மனிதர்களின் மதிப்பீடுகள், விழுமியங்கள் அன்பு அல்லது மனிதாபிமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்னும் பொதுக்கருத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது ஆல்பர்ட் காம்யுவின் “அந்நியன்.“ அது அப்படித்தான் இருக்கிறாதா, அப்படி ஒன்றும் இல்லை மனிதர்களே என்கிறது. ஒருபக்கம் கிறிஸ்துவின் அன்பின் மீது கட்டப்பட்ட சமய மதிப்பீடுகளையும் மற்றொரு பக்கம் பிரெஞ்சு பண்பாட்டின அரசின் நீதிமுறையையும் – அபத்தமானவை என்ற விமர்சனத்தை இக்கதையின் மூலம் வைக்கிறது.

கதை நாயகனின் எதற்கும் அதிகம் அலட்டிக்கொள்ளாத, அதிக உணர்ச்சிவசப்படாத, போகிறபோக்கில் வாழ்கிற, தனக்கென மதிப்பீடுகள் எதுவும் இல்லாத, அன்றாடம் எழும் புலன்சார் விருப்பங்களை மட்டும் நிறைவேற்றி வாழ்கிற ஒருவன் – இத்தன்மைகள் மட்டுமே அவன் கொடியவன்-தீயவன் என்று தீர்மானிக்கப் போதுமானவையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. உண்மையில் அவன் கெட்டவன் அல்ல. உள்நோக்கம் ஏதுமில்லாத, சூழலால் அமைந்துவிட்டதான கொலை ஒன்றை செய்து சிறை செல்லும் அவன் தன் தாயை உடன் வைத்திருக்காமல் விடுதியில் விட்டிருந்தான் என்பதையும் அவள் மரணத்திற்கு அங்கு சென்றபோது அவளுக்காக அழவில்லை எனபதையும் அத்துடன் அங்கு அவனது இயல்பான சுபாவத்தை ஒட்டிய சில நடத்தைகள் காரணமாகவும் கொடியவன் என்று தீர்மானிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறான்.
தன் தரப்பு நியாயத்தை வாதிட அவன் விரும்புவதில்லை. தனக்காக வாதிடும் வழக்கறிஞருக்கு ஒத்துழைப்பும் தருவதில்லை. நிகழ்வுகளைக் கொண்டும் சூழலைக் கொண்டும் தன்னைப் பற்றி எதிர்தரப்பு உருவாக்கும் ”சித்தரிப்பை” மறுப்பதும் இல்லை. அந்த சித்தரிப்பு உண்மையில்லை என்னும்போதும் ஆமாம் சரிதானே அப்படியும் சொல்ல முடியும் தானே என்று எண்ணுகிறான். எதிர்தரப்பு வழக்கறிஞர் பெற்றோரைக் கொலை செய்துவிட்ட மற்றொருவரி்ன் வழக்குடன் இவ்வழக்கை ஒப்பிட்டு அதைவிட இது மிகக்கொடியது என்கிறார். தன்மீது ஒருவித தனிப்பட்ட வன்மத்துடன் அவ்வழக்கறிஞர் நடந்துகொள்வது அவனுக்கு வியப்பளிக்கிறது.
பெரிதும் உணர்ச்சிவசப்படாதவனாகிய கதைநாயகன் இரண்டு இடங்களில் மட்டும் உணர்ச்சிவசப்படுகிறான். உணவுவிடுதி நடத்திவரும் அவனது நண்பன் – அவனுக்கு உணவும் மதுவும் அளிப்பவன், தன் பணியிடத்தில் அவன் எப்படிப்பட்டவன் (நன்கு உழைப்பவன்) என்று அறிந்திருப்பவன், அவனை உண்மையில் புரிந்துவைத்திருப்பவன் அவனுக்காக உணர்ச்சிப்பூர்வமாக பரிந்துபேசும் போது நெகிழ்ச்சி அடைகிறான். அவனை அணைத்து முத்தமிட விரும்புகிறான். இரண்டாவதாக, மரணதண்டனைக்கு முன்னதாக தன்னை சிறையில் வந்து சந்தித்து தனக்காக பிரார்தனை செய்ய வரும் பாதிரியாரிடம் எரிச்சலைடைகிறான். அவரை விரட்டுகிறான். அவருடைய அறிவுரைகள் அபத்தமானவை என்று கருதுகிறான்.

மொத்தத்தில் – நான் பேசாமல் இருந்தால், உள்ளதற்கு மாறாக உங்கள் மதிப்பீடுகளின் அடிப்படையில் நீங்களாகவே என்னைப்பற்றி ஒரு சித்தரிப்பை (மிகையாக அல்லது பொய்யாக) உண்டாக்கி தண்டித்து விடுவீர்களா என்பது அவனது கேள்வி. இதை வெளிப்படையாக அவன் கேட்பதில்லை. இது கேட்காமல் கேட்கப்படும் கேள்வி. நானாக எதுவும் கேட்க மாட்டேன், என்மீது நீங்கள் சுமத்தும் எதையும் மறுக்கவும் மாட்டேன், தண்டணையை ஏற்றுக்கொள்வேன் என்பது அவனது நிலைப்பாடக உள்ளது. ”எல்லோரும் என் சாவை ரசியுங்கள்” என்பதுபோல.
ஒருவகையில் இது அவனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை என்பதைவிட அவன் செய்துகொள்ளும் தற்கொலை என்றே தோன்றுகிறது. தற்கொலை செய்துகொள்ள விருப்பங்கள் நிறைவேறாதது, துன்பங்கள், விரக்தி இவைதான் காரணமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை – எதற்காக வாழ வேண்டும் உயிரோடு இருப்பது அவ்வளவு முக்கியமானதா என்ன என்ற கேள்வியே போதுமானது என்று கூறுவதுபோலும் எண்ணத் தோன்றுகிறது.
சில இருத்தலியல்வாதிகள் இருத்தலியல் சிக்கல்களுக்கு தற்கொலையைத் தீர்வாகக் கண்டதுபோல் தோன்றுகிறது. இங்கே கிழக்கே நமக்கும் பலநூற்றாண்டுகளாக அதுவேதான் தீர்வாக பல மெய்ஞானிகளால் சொல்லப்பட்டு வருகிறது. என்ன வித்தியாசம் என்றால் இங்கே உடலின் தற்கொலை அல்லாமல் மனதின் அல்லது நான் என்னும் தன்முனைப்பின் தற்கொலை பரிந்துரைக்கப்படுகிறது. துறந்தார் இறந்தார் அனையர் என்றும் மனோநாசம் என்றும்.

