மழைப்பாடல் வாசிப்பு ( 1 முதல் 25 அத்தியாயங்கள்)

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ! சாமுண்டீ! கங் காளீ!
- பாரதியார் (ஊழிக்கூத்து)
அன்னையும் அத்தனும் ஆடும் பகடைகள் தான் யுகங்கள் எனக் காலக்கடலில் விரிகின்றன.
பகடையின் வீச்சில் பகை கொள்ளும் இந்திரனும் கதிரவனும் தங்கள் விளையாட்டை மண்ணில் தொடர முடிவு செய்கிறார்கள். மரணமும் உதிரமும் வலியும் துயரும் விளையாட்டின் பகுதிகளே புவியின் சுமையைக் குறைக்க இயற்கை நிகழ்த்தும் .தூய்மைப்பணி
பீஷ்மர் வடமேற்குப் பாலையில் தொடர்ந்து அலைகிறார். காந்தாரி திருதராஷ்ட்ரனை மணந்து
ஹஸ்தினாபுரம் வருகையில் உதிர மழை பொழிகிறது. சிரவண மாதத்தில் கடைசி வரும் மழை
ஜூலை மாதத்தில் வட இந்தியாவில் பொழியும் தென்மேற்குப் பருவக் காற்றின் கொடையாகி
வருகிறது
வேழாம்பல் பறவை மழை நீருக்குக் காத்திருப்பது போல அஸ்தினபுரி பீஷ்மரின் கருணைக்கு
வாய்பிளந்து நிற்கிறது. பதினெட்டு ஆண்டுகள் கழித்து நகர் புகும் மாமழையாக பீஷ்மர். அந்த
மழையில் நனைந்து மதர்த்து நிற்பவன் திருதராஷ்ட்ரன். உடலாகவே வாழ்ந்தவன் பீஷ்மரிடம்
மற்போரில் தோற்றவுடன் உருகிப் பணிகிறான். விழி தவிர அனைத்துப் புலன்களாலும்
இசையைத் துய்ப்பவன். அவனுடன் மற்போரில் அவன் உடலை அறியும் பீஷ்மர் அவனுள்
ஓடும் அதிர்வை அறிகிறார். விதுரன் சொற்கள் மூலம் திருதனை அறிகிறான்.
விதுரன் உற்சாகம் நிறைந்த ராஜ தந்திர – சட்ட – அயலுறவு நிபுணனாகத் தன்னை
ஆர்வத்துடன் தயார் செய்து கொள்கிறான். அவனது பிறப்பு அவனுக்கு பெரும் தடையாக
இருப்பதை உணர்ந்து அறிவாலும் சொற்களாலும் தனது இடத்தை உருவாக்கிக் கொள்கிறான். விதுரன் ஆயுதங்களை மேற்பார்வையிட்டு கோட்டைத் தலைவனிடம் உரையாடுவது அமைச்சருக்கும் ராணுவத்தலைவருக்கும் எல்லா நவீன அரசுகளிலும் தொடரும் பூசலை குறிக்கிறது. ராணுவத்தை ஒரு ஐயத்துடன்தான் ஜனநாயக நாடுகளிலும் ஆட்சியாளர்கள் வைத்திருக்கின்றனர். நேரு – திம்மையா உறவு வரை வரலாறு பதிவு செய்துள்ளது. விதுரன் கோட்டை மேல் தயாராக நிறுத்தியுள்ள ஆயுதங்களை ஏன் துடைக்கவில்லை என்கிறான். பகலில் விபத்து ஏற்படலாம் என்கிறான் கோட்டைத் தலைவன். இரவில் செய்யலாமே என்கிறான் விதுரன். முறுமுனையில் பதில் ஏதும் வருவதில்லை. விதுரரின் துணிவு பீஷ்மர் என்னும் கார்மேகம் அஸ்தினபுரியை கவிந்து கொண்டிருப்பதால் வருகிறதோ?
போர் மழை போன்றது. பல முனைப் பூசல்களை அடித்துச் சென்று புதிய விதைப்புக்கு
புவியைத் தயார் செய்கிறது. போர் குறித்த பொருளியல் உரையாடல்கள் மெதுவாகத்
துவங்குகின்றன.
பீஷ்மர் கருணை மிகுந்து வடமேற்கே மாறி வீசிய மாரியாக காந்தாரம் செல்கிறார்.பாரத
வர்ஷத்தின் பசுமையான வரலாறெனும் வயலில் வடமேற்கு ரத்தம் கலக்க வழி செய்கிறார்.
எதிர்கால அரசியல் கணக்குகள் நிறைந்த சத்யவதி பீஷ்மரை காந்தாரம் அனுப்பி வைக்க
முயல்கிறாள் . அதற்கு விருப்பமில்லாத பீஷ்மரை பேருரு கொண்ட விழியிலா மன்னன் தாள்
பணிந்து விழும்போது மனம் மாறுகிறார் . இன்னொரு மனமாற்றம் சகுனியிடம் நிகழ்கிறது.
பீஷ்மரை அளக்க முடிந்து தோற்றபோது தனது ஆணவமும் கணக்குகளும் இழுக்க,
காந்தாரியை மகற்கொடை மறுக்கிறான் சகுனி. ஆனால் காந்தாரியின் நிமிர்வும் கனிவும்
நிறைந்த பேச்சு சகுனியின் மனதை மாற்றுகிறது.

சிறு சிறு நிகழ்வுகள் உலக நடப்பை மாற்றி விடுகின்றன. மகதத்தில் இருந்து சமாதான ஓலை
சகுனிக்கு வருகிறது. அதைக் கொண்டு வந்த செங்கழுகை ஒரு பசித்த ஓநாய் பிடித்துத் தின்று
விடுகிறது. அந்தக் கழுகை அம்பால் அடித்தது சகுனி. இரவில் துயிலாது இருந்த சகுனியை
தனது ஓலத்தின் மூலம் வெளியே வரச் செய்தது அந்த ஓநாய் . சகுனிக்கு துயில் வராமல் இருந்த
காரணம் பீஷ்மரின் மண வேட்பு தூது. ஒருவேளை கழுகின் செய்தி கிடைத்திருந்தால் காந்தாரம்
மகதத்துடன் மண உறவு கொண்டிருக்கும். மகாபாரதம் வேறு மாதிரி இருந்திருக்கும்
வேறு மாதிரி போகக் கூடிய பல்வேறு சாத்தியங்களின் விதைகள் காலமெனும் மணல் பரப்பில்
கொட்டிக் கிட க்கின்றன.
பாலைப் பயணத்தில் பீஷ்மர் கண்ட எண்ணற்ற விதைகள் ஒவ்வொன்றும் ஒரு நிகழ்தகவு.
தொடர் நிகழ்வில் ஒரு கண்ணி மாறினாலும் உருவாகும் காடு முற்றிலும் வேறாக இருக்கும்.
சத்தியவதி பீஷ்மரை தூது அனுப்பும் பகுதி கானல் வெள்ளி . காந்தாரி வெண்மணல் அனுப்பும்
அரிய வெள்ளி. அல்லது இந்த மொத்த நிகழ்வும் மயக்கும் பொய்த் தேர்.
பருவ மழையின் பரிசுதான் பாரதத்தின் வாழ்வும் பண்பாடும். புயல் உருவாக
பாலைவனங்களும் பங்களிக்கின்றன என்கிறார்கள் புவியியல் அறிஞர்கள்.
நிலத்தைக் காய்த்து காற்றை இலேசாக்கி அழுத்தத்தில் பேதமிட்டு விளையாடி கடல் நீரை
உறிஞ்சி முகிலில் நிரப்பி வீசிப் பொழிகின்றன தென் மேற்குக் காற்றுகள். மணலைக்
காற்றில் ஏற்றி விளையாடுகின்றன நெருப்பு தெய்வங்கள் . சகுனி என்னும் வெந்த காற்று
பாரதத்தின் மீது மழையைப் பொழிவிக்க காந்தாரம் தொட்டிலாக உள்ளது. ஆனால்
பொழிவது உதிரமழை .
பீலிப்பனையில் காந்தாரிக்கு தாலிச்சுருள் செய்ய பாலை எங்கும் அலைகிறார்கள், இறுதியில்
வெம்மையின் அனைத்து வீச்சுகளையும் தாங்கிய பேரன்னையான தனித்து நிற்கும் பூத்த
பனையைக் காண்கிறார்கள் கடினமான சூழலில் பெருகும் உயிர்த்தொகையின் அடையாளம்
பனை. காந்தாரியின் தங்கைகள் விழியிலா வேந்தனை மணக்கத் தயார் ஆகிறார்கள்.
திருதனின் உள்ளே ஓடிக் கொண்டிருந்த இசையைத் தானும் கேட்கிறாள் காந்தாரி . அந்த
இசைக்கணம் மிகக் குறுகிய மின்னல் அந்தக் கணத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளக்
கண்களைக் கட்டிக் கொண்டு விடுகிறாள். திருதன் வாழ்வில் முதல் முறையாக மழையில்
நனைகிறான்.
திருதராஷ்ட்டிரன் காற்றின் இசையில் மந்திர ஸ்தாயில் ஒலிக்கும் செவ்வழிப் பண்ணைக்
கேட்கிறான். அவனுக்கு என்றோ ஒருநாள் திருவிடத்து கலைஞர் இசைத்த சாமவேத பாடல்
இசை மட்டும் நினைவுக்கு வருகிறது. சொற்களை விதுரன் எடுத்துத் தருகிறான்
சாமவேதம் ஐந்தாம் காண்டம் ஒன்றாம் பாகம் ஐந்தாம் பாடல் பவமானன் என்னும் சோமனுக்கு
உரியது. பொங்கும் நதிகள்போல, கூரம்புகள்போல துள்ளி வரும் நெருப்பின் மகன் –
கதிரவனின் நண்பன். இந்திரன் வயிற்றில் சோமச் சாற்றை நிறைப்பவன். இரு பெரும்
சக்திகளின் மோதல் இனிய கல்லாக இசையாக ஆவியாக திருதனின் செவிக்குள் காற்றும்
நெருப்பும் போலக் கரைகின்றன.
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாள் என்னை.
ஆர் ராகவேந்திரன்
கோவை