ஒரு நாவல் வாசிப்பு தியான அனுபவத்தை அளிக்க முடியுமா? எல்லா நாவல்களாலும் அல்ல. அரிதான சிலவற்றால் அவ்வாறு அளிக்க முடியும் விஷ்ணுபுரத்தைப் போல. கனவுகள் நம்மை மெய்மையின் கரையில் கொண்டு நிறுத்த முடியுமா? ஏன் முடியாது? மொத்த உலகை, வாழ்வை கனவுக்கு ஒப்பிட்டுதானே மெய்மையை சுட்டுகிறார்கள்? ஆனால் எல்லா கனவுகளும் அல்ல விஷ்ணுபுரத்தைப் போல ஒருசில மட்டுமே. அவை மெய்மைக்கு மிக அருகில் செல்பவை அங்கு தம்மை கலைத்துக் கொள்பவை. ஞானிகள் கலைஞர்களை, காவியங்கள் படைக்கும் மகத்தான எழுத்தாளர்களை பெரும் கவிஞர்களை பேணுகிறார்கள். ஏனெனின் இக்கனவுகளின் முக்கியத்துவம் அவர்கள் நன்கறிந்தது. இவை நம் சாதாரண விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையே வரும் கனவுகள் அல்ல, மாறாக நாமறிந்த அனைத்தையும் உறக்கம் எனக்கொண்டு மெய்மையை விழிப்பு எனக்கொண்டு அவ்விரண்டிடையேயான கனவுகள். ஒருவேளை விழித்தாலும் விழித்துக்கொள்ளலாம் அல்லது உறங்கிவிடலாம். மெய்மையின் எந்தவொரு வாய்ப்பும் இங்கு அங்கீகரிக்கப்படாமல் எவ்வாறேனும் பேணப்படாமல் இருந்ததில்லை. எந்தவொரு வாய்ப்பிலும் போலவே இதிலும் தவறவிடும் சாத்தியமும் உள்ளது. அது ஊழ் எனலாம் அல்லது உங்களுக்கான கதவு வேறொரு இடத்திலிருக்கிறது.
விஷ்ணுபுரம் உலகியல் உறக்கத்தைத் திரட்டி ஒரு கனவினை எழுப்புகிறது. அக்கனவினை மெய்மையை நோக்கி செலுத்துகிறது. கனவு எப்படியும் கலைய வேண்டியதுதான். எனினும் எச்சரிக்கை மேற்கொள்கிறது. கனவு இடையில் கலைந்து விடக்கூடாது. அது உரிய திசை சென்று கலைய வேண்டும். அது இப்புறம் முற்றிலும் உலகியலில் விழுந்துவிடக் கூடாது அதேசமயம் தானே மெய்மை என்று அது சொல்லவும் கூடாது. தானும் உலகியலே என்று தனக்கே சொல்லிக்கொண்டு அப்பால் சென்று மறைய வேண்டும். கௌஸ்துபம் – முழுவதும் – ஞான சபை விவாதங்கள் அதன் தர்க்கங்கள் – உரத்துப் பேசுவதில்லை. கௌஸ்துபம் ஆம் இது உலகியல் தான் ஆனால் விஷயம் அதுவல்ல என்கிறது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம் – இவ்விரண்டோடு ஒருவேளை நிறுத்தபட்டிருந்தாலும் விஷ்ணுபுரம் மகத்தான நாவல்தான். ஸ்ரீபாதத்தில் மலைமீது ஏறிச்சென்று அங்கு காஸ்யபரைக் காண்கிறார் சிற்பி. அங்கிருந்து அழிக்கப்பட வேண்டிய விஷ்ணுபுரம் சுட்டிக் காண்பிக்கப்படுகிறது. கௌஸ்துபத்தில் நிலத்தின் அடியில் இருந்து பிரதிபலிப்பாக காட்சிகள் பிறழ்ந்த விஷ்ணுபுரத்தை (ஞான சபையை) சித்தன் தன் சீடன் காஸ்யபனுக்குக் காண்பிக்கிறான். அது கடந்த காலத்தின் விஷ்ணுபுரம். மணிமுடி மிச்ச மீதம் இன்றி விஷ்ணுபுரத்தை முழுவதுமாக அழிக்கிறது. அம்மாபெரும் கோபுரங்களை மட்டுமல்ல அனைத்துவிதமான தன்முனைப்பின் கட்டுமானங்களையும்.
பலவிதங்களில் பலகோணங்களில் நோக்க முடியும். ஹரிததுங்கா மலைக்காக அதன் முகில்களுக்காக பொன்னிறம் பொழியும் வானுக்காக செந்நிற சோனாவிற்காக அதன் மீன்களுக்காக கோபுரத்தில் மோதிச் சரியும் பறவைகளுக்காக வைஜயந்தி என்னும் வெண்புரவிக்காக விண்ணுலகம் தொடும் கோபுரங்களுக்காக ஆலயத்தின் சிற்பங்களுக்காக மரமல்லி மரத்திற்காக மிருகநயனிக்காக மலர்களுக்காக – என இதன் அழகியலுக்காக – கவிதைக்காக இசைக்காக அங்கததிற்காக வாசிக்கமுடியும். இதன் தத்துவ விவாதத்தின் வழியாக இங்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும், நோக்கப்படுபவற்றிக்காக – மெய்காண் வழிமுறைகளுக்காக என அக்கோணத்தில் நோக்க முடியும். உலகின் நிலையாமை கூறுவது எனச் சொல்லமுடியும் அமைப்புகளின் அதிகாரங்களின் தனிமனிதர்களின் அநீதி சுட்டுவது என கூறமுடியும். மிக சாதாரணமானவர்கள் அசாதாரணமானவர்கள் ஆக்கப்படும் புராணங்களின் கட்டுடைப்பு எனச் சொல்லமுடியும். வைணவம், தொல்குடி சமயம், பௌத்தம் அல்லது அதெல்லாம் அப்படியொன்றுமில்லை இது தாந்த்ரீகம் தாந்த்ரீகமே என முடியும் – நான் அப்படித்தான் சொல்லுவேன் அதுவும் சைவ யோக தாந்த்ரீகம்
புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே.
பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் ஆங்கே
முற்ற வரும் பரிசு உந்தீ பற
முளையாது மாயை என்று உந்தீ பற
விஷ்ணுபுரத்தின் கதாபாத்திரங்கள் அஜிதன், சுடுகாட்டு சித்தன், காஸ்யபன், பவதத்தர், நீலி, பிங்கலன், பாவகன், யோகாவிரதர், சந்திரகீர்த்தி, சங்கர்ஷ்ணன், லட்சுமி என பலர் அல்லது அவருள் சிலர் நம்மிடம் நம் உள்ளத்தில் தமக்குரிய இடத்தை பெற்று அமரக்கூடும். ஏராளம் அப்படி வந்து விட்டார்கள். சமீபத்தில் போரும் அமைதியும் பியர் அப்படி வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார். இத்தனைக்கும் அவர் நட்டாஷாவைத் திருமணம் செய்துகொண்டது எனக்கு பிடிக்கவில்லை என்று அவரிடம் நான் சொல்லிவிட்டபோதும்.
ஒன்றுமட்டும் – உலகியலை (காமம் உள்ளிட்ட அனைத்தையும்) முற்றாக புறக்கணித்து மெய்மையை எட்டமுடியாது. உலகியலை முற்றாக கடக்காமலும் மெய்மையை எட்டமுடியாது. விஷ்ணுபுரம் அதன் தியான அனுபவம் என்பது உங்களைப் பொறுத்தது. ஓஷோவால் மிகவும் புகழ்ந்துரைக்கப்படும் மிக்கேல் நைமியின் “மிர்தாதின் புத்தகம்” – உண்மையில் அது அவ்வாறு தகுந்தது எனினும் என்னளவில் விஷ்ணுபுரம் அதைவிட மேலானது. நைமியின் மிர்தாத் அற்புதமாக போதனைகளாக கவித்துமாக அன்பை பெருங்கருணையை மெய்மையை உணர்த்தும் விதமாக பேசுகிறார். ஆனால் அவர் ஒருவரது பேச்சாக ஒரு ,மகானின் சொற்பெருக்காகவே அது இருக்கிறது. முற்றிலும் ஏற்புடன் அன்புடன் வாசித்து அதை உணரமுடியும். விஷ்ணுபுரத்தில் வாழ்கை இருக்கிறது. போதனைகள் இல்லை. ஏற்பு-மறுப்பு, பரிசீலனை என்று சென்று மறுத்து மறுத்து சென்று சொற்களால் தொடமுடியாத அந்த இடத்தை நெருங்கி சொல்ல முற்படாமல் மௌனம் கொள்கிறது.
‘அன்னா பாவ்லவ்னா அளிக்கும் அடம்பரமான விருந்தில் தொடங்குகிறது படைப்பு. பல ஆயிரம் கால்களை உடைய உயிரி ஒன்று நகரத் தொடங்குவது போல நிதானமான அசைவு . விருந்துகளில் உணவும் குடியும் அல்ல முக்கியமான பதார்த்தங்கள் . மனிதர்களின் அந்தஸ்தும் தொடர்புகளும் தான் விநியோகம் ஆகின்றன.
ஆடம்பரமான மனிதர்களின் அபத்தமான திட்டங்கள், போலித்தனங்கள் , ரகசிய ஏற்பாடுகள், அரசு என்னும் எண்ண முடியாத படிக்கட்டுகளில் கள்ளத்தனமாக ஏறுவது இவைதான் அங்கே எல்லோருடைய நோக்கங்களும் .
சரியான விகிதத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு கலக்கப்பட்ட வோட்கா போல, நெப்போலியன் மீதான எதிர்ப்பும், மதம், சக்கரவர்த்தி ஜார் மீது நிபந்தனையற்ற விசுவாசமும் கலந்து அரசியல் சரி என்னும் கோப்பைகளில் ஊற்றி ரஷ்ய உயர்குடியினர் அதிகார போதையில் திளைப்பதைக் காட்டும் டால்ஸ்டாய், போர் என்னும் அடுத்த கட்ட போதைக்கு நகர்த்திச் செல்கிறார்.
சீமாட்டி தாய்மார்கள் தங்கள் வாரிசுகளுக்கு பாதுகாப்பான ஆனால் போர்ப்பங்களிப்பின் நன்மையைக் கொடுக்கக் கூடிய பதவிகளுக்காக தங்கள் குடிப்பிறப்பு – உறவுகள் – வட்டங்களை விரிவாக்கிக் கொண்டே செல்கிறார்கள்.
அடிமைகள், சேவகர்களின் இருப்பு இந்த வண்ணமயமான செல்வ வாழ்வின் பின்னால் மங்கலாகக் காட்டப் படுகிறது. தங்கள் முதலாளிகளுக்கு சட்டைப் பித்தான்களை அணிவித்துக் கொண்டும் யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து மிச்சமாகிய மதுவை குடித்துக் கொண்டும் வாழ்கிறார்கள்.
கதைத்திறன்
சிறிய செய்கைகளை முழு வர்ணனையுடன் அப்பட்டமாகக் காட்டும் டால்ஸ்டாய் மைய விசையான அழுத்தமான நிகழ்வுகளைப் போகிற போக்கில் கோடி காட்டுகிறார்.
போர்க்களத்தில் மோதல் துவங்கும் முன்னர் முன்னணியில் நின்று வேடிக்கை செய்து வரும் படை வீரர்களைக் காட்சிப்படுத்திடும் ஆசிரியர் திடீரென போர் துவங்கி விடுவதைக் குறிப்பாகக் காட்டுகிறார். (வெண்முரசில் போர் துவங்கும் முன்பு இரு புறமும் உள்ள சிறுவர்கள் ஆயுதங்களை வீசிப்போட்டு விளையாடுவதை விரிவாகத் தீட்டியிருப்பார் ஜெயமோகன்) .
ஒரு திணிக்கப்பட்ட விருந்தில் பியர்- ஹெலனுக்கு இடையே காதலை வலுக்கட்டாயமாக மலர வைப்பதற்காக மொத்தக் குடும்பமும் உறவினர்களும் முயல்வதை விலாவாரியாக விளக்குபவர் , பட்டென்று “ஆறு வாரங்களுக்குப் பின் அவருக்கு திருமணமாயிற்று. பீட்டஸ்பர்கில் உள்ள தமது பெரிய, புதிதாய் அலங்கரிக்கப்பட்ட மாளிகையின் வாழ்க்கையை ஆரம்பித்தார் ” என்று தாவுகிறார். தொலைவிலும் அருகிலும் நகர்ந்து பல கோணப் பதிவுகளை அனுப்பும் ட்ரோன் உத்தியின் இலக்கிய உச்சம்
போரை விவரிக்கையில் அதிக ஒளியும், அடிக்க வரும் சிவப்பும் ரத்தமும் பெரிதாக இல்லாமல் மசமசப்பான மாலை வெயில் போலவே சொல்லப் படுகிறது. அருவருப்பும் அழுகலும் காட்டப்படும் இடம் போர்கள் முடிந்து விட்ட பின் தூக்கி எறியப்பட்ட காயம் பட்ட வீரர்களின் மருத்துவ மனையில் தான் . அங்கு தான் ரஸ்டாவ் அடிப்படையான கேள்விகளை எழுப்பிக் கொள்கிறான்.
போருக்கு முன்பான படை நகர்வுகளும் ஆலோசனைகளும் உணவு, குதிரை, பீரங்கி விவரங்களும் கடினமான மலைச் சிகரம் மீது ஏறுவது போல சிறுகச் சிறுக அடுக்கப் படுகிறது. உச்சியிலிருந்து ஒரே தாவலாக மையப்போர் கையாளப்படுகிறது.
உள்ளீடற்ற அபத்தம்
டால்ஸ்டாயின் போர் வெறுப்பும் போலித்தன வெறுப்பும் அவரை மனிதர்களின் உள்ள ப் போக்குகளை கவனிக்கச் செய்கின்றன. அவர் மனிதர்களின் பாசாங்குகளையும் பாவங்களையும் புரிந்து கொள்கிறார். இரக்கத்துடன் தனது கொந்தளிக்கும் மனத்தைக் கொட்டி அதில் எல்லாருடைய உள்ளங்களையும் ஆதுரத்துடன் அள்ளிக் கொள்கிறார்.
இங்குள்ள எதற்கும் தர்க்க – நியாயம் இல்லை. வரலாற்றின் ஒரு கட்டத்தின் போக்கு , ஒரு மனிதனால் அவன் எவ்வளவு ஆற்றலுடன் இருந்தாலும் தீர்மானிக்கப் படுவதில்லை. சோர புத்திரன் பியருக்கு பெருஞ்செல்வம் கிடைக்கிறது. உடனே அவன் மிக முக்கிய குடிமகனாக உயர்கிறான். பின்னர் மனைவியை சந்தேகப்பட்டு தனது சொத்தின் பெரும்பகுதியை அவளுக்கு அளித்து விட்டு ஃபிரி மேசனாக மாறி , அடிமைகளை விடுவிக்க வேண்டும் என்று கனவு கண்டு, அவற்றை ஒரு எளிய முட்டாள் காரியதரிசி அழகாக வளைத்து தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள – எல்லாமே காலியாக உள்ளீடற்று போகின்றன – அவர் ஏழைகளுக்கு கட்டிய கட்டிடங்களை போல
புத்துயிர்ப்பில் டால்ஸ்டாய் கட்டி எழுப்பிய நெஹ் லூதவ் பியருக்கு அருகில் நிற்கிறார்.
டுஷின் என்னும் நம்பிக்கை
இந்தச் சிறுமைகளுக்கு முடிவில் அர்த்தத்துடன் ஒரு பாத்திரம் எழுந்து வரும் என்று பார்த்தால் அது டுஷின் என்னும் பீரங்கி படைத்தலைவர் தான்
ஆர்வத்துடன் தனக்குத் தானே பேசிக்கொண்டு தனது வீரர்களை ஊக்குவித்துக் கொண்டு இலக்கு எதுவும் இல்லாதது போல ஆரம்பித்து சுங்கான் புகைத்துக் கொண்டே எதையோ தாக்க வேண்டும் என்பதற்காக எதிர் மலையில் தெரிந்த கிராமம் மீது உற்சாகமாக சுட்டுத் தள்ளுகிறார் . தனக்கு காப்புப்படையே இல்லை என்பதைக் கூட உணராதவராக கடைசி வரை சுட்டுக் கொண்டே இருக்கும் டுஷின் போருக்கு முன்னால் ஒரு விடுதியில் படை தயாராக வேண்டும் என்ற ஆணையை மீறி காலணியும் அணியாமல் குடித்துக் கொண்டிருந்ததற்காக கண்டுபிடிக்கப் பட்ட மாணவன் போல அசடு வழிந்தவர் தான்.
அந்த பீரங்கிப் பூசல் முடிந்ததும் இரண்டு பீரங்கிகளை ஏன் விட்டு விட்டு வந்திர்கள் என்ற மேலதிகாரியின் கேள்விக்கு பதட்டமாகி கண்கள் தளும்ப தள்ளாடி நின்றவர் டுஷின். உண்மையில் போரில் வென்றதே அவரால் தான் என்று ஆண்ட்ரூ வாதாடிய போதும் பயந்து போய் தப்பித்தோம் என்று வெளியே வந்தவர்.
போர்களும் நிறுவனங்களும் அரசுகளும் பெயரே வெளிவராத , பிறர் தவறுகளையும் சுமக்கின்ற டுஷின் களால் தான் நடக்கின்றன
அமைப்பின் உச்சியில் இருக்கும் ஜார்களும் நெப்போலியன்களும் ஒரு முனைப்படுத்தலைமட்டுமே செய்கிறார்கள் .
அதனால் தான் ரஸ்டாவுக்கு ஒரு கட்டத்தில் ஜார் பேரரசர் கேலியாகத் தெரிகிறார் .
ஆன்ட்ரு தனது வீர நாயகனாக மனதில் வளர்த்து வந்த நெப்போலியனை அருகில் கண்டவுடன் வெறுக்கிறான்.
டுஷினே எனது நாயகன். இந்த நாவல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தஸ்தாயேவ்ஸ்கி கொண்டு வந்த “அசடன் “ மிஷ்கின் டூஷினுக்கு இணையான இன்னும் அழுத்தமான பாத்திரம். ஒரு வளை டால்ஸ்டாய்க்கு தஸ்தாவின் மனச்சாய்வு இருந்திருந்தால் டுஷின் பாத்திரம் இன்னும் விரிவாக மையமாக வளர்ந்திருக்கும்.
சள புள என்று மூன்று விரல்களில் பாதிரியின் ஆசீர்வாதம் போல சல்யூட் அடித்து நின்று கொண்டிருக்கும் டுஷின் மறக்க முடியாத பாத்திரம்.
களத்தின் பாடங்கள்
போர் உபாயங்களில் இருந்து வணிக – மேலாண்மை நுணுக்கங்கள் நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்துள்ளன. வணிகமும் நிர்வாகமும் கூட ஒரு வகை போர் தானே. பக்ரேஷன் தனது படையின் தோல்வியை தள்ளிப் போடவேண்டும் என்பதற்காக படை நகர்வை தாமதப் படுத்துவதும் அதற்காக ஜாரிடமே வாதிடுவதும் டால்ஸ்டாய் தரும் மேலாண்மைப் பாடங்கள்.
அபத்தங்களின் முடிவில்லாத சங்கிலியாகவே வரலாறு தீர்மானமாகிறது. (சிலர் துப்பாக்கி சுட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் யாரைப் பார்த்து என்பதைப் பார்க்க முடியவில்லை. )
காயம் பட்ட ரஸ்டாவ் போன்றவர்களுக்கு தனது பீரங்கி வண்டியில் இடம் தரும் டுஷின் கடைசியில் ரஸ்டாவை ஒரு ராணுவ மருத்துவமனையில் பார்க்கும் போது ஒரு கையை இழந்து விட்டிருந்தார். ரஷ்யா தனது கையை இழந்து விட்டிருந்தது
டால்ஸ்டாயின் பாத்திர அணிவகுப்பில் பிறர் குற்றமும் தன்னுடையது தானோ என்று குழம்பும் டுஷின் ஒரு தட்டில் என்றால் மறு தட்டில் வாசைலி அழுத்தமாக உட்கார்ந்திருக்கிறார். முகத்துதி, நக்கல், சூழ்ச்சிகள் ஊ றிப் பெருக்கெடுக்கும் உள்ளம் .
தூலமான ஆபாசமும் நுண்மையான மெல்லுணர்வும் ஒரே பாத்திரத்தில் இயல்பாக வருவதே ஆசானின் தொடுகையாக உள்ளது . வாசைலி பியருக்கு நாற்றமெடுக்கும் வாயால் முத்தம் கொடுக்கிறார் என்று சொல்லி விட்டு சில பக்கங்களுக்குள் தனது மக்களின் திருமணம் உறுதியாகும்போது தந்தையாக உண்மையாக கண்ணீர் நிறையும் கண்களுடன் தோன்றுகிறார் வா சைலி.
சுயநலம் என்னும் மாமிசம் தந்தையன்பு என்னும் ஆன்மாவின் மீது போர்த்தியுள்ளதை டால்ஸ்டாய் தொடும் இடம் இது.
அழுக்குப் படாத , சீருடை கலையாத ராஜதந்திரி பதவியை தனது அம்மா அன்னா பாவ்லவ்னா மூலம் பெற்று விடும் போரிஸ் உயர் பதவிகளுக்கு தொங்கிப் பிடித்துக் கொண்டு ஏறிவிடும் கலையின் பயனாளி. ஆட்சி மாறிவிட்டபோதும் போரிஸ் தனது ஆதாயங்களை அழகாகப் பெறக்கூடியவன்.
கனவு காணும் ரஸ்டாவ் அரசனுக்காக உயிரையும் தரும் உணர்வெழுச்சி கொள்கிறான். நாட்டுப் பற்றுக்கும் நயமான தந்திரத்திற்கும் என்றும் நடைபெறும் போராட்டம் நாவலின் மைய இழை. ஒரு போருக்குள் பல போர்கள். ஒரே படைக்குள் பல போர்கள் .
பேச்சில்லாப் பேச்சு
உரையாடல்களுக்கு இணையாக மன ஓட்டத்தையும் உடல் மொழியையும் கையாண்டிருக்கிறார். ஒரு பாத்திரம் ஒரு வாக்கியம் பேசியதென்றால் அப்போது அவர்கள் நின்ற, உட்கார்ந்திருந்த இடம், குரலின் ஏற்ற இறக்கம் , கண்கள், உதடுகளின் இயக்கம் முகம் இவற்றை விரிவாக அளித்து விட்டு “போல இருந்தது”, “பாவனை செய்தார் ” என்ற தொடர்களின் வழியாக உடலின் பேச்சைப் பதிவு செய்கிறார். அதன் வழியாக மனதின் ஆழங்களுக்குள் அழைத்துச் சென்று மனிதர்களின் உள்நோக்கங்களைத் தோலுரிக்கிறார்
போரின் நொதிகள்
முரண்படும் உணர்வுகளை அபாரமாகச் சொல்லிச் செல்கிறார். உதாரணமாக ஒரு சொற்றொடர் “இன்பத்தோடு கோபமாக நினைத்தார்” .
இன்பம் காமத்தைக் குறிக்கிறது, கோபம் குரோதத்தின் வெளிப்பாடு. மனிதனுக்கு நொதிச் சுரப்பிகளில் ஏற்படும் தாறுமாறான கசிதலே போருக்கு காரணம் என்று ஒரு கருத்து உண்டு. போரின் தொடக்கத்தில் சில வீரர்கள் அடையும் மன எழுச்சி போரின் உளவியல் மீது டால்ஸ்டாய்க்கு இருந்த ஆழமான பிடிப்பைக் காட்டுகிறது
இப்போதைய சுழலில் கூட பியரின் எஸ்டேட் இருந்த அதே கீவ் நரரில் போரின் முன்னேற்பாடுகள் தொடக்கி விட்டன. (ஜனவரி 2022) புடின் – நேடோ விளையாடும் கள மாகிறது உக்ரைன்
தூக்கத்தை டால்ஸ்டாய் பல வகைகளில் கையாளுகிறார். தோற்கப் போகும் போரில் தனக்கு விருப்பமே இல்லாததால் ஆலோசனைக் கூட்டத்தில் குட்டஜோ வ் தூங்கி விடுகிறார். மனம் தவிர்க்க முடியாத ஒரு துயரத்தை எதிர்கொள்ள அது ஒரு வடிகால். ரஸ்டாவ் குதிரைப்படைக் காவல் முனையில் தூக்கக் கலக்கம் கொள்கிறான் . அவன் கனவுகளும் தூண்டப்பட்ட மனமும் கொண்டவன். பரபரப்பான நிலை தாள முடியாத போது மனம் ஒய்வு கேட்கிறது.
தலைக்காயம் பட்ட ஆன்ட்ரு தனக்கு மேலே ஆகாயத்தைக் காணும்போது மரண அனுபவத்தை ஒரு கணம் பெறுகிறான். அது அவனைப் பேரமைதியில் வைக்கிறது.
போரின் அரசியல்
போரில் தோற்றவனை நெப்போலியன் புகழ்கிறார். களத்தின் இறுதியில் காலத்தின் ஓட்டத்தில் நாயகர்களெல்லாம் அருவருக்கத் தக்கவர்களாகத் தெரிகிறார்கள் . ஜாரும் நெப்போலியனும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட பின் காயம் பட்ட வீரர்கள் எல்லாவற்றையும் வெறுமையாக நோக்குகிறார்கள்.
போரில் தோற்றபின்னும் அதை வெற்றி என்று சொல்லி விருந்து நடக்கிறது. புதிய வதந்திகளை, கோழைகளை, நாயகர்களை உருவாக்கிப் படைக்கிறது விருந்து. டெல்லியின் “ கான் மார்க்கெட் கேங்” உடைய பழைய பாணி.
முதிர்ந்து கனியும் தரிசனம்
ஆன்ட்ருவின் மரணச் செய்தியைக் கேட்ட மேரி (இது உண்மையல்ல என்று பின்னால் தெரிய வருகிறது) அழாமல் எதிர் கொண்டுதுணிவு கொள்ளும் இடம் அவளுடைய மனப் போக்கிற்கு பெரிய மாற்றம். அவள் துயரம் அடைவதற்கு பதில் உயர்வான ஒரு மகிழ்ச்சி கூட அடைகிறாள். இங்கு ஆசிரியர் மெய்ஞானி ஆகிறார். தந்தை பால்கான்ஸ்கியோ செய்தியை உறுதி செய்து கொள்ளாமல் நம்பிவிடும் நசிவியலாளராக – ஃபாட்டலிஸ்ட் ஆக இருக்கிறார்
போர் முனையில் இருந்து ரஸ்டாவ் அனுப்பும் கடிதத்தை அவன் குடும்பம் எதிர் கொள்ளும் முறை அழகு . குதூகலம் மட்டுமே கொந்தளிக்கும் இடம். பெண்குழந்தைகள் இல்லாத வீடுகளில் இது கிடைக்காது. நேர் மாறாக இறந்து விட்டதாக நம்பிவிட்ட ஆன்ட்ரு வீடுதிரும்புதல் , கடுமைக்காரரான அவன் தந்தையின் உள்ளத்தில் வைத்த கடினமான பாறையைப் பிளந்து நீர் பொங்கிய இடம் .
மரணமடையும்போது லிசா ஒரு கேள்வியை முகத்தில் படர விட்டபடியே இறக்கிறார்கள். அது தீராத குற்ற உணர்வை அவள் கணவனுக்கு உருவாக்கி விடுகிறது. “எனக்கு ஏன் இதைச் செய்தீர்கள் ” என்கிறது அவள் முகம். சிறிய பொம்மை போலவே அவளை காட்டிக் கொண்டுவருகிறார். டால்ஸ்டாய். அவளுடைய உதடுகள் சேர்வதே இல்லை என்கிறார். முழுமையடையாத வாழ்வின் துயருக்கு மறக்க முடியாத உருவகம்
வேறொரு வகையில் தூய இதய சுத்தியின் காரணமாக எளிமையில் “பிதாவே என் என்னை கைவிட்டாய்” என்று கேட்பது போலவும் உள்ளது.
நடாஷாவின் பாத்திரம் குழந்தைமையிலிருந்து கன்னிமைக்கு மெதுவாகத் துளிர்விடுகிறது. எல்லாவற்றின் மீதும் உணர்ச்சி பூர்வமான அன்பு, மிகைத் திறமையான நடனம் இவற்றை மட்டுமே முதல் பாகத்தில் நடாஷா வெளிப்படுத்துகிறாள்.
மொழிபெயர்ப்பாளர் டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் இந்திய மனதிற்கு பொருத்தமான பதங்களைப் பயன்படுத்தி பண்பாட்டு மேடு பள்ளங்களை நிரவி விடுகிறார்.
உதாரணம் – துப்பாக்கி சனியன், “அவளுக்கு சாதகம் போதாது; குரல் அற்புதமானது”, ” எங்கள் சத்சங்கம்”, ‘வேதாந்த விஷயம்” “மனோராஜ்யம்” , தர்மம், தியானம், தீட்சை போன்றவை
ஆன்ட்ருவிற்கு போர்க்களத்தில் காயம்பட்ட நிலையில் முதல் தீட்சை கிடைக்கிறது. பிறகு ஃ பிரிமேசன் பியருடன் பேசும்போது இரண்டாம் முறை உள்ளம் விரிவு கொள்கிறது.
தத்துவ ரீதியாக டால்ஸ்டாய்க்கு ஃபிரி மேசன்கள் மீது பரிதாபம் தான் இருந்தது. இருப்பினும் அவர்கள் மீது பரிவு இருந்திருக்கிறது.
கருவி ஒரு வேளை பிழையானதாக இருந்தாலும் கதவு திறந்தால் போதும் என்று நினைத்திருக்கலாம் .
ஏனென்றால் தூய ஒளிக்கு டால்ஸ்டாய் நம்மை அழைத்துச் செல்லும் பாதை அபத்தம் என்ற குப்பைமேட்டின் வழியாகத்தான் செல்கிறது.
தங்கள் புறம் எவ்வாறு இருப்பினும் தங்கள் விருப்பங்கள் அல்லது விருப்பமின்மைகள், நிறைவேற்றங்கள் அல்லது ஏமாற்றங்கள் இவற்றிற்கப்பால் தங்கள் அகம் என தங்களுக்கான ஒர் நிகர்வாழ்க்கை கொண்டவர்களாக உள்ளனர் திருதிராஷ்டிரரும், பாண்டுவும், விதுரரும்.
இசையால் அமைந்தது திருதிராஷ்டிரரின் உலகு. அவர் இசையால் அறியவொண்ணாதது என்று ஒன்றில்லை. தன் திருமணத்தின் பொருட்டான காந்தாரப் பயணத்தில் தான் அறிந்திரா நிலத்தை அதன் விரிவை, அமைதியை தன் செவிகளாலேயே அறிந்துகொள்கிறார் திருதிராஷ்டிரர். ஆழமற்ற பாலைவன நதியில் பிரதிபலிக்கும் விண்மீன்களைக் கூட அவர் அந்நிலத்திற்கு வரும் முன்னரே இசையால் கண்டுவிட்டவராக இருக்கிறார்.
”விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனத்தில் நதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்” என்று விதுரரிடம் சொல்கிறார் அவர். திருதிராஷ்டிரரின் நிகர் வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள முடிந்த காந்தாரியின் அன்பை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். விழியற்றவரை மணம்முடிப்பது குறித்து மற்றவர் கருத்துகளுக்கு காந்தாரியின் பதில்களை கவனிக்க வேண்டும். எல்லா ஷத்திரியர்களும் விழியற்றவர்களே என்கிறார் அவர்.
”அவளிடம் சொல், மலைக்கழுகுகள் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று”
பின்னாளில் புத்திரசோகத்தில் தவிக்கும் திருதிராஷ்டிரரை அமைதிப்படுத்த காந்தாரியால் இயல்வது அவரது தனித்த உலகிலும் ஒர் அங்கமாக காந்தாரியால் ஆகிவிட முடிவதால்தான்.
பாண்டுவின் நிகர்வாழ்வு வேறொரு விதமானது. குழந்தைகளைக் கொண்டு, குறிப்பாக தருமனைக் கொண்டு தன் உலகை அவர் உருவாக்கிக் கொள்கிறார்.
விதுரரின் நிகர்வாழ்வு வேறொரு வகையில். அதைப்பற்றி திருதிராஷ்டிரருடன் கருத்துப்பகிர்ந்து கொள்கிறார் அவர். புறத்தில் சூத அமைச்சர் எனப்படுவது, தன் எல்லைகள் அவருக்கு பொருட்டல்ல, எவ்விதமான தீவிர விழைவும் அவருக்கு அங்கில்லை. மானுட உணர்வுகள் எதையும் நேரடியாகச் சுவைக்க முடியாத, அவற்றை அறிவாக உருமாற்றி அறிதலின் இன்பமாக மட்டுமே அனுபவிக்கும் தன் இயல்பை அவர் திருதிராஷ்டிரரிடம் கூறுகிறார். ஆனால் அவருக்கு பெரிதான நிகர்வாழ்வு காவியங்களின் வாசிப்பில் உள்ளது.
புறத்தில் விழியற்ற திருதிராஷ்டிரர் நிகர்வாழ்வில் விழியுள்ளவர், புறத்தில் பெரிதும் துய்ப்பற்ற விதுரர் நிகர்வாழ்வில் பெருந்துய்ப்பாளர், புறத்தில் அதிகம் வாழ்நாள் பெறாத பாண்டு நிகர்வாழ்வில் நீடுவாழ்ந்தவர்.
அன்னையரின் ஆடல்களே பின்னாளில் கௌரவரிடமும் பாண்டவரிடமும் பேருருக்கொண்டன என்றாலும் அவற்றில் இம்மூவரது அகவாழ்வும் தமக்குரிய தாக்கத்தையும் செலுத்தின என்று எண்ணுகிறேன்.
திருதிராஷ்டிரர் – மழைப்பாடலின் சலுகைகள்
மந்தாரம் உந்துமகரந்தம்
மணந்தவாடை
செந்தாமரை வாள்முகத்திற்செறி
வேர்சிதைப்ப
தந்தாம்உலகத்திடை விஞ்சையர்
பாணிதள்ளும்
கந்தாரவீணைக்களிசெஞ்செவிக்
காதுநுங்க
அனுமனின் இலங்கை நோக்கிய வான் பயணத்தில் வான்மீகி அவருக்கு வழங்கியதைக் காட்டிலும் அதிக சலுகைகள் வழங்குகிறார் கம்பர். அனுமனின் முகத்தின் வியர்வையை வாசம்வீசும் மந்தார மலர்களின் காற்று போக்குகிறது வானின் இசைவலரின் பிறழாத காந்தாரப் பண்ணின் வீணை இசை கேட்டு அவரது செவிகள் களிக்கின்றன.
மொத்த வெண்முரசும் அதன் முதன்மைப் பாத்திரங்களுக்கு, துணைப்பாத்திரங்களுக்கு வழங்கும் இடமும் சலுகைகளும் மிகப்பெரியவை. அவற்றை மகாபாரதத்துடன் அல்லது பிற காவியங்களுடன் ஒப்புநோக்குவது அவசியமற்றது எனினும் ஒரு சுவாரஸ்யத்திற்காக மழைப்பாடலின் திருதிராஷ்டிரரை எடுத்துக்கொள்கிறேன். திருதிராஷ்டிரருக்கு ஜெயமோகன் அளிக்கும் இசை உலகு மிகப்பெரியது. அத்துடன் பேரழகியான காந்தாரியுடன் திருதிராஷ்டிரரின் திருமணம் நிறைவேற பீஷ்மர் மீதான மதிப்பு, காந்தாரியின் கனிவு, சகுனியின் அரசியல் கணக்குகளுக்கு ஒத்து அமைவது எனப்பல காரணங்கள் இருப்பினும் திருதிராஷ்டிரரை பலரது பரிவுக்கு உரியவர் என்பதல்லாமல் ஒரு தகுதிமிக்க மாவீரராகவே நிறுத்துகிறது மழைப்பாடல். காந்தாரியைக் கைப்பற்றும் பொருட்டு லாஷ்கர்களுடன் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி அவருக்கு வழங்கப்படுகிறது. பொதுவாக வெண்முரசின் போர்காட்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சுபவை, ஒவ்வொரு நாயகருக்கும் எனப் பல அமைந்திருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தன்மையும் கொண்டவை. திருதிராஷ்டிரரின் இவ்வெளிப்பாட்டில் திறனில் ஒரு சில நிமிடங்களுக்கு அவரை கம்பனின் சுந்தரகாண்டத்தின் அனுமனுக்கே நிகர்த்துகிறார் ஜெயமோகன்.
அம்பிகையும் அம்பாலிகையும் தம் குழந்தைகளை முதன்மைப்படுத்த விரும்பும் அன்னையர் மட்டுமே. அரசியல் ஆடல்களில் கூர்மையும் நுட்பமும் கொண்டவர்கள் அல்ல. அம்பிகையின் விருப்பம் திருதிராஷ்டிரனுக்கு செலுத்தப்பட்டது போல அம்பாலிகையின் விருப்பம் பாண்டுவிற்குள் செலுத்தப்படவில்லை. அம்பிகை அம்பாலிகையின் அடுத்தநிலை என காந்தாரியும் குந்தியும் எனில் தன் கணவனின் இசைக்குள் நுழைந்துவிட்ட காந்தாரியை குந்திக்கு சமன்செய்ய முடியாது. என்றபோதும் சகுனி அதை ஈடுசெய்கிறார். வேழம் நிகர்த்த துரியோதனனின் பிறப்பின் போதே வேழத்தை மத்தகம் பிளந்து கொல்லும் அனுமனின் கதையும் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. பீமனின் பிறப்பு நிகழ்கிறது. ஒவ்வொன்றும் எதிர்விசையால் சமன்செய்யப்பட்டு கூர்கொள்கிறது. பாலையின் விழைவினை எதிர்கொள்ளத் தயாராகிறது கங்கைச் சமவெளியின் விழைவு.
பாரதப்பெருநிலத்தின் மீதான காந்தாரப் பாலையின் விசை இன்றுவரை மீள நிகழும் ஒன்றாகவே தோன்றுகிறது. பாண்டவப்பிரஸ்தம் என்னும் பெயர் பின்னாளில் பானிபட் என ஆனது இங்கு வரலாற்றுக்கு புவியியல் வகுத்தளித்த பாதையை உணர்த்துகிறது. நிலம், நீர் – கடல் என்பது கடந்து காற்றிலேறி விண்ணில் என இனி மனிதரை வைத்தாடும் விசைகள் புதிய களங்கள் வகுக்கும்போலும். மீண்டும் தொடங்கிய இடத்திலேயே தம் ஆடலை முடிப்பார்கள் போலும் இந்திரனும் சூரியனும்.
கர்ணனின் பிறப்பை பாண்டுவிடம் சொல்லிவிடப் போவதாக சொல்லும் குந்தி பாண்டு அதை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் அதை மறைத்துவிடுகிறார். பின்னாளில் கான்வாழ்வில் தந்தையாகும் விருப்பத்துடன் பாண்டவரின் பிறப்பை ஏற்கும் பாண்டுவிடம், பின்னர் அவர்களிடம் பேரன்பு கொண்டவராக விளங்கும் பாண்டுவிடம் கர்ணனைப் பற்றி குந்தி சொல்லியிருக்க முடியும். அதை அவர் மகிழ்வுடன் ஏற்பவராகவே இருந்திருப்பார். எனினும் குந்தி அவ்வாறு செய்வதில்லை அதற்கான அரசியல் காரணங்கள் குந்தியிடம் உள்ளன.
குந்தியிடம் திருமணம் நிகழ்ந்த பின்னான முதல் இரவிலேயே பாண்டு தன்னுள் இருக்கும் ஆறு பாண்டுக்களைப் பற்றி சொல்கிறார். பாண்டுவின் ஏக்கத்தின் விழைவான அக்கனவை நிறைவேற்றி வைத்தவர் ஆகிறார் குந்தி. எனினும் பாண்டவர் பிறப்பில் விசித்திரவீரியனைப் ஒத்தவரான பாண்டுவின் ஏக்கத்தின் விழைவிற்கும் குந்தியின் பெரும் அரசியல் விழைவிற்கும் வேறுபாடு உள்ளது. பாண்டவர்களை அரசியல் திட்டத்திற்கான ஆற்றல்களாக பார்க்கிறார் குந்தி. உயிர் ஏக்கத்திற்கு அருள்கிறது வான் அவ்வருளின் வரங்களைப் பெருவிழைவு தன் கரங்களில் கொள்ளும் நேரம் யாவும் திரிபடையத் துவங்கின்றன என்று தோன்றுகிறது.
பாண்டு அரசியல் விழைவுகள் அற்றவரா என்றால் ஆம் அவர் அரசியல் விழைவுகள் அற்றவர்தான். ஆனால் முற்றிலும் அரசியலே அற்றவரா என்றால் அவ்வாறல்ல என்று எண்ணுகிறேன. எப்போதும் தருமனைத் தன் தோளில் சுமந்தலையும் பாண்டு குந்தியின் அரசியலில் நோக்கற்றவர் போலத் தோன்றியபோதும் அதை அறிந்தே இருந்தார் என்று தோன்றுகிறது. பின்னாளில் குந்தியே அச்சமடையும் தருமன் பாண்டுவின் தயாரிப்புதானே? ஒருவகையில் அதில் குந்திக்கான பாண்டுவின் செய்தி பொதிந்துள்ளது என்று தோன்றுகிறது.
இளைய வியாசரெனத் தோற்றம் கொண்ட விதுரர் பீஷ்மருக்கு பிடித்தமானவர். திருதிராஷ்டரனின் பேரன்பைப் பெற்றவர். சத்தியவதியால் வளர்க்கப்பட்டவர், நகையாடலில் அவர்தன் பேரரசியென்னும் வேடம் கலைத்து சிறுமியென உணரச்செய்பவர். விதுரருடனான சந்திப்பின் போது தான் கவலையற்றிருப்பதாகச் சொல்கிறார் சத்தியவதி. பாட்டிக்கும் பேரனுக்குமான உறவு இவ்வாறிருக்க விதுரர் எவ்வகையிலும் தன் அன்னை சிவையைக் பொருட்டெனக் கருதியவர் அல்ல. அம்பிகை அம்பாலிகை சிவை என்னும் வரிசையில் முன்னிருவரும் தம் கனவு கலைத்து கான்புகுகிறார்கள் எனில் சிவை விதுரரின் பொருட்டு தன் நிறைவேறாக் கனவினால் தன்னைத்தானே ஒடுக்கி சுருக்கி தனிமை கொள்கிறார். சத்தியவதிக்கும் சிவை ஒரு பொருட்டல்ல. தன்னால் கவர்ந்துவரச் செய்யப்பட்ட அம்பிகை அம்பாலிகையின்பால் கொண்ட அளவிற்கு சிவையின் மீது அவர் கருத்து கொள்வதில்லை.
குந்தியும் தன் அன்னையின் மீது அணுக்கம் அற்றவர். அவ்வகையில் விதுரரை ஒத்தவர். விதுரருக்கும் குந்திக்குமான உறவு நுட்பமான ஒன்று. நடுவுநிலை என்றபோதும் குந்திக்கு இசைவானதாகவே அஸ்தினபுரியில் அவரது அரசியலாடல்கள் இருக்கின்றன என்று எண்ணுகிறேன். விதுரர் புதிரானவராகவே தோன்றுகிறார்.. பீஷ்மருடனான தன் உரையாடலில் எதிர்காலத்தில் புதிதாக எழுச்சி பெறக்கூடிய மக்கள், எழக்கூடிய மௌரியப் பேரரசு உள்ளிட்ட அரசுகள் பற்றி கூறும் அவரது கணிப்பு, தீர்க்கதரினம் அவரது அறிவுத் திறனைக் காட்டுகிறது. எனினும் சூதர் என்னும் தன் எல்லைக்குள் நிற்பவர் அவர்.
கருணையில் அருளப்படும் வான்மழை”கெடுப்பதூஉம்” என்று எவ்வாறு திரிபுகொள்கிறது? செங்குருதியின் மழை என பெருவெள்ளம் என. வாழ்விக்கும் ஒன்றை அழிவின் கருவியாக மாற்றியது எது? தவளையின் பாடல் எக்கணத்தில் நாகங்களைத் தருவிக்கத் தொடங்குகிறது? முதற்கனல் நாகங்களை எனில் மழைப்பாடல் தவளைகளைக் குறீயீடக்குகிறது. நீரிலும் நிலத்திலும் உரிமை கொண்டு விண்ணில் எழுகையில் நாகத்தின் வாய்க்குள் விழும் தவளை.
ஒருவேளை மகதத்துடன் இணைந்து கொண்டிருப்பின் நனவாகியிருக்கக் கூடிய காந்தாரத்து சகுனியின் பாரதப்பெருநிலம் கொள்ளும் பெருங்கனவு இளவரசன் பிருகத்ரதனின் செய்தியுடன் வரும் ”சுகோணன்” என்னும் பருந்தை அவரே அறியாமல் அம்பெய்து வீழ்த்திவிடும் – அது ஓநாய்க்கு உணவாகவும் ஆகிவிடும் ஊழால் திரிந்துவிடுகிறது.
சத்தியவதி தன் பெருங்கனவிற்கு என மகற்கொடை வாயிலாக விழைந்த காந்தார உறவென்னும் விசை பின்னர் அவருக்கே அச்சமூட்டுகிறது. சகுனியைக் கண்டு அஞ்சுகிறார் சத்தியவதி. பிழை இழைத்துவிட்டதாக அவர் கருதும் நேரம் அந்த விசையை சமன் செய்ய அதனை விஞ்சும் எதிர்பக்க விசையாக சகுனியே அஞ்சும் ஒருவராக எழுகிறார் குந்தி.
சத்தியவதியின் சகுனியின் பெருங்கனவிற்காக என அல்லாமல் பீஷ்மரும் காந்தாரியும் கொள்ளும் கனிவினால் ஏற்படுகிறது அஸ்தினபுரிக்கும் காந்தாரத்துக்குமான உறவு. அவ்வாறல்லாமல் பெருவிழைவுடன் துவக்கம் முதலே திட்டமிட்டு அனைத்தையும் வெற்றிகரமாக நிகழ்த்தும் அச்சமூட்டும் அரசியல் சூழ்மதியாளராகத் திகழ்கிறார் மழைப்பாடலின் குந்தி.
கம்சனின் வீரர்களிடம் இருந்து தப்புவது, தன் சுயம்வரத்தின் போட்டியை தான் பாண்டுவை மணம்புரியும் வகையில் அமைப்பது பாண்டுவுடன் கான் வாழ்வில் இருக்கும்போதும் அஸ்தினபுரியில் அரசியல் ஆடல்புரிந்துகொண்டிருப்பது பாண்டவர்களின் பிறப்பை வகுப்பது பீமனின் பிறவிக் கணத்தைத் திரிப்பது என ஒவ்வொன்றிலும் முற்றும் அரசியலாளராகவே இருக்கிறார். ஒருவகையில் குந்தி இல்லாவிட்டால் சகுனியை கொண்டுவந்ததன் பொருட்டு சத்தியவதி கொண்டிருக்கக்கூடிய பெரும் குற்றவுணர்ச்சியிலிருந்து அவரை குந்திதான் காப்பாற்றுகிறார்.
பாண்டுவின் மரணத்தினால் தம் பகை என்னும் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறார்கள் அம்பிகையும் அம்பாலிகையும். அவர்கள் நாடு நீங்க அவர்களுக்கு அக்கனவை கைளித்திருந்த சத்தியவதியும் அவர்களுடன் இணைந்துகொள்கிறார். சத்தியவதியும் விழித்துக்கொண்டு விட்டவர்தான் – பாண்டுவின் மரணத்தினால் அல்ல மாறாக தன் போன்றே தன்னைவிட பெருவிழைவுடன் இளம்பெண்ணான குந்தி தன் இடத்தை நிரப்ப வந்துவிட்டதனால் பெரும் கனவுகள் ஊழால் திரிபடைந்துவிட அரசியல் ஆடல்களின் அபத்தத்தை உணர்ந்து கொண்டுவிட்டதனால். சகுனி மட்டும் தன் கனவைத் தொடர்ந்து செல்ல விதிக்கப்பட்டிருக்கிறார்.
திருதராஷ்டிரனுக்காகக் கனியும் பீஷ்மர், அரியணை விழைந்தபோதும் பாண்டுவின்பால் அன்பில் உயர்ந்து நிற்கும் திருதராஷ்டிரன், அரசியல் விழைவற்ற – பேரன்பு கொண்ட தந்தை என்று நிறைவடையும் பாண்டு, மணத்தூதில் அவமதித்தவர்களிடமும் பெருந்தன்மை காட்டும் – திருதராஷ்டிரனின் உலகில் தன்னை இணைத்துக்கொள்ளும் காந்தாரி, தன்முனைப்பு இல்லாமல் முற்றும் குந்திக்கு பணியும் மாத்ரி எனப் ஒருபுறம் சிறுமைகளில்லாதவர்கள் இருக்க அவர்களின் திசைகளை தம் பெருவிழைகளின் பொருட்டு அமைக்க முயல்பவர்களாக இருக்கிறார்கள் சத்தியவதியும் சகுனியும் குந்தியும். மூன்றாம் பெருவிசையாக மாமனிதர்களை திசை பெயர்க்கும் பெருவிழைவுகளை தன்போக்கில் திசை பெயர்க்கும் பணியைத் துவக்குகிறது ஊழ்.
ஜெயமோகன் வெண்முரசில் இதையெல்லாம் திட்டமிட்டுச் செய்தாரா அல்லது இவையெல்லாம் தற்செயலானவைதானா என்றொரு கேள்வி முன்பு எழுவது உண்டு. ஜெயமோகனின் வெண்முரசு தற்செயல்தான் ஆனால் திட்டமிட்ட தற்செயல் என்று அப்போது விடையளித்துக்கொள்வேன். திட்டமிட்டது அவரல்ல. கடல்கள் எவ்வளவு நாள் கடல்களாக இருக்கவேண்டும் அவை எப்போது பனிமுடி சூடி பெரும் மலைகளாக ஆகவேண்டும், மலைகள் எப்போது பெருங்கடல்களாக ஆகவேண்டும், வனங்கள் எப்போது பாலைவேடம் பூணவேண்டும் பாலை எப்போது அடர்வனம் ஆகவேண்டும் என்றெல்லாம் திட்டமிடும் ஆற்றல் ஒன்றுள்ளது அதுவேதான் வெண்முரசைத் திட்டமிட்டது என்று உணர்கிறேன்.
எம்மொழியினர் ஆயினும் நுண்ணுணர்வுடையோர் அறிந்த ரகசியம் ஒன்றுள்ளது காவியங்கள் மொழிகளுக்கு ஆயுள் நீட்டிப்பு வழங்குகின்றன. ராமாயணமும் மகாபாரதமும் இந்திய மொழிகளில் மீள நிகழ்த்தப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. சமகாலத்தினை மட்டுமே உட்படுத்தி எழும் இலக்கியங்கள் காலத்தால் மதிப்பிழந்துவிடுகின்றன. தன்காலத்தில் நிலவும் மொழியை அதுகாணும் பொருட்களை அதன் நிகழ்வுகளை எவற்றையும் அதற்குரிய காலத்திற்கு அப்பால் அதிகம் கொண்டுசெல்ல அவற்றால் இயல்வதில்லை. பேரிலக்கியங்கள் மட்டுமே அந்த வல்லமை கொண்டவை. அவை மனிதரிலும் இயற்கையிலும் “என்றுமுள்ளவற்றை”க் கொண்டு எழுகின்றன. அத்துடன் இக்கணம் என்னும் உள்ளியல்பான மெய்மையையும் இணைத்துக்கொண்டு வண்ணங்கள் தொட்டு பெரும்காலத் திரைமீது தீட்டப்படுகின்றன.
நுண்ணறிவுடையோர் காவியங்களை மொழிக்கு ஊட்டம் எனக் கண்டுகொள்வது, அவை தம்மொழியிலும் நிகழவேண்டும் என்று விரும்புவது வியப்பல்ல. சிற்றெறும்பின் வாழ்கைதான் நம் சொற்களும் வாழ்நாள் குறுகியவை ஆயின் பெரும்கலம் என காவியங்கள் புகுந்து காலத்தின் நீண்ட மறுகரை அவையும் சேர்கின்றன. இன்றுள்ளது என்றுமுள்ளது அல்ல ஆனால் என்றுமுள்ளதன் சன்னதியில் நிறுத்தப்பெறுவதன் வாயிலாக என்றுமுள்ளதாக ஆவது விந்தை.
கம்பராமாயணம் தன்மொழியை இன்றுவரை பத்துநூற்றாண்டுகளுக்கு கடத்தியது. ஜெயமோகனின் வெண்முரசு இதுகாறும் பயணித்த தமிழ்மொழியை அதன் அத்தனை வரங்களையும் இப்பெருநிலத்தின் அழியாச் செல்வங்களுடன் இனி பதினைந்து நூற்றாண்டுகளுக்கு கொண்டுசெலுத்த இருக்கிறது.
மானுடம் தழுவும் பேரிலக்கியங்களும் கவிதை என்று நுண்மொழியும் என இவையெல்லாம் இல்லாவிட்டால் மொழி என்பது வெறும் கருத்துப்பறிமாற்றக் கருவி என்பதற்கப்பால் என்ன இருக்கிறது? மொழி இனிது என்று எதனால் சொல்கிறோம்? அதன் உள்ளடக்கத்தைக் கொண்டுதானே? இல்லை அதெதுவும் இல்லாமலேயே ஓசைநயத்தால் மட்டுமே கூட இனிது என்றால் ஓசைநயம் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கத்தானே செய்யும்? அவரவர் மொழி அவரவர் காதுக்கு இனியது பொதுவில் அளவிடும் கருவி எங்குள்ளது? அவரைக்காய் பொறியல் ஈடுஇணையே இல்லாத சுவைமிக்கது என நான்சொல்ல கரப்பான்பூச்சி பொறியல் அதைவிட சுவையானது என்று இந்தோனேசியக்காரன் சொன்னால் எதைக்கொண்டு அதை நான் மறுப்பது? சீனமொழி கேட்க நன்றாக இல்லை மலாய் மொழி கேட்க இனிதாக இருக்கிறது என்று ப.சிங்காரத்தின் புயலிலே ஒருதோணியில் வரும் வயிரமுத்துபிள்ளை கருதுகிறார். வயிரமுத்துபிள்ளையின் சொற்கள் சீனனின் காதுகளுக்கு எப்படி இருக்குமோ?
மானுடப்பொதுமை கொண்டவை பெரியன சில அரியன சில பேராற்றலுடன் எழுந்து மொழிகளை உலகில் தூக்கி நிறுத்தவேண்டும். அப்படி ஒரு வரம் தமிழுக்கு அவ்வப்போது கிடைத்துக்கொண்டு இருக்கிறது, கம்பராமாயணம் திருக்குறள் என்று. இன்று வெண்முரசு. அது தன்னைத்தானே நிறுவிக்கொள்கிறது நூற்றாண்டுகளின் பரப்பில் விரவிக்கொள்கிறது. கலிபோர்னியாவின் செம்மரங்களைப்போல அதன் காலப்பரப்பு வேறு.
தற்செயல்தான் ஆனால் திட்டமிடப்பட்டது என்று ஏன் கருதினேன் என்றால் இவ்வளவு பெரிய புனைவுத்தொடரில் அமைந்த ஒருங்கமைவுதான். இதை திட்டமிடாமல் நிகழ்த்த முடியாது திட்டமிட்டாலோ நிகழ்த்தவே முடியாது. இங்கு ஒருங்கமைவு என்று நான் கூறுவது அதன் தகவல் பொருத்தங்களை அல்ல அதன் அகத்தை – உணர்வுகளை, இருமைகளை – கீழ்மைகளும் பெரியவையும் – பேருண்மைகளும் எனக் கோர்த்து ஒருமை என செலுத்தும் அந்த ஒருங்கமைவைக் கூறுகிறேன்.
வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கோணங்களில் வாசிப்பு சாத்தியம் வழங்குகிறது வெண்முரசு. நீ்ங்கள் யாராக இன்று இருக்கிறீர்களோ அதற்கேற்ப உங்களுக்கு இன்று அதில் ஒரு பயண வழி துலங்குகிறது. அவ்வழியே பயணிக்க பின்னர் நீங்கள் உங்களை வேறு ஒருவராக வேறோர் இடத்தில் கண்டு வியக்க நேர்கிறது. ஒவ்வொரு நதியாகவும் தனைக்கண்டு பின்னர் ஒரே கடல் நான் என முறுவலித்து – மோனவாரிதி என்கிறார்களே அத்தகைய ஒரு சாத்தியம் இங்குள்ளது. வெண்முரசு வாசிப்பில் ஒவ்வொருமுறையும் அருளியல் என்றுகருதாமல் என்னால் இருக்க இயல்வதில்லை.
வெண்முரசு மூன்று சொற்களில் – என்றுமுள்ள மனித இயல்புகள், பெரும்புடவி, மெய்மை. இரண்டு சொற்களில் – உலகியல், மெய்மை. ஒரே சொல்லில் என்றால் வாழ்க்கை.
எனக்கே இப்படி என்றால் ஒரு மெய்ஞானி வாசிக்க வெண்முரசின் எல்லா பாதைகளினூடாகவும் அவருக்கு அந்த நிலவு தென்படக் கூடும். புன்னகைக்கக் கூடும்.
மனநோயாளிகள் மற்றும் நரம்பு நோயாளிகளின் மனம் மிக மிக ஆற்றல் கொண்டது. ஏனென்றால் அதற்கு பரவலும் சிதறலும் இல்லை. மிகவும் குவிதல் கொண்டது அது. மாபெரும் யோகிகளுக்குரிய குவிதல். ஒன்றிலேயே ஒற்றைப் புள்ளியிலேயே அது பல மாதங்கள், ஏன் பற்பல ஆண்டுகள் நிலைகொள்ளும். அலைபாயும் தன்மைகொண்ட சாதாரண மனங்கள் அந்த ஆற்றலை எதிர்கொள்ளவே முடியாது. அவை மனநோயாளியின் மனங்களுக்கு முன் அடிபணிந்துவிடுவதே வழக்கம்”
–.திரு.ஜெயமோகன். (”ஓநாயின் மூக்கு” சிறுகதையில்)
*
பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளில், ரஷ்யாவில் கடும் கொள்ளை நோயாகப் பரவிய காலராவைக் கட்டுப்படுத்த பல மருத்துவர்கள் பெருமுயற்சி எடுத்தனர். அரசாங்கத்திடமிருந்து, போதுமான உபகரணங்களோ அல்லது பண உதவியோ கிடைக்கப் பெறாத போதும், தன்னுடைய சொந்தப் பணத்தை, சொத்துக்களைக் கொண்டு கடமையாற்றிய பல மருத்துவர்களுல் ஒருவர் அந்தோன் செகாவ். மற்ற மருத்துவர்களின் பெயரை நாம் அறியாதபோதும் செகாவின் பெயர் நமக்குத் தெரியக் காரணம் அவர் ”காக்கும்” மருத்துவர் மட்டுமல்ல, “படைக்கும்” கலைஞனும் கூட என்பதே. செகாவ்வைப் போல தன்னால் சிறுகதை எழுதமுடியவில்லையே என தல்ஸ்தோய் வருந்துமளவுக்கு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் செகாவ். அவரது முக்கியமான கதைகளுல் ஒன்று என “ஆறாவது வார்டு” எனும் குறுநாவலைச் சொல்லலாம்.
*
ருஷ்ய ஆட்சி மன்றமான “சேம்ஸ்த்வோ”வினால் நடத்தப்படுகிறது ஒரு மருத்துவமனை. அரசு / ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளுக்கே உண்டான அலட்சியங்களிலும் அரைகுறை வசதிகளாலும் நிரம்பிய மருத்துவமனைக்கு மருத்துவராக வருகிறார் டாக்டர் ஆந்திரேய் எமீபிச். அம்மருத்துவமனையின் ஆறாவது வார்டில், இருக்கும் மனநோயாளிகளுடனான அவரது உறவும், அது அவரது வாழ்வில் நிகழ்த்தும் சிக்கல்களுமே இக்கதை.
ஆறாவது வார்டில் இருக்கும் ஐந்து நோயாளிகளில் இவான் மிகவும் தனித்துவமானவர். நல்ல வாசிப்பும், கூடவே பொறுப்புடன் தன் கடமையை ஆற்றிவரும் வாழ்க்கையும் அமைந்த இவானுக்கு, “தன்னை காவலர்கள் கைது செய்யப்போகிறார்கள்” என விபரீத எண்ணம் தோன்றுகிறது. தொடரும் அவ்வெண்ணத்தின் சிக்கல்களால் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்படுகிறான் இவான். ஆனால், காப்பகத்தில் இருப்பவர்களிலேயே வெகு தெளிவுடன் சிந்திப்பவனாகவும் அவனே இருக்கிறான். மறுபுறம் மருத்துவமனை செயல்படும் விதத்தில் கடும் அதிருப்தி இருந்தபோதும் தன் எல்லைக்குட்பட்டு, தன்னால் இயன்ற மருத்துவத்தை செய்ய முற்படுகிறார் டாக்டர் ஆந்திரேய் எபீமிச். தற்செயலாக இவானுடனான துவங்கும் ஒரு உரையாடல், எபீமிச்சுக்குள் பலவித கேள்விகளை எழுப்புகிறது. இவானுடனான தொடர் உரையாடல்களும், மருத்துவமனையின் அமைப்புக்குள் பொருந்திப்போகாத எபீமிச்சின் இயல்பும், அலைக்கழிக்கும் கேள்விகளால் தடுமாற்றத்துக்கு உள்ளாகும் அவருடைய நடவடிக்கைகளும் என எல்லாமும் சேர்ந்து கொள்ள, ஒரு கட்டத்தில் மருத்துவர் எபீமிச், மன நோயாளி எனகருதப்பட்டு அடைக்கப்படுகிறார். மீள முடியாத ஒரு கூண்டாக அம்மருத்துவமனை அவருக்கு அமைந்து விட, எபீமிச்சின் மரணத்தில் முடிகிறது “ஆறாவது வார்டு”.
*
எந்த வாழ்க்கையிலும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்வதற்கு வாய்ப்புள்ள ஒரு இடமாகவே ஆறாவது வார்டைக் கருத முடிகிறது. மிக மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நாம் வாழ விதிக்கப்பட்டிருப்பதும், திரும்பத் திரும்ப நம்மை அலைக்கழிக்கும் கேள்விகள் நம்முன் எழாதிருப்பதும், அல்லது நாம் அதைக் காண மறுப்பதும், குற்றவுணர்வின் சாயல் கொஞ்சமும் இன்றி நம்மால் ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமான கழிக்க முடிவதும், முற்றிலும் தற்செயலான ஒன்றாகவே அமைந்திருக்க வாய்ப்புள்ளதுதானே. அப்படிப்பட்ட ஒரு நல்வாய்ப்பைத் தவற விட்டவன் என்றுதான் இவானைக் கருதத் தோன்றுகிறது. இயல்பானது என நாம் வரையறுத்து வைத்திருக்கும் உலகில் இவானுக்கு வாய்க்காத தெளிவு, ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. ஆனால், அங்குமே அது ஊரோடு ஒத்து வாழாத குணமாகவே கருதப்படுகிறது. மருத்துவர் எபீமிச்சுடனாக ஆரம்ப உரையாடல்களில், வெளிப்படும் இவானின் அகம் அவனை ஒரு லட்சிய மனிதன் என்று எண்ணவைக்கிறது. அவனது லட்சிய நோக்குக்கு பதிலாக எபீமிச்சினால் கூற முடிந்ததெல்லாம் நடைமுறை வாழ்க்கை சார்ந்த நெறிகளும், உலகியல் தத்துவங்களும் மட்டுமே. தன்னுடைய சக நோயாளியாக எபீமிச் ஆனதும், தனக்கு அருளப்பட்ட தத்துவங்களை இவான் நினைவூட்டும் விதம் அருமை.
அருமை நண்பரே, உள்ளம் குலைந்துவிட்டேன் – எபீமிச்
தத்துவ ஞானம் பேசிப்பார்ப்பதுதானே – இவான்
*
இவானிடம் எபீமிச் பேசும் நடைமுறை வாதங்கள் அனைத்துமே தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளத்தான். முற்றிலும் லட்சிய வேட்கையில் மூழ்க முடியாமல், அதே சமயம் பிழைப்புவாதியாகவும் வாழ முடியாமல் எபீமிச் தடுமாறுவது, சீரழிந்த நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு அவர் வரும் துவக்க அத்தியாயங்களிலேயே காட்டப்படுகிறது. ”உலகிலுள்ள நல்லவை யாவும் ஆதியில் தீமையிலிருந்து உதித்தவையே” எனும் சமாதானம் சகித்துக்கொள்ள முடியாத நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு மட்டுமானதல்ல. ஆயிரம் சமாதானம் சொன்னபோதும் எபீமிச்சுக்கு நிதர்சனம் புரிந்துதான் இருக்கிறது. இவானுடனான ஒரு உரையாடலில் “நீங்கள் உளநோயாளியாகவும் நான் டாக்டராகவும் இருப்பதில் ஒழுக்க நெறிக்கோ தர்க்க நியாயத்துக்கோ இடமில்லை, முற்றிலும் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்தது இது” எனவும் எபீமிச் கூறுகிறார். அடிக்கடி ஆறாவது வார்டுக்கு வருவதும், வந்தாலும் சரிவர நோயாளிகளைக் கவனிக்காமல் போவதும், இவானுடனான தொடர் உரையாடல்களும், ஏற்கனவே எபீமிச் மீது காழ்ப்பில் இருப்பவர்களுக்கு, அவரது மனநிலை குறித்து சந்தேகிப்பதற்கு வசதியான காரணங்களாக அமைந்துவிடுகின்றன.
ஒரு வகையில் ஆறாவது வார்டில் தனக்கான இடத்தை எபீமிச் அவைகளே தேர்வு செய்துகொண்டதாகக் கருதவும் இடமுள்ளது. மருத்துவமனையிலோ அல்லது வெளி இடங்களிலோ யாரிடமும் எவ்வித நல்லுறவும் வாய்க்கப் பெறாதவராக காட்டப்படும் ”எபீமிச்”சின் ஒரேயொரு நண்பராக இருக்கிறார் அஞ்சலகத் தலைவரான “மிகயில் அவெரியானிச்”. எபீமிச்சின் மனநிலை மாற்றம் பற்றிய மருத்துவர்களின் அவதானிப்பை அவரிடமே கூறுபவராகவும், அம்மனநிலை மேலும் சீரழிந்து போகாமலிருக்க ஒரு ஓய்வைப் பரிந்துரைப்பவராகவும் “மிகயில் அவெரியானிச்” அமைவது எபீமிச்சுக்கும் அவருக்குமான நட்புபின் சான்று. ஆனால், மாலை நேரங்களில் செறிவான உரையாடல்கள், சேர்ந்து அருந்தும் பியர்கள் என வளர்ந்து வந்த அந்த நட்பும் கூட இவானுடனான சகவாசத்தால் தடைபட்டுவிடுவது எபீமிச் மிக விரைவாக ஆறாவது வார்டை அடைய ஒரு காரணமாக அமைகிறது. மருத்துவமனைச் சுழலில் ஒட்டாமலிருக்கும் எபீமீச் ஒரு பக்கம் என்றால் அதற்கிணையான இன்னொரு பக்கம் நோயாளிகளின் வார்டில் கூட தனித்தே தெரியும் இவான்னுடையது. உண்மையில் இந்நாவலில் எபீமிச் மனதார உரையாடுவது இவான் ஒருவனிடம் மட்டுமே, அவ்வகையில் “மிகயில் அவெரியானிச்”சுடனான அவரது பெரும்பான்மையான உரையாடல்கள் எபீமிச் பேச அதை “மிகயில் அவெரியானிச்” ஆமோதிப்பது என்றவகையிலேயே நின்றுவிடுகின்றன. ஒரு இணைநட்புக்கான அல்லது ஒரு சீண்டலுக்கான காலியிடம் எபீமிச்சிடம் இருந்திருக்கவும் அது இவானால் நிரப்பப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.
*
இந்நாவல் வெறுமனே மன நோயாளிகளைப் பற்றியோ, மருத்துவர் எபீமிச்சைப் பற்றியோ அல்லது மனநிலை பிறழ்வுகளைப் பற்றியோ பேசுகிறது எனச் சுருக்க முடியாது. நம்முடைய சமூகம் அதன் கூட்டியல்புக்கு பொருந்திவராத மனிதர்களை பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த மனஅழுத்தம் எவ்வகையிலும் எபீமிச்சின் மன அழுத்தத்துக்குக் குறைந்ததல்ல. தன்னுடைய தரப்பு நியாயத்தை கேட்பதற்கு சுற்றம் அமைந்திராத, தன் மனது ஏற்றுக்கொள்ளும் சொற்களைக் கூறிடுவதற்கும் யாரும் இல்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட எவரும் எத்தருணத்திலும் சென்று சேரக்கூடும் இடமாக இன்னுமொரு ”ஆறாவது வார்டு”தான் இருக்கமுடியும்.
*
ஆறாவது வார்டு – குறுநாவல் – அந்தோன் செகாவ் (தமிழில்:ரா. கிருஷ்ணையா) – பாரதி புத்தகாலயம்.
அன்னையும் அத்தனும் ஆடும் பகடைகள் தான் யுகங்கள் எனக் காலக்கடலில் விரிகின்றன. பகடையின் வீச்சில் பகை கொள்ளும் இந்திரனும் கதிரவனும் தங்கள் விளையாட்டை மண்ணில் தொடர முடிவு செய்கிறார்கள். மரணமும் உதிரமும் வலியும் துயரும் விளையாட்டின் பகுதிகளே புவியின் சுமையைக் குறைக்க இயற்கை நிகழ்த்தும் .தூய்மைப்பணி
பீஷ்மர் வடமேற்குப் பாலையில் தொடர்ந்து அலைகிறார். காந்தாரி திருதராஷ்ட்ரனை மணந்து ஹஸ்தினாபுரம் வருகையில் உதிர மழை பொழிகிறது. சிரவண மாதத்தில் கடைசி வரும் மழை ஜூலை மாதத்தில் வட இந்தியாவில் பொழியும் தென்மேற்குப் பருவக் காற்றின் கொடையாகி வருகிறது
வேழாம்பல் பறவை மழை நீருக்குக் காத்திருப்பது போல அஸ்தினபுரி பீஷ்மரின் கருணைக்கு வாய்பிளந்து நிற்கிறது. பதினெட்டு ஆண்டுகள் கழித்து நகர் புகும் மாமழையாக பீஷ்மர். அந்த மழையில் நனைந்து மதர்த்து நிற்பவன் திருதராஷ்ட்ரன். உடலாகவே வாழ்ந்தவன் பீஷ்மரிடம் மற்போரில் தோற்றவுடன் உருகிப் பணிகிறான். விழி தவிர அனைத்துப் புலன்களாலும் இசையைத் துய்ப்பவன். அவனுடன் மற்போரில் அவன் உடலை அறியும் பீஷ்மர் அவனுள் ஓடும் அதிர்வை அறிகிறார். விதுரன் சொற்கள் மூலம் திருதனை அறிகிறான்.
விதுரன் உற்சாகம் நிறைந்த ராஜ தந்திர – சட்ட – அயலுறவு நிபுணனாகத் தன்னை ஆர்வத்துடன் தயார் செய்து கொள்கிறான். அவனது பிறப்பு அவனுக்கு பெரும் தடையாக இருப்பதை உணர்ந்து அறிவாலும் சொற்களாலும் தனது இடத்தை உருவாக்கிக் கொள்கிறான். விதுரன் ஆயுதங்களை மேற்பார்வையிட்டு கோட்டைத் தலைவனிடம் உரையாடுவது அமைச்சருக்கும் ராணுவத்தலைவருக்கும் எல்லா நவீன அரசுகளிலும் தொடரும் பூசலை குறிக்கிறது. ராணுவத்தை ஒரு ஐயத்துடன்தான் ஜனநாயக நாடுகளிலும் ஆட்சியாளர்கள் வைத்திருக்கின்றனர். நேரு – திம்மையா உறவு வரை வரலாறு பதிவு செய்துள்ளது. விதுரன் கோட்டை மேல் தயாராக நிறுத்தியுள்ள ஆயுதங்களை ஏன் துடைக்கவில்லை என்கிறான். பகலில் விபத்து ஏற்படலாம் என்கிறான் கோட்டைத் தலைவன். இரவில் செய்யலாமே என்கிறான் விதுரன். முறுமுனையில் பதில் ஏதும் வருவதில்லை. விதுரரின் துணிவு பீஷ்மர் என்னும் கார்மேகம் அஸ்தினபுரியை கவிந்து கொண்டிருப்பதால் வருகிறதோ?
போர் மழை போன்றது. பல முனைப் பூசல்களை அடித்துச் சென்று புதிய விதைப்புக்கு புவியைத் தயார் செய்கிறது. போர் குறித்த பொருளியல் உரையாடல்கள் மெதுவாகத் துவங்குகின்றன.
பீஷ்மர் கருணை மிகுந்து வடமேற்கே மாறி வீசிய மாரியாக காந்தாரம் செல்கிறார்.பாரத வர்ஷத்தின் பசுமையான வரலாறெனும் வயலில் வடமேற்கு ரத்தம் கலக்க வழி செய்கிறார்.
எதிர்கால அரசியல் கணக்குகள் நிறைந்த சத்யவதி பீஷ்மரை காந்தாரம் அனுப்பி வைக்க முயல்கிறாள் . அதற்கு விருப்பமில்லாத பீஷ்மரை பேருரு கொண்ட விழியிலா மன்னன் தாள் பணிந்து விழும்போது மனம் மாறுகிறார் . இன்னொரு மனமாற்றம் சகுனியிடம் நிகழ்கிறது. பீஷ்மரை அளக்க முடிந்து தோற்றபோது தனது ஆணவமும் கணக்குகளும் இழுக்க, காந்தாரியை மகற்கொடை மறுக்கிறான் சகுனி. ஆனால் காந்தாரியின் நிமிர்வும் கனிவும் நிறைந்த பேச்சு சகுனியின் மனதை மாற்றுகிறது.
சிறு சிறு நிகழ்வுகள் உலக நடப்பை மாற்றி விடுகின்றன. மகதத்தில் இருந்து சமாதான ஓலை சகுனிக்கு வருகிறது. அதைக் கொண்டு வந்த செங்கழுகை ஒரு பசித்த ஓநாய் பிடித்துத் தின்று விடுகிறது. அந்தக் கழுகை அம்பால் அடித்தது சகுனி. இரவில் துயிலாது இருந்த சகுனியை தனது ஓலத்தின் மூலம் வெளியே வரச் செய்தது அந்த ஓநாய் . சகுனிக்கு துயில் வராமல் இருந்த காரணம் பீஷ்மரின் மண வேட்பு தூது. ஒருவேளை கழுகின் செய்தி கிடைத்திருந்தால் காந்தாரம் மகதத்துடன் மண உறவு கொண்டிருக்கும். மகாபாரதம் வேறு மாதிரி இருந்திருக்கும்
வேறு மாதிரி போகக் கூடிய பல்வேறு சாத்தியங்களின் விதைகள் காலமெனும் மணல் பரப்பில் கொட்டிக் கிட க்கின்றன.
பாலைப் பயணத்தில் பீஷ்மர் கண்ட எண்ணற்ற விதைகள் ஒவ்வொன்றும் ஒரு நிகழ்தகவு. தொடர் நிகழ்வில் ஒரு கண்ணி மாறினாலும் உருவாகும் காடு முற்றிலும் வேறாக இருக்கும்.
சத்தியவதி பீஷ்மரை தூது அனுப்பும் பகுதி கானல் வெள்ளி . காந்தாரி வெண்மணல் அனுப்பும் அரிய வெள்ளி. அல்லது இந்த மொத்த நிகழ்வும் மயக்கும் பொய்த் தேர்.
பருவ மழையின் பரிசுதான் பாரதத்தின் வாழ்வும் பண்பாடும். புயல் உருவாக பாலைவனங்களும் பங்களிக்கின்றன என்கிறார்கள் புவியியல் அறிஞர்கள். நிலத்தைக் காய்த்து காற்றை இலேசாக்கி அழுத்தத்தில் பேதமிட்டு விளையாடி கடல் நீரை உறிஞ்சி முகிலில் நிரப்பி வீசிப் பொழிகின்றன தென் மேற்குக் காற்றுகள். மணலைக் காற்றில் ஏற்றி விளையாடுகின்றன நெருப்பு தெய்வங்கள் . சகுனி என்னும் வெந்த காற்று பாரதத்தின் மீது மழையைப் பொழிவிக்க காந்தாரம் தொட்டிலாக உள்ளது. ஆனால் பொழிவது உதிரமழை .
பீலிப்பனையில் காந்தாரிக்கு தாலிச்சுருள் செய்ய பாலை எங்கும் அலைகிறார்கள், இறுதியில் வெம்மையின் அனைத்து வீச்சுகளையும் தாங்கிய பேரன்னையான தனித்து நிற்கும் பூத்த பனையைக் காண்கிறார்கள் கடினமான சூழலில் பெருகும் உயிர்த்தொகையின் அடையாளம் பனை. காந்தாரியின் தங்கைகள் விழியிலா வேந்தனை மணக்கத் தயார் ஆகிறார்கள்.
திருதனின் உள்ளே ஓடிக் கொண்டிருந்த இசையைத் தானும் கேட்கிறாள் காந்தாரி . அந்த இசைக்கணம் மிகக் குறுகிய மின்னல் அந்தக் கணத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளக் கண்களைக் கட்டிக் கொண்டு விடுகிறாள். திருதன் வாழ்வில் முதல் முறையாக மழையில் நனைகிறான்.
திருதராஷ்ட்டிரன் காற்றின் இசையில் மந்திர ஸ்தாயில் ஒலிக்கும் செவ்வழிப் பண்ணைக் கேட்கிறான். அவனுக்கு என்றோ ஒருநாள் திருவிடத்து கலைஞர் இசைத்த சாமவேத பாடல் இசை மட்டும் நினைவுக்கு வருகிறது. சொற்களை விதுரன் எடுத்துத் தருகிறான்
சாமவேதம் ஐந்தாம் காண்டம் ஒன்றாம் பாகம் ஐந்தாம் பாடல் பவமானன் என்னும் சோமனுக்கு உரியது. பொங்கும் நதிகள்போல, கூரம்புகள்போல துள்ளி வரும் நெருப்பின் மகன் – கதிரவனின் நண்பன். இந்திரன் வயிற்றில் சோமச் சாற்றை நிறைப்பவன். இரு பெரும் சக்திகளின் மோதல் இனிய கல்லாக இசையாக ஆவியாக திருதனின் செவிக்குள் காற்றும் நெருப்பும் போலக் கரைகின்றன.
தீச் சாரல் , தழல் நீலம் ,வேங்கையின் தனிமை, அடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து ஆர். ராகவேந்திரன் ஆற்றிய சிறப்புரை:
“எதனையும் விட வேகம் கொண்டவன் என்று தன்னை ஒளி நினைத்துக் கொள்கிறது. ஆனால் அது தவறு. எவ்வளவு விரைவாக ஒளி சென்றாலும் தனக்கு முன்னே அங்கே சென்றடைந்து தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் இருளைக் காண்கிறது.”
டெர்ரி பிரச்சட்டின் ரிப்பர் மேன் நாவலில் வரும் இந்த பிரமிப்பூட்டும் வரிகளை முதற்கனலுக்கு முத்தாய்ப்பாகச் சொல்லலாம்
முதற்கனலின் அத்தியாயம் 27 முதல் 50 வரையிலான பகுதிகள் அம்பையின் தீப் புகுதலையும், பீஷ்மர், வியாசர், சிகண்டியின் நெடும் பயணங்களையும் திருதராஷ்டிரன், பாண்டு, விதுரரின் பிறப்புகளையும் பேசுகின்றன.
சுருதி, ஸ்மிருதி, புராணங்களின் கலவையாகத் தோன்றுகிறது முதற்கனல் . சாந்தோக்கிய உபநிடத்தின் ஆப்த வாக்கியமாகிய “நீயே அது’ அக்னிவேசரால் சிகண்டிக்கு அளிக்கப் படுகிறது. காலத்திற்கேற்ப மாறிவரும் அறங்களை எம ஸ்மிருதி , சுக்ர ஸ்ருதி முதலாய நீதி நூல்களை வைத்து அரசியல் – உளவியல் சிக்கல்களை உசாவுகிறது. யயாதி போன்ற புராணக் கதைகள் மூலம் பீஷ்மரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்கிறது.
குஹ்ய சிரேயஸ் ( மறைக் காப்புத் திறலோன் என்று பொருள் கொள்கிறேன்) என்னும் கழுதைப்புலி க்ஷத்ரியர்கள் ஒவ்வொரு குலத்திலும் உருவாகும் விதத்தைச் சொல்கிறது. வைச்வானரன் என்னும் நெருப்பு படைப்பின் உயிரின் ஆற்றலாக பிறவி தோறும் தலைமுறை தோறும் கடந்து வரும் சத்து என்பதை உணர்ந்து கொண்ட சித்ரகர்ணி- கழுதைப்புலிகள் மற்றும் வியாசர் உரையாடல் அழகிய பஞ்ச தந்திரக் கதையாக அமைகிறது.
சாந்தோக்ய உபநிடததத்தில் வைச்வானர வித்யை என்னும் தியான முறையை அஸ்வபதி கைகேயன் என்னும் அரசன் உத்தாலக ஆருணி முதலிய கற்றறிந்த பண்டிதர்களுக்கு உபதேசிக்கிறான். அவர்கள் தியானம் செய்யும் முறையானது பிரபஞ்சத்தின் தனித்தனியான பகுதிகளாக கவனம் செலுத்தி வந்தது. அனைத்தும் ஒன்றே என்னும் அறிவை அவர்களுக்கு வழங்குகிறான். வயிற்றில் உறையும் வைச்வானரன் என்னும் செரிக்கும் நெருப்பு எப்படி உணவை உடல் முழுவதும் ஆற்றலாக மாற்றித் தருகிறதோ அது போல இந்த அறிவும் முழு நிறைவை வழக்கும் என்று சொல்லப்படுகிறது.
அந்த வித்தை யின் பருவடிவமாக இந்த நெருப்பு எப்படி உண்டும் வழங்கியும் உயிர்க்குலங்களின் வழியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை இறந்து கொண்டே தத்துவம் பேசும் சித்ரகர்ணி என்னும் சிம்மம் சொல்கிறது. பெயர் வைத்தலில் அழகிய பொருத்தம் உள்ளது. க்ஷத்திரியனின் பிரதிநிதியாக குஹ்ய சிரேயஸ் ரகசியத்தின் உருவமாக இருக்கிறது. குலம் காக்கும் – குருதி கொள்ளும் ரகசியம். விநோதச் செவியன் என்று சித்ரகர்ணியை எடுத்துக் கொண்டால் ‘கேட்டலின்’ மூலம் ஞானம் பெற்றவன் அவன். வியாசரின் குடிலை வேவு பார்க்கும் போது எத்தனையோ கேட்டிருப்பான்.
அத்வைதம் தரும் அமைதி நிலையை பல்வேறு பாதைகளின் மூலமாக வியாசருக்கும் பீஷ்மருக்கும் இயற்கையும் சூதர்களும் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
காலத்திற்கேற்ப ஸ்மிருதிகள் மாறுவதை ஸ்வேதகேது தனது தந்தையை எதிர்த்து தாய்க்கு உதவி செய்யும் பகுதி விளக்குகிறது . சட்டம் நெகிழக்கூடிய பகுதிகளையும் அது நிகழக்கூடிய வகைகளையும் சொல்லி வைத்திருக்கிறது.
புராணத்தின் அலகுகளான காவியம், கண்ணீர், வம்ச கதை திரண்டுள்ளன முதற்கனலில்.
பாத்திரங்களின் குண மாற்றம் இதை ஒரு தனிப் புதினமாக ஆக்குகின்றன
ராஜோ குணத்தின் செயலூக்கத்தில் துவங்கி, பின் தமோ குணத்தில் பித்தியாக அலையும் அம்பை இறுதியில் சத்துவ குணத்தில் நிறைகிறாள். அன்னையின் நிழலில், உண்பதே வாழ்க்கையாக துவங்கும் சிகண்டினி, பின்னர் பழி என்னும் ஒற்றை இலக்கிற்காக ரஜோ குணத்தில் நிற்கிறாள் . அம்பைக்குப் படகோட்டிய நிருதன் தூய காத்திருத்தலில் அசையாமல் படகில் இருப்பது தமோகுணமாக மயக்கும் சத்வம் தான் பின் அம்பையை விண்ணேற்றவும் ஏற்றியபின் முதல் பூசகனாகவும் உருமாறி ராஜசத்தில் சேருகிறான், பீஷ்மர் வெளித்தோற்றத்தில் ராஜசமும் உள்ளே மாறாத் தேடலில் சத்வத்திலும் உறைகிறார். சத்யவதி மட்டும் குணமாற்றமின்றி இருப்பதாகத் தோன்றுகிறது.
யயாதி கதை பீஷ்மருக்கு சொல்லப் படுகிறது. ராஜாஜியின் யயாதியிலிருந்து வெண்முரசின் யயாதி வேறுபாடும் இடம் சிறப்பானது. கால மாற்றத்திற்கேற்ப யதார்த்தமானது. “வியாசர் விருந்தில் ” இச்சையை அடைந்து தணிப்பது என்பது நெருப்பை நெய் விட்டு அணைக்க முயல்வது போன்றது ” என்ற அறிவைப் பெற்று விடுகிறான். முதற்கனலில் வரும் யயாதி மகனுக்கு இளமையை அளித்து விண்ணேகிய பின்னும் அகந்தையால் வீழ்த்தப்படும் யயாதியாக நெருப்பிலும் பயன் பெற உரிமை இன்றி, தனது மகளைக் கண்ட கனிவில் முழுமை அடைகிறான்
பீஷ்மர் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய ஒரு வாய்ப்பை யயாதி கதை மூலம் அவருக்கு சொல்கிறார் சூதர் .
முதற்கனல் பெண்டிரையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பீடத்தில் ஏற்றுகிறது. பீஷ்மரை இழிவு செய்து பாடும் சூதர், சால்வனை தீச்சொல்லிட்டுவிட்டு, நகர் நீங்கும் சூதர், மந்திரங்கள் மூலம் அரசியரின் மனங்களை கட்டுப்படுத்தும் நாகினி, காவியமும் சீர் மொழியும் கற்றுத்தேர்ந்த சிவை போன்ற அடிமைப் பெண்கள் வரவிருக்கும் கால மாற்றத்தைக் குறிக்கிறார்கள்.
குல அறங்கள், கால அறங்கள், தேச அறங்கள் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி நிற்கும் சரடுகளின் இறுக்கத்தின் மேல் மைய அரசின் அரியணை நிற்கிறது. க்ஷத்திரியர் ஆவதற்கு வாள்முனையும் மறைச்சொல்லும் குலங்களுக்குத் தேவைப்படுகின்றன. பிறகு புதிய போட்டியாளர் உருவாகாமல் தடுக்க வேண்டி உள்ளது
சிறிய நிகழ்வுகளை பெரிய இயக்கங்களுடன் தொடர்புறுத்துவதே வெண்முரசின் பிரம்மாண்டம்.
நியோக முறையில் குழந்தைகள் பிறக்கும் முன் சொல்லப் படும் கதைகள் இதற்கு நல்ல உதாரணம்.
நூறு பறவைகளின் நிழல்களை வீழ்த்திய திருதராஷ்ட்டிரன் என்னும் கந்தர்வன் அதே பெயரில் கண்ணில்லாதவனாக பிறக்கிறான். அவன் பார்ப்பதெல்லாம் இருளே. அவன் தேடுவதெல்லாம் நிழலாகவே அமையப் போகின்றன . தனது குஞ்சுகளைப் பிரிந்த ஏக்கத்தில் இறந்த சாதகப் பறவை மீண்டும் பாண்டுவாய்ப் பிறந்து மைந்தரைப் பிரியும் துயரை அடைகிறது. அறத்தின் தலைவனே விதுரனாக வருகிறான்.
வில்வித்தை பிரம்மவித்தையின் ஒரு சிறு பகுதியே என்கிறார் அக்நிவேசர். ஒவ்வொரு சிறு அறிவும் சொல்லும் ஊழ் வரை, புடவி அளவு காலம் அளவிற்கு விரிந்த ஒன்றின் துளி என்னும் ஞானம் கதை வழியே பயணிக்கிறது.
பிஷ்மரின் சப்த -சிந்து சிபி நோக்கிய பயணங்கள் அவருக்கு மனவிரிவை அளிக்கின்றன. பாலையில் காணும் விதைகளைக் கண்டு வியக்கிறார். வானும் மண்ணும் கருணை செய்தால் வேறு ஒரு வகை காடு உருவாகி இருக்கும் என்று எண்ணுகிறார். கோடிக்கணக்கான நிகழ்தகவுகளின் ஒரு தேர்வு தான் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்றுணரும் இடம் அதிர்ச்சி அளிப்பது . ஒரு வேளை கால – நிகழ்வுகளின் வேறு வகையான வாய்ப்பில் அவரும் விதை முளைக்கும் சாதாரண தந்தையாகி இருந்தால், பெண்ணின் கருணை அவருக்கு கிட்டி இருந்தால் தனித்த வேங்கையின் பொறுப்புகள் அவரிடமிருந்திருக்காது.
தென் மதுரைச் சாத்தன் வியாசருக்கே வழி காட்டுகிறார். கருமையும் வெண்மையும் இணைந்ததே ஒளி என்கிறார் .
மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு ஒரு கடமையை அளித்ததில் துவங்கும் முதற்கனல் அவன் தனது வேசர நாட்டிற்கு திரும்பி வருவதுடன் நிறைகிறது, இருள் என்பது இகழப் படவேண்டியதில்லை , தமோ குணம் முற்றும் ஒழிக்கப் படவேண்டிதில்லை என்ற அறிவை ஜனமேஜனுக்கு அளித்து பாம்பு வேள்வியை தடுத்த வெற்றியாளன் ஒரு வருடம் கழித்து நாக பஞ்சமி அன்று தனது குலத்திற்கு வந்து தான் இன்னும் நாகன் தான் என்று அறிவிக்கிறான்.
ஆஸ்திகனால் காக்கப்பட்ட தட்சன் தட்சகியுடன் காரிருள் நீண்ட பெரு வானம் நிறைத்து இணைந்து படைப்பை நிகழ்த்துகிறான். இருள் இணைந்து ஒளியைக் குழவியாகப் பெற்றுத் தாலாட்டுகிறது. சத்வகுணம் என்னும் முத்து ராஜசம் என்னும் சிப்பிக்குள் தாமசம் என்னும் ஆழிருள் கடலில் பாதுகாப்பாக இருக்கிறது. இருளற்ற ஒளியில்லை. இதுவே இந்தியாவின் அனுபவ ஞானம் .
இருள் ஒளி இரண்டிற்கும் ஒன்றிடம் என்று அருள் தரும் ஆனந்தத்தை அடைய அனைத்திலும் ஒன்றைக் காண்பதே வழி என்கிறது முதற்கனல். பல ஆயிரம் ஆண்டுகளாக பாரத வர்ஷம் கண்ட வாழ்வனுபவம் புல்லும் புழுவும் நம்பி வாழும் அறத்தை நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியாக முதற்கனல் எரிகிறது.
உவமைகள் / உருவகங்கள்
1 செம்புல் பரவிய குன்று போன்ற சிம்மம்
2 நெல்மணி பொறுக்கும் சிறு குருவி போல அம்பாலிகையிடம் பதற்றம் இருந்தது
3 வாய்திறந்த அரக்கக் குழந்தைகள் போல வட்ட வடிவ இருளுடன் நின்ற செம்புப் பாத்திரங்கள்
4 வலசைப் பறவைகளுக்கு வானம் வழி சொல்லும்
5 பாரத வர்ஷம் ஞானியர் கையில் கிடைத்திருக்கும் விளையாட்டுப் பாவை
6 வந்தமரும் நாரைகள் சிறகு மடக்குவது போல பாய் மடக்கும் நாவாய்கள்
7 சிகண்டி கழுத்தில் குருதி வழியும் குடல் போல காந்தள் மாலை கிடந்தது
தத்துவங்கள்
கருணை கொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே (சுகர் வியாசரிடம் சொல்வது)
தாஸ்தாவெஸ்கி சொன்ன ‘Beauty Will Save The World’ என்ற மாபெரும் உண்மையை , தூய கிருஸ்து மனம் கொண்ட மிஷ்கின் மூலம் ரஷ்ய மேல்தட்டு மக்கள் மத்தியில் ஆராயும் நாவல் அசடன்.
தாஸ்தாவெஸ்கியின் கண்கள் நேராக நம்மை நோக்கியவாறு இருக்கும் புகைப்படம்
அசடன் நாவல் குற்றமும் தண்டனையும்,கமரசோவ் சகோதரர்கள் நாவல்களின் உணர்ச்சிமிக்க கதை ஓட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. காரணம், அதன் நீண்ட உரையாடல்கள் மற்றும் யதார்த்தமான நாவல் தன்மையிலிருந்து திடீரென நாடக தன்மைக்கு மாறுவது.நாம் வாசித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென(இப்போது பின்னணி இசை உச்சத்தில் கலவரமாக) திரைக்குப் பின்னாலிருந்து ஒரு கூட்டம் வந்து அமர்க்களம் செய்துவிட்டு மொத்தமாக திரைக்குப் பின்னே ஓடிவிடுகிறது. நாம் முகம் சுருங்கி குழப்பத்துடன் மேடையை உற்று நோக்குகிறோம், பிறகு மீண்டும் நீண்ட உரையாடல்கள் தொடங்குகிறது.
நாவல் வடிவத்தின் சட்டகத்திலிருந்து அசடன் முற்றிலும் மீறி செல்கிறது என்கின்றனர் விமர்சகர்கள். கதையாகப் பார்த்தால் ஒரு குறுநாவல் அளவுக்குச் சிறியது. நாவலுக்கே உரித்தான கதாபாத்திரங்களின் பரிணாமம் இங்கே இல்லை, பயணம் இல்லை (கதை நகர்வு) ஆனால் நீண்ட உரையாடல்கள் மட்டுமே. எல்லா கதாபாத்திரங்களும் அதன் தன்மையில் ஏற்கனவே முழுமையாக உள்ளது.
தாஸ்தாவெஸ்கி தான் அடைந்த போலி மரண தண்டனை(Mock Punishment) அனுபவத்தையே, இபோலிட் கதாபாத்திரம் மூலம் மரண தண்டனை பெற்ற ஒருவன் அடையும் மன பிறழ்வை காண்பிக்கிறார். கொடூரமான வன்முறையால் தண்டனை பெற்ற ஒருவன் அல்லது ஒரு கொலைகாரனால் கழுத்து அறுபட்ட நிலையில் இருக்கும் ஒருவனை விட மரண தண்டனை பெற்றவனின் மன வேதனை உச்சமானது என்கிறான் மிஷ்கின். காரணம், மரண தண்டனை பெற்ற ஒருவன் சென்றடையும நம்பிக்கையின்மை, அவன் ஆன்மாவை சுருக்கி பித்தடைய வைக்கிறது.
சுவிட்சர்லாந்தில் மேரி என்ற பெண்ணை கிராம மக்களிடமிருந்து காப்பாற்றுகிறான்.தொடர்ந்து தன்னிடம் மனம் விட்டு பேசுபவர்களை ஆறுதல் வார்த்தை கூறுகிறான், பண உதவி புரிகிறான்.
அசல் ரஷ்யர்களை எங்குமே காணோம், சிறந்த பொறியாளர்கள் இல்லை, இரயில்கள் பாதி வழியிலேயே சிக்கி மாத கணக்கில் நகர முடியாமல், அதில் உள்ள உணவு பொருட்கள் அழுகி வீணாகிறது. ஆனால் எங்கும் போலி பாவனையுடன் தளபதிகள், அரசாங்க ஊழியர்கள். இந்த Materialistic ஆன போலி பாவனையை, இவால்ஜின் கதாபாத்திரம் மூலம் கடுமையாக சாடுகிறார் தாஸ்தாவெஸ்கி.
ரோகோஸின் வீட்டில் மிஷ்கின் காணும் Holbien’s முகம் சிதைந்து சித்திரவதைக்கு உள்ளான வயதான கிருஸ்துவின் படம் அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒரு வகையில் இந்த புகைபடம் புத்துயிர்ப்பை (Ressurection) மறுக்கிறது. தாஸ்தாவெஸ்கி பார்த்த இந்த புகைபடமே, தான் முதலில் எழுத நினைத்த மிஷ்கினிலிருந்து மாற்றி அழகான தூய மிஷ்கினை எழுத தூண்டியிருக்கலாம்.
அழகிற்கு ஒரு வலிமை உள்ளது. உலகத்தை தலைகீழாக மாற்றக் கூடிய வலிமை என நாஸ்டஸியாவின் அழகு குறித்து மிஷ்கின் கூறுகிறான். மிஷ்கின் நம்புகிற இந்த தரிசனத்தை, பல்வேறு எதார்த்தங்கள் வழியாக நவீன ரஷ்யாவின் பண்பாட்டு தளத்தில், சிந்தனை தளத்தில் ஏற்பட்ட மாற்றம் மூலம் நிராகரிக்கிறார் தாஸ்தாவெஸ்கி.
சுவிட்சர்லாந்தில் ஒரு மலையைப் பார்த்து தான் அடைந்த பரவசத்தை விவரிக்கிறான் மிஷ்கின். மனிதனை கடந்த ஒன்றை பிரபஞ்சத்தை அல்லது கடவுளை உணர்வதற்கான ஒரு கருவியாக அழகைப் பார்க்கிறான். உலகில் உள்ள அனைத்து அழகிலும் (Authentic Beauty) ஒரு தன்மை உள்ளது, அது மனித இதயத்தை நேரடியாக ஊடுருவி சலனம் ஏற்படுத்தவல்லது, அங்கிருந்து வேறொன்றை நோக்கி மனிதனை நகர்த்துகிறது.
இந்த அழகியலை ஒவ்வொரு கலையும்(Art) தன்னுள் கொண்டதாலே ,Holbien’s painting மக்களிடம் அதிகம் தாக்கம் ஏற்படுத்தும் கிருஸ்துவை நோக்கி அவர்களை நகர்த்தும் என நம்புகிறான் மிஷ்கின்.
இயற்கையிலேயே இந்த அழகுணர்ச்சி(Beauty) தன்னுள் நல்லதையும் (Good), சத்தியத்தையும்(Truth) கொண்டுள்ளது. இதனாலயே ஹெர்மன் ஹெஸ்ஸே “Art by it’s Nature is religious” என்கிறார்.
மிஷ்கின் ஜீஸஸ், புத்தர் போல் வாழ்க்கையின் இக்கட்டுகளை கடந்து ஞானம் பெற்றவன் அல்ல. மாறாக துளி கரையில்லாத ஒரு அழகான மனிதன் (the positively good and beautiful man). இந்த அழகான மனிதனை ஏற்றுக் கொள்ள எது தடுக்கிறது. அது ரஷ்யா தனது வேர்களை இழந்து முழுக்க முழுக்க Materialist ஆன ஐரோப்பா மீது கொண்ட மோகத்தால். ரோமன் கத்தோலிக்க திருச்சபை ரோமா புரி மன்னர் ஆட்சியின் மாறிய வடிவம் என்கிறான் மிஷ்கின். ஆக்டோபஸ் போல தனது கரங்களால் ஐரோப்பா முழுக்க அதிகாரம் செலுத்தி அரசியல் ஆதாயம் அடையும் அமைப்பு அது. அதுவே Atheism, Communism போன்ற சிந்தாந்தங்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது என்கிறான் மிஷ்கின்.
உலகிற்கே ஆன்மிக வழி காட்டக் கூடிய தன்மை ரஷ்யாவிற்கு உண்டு, அது எந்தவொரு ரஷ்யாவின் ஏழை விவசாயிடமும் (Peasant Christ) உள்ளது என தாஸ்தாவெஸ்கி நம்பினார்.அதையே தாஸ்தாவெஸ்கியும், டால்ஸ்டாயும் தங்கள் எழுத்திலிருந்து முன்வைத்தனர் (Russian Christ).
தனது பண்பாட்டை இழப்பதால் ஒரு தேசம் அடையும் இழப்பை, அசடன் நாவலிருந்து ரஷ்யாவின் வீழ்ச்சி வரை ஒரு கோடு வரைந்து பார்க்க முடியும்.