புத்துயிர்ப்பு வாசிப்பு – ராகவேந்திரன்

1908 இல் டால்ஸ்டாய் “ஒரு இந்துவிற்கு ஒரு கடிதம்’ என்ற கட்டுரையை எழுதுகிறார்.  அதை காந்தி அவருடைய அனுமதியுடன் மொழிபெயர்த்து அகிம்சையின் மூலம் விழிப்படையும் வழியை தென் அமெரிக்காவில்  பரப்புகிறார். காந்தியுடன் ஒரே ஆண்டு கடிதத் தொடர்பு கொண்ட டால்ஸ்டாய் 1910 இல் காலமாகி விடுகிறார். அன்பின் மூலம் விடுதலை என்னும் செய்தியை அனைத்து சமயங்களிலிருந்தும் சாரமாக்கித்  தந்த டால்ஸ்டாய் மிகச் சரியான பக்குவ நிலையிலிருந்த காந்தியிடம் பெரிய மாயத்தைச் செய்து விடுகிறார். சில நாடுகள் விடுதலை அடைகின்றன.   வரலாறு மென்மையான உக்கிரத்துடன் திரும்பி  நகர்கிறது.

இந்த உலகத்தின் முட்டாள் தனங்களை வைத்துக் கொண்டு  என்ன பண்ணுவது என்ற அறக் கேள்வியால் தனது செல்வத்தை ஈகைக்குத் தந்த செயல்பாட்டாளராக இருந்த டால்ஸ்டாய் லட்சியவாதத்தாலும் இதயத்தின் தூய சோகத்தாலும் தனது இலக்கியங்களை நிரப்பி வைக்கிறார். காந்திக்கு அவரது ஆன்மிகம்  உலகளாவிய அன்பு குறித்த நூல்களில்  தான் ஈடுபாடு இருந்தது. 

நாவலின் பயணமும் நாவலாசிரியரின் பயணம் போலவே உள்ளது. நாவல் எழுதிய 11 ஆண்டுகள் கழித்து டால்ஸ்டய் உயிர் துறக்கிறார். ப தீர்க்கதரிசிகள் , சிந்தனையாளர்கள் போலவே குடும்பத்தால் புரிந்து கொள்ளப் படாதவர்- இறுதி நாளில் வீட்டை விட்டு வெளியேறும் டால்ஸ்டாய் அஸ்டாபாவ் ரயில் நிலையத்தில் படுத்துக் கொள்கிறார். ரயிலில் பயணிகளிடம் தான் மிகவும் நம்பிய ஜார்ஜிய பொருளியல் கொள்கைகளை எடுத்துச் சொல்லி வருகிறார். சிறுமை கண்டு பொங்கிய அந்த ரஷ்ய பிதாமகனின் உள்ளக் குமுறல் புத்துயிர்ப்பு.

புத்துயிர்ப்பை வாசிக்கும்போது ஒரு அழகியல் பார்வையுடனோ இலக்கியக் கோட்பாட்டு விமர்சனமாகவோ அணுக  முடியவில்லை. ஒரு குருநிலையில் வாய்பொத்தி அமர்ந்திருக்கும் சீடனின் மனநிலையையே கொள்ள முடிகிறது.

சக மனிதருக்கு அநீதி, கொடுமை இழைத்தல் அவற்றை நியாயப்படுத்த சமயம் மற்றும் அறிவியலைத் துணைக்கொள்ளும் அரசு இயந்திர முறைமைகளும் ஆன்மின் குரலைச் செவி மடுக்கும் ஒரு பிரபு குலத்தவர் அடையும் உள்ளக் கொந்தளிப்புகளும் ருஷ்ய நிலத்தின் மீது உயிர்ப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மனிதன் புரியும் பாவம் – அதன் பின் வரும் மன அழுத்தம் – ,செய்ய வேண்டிய பிழை நிகர் இவையே புத்தியிர்ப்பின் மைய அச்சு

நெஹ்லூதவ்  என்னும் கோமகன் இதன் நாயகன். கத்யுஷா என்னும் பணிப்பெண்ணுக்கு தான் இழைத்த கொடுமைக்கு மனம் குமைபவன். தனக்கு நேர்ந்த அவலத்துக்குப் பின் பிறழ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் கத்யுஷா செய்யாத கொலைக்கு விசாரிக்கப் படுகிறாள். ஜூரிகளில் ஒருவராக பல ஆண்டுகளுக்குப் பின்  நெஹ்லூதவ் வருகிறார். குற்ற உணர்ச்சியால் தூண்டப்படுகிறார். அவளுக்கு உதவ விரும்புகிறார். நீதிபதிகள் மற்றும் ஜூரிகளின் கவனமற்ற தன்மையால் அவளுக்கு சைபீரிய கடின உழைப்புத் தண்டனை கிடைத்து விடுகிறது.  அவளை சந்திக்க அடிக்கடி சிறைக்குச் செல்கிறார். சிறையில் அற்புதமான மனிதர்களையும் அனுபவங்களையும் சந்திக்கிறார். சைபிரியா செல்லும் ரயிலில்  உடன் செல்கிறார். கத்யுஷாவிற்கு வாழ்க்கை தரப் பார்க்கிறார். அவள் வேற ஒரு புரட்சியாளரை  விரும்பும்போது, வாழ்த்தி விலகிவிடுகிறார்.

ஒரு ஈஸ்டர் திருநாளின் உயிர்த்தெழும் கொண்டாட்டம் முடிந்த 2நாளில் கத்யுஷாவிற்கு தீங்கிழைத்து விடும் நெஹ்லூதவ், அவளுக்கு ஒரு புதிய 100 ரூபிள் நோட்டைக் கசக்கித் தரும்போது கத்யுஷா அறத்தின் வீழ்ச்சியை உணர்கிறாள்.

குற்றவியல், தத்துவத் தேடல், இறையியல் குறித்த அறிஞர்களின் அடிப்படை நூல்கள் நூலில் அலசப்படுகின்றன.

சிமன்சன் என்ற புரட்சிக் கைதி மூலம் தனக்குப் பிடித்த, காந்தியைக் கவர்ந்த புல்லுணவு வாதத்தை முன்வைக்கிறார். 

தனி நபர்22நில உடைமையை  ஆதரிக்கும் ஹெர்பர்ட் ஸ்பென்சருக்கும் நிலத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்த அமெரிக்க  பொருளியலறிஞர் ஹென்றி ஜார்ஜ்க்குமான கருத்தியல் பரிணாம வளர்ச்சியை நாவலில் விவரிக்கிறார். 

சோஷலிசம் –ஜார் மன்னரைக் கொன்ற நரோத்னிக்குகள் – விவசாயிகள் மூலம் புரட்சி – கம்யூனிசபுரட்சி வாதம் – மக்களுக்கு வழி காட்டி எப்படி வாழவேண்டும் என்று ஆதிக்கம் செலுத்த வரும் புரட்சியின் தலைவர்கள் – என்று பல  கிளைப்பட்ட – அடுத்த பத்து ஆண்டுகளில் வரவிருக்கும் நவம்பர் புரட்சி     கால கட்ட அரசியல் வரலாற்று விவாதம் ஆழமாக இருக்கிறது. 

நீதிமன்ற முறைமைகள் மிக அப்பட்டமாகச் சொல்லப் ப்டுகின்றன. ஒவ்வொரு நீதிபதியின் நோக்கங்கள், மன அமைப்புகள் அன்றாட அலுவலாக வழக்கை அணுகும் விதம்,  நவீன சமூக அமைப்பின் மீதான விமர்சனமாக அமைகிறது.

நீதிபதிகளில்  மனைவிற்கு பயந்தவர் ஒருவர், அயல் பெண் தொடர்பு கொண்டவர்  ஒருவர், நிரந்தர வயிற்றுக் கடுப்பும் அதைப் போக்கும் புதிய புதிய சிகிச்சைகளும் முட்டாள் தனமான விளையாட்டு நம்பிக்கைகளும் கொண்ட நீதிபதி ஒருவர்.  

முந்திய 2நாள் அதிக போதை அருந்தி விட்டு வழக்கைப் படிக்காமலேயே தனது ‘குற்றம் நிரூபிக்கும்’ வேலையை பெருமையுடன் செய்யும் அரசு வழக்கறிஞர்;  தனது அரிய சேவையை எண்ணி வியந்து கொள்ளும் உறுதிமொழி ஏற்கவைக்கும் பாதிரியார். இவர்களால் ஆனது நீதிமன்றம்.  

மிக நுட்பமான நையாண்டியை நீதிமன்றக் காட்சியில் சமுதாயத்தின் மீது தெளித்துள்ளார் டால்ஸ்டாய் (உதாரணம் : பாதிரியார் மிகத் தீவிரமாக சபதம் செய்ய அறிவுறுத்தும்போது விரலை ஒரு சிட்டிகையைப் பிடித்துக் கொள்வது போலவும் அது விழுந்து விடக்கூடாது என்று கவனம் செலுத்துவது போலவும் சாட்சியாளர்கள் வைத்துக் கொள்கிறார்கள். விரல்களுக்குள் பத்திரமாக எல்லோரும் பாவனை செய்யும் பொருள் எளிமை, நீதி அல்லது குழந்தைமை என்று எடுத்துக் கொள்ளலாம்.  இல்லாத ஒன்றைப் பொத்தி வைத்துக் கொள்ளும் கூட்டம்.     துயரப் பகடியாக விரிகிறது நாவல் 

நீதி மன்றச் செயல்பாடுகள்  எண்பது பக்கங்களுக்கு மேலாக விவரிக்கப் பட்டுள்ளன. முழுக் குற்றப் பத்திரிகையும் எழுதப் பட்டுள்ளது. மரண ஆய்வு மருத்துவ  அறிக்கையும் முழுவதுமாக தரப்பட்டுள்ளது. 

பெண்கள் சிறையின் காட்சிகள் அனுதாபமும் நகைச்சுவையும் கொள்ள வைப்பவை. அங்கே நோயாளிகள், ரகசியமாகக் குடிப்பவர்கள், பித்திகள், குழந்தைகள் உண்டு. சண்டை போட்டுக் கொள்பவர்கள் உண்டு. சிறைச்சாலைக்குள்ளே இருக்கும்  தேவாலயத்தில் ஒரு கைதிச் சிறுவனை சிறைக் கண்காணிப்பாளர் நெகிழ்வதாக நினைத்துக் கொண்டு தூக்கிப் பிடித்துக் கொள்வதும்    சங்கிலியால் பிணைக்கப் பட்ட கைதிகள் ஆண்டவர் முன் வணங்குவதும் நாவலின் உச்சமான கட்டங்கள். 

வறுமையை எழுதும்போது தரையில் பணிந்த உணர்வும் நுண்மையும் கொள்கிறார் ஆசிரியர். .  நெஹ்லுதவின் குழந்தையின் இறப்பை டால்ஸ்டாய்   மிக எதார்த்தமாக ஒரு கிழவியின் குரலில்  எழுதுகிறார். வாசிப்பவர் இதயத்தில் ஈரம் கசிகிறது.  அதை மொழிபெயர்ப்பாளர் தமிழ்ச்சூழலுக்கு அற்புதமாக மாற்றியுள்ளார். 

மத்ரியானாவின் குடிசைக்கு நெஹ்லூதவ் செல்கிறார் அவருக்கு கத்யுஷாவிடம் பிறந்த குழந்தை அங்கேதான் இருந்தது. குழந்தைகளை எடுத்துக் கொண்டு இல்லத்தில் விடும் ஒரு பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்து விட்டிருக்கிறாள் கிழவி.  குழந்தை செத்துப் போச்சு. ஒரே தொட்டிலில் தலை இடித்துக் கொள்ளாமல் நான்கு குழந்தைகளைப் படுக்க வைத்திருப்பாள் அந்த ஏஜன்ட்.  துணியில் சப்புக் காம்பு செஞ்சு தருவாள். அமைதியாய் அவை சப்பிக்கிட்டு இருக்கும்  .  தங்கக் குட்டிகள். .

பயணங்களில் பலவகைகள். விடுதலையைத் தேடிச் சுற்றும் மென்டிகன்ட்களில் டால்ஸ்டாய் பக்தி கொண்டவர். சிறைப் பிடிக்கப்பட்டவர்களின் சைபீரியப் பயணம் அவரை உலுக்குகிறது. அவரது ஆன்மாவின் தேடல் பயணத்திற்கு அதுவே ஒரு உந்துதலாக இருக்கும் 

படைப்பாளனின் சமகால சமூக நிகழ்வுப் பதிவு அவரது உண்மைத்தன்மையைக் காட்டுகிறது . 1880களில் மாஸ்கோ புத்தீர்ஸ்கயா சிறையிலிருந்து நீழ்னி நோவ்கரத் ரயில் நிலையத்திற்கு சிறைக் கைதிகளை சங்கிலி பிணைத்து வெயிலில் ஊர்வலமாக்க் கொண்டு செல்லும் நிகழ்வும் அதில் கைதிகள் இறந்து போவதும் காவியத்துயருடன் சொல்லப் படுகிறது.

கடத்தல் பயணம் என்ற நூலில் (உண்மை நிகழ்வு) ஒரு கைதியின் சிறுமி அழுவதையும் அதன் தந்தையை காவலர் அடிப்பதையும் நாவலில் கொண்டு வருகிறார் ஆசிரியர். அந்தக் குழந்தையை அரசியல் கைதி மரியா பாவ்லன்னா வாங்கிக் கொள்கிறாள். அவளுடன் செய்யும் சைபிரியப் பயணம் கத்யுஷாவிற்கு ஒரு புத்துயிர்ப்பு

நெஹ்லூதவும் சைபீரியப் பயணத்தில் மன மாற்றம் அடைந்து கொண்டே வருகிறார். எந்நேரமும் அவருள் இரக்கமும் கருணையும் நிறைந்திருந்தன. அவளுக்காக மட்டுமில்லாமல் எல்லோருக்காகவும் அவர் நெஞ்சினுள் இந்த இரக்கமும் கருணையும் பெருகிய வண்ணமிருந்தன.  

மதமின்மை வாதத்தின் பிரதிநிதியாகிய கிழவர் “கிறிஸ்துவைக் கொடுமை செய்தது மாதிரி என்னையும் கொடுமை செய்கிறார்கள் “ என்கிறார். நாடு , இடம் , கடவுள் என்று எதுவும் இல்லாத சர்வதேச பிரஜையின் குரலில் கிழவர் கூறுகிறாட்  “ஜார் வேந்தனை ஏன் அங்கீகரிக்கவில்லை? அவர் அவரது ஜார் வேந்தன். நான் எனது ஜார் வேந்தன்” 

கிடைக்கிற போது வேலை செய்கிறேன், கிடைக்காத போது கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறேன்.  என்கிற கிழவர், மன்னிக்க ஒன்றும் இல்லை; மனம் புண்படும்படி ஒன்றும் செய்யப்பட்டு விடவில்லை;  என் மனத்தைப் புண்படச் செய்வது முடியாத காரியம் என்கிறார். 

இறைவனின் பெயரால் இறைவடிவங்களை வதைப்பதும் அறிவியலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு அறிவுத் தேடலைச் சிதைப்பதும் “ மக்கள் இயக்கம் “ என்ற அடைமொழியுடன் மக்களைக் கொல்வதும் மானுட வரலாறு முழுவதும் உள்ளது. கிழவர் மிகக் குறுகிய பகுதியில் வருகிறார். மனசாட்சியின் குரலாக  வருகிறார் . “அஞ்சுதல் யார்க்கும் இல்ல;  அஞ்சவருவதும் இல்லை” என்ற ஒலியாக; “நாமார்க்கும் குடியல்லோம் “ என்பதன் பொருளாக. 

கிரிலித்சோவ் என்ற சைபிரிய தண்டனைக்  கைதி காசநோயால் சிறிது சிறிதாக மரணம் அடைவது பயணத்தின் முக்கிய இழை . அவரது இறப்பைப் பார்த்துக் கொண்டே வரும் நெஹ்லூதவிற்கும் உள்ளே ஏதோ ஒன்று செத்து விடுகிறது.     கத்யுஷா – பெரும் போராட்டத்திற்குப் பின் தன் மரியாதையையும் செல்வத்தையும் விட்டு அவரால் தண்டனைக் குறைப்பு பெற்றவள் – தியாகம் செய்வதற்காக சிமன்சனுடன் வாழ முடிவு செய்கிறாள். நெஹ்லூதவின் காதல் செத்து விடுகிறது ஆனால் மானுட அறம் என்னும் பரலோகத்தில் விழித்தெழுகிறார். 

பைபிளை கைதிகளுக்கு வினியோகம் செய்யவரும் ஆங்கிலேயர் கந்தலுக்காக அடித்துக் கொள்ளும் கைதிகளிடம் ஆண்டவர் பற்றிச் சொல்வதும் அதற்கு கைதிகளின் பதிலுரையும் துன்பச் சிரிப்பை உண்டாக்குபவை. 

கைதிகளை ‘சீர்திருத்த’ வந்த பாதிரியார் சிறைக் கொடூரங்களைக் கண்டு கடும் சோர்வடைகிறார். அவர் அரசின் – மத அதிகாரத்தின் பிரதிநிதி. ஆனால் அவருடன் பார்வையாளாராக வந்த நெஹ்லூதவ், தன் குற்றம் களையும் செயல்களின் பயனாக விவிலியத்தின் உண்மையை உணர்ந்து விடுகிறார். டால்ஸ்டாய்க்குப் பிடித்த மலைப் பிரசங்கம் நெஹ்லூதவின் உள்ளத்திலிருந்து புத்துணர்ச்சியை வெளிக்கொண்டு வருகிறது. 

எளிமையான உள்ளம் படைத்தவர்கள் ,  பாலகனைப் போன்றர்கள் –இவர்களுக்கான இடத்தை அடைகிறார் நெஹ்லூதவ். மதத்திலிருந்து இறைத்தன்மையை வடிகட்டும் வழியைக் கண்டடைகிறார். அவருக்கான கிறிஸ்து புத்துயிர்க்கிறார். 

நாவலில் டால்ஸ்டாயின் கையில் ஏசு வந்து எழுதிய இடம் : 

சாராயம் விற்றுச் சிறையில் இருக்கும் பெண்ணிடம் “ஏன் சாராயம் விற்றாய் நீ? என்று விசாரிக்கிறார்கள். அவள் பதில் – நல்லாயிருக்கே கேள்வி !- பிறகு நான் எப்படி என் பிள்ளைகளுக்குச் சோறு போடுவேனாம்? என்று அவள் தனது சிறுமியின் தலையில் பேன் எடுத்துச் சென்றாள்.

சிறைச்சாலையில் நடைபெறும்  மத வழிபாடு குறித்த டால்ஸ்டாயின் விமர்சனம் ஏசுவின் வழியிலிருந்து விலகி அவரை வழிபடும் குருமார் – சடங்குகள் – அர்த்தமற்ற பேச்சு முறைகளைக் கண்டிக்கிறது. இந்த இடத்தில் ஆசிரியர் தனது அங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு  அனார்க்கியவாதத்தை முழங்குகிறார். 

சிறையில் பெருங்கூச்சலுக்கு இடையில் நெஹ்லூதவ் – கத்யுஷா இருவரும் பேசிக்கொள்வது அழகிய பகடி ஒரே நேரத்தில் பல உரையாடல்கள் முயங்கி குழப்பமாகும் இடம்.  . இது சொந்த அனுபவத்தில் ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. தவறுதலாக கைது செய்யப்பட்ட ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றபோது. முதன் முதலில் பார்வையாளரைக் காணும் ‘கைதி’யின் மன ஓட்டத்தை நினைத்தால் பதறுகிறது. 

வேரா போகதூஹவ்ஸ்கயாவின் புரட்சிக் கட்சிச் செயல்பாடுகள், ஷூஸ்தவாவின் தியாகம், இவர்களுடன் தொடர்பு கொள்ளும் கத்யுஷாவிற்கு புதிய மறுமலர்ச்சி ஏற்படுகிறது. நெஹ்லூதவிடம் கொண்ட உயரிய அன்பினால் அவரது கரத்தைத் தட்டி விடும் அவள்    சிமன்சனின் அன்பை ஏற்றுக்கொள்கிறாள். எந்த நிலையிலிருந்தாலும் அவள் உலகத்தின் கள்ளமற்ற குழந்தைதான். 

ஆசிரியரின் ஆளுமையை நெஹ்லூதவில் விரவி விட்டிருக்கிறார்.  தனது நிலத்தை பண்ணைத் தொழிலாளர்களின் கவனிப்பில் விட்டு லாபம் பகிர்ந்து கொள்ளும் கொள்கையை முன்வைக்கும்  முடிவை மிகுந்த ஊசலாட்டங்களுப்பின் எடுக்கிறார் நெஹ்லூதவ். கத்யுஷாவிற்கு உதவுவது அவள் புறக்கணிக்கும்போது சினம் கொள்வது, அவள் பற்றி தவறான தகவல்கள் வரும்போது வெறுப்பது, அதையும் மீறி அவளுக்கு உதவி செய்வதை தனது பெரும் கடமை என்று மனதிற்குப் பதிய வைப்பது என்று நெஹ்லுதவின் மனப் பாய்ச்சல்களைக் காட்சிப் படுத்தி உள்ளது அழகு

கத்யுஷாவை இறைவனின் தூய காதலியாகவே நிறுத்திவைத்துள்ளார் டால்ஸ்டாய் (அவளது ஜீவன் அனைத்துமே தூய்மை, கன்னித்தன்மையதான காதல் ஆகிய தலையாய இரு பண்புகளைக் கொண்டிருந்தன –அந்தக் காதல் அவரிடம் (நெஹ்லூதவ்) அவளுக்கு இருந்த காதல் மட்டுமல்ல – அவருக்கு இது தெரிந்தது – யாவரிடமும் யாவற்றிடமும் அவளுக்கிருந்த காதலுமாகும். )

டால்ஸ்டாயின் ‘ஒரு ஹிந்துவுக்கான ஒரு கடிதம்’ புத்தர், விவேகானந்தர்  கிருஷ்ணரின் மேற்கோள்களை முன்வைக்கிறது. குறளையும் எடுத்தாள்கிறார். ஆறு குறள்களைக் குறிப்பிடுகிறார். 

இன்னா செய்தாரை ஒறுத்தல், பிறர்க்கின்னா முற்பகல், இன்னா செய்தார்க்கும் இனியவை ,  அறிவினால் ஆகுவதுண்டோ முதலிய குறட்பாக்கள். மன்னிப்பை – மானுட அன்பை வலியுறுத்தும் பாக்கள் – விவிலியம் சொல்லும் அன்பு – கீதை தரும் அன்பு – 

 ஏழு முறை அல்ல, எழுபது முறையும் உன் சகோதரனை மன்னிப்பாய் என்னும் விவிலியச் சொற்றொடர் நெஹ்லூதவிற்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. 

கத்யுஷாவின் மன்னிப்பு, நெஹ்லூதவின் மன்னிப்பு, சிறையில் பாலுக்காக அழும் குழந்தைகளின் மன்னிப்பு. பெரும் மாளிகையை விட்டு மனித அன்பின் ஊற்றைத் தேடி இரவில் ரயில் நீத்த மாமனிதன் இந்த உலகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே அளிக்கும் மன்னிப்பு.

புத்துயிர்ப்பு தரும்   செய்தி – மன்னித்து விடு தேவன் உன்னை மன்னித்தது  போலவே.

ஆர் ராகவேந்திரன்

கோவை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s