Unknown's avatar

About சொல்முகம் வாசகர் குழுமம்

கோவையில் செயல்படும் இலக்கிய வாசகர் குழுமம்

‘இடியட்’ வாசிப்பு – ஆர். ராகவேந்திரன்

தஸ்தவ்யாஸ்கியின்   ‘இடியட்’  கதைமாந்தர்களின் உளவியல்  நமக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கின்றன. சில இடங்களில்  நம் உள  அமைப்பையே காட்டுவதாக மலைப்பை  தருகின்றன. 

 குழந்தைப் பருவ நினைவுகள்  வெளிவரும்போது எப்போதும் நம்  அசலான  ஆளுமையுடன் நெருக்கமாக உணர்கிறோம்.   நம்மையும் உலகையும் அன்பு மயமாக  ஆக்கவல்லவை இந்நினைவுகளைத் தூண்டும் படைப்புகள்.

 உலகின் கண்ணீரை துடைத்து விடுபவன் உலகிற்கு ஒரே நேரத்தில் அன்னையாகவும் குழந்தையாகவும் ஆகிறான். பிறிதின் நோயை  தன்  நோய் போல் போற்றும் அறிவு , முயற்சியினால் அடையப் படுவதல்ல; அது இயல்பான அன்பிலிருந்து வருவது.  அசடனான மிஷ்கின்  தூய அறிவின்மையின் வெளிப்பாடு.  

எம் ஏ சுசீலாவின்  சீரான மொழிபெயர்ப்பில் நாணிக்கோணிக் கொண்டு      நம்முன் வருகிறான் அசடன்.  தனது வலிக்கும் பிறரது வலிக்கும் வேறுபாடு தெரியாத தூய்மை சில  வரலாற்று மாந்தர்களின் நினைவுகளைக் கொண்டுவருகிறது. 

ஒரு பெரிய குழந்தை சிறியதை  அடிக்கும்போது இன்னும் சிறிய குழந்தை ஒன்று அழுகிறது.  புல்வெளி மீது நடக்கும் மனிதனைப் பார்த்த ராமகிருஷ்ணர்  இதயம் பிசையைப்படும் வலியை உணர்கிறார். பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மனிதர்கள் இறந்து கொண்டிருந்த இரவில் விவேகானந்தருக்கு பெரும் துயர் உண்டாகி விடுகிறது. பயிர் வாடும்போது தன்  உயிரும் வாடிய வள்ளலார் அறிவுச்  செயல்பாடாக வோ  சிந்திப்பதன் மூலமாகவோ துயரைப்பெறவில்லை.  விளக்க முடியாத  ஒரு இணைப்பு இங்கே இருக்கிறது.

நஸ்டாஸியாவின் குழந்தை போன்ற முகத்தைக் காணும்போதும் அக்லேயாவின் ஒளிவு மறைவற்ற அக்கறையை  உணரும்போதும் மிஷ்கின் கொள்ளும் பேரன்பு உடல் தளத்தைக் கடந்தது. 

துளித்துளியாக, பொறுமையாக மிஷ்கினின் பாத்திரத்தை வார்த்தெடுக்கும்  ஆசிரியர்  அவனை முழுமையாக்குகிறார். ‘விசுவாத்ம புத்தி’ என்று சொல்லப்படும் ‘உலகில் கரைந்த’ ஆளுமையை இயேசுவின் படிமம் போல செதுக்குவதற்கு இவ்வளவு பெரிய பின்புலமும் நுண்ணிய காட்சி விவரிப்புகளும் தேவைப்பட்டிருக்கின்றன. 

இயல்பான , சிறிது சுயநலமும் சாமானிய ‘நல்ல’ தன்மையும் கொண்ட நாகரிக மனிதன் போன்ற சராசரி வாழ்வை மிஷ்கின் போன்றவர்கள் மேற்கொள்ள முடிவதில்லை. சிறிது சிறிதாக பித்து நிலையை அடைகிறார்கள்.  அல்லது சற்று மூளை  கலங்கியதால் தான் இந்த நேயம் தோன்றுகிறதோ?

மிஷ்கின் பொது இடத்தில் அவை நாகரிகத்தை பின்பற்றுவதில்லை. பூச்சாடிகளை  தனது உணர்ச்சி வசப் பதட்டத்தால் உடைத்து விடக்கூடியவன்.  தஸ்தவ்யாஸ்கியின்   வாழ்வில் அவருக்கு ராணுவ சீருடை பிடிக்கவுமில்லை. பொருந்தவும் இல்லை. அடிக்கடி இழுப்பு வரக்கூடியவர். பழமை வாத  கிறித்துவமும் சோஷலிசமும் ஆசிரியரைக் கவர்ந்திருக்கின்றன.  மிஷ்கின் இந்த குணங்களுடன் வளர்ந்து வருகிறான். 

ஆணவம் கொண்ட பெரிய மனிதர்கள் மிஷ்கின் போன்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்.  எடை போடும் அறிவாளிகளின் அடிமனதில் கயமை இருட்டில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கிறது. மிஷ்கின்கள் பெரும்பாலும் இவர்களை  புரிந்து கொண்டிருக்கிறார்கள். கபடங்களை எளிதில் கடந்து செல்வதன் மூலமும்  அவர்களுக்கு வென்று விட்டோ ம் என்ற  இறுமாப்பை அளிப்பதன் மூலமும் தங்கள் மைய இயல்பை  பாதுகாத்துக் கொள்கிறார்கள்.  மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு  வாழ்வின் இறுதி கணத்தில் சுய நினைவு திரும்பி விடும் என்ற  நம்பிக்கை உண்டு.   ‘தான் ‘ யார் என்று உண்மையில் ஆரோக்கிய மனம் கொண்டவர்களும் அறிந்து கொள்ளாத நிலையில் ,  நிலையான சுய அறிவு என்பது என்ன என்ற கேள்வியை அசடன் முன்வைக்கிறான். 

மிஷ்கின் போன்ற ‘இளிச்சவாய’ தன்மை கொண்ட தேசங்களும் சமுதாயங்க ளும் கூட இருக்கின்றன .  தான்  ஏமாற்றப்படுவது தெரிந்திருந்தும் பிறருக்கு  மகிழ்ச்சி தருவதற்காக  ஏமாந்தது போல நடிக்கும் ‘அப்பாவிகள் ‘ நின்றிருக்கும் உலகை இலக்கியவாதிகளால் படைக்க முடிகிறது 

மனிதன் இறைத்தன்மையை  பூரணமாக வெளிக்காட்டுவதில் அடையும் தடுமாற்றங்களின்  கதையே அசடன் 

பெரிய கப்பல் ஒன்று முனகலுடன் கிளம்புவது போல கதை துவங்குகிறது. ஒவ்வொரு  இயந்திரமாக சுழலத் துவங்க,  கதைமாந்தர்களி ன்   விவாதங்களின் ஊடே அசைவு நிகழ்கிறது. நகர்வதே தெரியாமல் கதை வெகு தூரம் வந்து விட்டிருக்கிறது. 

சுவிசர்லாந்தின் மன நோய் சிகைச்சை  முடிவதற்கு முன்னரே  தனது தாய்நாடாகிய  ரஷ்யாவிற்கு ஒரு துணி மூட்டையை மட்டும் உடைமையாக எடுத்துக் கொண்டு மிஷ்கின் வருகிறான். திடீர் செல்வந்தனாகி , அன்பை சுற்றிலும் தெளித்து , எல்லோரையும் நம்பி , குறுக்கு மனது கொண்டவர்களையும் ஆட் கொண்டு  அவர்களே  அவனுக்கு செய்த சூழ்ச்சிகளையும் அவனிடமே  சொல்லவைத்து அதையும் மனதில்  ஏற்றிக்  கொள்ளாமல் காதலில் விழுந்து அடிபட்டு, ஒரு கொலை நிகழ்விற்கு தார்மிக காரணமாகவும்  சாட்சியாகவும்   இருந்து, மூளை  மீண்டும் கலங்கி தனது மருத்துவ சிகிச்சைக்கே திரும்புகிறான்.

பெற்றோரை இழந்து குழந்தையாக இருக்கும்போதே எதிர்கால உருவாய் பொலிவின்  அடையாளங்களைக்கொண்ட நஸ்டாசியா,  டாட்ஸ்கி என்னும்  கீழ்மைகொண்ட செல்வந்தனால் வளர்க்கப் பட்டு கையாளப்படுகிறாள்.  தனது நிலைக்கு பொறுப்பாளி தானே என்றும்   தன்னைப் பாவி என்றும் எண்ணிக் கொண்டு சுயவதை செய்து கொள்கிறாள்.  உண்மையான அன்புடன் அவளுக்கு மீட்பை  அளிக்க  மிஷ்கின் முன்வருகிறான். அவனை கீழே இறக்கக் கூடாது என்ற குற்ற உணர்வுடன் தன்னைக் கீழே இறக்கிக் கொண்டு ரோகோஸின் என்னும் தாதாவை மணக்க முடிவு செய்து  ஒவ்வொரு முறையும் திருமண சமயத்தில் ஓடிப் போய்விடுகிறாள். 

அவளைப்போலவே கலைத்திறனும் மென் மனமும் கொண்ட  அக்லேயாவுடன் மிஷ்கினை  மணமுடித்து வைக்க முயற்சி செய்து ஒரு கட்டத்தில்  இரு பெண்களுக்கும் நடைபெறும் ஆதிக்கப் போட்டியில் மிஷ்கினை திருமணம் செய்துகொள்ள நஸ்டாசியா முடிவெடுக்க, மீண்டும் ஓடிப்போதல் நடைபெறுகிறது. அவளை அழைத்துக் கொண்டு செல்லும் ரோகோஸின் அவளைக் கொன்று விடுதலை தந்து விடுகிறான். மிஷ்கினுக்கும் ஆறுதலைத் தந்து  சைபீரிய தண்டனையை பெறுகிறான்.

மிஷ்கின் உலகில் அழகினால் அமைதியைக் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறான் . அவன் உண்மையில் அன்பைத்தான் அப்படி எண்ணி இருப்பான் போல இருக்கிறது. 

உருண்டு வரும் அழகிய கண்ணாடிக் குடுவையைப் பக்குவமாக எடுக்கத் தெரியாமல் போட்டு உடைத்து விடுவது போல அக்லேயா தனது வாழ்வை குலைத்துக் கொள்கிறாள்.

அசையாத நீரோடை போன்ற நாவலில் சிரிப்பைத் தரும் சுழிகள் தளபதி இபான்சின் வரும் இடங்கள்.  

குடிப்பதற்கு காசில்லாமல் கடன் கேட்பதும் தனது பழம் பெருமையை  பறை சாற்றிக்  கொள்வதும்    பொய்  சொல்லிச் சொல்லியே அதைத் தானே நம்ப ஆரம்பிப்பதும் கிடைத்த புட்டியை   ஊற்றிக்  கொண்டு அதே இடத்தில் உறங்கி விடுவதும்  தனது சாகசக் கதைகளைத் பிறர் நம்பாத  போது  கோபித்துக் கொண்டு சண்டை இடுவதும்  – உணர்ச்சிகளின் உச்சமான இந்த இபான்சின் போன்ற ஆத்மாக்கள் வாசகர் மனதில் பல பரிச்சயமான முகங்களை எழுப்புகின்றன.

நாவலின் உச்சமாகக் கருதுவது  நஸ்தாசியா கொல்லப்பட்ட பின் அந்த இருட்டு அறையில் மிஷ்கின் ரோகோஸின்னுடன் தங்குவது தான் . ஆன்மாவின் இருட்டில் குற்ற உணர்வின் துயரில் இருக்கும் கொலைகாரனுக்கு தேறுதல் தரும் மிஷ்கின் இயேசுவின் வடிவம் ஆகிறான். .

நஸ்டாசியாவின் விருந்தில் கலந்து கொண்டவர்கள்  தாங்கள்  செய்த அவமானம் தரும் குற்றங்களைச்L சொல்லும் இடமும்  மிஷ்கினின் சுழலையும் உடல் நிலையையும் வைத்து அவனது  உளவியலை பாவ்லோவிச் ‘விளக்குவதும்’ ஆய்விற்கு உரியன. 

குழந்தைகள்  ரகசியங்களை விரும்புகின்றன. சத்தம் போடாதே என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே    கதவுக்கு இடுக்கில் நின்று கொண்டு  கள் ளச் சிரிப்புடன் வாய்மேல்  ஆள் காட்டி விரலை  வைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றன .  யாரிடமும் சொல்லாதே என்று மிக மெதுவாக உச்சரிக்கும்போதே அந்த ஒலி பெரிதாகக் கேட்டு விடுகிறது.  நாஸ்டாசியா கொல்லப் பட்டதும் மிஷ்கின் ரகசியமாக ‘எப்படிச் செய்தாய்? பாவ்லோவ்ஸ்க்கிற்கு வரும்போதே கத்தியுடன் தான் வந்தாயா ‘ என்றெல்லாம் கொலை செய்தவனிடம் கேட்க்கிறான்.  தானும் மாட்டிக் கொள்வோம் என்று சிந்திக்காமலேயே ரோகோஸினுக்காக கவலைப் பட ஆரம்பிக்கிறான். பளிங்கு போல அருகில் இருப்பவரைப் பிரதிபலிக்கும் மனம். ஊரைக் கூட்டிவிடாமல் ரோகோஸின் அருகில் படுத்துக் கொள்கிறான். அவனது கண்ணீர் கொலைசெய்தவன் மீது விழுந்து கழுவுகிறது

மிஷ்கின் முன் எல்லோரும் உண்மையையே பேசுகிறார்கள். எதற்கு இவ்வளவு சிக்கலாக வாழ்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது  அவன் வாழ்வு 

மிஷ்கின் முன்னால் எல்லோரும் குழந்தைகள் ஆகிவிடுகிறார்கள். குழந்தையால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. கண்களை மூடிக் கொண்டு தந்தை முன் வந்து நிற்கிறது. தந்தையும் தன் கண்களை மூடிக்கொண்டு  தவிப்பதாகவும் பின் கண்டு பிடிக்கப் படடவராகவும் நடிக்கிறார்.  பின் இறைவன் பதட்டத்துடன் தன்னை வெளிப் படுத்திக்க கொள்கிறார்.  

ஒரே ஒரு தூயவன்   இருந்தான் அவன் கிறிஸ்து என்று சொல்லும் தஸ்தயேவ்ஸ்கி  அவனை  மீண்டும் மனிதர்களில் தேடிச் சலித்து வடிகட்டி எடுத்த கிறித்து நிகர் ஆளுமை  மிஷ்கின் 

அன்பின் தூய்மையை மறந்து விட்ட அசட்டு உலகில் மிஷ்கின் தன்மையை அடையும் முயற்சியே இலக்கியம் என்று தோன்றுகிறது. அந்த நிலையை ஒரு சிலர் அடையும் போது புவியின் பளு குறைகிறது. அப்போது சுகதேவா என்று வியாசர் அழைக்கையில் கானகத்தின் எல்லாப் பறவைகளும் இங்கிருக்கிறேன் தந்தையே என்று பாடுகின்றன.

ஆர் ராகவேந்திரன் 

கோவை

முதற்கனல் வாசிப்பு 2 – விக்ரம்

தீச்சாரல், தழல்நீலம், வேங்கையின் தனிமை, ஆடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து

ஆதியில் அறிவுப் பழம் தின்றதன் பாவத்தினால் மண்ணில் வீழ்ந்தனர் ஆதாமும் ஏவளும்.  அறம் கொண்ட காரணத்தால் அன்னை கத்ருவின் தீச்சொல் பெற்று பறக்கும் திறன் இழந்து நெளிகின்றன மண்ணின் நாகங்கள்.  முன்னதில் அகந்தையில் கிளைத்தது அறிவு என்று கருதினார் கடவுள் பின்னதில் கிளைப்பது அறம்.  காமமும் அகங்காரமுமென தீர்ப்பிட்டு உங்கள் செயல்களம் மண் என வகுக்கிறது விண்.  அன்னை கத்ரு அவ்வாறு நாகங்களுக்கு நியாயந் தீர்க்கிறாள்.  இச்சையும் தன்முனைப்பும் இன்றி இங்கு அறிவும் அறமும் சாத்தியமே இல்லை என்பது விண்ணகத்தின் தீர்ப்பு.  அவை இல்லாமலேயே அயோக்கியத்தனம் செய்வது அறத்தைக் கையாள்வது என விண்ணின் சாத்தியங்கள் வேறு.

கத்ருவின் நிழல் போல் சத்தியவதி தோன்றுகிறார்.  சத்தியவதியை வில்லியாகக் கருதவிழையும் என் எண்ணம் ரத்து செய்ய வேண்டியதாகிறது.  மொத்த முதற்கனலில் கதாநாயகனாக இக்கணத்தில் பீஷ்மர் நிற்கிறார்.

குலம் பெருக்கி அரசாள வேண்டிய பீஷ்மருக்கு பிரம்மச்சரியத்தை திணித்தவளாக ரிஷி வியாசரை குலம் பெருக்கச் செய்தவளாக சத்தியவதி.  அவள் ஷத்ரியரையும் பிராமணரையும் சுட்டிக்காட்டி பீஷ்மரிடம் சொல்லும் நியாயங்கள் ஏற்புடையவையாக இல்லை எனினும் மாற்றுத் தாயின் புதல்வனை ஏற்கமுடியாத எளிய பெண் என்றும் அவளை வகுத்துவிட முடியாது.  பெரும் புகழ் கங்கையை யமுனை ஆள்கிறது.  அது இன்று வரை பாரதத்தில் அப்படித்தான்.

பீஷ்மர் வியாசரின் எதிர்முனையில் நிற்கிறார்.  அழகானது என ரசித்து வாசித்த எண்ணற்ற வெண்முரசு வெளியில் ஓர் இடம் பீஷ்மர் தனக்கு முன்பிறந்து இறந்துவிட்ட குழந்தைகளை சுமந்தே இருக்கிறார் என்பது.  முன் தேவாபியைச் சுமந்த பால்ஹிகர் பின்னாளில் தன் உடன்பிறந்தாரை சுமக்கப்போகும் பீமன் என ஒரு தொடர்ச்சி.  இதில் ஒரு படிநிலையும் இருக்கிறது.  ஒரு கோணத்தில் பால்ஹிகரைக் காட்டிலும் மேலெழுந்தவராக பீஷ்மர் பீஷ்மரைக் காட்டிலும் மேலெழுந்தவனாக பீமன்.  பிரம்ம ஞானமும் பெண்ணின் அன்பும் இரண்டிற்குமே தகுதியற்றவராக தன்னை கூறிக்கொள்ளும் முதற்கனலின் பீஷ்மரைப் போல் அல்லாமல் பிரம்ம ஞானம் ஒருபக்கம் கிடக்கட்டும் என பெண்ணின் அன்பை பெற்றவன் திரௌபதியின் அன்பில் திளைக்கும் வரம் பெற்றவன் பீமன்.

பிரம்மச்சரியம் பெருவலிமை என்ற இரண்டை எடுத்துக்கொண்டு பீஷ்மரை ராமாயணத்தின் அனுமனோடு ஒப்பிட்டு வியக்கிறேன்.  ராமன் மீதான பெரும் பக்தியை அளித்து அனுமனை சிக்கலில்லாமல் பார்த்துக்கொண்டார் ஆதிகவி.  சிக்கல்கள் ராமனுடயவை அவன்மீது பேரன்பு கொண்ட உதவும் வலிமை வாய்ந்த பிரம்மச்சாரி அனுமன் அவ்வளவுதான்.  பிரம்மச்சரியம், பெருவலிமை, ஆனந்த பரவசம், அறிவு, அருள்நிறை என அனுமனைப் பேணிக்கொண்டார்.  அவ்வாறல்லாமல் பீஷ்மருக்கு சிக்கல்களை அளித்து பெருநதியின் வேகம் தடுத்துநிறுத்தி அனுமன்போல் விண் எழவும் வாய்ப்பு மறுத்து வேங்கையை சிறையெடுத்து தனிமையில் ஆழ்த்துகிறார் வியாசர்.

சுவையான மற்றொரு இடம் சூதர் பீஷ்மரின் கதையை பீஷ்மரிடமே (அவர் பீஷ்மர் என அறியாமல்) கேலியுடன் கூற கேட்டு ரசித்து பின்னர் பொற்காசுகளை உறங்கும் சூதரின் காலடியில் பீஷ்மர் வைத்துச்செல்வது.  கடக்க முடியாத, வகுக்கப்பட்ட எல்லையில் தன்னை தன்னிலிருந்து விலக்கிக்கொள்ளும் விவேகி அவர்.  மலைமுகட்டில் அமர்ந்து தவம் செய்பவன் அனுமன் அவன் விடுதலை பெற்றவன் நினைத்த கணத்தில் விண்ணில் தாவ அவனால் இயலும்.  பீஷ்மர் மலையின் கீழ் இருட்குகையில் சிலந்திவலைப் பின்னலுக்குள் அமர்ந்து தவமிருப்பவர்.

முதற்கனல் கனன்று எழுந்த பின் பிற்பகுதியில் கனிந்து அருட்சுடர் என நிலைகொள்கிறது.  மூர்க்கம் மிக்க பன்றியென சிகண்டியாக தன் சினத்தை பீஷ்மர் மீது செலுத்தும் அம்பை பின் கனிவுகொண்டு ஊர்வரையாக அவரைக் காவல்செய்யவும் விழைகிறாள்.  அதுவிதியின் பாற்பட்டு நிகழாது வேறுவழியில்லை என்றிறுக்க தன் வெஞ்சின நோய் தீர்க்க மருந்ததென அவர் உயிரை அவர் பாதம் பணிந்து பெற்றுவர சிகண்டியைப் பணிக்கிறாள் என்னும் எண்ணம் எழுகிறது.  பீஷ்மரை வீழ்த்த அவரிடமே கற்றுக்கொள்கிறான் சிகண்டி.  அம்பையின் இக்கனிவு வெண்முரசின் பிற்பகுதியில் திரௌபதி கொள்ளும் கனிவை நினைவூட்டுகிறது.

இக்கணம் முதல் வியாசரைக் கதாநாயகனாகக் கொள்கிறேன்.  அவரது மகன் சுகமுனிவருக்கு வாய்த்தபேறு, தென்மதுரை பெருஞ்சாத்தன் கொண்ட பேறு வியாசருக்கு அமையாததல்ல ஆனால் காத்திருக்க வேண்டும் அவரால் நிகழவேண்டியவை நிகழ்ந்தாக வேண்டும்.  மெய்மை நோக்கில் பயணப்படுபவருக்கு சந்ததி பெருக்கி அவற்றின் வாழ்வை அதன் விழைவுகளை ஆணவங்களை அன்பை அறம் அறமின்மைகளை வீரத்தை இறுதியில் வீழ்ச்சியை எனக் குலக்கதையை காவியமியற்றும் பணி அமைகிறது.  அவரது மெய்மையை அவர் அப்படிச் சென்றுதான் அடையமுடியும்.  சுகமுனியும் பெருஞ்சாத்தனென்னும் தென்முனியும் அப்படித்தான் அவரது வழியென்கிறார்கள்.  ஒருவகையில் அரசியல் கலப்பற்ற ஆன்மீகம் வியாசருக்கு சாத்தியமல்ல என்று கூட தோன்றுகிறது.  இளைய யாதவர் என்பது அவர்தான் என்றபோதும்.  விஷ்ணுவே அவர்தான் என்றபோதும்.

இங்கு யமுனைக்கும் கங்கைக்கும் காவிரிக்கும் மட்டுமல்ல மெய்மைக்கும் புவியியல்தான் பாதைவகுத்து அளிக்கிறது.  அரசியல் பண்பாடு வரலாறு அகம் புறம் உளவியல் உடலியல் மெய்யியல் என எல்லாவற்றிற்கும்.  ஆஸ்திகனும் பீஷ்மரும் வியாசரும் மேற்கொள்ளும் பெரும் பயணங்கள் அந்த எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.  பெரும்பாலை சிபிநாடு கங்கர் நிலம் கங்கை நீர்வழிப்பயணம் விந்தியக்காடுகள் எனப் பல.

ஆஸ்திகன் அஸ்தினபுரி சென்று சர்ப்பசத்ர வேள்வி நிறுத்தி மீள்வது, கிருஷ்ணை நதிக்கரை நாகர்களைக் காக்க அஸ்தினபுரியுடன் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கை எனக் குறியீடாகக் கொள்ளவும் இடமளிக்கிறது.  தவிர்க்கமுடியாமல் நிகழ்ந்துவிட்ட பேரழிவுகளில் இருந்து மீண்டும் மீண்டும் பாடம் கற்றுக்கொள்வது கலைத்து கலைத்து அடுக்கிக்கொள்வது அனைவருக்குமான பொதுநலன்களைப் பேணிக்கொள்வது தனிநலன்களைப் பாதுகாத்துக்கொள்வது என இப்பெருநிலத்தின் அரசியல் வரலாற்றுப் பாதைகளை வெண்முரசு வழங்கும் அகக்கண்களின் வழியாக கண்டுகொள்ளமுடியும்.

வெப்பநாட்டில் முக்தியை நிர்வாணம் எனத் தருபவளும் குளிர்நாட்டிற்கு கதகதப்பான சொர்கத்தை வகுப்பவளும் புவியன்னைதான்.  யமுனையின் வியாசரையும் சுகசாரி சுகமுனியையும் தென்மதுரை பெருஞ்சாத்தனையும் இங்கு கண்முன் நிறுத்துபவள்.  சித்தார்த்தனை போதிமரத்தடியில் அமர்த்தி புத்தனாக்கியதும் ஏசுவை சிலுவையில் அறைந்து விண்ணேற்றியதும் அவள்தான்.

இம்மண்ணை, இதன் அருகமைந்த நிலங்களை, மொத்தபுவியை புறத்தில் கண்டு அகத்திற்கென அள்ளியெடுத்தக் கொள்ளும் பேராவலாக இருக்கிறது வெண்முரசு.  முதற்கனலில் துவங்கும் அது தன்னை அவ்வாறே நிறைவேற்றிக்கொள்வதில் வெற்றி அடைந்திருக்கிறது.

நெடுங்குருதி வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

2007 ஜுலை மாதம், நள்ளிரவு, டெல்லிக்கருகில் நொய்டாவில் ஒரு விடுதியறையில் நான் படித்துக் கொண்டிருந்தேன். வெய்யிலோ மழையோ நானறிந்த அதிகபட்சம் என்பது நான் அங்கிருந்த இரண்டு மாதங்களில் கண்டதுதான். பெருமழை பொழிந்துகொண்டிருந்த அந்த நள்ளிரவில், நான் மட்டும் கடும் வெப்பத்தை உணர்ந்தேன். மட்டுமல்ல, மனதளவில் மிகவும் தனியனாக உணர்ந்திருந்த நாட்கள் அவை. அத்தனிமை உணர்ச்சியின் வலி அவ்விரவில் மென்மேலும் பெருகியது. இவ்விரண்டுக்கும் காரணம் ஒன்றே, அது நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் “நெடுங்குருதி”. கதையின் இயல்பாலும், என்னுடைய அப்போதைய மனநிலையினாலும், எப்போது வேண்டுமானாலும் நான் அப்புத்தகத்தை விலக்கி விடுவதற்கான சாத்தியங்கள் அதிகமிருந்தது. ஆனால், படிக்கத்துவங்கிய பின்னர் கூறுமுறையிலிருந்த வசீகரம் என்னை கட்டிப்போட்டது. பகலில் IT நிறுவனத்தின் ஆரம்பநிலை ஊழியனாக நொய்டாவிலும், பின்னிரவுகளில், நாகுவாக, ரத்னாவதியாக, ஆதிலட்சுமியாக ”வேம்பலை”யின் தெருக்களிலும் வாழ்ந்துகொண்டிருந்த நாட்கள் அவை. இம்முறை மறுவாசிப்பு சொல்முகம் வாசகர் கூடுகைக்காக.

*

நாகு, அவனது பெற்றோர், நாகுவின் அடுத்த தலைமுறை என ஒரு குடும்பத்தின் கதையையும், அதனூடே, அதற்கிணையாக வெய்யிலுடன் நிரந்தர உறவேற்படுத்திக் கொண்ட வேம்பலை கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் பிண்ணிச் சொல்லப்பட்ட கதை “நெடுங்குருதி”. இந்நாவல், கோடை, காற்று, மழை, குளிர் என நான்கு பருவ காலங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், என்னைப் பொருத்தமட்டில், இந்நாவலின் களமும் காலமும் கோடை மட்டுமே. வேறு பருவ காலங்களில் சொல்லப்படும் கதையில் கூட, கதாப்பாத்திரங்களின் வாழ்வில் நாம் காண்பது கோடையின் வறட்சியையே. 

*

நாகுவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் துவக்க அத்தியாயங்களிலே உண்டாகும் சண்டை கடும் கோடை ஏற்படுத்தும் எரிச்சல் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் வன்முறைக்கான சரியான உதாரணம். நாகுவின் அப்பா உப்பை மிதித்ததால் உண்டான எரிச்சலாலும் கூடவே அதைக் கழுவக்கூட நீரில்லாத சூழலில் மீதான வெறுப்பினாலும் விளைகிறது அந்தச் சண்டை. நாவலின் பெரும்பாலான மாந்தர்களின் இயல்பிலேயே வெளிப்படும் எரிச்சல் வெயில் காயும் பூமியின் ஒரு கொடைதான்.

*

நாவலின் / வேம்பலையின் பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக, சூல்நிலைக் கைதிகளாக காட்சிப்படுத்தப்பட்ட போதும், பெண்கள் எந்நிலையிலும் கருணையைக் கைக்கொள்பவர்களாகவே உள்ளனர். கோவிலின் வாசலின் வெள்ளரிப்பிஞ்சு விற்கும் தன் அண்ணியிடம் நாகுவின் அம்மா தன்னிடமுள்ள பணத்தை தருமிடம் அதற்கொரு உதாரணம். அந்த சந்தர்ப்ப்பத்தில் எழும் அவளது அண்ணியின் அழுகையை சுற்றிலுமிருப்பவர்கள் ஒரு பொருட்டாகவே கருதாமலிருப்பது அந்நில மக்கள் ஒவ்வொருவருக்குமே அப்படி அழுவதற்கான வாழ்க்கையே விதிக்கப்பட்டிருப்பதற்கான ஒரு அடையாளம். அடுத்தவர்களால் கவனிக்கப்படாமல் போகும் கண்ணீர்தான் பெரும் துரதிர்ஷ்டம் மிக்கது.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வாழ்வின் அலைக்கழிப்புக்கு ஆளாகி, ஊரை விட்டு வேறு ஊர் தேடிப்போகும் தன் மக்களை, விதியின் மாயக்கரங்களால் மீண்டும் மீண்டும் தன்னுள் இழுத்துக்கொள்கிறது வேம்பலை. நாகுவுக்குள், இறந்துபோன அவனுடைய இரண்டாவது அக்கா நீலாவின் நினைவுகள் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. போலவே அவனது அப்பாவுக்கும் நீலா மீது இருப்பது பெரும் வாஞ்சை. ரேகை சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு மீண்டும் வேம்பலைக்குத் திரும்பிய பின்னர் நாகுவின் அப்பா செய்யும் முதல் வேலை தன் மகளைப் புதைத்த இடத்தைத் திருத்துவதே. ஒரு மழைக்காலத்தில் மகளின் புதைகுழியிலிருந்து வரும் மண்புழுவை தன் வீட்டில் சேர்ப்பித்து கொஞ்சம் ஆறுதலடைகிறார் அவர்.

*

பகலில் வெய்யிலின் ஆளுமைக்கு சற்றும் குறைவில்லாதது வேம்பலையின் இரவுகள். இருளன்றி வேறெதுவும் அறியா இரவுகள் அவை. ஒருவகையில் பகலெல்லாம் வாட்டி வதக்கிய வெய்யிலுக்கான (வெளிச்சத்துக்கான) ஒரு பெரும் ஆசுவாசமே அவ்விருள். களவுக்குப் போகும் வேம்பர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என இருளையே சொல்ல முடியும். காயாம்பு அக்கிராமத்துக்கு முதன்முறையாக மின்சாரத்தை கொண்டுவரும் போது அக்கிராமமே அதை எதிர்ப்பதற்க்கு இவ்விரண்டும் காரணமாக அமையந்திருக்கக்கூடும் எனவும் எண்ணத் தோன்றுகிறது. மரித்துப்போனவர்கள் மீண்டும் வாழ்வதான ஒரு சாத்தியக்கூறை தன்னுள் கொண்டிருப்பது இருள் மட்டும்தான். இரவில் அப்பாவும் அவனும் மட்டும் உணவுண்ணும் போது, நாகு தன்னைச் சுற்றிலும் தன்னுடைய அம்மா, அக்கா என அனைவரையும் உணர நேர்வதும் இருளின் கருணையினால்தான்.

இந்நாவலின், முக்கியமான இன்னொரு அம்சம் நாவலின் போக்கிலேயே கலந்துள்ள நாட்டார் தன்மை. நடக்க முடியாத ஆதிலட்சுமி நாகுவிடம் கூறும் கதைகள், குறிப்பாக இறந்தவர்கள் பறந்து போனதை தான் கண்டதாக ஆதிலட்சுமி கூறுவது, தாழியில் வைத்து மூடப்பட்ட சென்னம்மாவின் தாகம் அவ்வூர் மக்கள் எடுத்து வரும் குடத்து நீரைக் காலி செய்வது, இறந்து போனவர்கள் வாழும் இன்னொரு வேம்பலை கிராமம், சிங்கிக் கிழவன் இறந்துபோன குருவனுடன் ஆடு-புலி ஆட்டம் ஆடுவது என விரித்தெடுக்க சாத்தியமுள்ள நாட்டார் கதைகள் நாவலினூடே நிறைந்துள்ளன.

வேம்பலை கிராமம் பற்றிய சித்திரங்களும், வேம்பர்களின் வாழ்க்கைமுறையும் மிகவும் குறைவாக, அதே சமயம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். வெல்சி துரையால் 42 வேம்பர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதிலும், அவர்களில் கூட்டத்திலிருந்து எவ்வித உணர்ச்சிகளும் வெளிப்படாதிருப்பது, தேடிவரும் காவலர்களிடமிருந்து தப்பிக்க நீர் நிரம்பிய கிணற்றுள் மறைந்திருப்பது, ரேகை சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் ஊரில் அமைக்கப்பட்ட காவல் நிலையத்தை எரிப்பது என பல சம்பவங்கள் வேம்பர்களின் மன உறுதியைக் காட்டுகின்றன. ஒருவகையில், வேம்பர்களின் அழுத்தமான பாத்திரப்படைப்பு எனக்கு நாவலில் கூறப்படும் ஊமைவேம்பினை நினைவூட்டியது.

வெய்யிலின் உக்கிரத்தை, வறட்சியை, கண்ணீரை, வலியைப் பேசும் நாவலின் ஒரே ஒரு இடம் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைத்தது. அது சிங்கிக்கிழவன் தன் வாலிபத்தில் மாட்டுவண்டியை மறித்து களவு செய்ய முயலுமிடம். சிறுமிகளிடமிருந்து அவன் களவு செய்வதில்லை என்பதைத் தெரிந்துகொண்ட வண்டிக்காரர்கள், தங்கள் நகைகளை வண்டியிலிருக்கும் சிறுமி கழுத்தில் அணிவிப்பதும் அதை தொடர்ந்து நடக்கும் சிறு உரையாடலும் கடும் வெய்யில் பயணத்தில் வாய்க்கப்பெற்ற சிறு நிழல் போன்றவை .(இதற்கிணையான காட்சி எஸ்.ரா. வசனமெழுதிய அவன் இவன் திரைப்படத்திலும் இருக்கும்)

நாவலின் கதை மாந்தருக்கிணையாக இன்னுமொரு பாத்திரமாக வெயில் வார்க்கப்பட்டுள்ள இடங்களும், வெய்யில் குறித்த வர்ணிப்புகளும் இந்நாவலின் கவித்துவம் மிளிருமிடங்கள். உதாரணங்களாக

  • கத்தியை சாணை பிடிப்பது போல, தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது.
  • கழுத்தடியில் ஒரு கையைக் கொடுத்து நெறிப்பதுபோல், வெயில் இறுக்கத்துவங்கியது.
  • விரியன் பாம்பைப் போல உடலை அசைத்து அசைத்து சீறியபடி போய்க் கொண்டிருந்தது வெயில்.
  • வகுந்துருவேன் வகுந்து. சூரியன்னா பெரிய மசிரா ? சங்கை அறுத்துப்புடுவேன் (சிங்கிக்கிழவன்)
  • கிணற்றுத் தண்ணீரில், வெயில் ஊர்ந்து ஊர்ந்து ஏதோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தது.

ஆகிய இடங்களைச் சொல்லலாம்.

வெயிலுக்கு நிரந்தரமாய் வாக்கப்பட்டு, நீரின்றி சபிக்கப்பட்ட எந்தவொரு இந்திய கிராமத்தின் சித்திரமும் வேம்பலை கிராமத்துக்கும் பொருந்தும். வரலாற்றின் கொடூரப் பக்கங்களில், கால சூழ்நிலைகளால் மைய மக்கள் கூட்டத்திலிருந்து விலக் நேர்ந்துவிட்ட இனக்குழுக்களுல் வேம்பர்களும் உண்டு. 

*

கடும் கோடையில் ஓரிரு குடங்கள் நீருக்காக சில கிலோமீட்டர்கள் அலைய நேரிட்ட என்னுடைய பாட்டிமார்கள், கடும் வெயிலில் புழுதி பறக்க விளையாடிய வடுகபாளையம், மணியம்பாளையம் கிராமத்து காடுகள், சூடு பிடித்துக் கொண்டு தூக்கம் தொலைத்த கோடைகால இரவுகள் என என் பால்யத்தின் நினைவுகளை கிளர்த்தெழச் செய்தது “நெடுங்குருதி”.

முதற்கனல் வாசிப்பனுபவம் – விக்ரம்

வேள்விமுகம் முதல் மணிச்சங்கம் வரை

சொல்முகத்தின் வெண்முரசு கூடுகையை முன்னிட்டு முதற்கனலை மறுவாசிப்பு செய்தது உள்ளம் நிறைத்த அனுபவமாக இருந்தது.  நாகர்குலத் தலைவி மானஸாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு புடவியின் தொடக்கம் முதல் தனக்கு அவன் பிறந்தது வரை நாகர்குல வழக்கில் கூறுவதில் தொடங்கி அஸ்தினபுரியில் பேரரசன் ஜனமேஜயன் நடத்தும் சர்ப்பசத்ரமென்னும் உலகின் மொத்த நாகங்களையும் அழித்துவிடும் பெருவேள்வியினை ஆஸ்திகன் நிறுத்துவதும் அதன் தொடர்ச்சியாக அவனுக்கும் ஜனமேஜயனுக்குமான கருத்து முரண்பாட்டை வியாசர் ஆஸ்திகன் தரப்பில் சரியே என்று தீர்ப்பளித்து தொடர்ச்சியாக மாபாரதமென்னும் அவரது ஸ்ரீஜய காவியம் வைசம்பாயனரால் பாடத்தொடங்கப்படுவது வரை சென்று அமைகிறது முதற்பகுதியான வேள்விமுகம்.  நாகங்களை இச்சை மற்றும் அகங்காரத்தின் குறீயீடாக கொண்டு அந்த அடிப்படை விசைகளே புடவின் உயிர் இயக்கத்திற்கு காரணமாக அமைவதும் அவையில்லாமல் உயிரோட்டமற்றதாக புவி வாழ்க்கை ஆகிவிடும் என்பதைக் கூறுகிறது.

அஸ்தினாபுரியென்னும் பிரமாண்ட நகரை அறிமுகம் செய்து அதன் பெருமைமிகு அரசர் நிரை கூறி இன்று அது எதிர்கொண்டிருக்கும் சிக்கலை அறிமுகம் செய்கிறது பொற்கதவம்.  பீஷ்மர் சத்தியவதியின் ஆணைப்படி விசித்திரவீரியனுக்காக காசி மன்னனின் புதல்விகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை கவர்ந்துவர அவர் உள்ளம் கொள்ளும் அறச்சிக்கலைக் கடக்க வியாசரின் விடையைத் தெரிவி்த்து அமைகிறது இப்பகுதி.  தீர்கசியாமர் என்னும் பெரும் சூதர் பீஷ்மருக்கு கூறுமுறைமையில் வியாசரின் துவக்கம் கூறப்படுகிறது.

காசியில் நடைபெறும் சுயம்வரமும் அங்கு சென்று பீஷ்மர் அக்கன்னியரைக் சிறையெடுப்பதில் தொடங்கி சால்வ மன்னனாலும் தந்தை பீமதேவனாலும் பீஷ்மராலும் புறக்கணிக்கப்பட்டு அம்பையென்னும் வடிவில் மாபெரும் எதிர்காலப் போர் ஒன்றிற்கான முதற்கனல் விழிகாணும் விதமாக எழுந்து துலங்குவதை கூறி மிகப்பொருத்தமாக எரியிதழ் என்று தலைப்பு கொள்கிறது அடுத்த பகுதி.  எரியின் இவ்விதழ் அதன் முதற்தொடக்கமாக தாட்சாயணியென்னும் சதிதேவியைத் காட்டுகிறது.  தட்சனென்னும் நாகத்தின் மகளாகப் பிறக்கும் அவள் இறைவனின் விண்ணின்பால் மீண்டுற தனக்கான சர்ப்பசத்திர வேள்விபோல் முன்னம் எரிபாய்ந்த இறைவியாவாள்.  அவ்விறைவியின் எரிதல் அணையாமை கூறி அம்பையின் அன்னை அம்பையையே கருதி நெருப்பின் காயமுற்று உயிர்துறப்பது வரை செல்கிறது அணையாச்சிதை.  சூதர்கள் அம்பையைக் குறித்து பாடுவதை அவள் சீற்றம் கொண்ட தெய்வ உருக்கொண்டதை அவளது கனலைப் பெற்றுக்கொள்ள, பெண்பழியின் கணக்கைத் தீர்க்க, உத்திர பாஞ்சாலத்தின் மன்னன் தவிர பிறர் பீஷ்மரை அஞ்சி தவிர்ப்பதை விசித்திரவீரயன் தன்னை முன்னிட்டு அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் தவிப்புற்று அவளைத் தேடிச்சென்று பணிவதை அவள் அவன்பால் அருள் கொள்வதை கூறுகிறது.

புதிய பெருநகர் நுழையும் அம்பிகையும் அம்பாலிகையும் கொள்ளும் எண்ணங்களும் அச்சிறுமிகளின் நடத்தையும் சுவாரஸ்யமானவை, அவர்கள் விசி்த்திரவீரியனை மணமுடிப்பது முதலில் வெறுத்து பின் அவனை கனிந்து அம்பிகை ஏற்று காதல் கொள்வது அவன் மறைவது வரையிலான பகுதி மணிச்சங்கம்.  அம்பிகையும் அம்பாலிகையும் உண்மையில் அம்பையைவிட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பரிவு தோன்றுகிறது.  இப்பகுதியில் விசித்திரவீரியன் அவனது தந்தை சந்தனுவையும் தன் உடன்பிறந்த பீஷ்மரென்னும் மாமனிதனையும் தீர்க்கசியாமரின வாயிலாக உணர்ந்துகொள்கிறான்.  அம்பையின் கனல் எத்தகையது என்றபோதும் அதன் பழி தன்னைத் தொடாத உயரத்தில் இருப்பவர் பீஷ்மர் என்ற எண்ணம் ஏற்பட்டது.  அறத்திற்கும் அறமின்மைக்குமான இடத்தில் அல்ல அவர் முன்னம் பழம்பிறப்பில் சிபியென கூட அவர் அறத்திற்கும் அறத்திற்குமான எல்லையில் அல்லது அறத்திற்கும் பேரறத்திற்குமான சந்தியில் நிற்பவராகவே காண்கிறார்.
வியக்கத்தக்க வகையில் அல்லாமல் இங்கு பீஷ்மருக்கு பேரறத்தின் முன்னம் மனித அறத்தின் எல்லை உணர்த்தும் வியாசரே பின்னாளில் அதையே ஜனமேஜயனுக்கு உணர்த்துபவராகவும் இருக்கிறார்.  ஜனமேஜயனுக்கு மட்டுமல்ல ஜெயமோகனாக நமக்கும் அவரே இன்று வெண்முரசறைந்து உணர்த்துகிறார்.

எரியிதழ், அணையாச்சிதை, மணிச்சங்கம் என்ற இம்மூன்று பகுதிகளில் மைய ஓட்டத்திற்கு இணையாகச் செல்லும் புராணக்கதைகள் ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொள்ளும் ஆடிகள் போல.  பெண்ணின் துயரும் சீற்றமும் விதியும் என தாட்சாயணி, பெண்ணின் வெற்றி என மகிஷனை வென்ற இறைவி, ஆண்பால் கொள்ளும் கனிவு என சத்தியவானைத் தொடரும் சாவித்ரியின் கதை.  இதில் ஒரு படிநிலைபோன்ற அமைவு இருக்கிறது.
அம்பிகை விசித்திரவீரியன்பால் கொள்ளும் காதல், அவர்களது உரையாடலின் தருணங்கள் இனியவை.  அவன் தன் பேரன்னை சுனந்தையின் துயரமிக்க வாழ்வை அவளுக்குக் கூறுகிறான்.  அதேவிதமான மக்கட்பேறு என்ற ஒரு காரணத்தின் பொருட்டு துயர் திணிக்கப்பட்டவர்கள் தானே அவளும் அம்பாலிகையும்.

சித்திராங்கதன் இங்கு திகழாதவனாகவே செல்கிறான்.  விசித்திரவீரியன் குறுகிய ஆயுள்கொண்ட போதும் தன் இயல்பால் அனைவரையும் வெல்கிறான்.  அன்னை சத்தியவதியை மட்டும் அவன் வென்றானா என்பது என் அய்யமே.  அவனுக்கும் அமைச்சர் ஸ்தானகருக்குமான நட்பு சுவையானது.  அவனை இறைவன் என்றுகொள்ளும் நேசம் உடையவர் அவர்.  வேறு ஏதும் கடமை தந்துவிட வேண்டாம் இதுவே என் வாழ்வின் நிறைவு என்று அவன் மறைவில் துறவைத் தேர்ந்துகொள்கிறார் அவர்.

இங்கு பெண் உறும் துயர் என்றாலும் கூட அவை ஷத்திரியப் பெண்களுக்குரியவையாகவே இருக்கின்றன.  மீனவக் குலத்தவரான பேரரசி சத்தியவதியும் கங்கையும் எவ்வகையிலும் தங்கள் சுதந்திரத்தை இழந்தவர்கள் அல்ல.  தாட்சாயணி, சுனந்தை, அம்பை ஒரு நிரை என்றால் சீதையும் அதன் பிறிதொருவகை என்ற எண்ணம் தோன்றுகிறது.

எண்ணற்ற நுண்மைகள் கொண்டதாக இருக்கிறது முதற்கனல்.  பாலாழி கடையும் தேவர்கள்-அசுரரின் புராணக்கதை கூறப்படுகிறது.  நஞ்சு இல்லாமல் வாழ்க்கை இல்லை நஞ்சைக் கடக்காமல் மெய்மை இல்லை.  கடத்தற்கரிய நஞ்சை கடக்கத் தேடி நுழைபவர்களுக்கு அவர்களுக்கான நீலகண்டனை கண்டடைய பெரும் இணை வாழ்வைத்தரச் சித்தமாக இருக்கும் வெண்முரசின் திருஆல வாயிலாக இருக்கிறது மெய்மை நோக்கின் இந்த முதற்கனல்.

முதற்கனலின் முதல் உரசல் – ஆர். ராகவேந்திரன்

வெண்முரசு முதற்கனல் வாசிப்பு -வேள்விமுகம் முதல் மணிச்சங்கம் வரை

வெண்முரசு நூற் தொகையின் முதல் புத்தகமான முதற்கனல் வேசர  நாட்டில்  தொடங்குகிறது. நாக அன்னையான  மானசா தேவி தனது மகன் ஆஸ்திகனுக்கு  படைப்பின் துவக்கத்தை சொல்லி  அவனுக்கு ஒரு கடமையை சொல்லாமல் சொல்கிறாள். குழந்தைப் பருவத்தை  இன்னும் கடந்திராத நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஸ்திகன்  வடக்கை நோக்கி நடக்கத் துவங்குகிறான். 

நாகங்கள் 

இந்தியா முழுவதும் நாகங்களுக்கு கோயில்கள் இருக்கின்றன. ஹரித்வாரில்  மலை மேல் மானசா அன்னைக்கு அமைந்துள்ள கோயில் புதருக்குள் புற்று போல வான் நோக்கி நிற்கிறது.   இவ்வன்னையின் வழிபாடு இந்தியாவில் எங்கும் பரவி உள்ளது. குறிப்பாக வங்கத்திலும் இன்றைய ஆந்திரத்திலும் . ஏன் பிற விலங்குகளை விட  நாகத்திற்கு அதிக வழிபாடு ? ஆதியில் தந்த அச்சம் மட்டும்தானா காரணம்  ?

 பொழுதிணைவு  வணக்கம் என்று ஜெயமோகன் குறிக்கும் சந்தியா வந்தனத்தின் ஒரு பிரார்த்தனை  நர்மதை நதியிடம் வேண்டுகிறது.  நாகங்களை ஜனமேஜய வேள்வியிலிருந்து காத்த ஆஸ்திகன் என்னை நச்சரவங்களில் இருந்து காக்கட்டும் என்கிறது.  நாகங்கள் இந்திய  மனத்தில் ஏற்படுத்திய தாக்கம் வரலாற்றின் அறியாத பக்கங்களில் இருக்கிறது.  அதை எளிய  மானுட ,உளவியல்  கொள்கைகளால் முழுதறிய முடியவில்லை.

குகையில் சொட்டும் தென் 

ஜரத்காரு முனிவர் குகையின் மேலிருந்து சொட்டும் தேனை மட்டும் பருகி தவம் புரிந்தார் என்பது மிக அழகிய உவமை . யோகத்தில் கேசரி முத்திரை செய்து நாவை உள்மடித்து கபாலத்தை தொடும்போது உள்ளே சொட்டும் தேனை குதம்பை  சித்தர்  

“ மாங்காய் ப் பாலுண்டு மலை மேல் இருப்பார்க்கு தேங்காய்ப் பால் ஏதுக்கடி” என்கிறார் 

நாகம்  – அகந்தை, காமத்தின் பரு உரு 

சர்ப்ப சத்ர யாகத்தில் ஜனமேஜயன்  ,போருக்கு அடிப்படையாக இருக்கும்  அகந்தை மற்றும் காமத்தை மொத்தமாக அழிக்கும் நோக்கம்  சொல்லப் பட்டிருக்கிறது .  வேள்விக்கு ஒரு காவலன், ஒரு ஹோதா, ஒரு எஜமான் , கார்மிகர்  தேவை.  பிற்காலத்த்தில் வேதாந்தம் உருவாகி வந்தபோது வேள்வி என்பதே மனிதன் புரியும் செயல்கள் என்று பரிணாமம் அடைகிறது. ஜனமேஜய னின்  யாகத்தில்  வேதம் புரிபவர்கள் தங்கள்  இச்சைகளையும்  அவியாக்க  கையால் சைகை செய்யும்போது அவை பாம்பின் அசைவுகளை   ஒத்திருப்பதாக  கற்பனை செய்கிறார். வெண்முரசின் சடங்கியல்   பற்றி அறிய ஒரு தனி வாசிப்பு வேண்டும்.  வாழ்நாள் பணியாகும் அது

அதர்வ வேதம் 

இந்து மதம் தன்னை ‘தூய்மை’ செய்து  கொண்டே வளர்ந்த போது  , நூற்றாண்டுகளில்  வழக்கு  ஒழிந்து போய்விட் ட  முறைமைகளை அவற்றின் அக்காலத்  தேவையைப் புரிந்து  கொள்ள முயற்சிப்பது  வெண்முரசின் ஒரு முக்கிய இழையாக  இருந்து வருகிறது. அதர்வ வேதத்தின் மந்திரங்களைக் கொண்டு யாகம் இயற்றப் படுகிறது.  ஒன்பது துளைகளையும் முறைப்படி அடைத்துக் கொல்லப் பட விலங்குகள் பலி  கொடுக்கப் படுகின்றன. வெண்முரசின் சடங்கியல் பற்றி தனியே ஒரு வாசிப்பு தேவைப்படுகிறது

  காசி இளவரசிகள் –   முக்குணங்கள்  

அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரும் சத்வ , ரஜஸ் , தமோ குணங்களின்  வெளிப்பாடாக  காட்டப்   படுகிறார்கள். அம்பை ரஜோ  குணத்தின் வடிவம். அவள் செந்நிறமாக உடையணிந்து பின்னர்  வாராஹி வாகனத்தில் பிடாரியாக உருவெடுப்பதன் அனைத்து உளவியல் விசை களையும்  துவக்கத்தில் கொண்டிருக்கிறாள். ஆயினும் பிற இளவரசிகளுக்கு சத்வ , தாமஸ குணங்கள் பொருந்துவது புரியவில்லை. தாமச குணத்தை புரிந்து கொள்வது கடினம் தான் . தமோ குண வடிவு கொண்ட அம்பிகை இசையிலும்  சத்வ குணம் மீதுற்ற  அம்பாலிகை  ஓவியத்திலும் திறன் கொண்டவர்கள் 

வேள்வியில் தடைகள் 

தொழில் பிரிவுகள் அவற்றுக்குரிய முழு அறிவில் செறிந்திருந்தன. பந்தல் சமைக்கும் வினைஞர்  தனது துறைசார் அறிவை காலம் கடந்த தேடலுடன் இணைத்துக் கொள்கிறார். வெண்முரசின் சூதர்கள் பணிப்பெண்கள் சமையல் புரிவோர், முடி திருத்துவோர் , கொல்லர், மருத்துவர்   காட்டும் அனுபவ அறமும் அதன் வழி வந்த  ஞானமும்  பாரத தேசத்தின் செயல்முறை வேதாந்தத்தின்  தரிசனத்தில் விளைந்தவை. காசி அரசனின் வினவிற்கு வேள்விப் பந்தல் அமைத்த முது கலைஞர்  சொல்லும் மறுமொழி தனது தன்னறத்தில்  தோய்ந்த எளிய பாரதியனி ன் அறிவுச்சுடர்.

பெயர்ச் சூடுதல் 

ஜெயமோகன் கோடடை மணிக்கு, கோடடைச் சுவருக்கு , விலங்குகளுக்கு உச்சமாக கங்கையின் சுழிக்கே பெயர் சூட்டுகிறார்.  வெண்முரசின் இசைக்கருவிகளுக்கே தனி ஆய்வு தேவை. படங்களுடன்  செவ்வியல்,  பண்ணியல் இசை  அறி வாண ர்கள்  இதை  முயல வேண்டும். 

தரிசனம்

நாகக்  கொலை வேள்வியைத் தடுத்து தட்சனைக் காக்கும்   ஆஸ்திகன் மூன்று குணங்களும் வாழ்விற்குத் தேவை  என்று நிறுவுகிறான் . அதை வியாசமுனி அனுமதித்து    அருள்கிறார். தந்தை வாக் கினாலும்  தேசியக் கடமையாலும்  மணத்துறவு கொண்ட பீஷ்மர் பாரதக் கதையின் சிக்கலின்  மைய முடிச்சாக அமைகிறார்.   முழுவதும் இச்சையை விட்டிருந்தால்  பிற முனிவர்களைப் போல   வனமே கி இருப்பார்.   ஆனால் அஸ்தினபுரியைக் காக்கவேண்டும் என்ற மெல்லிய சரடு அவரைக் கட்டி இருக்கிறது.

அடி மனத்தில் அவருக்கு ஆசை இருக்கிறதோ   என்ற அச்சம் அவருக்கும் உள்ளது. அம்பையுடன் அவர் புரியும் உரையாடல் இந்திய மனத்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது. 

ஆப்பிரிக்காவில் கிளம்பி அலை அலையாகப் புவியை நிறைத்துக் கொண்டு விரிந்த ஹோமோ  பேரினத்தின்   மத்திய ஆசியாவின் கங்கைச் சமவெளியில்  வந்து சேர்ந்த இந்தப் பிரிவினரில் , வேட் டையாடி வேளாண்மை ஆற்றி  துவக்க நிலை சமூகமாக பரிணாமம் அடைந்த  இந்தக் கூட்டம் காலத்தின் எந்தத் துளியில் “உள்ளது ஒன்றே” ‘நீயே அது” என்ற தாவலை  அடைந்தது என்பது ஒரு புதிர்  . சுவாமி விவேகானந்தர் இதை வியந்து பேசுகிறார்.  இச்சையைப்  பதங்கமாக்கி   பெண்ணுருவை அன்னையாக்கியது  இந்தியாவின்  இணையற்ற உளவியல் கண்டுபிடிப்பு  

அவமானம் அடைந்த அம்பை கொற்றவையாக கொதிக்கிறாள். பீஷ்மரின் உதிரம் வாங்காமல் அடங்காது இந்தப்  பிடாரி . இங்கே ஜெயமோகன் கொற்றவையை, இளங்கோவடிகளின்  கண்ணகியைக் காட்டுகிறார். பெயரில்லாது எரிந்தழிந்து போன பாரத தேசத்தின் வெயிலுகந்த, தீப்பாஞ்ச , சீ லைக்காரி , மா சாணி அம்மன்கள் வடிவில் அம்பை நெருப்பாகிறாள்

உடல் நமக்கு சொந்தமில்லை ; ஆன்மாவுக்கு சொதம் என்கிறாள் அம்பை.. பெண் என்பவள் வெறும் கருப்பை மட்டும்  தானா என்ற வினா இந்திய பெண்களின்   வினா. 

அழகியல் 

அம்பை தற்கொலை செய்யும் முடிவை எடுக்கும்போது ஆவலுடன் அவள் உள்ளத்தின் மூன்று அன்னையர்  பேசும் இடம் அற்புதமான து

மலரில்  தேன் நிறைக்கும்  , பெண் குழந்தைகள் கனவில் மலர் காட்டி சிரிக்க வைக்கும் சுவர்ணை ; 

அவள் சற்று அறியத் தொடங்கும் போது இசையில் துயரையும் கவிதையில் கனவையும்    நிறைக்கும்  சோபை ,

 அவளில் முதற் காதல் மலரும்போது  படைப்பின் இனிய கடனை ஆற்றும் விருஷடி    என்னும் தேவியர் அம்பையை பீஷ்மரை நோக்கி திரும்புகின்றனர். வெண்முரசின் தனிதத்துவத்தின் அதிசய இடம் இது.

அம்பையின் உணர்வு நிலையைச் சொல்லுமிடம்  :

அம்பை நிருதனின் படகில் பீஷ்மரை க் காண செல்கையில் அருகில் வீ ணை யை வைத்தால் அது தானாகவே இசைத்திருக்கும். விரல் பட்டால் கங்கை அதிரும் 

அம்பை படகில் செல்கையில் சூ ரியனுடன் கிழக்கு   முனையில் உதித்து  எழுகிறாள் 

 இரு தடைகள் 

கீதை , ஒரு செயலுக்கு மூன்று தடைகள் வரலாம் என்று பேசுகிறது. ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் மற்றும்  அத்யாத்மிகம் .  முறையே இயற்கையால், இறையால், தன்னால் வருவன. காசி அரசனின் கேள்விக்கு அமைச்சர்  தரும் பதிலில் வேள்விக்கு இரு தடைகள்  பற்றி உரைக்கிறார் . அத்யாத்மீகம் இதில் சேரவில்லை. காசி மன்னன்  தானே வருவித்துக் கொண்ட  தடை தானே இந்த வேள்வி முயற்சியே  என்று தோன்றுகிறது.

தமிழின் புதிய சொற்கள் 

இயல்பாக நாவிற்கு இசைந்து வரும் தமிழ் ச்  சொல்லிணைவுகளை உருவாக்குபவர்கள் சிந்தனையில் புதிய பாதைகளைத் துவங்குகிறார்கள்.

விசுவநாதன் – விசும்புக்கு அதிபன் 

விசாலாட்சி – அகல்விழி அன்னை 

உவமைகள் 

1அர்க்கியமிடக்  குவிந்த கரங்கள் போன்ற ….

2 பல்லக்கில் பிணம் இருப்பது போல என்னெஞ்சில்  நீயா இருந்தாய் 

3 கருப்பை எனும் நங் கூ ரம் 

4  சிதையில் இதயம் வேகும்  போது எழுந்தமரும் பிணம் போல (பீஷ்மர் மெல்ல அசைந்தார் )

5 அழு க்கு மீது குடியேறும்  மூதேவி என 

6 எய்யப் படும் அம்புக்குப் பின் அதிரும் நாண்  போல 

7 வெவ்வேறு சந்தஸ் களில்  இசைக்கும் பறவைகள் 

வடக்கு  தெற்கு ஒற்றுமை  

““ இந்தியா செக்கோஸ்லாவாகியாவைப் போல பல நாடுகளாக உடையும் ;  “

   “ பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன “ 

என்று இங்கு ஒரு அரசியல் தரப்பு உண்டு .

 எந்த நாடும் அப்படியே ஒரு தேசமாக புவியில் தோன்றவில்லை.  மனிதர்களின் ஒற்றுமையும் வாழ்க்கை முறைகளும் விழுமியங்களும் பரிணமித்து உருவாகின்றன தேசங்கள்.  பெரும் தலைவர்களும் இந்த நதியின் போக்கை அணைக்கட்டிடவோ   திசை  மாற்றவோ செய்தவர்கள் மட்டுமே.    எல்லா தரப்பினருக்கும் இடமிருக்கும் பண்பாடு சார்ந்த தேசிய  சிந்தனையில்  ஒரு தேசத்தின் அனைத்து உயிர்களும் பெரும் பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றன

 வரலாற்றில் பின் சென்று நீதியை நிலைநாட்டுபவன் கவியாசிரியன் . அவன் காலத்திற்கு மேலே இருந்து பார்க்கிறான் 

வெண்முரசு வட -தென் சமன்பாட்டை சரி செய்கிறது . சங்கரர்  தொடங்கி நாராயண குரு வரையிலான படிவ ர் ஞானத்தை பயன் படுத்திக் கொள்கிறது 

நாம் மறந்து விட்ட இந்தியாவின் கலாச்சார தேசியத்தை செயற்கையாக இல்லாமல் நினைவூட்டுகிறது 

அத்தககைய சில இடங்கள் 

1 வியாசர் குமரி முனையில் வழிபடுகிறரர் 

2 திருவிடத்தில் இருந்து அகத்தியரையே வரவழைக்கிறேன் (சத்தியவதி சொல்வது)

3 சோழம் , பாண்டியம் ,  கொங்கணம்  அரசர்கள் காசி மணத்தன்னேற்பில் கலந்து கொள்வது 

4 வேசரத்திலும்  அப்பால் திருவிடத்திலும் அம்பைக்கு ஆலயங்கள் 

5 கடலோர திராவிட நாடு சண்ட கர் ப்பர்  அதர்வ வேத அறிஞர் 

புனைவு      கொடுக்கும் கற்பனைச் சுதந்திரம் மட்டுமல்ல இக் கூற்றுக்கள்  .

வரலாறு  கனவுக்குள் புகுந்து எடு க்கப் பட வேண்டிய இடங்கள் சில உண்டு. எந்த அரசியல் நோக்கம் இல்லாமல் அதை உரிய செவிகள் இழுத்துக் கொள்ளும்.  இந்தியப் பெருநிலத்தில் எங்கோ நெடுந்தூரம் நடந்து    செல்லும்  பயணி இசைக்கும் பழம்பாடல்கள் இந்த தேசத்தைக் கட்டி வைத்திருக்கும் இழைகள் . முடியாது வளரும் இந்தச் சரடில் வெண்முரசு வலிமையான பொற்பட்டு நூலாடை . முதற்கனல் அதற்கு முதல் நூல்.

ஆர் ராகவேந்திரன் 

கோவை  

தீராது முளைக்கும் பெருங்கதைகள் – ஆர். ராகவேந்திரன்

பர்வா வாசிப்பனுபவம் – எஸ் எல் பைரப்பாவின் பர்வா, பாவண்ணன் அவர்களால்  மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது (பருவம்) 

தரவு அறிவிலயலின் ஒரு பிரிவான   கொத்து ஆய்வு (CLUSTER ANALYSIS) தகவல் புள்ளிகள் எப்படி குழுக்களாக அமைகின்றன என்று  புரிந்து கொள்ள முயல்கிறது. ஒவ்வொரு புள்ளியையும் சில பரிமாணங்களில் சில குணங்கள்  தன்மைகளின் சேர்க்கைகள்  என்று  அனுமானிக்கிறது.  புள்ளிகளாக மனிதர்களை வைத்துக்  கொண்டால்  மகாபாரதத்தை  ஒரு  ஆதிநிலை க்ளஸ்டர்  பகுப்பாய்வு என்று விரித்துக்  கொள்ள  வாய்ப்பிருக்கிறது.  வரலாற்றின்  போக்கையும் சமுதாயத்தின் தற்கால நிலையையும்  குறித்த புரிதல் முயற்சிகளை மேற்கொள்ள முடிகிறது.  

பல பரிமாண பெட்டியாக சமுதாயத்தை  உருவகித்துக் கொள்ளலாம். புள்ளிகள் இந்த பெட்டிக்குள் நகர்கின்றன. ஒன்றுடன் ஒன்று ஈர்த்துக் கொள்கின்றன. விலக்குகின்றன .பெரிய புள்ளிகள் கருத்தை உருவாக்கி சிறு வடடங்களை கொத்துக்களை  உருவாக்குகின்றன. கொத்துக்களை  உருவாக்குவதற்கு விழுமியங்கள்  தேவைப்படுகின்றன.அதை விட முக்கியமாக அடுத்த வட்டத்தில் உள்ள புள்ளிகள்  தம்மை விட வேறுபட்ட விழுமியங்களை  நம்புவதாகப்  பிரச்சாரம் செய்கின்றன. புள்ளிகளுக்கு அடையாளம் முத்திரை இடப்படுகிறது. வாரிசுகள்  உருவாகின்றன. சில தலைமுறைகள் கழிந்தவுடன்  பழைய புள்ளிகள் விழுமிய அடித்தளமாக வளர்த்தெடுக்கப் படுகின்றன.  

புள்ளிகள்  வடடத்தை விட்டு வெளியேறி விடாமல் இருக்க கேள்விகள் பயன்படுகின்றன. 

“நீ ஒரு வீர …. .அவனா ? ” 

” இந்தப்  பரம்பரையில் வந்தவனா?”  என்பது போன்று.  

இதனால் புள்ளிகள் தம் இடத்தில் ஆணி அடித்து நிறுத்தப் படுகின்றன. 

“நியோக முறையில் பிறந்த பாண்டவர்கள் குரு  வமிசத்தின்  வாரிசுரிமை பெற்றவர்களா ?”, 

“கர்ணன் தன பிறப்பை மறைத்து வில்வித்தை கற்றுக் கொண்டது சரியா?” 

“நீங்கள் மட்டும் அறத்தை மீறி எங்கள் ஆட்களைக்   கொல்ல வில்லையா?”  

” பல்லாண்டுகளாக அரசு உங்களை ஆதரித்ததே  , செஞ்சோற்று க்கடன் தீர்க்கவேண்டாமா ?”  இவை போன்ற கேள்விகள் புள்ளிகளிடம் எழுப்பப் படுகின்றன. 

பல புள்ளிகள் ஏன் இருக்கிறோம் என்ற காரணம் தெரியாமலேயே  தமது வட்டத்திற்குள்  இருக்கின்றன.  சில புள்ளிகள் தம் அடிப்படை இயல்பினால்  வடடம் மாறி  விடுகின்றன.  யுயுத்சு, சல்லியன் போன்றவர்கள் இந்த வகையில்  வருகிறார்கள் (OUTLIER DATA POINTS).

ஆழமான,  அலையற்ற ஆற்று நீரோட்டம் போல செல்லும் பர்வா , பாரத வர்ஷத்தின் வரலாற்றில் நிகழ்ந்த பெரும் போரின்  சமூக, பொருளியல்,  உளவியல் கோணங்களை தொலை தூரப்பார்வையில் ஆராய்கிறது. போர்க்களத்தைக் காட்டாமல் , கண்டவர்கள் , கேட்டவர்கள்    கூற்றுகளை விலகி நின்றும் விரைவாகவும் தருகிறது. பல திறந்த திரிகளை விட்டுச் செல்கிறது. துரியோதனன் கடைசியில் என்ன ஆனான் என்பது வேறுபட்ட பார்வைகளில் யூகமாக ச் சொல்லப் படுகிறது. இறுதிச் சடங்கு செய்ய முடியாமலேயே கர்ணன் உடல் பிற வீரர் பிணங்களுடன் அடையாளமற்றுக் கிடக்கிறது. நிகழ்வுகள் பணிப்பெண்கள் , கொல்லர்கள், சாமானிய சிறு மன்னர்கள் மூலம் சொல்லப் படுகின்றன. 

அரசர், அறிஞர் போன்ற பெரிய புள்ளிகளுக்கும் ,  வீரர், சூதர்  போன்ற சிறிய புள்ளிகளுக்கும் இடையேயான பரிமாற்றங்களை , நகர்வுகளை, திரண்டெழுந்த இரு படைகளின் உருவாக்கத்தை, அணியைத் தெரிவு  செய்ய உருவாக்கிக் கொண்ட தர்க்கங்ககளின்       அபத்தத்தை , இரு பெரும் புள்ளிக் கூட்டங்களின் மோதலை, பேரழிவை  யதார்த்தமான மீள் சிந்தனையாகக் காட்டுகிறது. 

யாருக்காக , எந்தக் கொள்கைக்காகப் போர் செய்கிறோம் என்று அறியாத வீரர்களே அதிகம். இன்றைய வாக்காளர்களும் பெரிதாக முன்னேறி விட்டதாகத் தெரியவில்லை. ஜனநாயகத்தின் அணையா நெருப்பாகக்  கருதப் படும் அமெரிக்கா உட்பட. 

மாயத்திற்கும் இறைத்தன்மைக்கும் சிரமம் கொடுக்காமலே சாமானிய மனிதர்களின் முயற்சிகளாகக் கதையை நகர்த்துகிறார் ஆசிரியர். 

அடிமை இனங்கள் (பணிப்பெண்களுக்கு அரசனிடம் பிறந்த குழந்தைகள் மூலம்) உருவாகும் முறை, அரசர்களின் பலவீனங்கள், தொல் குழுக்களின் இயல்புகள், பேரறிஞர்கள்  தம் வாழ்வின் இறுதியில் முட்டி நிற்கும்  குழப்பங்கள்  (கிருஷ்ண துவைபாயனர்), வஞ்சம் ஒரு பெரும் வலிமையாக உருக்கொள்வது (துரோணர்),  போர்களுக்கான பொருளியல் தேவைகள் (ஆயுதம் செய்ப்பவர்களின்  வேலை வாய்ப்புகள்) இவற்றின் ஊடாக பெருங்காவியத்தின்   மாற்றுக்   கோணத்தை முன்வைக்கிறது.

தனி நபர்  பகடிக்கும் சமூகப்  பகடிக்கும் குறைவில்லை. கிருஷ்ணனின் புகழ் பெற்ற சமாதான தூதின் பேருரையில் கர்ணன் இருக்கையிலே     உறங்கி விடுகிறான். அதைக் கண்ட துரியன் மர்மப் புன்னகை புரிகிறான். அர்ஜுனனுடன் துவாரகைக்கு செல்லும் பயணத்தில் பருமனான சுபத்திரை தேரில் படுத்துத் தூங்கி  விழுந்து கொண்டேஇருக்கிறாள்.   போரின் பொது கௌரவர் படையின் குடில்கள் பின்புறம் தண்ணீர் இல்லாமல் பெரும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.  போர்  முடியும்போது  திருதராஷ்ட்டிரனின் அரண்மனையில்  உணவிற்குப் பஞ்சம். 

பீமன் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளாத முரட்டு வீரனாகவும் தர்மன் ஆசையை அறச் சொற்களால் அரைகுறையாக மூடி மறைத்துக் கொள்பவனாகவும் காட்டப் படுகிறார்கள்.

உதிர    உறவு  மற்றும் உரிமைகளின் அடிப்படைகள் கேள்விக்கு உள்ளாக்கப் படுகின்றன. நியோக முறையில் பிறந்த குழந்தை மீது பெற்றோருக்கு எவ்வகை உரிமை உள்ளது, என்று தொடங்கும் சிக்கல்களின் உச்சமாக பாஞ்சாலி தன் ஐந்து மகன்கள் கொல்லப் பட்ட போது எழுப்பும் வினா நிற்கிறது. பீமன் மகன் கடோத்கஜன் இறந்த போதும் அர்ஜுனன் மகன் அபிமன்யு இறந்த போதும் தந்தையர்கள் அடைந்த துயரின் ஆழம்  ஐவர் மாண்டபோது வெளிப்படவில்லையே  என்று கதறும் திரௌபதி இறந்த இவர்களுக்கு தான் மட்டுமே உறவு என்று அழுகிறாள்.  துக்கம் கொண்டாடும் முறைகள் குறித்த அடிப்படை வினாக்களைத் தூண்டுகிறது. பெற்றோர் எனும் இரு புள்ளிகளிடையே  குழந்தைகள் மீதான  அன்பு பங்கிடப் பெறும்  முறைமைகள் , பல கணவர் முறையில் இருந்து விலகும் பரிணாமத்தின் வேர்கள்  துலங்குகின்றன.

பீமன் தோளில் ஓங்கி அடிப்பதன் மூலம் தன் அன்பை வெளிப்படுத்தும் சால கடங்கடியம் அவள் கட்டளையை ஏற்று தன்னை விட்டு  நினைவிலாப் பருவத்திலேயே விலகிய தந்தைக்காக ரத்தம் சிந்தும் கடோத்கஜனும் , வேளாண்மை செய்வதற்காக காட்டில் நெருப்பு வைக்கப் பட்டதால்  மரங்களுடன் கருகி விடும் அசுரர் இனத்தவரும் ,  அரசுகளின்  அடித்தளத்துக்குள் புதைக்கப் பட்ட அழிவுகளுக்கு மௌன ஆவணங்கள்  ஆகின்றனர்.

இமயத்தின் உயரத்தில் வாழும் வலிமையும் ஒளியும் கொண்ட தேவர்கள் , காடுகளின்  நாக,அசுர,  ராட்சச குலங்கள் , இவற்றில் மேலுள்ளவரை வணங்கியும் கீழுள்ளவரை ஒழித்தும் நிலை நிறுத்திக் கொண்ட அரச இனங்கள் வியாசரின் ஆதி கதையை நாம் நிற்கும் தரைக்கு இறக்கி அணுக்கமாக செய்கின்றன.  பீமன், அர்ஜுனன், கிருஷ்ணனின் பயணங்கள் , காடுகளின், கடலின் வர்ணனை  மூலமாகவும் நீண்டு கொண்டே செல்லும் நினைவோட்டங்கள்  மூலமாகவும்      பேருருக் கொள்கிறது பர்வா.

கீதை உபதேசம் எல்லோருக்குமாக நிகழ்கிறது. எளிமையான கவுன்சிலிங் ஆக நிற்கிறது. நீதிக்காகவும் வஞ்சிக்கப் பட்டவர்களுக்காகவும் எழும் குரலாக உள்ளது கண்ணன் குரல்

ஊழின் பாதை மாந்தர் அறியாமலேயே தன் திசையை தீர்மானித்து விடுகிறது. பீஷ்மர்  மணம் புரியாவிரதம் எடுத்துக் கொண்டபோதும் நகருக்கு அருகிலேயே கங்கைக் கரையில் தங்கிக் கொண்டது ஏன் என்னும் வினா விடையற்றது. 

மகன் உண்ணா நோன்பில் இறந்த பிறகு கிருஷ்ண துவைபாயனர் அடையும்  சலனங்கள், தாம் வேதத்தை இயற்றியவரா அல்லது தொகுத்தவர் தானா என்பது போன்ற இறுக்கமான சிக்கல்கள்  ஒரு புறம் ;     மறுபுறம் விழியிலா அரசன் எப்படி சிறுநீர் கழிக்கச் செல்வான்,  போர்க்களத்தில் உடைந்த ஆயுதத்தை சேகரித்து உருக்கி தாழ்ப்பாள் நாதாங்கி செய்து விற்கும் கொல்லன் என, மண்ணோடு தவழும் பிரச்சனைகள் பைரப்பாவின் கவனத்தில் இருக்கின்றன.   .  சமுதாயத்தின்  புழக்கடையை கவனம் செய்வதால் மக்கள் இலக்கியமாக மிளிர்கிறது. 

நகர வழி இன்றி தன் மேல் அடிக்கப் பட்ட ஆணியின்  அடியில் தவிக்கும் சிறிய புள்ளிகளின் சிக்கலை இக்கதை பேசுகிறது,  இறைத்தன்மைக்கு வேலை கொடுக்காமல்.

இன்று இந்தியாவில் மக்கள் வாழ்வோடு ஒன்றி விட்ட பாரதக் கதை மாந்தர் பலருக்கு ஆலயங்கள் உள்ளன.  நம் கிராமங்களின் கதைகளுடனும் இயற்கையுடனும் அவர்கள் பெயர்கள் ஒன்றி விட்டன         மேற்குத் தொடர்ச்சி மலையின் குந்திப் புழை , வெள்ளிங்கிரி மலையில் நிற்கும் பீமன் களி  உருண்டை என்று சொல்லப் படும் பெரிய பாறை உருண்டை, கேரளத்தில் நீத்தார் சடங்கிற்கு உகந்த இடமாக நம்பப் படும் ஐவர் மடம்,  பல இடங்களில் திரௌபதி அம்மன் கோயில், சில இடங்களில் காந்தாரி அம்மன் கோயில்களில்  தொடர்ந்து இடறி விழுந்து கொண்டிருக்கிறோம்.  பலவற்றைச் சொல்ல விரும்பி சிலவற்றை மட்டும் அவசரமாக  முன்னோர்கள்  விட்டுச் சென்றுள்ளதாக தோன்றுகிறது. 975 பக்கங்களில் படித்து முடித்ததும் சுமையற்ற பெருமிதம் உருவாகிறது. 

போர் முடிந்ததும் பெருமழை பொழிகிறது. விஷ்ணுபுரத்தை அழிக்க வரும் ஊழி வெள்ளம் நினைவுக்கு வருகிறது.  வரலாற்றின் வயதான பக்கங்களை துடைத்தழித்து புதியவை முளைத்தெழ நீரும் நெருப்பும்  விடடால் சிறந்த தூய்மைப் பணியாளர் யார் இருக்கிறார்கள்? 

காலம் தவறிப் பொழியும் மழையில்  காட்டப் படும் இறுதிக் காட்சி புதிய முளைத்தலுக்கு அழகிய சித்திரம். அர்ஜுனனால் எழுந்து சென்று வாளைக் கூட எடுத்து வைக்க முடியவில்லை. திரௌபதிக்கும் குந்திக்கும் முரண்பாடு ஏற்படுகிறது.  கொட்டும் மழையில்  கூ ண்டு  வண்டிக்குள் கொல்லனின் மனைவிக்கு குழந்தை  பிறக்கிறது. ஆனால் உத்தரைக்கு குழந்தை இறந்து பிறப்பதாகக் காட்டுகிறார்  பைரப்பா.

இந்தப் பகுதியை 2021 ஜனவரி ஆறாம் தேதி இரவு வாசித்துக் கொண்டிருக்கையில் காலம் தவறிப் பெய்து கொண்டிருக்கும் மார்கழி மாத மழை  புவியை ஆவேசத்துடன் அறைந்து கொண்டிருந்தது. சால கடங்கடி நினைவில் துலங்கி எழுகிறாள், தனது பேரனுக்கு மரக்குடிலில்   ஊன்  உணவை ஊட்டியபடி .

வியாசர் முதல் பைரப்பா  வரை சொல்லித் தீராத , முளைத்துக் கொண்டே இருக்கும் பாரதத்தின் பக்கங்கள் போல பெருமழை விழுந்தது.

கசாக்கின் இதிகாசம் வாசிப்பு – ராகவேந்திரன்

பெரும்  படைப்பாளிகளில் தாயன்பை சிறுவயதில்  முழுமையாகப் பெறாதவர்கள் அடைந்த கொந்தளிப்புகள்   படைப்பின்  துயரச்சுவைக்கு ஒரு அசல் தன்மையை  அளிக்கின்றன. 

ஓ வி விஜயனின்  “கசாக்கின்  இதிகாசம்  வாழ்வின்  அபத்தங்களையும்  குற்ற  உணர்வு மற்றும் மனிதனை நடத்தும் விசைகளை  இருண்ட   நகைச்சுவையுடன் முன்வைக்கிறது.  

கசாக்கின் இதிகாசம், அறியாப்பருவத்தில்  தாயை இழந்தவனின் திசையற்ற  துன்பியலையும் குற்ற உணர்வையும் இயற்கையுடனும்  மனிதர்களுடனும்   கொண்ட தேடலையும்  அழகிய  ஓவியமாக  வரைகிறது.  கற்பனை  ஊரில் நம்மைக் கவிதையாகக் கனவுகள் காண  அழைக்கிறது. இனியவற்றில் மட்டுமல்ல,  மரணம்,நோய், அழுகல்  ,இவற்றிலும் கருணை, அன்பைக் காணலாம்  என்கிறது.  

ஆசிரியர் பார்கின்சன்  நோயில்  இருபது ஆண்டுகள் துயருற்றார். சாந்திகிரி  மடத்தின் கருணாகர  குருவின் தொடர்பில் இருந்தார் ( நாராயண குருவின்  வழி வந்தவர்).  நாவலில் வேதாந்தத்தின் இழை  ஓடுகிறது.  கம்யூனிசத்தின் மீது நம்பிக்கை இழந்திருந்தார். சரிகைத்தாள்  ஒட்டிய நரகத்தின் படத்தை முதல் அத்தியாயத்தில் ஒரு பெட்டிக்கடையில் காட்டும் ஆசிரியர் வேறு ஒரு இடத்தில் சரிகைத் தாள்  ஒட்டிய ஸ்டாலின்  படத்தைக் காட்டுகிறார்.

கட்டமைப்பு

நூறாண்டுத் தனிமைக்கு முன்னர்  எழுதப்பட்ட மாயயதார்த்தவாதப்படைப்பு. மோகமுள் பாபுவின் தந்தைக்கும் கசாக்கில்  ரவியின்  தந்தைக்கும் ஆர்வமூட்டும்   உளவியல் ஒப்பிட்டு ஆய்வு நடத்தலாம்.

மலம்புழா அணை கட்டுவதற்கு ஏற்பாடுகள்  செய்த  கால  கட்டத்தில் செய்திகள் சென்றடையத் தாமதம் ஆகும் ஒரு கிராமம், அதன் மனிதர்களின் காரணமுள்ள  ,  காரணமற்ற துயரங்கள் ஊடே எளிமையான வாத்சலயம் தெரிகிறது.  சண்டை செய்தல், அற  வீழ்ச்சி , அன்பு செய்தல் எல்லாவற்றிலும் ஒரு மழலை மிளிர்கிறது.

குழந்தைமை, அன்பு மூலம் விடுபடலுக்கான வாய்ப்பை முன்வைக்கிறது . 

கவிதை

சிறு வயதில் எல்லாரும்  கண்களைப் பிதுக்கிக் கொண்டு வானத்தைப் பார்த்து சிறு புள்ளிகள் விழுவதைப் பார்த்திருப்போம்.  அந்தப் புள்ளிகள் கற்பக விருட்சத்தின் கனிகளைக் குடித்து விட்டு தேவர்கள் குடுக்கையை வீசுவது தான் என்று நட்சத்திரக் குட்டனிடம் தாய் சொல்வது உச்சக் கவிதை

விளக்கிலிருந்து வரும் ஒளி தாமரை இலையின் வட்டம் போல விழுகிறது. மின்மினிகள் ஒரு துயரம் போல, ஆறுதல் போல ஆங்காங்கே பறக்கின்றன. நாட்டார் கதைகளின் கவித்துவம் வெளிப்படும் இடங்கள் அருமை.

 மலை மூங்கில்களில் சிக்கித் தவிக்கும் மனித ஆத்மாக்களின் கதை, இறந்த மூத்தோரின் அலையும் நினைவுகள் பறந்தலையும் தும்பிகளாகத் திரிவது, அந்தத் தும்பிகளைப் பிடித்தலையும் உறவுகளை இழந்த ஆட்டிசச் சிறுவன் அப்புக்கிளி, அவனுக்கு உறவாக  வருகிற ஊர்க்காரர்கள்   ,   தேக்குத் துளிரெடுத்துக் கசக்கி   மணம் பிடிக்கும் குரங்குகள்,   பனை உச்சியில் மாணிக்கத்தை  வைத்து விட்டு இளைப்பாறும் பறக்கும் நாகங்கள் இவை போன்ற அழகுக் கவிதைகளும் உண்டு.  

உடைந்து வழியும் சீழ் போன்ற சாமந்திப் பூ மணம் போன்ற அம்மை நோய், ஆனந்த மயமான நல்லம்மையின் பிரசாதம் போன்ற ஜன்னியில் அம்மையைக் கண்டு கொண்டே இறந்து போகும் மனிதர்கள், நோயில் கண் இழந்த குட்டி அச்சனின் விழி உருண்டைகள் கண்ணாடிக் கிண்ணங்கள் உடைந்து தகர்ந்த சிவப்புக் குழிகள் போன்று இருந்தமை,  இறந்த மொல்லாக்கா உடலில் இருந்து   பேன்கள் உதிர்ந்து போய் எல்லை இல்லாத ஆழத்தில் விழுவது – இவை போன்ற அருவருப்புச் சுவைத் தருணங்கள், ஒரு மாற்று அழகைத் தருகின்றன. 

சமய ஒருமை

ஆசிரியரின் மத ஒற்றுமைக் கனவு, ஒரு பழங்காலத்தை மீட்டெடுக்கும் ஏக்க முயற்சி.  மாப்பிள்ளைக் கலவரம் முடிந்து சில பத்தாண்டுகள் கழித்து எழுதப் பட்டது இந்நூல் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.  மசூதி கட்டிக் கொடு என்று புளியங்கொம்பத்து போதி – பகவதி – சொல்வது, ஓணப் பூ பறிக்கும் ராவுத்தர் பிள்ளைகள்,  ஷெய்க் எஜமான், நாகர்கள், குலசாமிகளுக்கு நேர்ந்து விட்டுப் பனை ஏறும் வழக்கம்,  ஈழவரும் ராவுத்தரும் இணைந்து திவசம் கொடுப்பது  என்று ஒரு பொற்காலத்தைக் குழந்தைகளும் பழங்குடித் தன்மை நிறைந்த எளிய கிராம வாசிகளும் இணைந்து முன்னெடுக்கிறார்கள்.

 ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ யிலும் இதே போலக் கையைப் பிசைத்துக் கொண்டு மனம் நோகும் அதினைப் பார்க்கிறோம். ஒருவேளை காந்தி புதினம் எழுதினால் இப்படித்தான் இருக்கும் போலும். 

பாம்பு ஒரு முக்கியப்  பாத்திரமாக வந்து கொண்டே இருக்கிறது. இறப்பின் வடிவமாக, இறுதியான இளைப்பாறுதல் தரும் கண்டிப்பான அன்னையாக. 

கரும் நகைச்சுவை – சில ரசனைகள்

  1. அத்தர் ஒரு தொண்டரை அடித்தான் – நீதிக்காகவும் சட்டத்திற்காகவும் தான்
  2. பள்ளிக்கு வந்த  ஏழைக்குழந்தைகள் எல்லாம் கலிபாக்கள், ராணிகளின் பெயர்கள் வைத்திருந்தார்கள்
  3. அப்புக்கிளியின் சட்டை பல துண்டுத் துணிகள் சேர்த்துத் தைத்தது முன்புறம் சுத்தி, அறிவாள், திரிசூலம் , பின்புறம் காந்தி, மயில் இருந்தது.
  4. அடுத்த பிறவியில் யார் எப்படிப் பிறப்பார்கள் என்ற விவாதத்தில் குஞ்சமினா  சொல்கிறாள் –‘ மொல்லாக்கா ஊறாம்புலி ஆவார் சார்’  , குழந்தை குஞ்சமினாவும்  மனநிலை பிறழ்ந்த அப்புக்ககிளியும் ஆசிரியர் சிரத்தை எடுத்து வடித்த பாத்திரங்கள்.
  5. சுமைதூக்கி, குழந்தைகள் அனைவரும் வேதாந்தம் பேசுகிறார்கள். – “எல்லாம் மாய சார், அதுதானே தம்பி கர்மா.
  6. திருவிழாவில் தன் தவ வலிமையை நிருபிக்க விரும்பிய குட்டன் பூசாரியும் கூத்து நடிக்கும் நடிகர்களும் , உட்பகை காரணமாக ரசாயனம் கலந்த மது குடித்துவிட்டதால் வயிறு கலங்கி,  புதர்களில் ஒளிகிறார்கள். தாழம்பூப் புதர்களின் மேலே கதகளிக் கிரிடங்கள் தெரிகின்றன. “கவுத்துட்டியே தேவி என்கிறான் பக்தன்.
  7. குட்டன் பூசாரி துள்ளி ஆடும்போது சேவல் பயந்து போய் கூரை மேல் ஏறி விடுகிறது. இதே போல மார்க்வெஸின் “நூறாண்டுத் தனிமையிலும் வருகிறது.

உருவகங்கள், படிமங்கள்

மாயமும் இயற்கையும் நாட்டார் நம்பிக்கைகளும் கலந்த படிமங்கள் கசாக் கிராமத்தின் அந்தி,  தும்பிகள், செதலிமலை, கிழக்கு (கோவையிலிருந்து வரும்) காற்று, சிலந்தி, கரப்பான்கள், பனை, பேன்கள் , வயசாகும்போது படச்சவன் பெடரில உக்காருவான், சாகும் குதிரை அருகில் இருக்கும்  இறைத்தூதன் எஜமான்,  இவை தீட்டிய அழகிய ஓவியம்

மரணச் செய்திகள்  குறிப்பாக குழந்தைகளின் மரணங்கள் சாதாரணமாக எதிர்கொள்ளப் படுகின்றன. வாசகன் ஒரு அதிர்வை அடைகிறான். 

பேருந்து நிலையத்தில் தொடங்கும் இதிகாசம் அதிலேயே முடிகிறது. இரண்டு முடிவுகளைத் தருகிறார் ஆசிரியர். ஒன்றில் ரவி புது வாழ்வை ஆரம்பிக்கிறான். இன்னொன்றில் பாம்பு தீண்டி, சாலையில் எதிர்பார்ப்புடன் கிடக்கிறான். குரும்பு செய்யும் குழந்தையின் அழகிய பற்களுடன் நாகம் அவனைத் தீண்டுகிறது. வாசகன் மேலதிக முடிவுகளையும் எடுத்துக் கற்பனை செய்து கொள்ளலாம். அவனை அழகிய மரணமே அமைதி தருவது என்ற முடிவுக்கு வரச் செய்வதில் புதினம் வெற்றி பெருகிறது.

யூமா வாசுகியின் மொழி பெயர்ப்பில் ஒரு மாயத்தன்மை உள்ளது.  ஒரு புதிய நாட்டார் பேச்சுமுறையையே உருவாக்கி உள்ளதாகத் தோன்றுகிறது. மூலத்தையும் வாசித்தால் தான் மொழிபெயர்ப்பின் உயர்வைக் கொண்டாட முடியும் போல உள்ளது. 

பெயரில்லாத் துயரங்களின், உருவமில்லா ஏக்கங்களின் முடிவிலாப் பெருங்கதை கசாக்கின் இதிகாசம்.

ஆர் ராகவேந்திரன்

மீறலின் பெருவிளையாடல் – ராகவேந்திரன்

காப்ரியாலா கார்சியா மார்க்வெஸின் “நூறாண்டுத் தனிமை” வாசிப்பு

நிறுவனமாக்கப் பட்ட மதம், குடும்ப நெறிகள், அறிவியலின் அரசியல், அரசின் அதிகாரம் இவற்றின் அடிப்படை அலகாக மனிதன் பிறன் மீது செலுத்த விரும்பும் ஆதிக்க உணர்வு என்றும் இருக்கிறது. அவற்றை மீறும் ஆதார எழுச்சியும் மனிதர்களை சிறிய, பெரிய கலகங்கள், புரட்சிகளை நோக்கி செலுத்தி இருக்கிறது.  இந்த ஊடாட்டத்தின் இடையே கல்லை இணைக்கும் சிமெட்டிப்பால் போல மானுட அன்பு  ஒழுகி இருப்பதை வரலாறு கண்டு கொண்டிருக்கிறது.  புதியவற்றைத் தேடிப் படைக்க வேண்டும் என்ற உந்துதலும் மனித ஜீன்களை மாற்றம் என்னும் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறது.

ஆதிக்கம், அன்பு, மீறல், தேடல் இவற்றின் அடிப்படை  மானுட விசைகளை மிகைக் கனவு கொண்டு நெய்தெடுத்த நீலத்துணியாக நூறாண்டுத் தனிமை விரிகிறது.

மார்க்வெஸ் பதினெட்டு மாதங்கள் தினமும் தொடர்ந்து எழுதியுள்ள மாய நடப்பு வாதப் புதினம்.  மகோண்டா என்ற கற்பனை ஊரின் ஏழு தலைமுறைகளின் வாழ்வையும் வீழ்வையும் நகை முரண்களுடனும் அதிர்ச்சியூட்டும் விலகலுடனும் கேளிக்கையுடன் சித்தரிக்கிறது.

புரட்டிப் போடல்

மரணம் ஏன் சிரிப்பைத் தருவிக்கக் கூடாது? அழிவை ஏன் எப்போதும் துயரத்துடனே எதிர்கொள்ள வேண்டும்? இவை போன்ற அடிப்படையை அசைக்கும் வினாக்களை எழுப்பினால் அவரை ஒரு ‘மாதிரியாக’ப் பார்ப்பார்கள் அல்லவா? அந்த ஒரு மாதிரியான  மனநிலையை சரியானது என்று வைத்து கொண்டு படைப்பிற்குள் இறங்க வேண்டும்.

ஒவ்வொரு சொல்லும் பழக்கத்தாலும் காரணத்தாலும் ஒரு குறிப்பிட்ட உணர்வு நிலையை எழுப்பும். அந்தச் சொல்லுடன் முற்றிலும் முரண்படும் வேறு ஒரு சொல்லைச் சேர்த்தால் ஒரு திகிலைத் தரும். நாவல் முழுவதும் இது போன்ற ‘குண்டக்க மண்டக்க’ உணர்வுச் சேர்க்கைகளால் கட்டப் பட்டுள்ளது. அதை ஒரு அறிவரின் கலை அழகுடன் கொடுத்துள்ளார் மார்க்வெஸ்.

மிகவும் துயரமான ஒரு நிகழ்வை விவரித்துக் கொண்டே செல்கையில், ஒரு வெடிக்கும் நகைச்சுவையைத் தூக்கிப் போட்டு விடுகிறார். அழுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் வாசகன் திடீரென சிரித்துக் கொண்டிருக்கிறான். அப்படியே ஒரு இரண்டு வயதுக் குழந்தையாக வாசகனை மாற்றி விடுகிறார். அது எதன் பிடியிலும் இல்லை. எப்போதும் கேளிக்கை.

உதாரணமாக, அழகியான ரெமெடியோஸ்  ஒரு விரிப்பை உலர்த்திக் கொண்டிருக்கும்போதே காற்று அவளை விரிப்புடன் தூக்கி விண்ணிற்கு எடுத்துச் சென்று விடுகிறது. மதச் சடங்கும் கட்டுப் பாட்டு வெறியும் கொண்ட பெர்னாண்டோவின் ஒரே கவலை , தனது கம்பளம் பறந்து போய்விட்டது தான். அதைத் திருப்பும்படி கடவுளை வேண்டிக் கொள்கிறாள்.

பாத்திரப்படைப்பும் காலமும்

ஜோஸ் அர்கேடியோ புயின்டியா:

 புதியவற்றைத் தேடுபவன். ஆற்று வழியே பயணித்துக் கடலைக் காணத் துடிப்பவன். நாடோடிகளின் தொடர்பால் புதிய கருவிகளைக் கொண்டு வந்து ஊரை மாற்றுபவன். தான் செய்த கொலையின் குற்ற உணர்ச்சி ஆவியாக வந்து பேசியதால் பித்துப் பிடித்தவன். ஒரு செஸ்ட்நட் மரத்தினடியில் கட்டிப் போடப்படுகிறான். எப்போதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பித்துப் பிடித்தவன் அறிவியலும் ஒரு வகை மூட நம்பிக்கைதான் என்று காட்டுகிறான். அவனது சிறையை விடுவித்த போதும் மரத்தை விட்டு எங்கும் போகாமல் அமர்ந்திருக்கிறான்

உர்சுலா

கதையின் ஆதாரப் புள்ளி. ஏழு தலைமுறைகளின் வீழ்ச்சிக்கு சாட்சியாக இருப்பவள். சராசரிக்கும் சற்று அதிகமான ஆற்றலுடனும் அன்புடனும் ஒரு வீட்டுத்தலைவி அன்னையாக, மூதாட்டியாக மாறி மூதாதையாக, படிமமாகச் சமைகிறாள். 115 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து அனைத்துத் துயரங்களும் தந்த வடுக்களைத் தாங்கி நிற்கும் பெருமரம். சகுனங்களை குறிப்பாக அப சகுனங்களை நம்புகிறவள். கண் பார்வை போய்விட்டபோதும் பிற புலன்களை வைத்து முழு விழிப்புடன் வாழ்கிறாள். வீடு வறுமையும் கரையானும் பிடுங்க இடிந்து கொண்டிருக்கும் நிலையில் மரணப் படுக்கையிலிருந்து எழுந்து மீண்டும் வீட்டை மறு சீரமைப்பு செய்கிறாள். தன் மகன் செய்யும் புரட்சிக் கொலைகளைத் தட்டிக் கேட்பவள். மகனால் ராணுவ விசாரணை செய்து கொல்லப் படும் கன்சர்வேடிவ் கட்சியின் மேயரை மீட்கக் கடைசி வரை போரிடுபவள். வீடு முழுவதும் விருந்தினரால் நிறையவேண்டும் என்று நினைப்பவள். தன் வம்சத்தின் மீதும் மகோண்டா கிராமத்தின்  மீதும் பற்று கொண்டவள். ஒவ்வொரு குடும்பத்தையும் உளுத்துப் போகாமல் காக்கும் சூரிய ஒளியாக ஒரு உர்சுலா இருக்கிறாள் என்று தோன்றுகிறது.

கர்னல் அவ்ரெலியானோ புயின்டியா

ஜோஸ் – உர்சுலாவின் மூத்த மகன். சாதாரண மனிதன் திடீரென புரட்சியாளனாக மாறும் போது அந்த மாற்றத்தின் உண்மையான காரணங்களைக் கண்டறிவது கடினம். மகோண்டாவில் அரசாங்கம் வருவதற்கு முன் எல்லாம் ஒழுங்காகச் சென்று கொண்டிருந்தது. திடீரென அரசாங்கம் வீடுகளை நீல வண்ணத்தில் பூசவேண்டும் என அறிவிக்கிறது. வெண்மைப் பூச்சு தான் செய்வோம் என்றான் ஜோ.

அரசின் மென்மையான இரும்புக் கரங்களை உணர்ந்த அவ்ரெலியானோ திடீரென்று விடுதலைப் படையில் சேர்கிறான். பல கொலைகள், தோல்விகள், வெற்றிகள், காயங்கள்  பட்டு, இறுதியில் சுடப்படும் தருவாயில் பலமுறை தப்புகிறான். ஒரு கட்டத்தில் தான் போர் செய்ததன் காரணம் சுய ஆணவத்தின் நிறைவுக்காகத்தான் என்று உணர்ந்து அமைதி உடன்படிக்கை செய்துகொள்கிறான். அதனால் அவன் சகாக்களுக்கு அதிகத் துன்பம் வருகிறது. துரோகி பட்டம் பெறுகிறான். வீட்டில் தன் பட்டறையில் மீண்டும் சிறிய தங்க மீன்களை உருவாக்கி, உருவாக்கி அழித்து, முடங்கி விடுகிறான். தனக்குத்தானே விளைவித்துக் கொண்ட தனிமையால் பட்டுப் போன மரம் அவ்ரெலியானோ.

ஜோஸ் அர்கேடியோ

உர்சுலாவின் போக்கிரிப்பிள்ளை. மகோண்டாவில் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பல கொடுமைகளை நிகழ்த்துபவன். ரெபாக்கா இவன் மனைவி. சந்தேகத்திற்கு இடமாக மரிக்கிறான். இவனது சாவின் போது ரத்தத்துளி நகர்ந்து வந்துவீட்டை விட்டு வெளிவந்து சாலையில் ஓடி, அன்னை உர்சுலாவிடம் வந்து நிற்கும் இடம் முக்கியமானது. இவனது குழந்தைப் பருவத் ‘தனிமை’ இவனது திருகிய ஆளுமைக்கு வித்தாக உள்ளது. 

அமரந்தா

ஜோஸ் –உர்சுலாவின் மகள். அன்பிற்கும் கோழைத்தனத்திற்கும் இடையே ஊசலாடி உண்மைக் காதல்களை மறுத்து சிலரின் மரணத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாகி, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்பவள். இவளது மரணத் தேதியை முன்பே அறிவித்து விடுகிறாள். அதன் பின் நடப்பது அழகிய இருண்மை நகைச்சுவை. ஊர் மக்கள் இறந்து போன தங்கள் உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கடிதங்களைக் கொண்டு வந்து அமரந்தாவிடம் கொடுக்கிறார்கள். எப்போது இறப்பாள் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். பெட்டி நிறைய கடிதங்கள் சேர்ந்து விடுகின்றன. தானே தயாரித்த அழகிய மரண ஆடையை அணிந்து கொள்கிறாள். உர்சுலாவிற்கு தன் மகளை உயிருடனேயே புதைத்து விடுவார்களோ என்று கவலை. பாதிரியாரும் காலம் வருவதற்கு முன்பே ஒருமுறை வந்து பார்த்து விடுகிறார். ஒரு வேளை பொய்சொல்கிறாளோ என்ற ஐயமும் அவருக்கு வருகிறது. கடைசியில் அமரந்தா குறித்த முகூர்த்த்திலேயே மரணிக்கிறாள். 

பெர்னான்டோ

இறுகிப் போன நிறுவன மதத்தின் பிரதிநிதி. தன்னை அரசி என்று நினைத்துக் கொள்பவள். பிணங்களுக்கு வைக்கும் மலர் வளையங்களைச் செய்து கொண்டிருப்பவள். குழந்தைகளை இரக்கமின்றி நடத்தும் ‘நற்குணம்’ கொண்டவள். சாவைக் கொண்டாடுதல், துக்கம் அனுசரிப்பு, இறுதிச் சடங்குகளில் நிபுணத்துவம் இவையே இவளது வாழ்வியல் நோக்கம். பாவத்தின் உருவமாகத் தான் கருதும்  மானுடத்தின் மீது வெறுப்பை அபிடேகம் செய்பவள்.

 படைப்பில் பொதுவான ஒரு போக்கு ஆர்வமூட்டுவது. பாவிகள் என்று  வரையறுக்கப் படுபவர்கள் முதிர்ந்து கனிந்து கருணை கொள்கிறார்கள். வழி தவறியவர்கள் எல்லாம்  முடிவில்  நிறைவடைகிறார்கள். உதாரணம் , சோதிடம் சொல்லும் பிலர் டெர்னாரா. கடைசி வரை வெடிச் சிரிப்புடன் இருப்பவள். செகுண்டாவின் கள்ளக் காதலி பெட்ரா கோட்ஸ்  இன்னொரு சிறந்த உதாரணம்

ரெனடா ரெமெடியோஸ் (மீமி)

அழகின் உருவான மூத்த ரெமெடியோஸ் பெயர் இவளுக்கும் வைக்கப் படுகிறது. பெர்னான்டோ – அவ்ரிலியானோ செகுன்டோவின் மகள். தனது சடங்கு வெறி பிடித்த அன்னைக்கு ஏற்ற வகையில் தனது தனிமையை சமாளித்து வளர்கிறாள். இசைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறாள். யாரையும் கேட்காமல்  ஒரு வார விடுமுறைக்கு மூன்று கன்யாஸ்திரிகளையும்     மாணவிகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறாள். அதன் பின் வீடு கலவர பூமியாகிறது. கடைசிப் பெண் சாப்பிட்டு முடிந்ததும் அடுத்த வேளை உணவு தொடங்குகிறது கழிவறை போதாத காரணத்தால் சேம்பர் குப்பிகளை வாங்குகிறார்கள். பிறகு அவற்றைக் கழுவுவதற்காக வரிசையில் நிற்கிறார்கள் மாணவிகள். 

மீமி ஒரு கார் மெகானிக்குடன் காதலில் விழுகிறாள். தாய் பெர்னாண்டோ தொலைதூர தேசத்தின் கன்னிமாடத்தில் மகளை அடைத்து வைக்கிறாள். ஒரு குழந்தை பார்சலில் வருகிறது. அதில் வரும் குடும்பத்தின்  ஆறாவது வாரிசான அவ்ரிலியானோவை பாட்டி பெர்னாண்டோ அறையில் அடைத்து ரகசியமாக வளர்க்கிறாள். அவன் புயின்டியா குடும்பத்தின் கல்யாண குணங்களுடனும் துடுக்குடனும் வளர்கிறான். 

பிய்ட்ரோ க்ரெஸ்டா : 

இத்தாலியிருந்து வந்து புயின்டியா குடும்ப்ப் பெண்களுக்கு இசையும் நடனமும்  கற்றுத் தந்து ரெபக்காவிடம் காதலில் விழுந்து அவள் அர்காடியோவை நாடிவிட, அமர்ந்தாவைக் காதலித்து , அவளாலும் புறக்கணிக்கப் பட்டு, ஒரு நல்ல நாளில் தனது இசைக்கூடத்தில் அனைத்து விளக்குகளும் எரிய, அனைத்துக் கருவிகளும் இசைக்க, இயந்திர பொம்மைகள் ஒலிக்க, விரலை அறுத்துக் கொண்டு உயிர் விடுபவன்

காலம்: 

காலமும் மகோண்டா என்ற ஊரும் படைப்பில் முக்கிய உருவகங்கள். காலம் நேர் கோட்டில் நகர்வதில்லை என்று உணர்கிறாள் உர்சுலா. மீண்டும் மீண்டும் ஒரே சம்பவங்கள் சில தலைமுறைகளின் இடைவெளியில் நடக்கின்றன. இதைக் காணும் துயரம் உர்சுலாவிற்கு நடக்கிறது. பேரக் குழந்தைகளுக்கு தாத்தா/ பாட்டி பெயர் வைப்பதில் ஒரு தர்க்கபூர்வ நம்பிக்கை இருக்கிறது. ஒருவரே மீண்டும் வந்து வாழ்வது போல உள்ளது.

வாழைப்பழப் படுகொலை

லத்தின் அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ வல்லரசுகள் நடத்திய படுகொலைகளின் வடு இந்த இலக்கியங்களில் வெளிப்படுகிறது யுனைடட் ஃப்ரூட் கம்பெனி தொழிலாளர்களின் போராட்டங்களை பொம்மை அரசின் ராணுவத்தை  வைத்து முறியடிக்க 3000 ஆயுதமற்ற தொழிலாளிகளையும் சுட்டுத் தள்ளிவிட்டு ரயிலில் எடுத்து அழுகிய பழங்கள் போல கடலில் வீசி விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை என்று அரசும், ஊடகமும் சாதித்து விடுகின்றன. வாழைப்பழக் குடியரசு என்று ஓ ஹென்றி ஹோன்டுராஸ், குவாடிமாலா நாடுகளை அழைக்கிறார். அந்த்த் துயரை லத்தின் அமெரிக்கப் பிரதிநிதியாக மார்க்வெஸ் வெளிப்படுத்துகிறார்.

பகடிப் பரப்பு

மகோண்டாவில் முதன் முதலில் ஊருக்குள் ரயில் வரும்போது பயந்து ஓடி வந்த பெண் சொல்கிறாள் “ அதோ வருகிறது, அச்சமூட்டும் ஒன்று; ஒரு சமையலறை ஒரு கிராமத்தையே இழுத்து வருவது போல” ( க சீ சிவக்குமாரின் ஆதி மங்கலத்து விசேஷங்கள் நினைவுக்கு வருகிறது)

அவ்ரலியானோ முன்னாள் புரட்சி தளபதி. அவனைப் பார்க்க வருபவர்கள் மரியாதைக்காக வருவதில்லை. ஒரு வரலாற்றுச் சின்னத்தை ஒரு அருங்காட்சியகப் புதைபடிவத்தைக் காணத்தான் வருகிறார்கள் என்பதை அவனே உணர்ந்து கொள்கிறான்.

  1. வீட்டில் இறந்தவர்களின் ஆவிகளும் உயிர் வாழ்பவர்களின் ஆவிகளும் வளைய வந்து கொண்டிருக்கின்றன
  2. அமரந்தா ஆடை நெய்வது தனிமையை வெல்வதற்காக அல்ல; வளர்த்தெடுப்பதற்காக
  3. அறிவியல் பூர்வமான மூட நம்பிக்கை
  4. புனித ஜோசப்பின் சிலைக்குள் பொற்காசுகளைப் புதைத்து விட்டு புரட்சி காலத்தில் யாரோ உர்சுலாவிடம் கொடுத்துச் செல்கிறார்கள். பொற்காச்களைக் கண்டறிந்த்தும் அதைப் புதைத்து விட்டு , வீட்டுக்கு வரும் எல்லா விருந்தினர்களிடமும் ‘நீங்கள் ஒரு சிலையைக் கொடுத்து வைத்துச் சென்றீர்களா” என்று காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். கிழவியிடம் எப்படியாவது புதையலின் இடத்தைக் கறந்து விடவேண்டும் என்று பலவகையில் செகுன்டா நோண்டிக் கொண்டிருக்கிறான். போதம் கெட்டு கால உணர்வை இழந்து விட்ட போதும் கடைசி வரை கிழவி சொல்லவில்லை
  5. “துல்லியமான குழப்பம் “ ;” புதிதாய்ப் பிறந்த கிழவி”
  6. காலத்திற்கும் விபத்து ஏற்படலாம். அது கால் தடுக்கி நிரந்தரமான ஒரு துண்டை ஒரு அறையில் விட்டுச் செல்லலாம்
  7. செகுன்டோ இரட்டையர்கள் சிறு வயதில் தங்கள் அடையாளங்களை மாற்றிக் குழப்பி விளையாடுவார்கள். அவர்கள் ஒரே நாளில் இறக்கிறார்கள். குடிபோதையில் இருந்த நண்பர்கள் சரியாக அவர்களை மாற்றிப் புதைத்து விடுகிறார்கள்
  8. அழகிய முரண்  – Hallucinational Lucidity
  9. சுவரில் எழுதப்பட்ட புனிதமான மடமை
  10. கடைசியாக, ஜோஸ் தவறுதலாக ஒரு கருவியை நகர்த்த, அது பொருத்திக் கொண்டு இசை வெளிவந்த்து
  11. சைவ உணவுக்காரர்களிடம் மட்டும் காணப்படும் அந்த விரக்திப் பார்வை
  12. தனது திருமண நாளில் படபடத்து தனது  மோதிரத்தை கீழே போட்டு உருட்டி, காலால் அமுக்கி எடுத்து அசடு வழியும் அவ்ரலியானோ
  13. பெருமிதம் என்னும் படுகுழியில் இருக்கும் மக்கள்
  14. புகழ் என்னும் சாணக்குவியலில் பன்றி போலப் புரளுதல்
  15. கடும் போர்ச்சூழலின் இடையே தந்தியில் விவாதிக்கும் தளபதி “மகோண்டாவில் மழை பெய்கிறது” என்பான்
  16. வாழ்க்கை சேகரித்து வைத்த ஏக்கக் குப்பைகளின் ஒளி இழக்கும் அடுக்குகள்
  17. போலியான, ஈர்க்கும் நற்குணம்

பெண் சண்டைகள்

குடும்பத் தலைவிகள் அக்கம் பக்கத்தில் , வீட்டுக்குள் பூசலிடுவதை ராஜ் கௌதமன் (சிலுவை ராஜ் சரித்திரம்), S K பொற்றேகாட் (ஒரு கிராமத்தின் கதை) ரசித்து வர்ணித்திருப்பார்கள். மார்க்வெஸின் பெர்னாண்டோ தன் கணவனைத் திட்டுவதை மூன்று பக்கங்களுக்கு கவிதை போலப் படைத்திருக்கிறார். 

மீறல் 

புதினமெங்கும்  தடை மீறலின், ஒழுக்க வீழ்ச்சியின் துடிப்பு காணக் கிடைக்கிறது. அறிவின் வளர்ச்சியும் தடைகளை மீறித்தான் வந்திருக்கிறது. உறவுகளின் பொய் ஒழுக்கங்கள் சில நேரங்களில் அதிர்ச்சியை ஊட்டுகின்றன. அரசு – மதம் – கட்டுப் பாட்டிற்கு எதிரான எளிமையான மாற்றாக ஆசிரியர் மீறலை முன்வைக்கிறார்.  லத்தின் அமெரிக்காவின் சுரண்டப்பட்ட இனத்தின் குரலாக மேற்கத்திய உலகைப்  பார்த்து, விக்டோரியன் அறத்தின் பசப்பைப் பார்த்து “போடா” என்று சொல்லும் குரல். இந்த உடைக்கும் விசையை உருண்டை பிடித்து ஒட்டி வைக்கும் பசையாக உர்சுலா தனித்து நிற்கிறாள்>

உருவகங்கள், படிமங்கள்

 மயக்குடன் காட்டப் படும் உருவகங்களாக மஞ்சள் பட்டாம் பூச்சிகள், மஞ்சள் மலர்கள், மரிக்கும் பறவைகள், சதுப்பு நிலங்கள், பழைய எலும்புக்கூடான கப்பல், அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்ட சாம்பர் குடுவைகள்,  உருக்கி உருக்கி மீண்டும் உருவாக்கும் தங்க மீன்கள், பழைய சுவடிப் பட்டைகள், வீட்டின் அறைகள், கரையான்கள், எறும்பு இழுத்துச் செல்லும்  குழந்தை , கரப்பான்கள், தேள்கள் என்ற மாய உருவக வெளியைக் காண்கிறோம்

மகோன்டா கிராமம் உலகிற்கும் ஜோசின் குடும்பம் மனித இனத்திற்கும் நூறு ஆண்டு வரலாறு காலத்திற்கும் படிமங்களாக உள்ளன.

நூறாண்டுத்தனிமையை ஒரு நீர்த்துப் போன கவிதை என்று ஒரு மேலை விமர்சகர் சொல்கிறார். அதுவே ஒரு சிறந்த பாராட்டுதான். ஒரு கவிதையை நாவலாக இழுப்பதற்கு அதன் காதுகளை இழுக்க வேண்டும். அதற்கு மாய யதார்த்தம் நல்ல வடிவம்.

இத்தாலியிலிருந்து வந்த இசைக்கருவையை ஜோஸ் பிரித்து மேய்ந்து கெடுத்து விடுகிறான். வாழ்வெனும் இசைக்கருவியை ரசிக்காமல் அழித்து விடும் முட்டாள் தனம் தான் தனிமைப் படுதல். தனிமையின் இசையை மீறலின் துடுக்குடன் உரக்க ஒலிக்கும் பழங்குடியின் குரல் நூறாண்டுத் தனிமை.  

***

ஆர் ராகவேந்திரன்

பள்ளிகொண்டபுரம் வாசிப்பு – காளீஸ்வரன்

உடலிலும் மனதிலும் பலமில்லாத, சாமானியத்தனத்தின் பிரதிநிதியாக விளங்கும் அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்ததினத்தில் துவங்குகிறது ”பள்ளிகொண்டபுரம்” நாவல். அவரது வாழ்கையின் இறுதி நாற்பத்தி எட்டு மணி நேரங்களில் அனந்தன் நாயரின் மனவோட்டம் மூலமாக, அவரது வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, அதனூடாக அக்காலகட்டத்தை, சாமானியர்கள் மீது எவ்வித கருணையும் காட்டாத வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார் திரு.நீல.பத்மநாபன்.

பேரழகியான கார்த்தியாயினியை, விருப்பமின்றி மணக்கும் அனந்தன் நாயரின் தாழ்வுணர்ச்சி அதிகரிக்க, அவளது அழகே போதுமானதாக இருக்கிறது. அவர் அஞ்சும், சமயங்களில் ஆராதிக்கும் கார்த்தியாயினியின் அழகே அவர்கள் வாழ்வில் புயல் வீசுவதற்கான களம் அமைக்கிறது. கார்த்தியாயினியின் அழகால் கவரப்படும் “தகஸில்தார்” விக்ரமன் தம்பியால், அனந்தன் நாயருக்கு பதவி உயர்வுகள் கிடைக்க, அதற்கான காரணத்தை அனந்தன் நாயர் எளிதில் யூகிக்கிறார். அலுவலகத்திலோ, அதிகாரத்திடமோ அவர் காட்ட முடியாத கோபம், மனைவி மீது திரும்ப, ஒரு கட்டத்தில் அவர் பயந்தது அல்லது ஆழ்மனதில் விரும்பியது நடந்தே விடுகிறது. 41 நாட்கள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வரும் அனந்தன் நாயர் நுழைவது கார்த்தியாயினி நீங்கிச்சென்ற வீட்டில். மகன் பிரபாகரன் நாயர் மற்றும் மகள் மாதவிக்குட்டியுடன் தனித்து விடப்படும் அனந்தன் நாயர், தன் முழுவாழ்வையும் அவர்களுக்கெனவே செலவிடுகிறார். வயது வந்த மகள் மற்றும் மகனின் சமீபத்திய நட்புவட்டாரம் குறித்து அவர் கேள்விப்படும், காணும் விசயங்கள் அவருக்கு உவப்பாய் இருப்பதில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்வைப் பற்றியும், அவர்களுடைய எதிர்காலம் குறித்தும் தன் பிள்ளைகளிடம் அன்ந்தன் நாயர் பேசும் இரவே, அவருடைய இறுதி இரவாய் மாறுவதில் முடிகிறது இந்நாவல்.

*

நாவலின் மையக்கதாப்பாத்திரமாக வரும் அனந்தன் நாயரின் பார்வையிலேயே பெரும்பாலான சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. இந்நாவலின் மிகப்பெரிய பலம் இதன் கூறுமுறை. திருவனந்தபுர வீதிகளையும், அதனூடே பிணைக்கப்பட்ட அனந்தன் நாயரின் நினைவுகளையும் மிகக் கச்சிதமான சொற்களால் சொல்லப்பட்டிருக்கும் விதம், திருவனந்தபுரத்தில் நாமும் அலைந்து திரிந்த உணர்வைத்தருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் இந்நாவலில் வெறுமனே நிலப்பரப்பாக காட்டப்படாமல், அவ்வூரின் தெருக்களும், கோவிலும், சிலைகளும் அனந்தன் நாயரின் வாழ்க்கைச் சம்பவங்களை அவர் நினைவிலிருந்து மீட்டெடுக்கும் கண்ணியாக அமைந்திருப்பது, அவருக்கிணையான பாத்திரமாக திருவனந்தபுரத்தையும் கருத வைக்கிறது. 

இயல்பிலேயே நோய் வாய்ப்பட்டு அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அனந்தன் நாயர், மனதளவிலும் வலுவற்றவர். அவரின் தாழ்வுணர்ச்சியும் தன் மனைவிக்கு தான் எவ்விதத்திலும் தகுதியற்றவன் எனும் அவரது ஆழ்மனவோட்டமுமே, விக்கிரமன் தம்பியின் நோக்கத்தை, ஆரம்பத்திலேயே தெளிவாகப் புரிந்து கொள்ள வைக்கிறது. தொடரும் நாட்களில் இயல்பான அல்லது எப்போதுமிருக்கும் விசயங்களில் கூட குற்றம் கண்டு கார்த்தியாயினியை நோகடிக்கும் அனந்தன் நாயர், அவரைப் பிரிந்து செல்லும் முடிவை நோக்கி அவளைத் தள்ளுகிறார். அவ்வகையில், தன்னுடைய தாழ்வுணர்ச்சி எனும் பள்ளத்தை, தியாகத்தைக் கொண்டு நிரப்ப அவர் முயல்வாதக் கருதுகிறேன். 41 நாள் நிர்மால்ய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வருகையில், மனைவி இல்லாததை உணரும் போது, முதலில் அவருக்கும் வருத்தம் மேலிட்டாலும், நேரம் செல்லச் செல்ல அதை ஒருவகை விடுதலையாகவே உணர்கிறார். இந்நாவல் முழுவதிலும், அனைவரிடத்தும் அடங்கிய குரலில் பேசிப் பணிந்து செல்லும் அனந்தன் நாயர் தன்னுடைய குரூரத்தை வெளிப்படுத்துவது கார்த்தியாயினியிடம் மட்டுமே. நாவலின் இறுதிப்பகுதியில் அனந்தன் நாயரின் இருவித குணங்களும் அவரது பிள்ளைகளிடம் வெளிப்படுவதைக் காணாலாம்.

நினைவு தெரியுமுன்னே தன்னை நீங்கிப்போன அம்மாவிடம் மாதவிக்குட்டி கேட்ட கேள்விகள், தன் அம்மா மீதான அவளது கோபம், விலக்கம் அனைத்துமே அனந்தன் நாயருக்கு ஒருவித நிம்மதியைத் தருகின்றன. தான் கேட்க முடியாத கேள்விகளை, தன் ஆதங்கத்தை மகளாவது வெளிக்காட்டினாளே என்கிற குறைந்தபட்ச ஆசுவாசம்தான் அது. ஆனால், சற்றே நினைவு தெரியும்வரை அன்னையிடம் இருந்தவனும், நடைமுறைவாதி என தன்னைக் கருதுபவனுமான பிரபாகரன் நாயரின் பார்வை முற்றிலும் மாறானது. தன் அம்மாவின் தவறுக்கு முழுக்காரணம் அவளை அந்நிலையை நோக்கித்தள்ளிய தன் அப்பாதான் என அவனிடமிருந்து ஒலிக்கும் சொற்கள் ஒரு கோணத்தில் அனந்தன் நாயரின் மனசாட்சியின் சொற்களும் கூடத்தான். மகள் மூலம் தன் மனதுக்குக் கிடைத்த நிம்மதியை கொஞ்ச நேரம் கூட தங்கவிடாமல் குலைத்துவிட்ட மகனின் செயல் அவரை மேலும் விசனப்படுத்துகிறது. அவ்விசனத்துடனே அனந்தன் நாயரின் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது.

அனந்தன் நாயரின் அத்தை குஞ்ஞுல‌ஷ்மி, தன் கணவனான சங்குண்ணி நாயரை நீங்கிச்செல்லும் நிகழ்வு, அனந்தன் நாயரின் சிக்கலுக்கு இன்னுமொரு பரிணாமத்தைத் தருகின்றது. அனந்தன் நாயரைப் போல தாழ்வுணர்ச்சி இல்லாத சங்குண்ணி நாயர், தன் மனைவி தன்னை நீங்கி இன்னொருவனிடம் போவதைத் தடுக்க காலில் கூட விழுகிறார். தான் குஞ்ஞுலஷ்மிக்கான சரியான துணை எனும் நம்பிக்கையில் விழுந்த அடியின் விளைவு அது. அதையும் மீறி கொச்சு கிருஷ்ண கர்த்தாவுடன் செல்லும் குஞ்ஞுலஷ்மிக்கோ தன் கணவன் மீது எவ்வித புகார்களும் இல்லை என்பது இன்னும் துயரமளிப்பது.

அனந்தன் நாயரின் அக்காவாக வரும் கல்யாணி அம்மாவின் பாத்திரப்படைப்பு முற்றிலும் மாறுபட்டது. மணம் முடித்து சில காலம் மட்டுமே வாழ்ந்தபோதும், அரவிந்தாக்‌ஷ குறுப்பு அவள் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிப்போகிறார். வேதாந்தியான அவரின் மறைவுக்குப் பின், அவரின் மகன் பாஸ்கரன் நாயரும் அவன் தகப்பன் வழியிலேயே பயணிக்கிறான். ஆனால், ”குருவை சோதித்துப் பார்த்து” தன் தகப்பன் செய்த தவறைத் தவிர்த்து, அவன் தன் குருவின் சொல்லுக்கிணங்கி திருமணத்துக்குத் தயாராவதில், அர்த்தப்படுகிறது கல்யாணி அம்மாவின் வாழ்க்கை.

*

இந்நாவலில் ”அணைக்க முடியுமுண்ணா தீய பத்தவைக்கணும்” என அனந்தன் நாயரிடம் கார்த்தியாயினி சொல்லும் இடம் ஒன்றுவரும். அது உண்மைதான். தன் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் தன்னால் அணைக்க முடியாத தீயைப் பற்றவைப்பவராகவே எனக்கு அனந்தன் நாயர் தெரிகிறார். 

நாவலின் இறுதிப்பகுதியில் வானம் பின்வருமாறு வர்ணிக்கப்பட்டிருக்கும், “பெயருக்குக் கூட ஒரு நட்சத்திரம் கூட இல்லாத இருண்ட சூனியமான ஆனால் பரந்த வானம்”. நாவலைப் படித்து முடித்தபின் அவ்வர்ணனை அப்படியே அனந்தன் நாயரின் வாழ்க்கைக்கும் பொருந்துவதாகவே எனக்குத் தோன்றியது. 

*

பள்ளிகொண்டபுரம்  (நாவல்) – நீல.பத்மநாபன் – காலச்சுவடு பதிப்பகம். 

நீலகண்டப் பறவையைத் தேடி, வாசிப்பனுபவம் – நவீன் சங்கு

ஒரே ஒரு புத்தகத்தை கூட வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் உயர் ரக வடிவமைப்புடன் செய்து தரும் ஏதேனும் பதிப்பகம் இருக்குமெனில், தகுதிக்கு சற்றும் நியாயமற்ற வடிவில் இருக்கும் “நீலகண்ட பறவையைத் தேடி” நாவலை அவ்வாறு மாற்றி பத்திரமாக வைத்துக் கொள்வேன்.

“நீலகண்ட பறவையைத் தேடி” பிரிந்து போன நினைவிலிருந்து ஒரு உலகத்தை உருவாக்கி அங்கே வாசகர்களை கை பிடித்து கூட்டி செல்வதில்லை மாறாக அந்த உலகத்தில் தள்ளி விட்டு விடுகிறார் அதீன். 

அந்த உலகத்தின் இயற்கை,மொழி, பண்பாடு, வாழ்க்கையை காண்பிக்கிறார்.அவற்றை தரிசிப்பது மட்டுமே நம் வேலை,மாறாக அதன் மேல் நமது அளவீட்டை செலுத்தி பார்த்தோமெனில் நாம் தோற்றுப் போவோம்.ஏனெனில் இந்த ஆசிரியர் புதிய முறையில் ஒன்றை சொல்கிறார், ஆதலால் கனவு முடியும் வரை பொறுமையுடன் இருப்பதே இந்த உலகத்தை தரிசிப்பதற்கான சிறந்த வழி.

உங்களால் நீங்கள் கண்ட கனவை ஆரம்பம் முதல் இறுதி வரை முறையாக சொல்வது கடினம் அல்லவா?, காரணம் அது நினைவிலிருந்து மறைந்து மறைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அழிந்து போன புகைப்படம் போல தெரிகிறது அல்லவா!

இந்த நாவலும் அப்படித்தான் முறையாக சொல்வது கடினம், காரணம் இது கனவு போல மறைந்து போவது அல்ல மாறாக சமுத்திரம் போல பொங்கி எழுகிறது, நினைக்க நினைக்க அந்த உலகத்திலிருந்து ஏதாவது ஒன்று பொங்கி வழிகிறது.

கதை கூறல் முறை :

இந்த நாவலை செல்மா லாகர் வேவ் எழுதிய “மதகுரு” நாவலின் அழகியலுடன் ஒத்து போகிற நாவலாக பார்க்கலாம்.இயற்கை சித்தரிப்பு, கதை மாந்தர்கள், நிகழ்வு, பயணம் என‌ அடிப்படையிலேயே நாவல் செறிவானதாக இருக்கும் போது கதை சொல்லல் முறையில் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்துவதால் நாவல் இன்னும் வலுவாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.Parallel Narration ஆக, எப்போதுமே இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் சொல்கிறார்.அதாவது ஒரு நிகழ்வு ஆரம்பிக்கும்; ஆரம்பித்து குழப்பம்,சுவாரஸ்யம், உச்சம்,தீவிரம் போன்ற ஏதாவது உணர்ச்சிக்கு அருகில் கொண்டு வந்து பிறகு மற்றோரு Narration க்கு செல்வது.இவ்வாறு மாறி மாறி உணர்ச்சி எல்லைக்கு செல்வதால் புதிய அனுபவமாக சுவாரஸ்யமாக உள்ளது.

Magical Realism போன்ற கருத்துருவாக்கம் உருவாவதற்கு முன்பே அது போன்ற உத்திகளைப் பயன்படுத்தி உள்ளார்.ஆனால் அதை வேறுமாதிரி பயன்படுத்தி உள்ளார். உதாரணமாக நாவலின் முதலிலேயே ஈசாம் ஒரு மரம் எரிந்து கொண்டு துரத்துவது போல் காண்கிறான்;மயங்கி விழுகிறான். அதே சமயம் பிற்பாடு நாவலில் பக்கிரி மரங்களுக்கு தீ வைத்தும், வேசம் பூண்டும் மக்களை அச்சுறுத்துகிறார்.மணீந்தரர்‌ வரும் ‌நிகழ்வு தவிர மற்ற இடங்களில் இது போன்ற மாய நிகழ்வை‌ எதார்த்தத்துடன் சேர்த்து ஒரு தர்க்கத்தை உண்டு பண்ணுகிறார்.

எந்தவொரு உணர்ச்சிகரமான நிகழ்வுகளிலும் ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை.சாதாரணமாக கடந்து போகிறார். உதாரணமாக வீடுகள் தீ பற்றி எரிவதை, யானை பேலுவை தாக்குவதை சொல்லலாம்.இதை அவருடைய அழகியல் என சொன்னாலும் கதையோடு பயணிக்கும் வாசகனுக்கு சிறிய ஏமாற்றத்தை தருகிறது.

இயற்கை:

இயற்கை சித்திகரிக்கப்பட்ட விதம்தான் நாவலின் மிகப்பெரிய பலம்.அதுதான் அந்த கனவிற்கு போதையை கூட்டுகிறது. டால்ஸ்டாயின் இயற்கை விவரிப்பிற்கும் , அதீன் இயற்கையை கையாள்வதற்கும்நல்ல வித்யாசம் உள்ளது.டால்ஸ்டாய் தனது மாளிகையிலிருந்து இயற்கையை ரசிக்கிறார் மாறாக அதீன் இயற்கைகுள் உருண்டு திரிகிறார். கவிஞனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு டால்ஸ்டாயுடையது. உழவனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு அதீனுடையது.

டால்ஸ்டாய்  இயற்கையை விரித்து விரித்து எழுதினாலும், அடிப்படையில் அதை சிறு பொழுது; பெரும் பொழுது ஆகவே கதைக்குள் போகும் முன் பயன்படுத்துகிறார்.மாறாக அதீன் கதை முழுவதுமே இயற்கையைப் பயன்படுத்துகிறார்.ஈசாமுக்கு மேலே வானம் அருகில் தர்மூஜ் வயல், அவர் நடக்கும் போது சகதியும், குளிரும், ஏரியும்,நட்சத்திரமும், பறவையும், இரவும் அவர் பிரக்ஞையுடன் சேர்ந்தே நகர்கிறது. கதைகளம்கூட இதற்கு காரணமாக இருக்கலாம். 

காளியின் தேசம்:    

காளி வழிபாடும் எருமை பழியும் முக்கிய தொன்மமாக உள்ளது.இங்கு இறந்து போகும் மக்கள் தொன்ம கதைகளிலும், வழிபாட்டு உருவகங்களிலும் சென்று சேர்கின்றனர்.ஏரி முக்கியமான ஒன்றாக ரகசியம் நிறைந்ததாக உள்ளது. அனைவரையும் விழுங்கி சலனம் இல்லாமல் இருக்கும் ஏரியையே ஒரு பெரிய மீனாக கொள்ளலாம். அனைவரும் ஏதாவது ஒரு வடிவில் அதில் மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை.காளியே மூழ்கடிக்கப் படுகிறாள்.இந்த உண்மையை அறிந்தவன் கரையில் பைத்தியமாக சுற்றுகிறான்.

இந்திய ஆன்மா என்ற ஒரு சொல் உள்ளது அல்லவா!?, அது இந்த நிலத்தில் அரசியல் பிரச்சினை வருவதற்கு முன்னால் உள்ள மக்களின் வாழ்வே. இந்தியா முழுவதும் பல்வேறு அந்நியர்களால் சூரையாடப் பட்ட பிறகும் அது சிதறுண்டு போகாமல் இருக்க செய்தது இந்த ஆன்மாவே. இந்தியாவின் ஆன்மா என்பது உலக வெளிச்சத்தில் தெரியும் அதன் மெய்யியலோ, அரசியல் கொள்கைகளோ,கலாச்சார பண்பாடுகளோ அல்ல; தாமரைக்கு அடியில் இருக்கும் சேற்றின் குளுமை போல  இந்தியா முழுவதும் பரவியுள்ள எளிய மனிதர்களின் வாழ்க்கை அது.

அரசியல்:

“Suspension of disbelief” என்ற பதத்திற்கான அர்த்தத்தை இந்த நாவலில் தான் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.எங்குமே ஒரு நேரடி அரசியல் கருத்து கூட இல்லாத ஆனால் அழுத்தமான அரசியல் பிரதி. இன்னும் சொல்லப் போனால் ஆளுகிற ஆச்சார இந்துக்களின் வாழ்க்கையை விடுத்து முழுக்க முழுக்க எளிய முஸ்லிம்களின் வாழ்க்கையை, இச்சையை, பசியை, ஒழுங்கீனத்தையே அழுத்தி சொல்வது போல் தோன்றும். ஆனால் இறுதியில் வேறு ஒன்று திரண்டு வருகிறது. 

ஒரு கரையான் கூட்டம் பெரிய ஆலமர வேரை கொரித்து கொரித்து தூளாக்கிய பின்னர் ஒரு வானமே வீழ்வது போல்!  நாவல் முடிகிற சமயத்தில், கால் ஊண்ற தரையில்லாமல் சுற்றியும் நீர்பரப்பை கொண்ட நிலத்தில், ஒருவன் கஷ்டப் பட்டு தூக்ககூடிய அளவில் தர்மூஜ் வளரும் நிலத்தில், பறவைகள் கூட்டம் ஆர்ப்பரிக்கும் நிலத்தில், கணம் தாங்காமல் சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்கள் உள்ள நிலத்தில் சில அரை நிர்வாண மனிதர்களின் வயிற்றில் எரியும் நெருப்பு நம்மை சுடுகிறது.

காளியின் கண்ணீர்:

உலக மனிதனின் முன்னால் உள்ள கேள்வி, முக்கியமாக இந்திய மனத்தை அதிகமாக தொல்லை செய்யும் கேள்வி இயற்கை தேர்வா (Natural Choice) அல்லது கலாச்சார தேர்வா (Cultural Choice) என்ற conflict ஆன கேள்வியிலிருந்தே கதை இரண்டாக பிரிந்து ஆராய்கிறது.ஒன்று மணீந்தரநாத்தின் காதல் இன்னொன்று கலாச்சார சடங்குகளால் இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் இந்துக்கள்.

Feudal system த்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஈசாமின் வாழ்க்கையை சொல்லலாம். இந்த சிறிய சிறிய பூசலிலிருந்தே  இரண்டு சமூகத்திற்கு இடையே விரிசல் ஏற்படுகிறது. பின்பு திருவிழா கலவரத்திலும், மாலதிக்கு ஏற்பட்ட கொடுமையாலும் இரண்டு சமூகத்திற்கு இடையே மறக்க முடியாத மோசமான நினைவை உண்டு பண்ணி விரிசல் இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இறுதியில் காளியை ஆற்றில் கலக்கும் திருவிழா கலவரத்தால் நின்று போவதும், காளியின் சிலை கண்ணீருடன் இருப்பதும் நாவலில் மைய படிமமாக மாறி விடுகிறது.

நீலகண்ட  பறவையைத் தேடி:

இந்த வாசிப்பு அனுபவத்தை எழுதும் போதே நாவலின் சில பக்கங்களை புரட்டிப் பார்க்கிறேன் நிச்சயமாக  நான் எழுதுவது நாவலின் செறிவிற்கு மேலோட்டமாகவே இருக்கும். வாழ்நாள் முழுவதும் பலமுறை வாசிக்க வேண்டிய நாவல்.ஏன் நீலகண்ட பறவையைத் தேடி….என்ற கேள்விக்கு, பதில் பக்கம் 253 – 258 (Edition 2017) ல் இருப்பதாக நினைக்கிறேன்!