தஸ்தவ்யாஸ்கியின் ‘இடியட்’ கதைமாந்தர்களின் உளவியல் நமக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கின்றன. சில இடங்களில் நம் உள அமைப்பையே காட்டுவதாக மலைப்பை தருகின்றன.
குழந்தைப் பருவ நினைவுகள் வெளிவரும்போது எப்போதும் நம் அசலான ஆளுமையுடன் நெருக்கமாக உணர்கிறோம். நம்மையும் உலகையும் அன்பு மயமாக ஆக்கவல்லவை இந்நினைவுகளைத் தூண்டும் படைப்புகள்.
உலகின் கண்ணீரை துடைத்து விடுபவன் உலகிற்கு ஒரே நேரத்தில் அன்னையாகவும் குழந்தையாகவும் ஆகிறான். பிறிதின் நோயை தன் நோய் போல் போற்றும் அறிவு , முயற்சியினால் அடையப் படுவதல்ல; அது இயல்பான அன்பிலிருந்து வருவது. அசடனான மிஷ்கின் தூய அறிவின்மையின் வெளிப்பாடு.

எம் ஏ சுசீலாவின் சீரான மொழிபெயர்ப்பில் நாணிக்கோணிக் கொண்டு நம்முன் வருகிறான் அசடன். தனது வலிக்கும் பிறரது வலிக்கும் வேறுபாடு தெரியாத தூய்மை சில வரலாற்று மாந்தர்களின் நினைவுகளைக் கொண்டுவருகிறது.
ஒரு பெரிய குழந்தை சிறியதை அடிக்கும்போது இன்னும் சிறிய குழந்தை ஒன்று அழுகிறது. புல்வெளி மீது நடக்கும் மனிதனைப் பார்த்த ராமகிருஷ்ணர் இதயம் பிசையைப்படும் வலியை உணர்கிறார். பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மனிதர்கள் இறந்து கொண்டிருந்த இரவில் விவேகானந்தருக்கு பெரும் துயர் உண்டாகி விடுகிறது. பயிர் வாடும்போது தன் உயிரும் வாடிய வள்ளலார் அறிவுச் செயல்பாடாக வோ சிந்திப்பதன் மூலமாகவோ துயரைப்பெறவில்லை. விளக்க முடியாத ஒரு இணைப்பு இங்கே இருக்கிறது.
நஸ்டாஸியாவின் குழந்தை போன்ற முகத்தைக் காணும்போதும் அக்லேயாவின் ஒளிவு மறைவற்ற அக்கறையை உணரும்போதும் மிஷ்கின் கொள்ளும் பேரன்பு உடல் தளத்தைக் கடந்தது.
துளித்துளியாக, பொறுமையாக மிஷ்கினின் பாத்திரத்தை வார்த்தெடுக்கும் ஆசிரியர் அவனை முழுமையாக்குகிறார். ‘விசுவாத்ம புத்தி’ என்று சொல்லப்படும் ‘உலகில் கரைந்த’ ஆளுமையை இயேசுவின் படிமம் போல செதுக்குவதற்கு இவ்வளவு பெரிய பின்புலமும் நுண்ணிய காட்சி விவரிப்புகளும் தேவைப்பட்டிருக்கின்றன.
இயல்பான , சிறிது சுயநலமும் சாமானிய ‘நல்ல’ தன்மையும் கொண்ட நாகரிக மனிதன் போன்ற சராசரி வாழ்வை மிஷ்கின் போன்றவர்கள் மேற்கொள்ள முடிவதில்லை. சிறிது சிறிதாக பித்து நிலையை அடைகிறார்கள். அல்லது சற்று மூளை கலங்கியதால் தான் இந்த நேயம் தோன்றுகிறதோ?
மிஷ்கின் பொது இடத்தில் அவை நாகரிகத்தை பின்பற்றுவதில்லை. பூச்சாடிகளை தனது உணர்ச்சி வசப் பதட்டத்தால் உடைத்து விடக்கூடியவன். தஸ்தவ்யாஸ்கியின் வாழ்வில் அவருக்கு ராணுவ சீருடை பிடிக்கவுமில்லை. பொருந்தவும் இல்லை. அடிக்கடி இழுப்பு வரக்கூடியவர். பழமை வாத கிறித்துவமும் சோஷலிசமும் ஆசிரியரைக் கவர்ந்திருக்கின்றன. மிஷ்கின் இந்த குணங்களுடன் வளர்ந்து வருகிறான்.
ஆணவம் கொண்ட பெரிய மனிதர்கள் மிஷ்கின் போன்றவர்களை ஏளனம் செய்கிறார்கள். எடை போடும் அறிவாளிகளின் அடிமனதில் கயமை இருட்டில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கிறது. மிஷ்கின்கள் பெரும்பாலும் இவர்களை புரிந்து கொண்டிருக்கிறார்கள். கபடங்களை எளிதில் கடந்து செல்வதன் மூலமும் அவர்களுக்கு வென்று விட்டோ ம் என்ற இறுமாப்பை அளிப்பதன் மூலமும் தங்கள் மைய இயல்பை பாதுகாத்துக் கொள்கிறார்கள். மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு வாழ்வின் இறுதி கணத்தில் சுய நினைவு திரும்பி விடும் என்ற நம்பிக்கை உண்டு. ‘தான் ‘ யார் என்று உண்மையில் ஆரோக்கிய மனம் கொண்டவர்களும் அறிந்து கொள்ளாத நிலையில் , நிலையான சுய அறிவு என்பது என்ன என்ற கேள்வியை அசடன் முன்வைக்கிறான்.
மிஷ்கின் போன்ற ‘இளிச்சவாய’ தன்மை கொண்ட தேசங்களும் சமுதாயங்க ளும் கூட இருக்கின்றன . தான் ஏமாற்றப்படுவது தெரிந்திருந்தும் பிறருக்கு மகிழ்ச்சி தருவதற்காக ஏமாந்தது போல நடிக்கும் ‘அப்பாவிகள் ‘ நின்றிருக்கும் உலகை இலக்கியவாதிகளால் படைக்க முடிகிறது

மனிதன் இறைத்தன்மையை பூரணமாக வெளிக்காட்டுவதில் அடையும் தடுமாற்றங்களின் கதையே அசடன்
பெரிய கப்பல் ஒன்று முனகலுடன் கிளம்புவது போல கதை துவங்குகிறது. ஒவ்வொரு இயந்திரமாக சுழலத் துவங்க, கதைமாந்தர்களி ன் விவாதங்களின் ஊடே அசைவு நிகழ்கிறது. நகர்வதே தெரியாமல் கதை வெகு தூரம் வந்து விட்டிருக்கிறது.
சுவிசர்லாந்தின் மன நோய் சிகைச்சை முடிவதற்கு முன்னரே தனது தாய்நாடாகிய ரஷ்யாவிற்கு ஒரு துணி மூட்டையை மட்டும் உடைமையாக எடுத்துக் கொண்டு மிஷ்கின் வருகிறான். திடீர் செல்வந்தனாகி , அன்பை சுற்றிலும் தெளித்து , எல்லோரையும் நம்பி , குறுக்கு மனது கொண்டவர்களையும் ஆட் கொண்டு அவர்களே அவனுக்கு செய்த சூழ்ச்சிகளையும் அவனிடமே சொல்லவைத்து அதையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் காதலில் விழுந்து அடிபட்டு, ஒரு கொலை நிகழ்விற்கு தார்மிக காரணமாகவும் சாட்சியாகவும் இருந்து, மூளை மீண்டும் கலங்கி தனது மருத்துவ சிகிச்சைக்கே திரும்புகிறான்.
பெற்றோரை இழந்து குழந்தையாக இருக்கும்போதே எதிர்கால உருவாய் பொலிவின் அடையாளங்களைக்கொண்ட நஸ்டாசியா, டாட்ஸ்கி என்னும் கீழ்மைகொண்ட செல்வந்தனால் வளர்க்கப் பட்டு கையாளப்படுகிறாள். தனது நிலைக்கு பொறுப்பாளி தானே என்றும் தன்னைப் பாவி என்றும் எண்ணிக் கொண்டு சுயவதை செய்து கொள்கிறாள். உண்மையான அன்புடன் அவளுக்கு மீட்பை அளிக்க மிஷ்கின் முன்வருகிறான். அவனை கீழே இறக்கக் கூடாது என்ற குற்ற உணர்வுடன் தன்னைக் கீழே இறக்கிக் கொண்டு ரோகோஸின் என்னும் தாதாவை மணக்க முடிவு செய்து ஒவ்வொரு முறையும் திருமண சமயத்தில் ஓடிப் போய்விடுகிறாள்.
அவளைப்போலவே கலைத்திறனும் மென் மனமும் கொண்ட அக்லேயாவுடன் மிஷ்கினை மணமுடித்து வைக்க முயற்சி செய்து ஒரு கட்டத்தில் இரு பெண்களுக்கும் நடைபெறும் ஆதிக்கப் போட்டியில் மிஷ்கினை திருமணம் செய்துகொள்ள நஸ்டாசியா முடிவெடுக்க, மீண்டும் ஓடிப்போதல் நடைபெறுகிறது. அவளை அழைத்துக் கொண்டு செல்லும் ரோகோஸின் அவளைக் கொன்று விடுதலை தந்து விடுகிறான். மிஷ்கினுக்கும் ஆறுதலைத் தந்து சைபீரிய தண்டனையை பெறுகிறான்.
மிஷ்கின் உலகில் அழகினால் அமைதியைக் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறான் . அவன் உண்மையில் அன்பைத்தான் அப்படி எண்ணி இருப்பான் போல இருக்கிறது.
உருண்டு வரும் அழகிய கண்ணாடிக் குடுவையைப் பக்குவமாக எடுக்கத் தெரியாமல் போட்டு உடைத்து விடுவது போல அக்லேயா தனது வாழ்வை குலைத்துக் கொள்கிறாள்.
அசையாத நீரோடை போன்ற நாவலில் சிரிப்பைத் தரும் சுழிகள் தளபதி இபான்சின் வரும் இடங்கள்.
குடிப்பதற்கு காசில்லாமல் கடன் கேட்பதும் தனது பழம் பெருமையை பறை சாற்றிக் கொள்வதும் பொய் சொல்லிச் சொல்லியே அதைத் தானே நம்ப ஆரம்பிப்பதும் கிடைத்த புட்டியை ஊற்றிக் கொண்டு அதே இடத்தில் உறங்கி விடுவதும் தனது சாகசக் கதைகளைத் பிறர் நம்பாத போது கோபித்துக் கொண்டு சண்டை இடுவதும் – உணர்ச்சிகளின் உச்சமான இந்த இபான்சின் போன்ற ஆத்மாக்கள் வாசகர் மனதில் பல பரிச்சயமான முகங்களை எழுப்புகின்றன.

நாவலின் உச்சமாகக் கருதுவது நஸ்தாசியா கொல்லப்பட்ட பின் அந்த இருட்டு அறையில் மிஷ்கின் ரோகோஸின்னுடன் தங்குவது தான் . ஆன்மாவின் இருட்டில் குற்ற உணர்வின் துயரில் இருக்கும் கொலைகாரனுக்கு தேறுதல் தரும் மிஷ்கின் இயேசுவின் வடிவம் ஆகிறான். .
நஸ்டாசியாவின் விருந்தில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் செய்த அவமானம் தரும் குற்றங்களைச்L சொல்லும் இடமும் மிஷ்கினின் சுழலையும் உடல் நிலையையும் வைத்து அவனது உளவியலை பாவ்லோவிச் ‘விளக்குவதும்’ ஆய்விற்கு உரியன.
குழந்தைகள் ரகசியங்களை விரும்புகின்றன. சத்தம் போடாதே என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே கதவுக்கு இடுக்கில் நின்று கொண்டு கள் ளச் சிரிப்புடன் வாய்மேல் ஆள் காட்டி விரலை வைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றன . யாரிடமும் சொல்லாதே என்று மிக மெதுவாக உச்சரிக்கும்போதே அந்த ஒலி பெரிதாகக் கேட்டு விடுகிறது. நாஸ்டாசியா கொல்லப் பட்டதும் மிஷ்கின் ரகசியமாக ‘எப்படிச் செய்தாய்? பாவ்லோவ்ஸ்க்கிற்கு வரும்போதே கத்தியுடன் தான் வந்தாயா ‘ என்றெல்லாம் கொலை செய்தவனிடம் கேட்க்கிறான். தானும் மாட்டிக் கொள்வோம் என்று சிந்திக்காமலேயே ரோகோஸினுக்காக கவலைப் பட ஆரம்பிக்கிறான். பளிங்கு போல அருகில் இருப்பவரைப் பிரதிபலிக்கும் மனம். ஊரைக் கூட்டிவிடாமல் ரோகோஸின் அருகில் படுத்துக் கொள்கிறான். அவனது கண்ணீர் கொலைசெய்தவன் மீது விழுந்து கழுவுகிறது
மிஷ்கின் முன் எல்லோரும் உண்மையையே பேசுகிறார்கள். எதற்கு இவ்வளவு சிக்கலாக வாழ்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது அவன் வாழ்வு
மிஷ்கின் முன்னால் எல்லோரும் குழந்தைகள் ஆகிவிடுகிறார்கள். குழந்தையால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. கண்களை மூடிக் கொண்டு தந்தை முன் வந்து நிற்கிறது. தந்தையும் தன் கண்களை மூடிக்கொண்டு தவிப்பதாகவும் பின் கண்டு பிடிக்கப் படடவராகவும் நடிக்கிறார். பின் இறைவன் பதட்டத்துடன் தன்னை வெளிப் படுத்திக்க கொள்கிறார்.
ஒரே ஒரு தூயவன் இருந்தான் அவன் கிறிஸ்து என்று சொல்லும் தஸ்தயேவ்ஸ்கி அவனை மீண்டும் மனிதர்களில் தேடிச் சலித்து வடிகட்டி எடுத்த கிறித்து நிகர் ஆளுமை மிஷ்கின்
அன்பின் தூய்மையை மறந்து விட்ட அசட்டு உலகில் மிஷ்கின் தன்மையை அடையும் முயற்சியே இலக்கியம் என்று தோன்றுகிறது. அந்த நிலையை ஒரு சிலர் அடையும் போது புவியின் பளு குறைகிறது. அப்போது சுகதேவா என்று வியாசர் அழைக்கையில் கானகத்தின் எல்லாப் பறவைகளும் இங்கிருக்கிறேன் தந்தையே என்று பாடுகின்றன.
ஆர் ராகவேந்திரன்
கோவை