சொல்முகம் 50 – அருணாதேவி

நான் என்னுடைய வாழ்வில் இதுநாள் வரை பள்ளிப்படிப்பு, கல்லூரி, வேலை, திருமணம், குழந்தை பிறப்பு என்று அன்றாடத்தில் அடித்து செல்லப்பட்டுக்கொண்டிருந்தேன். அதில் சிறிய மாற்றமாய் புத்தக வாசிப்பு என்னுடைய கணவரின் மூலமாக நிகழ்ந்தது. தமிழ் வாசிக்கத்தெரியும் என்னும் ஒரே தகுதியுடன் நான் எனது வாசிப்பை தொடங்கினேன். குழந்தைகளுக்கான கதைகளை படித்து இரவு நேரம் தூங்கும் முன்பு என்னுடைய மகளுக்கும் மகனுக்கும் கூறுவேன். அப்பொழுது என் கணவர் வெண்முரசு கதைகளை கூறுவார். நானும் அக்கதைகளை ஆர்வமுடன் கேட்பேன். ஒருநாள் நான் வெண்முரசு வாசிப்பை துவங்கினேன். சவாலுடன் கூடிய மிகப்பெரிய உழைப்பு தேவைப்பட்டது. இந்திரநீலத்தில் தொடங்கி முன்னும் பின்னும் வாசித்து சிலமாதங்களில் ஜெ அவர்களின் தளத்தில் வந்து கொண்டிருக்கும் நிகழ்கால பகுதியுடன் இணைந்துகொண்டேன்.

அச்சமயம் கோவையில் சொல்முகம் என்கின்ற வாசகர் குழுமம் ஒன்றை ஜெயமோகன் அவர்களின் வாசகர்கள் உருவாக்கி உள்ளனர் என்ற தகவல் வந்தது. எனது கணவர் அந்த குழுவில் இணைந்து மாதந்தோறும் நிகழும் கூடுகையில் கலந்துகொண்டிருந்தார். எனக்கோ அதில் கலந்துகொள்வதற்கு சிறு தடங்கல் இருந்தது. வெண்முரசைத் தொடர்ந்து வாசித்து கொண்டிருந்த எனக்கு இதனுடைய தனித்த மொழிநடை மற்றும் கதைக்களம் மட்டுமே  பழகியிருந்தது. அப்போது சொல்முகத்தில் வெண்முரசு வாசிப்பை தொடங்கியபோது நான் அதில் இணைந்து கொண்டேன். முதற்கனலில் தொடங்கி மீண்டும் வாசிக்கத்துவங்கினேன். ஒவ்வொரு கூடுகையிலும் கதைக்களமும், கதை மாந்தர்களும் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு கருத்துக்களாக முன்வைக்கப்பட்டன. எனக்கு இது மிகப்பெரிய அறிவுத் திறப்பாக இருந்தது. மேலும் எனது வாசிப்பை கூர்மைப்படுத்த ஆர்வமூட்டியது. கூடுகையில் முதல் அமர்வில் வெண்முரசு முடிந்தவுடன் இரண்டாவது அமர்வில் குறிப்பிட்ட நாவல்கள் குறித்த கலந்துரையாடல் இருக்கும். ஆரம்பத்தில் இதில் நான் பார்வையாளராகவே இருந்தேன். எனக்கு நாவல்கள் வாசிப்பதில் பெரிய தடை இருந்தது. அதற்கு காரணம் அக்கதைகளில் இருந்த எனக்கு தெரியாத கதைக்களம், நிலம், பண்பாடு போன்றவை. அவை அனைத்தையும் கடந்து எவ்வாறு வாசிக்க வேண்டும், எவ்வாறு தொகுத்துக் கொள்ளவேண்டும் என்பதை தொடர்ந்து வந்த கூடுகையில் தெரிந்து கொண்டேன். அப்பயணம் ஒரு அறிவார்ந்த பாதையாக இருந்தது. அதில் அடுத்த கட்ட நகர்வாக கருத்தரங்கம் ஒன்றில் ஒரு இருபது நிமிட உரையை ஆற்ற வாய்ப்பு கிடைத்தது என் வாசிப்பை இன்னமும் விரிவாக்கியது. அக்கருத்தரங்கிற்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டது பதட்டத்துடன் கூடிய ஒரு இனிய அனுபவமாக இருந்தது.

சொல்முகம் 50ஐ கொண்டாடும் அதே நேரத்தில், இந்த அறிவுப்பாதையில் தொடர்ந்து பயணிக்க மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். இதுநாள் வரை வாசித்த நாவல்களின் மூலமாக வெவ்வேறு நிலப்பரப்பு, கதைமாந்தர்கள், கதைச்சம்பவங்கள், தத்துவங்கள் ஆகியவற்றை காட்டிய மிக நீண்ட ஆசிரியர் நிரையை வணங்குகிறேன்.

இந்த தொடர்வாசிப்பு மற்றும் கலந்துரையாடலை சாத்தியமாக்கிய சொல்முகம் வாசகர் குழுமம், இதை வாசகர் குழுமம் என்பதைவிட நண்பர்கள் குழுமம் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அருணாதேவி,

கோவை.

சொல்முகம் 50 – காளீஸ்வரன்

2019 ஜீன் மாதம் முதல் வாரம் – மூன்றாவது முறையாக, தமிழின் தலைசிறந்த இரண்டு நாவல்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினேன். இதற்கு முன்பாக எடுத்த இரண்டு முறையும், பத்து பக்கங்களைக் கூட படிக்க முடியாமல் மூடிவைத்த அனுபவம் தந்த தயக்கம் ஒருபுறம். மறுபுறம், இம்முறை படித்தே ஆகவேண்டும் என்ற ஒரு உந்துதல். இத்தனைக்கும் தமிழின் ஆகச்சிறந்த செவ்வியல் நாவல்கள் என போடப்படும் பெரும்பான்மையான பட்டியல்களில் இவ்விரு நாவல்களுக்கும் இடமுண்டு. பல வருடங்களுக்கு முன்னரே வாங்கியிருந்த போதும், படிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்த போதும் அப்புத்தகம் கோரிய உழைப்பை / கவனத்தை தரமுடியாமல் இவ்வளவு நாட்களாக படிக்கமுடியாதிருந்த அப்புத்தகத்தை, இம்முறை வாசித்து முடித்தேன். அதற்கு முக்கியமான காரணம் “சொல்முகம் வாசகர் வட்டம்”. அந்தப் புத்தகம், திரு.ப.சிங்காரம் அவர்கள் எழுதிய “புயலிலே ஒரு தோணி” மற்றும் “கடலுக்கு அப்பால்” ஆகிய இரண்டு நாவல்களைக் கொண்டது.

அந்த நாவல்கள் மட்டுமல்லாது, தொடர்ந்து தமிழிலும், இந்திய மொழிகளிலும், உலக அளவிலும் வெளிவந்த பல செவ்வியல் நாவல்களை நான் வாசித்ததற்கு சொல்முகம் வாசகர் வட்டம்தான் காரணம். இதுவரை நடைபெற்ற 50 கூடுகைகைகளில், கலந்துரையாடிய பெரும்பாலான புத்தகங்களை வாசித்தே தீரவேண்டும் என்கின்ற கட்டாயமே, என்னுடைய துவக்க கால தயக்கத்தை, கடினமான புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படக்கூடிய சலிப்பை வெல்லப் போதுமானதாக இருந்தது. சொல்முகம் கூடுகைகளுக்குப் பிறகு, எந்தவொரு கடினமான புத்தகத்தையும் இறுதிவரை வாசிப்பதற்கான உழைப்பை, கவனத்தை தருவதில் என்னிடம் ஒரு மாற்றத்தை நான் உணர்கின்றேன். தனிப்பட்ட முறையில், என்னுடைய வாசிப்பில், இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். 

இரண்டாவதாக, எந்தவொரு புத்தகத்துக்குள்ளும் சாத்தியப்படக்கூடிய நமக்கான தனிப்பிரதி எனும் அம்சம். ஒரு நாவலைப் பற்றி ஒரு வாசகர் அவரின் கருத்துக்களை முன்வைக்குந்தோறும், அந்தக் கருத்தை ஒட்டி, சொல்வதற்க்கும் பகிர்வதற்குமான எண்ணங்கள், ஒவ்வொரு கருத்திலிருந்தும் தொட்டு தொட்டு விரிவடைந்த அனுபவங்கள் என கலந்துரையாடல்களின் அதிகபட்ச சாத்தியக்கூறுகளை கண்ணுற்றோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நேரமாகிவிட்டது என்பதால் மட்டுமே கலந்துரையாடலை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குத் தீவிரமான உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றின் விளைவாக, அடுத்தடுத்த நாவல்கள் வாசிக்கும் போது சென்ற நாவலில் கவனிக்க மறந்த அம்சங்கள், மறைந்திருந்த விசயங்கள், இயல்பாக மேலேழுந்து வந்தன. போலவே, ஒரு செவ்வியல் நாவல், அதன் சில கூறுகள் மற்றொரு செவ்வியல் நாவலை நினைவூட்டும் அம்சம். சில சந்தர்ப்பங்களில் நாவலின் பேசுபொருளில் கூட வலுவான ஒப்புமையைக் காண முடிந்தது. மொழியோ, பிராந்தியமோ இந்தப் பொதுவான பேசுபொருள் எனும் அம்சத்துக்கு தடையாக இருப்பதில்லை என்பதும், செவ்வியல் என்பதன் முக்கியமான அம்சமே காலமோ, தேசமோ எல்லைகளை கடந்தது (எல்லோருக்கும், எப்போதைக்கும்) என்பதும் கலந்துரையாடல்கள் மூலம் மீண்டும் நிரூபணமானது.

மூன்றாவதும் மிகவும் முக்கியமானதுமான விசயம், ஒரு நாவலைப் படித்து அதிலிருந்து நாம் பெற்றுக்கொண்டவற்றை ஒரு கலந்துரையாடலில் முன்வைக்கக்கூடிய திறன். இயல்பாகவே என்னுள் இருக்கக்கூடிய ஒரு தயக்கத்தைக் கடந்து கருத்துக்களை முன்வைப்பதில் சொல்முகம் கூடுகைகள் பெரும் பங்காற்றின. இறுக்கமில்லாத நட்பு சார்ந்த கூடுகைகள் அளிக்கும் ஆசுவாசம்தான் இதற்குக் காரணம். கலந்துரையாடல்களின் எண்ணிக்கை கூடக் கூட, என்னுடைய கருத்துக்களை முன்வைப்பதில் இருக்கும் நம்பிக்கையும் கூடிவந்ததை என்னால் கண்கூடாக உணரமுடிந்தது. 

ஆரம்பகால கூடுகைகளில் விவாதிக்கப்பட்ட பெரும்பாலான நாவல்களைக் குறித்த எண்ணங்களை ஒவ்வொருவரும் கட்டுரையாக எழுதி அனுப்பி அது சொல்முகம் வாசகர் வட்ட வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகள், அந்நாவலை அதன் முக்கியமான கூறுகளை முன்வைத்து எழுதப்பட்டவை மட்டுமல்லாது வாசகர்களின் தனிப்பட்ட அறிதல்களையும் உள்ளடக்கியவை. துவக்க காலத்தில் விவாதிக்கப்பட்ட பெரும்பாலான செவ்வியல் நாவல்கள், பொதுவெளியில் அரிதாக விவாதிக்கப்பட்டவை என்பதால், ஒருவகையில் அந்நாவல்கள் குறித்த சொல்முகம் கட்டுரைகள் பெரும் முக்கியத்துவம் பெருகின்றன.

சொல்முகம் வாசகர் வட்டத்தின் கருத்தரங்கங்கள் வாசிப்பின் மற்றொரு எல்லையை நான் புரிந்துகொள்ள வழிவகுத்தன. ஒரு படைப்பாளியின் அத்தனை படைப்புகளையும் வாசிப்பது. அப்படைப்புகள் குறித்த தன் எண்ணவோட்டங்களை இருபது நிமிட சிற்றுரையாக கருத்தரங்கத்தில் நிகழ்த்துவது. அவ்வாறாக ஒரு படைப்பாளியைப் பற்றி, அவரது படைப்புகளைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் அந்தக் கருத்தரங்கத்தின் முடிவில் நமக்குக் கிடைக்கின்றது. இக்கருத்தரங்கங்களில் அப்படைப்பாளிகளும் இருப்பதும், வாசகர்களின் உரைகள் மீதான மேலதிக தகவல்களை தங்கள் ஏற்புரையில் குறிப்பிடுவதும் முக்கியமான அம்சங்கள். ஒரு சம்பிரதாயமான ஏற்புரையாக இல்லாமல், ஒரு படைப்பு உருவான விதம், அது எழுதப்பட்ட காலகட்டத்திய மனவோட்டம், இன்று எழுதப்பட்டால் அதில் தான் செய்ய விரும்பும் மாற்றங்கள் என படைப்பாளிகளின் ஏற்புரையும் வாசகனுக்கான பெரும் அறிதல்களை உள்ளடக்கியவையாக இருந்தன.

தனிப்பட்ட முறையில் என்னுள் நான் உணர்ந்த மாற்றங்களுக்கிணையாகவே சொல்முகம் குழுமத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் மாதத்துக்கு மாதம் மேம்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. கருத்துக்களை முன்வைப்பதில், மறுப்பதில், மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்வதில் என எல்லாவற்றிலும் ஒரு நேர்மறை அணுகுமுறையே அனைவராலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு உரையாடலிலும் எவருக்கும் தனிப்பட்ட முறையில் கசப்பான ஒரு அனுபவம் கூட ஏற்பட்டதில்லை என்பதே அதற்குச் சான்றாகும். அதுவே, இக்கூடுகைக்கு தொடர்ந்து வரும் வாசகர்கள் மத்தியில் இலக்கியத்தை முன்வைத்தும் அதைத் தாண்டியும் ஒரு நல்ல நட்புறவு நிலவுவதன் சாரமாகும். கருத்தின் மீது வைக்கப்படும் விமர்சனத்தின் சாராம்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அடுத்தடுத்த கூடுகைகளின் உரையாடல்களில் வெளிப்படுகின்றது. 

வாசிப்பின்பம் என்பதைப் போலவே சக வாசகர்களுடன் பகிர்தலில் இருக்கக்கூடிய நிறைவை “கோவை சொல்முகம் வாசகர் வட்டம்” உணரவைத்தது.

சம்ஸ்காரா வாசிப்பு – மீனாம்பிகை

மாத்வ மடத்தின் அதிகாரத்திலிருக்கும் ஒரு அக்ரஹாரம். அதில் தன்னை சார்வாகன் என்று அறிவித்துக்கொண்டு மதுவும் மாமிசமும் உட்கொண்டு சந்திரி என்கிற தாசியையும் அதே அக்ரஹாரத்தில் கொண்டு வைத்திருந்த நாரணப்பாவின் இறப்பிலிருந்து துவங்குகிறது நாவல். 

ஆசாரங்களையும் நெறிகளையும் கடைபிடித்து அதை மற்றவர்களுக்கும் போதிக்கும் இடத்தில் பிராணேஸாச்சாரியார் இருக்கிறார். நாரணப்பா பிராமண நெறிகளின்படி வாழவில்லை எனினும் பிராமணியத்திலிருந்து விலக்கி வைக்கப்படவில்லை. எனவே பிராமணனுக்கான எரியூட்டலே நிகழவேண்டும் என்று அவர் சொல்கிறார். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லாததால் அவனுடைய சடலத்தை எவர் எரியூட்டுவது எனும் சிக்கல் எழுகிறது. சந்திரி தனது நகைகளை  தகனச்செலவிற்கு எடுத்துக்கொள்ளுமாறு அளிக்கும்போது அந்த நகையின் மீது ஆசையும் அதே நேரத்தில் அது வெளிப்படக்கூடாதென்றும் அடுத்தவனுக்கும் அது கிடைக்கக்கூடாதென்ற எண்ணமும் முடிவுகளைக் குழப்புகிறது. 

பல்வேறு தர்க்கங்களில் வென்று பண்டிதன் என்று பெயரெடுத்திருந்த பிராணேஸாச்சாரியார் சாஸ்திரங்களின்படி இதற்கொரு முடிவு சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். சுவடிகளை ஆராய்ந்து அதில் தீர்வு காண இயலாத பிராணேஸாச்சாரியார் மடத்தில் சென்று கேட்பது தன் பெருமைக்கு இழுக்கு என்று நினைக்கிறார். அக்ரஹாரத்தில் பிணம் இருக்கும் வரையில் எவரும் உணவு உண்ண முடியாது.   அவர் வணங்கும் மாருதியிடம் உபவாசமிருந்து பதில் கேட்க செல்கிறார். அங்கு எதுவும் நிகழாததால் மனமுடைந்து வரும் வழியில் அவரை வணங்கும் சந்திரியிடம்  தன்னை மீறி உறவு கொள்கிறார். 

நாரணப்பாவுடன் இருந்த சந்திரிக்கு குழந்தை இல்லை. தன் குல வழக்கப்படி ஞானியான பிராணேஸாச்சாரியாரின் மூலமாக தனக்கு ஒரு வாரிசு அமைய வேண்டும் என்று விரும்புகிறாள். அது நிகழும் சந்தர்ப்பத்தில் அவள் அவரை முழுதேற்கிறாள். சந்திரியை அடைந்த பின் இல்லம் செல்லும் பிராணேஸாச்சாரியர் அதை தன் குலத்துக்கு அறிவித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவர்மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பை இழக்க அவரால் இயலவில்லை. நாரணப்பாவுக்கும் தனக்கும் நிகழ்ந்த உரையாடல்களை மீண்டும் மீண்டும் நினைவு கூர்கிறார். 

சிறுவயதிலேயே நோயாளியான மனைவியை தன் காம ஒறுப்பு நோன்பிற்கு துணையாக இருக்குமென்று எண்ணியே மணக்கிறார். சந்திரியை அடைந்த பின் அவளது இயலாமையும் அவலட்சணத்தையும் அவர் உணர்கிறார்.  காளிதாசனின் வர்ணனைகளை அவர் சொல்லக்கேட்டு உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு அக்ரஹாரத்தில் ஒருவன் புலையப்பெண்ணுடன் கூடுகிறான். சந்திரியை அடையும் வரை பிராணேஸாச்சாரியருக்கு தான் போதித்த அனைத்தும் வெற்று வார்த்தைகளாகவே தெரிகின்றன. 

தன்னுள்ளிருக்கும் நாரணப்பாவை சந்திரியை அடைவதன் மூலமாக பிராணேஸாச்சாரியார் கண்டு கொள்கிறார். நாரணப்பா இறப்பின்போது நாராயணனை விளித்ததை சந்திரி சொல்கிறார்.  நாரணப்பாவின் நண்பர்கள் இருக்கும் பக்கத்து ஊருக்குச் சென்று தகனத்துக்கான உதவி கேட்கிறார்கள். அவர்கள் ஸ்மார்த்தர்கள் என்றும் மாத்வர்களைவிட மதிப்பு குறைந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

பின் அவர்களது உதவியையும் ஏற்க முடியாமல் திரும்புபவர்களிடம் அவர்களையே மடத்திற்குச் சென்று வழி கேட்கும்படி பிராணேஸாச்சாரியார் சொல்கிறார். இதற்கிடையில் பிராணேஸாச்சாரியாரின் மனைவி நோய்வாய்ப்பட்டு இறக்கிறாள். அவளது தகனம் முடிந்தபின் அங்கிருந்தே பிராணேஸாச்சாரியார் ஊரைவிட்டு செல்கிறார். 

நாரணப்பாவின் ஸ்நேகிதன் அவனைச் சந்திக்க வருகிறான். எலிகள் செத்துவிழுந்து நாரணப்பாவும் இறந்துகிடப்பதைக்கண்டு அலறி ஓடுகிறான். அக்ரஹாரத்தில் வசிக்கும் விதவையான லக்ஷ்மியம்மா அவனை பேய் என்று எண்ணி அலறுகிறாள்.

ஊர் முழுவதிலும் புலைச்சேரியிலும் எலிகள் பெருகி இறந்து கிடக்கின்றன.  அவற்றை உண்ண பிணந்தின்னி  கழுகுகள் வந்து சேர்கின்றன.  காகங்களை விரட்டும் கழுகுகள். மணியும் சேகண்டியும் அடித்து கழுகுகளை விரட்டும் அக்ரஹாரம். ஒரு பெருந்தொற்று தங்களை வந்து சேர்ந்ததை அறியாமல் இறந்தவர்களை குடும்பமாக குடிசையோடு எரிக்கிறது புலை சேரி. 

நாரணப்பாவின் நாறும் பிணத்தை அவனது நண்பர்களான சில முஸல்மான்களைக்கொண்டு சந்திரி எரித்துவிடுகிறாள். பின் தன் ஊருக்கு சென்றுவிடுகிறாள். 

ஊர்முழுவதையும் வெளியேற்றியபின் மடத்துக்குச் சென்றவர்கள் இரண்டு இடங்களில் தங்கி மூவரை காய்ச்சல் கொண்டதனால் விட்டு விட்டு தகனத்துக்கான ஒப்புதலுடனும் நாரணப்பாவின் சொத்தை மடத்திற்கு கொடுக்கும்படியான உத்தரவையும் பெற்று சென்றவர்கள் மீள்கிறார்கள். நாரணப்பாவின் சடலத்தை எரிக்கத் தேவையான விறகுடன் அவன் வீட்டு வாசலில் பிராணேஸாச்சாரியாருக்காக காத்திருக்கிறார்கள். 

பக்கத்து ஊரிலுள்ளவர்கள் இவ்வூரின் இறப்புகளையும் சிவமொக்கேயிலிருந்து பரவிய பிளேக்கையும் அறிந்து குணப்படுத்த மருத்துவ உதவி தேடிச்செல்கிறார்கள். 

ஊரை விட்டு சென்ற பிராணேஸாச்சாரியார் வழியில் புட்டா எனும் சம்சாரியுடன் பயணிக்க நேர்கிறது. அன்றாட இன்பங்களின் எல்லைகளில் திளைத்திருக்கும் புட்டாவுடன் அந்த சந்தையில் சென்று சேர்கிறார் பிராணேஸாச்சாரியார். 

சந்திரியை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பிராணேஸாச்சாரியார் அவளுடனான ஒரு வாழ்க்கையை தான் வாழ முடியுமா என்று கேட்டுக்கொள்கிறார். சேவல் சண்டையை காணும்போது அது அவளுடனான வாழ்க்கையின் ஒரு பகுதி என்று எண்ணுகிறார். 

தன் சிறுவயது தோழனான மஹாபலன் அனைத்து கல்விகளையும் புறந்தள்ளி காசியில் ஒரு தாசியுடன் வாழும் வாழ்க்கையை தேர்ந்ததை எண்ணிப்பார்க்கிறார். சந்தையில் நிகழும் சேவல் சண்டையை பார்க்கும்போது சந்திரியுடனான வாழ்க்கை அதைப்போன்ற அசுர வாழ்க்கையாகவே இருக்க முடியும் என்று எண்ணிக்கொள்கிறார். 

புட்டாவை விட்டு விலக இயலாமல் அவன் போக்கில் உடன் செல்லும் பிராணேஸாச்சாரியார் அவனுடன் ஒரு பூக்கட்டிப்பெண் வீட்டுக்கும் செல்கிறார். உணவுக்குப்பின் வருவதாகச் சொல்லி கோயிலில் உணவருந்தச் செல்லும் அவர் மனைவி இறந்த தீட்டு கழியாமல் கோவிலில் உணவருந்த அமரும் தன்னை எவரேனும் அடையாளம் கண்டுவிடுவார்கள் என்று அஞ்சுகிறார். அடையாளம் காணப்படும்போது அங்கிருந்து விலகி வந்து மீண்டும் புட்டாவிடமே வந்து சேர்கிறார். 

முழுவதும் நெறிகளின் படி மட்டுமே வாழ்ந்தவரும் அதற்காக பெருமை கொண்டிருந்தவருமான பிராணேஸாச்சாரியார் கொண்டிருந்தது அனைத்தின் மீதும் ஒரு பக்தி பாவம் மட்டுமே. அறிந்து கடந்தது அல்ல, கற்றதை ஏற்றது மட்டுமே. நாரணப்பா அவருடனான உரையாடல்களில் வெளிப்படுத்தியது அதையே. கலையில் இன்பத்தில் காமத்தில் திளைக்கும் நாரணப்பா அதை எவ்வகையிலும் மறைக்கவில்லை. காண்பதே உண்மை, அடைவதே இன்பம் என்றும் சார்வாகன் என்றும் தன்னை அறிவித்துக்கொள்கிறான். கலை என்பது இறைவனை அடைவதற்கே என்று விருப்புகளை ஒடுக்கி வாழும் ப்ராணேஸாச்சாரியார் தன் பிறழ்தலை ஒப்புக்கொள்ளவே தயங்குகிறார். தான் ஞானவான் என்ற பிம்பத்தின் காவலனாகவே பிராணேஸாச்சாரியார் இருக்கிறார். 

தற்செயலாக அடைய நேர்ந்த ஒரு இன்பம் முற்றாக பிறிதொரு வாழ்க்கைக்கான விழைவென உருவெடுக்கிறது. அதுகாறும் அவர் கைக்கொண்டிருந்த அத்தனை சாத்திரங்களுக்கும் மேலாக ஒரு அனுபவம் எழுந்து வருகிறது. அந்த அனுபவத்திற்குப்பிறகு அப்படி ஒரு வாழ்க்கையை தன்னால் வாழ்ந்துவிட முடியுமா என்ற கேள்விதான் சந்தையில் புட்டப்பாவுடன் அலையும் முழு நேரமும் பிராணேஸாச்சாரியார் கேட்டுக்கொள்வது. இறுதியில் அப்படி ஒரு வாழ்க்கையை முழுதேற்க இயலாதென்றோ அல்லது தன் வாழ்க்கையை மீண்டும் கற்று வாழ்வதற்கென்றோ தன் ஊர் திரும்புகிறார் பிராணேஸாச்சாரியார். அதன் இறுதி முடிவுக்கான குறிப்புகள் எதுவும் ஆசிரியரால் கொடுக்கப்படவில்லை. 

நெறிகளின் படி வாழ்ந்து பரமாத்மாவின் பாதங்களை அடையும்படி போதிக்கிறது மாத்வ தத்துவமான த்வைதம். நெறிகளின் படி வாழும் பிராணேஸாச்சாரியர் நெறிகளை மீறி வாழும் நாரணப்பா, மஹா பலன் இவர்களுக்கிடையேயான மதிப்பீட்டை நாவல் முன்வைப்பதாக நான் காண்கிறேன். அத்வைதத்தை நெறியாகக் கொண்ட மற்ற தெய்வங்களை வணங்கும் ஸ்மார்த்தர்கள் ஒரு படி கீழாகவே பார்க்கப்படுகிறார்கள். இவர்களுடனான தத்துவ உரையாடல் எதுவும் நாவலுக்குள் இல்லை. மேலும் நெறிகளை மட்டும் கடைபிடித்து அதனால் வைராக்கியம் கொண்டு தன்னை மேல்நிலைக்கு ஏற்றிக்கொள்வது அனேகமாக சாத்தியம் இல்லை என்றும் இந்நாவல் வாதிடுவதாக நான் கருதுகிறேன். 

சமூக ஏற்பு மத ஏற்புக்காக ஆசாரங்களை ஒழுகி வாழும் ஒரு வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும் நாவல் என்றே சம்ஸ்காராவை நான் நினைக்கிறேன். இன்று சமூக ஏற்பு  ஆசாரங்களை கைக்கொள்ளுதல் மத ஏற்பு போன்ற  தேவைகள் இரண்டாம் பட்சமாக அமைந்துவிட்ட சமூக சூழ்நிலையில் இந்நாவலின் பேசுபொருள் காலத்தால் புறந்தள்ளப்பட்ட ஒன்று என்றே எண்ணுகிறேன்.