இந்த முறை சொல்முகத்தில் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பை தேர்ந்தெடுத்தோம். அனேகமாக தமிழ்நாட்டிலேயே மொரட்டு புத்தகங்களை வாசிக்கும் மொரட்டு இலக்கிய குரூப் நாங்கள் மட்டுமே.

டால்ஸ்டாய் உருவாக்கும் உலகம் நாம் வாழும் ஆனால் நாம் ரசித்திடாத,கவனித்திடாத அதே யதார்த்த உலகம்.அங்கு வரும் மனிதர்களை நாம் தலை தூக்கி ஆச்சர்யமாக பார்க்கவேண்டியதில்லை,மாறாகா நேருக்கு நேராக ஒரு கண்ணாடியில் பார்ப்பது போல் நம்மையே காண்கிறோம்.இவ்வளவு செரிவுள்ள நாவலை சில பகுதிகளாக பிரித்து பார்த்தால் அதை முழுமையாக உள்வாங்க முயற்சிக்கலாம்.

- அழகியல்:
டால்ஸ்டாயினுடைய பலமே அவருக்கு இயற்கையின் மீதுள்ள காதல்தான்.நாவல் ஆரம்பிக்கும் போதே வசந்த காலத்தில்தான் ஆரம்பிக்கிறது.” எவ்வளவு தான் நிலத்தை உருகுலைத்தாலும், எவ்வளவு தான் கற்களை பரப்பி புற்களை அழித்தாலும், எவ்வளவு தான் மரங்களை அழித்தாலும் ,விலங்குகளை பறவைகளை விரட்டினாலும் வசந்தம் வசந்தமாகவே இருந்தது நகரத்திலும்”. அன்பையும் அமைதியையும் ஊற்றெடுக்க வைக்கும் இந்த வசந்தத்தை புனிதமாகக் கருதாமல், ஒருவரையொருவர் அடக்கி எவ்வாறு அதிகாரம் புரியலாம் என்பதையே மக்கள் முக்கியமாக கருதுகிறார்கள் என முதல் பக்கத்திலேயே வருத்தப்படுகிறார்.
இந்த இயற்கையின் காலநிலையை ,நிலகாட்சியை ,மற்ற பொருட்களை விரித்து விரித்து அழகாகவும் நுட்பமாகவும் எழுதுவதுதான் அவருடைய சிறப்பு.அது வெறும் விவரனையோடு மட்டும் இல்லாமல் இறுதியில் ஒரு படிமமாக (Metaphor) மாற்றவதுதான்/மாறுவதுதான் அவர் மற்றவர்களிலிருந்து ஒரு படி மேலே செல்கிறார் என நினைக்கிறேன்.இந்த விவரிப்பு சுவைதான் அவருடைய Signature,அதை சுவைப்பவர்களே அவரை திளைத்து வாசிக்க முடியும்.
இன்னும் எளிதாக புரிந்து கொள்வதற்கு துருக்கி இயக்குனர் Nuri Bilge Ceylan படங்களில் (OT Anatolia,Winter Sleep) வரும் நிலக்காட்சியை,காலநிலையை,இரவை இந்த சுவைக்கு இணையாக சொல்லலாம்.

- கதை மாந்தர்கள்:
எவ்வளவு கதாப்பாத்திரங்கள்! இந்த நாவலை நினைக்கும் போது ஒரு மக்கள் நெருக்கடியான சித்திரம் ஒன்று வந்து செல்கிறது.
வெறும் மக்கள்!
பொதுவாக நாவலுக்கு இன்றியமையாததாக கருதப்படும் தொன்மமோ,மரபோ இல்லாமல் வெறும் இரத்தமும் சதையுமான மக்களை வைத்து நிகழ்கால அமைப்பைப் பற்றி எழுதப்பட்ட பேரிலக்கியமே புத்தியிர்ப்பு.இந்த தன்மையே அவரை மாஸ்டராக்குகிறது என சொல்லலாம்.
இதில் வரும் எந்த கதாப்பாத்திரமும் தேவையற்றதாக கருதுவதற்கு வாய்ப்பில்லை.எல்லா கதாப்பாத்திரத்திற்கும் ஒரு பயணம் உள்ளது.பெரும்பாலான முக்கிய கதாபாத்திரத்திற்கு அதன் தற்போதைய நிலை ,அது புள்ளியிலிருந்து தற்போதைய நிலைக்கு மாறியது என்ற Arc ஐ நாம் காணலாம்.
உதாரணமாக, கல்லூரியில் துடிப்பாகவும், புரட்சிகர சிந்தனையோடு இருக்கும் நெஹ்லூதவ் எந்த புள்ளியில் தடம் மாறுகிறான் என்பது.அவனது நேர்மையே அவனுக்கு சுமையாக உள்ளது, மற்றவரிடமிருந்து அன்னியமான உணர்வை ஏற்படுத்துகிறது.அவன் இராணுவத்தில் சேரும் போது அந்த சூழ்நிலையே அவனை மாற்றுகிறது.
மாஸ்லாவா குற்றவுணர்வின்றி விபச்சாரியாக மாறியதற்கு, அவள் கடந்து வந்த பயணத்தை பார்க்கலாம்.
குழந்தை பிறந்த பிறகு அவளது அத்தை தன்னை அடிமைபோல் நடத்துகிறாள், அங்கிருந்து புதிதாக வேலைக்கு செல்லும் இடத்திலும் ஆண் முதலாளிக்கு இரை ஆகிறாள்,பிற்பாடு வயதான எழுத்தாளரிடம் (இவர் டால்ஸ்டாய் ) ஏமாருகிறாள்.இறுதியில் இந்த ஆண்களே மிருகங்கள் தான், இவர்களுக்கு இரையாவதைவிட தேவையானதை விட்டெரிந்து விட்டு தன் பின்னால் திரியும் நாயாக ஆக்கி விடுவதே சிறந்த வழி என விபச்சாரியாகிறாள்.
நெஹ்லுதாவின் கல்லூரி தோழன் நேர்மையான செலேனின் ,தனது வாழ்வில் சிறிய சிறிய தவறுக்கு இடம் கொடுத்து இறுதியில் அறமற்ற புதைகுழியில் மாட்டிக் கொண்டதை காணலாம்.
இது போலவே அரிசியல் கைதியில் ஒரு நபர்,புரட்சிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாமல் கைது செய்யப்பட்டு பிற்பாடு சிறையில் இரு வாலிபர்கள் தூக்கிலிடப்பட்டதை கண்டு புரட்சியில் இறங்கியவர்.
என எல்லா கதைமாந்தர்களுக்கும் ஒரு பயண தீற்றை காண்பிக்கிறார்.அந்த வகையில் இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திலிருந்தும் ஒரு நாவலை விரித்தெடுக்க முடியும்.


- உருவகம் (Metaphors):
இதில் வரும் இயற்கை காட்சிகள்,மற்ற விவரணைகள் வெறும் விவரிப்போடு இல்லாமல் அதன் தன்மைகள் கதையோடு ஒத்திசைந்து கதைக்கு பலமாகவும்,சில நேரங்களில் உருவகமாகவும் மாறுவது பரவசம் அடைய வைக்கிறது.உதாரணமாக இதில் வரும் காலநிலையை நெஹ்லுதாவின் வாழ்க்கையோடு,மனநிலையோடு சேர்த்தே பார்க்கலாம்.அவரது பிரபு குல வாழ்கையில் வசந்தமாகவும் மெதுவாக காலநிலை மாறி அவர் சைபீரிய கொடுங்காவல் தண்டனை நோக்கி செல்லும் போது கோடை உச்சத்தில் இருப்பதை காணலாம்.
கோர்ட்டை விவரிக்கும் போது ஜார்ஜ் மன்னர் புகைப்படமும்,கிருஸ்துவின் புகைபடமும் ஒரே நிலையில் இருப்பதை, புனிதமான கோர்ட் என்பதே அதிகாரத்திற்கு உட்பட்டது என எடுத்துக் கொள்ளலாம்.
நெஹ்லுதாவ் அதிகாரிகளின் அறமின்னையை யோசித்த படி ரயிலில் வரும் போது,மழை நீர் பெய்து மலை ஓரங்களில் அடுக்கி வைக்கப்பட்ட காங்ரீட் கற்கலில் உள்ளே நுழையாமல் கீழே வழிந்து ஓடுவதை காண்கிறார்.அதிகார அமைப்பு மனிதத்திற்கு சிறிது கூட இரக்கம் காட்டாமல் இயந்திரமாக அதிகாரத்தை மட்டுமே பாதுகாக்கும் கெட்டி தட்டிப் போன பாறையாக பார்க்கிறார்.
நெஹ்லுதாவ் குற்றம் புரியும் சமயத்தில் பின்னால் ஆறு பனிப்பாறையை உடைத்து குமுறி ஓடுகிறது.குற்றம் முடிந்து விடியும் சமயத்தில் மூடிபனி விலகி தேய்ப்பிறையில் இருள் போன்ற உருவத்தை காண்கிறார், அவருள் இருள் ஆக்கிரமித்து விட்டிருந்தது.
இறுதியில் சைபீரீயாவில் ஆற்றைக் கடக்கும் போது ஒரு கிறுக்கு கிழவனை படகில் காண்கிறார்.நெஹ்லுதாவ் அடைய வேண்டிய இடத்தை ஏற்கனவே அடைந்தவர். அந்த கிறுக்கு கிழவனின் வார்த்தையைக் கொண்டுதான் நெஹ்லுதாவின் நாவலுக்கு பிறகான ஆற்றைக் கடக்க வேண்டிய பயணம் இருக்கும்!
“உனக்கான கிருஸ்துவை நீயே கண்டடை”!
4. புத்தகங்கள்/அறிஞர்கள் மேற்கோள்கள்:
இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டம் முக்கியமானது (1899). பெரும்பாலான ஐரோப்பிய தத்துவாதிகள், அறிஞர்கள் உருவாகி முடிந்த காலகட்டம்.ஷோபனர், வால்டர்,மார்க்ஸ,நீட்ஷே, பெஞ்சமின் போன்றவர்களின் கருத்துகளில் தேவையானவற்றை ஏற்றும், மறுத்தும் நாவல் செல்கிறது.இது போன்று நாவலில் வரும் புத்தகங்கள், அறிஞர்கள், கலைஞர்கள் பற்றிய குறுப்புகளே பெரிய பட்டியல் வரும்.
- புத்துயிர்ப்பு:
உண்மையில் இந்த நாவலை வாசிக்கும் போது மற்ற நாவல்களில் உணர்ந்திராத, ஒரு புனித தன்மையை இந்த நாவலில் உணர்ந்தேன். ஏனென்றால் அங்கே என்னையே காண்கிறேன். நெஹ்லுதாவுடைய தூய காதல் நான் கண்ட தூய காதல்,அவருடைய பாவம் என்னுடைய பாவம்,அவருடைய புத்தியிர்ப்பு நான் அடைய வேண்டிய புத்தியர்ப்பு.நெஹ்லுதாவின் வாழ்வு ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வு.
கோர்ட்டில் மாஸ்லாவை கண்ட பொழுதிலிருந்தே நாவல் முழுக்க கொந்தளிப்புடன், அலைகழிக்கப் பட்டு குழப்பத்துடனே அழைக்கிறார்.வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தருணம் வருகிறது, அந்த தருணம் அவன் வாழுகின்ற வாழ்கையின் அறமின்மையை கீழ்மையை அவனுக்கு காட்டுகிறது.அந்த தருணத்தில் அவன் எடுக்கும் முடிவுதான் அவனை ஆன்ம விடுதலையை நோக்கி அல்லது கீழ்மையான வாழ்க்கையிலேயே ஆன்ம செத்த மனிதனாக வாழ செய்கிறது.
அப்படி ஒரு தருணம் தான் நெஹ்லுதாவின் வாழ்க்கையிலும்,மாஸ்லாவின் வாழ்க்கையிலும் வருகிறது.அங்குதான் நெஹ்லுதா தான் பாவம் மேல் நிற்பதும்,மாஸ்லாவா இருளான பாவ வாழ்க்கை வாழ்வதையும் உணர்கிறார்கள்.
அதற்கு மறுநாளே தான் வாழ வேண்டிய வாழ்க்கையை முடிவு செய்து ,தனது பிரபு குல வாழ்க்கையை தவிர்த்து நிலங்களை விவசாயிகளுக்கு தர கிராமங்களுக்கு செல்கிறார்.அங்கு விவசாயிகளுக்கு நடக்கும் அநீதியை காண்கிறார்,பிற்பாடு மஸ்லாவை விடுவிக்க நீதி அமைப்பை நாடும்போது அங்கே உள்ள அலட்சியம்,இயந்திர தன்மையுள்ள அரசதிகாரிகள், சிறையில் சந்திக்க நேரும் நிரபராதிகள் என இந்த ஒட்டு மொத்த நெஹ்லுதாவின் பயணத்தையும் புத்தருடைய பயணத்துடன் சேர்த்து பார்க்கலாம்.
இவ்வாறு தன்னுடைய ஆன்ம விடுதலைக்காக ஆரம்பித்த பயணத்தில் சமூகத்தில் முரண்களை, பிரச்சினைகளை கண்டு அதற்கான காரணத்தையும், தீர்வையும் ஆழ்ந்து யோசிக்கிறார்.
முதலில் விவசாயிகளுக்கு நிலத்தை கொடுத்து அதில் உள்ள சிக்கல்களை சரி செய்கிறார்.பிற்பாடு அரசாங்க அமைப்பின் மேயர்கள், போலிஸ் கார்கள், அதிகாரிகள் போன்றோரின் அலட்சியம்,மனிதமற்ற தன்மையைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.பிற்பாடு இவர்கள் யாவரும் இவர்களின் கடைமையே செய்கிறார்கள்.அதனாலயே எந்த குற்ற உணர்ச்சி மின்றியே தங்களது அதிகாரத்தை செலுத்துகின்றனர் என அறிகிறார்.எந்தவொரு மனிதன் எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இன்றி ஒரு தவறை செய்கிறான் எனில் அவனால் மனித குலத்திற்கு எவ்வளவு பெரிய தீங்கையும் செய்துவிட முடியும்.
இறுதியாக சிறையில் மனித ஊன் உண்ணும் குற்றவாளிகளை காண்கிறார்.கிராமத்தில் சாதாரணமாக உழைத்து வாழும் விவாசிகளை கூட இந்த சிறை கொடியவர்களாக,கீழ்மையானவர்களாக மாற்றிவிட்டதை காண்கிறார்.
இந்த நீதி அமைப்பும்,சிறையும் குற்றத்தை குறைக்கவில்லை மாறாக சாதாரண மக்களை அழுக்கு படிந்த நெருக்கமான சிறைகளில் அடைத்து,அவர்களை உழைக்காமல் சோம்பேறியாக மாற்றி,சமூக பண்புகளை மழுங்கடித்து ஒழுக்கமற்ற விலங்குகளாக விடுதலை செய்கிறது என்பதை அறிகிறார்.
சிறையில் கண்ட அவ்வளவு கொடுமைக்கும், கைதிகளின் தொற்று மரணத்திற்கும் பிறகு வெறுத்து போய் தனது அறையில் சாயும் போது பைபிளை காண்கிறார்.அதில் வரும் பேருதுவின் கேள்விக்கான பதிலைக் கண்டு திடுமென கிளர்ச்சி அடைகிறார்.அவ்வளவுதானா?இவ்வளவு எளிமையா?…
சமுதாயம் அழியாமல் ஒற்றுமையுடன் வாழ்வது நீதி அமைப்பால் அல்ல மாறாக பரஸ்பரம் பகிரும் அன்பால் தான்.
இங்கு யாரையும் தண்டிக்க யாருக்கும் உரிமை இல்லை, சீர்திருத்தம் என்பது இயலாத காரியம்.
மன்னிப்பு மட்டுமே மனித குலத்தின் மீட்சி என்பதை கண்டடைகிறார்.இதை மனித குலத்திற்கே பரப்ப வேண்டும்.எப்பொழுது அனைத்து மக்களும் இதை உணர்கிறார்களோ அன்றுதான் பூமியில் தேவராஜ்யம் நிகழும் என தனது அடுத்த பயணத்தை தொடர்கிறார் நெஹ்லுதவ்!
இந்த நாவலை 23 வயதிற்குள் படிக்கும் எவரும் ஆசிர்வதிக்கப் பட்டவர் என்றே கருதுகிறேன்.
ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற கிளாசிக் நாவல்களை orchestra-வாக அரங்கேற்றம் செய்வது போல், இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த நாவலை ஒரு இசை நாடகமாக கேட்க வேண்டும் என மனம் ஆசை கொள்கிறது!