எட்டிக்கசப்பில் எஞ்சும் துளித் தேன் – காளீஸ்வரன்

எழுத்தாளர் சு.வேணுகோபால் கருத்தரங்கில் ‘வெண்ணிலை’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட சிற்றுரை

சமீபகாலமாக அடிக்கடி ஒரு காணொளியைக் காண நேர்கிறது. தின்பண்ட பாக்கெட்டுகளால் நிரம்பியுள்ள ஒரு பெரிய இடத்தில், கிரேன் போன்ற அமைப்பின் உதவியுடன் ஒரு மனிதன் உள்ளிறக்கப்பட்டு, சில நிமிட இடைவெளியில் மீண்டும் வெளியெடுக்கப்படுகிறான். கிடைத்த சில நிமிட அவகாசத்தில், தன்னால் இயன்ற அளவுக்கு தின்பண்டங்களைத் திறனுக்கேற்ப சேகரித்துக் கொள்ளலாம். மலை போல குவிந்திருப்பினும், எடுத்து வரக்கூடிய அளவென்பது அவனது திறனைப் பொருத்தது மட்டுமே. மொத்தம் 23 சிறுகதைகள் கொண்ட வெண்ணிலை எனும் இத்தொகுப்பைப் பற்றிய என்னுடைய வாசிப்பனுபவமும் மேற்ச்சொன்ன சம்பவத்துக்கு இணையானதே.

தொகுப்பின் பெரும்பாலான கதைகள், மாறிவரும் காலசூழலினால் விவசாய சூழலில் ஏற்படும் மாறுதல்களைப், அதனூடே மனித மனதின் இருமையை, வாழ்க்கைப்பாடுகளை. எதையுமே செய்யவியலாத கையறு நிலையை, உறவுச்சிக்கல்களை இவை எல்லாவற்றுக்கும் மேலாக மானுடத்தின் மேன்மை வெளிப்படும் தருணங்களை, துளிர்விடும் சிறு நம்பிக்கையின் ஒளிக்கீற்றை பேசுபவை. 

ஒரு நிலப்பரப்பின் தன்மை, நிலவும் தட்பவெப்ப சூழல், வாழ்க்கைமுறை அதில் வாழும் மனிதர்களின் குணாதிசயத்தில் கொஞ்சம் செல்வாக்கு செலுத்தக்கூடும். செழிப்பான காலகட்டத்தில் நாமே மறந்துபோன நம் மனதின் இருண்ட பகுதியை (Grayness) வறுமை வெகு சுலபத்தில் வெளிக்கொண்டுவந்துவிடும். ஓரிரு கதைகள் தவிர எல்லாக் கதைகளுமே தென் தமிழக, குறிப்பாக மதுரை, போடியைச் சுற்றியுள்ள விவசாய கிராமங்களைக் களமாகக் கொண்டவை. போலவே வறண்டு போன பூமியை அதன் வாழ்வைச் சித்தரிப்பவை. குறிப்பாக சில கதைகளின் மையப்பொருளாகவே அவை அமைந்துள்ளன.

தொகுப்பின் முதல் கதையான உயிர்ச்சுனை, மறுபோர் ஓட்டியும், நீர் கிடைக்கப்பெறாத கண்ணப்பரின் ஆற்றாமையைப் பேசுகிறது. கோக கோலா குளிர்பான நிறுவனம் சுற்றுவட்டார வேளாண் நிலங்களின் நீரையும் உறிஞ்சிக்கொண்ட கயமை கூறப்பட்டாலும், கண்ணப்பரின் பேரன் நிதின் குறித்த விவரணைகள், மறைமுகமாக அவனது பங்கு நீரும் சேர்ந்தே களவுபோயிருக்கும் வலியைச் சொல்கின்றன. முதல் மகளிடம் தான் பட்டிருக்கும் கடன், இரண்டாம் மகளின் திருமணம் இவை எல்லாவற்றையும் தாண்டி கண்ணப்பர் “எம் பேரன்” எனச்சொல்லி உடையும் இடம் இக்கதைக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கிறது.

இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதைகளுல் ஒன்றான புத்துயிர்ப்பு வறட்சி நேரடியாக சம்சாரியின் வாழ்க்கையில் நிகழ்த்தும் அவலங்களைப் பேசுகிறது.  நல்லவனாகவும் திறமைசாலியாகவும் அறியப்பட்ட கோபால் வீட்டில் இரு நிறைமாத கர்ப்பிணிகள். ஒன்று அவன் மனைவி சாந்தா. இன்னொருவள் அவன் மகளைப் போலக் கருதும் பசுமாடு லட்சுமி. காடு மலை என எங்கு அலைந்தாலும் தீவனம் கிடைக்காத சூழலிலும் மாட்டை விற்க மறுக்கும் கோபால், தன் மனைவியின் வளையல்களை அடமானம் வைத்து பணம் புரட்டிய போதும் எங்கும் தீவனம் வாங்க முடியாமல் போகிறது. வேறுவழியில்லாமல் பக்கத்து வீட்டு ராமசாமி கவுடரின் தொழுவத்திலிருந்து சில கட்டு தீவனங்களைத் திருடும்போது அவர்களிடம் சிக்கிக்கொள்கிறான். அடுத்த நாள் நடக்கவிருக்கும் அவமானமும், எதுவுமே செய்யவியலாத கையறு நிலையும் அவனை தற்கொலை நோக்கித் தள்ளுகின்றன. பணம் புரட்ட முடிந்த பின்னரும் தீவனம் கிடைக்காத கொடுமையை இக்கதை பேசுகிறது. இதைப் போலவே, மெய்பொருள்காண்பதுஅறிவு கதையில், பரமசிவம் வேளாண் கூலி வேலையினால் படும் பாடு வறட்சியின் கோரத்தைச் சுட்டுகிறது.

தன் கதைகளில் திரு.சு.வே. கட்டமைக்கும் பாத்திரங்கள் வலுவான நம்பகத்தன்மை கொண்டிருக்கின்றன. வெகுசுலபமாக நாம் பார்த்திருக்கக்கூடிய ஒரு விவசாயக்கூலியை, வயதான பாட்டியை, தனித்திருக்கும் மாணவனை நம் நினைவில் மீட்டெடுக்க உதவும் வலுவான சித்தரிப்புகள் ஒவ்வொன்றும்.

கூருகெட்டவன் கதையின் உடையாளியும், வயிற்றுப்புருசன் கதையின் பொம்மையாவும் இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். இருவருமே ஊருக்கென நேர்ந்துவிடப்பட்டவர்கள். ஆனால், உடையாளிக்கு ஒரு குடும்பமும், தான் ஏய்க்கப்படுவது பற்றிய பிரக்ஞையும் இருக்கிறது. ஆனால் அதுவும் அற்றவன் பொம்மையா. அவனைப் பொருத்தமட்டில் அது அவன் ஊர், அவ்வூரின் தோட்டமோ வெள்ளாமையோ எதுவாகிலும் அது அவன் பொறுப்பு. கதையில், பொம்மையா மனம் உடைந்து கண்ணீர் விடுவது ”நீ யாரு?” எனக் கேட்கப்பட்ட பதில் தெரியாத கேள்வியால் மட்டுமே. அதைத் தவிர வேறெந்த வசவுகளும், பேச்சுகளும் அவனைத் தீண்டுவதேயில்லை. மாறாக, உடையாளி தன் மனைவியுடன் ஜெயக்கிருஷ்ணன் கொண்டிருக்கும் உறவினால் பெரிதும் பாதிக்கப்படுகிறான். அடுத்த நாள் அதைக் கடக்கும் மனதோ அல்லது சூழலோ மட்டுமே அவனுக்கு வாய்த்திருக்கிறது. ஒருவகையில் இவ்விருவருக்கும் இடையே நிற்கும் கதாப்பாத்திரமாக திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் எடலக்குடி ராசாவைச் சொல்லலாம்.

தொகுப்பின் பெரும்பாலான பெண்கள் தாய்மையின் குறியீடாகவே இருக்கிறார்கள். விதிவிலக்கான ஒருவர் பேரிளம்பெண் கதையின் ஈஸ்வரி. கர்ப்பிணியான தன்னுடைய மகள் வீட்டில் இருக்கும்போது, ஈஸ்வரி ஒரு சீர் வீட்டுக்குச் செல்கிறாள். அவ்விசேஷ வீட்டில் அனைவரையும் ஈர்க்கும்படியான ஆடை அலங்காரங்கள், பாவனைகளை மேற்கொள்கிறாள். அதன் தொடர்ச்சியை மண்டபத்திலும் நிகழ்த்தும் ஆசைக்கு ஒரு தடை வருகையில், அந்தத் தடையின் வலியைக் காட்டிலும் பொய்த்துப்போன தன் ஆசை ஈஸ்வரிக்கு துன்பமளிக்கிறது. இதே இடத்தில் ஒரு ஆண் இருப்பின் அவன் சந்திக்க வேண்டியிராத சங்கடங்கள் இவை எனும்போது ஈஸ்வரியின் மீது கொஞ்சம் பரிவு எழுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் வெளிக்காட்ட விரும்பாத அல்லது அவனுக்கே தெரியாத ஒரு முகம் இருக்கும். அதை இக்கட்டான ஒரு சந்தர்ப்பம் எளிதில் வெளியே கொண்டுவந்துவிடும். அப்படி சந்தர்ப்பங்கள் மனிதனை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் கதைகளும், சந்தர்ப்பங்களின் இக்கட்டுகளால் நேரும் உறவுச் சிக்கல்களின் பரிமாணங்களும் இத்தொகுப்பில் உண்டு.

சந்தர்ப்பம் கதையில் இரண்டு விதமான மாணவர்கள் காட்டப்படுகின்றனர். துவக்கம் முதலே கெத்தாக வளையவரும் ஜீவா, நண்பர்களால் புள்ளப்பூச்சி என்றழைக்கப்படும் கதிரேசன். நீச்சல் தெரியாத ஜீவா, படிக்கட்டுகளைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் மிதப்பதும், பேருத்து நிலையத்தில் ஒரு பெண்ணின் மானம் பங்கப்படும்போது கதிரேசன் முதல் எதிர்ப்பைக் காட்டுவதும் இயல்பில் வெளிப்படும் அவர்களின் குணாதிசயத்தின் நேரெதிர் நிலையாகும்.

தங்கைகளுக்காக தன் வாழ்வை அழித்துக்கொண்ட அண்ணன் அவனது தங்கைகளால் தெய்வமாகவே மதிக்கப்படுகிறான். ஒவ்வொரு தங்கைக்கும் திருமணம் முடித்துவைக்கும் அண்ணன் தன் திருமணத்தைப் பற்றிய எண்ணமே இல்லாதிருக்கிறான். இறுதியாய் மிஞ்சும் தங்கையிடம் மூத்தவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லும் வாக்கியம் அண்ணனை நல்லாப் பாத்துக்க என்பதாகவே இருக்கிறது. நள்ளிரவு சீண்டலில் விழிக்கும் தங்கையை நோக்கி அண்ணன் கேட்கும் ”அக்கா அவுங்க ஒண்ணும் சொல்லலியா?” எனும் கேள்வியில் முடிகிறது கதை. இப்படி சரி / தவறு, முறை / பிறழ்வு எனும் இருமைகளுக்குள் அடக்கிவிட முடியாத கோணங்களைக் கொண்ட கதை உள்ளிருந்துஉடற்றும்பசி.

உறவுச்சிக்கல்களின் இன்னொரு எல்லையில் நிற்கும் கதை கொடிகொம்பு. கணவன் விஜயன், ஒரு குடிகாரன். காமம் மட்டுமல்ல காதலும் அவனிடமிருந்து மறுக்கப்படும் மனைவி வாணி. ஆறுதல் கொள்ள ஏதுமற்ற உறவே வாணியை மாற்றம் தேட வைக்கிறது. ஒன்றுவிட்ட கொழுந்தனார் பாஸ்கர் மீதான அவளது ஈர்ப்பு, “ஹேமாச் சிறுக்கியால்” தடைபடுகிறது. இந்த வயதிலும் ஒயில் கும்மியில் இளவட்டங்களுக்கு சரிக்கு சரியாய் நின்று விளையாடும் மாமனார் பொன்னய்யா, அவரை ரசிக்கும் கனகத்தின் மீது வாணி கொள்ளும் எரிச்சல், என கொஞ்சம் கொஞ்சமாய் தனக்கான மாற்றுப்பாதையைக் கண்டடையும் வாணி தன் ஆசையை வெளிப்படுத்தும் விதம் மிக அருமையாகக் கையாளப்பட்டுள்ளது.  

இவ்விரு கதைகளும், கையாளும் பிரச்சனையின் தீவிரம் உறைக்காத வண்ணம் அடங்கிய குரலில் வெறுமனே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும், பாத்திரங்களின் செயலுக்கான நியாயம் மிக வலுவாக வெளிப்பட்டிருக்கும் கதைகள் இவை. ஆண்-பெண் உறவுகளுக்குள் இயல்பாக நிகழும் சிக்கல்கள் கிடந்தகோலம் கதையிலும், பெண்களுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் இடம் புற்று கதையிலும் சொல்லப்பட்டிருக்கின்ற போதிலும் என் மனதில் ஆழ்ந்த பாதிப்பை இக்கதைகள் உருவாக்கவில்லை.   

இத்தனை சிக்கல்களை, வறட்சியை, மனித மனதின் இருமைகளை, வாழ்க்கை நம்மைக் கொண்டு நிறுத்தும் கையறு நிலையை இக்கதைகள் பேசினாலும், வெண்ணிலை எனும் இத்தொகுப்பை மிகமுக்கியமான ஒன்றென நான் கருதும் அம்சம், இத்தொகுப்பின் கதைகள் வாயிலாக திரு. சு.வே. நமக்குக் காட்டும் மானுடத்தின் சின்ன ஒளிக்கீற்று, போலவே வாழ்க்கை மீது சிறு நம்பிக்கை கொள்வதற்கான சாத்தியக்கூறுகள்.

உதாரணமாக, புத்துயிர்ப்பு கதையில் மிகக்கொடும் வறட்சியினால் தற்கொலைக்கு முயற்சிக்கும் கோபால் பிழைக்க இருக்கும் சிறு வாய்ப்பையும், பசியால் தவிக்கும் அவனது பசு லட்சுமிக்கு, கனகராஜின் அம்மா மூலம், குறைந்தபட்சம் அன்றைக்காவது கிடைத்த தீவனத்தையும் சொல்லமுடியும். ஆனால், வாழ்வின் மீதான் நம்பிக்கையின் ஓர் உச்ச தருணம் கோபாலின் மனைவிக்கு பிறக்கும் பெண்குழந்தையை வறட்சியால் தவிக்கும் அக்கிராமமக்கள் “வான் பொழிய மண் செழிக்க வாழையடி வாழையென வந்தது குழந்தை” என வரவேற்பது. இம்முடிவு தரும் மன எழுச்சி அதற்கு முந்தைய கணங்களின் துயரங்களை கடக்கச்செய்வது. தனிப்பட்டமுறையில் எவரையும் தெரியாத நகரத்துக்கு வந்த சில மாதங்களிலேயே, தன் தகப்பனின் மரணத்தை எதிர்கொள்ளும் இளம்பெண்ணுக்கும் ஏதோவொரு ரூபத்தில் மானுடத்தின் கடைப்பார்வை கிடைப்பதற்கான சாத்தியத்தைப் பேசுகிறது வெண்ணிலை கதை. 

இவ்வகைக்கதைகளின் இன்னுமோர் உச்சம் என சொல்லத்தக்க கதை அவதாரம்”. உடல் குறைபாடுள்ள குழந்தையை அவமானத்தின் சின்னமாகக் கருதும் நாகரீகத்துக்கு எதிரிடையாக, அதைபோன்றதொரு குழந்தையை குலதெய்வமென கொண்டாடும் காடர்களைக் காட்டுகிறது இக்கதை. அதன் நீட்சியாக, உப்புச்சப்பில்லாத பிணக்குகளை மறந்து கர்ப்பவதியான தன் மனைவியின் வயிற்றை முத்தமிட என்னும் கணவனின் மனதில் ஏற்படும் மாற்றத்தில் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்துவிடக்கூடும். 

இறுதியாக, இத்தொகுப்பில் இருந்து நான் எடுத்துக்கொள்வதென்ன எனும் வினாவுக்கு நிரூபணம்கதையிலிருந்து விடை சொல்லமுடியும். தன் மகன் எபி நன்றாகப் படிக்கவேண்டும் என தேவாலயத்துக்கு அழைத்துப்போகிறாள் கிறிஸ்டி. பிராத்தனையில் லயித்திருக்கும் அன்னையிடமிருந்து நழுவி காணிக்கைப் பணத்துக்கு பிஸ்கட் வாங்கி பிச்சைக்காரனுக்குத் தருகிறான் எபி. யாரும் சுலபத்தில் கண்டுகொள்ளமுடியாத மறைவான இடத்தில் இருக்கும் அப்பிச்சைக்காரன் இரு சொற்றொடர்களை ஆங்கிலத்தில் கூறுவான். இரண்டாவது சொற்றொடர் “He Lives with Children”. அவன் கூறும் முதல் சொற்றொடர் நமக்கானது, “Jesus Christ never fails to feed His followers”.

 நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s