
நன்மை-தீமை, உண்மை-பொய், இருள்-ஒளி என அனைத்தையும் இருவேறு துருவங்களாக வகைப்படுத்தி புரிந்துகொள்வது வெகு சுலபம். ஆனால், மனிதர்களை முழு முற்றாக நல்லவன் என்றோ, ஆதியோடந்தம் தீயவன் என்றோ வகைப்படுத்துவது சரியானதல்ல. இருளுக்கு முழுவதும் பழகிப்போன விழிகள், அதனுள் ஒளிந்திருக்கும் வெளிச்சத்தை, அது எவ்வளவு சிறியதேயானாலும் கண்டடைந்தே தீரும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஒரு கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில் துவங்கி, அடுத்த வருட கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவுக்கு இடைப்பட்ட ஒரு வருடத்தில், ஒரு நிலப்பரப்பு, அதன் மக்களில் சிலரின் மாற்றங்களை விவரிக்கும் ஸ்காண்டினேவிய நாவல் மதகுரு (தமிழில்:க.நா.சு). வார்ம்லாந்தில் உள்ள ஏக்பி பண்ணை, அதன் உரிமையாளரான மேஜர், அவரது மனைவி, அதன் உல்லாச புருஷர்கள், அவர்களுடன் சம்பந்தப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் இவர்களின் ஒரு வருட வாழ்கையையும் அதனூடே முன்னாள் மதகுருவான கெஸ்டா பெர்லிங்கின் மனமாற்றத்தையும் பேசுகிறது ”மதகுரு”.
*
தீம்புனல் நாவல் வெளியீட்டு விழாவில் ஆசான். திரு.ஜெயமோகன் அவர்களுடைய உரையைக் கேட்டேன். அந்நாவலில், பழமைவாதம் vs நவீன மனதுக்கு இடைப்பட்ட போட்டியாகத் துலங்கி வரக்கூடிய ஒரு சித்திரமாக நாய்கள் vs ஓநாய்க்கு இடைப்பட்ட ஒரு சண்டையைப் பற்றி பேசியிருப்பார். அந்தச் சண்டையில், நவீன நாய்களிடம், பழமை மிளிரும் ஓநாய் தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்றுப்போகிறது. மதகுரு நாவலிலும் என்னால் அப்படி ஒரு ஒப்புமையைக் கண்டறிய முடிந்தது. கெஸ்டா பெர்லிங், பெர்டிணாண்டின் காதலியான அன்னாவை அவன் பொருட்டு கவர்ந்து வருகையில், வரும் வழியிலேயே அன்னாவுக்கும், கெஸ்டாவுக்கும் காதல் மலர்கிறது. அவர்கள் இருவரும் பெர்டிணாண்டை மறந்து ஏக்பிக்கு செல்வதை ஒரு ஓநாய்க்கூட்டம்தான் தடுக்கிறது. முடிவில் “இதுதான் கடவுளின் விருப்பம் போலும்” என்ற சமாதானத்துடன் அக்காதல் கைவிடப்படுகிறது. அப்பயணத்தில் அவர்களுடன் (துணையாக?) ”பின்கிரட்” என்ற வேட்டை நாயும் இருக்கிறது. இதையே, இன்னுமொரு கோணத்தில், பழங்காலத்துக் கதையான மதகுருவில் ஜெயித்துவிட்ட ஓநாய்கள், தற்காலத்தில் நவீனத்திடம் தோற்று ஓடுகின்றன என்பதாகப் புரிந்துகொள்கிறேன்.

இந்நாவல் முழுவதிலும், எப்பா, அன்னா, மரியாள், எலிஸபெத் (சின்னச் சீமாட்டி) என பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றிலும் தனித்துத் தெரியக்கூடிய ஒரு கதாப்பாத்திரம் “ஏக்பி சீமாட்டியாக” வரும் மார்கரீடா. அல்டிரிங்கருடான காதல், கால சூல்நிலையால், ஏக்பி உரிமையாளரை மணந்துகொள்ள நேர்தல், அதன் பின்னும் தொடரும் அல்டிரிங்கருடனான உறவு, உல்லாஸ புருஷர்களுடனான களிப்பு, கிறிஸ்துமஸ் விருந்தில் அந்த உறவு (கிறிஸ்டியன் பெர்க்கால்) வெளிப்படும் சந்தர்ப்பம் என பல இடங்களில் மார்கரீடாவின் கதாப்பாத்திரம் நம்மை வசீகரிக்கிறது. குறிப்பாக, தன்னுடனான உறவின் பொருட்டு, அவளுக்கென அல்டிரிங்கரால் வழங்கப்பட்ட சொத்துக்களை விட்டு மார்கரீடா வெளியேற நேர்கையிலும் “தன் சுயம்” பாதிக்கவிடாமலே அவள் வெளியேற்றம் நிகழ்கிறது. அவளால் ஏக்பியின் உல்லாச புருஷர்களாக தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவருமே அவரவர் துறைகளில் உச்சம் தொட்டவர்கள் என்பதும் மார்கரீடாவின் ஆளுமைக்கான சான்றாக அமைகிறது.
*
நாவலில் பொது மக்களின் “திரள்” மனப்பான்மையை மிகச்சரியாக காட்சிப்படுத்திய சில இடங்கள் உள்ளன. குறிப்பாகப் பிராத்தனைகள். கதையின் துவக்க அத்தியாயத்தில், கடவுளை நோக்கி கெஸ்டா பெரிலிங்கால் செய்யப்படும் ஒரே உண்மையான பிராத்தனை அவன் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் மக்கள் மன்னிப்பதற்குக் காரணமாக அமைகிறது. அதைப்போலவே வாழ்நாளெல்லாம், பேர் பெற்ற கருமியாக வாழ்ந்து வெறுப்புக்கு உள்ளான ப்ரோபி மதகுரு, தன் மனம் வருந்தி செய்யும் பிராத்தனையும், அதன் விளைவாகப் பெய்யும் மழையும், அவன் மீதான, மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் கரையச் செய்கின்றன. றீகார்டு குடியானவப் பெண்ணுக்கு நியாயம் வேண்டி ஏக்பி மாளிகையை அழிக்கும் ஆவேசத்துடன் வரும் மக்கள் கூட்டத்தின் கோபம், மாளிகையில் நடக்கும் விருந்தால் நீர்த்துப்போவதும்; பின்னர், ஒரு சின்ன உரசலிலேயே கோபம் மீண்டும் மூள்வதும் மக்களின் ”திரள்” மனப்பான்மையை சரியாகக் காட்சிப்படுத்திய தருணங்கள்.
மாமா பெல்ஹார்டுக்கும், சின்னச் சீமாட்டிக்குமான உரையாடல், இந்நாவலின் முக்கியமான உரையாடல்களுல் ஒன்று. கடவுள் நம்பிக்கைக்குப் பதில் தான் கண்டறிந்த உண்மையாக, பல்லாயிரம் பக்களில் நிறுவப்பட்ட உண்மையாக பெல்ஹார்டு முன்வைப்பது உழைப்பை. ஆனால், சின்னச் சீமாட்டிக்கோ அதை ”அன்பு / காதல்” என்பதன்றி பிற எதையும் நம்புவதில் தயக்கம் உள்ளது. அவளது வார்த்தைகளிலேயே சொல்வதானால் “ நீ நம்புகிறமாதிரி நம்பினால் எனக்கு வாழ்வே சாத்தியமில்லாது போய்விடும்”. முடிவில் தன்னுடைய அற்புத நூலை, அதன் மூலம்தான் கண்டறிந்த உண்மையை பூட்டி வைத்து புகழைத் துறக்கிறான் “மாமா பெல்ஹார்டு”. அவனது இந்த மனமாற்றத்துக்கு முக்கியமான காரணம், தன் பெண் போல நேசித்த சின்னச் சீமாட்டி அதனால் துன்பப்படக் கூடாது என்பதே. அவ்வகையில் காதலே (அன்பே) முடிவில் வெல்லும் என்பதற்கு தானே ஒரு உதாரணமாக நிற்கிறான் ”மாமா பெல்ஹார்டு”.
*
இந்நாவலின் முக்கியமான அம்சம், இதில் தொடர்ந்து வரக்கூடிய ”நாட்டாரியல்” கூறுகள். கருமி ப்ரோபி மதகுருவின் பிராத்தனைக்குப் பின் மழை வருதல், பெருகிவரும் வெள்ளத்தினூடே மக்கள் திரளை ஒன்றிணைத்து பழுதான பாலத்தை சரி செய்யும் முயற்சி, மரணித்துப்போன ஜோஹனின் கல்ல்றையுடன் அவன் நண்பர்கள் ஆடும் சீட்டாட்டம், அதில் ஒவ்வொரு முறையும் ஜோஹனே வெல்லுதல், சாத்தான் ஸிண்ட்ரோமின் விவரிப்புகள், சொல்லிவைத்தாற் போல் உல்லாசத்திலிருந்து உழைப்பை நோக்கித் திரும்பும் மக்கள் – உள்ளிட்ட சம்பவங்கள் என கதை நெடுகிலும் இந்த “நாட்டார்”கதைத் தன்மை வருகிறது. ஆனால், இந்த அம்சம், கதை என்பது கூறுமுறையின் வெற்றிதான்.
*
பெர்டினாண்டின் மரணச்சடங்குகளில் அவன் மீதான தன் காதலை அன்னா வெளிக்காட்டி, அதன் மூலம் பெர்டினாண்டின் அன்னைக்கு மீட்பளிப்பது, மனைவி குஸ்தாவாவை கொடுமைப்படுத்தும் மெல்கியாரில் ஏற்படும் மனமாற்றம், தன்னை நேசித்த பெண்கள் மீதெல்லாம் பெருங்காதல் கொண்ட கெஸ்டா, எலிஸபெத்தை அவள் குழந்தையின் பொருட்டு திருமணம் செய்து கொள்வது, ஏக்பியின் ஆலைகள், அதன் வளம் உல்லாஸ புருஷர்களால் நாசமடைவது, பின்னர் அவர்களின் மனமாற்றத்தால் ஏக்பி மீள்கட்டமைப்பு செய்யப்படுவது என நாவல் நெடுகிலும் மனித மனதின் சாத்தியமான சாத்தான் அம்சங்களும், அதற்கிணையாகவே, அதை ஈடுசெய்யும் வண்ணம் அவர்களில் தேவதை எழும் தருணங்களும் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. நம்முடைய நல்லவன் – கெட்டவன் வகைப்படுத்தலை இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. அதைப்போலவே ஒருவனுக்கு நல்லவனாகத் தோன்றும் மனிதன் எல்லோருக்கும் அப்படித் தோன்ற வேண்டிய அவசியம் இல்லைதானே. ஊரே வெறுக்கும் கருமியான ப்ரோபி ”மதகுரு” வுக்குள் இருந்து பெருங்காதலன் எழுந்துவரும் தருணம் அத்தகையது.
*
இது வெறுமனே ஏக்பியின் கதை மட்டுமல்ல. கெஸ்டா பெர்லிங்கோ, உல்லாஸ புருஷர்களோ ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையோ காலகட்டத்தையோ சார்ந்தவர்கள் மட்டுமல்ல என்பதை உறுதியாகக் கூறமுடியும். அவ்வெண்ணமே, இந்நாவலை மிகவும் முக்கியமான ஒன்றாக்குகிறது.
*
ஆடும் ஊஞ்சல், எவ்வளவு தூரம் பின்புறமாக பயணிக்கிறதோ, அதே அளவு தூரத்தை முன் நோக்கியும் பயணித்தே ஆகவேண்டிய கட்டாயம் கொண்டது. ஊசலாட்டங்களுக்குப் பெயர் போன மனித மனமும் அவ்வியல்பினதே. நன்மை தீமை என்ற இரு எல்லைகளுக்கு மத்தியிலான பயணமாய் அமைகிறது பெரும்பாலானோர் வாழ்க்கை.

காளீஸ்வரன், கோவை