ஆறாவது வார்டு வாசிப்பனுபவம் – காளீஸ்வரன்

மனநோயாளிகள் மற்றும் நரம்பு நோயாளிகளின் மனம் மிக மிக ஆற்றல் கொண்டது. ஏனென்றால் அதற்கு பரவலும் சிதறலும் இல்லை. மிகவும் குவிதல் கொண்டது அது. மாபெரும் யோகிகளுக்குரிய குவிதல். ஒன்றிலேயே ஒற்றைப் புள்ளியிலேயே அது பல மாதங்கள், ஏன் பற்பல ஆண்டுகள் நிலைகொள்ளும். அலைபாயும் தன்மைகொண்ட சாதாரண மனங்கள் அந்த ஆற்றலை எதிர்கொள்ளவே முடியாது. அவை மனநோயாளியின் மனங்களுக்கு முன் அடிபணிந்துவிடுவதே வழக்கம்” 

–.திரு.ஜெயமோகன். (”ஓநாயின் மூக்கு” சிறுகதையில்)

*

பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளில், ரஷ்யாவில் கடும் கொள்ளை நோயாகப் பரவிய காலராவைக் கட்டுப்படுத்த பல மருத்துவர்கள் பெருமுயற்சி எடுத்தனர். அரசாங்கத்திடமிருந்து, போதுமான உபகரணங்களோ அல்லது பண உதவியோ கிடைக்கப் பெறாத போதும், தன்னுடைய சொந்தப் பணத்தை, சொத்துக்களைக் கொண்டு கடமையாற்றிய பல மருத்துவர்களுல் ஒருவர் அந்தோன் செகாவ். மற்ற மருத்துவர்களின் பெயரை நாம் அறியாதபோதும் செகாவின் பெயர் நமக்குத் தெரியக் காரணம் அவர் ”காக்கும்” மருத்துவர் மட்டுமல்ல, “படைக்கும்” கலைஞனும் கூட என்பதே. செகாவ்வைப் போல தன்னால் சிறுகதை எழுதமுடியவில்லையே என தல்ஸ்தோய் வருந்துமளவுக்கு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் செகாவ். அவரது முக்கியமான கதைகளுல் ஒன்று என “ஆறாவது வார்டு” எனும் குறுநாவலைச் சொல்லலாம்.

*

ருஷ்ய ஆட்சி மன்றமான “சேம்ஸ்த்வோ”வினால் நடத்தப்படுகிறது ஒரு மருத்துவமனை. அரசு / ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளுக்கே உண்டான அலட்சியங்களிலும் அரைகுறை வசதிகளாலும் நிரம்பிய மருத்துவமனைக்கு மருத்துவராக வருகிறார் டாக்டர் ஆந்திரேய் எமீபிச். அம்மருத்துவமனையின் ஆறாவது வார்டில், இருக்கும் மனநோயாளிகளுடனான அவரது உறவும், அது அவரது வாழ்வில் நிகழ்த்தும் சிக்கல்களுமே இக்கதை. 

ஆறாவது வார்டில் இருக்கும் ஐந்து நோயாளிகளில் இவான் மிகவும் தனித்துவமானவர். நல்ல வாசிப்பும், கூடவே பொறுப்புடன் தன் கடமையை ஆற்றிவரும் வாழ்க்கையும் அமைந்த இவானுக்கு, “தன்னை காவலர்கள் கைது செய்யப்போகிறார்கள்” என விபரீத எண்ணம் தோன்றுகிறது. தொடரும் அவ்வெண்ணத்தின் சிக்கல்களால் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்படுகிறான் இவான். ஆனால், காப்பகத்தில் இருப்பவர்களிலேயே வெகு தெளிவுடன் சிந்திப்பவனாகவும் அவனே இருக்கிறான். மறுபுறம் மருத்துவமனை செயல்படும் விதத்தில் கடும் அதிருப்தி இருந்தபோதும் தன் எல்லைக்குட்பட்டு, தன்னால் இயன்ற மருத்துவத்தை செய்ய முற்படுகிறார் டாக்டர் ஆந்திரேய் எபீமிச். தற்செயலாக இவானுடனான துவங்கும் ஒரு உரையாடல், எபீமிச்சுக்குள் பலவித கேள்விகளை எழுப்புகிறது. இவானுடனான தொடர் உரையாடல்களும், மருத்துவமனையின் அமைப்புக்குள் பொருந்திப்போகாத எபீமிச்சின் இயல்பும், அலைக்கழிக்கும் கேள்விகளால் தடுமாற்றத்துக்கு உள்ளாகும் அவருடைய நடவடிக்கைகளும் என எல்லாமும் சேர்ந்து கொள்ள, ஒரு கட்டத்தில் மருத்துவர் எபீமிச், மன நோயாளி எனகருதப்பட்டு அடைக்கப்படுகிறார். மீள முடியாத ஒரு கூண்டாக அம்மருத்துவமனை அவருக்கு அமைந்து விட, எபீமிச்சின் மரணத்தில் முடிகிறது “ஆறாவது வார்டு”.

*

எந்த வாழ்க்கையிலும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்வதற்கு வாய்ப்புள்ள ஒரு இடமாகவே ஆறாவது வார்டைக் கருத முடிகிறது.  மிக மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நாம் வாழ விதிக்கப்பட்டிருப்பதும், திரும்பத் திரும்ப நம்மை அலைக்கழிக்கும் கேள்விகள் நம்முன் எழாதிருப்பதும், அல்லது நாம் அதைக் காண மறுப்பதும், குற்றவுணர்வின் சாயல் கொஞ்சமும் இன்றி நம்மால் ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமான கழிக்க முடிவதும், முற்றிலும் தற்செயலான ஒன்றாகவே அமைந்திருக்க வாய்ப்புள்ளதுதானே. அப்படிப்பட்ட ஒரு நல்வாய்ப்பைத் தவற விட்டவன் என்றுதான் இவானைக் கருதத் தோன்றுகிறது. இயல்பானது என நாம் வரையறுத்து வைத்திருக்கும் உலகில் இவானுக்கு வாய்க்காத தெளிவு, ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. ஆனால், அங்குமே அது ஊரோடு ஒத்து வாழாத குணமாகவே கருதப்படுகிறது. மருத்துவர் எபீமிச்சுடனாக ஆரம்ப உரையாடல்களில், வெளிப்படும் இவானின் அகம் அவனை ஒரு லட்சிய மனிதன் என்று எண்ணவைக்கிறது. அவனது லட்சிய நோக்குக்கு பதிலாக எபீமிச்சினால் கூற முடிந்ததெல்லாம் நடைமுறை வாழ்க்கை சார்ந்த நெறிகளும், உலகியல் தத்துவங்களும் மட்டுமே. தன்னுடைய சக நோயாளியாக எபீமிச் ஆனதும், தனக்கு அருளப்பட்ட தத்துவங்களை இவான் நினைவூட்டும் விதம் அருமை.

அருமை நண்பரே, உள்ளம் குலைந்துவிட்டேன் – எபீமிச் 

தத்துவ ஞானம் பேசிப்பார்ப்பதுதானே – இவான் 

*

இவானிடம் எபீமிச் பேசும் நடைமுறை வாதங்கள் அனைத்துமே தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளத்தான். முற்றிலும் லட்சிய வேட்கையில் மூழ்க முடியாமல், அதே சமயம் பிழைப்புவாதியாகவும் வாழ முடியாமல் எபீமிச் தடுமாறுவது, சீரழிந்த நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு அவர் வரும் துவக்க அத்தியாயங்களிலேயே காட்டப்படுகிறது. ”உலகிலுள்ள நல்லவை யாவும் ஆதியில் தீமையிலிருந்து உதித்தவையே” எனும் சமாதானம் சகித்துக்கொள்ள முடியாத நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு மட்டுமானதல்ல. ஆயிரம் சமாதானம் சொன்னபோதும் எபீமிச்சுக்கு நிதர்சனம் புரிந்துதான் இருக்கிறது. இவானுடனான ஒரு உரையாடலில் “நீங்கள் உளநோயாளியாகவும் நான் டாக்டராகவும் இருப்பதில் ஒழுக்க நெறிக்கோ தர்க்க நியாயத்துக்கோ இடமில்லை, முற்றிலும் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்தது இது” எனவும் எபீமிச் கூறுகிறார். அடிக்கடி ஆறாவது வார்டுக்கு வருவதும், வந்தாலும் சரிவர நோயாளிகளைக் கவனிக்காமல் போவதும், இவானுடனான தொடர் உரையாடல்களும், ஏற்கனவே எபீமிச் மீது காழ்ப்பில் இருப்பவர்களுக்கு, அவரது மனநிலை குறித்து சந்தேகிப்பதற்கு வசதியான காரணங்களாக அமைந்துவிடுகின்றன.

ஒரு வகையில் ஆறாவது வார்டில் தனக்கான இடத்தை எபீமிச் அவைகளே தேர்வு செய்துகொண்டதாகக் கருதவும் இடமுள்ளது. மருத்துவமனையிலோ அல்லது வெளி இடங்களிலோ யாரிடமும் எவ்வித நல்லுறவும் வாய்க்கப் பெறாதவராக காட்டப்படும் ”எபீமிச்”சின் ஒரேயொரு நண்பராக இருக்கிறார் அஞ்சலகத் தலைவரான “மிகயில் அவெரியானிச்”. எபீமிச்சின் மனநிலை மாற்றம் பற்றிய மருத்துவர்களின் அவதானிப்பை அவரிடமே கூறுபவராகவும், அம்மனநிலை மேலும் சீரழிந்து போகாமலிருக்க ஒரு ஓய்வைப் பரிந்துரைப்பவராகவும் “மிகயில் அவெரியானிச்” அமைவது எபீமிச்சுக்கும் அவருக்குமான நட்புபின் சான்று. ஆனால், மாலை நேரங்களில் செறிவான உரையாடல்கள், சேர்ந்து அருந்தும் பியர்கள் என வளர்ந்து வந்த அந்த நட்பும் கூட இவானுடனான சகவாசத்தால் தடைபட்டுவிடுவது எபீமிச் மிக விரைவாக ஆறாவது வார்டை அடைய ஒரு காரணமாக அமைகிறது. மருத்துவமனைச் சுழலில் ஒட்டாமலிருக்கும் எபீமீச் ஒரு பக்கம் என்றால் அதற்கிணையான இன்னொரு பக்கம் நோயாளிகளின் வார்டில் கூட தனித்தே தெரியும் இவான்னுடையது. உண்மையில் இந்நாவலில் எபீமிச் மனதார உரையாடுவது இவான் ஒருவனிடம் மட்டுமே, அவ்வகையில் “மிகயில் அவெரியானிச்”சுடனான அவரது பெரும்பான்மையான உரையாடல்கள் எபீமிச் பேச அதை “மிகயில் அவெரியானிச்” ஆமோதிப்பது என்றவகையிலேயே நின்றுவிடுகின்றன. ஒரு இணைநட்புக்கான அல்லது ஒரு சீண்டலுக்கான காலியிடம் எபீமிச்சிடம் இருந்திருக்கவும் அது இவானால் நிரப்பப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

*

இந்நாவல் வெறுமனே மன நோயாளிகளைப் பற்றியோ, மருத்துவர் எபீமிச்சைப் பற்றியோ அல்லது மனநிலை பிறழ்வுகளைப் பற்றியோ பேசுகிறது எனச் சுருக்க முடியாது. நம்முடைய சமூகம் அதன் கூட்டியல்புக்கு பொருந்திவராத மனிதர்களை பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த மனஅழுத்தம் எவ்வகையிலும் எபீமிச்சின் மன அழுத்தத்துக்குக் குறைந்ததல்ல. தன்னுடைய தரப்பு நியாயத்தை கேட்பதற்கு சுற்றம் அமைந்திராத, தன் மனது ஏற்றுக்கொள்ளும் சொற்களைக் கூறிடுவதற்கும் யாரும் இல்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட எவரும் எத்தருணத்திலும் சென்று சேரக்கூடும் இடமாக இன்னுமொரு ”ஆறாவது வார்டு”தான் இருக்கமுடியும்.

*

ஆறாவது வார்டு – குறுநாவல் – அந்தோன் செகாவ் (தமிழில்:ரா. கிருஷ்ணையா) – பாரதி புத்தகாலயம்.

அசடன், நாவல் அனுபவம் – நவீன் சங்கு

தாஸ்தாவெஸ்கி சொன்ன ‘Beauty Will Save The World’ என்ற மாபெரும் உண்மையை , தூய கிருஸ்து மனம் கொண்ட மிஷ்கின் மூலம் ரஷ்ய மேல்தட்டு மக்கள் மத்தியில் ஆராயும் நாவல் அசடன்.

தாஸ்தாவெஸ்கியின் கண்கள் நேராக நம்மை நோக்கியவாறு இருக்கும் புகைப்படம்


அசடன் நாவல் குற்றமும் தண்டனையும்,கமரசோவ் சகோதரர்கள் நாவல்களின் உணர்ச்சிமிக்க கதை ஓட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. காரணம், அதன் நீண்ட உரையாடல்கள் மற்றும் யதார்த்தமான நாவல் தன்மையிலிருந்து திடீரென நாடக தன்மைக்கு மாறுவது.நாம் வாசித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென(இப்போது பின்னணி இசை உச்சத்தில் கலவரமாக) திரைக்குப் பின்னாலிருந்து ஒரு கூட்டம் வந்து அமர்க்களம் செய்துவிட்டு மொத்தமாக திரைக்குப் பின்னே ஓடிவிடுகிறது. நாம் முகம் சுருங்கி குழப்பத்துடன் மேடையை உற்று நோக்குகிறோம், பிறகு மீண்டும் நீண்ட உரையாடல்கள் தொடங்குகிறது.

நாவல் வடிவத்தின் சட்டகத்திலிருந்து அசடன் முற்றிலும் மீறி செல்கிறது என்கின்றனர் விமர்சகர்கள். கதையாகப் பார்த்தால் ஒரு குறுநாவல் அளவுக்குச் சிறியது. நாவலுக்கே உரித்தான கதாபாத்திரங்களின் பரிணாமம் இங்கே இல்லை, பயணம் இல்லை (கதை நகர்வு) ஆனால் நீண்ட உரையாடல்கள் மட்டுமே. எல்லா கதாபாத்திரங்களும் அதன் தன்மையில் ஏற்கனவே முழுமையாக உள்ளது.

தாஸ்தாவெஸ்கி தான் அடைந்த போலி மரண தண்டனை(Mock Punishment) அனுபவத்தையே, இபோலிட் கதாபாத்திரம் மூலம் மரண தண்டனை பெற்ற ஒருவன் அடையும் மன பிறழ்வை காண்பிக்கிறார். கொடூரமான வன்முறையால் தண்டனை பெற்ற ஒருவன் அல்லது ஒரு கொலைகாரனால் கழுத்து அறுபட்ட நிலையில் இருக்கும் ஒருவனை விட மரண தண்டனை பெற்றவனின் மன வேதனை உச்சமானது என்கிறான் மிஷ்கின். காரணம், மரண தண்டனை பெற்ற ஒருவன் சென்றடையும நம்பிக்கையின்மை, அவன் ஆன்மாவை சுருக்கி பித்தடைய வைக்கிறது.

சுவிட்சர்லாந்தில் மேரி என்ற பெண்ணை கிராம மக்களிடமிருந்து காப்பாற்றுகிறான்.தொடர்ந்து தன்னிடம் மனம் விட்டு பேசுபவர்களை‌ ஆறுதல் வார்த்தை கூறுகிறான், பண உதவி புரிகிறான்.

அசல் ரஷ்யர்களை எங்குமே காணோம், சிறந்த பொறியாளர்கள் இல்லை, இரயில்கள் பாதி வழியிலேயே சிக்கி மாத கணக்கில் நகர முடியாமல், அதில் உள்ள உணவு பொருட்கள் அழுகி வீணாகிறது. ஆனால் எங்கும் போலி பாவனையுடன் தளபதிகள், அரசாங்க ஊழியர்கள். இந்த Materialistic ஆன போலி பாவனையை, இவால்ஜின் கதாபாத்திரம் மூலம் கடுமையாக சாடுகிறார் தாஸ்தாவெஸ்கி.

ரோகோஸின் வீட்டில் மிஷ்கின் காணும் Holbien’s முகம் சிதைந்து சித்திரவதைக்கு உள்ளான வயதான கிருஸ்துவின் படம் அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒரு வகையில் இந்த புகைபடம் புத்துயிர்ப்பை (Ressurection) மறுக்கிறது. தாஸ்தாவெஸ்கி பார்த்த இந்த புகைபடமே, தான் முதலில் எழுத நினைத்த மிஷ்கினிலிருந்து மாற்றி அழகான தூய மிஷ்கினை எழுத தூண்டியிருக்கலாம்.

அழகிற்கு ஒரு வலிமை உள்ளது. உலகத்தை தலைகீழாக மாற்றக் கூடிய வலிமை என நாஸ்டஸியாவின் அழகு குறித்து மிஷ்கின் கூறுகிறான்.
மிஷ்கின் நம்புகிற இந்த தரிசனத்தை, பல்வேறு எதார்த்தங்கள் வழியாக நவீன ரஷ்யாவின் பண்பாட்டு தளத்தில், சிந்தனை தளத்தில் ஏற்பட்ட மாற்றம் மூலம் நிராகரிக்கிறார் தாஸ்தாவெஸ்கி.

சுவிட்சர்லாந்தில் ஒரு மலையைப் பார்த்து தான் அடைந்த பரவசத்தை விவரிக்கிறான் மிஷ்கின். மனிதனை கடந்த ஒன்றை பிரபஞ்சத்தை அல்லது கடவுளை உணர்வதற்கான ஒரு கருவியாக அழகைப் பார்க்கிறான். உலகில் உள்ள அனைத்து அழகிலும் (Authentic Beauty) ஒரு தன்மை உள்ளது, அது மனித இதயத்தை நேரடியாக ஊடுருவி சலனம் ஏற்படுத்தவல்லது, அங்கிருந்து வேறொன்றை நோக்கி மனிதனை நகர்த்துகிறது.

இந்த அழகியலை ஒவ்வொரு கலையும்(Art) தன்னுள் கொண்டதாலே ,Holbien’s painting மக்களிடம் அதிகம் தாக்கம் ஏற்படுத்தும் கிருஸ்துவை நோக்கி அவர்களை நகர்த்தும் என நம்புகிறான் மிஷ்கின்.

இயற்கையிலேயே இந்த அழகுணர்ச்சி(Beauty) தன்னுள் நல்லதையும் (Good), சத்தியத்தையும்(Truth) கொண்டுள்ளது. இதனாலயே ஹெர்மன் ஹெஸ்ஸே “Art by it’s Nature is religious” என்கிறார்.

மிஷ்கின் ஜீஸஸ், புத்தர் போல் வாழ்க்கையின் இக்கட்டுகளை கடந்து ஞானம் பெற்றவன் அல்ல. மாறாக துளி கரையில்லாத ஒரு அழகான மனிதன் (the positively good and beautiful man). இந்த அழகான மனிதனை ஏற்றுக் கொள்ள எது தடுக்கிறது. அது ரஷ்யா தனது வேர்களை இழந்து முழுக்க முழுக்க Materialist ஆன ‌ஐரோப்பா மீது கொண்ட மோகத்தால். ரோமன் கத்தோலிக்க திருச்சபை ரோமா புரி மன்னர் ஆட்சியின் மாறிய வடிவம் என்கிறான் மிஷ்கின். ஆக்டோபஸ் போல தனது கரங்களால் ஐரோப்பா முழுக்க அதிகாரம் செலுத்தி அரசியல் ஆதாயம் அடையும் அமைப்பு அது. அதுவே Atheism, Communism போன்ற சிந்தாந்தங்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது என்கிறான் மிஷ்கின்.

உலகிற்கே ஆன்மிக வழி காட்டக் கூடிய தன்மை ரஷ்யாவிற்கு உண்டு, அது எந்தவொரு ரஷ்யாவின் ஏழை விவசாயிடமும் (Peasant Christ) உள்ளது என தாஸ்தாவெஸ்கி நம்பினார்.அதையே தாஸ்தாவெஸ்கியும், டால்ஸ்டாயும் தங்கள் எழுத்திலிருந்து முன்வைத்தனர் (Russian Christ).

தனது பண்பாட்டை இழப்பதால் ஒரு தேசம் அடையும் இழப்பை, அசடன் நாவலிருந்து ரஷ்யாவின் வீழ்ச்சி வரை ஒரு கோடு வரைந்து பார்க்க முடியும்.

‘இடியட்’ வாசிப்பு – ஆர். ராகவேந்திரன்

தஸ்தவ்யாஸ்கியின்   ‘இடியட்’  கதைமாந்தர்களின் உளவியல்  நமக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கின்றன. சில இடங்களில்  நம் உள  அமைப்பையே காட்டுவதாக மலைப்பை  தருகின்றன. 

 குழந்தைப் பருவ நினைவுகள்  வெளிவரும்போது எப்போதும் நம்  அசலான  ஆளுமையுடன் நெருக்கமாக உணர்கிறோம்.   நம்மையும் உலகையும் அன்பு மயமாக  ஆக்கவல்லவை இந்நினைவுகளைத் தூண்டும் படைப்புகள்.

 உலகின் கண்ணீரை துடைத்து விடுபவன் உலகிற்கு ஒரே நேரத்தில் அன்னையாகவும் குழந்தையாகவும் ஆகிறான். பிறிதின் நோயை  தன்  நோய் போல் போற்றும் அறிவு , முயற்சியினால் அடையப் படுவதல்ல; அது இயல்பான அன்பிலிருந்து வருவது.  அசடனான மிஷ்கின்  தூய அறிவின்மையின் வெளிப்பாடு.  

எம் ஏ சுசீலாவின்  சீரான மொழிபெயர்ப்பில் நாணிக்கோணிக் கொண்டு      நம்முன் வருகிறான் அசடன்.  தனது வலிக்கும் பிறரது வலிக்கும் வேறுபாடு தெரியாத தூய்மை சில  வரலாற்று மாந்தர்களின் நினைவுகளைக் கொண்டுவருகிறது. 

ஒரு பெரிய குழந்தை சிறியதை  அடிக்கும்போது இன்னும் சிறிய குழந்தை ஒன்று அழுகிறது.  புல்வெளி மீது நடக்கும் மனிதனைப் பார்த்த ராமகிருஷ்ணர்  இதயம் பிசையைப்படும் வலியை உணர்கிறார். பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மனிதர்கள் இறந்து கொண்டிருந்த இரவில் விவேகானந்தருக்கு பெரும் துயர் உண்டாகி விடுகிறது. பயிர் வாடும்போது தன்  உயிரும் வாடிய வள்ளலார் அறிவுச்  செயல்பாடாக வோ  சிந்திப்பதன் மூலமாகவோ துயரைப்பெறவில்லை.  விளக்க முடியாத  ஒரு இணைப்பு இங்கே இருக்கிறது.

நஸ்டாஸியாவின் குழந்தை போன்ற முகத்தைக் காணும்போதும் அக்லேயாவின் ஒளிவு மறைவற்ற அக்கறையை  உணரும்போதும் மிஷ்கின் கொள்ளும் பேரன்பு உடல் தளத்தைக் கடந்தது. 

துளித்துளியாக, பொறுமையாக மிஷ்கினின் பாத்திரத்தை வார்த்தெடுக்கும்  ஆசிரியர்  அவனை முழுமையாக்குகிறார். ‘விசுவாத்ம புத்தி’ என்று சொல்லப்படும் ‘உலகில் கரைந்த’ ஆளுமையை இயேசுவின் படிமம் போல செதுக்குவதற்கு இவ்வளவு பெரிய பின்புலமும் நுண்ணிய காட்சி விவரிப்புகளும் தேவைப்பட்டிருக்கின்றன. 

இயல்பான , சிறிது சுயநலமும் சாமானிய ‘நல்ல’ தன்மையும் கொண்ட நாகரிக மனிதன் போன்ற சராசரி வாழ்வை மிஷ்கின் போன்றவர்கள் மேற்கொள்ள முடிவதில்லை. சிறிது சிறிதாக பித்து நிலையை அடைகிறார்கள்.  அல்லது சற்று மூளை  கலங்கியதால் தான் இந்த நேயம் தோன்றுகிறதோ?

மிஷ்கின் பொது இடத்தில் அவை நாகரிகத்தை பின்பற்றுவதில்லை. பூச்சாடிகளை  தனது உணர்ச்சி வசப் பதட்டத்தால் உடைத்து விடக்கூடியவன்.  தஸ்தவ்யாஸ்கியின்   வாழ்வில் அவருக்கு ராணுவ சீருடை பிடிக்கவுமில்லை. பொருந்தவும் இல்லை. அடிக்கடி இழுப்பு வரக்கூடியவர். பழமை வாத  கிறித்துவமும் சோஷலிசமும் ஆசிரியரைக் கவர்ந்திருக்கின்றன.  மிஷ்கின் இந்த குணங்களுடன் வளர்ந்து வருகிறான். 

ஆணவம் கொண்ட பெரிய மனிதர்கள் மிஷ்கின் போன்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்.  எடை போடும் அறிவாளிகளின் அடிமனதில் கயமை இருட்டில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கிறது. மிஷ்கின்கள் பெரும்பாலும் இவர்களை  புரிந்து கொண்டிருக்கிறார்கள். கபடங்களை எளிதில் கடந்து செல்வதன் மூலமும்  அவர்களுக்கு வென்று விட்டோ ம் என்ற  இறுமாப்பை அளிப்பதன் மூலமும் தங்கள் மைய இயல்பை  பாதுகாத்துக் கொள்கிறார்கள்.  மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு  வாழ்வின் இறுதி கணத்தில் சுய நினைவு திரும்பி விடும் என்ற  நம்பிக்கை உண்டு.   ‘தான் ‘ யார் என்று உண்மையில் ஆரோக்கிய மனம் கொண்டவர்களும் அறிந்து கொள்ளாத நிலையில் ,  நிலையான சுய அறிவு என்பது என்ன என்ற கேள்வியை அசடன் முன்வைக்கிறான். 

மிஷ்கின் போன்ற ‘இளிச்சவாய’ தன்மை கொண்ட தேசங்களும் சமுதாயங்க ளும் கூட இருக்கின்றன .  தான்  ஏமாற்றப்படுவது தெரிந்திருந்தும் பிறருக்கு  மகிழ்ச்சி தருவதற்காக  ஏமாந்தது போல நடிக்கும் ‘அப்பாவிகள் ‘ நின்றிருக்கும் உலகை இலக்கியவாதிகளால் படைக்க முடிகிறது 

மனிதன் இறைத்தன்மையை  பூரணமாக வெளிக்காட்டுவதில் அடையும் தடுமாற்றங்களின்  கதையே அசடன் 

பெரிய கப்பல் ஒன்று முனகலுடன் கிளம்புவது போல கதை துவங்குகிறது. ஒவ்வொரு  இயந்திரமாக சுழலத் துவங்க,  கதைமாந்தர்களி ன்   விவாதங்களின் ஊடே அசைவு நிகழ்கிறது. நகர்வதே தெரியாமல் கதை வெகு தூரம் வந்து விட்டிருக்கிறது. 

சுவிசர்லாந்தின் மன நோய் சிகைச்சை  முடிவதற்கு முன்னரே  தனது தாய்நாடாகிய  ரஷ்யாவிற்கு ஒரு துணி மூட்டையை மட்டும் உடைமையாக எடுத்துக் கொண்டு மிஷ்கின் வருகிறான். திடீர் செல்வந்தனாகி , அன்பை சுற்றிலும் தெளித்து , எல்லோரையும் நம்பி , குறுக்கு மனது கொண்டவர்களையும் ஆட் கொண்டு  அவர்களே  அவனுக்கு செய்த சூழ்ச்சிகளையும் அவனிடமே  சொல்லவைத்து அதையும் மனதில்  ஏற்றிக்  கொள்ளாமல் காதலில் விழுந்து அடிபட்டு, ஒரு கொலை நிகழ்விற்கு தார்மிக காரணமாகவும்  சாட்சியாகவும்   இருந்து, மூளை  மீண்டும் கலங்கி தனது மருத்துவ சிகிச்சைக்கே திரும்புகிறான்.

பெற்றோரை இழந்து குழந்தையாக இருக்கும்போதே எதிர்கால உருவாய் பொலிவின்  அடையாளங்களைக்கொண்ட நஸ்டாசியா,  டாட்ஸ்கி என்னும்  கீழ்மைகொண்ட செல்வந்தனால் வளர்க்கப் பட்டு கையாளப்படுகிறாள்.  தனது நிலைக்கு பொறுப்பாளி தானே என்றும்   தன்னைப் பாவி என்றும் எண்ணிக் கொண்டு சுயவதை செய்து கொள்கிறாள்.  உண்மையான அன்புடன் அவளுக்கு மீட்பை  அளிக்க  மிஷ்கின் முன்வருகிறான். அவனை கீழே இறக்கக் கூடாது என்ற குற்ற உணர்வுடன் தன்னைக் கீழே இறக்கிக் கொண்டு ரோகோஸின் என்னும் தாதாவை மணக்க முடிவு செய்து  ஒவ்வொரு முறையும் திருமண சமயத்தில் ஓடிப் போய்விடுகிறாள். 

அவளைப்போலவே கலைத்திறனும் மென் மனமும் கொண்ட  அக்லேயாவுடன் மிஷ்கினை  மணமுடித்து வைக்க முயற்சி செய்து ஒரு கட்டத்தில்  இரு பெண்களுக்கும் நடைபெறும் ஆதிக்கப் போட்டியில் மிஷ்கினை திருமணம் செய்துகொள்ள நஸ்டாசியா முடிவெடுக்க, மீண்டும் ஓடிப்போதல் நடைபெறுகிறது. அவளை அழைத்துக் கொண்டு செல்லும் ரோகோஸின் அவளைக் கொன்று விடுதலை தந்து விடுகிறான். மிஷ்கினுக்கும் ஆறுதலைத் தந்து  சைபீரிய தண்டனையை பெறுகிறான்.

மிஷ்கின் உலகில் அழகினால் அமைதியைக் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறான் . அவன் உண்மையில் அன்பைத்தான் அப்படி எண்ணி இருப்பான் போல இருக்கிறது. 

உருண்டு வரும் அழகிய கண்ணாடிக் குடுவையைப் பக்குவமாக எடுக்கத் தெரியாமல் போட்டு உடைத்து விடுவது போல அக்லேயா தனது வாழ்வை குலைத்துக் கொள்கிறாள்.

அசையாத நீரோடை போன்ற நாவலில் சிரிப்பைத் தரும் சுழிகள் தளபதி இபான்சின் வரும் இடங்கள்.  

குடிப்பதற்கு காசில்லாமல் கடன் கேட்பதும் தனது பழம் பெருமையை  பறை சாற்றிக்  கொள்வதும்    பொய்  சொல்லிச் சொல்லியே அதைத் தானே நம்ப ஆரம்பிப்பதும் கிடைத்த புட்டியை   ஊற்றிக்  கொண்டு அதே இடத்தில் உறங்கி விடுவதும்  தனது சாகசக் கதைகளைத் பிறர் நம்பாத  போது  கோபித்துக் கொண்டு சண்டை இடுவதும்  – உணர்ச்சிகளின் உச்சமான இந்த இபான்சின் போன்ற ஆத்மாக்கள் வாசகர் மனதில் பல பரிச்சயமான முகங்களை எழுப்புகின்றன.

நாவலின் உச்சமாகக் கருதுவது  நஸ்தாசியா கொல்லப்பட்ட பின் அந்த இருட்டு அறையில் மிஷ்கின் ரோகோஸின்னுடன் தங்குவது தான் . ஆன்மாவின் இருட்டில் குற்ற உணர்வின் துயரில் இருக்கும் கொலைகாரனுக்கு தேறுதல் தரும் மிஷ்கின் இயேசுவின் வடிவம் ஆகிறான். .

நஸ்டாசியாவின் விருந்தில் கலந்து கொண்டவர்கள்  தாங்கள்  செய்த அவமானம் தரும் குற்றங்களைச்L சொல்லும் இடமும்  மிஷ்கினின் சுழலையும் உடல் நிலையையும் வைத்து அவனது  உளவியலை பாவ்லோவிச் ‘விளக்குவதும்’ ஆய்விற்கு உரியன. 

குழந்தைகள்  ரகசியங்களை விரும்புகின்றன. சத்தம் போடாதே என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே    கதவுக்கு இடுக்கில் நின்று கொண்டு  கள் ளச் சிரிப்புடன் வாய்மேல்  ஆள் காட்டி விரலை  வைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றன .  யாரிடமும் சொல்லாதே என்று மிக மெதுவாக உச்சரிக்கும்போதே அந்த ஒலி பெரிதாகக் கேட்டு விடுகிறது.  நாஸ்டாசியா கொல்லப் பட்டதும் மிஷ்கின் ரகசியமாக ‘எப்படிச் செய்தாய்? பாவ்லோவ்ஸ்க்கிற்கு வரும்போதே கத்தியுடன் தான் வந்தாயா ‘ என்றெல்லாம் கொலை செய்தவனிடம் கேட்க்கிறான்.  தானும் மாட்டிக் கொள்வோம் என்று சிந்திக்காமலேயே ரோகோஸினுக்காக கவலைப் பட ஆரம்பிக்கிறான். பளிங்கு போல அருகில் இருப்பவரைப் பிரதிபலிக்கும் மனம். ஊரைக் கூட்டிவிடாமல் ரோகோஸின் அருகில் படுத்துக் கொள்கிறான். அவனது கண்ணீர் கொலைசெய்தவன் மீது விழுந்து கழுவுகிறது

மிஷ்கின் முன் எல்லோரும் உண்மையையே பேசுகிறார்கள். எதற்கு இவ்வளவு சிக்கலாக வாழ்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது  அவன் வாழ்வு 

மிஷ்கின் முன்னால் எல்லோரும் குழந்தைகள் ஆகிவிடுகிறார்கள். குழந்தையால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. கண்களை மூடிக் கொண்டு தந்தை முன் வந்து நிற்கிறது. தந்தையும் தன் கண்களை மூடிக்கொண்டு  தவிப்பதாகவும் பின் கண்டு பிடிக்கப் படடவராகவும் நடிக்கிறார்.  பின் இறைவன் பதட்டத்துடன் தன்னை வெளிப் படுத்திக்க கொள்கிறார்.  

ஒரே ஒரு தூயவன்   இருந்தான் அவன் கிறிஸ்து என்று சொல்லும் தஸ்தயேவ்ஸ்கி  அவனை  மீண்டும் மனிதர்களில் தேடிச் சலித்து வடிகட்டி எடுத்த கிறித்து நிகர் ஆளுமை  மிஷ்கின் 

அன்பின் தூய்மையை மறந்து விட்ட அசட்டு உலகில் மிஷ்கின் தன்மையை அடையும் முயற்சியே இலக்கியம் என்று தோன்றுகிறது. அந்த நிலையை ஒரு சிலர் அடையும் போது புவியின் பளு குறைகிறது. அப்போது சுகதேவா என்று வியாசர் அழைக்கையில் கானகத்தின் எல்லாப் பறவைகளும் இங்கிருக்கிறேன் தந்தையே என்று பாடுகின்றன.

ஆர் ராகவேந்திரன் 

கோவை