை  அடைந்தது என்பது ஒரு புதிர்  . சுவாமி விவேகானந்தர் இதை வியந்து பேசுகிறார்.  இச்சையைப்  பதங்கமாக்கி   பெண்ணுருவை அன்னையாக்கியது  இந்தியாவின்  இணையற்ற உளவியல் கண்டுபிடிப்பு  

அவமானம் அடைந்த அம்பை கொற்றவையாக கொதிக்கிறாள். பீஷ்மரின் உதிரம் வாங்காமல் அடங்காது இந்தப்  பிடாரி . இங்கே ஜெயமோகன் கொற்றவையை, இளங்கோவடிகளின்  கண்ணகியைக் காட்டுகிறார். பெயரில்லாது எரிந்தழிந்து போன பாரத தேசத்தின் வெயிலுகந்த, தீப்பாஞ்ச , சீ லைக்காரி , மா சாணி அம்மன்கள் வடிவில் அம்பை நெருப்பாகிறாள்

உடல் நமக்கு சொந்தமில்லை ; ஆன்மாவுக்கு சொதம் என்கிறாள் அம்பை.. பெண் என்பவள் வெறும் கருப்பை மட்டும்  தானா என்ற வினா இந்திய பெண்களின்   வினா. 

அழகியல் 

அம்பை தற்கொலை செய்யும் முடிவை எடுக்கும்போது ஆவலுடன் அவள் உள்ளத்தின் மூன்று அன்னையர்  பேசும் இடம் அற்புதமான து

மலரில்  தேன் நிறைக்கும்  , பெண் குழந்தைகள் கனவில் மலர் காட்டி சிரிக்க வைக்கும் சுவர்ணை ; 

அவள் சற்று அறியத் தொடங்கும் போது இசையில் துயரையும் கவிதையில் கனவையும்    நிறைக்கும்  சோபை ,

 அவளில் முதற் காதல் மலரும்போது  படைப்பின் இனிய கடனை ஆற்றும் விருஷடி    என்னும் தேவியர் அம்பையை பீஷ்மரை நோக்கி திரும்புகின்றனர். வெண்முரசின் தனிதத்துவத்தின் அதிசய இடம் இது.

அம்பையின் உணர்வு நிலையைச் சொல்லுமிடம்  :

அம்பை நிருதனின் படகில் பீஷ்மரை க் காண செல்கையில் அருகில் வீ ணை யை வைத்தால் அது தானாகவே இசைத்திருக்கும். விரல் பட்டால் கங்கை அதிரும் 

அம்பை படகில் செல்கையில் சூ ரியனுடன் கிழக்கு   முனையில் உதித்து  எழுகிறாள் 

 இரு தடைகள் 

கீதை , ஒரு செயலுக்கு மூன்று தடைகள் வரலாம் என்று பேசுகிறது. ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் மற்றும்  அத்யாத்மிகம் .  முறையே இயற்கையால், இறையால், தன்னால் வருவன. காசி அரசனின் கேள்விக்கு அமைச்சர்  தரும் பதிலில் வேள்விக்கு இரு தடைகள்  பற்றி உரைக்கிறார் . அத்யாத்மீகம் இதில் சேரவில்லை. காசி மன்னன்  தானே வருவித்துக் கொண்ட  தடை தானே இந்த வேள்வி முயற்சியே  என்று தோன்றுகிறது.

தமிழின் புதிய சொற்கள் 

இயல்பாக நாவிற்கு இசைந்து வரும் தமிழ் ச்  சொல்லிணைவுகளை உருவாக்குபவர்கள் சிந்தனையில் புதிய பாதைகளைத் துவங்குகிறார்கள்.

விசுவநாதன் – விசும்புக்கு அதிபன் 

விசாலாட்சி – அகல்விழி அன்னை 

உவமைகள் 

1அர்க்கியமிடக்  குவிந்த கரங்கள் போன்ற ….

2 பல்லக்கில் பிணம் இருப்பது போல என்னெஞ்சில்  நீயா இருந்தாய் 

3 கருப்பை எனும் நங் கூ ரம் 

4  சிதையில் இதயம் வேகும்  போது எழுந்தமரும் பிணம் போல (பீஷ்மர் மெல்ல அசைந்தார் )

5 அழு க்கு மீது குடியேறும்  மூதேவி என 

6 எய்யப் படும் அம்புக்குப் பின் அதிரும் நாண்  போல 

7 வெவ்வேறு சந்தஸ் களில்  இசைக்கும் பறவைகள் 

வடக்கு  தெற்கு ஒற்றுமை  

““ இந்தியா செக்கோஸ்லாவாகியாவைப் போல பல நாடுகளாக உடையும் ;  “

   “ பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன “ 

என்று இங்கு ஒரு அரசியல் தரப்பு உண்டு .

 எந்த நாடும் அப்படியே ஒரு தேசமாக புவியில் தோன்றவில்லை.  மனிதர்களின் ஒற்றுமையும் வாழ்க்கை முறைகளும் விழுமியங்களும் பரிணமித்து உருவாகின்றன தேசங்கள்.  பெரும் தலைவர்களும் இந்த நதியின் போக்கை அணைக்கட்டிடவோ   திசை  மாற்றவோ செய்தவர்கள் மட்டுமே.    எல்லா தரப்பினருக்கும் இடமிருக்கும் பண்பாடு சார்ந்த தேசிய  சிந்தனையில்  ஒரு தேசத்தின் அனைத்து உயிர்களும் பெரும் பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றன

 வரலாற்றில் பின் சென்று நீதியை நிலைநாட்டுபவன் கவியாசிரியன் . அவன் காலத்திற்கு மேலே இருந்து பார்க்கிறான் 

வெண்முரசு வட -தென் சமன்பாட்டை சரி செய்கிறது . சங்கரர்  தொடங்கி நாராயண குரு வரையிலான படிவ ர் ஞானத்தை பயன் படுத்திக் கொள்கிறது 

நாம் மறந்து விட்ட இந்தியாவின் கலாச்சார தேசியத்தை செயற்கையாக இல்லாமல் நினைவூட்டுகிறது 

அத்தககைய சில இடங்கள் 

1 வியாசர் குமரி முனையில் வழிபடுகிறரர் 

2 திருவிடத்தில் இருந்து அகத்தியரையே வரவழைக்கிறேன் (சத்தியவதி சொல்வது)

3 சோழம் , பாண்டியம் ,  கொங்கணம்  அரசர்கள் காசி மணத்தன்னேற்பில் கலந்து கொள்வது 

4 வேசரத்திலும்  அப்பால் திருவிடத்திலும் அம்பைக்கு ஆலயங்கள் 

5 கடலோர திராவிட நாடு சண்ட கர் ப்பர்  அதர்வ வேத அறிஞர் 

புனைவு      கொடுக்கும் கற்பனைச் சுதந்திரம் மட்டுமல்ல இக் கூற்றுக்கள்  .

வரலாறு  கனவுக்குள் புகுந்து எடு க்கப் பட வேண்டிய இடங்கள் சில உண்டு. எந்த அரசியல் நோக்கம் இல்லாமல் அதை உரிய செவிகள் இழுத்துக் கொள்ளும்.  இந்தியப் பெருநிலத்தில் எங்கோ நெடுந்தூரம் நடந்து    செல்லும்  பயணி இசைக்கும் பழம்பாடல்கள் இந்த தேசத்தைக் கட்டி வைத்திருக்கும் இழைகள் . முடியாது வளரும் இந்தச் சரடில் வெண்முரசு வலிமையான பொற்பட்டு நூலாடை . முதற்கனல் அதற்கு முதல் நூல்.

ஆர் ராகவேந்திரன் 

கோவை