அம்பிகையும் அம்பாலிகையும் தம் குழந்தைகளை முதன்மைப்படுத்த விரும்பும் அன்னையர் மட்டுமே. அரசியல் ஆடல்களில் கூர்மையும் நுட்பமும் கொண்டவர்கள் அல்ல. அம்பிகையின் விருப்பம் திருதிராஷ்டிரனுக்கு செலுத்தப்பட்டது போல அம்பாலிகையின் விருப்பம் பாண்டுவிற்குள் செலுத்தப்படவில்லை. அம்பிகை அம்பாலிகையின் அடுத்தநிலை என காந்தாரியும் குந்தியும் எனில் தன் கணவனின் இசைக்குள் நுழைந்துவிட்ட காந்தாரியை குந்திக்கு சமன்செய்ய முடியாது. என்றபோதும் சகுனி அதை ஈடுசெய்கிறார். வேழம் நிகர்த்த துரியோதனனின் பிறப்பின் போதே வேழத்தை மத்தகம் பிளந்து கொல்லும் அனுமனின் கதையும் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. பீமனின் பிறப்பு நிகழ்கிறது. ஒவ்வொன்றும் எதிர்விசையால் சமன்செய்யப்பட்டு கூர்கொள்கிறது. பாலையின் விழைவினை எதிர்கொள்ளத் தயாராகிறது கங்கைச் சமவெளியின் விழைவு.
பாரதப்பெருநிலத்தின் மீதான காந்தாரப் பாலையின் விசை இன்றுவரை மீள நிகழும் ஒன்றாகவே தோன்றுகிறது. பாண்டவப்பிரஸ்தம் என்னும் பெயர் பின்னாளில் பானிபட் என ஆனது இங்கு வரலாற்றுக்கு புவியியல் வகுத்தளித்த பாதையை உணர்த்துகிறது. நிலம், நீர் – கடல் என்பது கடந்து காற்றிலேறி விண்ணில் என இனி மனிதரை வைத்தாடும் விசைகள் புதிய களங்கள் வகுக்கும்போலும். மீண்டும் தொடங்கிய இடத்திலேயே தம் ஆடலை முடிப்பார்கள் போலும் இந்திரனும் சூரியனும்.
கர்ணனின் பிறப்பை பாண்டுவிடம் சொல்லிவிடப் போவதாக சொல்லும் குந்தி பாண்டு அதை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் அதை மறைத்துவிடுகிறார். பின்னாளில் கான்வாழ்வில் தந்தையாகும் விருப்பத்துடன் பாண்டவரின் பிறப்பை ஏற்கும் பாண்டுவிடம், பின்னர் அவர்களிடம் பேரன்பு கொண்டவராக விளங்கும் பாண்டுவிடம் கர்ணனைப் பற்றி குந்தி சொல்லியிருக்க முடியும். அதை அவர் மகிழ்வுடன் ஏற்பவராகவே இருந்திருப்பார். எனினும் குந்தி அவ்வாறு செய்வதில்லை அதற்கான அரசியல் காரணங்கள் குந்தியிடம் உள்ளன.
குந்தியிடம் திருமணம் நிகழ்ந்த பின்னான முதல் இரவிலேயே பாண்டு தன்னுள் இருக்கும் ஆறு பாண்டுக்களைப் பற்றி சொல்கிறார். பாண்டுவின் ஏக்கத்தின் விழைவான அக்கனவை நிறைவேற்றி வைத்தவர் ஆகிறார் குந்தி. எனினும் பாண்டவர் பிறப்பில் விசித்திரவீரியனைப் ஒத்தவரான பாண்டுவின் ஏக்கத்தின் விழைவிற்கும் குந்தியின் பெரும் அரசியல் விழைவிற்கும் வேறுபாடு உள்ளது. பாண்டவர்களை அரசியல் திட்டத்திற்கான ஆற்றல்களாக பார்க்கிறார் குந்தி. உயிர் ஏக்கத்திற்கு அருள்கிறது வான் அவ்வருளின் வரங்களைப் பெருவிழைவு தன் கரங்களில் கொள்ளும் நேரம் யாவும் திரிபடையத் துவங்கின்றன என்று தோன்றுகிறது.
பாண்டு அரசியல் விழைவுகள் அற்றவரா என்றால் ஆம் அவர் அரசியல் விழைவுகள் அற்றவர்தான். ஆனால் முற்றிலும் அரசியலே அற்றவரா என்றால் அவ்வாறல்ல என்று எண்ணுகிறேன. எப்போதும் தருமனைத் தன் தோளில் சுமந்தலையும் பாண்டு குந்தியின் அரசியலில் நோக்கற்றவர் போலத் தோன்றியபோதும் அதை அறிந்தே இருந்தார் என்று தோன்றுகிறது. பின்னாளில் குந்தியே அச்சமடையும் தருமன் பாண்டுவின் தயாரிப்புதானே? ஒருவகையில் அதில் குந்திக்கான பாண்டுவின் செய்தி பொதிந்துள்ளது என்று தோன்றுகிறது.

இளைய வியாசரெனத் தோற்றம் கொண்ட விதுரர் பீஷ்மருக்கு பிடித்தமானவர். திருதிராஷ்டரனின் பேரன்பைப் பெற்றவர். சத்தியவதியால் வளர்க்கப்பட்டவர், நகையாடலில் அவர்தன் பேரரசியென்னும் வேடம் கலைத்து சிறுமியென உணரச்செய்பவர். விதுரருடனான சந்திப்பின் போது தான் கவலையற்றிருப்பதாகச் சொல்கிறார் சத்தியவதி. பாட்டிக்கும் பேரனுக்குமான உறவு இவ்வாறிருக்க விதுரர் எவ்வகையிலும் தன் அன்னை சிவையைக் பொருட்டெனக் கருதியவர் அல்ல. அம்பிகை அம்பாலிகை சிவை என்னும் வரிசையில் முன்னிருவரும் தம் கனவு கலைத்து கான்புகுகிறார்கள் எனில் சிவை விதுரரின் பொருட்டு தன் நிறைவேறாக் கனவினால் தன்னைத்தானே ஒடுக்கி சுருக்கி தனிமை கொள்கிறார். சத்தியவதிக்கும் சிவை ஒரு பொருட்டல்ல. தன்னால் கவர்ந்துவரச் செய்யப்பட்ட அம்பிகை அம்பாலிகையின்பால் கொண்ட அளவிற்கு சிவையின் மீது அவர் கருத்து கொள்வதில்லை.
குந்தியும் தன் அன்னையின் மீது அணுக்கம் அற்றவர். அவ்வகையில் விதுரரை ஒத்தவர். விதுரருக்கும் குந்திக்குமான உறவு நுட்பமான ஒன்று. நடுவுநிலை என்றபோதும் குந்திக்கு இசைவானதாகவே அஸ்தினபுரியில் அவரது அரசியலாடல்கள் இருக்கின்றன என்று எண்ணுகிறேன். விதுரர் புதிரானவராகவே தோன்றுகிறார்.. பீஷ்மருடனான தன் உரையாடலில் எதிர்காலத்தில் புதிதாக எழுச்சி பெறக்கூடிய மக்கள், எழக்கூடிய மௌரியப் பேரரசு உள்ளிட்ட அரசுகள் பற்றி கூறும் அவரது கணிப்பு, தீர்க்கதரினம் அவரது அறிவுத் திறனைக் காட்டுகிறது. எனினும் சூதர் என்னும் தன் எல்லைக்குள் நிற்பவர் அவர்.