
இந்தியர்கள் வரலாற்று உணர்வுகுறைந்தவர்கள். பழங்காலம் என்ற ஒன்று உண்டு என்ற எண்ணம் பெரிதாக இல்லாமலேயே பலநூற்றாண்டுகள் கழித்து விடடவர்கள். வரலாற்றின் பதிவுகள் மிகவும் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அதனாலேயே கிடைக்கும் பதிவுகள் அரியவை ஆகின்றன
ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு நமது எல்லாச் சுவடிகளையும்போல தலைமுறைகளால் உதாசீனப் படுத்தப் பட்டு, புதுச்சேரியின் மேயராகவும் கிழக்கத்திய மொழிகளின் நிபுணராகவும் இருந்த ஒரு பிரெஞ்சு அதிகாரியின் முயற்சியால் கண்டெடுக்கப் பட்டது .
பிரபஞ்சன் அவர்கள் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து அழகிய மெய் – புனைவை அமைத்திருக்கிறார். முன்னுரையில் சொல்வது போல இது அரசர்கள் அதிகாரிகளின் கோணத்தில் வரலாற்றை எழுதுவதை மாற்றி சாமானியர்கள், ஏழைகள், தொண்டுசெய்யும் அடிமைகளின் வாழ்க்கையை வரலாற்றாகப் புனைந்துள்ளது.
புதுச்சேரியின் பிரெஞ்ச் கவர்னர் துமாயின் பல நிறபேதங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக மக்களுக்கு அதிக துன்பத்தைத் தராதவர். பிற அதிகாரிகள் போலவே தன் நாட்டுக்காக வணிகத்தை கவனித்துக் கொள்பவர். கூடவே தனக்கென ஒரு தனியான வியாபாரத்தையும் செய்து கொள்பவர் (இன்றும் பல அரசு/ தனியார் அதிகாரிகள் வேறு பெயரில் வர்த்தகம் செய்வதற்கு முன்னோடி?) அரசியல் காரணங்களுக்காக நண்பராக ஆகிவிட்ட சந்தா சாகிப்பின் மனைவி அத்தர் பேகத்திற்கு அடைக்கலம் தருகிறார். மராத்தியர்கள் அவளது செல்வத்திற்காக மிரட்டும் போதும் அடைக்கலம் வந்தவரைக்காப்பதற்கு உயிரையும் விடுவான் பிரெஞ்சி என்று சொல்லும் இடத்தில் மானுடம் வெல்லும் என்னும் நம்பிக்கை பிறக்கிறது
ஆர்காட்டு தளபதி கர்னாடகப் போர்களில் முக்கியப் புள்ளி. சந்தாசாகிப் தான் திருச்சியை ஆண்டு வந்த மதுரை அரசி ராணி மீனாட்சியை ஏமாற்றி அவள் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறான். தன் கணவர் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்குப்பின் ஆள்பவள் மீனாட்சி. அவள் பாட்டிதான் ராணி மங்கம்மாளின். ராணி மீனாட்சியின் மரணம் புனைவில் தொடர்ந்து துயரத்தை எழுப்பியபடியே நம்மைத் தொடர்கிறது. அடுத்த முறை மதுரை மீனாட்சியை தரிசிக்கும் போது பக்தியுடன் பெரும் துயரும் எழும். (அந்த மீனாட்சி வேறு, இவள் வேறு என்று சொல்பவர்கள் மூதன்னையின், பாட்டியின் அணுக்கத்தை உணராதவர்கள்)
ஆனந்தரங்கம் பிள்ளை எல்லா மானுடரையும் போல கலவை ஆளுமை ஆனால் புத்திசாலி. மராத்தா வீரர்களால் துரத்தப்பட்டு புதுச்சேரியில் அடைக்கலமாயினர் சுற்றியுள்ள ஊர்மக்கள்.
அவர்களில் ஒரு குடும்பம் பிள்ளையின் வீட்டெதிரே மரத்தடியில் தஞ்சம் அடைந்தது. பிள்ளை அவர்களுக்கு அன்புடன் உதவிசெய்கிறார். ஆனால் தனக்கு கிடைக்க வேண்டிய துபாஷ் பதவியை அடைந்துவிட்ட கனகராய முதலி (கிறித்துவராக மாறி பதவியைப் பிடித்தவர்) மீது கடும் வெறுப்பும் கொள்கிறார். அவரது மரணப் படுக்கை பிள்ளைக்கு ஆனந்தம் தருகிறது

பெண்கள் நிலையும் ஒடுக்கப் பட்ட ஏழைகள் நிலையும் வரலாற்றில் நம்மைத் தலைகுனியச் செய்பவை. அவை நீங்காமல் நினைவில் இருப்பது மானுடம் வெல்வதற்கு அவசியம். ஒருவேளை கீழ்மையான விலங்கு நிலை வாழ்வைப் பதிவு செய்யவேண்டா என்று தான் இந்தியர்கள் எவரும் பதியவில்லையோ?
நமது வரலாறு நேர்கோடாக இருக்கவில்லை. மராத்திய வீர்ர்களில் பலர் இசுலாமியர்கள். மதமும் சாதியும் இரண்டு சக்திகளாக ஊடாடியும் முரண்பட்டும் வாழ்வின் வெவ்வேறு முடிவுகளை எடுத்திருக்கின்றன. அரசுத் தெருவில் பல்லக்கில் வந்துவிட்டார் என்பதற்காக இடங்கை- வலங்கை எனப் பிரிந்து சாதிகளால் பிணக்கு கொண்டு கவர்னர் வரை செல்கிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே மதத்திற்கு பிரச்னை வரும்போது ஒன்று சேர்ந்து நிற்கின்றனர். இதை பிரெஞ்ச் கவர்னரால் புரிந்துகொள்ள முடியவில்லை
பண்ணை அடிமைகள் விற்கப்படுவதும் கூடவே அவர்களை அடிப்பதற்கான சாட்டையும் தரப்படுவதும் வெறும் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நம் சமூக வாழ்க்கையின் அறவீழ்ச்சியைக் காட்டுகிறது.
மோகனாம்பாள் என்னும் தஞ்சை மராத்திய தளபதியின் மனைவி பிரெஞ்சு மதுவிற்கு அடிமை ஆகிறாள். அவள் தன் கணவனைத்தூண்டி மேலும் மது கேட்டு தூது அனுப்பச் செய்கிறாள். போரைத் தவிர்க்கும் உத்தியாக இந்த விண்ணப்பம் உதவும் என்கிறாள். தளபதி அவமானம் பிடுங்க பண்டிதரை தூது அனுப்புகிறான். உண்மையிலேயே மோகனா போரைத் தடுக்க மதுவைப் பயன்படுத்தினாளா அல்லது மதுகிடைக்கவேண்டி அரசியல் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தினாளா என்பதில் வாசகர் சுதந்திரம் உள்ளது.
வடநூலும் தமிழும் பயிலும் பிராமணர்கள் அமைச்சர் பதவிக்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். குருவின் வீட்டில் ராம சப்தம் பயிலும் மாணவனுக்கு குருவின் மகளை சகோதரியாக ஆக்குகிறார் குரு (சமஸ்கிருத்த்தில் ஏழு வேற்றுமைகள் – மூன்று எண்ணிக்கைகளில் – ஒருமை, இருமை பன்மை பெயர்ச்சொற்களின் பட்டியலின் முதல் சொல்). வீட்டில் தங்கிப் படிக்கையில் கல்விமட்டுமே கவனத்தில் இருக்க ஒரு சமூகவிதி பரிணாமம் அடைந்து வந்திருக்கிறது போலும்.
கழிவறை எப்போதும் பிரச்னையாகவே இருந்திருக்கிறது. இன்றும் திறந்தவெளிக் கழிவறைகள் இல்லாத மாவட்டங்களாக பெருமையுடன் அறிவித்துக் கொண்டிருக்கிறோம். கடற்கரையில் அசுத்தம் செய்யக்கூடாது என்று கவர்னர் அறிவிக்கிறார். ஆடிப் போய் விடுகிறார்கள் பொதுமக்கள். வீட்டில் கழிவறை கட்டிக் கொள்வது பிராமணர்களுக்கு பெரும் ஆசார வீழ்ச்சியாகத் தெரிகிறது. கூட்டம் கொந்தளிக்கிறது. எங்கே புரட்சி செய்துவிடுவார்களோ என்ற நிலை வரும்போது ஆதார விதியாகிய உயிர் மற்றும் உணவு பயம் வருகிறது. வீட்டிலெயே குழி எடுத்து குச்சிகளைப் போட்டு கழிவறை தயாரித்து விடுகிறார்கள். மொத்த வீடே ஒரு அறை என்றிருக்கும் ஏழைகளின் நிலை மிகவும் பரிதாபம் ஆகி விடுகிறது
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அமுதமொழிகள் மூன்று தொகுதிகளாக தமிழில் வந்துள்ளன. மகேந்திர நாத் குப்தர் வங்கத்தில் எழுதியது மூலம். அவர் தனது நாட்குறிப்பில் குருதேவர் உரையாடியதை பல ஆண்டுகளாக எழுதி வைத்தது. ஆன்மிகத்தை இலக்கியமாக ஆக்குவது. ஓர் இடத்தில் குருதேவர் கழிவு மூலம் பொதுமக்கள் குளத்தை அசுத்தம் செய்வதைப் பற்றிச் சொல்கிறார். யார் சொல்லியும் கேட்காத பொதுமக்கள் கம்பெனி (பிரிட்டிஷ் கிழக்கிந்திய) உத்தரவுப் பலகை வைத்ததும் அடங்கி விடுகின்றனர்) .
கூட்டு வர்த்தகக் கம்பெனிகள் அரசாங்கத்தை அமைத்தபோது பல புதிய விழுமியங்கள் உள்ளே நுழைந்திருக்கின்றன. அரசர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு அதிகாரக் கோணம் இவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. அது வெடிமருந்தாக இருக்கக் கூடுமா? அல்லது ஜனநாயகம் பரிணமித்து வந்த பாதை அதுவா? ஒருவேளை இந்த முன்னூறாண்டு ஐரோப்பிய ஆட்சி நம்மைத் தயார்செய்யவும் இந்தியா திரண்டு வரவும் இயற்கை ஆடிய கொடிய விளையாட்டா?
எல்லா அடிமைத்தனங்களுக்கிடையிலும் துமாயும், பிள்ளையும் , வீர வன்னியன் காளியும், ‘ பூமி இருக்கு சாமி ; உசுரு போறவரைக்கும் கொத்திட்டு இருக்கவேண்டும்’ என்று சூளுரைக்கும் மண்ணோடு வாழும் எளிய விவசாயியும், தனது கலையும் அறிவும் அரசனின் மங்களவிலாசத்தில் அழிந்து கொண்டிருக்கும்போதும் நம்பிக்கையை விடாமல் பிடித்திருக்கும் கோகிலா போன்ற தேவதாசிகளும் , அடிமையாக விற்கப்பட்டும் விலங்கைவிட இழிவாக நடத்தப்பட்டபோதும் தலைமுறைத் தொடர்ச்சிகளுக்கு மானுடத்தை வெறுக்காமல் அறத்தினைக் கடத்தும் ஒடுக்கப்பட்ட புனிதர்களும் வாசித்து முடிக்கையில் உரக்க ஒலிக்கிறார்கள் – மானுடம் வெல்லும்.
ஏதாயினும் மானுடம் வெல்லும் கம்பனின் உச்சக் கனவாகிய ‘மானுடம் வென்றதம்மா’ என்ற அறைகூவலில் இருந்து கீழே இறங்கி யதார்த்த நிலையை சொல்கிறது. ஆனால் அதில் வெல்லும் என்னும் நம்பிக்கையும் அதற்கான குறிப்புகளும் உள்ளன.
ஆர் ராகவேந்திரன்
கோவை