தீச்சாரல், தழல்நீலம், வேங்கையின் தனிமை, ஆடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து
ஆதியில் அறிவுப் பழம் தின்றதன் பாவத்தினால் மண்ணில் வீழ்ந்தனர் ஆதாமும் ஏவளும். அறம் கொண்ட காரணத்தால் அன்னை கத்ருவின் தீச்சொல் பெற்று பறக்கும் திறன் இழந்து நெளிகின்றன மண்ணின் நாகங்கள். முன்னதில் அகந்தையில் கிளைத்தது அறிவு என்று கருதினார் கடவுள் பின்னதில் கிளைப்பது அறம். காமமும் அகங்காரமுமென தீர்ப்பிட்டு உங்கள் செயல்களம் மண் என வகுக்கிறது விண். அன்னை கத்ரு அவ்வாறு நாகங்களுக்கு நியாயந் தீர்க்கிறாள். இச்சையும் தன்முனைப்பும் இன்றி இங்கு அறிவும் அறமும் சாத்தியமே இல்லை என்பது விண்ணகத்தின் தீர்ப்பு. அவை இல்லாமலேயே அயோக்கியத்தனம் செய்வது அறத்தைக் கையாள்வது என விண்ணின் சாத்தியங்கள் வேறு.
கத்ருவின் நிழல் போல் சத்தியவதி தோன்றுகிறார். சத்தியவதியை வில்லியாகக் கருதவிழையும் என் எண்ணம் ரத்து செய்ய வேண்டியதாகிறது. மொத்த முதற்கனலில் கதாநாயகனாக இக்கணத்தில் பீஷ்மர் நிற்கிறார்.
குலம் பெருக்கி அரசாள வேண்டிய பீஷ்மருக்கு பிரம்மச்சரியத்தை திணித்தவளாக ரிஷி வியாசரை குலம் பெருக்கச் செய்தவளாக சத்தியவதி. அவள் ஷத்ரியரையும் பிராமணரையும் சுட்டிக்காட்டி பீஷ்மரிடம் சொல்லும் நியாயங்கள் ஏற்புடையவையாக இல்லை எனினும் மாற்றுத் தாயின் புதல்வனை ஏற்கமுடியாத எளிய பெண் என்றும் அவளை வகுத்துவிட முடியாது. பெரும் புகழ் கங்கையை யமுனை ஆள்கிறது. அது இன்று வரை பாரதத்தில் அப்படித்தான்.
பீஷ்மர் வியாசரின் எதிர்முனையில் நிற்கிறார். அழகானது என ரசித்து வாசித்த எண்ணற்ற வெண்முரசு வெளியில் ஓர் இடம் பீஷ்மர் தனக்கு முன்பிறந்து இறந்துவிட்ட குழந்தைகளை சுமந்தே இருக்கிறார் என்பது. முன் தேவாபியைச் சுமந்த பால்ஹிகர் பின்னாளில் தன் உடன்பிறந்தாரை சுமக்கப்போகும் பீமன் என ஒரு தொடர்ச்சி. இதில் ஒரு படிநிலையும் இருக்கிறது. ஒரு கோணத்தில் பால்ஹிகரைக் காட்டிலும் மேலெழுந்தவராக பீஷ்மர் பீஷ்மரைக் காட்டிலும் மேலெழுந்தவனாக பீமன். பிரம்ம ஞானமும் பெண்ணின் அன்பும் இரண்டிற்குமே தகுதியற்றவராக தன்னை கூறிக்கொள்ளும் முதற்கனலின் பீஷ்மரைப் போல் அல்லாமல் பிரம்ம ஞானம் ஒருபக்கம் கிடக்கட்டும் என பெண்ணின் அன்பை பெற்றவன் திரௌபதியின் அன்பில் திளைக்கும் வரம் பெற்றவன் பீமன்.

பிரம்மச்சரியம் பெருவலிமை என்ற இரண்டை எடுத்துக்கொண்டு பீஷ்மரை ராமாயணத்தின் அனுமனோடு ஒப்பிட்டு வியக்கிறேன். ராமன் மீதான பெரும் பக்தியை அளித்து அனுமனை சிக்கலில்லாமல் பார்த்துக்கொண்டார் ஆதிகவி. சிக்கல்கள் ராமனுடயவை அவன்மீது பேரன்பு கொண்ட உதவும் வலிமை வாய்ந்த பிரம்மச்சாரி அனுமன் அவ்வளவுதான். பிரம்மச்சரியம், பெருவலிமை, ஆனந்த பரவசம், அறிவு, அருள்நிறை என அனுமனைப் பேணிக்கொண்டார். அவ்வாறல்லாமல் பீஷ்மருக்கு சிக்கல்களை அளித்து பெருநதியின் வேகம் தடுத்துநிறுத்தி அனுமன்போல் விண் எழவும் வாய்ப்பு மறுத்து வேங்கையை சிறையெடுத்து தனிமையில் ஆழ்த்துகிறார் வியாசர்.
சுவையான மற்றொரு இடம் சூதர் பீஷ்மரின் கதையை பீஷ்மரிடமே (அவர் பீஷ்மர் என அறியாமல்) கேலியுடன் கூற கேட்டு ரசித்து பின்னர் பொற்காசுகளை உறங்கும் சூதரின் காலடியில் பீஷ்மர் வைத்துச்செல்வது. கடக்க முடியாத, வகுக்கப்பட்ட எல்லையில் தன்னை தன்னிலிருந்து விலக்கிக்கொள்ளும் விவேகி அவர். மலைமுகட்டில் அமர்ந்து தவம் செய்பவன் அனுமன் அவன் விடுதலை பெற்றவன் நினைத்த கணத்தில் விண்ணில் தாவ அவனால் இயலும். பீஷ்மர் மலையின் கீழ் இருட்குகையில் சிலந்திவலைப் பின்னலுக்குள் அமர்ந்து தவமிருப்பவர்.
முதற்கனல் கனன்று எழுந்த பின் பிற்பகுதியில் கனிந்து அருட்சுடர் என நிலைகொள்கிறது. மூர்க்கம் மிக்க பன்றியென சிகண்டியாக தன் சினத்தை பீஷ்மர் மீது செலுத்தும் அம்பை பின் கனிவுகொண்டு ஊர்வரையாக அவரைக் காவல்செய்யவும் விழைகிறாள். அதுவிதியின் பாற்பட்டு நிகழாது வேறுவழியில்லை என்றிறுக்க தன் வெஞ்சின நோய் தீர்க்க மருந்ததென அவர் உயிரை அவர் பாதம் பணிந்து பெற்றுவர சிகண்டியைப் பணிக்கிறாள் என்னும் எண்ணம் எழுகிறது. பீஷ்மரை வீழ்த்த அவரிடமே கற்றுக்கொள்கிறான் சிகண்டி. அம்பையின் இக்கனிவு வெண்முரசின் பிற்பகுதியில் திரௌபதி கொள்ளும் கனிவை நினைவூட்டுகிறது.
இக்கணம் முதல் வியாசரைக் கதாநாயகனாகக் கொள்கிறேன். அவரது மகன் சுகமுனிவருக்கு வாய்த்தபேறு, தென்மதுரை பெருஞ்சாத்தன் கொண்ட பேறு வியாசருக்கு அமையாததல்ல ஆனால் காத்திருக்க வேண்டும் அவரால் நிகழவேண்டியவை நிகழ்ந்தாக வேண்டும். மெய்மை நோக்கில் பயணப்படுபவருக்கு சந்ததி பெருக்கி அவற்றின் வாழ்வை அதன் விழைவுகளை ஆணவங்களை அன்பை அறம் அறமின்மைகளை வீரத்தை இறுதியில் வீழ்ச்சியை எனக் குலக்கதையை காவியமியற்றும் பணி அமைகிறது. அவரது மெய்மையை அவர் அப்படிச் சென்றுதான் அடையமுடியும். சுகமுனியும் பெருஞ்சாத்தனென்னும் தென்முனியும் அப்படித்தான் அவரது வழியென்கிறார்கள். ஒருவகையில் அரசியல் கலப்பற்ற ஆன்மீகம் வியாசருக்கு சாத்தியமல்ல என்று கூட தோன்றுகிறது. இளைய யாதவர் என்பது அவர்தான் என்றபோதும். விஷ்ணுவே அவர்தான் என்றபோதும்.
இங்கு யமுனைக்கும் கங்கைக்கும் காவிரிக்கும் மட்டுமல்ல மெய்மைக்கும் புவியியல்தான் பாதைவகுத்து அளிக்கிறது. அரசியல் பண்பாடு வரலாறு அகம் புறம் உளவியல் உடலியல் மெய்யியல் என எல்லாவற்றிற்கும். ஆஸ்திகனும் பீஷ்மரும் வியாசரும் மேற்கொள்ளும் பெரும் பயணங்கள் அந்த எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலை சிபிநாடு கங்கர் நிலம் கங்கை நீர்வழிப்பயணம் விந்தியக்காடுகள் எனப் பல.
ஆஸ்திகன் அஸ்தினபுரி சென்று சர்ப்பசத்ர வேள்வி நிறுத்தி மீள்வது, கிருஷ்ணை நதிக்கரை நாகர்களைக் காக்க அஸ்தினபுரியுடன் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கை எனக் குறியீடாகக் கொள்ளவும் இடமளிக்கிறது. தவிர்க்கமுடியாமல் நிகழ்ந்துவிட்ட பேரழிவுகளில் இருந்து மீண்டும் மீண்டும் பாடம் கற்றுக்கொள்வது கலைத்து கலைத்து அடுக்கிக்கொள்வது அனைவருக்குமான பொதுநலன்களைப் பேணிக்கொள்வது தனிநலன்களைப் பாதுகாத்துக்கொள்வது என இப்பெருநிலத்தின் அரசியல் வரலாற்றுப் பாதைகளை வெண்முரசு வழங்கும் அகக்கண்களின் வழியாக கண்டுகொள்ளமுடியும்.

வெப்பநாட்டில் முக்தியை நிர்வாணம் எனத் தருபவளும் குளிர்நாட்டிற்கு கதகதப்பான சொர்கத்தை வகுப்பவளும் புவியன்னைதான். யமுனையின் வியாசரையும் சுகசாரி சுகமுனியையும் தென்மதுரை பெருஞ்சாத்தனையும் இங்கு கண்முன் நிறுத்துபவள். சித்தார்த்தனை போதிமரத்தடியில் அமர்த்தி புத்தனாக்கியதும் ஏசுவை சிலுவையில் அறைந்து விண்ணேற்றியதும் அவள்தான்.
இம்மண்ணை, இதன் அருகமைந்த நிலங்களை, மொத்தபுவியை புறத்தில் கண்டு அகத்திற்கென அள்ளியெடுத்தக் கொள்ளும் பேராவலாக இருக்கிறது வெண்முரசு. முதற்கனலில் துவங்கும் அது தன்னை அவ்வாறே நிறைவேற்றிக்கொள்வதில் வெற்றி அடைந்திருக்கிறது.























