முதற்கனல் 2 – ஆர். ராகவேந்திரன்

தீச்  சாரல் , தழல் நீலம் ,வேங்கையின் தனிமை, அடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து ஆர். ராகவேந்திரன் ஆற்றிய சிறப்புரை:

“எதனையும் விட வேகம் கொண்டவன் என்று தன்னை ஒளி நினைத்துக் கொள்கிறது.  ஆனால்  அது தவறு. எவ்வளவு விரைவாக ஒளி சென்றாலும் தனக்கு முன்னே அங்கே சென்றடைந்து தனக்காகக் காத்துக்  கொண்டிருக்கும் இருளைக் காண்கிறது.”

டெர்ரி பிரச்சட்டின்  ரிப்பர் மேன் நாவலில்  வரும் இந்த பிரமிப்பூட்டும் வரிகளை முதற்கனலுக்கு முத்தாய்ப்பாகச் சொல்லலாம் 

 முதற்கனலின் அத்தியாயம் 27 முதல் 50 வரையிலான பகுதிகள் அம்பையின் தீப் புகுதலையும்,  பீஷ்மர், வியாசர், சிகண்டியின் நெடும் பயணங்களையும்  திருதராஷ்டிரன், பாண்டு, விதுரரின் பிறப்புகளையும் பேசுகின்றன.

சுருதி, ஸ்மிருதி, புராணங்களின் கலவையாகத் தோன்றுகிறது முதற்கனல் . சாந்தோக்கிய உபநிடத்தின் ஆப்த வாக்கியமாகிய “நீயே அது’ அக்னிவேசரால் சிகண்டிக்கு அளிக்கப் படுகிறது.  காலத்திற்கேற்ப மாறிவரும் அறங்களை எம ஸ்மிருதி , சுக்ர ஸ்ருதி  முதலாய நீதி  நூல்களை வைத்து அரசியல் – உளவியல் சிக்கல்களை   உசாவுகிறது. யயாதி  போன்ற புராணக் கதைகள் மூலம் பீஷ்மரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்கிறது. 

  குஹ்ய சிரேயஸ் ( மறைக் காப்புத் திறலோன் என்று பொருள் கொள்கிறேன்)  என்னும் கழுதைப்புலி க்ஷத்ரியர்கள்  ஒவ்வொரு குலத்திலும் உருவாகும் விதத்தைச் சொல்கிறது. வைச்வானரன் என்னும் நெருப்பு படைப்பின் உயிரின் ஆற்றலாக பிறவி தோறும் தலைமுறை தோறும் கடந்து வரும் சத்து என்பதை உணர்ந்து கொண்ட சித்ரகர்ணி- கழுதைப்புலிகள் மற்றும் வியாசர் உரையாடல் அழகிய பஞ்ச தந்திரக் கதையாக அமைகிறது.  

சாந்தோக்ய உபநிடததத்தில்  வைச்வானர வித்யை என்னும் தியான முறையை  அஸ்வபதி கைகேயன் என்னும் அரசன்   உத்தாலக  ஆருணி  முதலிய கற்றறிந்த பண்டிதர்களுக்கு உபதேசிக்கிறான். அவர்கள் தியானம் செய்யும் முறையானது பிரபஞ்சத்தின் தனித்தனியான பகுதிகளாக  கவனம் செலுத்தி வந்தது.  அனைத்தும் ஒன்றே என்னும் அறிவை அவர்களுக்கு வழங்குகிறான். வயிற்றில் உறையும் வைச்வானரன் என்னும் செரிக்கும் நெருப்பு எப்படி உணவை உடல் முழுவதும் ஆற்றலாக மாற்றித்  தருகிறதோ  அது போல இந்த அறிவும்  முழு நிறைவை வழக்கும் என்று சொல்லப்படுகிறது. 

அந்த வித்தை யின் பருவடிவமாக இந்த நெருப்பு எப்படி உண்டும் வழங்கியும் உயிர்க்குலங்களின் வழியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை இறந்து கொண்டே தத்துவம் பேசும் சித்ரகர்ணி என்னும் சிம்மம் சொல்கிறது. பெயர் வைத்தலில் அழகிய பொருத்தம் உள்ளது. க்ஷத்திரியனின் பிரதிநிதியாக குஹ்ய சிரேயஸ் ரகசியத்தின் உருவமாக இருக்கிறது. குலம் காக்கும் – குருதி கொள்ளும் ரகசியம். விநோதச் செவியன் என்று சித்ரகர்ணியை எடுத்துக் கொண்டால் ‘கேட்டலின்’ மூலம் ஞானம் பெற்றவன் அவன். வியாசரின் குடிலை வேவு பார்க்கும் போது எத்தனையோ கேட்டிருப்பான்.

அத்வைதம் தரும் அமைதி நிலையை பல்வேறு பாதைகளின் மூலமாக வியாசருக்கும் பீஷ்மருக்கும் இயற்கையும் சூதர்களும்  வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

காலத்திற்கேற்ப ஸ்மிருதிகள் மாறுவதை ஸ்வேதகேது தனது தந்தையை எதிர்த்து தாய்க்கு உதவி செய்யும் பகுதி விளக்குகிறது . சட்டம் நெகிழக்கூடிய பகுதிகளையும் அது நிகழக்கூடிய வகைகளையும் சொல்லி வைத்திருக்கிறது. 

புராணத்தின்   அலகுகளான  காவியம், கண்ணீர், வம்ச  கதை  திரண்டுள்ளன முதற்கனலில். 

பாத்திரங்களின் குண மாற்றம் இதை ஒரு தனிப் புதினமாக ஆக்குகின்றன 

ராஜோ குணத்தின் செயலூக்கத்தில் துவங்கி, பின் தமோ குணத்தில் பித்தியாக அலையும் அம்பை இறுதியில் சத்துவ குணத்தில்  நிறைகிறாள். அன்னையின் நிழலில், உண்பதே வாழ்க்கையாக துவங்கும் சிகண்டினி, பின்னர் பழி என்னும் ஒற்றை இலக்கிற்காக ரஜோ குணத்தில் நிற்கிறாள் . அம்பைக்குப் படகோட்டிய நிருதன் தூய காத்திருத்தலில் அசையாமல் படகில் இருப்பது தமோகுணமாக மயக்கும் சத்வம் தான் பின் அம்பையை விண்ணேற்றவும் ஏற்றியபின் முதல் பூசகனாகவும் உருமாறி ராஜசத்தில் சேருகிறான், பீஷ்மர் வெளித்தோற்றத்தில் ராஜசமும் உள்ளே மாறாத் தேடலில் சத்வத்திலும் உறைகிறார். சத்யவதி மட்டும் குணமாற்றமின்றி இருப்பதாகத் தோன்றுகிறது. 

சுக முனிவரும் பீஷ்மரும் தந்தைக்கு முறையே சொல்லாலும் செயலாலும் மீட்பளிக்கிறார்கள். வியாசர் அறத்தையும் சந்தனு இன்பத்தையும் மகன்களிடம் கொடையாகப் பெறுகிறார்கள். 

யயாதி கதை பீஷ்மருக்கு சொல்லப் படுகிறது. ராஜாஜியின் யயாதியிலிருந்து வெண்முரசின் யயாதி வேறுபாடும் இடம் சிறப்பானது. கால மாற்றத்திற்கேற்ப யதார்த்தமானது. “வியாசர் விருந்தில் ” இச்சையை அடைந்து தணிப்பது என்பது நெருப்பை நெய் விட்டு அணைக்க முயல்வது போன்றது ” என்ற அறிவைப் பெற்று விடுகிறான். முதற்கனலில் வரும் யயாதி மகனுக்கு இளமையை அளித்து விண்ணேகிய பின்னும் அகந்தையால் வீழ்த்தப்படும் யயாதியாக நெருப்பிலும் பயன் பெற உரிமை இன்றி, தனது மகளைக் கண்ட கனிவில் முழுமை அடைகிறான் 

பீஷ்மர் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய ஒரு வாய்ப்பை யயாதி கதை மூலம் அவருக்கு சொல்கிறார் சூதர் . 

முதற்கனல் பெண்டிரையும் ஒடுக்கப்பட்டவர்களையும்  பீடத்தில் ஏற்றுகிறது. பீஷ்மரை இழிவு செய்து பாடும் சூதர், சால்வனை தீச்சொல்லிட்டுவிட்டு, நகர் நீங்கும் சூதர், மந்திரங்கள் மூலம் அரசியரின் மனங்களை கட்டுப்படுத்தும் நாகினி, காவியமும் சீர் மொழியும் கற்றுத்தேர்ந்த சிவை போன்ற அடிமைப் பெண்கள் வரவிருக்கும் கால மாற்றத்தைக் குறிக்கிறார்கள். 

குல அறங்கள், கால அறங்கள், தேச அறங்கள் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி நிற்கும் சரடுகளின் இறுக்கத்தின் மேல்  மைய அரசின் அரியணை நிற்கிறது. க்ஷத்திரியர் ஆவதற்கு வாள்முனையும் மறைச்சொல்லும் குலங்களுக்குத் தேவைப்படுகின்றன. பிறகு புதிய போட்டியாளர் உருவாகாமல் தடுக்க வேண்டி உள்ளது 

சிறிய நிகழ்வுகளை பெரிய இயக்கங்களுடன் தொடர்புறுத்துவதே வெண்முரசின் பிரம்மாண்டம்.    

நியோக முறையில் குழந்தைகள் பிறக்கும் முன் சொல்லப் படும் கதைகள்  இதற்கு நல்ல உதாரணம். 

நூறு   பறவைகளின் நிழல்களை வீழ்த்திய திருதராஷ்ட்டிரன் என்னும் கந்தர்வன் அதே பெயரில் கண்ணில்லாதவனாக  பிறக்கிறான். அவன் பார்ப்பதெல்லாம் இருளே. அவன் தேடுவதெல்லாம் நிழலாகவே அமையப் போகின்றன . தனது குஞ்சுகளைப்  பிரிந்த ஏக்கத்தில் இறந்த சாதகப் பறவை மீண்டும் பாண்டுவாய்ப் பிறந்து மைந்தரைப் பிரியும் துயரை அடைகிறது. அறத்தின் தலைவனே விதுரனாக வருகிறான். 

வில்வித்தை பிரம்மவித்தையின் ஒரு சிறு பகுதியே என்கிறார் அக்நிவேசர். ஒவ்வொரு சிறு  அறிவும் சொல்லும் ஊழ் வரை, புடவி அளவு காலம் அளவிற்கு விரிந்த ஒன்றின் துளி என்னும் ஞானம் கதை வழியே பயணிக்கிறது. 

பிஷ்மரின் சப்த -சிந்து  சிபி நோக்கிய பயணங்கள் அவருக்கு மனவிரிவை  அளிக்கின்றன. பாலையில் காணும் விதைகளைக் கண்டு  வியக்கிறார். வானும் மண்ணும் கருணை செய்தால் வேறு ஒரு வகை காடு உருவாகி இருக்கும் என்று எண்ணுகிறார். கோடிக்கணக்கான நிகழ்தகவுகளின்  ஒரு தேர்வு தான் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்றுணரும் இடம் அதிர்ச்சி அளிப்பது      .  ஒரு வேளை  கால – நிகழ்வுகளின்  வேறு வகையான  வாய்ப்பில் அவரும் விதை முளைக்கும் சாதாரண தந்தையாகி இருந்தால், பெண்ணின் கருணை அவருக்கு கிட்டி இருந்தால் தனித்த வேங்கையின் பொறுப்புகள்  அவரிடமிருந்திருக்காது. 

தென் மதுரைச் சாத்தன் வியாசருக்கே வழி காட்டுகிறார். கருமையும் வெண்மையும் இணைந்ததே ஒளி என்கிறார் . 

 மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு ஒரு கடமையை அளித்ததில் துவங்கும் முதற்கனல் அவன் தனது வேசர நாட்டிற்கு திரும்பி வருவதுடன் நிறைகிறது, இருள் என்பது இகழப்  படவேண்டியதில்லை , தமோ குணம் முற்றும் ஒழிக்கப் படவேண்டிதில்லை என்ற அறிவை ஜனமேஜனுக்கு அளித்து பாம்பு வேள்வியை தடுத்த வெற்றியாளன் ஒரு வருடம் கழித்து நாக பஞ்சமி  அன்று தனது குலத்திற்கு வந்து தான் இன்னும் நாகன் தான் என்று அறிவிக்கிறான். 

ஆஸ்திகனால் காக்கப்பட்ட தட்சன் தட்சகியுடன் காரிருள் நீண்ட பெரு வானம் நிறைத்து இணைந்து படைப்பை நிகழ்த்துகிறான். இருள் இணைந்து ஒளியைக் குழவியாகப் பெற்றுத்  தாலாட்டுகிறது. சத்வகுணம் என்னும் முத்து ராஜசம் என்னும் சிப்பிக்குள் தாமசம் என்னும்  ஆழிருள் கடலில் பாதுகாப்பாக இருக்கிறது.  இருளற்ற ஒளியில்லை. இதுவே இந்தியாவின் அனுபவ ஞானம் . 

இருள் ஒளி இரண்டிற்கும் ஒன்றிடம் என்று அருள் தரும் ஆனந்தத்தை அடைய அனைத்திலும் ஒன்றைக் காண்பதே வழி என்கிறது முதற்கனல். பல ஆயிரம் ஆண்டுகளாக  பாரத வர்ஷம் கண்ட வாழ்வனுபவம் புல்லும் புழுவும் நம்பி வாழும் அறத்தை நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியாக முதற்கனல் எரிகிறது.

உவமைகள் / உருவகங்கள் 

1 செம்புல்  பரவிய குன்று போன்ற சிம்மம் 

2 நெல்மணி பொறுக்கும் சிறு குருவி போல அம்பாலிகையிடம் பதற்றம் இருந்தது 

3 வாய்திறந்த அரக்கக் குழந்தைகள் போல வட்ட   வடிவ இருளுடன் நின்ற செம்புப் பாத்திரங்கள் 

4  வலசைப்  பறவைகளுக்கு வானம் வழி சொல்லும் 

5  பாரத வர்ஷம் ஞானியர் கையில் கிடைத்திருக்கும் விளையாட்டுப் பாவை 

6 வந்தமரும் நாரைகள் சிறகு மடக்குவது போல பாய்  மடக்கும் நாவாய்கள் 

7 சிகண்டி கழுத்தில் குருதி வழியும் குடல் போல காந்தள் மாலை கிடந்தது 

தத்துவங்கள்  

 கருணை கொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே (சுகர் வியாசரிடம் சொல்வது) 

இசை  நுணுக்கங்கள் 

புரவிப்படை மலையிறங்கும் தாளம்.

ஆர்  ராகவேந்திரன் 

கோவை

Leave a comment