கொரானா கால சந்திப்புகள் – 4
கோப்பெருஞ்சோழனின்நடுகல்
கேட்டல்மாத்திரைஅல்லது, யாவதும்காண்டல்இல்லாதுயாண்டுபலகழிய, வழுவின்றுபழகியகிழமையர்ஆயினும், அரிதே, தோன்றல்! அதற்படஒழுகல்என்றுஐயம்கொள்ளன்மின், ஆரறிவாளிர்! | 5 |
இகழ்விலன்; இனியன்; யாத்தநண்பினன்; புகழ்கெடவரூஉம்பொய்வேண்டலனே; புன்பெயர்கிளக்கும்காலை, என்பெயர்பேதைச்சோழன்என்னும், சிறந்தகாதற்கிழமையும்உடையவன்; அதன்தலை, | 10 |
இன்னதோர்காலைநில்லலன்; இன்னேவருகுவன்; ஒழிக்க, அவற்குஇடமே! |

புறநானூறு 216
“ நீங்கள் கேள்வி மூலம்தான் பழகி உள்ளீர்கள்; பார்த்துக் கொண்டதே இல்லை. பல ஆண்டுகளாக உரிமையுடன் பிழையின்றிப் பழகியவர்கள் தான். ஆனாலும், அரசே! அவர் வருவது கடினம் தான். உங்கள் முடிவை செயல் படுத்துங்கள். “ என்று அறிவாளிகளே, நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம்.
அவன் இகழ்ச்சி அற்றவன்; இனிய நண்பன். எங்கள் நட்பின் பெருமையை தாழ்த்தி விட மாட்டான். அவன் பெயரைச் சொல்லும்போது கூட பேதைச் சோழன் என்று உரைப்பான். அன்புள்ள உரிமை கொண்டவன். அதனால் இனியும் தாமதிக்க மாட்டான். இப்போதே வந்து விடுவான். அவனது இடத்தையும் தயார் செய்யுங்கள்.
***
ஒவ்வொரு காலகட்ட சமூகமும் நெடுங்காலம் கழித்து வரும் சமூகத்திற்குச் சொல்வதற்காகச் சில செய்திகளையும் சின்னங்களை விட்டுச் செல்ல விரும்புகிறது. இன்றைக்கு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின், சாலைகளில் இப்போது பதித்து வைத்திருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அடையாளக் கற்களைப் பார்க்கும் வாரிசுகள் அவற்றை வீர்ர் வழிபாட்டு நடுகற்கள் என்று நினைக்கக் கூடும். அகழ்வாய்வில் ஒருவேளை கண்ணாடி இழை வடங்களைக் கண்டறிந்தால், மின்சக்தி உயிரோட்டமாகச் சென்று கொண்டிருந்ததன் சின்னம் அந்தக் கற்கள் என்று உணரக்கூடும். நாம் இன்று காணும் நடுகற்களும் உயிருள்ள வரலாற்றின் மிச்சம் தான்.
திருச்சிக்கு அருகிலிருக்கும் உறையூர் சென்றால், ஒவ்வொரு காலடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும். ஏதோ ஒரு மணற்பரப்பின் கீழ் கோப்பெருஞ்சோழன், அவனது நடுகல், அவனுடன் சேர்ந்து வடக்கிருந்து உயிர் நீத்தவர்கள் கிடக்கலாம்.
கோப்பெருஞ்சோழனுக்கு உறையூரில் நடுகல் அமைக்கப் பட்டதாகப் புறநானூறு கூறுகிறது. ஆனால் இன்று அது இருந்த இடம் அறியக்கூடவில்லை. காலத்தின் சீற்றத்தாலோ காவிரியின் ஊற்றத்தாலோ கலைந்து போயிருக்கலாம். ஆனால் கல்லை விட நிலைத்த பதிவு சொல். நற்பேறாக கோப்பெருஞ்சோழன் தொடர்புடைய பல பாடல்கள் கிடைத்துள்ளன.
தனது மகன்கள் ஆட்சி கேட்டு போருக்கு அழைக்கிறார்கள். மன்னனும் அரசதர்மத்தின் படி எதிர் கொள்ளத் தயாராகி விடுகிறான். புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் அறிவுரை கூறுகிறார். ‘நீ வென்றால், வாரிசு இல்லாமல் நாடு அழியும். தோற்றால் நீ இழுக்கு அடைவாய். எனவே, விட்டு விடுதலையாகி நிற்பாய்’.
மன்னன் ஆட்சியை மகன்கள் வசம் அளித்து விடுகிறான். மேலும் சமணர்கள் சிறிது சிறிதாக உயிர் துறக்கும் பெரும் விரதமாகிய வடக்கிருத்தலை மேற்கொள்கிறான்.: புலவர் வடக்கிருக்கச் சொன்னாரா என்ன? வானோர் விரும்பும் நற்செயல் செய்யவும் துன்புற்றோர்க்கு அருள் சுரக்கவும் தான் சொல்லி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மன்னன் முடியுடன் உடலும் துறக்கிறான். ஏன் அந்த முடிவை எடுத்தான்? வாழ்வின் சில தருணங்கள் அடிப்படைக் கேள்விகளை எழுப்பி எல்லையை நோக்கித் தள்ளி விடுகின்றனவா? சமணர்கள் நூலாகிய அருங்கலச் செப்பு கூறுகிறது
“இடையூறு, ஒழிவில் நோய் , மூப்பு இவை வந்தால்
கடை துறத்தல் சல்லே கனை”.
கோப்பெருஞ்சோழனின் அருமை நண்பர் பாண்டிய நாட்டில் வாழும் பிசிராந்தையார். அவர்கள் பார்த்துக் கொள்ளாமலேயே அன்பு செலுத்திவருகிறார்கள் என்பது நட்புக்கு மேலும் ஒளியூட்டுகிறது. ஒரு வேளை வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அரசியல் – உளவு சிக்கல்கள் வரும் என நினைத்திருக்கலாம்.
வடக்கிருத்தல் களத்தில் சோழன் சொல்கிறான் – பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் ஒதுக்குங்கள். – ‘ஒழிக்க அவற்கு இடமே’. மன்னனுடன் வடக்கிருத்தலுக்கு பலர் முன் வருகின்றனர். ஆனால் பிசிர் என்னும் ஊரைச்சேர்ந்த ஆந்தையாருக்கு சிறப்பான இருக்கை அளிக்குமாறு சொல்கிறான் சோழன். தனது முடிவை கண்டிப்பாக தூதன் மூலம் நண்பருக்கு அனுப்பியிருப்பான்.
புறம் 214ஆம் பாடலில் கோப்பெருஞ்சோழன் உலகிற்கு பொதுவான அறிவுரை கூறுகிறான் – “உயர்ந்த செயலுக்கு ஊக்கம் கொள்ளவேண்டும்” – ஒரு இறுதிச் செய்தி போல. பாடல் 215 சோழன் “அவர் வந்து விடுவார் “ என்று கூறுவது தான். 213 ஆம் பாடல் தான் புல்லாற்றூர் எயிற்றியனாரின் அறிவுரை.
212 ஆம் பாடல் பிசிறாந்தையார் கோப்பெருஞ்சோழன் மீது அன்புடன் பாடியது. இதில் கோழியூர் (உறையூர்) பற்றிய குறிப்பு வருகிறது. 217 ஆம் பாடல் பொத்தியார் என்னும் புலவர், பிசிராந்தையார் வடக்கிருக்க வந்து விட்ட்தை பரவசத்துடன் பாடியது. ஆனால் நண்பர் வரும்வரை கோப்பெருஞ்சோழன் உயிர் வைத்திருந்தானா என்பது அறியக் கூடவில்லை.
புறம் 218 பிசிராந்தையார் வடக்கிருந்தபின் கண்ணாகனார் அவரைப் புகழ்ந்து பாடியது. (சான்றோர் சான்றோர் பாலர் ஆப). 219 கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாகனார் கோப்பெருஞ்சோழனைப் பாடியது.
பொத்தியாரின் வாழ்வு இனியது. அவரும் வடக்கிருக்க விரும்பியபோது, சோழன் சொல்கிறான் – உமக்கு மகன் பிறந்தபின் வருக – என்று.அவர் சோழனின் நடுகல் கண்டு பாடியது 221 (நடுகல் ஆயினன் புரவலன்). அவருக்கு மகன் பிறந்தபின் சோழனின் நடுகல்லிடம் சென்று ‘ என் இடம் யாது?’ என்று கேட்டு வடக்கிருக்க முனைவதை 222 ஆம் பாடல் காட்டுகிறது. 223 பொத்தியார் சோழனை இடம் கொடுத்த்தற்காகப் புகழ்வது.
தற்காலத்திலும் ஆண்டு தோறும் ஏறத்தாழ 240 சமணர்கள் சல்லேகனை (வடக்கிருத்தல் ) செய்கிறார்கள் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. இது தற்கொலை செய்யும் குற்றமாகும் என்று எழுதிய ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் 2015 இல் தடை விதித்துள்ளது.
இந்தியப் பெருநிலத்தில் மானுடன் மரணத்துடன் உரையாடிக் கொண்டே இருந்திருக்கிறான். அதைப் புரிந்துகொள்ள – அடக்கியாள – வென்று கடந்து செல்ல முயன்று கொண்டிருக்கிறான். நாட்டிற்காக போரில் உயிர்நீத்த வீர்ர்களுக்கும் தன் புலன்களையும் மனதையும் வெல்ல உயிர்நீத்த மகா வீரர்களுக்கும் நடுகல் வைத்துக் கொண்டிருக்கிறது மானுடம். இந்தக் கற்கள் ஆகாயத்திடம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றன – ‘அங்கும் எனக்கு இடம் உண்டு’
நமக்கு கோப்பெருஞ்சோழனின் மகன்கள் யார் என்று தெரியாது. பிசிராந்தையாரின் நாட்டை ஆண்ட பாண்டிய மன்னன் பற்றியும் தெரியாது. ஆனால் சோழனையும் அவனைப் பாடிய புலவர்களையும் தமிழ் உள்ளவரை கொண்டாடுவோம். சொல்லை விடச் சிறந்த நடுகல் இல்லை.