‘களவு போகும் புரவிகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சொல்முகம் – சு. வேணுகோபால் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.
நம் அன்றாட வாழ்வில் சற்று அறிந்திருக்கக் கூடிய, கேள்விப்பட்டிருக்கக் கூடிய, மேலோட்டமாக கவனித்திருக்கக் கூடிய அல்லது நம் தீவிர கவனத்தை ஈர்த்திருக்கக் கூடிய மனிதர்கள் என பலதரப்பட்டவர்களை தன் பாத்திரங்களாக உள்ளடக்கியது சு. வேணுகோபால் அவர்களின் களவு போகும் புரவிகள் சிறுகதைத் தொகுப்பு. அப்பாத்திரங்களில் சிலராக நம்மை நாம் உணரவும் கூடும். தன் குழந்தையை தெருவில் மற்ற சிறுவர் சிறுமியரோடு விளையாடக்கூடாது என்று சொல்லும் அம்மா, பூங்காவில் பேருந்து நிலையங்களில் அல்லது வேறு எங்கேனும் தன் வாடிக்கையாளரை கண்டுகொள்ளும் விலைமகள், போதைப் பொருளுக்கு அடிமையாகி வேறொன்றாகி விட்ட இளைஞன், என்ன ஆனபோதும் விடாப்பிடியாக விவசாயத்தைக் காதலிக்கும் விவசாயி, மக்களிடம் எரிச்சல்படுகிற அல்லது சிரித்துக் கொண்டே தம் சக ஊழியர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே வேலை பார்க்கும் வங்கி ஊழியர்கள், காதல் திருமணம் செய்து உறவினர் தொடர்புகள் இன்றி தனித்து வாழும் இளம் தம்பதியர், காவலரின் கடுமையை எதிர்கொள்ளும் எளியவர், செம்பட்டைத் தலையுடன் கிழிந்த அழுக்கு உடையுடன் காலில் பாலிதீன் கவர்களை செருப்பாக கட்டிக்கொண்டு கடும் வெயிலில் தனக்குத்தானே பேசிக்கொண்டு செல்லும் மனநலம் பாதிக்கப்பட பெண், உங்களுக்கு குத்துமதிப்பாக வைத்தியம் செய்யக்கூடிய பெயர் தெரிந்த டாக்டர், மனிதர்கள் மட்டுமல்ல நீங்கள் பார்த்திருக்கக் கூடிய பெரிய வேப்ப மரம், கால்நடைகள், என இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் வெவ்வேறு வகையினர். வெவ்வேறு வகையினர் எனினும் அவர்களில் பலருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமையை உணர்த்துகிறது களவு போகும் புரவிகள். அவர்கள் தங்கள் புரவிகளை வாழ்வின் மாயங்களுக்கு பறிகொடுத்தவர்கள். தம் உண்மையுடனும் தீவிரத்துடனும் மட்டுமல்லாமல் இக்கதைகள் நடையிலும் கூட தேவைக்கு ஏற்ப புரவியைப் போலேவே செல்கின்றன என்று தோன்றுகிறது.

களவு போகும் புரவி கதையில் சௌடம்மன் கோவில் திருவிழாவையொட்டிய ஒரு தொன்மைக் கதை கூறப்படுகிறது. அரச குதிரை லாய அதிகாரியான கதிரய்யாவிடம் தன் குதிரையை இளைப்பாற்றிக் கொள்ள ஒருநாள் மட்டும் இடம் கேட்டு வருகிறான் யதுசா என்ற அந்நியன். அவன் குதிரைக்கு லாயத்தில் இடம் மறுக்கும் கதிரய்யா தன் எஜமானருக்கு இருக்கும் வழக்கம் ஒன்றைச் சொல்கிறார். லாயத்தின் நான்கு மூலைகளிலும் அமைந்திருக்கும் மேடைகளில் எந்த ஒன்றில் ஏறிநின்று பார்த்தாலும் அவர் கண்களுக்கு பன்னிரண்டு குதிரைகள் தெரிய வேண்டும். அவ்வாறே தான் வைத்திருப்பதாகச் சொல்கிறார் கதிரய்யா. யதுசா அதைப் பற்றி தான் பார்த்துக் கொள்வதாக கூறுகிறான். அவனது மரியாதையான பேச்சிற்காகவும் அவன் தரும் சன்மானத்திற்காகவும் அவன் மீது தோன்றும் பரிவினாலும் அவனது குதிரையை லாயத்தில் இருத்திக்கொள்ள அனுமதி அளிக்கிறார் கதிரய்யா. தன் குதிரையை லாயத்தில் சேர்க்கும் அவன் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் பன்னிரண்டு குதிரைகள் கண்ணில் தெரியும்படி அமைக்கிறான். அவன் மாயவித்தைகளை அறிந்தவனாக இருக்கிறான். பின்னர் மலைப்பாதையில் திரும்பிச் செல்லும் யதுசா எட்டு குதிரைகளை கொண்டு செல்கிறான் யதுசா. கெஞ்சும் கதிரய்யாவிடம் லாயத்தில் சென்று மூலை மேடைகளில் நின்று பார்த்து விட்டு வரச்சொல்கிறான் அதுவரை தான் காத்திருப்பதாக சொல்கிறான். கதிரய்யா சென்று ஒவ்வொரு மூலையில் இருந்தும் பார்க்க பன்னிரண்டு குதிரைகள் தெரிகின்றன. யதுசாவிடம் சென்று தெரிவிக்கும், அஞ்சும் கதிரய்யாவிடம் தன் பையிலிருந்து வெள்ளிக் காசுகளை அள்ளி வீசிச் செல்கிறான் யதுசா. நரிதனை பரியாக்கி தன் அடியவனைக் காத்தருளும் பொருட்டு ஆணவம் நீங்கும் பொருட்டு இறைவன் செய்தது போன்றதல்ல இம்மாயம். இடமளித்தவனை, அவன் பலகீனங்களைக் கொண்டு கொள்ளையடித்த அந்நியன் செய்த மாயம்.
இத்தொகுப்பின் சில கதைகளிலும் அவற்றின் மையக் கதைமாந்தர்களுக்கேயான புரவிகளை மாயம் காட்டி பறித்து செல்ல அவர்களுக்கேயான யதுசா இருக்கிறார். அந்த யதுசா ஒவ்வொருவருக்கும் தனி ஒருவனாக அல்லது சில நபர்களாக, உறவுகளாக, தனிப்பட்ட சூழ்நிலைகளாக, தன் முனைப்பாக, சமூக பொருளாதார காரணிகளாக, மொத்தமாக வாழ்வின் மாயமாக இருக்கிறான். அவர்கள் பறிகொடுத்த புரவிகள் எங்கோ இருக்கின்றன அல்லது அவர்களுக்கு இறந்துவிட்ட அவை அவர்களது நினைவில் மட்டும் வாழ்கின்றன. அம்மாவின் விருப்பங்கள் சிறுகதையில் வரும் நவீன் என்ற சிறுவனுக்கு அவன் தன் நண்பர்களுடன் தெருவில் விளையாடும் இன்பத்தைப் பறித்து பொம்மைகள் நிறைத்து வீட்டிலே விளையாடச் சொல்கிறாள் அவன் அம்மா. அவள்தான் அவனது யதுசா.
மண்ணைத் தின்றவன் கதையில் விவசாயத்தை பெரும் காதலுடன் மேற்கொள்ளும் அதன் நாயகனுக்கு விவசாயம் செய்பவர்களை பெரும்பாலும் நட்டமடையவே செய்யும், இங்குள்ள பொருளியல் சிஸ்டம் யாதுசாவகிறது. மண்தான் காரணம் என்று அபாண்டம் கூற எனக்கு விருப்பமில்லை. காரணம் அவன் மண்ணை நேசிப்பதை, விளையும் வெங்காயத் தாள்களை அவன் முத்தமிடுவதை, அவன் காதலை ஆசிரியர் கூறும் விதம் – அவன் படும் பாடுகள் – இடும் உரங்கள், மருந்துகள். பயிரிடும் நுணுக்கங்கள் என விவரிப்பு எக்காரணம் முன்னிட்டும் மண்ணைப் பழிக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அவன் விவசாய வெற்றிக் கனவுகள் உண்மையில் மாயப் புரவிகளாகி காற்றில் மறைகின்றன.
உருமாற்றம் கதையின் நாயகர் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. அந்நாளின் நாட்டுப்பற்றின் அசலான ஒரு மனிதர். சில ஆண்டுகள் சிறையில் கழித்தவர். காமராசரின் அணுக்கம் பெற்றவர். சுத்திரத்தின் பின் வழங்கப்பட்ட தியாகிகளுக்கான சலுகைகைள் அனைத்தையும் மறுத்தவர். வயதானபோது காலத்தின் சூழலின் மாற்றங்களை வெளியே நாட்டின் அரசியலிலும் குடும்பத்தில் மகன் மருமகள் பேரன் பேத்தி என அடுத்த தலைமுறைகளிலும் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர். அவரது லட்சியங்கள் கடந்த காலத்தவை ஆகிவிட்டன. அவர்களது ஆர்வங்களும் ஆசைகளும் வேறு. அவரது நீலவாணன் என்ற பேரன் தன் பெயரை ஸ்டயிலாக இருக்க வேண்டும் என்று ஆகாஷ் என்று மாற்றிக் கொள்கிறான். சினிமாவில் சேர்ந்துவிட ஆர்வம் கொண்டிருக்கிறான். பேத்தி ஆங்கில உச்சரிப்பு சரியில்லை என்று தன்னை பெண்பார்க்க வரும் பையனை நிராகரிக்கும் அளவிற்கு ஆங்கிலத்தின் மீது அக்கறை கொண்டவளாக இருக்கிறாள். அவர் எந்த கட்சியில் இருந்து நாட்டு விடுதலைக்கு பாடுபாட்டாரோ அதே கட்சி அவருக்கு உவப்பில்லாத உலகமயமாக்கலைச் செய்கிறது. மனத் தவிப்பும் குழப்பமும் என அவர் நாட்கள் செல்கின்றன. அவர் சுந்தரதினத்தில் தியாகி என்ற முறையில் தொலைகாட்சிக்காக நேர்காணல் செய்யப்படுகிறார். அதன் வாயிலாக ஒரு பிரபல சினிமா இயக்குனரின் அறிமுகத்தையும் நன்மதிப்பையும் அவர் பெற நேர்கிறது. அவரை அந்த இயக்குனர் விருந்துக்கு அழைக்கிறார். விருந்து முடிந்து புறப்படும் சமயம் ஒரு உதவி வேண்டும் என்று கேட்க, ஆர்வமுடன் முன்வரும் இயக்குனரிடம் அவர் தன் பேரனுக்காக சினிமா வாய்ப்பு கேட்க, இயக்குனரின் முகம் மாறுபடுகிறது. பல ஆண்டுகளின் லட்சியவாதத்தின், தன்னல மறுப்பின் அவரது புரவியை காலமாற்றத்தின் மாயம் என்னும் யதுசா களவாடிச் செல்கிறது.
போலவே ‘சங்கிலி’ என்னும் கதை அதன் நாயகன் தன் தந்தையின் அதிக பவுன் வேண்டும் என்ற ஆசையால் காலதாமதமான திருமணத்தால் தன் சிற்றின்பத்தை அதற்கான வயதைத் தொலைக்கிறான். வட்டத்திற்குள்ளே என்ற கதையின் நாயகி சுரண்டல் புத்தியும் அற்பத்தனமும் கொண்ட அவள் கணவனால் அவள் கைத்திறன் கலைத்திறன் வெளிப்படும் வேலையை கூடுதல் சம்பளத்திற்காக விடுகிறாள். அலைச்சலும் சுவாரஸ்யம் இல்லாததுமான வேலைக்கு செல்கிறாள். தன் மட்டமான இரக்க மற்ற கணவனையும் வேலையையும் சகித்துத் கொண்டு தன் பழைய வேலையை எண்ணி ஏக்கம் கொள்கிறாள். சாப நினைவுகள் கதையின் நாயகி மனநலம் பாதிக்கப்பட்டவளாக எச்சில் இலைகளின் உணவைதின்று தனக்குத்தானே ஓயாது பேசி சுற்றித் திரியும் ஒரு பெண். அவள் மிகவும் திறமையான ஒரு, முன்னாள் ஆராய்ச்சி படிப்பு மாணவி. அவளது கல்லூரி நண்பர்கள் அதிர்ச்சியுடன் அவளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ஒரு நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள். பின் அவளது வீட்டை அவளது உறவினரை கண்டுபிடிக்க முடியாமல் மனநல காப்பகத்திற்கு அனுப்புகிறார்கள். புத்திசாலி மாணவியான அவளது எதிர்காலத்தை களவாடியது யார்? அது சொல்லப்படவில்லை யாரோ சிலர் அல்லது அவளது குடும்ப சூழல் அல்லது அவளது தன்னைப்பற்றி எவரிடமும் சொல்லாத தன்முனைப்பு.
‘மாயக்கல்’ கதை பன்றி வளர்க்கும் மூக்கம்மாவை அவளது மகன் பெத்தண்ணணை போலீசால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவர்கள் துயரைச் சொல்கிறது. தற்கொலை செய்துகொள்ளும் பெத்தண்ணணை மாயக்கல்லாக அவளின் கற்பனைக்குத் தருகிறது. அவன் ஒரு தொன்மமாக அநீதி அழிக்கும் தெய்வமாக எழக்கூடும். அது அவளது விருப்பமும் கூட. எளிய மக்களின் அன்றாட வாழ்வையும் அபகரித்துச் செல்லும் ஈவிரக்கமற்றதன்மை எவ்வாறு தோன்றுகிறது. வேம்பு கதை பேடண்ட் ரைட் மூலமாக வெளிநாடு கவர்ந்து கொள்ளும் உள்ளூர் மக்களின் உரிமையை மெல்லிய அங்கதத்துடன் பேசுகிறது. அமெரிக்கா இந்தியாவை ஐநா மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறது. சிறிய அந்த கிராமத்திற்கு தன் அதிகாரிகளை அனுப்புகிறது.
வேம்பு – கீழாநெல்லி மட்டுமல்ல வேறு பலவும் இருக்கலாம். யோகாசனங்களும் மூச்சுப் பயிற்சியும் வேறு பெயரில் வெளிநாட்டு பிராண்ட் ஆகலாம். இந்தியர்களுக்கு தங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை என்று பழைய பேச்சு ஓன்று உண்டு. இன்று இந்தியர்களுக்கு தங்களை உரியமுறையில் உலக சந்தைப்படுத்திக்கொள்ள இன்னும் தெரியவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
‘வெகுதூரம் விலகி’ ஒரு டாக்டரின் கதையை சுவாரஸ்யமாக சொல்கிறது. அவர் தன்னளவில் எதையும் தொலைக்கவில்லை. ஆனால் அக்கதை நாம் அனைவருக்கும் தொலைத்து வெகுதூரம் விலகி வந்துவிட்ட நமது பழங்குடி மருத்துவ முறைகளைச் சொல்கிறது. வெற்றிகரமான நமது பூர்விக மருத்துவத்தின் செல்வங்களை இழந்து மூர்க்கமாக திணித்துக் கொண்டுவிட்ட ஆங்கில மருத்துவத்தை – அதன் பேரில் நிறுவப்பட்ட சுரண்டலை சுட்டிக் காண்பிக்கிறது. அதே சமயம், எளிய பொருளைப் பெற்றுக்கொண்டு அரிய தொண்டினைச் செய்யும் அந்த மலைக்குடி மருத்துவர் மனம் கவர்கிறார். இந்த சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் என் ரசனையின் அடிப்படையில் சொல்வதென்றால் வெகுதூரம் விலகி சிறுகதையைச் சொல்வேன். சரி எல்லா கதைகளுமே ஏதோவொரு வகையில் புரவிகளைத் தொலைத்தவர்களுடையது தானா என்றால் அப்படியில்லை.
இங்கு வேறு இரண்டு அம்சங்களையும் குறிப்பிட வேண்டும். மாயமும் நகைச்சுவை உணர்வும். தருணம் கதையில் வரும் கஞ்சா அடிமையாகி கோமாவில் இரண்டாண்டுகள் கழிக்கும் இளைஞன் கோமாவில் இருந்து வெளிவந்த பின் தன் அனுபவத்தில் காலத்தின் இரண்டு பக்கங்களில் எட்டிப்பார்க்கிறான் எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றின் ஒத்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் காண்கிறான். பின் ஊரில் மதக்கலவரம் நடந்து கொண்டு இருக்கும் சூழலில் நூற்றாண்டுகள் முந்தைய நிகழ்வுகளில் தன்னைக் காண்கிறான். வேம்பு கதையின் வைடூரிய வண்டு தன் அழகின் மாயத்தால் மண்ணை விண்ணுலகுடன் பிணைக்கிறது.

‘உடம்பு’ கதையில் ஜெர்மன் ஊசியால் வயிற்றுக்குள்ளேயே பெரிதாக வளர்ந்துவிட்ட கன்றை பிரசவிக்க முடியாமல் வலியால் துடிக்கும் பசுவை – அதன் வயிற்றிலேயே இறந்துவிடும் கன்றின் காலில் கயிறு கட்டி இழுத்து எடுக்கப்படும் காட்சியை. அப்பசுவின் வேதனையை வாசிப்பவர்கள் பதறும் விதத்தில் சொல்லும் ஆசிரியர் சங்கிலி கதையில் – அப்பாவின் பொன் ஆசையால் தன் வயதைத் தொலைத்த கதைநாயகன் -அவன் சோகத்திற்குள் அங்கத்ததை இழையோடவிட்டிருக்கிறார். கதை முதலிரவின் முயக்கத்தில் தொடங்குகிறது. தன் தோல்விகரமான அந்த முயக்கத்தின் சோகத்துடன் பின்னிரவில் மொட்டை மாடியில் மல்லாக்கப்படுத்து விண்மீன்களைப் பார்த்தவாறே எண்ணங்களை அசைபோடுகிறான். முன்பு திருணம் முடிந்து பார்ட்டி தந்த நண்பன் ஒருவனை நினைவு கூறுகிறான். நண்பர்களுடன் போதையில் அரட்டை அடிக்கும்போது கூட தவறியும் தன் முதலிரவு பற்றி வாய்திறக்காத அவனை எண்ணுகிறான். அவர்களது மற்றும் தன்னுடைய சிற்றன்பம் குறித்த பில்டப்கள். பிற தருணங்கள் – கடும் வற்புறுத்தலுக்குப்பின் பசுவை கூடிவிட்டு சோர்ந்த வயதான அந்த காளை நினைவுக்கு வருகிறது, கூடவே பசுவை துரத்திச் செல்லும் இளம் காளைகள் இரண்டு. அவன் நிற்கும் பேருந்து நிறுத்தத்தின் புளியமரம் இலைகள் மிக குறைந்து காய்ந்து வயதானதாக இருக்கிறது. பேருந்தில் ஏறிய பின் கவனிக்கிறான் அவன் ஏறிய பேருந்து மிகவும் புகை கக்கிக்கொண்டு நிதானமாக பயணிக்கும் தள்ளாத வயதான பேருந்து பிற இளம் பேருந்துகள் அதை சத்தமிட்டு ஒதுக்கி பாய்ந்து கடந்து செல்கின்றன.
வெகுதூரம் விலகி கதையில் தான் உண்மையிலே ஒரு டாக்டர் தானா என்று தனக்கே சந்தேகப்படும் டாக்டர். அவரது முதல் அறுவை சிகிச்சை – ஒன்றுமே இல்லாமல் நெஞ்சில் ஏற்பட்ட சாதாரண காயத்திற்காக வந்தவனை இதய வால்வு கோளாறு என்று பலநாள் அட்மிஷன் போட்டு பிறகு நெஞ்சு பிளந்து பிறகு மூடி அவனது உயிர் காத்த கடவுளாக அவர் அவனது உறவினரால் நோக்கப்படுவது. எக்ஸ்-ரே எடுக்க இரண்டு முறை வேறு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு எக்ஸ்-ரேயில் நுரையீரலே இல்லாமல் இருக்கும் நோயாளி – ஒருவேளை சிவபெருமான் தான் தன்னை சோதிக்க நோயாளி வடிவில் வந்திருக்கிறாரோ என்று அஞ்சி – தனக்கு அப்படி ஒன்றும் அவ்வளவு பக்தி கிடையாதே என்று அவர் எண்ணுவது என புன்முறுவலுடன் வாசிக்கச் செய்கிறது. சவாலான கேஸ்களை கையாண்டதன் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொள்ளும் டாக்டர் நண்பர்கள் – விபத்தில் வயிறு சற்று கிழிந்து குழந்தையின் நான்கு விரல்கள் வெளியே வந்து நீட்டிக்கொண்டிருக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணின் சவாலான அந்த கேஸைக் கையாண்ட சம்பவத்தை பற்றி ஒரு டாக்டர் கூறுவது. குழந்தையை எப்படி விரல்களை உள்ளிழுக்கச் செய்வது என்று பல மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்க வெளியே புகை பிடித்துக் கொண்டே சீரியசாக யோசித்தவாறே நடமாடிக்கொண்டிருக்கும் தலைமை மருத்துவர் சட்டென்று உள்ளே வந்து குழந்தையின் விரல்களில் தன் சிகரெட்டால் சூடு வைக்க குழந்தை தன் விரல்களை சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டு விடுகிறது. இதை பெருமிதத்துடன் ஒரு மருத்துவர் கூற பிற மருத்துவ நண்பர்கள் எல்லா மருத்துவ தர்க்கங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு வியந்து புல்லரிப்பது என சிரிக்காமல் இக்கதையைக் கடக்க முடியாது.

விரைந்தும் தீவிரத்துடனும் உண்மையான உணர்ச்சியுடன் மனிதரின், உயிர்களின் வலிகளை, பசியை, துயரை சொற்களால் உணர்த்தும் ஆசிரியர் சு.வேணுகோபால் அவர்களின் கதைகள் கருணையின் ஈரநிலத்தில் தம் வேர்களைக் கொண்டவை. அத்துடன் மாயாஜாலம் நிகழ்த்தக் கூடிய (யதுசா அல்ல பரிதனை நரியாக்கிய கருணையின் தலைவன் போன்ற) வண்ணமிக்க நகைச்சுவை உணர்வு ததும்பும் அவரது மற்றொரு முகத்தையும் களவுபோகும் புரவிகள் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. எங்களுக்கு அவரும் வேண்டும். இதை ஒரு வேண்டுகோளாக அவரிடம் வைக்கிறோம். களவுபோகும் புரவிகளை பின் தொடர்ந்த இந்த அனுபவத்திற்காகை அவருக்கு நன்றிகள்.
விக்ரம்