‘புயலிலே ஒரு தோணி’ வாசிப்பனுபவம் – லோகமாதேவி

இந்த புத்தகத்தை கடந்த 2 நாட்களில் கல்லூரியில் முக்கியமான ஒரு குழுமத்தின் வருகையின் இடையில் குறிப்புகள் எடுத்தவாறு 3 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன். வாசித்த பின்னரே ’கடலுக்கு அப்பாலை’ வாசித்தபின்னர் இதை வாசித்திருக்கனும் என்பதை தெரிந்துகொண்டேன்.
கிண்டில் பதிப்பில் இருக்கும் ப சி அவர்களின் இரண்டு முன்னுரைகளுமே சிறுகதையைப் போல உணர்வுப்பூர்வமாக இருந்தன. ந. முருகேசபாண்டியன் அவர்களின் உரையும் கதையைக்குறித்த , கதாசிரியரைக் குறித்த சுருக்கமான கருத்தை சொல்லியது
கதையை ஆழ்ந்து வாசிக்காது போனால் வெறும் தகவல் திரட்டு என்னும் பிம்பத்தை அளிக்கக்கூடியதும் மனமொன்றி வாசிக்கையில் அற்புதமான வாசிப்பனுபவத்தை தருமொன்றாகவும் இருக்கும் இந்தக் கதை.
யுத்தத்தை பின்னணியாகக் கொண்டு பாண்டியன் என்னும் ஒரு புனைவுக்கதாபாத்திரத்தின் வாழ்க்கையை அவனது பயணத்தை 4 பகுதிகளாக பிரித்துச்சொல்லி அதன்வழியே அக்காலத்தை, அப்போதைய வாழ்க்கை முறை, வாழ்வுத் தரம், குடும்ப வாழ்க்கை, வணிகம், பாலியல் தொழில், கடைவீதிகளின் அமைப்பு, போக்குவரத்து, தனி ஆளுமைகள், கரன்ஸி என்று பலவற்றைச் சொல்லி புலம்பெயர்ந்தவர்களின் வேதனையையும் சொல்லும் இந்தக் கதையின் தலைப்பு கதைமாந்தர்களின் வாழ்வும் புயலில் அகப்பட்ட தோணியைப்போல அல்லாட்டத்தில் தான் இருக்கிறது என்றுசொல்லுவதாக எடுத்துக்கொண்டேன்
நாவலில் பல மரங்கள் செடிகொடிகளின் பேரையும் மனதை மயக்கும் வெள்ளை மக்னோலியா மலர்கள் என்பது போன்ற பல தாவரவியல் தகவல்களையும் ப சி தந்திருக்கிறார். அவர் சொல்லும் மரங்கள் எல்லாம் இன்றும் இருக்கின்றனவா என்று தேடனும். பல பெயர்கள் கேள்விப்பட்டதே இல்லை.
பழஞ்சொற்கள் பலதும் வார்த்தைகள் பலதும் மிகப்புதிதாக இருந்தன.
‘’நான் வாரேன் வாக்கப்பட என் தங்கச்சி வாரா புள்ளைய தூக்க’’
அடகுக்கு பதில் நம்பிக்கை
இவையெல்லாம் உதாரணங்கள்
தாசிகளை அவர்கள் தொழில்முறைகளை விஸ்தாரமாக சொல்லுகிறார் ப. சி.
ஜாதிய அமைப்புகளையும் அப்படியேதான்.
பழந்தமிழ்ப்பாடல்களும் நிறைய இடையிடையே வருகின்றன. செருப்படி தண்டனையாக தரப்பட்டிருப்பது, அதையும் விரும்பி வாங்கிக்கொள்வது, கட்டிச்சோறும் கருவாடும் உணவாக தரப்பட்டது, முதல் முதலாக மேசையில் சாப்பிடும் கிளப்புக்கடைகள் வந்தது போன்ற பல யுத்த காலத்திலான வியப்பான தகவல்கள் இருக்கின்றன இதில்.
முசோலினியும் ஹிட்லரும் இறந்ததை சாதாரணத்தகவலாக சொல்லுகிறார்.
’’இளங்காதலி’’ இந்த சொல் இனிதாய் இருந்தது. இதைப்படிக்கையில் ப.சி இன்னும் பல கதைகளை ரசமாக எழுதியிருக்கக் கூடியவர் என்று நினைத்துக்கொண்டேன்.
மிக எளிமையான சொல்லாட்சி எனினும் கதை பரந்துபட்ட களத்தில் எழுதப்பட்டிருப்பதும் கதை மாந்தர் பேசும் மலாய் மற்றும் கொச்சையான தமிழ், அப்போதைய வாழ்வு முறை, யுத்தம், பாண்டியன் வாழ்வு வழியே நாம் காணும் INAவின் சித்திரம், தமிழ்பாடல்கள் என்று நாவல் மிக சிறப்பானதாகி விடுகிறது.
வளவிக்காக அப்பனிடம் அடிவாங்கி அப்பன் திரும்பி வருவதற்குள் அம்மையில் உயிர்விட்ட அமிர்தம், கணவனின் பிறழுறவுகளைப் பொருட்படுத்தாமல் வீட்டில் லட்சுமிகரமாய் இருக்கும் ஆச்சி, குடலை உருவி உள்ளங்கையில் வைத்துக்காட்டினாலும் சோறு தராத இன்னொரு ஆச்சி, நாடாரா என்று கேள்வி கேட்கும் தாசி, சொத்தைக்கத்தரிக்காய் செட்டியார் என்று ப சி காட்டும் ஆளுமைகள் என்றென்றைக்கும் மறக்க முடியாதவர்கள்.
தேர்வுக்குப் படிப்பதுபோல் குறிப்பெழுதிக்கொண்டு வாசிக்காமல் மனதொன்றி மீள் வாசிப்பு செய்யவேண்டிய நூல் இது.
வாழும் வயதில் மனைவியையும் தலைச்சன் பிள்ளையையும் ஒரு சேர பறிகொடுத்துவிட்டு, மிச்ச காலத்தை தன்னந்தனியே கழித்து, தன் இறப்பை யாருக்கும் தகவல் சொல்லவேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லியபடி ஸ்கேன் எடுக்கச் செல்லுகையில் ஆம்புலன்சிலேயே உயிர்விட்ட ப. சிங்காரம் அவர்களின் வாழ்வும் புயலிலே அகப்பட்ட ஒரு தோணிதான் இல்லையா?



