மானுடம் வெல்லும் – வாசிப்பனுபவம் – விக்ரம்

ஒரு இலக்கியவாதி என்பவர் நூற்றாண்டுகளை ஆண்டுகளாக, பதிற்றாண்டுகளை மாதங்களாக, ஆண்டுகளை நாட்களாக சுருக்கிக்கொண்டு வாழ்பவர்.  அப்படி சுருக்கிக்கொள்வதன் வாயிலாக தன் ஆயுளை மூவாயிரம் ஆண்டுகளாக விரித்துக்கொள்ளவும் செய்கிறார்.  ஒரு நல்ல வாசகன் என தன்னைக் கருதுபவனும் அப்படியே செய்துகொள்ள வேண்டும் வேறுவழியில்லை.  இங்கு சமகாலம் என்பதும் அன்றாடம் என்பதும் வரலாற்றின் பேரொளியில் வைத்தே நோக்கப்படுகிறது.  மாறாக மற்றவர்கள் சமகாலத்தின் அன்றாடத்தின் நோக்கில் வரலாற்றை காண்கின்றனர்.  அவர்கள் வரலாற்றை உண்மையாகவே காண்பதில்லை என்று சொல்லலாம்.  அவ்வாறே ஒரு பெரும் கலைஞனும் அன்றாடத்தைக் காண்பதில்லை என்று சொல்ல முடியும்.  சமகாலத்தவை என்று ஏராளமானவை கொட்டப்பட சற்று கடந்தகாலம் ஆகவிட்டு, பின் அவற்றுள் துழாவி அதிகபட்ச உண்மையின் அணுக்கத்தைச் சென்றடைவது வரலாற்றின் பணி எனக் கருதுகிறேன்.  இது எல்லாத் தரப்பையும் விசாரித்து எல்லா ஆதாரங்களையும் பரிசீலித்து தீர்ப்பளிக்கும் நீதிபதியின் பணியினை சற்று ஒத்தது.  ”சற்று ஒத்தது” தானே ஒழிய முற்றும் ஒத்தது அல்ல.  வரலாற்றின் மீது முற்றாக தீர்ப்பு எழுதும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்று கருதுகிறேன்.  சமகாலம் என்பது கடந்தகாலம் ஆகியபின் நோக்க அதில் நாம் ஏதேனும் ஒரு தரப்பின் சார்பு கொண்டு இருப்பது என்பது குறைகிறது.  கடந்த காலம் எவ்வளவுக்கெவ்வளவு மிகவும் கடந்த காலமாகிறதோ அவ்வளவுக்கெவ்வளவு அது நம் தரப்பை விலக்குவது மட்டுமல்லாமல் அதை மானுடப்பொதுமை செய்கிறது.  இந்த “மானுடப்பொதுமை“ என்பதில்தான் எழுத்துக் கலைஞனின் பணி இருக்கிறது.  ஒரு வரலாற்று ஆசிரியனைப் போலல்லாமல் ஒரு எழுத்துக் கலைஞன் வரலாற்றின் மீது கொள்ளும் காதல் முற்றிலும் வேறானது (இலக்கிவாசகனுக்கும் அது அவ்வாறானேதே).  அவன் ஒரு புதையல் வேட்டைக்காரனைப்போல, ஒரு தங்கச் சுரங்கத்தைத் தேடிச்செல்லும் ஒருவனைப்போல.  அவன் கொண்டுவரும் செல்வம் விலைமதிபற்றது.  ஒரு பண்பாட்டைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது, ஒரு பண்பாட்டை கட்டியெழுப்பும் வல்லமை கொண்டது.  விழுமியங்களை உருவாக்கி நிலைநிறுத்துக் கூடியது.  இனிவரும் நூற்றாண்டுகளின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியது (ஒரு வெண்முரசு வாசகனாக இதை நான் நன்குணர்ந்தே இருக்கிறேன்).  வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், எல்லை முடியும் இடத்தில் இருந்து எழுத்தாளன் என்னும் கலைஞனின் பணி துவங்குகிறது.  ஒரு வரலாற்று ஆய்வாளன் செல்லமுடியாத இடம் அவன் மட்டுமே சென்றடையக்கூடியதாக இருக்கிறது.  ஒரு நிலப்பரப்பு சாரம்சமாக மானுடத்திற்கு தருவதென்ன என்பதை அவன் வரலாற்றில் இருந்து எடுத்துத்தருகிறான்.  வரலாறு தரும் புறச்சான்றுகளை அங்கமைந்த மனங்களின் எதிரொளிப்பாக கண்டு அம்மனங்களைச் சென்றடைய முடிகிறது.  உணர்வுகளை – வாழ்கையைப் பெற்றுக்கொள்ளும் ஊடகமாகவும் ஆகிவிடமுடிகிறது.  சமயத்தில் அவற்றின் ஆழ்மனங்களை தனதாக கண்டுணரவும் நேர்கிறது.  மிகப்பெரியதாக தரப்படும் அல்லது மிகச்சிறியதாகத் தரப்படும் நிழல்களைக்கொண்டு பிம்பங்களின் நிஜங்களை சென்றடைய முடிகிறது.  தரப்படும் நிஜங்களின் வாயிலாக நிழல்களை விரித்து கனவின் ஓவியங்களாக தீட்டமுடிகிறது.  வெறும் ஒற்றை உடலின் இருப்பாக இருந்து மறைபவன் அல்ல அவன் மொத்தமானுடத்தையும் ஒற்றை இருப்பாக உணர்ந்து அதுதான் தான் என்று என்றும் இருப்பவன் அவன்.  எது இவ்வுலகில் நதிகளும் மலைகளும் உள்ளவரை என் கதையும் இருக்கும் என்று வான்மீகியைக் கூறவைத்ததோ எது வியாசரென்னும் பெரும் கலைஞரை இயக்கியதோ எது திருவள்ளுவர் என கம்பர் என இளங்கோ என விசைகொண்டதோ அதுவேதான் பாரதியாகவும் ஜெயகாந்தனாகவும் ஜெயமோகனாகவும் தனக்கானதை வாழ்விலிருந்தும் வரலாற்றிலிருந்தும் எடுத்துக்கொண்டு அழிவற்ற கலையென மானுடத்தின் மீது அருள் நோக்கு கொள்கிறது.

மானுடம் வெல்லும் வாசிப்பின் பின் தோன்றிய எண்ணம் இது இன்னும் மிக ஆழம் சென்றிருக்காலம் என்பது.  அது நிகழக்கூடும்.  இது ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம்.  சங்கராபரணி ஆற்றிடமும் புதுவையின் கடலிடமும் தோப்புகளை, மரச்செறிவை தொலைத்துவிட்ட நிலத்திடமு்ம் ஏராளமான சொல்லவேண்டியவை பொதிந்திருக்கலாம்.  “காணி நிலம் வேண்டும்“ என்று பராசக்தியிடம் கோரிக்கை வைக்க பாரதியைத் தூண்டிவிடவில்லையா அந்நிலம்?.  அவரது மொத்த ஆயுளில் நான்கில் ஒரு பங்கு, அவரது படைப்பு செயல்பாட்டின் கணிசமான பகுதி புதுவையில் நிகழ்ந்தது தானே?.  தனக்கானதை அம்மண் நிகழ்த்திக்கொள்ளும் அதற்கான கலைஞர்களை உருவாக்கி வளர்த்துக்கொள்ளும்.  பிரபஞ்சன் அதற்கான தொடக்கம், அழகிய தோரணவாயில்.

கோகிலாம்பாளைச் சொல்லிச் தொடங்குகிறது நாவல்.  அவள்தான் இங்குள்ள அணுகுமுறையின் குறியீடு.  அவள் தேவதாசி.  அக்காலம்முதல் இருக்கிறது என ஆணவமிக்க ஊர் பெரியமனிதர்களின் பிரதிநிதி என நின்று எல்லப்பிள்ளை வலியுறுத்தும் வழக்கத்தை மறுக்கிறாள்.  ஏற்கத்தகாது எனக்கருதுவதை மறுக்கும் அதேசமயம் இப்பண்பாட்டின் நல்லனவற்றை, உயர்விழுமியங்களின் மீது மதிப்பும் பக்தியும் கொண்டவள்.  அவள் புரட்சிப்பெண்னொன்றும் அல்ல.  பெரியமனிதர்களின் பகையுணர்வை சகித்துவாழ முடியாது என்று எளிய பெண்ணாக ஊர்விட்டு வெளியேறுகிறாள் அதேசமயம் மோகனாபாயிக்கு யோசனை சொல்லி அதன்மூலமாக மராத்தியர் பிரெஞ்சியரிடையே மூளவிருந்த போரைத்தடுத்து புதுவையை அழிவிலிருந்து காத்தவளாகவும் ஆகிறாள்.  மதவெறி கொண்ட வில்லியம்ஸ் பாதிரியாரின் மதவெறிக்கு மறுப்புரைக்கிறாள் அதேசமயம் அவரது மதமும் இங்கு மதிப்பிற்குரியதாகவே நோக்கப்படுகிறது என்று சுட்டவும் செய்கிறாள்.  குருசு என்னும் உடன்பிறவா தம்பியின் மீது அவள் மிகுந்த அன்புகொண்டவள்.  தான் ஒரு பாதுகாப்பான நல்ல இடம் சேர்ந்தபின் அவனைத் தேடித்தருவித்து அருகமைத்துக் கொள்கிறாள்.  நல்லதொரு தோப்பை அவன் உருவாக்குகிறான்.  தன்னியல்பான அன்பினால் மானுடம் வெல்வதற்கான வழிகளை கண்டடைந்து தன்பால் அன்புகொண்ட மனிதர்களைச் அவ்வழிகளில் செலுத்துபவளாக அமைகிறாள்.  குவர்னர் துய்மா ஒருமுறை அவளிடம் பேசுகிறார் (அவள் வில்லியம்ஸ் பாதிரியாரிடம் பேசிய பிறகு) அவள் கருத்தைப் புரிந்துகொண்டதாகவும் ஆமோதிப்பதாகவும் சொல்கிறார்.  உண்மையில் இம்மண்ணில் அவரது நோக்கில் அவர் மதிப்புடன் நோக்கிய ஒருவர் கோகிலாம்பாளாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.  சந்தாசாயபுவின் நட்பு அவரது மனைவி அத்தர் பேகத்திற்கு அடைக்கலம் வழங்கி அன்புபாராட்டியது என்பதில் அரசியல் இருக்கிறது.  மக்கள் கண்ட இடத்தில் மலம் கழிப்பவர்கள்.  தம்மவரிடையேயே வீதிகளில் செல்லவும் சாதிய நோக்கில் காழ்ப்புகொள்பவர்கள்.  ஒருவருக்கொருவர் குழிபறிப்பவர்கள்.  துபாஷிகளோ அதிகாரிகளோ பணம், பதவி சுயநலங்களை முன்னிட்டு செயல்படுபவர்கள் (சொந்த மண் என்னும் பிரக்ஞையற்று காரைக்கால் பொன்விளையும் பூமி என கைப்பற்ற துய்மாவின் ஆசையைத் தூண்டுகிறார் கனகராயர்).  அரசர்களோ அறம் அற்ற சுகபோகிகள் அல்லது வெறும் கொள்ளையர்கள்.  துய்மா ஒன்றும் முற்றிலும் தூயவரல்ல என்றபோதும் அவர் இங்கு அற விழுமியச்சார்பு கொண்ட ஒருவர் எனக்கண்ட ஓரே நபர் கோகிலாம்பாள்தான் எனத்தோன்றுவதைச் சொல்கிறேன்.

அனேகமாக சந்தாசாயபுவின் அத்தரிலிருந்துதான் புதுவையின் அடைக்கல காதை தொடங்குகிறது என்று எண்ணுகிறேன்.  பின்னர் பாதுகாப்புத் தேடிவந்தவர் பலர் – பாரதி வரை.  மானுடம் வெல்லும் வாசிப்பின் தொடர்ச்சியாக பாரதி நினைவுக்கு வர மற்றொரு காரணமும் உண்டு் பாரதி கவிஞர் என்பதால் புதுவையின் தென்னந்தோப்புகளும் குயில்களும் வெண்மணல் வீற்றிருந்து நோக்க விரிந்திலங்கும் நீலக்கடலும் அவர் கவிதைகளில் தமக்குரிய இடத்தை பெற்றுக்கொண்டன.  ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் நாட்குறிப்பினை சரித்திர சான்றாக கொண்டு எழுந்த மானுடம் வெல்லும் அன்றைய மனித மனங்களை நோக்க எடுத்துக்கொண்ட கவனத்தில் குறைந்த பகுதியேனும் அன்றைய இயற்கையை நோக்க எடுத்துக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.  ஆனந்த ரங்கப்பிள்ளையிடம் அதற்கு வழியில்லை என்றாலும் பிரபஞ்சனிடம் அவை தம் இடத்தைக் கோரியிருக்க வேண்டும்.  மொத்த 78.5 கி.மீ. நீளத்தில் 34 கி.மீ புதுவையில் ஒடும் சங்கராபரணி ஆறு என்னும் வராக நதி அப்போது இன்னும் அழகாக இருந்திருக்கக் கூடும்.  அதிகம் நீரோடியிருக்கக் கூடும்.

பவழக்காரத் தெரு, தங்கசாலை, ராஜவீதிகளின் பெயர் காரணங்களை இவ்வரலாற்று நாவல் வாசிப்பின் பின்தான் அவதானிக்கிறேன்.  வெளியே மலத்திற்கு போட்ட தடைபோலவே இடங்கை வலங்கை என்று சாதிய நோக்கிற்கு பிரதான வீதியில் இடமில்லை என்று தடைசெய்கிறார் துய்மா.  அக்கறையில் செய்தாரா என்பதல்ல செய்தது நல்லது என்பது கொள்ளப்பட வேண்டும்.  தஞ்சை சாயஜியும், ஆற்காட்டு நாவாபும், திருச்சியில் நாவாபின் பிரதிநிதியாக அப்போதைக்கு இருக்கும் சந்தாசாயுபும் அப்படியொன்றும் மக்களின் மீது அக்கறை கொண்டவர்களல்லவே?.  ஒப்புநோக்க துய்மா எவ்வளவோ மேலானவராகத் தெரிகிறார்.  அவர் உள்ளூர்காரர் அல்ல அத்துடன் அவர் அரசருமல்ல அவர் வியாபாரி (லெமோர் என்றொரு சொந்த கப்பலொன்றும் வைத்திருகிறார் துய்மா).  அந்த வியாபாரியைத் தூண்டி அவருக்கு காசுபார்க்கும் வழியைக் காண்பித்து தனக்கும் சாதித்துக்கொள்ளும் சாமார்த்தியம் கொண்டவர் கனகராயர்.  அகதிகளாக வரும் மக்களை அனுமதித்து நல்லபெயரும் அதேசமயம் பணம் பார்க்கும் வழியையும் காட்டுகிறார்.  காரைக்காலின் பூமியைக் கூறி “தஞ்சை அரிசி“ சுமந்து பாரீஸ் செல்லும் நாவாய்களின் காட்சியை துய்மா கற்பனை செய்யக் காரணமாகிறார்.  உள்ளூர் அரசர்கள் கொள்ளைக்காரர்களாக இருக்க “பொதுநலமும் சுயநலமும்” கலந்தவராக வெளிநாட்டு வியாபாரியை முன்நிறுத்தி தங்கள் பொருளாதாரம் சொத்து சுகங்களைப் பாதுகாத்து சமுதாயத்தில் தங்கள் இடத்தையும் பாதுகாத்துக்கொண்ட நிலப்பிரபுக்களின் சாமார்த்தியம் வியக்கத்தக்கது.

முதலாளித்துவதை நோக்கிய நகர்வின் படியில் நிற்கும் நிலப்பிரபுத்துவத்தின் ஒருகால கட்டத்தின் வாழ்வை தெரிந்துகொள்ள உதவுகிறது மானுடம் வெல்லும்.  அன்றாடம் கடும் சூழலை எதிர்கொண்டு துன்பத்தில் உழலும் மக்களும் சரி போகத்தில் சிற்றின்பத்தில் திளைத்திருக்கும் சாயாஜி போன்ற அரசர்களும் சரி எந்நேரமும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருப்பவர்கள்.  ஒப்புநோக்க நிலபிரபுகள் எதிர்கொண்ட அபாயங்கள் குறைவே என்ற எண்ணம் ஏற்படுகிறது.  உழவன் ஒருவனின் நிலம் எந்நேரமும் ஏதேனும் ஒரு படைநகர்வினால் பாழாக்கப்படலாம்.  பெண்கள் எப்போதும் ஆபத்துக்குள்ளாகக் கூடும்.  படைவீரர்களால் தூக்கிச் செல்லப்படலாம், வீதி உலாவரும் அல்லது ஆலயம் வரும் அரசனின் கண்ணி்ல் பட்டு் “தகுந்த“ முறையில் அந்தப்புரத்தில் சேர்க்கப்படலாம்.  தாழ்ந்தவர் எனக் கருதப்படும் மனிதர்கள் விற்கப்படவும் அடித்துத் துன்புறுத்தப்படவும் கொடுமைப்படுத்தவும் செய்யப்படலாம்.  அரசன் போட்டியாளனால் எந்நேரமும் கழுத்தறுத்துக் கொல்லப்படலாம், பகைவரால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்படலாம்.  எது எப்படியானாலும் அதிகபட்ச பாதுகாப்புடையவர்களாக அந்த காலகட்டத்தில் இருந்தவர்கள் நிலப்பிரபுக்கள்தான் என்று தோன்றுகிறது.  அரசன் மாற அவனோடு மாறிக்கொள்ள, தங்கள் இடத்தை அதிகபட்சம் பாதுகாத்துக்கொள்ள அவர்களால்தான் முடிந்தது.  அவர்களுடன் கூடவே பூசாரிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

“மானுடம் வெல்லும்“ என்னும் வாகனத்தில் இருநூற்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பயணத்தில் சென்றுவருபவர்கள் ஒன்றை உறுதிசெய்துகொள்வார்கள் ”நிச்சயம் மானுடம் வெல்லும்.”  அந்த உறுதி நாவலின் பெரியமனிதர்களின் வாயிலாக அல்லாமல் நாவலின் எளிய மக்களாலும் பெண்களாலும் வழங்கப்படுகிறது.

விக்ரம், கோவை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s