
மே 24 அன்று எங்களின் நான்காவது ஸ்கைப் சந்திப்பு நிகழ்ந்தது. ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டமையால் நண்பர்கள் வெளி வேலைகளையும் கவனிக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்நிகழ்வில் பங்கேற்பு முந்தைய சந்திப்புகளை விட குறைவாகவே இருந்தது. ஆனால் ஸ்கைப் சந்திப்புகளில் மிக அணுக்கமானதாகவும் இதுவே இருந்தது.
நண்பர் நவீன் சங்கு தாமஸ் மண் எழுதிய “மாறிய தலைகள்” குறுநாவலை தேர்ந்தெடுத்திருந்தார். சற்று பெரிய குறுநாவல் என்றாலும் புராணத் தளத்தில் நடைபெறும் கதை என்பதால் விரைவிலேயே வாசிக்க முடிந்தது. மேலும் தாமஸ் மண் எழுதிய நாவல்களில் தமிழில் தற்போது கிடைப்பது இது ஒன்றுதான் என்றும் தெரிகிறது. தமிழில் மட்டும் வாசிக்கும் நண்பர்கள் தவறவிடாமல் வாசிக்க வேண்டியது இந்த குறுநாவல். தமிழாக்கம் செய்யப்படாததாலேயே “தாமஸ் மன்”னை தமிழ் வாசகர்கள் தவற விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.
மாறிய தலைகள் ஒரு வகையில் புராண அங்கத ஆக்கம் என்று சொல்லலாம். இந்திய தத்துவங்களின் மேல் பெரும் ஆர்வம் கொண்ட ஷோபன்ஹெயரின் பற்றாளரான தாமஸ் மன் இந்திய தத்துவியலை தீரமாக ஆராய்ந்திருக்கிறார். அவரின் அப்புரிதல்களின் மீது நின்று கொண்டு ‘நிறுவனமாக்கப்பட்ட’ அத்தனையையும் மெல்லிய அங்கதத்துடன் கேள்விக்குள்ளாக்குகிறார். தீவிர அரசியலில் ஈடுபாடு கொண்ட அவரின் பின்புலத்தை அறிந்துக் கொள்ளும்போது அவரின் இக்கேள்விகள் அர்த்தம் பொருள்படுகிறது. நாஜிக்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி அதனால் நாடுகள் தாண்டிச் சென்று தலைமறைவாக வாழ்ந்தவர் அவர். நிறுவனங்களாக ஆக்கப்படும் கலாச்சாரத்தின் விளைவுகளை தகிக்கும் நிலத்தில் நின்று புரிந்துக் கொண்டவர். ஆனால் இக்குறுநாவலில் பெரும்பாலும் தனிமனித விழுமியங்களையும், அவர்களை பிரிக்கும் சமூக தளங்களின் முரணையும், திருமணம் மற்றும் அது பறிக்கும் உடல் மீதான உரிமைகளையும் விவாதங்களுக்குட்படுத்துகிறார். துறவு வாழ்வையும் அவர் விட்டுவைக்கவில்லை. எதை எப்படி மாற்றி குழப்பினாலும் இயற்கை தன்னை மீட்டுக் கொள்ளும். தலைகள் மாறினாலும் தனக்கேற்ற உடலைத் தலை மாற்றிக் கொள்ளும். ஶ்ரீதமன், நந்தன், சீதா மூவரும் மூவராலும் தலையும் உடலுமாய் தனித்தனியாய் பார்க்கப்படுகின்றனர். அவ்வொவ்வொரு கணத்திலும் அவர்களின் மன எண்ணங்கள் இங்கே முக்கியமாக விவரிக்கப்படுகிறது. தலைகளும் உடல்களும் விழைவுகளுக்கு மாற்றான தத்துவங்களின் குறீயிடாக மாறி அமைகிறது. இக்கதைச் சொல்லியின் மாறுபடும் தொனி அலாதியானது. காளி இறங்கி பேசும் இடம், மொழி புராணத் தன்மையிலிருந்து உலகியல் தன்மைக்கு மாறுவது அங்கதத்தின் உச்சம். மனிதர்களெல்லாம் புனிதர்களைப் போல அறங்களையும் தத்துவங்களையும் பேசிக் கொண்டிருக்கும்போது காளி எனக்கான மரத்தில் தூகிட்டு தொங்கி அதன் புனிதத்தை கெடுத்துவிடாதே என்று அலுத்துக் கொள்கிறாள். இக்கதையை இந்திய தத்துவியலுக்கு எதிரானது என்றோ அல்ல இந்திய மரபை தெரியாமல் மேற்கத்தியவர் எழுதியது என்றோ தவறாக புரிந்துக் கொள்ளாவிட்டால் மனித விழுமியங்களையும் விழைவுகளையும் அங்கதச் சூட்டில் வாட்டி தாமஸ் மன் பரிமாறுவதை அலாதியாக அனுபவிக்கலாம்.
பாலாஜி, சுகுமாரனின் இரு கவிதைகளை தேர்ந்தெடுத்திருந்தார். இக்கவிதைகள் எந்த வரிசையில் வைத்து வாசிக்கப்பட வேண்டுமென்றும் உணர்வுநிலைகளை மிகக் கூரான சொற்களால் அது விவரிக்கும் தன்மையினை முன்வைத்தார். இக்கவிதைகளிலும் காளி வந்திருந்தாள்.
ராகவேந்திரன், கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கும் புறநானூற்றுப் பாடல் – 216 தேர்ந்திருந்தார். நட்புக்கு இலக்கணமாகத் திகழும் இப்பாடலில் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் ‘ஒழிக்கும்படி’ கேட்கப்படுகிறது. ஒருமுறை கூட சந்திராத நண்பன் எனக்காக வந்து என்னுடன் வடக்கிருப்பான் என்னும் சோழனின் நம்பிக்கை மிதமிஞ்சி நட்பின் பெருமையை உரக்கக் கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வந்தார் என்றும் அவரும் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்றும் பின் வரும் புறாநானூற்றுப் பாடல்கள் சாட்சி சொல்கிறது. ஶ்ரீதமனும் நந்தனும் போலவே நட்புக்காக உயிர் துறக்கும் இன்னொரு நட்புக் கதை விவாதிக்கப்பட்டது.
மூன்று தேர்வுகளுக்கும் இருந்த ஒற்றுமை வியப்பளித்தது. ஏதேச்சையான நிகழ்வுகளின் ஒற்றுமைகளில் வியப்பு ஒரு சொட்டு விழுவதால் மகிழ்வு சற்று தூக்கலாகுகிறது. இருண்மையான இந்நாட்களில் எதுவும் கொஞ்சம் அதிகாமாகத்தான் தேவையாயிருக்கிறது.
நரேன்