ஆறாவது வார்டு வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

மனநோயாளிகள் மற்றும் நரம்பு நோயாளிகளின் மனம் மிக மிக ஆற்றல் கொண்டது. ஏனென்றால் அதற்கு பரவலும் சிதறலும் இல்லை. மிகவும் குவிதல் கொண்டது அது. மாபெரும் யோகிகளுக்குரிய குவிதல். ஒன்றிலேயே ஒற்றைப் புள்ளியிலேயே அது பல மாதங்கள், ஏன் பற்பல ஆண்டுகள் நிலைகொள்ளும். அலைபாயும் தன்மைகொண்ட சாதாரண மனங்கள் அந்த ஆற்றலை எதிர்கொள்ளவே முடியாது. அவை மனநோயாளியின் மனங்களுக்கு முன் அடிபணிந்துவிடுவதே வழக்கம்” 

–.திரு.ஜெயமோகன். (”ஓநாயின் மூக்கு” சிறுகதையில்)

*

பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளில், ரஷ்யாவில் கடும் கொள்ளை நோயாகப் பரவிய காலராவைக் கட்டுப்படுத்த பல மருத்துவர்கள் பெருமுயற்சி எடுத்தனர். அரசாங்கத்திடமிருந்து, போதுமான உபகரணங்களோ அல்லது பண உதவியோ கிடைக்கப் பெறாத போதும், தன்னுடைய சொந்தப் பணத்தை, சொத்துக்களைக் கொண்டு கடமையாற்றிய பல மருத்துவர்களுல் ஒருவர் அந்தோன் செகாவ். மற்ற மருத்துவர்களின் பெயரை நாம் அறியாதபோதும் செகாவின் பெயர் நமக்குத் தெரியக் காரணம் அவர் ”காக்கும்” மருத்துவர் மட்டுமல்ல, “படைக்கும்” கலைஞனும் கூட என்பதே. செகாவ்வைப் போல தன்னால் சிறுகதை எழுதமுடியவில்லையே என தல்ஸ்தோய் வருந்துமளவுக்கு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் செகாவ். அவரது முக்கியமான கதைகளுல் ஒன்று என “ஆறாவது வார்டு” எனும் குறுநாவலைச் சொல்லலாம்.

*

ருஷ்ய ஆட்சி மன்றமான “சேம்ஸ்த்வோ”வினால் நடத்தப்படுகிறது ஒரு மருத்துவமனை. அரசு / ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளுக்கே உண்டான அலட்சியங்களிலும் அரைகுறை வசதிகளாலும் நிரம்பிய மருத்துவமனைக்கு மருத்துவராக வருகிறார் டாக்டர் ஆந்திரேய் எமீபிச். அம்மருத்துவமனையின் ஆறாவது வார்டில், இருக்கும் மனநோயாளிகளுடனான அவரது உறவும், அது அவரது வாழ்வில் நிகழ்த்தும் சிக்கல்களுமே இக்கதை. 

ஆறாவது வார்டில் இருக்கும் ஐந்து நோயாளிகளில் இவான் மிகவும் தனித்துவமானவர். நல்ல வாசிப்பும், கூடவே பொறுப்புடன் தன் கடமையை ஆற்றிவரும் வாழ்க்கையும் அமைந்த இவானுக்கு, “தன்னை காவலர்கள் கைது செய்யப்போகிறார்கள்” என விபரீத எண்ணம் தோன்றுகிறது. தொடரும் அவ்வெண்ணத்தின் சிக்கல்களால் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்படுகிறான் இவான். ஆனால், காப்பகத்தில் இருப்பவர்களிலேயே வெகு தெளிவுடன் சிந்திப்பவனாகவும் அவனே இருக்கிறான். மறுபுறம் மருத்துவமனை செயல்படும் விதத்தில் கடும் அதிருப்தி இருந்தபோதும் தன் எல்லைக்குட்பட்டு, தன்னால் இயன்ற மருத்துவத்தை செய்ய முற்படுகிறார் டாக்டர் ஆந்திரேய் எபீமிச். தற்செயலாக இவானுடனான துவங்கும் ஒரு உரையாடல், எபீமிச்சுக்குள் பலவித கேள்விகளை எழுப்புகிறது. இவானுடனான தொடர் உரையாடல்களும், மருத்துவமனையின் அமைப்புக்குள் பொருந்திப்போகாத எபீமிச்சின் இயல்பும், அலைக்கழிக்கும் கேள்விகளால் தடுமாற்றத்துக்கு உள்ளாகும் அவருடைய நடவடிக்கைகளும் என எல்லாமும் சேர்ந்து கொள்ள, ஒரு கட்டத்தில் மருத்துவர் எபீமிச், மன நோயாளி எனகருதப்பட்டு அடைக்கப்படுகிறார். மீள முடியாத ஒரு கூண்டாக அம்மருத்துவமனை அவருக்கு அமைந்து விட, எபீமிச்சின் மரணத்தில் முடிகிறது “ஆறாவது வார்டு”.

*

எந்த வாழ்க்கையிலும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்வதற்கு வாய்ப்புள்ள ஒரு இடமாகவே ஆறாவது வார்டைக் கருத முடிகிறது.  மிக மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நாம் வாழ விதிக்கப்பட்டிருப்பதும், திரும்பத் திரும்ப நம்மை அலைக்கழிக்கும் கேள்விகள் நம்முன் எழாதிருப்பதும், அல்லது நாம் அதைக் காண மறுப்பதும், குற்றவுணர்வின் சாயல் கொஞ்சமும் இன்றி நம்மால் ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமான கழிக்க முடிவதும், முற்றிலும் தற்செயலான ஒன்றாகவே அமைந்திருக்க வாய்ப்புள்ளதுதானே. அப்படிப்பட்ட ஒரு நல்வாய்ப்பைத் தவற விட்டவன் என்றுதான் இவானைக் கருதத் தோன்றுகிறது. இயல்பானது என நாம் வரையறுத்து வைத்திருக்கும் உலகில் இவானுக்கு வாய்க்காத தெளிவு, ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. ஆனால், அங்குமே அது ஊரோடு ஒத்து வாழாத குணமாகவே கருதப்படுகிறது. மருத்துவர் எபீமிச்சுடனாக ஆரம்ப உரையாடல்களில், வெளிப்படும் இவானின் அகம் அவனை ஒரு லட்சிய மனிதன் என்று எண்ணவைக்கிறது. அவனது லட்சிய நோக்குக்கு பதிலாக எபீமிச்சினால் கூற முடிந்ததெல்லாம் நடைமுறை வாழ்க்கை சார்ந்த நெறிகளும், உலகியல் தத்துவங்களும் மட்டுமே. தன்னுடைய சக நோயாளியாக எபீமிச் ஆனதும், தனக்கு அருளப்பட்ட தத்துவங்களை இவான் நினைவூட்டும் விதம் அருமை.

அருமை நண்பரே, உள்ளம் குலைந்துவிட்டேன் – எபீமிச் 

தத்துவ ஞானம் பேசிப்பார்ப்பதுதானே – இவான் 

*

இவானிடம் எபீமிச் பேசும் நடைமுறை வாதங்கள் அனைத்துமே தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளத்தான். முற்றிலும் லட்சிய வேட்கையில் மூழ்க முடியாமல், அதே சமயம் பிழைப்புவாதியாகவும் வாழ முடியாமல் எபீமிச் தடுமாறுவது, சீரழிந்த நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு அவர் வரும் துவக்க அத்தியாயங்களிலேயே காட்டப்படுகிறது. ”உலகிலுள்ள நல்லவை யாவும் ஆதியில் தீமையிலிருந்து உதித்தவையே” எனும் சமாதானம் சகித்துக்கொள்ள முடியாத நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு மட்டுமானதல்ல. ஆயிரம் சமாதானம் சொன்னபோதும் எபீமிச்சுக்கு நிதர்சனம் புரிந்துதான் இருக்கிறது. இவானுடனான ஒரு உரையாடலில் “நீங்கள் உளநோயாளியாகவும் நான் டாக்டராகவும் இருப்பதில் ஒழுக்க நெறிக்கோ தர்க்க நியாயத்துக்கோ இடமில்லை, முற்றிலும் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்தது இது” எனவும் எபீமிச் கூறுகிறார். அடிக்கடி ஆறாவது வார்டுக்கு வருவதும், வந்தாலும் சரிவர நோயாளிகளைக் கவனிக்காமல் போவதும், இவானுடனான தொடர் உரையாடல்களும், ஏற்கனவே எபீமிச் மீது காழ்ப்பில் இருப்பவர்களுக்கு, அவரது மனநிலை குறித்து சந்தேகிப்பதற்கு வசதியான காரணங்களாக அமைந்துவிடுகின்றன.

ஒரு வகையில் ஆறாவது வார்டில் தனக்கான இடத்தை எபீமிச் அவைகளே தேர்வு செய்துகொண்டதாகக் கருதவும் இடமுள்ளது. மருத்துவமனையிலோ அல்லது வெளி இடங்களிலோ யாரிடமும் எவ்வித நல்லுறவும் வாய்க்கப் பெறாதவராக காட்டப்படும் ”எபீமிச்”சின் ஒரேயொரு நண்பராக இருக்கிறார் அஞ்சலகத் தலைவரான “மிகயில் அவெரியானிச்”. எபீமிச்சின் மனநிலை மாற்றம் பற்றிய மருத்துவர்களின் அவதானிப்பை அவரிடமே கூறுபவராகவும், அம்மனநிலை மேலும் சீரழிந்து போகாமலிருக்க ஒரு ஓய்வைப் பரிந்துரைப்பவராகவும் “மிகயில் அவெரியானிச்” அமைவது எபீமிச்சுக்கும் அவருக்குமான நட்புபின் சான்று. ஆனால், மாலை நேரங்களில் செறிவான உரையாடல்கள், சேர்ந்து அருந்தும் பியர்கள் என வளர்ந்து வந்த அந்த நட்பும் கூட இவானுடனான சகவாசத்தால் தடைபட்டுவிடுவது எபீமிச் மிக விரைவாக ஆறாவது வார்டை அடைய ஒரு காரணமாக அமைகிறது. மருத்துவமனைச் சுழலில் ஒட்டாமலிருக்கும் எபீமீச் ஒரு பக்கம் என்றால் அதற்கிணையான இன்னொரு பக்கம் நோயாளிகளின் வார்டில் கூட தனித்தே தெரியும் இவான்னுடையது. உண்மையில் இந்நாவலில் எபீமிச் மனதார உரையாடுவது இவான் ஒருவனிடம் மட்டுமே, அவ்வகையில் “மிகயில் அவெரியானிச்”சுடனான அவரது பெரும்பான்மையான உரையாடல்கள் எபீமிச் பேச அதை “மிகயில் அவெரியானிச்” ஆமோதிப்பது என்றவகையிலேயே நின்றுவிடுகின்றன. ஒரு இணைநட்புக்கான அல்லது ஒரு சீண்டலுக்கான காலியிடம் எபீமிச்சிடம் இருந்திருக்கவும் அது இவானால் நிரப்பப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

*

இந்நாவல் வெறுமனே மன நோயாளிகளைப் பற்றியோ, மருத்துவர் எபீமிச்சைப் பற்றியோ அல்லது மனநிலை பிறழ்வுகளைப் பற்றியோ பேசுகிறது எனச் சுருக்க முடியாது. நம்முடைய சமூகம் அதன் கூட்டியல்புக்கு பொருந்திவராத மனிதர்களை பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த மனஅழுத்தம் எவ்வகையிலும் எபீமிச்சின் மன அழுத்தத்துக்குக் குறைந்ததல்ல. தன்னுடைய தரப்பு நியாயத்தை கேட்பதற்கு சுற்றம் அமைந்திராத, தன் மனது ஏற்றுக்கொள்ளும் சொற்களைக் கூறிடுவதற்கும் யாரும் இல்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட எவரும் எத்தருணத்திலும் சென்று சேரக்கூடும் இடமாக இன்னுமொரு ”ஆறாவது வார்டு”தான் இருக்கமுடியும்.

*

ஆறாவது வார்டு – குறுநாவல் – அந்தோன் செகாவ் (தமிழில்:ரா. கிருஷ்ணையா) – பாரதி புத்தகாலயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s