மதகுரு – நாவல் – வாசிப்பனுபவம் – ராகவேந்திரன்

உதகைக்குச் சென்று திரும்பும்போதெல்லாம்  தோன்றுவது ஒன்று உண்டு. ‘இங்கேயே நிரந்தரமாகத் தங்கி இயற்கையில் குளித்துக் கொண்டே இருந்தால்  நன்று ‘ என்று; நண்பர் ஒருவர் சொன்னார் ‘எல்லோருக்கும் அங்கே தங்கி இருத்தல் இயலாது ‘ என்று. மனிதன் சமதளத்தின் சொகுசுகளுக்கு அடிமையாகி விட்டவன். குளிரை நேசிக்கும் குணச்சிறப்பு கொண்டவர்களுக்கானது உதகை ; உதகை போன்ற ஊர்கள்.

ஸெல்மா லாகர்லெவ்- வின் “கெஸ்டா பெர்லிங்” உதகையை விட பல பாகைகள் கீழே குளிரெடுக்கும் ஸ்வீடன் நாட்டின் கிராமிய வாழ்வையும் மனிதர்க்கிடையே நிலவும் குளிர்த் தருணங்களையும் பேசுகிறது.

குளிர் தேசத்திற்கென்று சில பழக்கங்களும் சில மனநிலைகளும் உண்டு. புதினம் படிக்கும் போது நமது உள்மன வெப்பமானி கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது .

 கிடைக்கும் தரிசனங்கள்

மது போதை தருவது; இசையும் கவிதையும் போதையின் எல்லை.

உழைப்பின்மை வீழ்ச்சி தருவது; அதனுடன் குளிரும் சேர்ந்தால் மாறாச் சோம்பலும் உறுதியான தோல்வியும். மேலும் உட்கார்ந்திருக்கும் உடலில் காளான் வளர்ந்துவிடும்.

சூதாட்டம் நிகழும் இடத்தில் சாத்தன் களி கொள்கிறான்.

முன்னாள் போர் வீரர்களும் சாகசக் காரர்களும் ஏக்பி என்னும் தோட்ட மாளிகையில் ஓய்வுதியம் பெற்றுத் தங்குகிறார்கள். இசையும் மதுவும் ஊறி, கொண்டாட்டமே நாட்களாக கடத்துகிறார்கள். அவர்களை ஆதரிக்கும் ஏக்பி சீமாட்டி ஆற்றலின் வடிவமாக வருகிறாள். கதையின் அனைத்துப் பெண்களுமே ஆற்றல் நிறைந்தவர்கள் (உலகில் பெண் சுதந்திரத்தில் முதலிடம் பெறுவது ஸ்வீடன்)

சும்மா இருத்தலில் சுகம் கண்டு வாழ்ந்ததால், அவர்களிடையே ஒருவனில் சாத்தான் புகுந்து விடுகிறான், சின்ட்ரம் என்ற பெயரில்.

அடைக்கலம் கொடுப்பவளை விரட்டி மாளிகையின் உரிமையைப் பெற்று விடுகிறார்கள் உல்லாச புருஷர்கள். சீமாட்டி துரத்தப்படுவது ஒரு பெரும் நாடகீயக் காட்சியாக , ஒரு குளிரும் கிறிஸ்துமஸ் இரவு விருந்தின் பின் புலத்தில் நிகழ்கிறது. காவிய , புராண நாயகிகள் வீழ்த்தப் பட்ட அதே பழைய காரணம் – அலர்.

இன்றும் ஆட்சிகள் அஞ்சுவது செய்திகளுக்கு அல்ல, வதந்திகளுக்குத் தான் என்பது சமூக மனத்தின் ரகசிய செய்தித் தொடர்பின் வலிமையைக் காட்டுகிறது

‘Revellers’, ‘Bachelors’, ‘ Pensioners’ என்று மூலத்தில் அழைக்கப் படுபவர்களை

க நா சு “உல்லாச புருஷர்கள்” என்று விளிக்கிறார். அழகிய மணிப்பிரவாளம்.  புதினத்தின் மிக முக்கிய குறிப்புச் சொல் . தற்போது தூய தமிழில் ஒருவர் முயற்சி செய்தால் ஒருவேளை ‘கொண்டாடிகள்’, ‘மகிழ்நர்கள்’, ‘இன்பம் துய்ப்போர்’ என்று பெயர்க்கலாம்.

உல்லாசிகளின் தலைவன் கெஸ்டா பெர்லிங். உலகிலேயே மிகப் பலமானவன் ஆனால் (அதனாலேயே ?) மிகப் பலவீனமானவனும். தொடர்ந்து காதலிக்கிறான். தனது கேளிக்கைச் செயல்களால்  பிறரைத் துன்புறுத்துகிறான். தொடர்ந்து தியாகம் செய்கிறான்.  தனது மன மாற்றத்தால் பிறர்க்காக மானத்தையும் உயிரையும் பிணை வைக்கிறான்.

ஒவ்வொரு உல்லாசிக்கும் பின்னால் ஒரு கதை உண்டு.

வில்லியக்ரோனாவின் கதை தனித்து நிற்கிறது. தனது அழகிய வீட்டையும் மனைவி, குழந்தைகளையும் நினைத்துக் கொண்டு ஏக்பி மாளிகையை விட்டுக் கிளம்புகிறான். இசை மீட்டிக் கொண்டே வருகிறான். வீட்டைச் சுற்றிலுமுள்ள அழகிய மரங்களையும் பாத்திகளையும் (குழந்தைகள் வெட்டிய கோணலான அழகிய பாத்திகளை அடையாளம் கண்டு கொள்கிறான்) பார்க்கிறான். இசை கேட்டு சிரித்துக் கொண்டே எழும் மனைவி தனித்துயர்ந்து நிற்கிறாள். கணவனை வரவேற்கிறாள்.

 சில நாட்கள் மகிழ்ந்துவிட்டு அமைதியான ஆனந்தம் சலித்துவிடுவதால் மீண்டும் ஏக்பி மாளிகைக்குப் போய்விடுகிறான் அவன் மனைவி மீண்டும் தன் அழகிய வீட்டையும்  குழந்தைகளையும் பேணத்துவங்கி விடுகிறாள்.

கதை வளர்கையில் , கற்பனாவாதம் இலட்சியவாதமாக பரிமாணம் அடைந்து வருகிறது. முடிவு ஒரு தேவதைக் கதை போல உள்ளது. ஏக்பி சீமாட்டி மாளிகை திரும்புகிறாள், நோயுடன் மரணத்தையும் எதிர்நோக்கி.

உல்லாசிகள்  உழைக்கத் துவங்கி விட்டிருக்கிறார்கள். மாளிகையை விட்டுக் கிளம்பவும் தயாராகி விட்டார்கள். சம்மட்டியின் ஓசை கேட்டு சீமாட்டியின் உயிர் பிரிகிறது.   ஆண்டவருக்கும் சாத்தானுக்கும் இடையே மனித மனத்தில் நடக்கும் ஓயாத மற்றுமொரு போர் நிறைவுக்கு வருகிறது

எந்தத் தத்துவமும் கரைத்துவிட முடியாத தூய இயற்கையின் விரிவுக்காக, பனி நிலப் பரப்புக்காக, மதகுரு மறக்கமுடியாமல் நிற்கிறது.

பனி, நாவலில் ஒரு தொடர் படிம்ம் எனத் தோன்றுகிறது

 நீரை உள்ளே வைத்து வெளியே உறுதியாக நிற்றல், எதிர்பாராத தருணங்களில் உடைந்து, நடப்போரை விழ வைத்தல், நெடுங்காலம் காத்திருந்து கதிரின் ஒரு முதல் தொடுகையின் உடைவுக்காக தவமிருத்தல், உருகாமலேயே நேரடியாக ஆவியாகிப் போதல், அனைத்தையும் ஊடுருவி உறங்க வைத்தல் – என மனித மனத்தின் தன்மைகளுக்கு பனியின் காட்சி ஒத்து வருகிறது

ஆண்டு முழுவதும் உறங்கி முதற்கதிரில் எழும் கரடி, வில்லோப் புதர்கள், ஆஷ், செர்ரி , பர்ச், எலுமிச்சை மரங்கள், லிங்க்ஸ் புலி, ஆந்தை மற்றும், காடுகளில் இருட்டில் பூத்திருக்கும் பீதி என்ற  சூனியக்காரி – இவர்களைக் காட்சிப் படுத்தியுள்ள அழகு, நம்மை வெள்ளிப் பனிமலையில் உட்காரவைத்து விடுகிறது

கனவு காணும் வயதான (முன்னாள் போர்க்) குதிரைகள், அவற்றின் வண்டிகள், வழுக்கும் ஈல் மீன்கள் , பனிக்கட்டி உடைய வரும் வசந்தம் மூலம் ஒரு திரைப்படத்தைக் காண்கிறோம். ஒவ்வொரு வாசகனுக்குமான தனியான ஒளி  – வண்ணக் கலவைகளில்

மனத்தின் அழகுவேறுபாடுகளை தோல்வியில் கம்பீரம், சாத்தானின் சூதை வெல்லும் தியாகம், தொடர்ந்து மன்னித்தல் வழியே வழியவிட்டுள்ளார்.

கஞ்சன் என்ற பெயர் வாங்கி எல்லோராலும் வெறுக்கப் படும்  போர்பி மதகுருவுக்கு கெஸ்டா பெர்லிங் வழிகாட்டுகிறான். பஞ்சம் தீர பிரார்த்தித்து கடவுளின் ஏற்பினால் மழை வந்துவிடவே, அந்த மகிழ்ச்சியாலேயே இறந்து விடுகிறான் போர்பி மதகுரு (கெஸ்டாவும் மதகுருதான்; குடிப் பழக்கத்தால் அடித்து விரட்டப் பட்ட மதகுரு)

லோவன் போர்க் என்னும் உல்லாசி மனதிற்குள் பாடிக்கொண்டே பீதோவன் இசையை காற்றில் கைகளால் போலிப் பியானோவில் இசைக்கிறான். அது கெஸ்டாவை துயரிலிருந்து மீட்கிறது. இசை என்பது ஒலியில்லாத போது வலிமை வாய்ந்ததாக உள்ளது  இசை கருவிகளிலும் குரலிலும் இல்லை, காற்றிலும் உள்ளத்திலும் இருப்பது

தவறு செய்பவர்கள், துரத்தப் பட்டவர்கள் தரப்பு நியாயத்தைப் பேசுவதால் புதினம் சமநிலை கொள்கிறது

கனவான் ஜூலியஸ் பதினேழு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஏக்பியை விட்டுக் கிளம்புகிறான், தன் கிழத் தாயைப் பார்ப்பதற்கு . வழியில் இசையும் பூக்களும் கொண்டாடும் பெண்களை சந்திக்கிறான். அவர்களுடன் பூப்பந்து விளையாடி, மாலைகள் சூடிக்கொண்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு மாளிகைக்கு வந்து விடுகிறான்.  அவனை வழியனுப்ப பிற உல்லாசிகள் செய்யும் ஏற்பாடுகள் ஒரு நகைச்சுவை நாடகம். 

உலகமும் குடும்பமும் தன் மீது சுமத்தும் கடமைகளை எதிர்த்துப் போராடும் குழந்தைகள் ‘சமூகமயம்’ ஆக்கப் படாமலேயே வளர்ந்து விட்டால் அவர்கள் இந்த உல்லாசிகளைப் போல ஆவார்கள் என்று தோன்றுகிறது.  நம்முன்  ஒரு குழந்தை தெரிகிறது.  வாசற்படியில் அமர்ந்து கால்களுக்கிடையில் முகத்தைப் பொத்தி வைத்துள்ளது. கையில் திணிக்கப் பட்ட பற்பசை பிரஷ். முந்திய இரவு கேட்ட கதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கனவை எரித்து விடும் உலகியல் கடமைகள் – பள்ளி, புத்தகம், குளித்தல் என குழந்தையின் கூம்புதல் ஒவ்வொரு நாளாக அதை மெலியச் செய்கின்றன. அப்படி மெலிந்த பல கோடிக் குழந்தைகளின் மொத்தக் கனவாக விரியுமிடம் கனவான் ஜூலியசின் கதை. வில்லியக்ரோனாவையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். அவன் தன் குழந்தைகளையும் விட்டுக் கிளம்பிவிடுவது அவர்கள் மீது அன்பில்லாததால் அல்ல – அவனும் ஒரு குழந்தை அவ்வளவுதான்

கடவுளின் பிரயாணி லென்னர்ட் , தான் செய்யாத தவறுக்கு தண்டனை பெறுகிறான். நண்பர்களான உல்லாசிகளின் விளையாட்டால் மனைவியால் அடையாளம் காணப்படாமல் வீட்டை விட்டுத் துரத்தப் படுகிறான். ஆனால் அந்த நிகழ்வை தெய்வ அழைப்பாக ஏற்று அன்பு, அமைதியின் தூதனாக ஆகிறான். நடமாடும் ஆண்டிகள் – பக்கிரிகளின் வாழ்வே அழகு; ஒரு சந்தையில் முரடனிடமிருந்து அப்பாவிகளைக் காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்கிறான்

மாமா பெர்னார்டு இறை மறுப்புப் புத்தகம் எழுதியவன். அதன் கருத்துக்கள் தன் மகள் போன்ற பெண்ணுக்கு துன்பம் தரும் என்று தெரிந்தவுடன் அதை வெளியிடாமல் பூட்டி வைத்து விடுகிறான். அறிவை அன்பு வெல்லும் இடம். உலகின் மொத்த சராசரி அறிவு குழந்தைப் பருவத்தைத் தாண்டும் போது தான் அடுத்த கட்ட , இரக்கமற்ற உண்மைக்குத் தயாராகும் போல

கெவன் ஹெல்லரின் கதை, மக்களுக்கு உதவாத அறிவு பயனற்றது என்கிறது; மேதை புதியதை பரிசோதனை செய்து கொண்டே இருக்கவேண்டியவன் என்கிறது. அவன் ஏக்பி மாளிகையைத் தீமூட்டி விடுகிறான் . ஒரு லங்கா தகன நிகழ்வு – ஏக்பி மாளிகை தமோகுணத்தின் குறியீடாக உள்ளது.

அத்தான் கிறிஸ்டோபர் பெரும் வீரன் . பல காலமாக மாளிகையின் கணப்பருகே அடைக்கலம் புகுந்து சும்மா இருப்பவன்.  அவனுக்குத் திடீரென காதல் முளைக்கிறது. தன் பழைய அங்கீகாரக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஆவலுடன் வெளியேறுகிறான். சிறிது நேரத்தில் திரும்பி வந்து கடிதத்தை எரியும் ஈஸ்டர் சூனியக்காரி கொடும்பாவியில் வீசி விடுகிறான் மீண்டும் கணப்பின் அருகில் சும்மா உட்கார்ந்து விடுகிறான். துன்பியலும் நகையும் கலந்த தருணங்கள்.

பெண்ணை வைத்துச் சூதாடுவது, தீமையைக் கொளுத்தி போகி/ சொக்கப் பனை கொண்டாடுவது, மது ஊற்றி இசையைக் கிளப்புவது இவை மானுடம் முழுமைக்கும் பயின்றுவரும் சமூக – வாழ்வியல் பழக்கங்கள் – ஆதி முன்னோர்களின் ‘நாகரிகப் படுத்தப் பட்ட’ மிச்சங்கள்

சாத்தான் – கடவுள் இருமையை இந்தியத் தத்துவம் , வெகுகாலம் முன்னே ஒருங்கிணைத்து , சமன்வயப் படுத்தி, விளங்கிக் கொண்டு விட்டது.

போக நாட்டம் துயர்தருவது – அதுவே சாத்தானை விலக்கி வைக்கிறது ; சாத்தானுடைய வில்லிலும் கோடிக்கணக்கான நாண்கள்; எனவே இருமைகளை அறிந்து கடக்கும் வழியை – பொன்மயமான நடுவழியை கண்டடைந்தது.

இரண்டின்மைத் தத்துவம் இங்கே சமரசத்தை ஏற்படுத்த முயன்றது.  . நஞ்சு உண்ட பேரழகன் இங்கே நிலை கொண்டு விட்டான். வறுமையும் வளமையும் , துய்த்தலும் துறத்தலும் ஒரே நிறையில் நிகழ்ந்து விட்டன. குறிஞ்சித்திணையும் காஞ்சித்திணையும் ஒருங்கே பாடப் பெற்றன.

‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண் தொடி கண்ணே உள “ என்ற காமத்துப்பால் குறளும் (1101)

“அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு” என்ற துறவறவியல் குறளும் (343) ஒரே நூலில் உள்ளன

உள்ளுக்குள்ளே ஊறும் மது ஒன்று உண்டு.  அது குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்குக் கிடைப்பது. புற இயற்கையின் வண்ண வேறுபாடுகளும் அகத்தின் காரணமற்ற ஆனந்த ஊற்றும் ஒன்று என்று காண்பவர்களுக்குரியது.

“கற்பனையூரென்ற நகருண்டாம் ; அங்கே

கந்தர்வர் விளையாடுவராம்” என்ற பாரதியின் ஊரில் அந்த மது வழிந்தோடுகிறது.

“மது “ என்ற பாரதியின் மற்றொரு தனிப்பாடலில் யோகியும் போகியும் சொற்போர் புரிகிறார்கள் – பிரவிருத்தி  நிவ்ருத்தி மார்க்கங்களுக்கிடையே; சமன்வயும் செய்கிறான் ஞானி . “மதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு விண்ணெலாம்” என்று முடித்து வைக்கிறான்.

‘மதுவாதா ருதாயதே’ என்று தொடங்கும் ரிக்வேத கீதம் தென்றலும், கடலும் மழையும் கால்நடைகளும் புவியின் தூய புழுதியும் வயலின் கதிர்களும், காலையும் இரவும் விண்ணும் இனியதாகட்டும்; வானத்திலிருக்கும் எம் தந்தையர் எமக்கு இனியவராகட்டும்” என்று பிரார்த்திக்கிறது. இது நீத்தோருக்கான நினைவேந்தல் நிகழ்வாக வருகிறது. மரணித்தோரிடம் அன்புடன் மகிழ்ச்சியைக் கையேந்தும் நிலை  குற்ற உணர்வற்ற குழந்தைகளுக்கானது. மதகுரு காட்டும் மாந்தர் அந்தக் குழந்தைச் சமுதாயத்தை நினைவூட்டுகிறார்கள்.  ஏனென்றால், தூய இயற்கையின் அழகு, குற்ற உணர்வுகள் அற்றது.

நிற்பவர்களில் வலமிருந்து ஐந்தாவதாக ராகவேந்திரன்

ஆர் ராகவேந்திரன்

கோவை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s