அபத்தக்  குப்பையின் மேல் ஞான ஒளி – ஆர். ராகவேந்திரன்

போரும் அமைதியும் – பாகம்  1 – வாசிப்பு

விருந்துகளும் போர்களும்

‘அன்னா  பாவ்லவ்னா அளிக்கும் அடம்பரமான விருந்தில் தொடங்குகிறது  படைப்பு.   பல ஆயிரம்  கால்களை  உடைய உயிரி ஒன்று நகரத் தொடங்குவது போல நிதானமான அசைவு .   விருந்துகளில்  உணவும் குடியும் அல்ல  முக்கியமான பதார்த்தங்கள் . மனிதர்களின் அந்தஸ்தும் தொடர்புகளும் தான்  விநியோகம் ஆகின்றன. 

ஆடம்பரமான மனிதர்களின் அபத்தமான திட்டங்கள், போலித்தனங்கள் , ரகசிய ஏற்பாடுகள்,  அரசு என்னும் எண்ண முடியாத  படிக்கட்டுகளில் கள்ளத்தனமாக ஏறுவது இவைதான் அங்கே எல்லோருடைய நோக்கங்களும் .

சரியான விகிதத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு கலக்கப்பட்ட  வோட்கா போல, நெப்போலியன் மீதான எதிர்ப்பும், மதம், சக்கரவர்த்தி ஜார் மீது நிபந்தனையற்ற விசுவாசமும்  கலந்து  அரசியல் சரி என்னும் கோப்பைகளில் ஊற்றி   ரஷ்ய உயர்குடியினர் அதிகார போதையில் திளைப்பதைக் காட்டும் டால்ஸ்டாய்,  போர் என்னும் அடுத்த கட்ட போதைக்கு  நகர்த்திச் செல்கிறார்.

சீமாட்டி  தாய்மார்கள் தங்கள் வாரிசுகளுக்கு பாதுகாப்பான  ஆனால் போர்ப்பங்களிப்பின் நன்மையைக் கொடுக்கக் கூடிய பதவிகளுக்காக தங்கள் குடிப்பிறப்பு – உறவுகள் – வட்டங்களை விரிவாக்கிக் கொண்டே செல்கிறார்கள். 

அடிமைகள், சேவகர்களின்  இருப்பு இந்த வண்ணமயமான செல்வ வாழ்வின் பின்னால் மங்கலாகக் காட்டப் படுகிறது.  தங்கள் முதலாளிகளுக்கு சட்டைப் பித்தான்களை அணிவித்துக் கொண்டும் யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து  மிச்சமாகிய மதுவை குடித்துக் கொண்டும் வாழ்கிறார்கள்.  

கதைத்திறன்

சிறிய செய்கைகளை முழு வர்ணனையுடன் அப்பட்டமாகக் காட்டும் டால்ஸ்டாய் மைய விசையான அழுத்தமான  நிகழ்வுகளைப்  போகிற போக்கில் கோடி காட்டுகிறார்.  

போர்க்களத்தில்  மோதல் துவங்கும் முன்னர் முன்னணியில் நின்று வேடிக்கை செய்து வரும் படை வீரர்களைக் காட்சிப்படுத்திடும் ஆசிரியர் திடீரென போர் துவங்கி விடுவதைக் குறிப்பாகக் காட்டுகிறார்.  (வெண்முரசில் போர் துவங்கும் முன்பு இரு புறமும் உள்ள சிறுவர்கள்  ஆயுதங்களை வீசிப்போட்டு விளையாடுவதை விரிவாகத் தீட்டியிருப்பார்  ஜெயமோகன்) . 

ஒரு திணிக்கப்பட்ட விருந்தில் பியர்- ஹெலனுக்கு இடையே  காதலை வலுக்கட்டாயமாக மலர வைப்பதற்காக மொத்தக் குடும்பமும் உறவினர்களும் முயல்வதை விலாவாரியாக விளக்குபவர் , பட்டென்று    “ஆறு வாரங்களுக்குப் பின் அவருக்கு திருமணமாயிற்று.    பீட்டஸ்பர்கில் உள்ள தமது பெரிய, புதிதாய் அலங்கரிக்கப்பட்ட மாளிகையின் வாழ்க்கையை ஆரம்பித்தார் ” என்று தாவுகிறார்.  தொலைவிலும் அருகிலும் நகர்ந்து பல கோணப் பதிவுகளை அனுப்பும் ட்ரோன் உத்தியின் இலக்கிய உச்சம்

  போரை விவரிக்கையில் அதிக ஒளியும், அடிக்க வரும் சிவப்பும் ரத்தமும் பெரிதாக இல்லாமல் மசமசப்பான  மாலை வெயில் போலவே சொல்லப் படுகிறது.  அருவருப்பும் அழுகலும் காட்டப்படும் இடம்  போர்கள் முடிந்து விட்ட பின் தூக்கி எறியப்பட்ட காயம் பட்ட வீரர்களின் மருத்துவ மனையில்  தான் . அங்கு தான் ரஸ்டாவ்  அடிப்படையான கேள்விகளை எழுப்பிக் கொள்கிறான். 

போருக்கு முன்பான படை நகர்வுகளும் ஆலோசனைகளும் உணவு, குதிரை, பீரங்கி விவரங்களும் கடினமான மலைச் சிகரம் மீது  ஏறுவது போல சிறுகச் சிறுக அடுக்கப்   படுகிறது. உச்சியிலிருந்து ஒரே தாவலாக மையப்போர்  கையாளப்படுகிறது. 

உள்ளீடற்ற அபத்தம் 

டால்ஸ்டாயின் போர் வெறுப்பும் போலித்தன வெறுப்பும் அவரை மனிதர்களின்  உள்ள ப் போக்குகளை கவனிக்கச் செய்கின்றன.   அவர் மனிதர்களின் பாசாங்குகளையும் பாவங்களையும் புரிந்து கொள்கிறார். இரக்கத்துடன்  தனது கொந்தளிக்கும் மனத்தைக் கொட்டி அதில் எல்லாருடைய உள்ளங்களையும் ஆதுரத்துடன் அள்ளிக் கொள்கிறார். 

இங்குள்ள எதற்கும்  தர்க்க – நியாயம் இல்லை.   வரலாற்றின் ஒரு கட்டத்தின் போக்கு , ஒரு மனிதனால் அவன் எவ்வளவு ஆற்றலுடன் இருந்தாலும் தீர்மானிக்கப் படுவதில்லை.   சோர புத்திரன் பியருக்கு பெருஞ்செல்வம் கிடைக்கிறது.  உடனே அவன் மிக முக்கிய குடிமகனாக உயர்கிறான். பின்னர் மனைவியை சந்தேகப்பட்டு தனது  சொத்தின் பெரும்பகுதியை அவளுக்கு அளித்து விட்டு ஃபிரி மேசனாக மாறி , அடிமைகளை விடுவிக்க வேண்டும்  என்று கனவு கண்டு, அவற்றை ஒரு எளிய முட்டாள் காரியதரிசி அழகாக வளைத்து தனக்கு ஏற்றவாறு  மாற்றிக் கொள்ள –  எல்லாமே   காலியாக உள்ளீடற்று போகின்றன – அவர் ஏழைகளுக்கு கட்டிய கட்டிடங்களை போல 

புத்துயிர்ப்பில் டால்ஸ்டாய் கட்டி எழுப்பிய நெஹ் லூதவ் பியருக்கு அருகில் நிற்கிறார்.

டுஷின் என்னும் நம்பிக்கை

இந்தச் சிறுமைகளுக்கு  முடிவில் அர்த்தத்துடன் ஒரு பாத்திரம்  எழுந்து வரும் என்று பார்த்தால் அது டுஷின் என்னும் பீரங்கி படைத்தலைவர் தான் 

ஆர்வத்துடன் தனக்குத் தானே பேசிக்கொண்டு தனது வீரர்களை ஊக்குவித்துக் கொண்டு இலக்கு எதுவும் இல்லாதது போல ஆரம்பித்து சுங்கான் புகைத்துக் கொண்டே எதையோ தாக்க வேண்டும் என்பதற்காக எதிர் மலையில் தெரிந்த கிராமம் மீது உற்சாகமாக  சுட்டுத் தள்ளுகிறார் . தனக்கு காப்புப்படையே இல்லை என்பதைக் கூட  உணராதவராக கடைசி வரை சுட்டுக் கொண்டே இருக்கும்  டுஷின் போருக்கு முன்னால் ஒரு விடுதியில்   படை  தயாராக வேண்டும் என்ற ஆணையை மீறி காலணியும் அணியாமல் குடித்துக் கொண்டிருந்ததற்காக   கண்டுபிடிக்கப் பட்ட மாணவன் போல அசடு வழிந்தவர்  தான். 

அந்த  பீரங்கிப்   பூசல் முடிந்ததும் இரண்டு பீரங்கிகளை ஏன் விட்டு விட்டு வந்திர்கள் என்ற மேலதிகாரியின் கேள்விக்கு பதட்டமாகி  கண்கள் தளும்ப தள்ளாடி நின்றவர் டுஷின்.   உண்மையில் போரில் வென்றதே அவரால்  தான் என்று  ஆண்ட்ரூ வாதாடிய போதும் பயந்து போய் தப்பித்தோம் என்று வெளியே வந்தவர். 

போர்களும் நிறுவனங்களும் அரசுகளும் பெயரே வெளிவராத ,  பிறர் தவறுகளையும் சுமக்கின்ற டுஷின் களால்  தான்  நடக்கின்றன 

அமைப்பின் உச்சியில் இருக்கும் ஜார்களும் நெப்போலியன்களும் ஒரு முனைப்படுத்தலைமட்டுமே செய்கிறார்கள் .

அதனால்  தான் ரஸ்டாவுக்கு ஒரு கட்டத்தில் ஜார் பேரரசர் கேலியாகத் தெரிகிறார் .

ஆன்ட்ரு தனது  வீர  நாயகனாக  மனதில்  வளர்த்து  வந்த நெப்போலியனை அருகில் கண்டவுடன் வெறுக்கிறான். 

டுஷினே எனது நாயகன். இந்த நாவல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தஸ்தாயேவ்ஸ்கி கொண்டு வந்த  “அசடன் “  மிஷ்கின் டூஷினுக்கு இணையான இன்னும் அழுத்தமான பாத்திரம். ஒரு வளை டால்ஸ்டாய்க்கு  தஸ்தாவின் மனச்சாய்வு இருந்திருந்தால் டுஷின் பாத்திரம் இன்னும் விரிவாக மையமாக வளர்ந்திருக்கும். 

சள புள என்று மூன்று விரல்களில் பாதிரியின் ஆசீர்வாதம் போல சல்யூட் அடித்து நின்று கொண்டிருக்கும் டுஷின் மறக்க முடியாத பாத்திரம். 

களத்தின் பாடங்கள்

  போர் உபாயங்களில்  இருந்து வணிக – மேலாண்மை நுணுக்கங்கள் நூற்றாண்டுகளாக வளர்ந்து  வந்துள்ளன. வணிகமும் நிர்வாகமும் கூட ஒரு வகை  போர் தானே.  பக்ரேஷன் தனது படையின் தோல்வியை தள்ளிப் போடவேண்டும் என்பதற்காக படை நகர்வை தாமதப் படுத்துவதும் அதற்காக ஜாரிடமே  வாதிடுவதும் டால்ஸ்டாய் தரும் மேலாண்மைப்  பாடங்கள்.

அபத்தங்களின்  முடிவில்லாத சங்கிலியாகவே வரலாறு தீர்மானமாகிறது.  (சிலர் துப்பாக்கி சுட்டுக் கொண்டிருந்தனர்.  ஆனால்  யாரைப் பார்த்து என்பதைப்  பார்க்க முடியவில்லை. )

காயம் பட்ட ரஸ்டாவ் போன்றவர்களுக்கு தனது பீரங்கி வண்டியில் இடம் தரும் டுஷின் கடைசியில் ரஸ்டாவை ஒரு ராணுவ மருத்துவமனையில் பார்க்கும் போது  ஒரு கையை இழந்து  விட்டிருந்தார். ரஷ்யா தனது கையை இழந்து விட்டிருந்தது 

டால்ஸ்டாயின் பாத்திர அணிவகுப்பில்  பிறர் குற்றமும் தன்னுடையது  தானோ என்று குழம்பும் டுஷின் ஒரு தட்டில் என்றால்  மறு தட்டில் வாசைலி  அழுத்தமாக  உட்கார்ந்திருக்கிறார்.  முகத்துதி, நக்கல், சூழ்ச்சிகள் ஊ றிப்  பெருக்கெடுக்கும் உள்ளம் .

  தூலமான ஆபாசமும் நுண்மையான மெல்லுணர்வும் ஒரே பாத்திரத்தில் இயல்பாக வருவதே ஆசானின் தொடுகையாக உள்ளது .  வாசைலி பியருக்கு நாற்றமெடுக்கும் வாயால் முத்தம் கொடுக்கிறார் என்று சொல்லி விட்டு சில பக்கங்களுக்குள் தனது மக்களின் திருமணம் உறுதியாகும்போது தந்தையாக உண்மையாக கண்ணீர் நிறையும் கண்களுடன் தோன்றுகிறார் வா சைலி. 

சுயநலம் என்னும் மாமிசம் தந்தையன்பு என்னும் ஆன்மாவின் மீது போர்த்தியுள்ளதை டால்ஸ்டாய் தொடும் இடம் இது.

  அழுக்குப் படாத , சீருடை கலையாத ராஜதந்திரி பதவியை தனது அம்மா அன்னா பாவ்லவ்னா மூலம் பெற்று விடும் போரிஸ் உயர் பதவிகளுக்கு தொங்கிப் பிடித்துக் கொண்டு ஏறிவிடும் கலையின் பயனாளி.  ஆட்சி மாறிவிட்டபோதும் போரிஸ் தனது ஆதாயங்களை அழகாகப் பெறக்கூடியவன். 

கனவு காணும் ரஸ்டாவ்  அரசனுக்காக உயிரையும் தரும் உணர்வெழுச்சி கொள்கிறான்.  நாட்டுப்  பற்றுக்கும் நயமான தந்திரத்திற்கும் என்றும் நடைபெறும் போராட்டம்  நாவலின் மைய இழை.  ஒரு போருக்குள் பல போர்கள்.  ஒரே படைக்குள் பல போர்கள் .

பேச்சில்லாப் பேச்சு

உரையாடல்களுக்கு இணையாக மன ஓட்டத்தையும் உடல் மொழியையும்  கையாண்டிருக்கிறார். ஒரு பாத்திரம் ஒரு வாக்கியம் பேசியதென்றால் அப்போது அவர்கள் நின்ற, உட்கார்ந்திருந்த இடம், குரலின் ஏற்ற இறக்கம் , கண்கள், உதடுகளின் இயக்கம் முகம்  இவற்றை விரிவாக அளித்து விட்டு  “போல இருந்தது”, “பாவனை செய்தார் ” என்ற தொடர்களின் வழியாக  உடலின் பேச்சைப் பதிவு செய்கிறார்.  அதன் வழியாக மனதின் ஆழங்களுக்குள் அழைத்துச் சென்று  மனிதர்களின் உள்நோக்கங்களைத் தோலுரிக்கிறார் 

போரின் நொதிகள்

முரண்படும் உணர்வுகளை அபாரமாகச்  சொல்லிச் செல்கிறார். உதாரணமாக ஒரு சொற்றொடர் “இன்பத்தோடு கோபமாக நினைத்தார்” . 

இன்பம் காமத்தைக்  குறிக்கிறது, கோபம் குரோதத்தின் வெளிப்பாடு. மனிதனுக்கு நொதிச் சுரப்பிகளில் ஏற்படும்  தாறுமாறான கசிதலே போருக்கு  காரணம் என்று ஒரு கருத்து உண்டு. போரின் தொடக்கத்தில் சில வீரர்கள்  அடையும் மன எழுச்சி போரின் உளவியல் மீது  டால்ஸ்டாய்க்கு இருந்த ஆழமான பிடிப்பைக் காட்டுகிறது 

 இப்போதைய சுழலில் கூட பியரின் எஸ்டேட் இருந்த அதே கீவ் நரரில் போரின்  முன்னேற்பாடுகள் தொடக்கி விட்டன.  (ஜனவரி 2022) புடின் – நேடோ விளையாடும் கள மாகிறது உக்ரைன்

 தூக்கத்தை டால்ஸ்டாய்  பல வகைகளில் கையாளுகிறார். தோற்கப் போகும் போரில் தனக்கு  விருப்பமே இல்லாததால் ஆலோசனைக் கூட்டத்தில் குட்டஜோ வ் தூங்கி விடுகிறார். மனம் தவிர்க்க முடியாத ஒரு துயரத்தை  எதிர்கொள்ள அது ஒரு வடிகால். ரஸ்டாவ் குதிரைப்படைக்  காவல் முனையில் தூக்கக் கலக்கம் கொள்கிறான் . அவன் கனவுகளும் தூண்டப்பட்ட மனமும் கொண்டவன். பரபரப்பான நிலை தாள முடியாத போது மனம் ஒய்வு கேட்கிறது. 

தலைக்காயம் பட்ட ஆன்ட்ரு  தனக்கு மேலே ஆகாயத்தைக்  காணும்போது மரண அனுபவத்தை ஒரு கணம் பெறுகிறான். அது அவனைப் பேரமைதியில் வைக்கிறது.  

போரின் அரசியல்

போரில் தோற்றவனை நெப்போலியன் புகழ்கிறார். களத்தின்  இறுதியில் காலத்தின் ஓட்டத்தில் நாயகர்களெல்லாம்  அருவருக்கத் தக்கவர்களாகத் தெரிகிறார்கள் .   ஜாரும் நெப்போலியனும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட பின் காயம் பட்ட வீரர்கள் எல்லாவற்றையும் வெறுமையாக நோக்குகிறார்கள்.  

போரில் தோற்றபின்னும் அதை வெற்றி என்று சொல்லி விருந்து நடக்கிறது. புதிய வதந்திகளை, கோழைகளை, நாயகர்களை உருவாக்கிப்  படைக்கிறது விருந்து. டெல்லியின் “ கான் மார்க்கெட் கேங்” உடைய பழைய பாணி. 

முதிர்ந்து கனியும் தரிசனம்

ஆன்ட்ருவின் மரணச் செய்தியைக் கேட்ட மேரி  (இது உண்மையல்ல என்று பின்னால் தெரிய வருகிறது) அழாமல் எதிர் கொண்டுதுணிவு கொள்ளும் இடம் அவளுடைய மனப் போக்கிற்கு பெரிய மாற்றம். அவள் துயரம் அடைவதற்கு பதில் உயர்வான ஒரு மகிழ்ச்சி கூட அடைகிறாள். இங்கு ஆசிரியர்  மெய்ஞானி ஆகிறார். தந்தை பால்கான்ஸ்கியோ செய்தியை உறுதி செய்து கொள்ளாமல் நம்பிவிடும்  நசிவியலாளராக –  ஃபாட்டலிஸ்ட் ஆக இருக்கிறார் 

போர் முனையில் இருந்து ரஸ்டாவ் அனுப்பும்  கடிதத்தை அவன் குடும்பம் எதிர் கொள்ளும் முறை அழகு . குதூகலம் மட்டுமே கொந்தளிக்கும் இடம். பெண்குழந்தைகள் இல்லாத வீடுகளில் இது கிடைக்காது. நேர்  மாறாக இறந்து விட்டதாக நம்பிவிட்ட ஆன்ட்ரு வீடுதிரும்புதல் , கடுமைக்காரரான அவன் தந்தையின் உள்ளத்தில்  வைத்த கடினமான பாறையைப் பிளந்து நீர் பொங்கிய இடம் .

மரணமடையும்போது லிசா ஒரு கேள்வியை   முகத்தில் படர விட்டபடியே இறக்கிறார்கள். அது தீராத   குற்ற உணர்வை அவள் கணவனுக்கு உருவாக்கி விடுகிறது.  “எனக்கு ஏன் இதைச் செய்தீர்கள் ” என்கிறது அவள் முகம். சிறிய பொம்மை  போலவே அவளை  காட்டிக்   கொண்டுவருகிறார். டால்ஸ்டாய்.  அவளுடைய உதடுகள் சேர்வதே இல்லை என்கிறார். முழுமையடையாத வாழ்வின்   துயருக்கு மறக்க முடியாத உருவகம் 

வேறொரு வகையில் தூய இதய சுத்தியின் காரணமாக எளிமையில் “பிதாவே என் என்னை கைவிட்டாய்” என்று கேட்பது போலவும் உள்ளது. 

நடாஷாவின் பாத்திரம் குழந்தைமையிலிருந்து கன்னிமைக்கு மெதுவாகத் துளிர்விடுகிறது. எல்லாவற்றின் மீதும் உணர்ச்சி பூர்வமான  அன்பு, மிகைத் திறமையான நடனம் இவற்றை மட்டுமே முதல் பாகத்தில் நடாஷா வெளிப்படுத்துகிறாள். 

மொழிபெயர்ப்பாளர் டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் இந்திய மனதிற்கு பொருத்தமான பதங்களைப் பயன்படுத்தி பண்பாட்டு மேடு பள்ளங்களை நிரவி விடுகிறார். 

உதாரணம் – துப்பாக்கி சனியன், “அவளுக்கு சாதகம் போதாது; குரல் அற்புதமானது”, ” எங்கள் சத்சங்கம்”, ‘வேதாந்த விஷயம்” “மனோராஜ்யம்” , தர்மம், தியானம், தீட்சை போன்றவை 

ஆன்ட்ருவிற்கு போர்க்களத்தில் காயம்பட்ட நிலையில் முதல் தீட்சை கிடைக்கிறது. பிறகு ஃ பிரிமேசன் பியருடன் பேசும்போது   இரண்டாம் முறை உள்ளம் விரிவு  கொள்கிறது.

தத்துவ ரீதியாக டால்ஸ்டாய்க்கு ஃபிரி மேசன்கள் மீது பரிதாபம் தான்  இருந்தது.   இருப்பினும் அவர்கள் மீது பரிவு இருந்திருக்கிறது. 

கருவி ஒரு வேளை பிழையானதாக இருந்தாலும் கதவு திறந்தால் போதும் என்று நினைத்திருக்கலாம்  .

 ஏனென்றால் தூய ஒளிக்கு டால்ஸ்டாய் நம்மை அழைத்துச் செல்லும் பாதை அபத்தம் என்ற குப்பைமேட்டின் வழியாகத்தான் செல்கிறது.  

ஆர் ராகவேந்திரன் 

கோவை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s