
கருணையில் அருளப்படும் வான்மழை”கெடுப்பதூஉம்” என்று எவ்வாறு திரிபுகொள்கிறது? செங்குருதியின் மழை என பெருவெள்ளம் என. வாழ்விக்கும் ஒன்றை அழிவின் கருவியாக மாற்றியது எது? தவளையின் பாடல் எக்கணத்தில் நாகங்களைத் தருவிக்கத் தொடங்குகிறது? முதற்கனல் நாகங்களை எனில் மழைப்பாடல் தவளைகளைக் குறீயீடக்குகிறது. நீரிலும் நிலத்திலும் உரிமை கொண்டு விண்ணில் எழுகையில் நாகத்தின் வாய்க்குள் விழும் தவளை.
ஒருவேளை மகதத்துடன் இணைந்து கொண்டிருப்பின் நனவாகியிருக்கக் கூடிய காந்தாரத்து சகுனியின் பாரதப்பெருநிலம் கொள்ளும் பெருங்கனவு இளவரசன் பிருகத்ரதனின் செய்தியுடன் வரும் ”சுகோணன்” என்னும் பருந்தை அவரே அறியாமல் அம்பெய்து வீழ்த்திவிடும் – அது ஓநாய்க்கு உணவாகவும் ஆகிவிடும் ஊழால் திரிந்துவிடுகிறது.
சத்தியவதி தன் பெருங்கனவிற்கு என மகற்கொடை வாயிலாக விழைந்த காந்தார உறவென்னும் விசை பின்னர் அவருக்கே அச்சமூட்டுகிறது. சகுனியைக் கண்டு அஞ்சுகிறார் சத்தியவதி. பிழை இழைத்துவிட்டதாக அவர் கருதும் நேரம் அந்த விசையை சமன் செய்ய அதனை விஞ்சும் எதிர்பக்க விசையாக சகுனியே அஞ்சும் ஒருவராக எழுகிறார் குந்தி.
சத்தியவதியின் சகுனியின் பெருங்கனவிற்காக என அல்லாமல் பீஷ்மரும் காந்தாரியும் கொள்ளும் கனிவினால் ஏற்படுகிறது அஸ்தினபுரிக்கும் காந்தாரத்துக்குமான உறவு. அவ்வாறல்லாமல் பெருவிழைவுடன் துவக்கம் முதலே திட்டமிட்டு அனைத்தையும் வெற்றிகரமாக நிகழ்த்தும் அச்சமூட்டும் அரசியல் சூழ்மதியாளராகத் திகழ்கிறார் மழைப்பாடலின் குந்தி.
கம்சனின் வீரர்களிடம் இருந்து தப்புவது, தன் சுயம்வரத்தின் போட்டியை தான் பாண்டுவை மணம்புரியும் வகையில் அமைப்பது பாண்டுவுடன் கான் வாழ்வில் இருக்கும்போதும் அஸ்தினபுரியில் அரசியல் ஆடல்புரிந்துகொண்டிருப்பது பாண்டவர்களின் பிறப்பை வகுப்பது பீமனின் பிறவிக் கணத்தைத் திரிப்பது என ஒவ்வொன்றிலும் முற்றும் அரசியலாளராகவே இருக்கிறார். ஒருவகையில் குந்தி இல்லாவிட்டால் சகுனியை கொண்டுவந்ததன் பொருட்டு சத்தியவதி கொண்டிருக்கக்கூடிய பெரும் குற்றவுணர்ச்சியிலிருந்து அவரை குந்திதான் காப்பாற்றுகிறார்.
பாண்டுவின் மரணத்தினால் தம் பகை என்னும் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறார்கள் அம்பிகையும் அம்பாலிகையும். அவர்கள் நாடு நீங்க அவர்களுக்கு அக்கனவை கைளித்திருந்த சத்தியவதியும் அவர்களுடன் இணைந்துகொள்கிறார். சத்தியவதியும் விழித்துக்கொண்டு விட்டவர்தான் – பாண்டுவின் மரணத்தினால் அல்ல மாறாக தன் போன்றே தன்னைவிட பெருவிழைவுடன் இளம்பெண்ணான குந்தி தன் இடத்தை நிரப்ப வந்துவிட்டதனால் பெரும் கனவுகள் ஊழால் திரிபடைந்துவிட அரசியல் ஆடல்களின் அபத்தத்தை உணர்ந்து கொண்டுவிட்டதனால். சகுனி மட்டும் தன் கனவைத் தொடர்ந்து செல்ல விதிக்கப்பட்டிருக்கிறார்.
திருதராஷ்டிரனுக்காகக் கனியும் பீஷ்மர், அரியணை விழைந்தபோதும் பாண்டுவின்பால் அன்பில் உயர்ந்து நிற்கும் திருதராஷ்டிரன், அரசியல் விழைவற்ற – பேரன்பு கொண்ட தந்தை என்று நிறைவடையும் பாண்டு, மணத்தூதில் அவமதித்தவர்களிடமும் பெருந்தன்மை காட்டும் – திருதராஷ்டிரனின் உலகில் தன்னை இணைத்துக்கொள்ளும் காந்தாரி, தன்முனைப்பு இல்லாமல் முற்றும் குந்திக்கு பணியும் மாத்ரி எனப் ஒருபுறம் சிறுமைகளில்லாதவர்கள் இருக்க அவர்களின் திசைகளை தம் பெருவிழைகளின் பொருட்டு அமைக்க முயல்பவர்களாக இருக்கிறார்கள் சத்தியவதியும் சகுனியும் குந்தியும். மூன்றாம் பெருவிசையாக மாமனிதர்களை திசை பெயர்க்கும் பெருவிழைவுகளை தன்போக்கில் திசை பெயர்க்கும் பணியைத் துவக்குகிறது ஊழ்.