அன்னா கரீனினா, போரும் அமைதியும் என மாபெரும் இரண்டு செவ்வியல் படைப்புகளுக்குப்
பிறகு, ஏறத்தாழ பத்தாண்டுகள் இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய 78 ஆவது வயதில்
“புத்துயிர்ப்பு” நாவலை தல்ஸ்தோய் எழுத நேர்ந்த சந்தர்ப்பமே ஒரு புனைவாக
எழுதப்படக்கூடிய சாத்தியம் கொண்டது. ரஷ்யாவில், மதத்தின் வெற்றுச் சடங்குகள், மூட
நம்பிக்கை, பழமைவாதங்களைக் கடந்து, அறத்தின் பால் நிற்கும் பிரிவினர் ”டுகோபார்ஸ்”.
அரசாங்கமும், ருஷ்ய சமூகமும் தந்த அழுத்தத்தால், 1898ல் 12000 ”டுகோபார்ஸ்” குடும்பங்கள்,
ரஷ்யாவிலிருந்து கனடாவுக்கு அகதிகளாக பயணப்படுகின்றனர். கிட்டத்தட்ட 6000 மைல்
தொலைவு கொண்ட அப்பயணத்துக்கு உதவும் பொருட்டு தல்ஸ்தோய் அவர்களால், 1899 இல்
எழுதப்பட்டது “புத்துயிர்ப்பு”. தல்ஸ்தோயின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவமும்,
வழக்கறிஞராய் இருக்கும் அவருடைய நண்பர் சொன்ன ஒரு உண்மைச் சம்பவமும்,
இந்நாவலுக்கான தூண்டுதல்கள். இந்நாவலின் பேசுபொருளினாலும், “டுகோபார்ஸ்” மீதான
தல்ஸ்தோயின் பரிவினாலும் சமூகத்தின் அழுத்தங்கள், வழக்குகள் இவற்றுக்கிடையேதான்
இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
*
ஒரு குற்றவழக்கு விசாரணைக்காக, சான்றாயர்களுள் ஒருவராக வரும் கோமகன்
நெஹ்லூதவ், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வேசை மாஸ்லவாவின் வாழ்க்கை தடம்
மாறிப்போக தன்னுடைய இளவயதில் தான் செய்த காரியமே காரணம் என எண்ணுகிறார்.
அவரது குற்றத்துக்கான விசாரணையையும், அதற்கான பரிகாரத்தையும் அவரது மனமே
தேடுகிறது. அத்தேடலின் நீட்சியாக, கொலைக் குற்றத்துக்காக சைபீரிய குற்றத்தண்டனை
விதிக்கப்படும் மாஸ்லவாவுக்காகப் பரிந்து, மேல்முறையீடு உள்ளிட்ட வாய்ப்புகளை
பயன்படுத்தும் நெஹ்லூதவ், ஒரு கட்டத்தில், அவளைத் தொடர்ந்து சைபீரியாவுக்குச்
செல்கிறார். இதற்கிடையே, தன்னுடைய நிலங்களை விவசாயிகளுக்கே குத்தகைக்கு
விடுகிறார், அவற்றின் மீதான தன் உரிமையையும் துறக்கிறார், வாய்ப்புக் கிடைப்பின்
மாஸ்லவாவை மணந்து கொள்ளவும் எண்ணுகிறார். இவற்றின் மூலமாக, இளவயதில் லட்சிய
வேட்கை கொண்டிருந்து, பின்னர் ராணுவ வேலையால் அதிகார நிழலின் கருமை படிந்து
போன தன்னுடைய ஆளுமையை சீர்படுத்திக்கொள்ள முயல்கிறார் நெஹ்லூதாவ். தொடர்ந்து
நாவல் முழுவதிலும் நெஹ்லூதாவின் எண்ணங்களும் மனமாற்றங்களும் சொல்லப்பட்டுக்
கொண்டே வர, உயிர்த்தெழுதலை நோக்கிய நெஹ்லூதாவின் பயணம் என்பதாகவும்
இந்நாவல் எனக்குப் பொருள்படுகிறது.

இப்பெரும் படைப்பு, ஒட்டுமொத்த சமூகத்தின், நீதி/அதிகார அமைப்புகளின் பார்வைகள்,
செயல்பாடுகளை ஒருபுறமாகவும், அதற்கிணையான மறுபுறமாக தனிமனிதனின்
மனசாட்சியை, அவனது அந்தரங்க தன்விசாரணையையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
சந்தர்ப்ப சூழ்நிலைகள், புற அழுத்தங்கள், அலட்சியங்கள் என பற்பல காரணிகளால்தான்
விடுதலையோ தண்டனையோ விதிக்கப்படுகின்றது. ஒரு கொலைக் குற்றம், அதன்மீதான விசாரணை, முறையற்ற தீர்ப்பு, சிறை, கைதிகள், அவர்களது வாழ்க்கை,
குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்களை அதிகார வர்க்கம் நடத்தும் விதம் என சமூகத்தின், நீதி மற்றும்
அதிகார மையங்களின் இருண்ட பக்கம் மிக வலுவாகக் காட்டப்படுகிறது. அதே சமயம்,
மாஸ்லவாவின் வாழ்வு பிறழ்ந்துபோக தான் ஒரு முதன்மைக் காரணம் என எண்ணும்
நெஹ்லூதவ் தன் ஆன்மவிசாரணையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்பிவிட முடிவதில்லை.
தன் மனசாட்சியின் உந்துதலால், தன்னுள் புதைந்துபோன இளவயது, லட்சியவாத
நெஹ்லூதவை மீட்டெடுக்க, சாமனிய மனிதனுக்கே உரிய அலைக்கழிப்புகளுடனே தனக்கான
உயிர்த்தெழுதலை நோக்கி அவர் பயணப்படுகிறார். வெளிப்புற விசாரணைகள் அனைத்துமே
தர்க்கம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைய, ஆத்மவிசாரணை முழுவதும் அறத்தை
அச்சாகக் கொண்டு அமைகின்றது.
*
நாவலின் துவக்க அத்தியாயங்களில் காட்சிப்படுத்தப்படும் நீதிமன்றமும் அதன்
செயல்பாடுகளும் விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.
தலைமை நீதிபதி முதற்கொண்டு அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான சொந்த
அலுவல்களும் அதற்பொருட்டு விரைவிலேயே வழக்கை முடிக்க வேண்டிய எண்ணமும்
விசாரணையில் செலுத்தும் ஆதிக்கம் மாஸ்லவாவுக்கு எதிராகவே முடிகிறது. பிராசிக்யூட்டர்
அசுவாரஸ்யத்துடன் இவ்வழக்கு விசாரணைக்கு தயாராதல், தன்னுடைய தரப்பை மாஸ்லவா
சொல்லிக் கொண்டிருக்கும்போது தலைமை நீதிபதி தன்னருகே இருக்கும் இரண்டாம்
நீதிபதியுடன் பேசிக்கொண்டிருப்பது, விசாரணையின் வாதங்களை அலட்சியத்துடன் கேட்கும்
நீதிபதிகள் என விசாரணையில் நிலவும் முறையின்மை காட்டப்படுகின்றது. சான்றாயர்களின்
கவனக்குறைவால் விடுபட்டுப்போகும் ஓரிரு சொற்களால் மாஸ்லவாவுக்கு எதிராக
தீர்ப்பளிக்கப்படுவது வரை இத்தவறுகள் நீள்கின்றன. முடிவில், விசாரணையால் அல்ல,
சந்தர்ப்பத்தினாலேயே ஒரு வழக்கின்/தீர்ப்பின் போக்கே மாறுவதைக் காண்கிறோம்.
நெஹ்லூதாவின் இளமைக்காலத்தில் இருக்கும் லட்சிய வேட்கை தன்னுடைய சொத்துக்களை
விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அளவுக்கு ஆழமானது. அவனுடைய தனிப்பட்ட
ஆளுமையில் பெரும்பகுதி அவரது வாசிப்பினால் விளைந்தது. ஆரம்ப காலத்தில்
மாஸ்லவாவுடனான அவனது நெருக்கம் அவன் சுற்றத்துக்கு கவலை அளிப்பதும் அந்த
லட்சிய வேட்கையின் நீட்சியே. மூன்றாண்டு கால ராணுவ சேவையும் அதிகார தோரணையும்
தன்னை நம்பும் நெஹ்லோதவ்வை பிறரை நம்பும் நிலைக்கு “உயர்த்துகின்றன”. நாவலின்
பிற்பாதியில் சைபீரிய சிறைக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் வழியில், ஒரு கர்ப்பிணிக்
கைதி நடத்தப்படும் விதமும், தகப்பனிடமிருந்து ஒரு பெண் குழந்தை பிரிக்கப்படும் விதமும்,
சாமானிய மக்களிடையே பெரும் சஞ்சலத்தை உண்டாக்குகின்றன. அதே விசயங்களைக்
கண்ணுறும் அதிகாரிகள் அதை எளிதாகக் கடந்து போவதும் இதே வகையான தரம்
உயர்த்தப்பட்டதன் விளைவுகளே.
இப்படி நீதிபதிகள் முதற்கொண்டு, அதிகாரிகள் வரை தத்தம் எல்லைக்களுக்குற்பட்ட
நெறிமீறல்களைக் கைக்கொள்ளும்போது, தன்னில் ஒருவனை குற்றவாளி என தண்டிக்கும்
உரிமையை ஒரு சமூகம் தானாகவே இழக்கிறது. இதே கருத்தை சான்றாயர்களில் ஒருவராக
வருபவரும், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுதலைத்
தீர்ப்பை நாடுபவருமான “அர்த்தேல்ஷிக்” முன்வைக்கிறார். நாவலில் பலதரப்பட்ட
சந்தர்ப்பங்களில் நாம் காண நேரிடும் பலதரப்பட்ட மக்களும் அவர்தம் செயல்பாடுகளும்,
அவர்களை வெளியிலிருக்கும் குற்றவாளிகள் என எண்ணவைக்கின்றன. அதேபோல ஒரு
வலுவான சிபாரிசுக் கடிதம் பல நாட்களாக சிறையில் வாடிய கைதியை
விடுவிக்கப்போதுமானதாக இருக்கும்போது, கைதிகள் அனுபவிக்கும் தண்டனை என்பது
அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்காகவா அல்லது அவர்களுக்கு சரியான சிபாரிசு
கிடைக்காத குற்றத்துக்காகவா எனும் எண்ணம் எழுகிறது.
மனிதரில் நிலவும் கீழ்மை, அதிகார வர்க்கத்தில் மட்டுமல்ல எல்லாவிடங்களிலும் நீக்கமற
நிறைந்திருக்கின்றது. சாதாரண குற்றத்தண்டனைக் கைதிகளைப் போலன்றி, வஞ்சிக்கப்படும்
மக்கள் பக்கம் நின்று அதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் கைதிகளுக்குள்ளும் தன்னையும் தன்
நலத்தையும் மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கும் ”நவதுவோரவ்” வகையினரும் இருப்பது
அதற்கொரு நல்ல உதாரணம்.
நெஹ்லூதவ்வைக் காட்டிலும் மிக வலுவான பாத்திரமாக மாஸ்லவா விளங்குகிறாள்.
இத்தனைக்கும், நாவல் முழுவதிலும் தன் தரப்பை சரி தவறுகளுடன் நெஹ்லூதவ்
முன்வைத்துக் கொண்டே இருக்க, மாஸ்லவாவின் மனக்குரல் எங்கும் பெரிய அளவில்
ஒலிப்பதில்லை. தன்னை தேடிவந்த கோமகன் யாரென தெரிந்து கொள்ளும் ஆரம்ப
சிறைச்சாலை சந்திப்புகளும், மருத்துவமனையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தன்னை
நெஹ்லூதவ் சந்திக்கும் தருணமும் என மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே சற்றே
தன்னிலையை இழக்கிறாள் மாஸ்லவா. தனக்கு உதவக்காத்திருக்கும் நெஹ்லூதவ்விடம் பிற
சிறைக்கைதிகளின் சிக்கல்களைச் சொல்லி அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சிப்பதும், தனக்கு
விடுதலை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் நெஹ்லூதவ்வை மணக்கும் ஆசையை கைவிட்டு
அரசியல் கைதி “சிமன்சனுடன்” செல்ல எண்ணுவதும், மாஸ்லவாவை ஒரு வலுவான
பாத்திரப் படைப்பாக மாற்றுகின்றது.

நாவலில் வரும் இடங்களைக் குறித்த சித்தரிப்புகளும், துணைக் கதாப்பாத்திரங்களைப் பற்றிய
விவரணைகள், அவற்றை ஒரு புனைவாகக் கூட விரித்தெழுதக்கூடிய சாத்தியங்களைக்
கொண்டிருப்பதும், இந்நாவலுடன் நம்மைப் பிணைத்துக்கொள்ள, நம்முள் விரித்தெடுக்க
உதவியாய் இருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக இந்நாவல் நமக்குச் சித்தரித்துக்காட்டும் உலகம் வேறொரு நாட்டிலோ,
பழைய காலகட்டத்திலோ இருப்பதாகவோ என்னால் எண்ண முடியவில்லை. இந்நாவல்
கேள்விக்குட்படுத்தும் தண்டனை vs ஆத்ம விசாரணை என்னும் கருத்து எங்கும் என்றும்இ ருப்பதுவே. அவ்வெண்ணமே, காலத்தைக் கடந்து எப்போதைக்குமான ஒரு செவ்வியல்
படைப்பாக “புத்துயிர்ப்பு” நாவலைக் கருத வைக்கின்றது.
பின்குறிப்பு:
இந்நாவல் உருவான பின்புலத்தைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை,
அவருடைய “எனதருமை டால்ஸ்டாய்” புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அக்கட்டுரை, அவரது
வலைத்தளத்திலும் வாசிக்கக்கிடைக்கின்றது. சுட்டி : https://www.sramakrishnan.com/?p=2135