Unknown's avatar

About சொல்முகம் வாசகர் குழுமம்

கோவையில் செயல்படும் இலக்கிய வாசகர் குழுமம்

தாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன்

https://www.narenin.com

1905 பெங்கால் பிரிவினை இந்திய வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் நிகழ்வு. அது இந்தியாவெனும் தன்னுணர்வை அசைத்துப் பார்த்தது. பெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்தியாவெங்கும் சிந்தனையாளர்களும் விடுதலை போர்களும் துளிர்த்தெழ பெரிதும் வழிகோலியது. இந்தியாவெனும் அரசியல் உடமையையும் அதன் உள்ளுணர்வாகிய கலாச்சார பண்பாட்டையும் சேர்த்து காக்கும் பெரும் பொறுப்பு இந்திய விடுதலை சிந்தனையாளர்கள் மத்தியில் பெருகத் தொடங்கியது. மரபார்ந்த இந்துமத சடங்குகளையும் அது முன் வைக்கும் பிரிவினைகளையும் வகுப்பு நிலைகளையும் ஒதுக்கி வைக்கும் புதிய மரபுகளும் முறைமைகளும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது. இந்தக் கிளர்ச்சிகளுக்கு நடுவே, பெங்காலின் மறுமலர்ச்சி காலகட்டத்தின் பின்புலத்திலிருந்து எழுந்து வந்த தாகூர், ஒரு முக்கிய பண்பாட்டு விவாதமாக ‘கோரா’ நாவலை எழுதுகிறார்.

இந்து மதத்தின் அத்தனை மூடவழக்கங்களையும் பிரிவினைகளையும் உதறி 1828ல் ராஜா ராம் மோகன் ராய் ‘பிரம்மோ சமாஜை’ துவங்குகிறார். இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் இவ்வியக்கத்தினர் தங்களை இந்துகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. பெங்கால் மறுமலர்ச்சி இயக்கத்தின் ஊற்றுக் கண்ணென விளங்கிய இவ்வமைப்பு இந்திய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மரபார்ந்த தளைகளிலிந்து பெரு விடுப்பு அளித்தது. இவ்வமைப்பின் எழுச்சியால் அதிர்ச்சிக்குள்ளான மரபார்ந்த இந்துக்கள் பிரம்ம சமாஜத்திலிருந்தும் கிறித்துவ அமைப்புகளின் தாக்குதல்களிலிருந்தும் இந்து மதத்தை காக்கும் பொருட்டு சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது. இந்தியச் சுதந்திர போரட்டங்களில் ஒரு பகுதியாக சீர்திருத்தப்பட்ட இந்து அமைப்புகள் இந்துமத பண்பாட்டையும் கையிலெடுக்க, பிரம்ம சமாஜம் இந்து மதத்திலிருந்து இந்தியர்களை விடுவிக்கும் முனைப்புடன் வளர்ந்து வந்தது. இந்த இரண்டு பக்கங்களின் அதீத நோக்கிலிருக்கும் முரண்பாட்டை மையமாக வைத்து ‘கோரா’ வெகுசில கதாப்பாத்திரங்களைக் கொண்டு ஒரு முக்கிய விவாதத்தை நிகழ்த்துகிறது.

இப்புவியின் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு தாக்குதல்களால், இயற்கையாலும் மனிதனின் ஏதேச்சதிகாரத்தினாலும், மானுடம் தன்னை அசைத்துக் கொடுத்து தன் இருப்பை எப்படியாவது நிறுவிக்கொள்கிறது. ஒவ்வொருமுறையும் அவ்வசைவுகள் ஏற்படும்போது சிந்தனை தரப்பிலிருந்து வெளிப்படும் அறிஞர்களே முன்வடம் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு யுகசந்தியின் முனையிலிருக்கும் இளைஞர் குழாமின் சிந்தனை என்னவாக இருக்கும் அதன் விளைவாக எழும் செயல்பாடுகள் எம்மாற்றத்தை கொண்டு வரும் என்பதை இன்றைய சூழலில் புரிந்து கொள்வது இயலாததாகவே இருக்கும். 

அரசியல் காலாச்சார மாற்றங்களை மையப் பொருளாக்கிய ‘ஆரோக்கிய நிகேதனுமும்’ ‘அக்னி நதியும்’ இந்நாவலை வாசிக்கையில் நினைவில் எழுந்துக் கொண்டே இருந்தன.  ‘அக்னி நதி’ இது போன்ற வெவ்வேறு காலச் சுழலில் நிகழும் சரித்திர திருப்புமுனைகளில் நிற்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை சொல்கிறது. கோராவிலும் முக்கிய பாத்திரங்களாக நான்கு இளைஞர்கள். அவர்களின் அரசியல் பிடிமானங்களையும் அதனூடாக அலைக்கழியும் காதல் வாழ்வையும் இருசேர பிணைப்பதாலேயே கோரா ஒரு முக்கிய இலக்கிய படைப்பாகவும் ஆகிவிடுகிறது. தாகூர் நீண்ட வசனங்கள் மூலமாக கதாபாத்திரங்களின் ஆழ் மனம் வரை ஒரு கூர் சுழலாக இறங்கி தொட்டு பின் விலகுகிறார். உரையாடல்களின் நீளத்திற்கே கதாபாத்திரங்களின் அவ்வுரையாடலுக்கு முன்னும் பின்னுமான சிந்தனையோட்டத்தை விவரிக்கிறார். இதன் மூலம் அப்பாத்திரங்களுக்குள் நிகழும் அலைக்கழிப்புகளையும் உணர்வுச் சிதைவுகளையும் மிகத் துல்லியமாக அவரால் மீட்டெடுக்க முடிகிறது. பெரும்பாண்மையான தமிழ் நவீன நாவல்களிலிருந்து பெரிதும் விலகி நிற்கும் ஒரு வடிவம் இது. தொடக்கத்தில் வாசிப்பிற்குத் தடையாக இருக்கும் மொழிபெயர்ப்பு சிக்கலிலிருந்தும் கூட பெரிதும் தப்பி நாவலுக்குள் புக இந்நாவலின் உரையாடல்களே துணையாக அமைகிறது.

கோரா எனும் கோர்மோஹன் இந்து மத விழுமியங்களின் மீது பெரும் பிடிப்பு கொண்டவன். அதன் பிற்போக்குத்தனங்களையும் பிரிவினைவாதங்களையும் கூட இம்மதத்தை காக்கும் பொருட்டு பொருத்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் கொண்டவன். இந்திய விடுதலைக்குப் பிறகு இதெல்லாம் சீர் செய்து கொள்ளலாம். முதலில் ஆங்கிலேயர்களை வெளியே விரட்டுவதும் இந்து மதத்தினரை மாறிவிடாமல் தடுப்பதும்தான் தற்போது தலையாயது என்று எண்ணுபவன். சடங்குகளை தான் பின்பற்றாவிடினும் மதத்தின் ஒருமையை காக்கும் பொருட்டு அவை புழங்குவதில் தவறில்லை என்பவன். பிரம்மோ சமாஜத்தின் ஈர்ப்பிலிருந்து விலகி வந்து அதற்கு எதிராக நின்று வாதிடுபவன். சுற்றத்தினரின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவன். தான் பிறப்பால் ஒரு இந்தியன் அல்ல என்று தெரியவரும்போது ஏற்படும் அவனின் மனமாற்றத்திற்கு முற்றிலும் வேறு திசையில் நாவல் முழுதும் பயணிப்பவன். நேர்மறை எண்ணம் கொண்டிருந்தவன்தான் என்ற போதிலும் இந்திய மண்ணிற்கு தான் யார் என்பதும் இந்த மண் எந்த மனிதர்களின் மீதும் எல்லைக் கோடுகளை வரிப்பதில்லை என்பதும் புரியவரும்போது ஒரு பெரும் திறப்பை அடைகிறான். தன் வாழ்நாள் முழுதும் அவன் நிகழ்த்திய விவாதங்கள், தன் காதல் வாழ்வின் ஊசலாட்டங்கள் என அனைத்தும் ஒற்றைப் புள்ளியில் வந்து இணைவதை உணர்கிறான். அது ஒரு பெரும் விடுதலையுணர்வை அவனுக்கு அளித்திருக்கும் என்பதை ஒரு வாசகனும் உணர்ந்தறிவான்.

பினய் பாபு வாசகனின் மனநிலைக்கு மிக நெருக்கமானவன். கோராவின் எல்லையற்ற நட்பினாலும் – ஒருவகையில் பக்தி நிலையும்கூட, அனந்தமயியின் தாயன்பினாலும், முற்போக்கு சிந்தனைகளாலும், லொலிதா மீதான காதலினாலும், சுசாரிதாவின் அறிவார்ந்த நட்பினாலும் அலைகழியும் ஒருவன். தான் சுயமாக எடுக்கும் எந்த முடிவுகளும் யாரோ ஒருவரை பாதிக்கும் என அறிகையில் ஒரு அடி பின்னே செல்பவன். கோராவின் கோபத்திற்கு ஆட்படாமலிருக்க லொலிதாவின் காதலைக் கூட மறுதலிக்க தயாராக இருக்க கூடியவன். இதனாலேயே எவரின் பகைக்கும் ஆட்படாதவனாகயிருக்கிறான். பிரம்மோஸின் நியாயங்களும் முற்போக்கு சிந்தனைகள் அவர்களின் பெண்களுக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தையும் கண்டு அதன் அவசியத்தை உணர்கிறான். ஆங்கிலேயருடன் அவர்கள் காட்டும் இணக்கம் கூட அவனுக்கு தொந்தரவுதருவதாயில்லை கோரா சிறையிலடைக்கப்பட்ட செய்தி வரும் வரை. ஒவ்வொரு கட்டத்திலும் ஏதேனும் இரண்டு முனைகளை சீர் நிறுத்தி பார்க்க வேண்டிய இக்கட்டில்தான் வாழ்கிறான். அவனின் பிடிப்பை சிறுவன் சதீஷால் கூட அசைத்துப் பார்த்துவிட முடியும். 

கோராதான் இந்நாவலின் மையம் என்றாலும் முதல் பக்கத்தில் தொடங்கி கடைசி வரை வியாபித்திருக்கும் பாத்திரங்கள் பினய்யும் சுசாரிதாவும்தான். கோராவினால் பெரும் ஈர்ப்புக்குள்ளாவதும் இவர்கள் இருவர்தான் என்பதுவும் காரணமாக இருக்கலாம். பிரம்மோ தனக்களித்த சுதந்திர சிந்தனையை பொரேஷ் பாபுவின் வளர்ப்பினால் தீவிரமாக பற்றி வரும் சுசாரிதாவின் எண்ணங்களை வெவ்வேறு முனையில் நின்று கோராவும் ஹரிமோகினியும் குலைக்கிறார்கள். கோராவின் மீது இவள் ஈர்ப்பு கொள்வதும் ஹரன் பாபுவுடனான திருமண தயாரிப்புகளை ரத்து செய்வதும் கருத்தியல்களின் அடிப்படையிலேயே என்பது இவளை யுவதிகளுக்கான ஒரு லட்சிய உருவமாக ஆக்குகிறது. அனைத்தையும் விவாதத்தின் மூலமாக கடக்க விழைப்பவள். ஆனால் அன்பும் உறவும் அவளை எப்போதும் நெகிழ்த்தும் கண்ணிகளாக இருப்பதால் பினய் பாபுவைப் போல அலைகழிப்புகளுக்கு உள்ளாகுபவளாக ஆகிறாள்.

துணிச்சல்மிக்க பெண்ணாக லொலிதா உருவெழுந்து வருவது நாவலின் நடுப்பகுதியிலிருந்துதான். எவரும் எதிர்பாராவண்ணம் ஒரு திருப்புமுனையில் அவள் ஒரு அலையென எழுந்து பினய் பாபுவை தன்னுடன் இழுத்துக் கொண்டுவிடுகிறாள். பின்ய பாபுவிற்கு ஒரு வகையில் நேர் எதிரான பாத்திரம். தன்னைப் போலவே பினய் பாபுவும் சுயமாக சிந்திக்கவும் தான் நினைத்ததை செயல்படுத்தவும் வேண்டும் என்று விரும்புகிறாள். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பினய்யிடம் இதை சுட்டிக் காட்டவும் தவறுவதில்லை. இதுவே கோராவையும் மீறி லொலிதாவுடனான திருமணத்திற்கு சம்மதம் தருமளவிற்கு அவனுக்கு உத்வேகம் கொடுக்கிறது. பிரம்மோஸாக மாறுவதற்கு கூட அவன் தயாராகிவிடுகிறான். 

இந்நான்கு பாத்திரங்களையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்த முடியும். இவர்கள் பிராதான கதைமாந்தர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வில் எதிர்படும் சந்தர்பங்களினாலும் எதிராளியுடனான விவாதங்களினூடாகவும் ஊசலாடும் தன்மை கொண்டவர்கள். சுசாரிதாவை முதன்முறையாக சந்தித்து உரையாடும்போதுதான் இந்திய கலாச்சாரத்தில் இந்திய சுதந்திர வேட்டையில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்கிறான். சார்-கோஸ்பரா கிராமத்திற்கு இரண்டாவது முறையாக செல்லும்போதுதான் அக்கிராமத்தின் எளிய மனிதர்களிடமிருந்து தன்னைப் பிரித்த இடைவெளிகளை உணர்கிறான். அவன் கற்பனையிலிருக்கும் பாரதவர்ஷம் அசலில் இல்லை என்பதை உணர்கிறான். சடங்குகளாலும் சாதிப் பிரிவினைகளாலும் தான் கனவு காணும் பாரதம் வெறுமையானது என்பதையும் கண்கூடாக காண்கிறான். அம்மக்களின் சார்பாக நின்று சிறை செல்வதற்கு தயாராகிறான். இறுதியாக அவனுடைய பிறப்பு பற்றிய உண்மை தெரிய வரும்போது ஏற்கனெவே நொறுங்கத் தொடங்கியிருந்த பாரதம் என்ற அவனது கனவுப் பிம்பம் முற்றிலுமாக உடைந்து போகிறது. சடுதியில் அவன் தன்னையும் பாரதத்தையும் வெளியாளின் கண்கொண்டு பார்க்கிறான். அனைத்தையும் ஏற்று அனைத்தின் மீதும் ஊறும் தேசமிது என்பதை புரிந்துகொள்கிறான். இந்நாவல் அவனுக்கு கிடைக்கும் இந்த அதிர்ச்சியுடன் முடிவுற்கிறது. இனி இத்தேசத்தின் விடுதலைக்கு சமூக விடியலுக்கு அவன் எடுக்கப் போகும் ஆயுதம் என்ன என்பதோ அவன் கனவுகளை எவ்வாறு மாற்றியமைத்துக் கொள்ளப்போகிறான் என்பதோ கற்பனைக்கு விடப்படுகிறது. இந்த திருப்பம் வாசகனுக்கு ஏற்கனெவே தெரிந்திந்திருக்கும் என்பதால் கோராவின் அதீத ஆசார விவாதங்கள் பெரும் முரணாக நாவல் முழுதும் அமைகிறது.

ஆனந்தமாயி பாரதமாதாவின் உருவகம். அன்பின் வழியாக ஆனந்த வாழ்வை தனதாக்கிக் கொண்டவர். பாகுபாடுகள் அவரிடம் இல்லை. அவரின் சுதந்திர சிந்தனைகளால் ஒரு கிறித்துவர் என்று கிண்டலடிக்கப்பட்டாலும் அதை கண்டுக் கொள்பவரில்லை. பெரும் ஆசாரவாதியான கணவர் கிருஷ்ணதாயாளுக்கும் இது மத கட்டமைப்பின் மீது புதிய பாரதத்தை உருவாக்க துடிக்கும் கோரவுக்கும் பாசத்தில் உருகும் பினய்ய்க்கும் பொரேஷ் குடும்பாதாருக்கும் ஒரு மைய ஊக்கியாக, அத்தனையையும் இணைக்கும் சரடாக இருப்பவர். இவரின் எதிர் முனையில் பொரேஷ் பாபு. தன் குடும்பத்தினருடன் பினய் கோரா இருவரையும் கொண்டு வந்து சேர்ப்பவர். எதிர் நிலையில் நின்று மற்றுமொரு மையப் புள்ளியாக இருப்பவர். ஆனந்தமயியும் பொரேஷ் பாபுவும் எதிர் நிலையில் இருக்கும் பெருமனம் படைத்த இருவர். அனைவரும் வந்தடையும் நீள் நிழலாக இருப்பவர்கள்.

இந்நாவல் அனைத்து மார்க்கங்களையும் விமர்சனப் பார்வையோடும் அனுகுவதே இதை முக்கிய சமூக விவாதமாக ஆக்குகிறது. நாவல் முழுதும் இந்து மதத்தின் சாதிய அடுக்குமுறைகள் கொணரும் பிரிவினைகளும் எளிய மனிதர்களின் வாழ்வு இதன் பின்னால் நசுக்கப்படுவதும் உரையாடல்களினூடே எடுத்துரைக்கப்படுகிறது. தீண்டாமைகள் மலிந்து தன் வீட்டிற்குள்ளேயே அவை கடைப்பிடிக்கப்படும்போது கூட தான் ஒரு சமூக போரளி என்றபோதும் கூட அதை கேள்விக்குள்ளாக்க் முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. “பெரிய விஷயங்களை சிறிய கண்ணோட்டத்தில் பார்ப்பதால்தான் நமக்குச் சந்தேகம் வருகிறது” என்று கோரா இதை கடந்து செல்ல முயல்கிறான். இவை எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியாமல் அதை வெட்டி எறிவது முட்டாள்தனம் என்கிறான். இன்றளவும் இவ்விவாதங்களை நம்மால் கேட்க முடிகிறது. “ஹிந்துத்துவம் குறித்து சில விஷயங்களில் சமரசம் செய்து விட்டால் முட்டாள்கள் பெரிய விஷயங்களில் ஒரு மரியாதையற்ற நிலையை உருவாக்கி அதனையே தமது வெற்றியாகவும் கொண்டாடுவர்” என்பான் கோரா. இந்நிலையிலிருந்துதான் “நான் பாரதீயன். இன்று பாரதத்தின் எல்லா ஜாதிகளும் என் ஜாதியே. எல்லோரும் எதைச் சாப்பிட்டாலும், அதுவே என் உணவு” என்ற நிலையை வந்தடைகிறான். இதைப் போலவே புது ஞான சபையான பிரம்ம சமாஜமும் அதன் முரண்பாடுகளை முன்வைத்து விமர்சிக்கப்படுகிறது. ஹரன் பாபுவின் கையில் ஒரு அமைப்பு நிறுவனமாக மாறிவருகிறது. தலைவர்கள் தொண்டர்கள் என்ற நின்றுவனமயமாதல் பொரேஷ் பாபு போன்ற உயர் சிந்தைனையுடையவர்களை வெளியேற்றவும் தயங்குவதில்லை. மற்றொருபுறம் கோராவை ஆன்மிகத் தியாகத் தலைவனாக்கும் சடங்குகளும் தொடங்குகிறது. எஞ்ஞானித்திற்கு தலைப்படினும் நிறுவனப்படுதலிலிருந்து தப்ப முடியாது. 

மிகக்குறைந்த கதாப்பாத்திரங்கள், அனேகமாக பெரும் நிகழ்வுகள் ஏதுமில்லை, நீண்ட சமூக விவாதங்களாக உரையாடல்கள் என இவை அனைத்தையும் மீறி இதுவொரு இலக்கிய படைப்பாக மாறுவது பாத்திரங்களின் மனநிலைகளுக்கு ஊடுறுவிச் செல்லும் தன்மையினால்தான். பாத்திரங்களின் மனவோட்டங்கள் முழுவதும் எழுதிச் செல்லப்படுகிறது. அவர்களின் அகவயமான எண்ணங்களும் புறவயமான செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் இதனால் ஒரு வாசகன் உள்வாங்க முடிகிறது. இது முக்கிய பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, சிறிய பாத்திரங்களுக்கும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதுபோலவே காதலர்களின் மன ஆட்டங்களும் அவர்களின் கனத்த மெளனம் உருவாக்கும் சஞ்சலங்களும் கீதாஞ்சலி ஆசிரியனால் மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அற்புதமான பிம்பங்களை அவரால் உருவாக்க முடிகிறது. உதாரணமாக, பினய் பாபுவும் லொலிதாவும் தங்களுக்குள் சூசகமாக காதல் கொண்டிருப்பதை உணர்த்தியபின் ஒரு மெளனம் நிலவுகிறது. “ஒவ்வொரு ஜீவனையும் வானம் தொடர்ந்து அதிசயமாகவும் அமைதியாகவும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அது வெறும் ஒரு வெட்ட வெளியல்ல” என்பதையும் உணர்கிறார்கள். அவர்களின் அகவிழிப்புணர்வு அண்டம் முழுவதும் பரவியிருக்கும் தெய்வீக விழிப்புணர்வோடு அவர்கள் உடலால் இணைந்திருப்பது போன்றிருந்தது. இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.”

இத்தேசத்தின் மீது அதீத காதலும் கனிவும் அதன் வளர்ச்சியில் கவனமும் கொண்ட தாகூரின் எக்காலத்திற்குமான படைப்பு இது. பாரதவர்ஷத்தை சொந்த கண் கொண்டு காணுங்கள் என்னும் அவரின் அறைகூவல் இன்றளவும் முக்கியமாக இருக்கிறது. இதேசத்திற்கு ஒரு தனிப்பட்ட பண்பு உண்டு, ஒரு தனிப்பட்ட ஆற்றல், ஒரு தனிப்பட்ட உணமை உண்டு. அதன் நிறை குறைகளை மனதில் வைத்தே ஒவ்வொருவருடைய நிலையை முடிவு செய்ய வேண்டும் ஆனால் அது எந்நிலையாகயிருந்தாலும் தீவிரமான போக்கில் அதை கடைபிடிப்பது அத்தனையையும் சூன்யமாக்கவே செய்யும். தேசத்தின் மீது பித்து கொண்ட ஒரு பெருங்கவிஞனின் கூக்குரலுக்கு காது கொடுக்க வேண்டிய நேரமிது.

கோரா – ஒரு இந்திய கனவு – நவீன் சங்கு

கோரா – ஒரு இந்திய கனவு

நவீன இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நான்கு

நபர்களை முக்கியமாக படிக்க வேண்டும் என்கிறார் ராமசந்திர குகா.

  1. அம்பேத்கர் 2.காந்தி 3.நேரு 4.தாகூர்.

இந்த வார “சொல் முகம்” இணைய உரையாடலில் கோரா குறித்து பேசினோம்.உண்மையில் ஒரு நாவலை படிப்பது மட்டுமல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து உரையாடும் போதே அது முழுமை* பெறுகிறது.

வெறுப்பின்றி,வன்முறையின்றி, சகிப்புத்தன்மையுடன் எந்த புள்ளியில் நின்று ஒரு இளைஞன் நவீன இந்தியாவை கட்டமைக்கலாம் என தாகூர் காணும் கனவே கோரா.

தனது ‌ Nationalism நூலில் இவ்வாறு கூறுகிறார்,

“Neither the colourless vagueness of cosmopolitanism, nor the fierce self-idolatry of nation-worship,is the goal of human history.
And India has been trying to accomplish her task through social regulation of differences,
on the one hand, and the spiritual recognition of unity on the other”

சுருக்கமாக சொன்னால், தன்னை ஒரு முற்போக்காகவோ அல்லது மரபுவாதியாகவோ கருதும் ஒரு இளைஞன் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது.

தாகூர் டால்ஸ்டாய் போலவே பெரிய நிலப்பிரபு குடும்பத்தை சேர்ந்தவர்.இருவருக்குமே ஒரு ஆன்மிக தன்மை இருக்கிறது.உருவத்தில் கூட இருவருக்கும் ஒற்றுமை உள்ளது.

ஆனால் டால்ஸ்டாய் போல மனித உணர்வுகளின் அடி(புத்துயிர்ப்பு நெஹ்லுதாவின் மனநிலை) ஆழத்திற்கு சென்று வாசகர்களுக்கு அதிர்வை ஏற்படுத்தக் கூடிய எழுத்து அல்ல இவருடையது. மாறாக அவருடைய கவிதை போலவே மனித உறவுகளின் மெல்லியதான நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டு இறுதியில் ஒரு தரிசனத்தை கண்டடைகிறது.

இந்த கதையில் வரும் பாத்திரங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.ஒன்று ப்ரம்மோஸ் என்று அழைக்கப்பட்ட மேற்கத்திய பாவனையோடு தங்களை முற்போக்குவாதியாக கூறிக் கொள்பவர்கள்.மன்றொன்று பாரதவர்ஷாவை கட்டமைப்போம் என சொல்லிக் கொள்ளும் இந்து மரபானவர்கள்.

இவர்களுக்கு இடையில் வரும் பினாய் தன்னை எங்கு ஒட்டிக் கொள்வது என தெரியாமல் தடுமாறும் கதாப்பாத்திரம்.பினாய் கதாப்பாத்திரம் இந்த கதையில் முக்கியமான ஒன்று.

ஏனெனில் நாம் ஒவ்வொருவரையும் பினாயுடன் இணைத்து பார்த்துக் கொள்ளலாம்.

இந்த இரு தரப்பினரிடையே நடைபெறும் விவாதம், இவர்களின் வாழ்க்கை முறை, அதனால் ஏற்படும் சமூக முரண்பாடு,காதல் உறவு இறுதியில் இரண்டு பக்கங்களிலிருந்தும் எழுந்து வரும் லட்சிய நபர்கள் கண்டடையும் தரிசனமே இந்நாவல்.

இந்த கதையில் வரும் எல்லா பாத்திரமும் ஒரு குறியீடாக உள்ளதை காணலாம்.கோரா விவாதம் செய்து தனது கருத்தை நிறுவும் மரபு வாதியாகவும,அவனுடைய உதவியாளன் அவனை வழிபடும் அடிப்படை வாதியாகமும்,சாதி போன்ற பிற்போக்கு கருத்துகளால் இந்து மதத்தை வெறுப்பவளாகவும் அதே சமயம் விவாதங்களில் தனது கருத்தை பரிசீலனை செய்து கொள்ளும் நவீன பெண்ணாக சுசாரிதாவும், தடித்தனமாக‌ ஐரோப்பிய பாவனையுடன் திரியும் ஹரண், எந்த கொள்கை சார்பும் இல்லாமல் தனது மனதில் தோன்றும் உணர்வுக்கேற்ப நடந்து கொள்ளும் பினாய்.

கோரா தீவிரமாக ப்ரமோஸ் குழுவினரை எதிர்க்கிறான், வாதம் செய்கிறான்.தனது பண்பாடு , கலாச்சாரத்தை இழந்து நாடு சுதந்திரம் பெறுவது என்பது ஆன்ம அற்ற உடல் போன்றது என்கிறான்.எங்களிடம் பிரச்சினை உள்ளது, ஆனால் அதை ஆங்கிலேயரை விரட்டிய பிறகு சரி செய்து கொள்ளலாம் என்கிறான்.பயணத்தில் பட்டினி கிடக்கும் போது கூட, தாழ்ந்த சாதி வீட்டில் உணவு உண்ணாமல் இருக்கிறான்.

சுசாரிதா ப்ரமோஸ் பக்கம் உள்ளவள், அதிகம் வாசிப்பவள், ஆண்களுடன் விவாதம் செய்பவள்.சாதி முதலிய பிற்போக்குதனத்தை வெறுப்பவள்.

நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும்,நான்கு நபரை மட்டுமே முக்கியமாக கருதுகிறேன்.அதில் இருவர் முந்தைய தலைமுறையை சேர்ந்த பெரேஷ்பாபு மற்றும் கோராவின் தாய். மற்ற இருவர் இளைய தலைமுறையைச் சேர்ந்த கோரா மற்றும் சுசாரிதா.

கோரா தான் இந்து அல்ல சிப்பாய் கலகத்தில் இறந்து போன ஒரு ஐரிஷ் காரனுக்கு பிறந்தவன் என தெரிந்ததும்,அவனுடைய பிம்பம் உடைகிறது. ஆனால் தன்னை சுதந்திரமாக உணர்கிறான். தான் இவ்வளவு நாள் கடைப் பிடித்து வந்த கொள்கைகள், ஆச்சாரங்கள்

அர்த்தம் இழப்பதை காண்கிறான்.ப்ரம்மோவான பெரேஷ் பாபுவின் காலில் விழுகிறான்,அவரை குருவாக ஏற்றுக்கொள்கிறேன்

என சிரம் தாழ்த்துகிறான். இறுதியில் சடங்கு, ஐதிகம் என எதுவும் பாராமல் வேலைக் காரியுடன் இணக்கமாக வாழும்

தனது தாயிடமே பாரதவர்ஷாவை காண்கிறான்.அவளது மடியில் படுத்து கண்ணீர் விடுகிறான்.

இதற்கு இணையான தரிசனமாக Herman Hesse வின் சித்தார்த்தாவில் வரும் படுகு ஓட்டியை சித்தார்த்தா கண்டடைவதை சொல்லலாம்.

இந்த Transition அடைந்த தன்மையால் தான் கோரா மற்றும் சுசாரிதா பாத்திரம் முக்கியமடைகிறது. ஏனெனில் எல்லோருக்குமான நவீன இந்தியாவை கட்டமைக்கும் லட்சிய கனவை நிறைவேற்ற நினைக்கும் ஒவ்வொரு இந்தியரும் சென்று சேரும்,சேர வேண்டிய இடம் அது!!

கோரா வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வங்கத்தைக் களமாக்கி நிகழ்ந்த தேசிய – பண்பாட்டுக் கொந்தளிப்பில் மறுமலர்ச்சிக்கும் புதிய எழுச்சிக்கும் சாத்தியங்கள் சூல்கொண்டு வளர்ந்த சூழலில் தாகூரின் கோரா அமைக்கப் பட்டுள்ளது.  

மரபை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பண்பாட்டைக் காத்துக்கொள்ளும் விசை ஒரு புறம்; அது  மரபிலிருந்து உயிர்ச்சாற்றை எடுத்துக் கொண்டதால் வலிமை உடையதாக இருந்தது;  ஆனால் தேக்கம் கொண்டதாகவும் இருந்தது; மறுபுறம் புதிய காற்று வருவதற்காக உருவான சீர்திருத்த இயக்கங்கள்.. கிறித்துவத்திலிருந்தும் மேலை பண்பாட்டிலிருந்தும் சடங்குகளைப் பெற்றுக் கொண்டு  உருவ வழிபாடுகளை எதிர்க்கும் பிரம்ம சமாஜம் போன்றவை;  இந்த இருதரப்புகளிடையே ஏற்படும் மோதல்களில் அவற்றின் பிரதிநிதிகளான இளைஞர்களும் மூத்தோர்களும் எடுக்கும் நிலைப்பாடுகள், வாழ்வியல் மாற்றங்களை தாகூர் ஒரு பாரதப் பண்பாட்டு தரிசனமாகத் தந்துள்ளார்.

கதை மாந்தர்கள் யதார்த்தமான முரண்பாடுகளும் கொந்தளிப்புகளும்  கொண்டவர்களாக  இருக்கிறார்கள். நாயகனான கோரா இந்தியர்களை நேசிக்கும் அளவிற்கு பிரம்ம சமாஜத்தினரை எதிர்க்கிறான். ஏழை மக்களிடம் பேரன்பு கொண்டிருந்தும் சாதி வேறுபாடுகளையும் எதிர்க்க முடியாதவனாக இருக்கிறான். உருவ வழிபாட்டை ஆதரித்து எழுதியும் பேசியும் வருபவன் தனிப்பட்ட முறையில் உருவ வழிபாட்டில் ஈடுபாடு இல்லாதவனாக இருக்கிறான். 

போரேஷ் பாபுவின் மனைவி பரத சுந்தரி தேவி, மேல் மட்ட சமூகப் பகட்டும் போலித்தனமும் கொண்டவளாக வருகிறாள்.  இந்து மதத்தின் குறைபாடுகளை  விலக்கி உருவாகிய பிரம்ம சமாஜம் என்னும் புதிய மதத்தில் தீவிர மதப் பற்று கொண்டவளாக இருக்கிறாள். ஆங்கிலேய அதிகாரிகளின் குடும்பங்களில் நட்பு கொள்வதை பெருமையாக நினைக்கிறாள். தனது மகள்களை சுதந்திரமாக வளர்த்தவள் அவர்களின் சுயேட்சையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறாள்.

சுசாரிதாவின் தந்தையான போரேஷ் பாபுவும்  கோராவின் தாயான ஆனந்தமாயியும் மனித நேயமும் பரம்பொருளிடம் பக்தியும் கொண்டவர்கள். ஆனால்  தங்கள் சுற்றத்தாராலும் மத இறுக்கத்தாலும் தொடர்ந்து ஒதுக்கப் பட்டவர்கள். 

மீனாக்ஷி முகர்ஜியி தனது முன்னுரையில் கோரா என்னும் ‘இந்த அசாதாரணக் கற்பனைக் கதாபாத்திரத்திற்குரிய உண்மை வாழ்க்கை மூலங்களில் , பலரில் ஒருவராகக் கருதப் படக்கூடியவ’ராக சுவாமி விவேகானந்தரைக் குறிப்பிடுகிறார்.  

நரேனை விட சில ஆண்டுகள் மூத்தவர் தாகூர். 

தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர்;  “ இறைவனைக் கண்டுள்ளீர்களா” என்று கேட்ட நரேந்திரனின் கேள்விக்கு ‘உனக்கு ஒரு யோகியின் கண்கள் இருக்கின்றன’ என்றவர். பிற்பாடு கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தைப் பிரித்து வலுவான இயக்கமாக உருவாக்கிய போதும் அதிலிருந்து மூன்றாவது பிரிவு ஒன்று உருவாகிய போதும் அப்போதைய வங்காளத்தின் சிந்தனைப்போக்கை நிர்ணயித்த இந்த அறிஞர்கள் நரேனின் குருவாகிய ராமகிருஷ்ணருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். வேறுபாடுகள் கொண்ட அனைத்து வித வழிபாட்டுக் குழுக்களிலும் ஒரு குழந்தையைப் போல உள்ளே சென்று வந்திருக்கிறார் ராமகிருஷ்ணர். 

கோரா வறட்டுப் பிடிவாதமாக இந்து மதம் சார்ந்த அனைத்தையும் ஆதரிக்கிறான். பெண்களைக் கண்டு கொள்ளாதவனாக , வெறுப்பவனாக இருக்கிறான். இந்த இரு பண்புகளும் விவேகானந்தரின் ஆளுமையிலிருந்து வேறுபட்டவை. புதினமாக்கலுக்காகவும் துருவப் படுத்துவதற்காகவும் கோராவின் ஆளுமை வேறுபாதையில் வளர்கிறது.  ஆனால் கோராவின் வாதத்திறம், அறிவு, அற ஆவேசம்  விவேகானந்தருக்குரியது.

விவேகானந்தர் – தாகூர்  தொடர்பு ஆய்வுக்குரியது. சகோதரி நிவேதிதாவிடம் விவேகானந்தர் “தாகூர் வங்கத்தை சிருங்கார ரசத்தில் மூழ்கடித்து விட்டார்” என்று குற்றம் சாட்டுகிறார். எனினும் சுவாமிஜியின் மறைவின்போது தாகூர் புகழாரம் சூட்டுகிறார். “இந்தியாவைப் புரிந்து கொள்ள விவேகானந்தரைப் படிக்கவேண்டும் “ என்கிறார்.

பங்கிம் சந்திரரின் ஆனந்த மடத்தில் வரும் தீவிர தேசியவாதப் போக்கு கோராவிடம் இருக்கிறது.  ஆனால் இங்கே மாற்றுத் தரப்புச் சொல்லாடல்களும் வன்முறையற்ற தன்மையும் ஆனந்த மடத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. (பங்கிமும் ராமகிருஷ்ணரைச் சந்திக்கிறார் – வாழ்வின் நோக்கம் என்ன என்று ராமகிருஷ்ணர் கேட்டதற்கு, பணம்,, புகழ் , உடலின்பம் என்று பதில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்கிறார்)

பல நூற்றாண்டுகளாக பல்வேறு முரண்பாடுகளுடன்  ஆனால் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பண்பாடு – அதை ‘சீர்திருத்துவதற்காக’      பிற ‘வெற்றி பெற்ற ‘ பண்பாடுகளை சுவீகரித்துக் கொண்டு மேலெழும்பி வரும் புதிய இயக்கம்  – இவற்றிடையே நிகழும் முரணியக்கம் – ஊடுருவுதல் அல்லது உட்செரித்துக் கொள்வதன் மூலம், நூறாண்டுகள் கழித்துப் பார்க்கும் போது மங்கலான கனவாக இருக்கிறது. 

 கோரா, தான் ஒரு ஐரிஷ் பெற்றொரின் குழந்தை என அறிந்ததும் விடுதலை அடைகிறான். அவன் சுசாரிதாவை அடைய கடைசியாக இருந்த தடை நீங்கி விடுகிறது. தேசியவாதத்தை எதிர்த்து உலகமய வாதத்தை முன்வைத்த தாகூரின் இலட்சியம் அதற்கான காலம் வரும் முன்பே வெளிப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

கா செல்லப்பன் அவர்கள் சாகித்ய அகதமிக்காக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தாகூரின் ஆங்கில மொழிபெயர்ப்பு அதன் மூலத்தின் சுவையை முழுமையாகத் தரவில்லை என்கிறார் அமர்த்யா சென். தமிழிலும்  மிக நீண்ட வாக்கியங்களாலும் பொருத்தமற்ற சொல்லாடல்களாலும் சோர்வு தருகிறது (பிரம்மம் – பிரம்மா குழ்ப்பம்; சின்னத்தாயி என்றும் சின்ன அம்மா என்றும் தன் மகளை போரேஷ் அழைப்பதில் உள்ள செயற்கைத்தன்மை போன்றவை)

தீவிரமான விவாதங்களாலும் மென்மையான உறவு முடிச்சுகளாலும் மனத்தின் உணர்ச்சிச் சித்தரிப்புகளாலும் தனித்து நிற்கிறது கோரா

ஆர் ராகவேந்திரன்

கோவை

மாறிய தலைகள் – நவீன் சங்கு

கொரானா கால சந்திப்புகள் – 4

இந்த கதையை வாசிக்க தொடங்கும் போது, Quarantine ஆல் பாதிக்கப்பட்ட வெளி மாநில வேலை ஆட்கள் இந்திய நெடுஞ்சாலை எங்கும் எந்த வித எதிர்ப்பு உணர்வும் இல்லாமல் நடந்தே சென்றதை காண நேர்ந்தது. அதில் ஒரு நிகழ்வு, சாலையில் அடிபட்டு செத்து கிடக்கும் நாயை ஒரு மனிதன் தின்கிறான். இன்னொரு நிகழ்வு, நடந்த அயர்ச்சி யில் இரயில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த 10-15 பேர் மேல் இரயில் நசுக்கி சென்றது.

“Migrant woes are ‘Greatest ManMade Tragedy’ in India since Partition: Ramchandra Guha”

எல்லா சமூக சீரழிவுகளிலும் தனது நிலைப்பாட்டை சொல்வது படைப்பாளியின் படைப்பு தன்மையை பாதிக்கும் என்ற கருத்தின் மேல் எப்போதும் சந்தேகம் கொண்டிருக்கிறேன்.

அதை வலுப்படுத்தும் விதமாகவே தாமஸ் மன்னின் எழுத்துலகமும், நாஜிக்களுக்கு எதிராக அவர் தொடர்ந்த எதிர்ப்பும் அமைந்துள்ளது.

தாமஸ் மன் (Thomas Mann) நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர்.Budden Brooks,The Magic Mountain, Death in Venice’ ஆகியன இவருடைய முக்கியமான படைப்புகள்.நோய் குறித்து எழுதப்பட்ட உலக இலக்கியங்களில் (The Plague,Cancer Ward,The Bell Jar,ஆரோக்கியநிகேதனம்) இவரது The Magic Mountain முக்கியமான இடத்தை வகுக்கிறது.

இவருடைய படைப்புகளில் நீட்ஷே,ஷோஃபனரருடைய தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இவருடைய டைரி குறிப்பு, Death In Venice’ ன் காதாப்பாத்திரத்தின் இயல்பு கொண்டு இவர் ஓர் ஓரிணைசேர்க்கையாளராக கருதப்படுகிறார்.

Listen German! என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து நாஜிக்கு எதிரான தனது அரசியல் நிலைப்பாட்டை பேசி வந்திருக்கிறார்.

ஹெர்மன் ஹெஸ்ஸேவும் ,இவரும் தொடர்ந்து கடித தொடர்பில் இருந்துள்ளனர். இருவருமே இந்திய மரபை வைத்து ஒரு கதை எழுதுயிருப்பது சுவாரஸ்யமான விசயம்.(இருவரும் நோபல் பரிசு பெற்றவர்கள்).

மாறிய தலைகள் (Transposed Head) மனிதனின் இருப்பு (Being) பற்றியும் அவனது ஆசைகள் (Desire) பற்றியும் அது எவ்வாறு மதம், திருமணம் போன்ற அமைப்புகளை கேள்விக்குள்ளாக்குகிறது போன்ற எக்காலத்திற்குமான சிக்கலை விசாரணை செய்யும் கதையாகும்.

இந்த கதையை சாமதேவ என்பவர் எழுதிய Katha Sarita Sagara லிருந்து தழுவி தாமஸ் மன் எழுதியுள்ளார். தாமஸ் மன்னிலிருந்து கிரிஷ் கர்னாட் ஹாயவதனா (Hayavadana) என்ற பெயரில் நாடகமாக தழுவி இயற்றியுள்ளார். மூன்று கதைகளுமே ஒரே கருவை வைத்து வெவ்வேறு முடிவுகளை சென்று சேர்கின்றன.

சாமதேவ எழுதிய கதையில் விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதையை சொல்லி கேள்வி கேட்கும்.
அந்த கதையில்,
கனவன், மனைவி, மனைவியின் தம்பியும் பயணம் செய்வார்கள்.அப்போது வழியில் காளி கோயிலுக்கு வணங்க செல்லும் கனவன் காளியின் கோர ரூபம் கண்டு தலையை துண்டுத்துக் கொள்கின்றான்.பின்னால் வந்த தம்பியும் பிணத்தை கண்ட அதிர்ச்சியில் தானும் தலையை கொய்து கொள்கிறான்.கடைசியாக இரு பிணங்களை பார்த்த மனைவி தூக்கிட்டு தற்கொலைக்கு எத்தனிக்கும் போது காளி தோன்றி தலையை ஒட்டிக் கொண்டு உயிர்ப்பிக்க அருள் புரிகிறாள்.அவசரத்தில் தலையை மாற்றி வைத்து விடுகிறாள் மனைவி.

கதையை நிறுத்தி ,இப்போது யார் அவளுடைய கனவன் என்ற கேள்வியை கேட்கிறது வேதாளம்.
எந்த பிரச்சினையும் இல்லாமல் விக்ரமாதித்தன், கனவன் தலையை உடையவன் தான் கணவன் என்று கூறி கதை முடிகிறது.

இந்த அடையாளம் சார்ந்த தத்துவ பிரச்சினையை எடுத்து கொண்டுதான் தாமஸ் மன் நவீன கதையாக எதார்த்த மனிதர்களை வைத்து எழுதிப் பார்க்கிறார்.

சாமதேவருடைய கதை ஒரு நீதி கதை என்பதாலும் அது ஏற்கனவே உள்ள மதம் சார்ந்த கருத்துகளை கொண்டுதான் கதை முடிகிறது என்பதாலும் அங்கே தனிமனித உள்ளுணர்வில் தோன்றும் கேள்விக்கு இடமில்லை. அதனால் பிராமணியம் சார்ந்து தலைதான் (Superiority – Bron in bramma head) உயர்ந்தது என்ற கருத்தின் மேல் நாம் விமர்சனம் வைக்க இடம் உள்ளது.

தாமஸ் மன்னின் கதையில் அடையாளம் (Identity) சார்ந்து பிரச்சினையை எழுப்புவதால் Martin Hidegger – ன் ‌Being (“Dasein”) பற்றிய தத்துவம் கொண்டு ஆராயலாம்.

நான் (Being) என்பதை எனது உடல், நான் இங்கே இருக்கிறேன் என்ற உணர்வு ஆகிய அடிப்படையில் Saptial and Temporal ஆக வரையறுக்கலாம்.

சீதைக்கு ஸ்ரீதாமன் மீது ஆசை குறைந்து நந்தன் உடல் மேல் வேட்கை அடைகிறாள். பிறகு புதிய உருவம் பெற்ற கனவுடன் வாழும் வாழ்க்கையிலும் இறுதியில் சலுப்பே அடைகிறாள்.

இங்குதான் Hidegger ன் Being-in-Time பற்றிய கருத்து கொண்டு விவாதிக்கலாம்.

சில கலைச்சொற்களின் பொருள்:

Authenticity – (Set of rules) ஒருவருடைய பழக்க வழக்கம் (ஸ்ரீ தாமன் பிராமண ஆச்சார முறைகளை பின்பற்றி வாழ்பவன், அதுதான் அவனுடைய Authenticity)

PostRefflect- நிகழ்வு நடந்து முடிந்த பிறகு.

ஸ்ரீ தாமன் Authenticity படி அவன் sexual interest ஐ விருமபாதவன்.அதனால்‌ முதலில் சீதையை நிர்வாணமாக பார்த்த போது அதில் தெய்விக தன்மையை பற்றி பேசிகிறான். பிறகு அந்த உடல் குறித்து வேட்கை கொள்கிறான்.

ஒரு நிகழ்விற்கு பிறகு (PostRefflective Period) Being ன் Authenticity மாறும் என்றால் மாறிய ‌தன்மைதான் அதன் Authenticity ஆகும். அப்படி பார்க்கும் போது Being in Time என்பது தொடர்ந்து Past-Present-Future ல் , ஒவ்வொரு புதிய ‘now’ ஐ சந்தித்துக் கொண்டே இருக்கிறது.

Lack (குறை) முதலில் தெரிகிறது, அதிலிருந்து Desire உருவாகிறது, Desire ஒரு Completeness நோக்கி நகர்கிறது. Comleteness என்பது நிரந்தரம் இல்லை என்பதால் இதற்கு தீர்வாக Destruction ல் கதை முடிகிறது.

தாமஸ் மன் ‘Nature of Being’ பற்றி பேசிகிறார்.இதே theme ஐ வைத்தே கிரிஷ் கர்னாட் ‘Compeletenss of Being’ பற்றி எழுதி பார்க்கிறார்.

ஒரு வகையில் இந்திய மண்ணிலிருந்து எடுத்த கல்லைக் கொண்டே இங்குள்ள மாபெரும் புனிதமான மலைத்தேன்(சீதை) மேல் எரிந்துள்ளார் தாமஸ் மன்.

Hayavadana (குதிரை தலையை உடையவன்) என்ற நாடகத்தில்,இதே போல் குதிரை தலையை உடையவன் காளி கோவிலில் தலையை துண்டிக்க எத்தனிக்கும் போது காளி தோன்றுகிறாள்.அப்போது அவன் தன்னை முழுமையாக மாற்றும் படி கெஞ்சுகிறான். காளி அவனை முழு குதிரையாக மாற்றுகிறாள்.

கிரிஷ் கர்னாடின் முடிவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு கதை ஒரு முழுமையை‌த் தருகிறது(End With Completeness).மறுப்பவர்களுக்கு கதை முழுமையற்றதாக (End with Lack) இருக்கிறது. அதை தொடர்வது வாசகர்களின் desire.

வேதாளக் கதை being-ன் குறையைப் பற்றி பேசாமல் முடிகிறது.
தாமஸ் மன் கதையில் being முழுமையடையாமல் (Incompleteness) குறையுடனும் (Lack), ஆசையுடனும்(Desire) மரணத்தில் முடிகிறது.
கிரிஷ் கர்னாடின் கதையில் Hayavadana வை குதிரையாக மாற்றி உயிர் வாழ விடுகிறார். Hayavadanaன் மனநிலையை வாசகர்களின் முடுவுக்கே விட்டுவிடுகிறார்.

இறுதியாக மனிதன் (Being) பிறப்பிலிருந்து மரணம் தொடர்ந்து பல ‘now’ களை சந்தித்துக் கொண்டு மாறிக் கொண்டே இருக்கிறான் மரணிக்கிறான். ஆனால் இந்த பிரதிகளுக்கு நேரத்தால் எந்த தொடர்பும் இல்லை.அதனால் பிரதிகளுக்கு மரணம் என்பது கிடையாது.

இந்த கதைகள் ஒவ்வொரு முறை வாசிக்க படும்போதும், நினைவு கூறப்படும் போதும் மனிதனில் புதிய விளைவை உண்டு பண்ணுகிறது.புதிய கதைகளை உருவாக்குகிறது. இந்த பிரதிக்கு முடிவு என்ற ஒன்று கிடையாது, அதனால் முழுமையும் கிடையாது. அதனடிப்படையில் ஒரு பிரதியை ஒரு ஒட்டு மொத்த now களின் விளைவாக Consolidate ஆக பார்க்கலாம்.

இந்த மூன்று கதைகளையும் தனி தனி பிரதியாக காணாமல், மூன்றுமே ஒரே காலநதியின் வெவ்வேறு படித்துறைகள் எனலாம்.

காலநதிக்கு முடிவில்லை!

கோப்பெருஞ்சோழனின் நடுகல் – ராகவேந்திரன்

கொரானா கால சந்திப்புகள் – 4

கோப்பெருஞ்சோழனின்நடுகல்



கேட்டல்மாத்திரைஅல்லது, யாவதும்காண்டல்இல்லாதுயாண்டுபலகழிய,
வழுவின்றுபழகியகிழமையர்ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்படஒழுகல்என்றுஐயம்கொள்ளன்மின், ஆரறிவாளிர்!
5
இகழ்விலன்; இனியன்; யாத்தநண்பினன்;
புகழ்கெடவரூஉம்பொய்வேண்டலனே;
புன்பெயர்கிளக்கும்காலை, என்பெயர்பேதைச்சோழன்என்னும், சிறந்தகாதற்கிழமையும்உடையவன்; அதன்தலை,
10
இன்னதோர்காலைநில்லலன்;
இன்னேவருகுவன்; ஒழிக்க, அவற்குஇடமே!
 

புறநானூறு 216

“ நீங்கள் கேள்வி மூலம்தான் பழகி உள்ளீர்கள்; பார்த்துக் கொண்டதே இல்லை. பல ஆண்டுகளாக உரிமையுடன் பிழையின்றிப் பழகியவர்கள் தான். ஆனாலும், அரசே! அவர் வருவது கடினம் தான். உங்கள் முடிவை செயல் படுத்துங்கள்.  “ என்று  அறிவாளிகளே, நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம். 

அவன் இகழ்ச்சி அற்றவன்; இனிய நண்பன். எங்கள் நட்பின் பெருமையை தாழ்த்தி விட மாட்டான். அவன் பெயரைச் சொல்லும்போது கூட பேதைச் சோழன் என்று உரைப்பான். அன்புள்ள உரிமை கொண்டவன். அதனால் இனியும் தாமதிக்க மாட்டான். இப்போதே வந்து விடுவான். அவனது இடத்தையும் தயார் செய்யுங்கள்.

***

ஒவ்வொரு காலகட்ட சமூகமும் நெடுங்காலம் கழித்து வரும் சமூகத்திற்குச் சொல்வதற்காகச் சில செய்திகளையும் சின்னங்களை விட்டுச் செல்ல விரும்புகிறது. இன்றைக்கு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின், சாலைகளில் இப்போது பதித்து வைத்திருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அடையாளக் கற்களைப் பார்க்கும் வாரிசுகள் அவற்றை வீர்ர் வழிபாட்டு நடுகற்கள் என்று நினைக்கக் கூடும். அகழ்வாய்வில் ஒருவேளை கண்ணாடி இழை வடங்களைக் கண்டறிந்தால், மின்சக்தி உயிரோட்டமாகச் சென்று கொண்டிருந்ததன் சின்னம் அந்தக் கற்கள் என்று உணரக்கூடும்.  நாம் இன்று காணும் நடுகற்களும் உயிருள்ள வரலாற்றின் மிச்சம் தான். 

திருச்சிக்கு அருகிலிருக்கும் உறையூர் சென்றால், ஒவ்வொரு காலடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும். ஏதோ ஒரு மணற்பரப்பின் கீழ் கோப்பெருஞ்சோழன், அவனது நடுகல், அவனுடன் சேர்ந்து வடக்கிருந்து உயிர் நீத்தவர்கள் கிடக்கலாம்.

கோப்பெருஞ்சோழனுக்கு உறையூரில் நடுகல் அமைக்கப் பட்டதாகப் புறநானூறு கூறுகிறது. ஆனால் இன்று அது இருந்த இடம் அறியக்கூடவில்லை.  காலத்தின் சீற்றத்தாலோ காவிரியின் ஊற்றத்தாலோ கலைந்து போயிருக்கலாம். ஆனால் கல்லை விட நிலைத்த பதிவு சொல். நற்பேறாக கோப்பெருஞ்சோழன் தொடர்புடைய பல பாடல்கள் கிடைத்துள்ளன.

தனது மகன்கள் ஆட்சி கேட்டு போருக்கு அழைக்கிறார்கள். மன்னனும் அரசதர்மத்தின் படி எதிர் கொள்ளத் தயாராகி விடுகிறான். புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் அறிவுரை கூறுகிறார்.  ‘நீ வென்றால், வாரிசு இல்லாமல் நாடு அழியும். தோற்றால் நீ இழுக்கு அடைவாய். எனவே, விட்டு விடுதலையாகி நிற்பாய்’.

மன்னன் ஆட்சியை மகன்கள் வசம் அளித்து விடுகிறான். மேலும் சமணர்கள் சிறிது சிறிதாக உயிர் துறக்கும் பெரும் விரதமாகிய வடக்கிருத்தலை மேற்கொள்கிறான்.: புலவர் வடக்கிருக்கச் சொன்னாரா என்ன? வானோர் விரும்பும் நற்செயல் செய்யவும் துன்புற்றோர்க்கு அருள் சுரக்கவும் தான் சொல்லி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மன்னன் முடியுடன் உடலும் துறக்கிறான். ஏன் அந்த முடிவை எடுத்தான்? வாழ்வின் சில தருணங்கள் அடிப்படைக் கேள்விகளை எழுப்பி எல்லையை நோக்கித் தள்ளி விடுகின்றனவா? சமணர்கள் நூலாகிய அருங்கலச் செப்பு கூறுகிறது

 “இடையூறு, ஒழிவில் நோய் , மூப்பு    இவை வந்தால்

  கடை துறத்தல் சல்லே கனை”.

கோப்பெருஞ்சோழனின் அருமை நண்பர் பாண்டிய நாட்டில் வாழும் பிசிராந்தையார். அவர்கள் பார்த்துக் கொள்ளாமலேயே அன்பு செலுத்திவருகிறார்கள் என்பது நட்புக்கு மேலும் ஒளியூட்டுகிறது.  ஒரு வேளை வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அரசியல் – உளவு சிக்கல்கள் வரும் என நினைத்திருக்கலாம்.

வடக்கிருத்தல் களத்தில் சோழன் சொல்கிறான் – பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் ஒதுக்குங்கள். – ‘ஒழிக்க அவற்கு இடமே’. மன்னனுடன் வடக்கிருத்தலுக்கு பலர் முன் வருகின்றனர். ஆனால் பிசிர் என்னும் ஊரைச்சேர்ந்த ஆந்தையாருக்கு சிறப்பான இருக்கை அளிக்குமாறு சொல்கிறான் சோழன். தனது முடிவை கண்டிப்பாக தூதன் மூலம் நண்பருக்கு அனுப்பியிருப்பான்.

புறம் 214ஆம் பாடலில்  கோப்பெருஞ்சோழன் உலகிற்கு பொதுவான அறிவுரை கூறுகிறான் – “உயர்ந்த செயலுக்கு ஊக்கம் கொள்ளவேண்டும்” – ஒரு இறுதிச் செய்தி போல.  பாடல் 215 சோழன் “அவர் வந்து விடுவார் “ என்று கூறுவது தான்.  213 ஆம் பாடல் தான் புல்லாற்றூர் எயிற்றியனாரின் அறிவுரை. 

212 ஆம் பாடல் பிசிறாந்தையார்  கோப்பெருஞ்சோழன் மீது அன்புடன் பாடியது. இதில் கோழியூர் (உறையூர்)  பற்றிய குறிப்பு வருகிறது. 217 ஆம் பாடல் பொத்தியார் என்னும் புலவர், பிசிராந்தையார் வடக்கிருக்க வந்து விட்ட்தை பரவசத்துடன் பாடியது. ஆனால் நண்பர் வரும்வரை கோப்பெருஞ்சோழன் உயிர் வைத்திருந்தானா என்பது அறியக் கூடவில்லை.

புறம் 218 பிசிராந்தையார் வடக்கிருந்தபின் கண்ணாகனார் அவரைப் புகழ்ந்து பாடியது. (சான்றோர் சான்றோர் பாலர் ஆப). 219 கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாகனார் கோப்பெருஞ்சோழனைப் பாடியது. 

பொத்தியாரின் வாழ்வு இனியது. அவரும் வடக்கிருக்க விரும்பியபோது, சோழன் சொல்கிறான் – உமக்கு மகன் பிறந்தபின் வருக – என்று.அவர் சோழனின் நடுகல் கண்டு பாடியது 221 (நடுகல் ஆயினன் புரவலன்). அவருக்கு மகன் பிறந்தபின் சோழனின் நடுகல்லிடம் சென்று ‘ என் இடம் யாது?’ என்று கேட்டு வடக்கிருக்க முனைவதை 222 ஆம் பாடல் காட்டுகிறது. 223 பொத்தியார் சோழனை இடம்  கொடுத்த்தற்காகப் புகழ்வது.

தற்காலத்திலும் ஆண்டு தோறும் ஏறத்தாழ 240 சமணர்கள் சல்லேகனை (வடக்கிருத்தல் ) செய்கிறார்கள் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. இது தற்கொலை செய்யும் குற்றமாகும் என்று எழுதிய ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் 2015 இல் தடை விதித்துள்ளது. 

இந்தியப் பெருநிலத்தில் மானுடன் மரணத்துடன் உரையாடிக் கொண்டே இருந்திருக்கிறான். அதைப் புரிந்துகொள்ள – அடக்கியாள – வென்று கடந்து செல்ல முயன்று கொண்டிருக்கிறான். நாட்டிற்காக போரில்   உயிர்நீத்த வீர்ர்களுக்கும் தன் புலன்களையும் மனதையும் வெல்ல உயிர்நீத்த மகா வீரர்களுக்கும் நடுகல் வைத்துக் கொண்டிருக்கிறது மானுடம். இந்தக் கற்கள் ஆகாயத்திடம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றன – ‘அங்கும் எனக்கு இடம் உண்டு’

நமக்கு கோப்பெருஞ்சோழனின் மகன்கள் யார் என்று தெரியாது. பிசிராந்தையாரின் நாட்டை ஆண்ட பாண்டிய மன்னன் பற்றியும் தெரியாது. ஆனால் சோழனையும் அவனைப் பாடிய புலவர்களையும் தமிழ் உள்ளவரை கொண்டாடுவோம். சொல்லை விடச் சிறந்த நடுகல் இல்லை.

கொரானா கால சந்திப்புகள் – 4

மே 24 அன்று எங்களின் நான்காவது ஸ்கைப் சந்திப்பு நிகழ்ந்தது. ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டமையால் நண்பர்கள் வெளி வேலைகளையும் கவனிக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்நிகழ்வில் பங்கேற்பு முந்தைய சந்திப்புகளை விட குறைவாகவே இருந்தது. ஆனால் ஸ்கைப் சந்திப்புகளில் மிக அணுக்கமானதாகவும் இதுவே இருந்தது.

நண்பர் நவீன் சங்கு தாமஸ் மண் எழுதிய “மாறிய தலைகள்” குறுநாவலை தேர்ந்தெடுத்திருந்தார். சற்று பெரிய குறுநாவல் என்றாலும் புராணத் தளத்தில் நடைபெறும் கதை என்பதால் விரைவிலேயே வாசிக்க முடிந்தது. மேலும் தாமஸ் மண் எழுதிய நாவல்களில் தமிழில் தற்போது கிடைப்பது இது ஒன்றுதான் என்றும் தெரிகிறது. தமிழில் மட்டும் வாசிக்கும் நண்பர்கள் தவறவிடாமல் வாசிக்க வேண்டியது இந்த குறுநாவல். தமிழாக்கம் செய்யப்படாததாலேயே “தாமஸ் மன்”னை தமிழ் வாசகர்கள் தவற விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

மாறிய தலைகள் ஒரு வகையில் புராண அங்கத ஆக்கம் என்று சொல்லலாம். இந்திய தத்துவங்களின் மேல் பெரும் ஆர்வம் கொண்ட ஷோபன்ஹெயரின் பற்றாளரான தாமஸ் மன் இந்திய தத்துவியலை தீரமாக ஆராய்ந்திருக்கிறார். அவரின் அப்புரிதல்களின் மீது நின்று கொண்டு ‘நிறுவனமாக்கப்பட்ட’ அத்தனையையும் மெல்லிய அங்கதத்துடன் கேள்விக்குள்ளாக்குகிறார். தீவிர அரசியலில் ஈடுபாடு கொண்ட அவரின் பின்புலத்தை அறிந்துக் கொள்ளும்போது அவரின் இக்கேள்விகள் அர்த்தம் பொருள்படுகிறது. நாஜிக்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி அதனால் நாடுகள் தாண்டிச் சென்று தலைமறைவாக வாழ்ந்தவர் அவர். நிறுவனங்களாக ஆக்கப்படும் கலாச்சாரத்தின் விளைவுகளை தகிக்கும் நிலத்தில் நின்று புரிந்துக் கொண்டவர். ஆனால் இக்குறுநாவலில் பெரும்பாலும் தனிமனித விழுமியங்களையும், அவர்களை பிரிக்கும் சமூக தளங்களின் முரணையும், திருமணம் மற்றும் அது பறிக்கும் உடல் மீதான உரிமைகளையும் விவாதங்களுக்குட்படுத்துகிறார். துறவு வாழ்வையும் அவர் விட்டுவைக்கவில்லை. எதை எப்படி மாற்றி குழப்பினாலும் இயற்கை தன்னை மீட்டுக் கொள்ளும். தலைகள் மாறினாலும் தனக்கேற்ற உடலைத் தலை மாற்றிக் கொள்ளும். ஶ்ரீதமன், நந்தன், சீதா மூவரும் மூவராலும் தலையும் உடலுமாய் தனித்தனியாய் பார்க்கப்படுகின்றனர். அவ்வொவ்வொரு கணத்திலும் அவர்களின் மன எண்ணங்கள் இங்கே முக்கியமாக விவரிக்கப்படுகிறது. தலைகளும் உடல்களும் விழைவுகளுக்கு மாற்றான தத்துவங்களின் குறீயிடாக மாறி அமைகிறது. இக்கதைச் சொல்லியின் மாறுபடும் தொனி அலாதியானது. காளி இறங்கி பேசும் இடம், மொழி புராணத் தன்மையிலிருந்து உலகியல் தன்மைக்கு மாறுவது அங்கதத்தின் உச்சம். மனிதர்களெல்லாம் புனிதர்களைப் போல அறங்களையும் தத்துவங்களையும் பேசிக் கொண்டிருக்கும்போது காளி எனக்கான மரத்தில் தூகிட்டு தொங்கி அதன் புனிதத்தை கெடுத்துவிடாதே என்று அலுத்துக் கொள்கிறாள். இக்கதையை இந்திய தத்துவியலுக்கு எதிரானது என்றோ அல்ல இந்திய மரபை தெரியாமல் மேற்கத்தியவர் எழுதியது என்றோ தவறாக புரிந்துக் கொள்ளாவிட்டால் மனித விழுமியங்களையும் விழைவுகளையும் அங்கதச் சூட்டில் வாட்டி தாமஸ் மன் பரிமாறுவதை அலாதியாக அனுபவிக்கலாம்.

பாலாஜி, சுகுமாரனின் இரு கவிதைகளை தேர்ந்தெடுத்திருந்தார். இக்கவிதைகள் எந்த வரிசையில் வைத்து வாசிக்கப்பட வேண்டுமென்றும் உணர்வுநிலைகளை மிகக் கூரான சொற்களால் அது விவரிக்கும் தன்மையினை முன்வைத்தார். இக்கவிதைகளிலும் காளி வந்திருந்தாள்.

ராகவேந்திரன், கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கும் புறநானூற்றுப் பாடல் – 216 தேர்ந்திருந்தார். நட்புக்கு இலக்கணமாகத் திகழும் இப்பாடலில் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் ‘ஒழிக்கும்படி’ கேட்கப்படுகிறது. ஒருமுறை கூட சந்திராத நண்பன் எனக்காக வந்து என்னுடன் வடக்கிருப்பான் என்னும் சோழனின் நம்பிக்கை மிதமிஞ்சி நட்பின் பெருமையை உரக்கக் கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வந்தார் என்றும் அவரும் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்றும் பின் வரும் புறாநானூற்றுப் பாடல்கள் சாட்சி சொல்கிறது. ஶ்ரீதமனும் நந்தனும் போலவே நட்புக்காக உயிர் துறக்கும் இன்னொரு நட்புக் கதை விவாதிக்கப்பட்டது.

மூன்று தேர்வுகளுக்கும் இருந்த ஒற்றுமை வியப்பளித்தது. ஏதேச்சையான நிகழ்வுகளின் ஒற்றுமைகளில் வியப்பு ஒரு சொட்டு விழுவதால் மகிழ்வு சற்று தூக்கலாகுகிறது. இருண்மையான இந்நாட்களில் எதுவும் கொஞ்சம் அதிகாமாகத்தான் தேவையாயிருக்கிறது.

நரேன்

உள்ளத்தால் உள்ளலும் தீதே – செல்வேந்திரன்

கொரானா கால சந்திப்புகள் – 3

ஓரொரு பேரதிர்ஷ்டத்திற்குப் பின்னாலும் நிச்சயம் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது என்கிற மரியோ பூஸோவின் வரிகள் திரைப்பட ரசிகர்களுக்குப் பரிச்சயமானது. பூஸோவின் தி காட்ஃபாதர் நாவல் எழுதப்படுவதற்கு 138 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான ‘தந்தை கோரியோ’ நாவலில் பால்சாக் எழுதிய வரிகள் இவை. ரத்தத்தில் ஈட்டிய செல்வத்தை ஏற்றுக்கொள்வதன் தத்தளிப்பு பால்சாக்கின் பல கதைகளில் இடம்பெறுகிறது. செந்நிற விடுதி அத்தகைய கதைகளுள் ஒன்று.  

1831-ல் ஃப்ரெஞ்சு மொழியில் பால்சாக் எழுதிய சிறுகதை L’Auberge rouge – ஆங்கிலத்தில் ‘The Red Inn’ -தமிழில் ராஜேந்திரன் செந்நிற விடுதி (தமிழினி பதிப்பகம்) எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். கதைசொல்லி ஒரு விருந்தில் இருக்கிறான். உண்டு களித்தபின்னர் விருந்தாளிகளுக்கு ஒரு ஜெர்மானியன் கதை சொல்லத் துவங்குகிறான். மருத்துவ மாணவர்கள் இருவர் கட்டாய ராணுவ சேவையாற்ற ஃப்ரான்ஸிலிருந்து ஜெர்மனியின் ஆண்டர்நாக் நகருக்கு வருகிறார்கள். வழியில் செந்நிற வர்ணம் பூசப்பட்ட விடுதி ஒன்றில் தங்க நேரிடுகிறது. விடுதியில் இடநெருக்கடி. விடுதியடைக்கும் நேரத்தில் வந்த ஒரு ஜெர்மானிய வியாபாரியோடு இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. உணவையும் படுக்கையையும் பகிர்கிறார்கள். வியாபாரியின் பையில் இருக்கும் கணக்குஞ்செல்வம் இளைஞர்களுள் ஒருவனான ஃப்ராஸ்பர் மேக்னனுக்குப் பேராசையை உண்டாக்குகிறது. வணிகனைக் கொலை செய்ய திட்டமிடுகிறான். அறுவை சிகிட்சை கத்தியை எடுத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் வணிகனைக்  கொலை செய்யப்போகையில் திடீர் மனமாற்றம் ஏற்பட்டு தன் மீதே வெறுப்பு உண்டாகிறது. கத்தியை வீசிவிட்டு ரைன் நதிக்கரையோரம் நள்ளிரவில் அங்குமிங்கும் நடக்கிறான். மனம் தெளிவடைந்ததும் மீண்டும் விடுதிக்கு  திரும்பி உறங்கிப் போய்விடுகிறான். விடியல் அவனுக்கானதாய் இல்லை. வணிகன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான். உயிர் நண்பனைக் காணவில்லை. ஃபராஸ்பர் மேக்னன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அவனது தத்தளிப்புகளும், சிறையில் சந்திக்கும் புதிய நண்பனுமாக கதை செல்கிறது. காணாமல் போன நண்பன் யார்? இந்த விருந்திற்கும் செந்நிற விடுதிக்கும் என்ன சம்பந்தம்? கதை சொல்லிக்கும் கொலையாளிக்குமான உறவு எத்தகையது? ஒரு மர்மக்கதையைப் போலத் துவங்கி மானுட மனங்களின் முடிவுறா மர்மங்களை அறிந்துகொள்ள முயல்கிறது செந்நிற விடுதி. குற்றமே தண்டனை எனும் தரிசனத்திலிருந்து முன்னகர்ந்து குற்ற விழைவுமே தண்டனை எனும் புள்ளியை அடைகிறது. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கல்வேம் எனப்பாடிய வள்ளுவனும் பால்சாக்கும் கைகோர்த்துக்கொள்ளும் புள்ளி இது. 

நவீன இலக்கியம் என்பது தொப்புளுக்கு மேல் கஞ்சியினருக்கு எனும் எண்ணமே மேற்குலகில் அன்றிருந்தது. பெருவிருந்துகளிலும் உறவுக் கூடுகையிலும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக, உயர்ந்த கேளிக்கையாக கதைகள் சொல்லப்பட்டன. அக்காலகட்டத்தின் முகமாகத் திகழ்ந்தவர் ஹொனேரே டி பால்ஸாக் (1799-1850). பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஃப்ரெஞ்சு வாழ்வியலைக் கதைகளாக எழுதிக் குவித்தார். படம் பிடிப்பதைப் போன்ற துல்லிய சித்தரிப்புகளால் யதார்த்தவாத அழகியலின் தந்தை என கருதப்பட்டார். அவர் தீவிரமாக இயங்கியது வெறும் 18 ஆண்டுகள்தான். ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். நாளொன்றுக்குப் பதினைந்து மணிநேரங்கள் தொடர்ச்சியாக எழுதினார். தி ஹ்யூமன் காமெடி எனும் அவரது நாவல் வரிசை 90 நாவல்களை உள்ளடக்கியது. ஏங்கெல்ஸ் இவரது படைப்புகளால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸூக்கு இவரைப் பற்றி கடிதம் எழுதினார். மூலதனத்தின் பல இடங்களில் பால்சாக்கின் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியால் பால்சாக்கின் தாக்கத்தை உணரமுடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டை நான் பால்சாக்கின் கண்களின் வழியாகத்தான் பார்க்கிறேன் என்றார் ஆஸ்கார் வைல்டு.  உலகெங்கிலுமுள்ள சிந்தனையாளர்களை படைப்பாளர்களை பால்சாக் பாதித்தார். தமிழில் புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா துவங்கி சுஜாதா வரை பால்சாக் பலரையும் ஈர்த்தார். 

செந்நிற விடுதி சிறுகதைக்கான தூண்டுதலை பால்சாக் ஒரு ஃப்ரெஞ்ச் ராணுவ அதிகாரி சொன்ன நிஜ சம்பவத்திலிருந்து பெற்றுக்கொண்டார். கதை நெப்போலியன் முற்று முழுதாக ஃப்ரான்ஸை கைப்பற்றிக்கொள்வதற்கு முந்தைய மாதத்தில் நிகழ்கிறது. அரசு, நிர்வாகம், பொருளாதாரம், எதிர்காலம், பொதுஒழுங்கு குறித்த நிச்சயமற்ற நெருக்கடியான சூழல். ஒவ்வொருவரும் எதையேனும் செய்து தங்களை வளம்மிக்கவர்களாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் யத்தணிப்பு நிலவிய காலகட்டம். பொருளியல் லாபங்களை உத்தேசித்தே உறவுகள் உருவாகிக்கொண்டிருந்தன. கதையில் வரும் விடுதிக்காரன் தான் நெடுநாள் உத்தேசித்த திராட்சை தோட்டத்தை சமீபத்தில்தான் வாங்கினேன் என்கிறான். மருத்துவ மாணவர்கள் தங்கள் அறுவைச் சிகிட்சை கத்திகள் பெருவணிகனுக்கு நிகரான பொருளை ஈட்டித்தருமா என அங்கலாய்க்கிறார்கள். நீண்டகால ஆசையான முப்பது ஏக்கர் நிலத்தை வாங்க வேண்டும் எனும் திட்டமே ஃப்ராஸ்பர் மனதில் கொலைத்திட்டத்தை உருவாக்குகிறது. வனத்தில் மிருகங்கள் கைக்கொண்டிருந்த சட்டங்களையே நாட்டில் மனிதர்களும் பின்பற்றத் துவங்கியிருந்தார்கள் என்கிறார் பால்சாக். ஊரடங்கு நாட்களில் நம் வணிகர்கள் வெளிக்காட்டிய அறத்தின் அதிர்ச்சியை உணர்ந்தவர்கள் இச்சுழலை மேலும் நெருங்கியறிய முடியும். 

வாழ்விடத்தின் நெருக்கடிகள் குற்ற விழைவைத் தூண்டுவதையும், இயற்கையின் அருகாமை மனதின் கசடுகளை நீக்கிவிடுவதையும் பால்சாக் துல்லியமாகச் சித்தரிக்கிறார். உரிய அறைகள் இல்லாமல் நெருக்கடியில் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு வெக்கையிலும் பூச்சிக்கடியிலும் தூக்கம் வராமல் புரண்ட மனதிற்குள் கொலைச்சிந்தனை உருவாகி விடுகிறது. ஒரு நொடியில் மனம் மாறி ரைன் நதிக்கரையோரம் நடைபோடுகையில் ஆன்மா ஒளிபெறுகிறது. கோர எண்ணங்கள் மறைகின்றன. இயற்கையின் பேருரு  மனிதனின் சிறுமைகளைக் களைகிறது. மனிதர்கள் வீடடங்கிக் கிடக்கும் நாட்களில் உலகெங்கும் ‘குடும்ப வன்முறைகள்’ பீறிட்டுக் கிளம்புவதை இத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது. 

எழுதப்பட்டு இருநூறாண்டுகளான பின்னும் பால்சாக் மேதைமையால் சிருஷ்டிகரத்தால் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். துல்லியமான சித்தரிப்புகள், அபாரமான நகைச்சுவை, ஆன்மீகமான கேள்விகள் இவரது படைப்புலகின் அடிநாதமாக விளங்குகின்றன. பால்சாக்கின் பல கதைகளில் விருந்துகளும் உணவுகளும் விரிவாகப் பேசப்படுகின்றன. உணவின் மீதான ரசனையையும் உண்ணும் முறையையும் கொண்டு கதாபாத்திரங்களின் இயல்பையும் வாழ்க்கைச் சூழலையும் வாசகனுக்கு உணர்த்தி விடுவார். மிகப்பெரிய சாப்பாட்டுப் பிரியரான பால்சாக்கின் உணவு முறையைப் பற்றியே தனிநூல் எழுதப்பட்டுள்ளது. பத்துப் பதினைந்து பேருக்குரிய உணவை அவர் ஒற்றையாளாக வெளுத்துக்கட்டுவார்.  பன்றி போல தின்றால் பன்றிக்குணம் வரும் என்கிறார் ப.சிங்காரம். பால்சாக் தேனீ போல உழைத்தவர். ஒவ்வொரு நாளும் பகல் ஒருமணிக்குத் துவங்கி மறுநாள் காலை 5 மணிவரை எழுதியவர் அவர். நாளொன்றுக்கு 30 முதல் 50 கோப்பைகளுக்குக் குறையாமல் கருப்பு காபி அருந்துவார். எழுதும்போது ஒரு மதகுருவைப் போல உடையணிந்துகொள்வார். இவையெல்லாம் தன் படைப்பின் ஊற்றுக்கண்கள் எனும் நம்பிக்கை அவருக்கு இருந்தது. 

இன்னொருவனின் ரத்தத்தில் ஈட்டிய செல்வத்தை ஏற்றுக்கொள்வதா எனும் அறக்கேள்வியை பலதரப்பட்ட கதைமாந்தர்களின் வழியாக முன்வைக்கும் இச்சிறுகதை இருமுறை திரைப்படங்களாக்கப்பட்டுள்ளது. வணிகனைக் கொன்று தன் வாழ்வை வளமாக்கிக் கொண்டவன் டெட்டனஸ் நோயால் வாழ்நாள் முழுக்க அவதிப்படுகிறான். தடுப்பூசி கண்டு பிடிப்பதற்கு முன் உலகையே அச்சுறுத்திய ஒருவகை நரம்பு நோய். நோய்த்தாக்குதல் அடைந்தவனின் உடல் வில்போல வளைத்துக்கொள்ளும். பார்ப்பதற்கு சக்கராசனம் செய்வது போல இருக்கும். வலியால் கதறுவார்கள். அலறல் சத்தம் கேட்பவர்களை உறையச் செய்யும். கழுத்தில் உயிருள்ள அட்டைகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சுவதே அன்றைக்கு இருந்த தற்காலிக நிவாரணி. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை என வள்ளுவன் பாடுவதைப் போலவே இதுவும் ஒருவகை ஃப்ரெஞ்ச் அறம்பாடல். 

ஒரு கொசுறு செய்தி. கதையில் குறிப்பிடப்படும் விடுதி L’Auberge rouge என்பது நிஜத்தில் இருந்த விடுதி.  ஃப்ரெஞ்சு குற்றப்பின்னணியாளர்கள் அதிகமும் நடமாடிய பகுதி. இந்த விடுதியின் உரிமையாளர்களான கணவனும் மனைவியும் தன் ஊழியர்களின் துணை கொண்டு குறைந்தது ஐம்பது விருந்தினர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்தார்கள். தங்களால் கொல்லப்பட்டவர்களை சமைத்து உண்டார்கள். சில சமயம் விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கும் பரிமாறினார்கள். அங்கு கற்பழிப்புகள் நிகழ்ந்தன. நெடுங்காலத்திற்குப் பின் அவர்களது குற்றங்கள் கண்டறியப்பட்டு விடுதியின் முன் ஊரார் திரண்டு நிற்க கில்லட்டின் இயந்திரத்தில் நால்வரும் தலைவெட்டி கொல்லப்பட்டார்கள். இன்று அந்த விடுதி புகழ்மிக்க சுற்றுலா கவர்ச்சியாக பிரான்ஸ் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என வாதிடும் வரலாற்றாசிரியர்கள் உண்டு. நெப்போலியன் கால சட்ட நடைமுறைகளில் குற்றத்தை கண்ணால் பார்த்த சாட்சியங்கள் வேண்டுமென்பது அவசியம் இல்லை. செவிவழிச் செய்திகள் அல்லது மக்களின் மத்தியில் உலவும் வதந்திகள் போதுமானது. 

கொரானா கால சந்திப்புகள் – 3

மே 10 காலை கொரானா கால மூன்றாவது ஸ்கைப் சந்திப்பில் விவாதிப்பதற்காக செல்வேந்திரன் பால்ஸாக்கின் குறுநாவல் ஒன்றை தேர்ந்தெடுத்து பகிர்ந்திருந்தார். பால்ஸாக்கை அறிந்துக் கொள்வதற்கு இதைவிட சிறப்பான ஒரு கதை இருக்க முடியாது என்று தோன்றும் அளவிற்கு ஒரு அலாதியான வாசிப்பு அனுபவமாக இருந்தது. நற்றினை 31ம் பாடலை பூபதி சங்கப் பாடல் வரிசையில் முன் வைத்தார். அப்பாடலை அறிமுகப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை மிக செறிவான உரை ஒன்றை வழங்கினார். சூல் கொண்ட குருகு தொட்டு தொட்டு செல்லும் அலையோசையை கண்டு அஞ்சுவதைப் போல தலைவியின் பயம் எதனால் என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கும் என்று தோன்றுகிறது. பறவையின் நிறைந்து முட்டை கனம் உள்ளுறை உவமமாக குறிப்பிடுவது தலைவி தன் நெஞ்சில் சுமக்கும் கனமா அல்ல சேய்க் கனமா என்று கற்பனை விரிவு கொள்கிறது. திணை திறை என்ற கரையை உடைத்துப் பார்த்தால் இப்பாடலின் சாத்தியங்கள் குறித்து நண்பர்கள் விவாதித்தது மிக முக்கியமானதாக இருக்கிறது.

நவீன கவிதைகள் பற்றிய உரையில் நான் தேவதேவனின் ‘அமைதி என்பது’ என்ற கவிதையை குறித்து பேசினேன். அனேக கவிதை வாசிப்புக் குழுக்களிலும் இலக்கிய விவாதங்களிலும் பெரும்பாலும் பேசப்பட்ட கவிதையாக இருந்தாலும், இதை தேர்ந்ததிற்கு காரணம் தேவதேவனை மீண்டும் முன்னிருத்துவதும், இதற்கு இணையாக இவரின் பிரிய கவிஞர்களான பிரமிள் மற்றும் எமிலி டிக்கின்ஸனின் கவிதைகள் ஒன்றில் பொதுக் கூறு ஒன்று அமைந்திருப்பதையும் பொதுவில் வைத்து வாசிப்பதுதான். பிரமிளின் ‘நான்’ என்ற கவிதையும் எமிலியின் “I am nobody, who are you?” என்ற புகழ்பெற்ற கவிதையும் இணை கவிதைகளாக வாசிக்கப்பட்டது. இந்த மூன்று கவிதைகளிலும் “அமைதி” “இருள்” என்பது ஒரே பொருள் கொண்டதாக அமைகிறது. தனிமையுணர்வு கொள்ளும் ஒட்டுமொத்த பிரபஞத்தின் எதிராக நின்று அது எழுப்பும் அத்தனை சத்தங்களுக்கும் அர்த்தம் என்ன என்று வினவுகிறான். நான் கொள்ளும் இந்த அமைதி என் வாழ்வு முடிக்கும் தறுவாயைப் போன்றதா, என் வாழ்வியல் ஆட்டங்களையெல்லாம் முடித்த பிறகு எய்திருக்கும் அமைதியா, அல்ல இதுதான் தொடக்கமா? உலகின் பொருளற்ற லட்சணங்களைப் புரிந்து கொண்டதால் இனிதான் என் வாழ்வு தொடங்கப் போகிறதா. ஆனால் எது எப்படியாயினும் இந்த ‘அமைதி’தான் இனி நான் என்கிறார் தேவதேவன்.

‘இருள் முனகும் பாதை’ என் மரணமும் அது ஈன்று தரும் பிறப்பும் பின் அது சென்று கதவடையும் ஒரு மரணமும் கொண்ட இடயறாத பாதை இது. ‘ஆருமற்ற சூனியத்தைப்’ பார்த்து ‘யாரோ நான்?’ என்று உரக்கக் குரல் எழுப்பும் இக்கவி தன் ‘குரல் மண்டிப்’ போவதை அவதானிக்கிறார். எமிலியோ எழும் சத்தமெல்லாம் தவளைகளின் சத்தம் என்கிறார். சத்தங்களால் ஈர்க்கப்பட்டு அதில் புதைந்து போகும் மனிதர்களுக்கே இத்தவளைகளின் சப்தம். தானோ ‘யாருமற்றவளாகவே’ இருக்க விழைகிறார். “யாருமற்ற’ ஒருவரோடுதான் அவரால் கை கோர்க்க முடியும். ஏதோ ஒன்றாகும் எவரும் பிரபஞ்சக் குப்பையில் கொட்டப்படுகிறார். இடையறாத சப்தம் எழும் அந்தப் பக்கத்திற்கு செல்லாமல் பிறைந்திறந்து மீளும் இந்தப் பாதையில் தாங்கள் யாருமாற்ற ஒருவராக தணிமை அமைதியில் சலனமற்ற இருளில் இருந்து அரனின் ஆட்டத்திற்கு சாட்சியாக மாருகிறார்கள் இப்பெருங்கவிகள்.

நரேன்

நயங்கள்- ராகவேந்திரன்

கொரானா கால சந்திப்புகள் – 2

அகநானூறுபாடல் 84- நயங்கள்

இஸ்தான்புல் காட்சியகத்தில் நூற்றுக்கணக்கான சுட்ட களிமண் பலகைகள் உள்ளன. அவற்றில் ஒரு பலகையில் உலகின் முதலில் எழுதியதாகச் சொல்லப்படும் கவிதை  உள்ளது. ஸு ஷின் என்னும் அரசனை அவன் திருமணம் நடைபெறும் நாளில் மணமகள் பாடியது. என்று சுமேரிய மொழி வல்லுனர்கள் தவிர யாருக்குமே அதன் மொழி புரியாது. இதே போல தொன்மை எகிப்து மொழியையும் சொல்லலாம். 

ஆனால் கி மு 150 வாக்கில் எழுதப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களை பெரிய சிரமங்கள் இல்லாமல் நம்மால் படித்துப் புரிந்து கொள்ளப் படுகிறது. தொடர்ச்சியாக அறுபடாமல் வரும் இந்த மரபுக்கு அகம்  – புறம் என வாழ்வை வகுத்துக் கொண்டதையும் அகத்திணை குடும்பம் என்னும் சமுதாயத்தின் அடிப்படை அலகை வலுப்படுத்தியதையும் நாம் காரணமாகக் கொள்ளலாம்.

 ஏகேராமானுஜன் சங்கப் பாடல்கள் மொழிபெயர்ப்பு  நூலுக்கு “The Interior Landscape” என்று பெயரிட்டுள்ளார்.  சங்கப் பாடல்கள் ஆழமான மனித உள்ளத்தின்  அசைவுகளையும் ஆடல்களையும் விரிந்த இயற்கைப் பின்புலத்தில் வைக்கின்றன.  மக்கள் தொகையும் புழங்கு பொருட்களும்  குறைவாக இருந்த காலம். மனிதன்  அன்றாடம் காண்பது பெரும் நிலப்பரப்புகள் தான். அழகிய மலை, காட்டுக் காட்சிகளும் அவை உருவாக்கும் மனநிலைகளும் இந்தப் பரப்பில் நிரம்பி இருக்கின்றன. . எனவே குறிஞ்சியும் முல்லையும் தான் புற அழகில் நம்மைக் கொள்ளை கொள்ளும் திணைகளாக உள்ளன. 

மலையும் மரமும் இல்லாத பாலைத்திணை உடலும், உள்ளமும் வறண்ட துயரைப் பாடுகிறது. நெய்தலில் கடலினுக்குள் செல்லும் வாழ்வு பேசப்படுவதில்லை. (புலவரைக் கலத்திலேற்றி அனுப்புவது யார்?). மருதம், வயல் சார்ந்தது.

வேளாண்மையில் தன்னிறைவு பெற்றவுடன்  பொருளியல் நிலைத்தன்மை கொண்டு விடுகிறது சமூகத்தில் ஒழுக்கக் கேடும் வந்து விடுகிறது. தலைவி , எதையும் தாங்குவாள், ஆனால் தலைவனின் கூடா ஒழுக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.  ; ஊடல் நிமித்தம்  உள்ளே வருகிறது.  ஆனால் சமூகத்தின் ஒரு சிறு பகுதியே இந்தச் சிக்கலில் மாட்டி இருக்கவேண்டும். மருதத் திணைப் பாடல்கள்  மிகவும் குறைவானவை என்பதை வைத்து இந்தக் கருத்துக்கு வருகிறார் பேராசிரியர் அ ச ஞாநசம்பந்தன். ஒப்புநோக்க மலைகள் பொதிந்த குறிஞ்சியும் அடர் காடுகளைக் காட்டும் முல்லையும் அதிகம் இயற்கையுடன் ஒட்டியும் அதிகம் இனிமையான மனநிலையையும் அளிக்கின்றன. 

இயற்கை வளம் நம் முன்னோருக்கு சிந்தனை வளத்தைக் கொடுத்து விட்டிருக்கிறது.  . 2000 ஆண்டுகளுக்கு முன் உலகின்  வரலாற்று வரைபடத்தைப் பார்த்தால் பெரும்பகுதி கற்கால மற்றும் வேட்டைச் சமுதாயமாக இருந்திருக்கிறது. வெகு சில இடங்களிலேயே நெறிகள் கொண்ட வாழ்க்கை நிகழ்கிறது. அதிலும் மிகக் குறைவான மக்கள் தொகை.    விரிந்தெழுந்தாக வேண்டும் மானுடத் தொகை. அதற்கு அறம் சார் இல்வாழ்வு அவசியத் தேவை.

அகம் புறம்  என மனித வாழ்வைப் பிரித்துக் கொண்டு ஆண்- பெண் வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கொண்டதே  தமிழ்ச் சமூகமும் மொழியும் அழியாது தொடர்வதன் ஒரு காரணம் என்று அ ச ஞானசம்பந்தன் கூறுகிறார்.  புறத்திணைகளுக்கு ஒதுக்கியதை விட அதிகப் பாடல்களும் நூல்களும் அகத்திணைக்கு வழங்கப் பட்டுள்ளன. 

குடும்பம்  சமூகத்தின் அடிப்படை அலகு. அதை நடத்துபவர்களின் அன்புதான் வாழ்க்கை இயந்திரத்தின் உயவுப்பொருளாக இருக்கிறது. தமக்குள் நிறைவாழ்வும் இன்பமும் அடைந்த பெற்றோரே நல்மக்கட்பேறும் விருந்தோம்பலும் சமூக நலமும் கொண்டு விளங்க முடிகிறது.

சங்கப் பாடல்கள் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நோக்கக் கூடிய ஒரு தொலை நோக்கி கிடைத்திருக்கிறது. அது அளிக்கும்  காட்சி தெளிவானது. ஆனால் மிகக் குறைவான நேரம் ஓடுவது. வாழ்வின் உணர்ச்சி உச்சங்களை  மட்டும் சாறு பிழிந்து உலர வைத்து , மாறாத மணத்துடன் காலம் கடந்து காட்டும் தைலப்புட்டிகளே இப்பாடல்கள். 

இந்தப் புட்டிகளில் அகநானூறு 84ஆம் பாடலை எழுதி இருப்பவர் மதுரை எழுத்தாளன் என்னும் புலவர். சங்க இலக்கியம் கிறக்கம் தருவதன் முக்கியக் காரணம் அவற்றின் முழுச் சூழலையும் ஆழத்தையும் அறிய முடியாமையும் ஆகும்.  

இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம். மதுரை என்றால் குமரிக்கோடு  ஒட்டி இருந்த கடல் கொண்ட தென் மதுரையா அல்லது தற்போதைய மதுரையா? எழுத்தாளன் என்பது தனிப் புலவரின் பெயரா அல்லது ஒரு குலக்குழுவின் பெயரா? கேரளத்தில் பின்னாளில் துலங்கிய எழுத்தச்சன் போல ஓர் ஆசிரியர் குலம் இங்கே இருந்ததா ? இவை போன்ற வினாக்கள் நம் மனதை விட்டு நீங்காது. அதனால் அவர் பெயரில் இருக்கும் ஒரே ஒரு பாடலும் நிலைத்திருக்கும். 

ஒரு கோட்டை இருக்கிறது.  மண்ணும் சுண்ணமும் சேர்ந்து செய்திருக்கவேண்டும். அதை முற்றுகை இட்டு வென்று விட்டான் பாண்டியமன்னன். அவன் கழுத்தில் வேப்பம்பூ மாலை. தோற்று விட்ட நிலத்தின் தலைவன் கப்பமும் கொடுக்கத் தயார்.  . 

ஆனாலும் மன்னனுக்கு  ஏதோ நிறைவில்லை. வெற்றி பெற்ற பிறகு வரும் வெறுமையா? அல்லது வெற்றி பெற்ற விதம் வேறு வடிவில் இருந்திருக்க வேண்டுமா? எதிர்பார்த்த உச்சம் வருவதற்குள் போர் முடிந்து விட்டதா? ஏனோ தெரியவில்லை. சினத்தில் சிறந்து பாசறையிலேயே தங்கி விட்டான். அவனுடன் வந்த சிறுகுடித் தலைவன் தான் இந்தப் பாடலின் தலைவன். 

மழைக்காலம் தொடங்கும் போது வந்து விடுகிறேன் என்று தன் மனைவியிடம் வாக்குக் கொடுத்து விட்டு வந்துள்ளான். இல்லத்தைக் காத்து, விருந்தினரையும் அருளி காத்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு செய்தி சொல்ல ஒரு தூதனைப் பிடிக்கிறான். தூதனுக்கு செய்தியும் , முகவரியும் , மனநிலையும் சரியாகக் கடத்தவேண்டும்.

அவள் யார்? ஒளிவீசும் நெற்றியை உடையவள் (எவ்வளவு தெளிவான அடையாளம் ! )

முகவரி;

நெருப்பு போன்ற கண்களை உடைய பன்றி ஒன்று. ,நுண்ணிய மணல் செறிந்த புழுதியில் உறங்கிக் கொண்டிருக்கும். அதன் முதுகு மறையும்படி முல்லை மலர்கள் விழுந்து மூடி இருக்கும். அத்தகைய காட்டின் வெளியே இருக்கும் சீரான  ஊர். 

அவள் அங்கே. 

நான் (தலைவன் ) இருக்கும் இடமெது?:  கோட்டைக்கு வெளியே அறுவடை முடிந்து விட்டது. சுமை தூக்கிகள் பெரிய நெல் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள். நெல் கட்டுகளுடன் தாமரை போன்ற  மலர்த்தண்டுகளும் சேர்த்துக் கட்டி இருக்கிறார்கள். நான் இங்கே. 

இங்கே காட்சி எப்படி?: 

மலையின் உச்சியில் வானவில் உட்கார்ந்திருக்கிறது. முரசு போல இடிக்கிறது மேகம். கடல் நீரைக் குடித்துப் பெருத்து தாழ்வாக ஊர்ந்து பூமியை வளைத்துக் கொண்டு  திசைகள் மறையும்படிப் பெய்கிறது மழை.  இப்படியாக அழகிய முல்லை நிலத்தில் மாரிக்காலம் வந்துவிட்டது. 

தூதுவன் போய்ச் சொல்லி இருப்பான். மன்னனும் ஒரு சலிப்பான கணத்தில் முற்றுகையை முடித்திருப்பான். தலைவனும் விரைவான தேரில் பறந்து வீட்டிற்கு வந்திருப்பான். அய்யனும் ஆச்சியும் மகிழ்ந்து, மக்கட்செல்வம் நிறைந்து, விருந்தோம்பி ,இனியவை கூறி  , தீவினை அஞ்சி ஒப்பரவறிந்து , புகழீட்டி, மூத்து, நிலம் நீங்கி இருப்பார்கள். அந்த மன்னனும், தூதனும் இதை எழுதிய எழுத்தாளனும் இன்று இயற்கையுடன் தனிமங்களாகக் கலந்து விட்டிருப்பார்கள். அவர்கள் நடந்த நிலமும் , ஊர்ந்த தேரும் , உருக்கிய பொன்னும் உருமாறி விட்டிருக்கும்.  

இறவாத இந்தப் பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வரும் அழகு எண்ண எண்ணப் பொலிந்து கொண்டிருக்கும். வாசிக்குந்தோறும் காட்சிகள் கோர்த்துத் தெளிந்து கொண்டே போகும். இந்த அனுபவமும் மொழியும் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் எந்த மொழிக்கும் அல்லது சமுதாயத்திற்கும் கிடைக்காதது. 

குறிப்புப் பொருள்

ஒரு செய்தியைச் சொல்வதற்கு கவிதை வேண்டாம். ஒலை நறுக்கு போதும். வரிகளைக் கவிதையாக்குவது அதில் எது நேரடியாகச் சொல்லப்படாததோ அது தான். இப்பாடல் உருவாக்கும் மனநிலையும் குறிப்புப் பொருளும் அழகானவை. குறிப்பால் உணர்த்துவது மொழியின் ஆழத்தையும் பழக்கத்தையும் பொருத்தது. 

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பியர் சூத்திரத்தில் ‘ குறித்தனவே’ என்பதே கவனிக்கவேண்டியது. சொற்கள் பொருளைக் குறிக்கத் தான் முடியும். ஒரு சொல் தான் குறிக்கும் பொருளிற்கான பிரதி மட்டுமே. அதன் சூழல், மன அமைப்பு, நோக்கம் மாறுவதற்கேற்ப, அது தரும் காட்சியும்  மாறிக்கொண்டிருக்கும். 

இறைச்சிப் பொருள், உள்ளுறை உவமம் என்னும் அழகுகள் அகத்துறையின் சிறப்பு. இந்தப் பாடலில் இரண்டு உள்ளுறை உவமங்கள் வருகின்றன. 

முதலில் தலைவியின் ஊரில் உள்ள காட்சி. 

முல்லை மலர்கள் வெண்மையும் நறுமணமும் கொண்டவை. இது தலைவியின் குணம் குன்றா மணவாழ்வைக் குறிக்கிறது. முல்லைப்பூக்கள்  விழுவதால் சேற்றுமணலில் உறங்கிக் கொண்டிருக்கும் பன்றி மறைக்கப் பட்டு விடுகிறது. இங்கே பருப்பொருள் ஒப்பீட்டிலும் மன ஓட்டத்திலும் ஒரு முரண் காண்பிக்கப் படுகிறது. பன்றியும் உறக்கமும்  தமோகுணத்தின் அடையாளம். முல்லையின் வெண்மை, மென்மை, நறுமணம் சத்வ குணத்தைக் குறிக்கின்றன. 

ஆழ்ந்துறங்கும் பன்றி அறியாது தன்மீது விழுந்த மலரின் சிறப்பை. மூர்க்கத்தால் போர் புரியும் மன்னன் அறியமாட்டான் தலைவன் தலைவியிடம் நிலவும் மெல்லியல்பை என்று விரித்தால் ஒரு ‘mindscape’ கிடைக்கிறது. 

இன்னொரு ஒப்பீட்டில், ஒளி பொருந்திய நெற்றியின் புற அமைதி கொந்தளிக்கும் மனத்தை மூடி இருக்கிறது, பன்றியை மூடிய முல்லையைப் போல. 

ஒண்ணுதல் என்ற ஒரு சொல் மட்டுமே அவளைப் பற்றிக் குறிக்கப் படுகிறது. 

நறுவீ முல்லை நாண்மலர் உதிர்வது ஒரு கரிய காட்டில் நடக்கும் கனவை எழுப்புகிறது. மலர்களில் பல நிலைகள் உள்ளன. அரும்பு , முகை, போது, வீ, செம்மல்.  வீ என்பது முதிர்ந்த , உதிரப்போகும் மலர்.  

இன்னுமொரு உள்ளுறை வயலில் காணப்படுகிறது. நெற்கதிர்களை அடுக்கிக் கட்டும்போது , நிறைய செந்தாமரைத் தண்டுகளும் பிற மலர்க்காம்புகளும் சேர்ந்து கட்டப் படுகின்றன. உழவர் நெல் அறுவடையில் இருக்கிறார்கள். இது வயிற்றுப்பாடு சேர்ந்தது. அதனால் உணவாகும் (நெல்) பூக்களே இங்கு முக்கியம். இதயத்தின் உணர்வுகளுக்கான இடமில்லை இது. தானியங்களுடன்  அழகுப் பூக்களும் சேர்ந்து கட்டப் படுகின்றன. 

மலர் பிறழ வாங்கிக் கட்டுவது மலர்தொடுப்பது போல இருக்காது. மாலையில் உட்கார்ந்து சிரிக்க வேண்டிய தாமரை சுமையைக் கட்டித் துன்பமடைகிறது. மலரின் துயர் வாளுக்குத் தெரியாது. முற்றுகையிட்டிருக்கும் மன்னனுக்குத் தெரியாது தன் தளபதியும் அவள் மனையாட்டியும் படும் துயர். 

உலக வாழ்வில் வெளியில் நடக்கும் சம்பவங்கள் மனதினுள் நடக்கும் பெரும் நாடகத்தின் ஒரு துளியே. உள்ளே நடப்பதே அடிப்படை விசைகள். ஆணவமே போரென்றும் காமமென்றும் வெளிப்படுகிறது. மலரின் முனையிலும் வாளின் ஒளியிலும் திகழ்கிறது. காமமும் ஒரு போரின்றி வேறென்ன? போரின் பெரும்பகுதி வெளியிலா நடக்கிறது?

எல்லாக் காலங்களிலும் மாறாத அடிப்படை உணர்வுகளை மென்மையான மணத்தில் நிறைத்துத் தந்துள்ளது இந்த அகநானூற்றுப் பாடல். 

மலைமிசைக் குலைஇய உறுகெழு திருவில்
பணைமுழங் கெழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை         5
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி
அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவடைந் திருந்த அருமுனை இயவில்
சீறூ ரோளே ஒண்ணுதல் யாமே         10
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில்
அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து         15
வினைவயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே.
        —- மதுரை எழுத்தாளன்.

ஒள் நுதல்- ஒள்ளிய நெற்றியினையுடைய நங் காதலியானவள்; மலைமிசை குலைஇய உருகெழு திருவில் பணை முழங்கு எழிலி – மலையின் உச்சியில் வளைந்துள்ள நிறம் பொருந்திய இந்திரவில்லையும் முரசம் போன்ற முழக்கத்தையும் உடைய; முகில்; பௌவம் வாங்கி தாழ்பெயல் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ- கடலின்கண் நீரைப் பருகித் தாழ்ந்து பெய்தற்குரிய மிக்க நீரோடு வானத்தின்கண் வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுச்சியுற்று உலகத்தை வளைத்துக்கொண்டு; மாதிரம் புதைப்பப் பொழிதலின் – திசைகள் மறையும்படி மழையைச் சொரிதலாலே; காண்வர இருநிலம் ஏம் உறு காலை- இனிய காட்சியுண்டாகும்படி கவினிய பெரிய முல்லைநிலத்தில் வாழ்வோர் இன்பம் எய்துதற்குக் காரணமான கார்ப்பருவத்திலே; நெருப் பின் அன்ன சிறுகண் பன்றி அயிர்க்கண் படாஅர் துஞ்சுபுறம் புதைய நறுவீ முல்லை நாள்மலர் உதிரும் – நெருப்புப்போன்ற சிறிய கண்களையுடைய பன்றியானது நுண்ணிய மணலின்கண்ணுள்ள சிறிய தூற்றிலே உறங்குகின்ற பொழுது அதன் முதுகு மறைந்து போகும்படி நறுமணங்கமழும் மலர்களையுடைய முல்லையினது புதிய மலர்கள் உதிருகின்ற; புறவு அடைந்திருந்த அருமுனை இயவில் சீறூரோள் – காடு சார்ந்திருக்கும் அரிய முனை களையுடைய வழியிலுள்ள சிறிய ஊரினிடத்தே பிரிவாற்றாது பெரிதும் வருந்தி இருப்பாளாக; என்க.

(வி-ம்) குலைஇய- வளைந்த. உரு- நிறம். திருவில்- வானவில். (இந்திரவில்) பணை- முரசு -பணைபோல முழங்கும் எழிலி என்க. பெயல்- பெய்தல் தொழில். ஏர்பு- எழுச்சியுற்று. மாதிரம் -திசை. எழிலி வாங்கி ஏர்பு வளைஇப் புதைப்பப் பொழிதலின் என்க. காண்- காட்சி. ஏம்- ஏமம் என்பதன் விகாரம். அயிர்- நுண்மணல். படாஅர்- சிறு தூறு. துஞ்சுபுறம் புதைய- துஞ்சுங்கால் அதன் முதுகு மறைய என்க. புறவு- முல்லைப்பரப்பு. இயவு- வழி.

10-17: யாமே…..பாசறையேமே.

(இ-ள்) யாமே- அவளைக் கைவிட்டு வந்த வன்கண்மையையுடைய யாம் இப்பொழுது; எரிபுரை பல் மலர் பிறழ வாங்கி அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ்சூடு- தீப்பிழம்பையொத்த செந்தாமரை முதலிய பல்வேறு மலர்களும் தலைமாறும்படி அள்ளி நெல் அரிகின்ற உழவர் கட்டிய அசைகின்ற தலையையுடைய பெரிய கதிர்க்கட்டுகளை; கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்-கள்ளைக்குடித்த தொழிலாளர்கள் சுமந்துகொண்டு களந்தோறும் செல்லுதற்கிடனான ; தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அருந்திறை கொடுப்பவும் கொள்ளான்- மருதநிலம் சூழ்ந்த வெற்றிக்கொடி அசைகின்ற மதிலமைந்த இந்த ஊராகிய கொடுத்தற்கரிய திறைப்பொருளைப் பகை மன்னர்கள் வணங்கிக் கொடுப்பவும் ஏற்றுக்கொள்ளானாய்; சினம் சிறந்து வினைவயின் பெயர்க்கும் தானைபுனைதார் வேந்தன்- வெகுளிமிக்குப் பின்னரும் போர்த் தொழிலின்கண் செலுத்தப்படுகின்ற சேனைகளையும் அணிந்த வாகைமாலையினையும் உடைய நம்மரசனது; பாசறையேம்- பாசறை இடத்து அவளை நினைந்து வருந்தி இருக்கின்றேம், அவள் நிலை என்னையோ? என்பதாம்

சூடு- கதிர்க்கட்டு. வினைஞர் என்றது கூலிக்கு வேலைசெய்பவரை. தண்ணடை- மருதநிலம். மருதநிலம் சூழ்ந்த தமது அரண்மனையையே பகைவர் திறையாகக் கொடுப்பவும் கொள்ளான் என்றது, அரசனது மிகையாய மறப்பண்பினைக் குறைகூறி தன்னுள் நொந்துரைத்தவாறு. அவள் நிலை என்னையோ என்பது குறிப்பு.

நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0490_02.html

பாட்டில் நெக்! – செல்வேந்திரன்

கொரானா கால சந்திப்புகள் – 2

திட்டமிட்டபடி ஏப்ரல் 26 அன்று இரண்டாவது ஸ்கைப் சந்திப்பு. விவாதத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சிறுகதை – ஹூலியோஸ் கொத்தசாரின் ‘தெற்கு நெடுஞ்சாலை’. செல்வாவின் தேர்வு இது. இக்கதையை முன்வைத்து செல்வா ஒரு அறிமுக உரை வழங்கினார். அதை தொடர்ந்து மிக விரிவான விவாதம் நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டது. அகநானூற்று பாடலொன்றை ராகவேந்திரன் தேர்வு செய்து மிகச் செறிவான உரை ஒன்றை நிகழ்த்தினார். சுஷீல் நரனின் நவீன கவிதைகள் இரண்டின் மீது தன் வாசிப்பு கோணத்தைப் பகிர்ந்தார்.

செல்வேந்திரனின் உரை:

பாட்டில் நெக்! – செல்வேந்திரன்

ஹூலியோ கொர்த்தசார் எழுதிய The Southern Thruway (1967) எனும் சிறுகதை தமிழில் எம்.எஸ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. All fires the fire தொகுப்பில் இடம்பெற்றிருந்த கதை. தெற்கு பிரான்ஸிலிருந்து பாரிஸூக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் – ஆறு வரிசைகளாக வாகனங்கள் நகருமளவிற்கு அகலமுள்ள சாலை – ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் பல்லாயிரக்கணக்கான கார்கள் சிக்கிக்கொள்கின்றன. 

விதம் விதமான கார்களில் விதம் விதமான மனிதர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காகப் பாரிஸூக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒரு காரில் காத்திருக்கும் எஞ்சீனியரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. காத்திருப்பு நாட்கணக்காக நீடிக்கிறது. பருவ காலங்கள் மாறுகின்றன. நெருக்கடி மானுட அகத்திலும் புறத்திலும் உருவாக்கும் மாற்றங்கள் நுட்பமாகச் சித்தரிக்கப்படுகின்றன. புதிய உறவுகள் தழைக்கின்றன. ஒரு தற்கொலை நிகழ்கிறது. ஒருவர் நோயுற்று மடிகிறார். காதல் உருவாகிறது. கலவி நடக்கிறது. புதிய வாழ்க்கையின் கனவுகள் கொப்பளிக்கின்றன. சிறுவர்கள் வினோதமாக நடந்துகொள்கிறார்கள். புதுப்புது வதந்திகள் காற்றில் அலை போல கிளம்பி வந்துகொண்டே இருக்கிறது. 

ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பொருட்டு குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தலைமை உருவாகிறது. ஒரு தற்காலிக சமுதாயம் உருப்பெற்று எழுதுகிறது. தனக்கென்று எதுவும் தக்கவைத்துக்கொள்ளாத சமதர்ம சமுதாயம். குழந்தைகள், பெரியவர்கள், விவசாயிகள், விற்பனையாளர்கள், மருத்துவர், ராணுவ வீரன், பொறியாளன் என அனைத்து சாம்பிள்களும் கொண்ட ஒரு சமுதாயம். ஆனால், மெல்ல குழுக்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன. அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுகின்றன. அநியாய விலைக்கு விற்கப்படுகின்றன. பதுக்குபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். எங்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அருகிலிருக்கும் கிராமத்து விவசாயிகள் உதவ மறுக்கிறார்கள். காரிலும் சாலையிலும் படுத்துறங்குகிறார்கள். சில நாட்களுக்குப் பின் நிலைமை சீரடைந்ததும் அவரவர் கார்களுக்குப் பாய்ந்தேறி திசைக்கொன்றாய் பறக்கிறார்கள். பந்தயம் போல பாய்கிறார்கள். உறவுகளும் கனவுகளும் சிதறுகின்றன. அதுகாறும் அவர்களைப் பிணைத்த சாலை இப்போது அனைத்தையும் தனித்தனித் துளிகளாக்குகிறது. மானுடம் எப்போதும் தற்காலிகமானப் பாவனைகளை உருவாக்கி பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எத்தனிக்கிறது. மறுகணம் தன் குரூர இயல்புக்குத் திரும்புகிறது. சென்னை பெருவெள்ள நாட்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டவர்களெல்லாம் நிலைமை சீரான சின்னாட்களிலேயே அற்ப அரசியல் நிலைப்பாடுகளுக்காக ஃபேஸ்புக்கில் ரத்தவெறியுடன் அடித்துக்கொண்டதைக் கண்டிருக்கிறேன். 

ஹூலியோ கொர்த்தசார் பெல்ஜியத்தில் அர்ஜென்டினிய தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். உலகப்போருக்குப் பின் அவரது பெற்றோர்கள் அர்ஜென்டினாவிற்குத் திரும்பினார்கள். அங்கு கொர்த்தசார் புனைவிலக்கியம் பயின்று ஆசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்களின் பல படைப்புகளை மொழிபெயர்த்தார். அரசியல் நிலைப்பாட்டினால் அவருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டன. பிரான்ஸூக்குப் பெயர்ந்தார். வாழ்வின் பெரும்பகுதி பாரீஸ் நகரில் கழித்தார். போர்ஹேஸின் புனைவுலகமும், கீட்ஸின் கவிதைகளும் இவரில் ஆதிக்கம் செலுத்தின. நூல்களுக்குக் கிடைத்த பரிசுத்தொகையை அரசியல் புரட்சிப் போராட்டங்களுக்கு அளித்தார். மிகச் சாதாரணமான கதைக்களன்களைக் கொண்டு அசாத்தியமான உணர்வெழுச்சியை உண்டாக்கும் கதைகளைப் படைத்தார். தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் படைப்புகளை எழுதினார். சர்ரிலியஸத்தின் கூறுகள் அதிகம் கொண்ட இவரது படைப்புகள் மாயா யதார்த்தவாதம் எனும் வகைமையை நெருங்கிவருபவை. பல கதைகளின் கட்டுமானத்தில் ஜாஸ் இசையின் வெளிப்பாட்டுத்தன்மையை  கைக்கொண்டுள்ளார். ஜாஸ், குத்துச்சண்டை, புகைப்படக் கலை, பயணங்கள் ஆகியவை இவரது பிறதுறை ஆர்வங்களாக இருந்தன. அசப்பில் சேகுவேராவை நினைவூட்டும் வசீகர அழகுடன் குறிப்பிடத்தக்க லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகத் திகழ்ந்தார். 

நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் உலவும் இந்தக் கதைவெளியில் எவருக்கும் பெயர் கிடையாது. அவரவர் கார் வகைமைகள் மற்றும் தொழிலின் பெயராலேயே இப்பெயரிலிகள் விளிக்கப்படுகிறார்கள். கார்கள் தனித்தனி குகைகளாக உருவகம் கொள்கின்றன. மோட்டார் தொழில்கள் உலகை வென்று கொண்டிருந்த காலகட்டத்தில் அந்தஸ்தின் அடையாளங்களாக கார்கள் வெறிகொண்டு வாங்கப்பட்டன. உரிமையாளரின் வாழ்க்கைப் பின்புலத்தைச் சுட்டுவதாக கார்கள் அமைந்தன. பற்றியிருக்கும் ஸ்டீயரிங்கின் இயல்பே மனிதர்களின் இயல்பாகவும் ஆயிற்று. 

சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த இச்சிறுகதை இந்தக் கொரானா நாட்களில் பல்வேறு அர்த்தங்களை அளித்துக்கொண்டே இருந்தது. அன்றாடம் கிளம்பிவரும் வதந்திகள். அரசு காப்பாற்றும் எனும் நம்பிக்கைகள். உருவாகும் புதிய விழுமியங்கள். ஒத்தாசை கூட்டணிகள். மலரும் உறவுகள். அத்தியாவசியப் பொருட்களுக்கான மோதல்கள். பதுக்கல்கள். எங்கெங்கிலும் அவநம்பிக்கைகள். காருக்குள் அடைபட்டிருப்பதைப் போன்ற காலஎல்லைகளைக் கடந்த காத்திருப்புகள். அங்கலாய்ப்புகள். மரணங்கள். 

உடலிலிருந்து கெட்ட ஆவியை வெளியேற்றுவதுப் போல கதைகளை வெளியேற்றுகிறேன் என்பது கொர்த்தசாரின் புகழ்மிக்க வாக்கியங்களுள் ஒன்று. கெட்டிக்காரத்தனமான அறிவுப்பூர்வமான கதைகளுக்கு எதிரான அங்கலாய்ப்பை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்தவர். எளிமையான கதைக்களத்தின் மீது அசாதாரணத்தன்மை வந்து மோதும் கதைகளில் தன் ஆழ்மனதின் கனவுத்தன்மையை கதைகளுக்குள் சுதந்திரமாக உலவவிட்டவர். கதையோட்டத்தில் எப்போதும் ஒரு லயம் நீடிக்கும். 

விதம் விதமாய் கிளம்பிவரும் வதந்திகள், தனிநபர்களுக்கு விளைபொருட்களை விற்க மறுக்கும் விவசாயிகள், காரணமின்றி கிராமங்களிலிருந்து பறந்து வந்து கார்களின் மீது விழும் கற்கள்,  தற்காலிகமான ஆம்புலன்ஸாக மாறிய வண்டியில் சிறுவர்கள் மாட்டும் செஞ்சிலுவை கொடியும், நாற்புறமும் உணர்ச்சிகள் மறைந்து வெறிகொள்ளும் தருணத்தில் செஞ்சிலுவை கொடி அபத்தமாக அசைவதும், கன்னியாஸ்திரீக்கு ஏற்படும் திடீர் சன்னதம், வாய்ஜால விற்பனைப்பிரதியாளனிடமிருந்து யுவதியை மீட்டு தன் காதலியாக்கிக்கொள்ளும் எஞ்சினீயரின் கனவுகளும், இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் காரில் ஒரு சிறுமி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருப்பதும், பெரியவரின் தற்கொலைக் குறிப்பும் கதையின் மிக நுண்ணிய தருணங்களாக விரிவு கொள்கின்றன. டிராஃபிக் ஜாமில் காத்திருக்கும் ஒரு அமெரிக்கன் எதனுடனும் பட்டுக்கொள்வதில்லை. ஏதாகிலும் நிகழ்ந்து நிலைமை உடனே சீரானால் போதும் அவனுக்கு. 

3 நிமிடத்திற்குள் மிகச்சிறந்ததை நல்ல இசைஞன் தந்து விடவேண்டும். இலக்கியத்திற்கும் இது பொருந்தும் என்கிறார் கொர்த்தசார். கொரானாவிற்கும் இப்படி ஒரு கால எல்லை இருக்குமானால் எத்தனை நன்றாக இருக்கும்?