வாழ்வெனும் மாயப் புரவி – விக்ரம்

‘களவு போகும் புரவிகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சொல்முகம் – சு. வேணுகோபால் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.

நம் அன்றாட வாழ்வில் சற்று அறிந்திருக்கக் கூடிய, கேள்விப்பட்டிருக்கக் கூடிய, மேலோட்டமாக கவனித்திருக்கக் கூடிய அல்லது நம் தீவிர கவனத்தை ஈர்த்திருக்கக் கூடிய மனிதர்கள் என பலதரப்பட்டவர்களை தன் பாத்திரங்களாக உள்ளடக்கியது சு. வேணுகோபால் அவர்களின் களவு போகும் புரவிகள் சிறுகதைத் தொகுப்பு.  அப்பாத்திரங்களில் சிலராக நம்மை நாம் உணரவும் கூடும்.  தன் குழந்தையை தெருவில் மற்ற சிறுவர் சிறுமியரோடு விளையாடக்கூடாது என்று சொல்லும் அம்மா, பூங்காவில் பேருந்து நிலையங்களில் அல்லது வேறு எங்கேனும் தன் வாடிக்கையாளரை கண்டுகொள்ளும் விலைமகள், போதைப் பொருளுக்கு அடிமையாகி வேறொன்றாகி விட்ட இளைஞன், என்ன ஆனபோதும் விடாப்பிடியாக விவசாயத்தைக் காதலிக்கும் விவசாயி, மக்களிடம் எரிச்சல்படுகிற அல்லது சிரித்துக் கொண்டே தம் சக ஊழியர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே வேலை பார்க்கும் வங்கி ஊழியர்கள், காதல் திருமணம் செய்து உறவினர் தொடர்புகள் இன்றி தனித்து வாழும் இளம் தம்பதியர், காவலரின் கடுமையை எதிர்கொள்ளும் எளியவர், செம்பட்டைத் தலையுடன்  கிழிந்த அழுக்கு உடையுடன் காலில் பாலிதீன் கவர்களை செருப்பாக கட்டிக்கொண்டு கடும் வெயிலில் தனக்குத்தானே பேசிக்கொண்டு செல்லும் மனநலம் பாதிக்கப்பட பெண், உங்களுக்கு குத்துமதிப்பாக வைத்தியம் செய்யக்கூடிய பெயர் தெரிந்த டாக்டர், மனிதர்கள் மட்டுமல்ல நீங்கள் பார்த்திருக்கக் கூடிய பெரிய வேப்ப மரம், கால்நடைகள்,  என இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் வெவ்வேறு வகையினர்.  வெவ்வேறு வகையினர் எனினும் அவர்களில் பலருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமையை உணர்த்துகிறது களவு போகும் புரவிகள்.  அவர்கள் தங்கள் புரவிகளை வாழ்வின் மாயங்களுக்கு பறிகொடுத்தவர்கள்.  தம் உண்மையுடனும் தீவிரத்துடனும் மட்டுமல்லாமல் இக்கதைகள் நடையிலும் கூட தேவைக்கு ஏற்ப புரவியைப் போலேவே செல்கின்றன என்று தோன்றுகிறது.

களவு போகும் புரவி கதையில் சௌடம்மன் கோவில் திருவிழாவையொட்டிய ஒரு தொன்மைக் கதை கூறப்படுகிறது.  அரச குதிரை லாய அதிகாரியான கதிரய்யாவிடம் தன் குதிரையை இளைப்பாற்றிக் கொள்ள  ஒருநாள் மட்டும் இடம் கேட்டு வருகிறான் யதுசா என்ற அந்நியன்.  அவன் குதிரைக்கு லாயத்தில் இடம் மறுக்கும் கதிரய்யா தன் எஜமானருக்கு இருக்கும் வழக்கம் ஒன்றைச் சொல்கிறார்.  லாயத்தின் நான்கு மூலைகளிலும் அமைந்திருக்கும் மேடைகளில் எந்த ஒன்றில் ஏறிநின்று பார்த்தாலும் அவர் கண்களுக்கு பன்னிரண்டு குதிரைகள் தெரிய வேண்டும்.  அவ்வாறே தான் வைத்திருப்பதாகச் சொல்கிறார் கதிரய்யா. யதுசா அதைப் பற்றி தான் பார்த்துக் கொள்வதாக கூறுகிறான்.  அவனது மரியாதையான பேச்சிற்காகவும் அவன் தரும் சன்மானத்திற்காகவும் அவன் மீது தோன்றும் பரிவினாலும் அவனது குதிரையை லாயத்தில் இருத்திக்கொள்ள அனுமதி அளிக்கிறார் கதிரய்யா.  தன் குதிரையை லாயத்தில் சேர்க்கும் அவன் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் பன்னிரண்டு குதிரைகள் கண்ணில் தெரியும்படி அமைக்கிறான்.  அவன் மாயவித்தைகளை அறிந்தவனாக இருக்கிறான்.  பின்னர் மலைப்பாதையில் திரும்பிச் செல்லும் யதுசா எட்டு குதிரைகளை கொண்டு செல்கிறான் யதுசா.  கெஞ்சும் கதிரய்யாவிடம் லாயத்தில் சென்று மூலை மேடைகளில் நின்று பார்த்து விட்டு வரச்சொல்கிறான்  அதுவரை தான் காத்திருப்பதாக சொல்கிறான்.  கதிரய்யா சென்று ஒவ்வொரு மூலையில் இருந்தும் பார்க்க பன்னிரண்டு குதிரைகள் தெரிகின்றன.  யதுசாவிடம் சென்று தெரிவிக்கும், அஞ்சும்  கதிரய்யாவிடம் தன் பையிலிருந்து வெள்ளிக் காசுகளை அள்ளி வீசிச் செல்கிறான் யதுசா.  நரிதனை பரியாக்கி தன் அடியவனைக் காத்தருளும் பொருட்டு ஆணவம் நீங்கும் பொருட்டு இறைவன் செய்தது போன்றதல்ல இம்மாயம்.   இடமளித்தவனை, அவன் பலகீனங்களைக் கொண்டு கொள்ளையடித்த அந்நியன் செய்த மாயம்.  

இத்தொகுப்பின் சில கதைகளிலும் அவற்றின் மையக் கதைமாந்தர்களுக்கேயான புரவிகளை மாயம் காட்டி பறித்து செல்ல அவர்களுக்கேயான யதுசா இருக்கிறார்.  அந்த யதுசா ஒவ்வொருவருக்கும் தனி ஒருவனாக அல்லது சில நபர்களாக, உறவுகளாக, தனிப்பட்ட சூழ்நிலைகளாக, தன் முனைப்பாக, சமூக பொருளாதார காரணிகளாக, மொத்தமாக வாழ்வின் மாயமாக இருக்கிறான்.  அவர்கள் பறிகொடுத்த புரவிகள் எங்கோ இருக்கின்றன அல்லது அவர்களுக்கு இறந்துவிட்ட அவை அவர்களது நினைவில் மட்டும் வாழ்கின்றன.  அம்மாவின் விருப்பங்கள் சிறுகதையில் வரும் நவீன் என்ற சிறுவனுக்கு அவன் தன் நண்பர்களுடன் தெருவில் விளையாடும் இன்பத்தைப் பறித்து பொம்மைகள் நிறைத்து வீட்டிலே விளையாடச் சொல்கிறாள் அவன் அம்மா.  அவள்தான் அவனது யதுசா.

மண்ணைத் தின்றவன் கதையில் விவசாயத்தை பெரும் காதலுடன் மேற்கொள்ளும் அதன் நாயகனுக்கு விவசாயம் செய்பவர்களை பெரும்பாலும் நட்டமடையவே செய்யும், இங்குள்ள பொருளியல் சிஸ்டம் யாதுசாவகிறது.  மண்தான் காரணம் என்று அபாண்டம் கூற எனக்கு விருப்பமில்லை.  காரணம் அவன் மண்ணை நேசிப்பதை, விளையும் வெங்காயத் தாள்களை அவன் முத்தமிடுவதை, அவன் காதலை ஆசிரியர் கூறும் விதம் – அவன் படும் பாடுகள் – இடும் உரங்கள், மருந்துகள். பயிரிடும் நுணுக்கங்கள் என விவரிப்பு  எக்காரணம் முன்னிட்டும் மண்ணைப் பழிக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.  அவன் விவசாய வெற்றிக் கனவுகள் உண்மையில் மாயப் புரவிகளாகி காற்றில் மறைகின்றன.

உருமாற்றம் கதையின் நாயகர் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி.  அந்நாளின் நாட்டுப்பற்றின் அசலான ஒரு மனிதர்.  சில ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.  காமராசரின் அணுக்கம் பெற்றவர்.  சுத்திரத்தின் பின் வழங்கப்பட்ட தியாகிகளுக்கான சலுகைகைள் அனைத்தையும் மறுத்தவர்.  வயதானபோது  காலத்தின் சூழலின் மாற்றங்களை வெளியே நாட்டின் அரசியலிலும் குடும்பத்தில் மகன் மருமகள் பேரன் பேத்தி என அடுத்த தலைமுறைகளிலும் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்.  அவரது லட்சியங்கள் கடந்த காலத்தவை ஆகிவிட்டன.  அவர்களது ஆர்வங்களும் ஆசைகளும் வேறு.  அவரது நீலவாணன் என்ற பேரன் தன் பெயரை ஸ்டயிலாக இருக்க வேண்டும் என்று ஆகாஷ் என்று மாற்றிக் கொள்கிறான்.  சினிமாவில் சேர்ந்துவிட ஆர்வம் கொண்டிருக்கிறான்.  பேத்தி ஆங்கில உச்சரிப்பு சரியில்லை என்று தன்னை பெண்பார்க்க வரும் பையனை நிராகரிக்கும் அளவிற்கு ஆங்கிலத்தின் மீது அக்கறை கொண்டவளாக இருக்கிறாள்.  அவர் எந்த கட்சியில் இருந்து நாட்டு விடுதலைக்கு பாடுபாட்டாரோ அதே கட்சி அவருக்கு உவப்பில்லாத உலகமயமாக்கலைச் செய்கிறது.  மனத் தவிப்பும் குழப்பமும் என அவர் நாட்கள் செல்கின்றன.  அவர் சுந்தரதினத்தில் தியாகி என்ற முறையில் தொலைகாட்சிக்காக நேர்காணல் செய்யப்படுகிறார்.  அதன் வாயிலாக ஒரு பிரபல சினிமா இயக்குனரின் அறிமுகத்தையும் நன்மதிப்பையும் அவர் பெற நேர்கிறது.  அவரை  அந்த  இயக்குனர் விருந்துக்கு அழைக்கிறார்.  விருந்து முடிந்து புறப்படும் சமயம் ஒரு உதவி வேண்டும் என்று கேட்க, ஆர்வமுடன் முன்வரும் இயக்குனரிடம் அவர் தன் பேரனுக்காக சினிமா வாய்ப்பு கேட்க, இயக்குனரின் முகம் மாறுபடுகிறது.  பல ஆண்டுகளின் லட்சியவாதத்தின், தன்னல மறுப்பின் அவரது புரவியை காலமாற்றத்தின் மாயம் என்னும் யதுசா களவாடிச் செல்கிறது.

போலவே ‘சங்கிலி’ என்னும் கதை அதன் நாயகன் தன் தந்தையின் அதிக பவுன் வேண்டும் என்ற ஆசையால் காலதாமதமான திருமணத்தால் தன் சிற்றின்பத்தை அதற்கான வயதைத் தொலைக்கிறான்.  வட்டத்திற்குள்ளே என்ற கதையின் நாயகி சுரண்டல் புத்தியும் அற்பத்தனமும் கொண்ட அவள் கணவனால் அவள் கைத்திறன் கலைத்திறன் வெளிப்படும் வேலையை கூடுதல் சம்பளத்திற்காக விடுகிறாள்.  அலைச்சலும் சுவாரஸ்யம் இல்லாததுமான வேலைக்கு செல்கிறாள்.  தன் மட்டமான இரக்க மற்ற கணவனையும் வேலையையும் சகித்துத் கொண்டு தன் பழைய வேலையை எண்ணி ஏக்கம் கொள்கிறாள்.  சாப நினைவுகள் கதையின் நாயகி மனநலம் பாதிக்கப்பட்டவளாக எச்சில் இலைகளின் உணவைதின்று தனக்குத்தானே  ஓயாது பேசி சுற்றித் திரியும் ஒரு பெண்.  அவள் மிகவும் திறமையான ஒரு, முன்னாள்  ஆராய்ச்சி படிப்பு மாணவி.  அவளது கல்லூரி நண்பர்கள் அதிர்ச்சியுடன் அவளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.  ஒரு நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.  பின் அவளது வீட்டை அவளது உறவினரை கண்டுபிடிக்க முடியாமல் மனநல காப்பகத்திற்கு அனுப்புகிறார்கள்.  புத்திசாலி மாணவியான அவளது  எதிர்காலத்தை களவாடியது யார்? அது சொல்லப்படவில்லை யாரோ சிலர் அல்லது அவளது குடும்ப சூழல் அல்லது அவளது தன்னைப்பற்றி எவரிடமும் சொல்லாத தன்முனைப்பு.  

‘மாயக்கல்’ கதை பன்றி வளர்க்கும் மூக்கம்மாவை அவளது மகன் பெத்தண்ணணை போலீசால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவர்கள் துயரைச் சொல்கிறது.  தற்கொலை செய்துகொள்ளும் பெத்தண்ணணை மாயக்கல்லாக அவளின் கற்பனைக்குத் தருகிறது. அவன் ஒரு தொன்மமாக அநீதி அழிக்கும் தெய்வமாக எழக்கூடும்.  அது அவளது விருப்பமும்  கூட.  எளிய மக்களின் அன்றாட வாழ்வையும் அபகரித்துச் செல்லும்  ஈவிரக்கமற்றதன்மை எவ்வாறு தோன்றுகிறது.   வேம்பு கதை பேடண்ட் ரைட் மூலமாக வெளிநாடு கவர்ந்து கொள்ளும் உள்ளூர் மக்களின் உரிமையை மெல்லிய அங்கதத்துடன் பேசுகிறது.  அமெரிக்கா இந்தியாவை ஐநா மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறது.  சிறிய அந்த கிராமத்திற்கு தன் அதிகாரிகளை அனுப்புகிறது.

வேம்பு – கீழாநெல்லி மட்டுமல்ல வேறு பலவும் இருக்கலாம்.  யோகாசனங்களும் மூச்சுப் பயிற்சியும் வேறு பெயரில் வெளிநாட்டு பிராண்ட் ஆகலாம்.  இந்தியர்களுக்கு தங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை என்று பழைய பேச்சு ஓன்று உண்டு.  இன்று  இந்தியர்களுக்கு தங்களை உரியமுறையில் உலக சந்தைப்படுத்திக்கொள்ள இன்னும் தெரியவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.  

‘வெகுதூரம் விலகி’ ஒரு டாக்டரின் கதையை சுவாரஸ்யமாக சொல்கிறது.  அவர் தன்னளவில் எதையும் தொலைக்கவில்லை.  ஆனால் அக்கதை நாம் அனைவருக்கும் தொலைத்து வெகுதூரம் விலகி வந்துவிட்ட  நமது பழங்குடி மருத்துவ முறைகளைச் சொல்கிறது.  வெற்றிகரமான நமது பூர்விக மருத்துவத்தின் செல்வங்களை இழந்து மூர்க்கமாக திணித்துக் கொண்டுவிட்ட ஆங்கில மருத்துவத்தை – அதன் பேரில் நிறுவப்பட்ட சுரண்டலை சுட்டிக் காண்பிக்கிறது.  அதே சமயம், எளிய பொருளைப் பெற்றுக்கொண்டு அரிய தொண்டினைச் செய்யும் அந்த மலைக்குடி மருத்துவர் மனம் கவர்கிறார்.  இந்த சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் என் ரசனையின் அடிப்படையில் சொல்வதென்றால் வெகுதூரம் விலகி சிறுகதையைச் சொல்வேன்.  சரி எல்லா கதைகளுமே ஏதோவொரு வகையில் புரவிகளைத் தொலைத்தவர்களுடையது தானா என்றால் அப்படியில்லை. 

இங்கு வேறு இரண்டு அம்சங்களையும் குறிப்பிட வேண்டும்.  மாயமும் நகைச்சுவை உணர்வும்.  தருணம் கதையில் வரும் கஞ்சா அடிமையாகி கோமாவில் இரண்டாண்டுகள் கழிக்கும் இளைஞன் கோமாவில் இருந்து வெளிவந்த பின் தன் அனுபவத்தில் காலத்தின் இரண்டு பக்கங்களில் எட்டிப்பார்க்கிறான் எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றின் ஒத்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் காண்கிறான்.  பின் ஊரில் மதக்கலவரம் நடந்து கொண்டு இருக்கும் சூழலில் நூற்றாண்டுகள் முந்தைய நிகழ்வுகளில் தன்னைக் காண்கிறான்.  வேம்பு கதையின் வைடூரிய வண்டு தன் அழகின் மாயத்தால் மண்ணை விண்ணுலகுடன் பிணைக்கிறது.

‘உடம்பு’ கதையில் ஜெர்மன் ஊசியால் வயிற்றுக்குள்ளேயே பெரிதாக வளர்ந்துவிட்ட கன்றை பிரசவிக்க முடியாமல் வலியால் துடிக்கும் பசுவை – அதன் வயிற்றிலேயே இறந்துவிடும் கன்றின் காலில் கயிறு கட்டி இழுத்து எடுக்கப்படும் காட்சியை.  அப்பசுவின் வேதனையை வாசிப்பவர்கள் பதறும் விதத்தில் சொல்லும் ஆசிரியர் சங்கிலி கதையில் – அப்பாவின் பொன் ஆசையால் தன் வயதைத் தொலைத்த கதைநாயகன் -அவன் சோகத்திற்குள் அங்கத்ததை இழையோடவிட்டிருக்கிறார்.  கதை முதலிரவின் முயக்கத்தில் தொடங்குகிறது.  தன் தோல்விகரமான அந்த முயக்கத்தின் சோகத்துடன்  பின்னிரவில் மொட்டை மாடியில் மல்லாக்கப்படுத்து விண்மீன்களைப் பார்த்தவாறே எண்ணங்களை அசைபோடுகிறான்.  முன்பு திருணம் முடிந்து பார்ட்டி தந்த நண்பன் ஒருவனை நினைவு கூறுகிறான்.  நண்பர்களுடன் போதையில் அரட்டை அடிக்கும்போது கூட தவறியும் தன் முதலிரவு பற்றி வாய்திறக்காத அவனை எண்ணுகிறான்.  அவர்களது மற்றும் தன்னுடைய சிற்றன்பம் குறித்த பில்டப்கள்.  பிற தருணங்கள் – கடும் வற்புறுத்தலுக்குப்பின் பசுவை கூடிவிட்டு சோர்ந்த வயதான அந்த காளை நினைவுக்கு வருகிறது, கூடவே பசுவை துரத்திச் செல்லும் இளம் காளைகள் இரண்டு.  அவன் நிற்கும் பேருந்து நிறுத்தத்தின் புளியமரம் இலைகள் மிக குறைந்து காய்ந்து வயதானதாக இருக்கிறது.  பேருந்தில் ஏறிய பின் கவனிக்கிறான் அவன் ஏறிய பேருந்து மிகவும் புகை கக்கிக்கொண்டு நிதானமாக பயணிக்கும் தள்ளாத வயதான பேருந்து பிற இளம் பேருந்துகள் அதை சத்தமிட்டு ஒதுக்கி பாய்ந்து கடந்து செல்கின்றன.

வெகுதூரம் விலகி கதையில் தான் உண்மையிலே ஒரு டாக்டர் தானா என்று தனக்கே சந்தேகப்படும் டாக்டர்.  அவரது முதல் அறுவை சிகிச்சை – ஒன்றுமே இல்லாமல் நெஞ்சில் ஏற்பட்ட சாதாரண காயத்திற்காக வந்தவனை இதய வால்வு கோளாறு என்று பலநாள் அட்மிஷன் போட்டு பிறகு நெஞ்சு பிளந்து பிறகு மூடி அவனது உயிர் காத்த கடவுளாக அவர் அவனது உறவினரால் நோக்கப்படுவது.  எக்ஸ்-ரே எடுக்க இரண்டு முறை வேறு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு எக்ஸ்-ரேயில் நுரையீரலே இல்லாமல் இருக்கும் நோயாளி – ஒருவேளை சிவபெருமான் தான் தன்னை சோதிக்க நோயாளி வடிவில் வந்திருக்கிறாரோ என்று அஞ்சி – தனக்கு அப்படி ஒன்றும் அவ்வளவு பக்தி கிடையாதே என்று அவர் எண்ணுவது என புன்முறுவலுடன் வாசிக்கச் செய்கிறது.  சவாலான கேஸ்களை கையாண்டதன் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொள்ளும் டாக்டர் நண்பர்கள் – விபத்தில் வயிறு சற்று கிழிந்து குழந்தையின் நான்கு விரல்கள் வெளியே வந்து நீட்டிக்கொண்டிருக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணின் சவாலான அந்த கேஸைக் கையாண்ட சம்பவத்தை பற்றி ஒரு டாக்டர் கூறுவது.  குழந்தையை எப்படி விரல்களை உள்ளிழுக்கச் செய்வது என்று பல மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்க வெளியே புகை பிடித்துக் கொண்டே சீரியசாக யோசித்தவாறே நடமாடிக்கொண்டிருக்கும் தலைமை மருத்துவர் சட்டென்று உள்ளே வந்து குழந்தையின் விரல்களில் தன் சிகரெட்டால் சூடு வைக்க குழந்தை தன் விரல்களை சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டு விடுகிறது.  இதை பெருமிதத்துடன் ஒரு மருத்துவர் கூற பிற மருத்துவ நண்பர்கள் எல்லா மருத்துவ தர்க்கங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு வியந்து புல்லரிப்பது என  சிரிக்காமல் இக்கதையைக்  கடக்க முடியாது.

விரைந்தும் தீவிரத்துடனும் உண்மையான உணர்ச்சியுடன் மனிதரின், உயிர்களின்  வலிகளை, பசியை, துயரை சொற்களால் உணர்த்தும் ஆசிரியர் சு.வேணுகோபால் அவர்களின் கதைகள் கருணையின் ஈரநிலத்தில் தம் வேர்களைக் கொண்டவை.  அத்துடன்  மாயாஜாலம் நிகழ்த்தக் கூடிய (யதுசா அல்ல பரிதனை நரியாக்கிய கருணையின் தலைவன் போன்ற) வண்ணமிக்க நகைச்சுவை உணர்வு ததும்பும் அவரது மற்றொரு முகத்தையும் களவுபோகும் புரவிகள் தொகுப்பு வெளிப்படுத்துகிறது.  எங்களுக்கு அவரும் வேண்டும்.  இதை ஒரு வேண்டுகோளாக அவரிடம் வைக்கிறோம்.  களவுபோகும் புரவிகளை பின் தொடர்ந்த இந்த அனுபவத்திற்காகை அவருக்கு நன்றிகள்.

விக்ரம்

     விஷ்ணுபுரம், ஒரு ஆன்மிக அனுபவம் – விக்ரம்

ஒரு நாவல் வாசிப்பு தியான அனுபவத்தை அளிக்க முடியுமா? எல்லா நாவல்களாலும் அல்ல.  அரிதான சிலவற்றால் அவ்வாறு அளிக்க முடியும் விஷ்ணுபுரத்தைப் போல.  கனவுகள் நம்மை மெய்மையின் கரையில் கொண்டு நிறுத்த முடியுமா? ஏன் முடியாது? மொத்த உலகை, வாழ்வை கனவுக்கு ஒப்பிட்டுதானே மெய்மையை சுட்டுகிறார்கள்? ஆனால் எல்லா கனவுகளும் அல்ல விஷ்ணுபுரத்தைப் போல ஒருசில மட்டுமே.  அவை மெய்மைக்கு மிக அருகில் செல்பவை அங்கு தம்மை கலைத்துக் கொள்பவை.  ஞானிகள் கலைஞர்களை, காவியங்கள் படைக்கும்  மகத்தான எழுத்தாளர்களை பெரும் கவிஞர்களை பேணுகிறார்கள்.   ஏனெனின் இக்கனவுகளின் முக்கியத்துவம் அவர்கள் நன்கறிந்தது.  இவை நம் சாதாரண விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையே வரும் கனவுகள் அல்ல, மாறாக நாமறிந்த அனைத்தையும் உறக்கம் எனக்கொண்டு மெய்மையை விழிப்பு எனக்கொண்டு அவ்விரண்டிடையேயான கனவுகள்.  ஒருவேளை விழித்தாலும் விழித்துக்கொள்ளலாம் அல்லது உறங்கிவிடலாம்.  மெய்மையின் எந்தவொரு வாய்ப்பும் இங்கு அங்கீகரிக்கப்படாமல் எவ்வாறேனும் பேணப்படாமல் இருந்ததில்லை.  எந்தவொரு வாய்ப்பிலும் போலவே இதிலும் தவறவிடும் சாத்தியமும் உள்ளது.  அது ஊழ் எனலாம் அல்லது உங்களுக்கான கதவு வேறொரு இடத்திலிருக்கிறது.

விஷ்ணுபுரம் உலகியல் உறக்கத்தைத் திரட்டி ஒரு கனவினை எழுப்புகிறது.  அக்கனவினை மெய்மையை நோக்கி செலுத்துகிறது.  கனவு எப்படியும் கலைய வேண்டியதுதான்.  எனினும் எச்சரிக்கை மேற்கொள்கிறது.  கனவு இடையில் கலைந்து விடக்கூடாது.  அது உரிய திசை சென்று கலைய வேண்டும்.  அது இப்புறம் முற்றிலும் உலகியலில் விழுந்துவிடக் கூடாது அதேசமயம் தானே மெய்மை என்று அது சொல்லவும் கூடாது.  தானும் உலகியலே என்று தனக்கே சொல்லிக்கொண்டு அப்பால் சென்று மறைய வேண்டும்.  கௌஸ்துபம் – முழுவதும் – ஞான சபை விவாதங்கள் அதன் தர்க்கங்கள் – உரத்துப் பேசுவதில்லை.  கௌஸ்துபம் ஆம் இது உலகியல் தான் ஆனால் விஷயம் அதுவல்ல என்கிறது.  ஸ்ரீபாதம், கௌஸ்துபம் – இவ்விரண்டோடு ஒருவேளை நிறுத்தபட்டிருந்தாலும் விஷ்ணுபுரம் மகத்தான நாவல்தான்.  ஸ்ரீபாதத்தில் மலைமீது ஏறிச்சென்று அங்கு காஸ்யபரைக் காண்கிறார் சிற்பி.  அங்கிருந்து அழிக்கப்பட வேண்டிய விஷ்ணுபுரம் சுட்டிக் காண்பிக்கப்படுகிறது.  கௌஸ்துபத்தில் நிலத்தின் அடியில் இருந்து பிரதிபலிப்பாக காட்சிகள் பிறழ்ந்த விஷ்ணுபுரத்தை (ஞான சபையை) சித்தன் தன் சீடன் காஸ்யபனுக்குக் காண்பிக்கிறான்.  அது கடந்த காலத்தின் விஷ்ணுபுரம்.  மணிமுடி மிச்ச மீதம் இன்றி விஷ்ணுபுரத்தை முழுவதுமாக அழிக்கிறது.  அம்மாபெரும் கோபுரங்களை மட்டுமல்ல அனைத்துவிதமான தன்முனைப்பின் கட்டுமானங்களையும்.

பலவிதங்களில் பலகோணங்களில் நோக்க முடியும்.  ஹரிததுங்கா மலைக்காக அதன் முகில்களுக்காக பொன்னிறம் பொழியும் வானுக்காக செந்நிற சோனாவிற்காக அதன் மீன்களுக்காக கோபுரத்தில் மோதிச் சரியும் பறவைகளுக்காக வைஜயந்தி என்னும் வெண்புரவிக்காக விண்ணுலகம் தொடும் கோபுரங்களுக்காக ஆலயத்தின் சிற்பங்களுக்காக மரமல்லி மரத்திற்காக மிருகநயனிக்காக மலர்களுக்காக  – என இதன் அழகியலுக்காக – கவிதைக்காக இசைக்காக அங்கததிற்காக வாசிக்கமுடியும்.  இதன் தத்துவ விவாதத்தின் வழியாக இங்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும், நோக்கப்படுபவற்றிக்காக – மெய்காண் வழிமுறைகளுக்காக என அக்கோணத்தில் நோக்க முடியும்.  உலகின் நிலையாமை கூறுவது எனச் சொல்லமுடியும் அமைப்புகளின் அதிகாரங்களின் தனிமனிதர்களின் அநீதி சுட்டுவது என கூறமுடியும்.  மிக சாதாரணமானவர்கள் அசாதாரணமானவர்கள் ஆக்கப்படும் புராணங்களின் கட்டுடைப்பு எனச் சொல்லமுடியும்.  வைணவம், தொல்குடி சமயம், பௌத்தம் அல்லது அதெல்லாம் அப்படியொன்றுமில்லை இது தாந்த்ரீகம் தாந்த்ரீகமே என முடியும் – நான் அப்படித்தான் சொல்லுவேன் அதுவும் சைவ யோக தாந்த்ரீகம் 

புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு

உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி

அணைத்தலும் இன்பம் அது இது ஆமே.

பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் ஆங்கே

முற்ற வரும் பரிசு உந்தீ பற

முளையாது மாயை என்று உந்தீ பற 

விஷ்ணுபுரத்தின் கதாபாத்திரங்கள் அஜிதன், சுடுகாட்டு சித்தன், காஸ்யபன், பவதத்தர், நீலி, பிங்கலன், பாவகன், யோகாவிரதர், சந்திரகீர்த்தி, சங்கர்ஷ்ணன், லட்சுமி என பலர் அல்லது அவருள் சிலர் நம்மிடம் நம் உள்ளத்தில் தமக்குரிய இடத்தை பெற்று அமரக்கூடும்.  ஏராளம் அப்படி வந்து விட்டார்கள்.  சமீபத்தில் போரும் அமைதியும் பியர் அப்படி வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார்.  இத்தனைக்கும் அவர் நட்டாஷாவைத் திருமணம் செய்துகொண்டது எனக்கு பிடிக்கவில்லை என்று அவரிடம் நான் சொல்லிவிட்டபோதும்.

ஒன்றுமட்டும் – உலகியலை (காமம் உள்ளிட்ட அனைத்தையும்)  முற்றாக புறக்கணித்து மெய்மையை எட்டமுடியாது.  உலகியலை முற்றாக கடக்காமலும் மெய்மையை எட்டமுடியாது.  விஷ்ணுபுரம் அதன் தியான அனுபவம் என்பது உங்களைப் பொறுத்தது.  ஓஷோவால் மிகவும் புகழ்ந்துரைக்கப்படும் மிக்கேல் நைமியின் “மிர்தாதின் புத்தகம்” – உண்மையில் அது அவ்வாறு தகுந்தது எனினும் என்னளவில் விஷ்ணுபுரம் அதைவிட மேலானது.   நைமியின் மிர்தாத் அற்புதமாக போதனைகளாக கவித்துமாக அன்பை பெருங்கருணையை மெய்மையை உணர்த்தும் விதமாக பேசுகிறார்.  ஆனால் அவர் ஒருவரது பேச்சாக ஒரு ,மகானின் சொற்பெருக்காகவே அது இருக்கிறது.  முற்றிலும் ஏற்புடன் அன்புடன் வாசித்து அதை உணரமுடியும்.  விஷ்ணுபுரத்தில் வாழ்கை இருக்கிறது.  போதனைகள் இல்லை.  ஏற்பு-மறுப்பு, பரிசீலனை என்று சென்று மறுத்து மறுத்து சென்று சொற்களால் தொடமுடியாத அந்த இடத்தை நெருங்கி சொல்ல முற்படாமல் மௌனம் கொள்கிறது.

நிகர்வாழ்வு – திருதிராஷ்டிரர், பாண்டு, விதுரர்

மழைப்பாடல் வாசிப்பு-3 – விக்ரம்

தங்கள் புறம் எவ்வாறு இருப்பினும் தங்கள் விருப்பங்கள் அல்லது விருப்பமின்மைகள், நிறைவேற்றங்கள் அல்லது ஏமாற்றங்கள் இவற்றிற்கப்பால் தங்கள் அகம் என தங்களுக்கான ஒர் நிகர்வாழ்க்கை கொண்டவர்களாக உள்ளனர் திருதிராஷ்டிரரும், பாண்டுவும், விதுரரும்.

இசையால் அமைந்தது திருதிராஷ்டிரரின் உலகு.  அவர் இசையால் அறியவொண்ணாதது என்று ஒன்றில்லை.  தன் திருமணத்தின் பொருட்டான காந்தாரப் பயணத்தில் தான் அறிந்திரா நிலத்தை அதன் விரிவை, அமைதியை தன் செவிகளாலேயே அறிந்துகொள்கிறார் திருதிராஷ்டிரர்.  ஆழமற்ற பாலைவன நதியில் பிரதிபலிக்கும் விண்மீன்களைக் கூட அவர் அந்நிலத்திற்கு வரும் முன்னரே இசையால் கண்டுவிட்டவராக இருக்கிறார்.

”விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனத்தில் நதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்” என்று விதுரரிடம் சொல்கிறார் அவர்.  திருதிராஷ்டிரரின் நிகர் வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள முடிந்த காந்தாரியின் அன்பை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். விழியற்றவரை மணம்முடிப்பது குறித்து மற்றவர் கருத்துகளுக்கு காந்தாரியின் பதில்களை கவனிக்க வேண்டும்.  எல்லா ஷத்திரியர்களும் விழியற்றவர்களே என்கிறார் அவர்.  

”அவளிடம் சொல், மலைக்கழுகுகள் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று”

பின்னாளில் புத்திரசோகத்தில் தவிக்கும் திருதிராஷ்டிரரை அமைதிப்படுத்த காந்தாரியால் இயல்வது அவரது தனித்த உலகிலும் ஒர் அங்கமாக காந்தாரியால் ஆகிவிட முடிவதால்தான்.

பாண்டுவின் நிகர்வாழ்வு வேறொரு விதமானது.  குழந்தைகளைக் கொண்டு, குறிப்பாக தருமனைக் கொண்டு தன் உலகை அவர் உருவாக்கிக் கொள்கிறார்.

என் மைந்தனை தோளில் சுமந்துகொண்டிருக்கையில் நானடையும் மனமயக்குகள்தான் எத்தனை அழகியவை” என்றான் பாண்டு. “என் மூதாதையரை சுமந்துகொண்டிருக்கிறேன் என்று உணர்வேன்என் மூதாதையரின்ஊர்தியே நான்அவர்களுக்கு மண்ணைத்தொட்டு நடக்க ஊன்பொதிந்து உருவான கால்கள்அவர்களைதொட்டறிய தசைஎழுந்த கைகள்பின்பு நினைப்பேன்மண்ணாக விரிந்து கிடப்பவர்கள் என்மூதாதையரல்லவா எனஅவர்களில் ஒரு துளியை அல்லவா என் தோளில் சுமந்துசெல்கிறேன் என

பாண்டுவின் உலகினுள் குந்தி நுழைவதில்லை.

விதுரரின் நிகர்வாழ்வு வேறொரு வகையில்.  அதைப்பற்றி திருதிராஷ்டிரருடன் கருத்துப்பகிர்ந்து கொள்கிறார் அவர்.  புறத்தில் சூத அமைச்சர் எனப்படுவது, தன் எல்லைகள் அவருக்கு பொருட்டல்ல, எவ்விதமான தீவிர விழைவும் அவருக்கு அங்கில்லை.  மானுட உணர்வுகள் எதையும் நேரடியாகச் சுவைக்க முடியாத, அவற்றை அறிவாக உருமாற்றி அறிதலின் இன்பமாக மட்டுமே அனுபவிக்கும் தன் இயல்பை அவர் திருதிராஷ்டிரரிடம் கூறுகிறார்.  ஆனால் அவருக்கு பெரிதான நிகர்வாழ்வு காவியங்களின் வாசிப்பில் உள்ளது.

ஆனால் அரசேநான் அறியும் இன்னொன்று உள்ளதுஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன்அங்கேஇருப்பது அறிவுஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறதுகாவியங்களில்தான் நான்மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசேவெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவைகாவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவைபிற எவரும் அறியாதஉணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன்பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன்காதலைவென்று களித்திருக்கிறேன்இழந்து கலுழ்ந்திருக்கிறேன்இறந்திருக்கிறேன்இறப்பின் இழப்பில்உடைந்திருக்கிறேன்கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும்முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.”

புறத்தில் விழியற்ற திருதிராஷ்டிரர் நிகர்வாழ்வில் விழியுள்ளவர், புறத்தில் பெரிதும் துய்ப்பற்ற விதுரர் நிகர்வாழ்வில் பெருந்துய்ப்பாளர், புறத்தில் அதிகம் வாழ்நாள் பெறாத பாண்டு நிகர்வாழ்வில் நீடுவாழ்ந்தவர்.

அன்னையரின் ஆடல்களே பின்னாளில் கௌரவரிடமும் பாண்டவரிடமும் பேருருக்கொண்டன என்றாலும் அவற்றில் இம்மூவரது அகவாழ்வும் தமக்குரிய தாக்கத்தையும் செலுத்தின என்று எண்ணுகிறேன்.

திருதிராஷ்டிரர் – மழைப்பாடலின் சலுகைகள்

மந்தாரம் உந்து மகரந்தம்

மணந்தவாடை

செந்தாமரை வாள்முகத்திற் செறி

வேர்சிதைப்ப

தந்தாம்உலகத்திடை விஞ்சையர்

பாணிதள்ளும்

கந்தார வீணைக்களி செஞ்செவிக்

காது நுங்க

அனுமனின் இலங்கை நோக்கிய வான் பயணத்தில் வான்மீகி அவருக்கு வழங்கியதைக் காட்டிலும் அதிக சலுகைகள் வழங்குகிறார் கம்பர்.  அனுமனின் முகத்தின் வியர்வையை வாசம்வீசும் மந்தார மலர்களின் காற்று போக்குகிறது வானின் இசைவலரின் பிறழாத காந்தாரப் பண்ணின் வீணை இசை கேட்டு அவரது செவிகள் களிக்கின்றன.

மொத்த வெண்முரசும் அதன் முதன்மைப் பாத்திரங்களுக்கு, துணைப்பாத்திரங்களுக்கு வழங்கும் இடமும் சலுகைகளும் மிகப்பெரியவை.  அவற்றை மகாபாரதத்துடன் அல்லது பிற காவியங்களுடன் ஒப்புநோக்குவது அவசியமற்றது எனினும் ஒரு சுவாரஸ்யத்திற்காக மழைப்பாடலின் திருதிராஷ்டிரரை எடுத்துக்கொள்கிறேன்.  திருதிராஷ்டிரருக்கு ஜெயமோகன் அளிக்கும் இசை உலகு மிகப்பெரியது.  அத்துடன் பேரழகியான காந்தாரியுடன் திருதிராஷ்டிரரின் திருமணம் நிறைவேற பீஷ்மர் மீதான மதிப்பு, காந்தாரியின் கனிவு, சகுனியின் அரசியல் கணக்குகளுக்கு ஒத்து அமைவது எனப்பல காரணங்கள் இருப்பினும் திருதிராஷ்டிரரை பலரது பரிவுக்கு உரியவர் என்பதல்லாமல் ஒரு தகுதிமிக்க மாவீரராகவே நிறுத்துகிறது மழைப்பாடல்.  காந்தாரியைக் கைப்பற்றும் பொருட்டு லாஷ்கர்களுடன் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி அவருக்கு வழங்கப்படுகிறது.  பொதுவாக வெண்முரசின் போர்காட்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சுபவை, ஒவ்வொரு நாயகருக்கும் எனப் பல அமைந்திருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தன்மையும் கொண்டவை.  திருதிராஷ்டிரரின் இவ்வெளிப்பாட்டில் திறனில் ஒரு சில நிமிடங்களுக்கு அவரை கம்பனின் சுந்தரகாண்டத்தின் அனுமனுக்கே நிகர்த்துகிறார் ஜெயமோகன்.

ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த;

இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த;

மடிந்தன மறிந்தன முறிந்தன மலைபோல்

படிந்தன முடிந்தன கிடந்தன பரிமா.

வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார்

மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்;

உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார்

சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர் மலைந்தார்.

(அனுமன் நாற்படைகளையும் அழித்தல் – சம்புமாலி வதைப்படலம்)

விழிப்புலனுக்கு நல்அனுபவம் அளிப்பது பெருமழையை பெய்யக் காண்பது, பெய்யலினூடே விசைந்தாடும் மரங்கள், அதன் தழுவிப்படர்ந்து சிலிர்க்கும் கொடிகள், நனைந்த புற்கள்.  ஒரு பெருமழையின் அழகைக் காண்கையிலும் கொள்வன பல எனில் விழிகள் கொள்ளாமல் தவறவிடுவனவும் பல.  எனவேதான் ஒவ்வொரு மழையும் புதுமழை, காணதன காணப் பெறல் கண்டன புதுமை பெறல் என.  கொள்திறனுக்கு ஏற்ப முடிவிலி என தன்னை விரித்துக்கொண்டே செல்கிறது இயற்கை.  வெண்முரசின் வாசிப்பு –மழைப்பாடல் வாசிப்பும் அது போன்றதுதான்.

மழைப்பாடல் வாசிப்பு 2 – விக்ரம்

அம்பிகையும் அம்பாலிகையும் தம் குழந்தைகளை முதன்மைப்படுத்த விரும்பும் அன்னையர் மட்டுமே.  அரசியல் ஆடல்களில் கூர்மையும் நுட்பமும் கொண்டவர்கள் அல்ல.  அம்பிகையின் விருப்பம் திருதிராஷ்டிரனுக்கு செலுத்தப்பட்டது போல அம்பாலிகையின் விருப்பம் பாண்டுவிற்குள் செலுத்தப்படவில்லை.  அம்பிகை அம்பாலிகையின் அடுத்தநிலை என காந்தாரியும் குந்தியும் எனில் தன் கணவனின் இசைக்குள் நுழைந்துவிட்ட காந்தாரியை குந்திக்கு சமன்செய்ய முடியாது.  என்றபோதும் சகுனி அதை ஈடுசெய்கிறார்.  வேழம் நிகர்த்த துரியோதனனின் பிறப்பின் போதே வேழத்தை மத்தகம் பிளந்து கொல்லும் அனுமனின் கதையும் அகழ்ந்தெடுக்கப்படுகிறது.  பீமனின் பிறப்பு நிகழ்கிறது.  ஒவ்வொன்றும் எதிர்விசையால் சமன்செய்யப்பட்டு கூர்கொள்கிறது.  பாலையின் விழைவினை எதிர்கொள்ளத் தயாராகிறது கங்கைச் சமவெளியின் விழைவு.

பாரதப்பெருநிலத்தின் மீதான காந்தாரப் பாலையின் விசை இன்றுவரை மீள நிகழும் ஒன்றாகவே தோன்றுகிறது.  பாண்டவப்பிரஸ்தம் என்னும் பெயர் பின்னாளில் பானிபட் என ஆனது இங்கு வரலாற்றுக்கு புவியியல் வகுத்தளித்த பாதையை உணர்த்துகிறது.  நிலம், நீர் – கடல் என்பது கடந்து காற்றிலேறி விண்ணில் என இனி மனிதரை வைத்தாடும் விசைகள் புதிய களங்கள் வகுக்கும்போலும்.  மீண்டும் தொடங்கிய இடத்திலேயே தம் ஆடலை முடிப்பார்கள் போலும் இந்திரனும் சூரியனும்.

கர்ணனின் பிறப்பை பாண்டுவிடம் சொல்லிவிடப் போவதாக சொல்லும் குந்தி பாண்டு அதை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் அதை மறைத்துவிடுகிறார்.  பின்னாளில் கான்வாழ்வில் தந்தையாகும் விருப்பத்துடன் பாண்டவரின் பிறப்பை ஏற்கும் பாண்டுவிடம், பின்னர் அவர்களிடம் பேரன்பு கொண்டவராக விளங்கும் பாண்டுவிடம் கர்ணனைப் பற்றி குந்தி சொல்லியிருக்க முடியும்.  அதை அவர் மகிழ்வுடன் ஏற்பவராகவே இருந்திருப்பார்.  எனினும் குந்தி அவ்வாறு செய்வதில்லை அதற்கான அரசியல் காரணங்கள் குந்தியிடம் உள்ளன.

குந்தியிடம் திருமணம் நிகழ்ந்த பின்னான முதல் இரவிலேயே பாண்டு தன்னுள் இருக்கும் ஆறு பாண்டுக்களைப் பற்றி சொல்கிறார்.  பாண்டுவின் ஏக்கத்தின் விழைவான அக்கனவை நிறைவேற்றி வைத்தவர் ஆகிறார் குந்தி.  எனினும் பாண்டவர் பிறப்பில் விசித்திரவீரியனைப் ஒத்தவரான பாண்டுவின் ஏக்கத்தின் விழைவிற்கும் குந்தியின் பெரும் அரசியல் விழைவிற்கும் வேறுபாடு உள்ளது.  பாண்டவர்களை அரசியல் திட்டத்திற்கான ஆற்றல்களாக பார்க்கிறார் குந்தி.  உயிர் ஏக்கத்திற்கு அருள்கிறது வான் அவ்வருளின் வரங்களைப் பெருவிழைவு தன் கரங்களில் கொள்ளும் நேரம் யாவும் திரிபடையத் துவங்கின்றன என்று தோன்றுகிறது.

பாண்டு அரசியல் விழைவுகள் அற்றவரா என்றால் ஆம் அவர் அரசியல் விழைவுகள் அற்றவர்தான்.  ஆனால் முற்றிலும் அரசியலே அற்றவரா என்றால் அவ்வாறல்ல என்று எண்ணுகிறேன.  எப்போதும் தருமனைத் தன் தோளில் சுமந்தலையும் பாண்டு குந்தியின் அரசியலில் நோக்கற்றவர் போலத் தோன்றியபோதும் அதை அறிந்தே இருந்தார் என்று தோன்றுகிறது.  பின்னாளில் குந்தியே அச்சமடையும் தருமன் பாண்டுவின் தயாரிப்புதானே? ஒருவகையில் அதில் குந்திக்கான பாண்டுவின் செய்தி பொதிந்துள்ளது என்று தோன்றுகிறது.

இளைய வியாசரெனத் தோற்றம் கொண்ட விதுரர் பீஷ்மருக்கு பிடித்தமானவர்.  திருதிராஷ்டரனின் பேரன்பைப் பெற்றவர்.  சத்தியவதியால் வளர்க்கப்பட்டவர், நகையாடலில் அவர்தன் பேரரசியென்னும் வேடம் கலைத்து சிறுமியென உணரச்செய்பவர்.  விதுரருடனான சந்திப்பின் போது தான் கவலையற்றிருப்பதாகச் சொல்கிறார் சத்தியவதி.  பாட்டிக்கும் பேரனுக்குமான உறவு இவ்வாறிருக்க விதுரர் எவ்வகையிலும் தன் அன்னை சிவையைக் பொருட்டெனக் கருதியவர் அல்ல.  அம்பிகை அம்பாலிகை சிவை என்னும் வரிசையில் முன்னிருவரும் தம் கனவு கலைத்து கான்புகுகிறார்கள் எனில் சிவை விதுரரின் பொருட்டு தன் நிறைவேறாக் கனவினால் தன்னைத்தானே ஒடுக்கி சுருக்கி தனிமை கொள்கிறார்.  சத்தியவதிக்கும் சிவை ஒரு பொருட்டல்ல.  தன்னால் கவர்ந்துவரச் செய்யப்பட்ட அம்பிகை அம்பாலிகையின்பால் கொண்ட அளவிற்கு சிவையின் மீது அவர் கருத்து கொள்வதில்லை.

குந்தியும் தன் அன்னையின் மீது அணுக்கம் அற்றவர்.  அவ்வகையில் விதுரரை ஒத்தவர்.  விதுரருக்கும் குந்திக்குமான உறவு நுட்பமான ஒன்று.  நடுவுநிலை என்றபோதும் குந்திக்கு இசைவானதாகவே அஸ்தினபுரியில் அவரது அரசியலாடல்கள் இருக்கின்றன என்று எண்ணுகிறேன்.  விதுரர் புதிரானவராகவே தோன்றுகிறார்..  பீஷ்மருடனான தன் உரையாடலில் எதிர்காலத்தில் புதிதாக எழுச்சி பெறக்கூடிய மக்கள், எழக்கூடிய மௌரியப் பேரரசு உள்ளிட்ட அரசுகள் பற்றி கூறும் அவரது கணிப்பு, தீர்க்கதரினம் அவரது அறிவுத் திறனைக் காட்டுகிறது.  எனினும் சூதர் என்னும் தன் எல்லைக்குள் நிற்பவர் அவர்.

என்றுமுளது…

வெண்முரசு வாசிப்பு குறிப்பு – விக்ரம்

ஜெயமோகன் வெண்முரசில் இதையெல்லாம் திட்டமிட்டுச் செய்தாரா அல்லது இவையெல்லாம் தற்செயலானவைதானா என்றொரு கேள்வி முன்பு எழுவது உண்டு.  ஜெயமோகனின் வெண்முரசு தற்செயல்தான் ஆனால் திட்டமிட்ட தற்செயல் என்று அப்போது விடையளித்துக்கொள்வேன்.  திட்டமிட்டது அவரல்ல.  கடல்கள் எவ்வளவு நாள் கடல்களாக இருக்கவேண்டும் அவை எப்போது பனிமுடி சூடி பெரும் மலைகளாக ஆகவேண்டும், மலைகள் எப்போது பெருங்கடல்களாக ஆகவேண்டும், வனங்கள் எப்போது பாலைவேடம் பூணவேண்டும் பாலை எப்போது அடர்வனம் ஆகவேண்டும் என்றெல்லாம் திட்டமிடும் ஆற்றல் ஒன்றுள்ளது அதுவேதான் வெண்முரசைத் திட்டமிட்டது என்று உணர்கிறேன்.

எம்மொழியினர் ஆயினும் நுண்ணுணர்வுடையோர் அறிந்த ரகசியம் ஒன்றுள்ளது காவியங்கள் மொழிகளுக்கு ஆயுள் நீட்டிப்பு வழங்குகின்றன.  ராமாயணமும் மகாபாரதமும் இந்திய மொழிகளில் மீள நிகழ்த்தப்பட்டதில் வியப்பொன்றுமில்லை.  சமகாலத்தினை மட்டுமே உட்படுத்தி எழும் இலக்கியங்கள் காலத்தால் மதிப்பிழந்துவிடுகின்றன.  தன்காலத்தில் நிலவும் மொழியை அதுகாணும் பொருட்களை அதன் நிகழ்வுகளை எவற்றையும் அதற்குரிய காலத்திற்கு அப்பால் அதிகம் கொண்டுசெல்ல அவற்றால் இயல்வதில்லை.  பேரிலக்கியங்கள் மட்டுமே அந்த வல்லமை கொண்டவை.  அவை மனிதரிலும் இயற்கையிலும் “என்றுமுள்ளவற்றை”க் கொண்டு எழுகின்றன.  அத்துடன் இக்கணம் என்னும் உள்ளியல்பான மெய்மையையும் இணைத்துக்கொண்டு வண்ணங்கள் தொட்டு பெரும்காலத் திரைமீது தீட்டப்படுகின்றன.

நுண்ணறிவுடையோர் காவியங்களை மொழிக்கு ஊட்டம் எனக் கண்டுகொள்வது, அவை தம்மொழியிலும் நிகழவேண்டும் என்று விரும்புவது வியப்பல்ல.  சிற்றெறும்பின் வாழ்கைதான் நம் சொற்களும் வாழ்நாள் குறுகியவை ஆயின் பெரும்கலம் என காவியங்கள் புகுந்து காலத்தின் நீண்ட மறுகரை அவையும் சேர்கின்றன.  இன்றுள்ளது என்றுமுள்ளது அல்ல ஆனால் என்றுமுள்ளதன் சன்னதியில் நிறுத்தப்பெறுவதன் வாயிலாக என்றுமுள்ளதாக ஆவது விந்தை.

கம்பராமாயணம் தன்மொழியை இன்றுவரை பத்துநூற்றாண்டுகளுக்கு கடத்தியது.  ஜெயமோகனின் வெண்முரசு இதுகாறும் பயணித்த தமிழ்மொழியை அதன் அத்தனை வரங்களையும் இப்பெருநிலத்தின் அழியாச் செல்வங்களுடன் இனி பதினைந்து நூற்றாண்டுகளுக்கு கொண்டுசெலுத்த இருக்கிறது.

மானுடம் தழுவும் பேரிலக்கியங்களும் கவிதை என்று நுண்மொழியும் என இவையெல்லாம் இல்லாவிட்டால் மொழி என்பது வெறும் கருத்துப்பறிமாற்றக் கருவி என்பதற்கப்பால் என்ன இருக்கிறது? மொழி இனிது என்று எதனால் சொல்கிறோம்? அதன் உள்ளடக்கத்தைக் கொண்டுதானே? இல்லை அதெதுவும் இல்லாமலேயே ஓசைநயத்தால் மட்டுமே கூட இனிது என்றால் ஓசைநயம் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கத்தானே செய்யும்? அவரவர் மொழி அவரவர் காதுக்கு இனியது பொதுவில் அளவிடும் கருவி எங்குள்ளது? அவரைக்காய் பொறியல் ஈடுஇணையே இல்லாத சுவைமிக்கது என நான்சொல்ல கரப்பான்பூச்சி பொறியல் அதைவிட சுவையானது என்று இந்தோனேசியக்காரன் சொன்னால் எதைக்கொண்டு அதை நான் மறுப்பது? சீனமொழி கேட்க நன்றாக இல்லை மலாய் மொழி கேட்க இனிதாக இருக்கிறது என்று ப.சிங்காரத்தின் புயலிலே ஒருதோணியில் வரும் வயிரமுத்துபிள்ளை கருதுகிறார்.  வயிரமுத்துபிள்ளையின் சொற்கள் சீனனின் காதுகளுக்கு எப்படி இருக்குமோ?

மானுடப்பொதுமை கொண்டவை பெரியன சில அரியன சில பேராற்றலுடன் எழுந்து மொழிகளை உலகில் தூக்கி நிறுத்தவேண்டும்.  அப்படி ஒரு வரம் தமிழுக்கு அவ்வப்போது கிடைத்துக்கொண்டு இருக்கிறது, கம்பராமாயணம் திருக்குறள் என்று.  இன்று வெண்முரசு.  அது தன்னைத்தானே நிறுவிக்கொள்கிறது நூற்றாண்டுகளின் பரப்பில் விரவிக்கொள்கிறது.  கலிபோர்னியாவின் செம்மரங்களைப்போல அதன் காலப்பரப்பு வேறு.

தற்செயல்தான் ஆனால் திட்டமிடப்பட்டது என்று ஏன் கருதினேன் என்றால் இவ்வளவு பெரிய புனைவுத்தொடரில் அமைந்த ஒருங்கமைவுதான்.  இதை திட்டமிடாமல் நிகழ்த்த முடியாது திட்டமிட்டாலோ நிகழ்த்தவே முடியாது.  இங்கு ஒருங்கமைவு என்று நான் கூறுவது அதன் தகவல் பொருத்தங்களை அல்ல அதன் அகத்தை – உணர்வுகளை, இருமைகளை – கீழ்மைகளும் பெரியவையும் – பேருண்மைகளும் எனக் கோர்த்து ஒருமை என செலுத்தும் அந்த ஒருங்கமைவைக் கூறுகிறேன்.

வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கோணங்களில் வாசிப்பு சாத்தியம் வழங்குகிறது வெண்முரசு.  நீ்ங்கள் யாராக இன்று இருக்கிறீர்களோ அதற்கேற்ப உங்களுக்கு இன்று அதில் ஒரு பயண வழி துலங்குகிறது.  அவ்வழியே பயணிக்க பின்னர் நீங்கள் உங்களை வேறு ஒருவராக வேறோர் இடத்தில் கண்டு வியக்க நேர்கிறது.  ஒவ்வொரு நதியாகவும் தனைக்கண்டு பின்னர் ஒரே கடல் நான் என முறுவலித்து – மோனவாரிதி என்கிறார்களே அத்தகைய ஒரு சாத்தியம் இங்குள்ளது.  வெண்முரசு வாசிப்பில் ஒவ்வொருமுறையும் அருளியல் என்றுகருதாமல் என்னால் இருக்க இயல்வதில்லை.

வெண்முரசு மூன்று சொற்களில் – என்றுமுள்ள மனித இயல்புகள், பெரும்புடவி, மெய்மை.  இரண்டு சொற்களில் – உலகியல், மெய்மை.  ஒரே சொல்லில் என்றால் வாழ்க்கை.

எனக்கே இப்படி என்றால் ஒரு மெய்ஞானி வாசிக்க வெண்முரசின் எல்லா பாதைகளினூடாகவும் அவருக்கு அந்த நிலவு தென்படக் கூடும்.  புன்னகைக்கக் கூடும்.

விக்ரம்

முதற்கனல் வாசிப்பு 2 – விக்ரம்

தீச்சாரல், தழல்நீலம், வேங்கையின் தனிமை, ஆடியின் ஆழம், வாழிருள் ஆகிய பகுதிகளை முன்வைத்து

ஆதியில் அறிவுப் பழம் தின்றதன் பாவத்தினால் மண்ணில் வீழ்ந்தனர் ஆதாமும் ஏவளும்.  அறம் கொண்ட காரணத்தால் அன்னை கத்ருவின் தீச்சொல் பெற்று பறக்கும் திறன் இழந்து நெளிகின்றன மண்ணின் நாகங்கள்.  முன்னதில் அகந்தையில் கிளைத்தது அறிவு என்று கருதினார் கடவுள் பின்னதில் கிளைப்பது அறம்.  காமமும் அகங்காரமுமென தீர்ப்பிட்டு உங்கள் செயல்களம் மண் என வகுக்கிறது விண்.  அன்னை கத்ரு அவ்வாறு நாகங்களுக்கு நியாயந் தீர்க்கிறாள்.  இச்சையும் தன்முனைப்பும் இன்றி இங்கு அறிவும் அறமும் சாத்தியமே இல்லை என்பது விண்ணகத்தின் தீர்ப்பு.  அவை இல்லாமலேயே அயோக்கியத்தனம் செய்வது அறத்தைக் கையாள்வது என விண்ணின் சாத்தியங்கள் வேறு.

கத்ருவின் நிழல் போல் சத்தியவதி தோன்றுகிறார்.  சத்தியவதியை வில்லியாகக் கருதவிழையும் என் எண்ணம் ரத்து செய்ய வேண்டியதாகிறது.  மொத்த முதற்கனலில் கதாநாயகனாக இக்கணத்தில் பீஷ்மர் நிற்கிறார்.

குலம் பெருக்கி அரசாள வேண்டிய பீஷ்மருக்கு பிரம்மச்சரியத்தை திணித்தவளாக ரிஷி வியாசரை குலம் பெருக்கச் செய்தவளாக சத்தியவதி.  அவள் ஷத்ரியரையும் பிராமணரையும் சுட்டிக்காட்டி பீஷ்மரிடம் சொல்லும் நியாயங்கள் ஏற்புடையவையாக இல்லை எனினும் மாற்றுத் தாயின் புதல்வனை ஏற்கமுடியாத எளிய பெண் என்றும் அவளை வகுத்துவிட முடியாது.  பெரும் புகழ் கங்கையை யமுனை ஆள்கிறது.  அது இன்று வரை பாரதத்தில் அப்படித்தான்.

பீஷ்மர் வியாசரின் எதிர்முனையில் நிற்கிறார்.  அழகானது என ரசித்து வாசித்த எண்ணற்ற வெண்முரசு வெளியில் ஓர் இடம் பீஷ்மர் தனக்கு முன்பிறந்து இறந்துவிட்ட குழந்தைகளை சுமந்தே இருக்கிறார் என்பது.  முன் தேவாபியைச் சுமந்த பால்ஹிகர் பின்னாளில் தன் உடன்பிறந்தாரை சுமக்கப்போகும் பீமன் என ஒரு தொடர்ச்சி.  இதில் ஒரு படிநிலையும் இருக்கிறது.  ஒரு கோணத்தில் பால்ஹிகரைக் காட்டிலும் மேலெழுந்தவராக பீஷ்மர் பீஷ்மரைக் காட்டிலும் மேலெழுந்தவனாக பீமன்.  பிரம்ம ஞானமும் பெண்ணின் அன்பும் இரண்டிற்குமே தகுதியற்றவராக தன்னை கூறிக்கொள்ளும் முதற்கனலின் பீஷ்மரைப் போல் அல்லாமல் பிரம்ம ஞானம் ஒருபக்கம் கிடக்கட்டும் என பெண்ணின் அன்பை பெற்றவன் திரௌபதியின் அன்பில் திளைக்கும் வரம் பெற்றவன் பீமன்.

பிரம்மச்சரியம் பெருவலிமை என்ற இரண்டை எடுத்துக்கொண்டு பீஷ்மரை ராமாயணத்தின் அனுமனோடு ஒப்பிட்டு வியக்கிறேன்.  ராமன் மீதான பெரும் பக்தியை அளித்து அனுமனை சிக்கலில்லாமல் பார்த்துக்கொண்டார் ஆதிகவி.  சிக்கல்கள் ராமனுடயவை அவன்மீது பேரன்பு கொண்ட உதவும் வலிமை வாய்ந்த பிரம்மச்சாரி அனுமன் அவ்வளவுதான்.  பிரம்மச்சரியம், பெருவலிமை, ஆனந்த பரவசம், அறிவு, அருள்நிறை என அனுமனைப் பேணிக்கொண்டார்.  அவ்வாறல்லாமல் பீஷ்மருக்கு சிக்கல்களை அளித்து பெருநதியின் வேகம் தடுத்துநிறுத்தி அனுமன்போல் விண் எழவும் வாய்ப்பு மறுத்து வேங்கையை சிறையெடுத்து தனிமையில் ஆழ்த்துகிறார் வியாசர்.

சுவையான மற்றொரு இடம் சூதர் பீஷ்மரின் கதையை பீஷ்மரிடமே (அவர் பீஷ்மர் என அறியாமல்) கேலியுடன் கூற கேட்டு ரசித்து பின்னர் பொற்காசுகளை உறங்கும் சூதரின் காலடியில் பீஷ்மர் வைத்துச்செல்வது.  கடக்க முடியாத, வகுக்கப்பட்ட எல்லையில் தன்னை தன்னிலிருந்து விலக்கிக்கொள்ளும் விவேகி அவர்.  மலைமுகட்டில் அமர்ந்து தவம் செய்பவன் அனுமன் அவன் விடுதலை பெற்றவன் நினைத்த கணத்தில் விண்ணில் தாவ அவனால் இயலும்.  பீஷ்மர் மலையின் கீழ் இருட்குகையில் சிலந்திவலைப் பின்னலுக்குள் அமர்ந்து தவமிருப்பவர்.

முதற்கனல் கனன்று எழுந்த பின் பிற்பகுதியில் கனிந்து அருட்சுடர் என நிலைகொள்கிறது.  மூர்க்கம் மிக்க பன்றியென சிகண்டியாக தன் சினத்தை பீஷ்மர் மீது செலுத்தும் அம்பை பின் கனிவுகொண்டு ஊர்வரையாக அவரைக் காவல்செய்யவும் விழைகிறாள்.  அதுவிதியின் பாற்பட்டு நிகழாது வேறுவழியில்லை என்றிறுக்க தன் வெஞ்சின நோய் தீர்க்க மருந்ததென அவர் உயிரை அவர் பாதம் பணிந்து பெற்றுவர சிகண்டியைப் பணிக்கிறாள் என்னும் எண்ணம் எழுகிறது.  பீஷ்மரை வீழ்த்த அவரிடமே கற்றுக்கொள்கிறான் சிகண்டி.  அம்பையின் இக்கனிவு வெண்முரசின் பிற்பகுதியில் திரௌபதி கொள்ளும் கனிவை நினைவூட்டுகிறது.

இக்கணம் முதல் வியாசரைக் கதாநாயகனாகக் கொள்கிறேன்.  அவரது மகன் சுகமுனிவருக்கு வாய்த்தபேறு, தென்மதுரை பெருஞ்சாத்தன் கொண்ட பேறு வியாசருக்கு அமையாததல்ல ஆனால் காத்திருக்க வேண்டும் அவரால் நிகழவேண்டியவை நிகழ்ந்தாக வேண்டும்.  மெய்மை நோக்கில் பயணப்படுபவருக்கு சந்ததி பெருக்கி அவற்றின் வாழ்வை அதன் விழைவுகளை ஆணவங்களை அன்பை அறம் அறமின்மைகளை வீரத்தை இறுதியில் வீழ்ச்சியை எனக் குலக்கதையை காவியமியற்றும் பணி அமைகிறது.  அவரது மெய்மையை அவர் அப்படிச் சென்றுதான் அடையமுடியும்.  சுகமுனியும் பெருஞ்சாத்தனென்னும் தென்முனியும் அப்படித்தான் அவரது வழியென்கிறார்கள்.  ஒருவகையில் அரசியல் கலப்பற்ற ஆன்மீகம் வியாசருக்கு சாத்தியமல்ல என்று கூட தோன்றுகிறது.  இளைய யாதவர் என்பது அவர்தான் என்றபோதும்.  விஷ்ணுவே அவர்தான் என்றபோதும்.

இங்கு யமுனைக்கும் கங்கைக்கும் காவிரிக்கும் மட்டுமல்ல மெய்மைக்கும் புவியியல்தான் பாதைவகுத்து அளிக்கிறது.  அரசியல் பண்பாடு வரலாறு அகம் புறம் உளவியல் உடலியல் மெய்யியல் என எல்லாவற்றிற்கும்.  ஆஸ்திகனும் பீஷ்மரும் வியாசரும் மேற்கொள்ளும் பெரும் பயணங்கள் அந்த எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.  பெரும்பாலை சிபிநாடு கங்கர் நிலம் கங்கை நீர்வழிப்பயணம் விந்தியக்காடுகள் எனப் பல.

ஆஸ்திகன் அஸ்தினபுரி சென்று சர்ப்பசத்ர வேள்வி நிறுத்தி மீள்வது, கிருஷ்ணை நதிக்கரை நாகர்களைக் காக்க அஸ்தினபுரியுடன் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கை எனக் குறியீடாகக் கொள்ளவும் இடமளிக்கிறது.  தவிர்க்கமுடியாமல் நிகழ்ந்துவிட்ட பேரழிவுகளில் இருந்து மீண்டும் மீண்டும் பாடம் கற்றுக்கொள்வது கலைத்து கலைத்து அடுக்கிக்கொள்வது அனைவருக்குமான பொதுநலன்களைப் பேணிக்கொள்வது தனிநலன்களைப் பாதுகாத்துக்கொள்வது என இப்பெருநிலத்தின் அரசியல் வரலாற்றுப் பாதைகளை வெண்முரசு வழங்கும் அகக்கண்களின் வழியாக கண்டுகொள்ளமுடியும்.

வெப்பநாட்டில் முக்தியை நிர்வாணம் எனத் தருபவளும் குளிர்நாட்டிற்கு கதகதப்பான சொர்கத்தை வகுப்பவளும் புவியன்னைதான்.  யமுனையின் வியாசரையும் சுகசாரி சுகமுனியையும் தென்மதுரை பெருஞ்சாத்தனையும் இங்கு கண்முன் நிறுத்துபவள்.  சித்தார்த்தனை போதிமரத்தடியில் அமர்த்தி புத்தனாக்கியதும் ஏசுவை சிலுவையில் அறைந்து விண்ணேற்றியதும் அவள்தான்.

இம்மண்ணை, இதன் அருகமைந்த நிலங்களை, மொத்தபுவியை புறத்தில் கண்டு அகத்திற்கென அள்ளியெடுத்தக் கொள்ளும் பேராவலாக இருக்கிறது வெண்முரசு.  முதற்கனலில் துவங்கும் அது தன்னை அவ்வாறே நிறைவேற்றிக்கொள்வதில் வெற்றி அடைந்திருக்கிறது.

முதற்கனல் வாசிப்பனுபவம் – விக்ரம்

வேள்விமுகம் முதல் மணிச்சங்கம் வரை

சொல்முகத்தின் வெண்முரசு கூடுகையை முன்னிட்டு முதற்கனலை மறுவாசிப்பு செய்தது உள்ளம் நிறைத்த அனுபவமாக இருந்தது.  நாகர்குலத் தலைவி மானஸாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு புடவியின் தொடக்கம் முதல் தனக்கு அவன் பிறந்தது வரை நாகர்குல வழக்கில் கூறுவதில் தொடங்கி அஸ்தினபுரியில் பேரரசன் ஜனமேஜயன் நடத்தும் சர்ப்பசத்ரமென்னும் உலகின் மொத்த நாகங்களையும் அழித்துவிடும் பெருவேள்வியினை ஆஸ்திகன் நிறுத்துவதும் அதன் தொடர்ச்சியாக அவனுக்கும் ஜனமேஜயனுக்குமான கருத்து முரண்பாட்டை வியாசர் ஆஸ்திகன் தரப்பில் சரியே என்று தீர்ப்பளித்து தொடர்ச்சியாக மாபாரதமென்னும் அவரது ஸ்ரீஜய காவியம் வைசம்பாயனரால் பாடத்தொடங்கப்படுவது வரை சென்று அமைகிறது முதற்பகுதியான வேள்விமுகம்.  நாகங்களை இச்சை மற்றும் அகங்காரத்தின் குறீயீடாக கொண்டு அந்த அடிப்படை விசைகளே புடவின் உயிர் இயக்கத்திற்கு காரணமாக அமைவதும் அவையில்லாமல் உயிரோட்டமற்றதாக புவி வாழ்க்கை ஆகிவிடும் என்பதைக் கூறுகிறது.

அஸ்தினாபுரியென்னும் பிரமாண்ட நகரை அறிமுகம் செய்து அதன் பெருமைமிகு அரசர் நிரை கூறி இன்று அது எதிர்கொண்டிருக்கும் சிக்கலை அறிமுகம் செய்கிறது பொற்கதவம்.  பீஷ்மர் சத்தியவதியின் ஆணைப்படி விசித்திரவீரியனுக்காக காசி மன்னனின் புதல்விகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை கவர்ந்துவர அவர் உள்ளம் கொள்ளும் அறச்சிக்கலைக் கடக்க வியாசரின் விடையைத் தெரிவி்த்து அமைகிறது இப்பகுதி.  தீர்கசியாமர் என்னும் பெரும் சூதர் பீஷ்மருக்கு கூறுமுறைமையில் வியாசரின் துவக்கம் கூறப்படுகிறது.

காசியில் நடைபெறும் சுயம்வரமும் அங்கு சென்று பீஷ்மர் அக்கன்னியரைக் சிறையெடுப்பதில் தொடங்கி சால்வ மன்னனாலும் தந்தை பீமதேவனாலும் பீஷ்மராலும் புறக்கணிக்கப்பட்டு அம்பையென்னும் வடிவில் மாபெரும் எதிர்காலப் போர் ஒன்றிற்கான முதற்கனல் விழிகாணும் விதமாக எழுந்து துலங்குவதை கூறி மிகப்பொருத்தமாக எரியிதழ் என்று தலைப்பு கொள்கிறது அடுத்த பகுதி.  எரியின் இவ்விதழ் அதன் முதற்தொடக்கமாக தாட்சாயணியென்னும் சதிதேவியைத் காட்டுகிறது.  தட்சனென்னும் நாகத்தின் மகளாகப் பிறக்கும் அவள் இறைவனின் விண்ணின்பால் மீண்டுற தனக்கான சர்ப்பசத்திர வேள்விபோல் முன்னம் எரிபாய்ந்த இறைவியாவாள்.  அவ்விறைவியின் எரிதல் அணையாமை கூறி அம்பையின் அன்னை அம்பையையே கருதி நெருப்பின் காயமுற்று உயிர்துறப்பது வரை செல்கிறது அணையாச்சிதை.  சூதர்கள் அம்பையைக் குறித்து பாடுவதை அவள் சீற்றம் கொண்ட தெய்வ உருக்கொண்டதை அவளது கனலைப் பெற்றுக்கொள்ள, பெண்பழியின் கணக்கைத் தீர்க்க, உத்திர பாஞ்சாலத்தின் மன்னன் தவிர பிறர் பீஷ்மரை அஞ்சி தவிர்ப்பதை விசித்திரவீரயன் தன்னை முன்னிட்டு அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் தவிப்புற்று அவளைத் தேடிச்சென்று பணிவதை அவள் அவன்பால் அருள் கொள்வதை கூறுகிறது.

புதிய பெருநகர் நுழையும் அம்பிகையும் அம்பாலிகையும் கொள்ளும் எண்ணங்களும் அச்சிறுமிகளின் நடத்தையும் சுவாரஸ்யமானவை, அவர்கள் விசி்த்திரவீரியனை மணமுடிப்பது முதலில் வெறுத்து பின் அவனை கனிந்து அம்பிகை ஏற்று காதல் கொள்வது அவன் மறைவது வரையிலான பகுதி மணிச்சங்கம்.  அம்பிகையும் அம்பாலிகையும் உண்மையில் அம்பையைவிட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பரிவு தோன்றுகிறது.  இப்பகுதியில் விசித்திரவீரியன் அவனது தந்தை சந்தனுவையும் தன் உடன்பிறந்த பீஷ்மரென்னும் மாமனிதனையும் தீர்க்கசியாமரின வாயிலாக உணர்ந்துகொள்கிறான்.  அம்பையின் கனல் எத்தகையது என்றபோதும் அதன் பழி தன்னைத் தொடாத உயரத்தில் இருப்பவர் பீஷ்மர் என்ற எண்ணம் ஏற்பட்டது.  அறத்திற்கும் அறமின்மைக்குமான இடத்தில் அல்ல அவர் முன்னம் பழம்பிறப்பில் சிபியென கூட அவர் அறத்திற்கும் அறத்திற்குமான எல்லையில் அல்லது அறத்திற்கும் பேரறத்திற்குமான சந்தியில் நிற்பவராகவே காண்கிறார்.
வியக்கத்தக்க வகையில் அல்லாமல் இங்கு பீஷ்மருக்கு பேரறத்தின் முன்னம் மனித அறத்தின் எல்லை உணர்த்தும் வியாசரே பின்னாளில் அதையே ஜனமேஜயனுக்கு உணர்த்துபவராகவும் இருக்கிறார்.  ஜனமேஜயனுக்கு மட்டுமல்ல ஜெயமோகனாக நமக்கும் அவரே இன்று வெண்முரசறைந்து உணர்த்துகிறார்.

எரியிதழ், அணையாச்சிதை, மணிச்சங்கம் என்ற இம்மூன்று பகுதிகளில் மைய ஓட்டத்திற்கு இணையாகச் செல்லும் புராணக்கதைகள் ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொள்ளும் ஆடிகள் போல.  பெண்ணின் துயரும் சீற்றமும் விதியும் என தாட்சாயணி, பெண்ணின் வெற்றி என மகிஷனை வென்ற இறைவி, ஆண்பால் கொள்ளும் கனிவு என சத்தியவானைத் தொடரும் சாவித்ரியின் கதை.  இதில் ஒரு படிநிலைபோன்ற அமைவு இருக்கிறது.
அம்பிகை விசித்திரவீரியன்பால் கொள்ளும் காதல், அவர்களது உரையாடலின் தருணங்கள் இனியவை.  அவன் தன் பேரன்னை சுனந்தையின் துயரமிக்க வாழ்வை அவளுக்குக் கூறுகிறான்.  அதேவிதமான மக்கட்பேறு என்ற ஒரு காரணத்தின் பொருட்டு துயர் திணிக்கப்பட்டவர்கள் தானே அவளும் அம்பாலிகையும்.

சித்திராங்கதன் இங்கு திகழாதவனாகவே செல்கிறான்.  விசித்திரவீரியன் குறுகிய ஆயுள்கொண்ட போதும் தன் இயல்பால் அனைவரையும் வெல்கிறான்.  அன்னை சத்தியவதியை மட்டும் அவன் வென்றானா என்பது என் அய்யமே.  அவனுக்கும் அமைச்சர் ஸ்தானகருக்குமான நட்பு சுவையானது.  அவனை இறைவன் என்றுகொள்ளும் நேசம் உடையவர் அவர்.  வேறு ஏதும் கடமை தந்துவிட வேண்டாம் இதுவே என் வாழ்வின் நிறைவு என்று அவன் மறைவில் துறவைத் தேர்ந்துகொள்கிறார் அவர்.

இங்கு பெண் உறும் துயர் என்றாலும் கூட அவை ஷத்திரியப் பெண்களுக்குரியவையாகவே இருக்கின்றன.  மீனவக் குலத்தவரான பேரரசி சத்தியவதியும் கங்கையும் எவ்வகையிலும் தங்கள் சுதந்திரத்தை இழந்தவர்கள் அல்ல.  தாட்சாயணி, சுனந்தை, அம்பை ஒரு நிரை என்றால் சீதையும் அதன் பிறிதொருவகை என்ற எண்ணம் தோன்றுகிறது.

எண்ணற்ற நுண்மைகள் கொண்டதாக இருக்கிறது முதற்கனல்.  பாலாழி கடையும் தேவர்கள்-அசுரரின் புராணக்கதை கூறப்படுகிறது.  நஞ்சு இல்லாமல் வாழ்க்கை இல்லை நஞ்சைக் கடக்காமல் மெய்மை இல்லை.  கடத்தற்கரிய நஞ்சை கடக்கத் தேடி நுழைபவர்களுக்கு அவர்களுக்கான நீலகண்டனை கண்டடைய பெரும் இணை வாழ்வைத்தரச் சித்தமாக இருக்கும் வெண்முரசின் திருஆல வாயிலாக இருக்கிறது மெய்மை நோக்கின் இந்த முதற்கனல்.