Unknown's avatar

About சொல்முகம் வாசகர் குழுமம்

கோவையில் செயல்படும் இலக்கிய வாசகர் குழுமம்

என் பெயர் சிவப்பு – வாசிப்பனுபவம் – சபரிராஜ்

‘ஒரு மகத்தான குதிரையை வரையும் போது நானே அந்த குதிரையாக இருக்கிறேன்’ – ஆலிவ்.

‘ஒரு மகத்தான குதிரையை வரையும் போது, நான் பழங்கால மேதையாக இருக்கிறேன்’ – வண்ணத்துப்பூச்சி.

‘ஒரு மகத்தான குதிரையை வரையும் போது, நான் நானாகவே தான் இருக்கிறேன். வேறெதுவுமில்லை’- நாரை.

‘ஓரான் பாமுக்’ எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ நாவலிலிருந்து தமிழில் ‘ஜி. குப்புசாமி’.

மூன்று விதமான கலைஞர்களின் மனநிலையை கலையை அவர்கள் அணுகும் விதத்தை, கலை என்றால் என்ன?, கலையின் மீதிருக்கும் மதங்களின் தாக்கம் என பல தளங்களை விவாதிப்பதற்காக ஒரு கொலை மர்மத்தை பின்னணியாக வைத்து மிகுந்த சுவாரசியத்துடன் எழுதப்பட்ட நாவல் ‘என் பெயர் சிவப்பு’.

கதை நடக்கும் களம் இஸ்தான்புல். மேற்கு கலாச்சாரங்களும் கிழக்கு கலாச்சாரங்களும் கலந்து நிற்கும் இடம். இஸ்லாமியர்கள், யூதர்கள், கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள் என அனைத்து மக்களும் கலாச்சாரங்களும் கலந்து கட்டி இருக்கும் இடம்.

யாரும் பார்க்காத ஒரு உலகத்தை, எந்தவொரு மனித உருவத்தையும் தூக்கிப் பிடிக்காமல், எவ்வித தனிப்பாணிக்கும் இடம் தராமல், வரைந்தவரின் கையெழுத்து கூட இல்லாமல் வரையப்படுகிற துருக்கிய நுண்ணோவியங்கள் ஒருபுறம்.

யதார்த்த உலகத்தை அதே கோணத்தில் பார்த்து, உருவங்களை அப்படியே வரைந்து, தனிப்பாணியை தூக்கிப்பிடிக்கும் மேற்கு ஓவியங்கள் இன்னொருபுறம்.

இந்த துருக்கிய நுண்ணோவியங்களின் மீது மேற்கு ஓவியங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள். பாரசீக மரபில் வந்த துருக்கிய நுண்ணோவியத்தின் இறுதி காலம் இந்நாவலில் விவாதிக்கப்படுகிறது.

கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்கே உரியது

இந்த இரண்டு வகை ஓவியங்களையும் கிழக்கு மேற்கு என பிரித்துக் கொண்டாலும் அந்த இரண்டு கலைகளும் ஒன்றாய் கலக்கின்ற இடமாக இஸ்தான்புல் இருக்கிறது. அந்த கலப்பு ஒரு கலைஞனின் வாழ்க்கையில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது போன்றவை இந்த நாவலில் விவாதிக்கப்படுகிறது. என் பார்வையில் ஒரு நல்ல கதை என்பது சமூகத்தில் உண்டாகும் ஒரு மாற்றம் தனி மனித வாழ்வில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை பேச வேண்டும் இந்த நாவல் அதை பேசுகிறது.

கிழக்கோ மேற்கோ இரண்டுமே அல்லாஹ்வின் பார்வையிலோ அல்லது இயற்கையின் பார்வையிலோ ஒன்று தான். ஆனால், அதனை படைத்த மனிதர்கள் தான் ஒன்றை விட இன்னொன்று சிறந்தது என சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பார்வையில் நாம் அனைவருமே கிழக்கில் இருக்கும் போது மேற்கைப் பற்றியும் மேற்கில் இருக்கும் போது கிழக்கைப் பற்றியுமே யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், எந்தப் பக்கம் போனாலும் வாழ்க்கை ஒரே மாதிரி தான் இருக்கிறது.

இதன் வெளிப்பாடாக இந்த நாவலில் ஷெகுரே வருகிறாள். அவளுக்கு கருப்புடன் இருக்கையில் ஹசன் மீதும், ஹசனுடன் இருக்கையில் கருப்பின் மீதும் ஈர்ப்பு வருகிறது. ஆனால், அவள் யாரை தேர்ந்தெடுத்திருந்தாலும் அவளது வாழ்க்கை ஒரே மாதிரி தான் இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால், கடைசி வரிகளில் கடைசி காலத்தில் கருப்புக்கு ஷெகுரே மீதிருந்த காதல் போய்விட்டது போல தோன்றுகிறது.

கொஞ்சம் கதைக்கு வெளியே வந்துப் பார்க்கும் போது, இந்தக் கிழக்கு மேற்கு தடுமாற்றம் ஒரானுக்கும் இருந்தது போல தோன்றுகிறது. வெகுஜன எழுத்தின் ஆகச் சிறந்த கருவான கொலை மர்ம பின்னணியை வைத்துக் கொண்டுஒரு கலையை பற்றி பேச முயன்றிருக்கிறார். ஆனால், ஒன்றை எழுதிக் கொண்டிருக்கையில் இன்னொன்றுக்கு தாவிக்கொண்டே இருக்கிறார்.

ஒருவனைக் கீழே வீழ்த்தி அவன் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு மூன்று பத்திக்கு பழங்கால ஓவியங்களைப் பற்றி பேசுவதெல்லாம் அந்த அலைபாய்தல்கள் தான்.

கலைஞனின் மனம்

கலைஞர்களில் இரண்டு வகை உண்டு. ஒரு வகை எல்லோரும் தன் கலையை பாராட்ட வேண்டும், தன்னைப் பாராட்ட வேண்டும் என நினைப்பவர்கள். இன்னொரு வகை வெளியிலிருந்து வரும் எவ்வித பாராட்டைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னுடைய கலையை உயர்த்திக் கொண்டே செல்பவர்கள். தனக்கென புதிய இலக்குகளை உருவாக்கி அதை நோக்கி சென்று கொண்டிருப்பவர்கள்.

இந்த இரண்டு வேறுபட்ட கலைஞர்களின் மனதைப் பற்றி பேசிய படம், கிறிஸ்ட்டோஃபர் நோலன் இயக்கிய பிரஸ்டீஜ் (prestige). இந்தப் படத்தில் வருகிற கிறிஸ்டீன் பேல்-ன் கதாப்பாத்திரத்தைப் போல தான் இந்தக் கதையில் வருகிற கொலைகாரன் இருக்கிறான்.

அவன் தன்னுடைய கலையை தன்னை விட அதிகமாய் நேசிக்கிறான். அதனால் சுற்றி இருப்பவர்கள் தனக்கென தனிப்பாணியை உருவாக்குதல், கலையை வைத்து பணம் சம்பாதித்தல் என்று இருக்கும் போது, அவன் மட்டுமே அவனுடைய கலையை மட்டும் உயர்த்திக் கொண்டே இருக்கிறான்.

என்னுடைய பார்வையில், இந்தக் கதையின் நாயகன் அந்தக் கொலைகாரன் தான். எனிஸ்ட்டேவிடம் அவன் பேசும் ஒரு காட்சி வருகிறது. இந்த நாவலின் உச்சமென நான் நினைப்பது அந்த இடத்தைத் தான்.

எனிஸ்டே சொல்கிறார், “ நீ ஓவியம் வரைவதற்காக தான் கொன்றாய்”. ஆம், அவன் தன்னுடைய கலைக்காக, கலையை காப்பதற்காக கொலை செய்யுமளவிற்கு செல்கிறான்.

ஒரு கலைஞனின்  வீழ்ச்சி

ஆனால், ஒரு கொலை செய்த பிறகு அவனுடைய கலையும் அவனை விட்டுப்போகிறது. தன்னுடையதை விட கீழான கலை என அவன் நினைத்த பிராங்கிய முறையில், அல்லாஹ் பார்க்கும் உலகை தான் வரைகிறேன் என நினைத்துக் கொண்டிருந்தவன், தன்னுடைய சொந்த உருவத்தைக் கூட வரைந்து கொள்ள முடியாமல் வீழ்கிறான்.

பின்னால், வரப் போகிற இந்தப் பெரும் வீழ்ச்சியைப் பற்றி, நாவலின் தொடக்கத்திலேயே ஒரு கதை சொல்லப்படுகிறது. ஒரு நுண்ணோவிய மாமேதை புகழ், பணம், புதிதாக ஒன்றை செய்வது, தனக்கென ஒரு பாணியை உருவாக்குவது என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கலைக்காக ஏற்கனவே வரையப்பட்ட ஓவியங்களை அப்படியே நகலெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காரணத்தினாலேயே அனைவரும் அவரை ஒரு மாமேதை என்று போற்றுகின்றனர்.

115 வயதிலும் பிற நுண்ணோவியர்களுக்கு வரும் பார்வைக்குருடு வராமல் வரைந்து கொண்டே இருக்கிறார். ஆனால், அங்கு பயிற்சிக்கு வருகின்ற ஒரு இளைஞன் மீது காதல் கொண்டு, அவனைக் கவர்வதற்கு வரைகிறார். அடுத்த சில நாட்களில் அவருடைய பார்வை போகிறது. அடுத்த நாட்களில் படிக்கட்டில் வழுக்கி விழுந்து ஒரு சாதாரண முதியவரைப் போல இறக்கிறார்.

நாற்பது வருட வாழ்க்கையின் சோகங்கள், சலிப்புகள், பிடுங்கல்கள் எல்லாம் ஒரு பாஸ்போட் சைஸ் போட்டாவில் தெரிவதாக அசோகமித்திரன் எழுதியதாக ஜெயமோகனின் நேர்க்காணலில் பார்த்த ஞாயபகம். அதே தான் கலைஞனும். ஒரு கலையை செய்து கொண்டே இருப்பவனின் உடல்மொழி, உருவம், பேச்சு என அனைத்தும் அவனது கலையின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. பின்னர் அவனிடமிருந்து அந்தக் கலை நீங்கிய பிறகு அவன் வெறும் உடல் மட்டுமே. அந்த உடலின் இயக்கத்தை நிறுத்துவதற்கு ஒரு முரடனின் கத்தியோ அல்லது வழுக்கிவிடும் படிக்கட்டோ கூட போதுமானது.

மேலே சொன்னதை ஒரு சமன்பாடாக எழுதவேண்டுமென்றால், ஒருவனிடமிருந்து மனிதம் சாகும் போது அவனது கலையும் சாகிறது. ஒரு கலைஞனின் கலை செத்த பிறகு அந்தக் கலைஞனே செத்து விடுகிறான்.

காலமும் கலையும்

வாழ்க்கையும் இலக்கியமும் சொல்லிக் கொடுத்தது ஒன்று தான். அனைத்துக் கலைகளும் அழிந்து விடக் கூடியது தான். இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் அது உருவானதிலிருந்த காலத்தையும் எடுத்துகொண்டால், நாம் பேசிக்கொண்டிருக்கிற ‘காலத்தை தாண்டி நிற்கிற படைப்பு என்பதெல்லாம்’ புறந்தள்ளக் கூடிய அளவு தான் (neglegible values). ஆனாலும் இந்த சிறிய நீளத்திற்குள், கலையின் மீது காலம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் மிக முக்கியமானவை.

ஒரு பெரும் அடக்கு முறையிலிருந்தும், பேரழிவிலிருந்தும் தான் ஏற்கனவே இருக்கின்ற ஒரு கலையின் மீது ஒரு புதுப் பார்வை வருகிறது. அந்தப் புதுப்பார்வை தான் புதிய கலை வடிவத்தை தோற்றுவிக்கிறது.

ஒரு போர் நடந்து நாடே ரத்த வெள்ளத்தில் இருக்கின்ற போது தான், பாரசீக நுண்ணோவியத்தின் புதிய பார்வைக்கோணம் உருவாகிறது.

இந்த வரலாறு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நிகழ்த்துபவர்களும் காலமும் தான் மாறிக்கொண்டே வருகிறது. முதலாளி வர்க்க அடக்குமுறை ஓங்கிய போது சிவப்பு சிந்தனை இலக்கியமாக, கலையாக மாறுகிறது. இந்தியாவில், சாதிய அடக்குமுறைகள் ஓங்கும் போது இங்கே சாதிஒழிப்பு அல்லது தலித் சிந்தனைகள் படைப்புகளாக மாறுகிறது.

இந்த இடத்தில் இருந்து தான், ‘கலை மக்களுக்கானது’ என்கிற முழக்கம் வருகிறது. இதனை கவனிக்கும் போது தெரிவது என்னவென்றால், கலை யாருக்கானது என்பதும், எது கலை என்பதையும் காலமே தீர்மானிக்கிறது.

அப்படி நாம் எதனைக் கலை என்று தீர்மானித்துக் கொண்டாலும், மேதகு. சுல்தான் கருவூலத்தில் உஸ்மான் பார்த்த சில செல்லரித்த ஓவியங்கள் போல அவை அழிந்தே போகும்.

காவிய காதல்

ஒரு மூன்று பக்கத்திற்குள் எதற்கு முப்பத்தொன்பது முறை ‘கலையோ கலை’ என்று கலைத்தேன் என தெரியவில்லை. அந்தக் கேள்வியை ஒரு ஓரம் வைத்துவிட்டு இந்த நாவலில் நான் ரசித்த மேற்கு பகுதியான வெகுஜன எழுத்தை குறிப்பிட்டாக  வேண்டும். கருப்புக்கும் ஷெகுரேவிற்கும் இடையேயான காதல் அத்தியாயங்கள்.

இந்தக் காவியக் காதல், நாடகக் காதல், short film காதல் போன்ற அனைத்துக் காதல்களின் புனித பிம்பங்களையும் போட்டுடைத்திருக்கிறது.

ஒரு இடத்தில் ஷெகுரே சொல்கிறாள், “அவனுக்கு இப்போது ஒரு பெண் வேண்டும் அதனால் தான் என்னைக் காதலிக்கிறான்.” அது எந்தளவிற்கு உண்மை என்பதை அவர்கள் தனிமையில் சந்திக்கும் போது கருப்பு செய்கிற ஒரு காரியத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்.

அதே போன்று கருப்பு ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டு கொல்லப்படுவதைப் போல காட்சி வரும், அப்போது கருப்பு நினைத்துக் கொள்வான், “நான் இறக்கப் போவது கூட கவலையாய் இல்லை. ஆனால், ஒருமுறை கூட  ஷெகுரேவுடன் சம்போகிக்காமல் இறப்பது தான் கவலையாக இருக்கிறது.”

ஓரானின் வண்ணம்

இந்நாவலின் கடைசி வரிகள் இப்படி முடிகின்றன. “கதை இனிமையாகவும், சுவாரசியமாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக இல்லாத பொய்களையெல்லாம் சேர்த்து சொல்லவும் ஓரான் தயங்கவே மாட்டான்.”

இந்தக் குறும்புத்தனம் தான் இவ்வளவு பெரிய ஒரு நாவலை வாசிக்க வைக்கிறது.

எஸ்தர், பிரேதம், நாய், குதிரை, சாத்தான், மரணம், தங்ககாசு போன்றவை இந்தக் கதையில் பேசாமல் போயிருந்தால், ஒரு கொலை மர்மம் என்கிற பின்னணியில் இந்தக் கதை சொல்லப்படாமல் போயிருந்தால், இந்தக் கட்டுரையைப் போல ஒரு சுவாரசியமற்ற பெரும் அபுனைவாக மாறியிருக்க கூடிய சாத்தியம் இருக்கிறது.

சபரி ராஜ், கோவை

குழந்தைகள், பெண்கள், ஆண்கள் வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்

காலை நடையில் சாலையில் ஒரு திருகாணியைப் பார்த்தேன். ஏதோ வாகனத்திலிருந்து நழுவி இருக்கக் கூடும். ஒருவேளை ஒவ்வொரு மறையாகக் கழன்று கொண்டே வந்தால் என்ன ஆகும் என்று விபரீதமாக கற்பனை வந்தது. எண்ணிலாத மறைகள் , திருகுகள், சுருள்களால் இணைக்கப்பட்டிருக்கும் சமூகவாழ்வில்,  நெகிழ்வடைந்த திருகுகளும் முறுக்கேறிய புரிகளும் உருவாக்கும்   பாடுகள் துயரம் தருபவை. அன்றாட நாகரிக வாழ்வின் மனச்சிதைவுகள்,  முடிச்சுகள் உறவு வதைகள்    குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதையும் அலைக்கழிப்பதையும் அவர்கள் வளர்ச்சி நிலைகளில் தாக்கம் தருவதையும் பல அடுக்குகளில் கச்சிதமாக செதுக்கித் தரும் ஆக்கம் குழந்தைகள்- பெண்கள் – ஆண்கள்.  ஃப்ராய்டியமும் இருத்தலியலும் யூங்கியின் சமூக உளவியல் கொள்கையும் பேசுகிறது . Transactional Analysis குறிக்கும் பெற்றோர் – முதிர்ந்தோர் – குழந்தை ஆகிய மூன்று நிலைகளைச் சுட்டிப் பேசுகிறது.

உழைத்து முன்னேறியவர் எஸ் ஆர் எஸ். வாசிப்பும் தனது அறிவில் பெருமிதமும் கொண்டவர். தன் மகனை ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வளர்க்க அவா கொண்டவர். அவரது நோயுற்ற மனைவி லட்சும் அன்பும் கருணையும் கொண்டவள். இவர்கள் மகள் ரமணி: பெரியவர் பேச்சைப் புரிந்து கொள்பவள்; தனது தம்பி பாலுவுக்கு தண்டனையாக தோப்புக்கரணம் போடவைத்து கணக்கில்  குழப்பி ஒரு எண்ணிக்கை அதிகமாகப் போடவைப்பவள்.;  ஏணியில் இரண்டு படி ஏறுவதற்கு முன் கவுனை  முட்டிற்குள் அடக்கி வைத்துக் கொள்பவள். நளினத்தின் சொட்டு;

பாலு பொருள் மறைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளாது அசட்டுக் கேள்வி கேட்பவன்; அல்லது அவனது நேர்க்கேள்வி அசட்டுத்தனம் எனப் புரிந்துகொள்ளப்பட்டது. அப்பா இல்லாத போது பாயை உருட்டி உதைப்பவன்; (அப்போது பாய் இருக்குமிடத்தில் அப்பாவை மனதில் உட்காரவைத்துக் கொள்வது சொல்லப்படவில்லை).வீட்டிற்கு வெளியே தனியாக ரோட்டிற்கு வருவதையும் கிணற்றில் எட்டிப்பார்த்து உள்ளேகிடக்கும் பாம்புகளுக்கு தின்பண்டங்கள் வீசுவதையும் பெருமையாக நினைப்பவன்.

பாலு – ரமணி குழந்தைச்சண்டைகளுக்கிடையே குழந்தைகள் ஆண் மற்றும் பெண் என்னும் sterotype இல் உருவாகி வருகிறார்கள்.

 இப் புதினத்தை  ப்ராய்டிய நோக்கில் புரிந்து கொள்ள முயற்சி செய்வது பயன்தரலாம். (அதன் உளவியல்- பாலியல் அடிப்படைகள் ஆட்டம் கண்டுவிட்டபோதும்). அல்லது  புதிய ஃப்ராய்டியத்தின் அடிப்படைகளான உளவியல்- சமூகவியல் வளர்ச்சிக் கோட்பாடு இதில் அதிக வெளிச்சம் தரலாம்.

  எஸ் ஆர் எஸ் ஒரு கண்டிப்பான தகப்பன் ; கறாரான முதலாளி. அலுவலகத்தில் இருப்பதைப் போன்றே வீட்டிலும் கண்டிப்பு காட்டுபவர். சுதந்திர எண்ணமும் அறிவுத்தேடலும் நாத்திக ஈடுபாடும் கொண்டவர் . அவருடைய விமர்சனத்திலிருந்து தப்பிப்பதே பாலுவின்  முழுநேக் கவலையாகிறது. உடல் நலமில்லாத தாயின் அருகாமைக்கு ஏங்கிக் கொண்டே இருக்கிறான். இடிப்பஸ் சிக்கல் விளையாடுவதால்  தாயன்பிற்காக கவலைப்படுகிறான்.  சிக்கலில்  அடுத்த சிடுக்கு  தமக்கை ரமணியிடமிருந்து.  எல்லோரிடமும் அவள் நல்ல பெயர் வாங்குகிறாள். போகட்டும். அதற்காக தனது குறைகளை ஒப்பிட்டுத் தாழ்த்திக்கொண்டே இருப்பவர்களால் துவளும் பாலுவின் தளிர் மனம் பதைத்துக் கொண்டே இருக்கிறது. 

பெயரின் முதல் எழுத்துக்களாலேயே குறிப்பிடப்படுவது அரசு அலுவலகத்தில், குறிப்பாக பள்ளியில் காணப்படும் முறைமை. இது ஒரு உடனடி அலுவல் தன்மையை உறவில் நுழைத்து விடுகிறது. அலுவலகத்தில் நாற்காலியின் அகலம் அதிகமாகும் தோறும் கண்டிப்பும் அதிகாரமும் அதிகமாகிக் கொண்டிருக்கும். பாலுவின் தந்தை ஒரு தலைமை ஆசிரியரைப்போலவே வீட்டிலும் நடந்து கொள்கிறார். அவர் பாலுவை ஒரு மேசைக்கு அப்பால் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறார்.  (இவனெல்லாம் எங்கே உருப்படப் போகிறான் என்ற கவலை உருப்படவேண்டும் என்ற கவலையிலிருந்து பிறக்கிறது.)  நாவலின் சமநிலை அனைத்துக் கதைமாந்தரின் முழுமையான ஆளுமைச்சித்திரத்தில் வெளியாகிறது. அலுவலகத்தில் நேர்மையும் ஊழியர்களிடம் பரிவும் கொண்டவர் எஸ் ஆர் எஸ். தன்னை அந்த எழுத்துக்களால் அழைக்கவேண்டும் என்ற அலுவலக ஜனநாயகத்தை வலியுறுத்துபவர்

பாலுவின் குழந்தைமை அழகிய கற்பனைகளைத் தன்னைச் சுற்றிப் பின்னிக் கொள்கிறது. குறிப்பாக வீட்டுத் தோட்டத்தில் வாழைக்கன்றுகள் ஒவ்வொன்றுக்கும் தன் உறவுகள் போலவே  பெயரிடுகிறான்.  . அப்பாவாழை , அம்மாவாழை, ரமணி வாழை என்று மரங்களின் அமைப்பின் மூலம் அவற்றின் குணச்சிறப்புகளை உருவாக்கிக் கொள்கிறான்.   ஜெயமோகனின் யானை டாக்டரில் வரும் புழுக்குழந்தையை இந்த வாழைக்குழந்தைகள் நினைவுறுத்துகின்றன. புதிதாய்ப் பிறந்த இரட்டைக் குழ  ந்தைகளை குரங்குக் குட்டிகளாக அவன் மனம் கற்பனை செய்கிறது.  குரங்கின் குழந்தையை மிக ஆசையாகக் கண்டிருக்கக் கூடும். கற்பனை மனம் மிகவும் நொடிசலானது. அப்பாவின் கண்டிப்பில் இருந்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள உருவாக்கிக் கொள்ளும் கற்பனைகள் அவனது மனச்சிக்கலை அதிகரித்து சுயவதைவரை கொண்டுவிட்டுவிடுகின்றன.  அவன் விஷமங்கள் செய்வது புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கத்தான் என்பது உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்தும்

 ரமணி பொதுவாக பெண்குழந்தைகளின் ‘சமர்த்து’ அச்சில் பொருந்துகிறாள். பாயில் சங்கு படத்தின் மீது முதுகு அமையும்படி கச்சிதமாக படுத்துக் கொள்வது, பெரியவர்கள் போல அழகாக உடையை மடித்துவைப்பது,  என்று மிகத்துல்லியமாக பெரியவர்களிடம் நல்லபெயர்வாங்கி பாலுவிற்கு வீழ்ச்சியைத் தந்துகொண்டே இருக்கிறாள்.

லட்சுமியின் தங்கை வள்ளி ஆங்கிலப் பள்ளியில் சேருவதற்காக எஸ் ஆர் எஸ் வீட்டில் தங்கி பயிற்சி எடுத்துக் கொள்கிறாள். இங்கே இன்னுமொரு உளவியல் சிக்கல் தரப்படுகிறது வயதிற்கு மீறிய உடலமைப்பு,  தன் உருவை அமைத்துக் கொள்வதில், தொடர்புறுத்துவதில் சிக்கல், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு என்று படிந்து விட்ட கீழ்நடுத்தர வர்க்கத்தின் பதின் பருவப் பெண்ணின் உளவியல் கவலைகள் அவளைப்பிடித்துள்ளன.

குறுகிய காலமே வந்தாலும் ஒவ்வொரு கதைமாந்தரின் தோற்றமும் அவர்கள் பின்னாலுள்ள வாழ்க்கையைப் படமாக்கி விடுகிறது..  டாக்டர் பிஷாரடியை பைத்தாரன் என்று தனக்குள் திட்டும் ஃபிடில் ராமைய்யர் சக்க வரட்டி என்னும் பலாச்சுளை வறுவலை வர்ணிக்கும் இடம் சிறப்பு. எஸ் ஆர் எஸ் இன் ஆல்டர் ஈகோவாகிய சம்பத் பிரச்னைகளை துல்லியமாக அலசி தீர்வுகளை அளிப்பவர்.

நகரமயமாதலின் பல படிக்கட்டுகளைப் புரிந்து கொள்ளமுடிகிறது. கோட்டயம் நகரமாகி வருகிறது. ஒருவேளை தளியல் கிராமம் என்றால் கைம்பெண்கள் நார்மடிப்புடவையுடன் தான் நடமாடவேண்டி இருக்கும்.

சாமு  ; எஸ் ஆர் எஸ் இன் ஒன்று விட்ட தம்பி; ஒன்றுக்கும் உதவாத தந்தை . வீட்டில் வறுமை பிடுங்கி அழிக்கிறது. தனது இயலாமையை மகன் லச்சன் மீது காட்டும் அயோக்கியன். இப்படிப்பட்ட தந்தைகளைக் கொலை செய்யாத மகன்கள் நாட்டில் இருப்பது ஒரு இயற்கை அற்புதம்.

எஸ் ஆர் எஸ் தன்னைப்பெயர் சொல்லி அழைக்க்க்கூடாதா என்று லட்சும் ஏக்கம்கொள்கிறாள். ஆனால் தளியல்கிராமத்தில் பாட்டி சொல்வாள் “கலிமுத்திப் போச்சு” என்று. மனைவியுடன் பொது விஷயங்களை விவாதிக்கும்.  கணவன் பெரும் புரட்சி செய்தவனாகிறான்.

எஸ் ஆர் எஸ் நாத்திகனான ஷெல்லியைப் படிக்கிறானே என்று அவர் மாமனார் சேது ஐயருக்கு வேதனை. அவர் உருகுவது மில்டனுக்காக. மரபு உருவாக்கும் தரிசன்ங்களுடன் மோதும் எஸ் ஆர் எஸ் அதன் முரணியக்கத்தில் அலைபாய்கிறார் புதிய அவுட் ஹவுஸ் கட்டும்போது டாய்லெட் வீட்டிற்குள் வைக்கவிரும்பவில்லை. ஆனால் அதை  ஆலோசனை கூறிய சம்பத்திடம் சொல்லப்போவதில்லை.

எஸ் ஆர் எஸ் வீட்டு வேனல் பந்தலில் பொதுவிவாதம் நடத்தும் நண்பர்களின் கூட்டம் பாரதி கூறும் இடிப்பள்ளிக்கூடம் போலவே உள்ளது. உச்சகட்ட விவாதத்தின் நடுவே  பிடில் ராமய்யர் தூங்கி விழுந்து கொண்டிருப்பார். மதியம் மகாதேவர் கோயிலில் சாப்பாடு என்று சில வரிகளுக்கு முன்னால் சொல்லி இருப்பார் சு ரா. (நான் கவிதைக்கடிமை; நண்பர்கள் புளியஞ்சோற்றுக்கு அடிமைகள்  என்ற பாரதியாரின் குறும்பு நினைவுபடுத்தப்படுகிறது)

ஐதிகத்தின் படி திருவக்கரை  தேவ சுவாமியிடம் இடம் கருவறையில் இடம் கேட்ட கிணறு  கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்கிறது. அது அம்மாவின் படுக்கை அறை அருகே வந்துவிடும் என்று அஞ்சுகிறான் பாலு. நகரும் கிணறு  நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், காலம் , உறவுகளின் நீண்டகால மாற்றத்தைக் காட்டுகிறதா?

மரபின் மீது மோதலைச் செலுத்திக் கொண்டே இருப்பது நாவலின் இயல்புகளில் ஒன்று  என்கிறார் ஜெயமோகன். ஆனால் மரபின் மீதான விமர்சனத்தை கொந்தளிப்புடன் காட்டியிருக்கும் சு ரா மறுபக்க விவாதத்தை (காந்தியம் அல்லது மெய்யியல்)  வலு குறைந்த மாந்தர் மூலம் முன்வைக்கிறார். தந்தையின் திவசத்திற்குப் போகாமலிருப்பதன் மூலம் எஸ் ஆர் எஸ் தனது சுதந்திரப் போக்கையும் தர்க்கமில்லாத மரபு மீதான எதிர்ப்பையும் வலியுறுத்திக் கொள்கிறார். கூடவே அதனால் பெரும் அலைக்கழிப்பும் அடைகிறார். அவர் மனைவி இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என அஞ்சுகிறார்.

எஸ் ஆர் எஸ் காணும் கொடூரக் கனவு ஃப்ராய்டியத்தின் படி அடக்கப்பட்ட ஆசைகளைக்குறிக்கிறது.  குழந்தைப் பருவ அனுபவங்கள்  ஒரு ஆளுமையை அதிகம் பாதிக்கின்றன என்பது தெளிவாகவே வெளிப்படுகிறது.  எஸ் ஆர் எஸ்க்கு சிறுவயதில் மரமேறத்தெரியாது. அதே போன்ற ‘worldly wise” இன்மையால் பாலுவும் தாழ்வு மனப்பான்மைக்குள் சிறிது சிறிதாக வழுக்கிக் கொண்டு செல்கிறான். தன்னைப்போல இல்லாமல் திறமையுடன் வாழ்வேண்டும் என்ற ஆதங்கத்தினாலேயே எஸ் ஆர் எஸ் பிள்ளை வளர்ப்பில் தவறுகள் செய்கிறார்.

குழந்தைப் பருவத்தின் கழிவுநீக்கப் பயிற்சி சரியாகத் தரப்படாவிட்டால் குழந்தை பதட்டத்தில் சிறைப்பட்டு விடும் என்பது ஃப்ராய்டின் மற்றொரு கூற்று.  பாலு வெவ்வேறு இடங்களில் சிறுநீர் கழிப்பதைப் பற்றிக் கவலையும் கேள்வியும் அடைகிறான். ஃப்ராய்டின் நான்கு நிலைகளில் திகழும் பாலியல் உளவியல் வளர்ச்சி நிலைப்படிகளின்  செலாவணி கேள்விக்குள்ளாக்கப் பட்டுவிட்ட்து. எனினும்  அதிகமாகவோ அளவுக் குறைவாகவோ பெற்றோர்களால் பயிற்றுவிக்கப் பட்ட குழந்தைகள் உளவியல் சலனங்கள் கொண்டவர்களாக வளர்கிறார்கள் என்பதற்கு வாய்ப்புள்ளது. 

எஸ் ஆர் எஸ்இன் தம்பி பாலகிருஷ்ணன் ருத்ரம் சொல்லும் திறமையால் ஒரு வேலையைப் பிடித்துக் கொண்டவன் (வேதம் வேலை வாங்கித் தருகிறது).  அவன் பழமையை மறக்கவில்லை என்று காட்டிக்கொள்வதற்காக பழைய ட்ரங்க் பெட்டியுடனேயே வலம் வருகிறான்.  மாறாக, தனது பின்னணியைப்பற்றி தாழ்வுணர்ச்சி  கொண்ட வள்ளி, தனது அக்கா வீட்டில் ட்ரங்க் பெட்டியை மறைத்து வைக்கிறாள்  மரபிற்கு உருவமாக பெட்டியைக் கொண்டால், மரமைக் காட்சிப்பொருளாக்கி ஒருவன் பிழைக்க முனைகிறான். மரபை மறைத்துக் கொண்டு ஒருத்தி கடந்து செல்லவிரும்புகிறாள்.

மரபின் மீதான எள்ளல் தூவி விடப்பட்டுள்ளது.  வறுமையில்  உழலும் சமுவின் வீட்டில் மஹாலட்சுமி தாமரையில் அமர்ந்த கேலண்டரைக் காட்டிவிட்டு, தாமரை அதிக வலுவுள்ளது என்கிறார் சு ரா.  சாமுவின் வாழ்க்கையைப் பார்க்கும் போது பொருளில்லாத நிலை வறுமை இல்லை ; அதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை வற்றச்செய்து தாமசத்தில் உழல்வது தான் வறுமை என்பது தெளிகிறது.

பெண்ணியல் சரடு தொடர்ந்து இழையோடி வருகிறது. எஸ் ஆர் எஸ் பாட்டி காலத்தில் தாத்தா இறந்தபிறகு தான் அவர் அருகில் அமர்ந்தாள் பாட்டி; அடுத்த தலைமுறையில் அமர்ந்திருந்த அப்பாவின் பின்னால் தொலைவில் நின்று அம்மா போட்டோ எடுத்ததே புரட்சி; அடுத்த காலத்தில் கணவன் மனைவையைப் பெயர்சொல்லி அழைத்த்தே கலி முற்றியதன் அடையாளம்.  எஸ் ஆர் எஸ் இன் குறைகளுள் ஒன்று மனைவியிடம் மனம் விட்டுப் பேசமுடியாததே. இதுவே அவரது ஆளுமையை மொத்தமாக பாதித்துள்ளது எனலாம். அவர் தனது ஆணவத்தைக் காரணமாகக் கொள்கிறார். ஆனால் அவரிடம் வலுவாக ஊன்றியுள்ள மரபுப் பிடிப்பும் அதில் மீற முயலும் தோறும் அவர் தோற்பதும்  அவரை உளச்சிக்கலுக்குள் கொண்டுவிடுகிறது. உண்மையில் பிரச்னை குழந்தை பாலுவுக்குஅல்ல; அவருக்குத்தான்

முதிர்ச்சி அடைந்த மனைவியாக லட்சுமி மனோதத்துவ நூல்கள் இவருக்கும் (எஸ் ஆர் எஸ்) தானே பொருந்தும் என்று கேட்டுக்கொள்கிறாள்.  ‘தவிப்பும் அவருக்குத் தேவை’ என்று கணவனின் ஊசலாட்ட்த்தை அவதானிக்கிறாள் இதை “‘ தவிப்பும் மனிதனுக்குத் தேவை’ என்று சொற்றொடராக  விரித்துக் கொண்டால் நாவல் காலம் கடந்த பேசுபொருளின் களமாகிவிடுகிறது

கையெழுத்துகளைப் பற்றிய உதாரணங்கள் அழகாக உள்ளன. பைலி மாப்லேயின் கையெழுத்து சிட்டுக்குருவிகளின் நடனம் போன்றது; சாமுவின் கையெழுத்து சிறிய பூசணிக்காய்கள் மீது தண்ணீர் லாரி ஏறியதுபோல இருக்கும்.

எஸ் ஆர் எஸ் பெர்ட்ரண்ட் ரஸல் வாசிப்பவர்; “அறியாமை வாதம்” சார்ந்த கருத்துக்களைக் கொள்கிறார். (agnosticism) . ஃப்ராய்டும் கூட ஆத்திகவாதிகளும் நாத்திகவாதிகளும் உண்மையை அறிந்தவர்களில்லை; இருக்கிறாரா அல்லது இல்லையா என்று அறியமுடியவில்லை என்ற கருதுகோள் கொண்டவரே உண்மையை அறிந்தவர்கள் என்கிறார்.   சுந்தர ராமசாமியை இலக்கியத்தில் பண்டித நேருவின் மனநிலைக்கு ஒப்பிடத்தோன்றுகிறது. மானுடத்தின் மீது நம்பிக்கை, மரபை முற்றிலுமாக மறுதலித்தல்  , தீர்வுகளுக்கான மேற்கு நோக்கிய பார்வை.  அச்சூழலில் நம்பிக்கை தந்த தத்துவங்கள் இவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிரச்னை என்னவென்றால் மேலை நாட்டு உளவியலை மட்டும் பிடித்துக் கொள்வதால் கீழை உளவியலை நம்பவில்லை. மனம் தூங்கும் போது தூங்காத ஒன்று உண்டு ஒன்று நம்பவில்லை. மெய்த்தேடலும் மதமும்  சில ஆயிரம் ஆண்டுகளாக வலைபின்னி உருவாகிவிட்ட  மரபில் சிக்கெடுக்க விரும்பாமல் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது அண்டாவுடன் குழந்தையையும் சேர்த்து வீசிவிடும் பிரச்னை உள்ளது.

நாவல் முழுவதும் வாசக இடைவெளிகள் கிடக்கின்றன. எஸ் ஆர் எஸ் தான் மனைவியிடம் சொல்ல நினைத்த தனது சுய விமர்சனத்தைச் சொல்லி விட்டாரா?   முண்டன் மாதவன் சீதைக்கிடையே மண்ணெண்ணெய் கருப்பில் விற்கும் தொடர்பு மட்டும் தானா? சுகன்யா- வள்ளி நட்பு உருவாவதன் காரணம் என்ன?; ஆச்சரியமூட்டும் விதத்தில் ஸ்ரீதரன் – வள்ளி திருமண ஏற்பாட்டை அவன் அம்மா ஒத்துக் கொள்வது ஏன்? இப்படி

டாக்டர் பிஷாரடியின் மனைவியின் மூலமாக மற்றுமொரு மனநோய்க் கோணம் காட்டப்படுகிறது.  அறிகுறிகளைப் பார்த்த்தும் ஹிஸ்டீரியா எனத் தோன்றுகிறது. ஆனால் அது அமெரிக்க நோய்ப்பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுவிட்ட்து. மனச்சிதைவு (schizophrenia), எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு (borderline personality disorder),  மாற்றுக் கோளாறு (conversion disorder), பதட்டத் தாக்குதல் (anxiety attack)  என்று வரையறை செய்யப்பட்ட மனநோய்ப்பிரிவுகளில் ஹிஸ்டிரியாவின் அறிகுறிகள் அடக்கப்பட்டுவிட்டன் . குழந்தைப் பிரசவத்தின் முன்னர் அவளுக்கு நோய் அதிகமாவது நோய்க்கூற்றியலில் விளங்கிக் கொள்ளக் கூடியது. முதல் குழந்தை 19 வயதான பின்னும் குழந்தைகள் பெற்றுக் கொண்டிருப்பது இருவருக்கிடையேயான சிக்கலான உறவுமுறை பற்றி வாசக ஊகத்திற்கு விடப்பட்டுள்ளது

தனது கருத்துக்கள் புண்படுத்தி விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு சொல்லையும் அல்லது மொத்தப் பேச்சையுமே விழுங்கி விடும் லட்சுமி மாதிரியான  இந்திய மனைவிகளைக் குறிக்கிறார். தற்காத்தலுக்காக யோசித்துச் சொல்லுதல் என்னும்  defence mechanism நனவிலா மனத்தில் கையாளப்படுகிறது.

அப்பா- மகன் உறவுச் சிக்கலின் மூன்று உதாரணங்கள். எஸ் ஆர் எஸ் – பாலு , டாக்டர் பிஷாரடி – ஸ்ரீதரன்,  சாமு-லச்சம் ; வாசகனை அதிகம் பாதிப்பது  குழந்தை பாலுதான். ஒன்பது வயதுக்குள் அவனுக்குள் பரிபூரணத்தை நிறைக்க விரும்பி  கொந்தளிக்க வைக்கும் அப்பாவின் மீது அவனுக்கு மரியாதை கல்நத அச்சமும் வெறுப்பும் சுயவதையும் வளர்கின்றன. தன் தாயின் மன்நோய்க்குக் காரணமானவர் என்று எண்ணும் தந்தை பிஷாரடி மீது ஸ்ரீதரன் நிகழ்த்தும் பழி வாங்கல் அவர் தன் மீது வைத்துள்ள கனவைக் குலைப்பது தான். கம்யூனிசம், வெள்ளைய எதிர்ப்பு இவையெல்லாம் மேல்மனம் பூசிக்கொண்ட சாயம் போலத்தான் தோன்றுகிறது. ஒன்றுக்கும் உதவாத பெற்றோரை அடைந்த லச்சம் தன் கடும் உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கை அளிக்கும் இலேசான நூல்களைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறுகிறான். ஆனால் வஞ்சமும் வன்மமும்  கூடவே வளர்கின்றன. மூன்று இணைகளில் தந்தையை உண்மையில் பழிவாங்குபவன் லச்சம் தான், தன் மரணத்தின் மூலம்.

டாக்டர் பிஷாரடி தனது ஆயுர்வேதம் படித்த மகன் அப்புவின் மூலம் வாழ்க்கையை மீட்டெடுத்துவிடுவார். ஊரை விட்டுச் செல்லும் எஸ ஆர் எஸ் குடும்பம்  மீண்டுவிடும் போலத்தான் தோன்றுகிறது. (கஷ்டம் வந்தால் தான் குடும்பத்தில் ஒற்றுமை வருகிறது) . எஸ் ஆர் எஸ் சமையலறையில் முதல்முதலாக நுழைவதும் பாலு காரின் முன்சீட்டில் அமர்வதும்  பாலு ஒரு மனிதனாக பரிணமித்தை அவன் தந்தை ஏற்றுக் கொள்வதைக் காட்டுகிறது.   சுகந்தி, வள்ளி இவர்களின் நிலை காலத்தின் முன் விடப்பட்டுள்ள கேள்விகளாக உள்ளன.

பாலுவின் அக்கா ரமணியின் உளவியல் முடிச்சுகளும் நன்றாக செதுக்கப்பட்டுள்ளன. அவளுக்கும் கோபித்துக் கொண்டு உட்கார  அம்மாவின் அறையில் ஒரு மூலை உண்டு (பாலுவுக்கு கோயில் திண்ணை போல ). ஸ்ரீதரனின் நட்பு வள்ளியை நோக்கித் திரும்பி காதலாக மலர,  மிக சராசரிப்பெண்ணாகி விடும் ரமணியின் உள மாற்றம், தொடக்கத்தில் காட்டிய அரிய மனமுதிர்ச்சிக்கு மாறாகவே  உள்ளது. மனதின் அடித்தள முடிச்சுகளை அவளே கண்டுகொள்ளும் இடம்போலும். ஆனந்தம் ஒரு நல்ல இரவில் வீட்டை விட்டுப் போய்விடவே, அம்மாவின் துணையுடன் சமையலைக் கற்கத்துவங்கும் போது மீண்டும் ரமணி என்ற குழந்தையின் பெற்றோர் மனநிலை வெளிப்படுகிறது.  தொடக்கத்தில் நடக்கும்போதும் ஏணியில் ஏறும்போதும் அழகாக உடையை உயர்த்திக்கொண்டும் இடுக்கிக்கொண்டும் பயின்ற ரமணிக்கு சமையலின் போதும் அதே  பழக்கம் பாதுகாப்புக்கு அவசியமாக மாறுகிறது. அழகியலும் கலையும் தேவை மற்றும் வாழ்க்கைப்பாட்டிற்கு வழிவிட்டே ஆகவேண்டும் போல.

இதே நிலை எஸ் ஆர் எஸ் க்கும் வருகிறது. தொழிலில் தோல்வி, வாழ்வில் தான் கொண்ட நம்பிக்கைகளை செயலாக்க முடியாத தன்னிரக்கம் எல்லாம்  படிப்பறிவை விட அனுபவம் தரும் பாடங்கள் மூலம்  விலகிவிடுகின்றன. கோட்டயத்தின் கடைசி இரவில் அவர் நெருங்கிய நண்பரான டாக்டரைப் பார்த்தாரா என்று தெரியவில்லை . ஆனால் கனவுபோல உறக்கம் நழுவும் முன் அவர் கண்ட காட்சிகளில் ‘சம்மட்டியால் அடி’ என்று கற்பனையாக உலையில் வேலை செய்யும் பைத்தியத்தின் உருவம் அவருக்குத் தோன்றுகிறது. அவரை சம்மட்டியால் அடிப்பது யார்? உறவுகளா, அனுபவங்களா, காலமா, வாழ்க்கையா/ இவை எல்லாமா?

ஊர் மாற்றிச் செல்வது எளிதல்ல;  அதுவும் குழந்தைகளுக்கு புரட்டிப்போடும் அனுபவம் ;   போட் ஜெட்டியை , மீனச்சல் ஆற்றை, தான் வெற்றிபெற்ற ஊரை விட்டு  கவலையுடன்  பிரியும் எஸ் ஆர் எஸ் இன் துயரை விட படிக்கட்டையும் கிணற்றையும் பிரியும் பாலுவின் துயர் ஆழமாகப் பதிந்துவிடுகிறது

காரணம் அறியா மனச்சோர்வு, காரணம் தெரிந்த மனச்சோர்வு இரண்டும்  கதாமாந்தர்களை மாறி மாறித்தாக்குகின்றன. டாக்டர் பிஷாரடி நல்ல டாக்டரோ இல்லையோ நல்ல மனிதர்; காந்தியிடம் பக்தியும் மகன் அதிகாரியாக வேண்டும் என்ற முரணான ஆசையும் ஒருங்கே கொண்டவர்;  உதவும் ஜீவன். மருத்துவத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர்; படிப்புத்திறனுக்கும் வாழ்வியல் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை என்ற உண்மையின் லட்சக்கணக்கான ருசுக்களில் ஒன்று; நோயாளியிடம் வேதாந்தம் பேசுபவர்;

கனவுகள் ஆழ்மனதின் வெளியே வெடிக்கும் குமிழ்கள் என்கிறது ஃப்ராய்டியம்.  கனவிலும் மனது ஒன்றை மறைத்து வேறு ஒன்றை குறியீடாகப் பூசிக்கொள்கிறது ; கனவில் வரும் புற உண்மைகள் அல்ல; அது உருவாக்கும் உணர்வு நிலையே ஆராயவேண்டியது என்கிறது கனவியல். சுகன்யா காணும் கனவில் தந்தை பிஷாரடி வலது கையும் வலது காலும் இல்லாமல் பெரும் காற்றில் அலைபாய்கிறார். மனைவியும் மூத்தமகனும் கைவிட்டதன் குறிப்பா இது?

இந்நூலை தந்தை வெறுப்பாற்றியல்  என வகைப்படுத்தலாம். சுகன்யாவின் ஆண் வெறுப்பு தந்தைவெறுப்பிலிருந்து வந்திருக்கக் கூடும். ஆண்களெல்லாம் முரடர்கள் – சாது முரடர், தந்திர முரடர், சுயநல முரடர் மற்றும் முரட்டு முரடர் என்ற அவளது வகைப்பாடு ரசிக்கத் தக்கது.

மரபு  – மரபை மறுத்தல் இரண்டுக்குமான  பூசல் மனித மனங்களை வாட்டிக்கொண்டே இருக்கிறது; தளியல் முகங்கள் என்ற சொற்றொடர் முகமறியா சமூகம்,நட்பு, உறவுகள் ஊர் அலர்/ சமூக புறக்கணிப்பு / ஊர் வாய் இவற்றின் திரண்ட உருவகமாகின்றன

வாழ்வு தரும் உச்ச கட்ட வஞ்சங்களை வென்று யானை மீது ஏறி நின்றுவிடும் லச்சம் ஓர் அரிய வகைமாதிரி; லச்சம் அவனது அப்பாவை மிரட்டும் இடத்தில் சாமு முக்கால் பங்கு இறந்துவிடுகிறார். அதன் பின் அவன் தன் இறப்பினால் அவரைத் தோற்கடித்துவிடுகிறான்.

வேனில் பந்தல் கீழ் எஸ் ஆர் எஸ் வீட்டில் நடக்கும் நண்பர்கள் சந்திப்பு சிந்தனைகளின் பலவேறு தரப்புகளைக் காட்டுகிறது. சிறுகச் சிறுகத்தான் சீர்திருத்தம் வரமுடியும் (சம்பத்), புரட்சி வெடித்து இல்லாமையை விரட்டவேண்டும் (கருநாகப்பள்ளி ஜோசப்) , ஆன்மத்தேடலே வழி (குமாரசாமி) , அதிகாரவர்க்கத்தின் மீதான அவநம்பிக்கை எதிர்மனநிலையை அளிக்கிறது (கோவிந்தன் குட்டி), தனிமனித சிக்கல்களுக்கு நூல்கள் மூலமான் தீர்வு காணல் (எஸ் ஆர் எஸ்) இப்படி பல கருத்துக்கள் புழங்கிய பந்தல் வீட்டைக் காலி செய்யும் நாளன்று சணல்களும் குப்பைகளும் பரவிக் காட்சியளிப்பது என்னவோ செய்கிறது.

கடைசி வரை எஸ் ஆர் எஸ் ஒரு அவுட் ஹவுஸ் கட்டவே முடியவில்லை ஆனால் அதற்கு வைத்திருந்த செங்கல் மீது கட்டிய குடிசை குழந்தைகளை குதூகலப்படுத்தியது. அதைக் கட்டியவன் லச்சம். வாழ்வில் நிலையான கற்பனைகளை வளர்த்துக் கொள்வது வாடகை வீட்டில் நிரந்தரக் கட்டுமானம் அமைப்பது போன்ற முட்டாள்தனமோ? இங்கே அழகிய குடிசையை உயரத்தில் கட்டி விளையாடுவது தான் மகிழ்ச்சிக்கு வழியோ? அதிலும் பிறர் மகிழக் குடிசை அமைக்கும் லச்சம்   ஒரு மகத்தான ஒளியின் சாத்தியக்கூறாகத்தெரிகிறான்.

எஸ் ஆர் எஸ் உறங்கும் முன் காணும் அரை நினைவுக் காட்சியில் பெரும் கூக்குரல்  தரும் கைப்பந்து விளையாட்டைக்காண அந்த ஒலி வரும் சந்துகளில்  ஓடுகிறார். விளையாட்டு முடிந்து விடுகிறது. பலருக்கு இவ்வாழ்வில்விளையாட்டைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அந்த ஆரவாரம் காதில் விழுகிறது. அது விளையாட்டைக் காண விட்டுவிட்டதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளச்செய்கிறது. பாலுவின் மனநிலையை தந்தைகள் பெற்றுக் கொண்டுவிட்டால் அடைவதும் இல்லை விடுவதும் இல்லை; கற்பனையின் குறுகுறுப்பே போதுமானது.

காலம் கடந்து நிற்கும்  உளவியல் சிக்கல்கள் அவற்றின் தீர்வு அல்லது தீர்வின்மையை குடும்ப- சமூக – உறவுகளின் ஊடாட்டத்தில் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் காட்சிப்படுத்தும் படைப்பு.

சுடர்வுகள்

* குழந்தைகள் வயிறு காய்ந்தால் பூமி வெடித்துவிடும்

* பெண்களும் யோசிக்கலாம் என்பதே புதுமை

* திணிக்கப் பட்ட தியாகத்தின் பலிகளே இந்தியர்கள்

*  குழந்தையின் மனதும் அடர்த்தியானது தான். அதன் எளிய மொழிவழியாக உள்ளே நுழையமுடியாது

* குழந்தை என்பது பெரியவர்களின் சிறிய உருவம் இல்லை

*நாகரிகப்படுத்தும் முயற்சி மனச்சிதைவை ஏற்படுத்தக் கூடும்

* பகுத்தறிவை உறவுகளுக்கிடையே கொண்டுவந்தால் உறவுகள் முறிந்துவிடும்

* மனிதன் ஒரு கலாச்சார ஜீவன். மரபும் மரபின் தொடர்ச்சியும் அவனுக்கு முக்கியம்

* நம் இருப்பை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது தான் துன்பம்

.*  காலத்தோடு பிணைந்திருப்பதே துன்பம்

ஆர் ராகவேந்திரன், கோவை

மண்ணும் மனிதரும் – வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

வலமிருந்து மூன்றாவதாக நிற்பவர் காளீஸ்வரன்

‘பொட்டக்காடா இருந்தாலும் அதுதாண்டா உனக்கு அடையாளம். நீ செத்தா விளப்போற எடம்டா அது. நாளைக்கு உம்பிள்ளையும் அங்கதான் அடங்குவான்…டேய் மண்ணில்லாதவன் மனுசனில்ல. மிருகம்…தெரிஞ்சுக்க’

  • சுடலையிடம் சேத்துக்காட்டார் (ஆசான் திரு.ஜெயமோகனின் குருதி சிறுகதையில்)

****

மண்ணும் மனிதரும் நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் போது அடிக்கடி மனதில் தோன்றிக்கொண்டிருந்த பெயர் சேத்துக்காட்டார். ஆசானின் குருதி சிறுகதையில் வரும் கதாப்பாத்திரம். ஆனால், அந்தச் சிறுகதையின் களமும், மையமும் முற்றிலும் வேறானது. எனக்கு ஏன் அந்தப் பெயர் தோன்றிக் கொண்டேயிருந்தது என்பது புதிர்தான்.

நாவலில் வரும் லச்சன் பாத்திரம் துவக்கம் முதலே தன் வீட்டை, நிலத்தை, ஊரை விட்டு விலகியே இருப்பது அவனது தான்தோன்றித்தனமான வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கலாம். அதே சமயம், அம்மண்ணின் மீதான பிடிப்பே லச்சனின் அத்தை சரஸ்வதி மற்றும் மனைவி நாகவேணி இருவரையும் மீண்டும் மீண்டும் “கோடி” கிராமத்திலேயே இருக்க வைக்கிறது.

கணவனை இழந்த சரஸ்வதி தன் புகுந்த வீட்டில் (மந்தர்த்தி) சிக்கலில்லாமல் வாழ்ந்திருக்கக்கூடும், என்றாலும் தன் பிறந்த வீட்டுக்காக இறுதிவரை உழைக்கிறாள். மறுபக்கம் தன் பிறந்த வீட்டில் நிம்மதியான வாழ்க்கை வாழ இயலும் என்றபோதும் நாகவேணியோ மீண்டும் மீண்டும் ”கோடி” கிராம வாழ்க்கையையே தேர்ந்தெடுக்கிறாள். தன் மாமனாரான இராம ஐதாளர் தன் பெயரில் எழுதிவைத்த சொத்தை, சின்ன சஞ்சலத்தால் இழந்ததன் குற்றவுணர்ச்சி, கூடவே தன் மகன் ராமன் மூலமாக, ஐதாளர் குடும்பத்தின் சொத்தை, கெளரவத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமை தனக்கிருப்பதாக நாகவேணி கருதுவதும் அவளை கோடி கிராமத்திலேயே வைத்திருக்கிறது. மாறாக, சரஸ்வதியை மந்தர்த்தியுடன் கட்டி வைக்கும் எவ்வித பிணைப்பும் இருப்பதில்லை.

லச்சனின் பொறுப்பின்மையால் பெரும் மனச்சுமை கொள்ளும் நாகவேணி, ராமனின் வாழ்க்கைக்காக பிறந்த வீட்டுக்கு சென்று தங்குகிறாள் (பின்னர், சூழ்நிலையினாலும் புகுந்தவீட்டில் தனக்கிருக்கும் கடமையினாலும் கோடிக்கே திருப்புகிறாள்). ”கோடி” கிராமத்தில் ஓயாது வேலை செய்து பழகிவிட்டதால், பிறந்த வீட்டில் அவளுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. ஆர்வத்துடன் அவள் கற்றுக்கொள்ளும் வயலின் இசை அவளது மனவருத்தங்களுக்கான தற்காலிக மருந்தாக அமைகிறது.

இராம ஐதாளர் தன் சகோதரி சரஸ்வதியையோ அல்லது முதல் மனைவி பார்வதியையோ குடும்ப விசயங்களில் கலந்து ஆலோசிக்கும் அளவுக்கு பொருட்படுத்துவதில்லை. நாவலின் துவக்க அத்தியாயங்களில், சரஸ்வதி இக்குறையை நேரடியாக வெளிப்படுத்தவும் செய்கிறார். ஆனாலும், பெண்களை பெரிதும் பொருட்படுத்தாத ராம ஐதாளர் தன்னுடைய வீட்டில் ஒருவருடைய குரலுக்கு விஷேச மரியாதை தந்தாரென்றால் அது சரஸ்வதியின் குரலுக்கு மட்டுமே. தன்னுடைய இரண்டாம் திருமணத்தின் போது கோபித்துக்கொள்ளும் சகோதரியை சமாதானப்படுத்துவது, சீனப்பன் வீட்டைப் பார்த்து தன் வீட்டை மாற்றி அமைக்க எண்ணும்போது சரஸ்வதியின் அறிவுரையைக் கேட்பது என பல இடங்களில் சரஸ்வதிக்கான முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

இந்நாவலில், ஐதாளர் முக்கியமான ஒரு விசயத்தில் சரஸ்வதியின் பேச்சை மதிப்பதில்லை. அது லச்சனின் படிப்பு. பார்வதியுடனான லச்சனின் பாசத்தை கட்டுப்படுத்த வேண்டிய தேவை சத்தியபாமைக்கு இருக்கிறது. சீனப்பனின் வளர்ச்சி, அதனால் ஊரில் உயரும் அவனது செல்வாக்கு, கூடவே புரோகிதத்துக்கான மரியாதை குறைதல், இவற்றை எதிர்கொள்ள லச்சனை ஆங்கிலம் கற்கவைக்க எண்ணுகிறார் ஐதாளர். இவற்றால், லச்சன் அவனது பாட்டனார் படுமுன்னூர் மாதப்பையர் வீட்டில் தங்கிப் படிக்க நேர்கிறது. லச்சன் கோடியிலேயே வளர வேண்டியதன் அவசியம் குறித்த சரஸ்வதியின் வாதம் ஐதாளரிடம் பலனளிக்கவில்லை. அவ்வகையில் தன் வீட்டார் மீதான லச்சனின் விலக்கம் சரஸ்வதியால் முன்கூட்டியே யூகிக்கப்படுகிறது. அந்த விலக்கமே மெல்ல மெல்ல லச்சனை இருளை நோக்கி நகர்த்துகிறது.

லச்சனின் மகன் ராமன், தன் தாய்வீட்டார் உதவியுடன் படிக்கிறான். சிறுவயதில் கிறுக்கல்களாக ஓவியங்கள் வரைபவனாகவும், வயலின் கலையில் கொஞ்சம் ஞானமுள்ளனவனாகவும் வளர்கிறான். கோடி கிராமத்துடனான அவனது உறவு இரண்டு விசயங்களால் வலுப்பெறுகிறது. ஒன்று கோடி கிராமத்துடனான நாகவேணியின் பிணைப்பு, இரண்டாவது ராமனின் “கடல்” பித்து. படிக்கும் காலத்திலும், பின்னர் வேலை தேடும் தருணங்களிலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் கோடி கடற்கரையில் அமர்ந்து தன் அன்னையுடன் பேசி மகிழ்கிறான் ராமன். வேலை தேடி சென்னை, பம்பாய் என பெரு நகரங்களில் வாழும் போதும், அவ்வூர்களின் கடற்கரைகள் “கோடி” கடற்கரை அளவுக்கு அவன் மனதுக்கு நெருக்கமாயிருப்பதில்லை. ஓவியக்கலை வித்தகர் நோவாவுக்கு அனுப்பவேண்டிய படமாக ராமன் வரைவது அவனது ஊரின் கடலைத்தான்.

சுதந்திரப் போராட்டம், கம்யூனிசம் என அக்காலகட்டத்தின் இளைஞர்களின் ஆர்வம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தன்னை வேலையை விட்டு தூக்கிய பின்னர், அதுவரை வேலை பார்த்துவந்த ”ஸ்நோ” கம்பெனிக்கு முதலாளித்துவ பட்டம் கட்டும் கங்காதரன் பாத்திரம் வாயிலாக, அக்கால இளைஞர்களின் அரசியல், சமூகம் பற்றிய மேம்போக்கான புரிதலும் காட்டப்படுகிறது.

நாகவேணிக்கு சொத்தை எழுதிவைத்ததன் மூலமாக, கோடி கிராமத்துடன் அவளைப் பிணைத்து வைத்த ஐதாளர், தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 30 பொன் காசுகள் மூலமாக பேரன் ராமனை மீண்டும் கோடி கிராமத்துக்கே வர வைக்கிறார். அவ்வகையில் லச்சன் விசயத்தில் நேர்ந்த பிழை, ராம ஐதாளராலேயே நிகர் செய்யப்படுகிறது.

நாவலைப் படித்துமுடித்த பின்னர் தோன்றியது “மண்ணின் மீதான பிடிப்பே ராமனை மீண்டும் அவனது கிராமத்து வாழ்க்கைக்குத் திரும்பவைத்தது. அந்தப் பிடிப்பில்லாத லச்சனின் வாழ்வு அலைக்கழிக்கப்படுகிறது”.

அவ்வகையில் சேத்துக்காட்டார் சொன்னது சரிதான் “மண்ணில்லாதவன் மனுசனில்ல”.

– காளீஸ்வரன்

மண்ணும் மனிதரும் – வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்

இடப்புறம் பின் வரிசையில் முதலாக ராகவேந்திரன்

வாசிப்பில் நம்மை அணுக்கமாக உணரச் செய்வதும் வாழ்வின் இடர்களுக்கு வேறொரு காலத்திலிருந்து தீர்வும் ஆறுதலும் அளிப்பதே பேரிலக்கியத்தின் பயன்மதிப்பு என்றால், மண்ணும் மனிதரும் நம் கண்ணீரைப் புரிந்து கொள்வதுடன் ஆறுதலாகத் தோள் தொடுகிறது.

சிவராம காரந்தின்  ‘ மரளி மண்ணிகே ’ என்ற தலைப்பு  மீண்டும் மண்ணுக்கே என்றே பொருள் தருகிறது.  இருமொழி வல்லவரான தி ப சித்தலிங்கப்பா அவர்கள்  மண்ணும் மனிதரும் என்று தன் மொழி பெயர்ப்புக்குப் பெயரிட்டுள்ளார்.   நாவலுக்குரிய விரிவு, கூர்மை ஆழம், சமநிலை துலங்கிநிற்கிறது.

கதை அளிக்கும் மூன்றுதலைமுறைகளின் சித்திரத்தில் மூத்தவர் ராமச்சந்திர ஐதாளர். ஐதாளர் என்ற பெயர் மங்களூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் வாழும் கோடா  பிராமணர்களின் பிரிவைக்குறிக்கிறது.  இவர்கள் உடுப்பி, தென் கர்னாடக மாவட்டங்களில் வாழ்ந்து வருபவர்கள். கன்னடம் – துளு இணைந்த ஒரு கிளை மொழி பேசுபவர்கள். அக்னியை முப்பொழுதும் வளர்த்து,ஓதிக் காப்பவர்கள் அல்லது காக்கவேண்டியவர்கள்  (அஹிதா- காப்பவர்கள் ; அலை –  நெருப்பு)  என்ற பொருளில் காரணப்பெயராக ஐதாளர் என்று வந்தது.

 வேளாண்மை செய்யும் அந்தணப் பிரிவுப் பெண்கள், நிலத்தில் நட்டும், உழுதும் அறுவடை செய்தும் கபிலை இறைத்தும் கடலில் நதி கலக்கும்  கழிமுகத்தில் வரும் பெரிய கட்டைகளை விறகுக்காக உயிரைப் பயணம் வைத்து நீந்திப் பறித்தும் வாழ்கிறார்கள். ஜெ ஒரு சந்திப்பில் மங்களுரில் அந்தணப் பெண்கள் மரமேறும் தொழில் செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  ராமானுஜர் போன்ற சமூக மதிப்பு பெற்ற மகான்கள் பாரதப் பயணத்தின் போது சமய மறுஎழுச்சிக்காகப் பல இனக்குழுக்களை அந்தணர் கடமை செய்பவர்களாக மாற்றியிருப்பதைப் படிக்கிறோம். 

ராம ஐதாளரின் நிலம் , கழிமுகப் பகுதியில் உள்ளது. காற்றும் மழையும் ஓயாது வேளாண்மையில் தலையிடுகின்றன. படுகஞ்சனான ஐதாளர் தனது இரண்டாம் திருமணத்தை (குறைவான கூட்டம் வருமென்பதால்) மழைக்காலத்தில் வைத்துக்கொள்கிறார்.   நான்கு நாட்கள் திருமணச்சடங்கு நடக்கிறது. நான்காம் நாள் நாகவள்ளி. 

நூலைப் படித்த்தும் ஒரு பெரிய இயலாமையும் வியப்பும் எழுகின்றன. குந்தாப்பூர், உடுப்பி, மல்பி,  , மங்களூர் போன்ற ஊர்கள் தென் கன்னடப் பயணத்தில் இன்று நாம் பார்க்க்க் கூடியவை.. ஒவ்வொரு  பேருந்து நிலையத்திலிருந்தும் ஒரு சிறு வீதி ஒரு ஊருக்கு இட்டுச் செல்லும். அங்கே சதையும் உயிரும் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக;  அவர்களின் பெருமூச்சுகளும் இன்பங்களும் மண்ணிலும் கடலிலும் கலந்திருக்கின்றன. இந்த இந்தியப் பெருநிலத்தில்  எங்கு சென்றாலும் வியப்பூட்டும் ஒற்றுமையுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நீண்டகால சமூக வாழ்வைச் சமைத்தது யார் என்ற வினா நம்மைத் துளைத்துக்கொண்டே இருக்கிறது.

தீண்டாமையை சரளமாகவும் கடமையாகவும் கடைப்பிடிக்கும் காலம்.  மூன்று தலைமுறைகளுக்குப் பின் பேரனான ராமன் காந்தியமும் கம்யுனிசமும் கற்று சுதந்திரப் போரில் சிறை செல்லும்போது மாற்றம் நிகழ்கிறது.

ராம ஐதாளர் , அவரது இரண்டு மனைவிகள், கைம்பெண்ணான தமக்கை, செல்லம் கொடுத்து, ஆங்கிலம் பயிற்றுவித்து , கெட்டுப்போன மகனான லச்சன், அவனது மனைவி நாகவேணி இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் ஊர்ப்பெரியவர்கள் , விவசாயிகள், நிலப்பண்ணையாட்கள் என  அதிகமான பாத்திரங்கள் இருந்தபோதும் முற்பகுதியில் மிகச் சாம்பலான வண்ணத்தில் சோம்பலான கதியில் நகர்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த கிராம வாழ்வு ஒரு புறம் வாழ்க்கைப் போராட்டங்களுக்கான கடின உழைப்பும் அந்த உழைப்பால் விளைந்த சலிப்பும் எரிச்சலும்  மறுபுறம்  என– ஊர்கிறது கதை.  எப்போதோ நிகழ்த்தப் படும் பாகவதக் கதையும் பக்கத்து ஊர்த் திருவிழாவும் தான் கேளிக்கைகள். கடலும் கதிரவனும் முகில்களும் மழையுமே பொழுதுபோக்குகள். மற்றபடி, வெயில் அடித்தால் வடகம், விறகு  காயவைப்பது மழை வந்தால் மாட்டை இழுத்துக் கட்டுவதும் உருளைக் கிழங்கு விதைப்பதும்  என்று உயிரை வாட்டும் அன்றாடத் தன்மையில் கதைமாந்தர்  இயங்குகிறார்கள்.

கதையின் பெண்கள் அனைவருமே பொறுமையும் சகிப்பும் கொண்டவர்கள். குழந்தையற்ற பார்வதி இரண்டாம் மனைவியான சத்தியபாமாவை அன்புடன் ஏற்றுக் கொள்கிறாள். அவளும் புரிதலுடன் வாழ்கிறாள். ஐதாளரின் தங்கை சரசுவதி இவர்களுக்கு நீங்காத துணையாக இருக்கிறாள். மகன் லச்சன் பெரியம்மாவிடம் ஒட்டிக் கொள்வதால் சற்று தாயின் பொறாமை தலை தூக்கிவிடுகிறது. அதனாலேயே தனது தந்தையின் ஊருக்கு படிக்க அனுப்புகிறாள். கட்டுப்பாடு மீறி கூடாநட்பில்  மகன் லச்சன்  வாழ்வைத் தொலைக்கிறான். பணப்பேய் பிடித்தாடும் தந்தையான ஐதாளரை முழுமனதாக வெறுக்கிறான். சிறிது சிறிதாக அவரது அனைத்துச் சொத்துகளையும் அழிக்கிறான், அவர் கனவையும் உயிரையும் கூட.

வீட்டுப் பெண்கள் கடினமாக உழைப்பவர்கள்; வேலையைத் தொடங்கி விட்டு பாதியில்  படுத்துக் குறட்டை விடும் ஐதாளரின் முன்கோபத்திற்கு இடங்கொடுத்து குடும்பவிளக்காய் இருப்பவர்கள்.  சீதையின் அச்சில் வார்க்கப் பட்டவர்கள்

ஐதாளர் கிராமத்தின் புரோகிதர். சோதிடமும் சில அஷ்டோத்தரங்களும் தெரிந்துகொண்டு தன் ஜீவனத்தை ஓட்டுபவர். பணத்தாசை உள்ளவர்.  வில்வக்காயை பொடிடப்பாவாக பயன்படுத்துபவர், முக்கியமான நேரங்களில் வெள்ளிப் பொடிடப்பாவை வெளியே  எடுப்பவர். வீட்டுப் பெண்களை மோசமாக நடத்துவதில்லை; ஆனால் ஒரு உயிருள்ள பிராணியாக மதிக்காதவர்.  ; பெரும் சிக்கனத்துடன் பணத்தை சேர்த்து யாருமறியாமல் சுவரில் உள்ள பொந்தில் போட்டுவைத்திருப்பவர். அந்த பணம் அவருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் கொடுக்கிறது.  

இங்கே சுவரிலுள்ள ஒரு பொந்து ஒரு குறிப்பாக அமைகிறது. மெய்யறிவு நாட்டமும் ஆன்மத் தேடலும்  மறைச்சொற்களின் உண்மைப்பொருளும் அறியாமல் கிளிப்பிள்ளைகள் போல சடங்குகள் செய்யும் புரோகிதத் தொழிலின் பிரதிநிதியாக நிற்கிறார் ஐதாளர். அவருக்கு செவிப்பரம்பரையாக வந்திருக்கக் கூடிய சில ஞானச் செல்வங்களையும் புரோகிதம் என்னும் பொந்தில் போட்டுவிட்டு அலைகிறார். பணம், புரோகித ஞானம் இரண்டுமே சுவரில் தேங்கி அவர் வாழ்வில் பயனற்றுப் போகின்றன. நெடுங்காலம் கழித்து வறுமையில் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்துவிட்ட ஐதாளரின் மருமகள் நாகவேணிக்கு ஐதாளர் ஒளித்து வைத்த ஒரு புதையல் பெட்டி கிடைக்கிறது. அங்கிருந்தே அவளுக்கும் மகன் ராமனுக்கும் மீட்பு துவங்குகிறது. தாத்தாவின் ஆசிகளும் மரபின் பிடிப்பும் பேரனுக்கு கிடைக்கிறது.

புரோகிதத்தொழில் சமூக முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பதை சுவாமி விவேகானந்தர் அளசிங்கருக்கு எழுதிய கடித்த்தில் குறிப்பிட்டுக் கடுமையாகச் சாடுகிறார். சமயத்தின் சாறுகள் இறக்கிய பின் தேங்கிய இறுகிய சடங்குகளைப் பிடித்துக் கொண்டிருப்பது இவர்களுக்குக் கடமையாகி விடுகிறது. இந்த  மரபில் பொருளும் அறியாது மெய்மையும் எட்டாது எலும்புக் கூடாகப் படிந்து விட்ட தொழிலின்  பிரதிநிதியாக இருப்பவர் மூத்த ஐதாளர்.

அவரது பேரன் வெளிக்காற்றையும் நவீனக் கல்வியையும் சுதந்திரவேட்கையையும் பெற்றபோதும் தனது மண்ணையே பெரிதாக நினைக்கிறான். தனது மாமனார் கனவுகளுடன் கட்டிய வீட்டை கணவன் அடகு வைத்த போதும் குத்தகைக்காரராக் அதே வீட்டில் வாழும் நாகவேணியின் அறம் சார் பிடிவாதமும் அதே  மண்ணில் விளைந்தவைதான். அவள் மகன் ராமன் சென்னை, மங்களூர், மும்பை எனப் பல கடல்களைப் பார்த்துவிட்டபோதும் அலைகொண்டு ஆர்ப்பரிக்கும் தனது கிராமக் கழிமுகக் கடலைப்போல அவனை ஆற்றுவது ஏதுமில்லை. அந்தக் கடல் பல நேரங்களில் மண்ணையோ மழையையோ பேய் போலப் பெய்து விடும் போதும்.

ஐதாளருக்கு பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த சீனப்பயரிடம் பகை வருகிறது, சீனன் ஓட்டு வீடும் வீட்டிற்கு கதவும் அமைத்துக் கொண்டு விட்டதால் இவருக்கு மனது பொறுக்கவில்லை. இருவருக்கும் நிலம் வாங்குவதில் (அபகரித்துக் கொள்வதில்) போட்டி. நகர நாகரிகமும் வாய்ப்புகளும் கிராமத்தினரை ஈர்க்கின்றன.  சீனனின்  எட்டு மகன்களில் ஒவ்வொருவராக பெங்களுர் சென்று  ஹோட்டல் தொழிலில் சம்பாதிக்கிறார்கள். எண்ணிக்கையில் அதிக உழைக்கும் நபர்கள் இருக்கும் குடும்பம் மேலே செல்கிறது. கி ராஜநாராயணன் காட்டும் “கோபல்ல கிராம மக்கள் “   சித்திரம் போல.   ( நிலம் நிறையக் கிடைக்கும் போது எந்தக் குடும்பத்தில் நிலத்தில் உழைக்கும் ஆட்கள் அதிகமோ அந்தக் குடும்பம் அதிக நிலத்தை எடுத்துக் கொண்டு அடுக்குகளில் மேலே செல்வது) 

ஒரே சாதிக்குள் உட்பிரிவுகள் , அவற்றுள் விலக்கங்கள் , உயர்வு தாழ்வு மனப்பான்மை என பல சமூகவியல் அடுக்குகள் சுட்டப் படுகின்றன. கோடா, சிவல்லி, கொங்கணி, கோடிஸ்வரா எனப் பல உட்பிரிவுகள் பிராமணர்களில்; அவர்களுக்குள் மண உறவு ஏளனமாகப் பார்க்கப் படுகிறது. உணவு கலத்தலும் பெரும்பாலும் இல்லை. 

 வேளாண் சமுகத்திற்கும் நவீன ஆங்கிலம் சார்ந்த  நகர வாழ்வுக்குமான தவிர்க்கமுடியாத முரண் மனிதர்களை ஆட்டி வைக்கிறது   . அலைபாயும் மனிதர்கள் மண்ணுக்கு மண் இடம் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.  கிராமத்தில்  மண் பலவழிகளில் நிலைமாறுகிறது. ஆறு சேர்க்கும் வண்டல் விரும்பிச் சுரண்டி வயலில் சேர்க்கப்படுகிறது. சில நேரங்களில் பக்கத்து வயலை ஒழித்துக் கட்டவும் தன் வயலில் மணல் மேடு உருவாக்கப் படுகிறது. மண் உரிமை கைமாறிக் கொண்டே இருக்கிறது. எளியவர்களின் பலவீனத்தை தொடர்ந்து வலியவர்கள் சுரண்டி வளைத்துப் போட்டுக் கொள்கிறார்கள். முக்கிய (எதிர்மறை) கதாபாத்திரமான லச்சனின் மனது மண்ணைப்போலவே ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு உறவுகளில், நட்புகளில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு நிறம் மாறிக்  கொண்டே இருக்கிறது    லச்சன் அனைவராலும் கையாளப்படுகிறான்,  ;   தந்தையிடம் கொள்ளும் மிகுவெறுப்பும் அவரது மரண காலத்திலும் கரையாத அவனது  மனதும் தனித்தன்மை கொண்டவை.  தீவிரவாதிகளின் வெறுப்பு உளவியல் கொண்டவன். 

நாகவேணி ராகவேந்திர ராவின் இசையைக்கேட்பதால் ஆர்வம் கொண்டு ஒரு முதிய குருவிடம் கற்றுக் கொண்டு இவர்கள் இருவரும் மெச்சும் அளவிற்கு பயிற்சியை அடைகிறாள். அவளால் குருவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அவரது கண்ணீர் குற்ற உணர்விலிருந்து வந்தது. அந்தக் குற்ற உணர்வு வயிற்றுப் பாட்டுக்கு கலையை விற்றவர் என்பதால் வந்த்து. இந்தக் கலை எழுச்சியின்  வடிவை காடு நாவலில் கம்ப ராமாயணத்தை திண்ணையில் அமர்ந்து படித்து தனக்குத் தானே பேசிக்கொண்டு இடைஇடையே மருமகளிடம் வசவு வாங்கும்  முதிய நாடாரில் காண்கிறோம். நவீன யுகத்தின் நீங்காத கரைகளில் ஒன்று கலைஉணர்ச்சியைத் தட்டையாக்கியது தான் போலும். 

தாயைப்போலவே ராமனும் கேள்வி ஞானத்திலேயே வாசித்து வயலினில் தன்னையும் பிறரையும் மயங்கச் செய்கிறான். மும்பையில் வேலை தேடி அலைந்து ஏமாறும் போதும் புதிய ஆர்வத்தைக் கண்டு கொள்கிறான். ஓவியம் கற்க விழைகிறான். ஓவியக்கலையைக் கற்றும் தரும்  யூதப் பெண்மணி நோவாவைத் தாயாக மதிக்கிறான். அவளுடன் தனது ஊர்க் கடல் பற்றிப் பேசுகிறான். யூதர்களின் துயரைப் புரிந்து கொள்கிறான். அவளுக்கு வயலின் வாசிக்காட்டுகிறான்.  மும்பையில் காணும் அரபிக்கடல் அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் கிராமத்திற்கு வந்து, ஆர்ப்பரிக்கும் கோடி கிராமக் கடல் காட்சியை  அவளுக்கு வரைந்து அனுப்புகிறான்.  இக்காலப் புதினங்களில் ஒரு லட்சியத்தன்மையும் சுதந்திர வேட்கையும் ஆன்மிகத் தளமும் தொடர்ந்து வந்துள்ளன. இந்தியாவின் புதிய எழுச்சியும் ராமகிருஷ்ணரின் மெய்த்தேடல் அருளுரைகளும்  கதையோட்டத்தில் தொட்டுச் செல்கின்றன.

 சூரன் நிலஉடைமைச் சமூகத்தின் அடித்தள மாந்தரின் தொடரும்  அறத்தையும் உழைப்பையும் பிரதிபலிப்பவன். குத்தகைக்காக உரிமையாளருக்குக் கொடுத்த்து  போக அவனுக்கு மிஞ்சுவது சொற்பமே. நில உடைமைக் குடும்பம் தாழ்வடையும்போது இலவச உழைப்பை நல்குகிறான். அவன் மண்போன்றவன். அகழ்வாரைத் தாங்குபவன். உழைத்தலைத் தவிர வேறு அறியாதவன். அவனால் ஏமாற்றவோ சுரண்டவோ முடியாது. ஏனென்றால் அவன் மண்ணோடு கலந்தவன். அவர்களின் மகன்களும் அதே உழைப்பை அளிக்கிறார்கள். தாங்கும் தட்டில் வாழ்பவர்கள் மெய்யாக ஏமாற்றத் தெரியாதவர்கள் அல்ல; ஏமாற்ற விரும்பாதவர்கள். 

கடல் அலை பாய்ந்து கொண்டே இருக்கும் ஓட்டத்தில், ராமன் தாய்க்குக் கிடைத்த தாத்தாவின் புதையலால் நிலத்தையும் வீட்டையும் மீட்டு, தனது 10 ரூபாய் ஊதியம் தரும் பள்ளிக் கூட ஆசிரியர் வேலையுடன் கடும் உழைப்புடன் விவசாயத்தில் இறங்கி விட்டான்.

தனது திருமணத்தை ஒரே நாளில் சிக்கனமாக வைத்துக் கொள்ளவும் அதற்காக அப்பளம் தயாரிக்கவும் சொல்லிவிட்டான்.

தாத்தா விரும்பியது போல (ஒரு வகையில்) ஆசிரியர் தொழில் அவனுக்கு நிலைத்துவிட்டது. அவன் அன்னை கனவு கண்டது போல வீடும் நிலமும் நிலைத்து விட்டன. ராமனின் கடல் அவனை விட்டுப் போகவில்லை. போகவும் இயலாது, இந்தியப் பெண்களின் கண்ணீர் உப்பாக வற்றி இந்த மண்ணில் உரமாக ஊறி இருக்கும்வரை.

குறிப்புப் பொருட்கள்

ஐதாளர் திருமணத்தின் போது ஓயாமல் காற்று வீசி பனையோலை ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. ஐதாளரின் வாழ்வின் / கனவுகளின்/ வெற்று அகந்தையின்  வறட்டுத்தன்மையைக் குறிப்பது போல ;   வற்றிய ஓலை சலசலக்கும்  (நாலடியார்). அவர் பார்க்காமலே இறந்து விட்ட  பேரன் ராமன் பின்னர் இதே ஓலைக்கீற்றுகளின் ஒலியிலும் காயும் நிலவிலும் அலைகடலிலும் லயித்துப் போகிறான். ஐதாளர் வாழமுடியாத , அவர் தேடலில் ஒளிந்து கொண்ட அவரது நேர்மறைக் கனவுகளை வாழ்கிறான் தலைமுறைகளாகத் தந்து கொண்டே இருக்கும் மண்ணைப் போலவே சொல்லாத விருப்பங்கள் பெயரன்களுக்குக் கடத்தப் படுகின்றன போலும். அவரது மனப்பொந்தில் சேர்த்து வைத்த செல்வமே ராமன்.

 மகன் வக்கீல் அல்லது தாசில்தார் ஆவதாக ஐதாளர் ஆசைப்படும் இடத்தில் வண்ணத்துடன் வெடிக்கும் நீர்க்குமிழிகளும் அலைகளும் விவரிக்கப் படுகின்றன.  லச்சன் நீர்க்குமிழி வானவில்லில் இருந்து வெளிவரவே இல்லை.

பரண் மேல் வைத்து விட்ட பழைய இசைக்கருவியைப் போல தான் எப்போதோ மறந்து விட்ட இசைப் பயிற்சியை ஐதாளரின் மருமகள் – லச்சனின் புறக்கணிக்கப்பட்ட மனைவி- ராமனின் தாய் நாகவேணி கண்டுகொள்ளும் இடம் படைப்பைக் காவியமாக்குகிறது.   துயரும் வாழ்வின் அனுபவமும் இணைவதால் அவளது மனது இசைக்கருவி மூலம் பேச முடிகிறது. ஒரு விதத்தில் வயலின் அவளது சக்தியின் புற அடையாளம்.  எப்போதெல்லாம் வயலினை எடுக்கிறாளோ அப்போது ஆற்றலைப் பெருக்கிக் கொள்கிறாள்

  . சுதந்திர வரலாற்று நோக்கில், சொந்த வீட்டில் கொள்ளை அடிக்கும் லச்சனை  நடிப்பு சுதேசிகளுக்கும் உழைப்புச் சுரண்டல் காரர்களுக்கும் ஒப்பிடலாம். வீட்டுடன் பிரிக்க முடியாத வாழ்வுடைய  நாகவேணி போன்றோர்  சொந்த வீட்டில் குத்தகைக்கார்ர்களாக ஆவது நாடு அடிமைப்பட்டதற்கு நேர்.

*****

பழக்கங்கள். சடங்குகள், நம்பிக்கைகள்

  • மரண காலத்தில் நெருங்கிய உறவினரின் மடியில் தலைவைத்துக் கொண்டு இறப்பது ( இதன் சமூக உளவியல் சமய பின்புலம் ஆராயத்தக்கது)
  • விருந்தாளிகளுக்கு வெல்லம், தண்ணீர், பானகம், பயத்தங்கஞ்சி வழங்குவது
  • வெள்ளரிக்காயை புரோகித தட்சிணையாக வழங்குவது
  • அப்பளம், வடகம் தான்  முக்கிய நொறுக்குத்தீனி
  • பல்தேய்க்க பதினாறு மாவிலைகள் வேண்டும்
  • இரவில் உணவு தவிர்க்கும் கைம்பெண்கள் (சரசுவதி)
  • வெள்ளரி, பூசணி, வள்ளிக்கிழங்கு, சுக்கி , அவடை , மாங்காய், பலாக்கொட்டை, உளுந்து , அவல் உணவுப்பொருட்கள்; இவற்றில் பல பஞ்ச கால, வெள்ள கால  கையிருப்புகள்
  • கதா காலட்சேபத்தில் மீனாட்சி கல்யாணம் கர்ணார்ஜுன வாதம், இந்திரவிஜயம் முதலியன் இடம் பெற்றன
  • அடிக்கடி ஆனைமலை (ஆனேகுட்டே ) வினாயகரை வேண்டிக்கொள்கிறார்கள். கணேசரின் கடற்கரை என்ற பெயர்பெற்ற துளுநாட்டில் ஏழு முக்கிய கணபதித்தலங்கள் இன்றும் உள்ளன
  • தாழம்பூவில் இருக்கும் சாரைப்பாம்பு அப்பள மணம் வீசுகிறது
  • ,மும்பை சென்று விட்டால் book keeping படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது உறுதி
  • தற்கால வழக்கில் கீழ்ப்பாக்கம் என்றால் மனநல மருத்துவமனையை உணர்த்துவது போல கண்ணனூர் சிறைச்சாலையைக் குறித்திருக்கிறது. 

சு(ட்)டும் உண்மைகள்

  • குத்தகை கொடுத்தபின் ஏழைக்கு மிஞ்சுவது வைக்கோல்
  • வீட்டில் உள்ள பெண்களிடம் எந்த முக்கியச் செய்தியும் பகிரப்படுவதில்லை. அவர்கள் குப்பைத்தொட்டிக்குச் சமம்
  • பெரும் துயரில் மட்டுமே தெய்வீகமான கலை வெளிப்பட வாய்ப்புள்ளது

ஆர் ராகவேந்திரன்

ஓநாய் குலச்சின்னம் – வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

சொல்முகம் – ஆகஸ்டு மாத கூடுகை – ஓநாய் குலச்சின்னம் நாவல் குறித்து – வலமிருந்து மூன்றாவதாக நிற்பவர் காளீஸ்வரன்

மனிதர்களின் தேவையை செயற்கையாக வளர்த்து, அதை மையப்படுத்தப்பட்ட பெரிய உற்பத்தி முறைகளால் ஈடு செய்யப் பார்க்கிறோம். இதனால் பேராசையும், பொறாமையும் பகையும் தான் வளர்கின்றன. இதுவே தேசங்கள் இடையேயான பகையாக, போராக வளர்கிறது. நிலையான சமாதானமே காந்திய முயற்சி. இது நமது பொருளாதார சிந்தனையில் மாற்றத்தை வலியுறுத்துகிறது

-ஜே.சி.குமரப்பா (’சீனாவில் ஜே.சி.குமரப்பா’ நூலிலிருந்து)

**

சில வருடங்களுக்கு முன்பாக, ஈமு கோழி வளர்ப்பில் பணத்தை முதலீடு செய்து “சிரிக்கும்” அளவுக்கு மட்டுமே நட்டத்தை சந்தித்திருந்த நண்பன் சொன்னான் “அது மாப்ள, நம்மாளுகளுக்கு இந்த ஈமூ கறி ருசி புடிபடல. அப்புடி மட்டும் கறி ருசி புடுச்சிருந்தா அம்புட்டையும் தின்னே தீத்திருப்பாங்க” அப்போது அனைவரும் வெடித்துச்சிரித்தோம். பின்னர் யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். நம்முடைய நுகர்வு வெறியின் எல்லை கற்பனைக்கு அப்பாற்பட்டது.

.   

மனிதனின் நுகர்வு, எல்லை தாண்டும்போது நேரக்கூடிய தீங்கை, அது ஏற்படுத்தக்கூடிய சமநிலைக் குலைவை நாவல் முழுவதும் சொல்லிக்கொண்டே வருகிறது பில்ஜியின் குரல். குறிப்பாக, மேய்ச்சல் நிலத்தில் வேளாண்மையை அறிமுகப்படுத்த எண்ணும் பாவோ, அதற்குக் காரணமாக தன் சொந்த ஊர் மக்களின் தானிய பற்றாக்குறையைக் கூறுகிறார். கூடவே, சின்ன இடத்தில் மட்டுமே கட்டுப்பாடாய் வேளாண்மை செய்யப்போவதாய் சமாதானப்படுத்துகிறார். அதற்கு பதில் சொல்லும் வகையில், ”பின்னால் வரும் தலைமுறைகளிடம் இந்தக்கட்டுப்பாடு இருக்காது” எனக் கவலை கொள்ளும் பில்ஜியின் குரலுக்கு நம் சமகாலமே சாட்சி. ஓநாய்களால் கொல்லப்பட்ட மான்களை சேகரிக்கும் போது, ஆடு மேய்ப்பவனான சஞ்சாய், இன்னும் நிறைய மான்கள் கொல்லப்பட்டிருந்தால் தன்னுடைய திருமணத்துக்கு அது மிகவும் உதவிகரமானதாக இருந்திருக்கும் என சொல்கிறான். இந்தப் பேராசை, அவனுடைய மகன்கள், பேரன்களின் திருமணத்தின் போது மான்கள் இருப்பை ஒளித்துவிடும் எனக் கண்டிக்கிறார் பில்ஜி. இப்படியாக, நாவல் முழுவதிலும் இயற்கையின் சமநிலையைப் பேண வேண்டிய அவசியத்தை பில்ஜி நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

*

மங்கோலியர்களைப் பொறுத்தவரை ஓநாய்தான் அவர்களுக்கு குலச்சின்னம் போன்றது. அதனிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நற்பண்புகள் இருக்கின்றன. அவர்களது பெருமையின் அடையாளமாக நாவலில் சுட்டிக்காட்டப்படும் “செங்கிஸ்கான்” கூட ஓநாயின் தந்திரங்களை பயன்படுத்தியவர்தான். இவற்றையெல்லாம் விட, மரித்துப்போன மங்கோலியனின் ஆன்மாவை டெஞ்ஞருக்கு (சொர்க்கத்துக்கு / கடவுளுக்கு) அனுப்பும் தூதுவனும் ஓநாய்தான். ஆனால், ஒரு நவீன சீனனுக்கோ ஓநாய்கள் மேய்ச்சல் நிலத்தின் உற்பத்தித்திறனுக்கு, அங்கு வளரும் அற்புதமான குதிரைகளுக்கு எதிரானவை. அவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியவை. மங்கோலியனாக இருந்தபோதும், ஒட்டுமொத்த ஓநாய்களையும் கொன்றொழிக்கும் வெறியுடன் இருக்கும் பாவோ, ஒரு ராணுவப் பிரதிநிதியின் பணியை செவ்வனே முழுமனதுடன் நிறைவேற்ற முடிகிறது. மங்கோலியர்களின் அறியாமையைப் போக்க வரும் ஹேன் சீனனான “ஜென் சென்”, அலைக்கழிப்புகளுடன் படிப்படியாக பாதி மங்கோலியனாகிறான். இந்த ஒப்புமையை ஓநாயிலிருந்து நாய் எனப் பரிணாம வளர்ச்சி பெற்ற பாவோ எனவும், நாய்க்குள் (பல போதாமைகளுடன்) இருக்கும் ஓநாய் எச்சங்கள் ஜென் எனவும் சொல்லமுடியும்.

*

தாங்கள் இருக்கும் இடத்தை தங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் வேளாண் மக்கள், நிலப்பரப்புக்கு கூடுமானவரை எந்தச் சேதமும் எழாமல், தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் மேய்ச்சல் நிலமக்கள் என இருவரின் பார்வைகளும் எதிரெதிர் முனைகள். மனித நலன் மட்டுமே பிரதானம் என எண்ணும் நவீன மனம். மனிதனும் இயற்கையின் ஒரு எளிய அங்கமே எனக்கருதும் பழங்குடி மனம். அந்த மனதால் மட்டுமே இயற்கையின் ஆகப்பெரிய உயிர் மனிதனல்ல, பெரும் விலங்குகள் அல்ல, ஒரு புல்தான் என எண்ணமுடியும்.

*

நாவலின் மிக முக்கியமான அம்சம், ஒரு ஓநாய்க்குட்டியை கைப்பற்றி வந்து ஜென் வளர்ப்பது. நாய்களுடன் வளர்க்கப்படும் ஓநாய், அன்னை நாயிடம் பாலருந்தும் தருணங்களிலும், பிற நாய்களுடன் இணைந்து விளையாடும் தருணங்களிலும் ”சமத்தாக” இருந்தபோதும், தான் ஒரு ஓநாய் என்பதை ஒருபோதும் கைவிடவில்லை. உதாரணமாக, தன் குழிக்குள் வைக்கப்பட்ட இறைச்சித் துண்டங்களை “வேட்டையாடும்” தருணம், படிப்படியாக ஒரு ஓநாயைப் போல ஊளையிடும் தருணம் இவற்றைச் சொல்லலாம்.

அடிபட்ட தன் ஒரு காலை துண்டாக்கிவிட்டு தப்பித்து ஓடும் ஓநாயின் செய்கை, அடிமைத்தனம் அல்லது மரணம் என்றால் ஒரு ஓநாய் இரண்டாவதையே தேர்வு செய்யும் ஆன்ம பலம் இவற்றை ஒரே நேர்கோட்டில் வைத்து புரிந்துகொள்ளலாம். அடிமைத்தனத்துக்கு பதிலாக மரணத்தை தேர்வு செய்யும்போது அந்த ஓநாய் மட்டுமே மடிகிறது. அதன்மூலம், அது அடிமைத்தனத்தை தன் சந்ததிகளுக்குக் கடத்தும் பேராபத்தில் இருந்து தன் குலத்தைக் காக்கிறது.

நுகர்வுக்கு ஏற்ப வேட்டை, வயதான / நோய்வாய்ப்பட்ட ஓநாய்களுக்கு என மாமிசங்களை விட்டுப்போதல், முதல் வேட்டையை வயதான ஓநாய்க்குத் தருதல், வேட்டைத் தந்திரங்கள் என பல குணாதிசயங்களை ஓநாய்களின் செய்கைகள் கற்றுத்தருகின்றன.

இயற்கையின் ஆகப்பெரிய உயிர் மனிதன் எனக் கருதும் நவீன வேளாண் மனது, உலகின் மிகப்பெரிய உயிர் புல்தான் என எண்ணும் மேய்ச்சல் மனதை பக்குவப்படுத்துவதில் வெற்றியை அடைகிறது. எல்லா ஓநாய்க்குட்டிகளுக்கும் ஓநாயாகவே மரணிக்கும் வாழ்வு வாய்ப்பதில்லை.

– காளீஸ்வரன், கோவை

அக்னி நதி- வாசிப்பனுபவம் – விக்ரம்

இடமிருந்து இரண்டாவதாக விக்ரம்

சரயு நதிக்கரையின் சண்டிதேவியின் கோவிலில் கௌதம நீலாம்பரன் எனும் வைதிக மாணவ இளைஞன் ஹரிசங்கர் எனும் சாக்கிய முனியின் பௌத்தத்தில் ஈடுபாடு கொண்ட மற்றொரு இளைஞனை சந்திக்கிறான்.  இறுதி அத்தியாயத்தில் அதே சண்டிதேவியின் ஆலயத்தில் கிழவர்களாக அருகமைந்து அளவளாவுகிறார்கள். கலைதிறனும் நுண்ணுணர்வும் சித்தாத்தங்களும் கொண்ட, தேசிய இயக்கத்தின் பெருக்கில் பயணித்தும் தனிமனித அளவில் வாழ்வு தரும் அனுபவங்கள் பலவற்றை கடந்து பயணித்துவிட்டவர்களாக.

பல நூற்றாண்டுகள் கடந்து தர்ம சக்கரம் தன் ஒரு சுழற்சியை முடித்து விட்டது. இந்து இஸ்லாமிய பண்பாடுகளின் மீது ஒரேவிதமாக அன்பை வெளிப்படுத்தும் சமநிலை கொண்ட இந்த படைப்பு தராசின் இரு தட்டுகளையும் நடுநின்று தாங்கும் மையமாக புத்தரை எடுத்துக் கொண்டதோ என்று தோன்றியது.  இரு வேறு பண்பாடுகளின் விமரிசகனாக அல்ல.  ஒரு பேரிருப்பாக மௌன சாட்சியாக அப்பால் நின்று நோக்குபவராக அவர் இருக்கிறார்.

பாருங்களேன் இச்சக்கரத்தின் சுழற்சியை.  கௌதமனும் ஹரிசங்கரும் அங்கேயே இருக்கிறார்கள்.  பாக்தாதின் கமாலுதீன் பாகிஸ்தான் போய்விடுகிறான்.  முதலில் இம்மண்ணை அந்நியனாக நின்று நோக்கிய கண்களுடன் பின்னர் இம்மண் மீது நேசம் கொண்டு தவிக்கும் கண்களுடன்.  ஆனால் சுவாரஸ்யமான சம்பா, அவள் ராஜகுருவின் மகளாக, சிவபுரியின் புதல்வி சம்பா அஹ்மத்தாக எவ்வாறெனினும் எச்சூழலிலும் அவள் இங்குதான் இருப்பாள்.  நிர்மலாவும். 

சிரில் ? இந்தியாவில் பெரும் பொருள் கொண்டவன் பாகிஸ்தானில் அதையே தொடர்கிறான்.  இந்த பைத்தியக்கார உபகண்டம் உச்சபட்சமாக எதைத்தரவல்லதோ அதை மிகக்குறைவாகவே பெற்றுக்கொண்டவன் அவன் என்று எண்ணுகிறேன். ஒப்புநோக்க உண்மையில் கமால் பெற்றுக்கொண்டவை அதிகம்.

நன்கு சமைக்கப்பட்டு பக்குவமடைந்து பரம்பொருளால் உண்ணப்பட்டுவிட்ட சூபிகள், ஞானிகள், யோகிகள் இக்கதையில் வணக்கத்துடன் கடக்கப்படுகிறார்கள்.  மரம்-செடி கொடிகளிலிருந்து பறிக்கப்படாமல் அவற்றிலேயே பூத்து காய்த்து கனித்து உதிர்ந்துவிடும் விளிம்பு நிலை மனிதர்களும் எளிய மக்களும் அவ்வாறே வணக்கத்துடன் கடந்து செல்லப்படுகிறார்கள்.  இன்டலெக்சுவல் என்று விளிக்கப்படும் அரைவேக்காடுகள் மட்டுமே இங்கு முதன்மை பாத்திரங்களாக கைக்கொள்ளப்படுகிறார்கள்.  இங்குமல்லாமல் அங்குமல்லாமல் தத்தளிக்க அவர்களுக்குத்தானே விதிக்கப்பட்டிருக்கிறது.  சிந்தாந்தஞ் செய்யவும் கலைகள் வளர்க்கவும் வேதாந்தம் விரித்துப் பேசவும் என்றெல்லாம்.

சூன்யம் வெறுமை என்று பொருள் கொள்ள மனம் ஒப்பவில்லை.  அதேதான் ஆனால் வார்தையை மாற்றிக்கொள்கிறேன் – கமால் அதாவது நிறைவு அதாவது பூர்ணம்.

ஜலால், ஜமால், கமால் என்பதிலிருந்து ஒரு இலக்கிய அளவுகோல் ஒற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.  சத்தியம், சிவம், சுந்தரம் என்பது அது.

எந்த ஒரு நல்ல இலக்கியப் படைப்பும் சத்தியம் கொண்டதாக இருக்க வேண்டும். நிகழ்வுகள் பாத்திரங்கள் அல்ல.  படைப்பாளி படைப்புடன் உளப்பூர்வமாக ஒன்றியதன் சத்தியம் அதில் இருக்க வேண்டும்.  சுந்தரமாவது அதன் அழகியல்.  இவ்விரண்டும் வாய்க்கப்பெற்றால் அருவமென எழுவது சிவம் அதன் தரிசனம்.

சதத் ஹஸன் மண்டோவின் எழுத்துக்களுடன் ஒப்ப இது மிக உயரத்தில் இருக்கிறது.

ஒரு ஆசிரியருடன் ஒன்றுவது பல ஆசிரியர்களுடன் ஒன்றுவதாகிறது.  ஒரு படைப்புடன் ஒன்றுவது காலத்துக்கு அப்பால் தொலைவுகளுக்கு அப்பால் பல உறவுகளைத் தந்துவிடுகிறது.

– விக்ரம், கோவை

ப.சிங்காரத்தின் படைப்புலகம் – சபரிராஜ்

‘தமிழ் வளராததற்கு சீரழிந்ததற்குக் காரணம், பண்டைச் சான்றோரும் மானிடரே என்பதை நாம் மறந்ததுதான்’

பழம் பெருமை பேசித்திரிந்த தமிழ்  வாழ்க்கையின் மீது கல்லை வீசி எறிந்து பகடி  செய்த வரிகள் ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ ‘கடலுக்கு அப்பால் ‘ நாவல்களிலிருக்கிறது,

இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, அமெரிக்க நாடுகள் நேச அணி நாடுகளாகவும்; ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் அச்சு அணி நாடுகளாகவும் போரிட்டனர். அந்தப் போரில் இரண்டு பக்கமும் நின்று சண்டை போட்டவர்கள் இந்தியர்கள். இந்த மாபெரும் வரலாற்று அபத்தத்தின் நடுவே மனித வாழ்வின் அபத்தங்களை பேசிய நாவல்கள் தான், ‘கடலுக்கு அப்பால்’ மற்றும் ‘புயலிலே ஒரு தோணி’

தன்னுடைய 18 வயதில் பினாங்கிற்கு (Penang) வட்டிக்கடையில் வேலைக்கு செல்கிறார் ப.சிங்காரம். அப்போது அங்கிருந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையையும் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளையும் மிக அருகில் இருந்து பார்க்கிறார். பின்னர் இந்தியா வந்த பிறகு 1950ல் ‘கடலுக்கு அப்பால்’ நாவலையும் 1962ல் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலையும் எழுதுகிறார்.

சபரிராஜ் பேச்சிமுத்து

அந்த இரண்டு நாவல்களும் ஒரு பிரச்சினையின் இரண்டு முகங்களை பேசுகிறது. ஒன்றின் கேள்விக்கு இன்னொன்று பதில் சொல்வது போல அமைந்துள்ளது.

‘புயலிலே ஒரு தோணி’கதையின் நாயகன் பாண்டியன். ஜப்பானியர்கள் இந்தோனிஷியாவை கைப்பற்றிய பின்னர் அங்குள்ள டச்சுக்காரர்களை அடிமையாக நடத்தும் போது அதில் அடிமையாக மாட்டிக்கொண்ட ஒரு டச்சு வழக்கறிஞருக்கு உதவி செய்கிறான். நேதாஜியின் கட்டளையை ஏற்று ஒரு ஜப்பானிய தளபதியை கொலை செய்கிறான். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் டில்டன் என்பவன் நன்றிக்கடன் பட்டு பாண்டியனுக்கு தன்னால் ஆனதை கண்டிப்பாக செய்கிறேன் என்கிறான். ஆனால், இறுதியில் அவன் தான் பாண்டியனைக் கொலை செய்கிறான்.

‘கடலுக்கு அப்பால்’ நாவலின் நாயகன் செல்லையா அறிமுகக் காட்சியில், மரகதம் என்ற பெண்ணை மணக்கப் போகிறவன் என்ற அடையாளத்துடன் தான் தோன்றுகிறான். ஆனால் இறுதியில் அந்தக் காதல் நிறைவேறவில்லை. இப்படி வாழ்வின் பல அபத்தங்களை பேசுகிறது. ஏன் வாழ்க்கை இப்படி இருக்கிறது? போன்ற கேள்விகளை எழுப்பி செல்கிறது இந்த நாவல்கள்.

வடிவ அமைப்பில் ‘புயலிலே ஒரு தோணி’ இன்னும் கவனம் ஈர்க்கிறது. ஒரு காம்ப்பஸ் கொண்டு வரையப்படும் வட்டம் போல, ‘க்ரேக் ஸ்ட்ரீட்’ என்ற புள்ளியில் ஆரம்பித்து பல உச்சங்களை தொட்டு, பின் மீண்டும் ‘க்ரேக் ஸ்ட்ரீட்’ என்ற புள்ளியிலேயே முடிகிறது.

இந்த இரண்டு நாவல்களிலும் பிரதானக் கதாப்பாத்திரம் போர். போர் மனிதர்களைக் கொல்வதற்கு முன் மனிதாபிமானத்தைக் கொன்று விடுகிறது. உதாரணமாக ஒரு காட்சியில், ஒரு மேசையில் ஐந்து  தலைகள் வெட்டி வைக்கப்படுகின்றன. அப்போது சுற்றி இருக்கக்கூடிய ஜப்பான் வீரன் ஒருவன் ஒரு சீப்பை வைத்து வெட்டப்பட்ட தலைகளுக்கு முடியை சீவி விட்டு சிரித்துக் கொண்டிருக்கிறான்.

இங்கே கொடூரம் என்பது, தலைகளை வெட்டுவது அல்ல. வெட்டிய தலைகளை வைத்து விளையாடுவது. இந்தக் காட்சி வாசிக்கும் அனைவரையும் ஒரு கேள்வி கேட்கும்.

‘நீ இந்தக் கொடூரத்தை ரசிக்கிறாயா? உண்மையை சொல் உனக்கு இது பிடித்திருக்கிறது தானே?’ என்று கேட்கும் போது நமக்குள் இருக்கும் சாத்தானை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதைத்தான் இலக்கியம் செய்ய வேண்டும். அதனை இந்த நாவல் செய்கிறது.

யதார்த்த வாழ்க்கையில் இவன் முழு நல்லவன் நாயகன் என்றோ இவன் முழுக்க கெட்டவன் வில்லன் என்றோ யாரும் இல்லை. அப்போதைக்கு அவரவர்க்கு எது நியாயமோ அதுவே தர்மமாகிறது.

‘கடலுக்கு அப்பால்’ நாவலில் வயிரமுத்துப் பிள்ளை என்ற பாத்திரம் வருகிறது. வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட்டு எழுப்பிய ஒரு தொழிலை தன் மகளுக்கு இணையாக ஒரு தட்டில் வைத்து, அவளுக்கு பிடித்த செல்லையாவை மணமுடித்து தரமாட்டேன் என்கிறார்.

அதே இன்னொரு அத்தியாயத்தில் செல்லையாவிற்கு வேறொரு தொழிலையும், வேறொரு வாழ்க்கையையும் ஏற்பாடு செய்கிறார். அதில் தெரிகிறது அந்த வயிரமுத்துப் பிள்ளைக்கு உண்மையிலேயே செல்லையா மீது அக்கறை இருக்கிறது. ஆனால், அவருடைய தொழிலை எடுத்து நடத்த செல்லையாவால் முடியாது. அதனால் அவனுக்கு அது மறுக்கப்படுகிறது.

அந்தக் கதையில் ஒரு பகுதியை மட்டும் மாற்றி யோசித்துப் பார்த்தால், ஒருவேளை அவரது மகன் போரில் இறக்காமல் போயிருந்தால், கண்டிப்பாக தன் பெண்ணை அதே செல்லையாவிற்கு கொடுப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. என்று தோன்றுகிறது.

இந்த நாவலில் ஜப்பான் வீரர்கள் தான் அவர்  மகனைக்  கொன்றிருப்பார்கள். ஆனால், ஜப்பானியர்களைக் கொன்ற செல்லையாவை வயிரமுத்துப் பிள்ளை வெறுப்பார். அது ஏன் என்று இந்த நாவல் முழுக்க விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.

மரணத்தை மதிக்காத போர் வீரனை கொலை செய்வதென்பது இன்னொரு வீரனுக்கு மிகப் பெரிய சாகசம் அது போன்ற சாகசங்கள் பல  பக்கங்களில் வருகிறது.

ஒரு வரலாற்றுப் புனைவு என்பது வெறும் வரலாற்று சம்பவங்களை வருடங்களை வைத்து அடுக்கி சொல்வதல்ல, அந்த வரலாற்று நிகழ்வு ஒரு மனிதனின் மனதில் வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குவது.

அவ்வகையில், புலம் பெயர் தமிழர்களின் வாழ்வியலை நூறுவருடங்களுக்கு முன்னர் இருந்த தமிழகத்தைப் பேசியதில். மிக முக்கியமான படைப்புகளாக இந்த இரு நாவல்கள் இருக்கிறது.  

– சபரிராஜ் பேச்சிமுத்து

அக்னி நதி – குறித்து சபரிராஜ்

குவிஸ் செந்தில், விக்ரம், டேவிட்,நவீன்,சபரிராஜ்,ஸ்வேதா,நிகிதா,பாலாஜி ப்ரித்விராஜ்,நரேன், பூபதி மற்றும் புகைப்படக் கலைஞராக ராகவேந்திரன்.

‘சண்டைகள் இரு வேறுபட்ட மதங்களுக்கிடையே நடைபெறுவதில்லை. அரசியல் சக்திகளுக்குள் தான் நிகழ்கின்றன’

‘குர் அதுல் ஐன் ஹைதர்’ எழுதிய ‘அக்னி நதி’ நாவலிலிருந்து தமிழில் ‘சௌரி’.

ஒரு ஆற்றில் இரண்டு புறக் கரைகளிலும் இரண்டு படித்துறைகள் உள்ளன. அதன் நடுவே காலம் என்கிற ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு படித்துறை யதார்த்த வாழ்க்கை அதன் மறுகரை லட்சிய வாழ்க்கை. யதார்த்த வாழ்க்கையிலிருந்து லட்சிய வாழ்வை நோக்கிப் போகும் மனிதர்களின் கதை.

இதில் காலம் எவ்வாறு அந்த மனிதர்களைஅலைக்கழிக்கிறது, எவ்வாறு தன் போக்கில் இழுத்துச் செல்கிறது, எவ்வாறு அதில் அவர்கள் மூழ்கிப் போகிறார்கள் என்பதனைப் பற்றி பேசும் நாவல்.

நன்றி,

சபரிராஜ் பேச்சிமுத்து

அக்னி நதி – வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்

சொல்முகம் கூடுகை 3 – கோவை புத்தகத் திருவிழா அரங்கில் – வலமிருந்து இரண்டாவதாக ராகவேந்திரன்

ஒரு தனிமனித வாழ்வை நதிநீரோட்டமாக உருவகித்தால், அந்த தனி வாழ்வு ஒட்டு மொத்த கால ஓட்டம் என்ற பெருநதிக்குள்ளே ஓடிக்கொண்டிருப்பதை பல முறை நாம் பார்ப்பதில்லை. தனது ஆழத்தாலும் அமைதியாலும் வேகமாக ஓடுவதே தெரியாத பல நதிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் உண்டு. எல்லாமே மாறிக்கொண்டிருப்பவை என்ற புத்தரின் கூற்றுக்கு ஒப்புமையும் நதியே. நீர்த்துளி இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறது. நீரோட்டம் ஒரு மாயை.  எனினும் அன்றாடச் சொல்லாடலில்  நதியென்பது ஒரு உண்மையான பொருண்மையே.

குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னி நதி உருது நாவல் (தமிழில் சௌரி –நேஷனல் புக் டிரஸ்ட்)  வாசித்து  முடிக்கும்போது காலமென்ற நதியின் வெப்பம் நம்மீதும் படர்கிறது. உண்மையில் நதி பெரும்பாலும் அமைதியாகத் தான் ஓடுகிறது. அதனடியிலிருந்து கொப்பளிக்கும் கந்தகவெடிப்புகள் இடைவெளி விட்டே வருகின்றன. ஆனால் தொடக்கம்- முடிவு இல்லாத காலநதியின் சுமார் 2400 ஆண்டு கால நீளத்தை 400 பக்கங்களுக்குள் சொல்வது அதை அக்னிநதியாகக் காட்டுகிறது.

கி மு நான்காம் நூற்றாண்டில் கோசல நாட்டின் தலைநகரான சிராவஸ்தி (இப்போதும் இவ்வூரின் பெயர் இதுதான்)  நகரத்தில் சிற்ப- ஓவிய – இலக்கிய மயக்கத்துடன் அலைந்து கொண்டிருக்கும்  கௌதம நீலாம்பரன் அப்போதைய காலத்தில் பரபரப்பாகிக் கொண்டிருந்த புத்தரின் கொள்கைகளையும் பிரச்சார இயக்கங்களையும் கேள்விப்படுகிறான்.

சிராவஸ்தி நகரை மகதத்தின் சந்திரகுப்தர் தாக்கும்போது காரணம் அறியாமலேயே நகரைக் காக்க வாளெடுத்துப் போரிட்டு,  விரல்களை இழக்கிறான். அவன் நண்பன் ஹரிசங்கர் புத்தமதத்தில் ஈடுபடுபவனாக  இருக்கிறான்.  கௌதமன் அரச குடும்பத்தைச் சேர்ந்த நிர்மலாவையும் சம்பகாவையும் காண்கிறான்.  ஹரிசங்கரை   நண்பனாக்கிக் கொள்கிறான். சம்பகாவிற்கு தனது ஓவியத்தைக் காட்டுகிறான். அவளுடன் மேடையில் சிவதாண்டவம் செய்கிறான். கௌதமன் தத்துவத்தை விட்டு கலையில் கவனம் செலுத்துகிறான். அழகிய யக்ஷிணி சிலையை உருவாக்கி படிமக்கலையில் ஒரு புது மரபைத் துவக்கி வைக்கிறான் . அதில் யதார்த்தம் பொலிகிறது.

கௌதமன் கோசல அரச குடும்பத்தைச் சேர்ந்த  நிர்மலாவிற்கு ஒரு அந்தண அறிஞனாக ஆசி அளிக்கிறான்.  நிர்மலாவிற்கு கயாவில் சித்தார்த்தர் சொன்ன உபதேசம் நினைவிற்கு வருகிறது “ எல்லாப் பொருட்களையும் தீப் பற்றிக் கொண்டது. கண்களில் தீ கனல்கிறது. சகலமும் இந்தத் தீயில் வெந்து போகின்றன. “இந்தத் தீ தான் அக்னி நதியில் கொதித்துக் கொண்டிருக்கிறது.

பெரும் சிற்பியான கௌதமன் மகதர்களின் படையெடுப்பில் விரல்களை இழந்து, நதியில் பல்வேறு ஊர்களுக்கு பயணித்து காசிக்கு வருகிறான். அரசர் குடும்பம் தப்பித்து ஓடுகிறது.  கௌதமன் ஒரு நடனக்குழுவில் நடிகனாகிறான். ஒரு மேடையில் நடிக்கும்போது , கையில் குழந்தையுடன் பார்வையாளராக இருக்கும் சம்பகாவைப் பார்க்கிறான். அவள் இப்போது பாடலிபுத்திரத்தில் சாணக்கியரின் உதவியாளரான அறுபது வயது அந்தணரின் மனைவி. தத்துவம் – தரிசனம்  சாஸ்திரம் பேசிக்கொண்டிருந்த சம்பகா தற்போது பிற பெண்களிடம் ஊர்க்கதைகள் பேசுபவளாக மாறிவிட்டாள். ஹரி சங்கர் அவளால் துறவியாகி விட்டான் என்ற தகவல் இப்போது சொல்லப் படுகிறது. மிகப் பூடகமாக நாவல் முக்கியத் தகவல்களை சாதாரண தகவல்களிடையே சொல்லிச் செல்கிறது, அரவமில்லாமல் துறைப் படிகளில் ஏறிவிடும் நதியைப்போல. 

தன்னைச் சந்திக்க விரும்பும் சம்பகாவிற்கு  கௌதமன்  மறை மொழியில் ஒரு உண்மையை சேடி மூலம் கொடுத்து விட்டுக் கிளம்பி விடுகிறான்.  (எப்போதும் விழித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கச் சொல். நான் இப்போது விழித்துக் கொண்டிருக்கிறேன்.  என்வழியில் எதுவும் குறுக்கிடமுடியாது. )  தான் பிறந்த இடமான அயோத்திக்கு மீள்கிறான். சரயூ நதியில் மூழ்கி மறுகரையில் இருக்கும் பௌத்தர் குழாமினை நோக்கிச் செல்கிறான். இடையில் நதியின் வெள்ளம். ஒரு பாறைமுனையில் அடைக்கலமாகிறான். வழுக்கி விடுகிறது.   இந்த இடத்தில் நாவல் ஆயிரம் ஆண்டு நகர்ந்து விடுகிறது.  அவ்வரிகள் முக்கியமானவை:

“கால வெள்ளம் நதியின் பிரவாகத்தை இழுத்துச் சென்றது. நாலாபக்கமும் எல்லையற்ற அகண்டவெளி .  தான் பற்றி இருந்தது கடந்த காலத்தின் சின்னம். வருங்காலத்திலும் இப்படியே இருக்கப்போவது.  சரயூ நதியின்  பேரலைகள் கௌதமநீலாம்பரனின் தலைக்கு மேல் எழும்பி வியாபித்தன. மறுபக்கம் ஒருவன் குதிரையிலிருந்து இறங்கி, கடிவாளக் கயிற்றை ஆலமரத்தின் வேரில் முடித்தான்..அவன் பெயர் மன்சூர் கமாலுதீன்.”

அவ்வளவுதான், ஆப்கானியர் ஆட்சி வந்து விடுகிறது. அயோத்தி அவத் ஆகிறது. புத்தர் காலத்திலிருந்து  கபீரின் காலத்திற்கு வருகிறோம்.

இந்த அரிய உத்தியை ஜெயமோகன் “கண்ணீரைப் பின்தொடர்தல்” நூலில் குறிப்பிடுகிறார்.

காஷ்மிர் சுல்தான்     ஜைன் உல் ஆபுதீன் இந்திய இசை மற்றும் கலைகளில் ஈடுபாடுள்ளவன். பஹராயிச்சில் உள்ள 1500 ஆண்டு பழைய தாமிரப் பட்டயங்களை ஆராய்வதற்கு நூலகக் காப்பாளன் கமாலுதீனை அனுப்புகிறான். இந்த ஊர்தான் முன்பு சொன்ன கௌதம நீலாம்பரனின் சிராவஸ்தி. கமாலுதீன் ஒரு பண்டிதரின் மகளைச் சந்தித்து நட்பு கொள்கிறான். அவள் அனாயாசமாக நதியை நீந்துபவள்  . அவள் பெயர் சம்பகா.  . மீண்டும் அறிவு ஜீவிகளிடையே காதல். மீண்டும் பிரிவு.

பெயர்கள் ஒன்றே. உருவங்களும் காலங்களும் மாறுகின்றன. எல்லாம் நாம-ரூபம்  தான் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது.  தனது சுல்தான் தில்லி சுல்தானிடம் தோற்று விட்டதை கமாலுதீன் அறிகிறான். படகில் பல ஊர்களுக்கு சுற்றுகிறான். வருவதாக வாக்களித்து விட்ட சம்பகாவை மறக்கிறான். வங்கம் என்ற இனிமையான புது மொழி உருவாகிக்கொண்டிருந்த ஊருக்குச் செல்கிறான். சுஜாதாவைத் திருமணம் செய்து  கொண்டு அவளுக்கு    ஆமினா பீவி என்று பெயர் வைக்கிறான். விவசாயம் செய்கிறான். ஷேர்கானின் முரட்டு சிப்பாய்கள் அவன் கிராமத்தை தாக்கி மொகலாயருக்கு அடிவருடி என்று குற்றம் சாட்டி பாக்தாத்தில் இருந்து வந்த ஒரு காலத்திய சுல்தானின் நண்பனும் நூலகக் காவலனுமான கிழவன் கமாலுதீனைக் கொன்று போட்டுவிடுகின்றனர்.

இங்கே மேலும் சுமார் ஐநூறு வருடங்கள் நதியின் வருடலுடன் கடக்கின்றன. பத்மாவதி நதியில் கமாலுதின் திரிந்து கொண்டிருந்த காட்சி மாறி அதே நதியில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு குமாஸ்தாவாக இங்கிலாந்திலிருந்து வேலை தேடி வந்த  சிரில் ஹாவர்ட் ஐஷ்லேவை சந்திக்கிறோம். அவன் அவுரி விவசாயத்தில் வேகமாக முன்னேறி பெரும் சொத்துக்களை குவித்து உயர் பதவியில் ஓய்வு பெற்று இங்கிலாந்து மீள்கிறான். அவன் மகன் பெரும் சொத்துக்கு வாரிசாகிறான். பேரன் ஜெர்மனியுடன் போரில் கொல்லப்படுகிறான். கொள்ளுப்பேரன்  சாமானியனான சிரில் கால ஓட்டத்தில்  அருங்காட்சியகமாக மாறிவிட்ட தனது முன்னோர்களின் பார்ன்ஃபீல்டு மாளிகையை ஒரு ஷில்லிங் கொடுத்துப் பார்க்கிறான்.

இந்தியாவிலிருந்து படிப்பிற்கு கேம்பிரிட்ஜ் செல்லும் நிர்மலா, சுஜாதா, சம்பா, கௌதம நீலாம்பர தத், கமால் அனைவரும் நண்பர்கள். லக்னோவில் பாரம்பரிய ஜமீன்தார் குடும்பத்தின் உறுப்பினர்கள் அல்லது அவர்களின் குடும்ப நண்பர்கள் . கலை, இலக்கியம், கம்யூனிசம் பேசுபவர்கள். இவர்கள் அனைவரும் பிரிட்டனில் சிரில் மற்றும் புதிய நண்பர்களை சந்தித்து விவாதிக்கிறார்கள். கேம் நதிக்கரையில் அமர்ந்து இலட்சிய மானிடம் பேசுகிறார்கள். பெரிய இடத்து மணப்பேச்சுகளை நிராகரிக்கிறார்கள். தங்களுக்குள் காதல் மலரும் தருணத்தில் பின்வாங்கி விட்டு மாணவர்களுக்கு உபதேசித்துத் திரிகிறார்கள். இருத்தலியத்தினால் வரும் அவநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நிர்மலா காச நோயால் இறக்கிறாள். கௌதமநீலாம்பரன் ஒடிந்து போகிறான். இந்திய அரசின் வெளியுறவுத்துறையில் சேர்ந்து உலகம் சுற்றுகிறான். இரண்டாயிரம் ஆண்டு முன் கங்கை–சரயுவில் பாடலிபுத்திரம்- அயோத்தி- சிராவஸ்தியில் சுற்றிக்கொண்டிருந்தவன் பெயரும் அதுவே.

(இதே பெயருடைய நிர்மலா 2000 ஆண்டு முன் புத்த பிக்குணி ஆகிறாள். கௌதம நீலாம்பரன் சரயு நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான்).

. சம்பா இந்தியா திரும்பி வந்து பிரிவினையால் கிட்டத்தட்ட காலியாகி விட்ட தனது ஊரில் குறுகலான வீட்டில் தங்குகிறாள். காசிக்குப் போய் வேலை தேடப்போகிறாள் (முந்தைய சம்பா கமால் வருவான் என்று காத்துக் கொண்டே இருக்கிறாள்). கமாலுதீன் தனது பூர்விக வீடு பிரிவினைக்குப் பின் கைவிட்டுப் போனதால், தனது பிடிவாதமான இந்திய வாசம் என்னும் கொள்கையை பலிகொடுத்து பாகிஸ்தான் சென்று அரசுப் பொறுப்பில் அமர்கிறான்.அவன் ஒரு அணு விஞ்ஞானி. அவனை ஒரு ஆய்வகம் அமைக்கும் வேலையில் அமர்த்துகிறது அரசு. (வேறென்ன, யுரேனிய ஆய்வாகத்தானிருக்கும்).

கௌதமன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிவப்பு மண்ணால் வடித்த யக்ஷிணி சிலையை ராஷ்டிரபதி பவனில் பார்வையிடும் கமால் பசித்தவனுக்கு      கலையையோ தத்துவ ஞான போதத்தையோ  ரசிக்க –விமர்சிக்க இயலாது என்கிறான்.

கௌதமன் புத்த ஜெயந்திக்கு வந்திருந்த  வெளிநாட்டு அறிஞர்களுக்கு  முற்கால சின்ன்ங்களைக் காட்டுவதற்காக சிராவஸ்தி வரும்போது அருகில் உள்ள தனது கிராமத்திற்கு செல்கிறான். அங்கே நண்பர் ஹரிசங்கரும் வருகிறான். சண்டி கோயிலில் மீண்டும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொள்கிறார்கள். கமால் தங்களை சந்திக்காமல் பாகிஸ்தான் சென்றுவிட்டது  பற்றி வருந்துகிறார்கள். மீண்டும் அதே நதிக்கரையில் அமைதி தேடிக் காத்துக் கொண்டிருக்கிறான். நதி சென்று கொண்டிருக்கிறது.

ஒழுகிச்செல்லும் நதி போன்ற படைப்பை அடர்த்தியாக்குவது அது கடந்து செல்லும் படித்துறைகள்,  மனிதர்களின் கனவுகள் மற்றும் வாழ்வியல் நோக்குகள் எனலாம்.

முதல் ஆயிரம் ஆண்டுகளில் திரட்சியாக  சொல்லப்படும் இயற்கை வர்ணனை பின்னர் குறைந்து கொண்டே வருகிறது.  தாமரை இலைகளில் ஜலதரங்க வித்தை செய்யும் மழைத்துளி, கண்ணில் விழுந்த மழைத்துளி சுவாதி நட்சத்திரத்தில் சிப்பிக்குள் விழுந்து முத்தாக ஆக்குவதற்கு ஒப்புமை, ஆனந்தலஹரி போன்ற பல  இசைக்கருவிகளின் தகவல்கள் அழகிய கவிதையாகின்றன.

சாதகப் பறவி, இலுப்பை, ,பலாச அசோக, நாவல் மரங்கள்  மற்றும் கதம்ப மரம்,  ஜேதவனம் அடர்ந்த சோலைகளின் வழியே நதி நகர்ந்து செல்கிறது.  , சண்பக மலரின் பெயரிலேயே கதை நாயகி அழைக்கப்படுகிறாள். (சம்பகா, சம்பா, சம்பாபாஜி).

உயர் தத்துவம் பேசும் பண்டிதர்களை விட எளிய கிராம வாசிகளின் இசை கூடிய பக்திப் பண்ணிசை சிலாகித்துப் பேசப்படுகிறது. உழவு செய்பவர்கள்,  படகு துழாவுபவர்கள், தேயிலை பறிப்பவர்கள், ஆடுமேய்ப்பவர்கள், ஊர் சுற்றும் இந்து மற்றும் சூஃபி துறவிகளை தரிசித்துக் கொண்டே நகர்கிறது நதி. கபீர் ஏற்படுத்திய பக்தி எழுச்சியையும் இந்து-இஸ்லாம் ஒற்றுமையையும் பார்க்கிறது. பின்னர் அதே கபீர் காசியிலிருந்து சுல்தானால் வெளியேற்றப் படுவதையும் சோகத்துடன் பார்க்கிறது. சூபி ஞானம் கூறும் நூர் என்னும் ஒளியைக் காண்கிறது. அல்லாஹ் வலிமை , அழகு மற்றும் நிறைவு கொண்ட முக்குணத்தானாக உள்ளான். இசையை பிரம்மமாக வரித்துள்ள பொற்காலத்தைக் கண்டுவிடுகிறது.

  அது ஓடும்போது பெரும் நகரங்கள் கைவிடப்பட்டு இடிபாடுகளாக மாறுவதையும் அங்கே புதைபொருள் ஆய்வு நடப்பதையும் அமைதியாகக் காண்கிறது. அவதி மற்றும் பிஹாரி மொழிகளுடன் தொடர்புடைய வங்க மொழி பிறப்பதை மௌனசாட்சியாக பார்த்துக் கொண்டே நகர்கிறது. ஒரே நகரம் இந்திரப் பிரஸ்தம் – தில்லி – துக்லதாபாத் – மற்றும் ஷாஜஹானாபாத் என்று பெயர் மாறுவதைக் காண்கிறது அக்னி நதி. 1770 இன் கொடும் வங்கப் பஞ்சம் அதன் கரையைல் நடக்கிறது.  பைரவி என்னும் ராகம் உருவாகிய லக்னௌ என்னும் அவதிநகரை சுற்றிச் செல்கிறது.  இடிந்த நகரங்களில் புகழ்பெற்ற கவிஞர்களைக் காண்கிறது (சாணக்கியன், போஜராஜன் , கங்கவா, காளிதாசன், ராஜசேகரன், பவபூதி, பர்த்ருஹரி) . யோகிகளின் ‘ஸுமிரன்’, பக்கிரிகளின் ‘ஜிக்ர’, வைணவ பக்தர்களின் ‘பஜன்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே ஊர்கிறது.

கவித்துமான தத்துவங்களை அக்னி நதி பேசிக்கொண்டே செல்கிறது

  • எண்ணங்களிலிருந்து விடுதலை – எண்ணங்களில் தனியே சத்தியம் –அசத்தியம் வேறுபாடு கிடையாது. இங்கிருந்து வெளியே போகமுடியாது. இவற்றுக்கு மேலான பரமசத்தியம் என்பது சூனியம்
  • இவர்கள் கதை சொல்லிவிட்டு, கதை கேட்டுவிட்டு, தாமே கதையாகி விட்டவர்கள்.
  • சாக்கியமுனி சொல்கிறார் – எல்லாமே அழியக்கூடியவை. அழிவிலிருந்து தப்பித்துக் கொள். துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்; நிழலில் இருந்து தப்பித்துக் கொள்.
  • நான் சொற்களின் கடலைக் கடந்து எண்ணங்களின் பயங்கரமான பாதையில் முன்னேறி நிற்கிறேன்.
  • மாந்திரிக இலைக்கொத்தில் கனவு கண்டுகொண்டே உறங்கி விட்டால் காணாமல் போய்விடுவீர்கள். கீழே தரைக்கு வந்து சேருங்கள்.
  • தொன்று தொட்டு துயர் அனுபவிக்கும் இந்திய ஆன்மா வெள்ளையருக்குப் புரியாது.
  • சூபி: காலமே அழிவில் தான் அமைந்திருக்கிறது.
  • காலம் சிதறும் கற்களில் உறைகிறது.
  • கால நட்னத்தில் ஆசைகளை வென்றவரே பூசை செய்யமுடியும்.
  • (இஸ்லாமிய ஜமீன்தார்)மாளிகை : பல இறுதிப்பயணங்களின் துவங்குமிடம்; பல மணப்பெண்களின் பல்லக்குகள் வந்து சேர்ந்த இடம்; பண்டிகைகளின் குழந்தைகளின் கூடும் இடம். காலத்திற்கும் மாளிகைக்கும் இடையே நடக்கும் போட்டியில் எப்போதும் போல காலமே வெல்கிறது.
  • நதியே, நீ எங்கே போகிறாய் என்பது உனக்கும் தெரியாது. நீர்க்குடமே, திவலைபோல நீரில் மூழ்கி விடு.

வரலாற்று அதிர்ச்சிகளை அள்ளித்தெளிக்கிறது அக்னி நதி. முன்பு மாளிகையாக் இருந்த மோதிமஹால் பின்பு இம்பிரியல் வங்கியாகிறது (இப்போது ஸ்டேட் வங்கி). பாதுஷா அரண்மனை அரசு இல்லமாகிறது. சதர்ன் மன்ஜில் கிளப் ஹவுஸ் ஆகிறது. பிரிட்டன் அரசு வர்க்கப் போராட்ட்த்தை வகுப்புப் போராட்டமாக மாற்ற முயல்கிறது. முன்ஷிகள் (கணக்கர்கள்) ஆக  முசல்மான்களிடம் இருந்த இந்துக்கள் விரைவாக பிரிட்டிஷ் ஆட்சியில் பதவிகளைப் பிடிக்கிறார்கள். முஸ்லீம்கள் நிலப்பண்ணை முறைகளில் சிக்குகின்றனர்.  காங்கிரஸ் – கம்யுனிஸ்ட் – முஸ்லிம் லீக் – அவாமி லீக் இயக்கங்களைப் பார்த்துக்கொண்டே அமைதியாக நகர்கிறது. பங்களாதேஷ் பிரியும் ஆண்டு எழுதப்பட்ட நாவல்  அந்தப் பிரிவினை பற்றி ஒன்றும் சொல்வதில்லை

நகைச்சுவை:

  • ஒரு பழைய அரசனைக்காட்டும் நாவல், இவர் போன்றவர்களின் தொழிலே உயிர்வாழ்ந்து வருவது தான் என்கிறது. 
  • இந்த பாதுஷாக்கள் சாகவும் செய்கிறார்கள்.
  • (பில் கிரெய்க்) சொற்கள், சப்தங்களின் வியாபாரி; மனிதர்களிடம் கூட ப்ரூஃப் திருத்தி விடுபவர்.
  • கம்யுனிஸ்டுகள் மார்க்சியத்தை ஒழித்துக் கட்டிவிட்டார்கள்.
  • பியானோக்களில் எலிகள் குடியிருக்கின்றன. ஒரு ஸ்வரம் எங்கோ ஒடிந்திருக்கிறது.

அக்னி நதி தொட்டுச் செல்லும் நதிகள் – கங்கை, யமுனை, பத்மா, சரயு, கேம், கோமதி, ஸஜ்ஜர் வாலி, ராமகங்கா (கிழக்கு வங்கம்) , ரஸ்பானா (டேராடூன்) மற்றும் அவற்றின் கரையோர நகரங்கள்.

நம்பிக்கை வரிகளைப் பிடித்துக் கொள்கிறோம். “நல்லகாலம் வரும்போது எல்லாருக்குமாக வரும். இது இந்து வீடு, இது முஸ்லீம் வீடு என்று பார்க்காது- நாங்கள் எல்லாருமே ஒன்றாக மூழ்குவோம் – ஒன்றாக எழுவோம் “ என்று சம்பா பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து விட்ட கமாலிடம் கூறுகிறாள்.

யார் கண்டது,  கால நதியின் ஓட்டத்தை? இந்த  நதி சில நூற்றாண்டுகள் கழித்து  குளிர்ச்சியாக, அமைதியாக  ஓடிக்கொண்டிருக்கும். அப்போது அராபிய ஞானிகளும்  சூபி கவிஞர்களும் மீண்டும் இந்து பக்தர்களுடன் இணைந்து  புனிதமான வாரணாசிக் கரையில் ஆரத்தி செய்யக் கூடும். 

-ராகவேந்திரன், கோவை

கூடுகை 2 – ப.சிங்காரம் படைப்புகள் – வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

ஆசான் திரு.ஜெயமோகன் அவர்களுடைய “அலை அறிந்தது” எனும் கதையில் வரும் அத்தர்பாய், வாழ்க்கையைப் பற்றி ஒரு வரி சொல்லுவார் “அலை ஏறினா, இறங்கித்தானே ஆகணும்” என்று. இதையே “வாழ்க்கை ஒரு வட்டம்” என எளிமைப்படுத்த முடியும். அந்த வட்டத்தின் மையம் “அபத்தம்”.

*

ப.சிங்காரம் எனும் ஆளுமை ஒரு பெயராக என்னை வந்தடைந்து ஏறத்தாழ 7 வருடங்கள் இருக்கும். தொடர்ந்து, இலக்கிய உரைகளிலும், இலக்கியக் கட்டுரைகளிலும் தவறாமல் உச்சரிக்கப்படும் ஒரு பெயராக அவருடைய “புயலிலே ஒரு தோணி” நாவல் இருக்கிறது. அத்தகைய கட்டுரைகளை வாசிக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெரும் மன எழுச்சியுடன் புயலிலே ஒரு தோணி நாவலை வாசிக்கத் தொடங்குவேன். ஓரிரு அத்தியாயங்கள் கடக்கும் முன்பே, நாவலின் உள்ளே நுழைய முடியாமல் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேறு புத்தகங்களை படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இந்நாவலை இம்முறை ஈடுபாட்டுடன் என்னால் வாசிக்க முடிந்ததற்கு சொல்முகம் வாசகர் கூடுகை மட்டுமே காரணம். அதற்கு என்னுடைய நன்றிகள்

*

தொட்டனைத் தூறும் கேணியாகவே இருந்தாலும் நாம் கொள்ளும் அளவு நம்முடைய கலனை மட்டுமே பொருத்தது. அந்தப் புரிதலுடன்  என்னுடைய வாசிப்பு சார்ந்து புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் இரு நாவல்களைப் பற்றிய என்னுடைய அவதானிப்புகளை இக்கட்டுரையில் முன்வைக்கிறேன்

*

புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் இரண்டும் இரு நாவல்களாகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும், வாசிப்பனுபவத்தில் இரு நாவல்களையும் ஒரே நேர்கோட்டில் நம்மால் வைக்க முடியும். குறிப்பாக ”கடலுக்கு அப்பால்” நாவலை, ”புயலிலே ஒரு தோணி” நாவலின் நீட்சியாக – காலம் மற்றும் கதாப்பாத்திரங்களை முன்வைத்துச் சொல்ல முடியும்.

இந்தோனேஷியாவை கைப்பற்றும் ஜப்பான் துருப்புகள் மெடான் நகரில் நுழையும் சித்திரத்துடன் துவங்கும் ”புயலிலே ஒரு தோணி” நாவல், (பாண்டியன் எனும் கதாபாத்திரத்தின் மூலமாக) பினாங்கு, ஐ.என்.ஏ என சொல்லப்படும் இந்திய தேசிய ராணுவம், அதன் செயல்பாடுகள், நேதாஜி, போர்ச் சித்திரங்கள், ஜப்பானின் பின்னடைவு, அதன் விளைவுகள், பாங்காக் பின்னர் மீண்டும் பினாங்கில் இருந்து மெடான் நகருக்கு வந்து முடிகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பின்னான வாழ்க்கையை, போர் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தழும்புகளை ஒரு காதல் கதையின் ஊடே பதிவு செய்கிறது ”கடலுக்கு அப்பால்”.

*

இவ்விரு நாவல்களின் சிறப்புகளுல் ஒன்று, அவற்றின் கூறுமுறை. நாவலின் பெரும்பாலான கதாப்பாத்திரங்களை மற்றும் விரித்தெழுத சாத்தியம் கொண்ட பல தருணங்களை சின்னச் சின்ன சித்தரிப்புகள் அல்லது ஓரிரு பத்திகளில் சொல்லிச் செல்கிறார் திரு.சிங்காரம். ஒருவகையில், அது வாசகனின் கற்பனைக்கு பெரும் இடம் தருகிறது என்றாலும், சில இடங்களில் இந்தச் சிக்கனமே கஞ்சத்தனமாகிவிடுகிறது. செட்டி வீதி குறித்த சித்திரங்கள், பாண்டியன் மற்றும் ஆவன்னா பாத்திரங்களின் நினைவுகள் மூலமாகவே மதுரை, சின்ன மங்கலம் வாழ்க்கையை மீள்கட்டமைப்பு செய்வது, சில பக்கங்களுக்காவது வர்ணிக்கச் சாத்தியமுள்ள கடற்புயலை ஓரிரு பத்திகளிலேயே கடப்பது உள்ளிட்ட சில உதாரணங்கள் நம்மால் விரித்தெடுக்கப்படும் சாத்தியம் கொண்டவை. அதைப் போலவே,  “ரோல்ஸ்ராய்ஸ்” லாயர் டில்டன், “விடாக்கண்டன்” செட்டி போன்ற பெயர்களும். அதேசமயம், இக்கூறுமுறையின் போதாமையினாலேயே, “பாண்டியன்” எனும் பாத்திரப் படைப்பின் வீரதீரச் செயல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.

*

”புயலிலே ஒரு தோணி” நாவலின் பாண்டியன் கதாப்பாத்திரத்துக்குக்கும், ”கடலுக்கு அப்பால்” செல்லையாவுக்கும் மெல்லிய இணைப்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன். ஒருவகையில் செல்லையா, பாண்டியனின் நீட்சி. போர்ச்சூழலில் இருந்து அன்றாடத்துக்கு திரும்பும் தருணத்தில் இறந்துபோன பாண்டியன் இழந்தது என்ன என்பதை ”செல்லையா”வைக் கொண்டு நம்மால் ஊகிக்கமுடியும். லெளகீக வாழ்க்கைக்குத் திரும்பும் வீரனின் பெருமை, மதிப்பிழந்து போன ஜப்பான் ரூபாய் நோட்டுகளுக்கு இணை சொல்லத்தக்கது.

*

மெடான் நகரில் தங்கையா மற்றும் தில்லைமுத்துவுடனும், பினாங்கு நகரத்தில் அருளானந்த அடிகள், மாணிக்கம் உள்ளிட்டோருடனும் நடக்கும் விவாதங்களில் தமிழரின் பெருமை, வீரம், இலக்கியச் செழுமை ஆகியவை தரவுகளின் அடிப்படையில் கேள்விக்கு உட்படுத்தும் பாண்டியனின் தருக்கம் “கிணற்றுத் தவளை”யாய் இருப்பதன் எல்லைகளைக் காட்டுகிறது. போலவே, ராணுவப் பயிற்சி முகாமில் நடைபெறும் அசைவ உணவு சார்ந்த விவாதமும், அதற்கென பாண்டியன் சுட்டிக்காட்டும் பாடல்களும். மேஜர் டில்டனுடன் தேசியம் பற்றிய விவாதம் எழும்போது, தன்னுடைய பாட்டனார் காலம் தொட்டே இந்தோனேசியாவில் பிறந்து வளர்ந்த போதும், மேஜருக்குள்ளிருக்கும் டச்சுப் பாசத்தை தன்னுடைய கேள்வி மூலம் பாண்டியன் வெளிக்கொணரும் இடம் காட்டுவது, மனித மனதின் புரிந்துகொள்ளமுடியாத ஆழத்தை.

*

போதையிலிருக்கும் பாண்டியன், பட்டினத்தார் உள்ளிட்டோரை பார்ப்பது, அவர்களுடனான உரையாடல், சங்கப்பாடல்களையே சான்றாகக் கொண்டு தமிழர் பெருமையை, தமிழ் மன்னர்கள் பெருமையை உடைத்தெறியும் பாண்டியனின் வாதங்கள், தொலைந்துபோன முக்கியமான கடிதம் குறிந்து பாண்டியன் மற்றும் கலிக்குஸீமான் இடையே நடக்கும் பேச்சில் வரும் “ஜெனரல் சிவநாத்ராய்” குறிந்த சித்தரிப்புகள், மாணிக்கத்துக்கும் செல்லையாவுக்கும் ”கடலுக்கு அப்பால்” நாவலில் வரும் ”சிலப்பதிகாரம்” சார்ந்த உரையாடல் என இவ்விரு நாவல்களிலும் (வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்)மெல்லிய அங்கதம் / பகடி நிறைந்திருந்தாலும், உண்மையில், இந்நாவல்கள் நமக்குக் காட்டுவது அபத்தங்களை.

*

உதாரணமாக இரு சம்பவங்களைச் சொல்லலாம்

கடலுக்கு அப்பால் நாவலில், தன் உயிரைப் பணயம் வைத்து “வானாயீனா” செட்டியாரின் மகன் உடலை மீட்டு வருகிறான் செல்லையா. தன் மகன் வடிவேலுவின் இடத்தில் செல்லையாவைக் கருதுகிறார் செட்டியார். செட்டியாரின் மகள் மரகதம், மனைவி காமாட்சியம்மாள், வேலைக்காரர்கள் என யாவரும் செல்லையாவைப் போற்றுகின்றவர்கள். என்றபோதும், போரும், போரினால் செல்லையா கொள்ளும் ”நிமிர்வு”ம் அவனை “பொம்பளைத்தொழில்” வட்டித்தொழிலில் இருந்து வெளியே தள்ளுகின்றன. தன் முழு வாழ்வின் பலனாக தன் தொழிலைக் கருதும் செட்டியார், அதன் பொருட்டே மரகதத்தை “செல்லையா”வுக்கு மணம்முடிக்க மறுக்கிறார். “புயலிலே ஒரு தோணி”யில் அப்துல் காதர் மூலமாக, மரகதத்தின் மாப்பிள்ளையாகவே அறிமுகமாகும் செல்லையா, ஒரு போதும் அந்த நிலையை அடைய முடியாமல் போவது காலத்தின் குரூரம்.

”புயலிலே ஒரு தோணி”யில், அர்மீனியா ஆற்றில் மணல் அள்ளும் டச்சுக் கைதிகளுக்கிடையே இருக்கும் “ரோல்ஸ்ராய்ஸ்” லாயட் டில்டன், தனக்கு உணவு தந்த பாண்டியனை நீடுவாழ வாழ்த்துகிறார், மட்டுமின்றி அவர் குடும்பத்து பெண்ணுக்கு தீங்கிழைத்த ஜப்பானிய ஜெனரலைக் கொன்றதால், அவர் குடும்பமும் பாண்டியனுக்கு மிகவும் நன்றியுடையது, என்றபோதும், பாண்டியனைக் கொல்லும் தோட்டா, லாயர் டில்டனின் மகன் “மேஜர்” டில்டனின் துப்பாக்கியிலிருந்துதான் வரவேண்டியிருக்கிறது.

*

வாழ்க்கைப் புயலில், பாண்டியனைப் போல, செல்லையாவைப் போல, வானாயீனாவைப்போல, மாணிக்கத்தைப் போல நாமும் தாக்குப் பிடிக்க முயன்று கொண்டேதான் இருக்கிறோம். அப்பாலிருந்து புயலை இயக்கும் விசையாக நம்மை நோக்கி சிரித்துக்கொண்டிருக்கிறது ஊழ்.

*