
ஒரு நாவல் வாசிப்பு தியான அனுபவத்தை அளிக்க முடியுமா? எல்லா நாவல்களாலும் அல்ல. அரிதான சிலவற்றால் அவ்வாறு அளிக்க முடியும் விஷ்ணுபுரத்தைப் போல. கனவுகள் நம்மை மெய்மையின் கரையில் கொண்டு நிறுத்த முடியுமா? ஏன் முடியாது? மொத்த உலகை, வாழ்வை கனவுக்கு ஒப்பிட்டுதானே மெய்மையை சுட்டுகிறார்கள்? ஆனால் எல்லா கனவுகளும் அல்ல விஷ்ணுபுரத்தைப் போல ஒருசில மட்டுமே. அவை மெய்மைக்கு மிக அருகில் செல்பவை அங்கு தம்மை கலைத்துக் கொள்பவை. ஞானிகள் கலைஞர்களை, காவியங்கள் படைக்கும் மகத்தான எழுத்தாளர்களை பெரும் கவிஞர்களை பேணுகிறார்கள். ஏனெனின் இக்கனவுகளின் முக்கியத்துவம் அவர்கள் நன்கறிந்தது. இவை நம் சாதாரண விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையே வரும் கனவுகள் அல்ல, மாறாக நாமறிந்த அனைத்தையும் உறக்கம் எனக்கொண்டு மெய்மையை விழிப்பு எனக்கொண்டு அவ்விரண்டிடையேயான கனவுகள். ஒருவேளை விழித்தாலும் விழித்துக்கொள்ளலாம் அல்லது உறங்கிவிடலாம். மெய்மையின் எந்தவொரு வாய்ப்பும் இங்கு அங்கீகரிக்கப்படாமல் எவ்வாறேனும் பேணப்படாமல் இருந்ததில்லை. எந்தவொரு வாய்ப்பிலும் போலவே இதிலும் தவறவிடும் சாத்தியமும் உள்ளது. அது ஊழ் எனலாம் அல்லது உங்களுக்கான கதவு வேறொரு இடத்திலிருக்கிறது.
விஷ்ணுபுரம் உலகியல் உறக்கத்தைத் திரட்டி ஒரு கனவினை எழுப்புகிறது. அக்கனவினை மெய்மையை நோக்கி செலுத்துகிறது. கனவு எப்படியும் கலைய வேண்டியதுதான். எனினும் எச்சரிக்கை மேற்கொள்கிறது. கனவு இடையில் கலைந்து விடக்கூடாது. அது உரிய திசை சென்று கலைய வேண்டும். அது இப்புறம் முற்றிலும் உலகியலில் விழுந்துவிடக் கூடாது அதேசமயம் தானே மெய்மை என்று அது சொல்லவும் கூடாது. தானும் உலகியலே என்று தனக்கே சொல்லிக்கொண்டு அப்பால் சென்று மறைய வேண்டும். கௌஸ்துபம் – முழுவதும் – ஞான சபை விவாதங்கள் அதன் தர்க்கங்கள் – உரத்துப் பேசுவதில்லை. கௌஸ்துபம் ஆம் இது உலகியல் தான் ஆனால் விஷயம் அதுவல்ல என்கிறது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம் – இவ்விரண்டோடு ஒருவேளை நிறுத்தபட்டிருந்தாலும் விஷ்ணுபுரம் மகத்தான நாவல்தான். ஸ்ரீபாதத்தில் மலைமீது ஏறிச்சென்று அங்கு காஸ்யபரைக் காண்கிறார் சிற்பி. அங்கிருந்து அழிக்கப்பட வேண்டிய விஷ்ணுபுரம் சுட்டிக் காண்பிக்கப்படுகிறது. கௌஸ்துபத்தில் நிலத்தின் அடியில் இருந்து பிரதிபலிப்பாக காட்சிகள் பிறழ்ந்த விஷ்ணுபுரத்தை (ஞான சபையை) சித்தன் தன் சீடன் காஸ்யபனுக்குக் காண்பிக்கிறான். அது கடந்த காலத்தின் விஷ்ணுபுரம். மணிமுடி மிச்ச மீதம் இன்றி விஷ்ணுபுரத்தை முழுவதுமாக அழிக்கிறது. அம்மாபெரும் கோபுரங்களை மட்டுமல்ல அனைத்துவிதமான தன்முனைப்பின் கட்டுமானங்களையும்.
பலவிதங்களில் பலகோணங்களில் நோக்க முடியும். ஹரிததுங்கா மலைக்காக அதன் முகில்களுக்காக பொன்னிறம் பொழியும் வானுக்காக செந்நிற சோனாவிற்காக அதன் மீன்களுக்காக கோபுரத்தில் மோதிச் சரியும் பறவைகளுக்காக வைஜயந்தி என்னும் வெண்புரவிக்காக விண்ணுலகம் தொடும் கோபுரங்களுக்காக ஆலயத்தின் சிற்பங்களுக்காக மரமல்லி மரத்திற்காக மிருகநயனிக்காக மலர்களுக்காக – என இதன் அழகியலுக்காக – கவிதைக்காக இசைக்காக அங்கததிற்காக வாசிக்கமுடியும். இதன் தத்துவ விவாதத்தின் வழியாக இங்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும், நோக்கப்படுபவற்றிக்காக – மெய்காண் வழிமுறைகளுக்காக என அக்கோணத்தில் நோக்க முடியும். உலகின் நிலையாமை கூறுவது எனச் சொல்லமுடியும் அமைப்புகளின் அதிகாரங்களின் தனிமனிதர்களின் அநீதி சுட்டுவது என கூறமுடியும். மிக சாதாரணமானவர்கள் அசாதாரணமானவர்கள் ஆக்கப்படும் புராணங்களின் கட்டுடைப்பு எனச் சொல்லமுடியும். வைணவம், தொல்குடி சமயம், பௌத்தம் அல்லது அதெல்லாம் அப்படியொன்றுமில்லை இது தாந்த்ரீகம் தாந்த்ரீகமே என முடியும் – நான் அப்படித்தான் சொல்லுவேன் அதுவும் சைவ யோக தாந்த்ரீகம்
புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே.
பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் ஆங்கே
முற்ற வரும் பரிசு உந்தீ பற
முளையாது மாயை என்று உந்தீ பற
விஷ்ணுபுரத்தின் கதாபாத்திரங்கள் அஜிதன், சுடுகாட்டு சித்தன், காஸ்யபன், பவதத்தர், நீலி, பிங்கலன், பாவகன், யோகாவிரதர், சந்திரகீர்த்தி, சங்கர்ஷ்ணன், லட்சுமி என பலர் அல்லது அவருள் சிலர் நம்மிடம் நம் உள்ளத்தில் தமக்குரிய இடத்தை பெற்று அமரக்கூடும். ஏராளம் அப்படி வந்து விட்டார்கள். சமீபத்தில் போரும் அமைதியும் பியர் அப்படி வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார். இத்தனைக்கும் அவர் நட்டாஷாவைத் திருமணம் செய்துகொண்டது எனக்கு பிடிக்கவில்லை என்று அவரிடம் நான் சொல்லிவிட்டபோதும்.
ஒன்றுமட்டும் – உலகியலை (காமம் உள்ளிட்ட அனைத்தையும்) முற்றாக புறக்கணித்து மெய்மையை எட்டமுடியாது. உலகியலை முற்றாக கடக்காமலும் மெய்மையை எட்டமுடியாது. விஷ்ணுபுரம் அதன் தியான அனுபவம் என்பது உங்களைப் பொறுத்தது. ஓஷோவால் மிகவும் புகழ்ந்துரைக்கப்படும் மிக்கேல் நைமியின் “மிர்தாதின் புத்தகம்” – உண்மையில் அது அவ்வாறு தகுந்தது எனினும் என்னளவில் விஷ்ணுபுரம் அதைவிட மேலானது. நைமியின் மிர்தாத் அற்புதமாக போதனைகளாக கவித்துமாக அன்பை பெருங்கருணையை மெய்மையை உணர்த்தும் விதமாக பேசுகிறார். ஆனால் அவர் ஒருவரது பேச்சாக ஒரு ,மகானின் சொற்பெருக்காகவே அது இருக்கிறது. முற்றிலும் ஏற்புடன் அன்புடன் வாசித்து அதை உணரமுடியும். விஷ்ணுபுரத்தில் வாழ்கை இருக்கிறது. போதனைகள் இல்லை. ஏற்பு-மறுப்பு, பரிசீலனை என்று சென்று மறுத்து மறுத்து சென்று சொற்களால் தொடமுடியாத அந்த இடத்தை நெருங்கி சொல்ல முற்படாமல் மௌனம் கொள்கிறது.